1/31/2010

அமெரிக்காவில் H1B: சமீபத்திய மட்டுறுத்தலும், நுழைவு நிராகரிப்பும்!

விபரம் உண்மைதான்! ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இன்று வரையிலும், ஊரில் விடுப்பைக் கழித்துவிட்டு உள்நுழைந்தவர்கள் சிலர் திருப்ப அனுப்பப்பட்டனர் என்பது சரிதான். இதற்கான சுட்டிகள், முதல், இரண்டாவது!

ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனரா என்பது குறித்து உறுதி செய்ய முடியவில்லை. மேலும், உள்நுழைவுக்கான இடம் மாறி இருப்பதனால் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

ஏனென்றால், பல மாகாணங்களில் பன்னாட்டு விமான நிலையங்களே கிடையாது. ஆகவே, உள்நுழைவுக்கான இடம் மாறுவது என்பது தவிர்க்க முடியாததே!

பிறகு ஏன் இந்தக் கெடுபிடி? சமீபத்திய இந்த சுற்றறிக்கையே காரணம்! இதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள், குடியுரிமை இணையத்திலேயே காணப் பெறலாம்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில், உள்நுழைவுக்கான முத்திரை பதியச் சென்றிருக்கிறார். அவரிடம், உம்மை மேற்பார்வை செய்வது உமது நிறுவனத்தினரா அல்லது உமது சேவையைப் பெறும் நிறுவனத்தினரா என்று வினவ, இவர் யதார்த்தமாக, உள்ளது உள்ளபடியே, Yeah, I do report to a manager who is from client எனச் சொல்லி இருக்கிறார். அப்படியானால், நீர் உமது நிறுவனத்திற்கு வேலை செய்கிறீர்கள் என்பதற்கான மேலதிக விபரங்களைத் தாருங்கள் எனப் பணிக்கப்பட்டு, அவர் உள்நுழைவது கிடப்பில் உள்ளது.

H1b தகுதி என்பது மாற்றப்படவில்லை என்றாலும் கூட, அதை நிரூபணம் செய்யக் கூடிய விதம் வெகுவாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதே சரி. உங்களுக்காக, யார் விண்ணப்பித்தார்களோ அல்லது விண்ணப்பிக்கப் போகிறார்களோ அவர்களுக்கே, அந்தவகை உள்நுழைவு பெறுபவர் பணியாற்ற வேண்டும் என்பதே இதன் உள்நோக்கம்.

ஒரு நிறுவனமானது, குறிப்பிட்ட வேலையை எடுத்துச் செய்வதற்காக ஒருவரையோ அல்லது பலரையோ அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அதுவே, ஆள்களை அனுப்புவது/தருவிப்பது மட்டுமே அந்த நிறுவனத்தின் பங்காக இருக்குமானால் அது ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது என்பதே மேற்சொன்ன சுற்றறிக்கையின் நோக்கமாகப்படுகிறது.

ஏற்கனவே உள்நுழைந்து இருப்பவர்களானாலும் சரி, புதிதாக உள்ளே நுழைபவர்களானாலும் சரி, விபரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப, உங்கள் நேர்காணல், உள்புகு உரையாடல் மற்றும் விண்ணப்பத்தின் போதான மேலதிக விபரங்களில் கவனம் செலுத்துங்கள்!

1/30/2010

சீனுவாசன்

பால்ய காலத்து
நண்பனெனும்
தாக்கமவனுக்கு!

நட்பு மாறாமல்
இருந்ததில்
உவகையெனக்கு!

பொன்மாலைப் பொழுதில்
உரிமையோடு
அழைத்தான் அவன்!

அதே உரிமையோடு
வீடு தேடிச்
சென்றேன் நானும்!

அளவளாவினோம்
பாராட்டினோம்
விடைபெற எத்தனித்தோம்!

எல்லாம் சரிடா
இனிமேல் சீனிவாசன்னு
கூப்டாத!
சீனியில் வாசம் செய்பவன்,
எறும்பு; அதனால,
எம்பேரு இனி சீனுவாசன்!!


1/29/2010

தவளை வாயனும், கரண்டி வாயனும்!

சாமக்குருவி

தவளை வாயன்

மணிகண்டங் குருவி

மாங்குயில்


கூகை

கதிர்க்குருவி

கரண்டி வாயன்

கல்திலுப்பி


கானாஞ்சேவல்

செங்காடை

ஆட்காட்டி

நீலகிரிக் குருவி

கான மயில்

நெறக் கெளதாரி


செம்போத்து

கீச்சான்


வானம்பாடி

1/28/2010

திருட்டு யாமம்

ஊதக்காற்றின் சீட்டிச் சத்தம், கூடவே
ஊர்கோடியில் ஒரு நாயின் ஊளைச் சத்தம்!!

சிறிது சிறிதாய் நுண்ணிய ஒலியில்
சில்வண்டுக் கீசுகள்!

வானத்தின் உச்சிக்கு சற்றுக் கீழே
பொன்மயமாய் மதி!

திண்ணையில் இருந்து எழும்பி
கீழே படாமல் பதிந்த கால்கள்!

முற்றம் பார்த்து பின், படிப்படியாய்
வேகமெடுத்த பாதங்கள்!

வீதியின் முனைக்கு வந்ததும்
பின்னோக்கிய விழிகள்!

ஆள்அரவம் இல்லாதன கண்டு
மெதுவாய் மேற்குத் தெருவில்!

நான்கு வீடுகள் தாண்டியதும்
ஒரு பூந்தோட்ட வீடு!

சாளரத்து மூடுபலகையில்
மெலிதாய் தட்டலொன்று!

சிவகாசித் தீக்குச்சி கீறப்பட்டதும்
நீலநிறச் சுடர் பளீர்!

இதயம் ஒன்றுக்கு இன்னொன்றாய்
துடிக்கும் ஒலிப்பைவிடவும்,
உவகையிலும் அச்சத்திலுமாய்
ஆனதொரு மெலிந்த குரல்!

1/27/2010

ருக்குமணி

இளிச்சவாயன்

முக்குருணி

ருக்குமணிக் குருவி
(தங்கக்கழுத்து = ருக்குமணி)

பச்சைக் கொக்கு

முக்குளிப்பான்

கடல் பக்கி

அருவா மூக்கன்

வில்லேந்திரன் குருவி

நொள்ளைமடையானப் போட்டப்ப, மக்க வந்து மத்த மத்த குருவியெல்லாம் கேட்டாங்க அப்புனு. அதான்! செந்தலை, விசிறிவால், பூங்குருவி, கதிர்க்குருவி, வானம்பாடி, சாமக்குருவி, கொசுக்காடை, தளிக்குருவி, தகைவிலான், தாம்படி, கானகத்தி, கீச்சான், இருவாட்சி, சாவக்குருவி, பஞ்சுருட்டான், செம்போத்து, பொட்ட போத்தன்னு எல்லாம் போடத்தான் வேணும். ஆனாப் பாருங்க, இன்னிக்கி ஓய்ஞ்சு ஓய்ஞ்சு வருது! அதுனால அதுகளை இனியொரு நாளைக்கு பாத்துகுலாஞ் செரியா? நல்ல பழமையா எதனா சொல்றதுன்னா சொல்லிட்டுக் கிளம்புங்க அப்ப!

1/26/2010

வெல்லந் தின்ற பாவம் தேடு!

ஒரு முரடன் தேன் வாங்குவதற்காக கடைக்குப் போனான். அவன் வளர்த்து வந்த பூனையும் அவனைத் தொடர்ந்து சென்றது. கடையில் தேன் வாங்கும் போது ஒரு துளி தேன் கீழே சிந்திற்று.

அந்தத் தேன் துளியின் மீது ஒரு ஈ வந்து மொய்த்தது. அந்த சமயம் சுவரில் இருந்த பல்லி ஒன்று, ஈயைப் பிடித்தது. அருகிலிருந்த பூனையானது அந்தப் பல்லியைப் பிடித்துக் குதறியது.

வியாபாரத்திற்கு இடையூறாக நடுவில் விழுந்து கிடக்கும் பூனையின் மேல் அந்த கடைக்காரன் படிக்கல்லை வீசியெறிந்தான். அந்த இடத்திலேயே பூனை உயிரை விட்டது. பூனையின் எசமானனான அந்த முரடன் கோபங்கொண்டு கடைக்காரனை அதே இடத்தில் வெட்டிச் சாய்த்தான்.

கடைக்காரன் சாகவும், பக்கத்தில் இருந்த கடை வீதியில் இருந்த அனைவரும் கோபங்கொண்டு அந்த முரடனை அடித்துக் கொன்றனர். முரடன் இறந்த செய்தி கேட்ட அவனது நண்பர்கள் ஓடோடி வந்து, கடைத் தெருவையே சூறையாடினார்கள். அதுமட்டுமன்றி அந்தக் கடைக்காரர்கள் அனைவரையும் கொன்றார்கள்.

இந்தக் கைகலந்த சண்டையினால் அநேக உயிர்கள் பலி ஆயிற்று. இதைத்தான் கட்டு வாக்கியத்தில், மது சிந்து கலகம் என்று சொல்வது வாடிக்கை ஆயிற்று. இன்றும் உலகில் ஏதோ ஒரு மூலையில் இத்தகைய மது சிந்து கலகங்கள் நடந்த வண்ணமே உள்ளது என அமைதி விரும்பிகள் வருத்தப்படுகிறார்கள்.

மேலும் வெல்லம் தின்று பாவத்தைத் தேடுபவர்களைப் பற்றியும் நாட்டில் உள்ள கிராமத்துப் பெரியவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள். அது என்ன வெல்லம் தின்று பாவம் தேடுவது?

ஒரு வியாபாரி தன்னிடம் இருந்த பூனையைக் கொன்று விட்டான். பின்னர், இந்தப் பாவத்தைப் போக்க ஏதாகிலும் பிராயச் சித்தம் உண்டா என சாத்திரங்களைப் புரட்டலானான். அப்போது, தங்கத்தில் பூனை செய்து தானம் தர வேண்டும்; குறைந்த பட்சம் வெள்ளியிலாவது தர வேண்டும் என இருக்கக் கண்டான்.

இவனுக்கு அந்த அளவு செய்ய மனம் இல்லை. சரி, வெல்லத்தில் பூனை செய்து யாராவது ஒருவருக்கு தானம் செய்வது என முடிவு செய்தான். அதன்படியே தனது வெல்ல மண்டியில் உள்ள வெல்லத்தை எடுத்து, முசித்து, அதில் ஒரு பூனையைச் செய்தான்.

பின்னர் அந்தப் பூனையை, வெற்றிலை பாக்கு தட்சிணையோடு ஒரு தட்டில் வைத்துத் தானம் அளிக்க விழைந்தான். தட்டு கை மாறும் சமயத்தில், வெல்லப் பூனையைக் கண்டதும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. இவனும் ருசி தாளாது, அதை எடுத்து ‘லபக்’ என வாயில் போட்டுக் கொண்டான்.

தானம் வாங்க வந்தவனோ, “என்ன ஐயா இப்படிச் செய்கிறீர்களே?” என வினவவும் இவன் சொன்னான்,

“சரி போ, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்!! வெல்லந் தின்ற பாவம் எனக்கு, பூனையைக் கொன்ற பாவம் உனக்கு!!” என்று சொல்லிவிட்டு வேகமாகக் கடை வியாபாரத்தைப் பார்க்கச் சென்று விட்டான். சிவனே என்று வீதியில் சென்று கொண்டிருந்தவன், பூனையைக் கொன்ற பாவத்தைச் சுமக்கிறான் இன்னமும்.

இதைப் போலத்தான், நாட்டிலே பெருமளவு மோசடிகளைச் செய்துவிட்டு சின்னஞ்சிறு அளவிலான ஒன்றைத் தாமே காண்பித்துப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கவலைப்படுகிறார்கள். கூடவே, வெல்லம் தின்ற பாவம் தேடுபவர்களை, திறமைசாலிகள், street smartness people என்று சொல்லி பெருமைப் படுத்துவது கண்டும் மனம் புழுங்குகிறார்கள்.

1/25/2010

மரகதா!

“டே கண்ணூ, பத்து அயனம் பன்னெண்டு அயனமுன்னு பல வருசங்களுக்கு ஒருக்கா இங்க வர்றே?! போகும் போது சித்த ஒரு எட்டு வீதம்பட்டிக்கும் போயிட்டு போயிடு இராசா!”என்று, பயந்தவனுக்குப் பூசாரி அடிக்கும் பாடத்தைப் போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.

“ஆமாடா, அம்மா இவ்ளோ தூரம் சொல்லுது பாரு. இப்படி இந்த வழியாப் போறது, கொங்கல்நகரம், பெதப்பம்பட்டி போயி அப்படியே ஒரு எட்டு உங்க மாமானையும் பார்த்துட்டு போயிடு!” இன்னமும் அம்மாவுக்குப் பின்பாட்டுப் பாடுவதை மாற்றிக் கொள்ளாத அப்பா.

“வந்தா உங்களோட இமிசி தாங்க முடியலைடா சாமி. சரி, போயிட்டுப் போறேன்!” வேண்டா வெறுப்பாக இசைவு தெரிவித்தான்.

“சாமியண்ணே, வண்டியில டீசல் இருக்குதா? நாம பொள்ளாச்சி வழியாப் போகுலை. வடக்க, ஊருக்குப் போயிட்டுப் அப்பிடியே போயிறலாம்!”.

“அதெல்லாம் தாங்குங்க சார், ஒன்னும் பிரச்சினை இல்லீங்க!”

அம்மா, தேங்காயும் புறக்கொல்லையில் விளைந்த அவரைக்காய் மற்றும் புடலங்காய்களை தனது மூன்று மருமகள்களுக்கும் தனித்தனியாக, வாகாகக் கட்டி வாகன ஓட்டுனரிடம் தந்துவிட்டு, “இதா தம்பீ, இதுகளை மூணு வீட்லயும் பதலமாக் குடுத்துரு, என்ன?”

“சரிங்க அம்மா!”

வண்டி வீட்டில் இருந்து புறப்பட்டது. ஊரில் இருக்கும் மாற்றங்களை எல்லாம் பார்த்து வியந்தபடி அந்தியூர் எல்லையைக் கடந்தான். போகிற வழியில் விண்ணைத் தொடும் காற்றாலைகள்; மானாவாரிப் பூமியாக இருந்த நிலத்தில் எல்லாம் சொட்டு நீர்ப் பாசனத்துடன் தென்னந்தோப்புகள்; பார்க்கப் பார்க்கப் பரவசமுற்றான்.

வண்டி சரியாக பெதப்பம்பட்டியைக் கடந்து சென்றதும், எதிரில் வந்த சிந்திலுப்பு, சிக்கநூத்து ஆகிய ஊர்களின் பெயர்ப் பலகைகளைப் பார்த்து, வேடிக்கை பார்க்கும் மனநிலையில் இருந்து விடுபடலானான். கைபட்ட தொட்டாச் சிணுங்கியைப் போல வாடியது அவன் முகம்.

நடக்கக் கூடாதது நடந்த அந்த நாளில் இருந்து, எந்த ஊருக்குச் செல்லாமல் இருந்தானோ, அந்த ஊர் இன்னும் பத்து மணித் துளிகளில் வரப் போகிறது. மாமாவைப் பார்ப்பதிலோ, அல்லது மாமா வீட்டுக்குச் செல்வதிலோ இவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஊரோரம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றுவிட்டு, ஊருக்குள் செல்லாமல்ப் போவது சரியாக இருக்காது. ஊரடியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்குப் போக வேண்டும். இல்லாவிட்டால் அம்மா கேட்பாள். அங்கு சென்றால், எப்படியும் ஊரார் கண்ணில் விழ வேண்டி இருக்கும்.

இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை, மூங்கில்த் தொழுவுப் பிரிவில் இருந்து மேற்கே செல்வதற்குப் பதிலாக, நேராக செஞ்சேரி மலைக்கு வண்டியை விடச் சொல்லி விடலாம். குழப்பத்தில், மனம் கிணற்றடியில் தொங்கும் தூக்கணாங்குருவி போல ஊசலாடிக் கொண்டிருந்தது.

இவன் சுதாரிப்பதற்குள்ளாகவே, வண்டி சலவநாயக்கன் பட்டியைக் கடந்து மேற்கு திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

சிறிது தொலைவில், உப்பாற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கையில், வீதம்பட்டி சமீபமாக ஒரு பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் சென்றால், தரையானது வாகனத்தின் கீழே இடிக்குமா எனச் சோதிக்கும் பொருட்டு கீழே இறங்கினான்.

“யாரு, வெள்ளையுஞ் சொல்லையுமா? வெளியூருங்களா தம்பி நீங்க??”

மறுகணமே, தாயின் மீது ஏற்பட்ட அளவு கடந்த சினம் இவனது தலைக்கேறியது, “அடச் சே, இந்த கெரகத்துக்குத்தான நான் இத்தினி வருசமும் இந்த பூமிக்கு வராம இருந்தேன்? வந்தவனைக் கொஞ்சம் நிம்மதியா விடுறாங்களா இவங்க. வாழ்க்கை பூராவும் இவங்க தொல்லைதானே நமக்கு?”

இனி புலம்பிப் பிரயோசனமில்லை என்ற முடிவுக்கு வந்தவனாய், “என்னங்க, என்னை அடையாளந் தெரிலீங்களா? நாந்தான் அந்தியூர் மெளனு மகன்!”

“அடடே, யாரு? சின்னவரா நீங்க?? என்ன தம்பி, இப்பிடிப் பண்ணிப் போட்டீங்க?? எத்தினி வருசம் ஆகுது பாத்து?? எங்களையெல்லாம் ஞாவகமாவது வெச்சு இருக்கீங்களா?” தொடர்ந்து பேசவும், தலைகவிழ்ந்து சோகத்தின் இரைக்கு ஆளானான்.

“ஏங்க தம்பி, எதுவும் பேச மாட்டேங்கிறீங்க? நல்ல வேளை, நான் பழையூர் தம்புவைப் பார்க்குறதுக்கு வந்தங்காட்டி உங்களைப் பாத்தேன். இல்லாட்டி நீங்க தோட்டத்தோடயே போயிருப்பீங்க!”

எட்ட இருக்கும் அந்தச் சீமையிலும் கூட ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டாவது இருதயமாய், இருதயத்தின் மேலே ஒரு அலைபேசி. இவரும் அந்த இரண்டாவதை இயக்கலானார்,

“கண்ணூ மரகதம், நம்ம ஊட்டுக்கு நெம்ப முக்கியமான ஒரு ஒறம்பரை வந்துட்டு இருக்கு. நீ எங்க இருக்கே? தாயார் அக்கா ஊட்டுலயா? செரி அப்ப, சராங்கமா ஊட்டுக்கு வந்துரு!”

இவனும் மரகதமும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். ஒன்றாம் வகுப்பில் இருந்தே பால்ய சிநேகிதர்கள். ஒரு கட்டத்தில் பள்ளிப் படிப்புக்காக இலட்சுமி நாயக்கன் பாளையம் சென்று விட்டான். என்றாலும் நீல நிற உள்ளூர்த் தபால்கள் இங்குமங்குமாய் இருக்கும் இருவரையும், அணுக்கமாக வைத்திருந்தது.

அவ்வப்போது அம்மாவும், மரகதமும் வேலூர் சந்தையில் பார்த்துப் பேசிக் கொள்வார்கள். உடுமலை செல்ல வரும் போதெல்லாம், வீட்டிற்கு எந்தத் தங்கு தடையும் இல்லாமல் வந்து போகக் கூடியவளாயும் இருந்தாள். நாட்கள் உருண்டது, அவள் உடுமலை விசாலாட்சியில் படித்தாள். இவன் கோவையில் படிப்பு, வேலை என்றாகி சிங்கப்பூரும் சென்றுவிட்டான்.

ஒருமுறை தாயகத்துக்கு வந்த போதுதான், விபரத்தை அறிந்து மிகவும் ஏமாற்றப்பட்ட, ஒரு விரக்தியான மனோநிலைக்குத் தள்ளப்பட்டான். பெற்றவர்களும் சொந்த ஊருக்கே குடி பெயர்ந்து இருந்தார்கள். பிறகு, அவளைப் பார்க்க மனம் கொள்ளாது இந்தப் பக்கமே வராமல் இருந்தவன், இன்று அவளை நேருக்கு நேர் பார்க்கப் போகிறான்.

வண்டியை விட்டு இறங்கவும், கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்தே விட்டான். உடம்பு சிறிது கனமாகி இருந்தது, ஆனாலும் அதே பொலிவான முகம், சுடரான சிரிப்பு, மாலை நேரத்து மல்லிகை தலையில்! இவனுக்குத் தாங்க முடியாத வியப்பு! இவனால் எதுவும் பேச முடியவில்லை!!

“டே பழமை! இதென்றா வெள்ளைக்காரனாட்டம் ஆயிட்டே? ஊளைமுக்கு ஒழுக்கிட்டு, கொத்தவரங்காயாட்ட இருப்ப நீயி? என்னங்க இங்க வாங்க, அம்முலு அம்மா பேரன்னு சொல்லிப் பேசுவம்மல்ல? அந்தப் பழமைதான், அமெரிக்காவுல இருந்து வந்துருக்கறான்! ”

”திருமணமாகிக் குறுகிய காலத்திலேயே வாழ்க்கையை இழந்தவளது முகத்தைப் பார்க்கக் கூடிய திராணி இல்லாமல், இவளை இத்தனை நாளும் மறந்தவன் போலவே நடித்து, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோமே?” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவன், சிநேகிதிக்கு மறுவாழ்வு தந்த அந்த மனிதனின் யதார்த்தமான, கனிவான பேச்சில் கரைந்தவனானான்.

பழங்கதைகள் பல பேசி, அளவாளாவி, அவர்களது கடுமையான விருந்தோம்பலுக்குப் பிறகு, விடை பெறமுடியாமல் விடை பெற்று வந்தான்.

பார்க்காமலே போயிருந்திருக்கக் கூடும்! நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அம்மாவைத் திட்டி விட்டோமே என நினைத்தவன்,

“சாமியண்ணே, இராத்திரிக்கு கோயமுத்தூர் போயே ஆகணுமா?”

“இல்லங்க சார், பரவாயில்லங்க சார்!”

“மத்தியானம் அம்மாவை நெம்பப் பேசிப் போட்டேன். மறுபடியும் அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு. வண்டியத் தெக்கயே உடுங்க!”.

1/24/2010

தூய்மனம்

புது இடம் என்றால் நித்திரை கொள்வதென்பது சிரமமான காரியம்தான். கூடவே, முகமறியாத பல உறவுகளோடு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமான மகிழ்ச்சியானது நெஞ்சமெல்லாம் ஆக்கிரமித்துத் துள்ளாட்டம் போடுகையில் நித்திரை கொளவது இயலுமா?

இடது புறமும் வலது புறமுமாக மாறி மாறி ஒருக்களித்துப் படுக்கிறான். கண்ணைப் போர்வையால் மூடி முயற்சிக்கிறான். ஆனாலும் மனம் அடங்கி ஒடுங்கியாக வேண்டுமே? இப்படியாக அவனுக்கும், குதூகலத்தில் துள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்த மனதுக்குமான போராட்டம் வெகுநேரம் நீடித்துக் கொண்டு இருந்தது.

ஒவ்வொரு யாமமும் மூன்று மணி நேரம் கொண்டது. முதலிரண்டு யாமங்களுக்குப் பின் வருவது அர்த்த யாமம்; நள்ளிரவு பனிரெண்டு முதல் மூன்று மணி வரையிலானது. இயல்பாகவே, காலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்குமான இடைவெளியில், குறிப்பாக நான்கு மணி வாக்கில் எவரும் கண் அசந்து விடுவர். திருடர்கள் கன்னக்கோல் வைப்பதற்கான நேரமது.

எனவேதான் அர்த்த யாமத்துக்குப் பின் வருவதைத் திருட்டு யாமம் என வேடிக்கையாகக் குறிப்பிடுவர். அந்தத் திருட்டு யாமத்தில், இவனது மனமும் அடங்கி நித்திரைக்குள் அவனறியாது ஆழ்ந்து விட்டான்.

அந்த நித்திரையானது திருட்டு யாமம் முடிவதற்குள்ளாகவே கலைந்தும் விட்டது. மீண்டும் படுத்திருந்தவாறே ”இது கணனி யுகமாயிற்றே? முந்தைய நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் உலகறிந்திருக்குமே?? ” என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.

படுக்கை அறைக்கும் வெளியே நடக்கும், பேச்சுச் சத்தத்தைக் கேட்டு எழுந்து வெளியே சென்றான். நன்றாகக் கிழக்கு வெளுத்து இருந்தது. வீட்டுக் குழந்தையும் கண் விழித்து இருந்தாள். அவள் அவளது தமிழ்ப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், குழந்தையின் அருகே சென்று தரையில் அமர்ந்து கொண்டான் இவன்.

“எங்க சொல்லுங்க பார்க்கலாம், அது என்னன்னு?”

குழந்தை வெகு அனாயசமாகப் பதிலுரைத்து விட்டு, புத்தகத்தில் இருந்த மொத்தப் பாடத்தையும் அக்கு வேறு, ஆணி வேறாக பிய்த்தெறித்தாள்.

“இவ்ளோ நல்லாப் படிக்கிறீங்க, அப்புறம் ஏன் இங்கிலீசுலயே பேசுறீங்க?”

“ம்ம், இங்க எல்லாரும் அப்படித்தான் பேசுறாங்க! நான் மட்டும் எப்படி?”

“உங்க அப்பா உனக்கு தமிழ்ல பேசக் கத்துக் கொடுக்கலையா?”

“க்கும், அப்பா எங்க இருக்காரு? சண்டே மட்டுந்தான் வீட்ல இருக்காரு! மத்த நாள் எல்லாம் லேட்டா, லேட்டாதான் வருவாரு!”

பிள்ளை சமர்த்தாகப் பேசிக் கொண்டு இருப்பதை, வீட்டு முன்னறையில் இருந்த அவளது பாட்டியும், சமையலறையில் இருந்த தாயும் பெருமிதத்தோடு கவனித்தபடி இருந்தனர்.

“ஓ அப்படியா? அப்ப பாடமெல்லாம் யாரு சொல்லிக் கொடுப்பாங்க??”

“சம்டைம் அம்மா சொல்லிக் கொடுப்பாங்க, அப்பறம் நானே படிச்சுக்குவேன்!”

“எவ்ளோ நேரம் படிப்பீங்க?”

“கொஞ்ச நேரந்தான், அப்பறம் சைக்கிள் ஓட்ட வெளையாடப் போய்டுவேன்!”

“அப்படியா? யாரு கூட??”

“எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்காங்க!”

“உங்ககூடப் படிக்கிறாங்களா அவங்க?”

“இல்ல; எனக்கு சிக்சு இயர்சு ஆச்சு! அந்த அக்காவுக்கு டென் இயர்சு!!”

“ஓ, உங்களைவிடப் பெரியவங்களா?”

“ஆமா”

பின்னால் வருத்தப்படப் போவதைத் தெரிந்திருக்காத இவன், உரையாடலைத் தொடரும் பொருட்டு அந்தக் கேள்வியையும் கேட்டு வைத்தான்.

”அவங்க அப்பா என்ன செய்யறாங்க?”

குழந்தையின் முகத்தில் சட்டென சிறு வாட்டம் படரவும், கேட்ட கேள்விக்கு அவள் மறுமொழியவும் சரியாக இருந்தது.

“அவங்களுக்கு அப்பா இல்ல!”

குழந்தையின் முகத்தின் சலனத்தையும் அவள் உரைத்த பதிலையும் உள்வாங்கியதுதான் தாமதம், அதிர்வலைகள் உள்ளத்தில் பல ரிக்டர்களாகப் பதிந்தது. எனினும் குழந்தையிடம் சொன்னான்,

“sorryடா கண்ணு!”

“பரவாயில்ல! நான் அந்தக்காகிட்ட அந்தக்காவுக்கு அப்பா இல்லங்கிறதையே காமிச்சுக்க மாட்டேன்!!”

இந்த பதிலைக் கேட்டு மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, பேசுவதறியாது அமர்ந்திருந்தான் அவன். பின்னர் அமர்ந்தபடியே பின்நகர்ந்து அங்கிருந்த இருக்கையை கைப்பிடித்து எழுந்து, அவ்விருக்கையிலேயே தஞ்சம் புகுந்து கொண்டான்.

குழந்தை, அவனுள் இயல்புத்தன்மை இல்லாததை உணர்கிறாள். பின்னர் அவளும் சடக்கென எழுந்து, வெளியே சென்று அவளது மிதி வண்டியை உருட்ட ஆரம்பித்தாள்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து, குளியலறைக்குள் குளிக்கச் சென்று, முணுமுணுக்க ஆரம்பித்தான் அவன்; குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா? அதைத் தெரிந்து நடப்பது நம்கடமையல்லவா? பிஞ்சை நஞ்சாக்குவது நாமல்லவா?

1/23/2010

அவர் சொல்வாரு!

நவீனம் எங்கும் படர்ந்து
வாங்குதிறன் கூடிய
மக்களைக் கண்டோம்!
அழகிய மாடங்கள்
அடுக்ககங்கள விண்முட்டுவது
வியந்து கண்டோம்!!
நான்குவழிச் சாலைகள்
ஆறுவழிச் சாலைகள்
நீண்டுள்ளது கண்டோம்!
காலத்தைக் காவுவாங்கும்
இடத்தில் மேல்நிமிர்ந்த
பாலங்கள் பல கண்டோம்!!
பாசமிகு பதிவர்கள்
ஆங்காங்கே அன்பாய்ப்
பரிவுடன் பழகியது கண்டோம்!
செம்மொழி மாநாட்டுக்கு
ஏதுவாய் நடக்கும் பல
பணிகள் கண்டோம்!!
உற்றார் உறவினர்
நட்பினர் சுற்றத்தினர்சூழ
வலம் வந்தோம்! வலம் வந்தோம்!
அந்த நாளும் வந்தே வந்தது!!
கோவைவிமான நிலையம்
கலங்கிய கண்கள்!
மெளனமே நெஞ்சமாய்
உற்றார் உறவினர்!!
டேய் அப்பப்ப வந்து போடா!
ஆமா, இந்த ஆறேழு வாரமும்
எப்படிக் கலகலன்னு இருந்துச்சு?
ஆமா, போய்ட்டு மறுபடியும் எப்ப??
அவனை என்னக்கா கேக்குறது?
கோலங்கள் ஆரம்பிச்சப்ப வந்துட்டுப் போனவன்
இப்பதான் வந்துட்டுப் போறான்!
அது முடிஞ்சி
மாதவி ஆரம்பிச்சிருக்கு இப்ப, ஆக
அந்த டைரக்டரைக் கேளு சொல்வாரு! ஆமா,
திருச்செல்வனைக் கேளு சொல்வாரு!!

1/22/2010

மண் மகிமை

ஐந்தாண்டு காலமும்
காணாத தாய்
மண்ணல்லவா அது?

தாயின் மடி புகுந்து
ஒய்யாரமாய்க் கண் அசந்த
மண்ணல்லவா அது??

முழு முகமும் வெண்ணிலவாய்
கண்ணிரண்டும் ஒளிக் கீற்றாய்
இதழிரண்டும் பிறை நிலவாய்
அகம் முழுதும் நிறை பொங்கலாய்
கிராமத்து வீட்டின் முற்றத்தில்
எனது மண் எனும் பற்றுதலில்
பரவசமாய்க் காலூன்றுகையில்
அண்டை வீட்டு வால்கள்
வாயெல்லாம் முத்துகளாய்!

அவர்களுக்கு வாஞ்சையுடன்
சிறுவாட்டுக் காசு தருவோம்
எனும் நினைப்பில்,
டேய் பெரியவனே
இந்தா இந்த நூறு உருபாய்க்கு
சில்லறை வாங்கியாடா
என்றதுதான் தாமதம்!!
போங்கண்ணா நீங்க,
குடுத்த இந்த நூறு
உருபாயே சில்லறைதான்!!!

1/21/2010

கோயம்பத்தூரில் நான்!

கண்ணோட்டம்

பூ. சா. கோ (P.S.G)
கலை அறிவியல்
கல்லூரியின்
எழிலான புது
உள்வாயிலைக்
கண்ட பரவசத்தில்
மக்கள்!
நானோ
அங்கிருந்து
காணாமற்
போயிருந்த
மரத்தின் நிழலைத்
தேடியபடி!


வினவுதல்

செல்வந்தனும்
தொழிலதிபருமான
தனது நண்பன்
நாக்கூசாமல்
கொச்சை மொழியால்
அரற்றினான் பணியாளை!
நண்பா,
எல்லாவற்றையும்
சகித்துக்கொண்டு
பணிவிடை
செய்துவிட்டுத்
திரும்பும் அவன்
உன்னிலும்
மேலாய்
மெளன மொழியில்
உம்மையும் வசை
பாடிச் செல்வானாய்
இருக்கலாம் அல்லவா
என்றான் இவன்!

பள்ளிக்காக!

அரைகுறை
ஆடைகளோடு
துள்ளிசையினூடே
குத்தாட்டமும்
கும்மாளமுமாய்
அழகிகள்!
துடியலூரில் இருக்கும்
பள்ளிக்காக
நிதி திரட்டும்
கலை நிகழ்ச்சி
அது!!
அதுவும் நன்றாகவே
நடந்தது
கல்விக்கான
பங்களிப்பு எனும்
மேலான உணர்வின்
குரல்வளையை
மிதித்தபடி
குதூகலமாய்!!!

பச்சைக்கிளி

தீராத நோய்க்கான
கொசுப் பண்ணை
இயங்குகிற
தேங்கிய சாக்கடை
தன் வீட்டின் முன்னே!
சீர் செய்யக்
காசு கேட்டு எதிரில்
வந்தவனை
மறுதலித்துச் சென்றது
அவனது சொகுசுந்து
தன் மனையாளோடு
அவள் கேட்ட
பத்தாயிரம் ரூபாய்
பச்சைக் கிளிகள்
வாங்க
காந்திபுரம் இருக்கும்
திசை நோக்கி!!

புறம்
அனைவருக்கும்
தெரிகிறது
கைகளில்
இருக்கும் அலைபேசியும்,
உலாவரும் சொகுசுந்தும்,
நுனிநாக்கில் புதிதாய்ப்
புகுந்த ஆங்கிலத்தின்
ஊடான நளினப் பேச்சும்;
சர்க்கார் சாமக்குளத்தில்
இருந்த அவனது
பரம்பரை நிலமும் அகமும்
அவனை விட்டுப்
போனது தெரியாமல்!!


1/20/2010

ஆடிப் பாடு!


பசித்துப் புசி
புசித்து உருசி
உருசித்து இரசி
இரசித்துக் கசி
கசிந்து உருகு
உருகிப் பாடு
பாடி ஆடு
ஆடிப் பாடு


1/19/2010

சலனமில்லாமல்...

கோ.து.நாயுடு (G.D.Naidu), கோயம்பத்தூர்

கோ.து.நாயுடு அவர்கள், ஏழைகள் அனைவருக்கும் ஏராளமான வானொலிச் சாதனங்களைத் தயாரிச்சு வழங்கணும்னு பிரயத்தனப்பட்டு, தன்னோட U.M.S. Radio Factoryல நிறைய மின்மாற்றிகளை (transistors) தயாரிச்சு வெச்சி இருந்தாராம். அரசாங்கம் என்ன செய்துச்சு தெரியுங்களா, அதுகளுக்கு எக்கச்சக்கமா வரியப் போட்டு ஏழை எளியவங்க வாங்க முடியாதபடிக்கு செய்திட்டாங்களாம். இவர் உடனே, Construction for Destructionனு சொல்லி எழுதி வெச்சுட்டு, எல்லார்த்தையும் போட்டு உடைச்சிட்டாராமுங்க. அதான் இன்னும் அவரோட நிறுவனத்துல இருக்கிற அந்த வாசகம்.

இந்த நிறுவனத்துல ஒரு விழாவுக்கு, கோ.து.நாயுடு அவர்கள் அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களை தலைமை தாங்க அழைச்சு இருந்தாராம். விழா துவங்குற கால நேரமும் வந்துச்சி. 5 மணித்துளிகள் ஆச்சு, பத்து மணித்துளிகள் ஆச்சு, அமைச்சர் வந்தபாட்டைக் காணோம். சரின்னுட்டு, நாயுடு விழாவை ஆரம்பிக்கச் சொல்லவே, விழாவும் நல்லபடியா முடிஞ்சது.

போகும் போது பக்கத்துல இருந்த பணியாளரை அழைச்சு, கல்வெட்டுல இருந்த, "presided by Honorable Minister"ங்ற வாசகத்துல, presidedக்கு முன்னாடி notனு செதுக்கிடுங்கன்னு எந்த சலனமும் இல்லாமச் சொல்லிட்டு மத்த வேலை வெட்டியப் பார்க்கப் போயிட்டாராம். அதை எடுக்கச் சொல்லி எவ்வளவோ நிர்ப்பந்தம் வந்தும், அது இன்னும் வெச்ச இடத்துல வெச்சபடியே இருக்காமுங்க!

இது ஒரு சொகுசு வாகனம். இடது பக்கம் இருக்குற இருக்கைய விரிச்சுப் போட்டா, ரெண்டு பேர் தாராளமா நித்திரை கொள்ளலாம். குளுகுளு வசதி என்ன? காணொளி என்ன? நவீன பாட்டுப் பொட்டி என்ன? பானங்க வெச்சிக் குடிக்கிறதுக்கு தாங்கு பொட்டி என்ன? கலைஞர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர், மலையாள நடிகர் பிரித்விராஜ் வரிசையில இது 17வது வண்டியாமுங்க.

இடது பக்கம் இருக்குற இருக்கைகளையும் பின்னாடி விரிச்சுவிட்டு ரெண்டு பேர் நித்திரை கொள்ளலாமுங்க. பின்னாடி இருக்குறது ஒரு சின்ன அறை!

அந்த சின்ன அறைக்கு இடது புறம் கழிப்பிடம்; வலதுபுறம் நின்னுட்டே குளிக்கிற மாதிரி ஒரு அமைப்பு, கூடவே ஒரு நிலைக்கண்ணாடியும் இதர ஒப்பனை வசதியும்.

விலை ரொம்ப குறைச்சல்தாங்க, ஆமாங்க பதினேழு இலட்சம் ரூபாய், லிட்டருக்கு எட்டு கிலோ மீட்டராமுங்க. திருப்பதி போலாம்ன்னு உறவினர்கிட்ட இருந்து எடுத்துட்டு வந்தோம், வெடிஞ்சு பாத்தா தெலுங்கானாவுல வாண வேடிக்கை.... அப்புறம் என்ன? வன பத்திரகாளியம்மன் கோயிலோட முடிஞ்சு போச்சு நம்ம யாத்திரை.... அவ்வ்வ்......


1/18/2010

ஊர்ல புடிச்சதுங்கோய்!


தமிழறிஞர் முனைவர் நா. கணேசன் அவர்களுடன் கோவையில்

பதிவர்கள் சஞ்சய், ஆரூரன் மற்றும் மாப்பு கதிர்

கதிர், வடகரை வேலன், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன்

கதிர், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன்

வடகரை வேலன், கதிர், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன், பழமைபேசி


மேற்கண்ட நாணயங்கள் கொடுத்துதவிய, சென்னையில் விருந்தோம்பல் நடத்திய நாளைய பதிவர் மணி