8/09/2013

சிரிப்புதிர் கணம்

வாழ்க்கை என்பதற்கு எல்லைகள் உண்டா? நான்கு சுவர்களுக்குள், வேண்டாம், அந்த ஊர், நகரம், மாநகரம், நாடு என்பனவற்றுக்குள் கட்டுண்டு போனதா வாழ்க்கை?? விண்ணுக்கும் மண்ணுக்கும், மண்ணுக்கும் கடலடி ஆழத்துக்குமென ஆழ அகலங்களுக்குள்ளும் நீள உயரங்களுக்குள்ளும் கட்டுப்படாமல் திமிர்ந்து தாண்டவமாடுவதுதானே வாழ்க்கை?? திருமலை மனிதக்கடல், சென்னைக் குப்பத்து வீதிகள், கோயமுத்தூர் சந்திப்புக் கொந்தளிப்புகள், ஆளற்ற திம்பம் காடுகளென எங்கும் நடையோடிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. அப்படியான ஓட்டத்தின் ஒரு கணத்தில் நிகழ்ந்து பரிணமித்துக் கரைகிறது வாழ்க்கையின் இத்துளி.

“அண்ணா, ப்ளூ மவுண்ட்டன் பர்ஸ்ட் க்ளாஸ் ஏசி எங்க நிக்கும்னு தெரியுமா? இந்த பெட்டிகளைக் கொண்டாந்து ஏத்திவிட எவ்ளோ ஆகும்?”

“சார், மொதல்ல பெட்டிகளை எறக்கி வெக்கிலாம் உடுங்க. எறக்கி வெச்சிட்டு எவ்ளோன்னு பேசி எடுத்துட்டுப் போலாம். ஏய், அதுகளை எறக்குப்பா!”

“சரி, இப்ப சொல்லுங்க. எவ்ளோ ஆகும்?”

”அறுநூறு ரூபா சார்!”

”சரிங்ணா அப்ப. நாங்களே எடுத்துக்குறோம்!”

“சார், ஒன்னாம் நெம்பர் ப்ளாட்பார்ம்க்கு படிக்கட்டுல தூக்கிட்டுப் போகணும் சார். இப்படி சொன்னா எப்படி?”

“இல்லங்ணா. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. நாலு பொட்டிகதானே, நானே மொள்ள இழுத்திட்டுப் போயிடுவனுங்க!”

“ஏன் சார், நாங்களும் தொழில் செய்ய வேண்டாமா? இப்பிடிக் கோவிச்சுக்குறீங்களே??”

“நியாயமா நீங்களே ஒரு ரேட் சொல்வீங்கன்னு பார்த்தேன். நீங்க நெம்ப எச்சா சொல்றீங்ணா!”

“ஏ, நீ ரெண்டு எடுத்துக்க. நான் ரெண்டு எடுத்துக்குறேன். நடங்க போலாம்!”

“வேண்டாம்ங்ணா. எவ்ளோ சொல்லுங்க. அப்புறம் எடுத்துக்கலாம்!”

“ஆளுக்கு நூறு; இரநூறு ரூபா குடுத்துருங்க. வண்டி வர்ற வரைக்கும் இருந்து ஏத்தி விட்டுடுறம்!”

“சரி, நீங்க எடுத்துங்க. நான் இவங்க கூடப் போறன். நீங்க எல்லாம் கைப்பைக எல்லாத்தையும் எடுத்திட்டு வந்திருங்க. டிரைவர் அண்ணனைப் போகச்சொல்லிடுங்க!”

மேட்டுப்பாளையத்திலிருந்து நான்கைந்து பெட்டிகள் வந்து, ஏற்கனவே நிலைகொண்டிருந்த மற்ற பெட்டிகளுடன் இணைந்து கொண்டன. சீட்டுகளில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இருக்கை எண்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் எதற்கு இந்த முண்டித்தல்?? வடவன் தென்னவனின் இது போன்ற செயல்களைப் பார்த்து முண்டி என்றானா? கல்லுளிமங்கன் என்பதற்கு ஈடான முண்டியெனும் சொல்லுக்கும், கல்லுளிமங்கன்களின் இச்செயலுக்கும் என்ன தொடர்பு?? என்னவோவாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் முண்டிக்க விரும்பவில்லை.

“சார், எல்லாம் இருக்கா பார்த்துகுங்க சார்!”

“எல்லாம் இருக்குங்ணா. இந்தாங்க!!”

“சார், ஒரு நோட்டு எச்சா இருக்கு சார்!”

“பரவாயில்ல; வெச்சுகுங்க!”

“இல்ல சார். வேண்டாம், இந்தாங்க!!”

“என்னங்க இது? மொதல்ல அறுநூறு கேட்டீங்க... இப்ப நூறு சேர்த்தி குடுத்தா வேண்டாம்ங்கிறீங்க?? ம்ம்... சரி, கொண்டாங்க!!”

உடனிருந்தவர்களிடமிருந்து ஒரு குரல். “பேசினபடிக்கு இருநூறைக் குடுத்திட்டுப் போக வேண்டியதுதானே? இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை??”.

நாலுதப்படி முன்னேறின அந்த சிவப்பு சட்டை இரண்டு தப்படி சறுக்கி வந்து சொல்லியது, “அந்த நூறு ரூபாய வாங்கினா சாருக்குத் திட்டு விழும்னுதான் நான் வாங்கலை. அப்பிடியிருந்தும் திட்றீங்களேம்மா??”.

இனிமையான குரல் ஒலித்தது, “பயணிகளின் கனிவான கவனத்திற்கு! வழித்தடம் எண் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம்- சென்னை, நீலகிரி எக்சுபிரசு சென்னைக்குப் புறப்படத் தயாராக உள்ளது!!”. மஞ்சள் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த கோவை மாநகரம் உதறித் தள்ளப்பட, வீடுகளும் தெருக்களும் பின்னோக்கிப் போய் விழுந்தன. சாளரத்தில் இருந்த கண்களைக் கடன் வாங்கி இப்போதுதான் எதிர் இருக்கையைப் பார்க்கிறேன். அசடு வழியச் சிரிப்பொன்று உதிர்கிறது. “இஃகிஃகி!”.

8/08/2013

பூத்துக் கிடக்கு

அந்த வீட்டுக்காரனுக்கும் இந்த வீட்டுக்காரனுக்கும் வாய்க்காவரப்பு. பஞ்சாயத்து. அக்கப்போரு. நீங்க நினைக்கிறாப் போல பொம்பளை விவகாரம் அல்ல. ஆனால் அதைப் போன்ற ஒரு அத்துமீறல்தான் தகராறுக்குக் காரணம். ஆமாம். இப்ப நீங்க நினைக்கிறது சரிதான். இவங்க வீட்டு வேம்பு மரத்தின் இரண்டு கிளைகள் அவங்க வீட்டு எறவாரத்தின் மேல் நீட்டிக் கொண்டு வளர்வதுதான் காரணம். 

அ+அவசியமாக, அதாவது அனாவசியமாகத் தன் வீட்டுப் பெண்களின் ஒழுக்கம், நடத்தையெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுவதை விரும்பாத ஜெகநாதன், தன் வீட்டு வேம்பினை அடியோடு வெட்டிவிடுவதான முடிவுக்கு வந்து விட்டான். அந்த இரயில்வேப் பாதை மருங்கில் இருக்கும் குடியிருப்புக்குச் சென்று மரம் வெட்டுவதற்கு 1200 ரூபாய் வெட்டுதொகையும் பேசி, மாறன், சுகுமார், இரண்டு வெட்டாட்களும் வந்து ஆயிற்று வீட்டுக்கு.

இந்த இருவரில் சுகுமார் என்பவன் ஒரு தண்ணிவண்டிதான் என்றாலும், அவன் ஒரு படைப்பாளி. எழுத்துகளை வாசிப்பதும், எழுதுவதுமாக இருப்பதின் நிமித்தம் சிரைக்கப்படாத தாடி மீசையுடன் தான்தோன்றித்தனமான வாழ்க்கையைத் தனதாக்கிக் கொண்டிருந்தான். வேம்பு மரத்தில் இருக்கும் எதோவொரு நான்கு வாதுகளை மட்டும் வெட்டிவிட்டு, இன்றைக்கு இது போதும் என நிறுத்திக் கொண்டான். ஜெகநாதனுக்கு இந்தத் தாடிக்காரனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் போல இருக்கிறது. ஏனென்றால் பேசுகிற பேச்சு அப்படி. தொழிலாளர் ஒற்றுமை, மேட்டிமை, அதிகாரவர்க்கம், முதலாளித்துவம் முதலானவற்றை யாரோ கக்க, அவற்றை நக்கி நக்கிப் பழக்கப்பட்டவன் மாறன். சும்மா இருப்பானா? சுகுமாரன் சொன்னது சொன்னதுதான் என்று உறுதிமொழி எடுத்தான்.

அண்டை வீட்டுக்காரனைச் சமாளிப்பது எப்படியெனும் தலைவலி இடித்தது ஜெகநாதனுக்கு. நானே சென்று பரிகாரம் வைத்து விட்டு வருகிறேனென்று சொன்னான் சுகுமாரன். அதன்படியே அண்டைவீட்டு வையாபுரியிடம் சென்று சொன்னான்.

“சார், நாந்தான் மரவெட்ட வந்தேன். உள்வாது நாலு வெட்டியுட்ருக்கேன் சார். மத்த வாதுகளை இன்னும் பத்து நாள் கழிச்சி நானே வந்து அரக்கியுட்டுர்றேன் சார். இதுல உங்களுக்கொன்னும் சங்கட்டம் இல்லீங்களே? ஏன்னாப் பாருங்க, மரம் பூராவும் பூச்சி, புழுவுக, குருவி, குஞ்சுகன்னு நாலும் பூத்துக் கிடக்கு சார். வெட்டியுட்டதைப் பார்த்ததும் அதுக வேற எடம் குடிபோகக் கொஞ்சம் அவகாசம் குடுத்துப் பார்க்கலாம் சார்!!”

”தம்பி, நான் மரத்தை வெட்டவே சொல்லலியே? நானும் புள்ளை குட்டிக்காரந்தான். அது பாட்டுக்கு அது இருந்திட்டுப் போகட்டும். நீங்க போங்க. நானே ஜெகநாதங்கிட்டப் பேசிக்கிறன்!”

8/07/2013

ஆப்பு

அம்மா பயித்தம் பருப்பு(பாசிப் பயறு) காயப் போட்டுக் கொண்டிருந்தார். ”அம்மா, பயறுக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருக்கு? பூச்சிகள் அண்டி உளுத்துப் போனதாட்டம் தெரியலையே??” என்றேன். “பூச்சி அண்டினாத்தான் காயப் போடணும்ங்றது இல்ல. நல்லா வெயில் அடிக்குது. சும்மா இருக்குற நேரங்கள்ல இதுகளைக் காயப் போட்டு வெச்சிகிட்டா நெம்ப நாளைக்கு நின்னு புடிக்கும்” என்று சொல்லிக் கொண்டே மொட்டை மாடியிலிருந்து கர்ம சிரத்தையாய் அடுத்த வேலைக்காக இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்குப் பலியாகாத அம்மா என் அம்மா என்கிற திமிர் எனக்கு. அந்த நேரம் பார்த்து ஒரே ஒரு குருவி மாத்திரம் தரையிலிருந்து வெடித்து வெடித்து குந்திக் கொண்டிருந்தது. அது வெடிக்கும் போது இறக்கைகள் சிதறுவது போல இருந்தன. இது ஏன் சும்மா சும்மா வெடித்துக் கொண்டிருக்கிறது என நினைத்த நான், அந்த பயித்தம் பயிறிலிருந்து சில மணிகளைக் கையிலெடுத்து அதை நோக்கி வீசினேன். இரண்டு மூன்று முறை தரைகுத்திப் பொறுக்கிய அது விருட்டெனப் பறந்து போனது.

என்னை அங்கு நிலைநிறுத்திய அதுவும் போய் விட்ட சூழ்நிலையில் அம்மாவிடமே போகலாம் எனக் கீழிறங்க நினைத்த மாத்திரத்தில் நான்கைந்து குருவிகள் வந்து குந்தின. அந்த ஒற்றைக்குருவி போய் மற்றனவற்றைக் கொண்டு கூட்டியாந்திருக்கிறது என நினைத்த நான், இன்னும் சில பயறுமணிகளை எடுத்து வீசினேன். குதித்துக் குந்திய அவை தரை குத்தத் துவங்கின. அவற்றுள் ஒரு குருவி மாத்திரம் எழும்பிப் போனது. போயிக் கொஞ்ச நேரத்தில் இன்னும் மூன்று குருவிகள் வந்து சேர்ந்து கொண்டன. மணிகள் வீசப்பட வீசப்பட குருவிகளின் சேகரம் பெருக்கிறதே என்று நினைத்த நான் இன்னும் கொஞ்சம் மணிகளை அள்ளி வீசினேன். விருட்டென எல்லாமும் ஒரு சேரப் பறந்து போய்விட்டன. நின்று பார்த்தேன். நின்று பார்த்தேன். அவை வரவேயில்லை. குரல் மட்டுந்தான் கேட்டது. “பாட்டி, இங்க வந்து பாருங்க. சித்தப்பா எல்லாத்தையும் எடுத்து கீழ வீசிட்டு இருக்காங்க பாட்டி!!”.