8/11/2022

நதியெங்கே செல்கின்றது? கடலைத் தேடி...


நமக்கெல்லாம் தெரிந்ததுதான்

வளைந்து நெளிந்து

கொந்தளிப்புகளினூடாக 

பதற்றத்துடன் பாய்கின்றது நதி

திரும்பிப் பார்க்கின்றது

வந்த பாதையை

மலை உச்சிகளை

தான்வீழ்ந்த பள்ளத்தாக்குகளை

காடுகளை மலையோர ஊர்களை

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு அமிழ்ந்துவிடப்போகின்றோம்

தனக்குமுன்னே எதிரே பார்க்கின்றது

போக வேண்டியதூரம் தொலைதூரம்

பரந்து விரிந்த பெருங்கடல்

மீளமுடியாதபடிக்கு மூழ்கிவிடப்போகின்றது

வேறுவழியில்லை நதிக்கு வேறுவழியில்லை

நதி திரும்பிச் சென்றுவிட முடியாது

எவரும் திரும்பிச் சென்றுவிட முடியாது

துணிச்சலோடு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

கடலுக்குள் நுழைவதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

அப்போதுதான் அச்சம் விலகியோடும்

அப்போதுதான் நதிக்குத் தெரியவரும்

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலுக்குள் மூழ்கிப் போவதல்ல அது

கடலாகவே ஆவதுதான் அது!!


[ஜமுனா மாப்ள அவர்கள், ’கடலைத் தேடி ஓடும் நதி’ என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னார். யோசிக்கத் தலைப்பட்ட போது எப்போதோ படித்த கலீல் ஜிப்ரான் அவர்களின், ‘திரும்பச் செல்லமுடியாது நதிக்கு’ எனும் படிமக் கவிதைதான் நினைவுக்கு வந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விருப்பமானவை இருக்கும். தம் வாழ்வில் இன்னின்னதைச் செய்தால் மனம் நிறைவு கொள்ளுமென்கின்ற இலக்குகள் இருக்கும். அவற்றை எப்படி அடையப் போகின்றோமென எண்ணும் போது, அச்சமாக இருக்கும். வாழ்க்கைப் பயணம் என்பது நதியைப் போல. எப்படியாக மடிந்தோமென்பதல்ல; எப்படியாக வாழ்ந்தோமென்பதுதானே? எதிர்காலத்தைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம்! சியர்ஸ்!!]

8/10/2022

வாழ்வுநிலை vs வாழ்க்கைத்தரம்

வாழ்வுநிலை, வாழ்க்கைத்தரம், இவற்றை முறையே ஆங்கிலத்தில் standard of living, quality of life என்பர். இவையிரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான், ஆனால் வெவ்வேறானவை.

சொத்து, வருமானம், அந்தஸ்து, உணவு, உடை, உறையுள் எல்லாமும் செழிக்க இருந்தால் அவருக்கான வாழ்வுநிலை மேம்பட்டதாகக் கருதலாம் ஒப்பீட்டளவில். ஒருவருக்கொருவர் ஒப்பீடுகள் நடக்கின்றன. ஏழை, பணக்காரன், நடுத்தரக்காரன் என்றெல்லாம் மதிப்பீடுகள் இடம் பெறுகின்றன. இயல்பாகவே, பணமிருப்பவருக்கு மருத்துவம், கல்வி, வாய்ப்புகள் என்பவை எளிதில் கிட்டிவிடும். ஆகவே அவரின் வாழ்வுநிலை மேம்பட்டது என்பதாகக் கருதப்படுகின்றது.

பண்புகள், விழுமியம்(வேல்யூஸ்), இன்பம், உடல்நலம் முதலானவை நன்றாக இருப்பதாகக் கருதினால், அவரின் வாழ்க்கைத் தரம் சிறப்பு என்பதாகக் கொள்ளப்படும். வாழ்வுநிலை மேம்பட்டதாக இருந்தால், வாழ்க்கைத்தரமும் சிறப்பாகத்தானே அமைந்தாக வேண்டும்? உடல்நலம், இன்பம் இவற்றுக்கெல்லாம் வாழ்வுநிலைதானே அடிப்படை? ஆமாம்.

எனினும், வசதிகள் இருந்த மாத்திரத்திலேயே ஒருவரின் வாழ்க்கைத்தரம் அமைந்து விடாது. நீர்நிலை இருந்தால்தான் நீச்சல் அடிக்கமுடியும். ஆனால் நீர்நிலை இருப்பதாலேயே ஒருவர் நீச்சல்காரர் ஆகிவிட முடியாது. அதைப்போன்றதுதான் இவையிரண்டும்.

கடலளவு நீர் இருந்தால்தான் நீச்சல்காரர் ஆக முடியுமென்பதும் இல்லை. போதிய அளவுக்கான நீர்நிலை இருக்க, அவர் நீச்சல் பழகியிருக்க, அவர் நீச்சல்காரராக உருவெடுப்பார். அதே போன்றதுதான் வாழ்க்கைத்தரம் என்பதும். போதிய அளவு, தேவைப்படும் அளவுக்கான வாழ்வுநிலை அமையப் பெற்று, பண்புநலம், உடல்நலம், பயிற்சி, தன்னுமை(லிபர்ட்டி), இலக்கியம், கலை, சிந்தனையாற்றல், கேளிக்கை முதலானவையும் அமையப் பெறும் போது, அவருக்கான வாழ்க்கைத்தரம் மேம்பட்டதாக அமையும்.

”The quality of life is more important than life itself. Quality of life actually begins at home - it's in your street, around your community.” -Charles Kennedy

வாழ்வுநிலையெனும் வர்க்கபேதத்தில் புதையுண்டு விடாமல், வாழ்க்கைத்தரம் நோக்கிய பயணம் இன்புறுகவே!

8/06/2022

பன்னாட்டு விமானப்பயணம்

பன்னாட்டு விமானப்பயணம் என்பது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. என்ன காரணம்?

விமானப்போக்குவரத்து என்பது கிட்டத்தட்ட 180 துறைகளை உள்ளடக்கியது. ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டிருக்கின்றது. ஒரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் இன்னொரு போக்குவரத்து நிறுவனத்துக்கும் தொடர்புண்டு. விமானத்தை குத்தகைக்கு விடும் நிறுவனம் வேறு; விமானப் பயணிகளின் கட்டணங்களை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. விமானப் பணியாளர்களை நிர்வகிக்கும் துறை வேறு. விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் நிறுவனம் வேறு. சரக்குகளைக் கையாளும் துறை வேறு. அந்தத் துறைக்குள்ளாக ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வேறு. விமானநிலைய ஓடுதளங்களைப் பராமரிக்கும் நிறுவனம் வேறு. கட்டுப்பாட்டு அறைகளைக் கண்காணிப்பது வேறு துறை. ஒரு பயணம் நல்லபடியாக நிகழ, இந்தத்துறைகளெல்லாம் ஒன்றுக்கொன்று இயைந்து செயற்பட்டாக வேண்டும். நிற்க.

கோவிட் தொற்றுக்காலம் வருகின்றது. விமானங்கள் பறப்பதினின்று மட்டுப்படுகின்றன. வேலை இழப்புச் செய்யக் கூடாதெனச் சொல்லி, விமான நிறுவனங்களுக்கு சலுகைத் தொகை கொடுக்கப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு மாதாமாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, ’பெருந்தொகை கொடுக்கப்பட்ட முன்கூட்டிய பணி ஓய்வு’ என்பதைக் கையிலெடுக்கின்றன நிறுவனங்கள். நிறையப் பேர் பணி ஓய்வு பெற்று விடுகின்றனர்.

தொற்று சரியாகி தளர்வுகள் செயற்பாட்டுக்கு வந்தவுடனேயே ஒரே நேரத்தில் பயணிகள் பயணிக்கத் தலைப்படுகின்றனர். மளமளவென விமானங்கள், டிக்கெட்டுகள் என பயணங்கள் துவங்குகின்றன. ஆனால் களத்தில், பணிகளைத் துவக்குவதில் சிக்கல்கள். புதிய பணியாளர்களுக்கு முறையான பயிற்சி இல்லை. போதிய பைலட்டுகள் இல்லை. வேலையற்றுக் கிடந்த தளபாடங்களை மீளக்கட்டமைத்துச் செயற்பாட்டுக் கொண்டு வருவதில் தாமதம். துறைகளுக்கும் துறைகளுக்குமான ஒருங்கிணைப்பில் தொய்வு. விளைவு, விமானங்கள் கேன்சல் ஆகின்றன. போதாக்குறைக்கு, கடுமையான வெப்பம், புயல் முதலான காரணங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஒருநாளைக்கு அமெரிக்காவில் மட்டும் 1500 விமானங்கள் வரை கேன்சல் ஆகின்றன. 1800 விமானங்கள் வரை காலதாமதம் ஆகின்றன. நாம் என்ன செய்யலாம்?

1. கேளிக்கை, பொழுதுபோக்கு என்பதற்கான பயணங்களைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம்.

2. நிலைமையைப் புரிந்து கொண்டு, பொறுமையுடன் தன் பயணத்திட்டத்தை எதிர்கொள்தல் நலம்.

3. போதிய தின்பண்டங்களைக் கைவசம் கொண்டு செல்தல் நலம். மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களும்.

4. அதிகாலைப் பயணங்கள் குறைவான தடங்கலுக்கு உரித்தானது. ஆகவே அப்படியானவற்றைத் தெரிவு செய்தல் நலம்.

5. ஒருவிமானத்துக்கும் இன்னொருவிமானத்துக்குமான கனெக்சன் இருக்குமாயின் போதிய இடைவெளியுடன் பயணத்தை அமைத்துக் கொள்வது உசிதம்.

6.சரக்குப் பெட்டிகள் வந்து சேர்வதற்கு காலதாமதமாகலாம். ஆகவே அதற்கேற்றபடி தயார்படுத்திக் கொள்தல் நலம். ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானவற்றை கேரி-ஆன் லக்கேஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டி கிடைக்காவிடில் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. டிக்கெட்டுகளை உரிய கிரிடிட் கார்டில் வாங்குவது நலம். அதில் இன்சூரன்சு இருக்கும். மேலும் கூடுதல் கட்டணத்துடன், இன்சூர் செய்து கொள்வதும் மன அமைதியைக் கொடுக்கும். Lost luggage insurance reimburses the value of what you lost, assuming you can document what’s inside (pro tip: take a picture of the interior contents before you leave home). 

7. செல்ஃபோன் சார்ஜ் செய்வதற்கான உபகரணங்கள் அவசியம் கைவசம் இருத்தல் நன்று.

8. செவ்வாய், புதன், டிராஃபிக் குறைவான நாட்கள்.

பணம் இரண்டாவது. பாதுகாப்பு, உடல்நலம், மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்ள வாழ்த்துகள்.

7/31/2022

உறவுச்சிறகுகளால் பறந்திருப்போம்

 


கோவை விமானநிலையத்தில் விமானம் தரையிலிருந்து எழும்பும் அந்த விநாடியில்தான் பகிர்ந்தேன். சரியாக இருபது நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதைத் துணுக்கினை எழுதிப் பகிர்ந்திருந்தேன். அது இப்படியாக முடியும், 

சென்றமுறை வந்திருந்தேன்

சிலபலரை இழந்திருந்தேன்

இம்முறையும் வந்திருக்கின்றேன்

சிலபலரை இழந்திருக்கின்றேன்

அடுத்தமுறை?

வருவேனே தெரியாது

உதிரும் சிறகுகள்

இருக்கும்வரையிலும்

பறந்திருப்போம் உறவுச்சிறகுகளால்!

இன்று சரியாக இருபதாவது நாள். பலரை இழந்திருக்கின்றேன். இழப்புகளின் வேகம் கூடிக்கொண்டே இருப்பதாய் உணர்கின்றேன். ஆண்டுக்கொருமுறை ஊருக்குச் செல்பவன், இனி ஆறுமாதங்களுக்கொருமுறை சென்று வந்தாலென்ன என யோசிக்கத் தலைப்படுகின்றேன். தேடித்தேடி மக்களைச் சந்திக்க விரும்புகின்றேன்.

இந்திராணி அக்கா. நண்பர் ஆரூரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் ‘ஊர்ப்பழமை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. பலரது பாராட்டுதலுக்கும் ஆட்பட்ட நூல். வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைக்க வேண்டுமெனக் கேட்டார்கள். சட்டென நினைவுக்கு வந்தவர்கள் மணிவாத்தியாரும் இந்திராணி அக்காவும்தான். முதன்முதலின் என் பெயரை எழுதிப் பழக்கியவர் மணி வாத்தியார். முதலாம் வகுப்பில் சேர்த்துப் பதிந்தவரும் வா.வேலூர்ப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அவர்தாம். இரண்டாம் வகுப்பிலேயே ஆங்கிலப்பாடம். அப்போதெல்லாம் ஆங்கிலம் என்பது மூன்றாம் வகுப்புக்குப் பின்னர்தாம் பாடத்திட்டத்திலேயே வரும். ஆனால் இவர் இரண்டாம் வகுப்பிலேயே எங்களுக்கு ஆங்கில ஆசிரியர். அதற்கும் மேற்பட்டு ஊரார் அனைவருக்கும் குடும்ப நண்பர். இளைஞர். திருமணமாகாதவர். இவர்மேல் மோகம் கொள்ளாத இளம்பெண்கள் இருந்திருக்க முடியாது. இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும். ஆனால் அதுதான் அன்றைய நாட்டுப்புற மனநிலை. காரணம், புற அழகு மட்டுமேயல்ல. கலகலவெனப் பேசுவார். சிரிப்பார். யாரும் அணுகக்கூடிய வகையிலே இருப்பார். ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்குத் திருமணம். யார் மணமகள்? அவர் எப்படி இருப்பார்? சக மாணவர்களுக்குள் பரபரப்பு. என்ன ஆச்சர்யம்? அவரே எங்களுக்கு அறிவியல் ஆசிரியராகவும் வந்தார். தோழியாக, அக்காவாகப் பழகினார். அதற்குப் பின் பல ஊர்கள், இடங்கள், நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்திருந்தாலும் கூட, அதே மாறாப்பற்றுடன் வாழ்வில் இடம் பெற்றிருந்தார். இன்று இழந்திருக்கின்றேன். பலமுறை அவரை வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கின்றேன். விழாக்களுக்கு வந்திருக்கின்றார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

அலெக்ஸ். நண்பர். அன்றாடமும் இணையத்தினூடாக அளவளாவுவோம். மாதமொருமுறையாவது அழைத்துப் பேசிக் கொள்வோம். பத்து நிமிடங்களாவது பேசிவிடுங்கள். அந்த நினைவிலேயே நான் அடுத்த ஒரு மாதம் முழுதும் ஓட்டிவிடுவேனென்று மனம் திறந்து சொல்வார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். வியப்பில் மகிழ்ந்து வரவேற்றார், ‘இவன் எப்படி நேரில் இங்கே வந்திருக்கின்றான்?’ என நினைத்திருக்க வேண்டும். பரபரத்துக் கிடந்தார். அருகில் இருப்பவர்களிடம், ‘பழமைபேசிக்கு உடனே காஃபி வாங்கி வந்து கொடுங்கள்’ என்றார். எல்லாமுமே சைகை மொழியில்தாம். பார்க்க வந்த மருமகளிடம், ‘நீங்கள் யார்? என் மருமகளைப் பார்த்தால் வரச் சொல்லுங்கள்’ எனச் சொல்லி இருக்கின்றார். அந்த அளவுக்கு நினைவு தப்பி இருந்தவர், அழைத்துச் சென்ற மருத்துவர் சோமு அவர்களையும் என்னையும் கண்டு, முழு உணர்வும் பெற்று நடந்து செல்ல வேண்டுமென்கின்றார். புத்துயிர் பெற்றவரானார். அடுத்த வாரத்திலேயே விடை பெற்றுக் கொண்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

லெட்சுமண வாத்தியார். வா.வேலூர்த் தலைவாசல் பரபரத்துக் கிடக்கும். பெரிய ஊர். அண்மையில் இருக்கும் வாகத்தொழுவு, சங்கமநாயக்கன்பாளையம், மொகானூர், சலவநாயக்கன்பட்டி, சலவநாயக்கன்பட்டிப் புதூர், வீதம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி எனப் பல ஊர்களுக்கும் இதுதான் பிரதானம். கரண்ட்பில் கட்ட, பள்ளிகளுக்கு வர, சந்தைக்கு வர, ஓட்டுப் போட, பஞ்சாயத்து ஆபிசுக்கு வர, மாட்டாஸ்பத்திருக்கு வர என எல்லாவற்றுக்கும் இங்குதான் வந்தாக வேண்டும். அப்படியான தலைவாசலில் ஓங்கி வளர்ந்த அரசமரங்கள் பல உண்டு. அவற்றின் நிழலிலே, நிழல்படிந்த திடலிலே எப்போதும் குறைந்தது ஐம்பது சிறார்களாவது திடலிலே விளையாடிக் கொண்டிருப்போம். குடிதண்ணீருக்கு சங்கமநாயக்கன் பாளையத்துக்கருகே இருக்கின்ற அய்யர் தோட்டத்துக்குத்தான் போயாக வேண்டும். மூத்த அண்ணன், வயது 13, 14 இருக்கும். சைக்கிளில் சென்று சைடுக்கு ஒன்றாக இருகுடங்களிலும் தண்ணீரோடு வந்து கொண்டிருந்தார். எதிர்ப்பட்ட லெட்சுமண வாத்தியார் அவர்கள் அண்ணனை நிறுத்தி, ‘பிரபாகர், எங்கிருந்து தண்ணி கொண்ட்டு வந்திருக்கிற?’. அண்ணனுக்கு பதில் சொல்ல நா வரவில்லை. பிதற்றிக் கொண்டிருக்கின்றார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த நாங்களெல்லாம் அருகில் ஓடிப் போகின்றோம். லெட்சுமண வாத்தியார் அண்ணனுக்கு ஆசிரியர். அதாவது எங்களுக்கெல்லாம் தமிழாசிரியர். ‘என்னடா? தண்ணி எங்கிருந்து கொண்ட்டு வர்றன்னுதான கேக்குறன்?’. அண்ணன் வெலவெலத்துப் போய் சொன்னார். ‘சார், நம்ம தோட்டத்துல இருந்துதான் சார் கொண்ட்டு வர்றன்’. ‘நம்ம தோட்டம்னா? எனக்கேதுடா தோட்டம்?’ என்கின்றார் ஆசிரியர். இஃகிஃகி. விசியமென்னவென்றால், லெட்சுமண வாத்தியார், தலைவாசலிலே இருக்கும் இராமய்யர் வீட்டு மருமகனும் கூட. ஆனால் அய்யர் தோட்டம் என்பது பெயர் மட்டுமே. தோட்டம் யாருக்கோ சொந்தமானது. அவரிடமே அய்யர் என உச்சரிக்க அண்ணனுக்குப் பயம். எனக்கும் உடன் விளையாடிக் கொண்டிருந்த பையன்களுக்கும் விளங்கி விட்டது பிரச்சினை. நான் சொன்னேன், ‘சார், எங்கண்ணன் உங்களப் பாத்து பயப்பட்றான் சார். நல்ல தண்ணிக் கெணத்து மோட்டார் காயல் கருகிப் போச்சி சார். அதான் அவன் அய்யர் தோட்டத்துக்குப் போயி தண்ணி எடுத்துட்டு வந்துருக்கான் சார்’. சொல்லி முடிக்கும் முன்பாகவே சைக்கிளை எடுத்துக் கொண்டு சிட்டெனப் பறந்து விட்டிருந்தார் அண்ணன். தமிழாசிரியரும் நேற்று மறைந்து விட்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நண்பர் ஆறு. அமெரிக்கத் தமிழ் வானொலி நிலைய நிறுவனர். நேரில் சந்தித்திருக்கின்றோம். பலமுறை உரையாடி இருக்கின்றோம். என்றாலும் கூட அந்த நாளை என்னால் மறக்க இயலவில்லை. வானொலி நிலைய நிகழ்ச்சி. பொங்கல் குறித்த கிராமிய நினைவுகளை நான் பகிர்ந்து கொண்டேன். ஒருமணி நேர நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிவுற்றதும் இவரும் நானும் உரையாடியது இரண்டு மணி நேரங்கள். எப்படி பழமைபேசி, இவற்றையெல்லாம் துல்லியமாக நினைவிற்கொண்டு சொல்ல முடிகின்றது? அப்படி இப்படியென மனமார்ந்து பாராட்டியதோடு, பல்வேறு வினாக்களையும் தொடுத்து அறிதலைத் தீட்டிக் கொண்டே இருந்தார். பலமுறை மகளாரின் வயலின் நிகழ்ச்சிக்காகத் தொடர்பு கொண்டவர், ஒருமுறையேனும் அவரிடம் நேரம் வாங்கிக் கொடுங்கள் என வேண்டிக் கொண்டார். அவரது ஆசையை நான் நிறைவேற்றிக் கொடுக்காமலே இருந்து விட்டேன். குற்றவுணர்வில் தவிக்கின்றேன். கடந்தவாரம் மறைந்து விட்டார். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நிலையாமை என்பது நிரந்தரம். நாம்தாம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சம வயதுடைய, மேற்பட்ட வயதுடைய மாந்தர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்தல் அவசியமானது. விடைபெற்றுக் கொண்டோருக்கு மலர்வணக்கங்கள். Life is too short not to celebrate nice moments!


7/29/2022

ஜீவன்

ஊருக்குச் செல்லும் போதெல்லாம், உற்றார் உறவினர்கள் நண்பர்களை மட்டுமே பார்ப்பதில்லை. சக ஜீவராசிகளையும்தான் பார்க்கப் போகின்றேன். எங்கள் வீட்டில், எங்களை நாடி வந்த மhaன் இருக்கின்றான். ஆமாம், அவனாக எங்களை நாடி வந்தவன்.  அந்தக் கதையை இங்குதான் நீங்கள் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்.  https://maniyinpakkam.blogspot.com/2016/03/ha.html

இராம்நகரில் உள்ள தெருக்களில் உலா வருவேன். அங்கிருப்போர் எல்லாரும் என்னுடன் அன்புடன் குழைவர். அவர்களுக்கான உலகம் ஒன்று உள்ளது. நாட்டத்துடனும் சிநேகத்துடனும் அண்டிப் பார்த்தால் மட்டுமே புலப்படும். நிற்க.

தெருக்களில் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. நாய்களைச் சபிக்கின்றோம். ஆனால் சபிக்கப்பட்ட வேண்டியவர்கள் மனிதர்களே. ஏன்?

மனிதன், நேரத்தைச் சரியாகத் திட்டமிடுவதில்லை. மாறாக, சாலைகளில் விரைந்து செல்வதால் துல்லியத்தை அடைந்து விடலாமென நினைக்கின்றான். வேகத்தைக் கூட்டுகின்றான். அதனாலும் மனக்கண்களில் வேறெங்கோ உலாவிக் கொண்டிருப்பதாலும் சாலையின் மீதான கவனத்தை இழக்கின்றான். எதிர்ப்படும் நாயொடு மோதுகின்றான். விபத்து ஏற்படுகின்றது. அந்த விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஹெல்மெட்டும் பெரும்பாலான நேரங்களில் அணிந்து கொள்வதில்லை. அப்படியே அணிந்திருந்தாலும், கச்சைகளை ஒழுங்காகப் பூட்டி இருக்கமாட்டான். இதற்கும் மேற்பட்டு, சக ஜீவராசிகளெல்லாம் இவன் விருப்பத்துக்கு அடங்கி, ஒடுங்கி ஒத்துழைத்து வாழ வேண்டுமென நினைப்பான். அவற்றின் உயிரியல், மனவியல் அறிந்து கொள்ளவும் அவனுக்கு நேரமில்லை. இதுதான் பெரும்பாலான நாய் விபத்துகளுக்குக் காரணம்.

பார்வை, விழிகளைப் பற்றிப் பேசுவது நலம் பயக்குமென நினைக்கின்றேன். மனிதனுக்கு விழிகள் இரண்டு. ஒவ்வொரு விழிக்கும் விழித்திரை, திரைக்குப் பின்னால் விழிமுன்னறை, விழிபின்னறை, இவற்றுக்கிடையே கண், கண்ணுக்குள்ளே கதிராளி, கண்மணி, வில்லை முதலானவை உள்ளன. காணப்பெறுகின்ற ஒளியானது கதிராளிக்குள்ளே(லென்ஸ்) ஊடுருவிச் சென்று மூன்று விதமான, சிவப்பு, பச்சை, நீல வண்ணப்புரிதற்ச் செல்களுக்கு சென்று சேரும். பெறப்படுகின்ற ஒளியின் அலைநீளம், தன்மையை இந்த மூன்றுவிதமான வண்ணப்பெறுகைச் செல்களும் வெவ்வேறு அளவிலாகப் பெறுகின்ற போது மனிதனுக்கு வெவ்வேறு வண்ணங்கள் புலப்படுகின்றன. இந்த மூன்றில் யாதொரு செல் பழுதடைந்தாலும், நிறக்குருடு, கலர்பிளைண்டஸ் ஏற்பட்டு விடும். குறைபாடுகள் மேலோங்கும் போது மாலையில் ஒளியின் தாக்கம் குறையக் குறைய பார்வைத் திறன் குன்றலுக்குள்ளாகும். இதற்கப்பாற்பட்டு மனக்குருடும் ஏற்பட்டு விடுகின்றது. அதுதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் காரணம். அதாவது எல்லா சக ஜீவராசிகளும் தமக்கு அடங்கியொடுங்கி ஒத்துழைத்து இருக்க வேண்டுமென்கின்ற மனக்குருடு. அப்படியா?

நாய்களுக்கும் விழிகள் மனிதனைப் போலவே இருக்கின்றனதான். ஆனால் மனிதனுக்கு இருப்பதைப் போல அவற்றின் கண்களில் மூன்று கோன்கள்(நிறப்பெறுகைகள்) இல்லை. மாறாக, ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு கோன்கள்தாம் உள்ளன. நீலம், மஞ்சள் ஆகிய இரு பெறுகைகளே உள்ளன. ஆகவே மனிதன் பார்க்கும் வண்ணங்களையெல்லாம் அவை காண்பதில்லை. சிலபல நேரங்களில் சில பல வண்ணங்கள் அவற்றின் பார்வைக்குப் புலப்படாது. அதன் முதல் புலனறி உறுப்பு என்பது மோப்பசக்திதாம். அதைக் கொண்டுதாம் அது போய்க் கொண்டு இருக்கும். நாம் செல்லும் போது, குறிப்பிட்ட சில வண்ணங்கள் அவற்றுக்கு புலப்பட வாய்ப்பில்லையென்பதால் அது அதன்பாட்டில் மோப்பசக்தி, முகர்தலுக்கு ஏற்பவும் காணப்பெறுகின்ற வண்ணத்துக்கு ஏற்பவும்தான் சென்று கொண்டிருக்கும். இந்தப்புரிதல் மாந்தனுக்கு இருத்தல் வேண்டும்.

நாயைப் பார்க்கின்றான். அவற்றின் செயற்பாடுகள் தமக்கு ஏதுவாக இல்லை. எதையாவது கொண்டு அடிக்கின்றான். அடிபடும். துன்பத்தை அனுபவிக்கும். தற்காத்துக் கொள்ள கடிக்க வரும் அல்லது வாலைச் சுருட்டிக் கொண்டு அஞ்சி ஓடும். ஆனால் அவற்றுக்கு ’தவறு என்ன ஏது’ என்பது ஒன்றும் புரியாது. அவை நுண்ணிய உணர்வுகள் கொண்டவை. மனிதனுக்கு வண்டி வண்டியாகப் புத்தகங்கள் படிப்பதாலும், போதனைகள் கேட்பதாலும் ஏற்படும் நுண்ணுணர்வுகளைக் காட்டிலும் அவற்றுக்கான நுண்ணுணர்வுகள் அதிகமானது. எப்போதும் குட்மார்னிங் சொல்பவர், அன்று சொல்லாமற்போனால் அதற்கு அதன் மனம் நோகும். தன்னைத் தானே வருத்திக் கொண்டு அழும். அந்த அளவுக்கு சென்சிடிவ் ஆனவை. அவற்றுக்கான மொழியுண்டு. சமிக்கைகள் உண்டு.

இயல்புக்கு மாறாக, சரியல்லாதவொன்று, என்ன செய்யும்? கண்களால் பேசும், பார்க்கும். நாவால் சுருட்டி சுருட்டிக் காண்பிக்கும், உதடுகளைச் சுழித்துக் காண்பிக்கும்.  குழைதல், அரற்றல், ஒடுங்குதல், பரபரத்தலென வாலால் பேசும். உள்க்குரலால் முனகும். தொண்டையிலிருந்து செருமும். அதற்கும் புரிந்து கொள்ளப்படாவிடில், மென்மையாகக் குரைக்கும். சினமெனில் முன்னுதடுகளை விலக்கிப் பற்களை இளித்துக் காட்டும். இந்த சமிக்கைகள் எதற்கும் மறுவினை இல்லாத போதுதான் அவை அத்துமீறும், கட்டுப்பாடிழந்து செயற்படும். இப்படியான சமிக்கைகள் எல்லாம் சில பல விநாடிகள்தாம் இடம்பெறும். அவற்றைக் கவனிக்க மனிதனுக்கு நேரமில்லை அல்லது மனமில்லை. அதைத்தான் மனக்குருடு என்பது.

நாய்களின் மொழி, உடலியல், தன்மை, பண்பு இவற்றை அறிந்து செயற்பட வேண்டியது மனிதயினம்தான். ஜீவராசிகளிடம் இல்லாதவொன்றை, செயற்படுத்த முடியாதவொன்றை அவற்றிடம் இருந்து எதிர்பார்ப்பதில் ஒரு பயனுமில்லை. நுண்ணுணர்வுகளின் சக்ரவர்த்திகள் நாய்கள்! அன்பின் தூதர்கள்!!

7/25/2022

காம்பிளி நதிக்கரையில் 4

 

நினைவடுக்குகளில் புகுந்து புகுந்து பின்னோக்கிப் போகின்றேன். புலப்பட்டு விட்டது. முதன்முதலில் எப்போது காம்பிளி நதிக்கரையைக் கண்டேன்? அப்பா அவர்கள் ஆண்டுதோறும் சபரிமலை செல்வது வழக்கம். நான் பிறப்பதற்கு முன்பிருந்தேவும். இன்னமும் கூட, நான் பிறந்த ஊரான அந்தியூரில் என்னை மணிகண்டன் என அழைப்போர் உண்டு. அதன் தாக்கத்தில் அண்ணன் அவர்களும் மாலையிட்டுக் கொண்டார். போதிய சாலை வசதிகள் இல்லை. காலார நடந்துதான் மலையேற்றம். சென்று வந்தவர்கள் விவரிக்கும் போது கலக்கமாக இருக்கும். அப்போதெல்லாம் மலைப்பயணம் என்பது துணிவுப்பயணமாக, சாகசப்பயணமாகக் கருதப்பட்டது. இவர் பதினேழு பதினெட்டு வயதுடைய இளைஞர். துணிந்து களத்தில் இறங்கி விட்டார். தன் சொந்த ஊரான புள்ளியப்பம் பாளையத்தில் சிறிய அளவில் வழிபாடு நடத்தும் ஆசை அவருக்கு. உடன் அழைத்துக் கொண்டு போனார்.

ஆள் அத்துவானம் இல்லாத ஒரு மேட்டில் பேருந்து நிற்கின்றது. இறங்குகின்றேன். காற்று உய் உய்யென அடித்துக் கொண்டிருக்கின்றது. சாலையைக் கடந்து ஒரு சிறுக்கால் ஒத்தையடிப் பாதைக்குள் அழைத்துச் செல்கின்றார். சாராயம் காய்ச்சுவதை வேடிக்கை பார்க்க அணிக்கடவுக்கும் சலவநாயக்கன் பட்டிப் புதூருக்கும் இடையிலான உப்பள்ளத்துக்குச் சென்ற அனுபவத்தை ஒத்திருந்தது. எதிரே ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். ’சின்னம்மா பையன்’ என அறிமுகப்படுத்தி வைத்தார். காம்பிளியில் கால் வைத்தேன்.

அடுத்தடுத்த நாள். உப்பாற்றங்கரையிலும் அண்டைய காடுகளிலும் ஐயப்பனுக்கு மாலை தொடுக்கத் துளசி பறிக்கச் செல்வதென்பது நமக்கு வழமையான ஒன்று. அதேபாணியில் சகோதரன் பாபுவும் நானும் ஒரு துணிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றோம். மீண்டும் காம்பிளி நதிக்கரை, காடுகள். எங்கெங்கோ நுழைந்து பார்த்தோம். துளசிப்புதர்கள் மட்டும் கண்களுக்கு அகப்படவே இல்லை. வெறும் பையோடு திரும்பிச் செல்ல முடியாது. நதிக்கரையில் ஏராளமான மஞ்சணத்திகள் (ஆவரம்பூக்கள்) தென்பட்டன. பறிக்கலாமாயென்றார் உடன்வந்த பாபு அவர்கள். அம்மாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்து விடுவாரென்றேன். உங்க அம்மா ஊரில் அல்லவா இருக்கின்றாரென்றார். இஃகிஃகி. அதாவது, மாலை தொடுக்க இந்தப் பூக்கள் சரிவராது என்பது கருத்து. பிறகு, அங்கிருந்த பொன்னரளி, செவ்வரளிகளுடன் வீடு திரும்பினோம்.

ஓடைகளும், ஆற்றங்கரைகளும், நீர்நிலைகளும்தான் பல்லுயிர் ஓம்புதலுக்கான அடிப்படை. டார்வின் சொல்கின்றார், பரிணாமத்தின் தோற்றுவாய் நீர்நிலைகள். அங்கிருந்துதான் ஓரணு உயிரிகளிலிருந்து படிப்படியாக ஒவ்வோர் உயிரும் பரிணாமம் பெற்றுத் தோன்றின என்பது அவரது கருதுகோள். அப்படியானதும் இப்படியானதுமான ஆறுகளை, ஆற்றங்கரைகளைக் காப்பது நம் கடமைதானே? அப்பாவின் தாய், பாட்டி அவர்கள் சொல்வார், ’ஊரிலே நிறைய அன்னக்காவடிகள் இருந்தார்கள். அவர்களின் முழுநேர வேலையே குளம், குட்டைகளைப் பராமரிப்பதுதானாம். பசித்த நேரத்துக்கு ஊருக்குள் அன்னக்காவடிகளோடு வருவர். அவர்கள் இறைவனின் நேரடித் தூதர்களாகக் கருதப்பட்டனர். இப்படியான மரபில் திளைத்தவர்கள் நாம். என்ன செய்யலாம்?

நீர்நிலைகளின் மீது நாட்டம் கொள்ள வேண்டும். அதன் தோற்றம், இருப்பு, வரலாறு குறித்தெல்லாம் உணர்வு கொள்ள வேண்டும். அமெரிக்காவில் எங்கு சென்றாலும், சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தாலும் கூட, அதைச் சுட்டும் பொருட்டு பெயர்ப்பலகையை வைத்திருப்பர். சில இடங்களில் அது குறித்த சுருக்கவுரையைக் கூட பார்வைக்கு வைத்திருப்பர்.

பொருள்முதல்வாத உலகில் வீட்டுப் பாவனைக்கென நிறைய திரவப்பொருட்கள் வந்துவிட்டன. அவையெல்லாமுமே வேதிப்பொருட்கள். அதன் எச்சத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். எடுத்துக்காட்டாக, வடை, போண்டா, பலகாரங்கள் சுட்டு  எஞ்சிய எண்ணெய் கூட தரையில், கழிவுக்குழாயில் ஊற்றக்கூடாத ஒன்றுதான். உரிய முறையில் அதைக் கட்டி அதற்கான கழிவுக் கிடங்கில் சேர்க்கப்பட வேண்டும்.

லேசுபாசாக உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பாவிக்கலாம், தவிர்க்க முடியாது.  ஆனால் வீடுகளைச் சுற்றிலும் அவற்றைப் பாவிக்கும் போது, நேரிடையாக மழைநீர் வடிகாலில் அவை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாற்றாக எரு, இரசாயனமற்றவற்றைப் பாவிக்கலாம்.

சோளத்தட்டுப் பொசிவுகள், மக்காச்சோளக் கூளங்கள் போன்ற சருகான மக்கும் பொருட்களை வெகுவாகப் பாவித்து, கட்டுத்தரை, புறவாசல் போன்ற இடங்களை உலர வைத்துக் கொண்டிருந்த சமூகம் நம் சமூகம். காலத்தின் போக்கில் மக்காப் பொருட்களின் வீச்சு அதிகரித்து விட்டது. அவை நிலத்தின் நீருறுஞ்சும் தன்மையைப் பாழாக்குகின்றன. நீரோடி வெள்ளத்துக்கு அடிகோலுகின்றது. மாறாக, நம் ஊரிலிருந்து பீட் மாஸ், தென்னை நார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். அவர்கள் மண்ணைக் காப்பதற்கும் நீர்வளம் காப்பதற்கும் அவற்றைப் பாவிக்கின்றனர்.

உயிரினக்கழிவுகளைக் கொட்டுவது நீர்நிலைகளையும் அதனையொட்டிய பல்லுயிர் ஓம்புதலையும் கேடாக்கும். பல்லுயிர்கள் சூழலியல் பாழாகும் போது மண்வளம் கெட்டுப் போய், இறுகிப் போவதால் நீருறுஞ்சும் தன்மை இல்லாமற்போய் வெள்ளத்துக்கு வழிவகுக்கும்.

இப்படி எத்தனை எத்தனையோ நுண்ணியமான செயற்பாடுகளை, தத்தம் சமயம், பண்பாட்டில் இடம் பெறச் செய்துள்ளனர் மேலைநாட்டினர். இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் நாமும் அவற்றை நோக்கிச் சென்றுதான் ஆக வேண்டும். அது இந்தநாளாகவும் இருக்கலாம். காம்பிளிநதி மீண்டும் பொலிவுறுவாளாகட்டும்!

(முற்றும்)

7/24/2022

காம்பளி நதிக்கரையில் 3


உலகெங்குமே, மாந்தநாகரிகம் என்பது ஆறுகளால் பண்பட்டது. வரலாறு நெடுகிலும், மாந்தசமூகம் போக்குவரத்துக்காகவும் பாசனத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் வெள்ளக்கட்டுப்பாட்டுக்காகவும் ஆறுகளைப் பேணுவதும் அவற்றோடு பிணைந்திருப்பதாகவுமே இருந்து வந்திருக்கின்றது. அதற்கு மாற்றாக, எந்த அளவுக்கு அக்கறையும் அணுக்கமும் கொண்டிருக்கின்றார்களோ அதற்கொப்ப அவர்களுக்கான பண்பாட்டை வடித்துக் கொடுக்கின்றன ஆறுகள். ஆறுகள் போற்றப்படுகின்ற இடங்களெல்லாவற்றிலும் இலக்கியமும் கலையும் ஓங்கி வந்திருக்கின்றன.

ஆறுகள் வளமாக இருக்கின்ற போது அதையொட்டிய மனிதர்களின் பண்பாடும் வளமாக இருக்கின்றது. அவற்றுக்கு ஊறு நேர்கின்ற போதும் பாழ்படுகின்ற போதும், மனிதப்பண்பாடும் பின்தங்கிப் போய் பாழ்பட நேர்கின்றது. ஆறு செழித்தால் ஊர் செழிக்கும். முப்போகமும் விளைச்சலைத் தரக்கூடியனவாக இருந்தன நிலங்கள். ஆறுகளும் ஓடிக் கொண்டிருந்தன.

நினைவுக்குத் தெரிந்தவரையில், முதன்முதலில் ஷாம்ப்பூ, ரோஜாபாக்கு, நிஜாம்பாக்கு முதலானவை பிளாஸ்டிக் பொட்டணங்களாக வரத்துவங்கின. கொஞ்சநாளில் சீயக்காய்த் தூள் கூடப் பொட்டணத்தில் வந்தது. அவற்றைக் கொண்டு போய் ஆறுகளில் குளிக்கும் போது பாவித்து விட்டு, ஆற்றுத்தண்ணீரிலேயே ஓடவிட்டோம். கொஞ்சநாளில் துணிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வரத் துவங்கின. எல்லாவீடுகளிலும் வீட்டுக்குப் பின்னால் குப்பைமேடு ஒன்றிருக்கும். அவற்றைப் பெற விவசாயிகள் தாவுகிடப்பார்கள். பணம் கொடுத்து அள்ளிக் கொண்டு போவது கூட உண்டு. எங்கள் வீட்டுக் குப்பை மேட்டை அள்ளிக் கொண்டு செல்பவர்கள் உறவினர்கள் என்றபடியினாலே, பணத்துக்கு மாற்றாக பருத்திமார் வண்டி வண்டியாகக் கொடுப்பார்கள் தண்ணி காயவைக்க. இப்படியான பிளாஸ்டிக் வஸ்துக்கள் வந்தபின் அவற்றுக்கான மவுசு படிப்படியாகக் குறைந்து போயின. எல்லாமும் காம்பளி நதியிலும் உப்பாற்றிலும் கொட்டப்பட்டன. 

வரலாறு நெடுகிலும் ஆறுகளைப் பேணுவதும் அவற்றோடு பிணைந்திருப்பதாகவுமே மாந்தசமூகம் இருந்து வந்திருக்கின்றது. அதற்கு மாற்றாக, எந்த அளவுக்கு அக்கறையும் அணுக்கமும் கொண்டிருக்கின்றார்களோ அதற்கொப்ப அவர்களுக்கான பண்பாட்டை வடித்துக் கொடுக்கின்றன ஆறுகள்.  ஆறுகளின் வரத்துக்கான மழையும் படிப்படியாகக் குறையத் துவங்கியது. மாந்தநாகரிகத்திலும் சீர்கேடுகள் பெருகத் துவங்கின. நீள அகலம் என்பதோடு உயரமெனும் மூன்றாவது அலகுடனும் பயணித்துக் கொண்டிருந்த மனிதன், உயரத்தைக் கைவிடத் துவங்கினான். தொடர்ச்சியாக வீடுகள் இருக்கும். வாசலில் தேங்கும் மழைநீர் வடிந்து கடை போவதற்கான தொனியில் வீடுகளின் தரை உயரம் படிப்படியாக இறங்கிச் செல்லும். கடைநீர் வடிந்து சிறுபள்ளங்களுக்குச் செல்லும். சிறுபள்ளங்கள் ஓடைகளாகும். ஓடைகள் காம்பளியிலும் உப்பாற்றிலும் வந்து சங்கமிக்கும். தரைதளத்தின் உயரங்கள் ஒன்றுக்கொன்று ஏற்ற இறங்கங்களாகின. மதில்சுவர்களைக் கட்டினார்கள். ஆங்காங்கே தேங்கி நின்றது மழைநீர். வரவேண்டியது வீடுகளுக்குள்ளேயே நின்று போனது. வரக்கூடாதது கரைகளைத் தேடி வந்தன குப்பைகூளங்களாக. ஆறுகள் சபித்தன. வற்றின.

வற்றிய நதியின் போக்கை இடை மறித்தான் மனிதன். கரையில் இருக்கும் காட்டோடு சேர்த்தேவும் உழத் துவங்கினான். குறுகிப் போயின அவை. உப்பாற்றில் ஆறாமீன்களையும் கெழுத்திகளையும் ஓடியோடிப் பிடித்த காலங்கள் உண்டு. அரிப்பைத் தடுக்க ஆங்காங்கே சாரங்கட்டி இருப்பர். மேலிருந்து கீழாக அருவி வீழும். வீழ்கின்ற நீரில் இருந்து கொண்டேவும் கீழிருந்து மேல்நோக்கிப் பாயும் மீன்கள். அவற்றைப் பிடிக்க அருவிக்குப் பின்னால் சுவரோடு சுவராக ஒட்டிக் கிடக்கும் நீர்ப்பாம்புகள். பள்ளிக்குச் செல்லும் நாங்களெல்லாம் அதனைக் கண்டு இன்புற்ற பொழுதுகள் எத்தனை எத்தனையோ. நதிக்கரையில் உயிர்த்துக் கொண்டிருந்த கண்டங்கத்திரிகளும் குப்பைமேனிகளும் வல்லாரைகளும் கோரைகளும் நாணல்களும் அமுக்குரான்களும் தத்தம் உயிர்ப்பை நிறுத்திக் கொண்டன. அவை இருந்த இடத்தில் டில்லி முட்களும் பார்த்தீனியாக்களும் தனதாக்கிக் கொண்டன. முயல்களும் கவுதாரிகளும் காடைகளும் நீலகாந்தாக்களும் அடைக்கலாங்குருவிகளும் நீர் தேடி எங்கோ சென்றுவிட, பல்லிகளும் பாம்புகளும் ராஜராஜ்ஜியம் நடாத்தின. ஒருகட்டத்தில் அவையும் வெறுப்புக் கொண்டு எங்கோ போய்விடலாயின. சமூகத்தில் அக்கறை கொண்டோர் இருக்கவே செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளைச் சுட்டிக்காட்டப் போய் அவமானப்படலாயினர். ஆங்காங்கே தடுப்பணைகளுக்கு அச்சாரமிட்டனர். தடுப்பணைகள் பல பிறந்தன.

ஓடிய காம்பிளி நதிக்கும் வற்றிய காம்பிளி நதிக்கும் இடைப்பட்ட காலம்தான் நம் காலம். அதாவது ஓடியும் ஓடாமலும் இருக்கும். காலையில் எழுந்ததும் நானும் பாபுவும் சமவயதுள்ள இன்னபிற சில வாண்டுகளும் நதிக்கரை நோக்கிப் போவோம் பேசிக்கொண்டேவும். ஆற்றைக் கடந்து காடுகரைகளுக்குச் செல்வோர் சென்று கொண்டிருப்பர். பாறைகளின் மீது நின்று கொண்டு நீர்ப்பரப்பையும் கொக்குகளையும் நாரைகளையும் பராக்குப்பார்ப்பது நம் வேலை.

காம்பளி நதியை நினைக்கும் போதெல்லாம் பலநினைவுகள் நிழலாடும். அதில் மிக முக்கியமானது பெரியப்பா. முற்றிலும் தனித்துவமானவர். மாலையில் வருவார். குளிப்பார். எல்லாரும் திண்ணைகள், வீட்டுச் சேர்களென இருப்பார்கள். இவர்மட்டும் வித்தியாசமாய், வீட்டின் முன்புறம் பாய்விரித்து நடுநாயகமாய் உட்கார்ந்து கொள்வார். மற்ற சமவயதுள்ளவர்களோடு வீண் அரட்டை, அரசியல் என நான் பார்த்ததேயில்லை. பாயில் அமர்ந்து கொண்டு, தன்னந்தனியாக சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார், அமைதியோடு. மிக அமைதியாக. சீட்டுகள் எல்லாம் குத்துக்கிடையாக வரிசைவரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒன்றை இதில் வைப்பார். பின்னர் இதிலிருந்து ஒன்றை பிறிதொரு வரிசையில் வைப்பார். கடைசியில் எல்லாவற்றையும் கலைத்து ஒன்றாக்கி மீண்டும் குத்துக்கிடை வரிசை வரிசையாகச் சில வரிசைகள் வைப்பார். எஞ்சோட்டுப் பையன்கள் எல்லாம் பலமுறை அவருக்கருகே அமர்ந்து கூர்ந்து கவனித்தது உண்டு. ஒரு கோதாரியும் விளங்கவில்லை. சிரித்துக் கொள்வார். 

பல ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூர் வந்தபின்னர், ஒருநாள் மாலையில், இந்தா உனக்கான கம்ப்யூட்டரெனச் சொல்லி ஒரு கம்ப்யூட்டரை கம்பெனி முதலாளி கொடுத்தார். அதுதான் நமக்கான முதல் கணினி. எல்லாரும் அலுவல் முடிந்து வீடுகளுக்குச் சென்றபின்னர், கணினியின் இதர வசதிகளை நோண்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மலேசியச் சீனன், சியாவ் வந்து எலியைப் பிடுங்கி இப்படி விளையாடலாமெனச் சொன்னான். அப்போதுதான் விளங்கியது. பெரியப்பா அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தது Solitair Card Game.

(தொடரும்)


7/23/2022

காம்பிளி நதிக்கரையில் - 2

காம்பிளி நதியும் சரி, உப்பாறும் சரி, உயிரோட்டமாக இருந்தன. ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய வழித்தடங்கள் நிறைய இருந்தன. மாதம் மும்மாரி எனும் சொலவடைக்கொப்ப, எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யக் கூடிய காலமும் இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில் வறட்சி என்பதே இல்லாமல் இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த கோயமுத்தூர் மாவட்டம் என்பது, கொள்ளேகாலம், பவானி, கோபிசெட்டிபாளையம், அவிநாசி, ஈரோடு, தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயமுத்தூர் வட்டங்களைக் கொண்டதாக இருந்தது. பல்லடம் தாலுக்காவில் திருப்பூர் என்பது ஒரு பேரூராட்சியாக, நகரமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எங்கோ ஒரு ஊரில் மழை பெய்தால், காம்பிளியும் உப்பாறும் பெருக்கெடுத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இவற்றுக்குக் குறுக்கே நிறைய வண்டித்தடங்களும் இருந்தன. மாட்டு வண்டிகளெல்லாம் ஆற்றுக்குள் இறங்கி மறுகரையிலேறி அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தன. காடுகரைகளில் வேலை செய்வோர், கால்நடைகள் மேய்ப்போரெல்லாம் ஆற்றில் இறங்கித்தான் மறுகரைக்குச் சென்றாக வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தரைப்பாலங்கள் இருந்தன. எடுத்துக்காட்டாக, சிந்திலுப்பு, புள்ளியப்பம்பாளையம், நாதகவுண்டன் பாளையம், சலவநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் இவ்வகையான தரைப்பாலங்கள் இருந்தன. ஒருபாட்டம் மழை பெய்தாலே போதும், தரைப்பாலங்களுக்கு மேலேவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஊர்கள் துண்டிக்கப்பட்டு விடும். அந்த அளவுக்கு மழையின் ஆதிக்கமும் வீச்சும் அமைந்திருந்தன.

அப்பா ஒரு தானிய வணிகர். அறுவடைக் களத்துமேடுகளுக்கே சென்று தானியங்களையும் பருத்தியையும் கொள்முதல் செய்து, மாட்டுவண்டிகளினூடாகப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் சந்தைகளுக்குக் கொண்டு செல்வார். அப்படியான நிலையில், இப்படியான மேல்வெள்ளத்தில் வண்டிகள் அகப்பட்டுக் கொண்டதும் உண்டு. குறிப்பாக சிந்திலுப்புப் பாலத்தில் மேல்வெள்ளம் ஏற்பட்டு விட்டால், வேலூர், வாகத்தொழுவு, சலவநாயக்கன்பட்டி, சிக்கநூத்து போன்ற ஊர்களெல்லாம் உடுமலைப் பேட்டையிலிருந்து துண்டிக்கப்பட்டு விடும். அண்மையில் ஓரிரு ஆண்டுகளில்கூட, உப்பாற்று வெள்ளத்தின் காரணமாக சலவநாயக்கன்பட்டி தரைப்பாலத்தில் வண்டி அடித்துச் செல்லப்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகச் செய்திகள் உண்டு.

காம்பிளி நதியை நம்பியும் உப்பாற்றை நம்பியும் நிறையத் தொழில்கள் ஆண்டுமுழுமைக்கும் நடந்து கொண்டிருந்தன. இருகரையிலும் இருக்கும் ஊர்களிலிருந்து கழுதைகள் பொதிகளைச் சுமந்து கொண்டு கரைகளுக்கு வரும். சலவை செய்து துணிகள் காயப் போட்டிருப்பதை ஆங்காங்கே காணலாம். மட்பாண்டக் கலைஞர்கள் ஒற்றைமாட்டு வண்டிகளைக் கொண்டு வந்து நீர் அள்ளிச் சென்று மட்பாண்டங்கள் வனையப்படுவதைப் பார்க்கக் கண்கள் போதாது. வீடுகளின் புறவாசலைப் பெருக்க தென்னையோலை ஈர்க்குச்சிகளாலான விளக்குமார் பயன்படுத்துவர். வீட்டு உட்புறத்தைப் பெருக்க, ஈச்சம்புற்களையும் நாணற்புற்களையும் கொய்து கொண்டு வந்து ஆற்றுப்படுகையில் வைத்து நனைத்து நனைத்துச் சீமாறுகளைக் கட்டிக் கொண்டிருப்பர். கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டுவதும் கழுவிவிடுதலுமாக இவை விளங்கிக் கொண்டிருந்தன. ஆற்றுப் பொருளாதாரம் என்பது இப்படித்தான் உள்ளோங்கிய கிராமங்களில் இருந்தன.

ஆற்றின் கரைகளில் ஆற்றின் பெயராலே கோயில்களும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக, காம்பிலி அம்மன் கோயிலைச் சொல்லலாம். காம்பிளி நதிக்கும் வடப்புறத்தில் இது அமைந்திருக்கின்றது. இங்கும் மேல்வெள்ளம் ஏற்படுகின்ற தருணங்களில் ஊர்கள் துண்டிப்புக்காட்பட்டுவிடும். இந்தக் கோயில் அமைந்திருக்கின்ற நாதகவுண்டன் பாளையத்திலும், உப்பாற்றுத் தரைப்பாலம் இருந்த சிந்திலுப்பிலும் தற்போது உயர்நிலைப் பாலங்கள் கட்டுப்பட்டுவிட்டன என்பது கூடுதல் செய்தி. காம்பிளி நதிக்கரையில் புள்ளியப்பம் பாளையத்து விநாயகர் கோயிலும் அமைந்துள்ளது. நானறிந்த வரையிலும், அந்த விநாயகர் கோயிலுக்கு இருமுறை குடமுழுக்கு(கும்பாபிசேக) விழாக்கள் நடந்திருக்கின்றன. 1980+களில் இடம்பெற்ற முதல் குடமுழுக்கு விழாவின் போது கிட்டத்தட்ட 10 நாட்கள் நானும் அங்கிருந்து வாழ்வின் பயனை அனுபவித்தேன். ஊர்முழுக்க இளைஞர்கள். கோயில். காம்பிளி நதி, நதிக்கரையை ஒட்டிக் கிழக்காகச் செல்லும் மண்தடம், தடத்துக்கும் கோயிலுக்கும் இடையே ஓர் அரசமரத்து மேடை, மேடையை ஒட்டிக் கோயில். அந்த அரசமரத்தடியில் எப்போதும் ’சோ’வெனக் காற்றடித்துக் கொண்டேயிருக்கும். அந்த இடத்திலொரு பஞ்சாயத்து டியூப்லைட் மின்கம்பத்தில். மாலை ஆறுமணியிலிருந்து இரவு எந்நேரம் வரையிலும் இளைஞர் செட் செட்டாக வந்து அமர்ந்து கதைபேசிச் சென்றவண்ணம் இருப்பர்.  மாலைக்கருக்கலுக்குப் பின்னர், ஊருக்குள் செல்பவர்கள் அந்தவழியாகத்தான் சென்றாக வேண்டும். அங்கே உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரைக் கவனிப்பதும் அலாதியாக இருக்கும். எந்த வீட்டுக்குப் பலாப்பழம் போகின்றது, மாம்பழம் போகின்றது உட்பட எல்லாமும் இளைஞர்களுக்கு அத்துபடி.

அப்படியான கோயிலுக்குத்தான் குடமுழுக்கு விழா. எங்களுக்கெல்லாம் பரவசமாக இருந்தது. கோயில் மேல்மாடத்தில் அழகிய வேலைப்பாடுகள், வண்ணம் பூசுதலென பலவேலைகள் நடந்து கொண்டிருக்கும். பலரும் வந்து வேடிக்கை பார்ப்பது, பேசுவதென இருப்பார்கள். கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வர வேண்டுமெனப் பேசுவார்கள். விழாநாள் நெருங்க நெருங்க குதூகலம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஊர்மக்கள் எல்லாம் உற்சாகத்தில் இருந்தனர். கோயிலுக்குக் கிழபுறம் பள்ளிக்கூட வளாகம். திடலெங்கும் புங்கை மரங்களும் பூவரசன்களும் பொன்னரளிகளும் செவ்வரளிகளும் பச்சைப்பசேலக் காட்சியளித்தன. நதிக்கரையில் தென்றல். ஒயிலாட்டக் குழுவினர், பம்பை அடிக்கும் குழுவினர் எனச் சகலவிதமான கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. புள்ளியப்பம் பாளையத்து காம்பிளி நதிக்கரை அப்படியானதொரு நாளை அதற்குப் பிறகு கண்டிருக்குமாயெனச் சந்தேகிக்கக் கூடிய வகையில் இருந்தன கொண்டாட்டமும் ஊர்மக்களின் உவப்பும்.

(தொடரும்) 

7/22/2022

காம்பிளி நதிக்கரையில்

அண்மையில் ஊருக்குச் சென்று திரும்பியதில் ஏற்பட்ட அனுபவங்களை மூத்த மகரிடம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், திடீரெனக் கூச்சலிட்டார். ‘அய்யே, இது அப்பட்டமான கிரைம். அப்படி, இப்படி..’யென பதறத் துவங்கினார் மகர்.

என் பாட்டனார், அவர்தம் மாமா மகளைத் திருமணம் செய்து கொண்டதாக நானும் அம்மாவும் உரையாடிக் கொண்டிருந்தமை குறித்துப் பேசிய போதுதான் இது நடந்தது. யாரெல்லாம் ஒரே தம்பதியினரைப் பாட்டன்/பாட்டியாகக் கொண்டுள்ளனரோ அவர்களெல்லாம் ஆள்வியர், கசின் என்பது ஆங்கிலமொழியில். அப்படியான உறவுமுறையினர் திருமணம் செய்து கொள்வது அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களுள் கிட்டத்தட்ட 24 மாகாணங்களில் சட்டப்படிக் குற்றம். ஏழு மாகாணங்களில் நிபந்தனைக்குட்பட்டது. எஞ்சியவற்றுள் பண்பாட்டுத் தளத்தில் பிற்போக்கானது, ஆனால் சட்டத்தில் இடமுண்டு. இதுதான் மகரின் பதற்றத்திற்கான காரணம்.

தாயகத்துப் பண்பாடு, மாமா, சின்னம்மா, பெரியம்மா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை போன்றோர் குறித்தெல்லாம் பேசி, அவர்களுடைய பிள்ளைகளில் எவையெல்லாம் திருமணம் செய்யக்கூடிய முறைகள் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்த வேளையில்தாம், உற்றார் உறவினரெல்லாம் எப்படிப் பின்னிப் பிணைந்த சமூகமாக இருந்தது, என் தனிப்பட்ட அனுபவம் என்ன என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான பேச்சு தங்குதடையின்றிச் சென்று கொண்டிருந்ததற்கு வேறொரு முக்கியமான காரணமும் உண்டு. ஆமாம், அம்மா என்னும் பெருங்கேரக்டர் தாயகம் சென்றிருப்பதுதான் அந்தப் பரிபூரணச் சலுகையை எங்களுக்கு அளித்திருக்கின்றது. இஃகிஃகி.

1980களில் பள்ளிகள் பெரும்பாலும் விடுமுறையில்தான் இருக்கும். ஈழப்போராட்டம் முனைப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தகாலமது. பாட்டி வீடு, சின்னம்மா வீடு, பெரியம்மா வீடுகளில்தான் எப்போதும். அப்படியான காலகட்டத்தில் காம்பளிநதிக்கரையில் ஓடித்திரிந்திருந்தோம். எப்படியெல்லாம் திளைத்திருந்தோமென்பதையும் மகளார் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகருக்கு தென்மேற்கே இருப்பதுதான் அனுப்பபட்டி எனும் சிற்றூர். வேளாண்மை என்பதுதாம் பிரதானம். மாதம் மும்மாரி எனச் சொல்லப்பட்ட பூமியதுவல்லவா? மானாவாரியாகக் கூட பருத்தி விளைவித்து, நூற்பாலைகளுக்கு அனுப்புவார்கள். அப்படியான காடுகளில் இருந்துதான் புறப்படுகின்றாள் காம்பிளி. அனுப்பபட்டியில் உயிர்த்து, வெங்கட்டாபுரம் வழியாக பல்லடம் உடுமலை சாலையை இடைமறித்துக் கொண்டு புள்ளியப்பம் பாளையம், கரிசல்மடை, எலவந்தி, புத்தரச்சல், நிழலி ஆகிய ஊர்களில் வழியாகக் கிழக்கி நோக்கி ஓடி, வட்டமலைக் கரை அணையை அடைகின்றாள் காம்பிளி. அந்த அணையை நிரப்பிய பின்னாக, மீண்டும் கிழக்கு நோக்கிப் புறப்பட்டு  ஈரோடு மாவட்டம் மயில்ரங்கம் எனும் இடத்தில் அமராவதி ஆற்றோடு ஐக்கியமாகி விடுகின்றாள் காம்பிளி. 

உப்பாறும் காம்பிளியும் கசின்முறையினர்தாம். உப்பாறு என்பதும் கோவை மாவட்டம் செஞ்சேரிமலைக்கு மேற்கான அரசூர்க் காடுகளில் இருந்து புறப்பட்டு, சலவநாயக்கன்பட்டி, சிந்திலுப்பு, அம்மாபட்டி, பெரியபட்டி, பூளவாடி வழியாக உப்பாறு அணையைச் சென்று சேரும். பின்னர் அணையை நிரப்பியான பிறகு, மீண்டும் காடுகளினூடாக ஓடி தாராபுரத்தின் புறநகர்ப்பகுதியில் ஓடும் அமராவதியில் ஐக்கியமாகிவிடும். வாகத்தொழுவு வேலூர் உயர்நிலைப் பள்ளி விழாவில் ஆசிரியர் திருமிகு இந்திராணி அவர்கள் குறிப்பிட்டார், “பழமைபேசி உப்பாற்றங்கரைக் கள்ளிப்பழத்தைத் தின்று வளர்ந்த பிள்ளை, என் மாணவன்”. அந்த அளவுக்கு உப்பாற்றங்கரையோடும் நமக்குத் தொடர்புண்டு.

உப்பாற்றங்கரையிலிருந்து காம்பிளியாற்றங்கரைக்கு நேரிடையாகச் செல்லும் பேருந்து கூட இருந்தது அந்தக் காலகட்டத்தில். முதலில் ’கல்யாணி’ எனும் பெயரில் வா.வேலூர், மூங்கத்தொழுவுப் பிரிவு, செஞ்சேரிமலை, கம்மாளபட்டி, ஜல்லிபட்டி, பல்லடம், திருப்பூர் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பின்னர், ’ஸ்ரீபதி’ எனும் பெயரில் நெகமம், வீதம்பட்டி, வேலூர், மூங்கத்தொழுவுப் பிரிவு, செஞ்சேரிமலை, கம்மாளபட்டி, ஜல்லிபட்டி, பல்லடம், திருப்பூர் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. தற்போதைய நிலை நாமறியோம் பராபரமே.

வாழ்ந்திருந்த சலவநாயக்கன்பட்டிப் புதூர் உப்பாற்றங்கரையில் நின்று இந்தப் பேருந்தில் ஏறி, ஒரு ரூபாய் எண்பது காசுகள் கொடுத்தால் இரம்யமான பயணம் தொடரும். மனம் குதூகலத்தில் பரபரத்துக் கிடக்கும். உள்ளார்ந்த கிராமங்கள், மிளகாய்க் காடுகள், மக்காச்சோளக்காடுகள், நூலுக்காகப் பாவுணர்த்தும் கம்மாளபட்டி என எல்லாவற்றையும் மெதுவாய்க் கடந்து வந்து பின்னர், உடுமலை - பல்லடம் சாலை வந்தானதும் வண்டி பெருவேகம் எடுக்கும். நம் மனமும்தான். கேத்தனூர் தாண்டியானதுமே எழுந்து படிக்கருகே வந்து நின்று கொள்வோம். நாம் அடிக்கடி செல்வதாலேயும், திருப்பூர் பருத்தி மார்க்கெட்டுக்கு அடிக்கடி செல்பவர் அப்பா என்பதாலேயும் நமக்கான விசேட கவனிப்புகளும் உண்டு. மிகச்சரியாக காம்பிளி நதிக்கரையில் வண்டி நிற்கும். ஆமாம், அப்போதெல்லாம் புள்ளியப்பம் பாளையத்துக்கான பேருந்து நிற்குமிடம் அதுவாகத்தான் இருந்தது. பின்னாளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாகப் பிரிவுச் சாலைக்கு இடம் மாற்றப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். 

கரையில் இறக்கிவிடப்பட்டால், டில்லிமுள் மரங்கள் நெருக்கமாக மண்டிக் கிடக்கும். அதனூடாக உட்புகுந்து ஆற்றில் கால்பதித்து, சிலுசிலுவென நீரோடும் அந்தப் பாறைகளின் மீதாகச் சற்று நடந்து போய் மேடேறினால் ஊருக்குச் செல்லும் பாதை வந்து விடும். யார் எதிர்ப்பட்டாலும், ’இப்போதுதான் வருகின்றாயா? ஊரில் எல்லாரும் நலமா? மழையா?’ என்று விசாரிப்பார்கள். அந்த அளவுக்கு ஊரில் இருப்போர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஊரில் இருக்கும் எந்த வீட்டிற்கு யார் வந்தாலும், அவர்கள் ஊரின் விருந்திநர் என்றே பார்க்கப்பட்ட காலமது. சாலையை அடைந்ததும், சாலை வழியாகச் சென்று ஊர்த்தலைவாசலான விநாயகர் கோயிலடி வழியாகவும் செல்லலாம். அல்லது சாலையை ஒட்டியே உட்புகுந்து குறுக்காகச் சென்றாலும் பெரியம்மா வீடு வந்து விடும். பேரானந்தமாக இருக்கும்.

ஊருக்குள் இருக்கும் எல்லா வீடுகளும் நம் வீடுகளே. எந்த வீட்டுக்கும் போகலாம். எல்லா வீடுகளிலும், வீட்டுக்கு மூன்று முதல் எட்டுப் பேர் வரையிலும் பிள்ளைகள் இருப்பார்கள். ஒரு கணக்குக்காக, 25 வீடுகள், வீட்டுக்கு மூன்று பிள்ளைகள் என வைத்துக் கொண்டாலும், குறைந்தது 75 பிள்ளைகள் கூடக்குறைய சம வயதில் இருந்தனர். எப்படி இருந்திருக்குமென நினைத்துப் பாருங்கள். ஜெகஜோதியாக இருக்கும். எந்நேரமும் விளையாட்டு, வம்புகள், அளவளாவலென ஆர்ப்பரிக்கும் காம்பிளிநதிக்கரையில்.

(தொடரும்)


7/17/2022

வாய்மொழிக் கதைகள்

வாய்மொழிக் கதைகள் நீக்கமற நிறைந்திருந்த காலமென்பது உண்டு. சற்றேறக்குறைய 1990கள் வரையிலும் அவை இருந்தன. காரைவாசல், கோவில் மேடைகள், மரத்தடிகள், குளத்தேரிகள், கிணத்துமேடுகள் முதலான இடங்களிலும், ஆடு மாடு மேய்க்கும் போதான தரிசு நிலங்களிலும் வாய்மொழிக்கதைகள் புழங்குவதும் உயிர்ப்பதுமாக இருந்தன.

வயது ஐம்பதைக் கடந்தோர் தன் அனுபவங்களைச் சாதனைகளாக வெளிப்படுத்துவதாகவும் அவை இருந்தன. இளையோருக்கு அவை சுவாரசியம் ஊட்டக் கூடியதாகவும் கேளிக்கையாகவும் இருக்கும். வின் - வின் என்பதான அடிப்படையில் இருதரப்புக்குமே இலாபம்.

நிறையப் பேருக்குத் தாம் பேச வேண்டும். மற்றவர் கேட்க வேண்டுமென்கின்ற ஆவல் உண்டு. அது மனித இயல்பு. அவ்வாறான வேட்கையைத் தணிப்பவையாக இருந்தன வாய்மொழிக் கதைகள்.

ஊரில் சித்தப்பா ஒருவர் இருக்கின்றார். பேசித் தீர்க்க வேண்டுமென்கின்ற தணியாத ஆசை உள்ளவர். பேசுங்களெனச் சொல்லி உட்கார்ந்து விட்டேன். ஓரிரு நாட்கள் கழித்துக் கிளம்பும் வேளை வந்து விட்டது. மீண்டும் எப்போது வருவாய்? அடுத்த வாரம் வர முடியுமா என்கின்றார் குழந்தையைப் போலே! எதொ அமெரிக்கா என்பது ஆட்டையாம்பாளையத்துக்கு அருகில் இருப்பதைப் போலே!!

நண்பர் அலெக்ஸ் இருக்கும் வரையிலும் மாதமொருமுறையாவது ஃபோன் செய்து விடுவேன். அவர்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பார். ஸ்பீக்கர் ஃபோனில் போட்டுவிட்டு மற்ற மற்ற வேலைகள் கூடச் செய்து கொண்டிருப்பேன். அடிக்கடி அழையுங்கள் என்பார்.

அம்மாவிடம் ஊரைப் பற்றியும் ஊர் மக்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இடைக்கிடையே பேசிக் கொண்டிருப்பதினின்று கிளைத்து மற்றொரு விசியத்துக்கு மாறிவிடுவார். சிலமுறை வெட்டி, பேசுபொருளுக்குள் இழுத்து வருவேன். சிலமுறை போக்கில் விட்டுவிடுவதும் உண்டு. அப்படி விட்டுவிட்டால்தாம் அவர்களுக்கான மனநிறைவு கிட்டும்.

எதிர்பாராத விதமாக அந்தப் பெண்மணியைச் சந்தித்தேன். நான் பாலகனாக இருந்த போது எப்படியெல்லாம் குறும்புகள் செய்தேன், என் பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்களென்றெல்லாம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் என் முகவாய்க்கட்டையைத் தொட்டுத் தடவினார்.

கவனிப்பாரற்ற மக்களுக்கானவை வாய்மொழிக் கதைகள். அப்படியான ஒரு கதையைக் கேட்கின்றோமென்றால், சொல்பவரின் வாழ்வின் பயனை நீட்டிக்கின்றோமென்பதே பொருள்.


7/14/2022

மழைத்தூரல்

மழைக்காலம், நிறைய சாலை விபத்துகள், மரணங்கள் பற்றிய செய்திகள். கவனக்குறைவும் புரிதற்குறைவும் மேலோங்கி இருப்பதுதான் காரணம்.

1. எந்த நேரத்திலும் வெளிச்சமின்மை(இன்விசிபிலிட்டி) ஏற்படலாம். முகில்கள் நகர்ந்த வண்ணமே இருக்கும். திடீரெனக் கார்முகில் வரக்கூடும். அப்படி இடைப்படும் போது இருள்குவியும். நமக்கான பார்வையின் தூரம் குறையக் கூடும். ஆகவே, நல்ல சூரிய வெளிச்சமிருந்தாலும் ஹெட்லைட் போட்டுக் கொள்ள வேண்டும்.

2. சாலையில் நுண்ணிய தகடு போன்ற நீர்ப்படலம் இருந்து கொண்டே இருக்கும். ஒருதுளி டீசல்/ பெட்ரோல்/ லுபிரிகண்ட் ஆயில் போன்ற எண்ணெய்த் துளிகள் கலக்கும் போது வழுக்க நேரிடும்.

3. ஆங்காங்கே நீர் தேங்கும் போது, நீர்ப்பாலம்(hydroplaning) தோன்றி விடும். அதாவது வண்டியின் டயருக்கும் நிலத்துக்கும் இடையே கனமான நீர்ப்பாளம்(layer) இருக்கும். வேகமாகச் செல்லும் போது, டயருக்கும் நிலத்துக்குமான உராய்வு இல்லாமலே போய்விடும். வண்டியின் வளைவு, வேகம், பிரேக் என்பதெல்லாவற்றுக்கும் இந்த உராய்வுதான் அடிப்படை. அதுவே இல்லாதபோது, கட்டுப்பாடின்றிப் பயணிப்பதும் இடம் பெற்று விடுகின்றது. 

4.குறைவான வேகத்தில் செல்லும் போது, நீரை அடித்து விலக்குவதற்கான கால அவகாசம் டயர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே நிலைத்தன்மை ஏற்படும்.

5. கானல்நீர் கண்களைப் பறிக்கும். மினுமினுப்புகள் கவனத்தைச் சிதறடிக்கும். ஆகவே போதிய இடைவெளியுடன் பயணிப்பது அவசியம்.

Overall you want to be extra cautious in wet weather. Slow down, avoid hard braking or turning sharply and allow ample stopping distance between you and the cars in front of you.


7/12/2022

வாழ்வின் பயன்

 

ஒருநாள் மாலைப் பொழுது. பார்ப்பதற்காக நண்பர் வந்திருந்தார். மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசினார். பேசிக்கொண்ட தனிப்பட்ட தகவல்களையெல்லாம் பொதுவில் வைக்க முடியாது. ஆனால் பொதுப்படையாக எங்கள் உரையாடல் வளமானதாக இருந்தது. வினா விடையென்ற ரீதியில் அமைந்திருந்தது, இராம்நகர் தெருக்களில் அந்த இதமான காற்றை அனுபவித்துக் கொண்டேவும்.

வாழ்வின் பயன் என்பதென்ன? மகிழ்வாக இருத்தல் என்பதாகத்தானே இருக்க முடியும்? எல்லாமும் அமையப் பெற்றிருந்தால்தான் ஒருவரால் கூடுமான வரையிலும் மகிழ்வாக இருக்க முடியும். அல்லாவிடில், பதற்றம், வலி, அழுத்தம் என்பதாக அதன் இருப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடும். அந்த மகிழ்வை எப்படி அடைவது?

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இரவு பத்து மணி வரையிலும் உழைப்பது. உழைப்பில் ஈட்டிய பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்வது. அந்த முதலீட்டின்வழிக் கிடைத்த பணத்தை மறுமுதலீடு செய்வது. இப்படிச் செய்யும் போது, நமக்கான சொத்துகள் பெருகிக் கொண்டே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இன்பம் கொள்கின்றோம். மகிழ்ச்சியாக இருக்கின்றது. அந்தப் பணத்தைக் கொண்டேவும் பிறருக்கு உதவவும் முடிகின்றது. இது போதும்தானே எனக்கு? இதற்கு மேல் வேறென்ன வேண்டிக் கிடக்கின்றது. நண்பர் வினவுகின்றார்.

அவரவர் வாழ்வின் பயனுக்கான வரையறையை அவரவர்தான் வகுத்துக் கொள்ள முடியும். பிறரின் வாழ்வை எடை போடுவதற்கு நான் யார்? ஆனாலும் அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகக் கேட்டுவிட்டார். சொல்லித்தானே ஆக வேண்டும்?

நான் சொன்னேன், “நாலும் கலந்ததுதான் வாழ்க்கை. ஏதோவொன்றின் பேரில் மிகையான நேரத்தைச் செலவிட்டு விடுகின்றோம். பின்னாளில் ஆசை பிறக்கின்றது. எடுத்துக்காட்டாக, காலார மலை ஏற வேண்டும் போல இருக்கின்றது. உடல் ஒத்துழைக்க வேண்டுமே? முடியாமற்போவதற்கான வாய்ப்புகள் கூடுதல். ஆகவே அந்தந்த வயதில் செய்ய வேண்டியதைச் செய்துவிடல் நன்று. எல்லாமுமே ஒரு பேலன்சிங் ஏக்ட்தாம்”. சரியெனச் செவிமடுத்துக் கொண்டு, அமெரிக்கா சுற்றிப் பார்க்க எவ்வளவு செலவாகுமென்றார். நான் ஏதோ பதில் உரைத்தேன்.

பொதுவாக, இந்திய, தமிழகப் பண்பாடென்பது பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், அமெரிக்காவைப் பார்த்து முதலாளித்துவ ஏதேச்சதிகாரமெனக் கூவுவர். இந்தச் சிக்கல் பேசியவர்களில் பெரும்பாலானோர்க்கும் இருப்பதைக் காணமுடிகின்றது. பண்பாட்டின் இத்தகைய அடிப்படையைக் கட்டமைப்பதே, பண்பாட்டைப் பேண வேண்டிய சமயவாதிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்கள்தாம். அவர்கள், ‘கல்ட்’ என்பதை எல்லாத்தளங்களிலும் கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றனர். சாமான்யர்கள் எல்லாம் தம் உழைப்பை, பணத்தை இந்த கல்ட் தலைவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். கூடுதல் பணத்தைக் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். நண்பர் பூபதி சொன்னார், “ரெடி கேஷுடன் வருபவனுக்கு வியாபாரம் முடியாது. ஆனால் பல கோடிகள் கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு இடம் விற்பனையாகும். காரணம், முன்னையவன் வந்திருப்பது சாதா கார், பின்னையவன் வந்திருப்பது உயர்ரக வெளிநாட்டுக் கார்!”. அமெரிக்காவில் இது சாத்தியமா? ஆட்களைப் பார்த்தோ, புறவுலகைப் பார்த்தோ வணிகம் இடம் பெறுவதில்லை. எல்லாமும் தரவுகளை வைத்துத்தான். தரவுக்கப்பாற்பட்டு வணிகம் இடம் பெற்றால், அது சட்டப்படிக் குற்றம். ஒரு வீடு விற்பனைக்கு வருகின்றது. யார் அதிகம் விலை வைத்திருக்கின்றனர் என்பதோடு கிரிடிட் ஹிஸ்டரி/அல்லது முன்பணம் என்பதுதான் தீர்மானிக்கும்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு! இதை விடச் சுருக்கமாக சொல்லி விட முடியாது. பொருள் இல்லாவிடில் புறவாழ்க்கை இல்லை. ஆனால் அதைப் போன்றே அருள் இல்லாதவிடத்து அகமே இல்லாமற்போகும். நம்மையொத்த மனிதர்களிடத்திலே நேரம் செலவு செய்யவில்லை. அணுக்கம் போற்றவில்லை. பிறகெப்படி அகம்(மனநலம்) அமையும்? ஆகவே நாலும் கலந்ததுதான் வாழ்வின் பயனை நமக்கு ஈட்டித்தரும்.

பொருள், மெய்நலம், மனநலம், உறவுநலம், வினைநலம், தனிப்பட்ட அந்தரங்கம் என ஆறும் அமையப் பெற்றதுதான் சிறப்பாக இருக்க முடியும். ஏககாலத்தில்(concurrently), அதாவது, இவையனைத்திற்கும் ஒருங்கே கவனம் செலுத்தியாக வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, அறுபது வயதுக்கப்புறம், சொத்துச் சேர்த்து பெரிய ஆள் ஆனதற்கப்புறம், உறவுக்காரர்களைப் பார்த்துக் கொள்ளலாமென இருந்துவிட முடியுமா? அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானோர் போய்ச் சேர்ந்திருப்பர். இஃகிஃகி, எல்லாமும் அப்போதைக்கப்போது சமச்சீரோடு கொண்டு போக வேண்டும். அல்லாவிடில் நம் மனமே நம்மைப் பதம் பார்க்கத் துவங்கி விடும், குற்றவுணர்வின் பொருட்டு!

திமிர்

luxury: the state of great comfort and extravagant living.

ஆடம்பரம்னா என்ன? விலை உயர்ந்த கார், ஆடை, ஆபரணங்கள் சூழ் வாழ்வு. அப்படின்னு நினைச்சிருந்தா, அது தவறு. வசதிகளுடனும் பொது எல்லைக்கோடுகளுக்கு அப்பாற்பட்ட வாழ்வுமுறையும் என்பதுதான் ஆடம்பரம்னு ஆக்சுஃபோர்ட் அகரமுதலி சொல்லுது. உண்மைதானே? எப்ப ஊருக்கு வந்தாலும் கோத்தகிரி மலைக்குச் செல்வது வாடிக்கை. அது நண்பர்களால் நமக்கு வாய்த்த கொடை. ஏதோவொரு காரணத்தால் பேருந்தில் பயணிப்பதும் அதுவாகவே நிகழ்ந்து விடுகின்றது. இம்முறையும் அப்படியே. கீழிறங்கும் தருணத்தில்தான் நண்பரின் அண்டைவீட்டுக்காரர் ஒருவர் இறந்து விட்ட தகவல். ஆகவே அவர் அந்த இழவுவீட்டுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். தன்னுடன் வருமாறும், பதினைந்தே நிமிடங்கள் இருந்து விட்டு வந்துவிடலாமென்றும் சொன்னார். நான், இல்லை, பஸ்ஸில் சென்று விடுகின்றேனெனச் சொல்ல, அவருக்கு வருத்தம். அங்கிருந்த வந்திருப்பவனைப் பஸ்ஸில் செல்ல அனுமதிப்பதா? நான் சொன்னேன், ஏற்கனவே பலமுறை பஸ்ஸில் சென்றாகிற்று. இதுவொன்றும் எனக்குப் புதிதல்லவென.

காரமடை to காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம். காரமடையில் ஏறினேன். ஆகாசத்தில் பயணிப்பது போலவும், சாலையில் உடன் பயணிப்பவர்களெல்லாம் வறிய பிச்சைக்காரர்கள் போலவும் உணர்ந்தேன். ஆமாம், BMW,பென்ஸ், ஸ்கோடா என எல்லா வண்டிளும் சின்னஞ்சிறுசுகளாகத் தெரிந்தன. காரணம், காரில் உட்கார்ந்து பயணிக்கும் போது உயரம் குறைவான நிலையில், சம உயரத்தில் ஏராளமான மோட்டார் பைக்குகள், இதரக் கார்கள், குண்டுகள் குழிகள் என எல்லாவற்றோடும் பயணிப்பதுதான் காரணம். பஸ்ஸில் பயணிக்கும் போது, அவை எதுவும் தெரிவதில்லை. மேற்குப்புறமாகத் தெரியும் மலைகளை ஏகாந்தமாகத் தரிசிக்கலாம். முன்னே பார்க்கின் சில பல மைல்கள் தொலைவுக்கும் பார்வை கிட்டும், தனிப்பட்ட பயணம். எட்டப்பார்வையில் ஒரு செருக்கு. இஃகிஃகி, 21 ருவா டிக்கட். முப்பது ரூபாய் கொடுத்தேன், பத்து ருவா நோட்டைத் திருப்பிக் கொடுத்துச் செருப்பால் அடித்தான் அந்தப் பையன். ஆகமொத்தம் இரவது ருவா டிக்கெட்ல என்னாவொரு திமிர்த்தனமான பயணம்?! பப்ளிக் பஸ்ல போங்கடே!6/30/2022

ஆற்றின்மடியில்

 மெம்ஃபிஸ் நகரில் ரிவர்வாக்(மிசிசிப்பி ஆற்றங்கரை), செயிண்ட் லூயிஸ் நகரில் ரிவர்ஃபிரண்ட்(மிசிசிப்பி ஆற்றங்கரை), சார்லட் நகரில் ரிவர்பார்க்(கட்டாபா ஆற்றங்கரை), சட்டனூகா நகரில் ரிவர்பெண்ட், ரிவர்வாக்(டென்னசி ஆற்றங்கரை), லூயிவில் நகரில் வாட்டர்ஃபிரண்ட்(ஒஹாயோ ஆறு), இவையெல்லாம் ஆன்ம உலாவுக்கான இடங்களாகப் போற்றப்படுகின்றன அமெரிக்காவில். ஆற்றங்கரையோரத்தில் பூங்காக்கள் அமையப் பெற்றிருக்கும். காலை, மாலை வேளைகளிலும் வார ஈற்று நாட்களிலும் அங்கேதாம் மக்கள் தங்கள் நேரத்தைச் செலவழிப்பர். உடற்பயிற்சி, படிப்பு, விளையாட்டு, படகு ஓட்டுதல் எனப் பலவாக இருக்கும். அது ஒரு பண்பாடு. இயற்கையைத் தரிசித்துக் கொண்டேவும் இசை பயில்வார்கள். சும்மாவேனும் உட்கார்ந்திருப்பார்கள்.

நண்பகல் விருந்து என்பதே இரண்டரை மணிவாக்கில்தாம், தலைவாழை விருந்தாக மருத்துவர் சோமு ஐயா அவர்களின் வீட்டில் வெகுவிமரிசையாக இடம் பெற்றது. அதற்குப் பிறகு மாலைக்குளியலுடன் உண்டாட்டு நிகழ்வு தோட்டத்தில். நிரம்பிய வயிற்றுடன் என்னால் படுக்கையை நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. 'மாப்பு, கொஞ்சம் எங்காவது வாக்கிங் சென்று வரலாமா?' என்று கேட்டேன். இரவு 9 மணியைத் தாண்டியிருந்தது. 'வீட்டுக்கு மேலேயே சற்று நடக்கலாம் மாப்பு' என்றவர் என்ன நினைத்தாரோ, வாங்க போகலாமெனச் சொல்லி வெளியே அழைத்துப் போனார்.

தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த இடங்களில் இதுவுமொன்று. பவானியும் காவிரியும் சங்கமிக்கின்ற இடம். அதன் குறுக்கே நெடியதொரு பாலம். கும்மிருட்டு. மின்விளக்குகள் எதுவும் எரிந்திருக்கவில்லை. ஓரத்தில் நடந்து செல்லும்படியான குறுகற்தடம் ஒன்று உண்டு. அதன்வழியாக செல்ஃபோன் டார்ச் உதவியோடு மறுகோடி வரை நடந்து சென்றோம். இடப்புறம் இரு ஆறுகளும் அமைதியாக வந்து ஈருயிர்கள் ஓருயிரென ஆகிக் கொண்டிருந்தன. தொலைதூரத்தில் ஒரு மலைக்குன்று. அதோ அதுதான் குமாரபாளையம். இதுதான் பவானி. வலப்புறத்தில் பரந்து விரிந்த காவிரி, தென்னை மரங்கள், மரங்களுக்கு இடையே சாந்தமாக காளிங்கராயன் வாய்க்கால். கீழே பார்க்கின்றேன். விழுந்தால் மிஞ்சுவோமா? 'மாப்பு, இது நெம்ப ஆழமா?' என்றேன். 'ஆமாங், மாப்பு. சுழல்களோடுதான் சென்று கொண்டிருக்கின்றாள் காவிரி' என்றார். நுனியோரம் இருந்தவன் உள்பக்கமாக நடையை மாற்றிக் கொண்டேன். ஆகாசத்தில் நடந்து சென்று கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு.

திரும்பிவிட்டோம். ஒரே ஒருவர் சைக்கிளை நிறுத்திவிட்டு, தன்னந்தனியாக உட்கார்ந்து காவிரித் தென்றலை ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். நாங்களும் பாலத்தின் கங்கில் அமர்ந்து கொண்டோம். கனரக வாகனங்கள் செல்லும் போதெல்லாம், ஊஞ்சலில் உட்கார்த்தித் தாலாட்டுவது போல இருந்தது. ஆமாம், அம்மாம்பெரிய பாலம் மேலும்கீழுமாக ஊசலாடியது. 'உள்ள ஸ்பிரிங் வெச்சி சட்டகங்களை கேக்போல வெச்சிக் கட்டியிருக்குங் மாப்பு' என்றார்.

இராவெல்லாம் உட்கார்ந்து கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாருமே இல்லை எங்களைத்தவிர. நீர்ப்பரப்பின் ஒளி பட்டு மரங்கள் மினுமினுப்பைக் காட்டிக் கொண்டு நின்றன. தொலைதூரத்தில் சங்கமேஸ்வரரின் கோபுரக் கலசங்கள் போல ஏதோவொன்று, அதுவும் மின்னியது. இதையெல்லாம் பார்க்காமல் என்னதான் செய்கின்றனர் மக்கள் என்பதாக ஒரு செருக்கு நமக்கு.

உண்டாட்டின் தீண்டல் நாவறட்சியாக உருவெடுத்தது. கையில் தண்ணீர் பாட்டிலோடு வந்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். 'மாப்பு, தண்ணித் தாகமெடுக்குது' என்றேன். பிரிய மனமில்லாமல் பிரிந்து நடை போட்டோம் வீடு நோக்கி. 

தண்ணீர் குடித்தானதும் வீட்டு மேல்தளத்துக்குச் சென்றமர்ந்தோம். சிலுசிலு காற்று. காவிரித்தாய், அவளின் பவானி எழில்மகள், வாய்க்கால், மரங்கள், வீடுகள், கூடவே பெருஞ்சாலையில் சுடுகாற்றைக் கக்கியபடிக் கக்கியபடி தீப்பெட்டிகள் போல அங்குமிங்கும் சீறிக்கொண்டிருந்த கனரக வாகனங்கள்; இவற்றுக்கிடையே இரண்டு மனிதப்பயல்கள் மொட்டை மாடியில்! வானம் எல்லாவற்றையும் கேலிப்பார்வையுடனும் புன்சிரிப்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தது.

6/24/2022

தாயகம்

35 ஆண்டுகளாக அந்நிய நாடுகளில் வாழ்ந்து வரும் எனக்கு ஒவ்வொரு தாயக வருகையும் மறுபிறவிதான். ஒவ்வொரு முறை வரும்போதும் சிலபல மனிதர்களைத் தொலைத்து விட்டிருப்பேன். பிறந்த மண்ணில் வாழும் மனிதர்களே எனக்குத் தாயகம். ஆகவேதான் மனிதர்களைத் தேடித்தேடிச் செல்கின்றேன். அம்மா பிறந்த ஊரிலிருக்கும் மாமாவின் தோட்டத்தில் இருந்த தாவரங்களைப் பார்த்தபடி இருந்தபோதுதான் என் சின்னம்மா என்னை அழைத்து, இது யாரென்று தெரிகின்றதாயெனக் கேட்டார். தெரியவில்லை என்றேன். சுட்டப்பட்டவர், என் சகோதரர்களின் பெயர்களைச் சொல்லி, என் பெயரையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, 'நீங்களெல்லாம் குழந்தைகளாக இருக்கும் போது, வளவுக்குள் உங்களைத் தூக்கிக் கொண்டு போய் வைத்திருப்போம். விளையாடி மகிழ்வோம்' என்று சொன்னார். எனக்கு மனம் உறைந்துபோய் விட்டது.

'இதுதா கருங்கண்ணி. நீண்ட காலமானதால் நீ மறந்து விட்டிருப்பாய்' என்றார் கவனித்துக் கொண்டிருந்த சின்னம்மா. நான் மறுமொழியாக எனக்கு நினைவிலிருக்கும், 'மாரி, முத்தி எல்லாம் நலமா?' என்றேன். 'அவர்களெல்லாம் இறந்து பல ஆண்டுகளாகின்றன' என்றார் கருங்கண்ணி. என்னை விடவும் ஐந்தாறு ஆண்டுகளே அதிக வயதுள்ள அந்தப் பெண்மணி.

காசு பணம் கொடுத்திருக்கலாம். உணர்வுப் பெருக்கில் எதுவும் தோணவில்லை. இப்படியாகப்பட்ட மனிதர்களே எம் தாயகம்.

பழமைபேசி.

6/17/2022

FeTNA: சிறுகதைப் போட்டியும் வாழ்த்துகளும்

வட அமெரிக்கத் தமிழர்களின் அடையாளமான, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையானது சிறுகதைப் போட்டி நடத்தியிருப்பது பெரும் போற்றுதலுக்குரிய செயல். அதனை மிக நேர்மையாக, உண்மையாக நடத்திய இலக்கியக்குழுவுக்குப் பாராட்டுகள். பங்கு கொண்டோர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்; அல்லாவிடில், முன்னெடுப்பு வெற்றி பெற்றிருக்காதுதானே?

கதைகளைத் தெரிவு செய்யும் பணியில் எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி!  hope I was not too hard. கிட்டத்தட்ட 100 மணி நேர வேலையது. இப்போது, வழமையான நம் பணியைத் தொடர்வோம். கடந்த 2 மாதங்களுக்கும் முன்பே, 2010ஆம் ஆண்டுக்கான விழாநறுக்கினை(flyer) அனுப்பி, இப்படியாக விளம்பரப் பணிகளைச் செய்ய வேண்டுமென அறிவுறுத்திச் செயற்குழுவுக்கு மடல் அனுப்பினேன். முகமன் கருதி ஒரு பெறுகை(acknowledgement) கூடக் கிடைக்கப் பெறவில்லை. விழாவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தமிழ்ச்சங்கத் தலைவர்கள் /ஆயுள் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஃப்ளையர் வடிவமைப்பு குறித்து மயிர் பிளக்கும் விவாதம் நடக்கின்றது. ஆவ். எனவேதான், சிறுகதைப் போட்டிப் பணிகளின் போது இடம் பெற்ற என் நயாப்பைசாக் கருத்துகளைத் தற்போது பொதுவில் வைக்கின்றேன். இனி வரும் காலங்களில் வருவோர், சரியெனக் கருதினால் பயன்படுத்திக் கொள்வார்களாக. Please take it as constructive feedback.

o0o0o0o0o0o

வணக்கம்.  சிறுகதை இப்படித்தான் அமையப் பெற வேண்டுமெனத் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியுமாயெனத் தெரியவில்லை. அப்படி வரையறுத்து விட்டால், புதுமுறையில் முயன்று பார்ப்பதென்பது இல்லாமலே போய்விடும்தானே? அப்படியொன்று பிறந்து, அது வெற்றி பெறாது என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. ஆனாலும் கூட, அவரவர் வாசிப்பு, எழுத்தனுபவம், புரிதலுக்கொப்ப சிலவற்றைப் பொதுப்படையாகச் சொல்ல முடியும். அவற்றுள், முக்கியமாகத் தெரிவன கீழேவருமாறு:

சிறுகதைக் கூறுகள்

1.முழுமை/விழுமியம்

சிந்தனையைக் கிளறுவதாக இருக்கலாம். அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கலாம். சுட்டிக் காண்பிப்பதாக இருக்கலாம். புதிய திறப்புக்கு வழிகோலுவதாக இருக்கலாம். என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நோக்குநிலை என்னவோ, அது முழுமையாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். நிறைவுத்தன்மை கொண்டிருக்காவிடில், கதையின் மற்றைய கூறுகளுக்கு ஒரு பொருளுமில்லை.

2. எழுத்துநடை

எளியதும் நுண்ணியதுமானதுமான தமிழ்ச் சொற்கள் கொண்டு, சொல்ல வரும் கருத்தினைக் கடத்துவதும் வாசகரைக் கதைக்குள் ஒன்றச் செய்வதுமான போக்கினைக் கொண்டிருப்பது.

3.கதைக்கரு

தனித்துவமானதும் பொதுப்புத்திக்கு எளிதில் அகப்படாததுமான ஏதொவொன்றைப் படம் பிடித்துக் காண்பிப்பது, இடித்துரைப்பது, போற்றுவது, சுட்டிக்காட்டுவதென்பதாக இருத்தல்.

4.கதைவடிவம்

சிறுகதை உத்திகளில் பலவுண்டு. தன்னிலையில் சொல்வது,  வட்டாரவழக்கில் சொல்வது,  உரையாடல், நனவோடை, இயல்புவாதம், தலைப்பு,  கருக்கதை, கதைமாந்தர், உணர்வு முதலானவற்றைத் தேவைக்கேற்றாற்போல செவ்வனே கொண்டிருத்தல்.

[இந்த நான்கு கூறுகளின் அடிப்படையிலேயே கதைகளுக்கான மதிப்பீடுகள் வழங்கப்பட்டிருந்தன]

o0o0o0o0o0o

வணக்கம். எல்லாக் கதைகளையும் வாசித்து விட்டேன். ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதுதான். தமிழில் கதை எழுத ஆசைப்பட்டு முயன்றிருக்கின்றனர். பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்கா வந்து சேர்ந்த நம்மால் ஒரு கதையை வாய்வழக்காகக் கூடச் சொல்ல முடியாதா? தொடர்ந்து எழுதாவிடினும், ’அவ்வப்போது கூடத் தமிழில் எழுதுவதில்லை’ என்பது முக்கியமாகப்படுகின்றது. அடுத்தமுறை இப்படியான போட்டிகள் வைக்கும் போது, தொடர்போட்டியாக அமைத்தல் நலம் பயக்குமெனக் கருதுகின்றேன். எப்படி?

மாதாமாதம் போட்டியாளர்கள் கதை எழுதி அனுப்ப வேண்டும். அந்தந்த மாதத்தில் எவை சிறந்த மூன்று கதைகளோ அவற்றுக்கு $50 பரிசு. இப்படித் தொடர்ந்து 12 மாதங்களும் எழுதி வருகின்ற போது, அவர்களுக்குப் போதிய பயிற்சி அமையும். மேலும், கதைகளை வாசிக்கத் தலைப்படுவர். கதை நேர்த்திகளைக் கற்றுக் கொள்ள விழைவர். கடைசியாக 36 கதைகளில் சிறந்த ஐந்து கதைகளுக்கு பெரும்பரிசுகளை அறிவிக்கலாம்.

பெரும்பாலானவற்றில் ஊர்ப் பெயர்கள் அமெரிக்க நகரங்களாக இருக்கின்றனவேவொழிய, உள்ளீடு தமிழ்நாட்டைச் சார்ந்தவையாகவே உள்ளன. அமெரிக்க விழுமியங்கள் ஆயிரமாயிரம் கொட்டிக் கிடக்கின்றன. மரம் பேணுவதினின்று, தற்பணிகள்(do it yourself), மருத்துவ ஒழுங்குகள், காப்பீட்டுப் பணிகள், பன்னாட்டுப் பண்பாட்டுப் பற்றியங்களென ஏராளமான விதைகள் உள்ளன. ஓரிரு கதைகளில் ஓரிரு பற்றியங்கள் உள்ளூர் சார்ந்தனவாக அமைந்திருக்கின்றன.

இலக்கணம், எழுத்துப்பிழை, கதைக்குத் தலைப்பிடல், கதைக்கரு ஆகியனவற்றின் அடிப்படையில் 29 கதைகளுக்கு விலக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இடம் பெறுவதில், ஒருசில கதைகள் முன்பின் இருக்கலாம்; தவிர்க்க இயலாதது. எஞ்சி இருக்கும் இருபது கதைகளைக் குழுவின் பார்வைக்குத் தருவது உசிதமாய் இருக்குமெனக் கருதப்படுகின்றது.

o0o0o0o0o0o

வணக்கம். முதற்சுற்றில் தெரிவான 20 கதைகளை மீண்டும் சில முறை வாசிக்க வேண்டியிருந்தது. கதைக்கும் கதைக்கும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டதுதான். ஒரு கதை கூட அமெரிக்கக் கதையாகவோ, கனடியக் கதையாகவே இருந்திருக்கவில்லை. மாறாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் எழுதப்பட்ட தமிழ்க் கதைகளாகவே இருக்கின்றன. எனினும், ஈழத்தமிழ் நடையில் இருக்கும்  சில   கதைகள் சற்று வேறுபட்டு இருந்தன.

நீட்டலும் மழித்தலும் எனத் தலைப்பிட்ட கதையானது, சிறுகதைக்கான முழுநேர்த்தியைக் கிட்டத்தட்ட தொட்டுவிட்டது. ஆனால் அது ஒரு அமெரிக்கக் கதை எனச் சொல்லிவிட முடியாது. குறியீட்டுக் கதை என்கின்ற அளவில், 'அவரவர் அவரவராய் இருத்தல் நன்றாம்' என்பதைச் சொல்லாமற்சொல்லும் கதை.

புதுவானம் எனத் தலைப்பிட்ட கதை, உள்ளூர் மனநிலையைக் காண்பிக்கின்ற கதையாகப்படுகின்றது. மேலும் கூடச் செம்மையாக்கியிருக்கலாம்.

ஒரு சதவிகித ஐயம் எனத் தலைப்பிட்ட கதை, நல்ல கதைக்கரு. ஆனால் எழுதப்பட்ட விதம் இன்னும் செம்மைப்படுத்தி இருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் கூடத் திருத்தப்படவில்லை.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மதிப்பீடுகள் கொடுத்தேவும் கூட, வரிசைப்படுத்துவது சிக்கலான வேலையாக இருந்தது. மற்ற திறனாய்வாளர்கள் இக்கதைகளை எதுகொண்டு, எப்படி வரிசைப்படுத்துவரோ? அவரவர் பார்வை, அவரவருக்கு. முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஆவல். வாய்ப்புக்கு நன்றி!

o0o0o0o0o0o

போட்டியின் அமைப்பாளர்கள் மிக நேர்மையாகத் தங்கள் பணிகளைச் செய்திருக்கின்றனர். எனவே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். போட்டி விதிமுறைகளின்படி ஒருவருக்கே இரு பரிசுகள் கிடைத்திருக்கின்றன. அடுத்தமுறை, ஒருவருக்கு ஒரு பரிசு என்கின்ற முறையில் அடுத்தவருக்கும் ஊக்கத்தொகை கிடைக்கச் செய்தல் நன்றாம். அதற்கொப்ப விதிமுறைகளில் மேம்பாட்டினைக் கூட்டிக் கொள்ளலாம்.

o0o0o0o0o0o

பேரவையின் சமூக வலைதளத்தில் காணப்பெற்ற ஒரு மறுமொழி. கதை, கவிதைகள் தேவையா? தேவைதாம். அமெரிக்காவில் தமிழ்ப்பள்ளிகளும், ஆசிரியர்களும் ஏராளமாக இருக்கின்றன(ர்). ஆனால், பிழையின்றி ஒரு பக்கம் எழுத, குறிப்பாகப் பேரவைக்கு எழுத ஆட்கள் கிடைப்பதில்லை. மேலும் கதைகள், கவிதைகள் என்பன வெறுமனே எழுத்துப் பயிற்சி அன்று. அது சிந்தனைப் பயிற்சி. தகவற்பரிமாற்றம்.  சோர்வின்றி, இன்னும் கூடுதல் ஊக்கமுடன் இலக்கியக் குழுவினர் செயற்பட வாழ்த்துகள், அமெரிக்க விழுமியங்களோடு!!


6/08/2022

நம்ம ஊர் தபால் பெட்டியும் தபால்காரரும்!

அழகிய அந்த ஊரில் வசிக்கும் மனிதர்களுக்கு, வெளியுலகச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் அந்த தபால் நிலையத்தின் பங்கு முக்கியமானது. முகவரிகளைத் தாங்கி வரும் தபால்களைக் கொண்டு சேர்ப்பதில் தபால்காரர் கெட்டிக்காரர். அந்தத் தபால் நிலையத்திற்கு, ஊரின் பெயரை மட்டும் முகவரியாகக் கொண்ட கடிதம் ஒன்று வந்தது.. யாரிடம் இருந்து வந்ததெனும் தகவல் அதில் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு  “மொட்டைக் கடுதாசி”.

கெட்டிக்காரத் தபால்காரருக்கு அதை என்ன செய்யலாமெனும் யோசனை கோலோச்சியது. அவர்தான் கெட்டிக்காரர் ஆயிற்றே?! ”தம்வேலைகடிதத்தைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தானே?” என்ற எண்ணம் கொண்டவராகத் தனது தலையை வலது புறம் திருப்பி, தபால் நிலையத்தின் மூலையைப் பார்த்தார். அப்போது அதனைக் கண்டதும் அவரின் மூளை வேகமாகச் சிந்தித்தது.

வலது மூலையில் இருக்கும் நகல் இயந்திரம்(Xerox photocopier machine)தான், அவரின் வலது மூளையைச் சிந்திக்க வைத்தது. அந்த மொட்டைக் கடிதாசியை உடனே ஊரில் உள்ள அனைவருக்கும் நகல் எடுத்துச் சென்று சேர்ப்பதாக முடிவெடுத்தார். அதன்படியும் செய்தார்.

முதன்முறையாக மொட்டக் கடுதாசியைக் கண்ட கிராமத்தவரும், அது தங்களுக்கு வந்த கடிதமாக பாவித்தனர். ஒருவரும் கேள்வி கேட்கவில்லை.

ஒரு நாள் வந்த மொட்டைக் கடுதாசி, வாரம் ஒன்றாக வந்தது. பின்னர்,  வாரம் ஒன்றாக வந்த மொட்டைக் கடுதாசி நாளுக்கு ஒன்றாக வந்தது. நம்ம கடமை தவறாத தபால்காரர், அந்த முகவரியற்ற மொட்டைக் கடுதாசியை நகலெடுப்பதும் அதனை அனைவர் வீட்டில் கொண்டு சேர்ப்பதுவுமாகத் தவறாது செய்தார். 

”இப்படி முகவரி அற்ற மொட்டை கடுதாசியை ஏன் அய்யா கொண்டு தருகிறீர்கள்?” என்று ஒருநாள் அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் கேட்டார். உடனே அந்தத் தபால்காரருக்கு வந்ததே கோபம்? ”உனக்கெல்லாம் ஒரு செய்தியை நகலெடுத்துக் கொண்டு வந்து சேர்க்கிறேன். அதனைப் பாராட்டாமல் என்னையா கேள்வி கேட்கிறாய்? மடையா, முட்டாள்!” எனக் கத்தலானார். ”உனக்கு வேண்டாமானால், அதனைப் புறந்தள்ளு, கிழித்து எறி. என்னைப்பார்த்து கேள்வி கேட்கிறாய், நீ ஒரு அடாவடி, பன்னாடை” என்றெல்லாம் இன்னும் ஆவேசமாகக் கத்தினார்.

சத்தம் கேட்டுக் கூடிய கூட்டத்தில் இருந்து ஒருவர் சொன்னார், நல்ல சண்டையென்று!  இன்னொருவர் சொன்னார், ஆமாம், இவன்களுக்கு வேறு வேலையே இல்லையென்று.

இப்படியான கதையில், மொட்டைக் கடுதாசியை எழுதுபவர் யாரென்று இன்று வரையிலும் கண்டு பிடிக்கவுமில்லை? மொட்டைக் கடுதாசியை நகலெடுப்பதைத் தவறெனச் சொல்லவும் யாரும் முன் வரவில்லை! அந்த மொட்டைக் கடுதாசியில் ஏன் ஒற்றைப் படையான, ஒருசார்புச் செய்திகளே வருகின்றதெனவும் எவரும் கேட்கவில்லை. ஆனால் தபால்காருக்கு ஒரு விருது தருவார்கள் என்பது மட்டும் நிதர்சனம். பொறுத்திருந்து பார்த்தால் அதுவும் நடக்கும். இப்படியான கதையை எழுதியவர் சிந்தனை உணர்வாளர் சிக்காகோ சரவணன் என்பார். இதைச் சொல்லாவிட்டால், எனக்கும் ஃபார்வர்டு பத்மநாபன்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்தானே?!


6/07/2022

மேல்நிலை vs ஆழ்நிலை

In shallow communities, status is based on outer appearances. You gain influence by accumulating money, power, and prestige.

In deep communities, status is based on inner character. You earn respect by becoming a person of generosity, integrity, curiosity, and humility. https://twitter.com/AdamMGrant/status/1533815641253216257

இந்த நிலைத்தகவலைப் பலகுழுக்களிலும் பகிர்ந்திருந்தேன். மருத்துவர் ஜெரால்டு அவர்கள், ”இன்னும் கூடுதலாக இதைப் பற்றி எழுதலாமே?” என்று கேட்டிருந்தார்.

”நாம் உதிரிகளாக இருக்கும் போது மட்டுமே விடுதலையின் முழுப்பயனையும் அனுபவிக்க முடியும். தமிழ் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். குழு மனப்பான்மைக்கு இரையாகிப் போகின்றனர். இலக்கியம் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். ஆசிரியப் பித்துப் பிடித்தவராய் ஆகின்றனர். ஆன்மீகம் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். சாமியாருக்கு அடிமை ஆகின்றனர். நாட்டைக் காப்பாற்றுகின்றேனெனக் களமிறங்குகின்றனர். தலைவர்களுக்கு அடிவருடியாகின்றனர். நாம் உதிரிகளாக இருக்கும் போது மட்டுமே விடுதலையின் முழுப்பயனையும் அனுபவிக்க முடியும்.”

ஆடம் அவர்கள் சொல்வதும் இதைத்தான். பணம், அதிகாரம், அந்தஸ்துக்குச் சோரம் போவதுதான் மேல்நிலை மனோபாவம். ஆழ்நிலைப் புரிதல் கொள்ள முயல்பவர்கள், நோக்கம், செயல் குறித்த சிந்தனைக்கே முன்னுரிமை கொடுப்பர். எடுத்துக்காட்டாக நான் கண்டவற்றைச் சொல்கின்றேன்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். அந்த பெண்கலைஞர் கோயமுத்தூருக்கு வந்திருந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து யார் வெளிப்பட்டாலும், எங்கள் கல்லூரி வளாகத்தைக் கடந்துதான் நகருக்குள் சென்றாக வேண்டும். அவரைக் காண அப்படி அலைமோதினர் மக்கள். இதற்கும் அவருடைய வயது அதிகபட்சம் இருபதுதான் இருந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சென்னை தொடர்வண்டியில் அவரைப் பார்த்தேன். பக்கத்து இருக்கையில்தான் அமர்ந்திருந்தார். நலமாயென்று விசாரித்தேன். மிக எளியராகக் காட்சி அளித்தார். பலரும், அவர் யாரெனத் தெரிந்திருந்தும் கண்டும் காணாதது போல இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு ஒரு பெண்கலைஞர் வந்திருந்தார். குறித்த நேரத்துக்கு வந்திருந்து, குறுகிய நேரத்தில் கிளம்பி விட்டதாக நண்பர்கள் கூறினர். மனிதச்சங்கிலிக்கு நடுவே வந்து போனதாகப் பகிரப்பட்ட படங்கள் சொல்லிற்று. நினைத்துக் கொண்டேன். இளமைதானே இத்தனைக்கும் காரணம்? அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து வந்தால் இந்த அமர்க்களம் வாய்க்கப்பெறுவாரா? எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

எத்தனையோ நல்லவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், உழைப்பாளர்கள் வந்து போகின்றனர்; கேட்பாரற்ற தெருவோரத்து மலர்கள் போலே! இந்த பாரபட்சத்துக்கு யார் காரணம்? அண்மையில் அமெரிக்காவில் ஓர் தேர்தல் இடம் பெற்றது. அமெரிக்காவிலே சட்டம் பயின்றவர், சட்டெனத் துரிதமாய்ச் செயற்படுவதில் எடுத்தியம்புவதில் வல்லவர். முதலில் எனக்கு அவர் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. அறிமுகம் கிட்டியபின்புதான் கவனிக்கத் தலைப்பட்டேன். என் சிந்தனைகள் அடங்கிய சிறு கோப்பினைப் பகிர்ந்திருந்தேன். ஓரிரு விநாடிகளில் அதனை உள்வாங்கி, உடனுக்குடனே பெருந்திரளான மக்களுக்கு அவர் எடுத்தியம்பிய பாங்கு என்னைப் பெருவியப்பிலாழ்த்தியது. ஆனால் அவர் தேர்தலில் தோற்றுப் போனார். இழப்பு சமூகத்துக்கே!

பொருளின் தரம் பார்க்கப்படுவதில்லை. பொட்டலத்தின் அழகுதானே தீர்மானிக்கின்றன சந்தைக்கான வெற்றிவாய்ப்புகளை? கொந்தளிப்பிலும் பரபரப்பிலுமிருந்து விடுபட்டு, உபரியாக நிற்கும் போது நமக்கான தெளிவு பிறக்கலாம்.


6/02/2022

FeTNA:தேர்தல் முடிவுகள் கண்ணோட்டம்

வட அமெரிக்காவெங்கும் இருக்கின்ற தமிழர்களின் படியாட்கள் பங்குபெற்ற ஒரு தேர்தல் இது. இலாபநோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் மிக நேரத்தியாக நடத்தப்பட்ட தேர்தல் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

நடத்தப்பட்டதில் இருந்த நேர்த்தி, பங்கு கொண்டவர்களிடத்தில் இருந்ததாயென்றால், இல்லை என்பதுதான் நம் பார்வையாக இருக்கின்றது. ஏன்? பங்குபெற்ற இரு அணிகளுக்கு வாக்களித்தவர்களும், தத்தம் விருப்பு வெறுப்புகள், வேட்பாளர்களின் தற்குறிப்பு, விளம்பரங்கள், பரிந்துரைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதாம் வாக்களித்திருக்கின்றனர். அதை எப்படி உறுதிபடச் சொல்லமுடியும்? கலந்துரையாடற்கூட்டங்கள் நடக்கின்றன. அமைப்பின் பணிகளை, கடந்தகாலத்தை, எதிர்காலத்திட்டங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு நாடி வந்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. 

தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தன? மொத்தம் பதிவான வாக்குகள் 238. பேரவை காப்போம் அணிக்குப் பதிவான ஆகக்குறைந்த ஓட்டுகள் 102. பேரவை வளர்ச்சி அணிக்குப் பதிவான ஆகக்குறைந்த ஓட்டுகள் 108. இரு அணி வேட்பாளர்களுக்கும் கலந்து வாக்களித்தவர்கள் 28. ஆக இரு அணிகளும் சமபலத்தில் இருந்தன என்பதுதாம் என் புரிதல். மிகவும் அணுக்கமான தேர்தல்.

https://drive.google.com/file/d/1vauenlGZScDsMUKThi2wrcCDUcE-wbXo/view?usp=sharing

அன்றாடமும் அமெரிக்காவின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு தேர்தல் நடந்து கொண்டேயிருக்கும். இது ஒரு தேர்தல்நாடு. மக்களாட்சியின் உயிர்மூச்சு என்பதே தேர்தல்தாம். வீட்டு உரிமையாளர் சங்கங்களுக்கான தேர்தல், இலாபநோக்கற்ற தொண்டமைப்புகளின் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல், ஒன்றியத்தேர்தலென தேர்தல்கள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு நாட்டில் இருக்கும் நாம், தேர்தல்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு தமிழ்ச்சங்கத்தின் பேராளன்(delegate). இந்தத் தேர்தலில் கலந்து கொள்கின்றேன். செயலாளர் பொறுப்புக்கு இரு வேட்பாளர்கள். இருவரும் வாக்குறுதிகள் அளிக்கின்றனர். ஏதோவொன்றின் அடிப்படையில் வாக்களிக்கின்றேன். ஒருவர் தெரிவாகின்றார். அவர் அவரது வாக்குறுதிக்கொப்ப நடந்து கொள்கின்றாரா? கவனிக்க வேண்டியது என் கடமை. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பேராளர் பொறுப்பிலிருந்து விடுபட்டுக் கொள்கின்றேன். அடுத்த பேராளரிடம் என்னிடம் இருக்கும் தகவல், விபரங்களை முறைப்படி கையளிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், அவர் மீண்டும் தேர்தலில் பங்கு கொள்கின்ற போது, எடை போட்டுப் பார்க்க இயலும்.

தேர்தல்கள் இடம் பெறுவதும் பங்கு கொள்வதும் முன்னேற்றத்துக்கான அறிகுறி; ஆனால் அது முதற்படி. அடுத்ததாக அதை முறைப்படி பயன்படுத்திக் கொள்வதுதாம் உயர்வுக்கு இட்டுச் செல்லும். இப்படித்தான் நண்பர் ஒருவர் ஆவேசமாகப் பேசினார். பேரவையில் இருக்கும் ஆயுள் உறுப்பினர்களுக்கான ஓட்டுரிமையைப் பறிக்க வேண்டுமென்றார். அப்படியானால், பேரவையின் தொடர்ச்சியை, கட்டமைப்பின் இருப்பை, இயக்கத்தைப் பேணுவது யார் என்றேன். தமிழ்ச்சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்றார். அவர்கள் ஆண்டுக்கொருமுறை, ஈராண்டுகளுக்கொருமுறை மாறிக்கொண்டே இருப்பரேயென்றேன். செயலாக்கமுறையை(process)க் கட்டமைத்து விட்டால், அதன்படி அது இயங்கிக் கொண்டிருக்குமென்றார். அப்படியான முறைமையைக் கட்டமைப்பதும், கட்டமைத்தபின் அதிலிருந்து பிறழ்வதைக் கண்காணிப்பதும் யாரென்றேன். தமிழ்ச்சங்கம், பேரவைப் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை எப்படியாக இருக்கின்றதென்றேன். பதிலில்லை. கூட்டங்களுக்கு இயன்றவரை வரப்பழக வேண்டும்; அல்லாவிடில் பொறுப்பைக் கைவிடுதல் நன்றாம்.

கேளிக்கையாகத் தேர்தலில் பங்கு கொண்டுவிட்டு, பேரவையின்பால் நாட்டம் கொண்டு வினாத் தொடுப்பவர்களைக் கண்டு முகஞ்சுழிப்பதெல்லாம் நல்ல பண்பாக இருக்காது. மாறாக, அதனின்று கற்றுக் கொள்ள முயலவேண்டும். செயலாக்கங்கள் நிமித்தம் தத்தம் கருத்துகளை முன்வைத்துப் போட்டியிட முன்வர வேண்டும். அல்லாவிடில், ’அண்ணஞ்சொல்றார் தம்பி செய்கின்றான்’ எனும் போக்குத்தான் மிகும். வெற்றிக்கான களம் மட்டுமேயல்ல தேர்தல்கள். மாற்றுச்சிந்தனைகளை விதைப்பதற்கான களமும்தான் தேர்தல்கள்.

பேரவை என்பது ஒரு பண்பாட்டியக்கம். தமிழ் கொண்டு புழங்குவதுதாம் அதன் அடிப்படை. தமிழ் என்றால் அதனுள் எல்லாமும் அடக்கம்; தமிழ்க்கலை, இலக்கியம், மரபு, தொன்மை எல்லாமும். தேர்தல் நிமித்தம் மின்னஞ்சல்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. அதனை எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. அவற்றுள் கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. தனிமனிதத் தாக்குதல்கள், நெகடிவ் என்றெல்லாம் சொல்லி அகங்கலாய்த்துக் கொள்கின்றனர். இருக்கட்டுமே? அப்படியான செயலை நாம் செய்யக் கூடாதென உணர்வதும்கூட ஒரு படிப்பினைதானே? என் மீது காழ்ப்புக் கொள்வதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அது அவரின் குறைபாடு. இஃகிஃகி. 

ஒருவர் மடல் இடுகின்றார். மற்றொருவர் பதிலுரைக்கின்றார். நீங்கள் ஏன் பதிலுரைக்கின்றீர்களென வினவுகின்றார் மடலிட்டவர். பதிலுரைத்தவர் சொன்னதைக் குடும்பத்தினரிடம் சொல்லிக் காண்பிக்கின்றேன். தமிழை நுகர்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு. மேலும் அந்த பதிலில் இருந்த சொல்நயமும் கருத்துநயமும் அவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.

இக்கடிதம்

எனக்கு வந்தது

எனக்கும் வந்தது

அதனால் இந்த பதில்!

இல்லையென்றால்

இல்லை என் பதில்!!

பேரவை விழாக்களின் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். விழா முடிந்து வீடு திரும்பும் தருணத்தில், மனத்தில் பாரமேகிப் போகும். அழுகை அழுகையாக வரும். ஏன்? புலம்பெயர்ந்த மண்ணில் தாய்பிள்ளைகளோடு இருக்கும் அணுக்கத்தை ஊட்டும்படியாக விழாக்களும் பேரவையும் இருந்தன என்பதுதான் காரணம். அதுதான் பேரவையின் விழுமியம். பொருளார்ந்த விளம்பரங்களும் பகட்டுகளும் மட்டுமே அத்தகைய விழுமியத்துக்குப் போதுமானதாக இருந்துவிட முடியாது. அன்பும் அறனும் மேலோங்குகின்ற இடத்திலே பண்பும் பயனும் மிகும். வாழ்க தமிழ்! வளர்க பேரவை!!

[காலத்தின் சான்றுகளாக இருக்கும் நம் பதிவுகள். இத்துடன் தேர்தற்காலக் கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகின்றது! Cheers! Bye!!]


6/01/2022

FeTNA: தேர்தலும் வாழ்த்துகளும்

பேரவையின் தேர்தலில் 95% வாக்குகள் இதுகாறும் பதிவாகி இருக்கலாமென்று நினைக்கின்றேன். வாக்களித்தவர்களுக்கும் பேரவைக்காகப் பணியாற்றக் களத்தில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இது ஒரு இலாபநோக்கற்ற தன்னலமற்ற தன்னார்வத் தொண்டு. வெற்றி பெற்றால், பணியாற்றப் பணித்திருக்கின்றார்கள் என்பது பொருள். வெற்றி பெறாவிட்டால், அந்தப் பொறுப்புகளில் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்கவில்லை, மாறாக வேறு பணிகளில் விருப்பமிருந்தால் தொண்டாற்றலாமென்பது பொருள். வாய்ப்பமையாதவர் குறித்துச் சொல்ல நம்மிடம் எதுவுமில்லை. வாய்ப்புப் பெறுவோர் அவசியமாகக் கண்காணிக்கப்படுவர், அது யாராக இருந்தாலும், இஃகிஃகி. ஆமாம், பேரவைப் பணிகளில் அவர்களின் பங்களிப்பு கண்காணிக்கப்படும்தான்.

1. உலகமெங்கும், தொழில் முனைவோர் மத்தியில், பேரவை மாநாடுகளுக்குச் சென்றால், முதலீடுகளை ஈட்டலாமெனச் சொல்லப்படுகின்றது. தமிழர்களின் வணிகம் பெருகுமேயானால், பேரவைக்கு மட்டுமேயல்ல, ஒட்டுமொத்த தமிழருக்கும் பெருமை. இதன்நிமித்தம், பேரவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, வணிக ரீதியில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. அவர்களெல்லாம் கூடுதல் விபரங்களைப் பெற, இணையதளத்திற்கு வருகின்றனர். அதுதான் பேரவையின் முகம். ஆனால் அப்படியான முகம் களையிழந்து, பொலிவிழந்து, குப்பையாக இருக்கின்றது. Vision, Mission, Outlook என்பன எல்லாமும் ஒரே சொற்றொடர்களை, ஆங்கிலத்தில் கொண்டிருக்கின்றது. ஏனைய பக்கங்களும் அரைகுறையாக இருக்கின்றன. முதல் வேலையாக, அதைச் செம்மைப்படுத்துவீர்களா?

2. அமெரிக்காவில் தமிழ்க்கல்வி, தமிழாசிரியர்கள் ஓங்கிச் சிறப்பது உண்மைதான். பெருமைதான். பல தமிழாசிரியர்கள், பேரவை முன்னோடிகளாக, முன்னாள் தலைவர்களாக இருக்கின்றனர். பேரவை இணையதளம், விழாத்தளங்கள், விழாப்பணிகள் முதலானவற்றில் தமிழின் புழக்கத்தினைக் கூட்டுவீர்களா?

3. காலாண்டுக்கூட்டங்களும், காலாண்டிதழ்களும் தொய்வின்றி இடம் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பேராளர்கள், தமிழ்ச்சங்கங்கள், பொதுமக்களுடனான தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளம்பரப் படங்கள்/நறுக்குகள்மிகு கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாகவும் கூட்டங்களினூடாகவும் உரையாடுவீர்களா?

4. முன்னாள் தலைவர்களுக்கும் ஆயுள் உறுப்பினர்களுக்கும் உகந்த மதிப்பளித்து, ஊக்கமூட்டி, ஒருங்கமைந்த செயற்பாட்டுக்கு வழிவகுப்பீர்களா? நீங்கள் தற்காலிகமானவர்கள் பொறுப்புகளில்; ஆயுள் உறுப்பினர்கள் ஆயுள் முழுக்கவும் தொடர்பவர்கள் என்பதறிந்து செயற்படுவீர்களா?

5. ஆக்கப்பூர்வமாக, ஆங்காங்கே தென்படும் வழுக்களையும் பிழைகளையும் நேர்மையோடு நறுக்குத் தரித்தாற்போலச் சுட்டுவதும் மேம்பாட்டுப் பணிதான் என்பதறிந்து, விமர்சகத்தன்மையையும் தமிழ்ப்பண்பாட்டுக்குள் விதைக்க முற்படுவீர்களா? நெகடிவ் என்றெல்லாம் சொல்லி முகஞ்சுழிக்கும் போக்கினைச் சமூகத்தில், பேரவைப்பணிகளில் இருந்து களைய முற்படுவீர்களா?? வேட்பாளர்களது வாக்குறுதிகள் திரைநகல் எடுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுவிட்டன. இஃகிஃகி!

வாழ்க தமிழ்! வாழ்த்துகள்!!


5/30/2022

FeTNA:கொண்டாடப்பட வேண்டிய தருணம்

தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. தலைவர் பொறுப்புக்கும் சேர்த்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இதனை முழுமையான தேர்தலெனக் கருதி, நாமனைவரும் கொண்டாடக்கூடிய தருணம். அமைப்பில் எதிரும் புதிருமான கொள்கைகள், திட்டமுன்மொழிவுகள், தொலைநோக்குப் பார்வைகள், சாதனைகள், நிர்வாகப்பிழைகள், செயற்பாடுகளை முன்வைத்து வாதவிவாதங்கள் இடம்பெற்று, அதன் அடிப்படையில் தேர்தல் நிகழுமேயானால் இன்னும் சிறப்பாகக் கொண்டாடலாம் நாம்.

தனிமனிதத் தாக்குதல்கள்! என் கட்டுரைகளையே முழுமையாக வாங்காமல் ஒரு நண்பர், ஆபாசம், இழிவு என்றெல்லாம் வசைபாடி, என் இருப்பிடம் முதற்கொண்டு என்னென்னவோ சொல்லித் திறந்தமடல் என்கின்றே பெயரில் எதையோ எழுதி இருந்தார். ஒரு வருத்தமுமில்லை. அன்பாகத்தான் கேட்டிருக்கின்றேன். ஏதாகிலும் அப்படி எழுதியிருந்தால், அந்த வரிகளைச் சுட்டுங்களென்று. இதுவரையிலும் பதில்கிடைக்கவில்லை. நான் 20 ஆண்டுகாலமாக எழுதி வருகின்றேன். ’அறம்சார்ந்த எளிய எழுத்தாளன்’ என்கின்ற இடத்தை இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அடைந்து விட மாட்டோமாயென்கின்ற மனநிலையில் முயன்று கொண்டிருப்பவன் நான். அப்படியானவற்றைச் சுட்டிக்காட்டினால் மகிழ்ந்து, அவற்றைக் களைய முற்படுவேன்.

தனிமனிதத் தாக்குதல்கள் என்றால் என்ன? எழுதுவதன் நோக்கம், ஏதொவொரு தனிமனிதரைக் குறிவைத்துச் சுட்டும் பொருட்டு மட்டுமே இருந்தால், சொற்கள் நாகரிகமாகவே இருந்தாலும் கூட, அது தனிமனிதத்தாக்குதல் என்றே பொருள். பேசுபொருள் செயலைக் குறித்ததாக இருக்கும் நிலையில், அது தனிமனிதத்தாக்குதல் ஆகா.

விளம்பரப்பிரியர்கள், விளம்பரப்போலிகள் நிறைந்து விட்டார்கள் என்கின்றோம். யாதொரு தனிமனிதன் பெயரும் சுட்டப்படவில்லை. பன்மையில் இருக்கின்றது. ஆகவே அது, எதனைக் குறிக்கின்றது? பணிகளுக்கு முக்கியத்துவம் கொடாமல், விளம்பரத்திற்கு, அதுவும் உண்மைக்குப் புறம்பான விளம்பரத்துக்கு மிகையான நேரம் செலவிடப்படும் பொறுப்பாளர்கள் மிகுந்துவிட்டனர் என்று பொருள். ஒரு செயலைச் சுட்டி, பேரவையில் ஏகாதிபத்தியம் மிகுந்து விட்டது என்கின்றோம். நோக்கம் செயலைச் சுட்டுவதுதானேயன்றி, தனிமனிதன் குறித்தானது அல்ல. தனிமனிதர்கள் பெயரை நாம் குறிப்பிடுவதேயில்லை.

பேரவை என்பது பேராறு. அது ஓடிக்கொண்டே இருக்கும். இடையில் மக்கள் வருவார்கள், போவார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிலபல செயல்கள் இடம் பெறும். காலத்தின் போக்கில், அப்போதைய தேவைகளுக்கொப்ப ஏதோவொரு கருத்தை நாம் வெளிப்படுத்துவோம். இந்தக் கருத்தில் உடன்பட்டிருப்போம். பிறிதொரு கருத்தில் உடன்படாதிருப்போம். மீண்டும் வேறொரு கருத்தில் கரம்கோக்கும் சூழல் வரக்கூடும். ’அன்று நீங்கள் ஒன்றாக இருந்தீர்கள்; இன்று பிரிந்திருக்கின்றீர்கள்!  அன்று எதிரும்புதிருமாய் இருந்தீர்கள், இன்று ஒன்றாய் இருக்கின்றீர்கள்!!’ என்பதெல்லாம் மனத்தின் மேல்நிலைப் பிரதிபலிப்புகள். ஆழ்ந்த சிந்தனை கொண்டோர் அப்படியான வாதங்களை முன்வைக்கத் துணியமாட்டார்கள்.

எழுத்தாளரை முதன்முதலில் பேரவைக்கு அறிமுகப்படுத்தியது நான்தான், 2010. அருவி இதழுக்குக் கட்டுரை தாருங்கள் எனக் கேட்டேன். அவரும் கொடுத்து உதவினார். பின்னர் விழாவுக்கு அழைக்க முடியுமாவென கேட்டுப்பார்த்தேன். அடியேனுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினாலே அப்படியே விட்டுவிட்டேன். காற்றடிக்கும் போது மாவுவிற்கப் போன கதையாக, ஒவ்வாத காலத்தில் அழைப்பு நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் நடந்தது ஊரறிந்த கதை. எதிர்த்தவர்கள் இரு அணிகளிலும் உண்டு. அதேபோல ஆதரித்தவர்களும் இரு அணிகளிலும் உண்டு. எனக்குப் பொய் பேச வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் வளர்ப்பதைக் காட்டிலும், சரியானதும் முறையானதுமான அமெரிக்கக் குடியாக இருப்பது முதன்மையெனக் கருதுபவன் நான். ஆகவே, ஒரு அணியை மட்டும் அந்த வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பெனக் காட்டுவதுதான் பெரும்பிழை, அநீதி.

‘பேரவை காப்போம்’ அணிக்கு வருவோம். அணி வேட்பாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தேன். இயன்றவரையிலும், ’அறம் செய விரும்பு’ என்பதற்கொப்பவே அறிவுரைகளைப் பரிமாறிக் கொண்டோம். திறந்த மடல்களையும், திறந்த வெளிப்படையான கூட்டங்களையும் நடத்தினோம். ஒளிவு மறைவு இல்லை. உடனக்குடனே தரவுகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தோம். எங்கள் நோக்கம், எங்கள் பேசுபொருள், பேரவையின் மேம்பாடு மட்டுமே. ஆகவே எந்தத் தரவையும் கொடுப்பதிலே தயக்கம் இல்லை. இணையதளத்தில் இடுவதிலே தயக்கம் இல்லை. இதுதான் அமைப்பின் வளர்ச்சியாக இருக்குமென நம்புகின்றோம். உடன்படுவீர்களேயானால், உங்கள் வாக்குகளை, ‘பேரவை காப்போம்’ அணிக்கு அள்ளித்தாருங்கள். அணியினர் பணியாற்றுவார்கள். தவறினால், அவர்களையும் கேள்விக்குள்ளாக்குவோம் காலாண்டுக் கூட்டங்களின் வாயிலாக! அதுதான் ஜனநாயகம்!!


5/29/2022

FeTNA: பேரவையும் நிர்வாகக்குழுவும்

தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்களிப்பு பெருமளவில் முடிந்திருக்கலாமென யூகிக்கின்றேன். வாக்களித்திராதவர்களையும் வாக்களித்திடுமாறு வேண்டுகின்றேன்.

பேரவையின் நிர்வாகக்குழுவில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும், தலைவர் - துணைத்தலைவர், செயலாளர் - துணைச்செயலாளர், பொருளாளர் - துணைப்பொருளாளர், இயக்குநர்கள், இவர்களுக்கென தனித்தனிப் பொறுப்புகள் உள்ளன. அவர்கள் அவற்றினை முறையே செய்திடல் வேண்டும். நான் கடந்து வந்த இந்த 15 ஆண்டுகள் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது சில படிப்பினைகள் நமக்கு உண்டு.

பொறுப்புகளுக்கான தனித்துவமான பணிகளைத் தவிர்த்து, நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களில் வைக்கப்படுகின்ற தீர்மான முன்மொழிவுகளை, கொள்கை அடிப்படையில் ஆதரித்தும், எதிர்த்தும் செயற்பட்டாக வேண்டும். அவற்றை இவர்கள் அறவே செய்வதில்லை. எப்படி?

தலைவர், அவருக்கு உதவிகரமாக, நிர்வாக்குழுவுக்கு வெளியே சிலபலர் இருப்பர். தவறில்லை. செல்வாக்குமிக்க, அனுபவமிக்க முன்னோடிகளின் உதவியின்றி நாடளாவிய அமைப்பினை நிர்வாகம் செய்யவே முடியாது. அப்படியான சூழலில், அவர்களின் ஆலோசனையின் பேரில், தலைவர் முன்மொழிவுகளைக் கூட்டத்தில் வைப்பார். நிர்வாகக்குழுவில் இருப்போர் ஆதரித்து ஓட்டளிப்பர். எப்போதாகிலும் ஓரிருவர் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பர். அப்படியான செயல், தொடர்ந்து இடம் பெறுமாயின் மாற்றுக்கருத்து வைப்பவர் கட்டம் கட்டப்படுவார். அண்ணன் மனம் கோணுமேயென்பதற்காக, ஆதரித்தே வாக்களிக்கும் தன்மை ஏற்பட்டுவிடுகின்றது. அல்லாவிடில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாய்ப்புகள் அமையாமற்போகலாம்.

என்ன செய்யலாம்? நிர்வாகக்குழுவிற்குச் செல்வோர் பேரவையின் கட்டமைப்பு, வளர்ச்சி, தொலைநோக்குத் திட்டங்கள், கூடவே தாம்சார்ந்த தமிழ்ச்சங்கத்தின் கருத்தையும் உள்ளடக்கித் தன்னிச்சையாகவும் திடமாகவும் செயற்பட வேண்டும். அல்லாவிடில், அப்பொறுப்பில் இருப்பது வீண். பின்னடைவுக்கே இட்டுச் செல்லும். தலைவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தன்னுமை(லிபர்ட்டி)யை நிலைநாட்ட வேண்டும். [நீ யார் எனக்கிளம்பிவிட வேண்டாம். நாம் எப்போதுமே, நிர்வாகக்குழுவில் இருந்த போதும் சரி, வெளியில் இருக்கும் போதும் சரி, எதிர்க்கருத்துகளை முன்வைக்கத் தயங்கியதே இல்லை]

ஆயுள் உறுப்பினர்கள்? ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களுக்கு அது ஒரு அடையாளம். பேரவையின் அன்றாட அலுவல்பணிகளுக்கோ, தொடரியக்கத்துக்கோ கிள்ளுக்கீரையைக் கூட கிள்ளிப் போட மாட்டார்கள். முக்கியமான கொள்கைப் பிரச்சினையில் கருத்துச் சொல்ல மாட்டார்கள். எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டுமென்கின்ற தன்னலம். 35 ஆண்டுகாலக் கட்டமைப்பின் தரவுகள் இல்லாமற்போனதற்கும், தொடர்ச்சி பாழ்படுவதற்கும் இவர்கள்தாம் முழுப்பொறுப்பு. அமைப்பின் தொடரோட்டத்துக்குப் பங்களிக்க வேண்டும்; அல்லது உறுப்பினர் பொறுப்பைக் கைவிட வேண்டும்.

வாக்களிக்கும் போது இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு வாக்களிக்க வேண்டும். வியந்தோதலுக்குப் பணிந்தும் லாபிகளுக்குப் பணிந்தும் வாக்களிப்பது கூட பொறுப்பற்ற செயல்தான். இஃகிஃகி!5/28/2022

2022 பேரவைத் தேர்தலில் டவுன்ஹால் மீட்டிங்

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுவதே சிறந்த அமைச்சியல் என்கின்றது குறள்.

’பேரவை காப்போம் அணி’ சார்பாக, வேட்பாளர்களுக்குள்ளும் அவர்களது அணி சார்ந்த பேரவை ஆர்வலர்களுக்குள்ளுமாகக் கலந்துரையாடல் பல கட்டங்களாக இடம் பெற்றன. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பின்னுக்குத் தள்ளி, பேரவையின் நடப்புக் கட்டமைப்பும் செயற்பாடும் எப்படி இருக்கின்றது?, இனி வருங்காலங்களில் அதனை எப்படி மேம்படுத்துவது என்பதை ஒட்டியே ஆய்வுக் கருத்தரங்கம் இடம் பெற்றது. நானறிந்த வகையில், ஒரு விழுக்காடு கூட, சாதி, சமயம், இதர அரசியல் குறுக்கீடுகள் இந்தப் பணிகளிலே இடம் பெற்றிருக்கவில்லை என்று எந்தன் தமிழின் மீது ஆணையிட்டுச் சொல்வேன்.

கூட்டத்தில் அலசி ஆராயப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டன. வினா விடைக் கோப்பு உருவாக்கப்பட்டது.  அமெரிக்காவில் நாம் கற்றுக் கொண்டிருக்கும் அத்தனை நிர்வாக/அரசியலமைப்பு நெறிமுறைகளையும் ஒழுகினால்மட்டுமே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நம் தலைமுறையினர் நம்மை நோக்கி வருவர் என்கின்ற எண்ணத்தில் உருவானதுதான், பேராளர்களுடனான டவுன்ஹால் மீட்டிங் என்பது.

உள்ளபடியே சொல்கின்றேன். நானறிந்த வரையில், தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வாக்காளர்களுடனான கூட்டம் என்பது பேரவை வரலாற்றில் இதுதான் முதன்முறையாக இருக்கக்கூடும். முதல்நாள் கூட்டம் இரண்டு மணி நேரத்துக்கும் சற்று கூடுதலாக இடம் பெற்றது.  எதிரும் புதிருமாகப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. மலர்ந்த ஜனநாயகம் என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். அடுத்து, இரண்டாவது நாள் கூட்டமும் எழுச்சியோடு இடம் பெற்றது. வந்திருந்த பேராளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு, கூட்டுறவுக்குச் சான்றாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் கூட்டத்தில் கலந்து கொண்ட வாக்காளர்களும் ஆர்வலர்களுமே சாட்சி!

நான் கடந்த 10 ஆண்டு காலமாகவே, காலாண்டுக்கூட்டங்களை வலியுறுத்தி வருபவன். கூட்டங்கள் நடந்தாலே போதும், ஏராளமான மேம்பாடுகள் நமக்கு அமையும். கூட்டுறவு என்பது மலர்ந்தே தீரும். அந்த வகையில், ”பேரவை காப்போம்” அணியின் செயற்பாடு மெச்சத்தக்கது. பேராளர்கள் உணர்ந்து செயற்பட்டால், தமிழர்க்கு வானமே எல்லை! வெற்றி நிச்சயம்!!

5/27/2022

FeTNA:நிலைப்பாடும் கோரிக்கையும்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது, அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ்ச்சமூகத்தின் அடையாளம். அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர்களுக்கான அமைப்பு மட்டுமே. அப்படியான அமைப்பில், தமிழ்நாட்டு அரசியல் உணர்வுகளைப் புகுத்துவதை நாம் என்றுமே செய்ததுமில்லை, ஆதரிப்பதுமில்லை. மாறாக, எதிர்த்தே வந்திருக்கின்றோம். பேரவையின் தேவை இன்றியமையாதது. எனவே அதன் கட்டமைப்புச் சீர்குலையாது இருந்திடல் வேண்டுமென்பதுதான் நம் அவா.

பேரவைக்கு நெருக்கடியான காலகட்டம் என்று இருந்தது உண்டு. பேரவை விழாக்களுக்கு வருவதற்கே அஞ்சுவர். அப்படியானதொரு காலகட்டத்தில்தான் நாங்கள் சில இளைஞர்கள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றயெண்ணித் திட்டமிட்டுப் பல பணிகளைச் செய்தோம். இணையத்தின் வாயிலாகப் பேரவைப் பணிகள் குறித்துப் பரப்புரை செய்வது. ஊடகங்களில் பேரவை குறித்த செய்திகள் இடம் பெறச் செய்வது இப்படி. இதன்விளைவாக நிறைய இளைஞர்கள் ஈர்ப்புக் கொண்டு பேரவைப் பணிகளில் நாட்டம் கொண்டனர்.

இலக்கியக் கலந்துரையாடலுக்கு தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தினர் அழைத்திருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் இவ்வளவு சேனல்கள் இருந்திருக்கவில்லை. மூன்றே மூன்று சேனல்கள்தாம். அப்படியான நேரத்தில், பேரவை குறித்துப் பேசவிழைந்து, அது பெரிய வீச்சினைக் கொண்டமைத்தது. இப்படிப் பல பணிகளைத் தொடர்ந்து செய்தே வந்திருக்கின்றோம்.

அன்றும் இன்றும் தொடர்ந்து சொல்லி வருவது ஒன்றே ஒன்றுதாம். பேரவைப் பொறுப்பாளர்கள், பேராளர்களை, உறுப்பினர்களை மதிக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கூட்டங்களை அடிக்கடி கூட்டி, அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். ஓரளவுக்குச் செய்யத் தலைப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரும்சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அப்போதைய வியந்தோதல் செய்திகளைக் கொண்டே அவர்கள் முடிவெடுக்கின்றனர். இது பேரவைப் பணிகளுக்குச் சிறப்புச் சேர்க்கவே சேர்க்காது.

தற்போது தேர்தல் நேரம். களத்தில் வேட்பாளர்களாக இருக்கின்ற பலருக்கே பேரவையின் கட்டமைப்பு, சட்டதிட்டம், என்ன தொய்வு நேரிட்டிருக்கின்றது போன்றவற்றைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

ஒவ்வோர் ஆண்டும், முக்கியமாக எந்தெந்த விருந்திநர்கள் கலந்து கொண்டனர் என்கின்ற பட்டியலைப் போட்டு வைத்திருந்தோம். விழா மலர்களைப் போட்டு வைத்திருந்தோம். இப்படி தரவுகளின் பேழை என்பது கட்டமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அது இல்லாமற்போய் விட்டிருக்கின்றது. தரவுகள் இல்லாத சூழலில், எதைக் கொண்டு அமைப்பினை நடத்தப் போகின்றீர்கள்? ஒருவர் சொல்கின்றார், 2005இல் செயலாளராக இருந்தேன். எதைக் கொண்டு மெய்ப்பிப்பது?? 

அன்புகூர்ந்து அமைப்பின்பால் நாட்டம் கொள்ளுங்கள். அக்கறை கொள்ளுங்கள். அமைப்புக்கு ஏதாவது பங்களிப்புச் செய்யுங்கள். வீக்கான கட்டமைப்பின் மேல் நின்று கொண்டு பயணிக்க நேரிட்டால், எந்த நேரத்திலும் மூழ்க வேண்டி வரலாம். அறமும் பண்பும் மாந்தனுக்கழகு!

எந்தச்சகதமிழர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லை. மாற்றத்துக்கான வாக்காக, ‘பேரவை காப்போம்’ அணிக்குச் செலுத்துவதே என் தெரிவாக இருக்கும்.


5/26/2022

FeTNA: பேரவைத்தேர்தலும் பேச்சுகளும்

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, பழைய சிந்தனைகள் என்பதிலெல்லாம் நமக்கு என்றும் உடன்பாடு இருந்ததே இல்லை. 2000 ஆண்டுகாலப் பழமை வாய்ந்ததுதான் திருக்குறள், ஆகவே பழைய சிந்தனை எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடல் ஆகுமா? எத்தனையோ மேம்பாடுகள் இருக்க, முன்னைய வழக்கத்தை வியந்தோதல் ஆகுமா? எல்லாமுமே இடம், பொருள், ஏவல் குறித்தனவே. அறம் செய விரும்பு என்பதுதான் அடிப்படை. எதையும் சீர்தூக்கிப் பார்த்து, பேசுவது தமிழர்க்கு அழகு. நெகடிவ் பேச்சு என்பதெல்லாம், பேச்சுரிமையை நசுக்கும் செயல். பேசுகின்ற பேச்சு உண்மையாக இருக்க வேண்டும். பேரவையின் மீது அக்கறை கொண்ட பேச்சாக இருக்க வேண்டும். அவ்வளவே!

பேரவை வரலாற்றில் முதன்முறையாக நாற்பது குழுக்கள்... வியந்தோதலும் உண்மைக்குப் புறம்பான பேச்சுமாகும் இது? எப்படி? இணையத்தில் முன்னைய ஆண்டுவிழா மலர்கள் இருக்கின்றன. யாரும் பார்க்கலாம். 35 - 45 குழுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வெள்ளிவிழா ஆண்டில் 60 குழுக்கள் பணியாற்றின. இந்த 40 குழுக்கள் எனச் சொல்லப்படும் ஆண்டுகளில் இடம் பெற்றவை: கடந்த இரண்டு ஆண்டுகளின் மலர்களைக் காணோம். கடந்த இரண்டு ஆண்டுகளின் காலாண்டு இதழ்களைக் காணோம். கடந்த ஆண்டின் ஃபோட்டோ/வீடியோக்களைக் காணோம். செய்தி அறிக்கைகளைக் காணோம். இந்த நேரத்தில் மேலுமொன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.

டாலாஸ், டெக்சாஸ் நகரில் மாபெரும் விளம்பரத்தன்மையோடு விழா நடைபெற்றது. சொல்லப்பட்ட தகவல்களில் முன்னுக்குப் பின் முரணானவை எண்ணிலடங்கா. விழா எப்படி இடம் பெற்றதென்பது ஊரறிந்த கதை. பேரவையின் தொன்மை, தொடர்ச்சி என்பதன் வீழ்ச்சி அங்கேதான் துவங்கிற்று. ஏகபோக தனியாவர்த்தனம் கொடிகட்டிப் பறந்தது. பொறுமையாக இருந்தேன். அடுத்த ஆண்டு சிகாகோ விழாவின் பொதுக்குழு முடிவடையும் வரையிலும் பொறுமையாக இருந்தேன். பொதுக்குழுவில் மழுப்பலும் நழுவலுமான பேச்சுகளே இடம்பெற்றன. செயற்குழுவுக்கு மடல் எழுதினேன், ‘மே மாதமே தாக்கல் ஆகின்ற வருமானவரிப் படிவம் ஏன் இன்னும் காணக்கிடைக்கவில்லை?’. யாதொரு பதிலுமில்லை. மீண்டும் முன்னாள் தலைவர்களையும் உள்ளடக்கி மடல் எழுதினேன். அதற்குப் பின் பதில் வந்தது, நவம்பர் மாதம் வரையிலான காலநீட்டிப்புக் கோரப்பட்டு இருக்கின்றதென. நவம்பர் வரை காத்திருந்தேன். நவம்பரில் வெளியானது. விழா நட்டம் என்பதாக. இப்போதும் மே 15 கெடு முடிவடைந்து விட்டது. இணையத்தில் வரிப்படிவம் காணக்கிடைக்கவில்லை. 40 குழுக்களென வியந்தோதுவர். ஆனால் பதில் கிடைக்காது.

என் அப்பா மூவாயிரம்தான் சம்பளம் பெற்றார். நான் முப்பதினாயிரம் பெறுகின்றேனென தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியுமா? என் அப்பாவின் சம்பளத்தில் ஒரு பவுன் 1200க்கு வாங்கினார். இன்று ஒரு பவுன்? ஆகவே எண்ணிக்கையைச் சொல்லி ரொமாண்டிசைசு செய்வதில் ஒருபொருளுமில்லை. செய்த பணிகளின் தரமென்ன? நயமென்ன? விழுமியமென்ன?? அதிகபட்சம் 45 விருந்திநர்கள்தான் இரண்டு நாட்கள் விழாவுக்கு. தற்போதெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்திநர்கள், அதுவும் ஏற்கனவே வந்தவர்களேவும் வரவழைக்கப்பட்டு, உள்ளார்ந்த கலைஞர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்படுவதில்லை. போகின்ற பேச்சில் பேசுகின்ற பொய்ப்பேச்சு அல்ல. தகுந்த சான்றுகளுடன் நம்மால் நிறுவமுடியும். பேரவை வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு ஏகபோகம் மலிந்திருக்கின்றது. 2009இல் சிலம்பம், 2010இல் தெருக்கூத்து, 2011இல் பறை, 2012இல் கவனகக்கலை என ஆண்டுதோறும் பேரவையின் வாயிலாகக் கலைகள் அமெரிக்காவெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தந்தக்கலைகளுக்கான சங்கங்கள் அமைப்புகள்கூடத் தோன்றின. விளம்பரப் பிரியர்களால் அப்படியானவற்றைப் பட்டியலிட முடியுமா?

களத்தில் இறங்கி, தமிழ்க்கலை, இலக்கியம், தமிழ்ப்பண்பாடு எனத் தொண்டாற்றும் தன்னார்வலர்களைத் தெரிவு செய்ய வேண்டியது ஒவ்வொரு வாக்காளரது கடமை. மாறாக, செல்வம், சமூக அந்தஸ்து, விளம்பரம் போன்றவற்றுக்காக சார்புநிலை கொள்வீர்களேயானால், அது மேலும் பின்னடைவுக்கே இட்டுச் செல்லும். 15 ஆண்டுகாலப் பேரவை ஆர்வலன் என்கின்ற முறையில், தமிழின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன், ‘பேரவை காப்போம்’ அணிக்கு வாக்களிப்பதே பேரவையின் இன்றைய தேவை.

https://vijay4fetna.com/

5/25/2022

FeTNA: stick to the basics

கடந்த 2 மாதங்களில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மூன்று முன்னாள் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தனர். இன்று காலை, தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் தொடர்பு கொண்டிருந்தார்.

நான் எந்தத் தமிழ்ச்சங்கத்திலும் உறுப்பினராகக் கூட இல்லை. பேரவையின் பேராளனும் இல்லை. ஆயுள் உறுப்பினனும் இல்லை. என்னை எதற்கு இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும்?

பேரவைப் பணி சார்ந்த ஒரு வரலாற்று ஆவணத்தைக் கேட்டு ஒரு தலைவர். தலைவர் நல்லகண்ணு அவர்கள் பேரவைப் பணிகளில் கலந்து கொண்டதன் படங்கள் கேட்டு ஒரு தலைவர். குறிப்பிட்ட ஒரு எழுத்தாளர் பேரவைக்கு எழுதிய மடலின் நகல் கேட்டு ஒரு தலைவர். வெள்ளிவிழாவில் தாம் இடம் பெற்ற நிகழ்ச்சியின் படம் கேட்டு இன்றைய வேட்பாளர். இவர்கள் எல்லாம் செல்ல வேண்டிய இடம் பேரவை இணையதளத்துக்கும், பேரவைச் செயலாளரிடமும் அல்லவா? என்னை ஏன் நாடி வருகின்றனர்?

பேரவை என்பது அடிப்படைப் பணிகளில் வழுவியதும் நழுவி இருப்பதும்தான். இவர்களில் பெரும்பாலானோருக்கு அடிப்படை நோக்கம் இல்லை. அது ஒரு பிளாட்பார்ம், பொறுப்புகளில் இருந்து கொண்டு நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும், அடையாள அரசியல் செய்ய வேண்டும், குரூப்களாக இருந்து கொண்டு அக்கப்போர் செய்து பொழுது போக்கிக் கொள்ள வேண்டும். வணிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பேரவையின் இருப்பு, தொலைநோக்கு, கட்டமைப்புப் பேணல் என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், பழைய சிந்தனையைக் களைந்து மாற்றங்கள், வளர்ச்சி, புத்தாக்கம் என வானளாவப் பேசுவார்கள்.

2012 காலகட்டங்களிலே ஒவ்வொரு 3 மாதத்துக்கொருமுறை பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு கூட்டதிலும் 80% உறுப்பினர்கள் கலந்து கொண்டதற்கான அத்தனை சான்றுகளும் நம் வசம் உண்டு. ஆனால் இன்று? பொதுக்குழுக் கூட்டம் என்பது ஒரு வேடிக்கைப் பொருள் ஆகிவிட்டது. ஆண்டுக்கு ஒருமுறையாவது 80% பங்களிப்போடு நடக்கின்றதா? எனக்குத் தெரியாது. எல்லாம் வெறும் வாய்ப்பேச்சு. விளம்பரப் போலிகள் மலிந்து விட்டனர்.  ஆட்டோ அப்ரூவல் என்கின்ற எளிய வழியில் தீர்மானங்கள் நிறைவேறுகின்றன. சிந்தனைவயப்பட வேண்டிய நேரமிது.

It’s easy to learn the basics. This is good and bad. Since the basics are easy to learn, we assume they’re not relevant. But if you realize how relevant the basics are, you can make a lot of progress in a short period of time. முதலில் அடிப்படைப் பண்புகளைப் பேணுங்கள். பிறகு பார்க்கலாம், ஏனையவற்றை.

அடிப்படைப் பண்புகளை மீளக்கட்டமைக்கவும், சாமான்யர்களின், தன்னார்வலர்களின் பங்களிப்பு பேணவும், எனக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பு கிட்டுமேயானால், அனுபவமும்  அடிப்படைத் தொண்டுகளில் நாட்டமும் மிக்க தன்னார்வலர்களின் நேய அணியான “பேரவை காப்போம்” அணிக்கே என் வாக்கு.

Discipline and honor to commitment are the basics of self respect. Stick to basics and enjoy life with dignity.

5/24/2022

FeTNA Election 2022

பேரவையின் செயற்பாடுகளை எதனைக் கொண்டு அளவிடுவது? அதற்கான தரவுகளை எங்கு கண்டடையலாம். இணையதளத்தில் இருக்கின்ற கீழ்க்கண்டவற்றைப் பேரவையின் சுவடுகளாகக் கருதலாம். அவைதாம் வரலாற்று ஆவணங்கள்:

1. வருமானவரிப் படிவங்கள்

2. ஆண்டுவிழா மலர்கள்

3. அருவி காலாண்டு இதழ்கள்

4. விழா நிழற்படங்கள், காணொலிகள்

5. செய்தி அறிக்கைகள்

6. செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

எனவே இவற்றின் இன்றைய நிலையை, ஒவ்வொன்றாக ஆய்வோம்.

1. நிதிநிலை

[Page 12, line#10, net assets from form 990 as of 5/24/2022]

2016 - 273,712 

2017 - 268,615

2018 - 297,614

2019 - 279,498

2020 - 269,861

2011இல், மொத்த வருமானமே 252 ஆயிரம். அதில் 66 ஆயிரம் டாலர்கள் இலாபம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பேரவை நட்டத்தைத்தான் கொண்டிருக்கின்றது. ஆனால், 5000க்கும் மேலோர் வந்தார்கள். ஒவ்வொரு அரங்க விழாவிலும்  மில்லியன் டாலர்கள் திரட்டினோம். வரலாற்று உச்சம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. எத்தனை விருந்திநர்கள், யார் யாரெல்லாம் வரவழைக்கப்பட்டார்கள்? ஃபோட்டோ/வீடியோ சுவடுகளைக் காணோம். ஒவ்வோர் ஆண்டுவிழா முடிந்ததும், சர்வே நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். அவை நடத்தப்பட்டனவா? முடிவுகளை எங்கே காணலாம்? பேராளர்கள்தாம் கேட்டுப் பெறவேண்டும்.

2. ஆண்டுவிழா மலர்கள்

பேரவையின் ஆகப்பெரும் வரலாற்றுச் சுவடு என்பது இவைதாம். வெள்ளிவிழா மலரிலிருந்து அதற்கு முந்தையவற்றைக் காணோம். 2020, 2021 ஆண்டுகளில் யார் யாரையோ அழைத்து வந்து இணையத்தினூடாக விழா நடத்தப்பட்டது. ஆனால், மலர் வெளியிடப்படவில்லை. ஏன்? டிஜிட்டல் காப்பிகளாகக் கூட வெளியிடப்படவில்லை. ஒரு பைசாச் செலவின்றி வெளியிட்டிருக்கலாமே?

3. அருவி காலாண்டு இதழ்

துவக்கத்தில் படைப்புகளோடு வந்து கொண்டிருந்த இதழ், பட இதழாகச் சுருங்கி விட்டது. அதுவும் 2014ஆம் ஆண்டுக்கு முந்தையவற்றைக் காணோம். அவைதாம் பேரவையின் வரலாறு குறித்த பல கட்டுரைகளைக் கொண்டிருந்தன. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக யாதொரு இதழும் காணோம்.

4. விழா நிழற்படங்கள், காணொலிகள்

பேரவையின் முதலாமாண்டு முதல் இடம் பெற்ற விழாக்களின் படங்களை, தேடித்தேடி சேகரித்து, சிவாஜி கணேசன், டி.எம்.எஸ், எம்.எஸ்.இராமமூர்த்தி, இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டதன் சாட்சியாக, ஆண்டுகளும் இடங்களும் குறிக்கப்பட்டு படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவை எவையும் தென்படக் காணோம். மேலும், ’மில்லியன் டாலர் விழாக்கள்’ எனச் சொல்லப்படுகின்ற, 2018, 2019, மற்றுமுள்ள ஆண்டுகளின் படங்களையும் வீடியோக்களையும் காணோம்.

5. செய்தி அறிக்கைகள்

தமிழ்ச்சமூகத்தில், பேரவையில், அமெரிக்க நாட்டில், தமிழினத்தில் நிகழ்கின்ற சுகதுக்கங்களின்பாற்பட்ட அவ்வப்போதைய நடவடிக்கைகளின் நிமித்தம் பேரவை தத்தம் நிலைப்பாடுகளை அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பக்கத்தையே சரிவர நிர்வகிக்கவில்லை. ஆங்காங்கே இருக்கும் தமிழ்ச்சங்கங்களின் விழா அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. முந்தைய காலகட்டத்தில் இடம் பெற்ற செய்தி அறிக்கைகளும் காணாமற்போய் விட்டிருக்கின்றன. https://fetna.org/blog/fetna-new-bylaw-accepted/

6.  செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

சென்ற தேர்தலின் போது, இவை முறையாக வெளியிடப்படுமென தேர்தலில் போட்டியிட்டவர்கள் உறுதி கூறியதாக நினைவுப்பதிவுகள். ஆனால் அப்படி எதுவும் காணக்கிடைக்கப்படவில்லை.

இது தேர்தல் நேரம். எந்தச் சகதமிழர் மீதும் விருப்பு வெறுப்புக் கொள்ளாமல், செயற்பாடுகளை மட்டுமே சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டிய நேரம். பேசுகின்ற போது, பலரும் பலவிதமாக வியந்தோதுவார்கள். வாக்காளர்களாகிய நீங்கள், தரவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பேரவையின் முன்னேற்றத்துக்காகவும், பண்பாட்டு விழுமியத்துக்காகவும் வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. I think the first duty of society is justice. அறம் செய விரும்பு.