9/30/2012

நம்பிக்கை


காக்கை கரைந்தால்
உறவினர் வருவர்
நம்பிக்கை மீது
நம்பிக்கை வை
என்றான்
நம்பி!!

9/29/2012

உச்சி மாநாடு


அந்தி ஒளிவதற்குச்
சற்று முன்பாக
எங்கள் தெருமுனை
மின்கம்பத்தில்
கருஞ்சிட்டுகளின்
உச்சி மாநாடு!
ஒருசிலர் மட்டும்
இடம் மாறி இடம் மாறி
அமர்ந்து கொண்டிருக்க
அவர்களின் அடாவடியைத்
தட்டிக்கேட்கப் போய்
தம்மீது நம்பிக்கையில்லாத்
தீர்மானம் வந்துவிடுமோ
எனும் அச்சத்தில்
பாவம்
சிட்டுகளின் ஊர்த்தலைவர்!!

9/28/2012

நம்பிக்கை



பறவையானது
மரத்தின் கிளையில்
அமர்ந்திருப்பது
கிளையின் மீதான
நம்பிக்கையில் அல்ல!
தன்னால் பறந்துவிட
முடியும் என்பதாலே!!
பறக்கும் விமானத்தில் 
அமர்ந்திருந்த நான்
எதன் மீது
நம்பிக்கை வைப்பது?
இருப்பினும்
எனக்கே தெரியாத 
எதோ ஒன்றின் மீது
ஊன்றிய என் நம்பிக்கையின்
விளைவாகப் பிறக்கிறது 
இக்கவிதை!!

பல் சேகரம்

அதென்னமோ ஒன்னு
செவப்பா
அதுக்குள்ளார
குறும்பு செய்யுறவிங்க
பல்லு எல்லாம்
போட்டு வெச்சிருக்காங்க
அம்மா!
நான் குறும்பு செய்தா
என்னோட பல்லுகளையும்
அதுக்குள்ள போட்டு
வெச்சிக்குவாங்களாப்பா?!
அஃது யாதெனில்
அதன் பெயர்
மாதுளம் பழம்!!



9/27/2012

இறங்கு பொழுதில்...

”டொக் டொக்”
மடுத்தேன்
வினவினேன்
சென்றேன்
கழற்றினேன்
திறந்தேன்
பார்த்தேன்
முறுவினேன்
பெற்றேன்
ஒப்பினேன்
நவில்ந்தேன்
மூடினேன்
கிட்டித்தேன்
வந்தேன்
பிரித்தேன்
கண்டேன்
மகிழ்ந்தேன்
”குடும்ப வரைபடம்”

முத்தக்குஞ்சு


சாப்புட்டீங்களாப்பா
உதிர்ந்த வாஞ்சையான
சொல்லோடு
நெஞ்சுக்கதகதப்பில்
பொரிந்தது!

பொரிந்து உயிர்த்த
முத்தக்குஞ்சினை
தன்னுள் வாங்கியபின்
யாதுமறியாததாய்
துள்ளிக்குதித்து உள்ளே ஓடி
அம்மா இங்கே வா வா...
சொல்லிக்கொண்டிருக்கிறது
தாய்ப்பறவை!!


9/26/2012

அணைப்பு

வங்கிக்கு எழிலூட்டும்
இளநங்கையவள்
இன்முகத்தோடு
வரவேற்று
பட்டுக் கை
கை பற்றிக் குலுக்க
அதன் நீட்சியாக
நன்றி தெரிவிக்கையில்
தடுத்தணைத்தேன்
உங்க குதிரைவால்
நல்லா இருக்கு
எனச்சொல்லக் கிளம்பிய
உள்மனச் சிறுவனை!!

மிடுக்கு

எதோ வாங்க
அக்காவுக்கு 
பணம் வேணுமாம்
அம்மாகிட்ட நின்னு
அழுதுகுட்டே இருக்குறா
போங்க 
நீங்க இப்பவே கடைக்குப் போயி 
நிறைய 
பணம் வாங்கிட்டு வாங்கப்பா
ஆணையிட்ட மிடுக்கு
குழந்தைக்கு!!!

9/25/2012

ஏக்கம்

ஏக்கமாய்
இருக்கிறது!
என்னருகே
உதட்டோரத்தில்
வழியும் சிரிப்போடு
உறங்கும்
மகளின்
கனவுக்குள்
அப்படியென்னதான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது?

கொழுக்கட்டை

பிள்ளையார் நாள்
மந்தமாய் நகரும்
நீண்ட வரிசை!

நீங்கொன்னு தின்னுங்க
நானொன்னு திங்கிறேன்
கொடுத்தவரிடமே
ஒன்றைக் கொடுத்துவிட்டு
அவர்மீது வைத்தகண் மாறாமல்
குழைந்து சிரித்துக் கொண்டே
தின்னுகிறது குழந்தை!!

உறைந்து
செயலற்றுப் போய்
நிற்கிறார்
கொழுக்கட்டைக்காரர்!

பாவம்
பின்னால்
நிற்கும்
அந்த நீண்ட வரிசை!!

9/24/2012

ஆதரம்


எங்கள் வீட்டில்
பையன்கள் மட்டுமே!
மிதிவண்டியில்
குடிதண்ணீருக்காய்
கிணற்றடிக்குச் 
சென்றிருந்தேன்!!

எவருமில்லாமல்
இறைக்கக் கயிறுமில்லாமல்
கிணறு மட்டுமே தனித்திருந்தது!

தண்ணி சேந்துறதுக்கு
கவுறு கொஞ்சம் வேணும்!
கேட்டதற்கு
மரகதத்தையும்
உடன் அனுப்பிவைத்தாள்
மச்சுவீட்டு செல்வி அத்தை!!

தீர்மானம்

Tamil Literature Ilakkiyam Papers
கிராமியப் பெருவெளியில்
கைவினைப் பொருட்கள் பெருமன்றத்தில்
ஒல்லு
உலக்கை
மத்து
அம்மி
உரல்
இராயிக்கல்
குழவிக்கல்
கொக்கரை
சவடிமுள்
சிவிறி
விசிறி
ஏற்றம்
கமலை
முதலான எல்லாமும்
ஊக்கக் களிப்புடன் பங்கேற்று
நிறைவேற்றி அனுப்பின
ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை!
14 மணிநேர மின்வெட்டு 
கல்நெய் விலையுயர்வு
முதலானவற்றைப் பாராட்டி
நன்றி தெரிவிப்பதோடு
அவற்றை இன்னும் 
அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல 
வலியுறுத்துகிறோம் என்று!!

9/23/2012

உயிர்த் துடிப்பு


ஊர்ல மழையா?
அத்தைக்கு கால்ல வெடிப்புன்னாங்க??
ஓரிரு கேள்விகளோடு
உள்ளே சென்ற நீ
சிலமணித்துளிகளில்
திரும்பி வந்து
காப்பியைத் தருகிறாய்!!
கதவுநிலவுக்கப்பால்
பாதியாய் நீ ஒண்டியிருக்க
கொடுத்த காப்பியை
குடித்துக் கொண்டே
அங்கிருந்த குமுதத்தை
வெறுமனே புரட்டுவதில் 
சில கணங்கள் கழிந்தன!!
சரி நான் கிளம்புறேன்
மாமா வந்ததும் சொல்லிடு 
வாசலுக்கு வந்ததும்
நீ கேட்டது 
இன்னும் காதுகளில்!!
இன்னெப்ப வருவீங்க?!

9/16/2012

சிரிப்புச்சாயம்


ஓடாதே நில்!
ஓடாதே நில்!!
இஃகும்.. நான் நில்ல மாட்டேன்
நான் நில்லவே மாட்டேன்
ஓடிச் சென்று ஓய்ந்தபின்
மெலிதாய்ப் புன்னகைத்து நின்றவளின்
கண்களில் இருந்து வடிந்தது
பிடிவாதத்தின் தோல்வி!!
அக்கணமே அது நீங்கி
வெளியெங்கும் 
கொட்டிக்கிடந்தது
சிரிப்புச்சாயம்!
நானும் கொஞ்சமதை எடுத்து
என் உதடுகளில் பூசிக் கொண்டேன்!
நானும் கொஞ்சமதை எடுத்து
என் உதடுகளில் பூசிக் கொண்டேன்!!

9/15/2012

எங்கும் தமிழ்!!

வளைகுடாவிற்கு
சென்றிருந்த
எனக்கான
ஆனந்தபவன்
உண்டிகையின் போழ்தான
அறிமுகப்படலமிது!

நான் கூகுள்
நான் யாகூ
நான் லின்க்குடுஇன்
நான் ஆப்பிள்
நான் பேசுபுக்கு
நான் ஆரக்கிள்
நான் சேல்சுஃபோர்சு
நான் பெகா
நம்மவர்கள்
சொல்லி முடித்ததும்
எனக்கான வாய்ப்பு!

அடுத்து
நானும் எதையாவது
சொல்லியாக வேண்டுமே?
எங்கும் தமிழ்!!

9/13/2012

அந்நியன்

ஏய்
வாங்கடி போயிறலாம்
கரும்பொறிய
கையில தூக்கிட்டு
எவனோ அந்நியன்
வர்றான்!

வாயாடி 
கொக்குக்குத்
தெரியுமா
ஊர்க்காரனின்
எங்கோ போய்
விழுந்த விதை
நானென்று?!


படம்: நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன்

(பசுஞ்சோலைக்குப் பெயர் வெட்டிக்காடு?!)

மொளகாப் பத்து

எத்தனை நாள்தான்
கடத்திக் கொண்டிருப்பது?
இன்றைக்கு முடித்து
விட வேண்டியதுதான்!
முந்தைய நாள் இரவே
கடைசி வண்டி பிடித்து
ஆனைமலை போயாயிற்று
காசு வெட்டிப் போட்டு
மிளகாய் அரைத்துப் போடத்தான்!!

சினமடங்க

வெறி தீர
காசு வெட்டி
தன் கையாலாயே
மாசாணியம்மனுக்கு
மிளகாய் அரைத்துப் பூசி
வீடு வந்து சேர்ந்தாயிற்று!!

வள்ளீம்மக்கா

அல்லாரும்
தோட்டங்காட்டைப்
பாக்காம எங்க போய்ட்டீங்க?
உங்க கொழுந்தனாருமு
கொழுந்தனார் பொஞ்சாதியுமு
ஈரப்பதவலு எதுமு பாக்காம
உங்க கெணத்துக்குள்ள எறங்கி
மோட்டார் எடுத்துடாம இருந்துருந்தா
இராத்திரி பேஞ்ச மழைக்கு
பெட்டுக்கு தண்ணி வந்து
அல்லாம் நாசமாப் போயிருந்துக்குமக்கா!!

அட?

அதுவாட்டுக்கு மூலையில
கெடந்தது கெடந்தமாரியிருந்த
மொளகாவத்தலு
மூணு இராத்தலு
வீணாப் போனதுமில்லாம
இந்தக் கையிக ரெண்டுமு
என்னா எரி எரியுது?

9/12/2012

பின்புலம்


மூன்று வெள்ளிக்கு
வாங்கி வந்த
மின்விளக்கு எழுதுகோல்
மின்மினியை
வெளிக்காட்டாமல் இருக்க
அப்பா இது போய்டிச்சிப்பா
இனி இதை உங்களால
சரி செய்ய முடியாது!
அவள்
கூறியதில் 
சரியாக்கப்பட்டது அது!!

சரி செய்ய முடியாது
அப்படின்னு சொன்னா 
சரி செய்திடுவீங்க நீங்க!!
என்னிடம்
இருந்ததா இல்லையா?
அறுதியிட்டுச் சொல்ல முடியாது!
ஆனால்
அவளிடம் இருந்திருக்கிறது
நிறையவே
நம்பிக்கை!!

உசாத்துணைவன்


Old madal house for sale - Tamil Nadu
பிள்ளைகளுக்குக் கண்ணாலம்
குடும்பத்தில் சண்டை சச்சரவு
ஊருக்குள் ஏட்டி போட்டி
கொடுக்கல் வாங்கல்
காதுகுத்து கெடாவெட்டு
இவைகுறித்தான
முடிவு எடுக்கவியலா
தருணங்கள் வரும் போதெலாம்
யாருடனும் பேசமாட்டார் அய்யன்!
வீட்டுக் கொட்டத்தில்
அவருக்கேயான இடமொன்று உண்டு
எளிமையான பாயில்
இலவம்பஞ்சுத் தலையணையில்
தலைவைத்து மேல்நோக்கியபடி
ஆழ்ந்திருப்பார் அய்யன்!

அய்யன் படுத்திருக்கிறார் என்றால்
யாருமே அந்தப்பக்கம்
நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்
குழப்பத்தில் உள்ளே சென்றவர்
வெளியே வருகையில்
எப்போதும் ஒரு
தெளிவோடு வருவார்!!
அவருக்குப் பின்னான
காலத்தில்
அந்த இடம் அவ்வளவான
புழக்கத்தில் இல்லாது போனது!!

நகரத்தில்
குறுகலான இடத்தில்
கூட்டுக்குடும்பம் நடத்திவருகிற
எங்கள் வீட்டில்
பிணக்கு முட்டல் மோதல் 
எழுகிற போதெலாம்
அப்பா ஊருக்குச் சென்று விடுவார்;
ஓரிரு நாளில்
அவர் திரும்பியதும்
வீடு இயல்புக்கு வந்து விடும்!!

அப்படியாக ஊரில்
அப்பாவுக்கான எதோவொன்று இருக்கிறது
அது என்னவாயிருக்கும் எனக்கண்டறிய 
நாட்கள் வெகுவாயிற்று!
எனக்கும் ஆசை வந்துவிட்டது
தன்னைப் பார்த்து
வேண்டுவோர்க்கெலாம்
தெளிவான பாதையை
திடமான முடிவினை அள்ளித்தரும் 
எங்கள் வீட்டு 
விட்டத்தைப்
பார்க்க வேண்டும்!!

9/11/2012

பிணைத்தல்

நிகழ்ச்சியொன்றில்
ஆங்காங்கே
உரையாடல்கள்
அறுந்து 
தொங்கிக் கொண்டிருந்தன!

இன்னாரை
இன்னார்
வைத்திருப்பதாகச்
சொல்லப்படுவது உண்மையா?
வினா விடுக்கப்பட்டதும்
அறுந்து தொங்கிய அனைத்தும்
ஒட்டிக்கொண்டு
ஒன்றாகிப் போனது!!

9/10/2012

தளிர் தாலாட்டு


அரும்புத் தாலினது
ஓராட்டு இது
அப்பனை உறங்கச் செய்ய
வளைய வந்த தாலாட்டு இது!

யாரிராரோ
ஆரிரரோ
பாப்பாக் குட்டிக்கு
ஆரிரரோ...
அப்பா..க் குட்டி
எந்திரிச்சு தூங்க வெக்கறேன்...
ஆராராரிரோ
செல்லங் குட்டி
ம்... ம்...
யாரிரரோ
ஆரிரரோ
பாப்பாக் குட்டிக்கு
ஆரிரரோ
அப்பாக் குட்டீ
அப்பா அம்மா குட்டிக்கு
ஆரிரரோ
செல்லங்குட்டீ
ஆரரிரோ
அப்பாக்குட்டீ...
ஆரரரோ....
........
.......
உறங்கச் செய்து விட்டு
கனவினில் வந்து
மிரட்டுகிறாய்
அப்பன் மீது
யானைச் சவாரி
போக வேண்டுமென!!

வா போகலாம்
வாழ்வுச் சோலையில்
தேன்சிட்டும் மலரும்
பூக்காடுகளும்
வண்ணத்துப்பூச்சிகளும்
தளிர் மரங்களும்
அரும்புக் கொடிகளும்
காணப் போகலாம் நாம்!!

தாயு”மவள்”

 நிழல் நீண்டுவிழும் நேரம்
வீட்டுப்புறக்கொல்லையில்
அசைவற்றிருந்த ஊஞ்சல்
இயங்கப் பெருவேட்கையோடு
முகமலர்ந்து காத்திருக்கிறது
அன்று வந்திருந்த அஞ்சல் உறைகள்
போகிற போக்கில் திறக்கப்படுகின்றன
சென்று கொண்டிருந்தேன்
தெருமுனையிலிருக்கும்
பேருந்து நிற்குமிடம் நோக்கி
அவளின் வரவுக்காய்!
முனை சென்று சேருமுன்னம்
அவளே எதிர்கொண்டு பின்னர்
நேர்கொண்டோம் நாங்கள்
பிறந்தன கணைகள் பல
நானே வந்திருப்பனே?
காய்ச்சல் நல்லாயிடுச்சா??
மத்தியானம் சாப்பிட்டீங்களா??
கொஞ்சமாச்சும் தூங்கினீங்களா இல்லையா??
என் பையை நான் தூக்கிக்கமாட்டனா??
நாளைக்கு வேலைக்குப் போகணுமில்ல?!
அடிக்கடி நிறைய தண்ணி குடிங்க!!
தாயு”மவள்”!

9/09/2012

வேசறவு


நன்றாகப் படிப்பவர்கள்
நல்லவர்களாகவே இருப்பர்
பொய் சொல்ல மாட்டார்கள்
ஒழுக்கம் தவறமாட்டார்கள்
முரட்டுத்தனமாய் 
நம்பிய காலமது!

ஊரின் நம்பிக்கைக்கு
வேட்டு வைக்காமல்
நன்றாகப் படிக்கும் மாணவர்களும்
நல்லவர்களாகவே இருந்தனர்!

எட்டாம் வகுப்பு
ஆண்டின் முதல் நாள்
முதல்வரிசையில் இடம்
வகுப்புக்கு சட்டாம்புள்ளை
பேசினால்
பேசியவர் பெயரெழுதும் வேலை
என எல்லாச் சிறப்பும்
ஊர் மணியக்காரர் மகன்
ஏழாம் வகுப்பு அ பிரிவு
சட்டாம்புள்ளை
இரவிக்கே வாய்த்தது
ஏழாம் வகுப்பு ஆ பிரிவு
சட்டாம்புள்ளை
மணியனுக்கு
ஒன்றும் இல்லை!

மெளலி வாத்தியார்
வசந்தா டீச்சர்
கிளப்பிவிட்ட புரளியில்
நொந்துபோன வசந்தாக்கா
நல்லாப் படிக்கிறவங்கள்ல
உங்க மகனும் ஒருத்தன்
அவனுங்கூட
இதை உண்மைன்னு நம்புறானே
வேலூர்ச் சந்தையில்
காய்கறி வாங்கப் போன அம்மாவிடம்
சொல்லிச் சொல்லி அழுதீர்கள்!!

சட்டாம்புள்ளை
ஆகவில்லையெனும்
ஏக்கத்தில்
பொறாமையில்
அறியாமையில்
நானுமதை நம்பிப் பகரம் விட்டேன்
இன்று மனம் கனத்து
இனபத் தமிழெழுத்திடைத் துயின்று
வேசறவு தீர்க்க முயலுகிறேன்!
மன்னிச்சிடுங்க அக்கா!!

இனபத் தமிழெழுத்திடைத் துயின்று
வேசறவு தீர்க்க முயலுகிறேன்!
மன்னிச்சிடுங்க அக்கா!!

தனா


டே சின்ராசூ...
கருக்கடையா இருந்துக்கடா
பதனமாக் களத்து மேட்டைக் கூட்டி 
நறுவிசு பண்ணிப்போடு!

எறவாரத்துத் தூக்குப்போசில 
இருக்குற கஞ்சியக் குடிச்சபின்னால
மிச்சத்தை நாய்க்கு ஊத்தீட்டு
கழுவிக் கமுத்தீரு!!

சோளக்காடு
வய்க்கப்போருன்னு
கள்ளுக்கார வங்கணத்தி பொறவால திரிஞ்சி 
பொழுதை வீணாக்கீறாத!!

இன்னிக்கு மேக்க இருந்து
உங்க மாமன் வர்ற நாளு
சூதானமா இருந்துக்கடா!

எல்லாஞ்செரி
மாமங்கோட
தனா வர்றாளா??

(படம் உதவி: http://www.desipainters.com/)

9/08/2012

சேட்டை

குளக்கரையில்
உடற்பயிற்சியின்போழ்தான
கவனிப்பில்
நடந்தவை இவைதான்!

தான் வைத்திருந்த

நீலவண்ணத் தட்டினை
நாய்க்காரர்
ஓங்கி எட்ட வீச
அதைக் கவனித்தபடியே
தொடர்ந்து ஓடிச் சென்று
தன்வாயால் இலாகவமாய்க் கவ்வி
கவ்வியபடி அத்தட்டினை
நாய்க்காரரிடமே கொண்டு வந்து
சேர்த்தது நாய்!

மீண்டும்

தான் வைத்திருந்த
நீலவண்ணத் தட்டினை
நாய்க்காரர்
ஓங்கி எட்ட வீச
அதைக் கவனித்தபடியே
தொடர்ந்து ஓடிச் சென்று
தன்வாயால் இலாகவமாய்க் கவ்வி
கவ்வியபடி அத்தட்டினை
நாய்க்காரரிடமே கொண்டு வந்து
சேர்த்தது நாய்!

நாய்க்காரர்

என்ன நினைத்தாரோ
இம்முறை 
நீலவண்ணத் தட்டினை 
நாயுக்குத் தெரியாதபடி
இடக்கையில் வைத்துக்கொண்டு
வெறுமனே தன் வலக்கையை மட்டுமே
வீசினார்.
சரியாய்க் கவனித்த நாய்
வாலைக் குழைத்தபடி
இடத்தை விட்டு
நகரவே இல்லை!!

இம்முறை

தான் வைத்திருந்த
நீலவண்ணத் தட்டினை
நாய்க்காரர்
ஓங்கி எட்ட வீச
அதைக் கவனித்தபடியே
தொடர்ந்து ஓடிச் சென்று
தன்வாயால் இலாகவமாய்க் கவ்வி
கவ்வியபடி அத்தட்டினை
நாய்க்காரரிடமே கொண்டு வந்து
சேர்த்தது நாய்!

நாய்க்காரர்

மீண்டும் 
என்ன நினைத்தாரோ என்னவோ
நீலவண்ணத் தட்டினை வீசாது
வெறுமனே 
தன் வலக்கையை மட்டுமே வீசினார்.
வழக்கம் போல
நீலவண்ணத்தட்டு பறக்கும் திசையினூடாக
மேலே பார்த்தபடி
கூடுதல் ஓட்டத்துடன் ஓடிய நாய்
ஓடியே போய் விட்டது!!
நாயைத் தொலைத்த
நாய்க்காரரோ
அடிக்கடி திரும்பி
என்னைப் பார்த்தவண்ணம்!
சேட்டை, 
நாய்க்கா?
நாய்க்காரருக்கா??
எனக்கா???
அல்லது, இதைப் படிக்கிற உங்களுக்கா????

ஆண் காஃபி


வைகறையாமத்தில்
போயிக் காப்பி போடு
போயிக் காப்பி போடு
தொடர்ந்து கேட்பதைக்
கண்டுகொள்ளாது
இன்றைக்கென்னமோ
காக்கைகள் கரைவது
கூட்டொலியாயும்
வலுவாயுமிருக்கிறதே?

வினவியதற்கு
விடை தொடர்ந்தது
காக்கையுலகிலும்
பொருளாதார நெருக்கடி
காக்கையவை முடக்கம்
என்பது காரணமாயிருக்கலாம்!

ஆண் பெண் பேதமின்றி
சமத்துவம் போற்றும் நாளாக
அவர்கள் கொண்டாடுவதுகூட
கரைதல் பேரொலிக்கான 
காரணமாயிருக்கலாம்
பணிவாய்ப் பிறந்தது
மறுதலிப்பு!!

இதோ
வழக்கத்துக்கு மாறாய்
இன்று
ஆண் காஃபி
எங்கள் வீட்டில்!!

9/07/2012

உடனடிவினை

அப்பா
உங்கப்பா
உங்களை 
ஊஞ்சல்ல உட்காரவெச்சி
ஆட்டினதே இல்லையாப்பா?
நானறியாமலே
ஆட்டத் துவங்கியிருந்தேன் ஊஞ்சலை!!

9/06/2012

நாய்மை


மாநகரத்தில் இருந்து
உள்ளோங்கிய சிற்றூராம்
எம் தாய்மண்ணுக்குச் சென்றிருந்தேன்
தாயையும் தாய்மண்ணையும் கண்டுவர!

ஒன்றுக்கு நான்குமுறை
சொல்லிச் சொல்லியே
அழைத்திருந்தாள் அம்மா!
பொதுப் போக்குவரத்து வண்டியில் 
வர வேண்டாமென;
அமெரிக்கவாசியான நான்
அல்லலுற்றுப் போவேனாம்!!

நல்ல தண்மியுள்ள சொகுசுந்தில் 
சென்று சேர்கையில் சுகமாய்த்தான்
இருந்தது பயணம்!
அன்பு அம்மாவின் 
சோறு தின்னப்போன 
ஆவலது காரணமாகவும் இருந்திருக்கலாம்!!

மாலை நேரத்தில்
தாயை முத்தமிட்டேன்;
தாய்மண்ணைப் பிடியெடுத்து
முகர்ந்து பார்த்து
நெற்றிப் பொட்டுமாயும்
இட்டுக் கொண்டேன்!!

திரும்பவும்
மாநகர் நோக்கிய பயணம்!
அந்தியூர் துவக்கம்
கொங்கல்நகரம், இலுப்பநகரம்,
செஞ்சேரிமலை, செலக்கரிச்சல்
சூலூர், சிங்காநல்லூர்
வழியெங்கும் தார்ச்சாலையில்
உறங்கியும் உறங்காமலுமிருந்தன 
நாய்கள்!!

ஒவ்வொருமுறையும் 
அதனருகே சென்றதும் 
வேகம் குறைத்து 
நிறுத்தி ஒதுங்கி வளைத்து 
முடுக்கியை முடுக்குவதும்
மற்றொரு நாய்கண்டு
வேகம் குறைப்பதுமாயும் வந்ததில் 
இடுப்பு நொடிந்து நொந்து போனது!! 

முன்னமெல்லாம் 
கண்டதுமே
வாகனத்தை அதன் வேகத்தில் 
ஓடித்துரத்தித் துரத்தித்
தன் வீரியத்தை 
முழுவீச்சில் காட்டிக் காட்டி
பெருமை கொள்ளுமிந்த நாய்கள்!!

வலிக்கிறது இன்னமும்;
நொடிந்து போன
இடுப்பினால் அல்ல!
வலிக்கிறது இன்னமும்!
கொங்குநாட்டில்
நாய்மை
பறிபோனதேயென!!!


அக்கறை


வெளீல போகாத
வெயில் மம்மேனியா அடிக்குது!!
ஆமாம்ப்பா
அம்மா சொன்னாங்க
வெளீல போனா
காக்காய் போல ஆயிடுவேனாம்!!
நான் பறந்து போயிடுவேன்னு 
பயமாப்பா உங்களுக்கு?!

9/05/2012

விடை தெரியாத் தகப்பன்


பள்ளிக்கதவு மூடிவிடுமென்கிற
அம்மாவின் விரட்டுதலில்
தங்கையைக் கட்டியணைக்காமல்
வந்து விட்டேனே?
தவியாய்த் தவிப்பாளே??
வீட்டுக்குப் போனதும்
எனதன்பைத் தெரிவியுங்களப்பா!
அது உங்களால் முடியாது!!
ஒரு குழைந்தைக்கும்
ஒரு குழைந்தைக்கும்
இடையில் நீங்கள் 
குழைந்தை மொழி தெரியாத
வேற்றாள்தானே அப்பா??

குளக்கரை நேசம்


பச்சைப்பட்டு விரித்தாற்போல்
எங்கும் புல்வெளி

யாருமில்லாப் புல்வெளி
கண்கள் கொள்ளை கொள்ள
இவற்றின் நடுவே
கயல் துள்ளும் நீர்வெளியாக
ஊரோரக் குளம்!!

அன்றாடம் நாட்தவறாது

மாலை ஆறுமணிக்கு
குளக்கரையில் ஓட்டப்பயிற்சி – அங்கே
ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையொருத்தி
இடவலமாய்ப் போய்க்கொண்டிருக்க
வலமிருந்து இடமாய்ப் போகும்
காக்கேசன் மங்கையவள்!
மூன்றாவதாய்ச் செல்லும் இவனது
ஓட்டத்தின் பாதையினூடாய் 
எதிராய்க் கடக்கையில் 
சிந்தும் குறுஞ்சிரிப்பு மாத்திரமே
அவளுக்கும் இவனுக்குமான உறவு!!

கோடையின் தாக்கத்தில்

வெம்மை வாட்டியெடுக்க
தடைபட்ட ஓட்டப்பயிற்சியை
மீட்டெடுக்கும் பொருட்டு
திங்கள் பல உருண்டோடிவிட்ட
இன்றைய பொழுதில் சென்றான் 
ஓடுவதற்காய் ஊரோரக் குளக்கரைக்கு!!
காக்கேசக் குறுஞ்சிரிப்பின்றி
வெறுமை வாட்டியெடுக்க
ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையை நாட
அவள் காட்டிய அவளோ
வாய்ப்புற்றின் வதைப்பில்
படுக்கையில் படுகிடையாய்!!

கண்டு விரிந்த கண்கள் பேச

வாஞ்சையாய் அவளது இடக்கை 
இவனது வலக்கையைப் பற்றிக் கொள்ள
மெளனத்தினூடே ஓரிரு கணங்கள்
அமைதியாய்க் கடக்க
விடைபெறும் தருணமதில்
தட்டுத்தடுமாறி எழுந்து
நூலொன்றைக் கொடுத்து
முடிந்தும் முடியாமல் உதிர்த்தாள்
குறுஞ்சிரிப்பொன்று – அது அவளுடைய
கடைசியானதாகவும் இருக்கலாம்!
வீடு வந்ததும்தான் பார்த்தானிவன்
நூலின் தலைப்பு
Gandhi: His Life and Message for the World