11/23/2009

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA): ஊதடா சங்கு!

ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

சாதி இனமத பேதம் இல்லாம
நாமெல்லாந் தமிழராய்க் கூடி
பஞ்சு போல ஒற்றி ஒற்றி
நட்பாலே துயர் துடைப்போமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

நெகிழ்ந்து நெகிழ்ந்து நெக்குருகி
உறவுகளைக் கண்டு நாங்கள்
இலக்கியம் காணுவோம், கூடவே
பள்ளும்பாடி பாணர் ஆகிடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

நிலாச்சோறும் ஊட்டுவோம், நின்று
எங்கள் கிராமியத்தை நெனைச்சிடுவோம்
நேசங்கள் கண்டு நாங்க மகிழ்ந்திடுவோம்
உறவுகளைக் கண்டு நெகிழ்ந்திடுமே நம்நெஞ்சம்
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

உழுது பயிரிடாம உணவுகள் கிடைச்சிடுமா?
உழைப்புகளைப்பு இன்றி வந்திடுமா குதூகலம்??
அன்னைத் தமிழ்மனம் குளிர கண்விழித்துக்
காரியமா ற்றிடுவோமே பெருமைசீர் மக்காள்!
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!



மக்களே, வணக்கம்! என்னதான் வனத்துல போய் மேய்ஞ்சாலும், கடைசில இனத்தோடதான வந்து, அடைஞ்சி ஆகணும்? எனக்கு என்னோட கனடிய அனுபவம்தான் நினைவுக்கு வருது. பன்னாட்டு கலை, இலக்கிய, கலாசாரத்தை ஆதரிச்சு அனுபவிக்கிறதுல கனடாவை மிஞ்சுவதற்கு யாரும் கிடையாது. அதுவும், டொரோண்டோ மாநகர், சொல்லிக்கவே வேண்டாம்.

இப்ப, அமெரிக்காவிலயும் அதே மனப்பாங்கு ஓங்கி வருது. என்ன காரணம்? அவரவர்கள், அவரவர் பின்புலத்தோட இயங்கும் போது வெளிப்படும் திறமையும், சமூக அக்கறையும் அந்நாட்டை மேம்படுத்துகிறது. மாற்றங்கள் கூடிய தரவுகள், பலதரப்பட்ட இரசனையை நுகர்வோருக்கு அளிக்க வல்லது. கூடவே, புரிந்துணர்வின் மூலமாக சமூகச் சீர்கேடுகள் குறைகிறது.

அப்படி, பின்புலத்தோடு ஒட்டி வாழாத பட்சத்தில் என்ன நடக்கும்? எதோ ஒரு கட்டத்தில் தனிமையின் தாக்கம், கூடவே மனவழுத்தம் போன்றவை ஓங்கி, உரசல்களும் உளைச்சல்களும் ஓங்கும். ஒவ்வாமை தலை தூக்கும். இதெல்லாம் இப்ப அனைவருக்கும் கண்கூடாகத் தெரிகிற விசயம். இதை மறுக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், அரசாளும் வல்லுனர்களுக்கு உண்மை தெரியாமலில்லை. எனவேதான் பன்னாட்டுக் கலை, இலக்கியம் மற்றும் கலாசார விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க விழைகிறார்கள்.

இந்தப் புரிந்துணர்வோடு, நமது தமிழ்ச் சங்கப் பேரவையைக் கண்ணுறுவோம். கலை, இலக்கியம், கலாசாரம், மொழி மற்றும் பண்பாடு முதலானவற்றைச் சமச்சீரோடு முன் வைத்தே செயல்படுகிறது நமது பேரவை. சென்ற ஆண்டு நிகழ்வே அதற்கு சான்று. பேரவையின் வலைதளம் மற்றும் எமது வலைப்பூ ஆகிவற்றில் நீங்கள் இப்போதும் அந்த நிகழ்ச்சியின் காணொளியைக் கண்ணுற்று அதனைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழனாக, தமிழ்ப் பேரவைக்குப் பங்களிப்புச் செய்வது நம் கடமை; உரிமையும் கூட. ஒருவர் முன்வந்து பங்களிப்புச் செய்யும் போது யாரும் அதைத் தடுத்துவிட முடியாது. ஆனால், நாம் முன்வருகிறோமா என்பதுதான், நம்மை நாமே வினவிக் கொள்ள வேண்டிய வினா. அதைவிடுத்து, நிகழ்ச்சிகள் நடைபெறும் போது மட்டுமே விமர்சனம் செய்வோர் சிலர் இருப்பார்கள்; இருக்கட்டும், தவறில்லை!

பங்களிப்புச் செய்து, பின் உடனிருந்து கண்டபின் விமர்சனம் செய்தால், விமர்சனமும் மெருகேறும்; தமிழன் என்ற வகையிலே கடமையைச் செய்தது போலவும் ஆகுமன்றோ? எனவேதான், இந்த ஊதடா சங்கு! வீழ்ச்சிக்கு ஊதுகிற சங்கு அல்ல இது, எழுச்சிக்கு ஊதப்படுகிற சங்கு மக்களே, எழுச்சிக்கு ஊதப்படுகிற சங்கு!!

ஆம், வருகிற 2010ம் ஆண்டின் தமிழ்விழா எழுச்சிக்கான சங்கு ஊதப்படும் நாள் டிச-12. அந்நிகழ்வின் போது கலைவாணர் N.S.கிருஷ்ணன் ஐயா அவர்களின் புதல்வர் நல்லதம்பி அவர்கள் கலந்து கொண்டு நகைச்சுவையின் நினைவோடையை நமக்கெல்லாம் பாய்ச்ச இருக்கிறார். கலந்து கொள்வோம், இனிமை பெறுவோம், எழுச்சியைப் பெருக்குவோம்!!


December 12 th, 2009
4.30 p.m
Bombay Grill [Address: 2333 Main St, Glastonbury, CT 06033, same as old 'Ambassador of India', now under new management]

CTVOC updates followed by a performance by Thiru Nallathambi, son of Late NS Krishnan and Tmt TA Mathuram

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

Admission: Free for donors, $ 20 per head for non-donors*

RSVP: by Dec 5th 2009, by email [N Kuppuraj, nkuppuraj@gmail.com]

தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்!
தமிழன் இதயம் செழுமையின் பிறப்பிடம்!!

11/20/2009

ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை!

மக்களே, வணக்கம்! வேலை, வேலை.... இன்னைக்குதான் அப்படியே ஒரு இடுகை ஒன்னை இடலாமுன்னு, இஃகி! நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் உள்வாங்கின கிராமங்கள். நகர வாடையே கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்கமின்னா பெதப்பம்பட்டி, மேற்கமின்னா நெகமம், வடக்கமின்னா செஞ்சேரிமலை, அவ்வளவுதான்!

எப்படியும் ஆறுமாசத்துக்கு ஒரு வாட்டி, காதுவலியோ தொண்டை வலியோ வரும். அப்பவெல்லாம் உடுமலைப் பேட்டை பழனிரோடு/தளிரோடு மொக்குல வைத்தியநாதன் மருத்துவர்கிட்டப் போவேன். அம்புட்டுதேன்! இப்பிடியே மொதல் பதினஞ்சி வருசமும் போச்சுது. அப்பறம் பொள்ளாச்சி, கோயமுத்தூர்னு சில வருடங்கள்... அதுக்கப்றம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, சைப்ரசு, இசுரேல் மறுபடியும் அமெரிக்கா.

முதலாம் வகுப்பு படிக்கும் போதே திராவிட மேடைகள் பரிச்யமாச்சுது. அதுக்கு என்னோட குடும்பப் பின்னணியானது பொதுவாழ்வு, வழக்குகள்ன்னு இருந்ததும் ஒரு காரணம். வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பம். அவங்க வீட்டுப் பெரியவர்கள் இரட்டையர்கள், இராம் ஐயர், இலட்சுமண ஐயர்னு கூப்பிடுவாங்க.


அவங்கள்ல ஒருத்தருக்குதான் கல்யாணம் ஆகி, ஒரு பெண் பிள்ளை. இலட்சுமண ஐயருக்கு கல்யாணம் ஆச்சா, ஆகலையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவங்களுக்கு 60 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தாங்க.

அவங்க பெண் பெயர் ஞானசெளந்தரி. அவங்க கணவர் எனக்கும் என் சகோதரர்களுக்கும் தமிழாசிரியர், இலட்சுமண வாத்தியார்னு அன்பா அழைப்போம். கிராமத்துல வாழ்க்கை எப்படி இருக்கும்? எல்லாரும் ஒன்னும் ஒன்னுமா அணுக்கமா இருந்தோம். எங்களுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் அவங்க வீடு. பொருட்கள் ஓசி வாங்குறது, கைமாத்து வாங்குறதுன்னு எந்த வித்தியாசமும் இல்லாமத்தான் இருந்தது. அவங்க, சிலர் விமர்சிக்கிற பார்ப்பனர்ங்ற விசயமே எனக்கு என்னோட இருபதுகள்லதான் தெரிய வந்தது.

அடுத்தபடியா, நான் கோயமுத்தூர்ல சில காலம் வேலை செய்திட்டு இருக்கும் போது வாய்த்த நண்பன், இராஜேசு. இப்ப, ஆசுதிரேலியாவுல இருக்கான். கோயமுத்தூர்ல இருக்குற வரைக்கும், நானும் அவனும் வருசா வருசம் சபரிமலைக்கு ஒன்னாப் போவோம். நண்பர்கள் எல்லாரும் அவனோட வீட்டுக்கு எந்தத் தயக்கமும் இல்லாம சராங்கமாப் போவோம். ஏன்னா, அவங்க அப்பா எங்களை எல்லாம் அன்பா உபசரிச்சி அனுப்புவாரு.

இப்பவும் அவங்க திருச்சி சாலையில, சென்ட்ரல் ஸ்டுடியோ சமீபம் கிருஷ்ணா குடியிருப்புல இருக்குற வீட்லதான் இருக்காங்க. நான், சிங்கப்பூர் வந்ததுக்கு அப்புறம் இராஜேசு எங்க அலுவலகத்துல பணி புரிஞ்சிட்டு இருந்த ஒரு கிறித்துவப் பெண்ணைக் கல்யாணம் கட்டிகிட்டான். ரொம்ப நல்லவன், வெளிப்படையானவனும் கூட.

இந்த இரு குடும்பங்கள்தாங்க, எனக்கு தாயகத்தில இருக்கும் போது என் வாழ்க்கையில அமைந்த, எதிர்கொண்ட பார்ப்பனர்கள். இப்படிச் சொல்லவே எனக்கு வெட்கமாவும், அருவறுப்பாவும் இருக்கு. ஏன்னா, அவங்க பழகின விதம் தாய் புள்ளையாவல்ல இருந்துச்சு? இந்த இடுகைக்காக அவங்களை இப்படிக் குறிப்பிடுறேன், அதுக்காக அவங்க இதைப் பொறுத்துக்குவாங்கங்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

மத்தபடி நிறைய இதழ்கள், மேடைப் பேச்சுகள், இப்ப இடுகைகள்னு நிறைய படிச்சாச்சு. வேதனையா இருக்கு! கலைஞர் அடிக்கடி சொல்ற ஒரு மேற்கோள் ஒன்னுதான் ஞாவகத்துக்கு வருது. தூங்குறவனை எழுப்பிடலாம்; தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாதுதான்.

இந்தப் பின்னணியைக் கொண்டவன் மனதில் சில கேள்விகள். என்னோட பின்னணிய, நேர்மையா உள்ளது உள்ளப்டி சொல்லிட்டேன். ஆகவே, ஆரோக்கியமான பின்னூட்டம் போடுறவங்க மட்டும் போடலாம்.


  • சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்?

  • ஒரு காலத்துல ஆதிக்கம் இருந்திருக்கலாம். அதை எதிர்த்துத் தலைவர்கள் போராடி இருக்கலாம். ஆனா, இன்றைய சூழலும் அதே போலத்தானா?

  • மொழியைப் பார்ப்பனர்கள் சிதைக்கிறார்கள்னு ஒரு விமர்சனம். அப்படியானால், மொழியைக் கொண்டவர்கள் காப்பாற்றுகிறார்களா?

  • பகுத்தறிவுப் பகலவன், சூத்திர ஆன்மிகவாதிங்றதால அவர் காலில் விழுந்தாராம். அப்படியானால், பகுத்தறிவு என்பதும் சுயமரியாதை என்பதும் வெறும் பேச்சுத்தானா?

  • பார்ப்பனீய எதிர்ப்பைக் கொண்டு, மற்றவரைத் தன்னகத்தே இழுக்க முயலும் இயக்கத்தோர் பார்ப்பனர் அல்லாதோரிடத்து இருக்கும் பேதங்களை விமர்சித்து எழும் காலம் எப்போது?

  • தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள். தமிழர்களுக்குள் சாதிகள் இல்லை என்று வெறும் வாய்ப் பேச்சாகவாவது சொல்லக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா நாட்டில்?

  • புதுமை படைக்கிறோம், கட்டுடைக்கிறோம் என்று சொல்லி தம்மை முன்னிறுத்திக் கொள்கிற இவர்கள், பார்ப்பனர், பார்ப்பனீயம் எனும் சொல்லில் வீழ்ந்து அந்தக் கட்டுக்குள்ளாகவே முடங்கிப் போய்விடுகிறார்கள் என்பதுதானே ய்தார்த்தம்?

மனிதனை மனிதனாகப் பார்த்து, தமிழை தமிழாகப் பாவிக்காத இவர்கள் போடும் கூச்சல், நகரங்களிலும் இணையத்திலும் மட்டுமே ஓரளவுக்கு செல்லுபடியாகும். அன்பும் அடக்கமும் மட்டுமே வாழ்கிற தமிழகத்துக் கிராமங்களின் பிரச்சினைகள் இதுவல்ல! இது இவர்கள் போடும் வெற்றுக் கூச்சல் மட்டுமே என்பது இந்தக் கிராமத்தானின் தாழ்மையான எண்ணம்!!

ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது!

11/17/2009

பணிவு என்பது, தாழ்வும் இழிவுமா??





பணிந்து வணக்கம் செலுத்துவதால் ஒருவர் தாழ்ந்தவர் என்றாகி விடுவரோ? பணிந்தவருக்கு அது பெருமையே! ஏசுவோர் ஏசட்டும், பணிந்தவன் மட்டுமல்ல; துணிந்தவனும் நீயே! எளியோர் உள்ளம் வெல்பவனும் நீயே!!

11/13/2009

'க்’ வெக்கிறதா? இக்கு வெக்கிறதா??

மக்களே, வணக்கம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களோடு எழுத்தாடுவதில் உவகையுறுகிறேன். விரைவில் விடுப்பில் செல்லவிருப்பதால் கூடுதல் பணிச்சுமை; நீண்ட நெடிய நேர அலுவலுக்குப் பின்னர் அறைக்கு வந்து, மேலதிகமாகக் கணனியைப் பார்த்தால் ஒரு விதமான சலிப்பும் வெறுப்புமே மேலிடுகிறது. எனவேதான் எழுத்தாடுவதில் இந்தத் தற்காலிகமான தொய்வு!

வார ஈறுக்கு இருப்பிடம் திரும்பி, வலையில் நண்பர்களோடு மடலாட, சிட்டாடலாமென்றால் அதற்கும் காலதேவன் கைநீட்டி வேறு திசையைக் காண்பிக்கிறான். ஆம், எங்கள் நகரில் இந்த வாரஈறில் தீப ஒளி விழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அவ்விழாவில் இடம்பெறும் நடனத்தில் அடியேனையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் சிலர். எனவே அதற்கான ஒத்திகை! இப்படியாக அன்றாட அலுவல்கள் திசைமாறிப் பயணித்துக் கொண்டு இருக்கிறது மக்களே!!

அந்த ஒத்திகையினூடே எம்மை வெறுப்பேற்றும் பொருட்டு, உடன் நடனமாட இருக்கும் சிறுவன் ஒருவனை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்தனர் அந்தச் சிலர். அந்த இளம்பாலகனும் நமதருகே வந்து, Pazamai Uncle, what is a Thamizh word for Pizza? என்றான். எமக்கு எய்தவர் யாரென உடனே புரிந்து விட்டது. பிள்ளாய் நீ ஆடும் போது கழுத்தில் எதையோ வைத்து ஆடுகிறாயே, அது என்ன என வினவினோம் நாம். காவடி என்று பதிலுரைத்தான் அம்பானவன். சரி, அதற்கு ஆங்கிலத்தில் என்ன என்று உம்மை ஏவிவிட்டோரிடம் கேட்டுச் சொல்ல இயலுமா என்றேன்? அம்பும் மாயமானது, கூடவே நாண் பூட்டிச் செலுத்தியோரும்!!

’க்’ வெச்சிப் பேசுறான் அவன்! எதுக்கும் ஒரு ‘க்’கு வெச்சு இழுப்பியே நீ!! இப்படி எல்லாம் ஒரு ’க்’ வைத்துப் பேசுவதை நீங்களும் கண்டிருப்பார்களாய் இருக்கும். அது என்ன ‘க்’ வைத்துப் பேசுவது?

ஒரு சாரார் சொல்கிறார்கள், ‘க்’ எனும் மெய்யெழுத்து இறுதியில் இடம்பெற்று முற்றுப் பெறாது. ஒருவேளை அது இடம் பெறுமேயாயின், மேற்கொண்டு ஏதோவொன்றுக்கு அங்கே இடம் இருக்கிறது என்றாகிவிடும், ஒரு சொல்லை, மற்றொன்றோடு சேர்க்க இது பாவிக்கப்படும் என்ற வகையில்! Conjunction!! எனவேதான், ஒன்றைச் சொல்லி மற்றொன்றைச் சொல்லாமல் தொக்கி நிற்கும்படியாகப் பேசும் வாடிக்கையைக் குறிக்கும் பொருட்டு, ‘க்’ வைத்துப் பேசுவது எனும் வழக்குத் தொடர் உருவானது.

மறுசாரார் சொல்வதென்ன? இல்லை, இல்லை, அது இக்கு வைத்துப் பேசுவது. இக்கு என்றால், நிச்சயமற்ற, எதிர்மறை நிகழ்வுகளுக்கான தகமைக்கு வாய்ப்பு இருப்பது. இதை Risk என்பர் ஆங்கிலத்தில். அத்தகைய இக்கு ஒன்றை உள் வைத்துப் பேசுவதுதான், இந்த க்கு வெச்சிப் பேசுறது என்கிறார்கள்.

எமக்கு இனி, அடுத்த இடுகைக்கான காலநேரம் எப்போது வாய்க்கிறதோ தெரியவில்லை; அது வரையிலும் உங்களை எல்லாம் நல்ல பொழுதுகள் ஆரத்தழுவி, இனிமையானது பூஞ்சாமரம் வீசட்டுமாக!!

11/09/2009

பல் வுழுந்திரிச்சி!

"அப்பா... அப்பா... வந்தூ”

“சொல்றா தங்கம், என்றா?”

“ம், பல் வுழுந்திரிச்சி!”

“அட, இதுக்குள்ளயா?

“ஆமாங்ப்பா!”

“சரி, சரி, தாத்தாகிட்டச் சொல்லிப் பணம் பத்தோ, நூறோ வாங்கிக்கடா!”

“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”

அடக் கடவுளே! மனுசன் இங்க பனிரெண்டு மணி நேரம் இந்த ஆந்திராக்காரப் பசங்களைக் கட்டி மேய்ச்சுட்டு, ஆய்ஞ்சி, ஓய்ஞ்சி போய் வந்து, நித்திரையால ஆவுறதுக்கு முன்னாடி, சித்த மனசாரப் பெத்த குழந்தைகூடப் பேசலாமுன்னா? நீங்களே பாருங்க, என்னா வில்லத்தனம்?! இதுல போயி நான் என்னத்த இடுகையப் போட்டு, பின்னூட்டம் போட்டு??

மக்கா, வேலை சடவு இடுப்பை முறிக்குது! இடுகையுங் கிடையாது, பின்னூட்டுங் கெடையாது இன்னைக்கு. நாளா, மக்கா நாள் பாத்துகுலாஞ் செரியா? செரி அப்ப, போயிட்டு வாங்க!!

நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??
வந்த விருந்தாடிக்கி இந்தான்னு குடுப்பனா??

11/05/2009

அழகிக்கு சக அழகி? சககளத்தி! பதிவனுக்கு சக பதிவன்??

செல்வந்தனுக்கு சக செல்வந்தன்?
மோசடிக்காரன்!

இளைஞனுக்கு சக இளைஞன்?
போட்டியாளன்!

யுவதிக்கு சக யுவதி?
மூளி!

அழகிக்கு சக அழகி?
சககளத்தி!

வாலிபனுக்கு சக வாலிபன்?
மூத்தவன்!

அழகனுக்கு சக அழகன்?
விகாரன்!

வித்தைக்காரனுக்கு சக வித்தைக்காரன்?
ஏமாற்றுக்காரன்!

அரசியல்வாதிக்கு சக அரசியல்வாதி?
ஒரு ஊழல்வாதி!

நடிகனுக்கு சக நடிகன்?
அகங்காரம் புடிச்சவன்!

பத்திரிகைகாரனுக்கு சக பத்திரிகைகாரன்?
யாவாரி!

எழுத்தாளனுக்கு சக எழுத்தாளன்?
குப்பை!

வணிகனுக்கு சக வணிகன்?
கொள்ளைக்காரன்!

வழக்கறிஞனுக்கு சக வழக்கறிஞன்?
எதிரி!

நண்பனுக்கு சக நண்பன்?
நண்பனேதான்!

பதிவனுக்கு?
பதிவனுக்கு சகபதிவன், அதே நண்பந்தான்டா!

ஆம், நண்பனுக்கு மட்டுமே அந்தப் பெருமை இருக்க முடியும். நட்பு பாராட்டும் நண்பர்களே பதிவர்கள். காழ்ப்பு ஒழிய வேண்டும்; பதிவுலகம் வளர வேண்டும்; படைப்பாற்றல் பெருக வேண்டும்; தமிழ் ஓங்க வேண்டும்!


பங்கப் பழனத் துழும் உழவர்
பலவின் கனியைப் பறித்ததென்ற
சங்குஇட் டெறியக் குரங்கிளநீர்
தனைக்கொண் டெறியும் தமிழ்நாடா?!

--புகழேந்திப் புலவர்

பலா மரத்தில் ஒரு குரங்கு, மரத்தில் இருக்கும் பலாப் பழத்தைப் பறிக்கிறது. அதைப் பார்த்த உழவர்களில் ஒருவர் படைச்சாலில் இருந்த சங்கு ஒன்றை அதன்மீது எறிய, அது அருகில் இருந்த தென்னைக்குத் தாவி அதிலிருந்த இளநீர் கொண்ட குரும்பையைக் கொண்டு திருப்பி எறியும் தமிழ்நாடா நம் நாடு? பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என இராமல் நட்பு பாராட்டுவோமாக!!

நரிக்கு நாட்டாமை கொடுத்தா, கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம்?! இஃகி!!

11/04/2009

கொழுத்தவனுக்குக் கொள்ளு! எளைச்சவனுக்கு எள்ளு!!

”ஆறை நாட்டானின் அலம்பல்கள் எழுத கால அவகாசம் இல்லை; புத்தகம் படிக்க நேரம் இல்லை; கடுமையான களைப்பு, ஆமாங்க பனிரெண்டு மணி நேர வேலை இன்னைக்கு! ஆமா, காலம் அப்படின்னா என்ன? நேரம் அப்படின்னா என்ன?? இஃகிஃகி, அதை நீங்க சித்த, பின்னூட்டத்துல சொல்லிட்டுப் போங்க மாப்பு!”

“மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ,
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ,
சும்மா இருக்குற மாமனுக்குச் சூடு போடுங்கோ!”


“பாத்தீகளா? நாந்தேன் வேலையால இருந்து இப்பத்தான் வர்றேன்னு சொல்லுறேன். கேட்காமக் கொள்ளாம, சூடுகீடுன்னு சொல்லிகிட்டு? இதுக்கு எல்லாம் என்னான்னு சொல்லுங்க பாக்குலாம்?!”

“என்ன, பவானி சம்பைன்னா உங்களுக்கு இளக்காரமா? எதுக்கு என்னான்னு சொல்லோணும்??”

“நண்டுக்கு?”

“குஞ்சு”

“கிளிக்கும் கீரிக்கும்?”

“பிள்ளை”

“அணிலுக்கும் முயலுக்கும்?”

”குட்டி”

“யானைக்கு?”

“களபம்”

“பேனுக்கு?”

“செள்”


”அட, மனுசனுக்கு?”

”மகவு!”

“பயிருக்கு?”

“நாற்று”

“மரத்துக்கு?”

“கன்று”

“தென்னைக்கு?”

“பிள்ளை”

“தேங்காய்க்கு?”

“குரும்பை”

“மாங்காய்க்கு?”

“வடு”

“அவரைக் காய்க்கு?”

“பிஞ்சு”

“வாழைக்கு?”

“கச்சல்”

“அட, நயமாத்தேன் சொல்லிப்புட்டீங்களே மாப்பு?”

”நித்திரை நேரத்துல, உங்க குணஞ் சித்தங்கூட ஓயுலியா?”

“அது ஓயுறதெல்லாம் இருக்கட்டு;

வெட்டினதால் த்ப்பி விட்டேன்,
வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!

செத்ததனால் தப்பிவிட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்!

வந்ததனால் வரவில்லை
வராவிட்டால் வந்திருப்பேன்!
நான் யாரு?”

கோயமுத்தூர் வந்த மாப்புளை, நான் யாருன்னு சொல்லாமக் கொள்ளாம ஈரோட்டுக்கு ஓடுறதைப் பாருங்க...இஃகிஃகி!!

11/03/2009

நொள்ளை மடையான்!



//நோள்ளக் கண்ணா//

நொள்ளை மடையான்ங்ற கொக்குக்குக் கண் பார்வை இல்லையாம். அந்த நொள்ளை மடையான் கண்கள் போன்று உடையவன் நொள்ளைக் கண்ணன்!

நேற்றைக்கு அன்பர் பிரபாகர் இட்டிருந்த இடுகையில நான் இட்ட மறுமொழிதானுங்க மேல இருக்குறது. பொதுவா, நொள்ளைக் கண்ணன், நொள்ளை வாயன்னு எல்லாம் ஏசுறதைப் பார்த்து இருப்போம் நாம! அதென்ன அந்த நொள்ளைக் கண்ணன்?

கிராமப்புறத்துல பாருங்க, பறவைகளுக்கு பல விதமான பேர் வெச்சி சொல்வாங்க, அழுக்கு வண்ணாத்தி, துடுப்பு மூக்கன், அரிவாள் மூக்கன், உள்ளான், துடுப்புநாரை, கோசிவாயன் இப்படி எல்லாம்... அந்த வரிசையில ஒன்னுதாங்க இந்த நொள்ளை மடையான் அப்படீங்கற பறவையும்!


நொள்ளு அப்படின்னா, உள்ளூரச் சொருகுறது அல்லது அமிழ்த்துறது; ஆக நொள்ளை அப்படின்னா, அமிழ்ந்து போன ஒன்னு.

இந்தப் பறவைக்கு உண்டான குணம் என்னான்னு கேட்டீங்கன்னாங்க, மனுசருக தன்னோட பக்கத்துல, அதாவது கைக்கு எட்டியும் எட்டாத தூரத்துல வர்ற வரைக்கும் ஒக்காந்துட்டே இருக்குமாம். சில சமயங்கள்ல கையில அகப்படவும் செய்யுமாம். ஆகவே, இதனோட குணத்தைப் பார்த்த கிராமத்து வெகுளிங்க இதுக்கு கண்ணும் உள்ளார்ந்து போயிக் கிடக்கு, கூடவே மடைத்தனமாவும் இருக்குன்னு நினைச்சுட்டு, நொள்ளைக் கண்ணன் கொக்கு, நொள்ளை மடையான் கொக்குன்னு எல்லாம் சொல்லிக் கூப்பிடவும் செய்தாங்க!

ஆனாப் பாருங்க, இதுக்கு கண் நல்லாவே தெரியுமாம். அதனோட சுபாவம் கொஞ்சம் லேசுபாசா இருக்குறது. கொஞ்சம் அமைதியா, சித்தம் போக்கு சிவம் போக்குன்னு இருந்தா ஒடனே பட்டம் கட்டிடுவாங்களே?! இஃகும், இஃகும்...

இது நம்மூர்ல மட்டும் இல்லைங்க, தெற்காசியாவுல எங்கும் இப்படித்தான் அவங்க அவங்க பாசையில சொல்றாங்களாம். சிங்களத்துல கானகொக்கு, அதாவது குருட்டு கொக்கு! தெலுகுல Gkuddy குவ்வ!!


11/02/2009

நீராடாதிருந்தால் பிறர் பொறுப்பரோ?

ஒரு ஆறு ஏழு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நாள் அப்படியே சித்த பெரியவங்களோட ஊர்ப் பழமை பேசலாமுன்னு அவங்க கச்சேரியில நானும் கலந்துகிட்டேன். அப்ப நடந்த அளவளாவுதலைப் படிங்க மேல நீங்களும்!

“பழைய நடிகர்கள் போல அல்லாமல், புது நடிகர்கள் அனைவரும் ஜிம்முக்கு சென்று ஜம் என்று இருக்கிறார்கள் என்று அய்யா சொன்னது ரசிக்கும்படி இருந்தது!”

“இந்த சிக்ஸ் பேக், எய்ட் பேக்னு சொல்லறாங்களே அது இன்னா சாமி?”

“தேகப்பயிற்சி செய்பவனுக்கு, உடற்தசையெல்லாம் இறுகி, இடது மார்பிலும் வலது மார்பிலும் திட்டுகள் வெளிப்படும். இடது பக்கம் மூன்றும் வலது பக்கம் மூன்றும் வெளிப்படுகையில், அவன் அறுதிட்டு ஆடவன் ஆகிறான்!”

“ஓ சரி. அப்ப நான் போய் ஆடியில் நோக்கிட்டு வருகிறேன்!”

“ஆடி ஏன்? மாசியிலும் நோக்கலாமே?!”

“ஆடி ஒரு பளிங்கு, மாசியும் பளிங்கா?”

“ஆடும் நீர் ஆடாது இருந்தாலும் நோக்கலாமே?”

”ஆமாம், ஆமாம், நீர் ஆடினாலும் அழகு; ஆடாதிருந்தாலும் அழகு!”

“ஆடும் நீரே அன்றி, அலைகிற நீர், பாய்கிற நீர், இழிகிற நீர் எல்லாமும் நோக்கலாம்!”

”நீராடாதிருந்தால் பிறர் பொறுப்பரோ?”

“நான் ஆடினால் யார் பொறுப்பார்? அம்பலவாணன் ஆடலே ஆடல்!”

“நீராடாதிருக்க மூக்கில் விரல் வைப்பர்!”

“நீராடும் வைகையிலே நின்றாடும் மீனே...... இந்த பாடலில் மீன் எப்படி நின்றாடுகிறது?”

“நீரோடும் வைகை நதியில், எப்பொழுதும் ஆடிக்கொண்டிருக்கும் மீனைப் போன்றவளே..... இங்கு நின்று என்றால் எப்பொழுதும் என்பதும் பொருள்!”

“நதி வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. மீன் அந்த பகுதியிலேயே இருக்க வேண்டும் என்றால் நிரோட்டத்தை எதிர்த்து நிற்க வேண்டும். பார்ப்பதற்கு மீன் அசையாமல், நீந்தாமல் இருப்பது போல் தெரிந்தாலும் அது நீரோட்டத்தை எதிர்த்து நீந்திக் கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே அவ்விடத்தை விட்டு அகலாமல் இருக்க இயலுகிறது!”

”ஃக, இது!”

சரி, அப்படியே அந்த பாட்டும் படிங்க, கேளுங்க!



பார் மகளே பார்
விசுவநாதன், ராமமூர்த்தி


நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே.....

நீரோடும்....

மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை

வருவாய் என்று
வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையில் தந்தை
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே!
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலில் மேலே ....
ஆராரோ... ஆரிரரோ... ஆராரோ... ஆரிரரோ

நீரோடும்....

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா
ஆராரோ... ஆரிரரோ... ஆராரோ... ஆரிரரோ

நீரோடும்....

11/01/2009

அரைலூசு யார்?

திருப்பதி:திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தன் மனைவிவுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.நேபாள பயணம் மேற்கொண்டிருந்த அதிபர் ராஜபக்ஷே, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்தார். அவருடன் அவரது மனைவி ஷிராந்தி மற்றும் 80 பேர் அடங்கிய குழுவினரும் வந்தனர்.

ரேணிகுண்டா விமான நிலையத்தில், அவர்களை ஆந்திர போக்குவரத்துத் துறை அமைச்சர் காலா அருணாகுமாரி வரவேற்றார். அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்ற ராஜபக்ஷே, அங்கு வெங்கடாஜலபதியை தரிசித்தார். இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக திருமலைக்கு வந்துள்ளார் ராஜபக்ஷே.


http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18394

மனசு ரொம்ப வலிக்கிறது சார். பல நாட்கள் விரதம் இருந்து பாத யாத்திரையாக கீழ் திருப்பதியில் இருந்து திருமலை வரை நடந்து வந்து தரிசனம் செய்யும் பக்த்தர்களுக்கு கூட கருட ஸ்தம்பத்தை அருகில் சென்று பார்க்க அனுமதி தராத திருமலை தேவஸ்தானம், ஈழத்தில் படுகொலைகள் செய்து ஒரு இனத்தையே அழித்த படு பாவிக்கு அந்த கருட ஸ்தம்பத்தை தொட்டு கும்பிட அனுமதி அளித்ததை யாராலும் ஏற்க முடியாது.

by RL VENKATESH,India 11/1/2009 12:28:25 PM IST


தெற்காசியாவில் பிறந்த எளியவனும், மெலிந்தவனும் அழ மட்டுமே பிறந்தவன். அங்கு இனியும் அறத்தை எதிர் நோக்குபவன் ஒரு முட்டாள்! அறத்துக்கு வால் பிடிப்பவன் ஒரு கோமாளி, அல்லது தீவிரவாதி!!