7/29/2010
வெள்ளந்தி வேந்தே!!!
”அண்ணா, மானம் மூடம் போட்டுட்டுத்தா இருக்குதூ... எதுக்கும் நாம தெக்க போய்ட்டே வந்துறலாமுங்ணா!”
“ஆமா கண்ணூ.... இப்பெல்லாம் எங்கியுமு தார் ரோடுகதா... மொதல்ல மாதர எல்லாம் ரோசனை பண்ணத் தேவையில்ல.... வாங் ஒரு எட்டு, போய்ட்டே வந்துறலாம்!”
நீலமலைக் காற்று தண்மையைக் கக்க, மெய்யானது தண்மையில் தோய்ந்து சுகம் காண, சொகுசுந்து கண்பதியிலிருந்து குதிரைப் பந்தயச் சாலைக்குள் புகுந்தது. செம்மொழி மாநாடு, நகரத்தின் சாலைகளை வெகுவாக மேம்படுத்தி இருந்தமையும், இன்னும் இருக்கும் பதாகைகளும் எழில் சிந்திக் கொண்டிருந்தன.
“அண்ணா, இது பாப்பம்பட்டிப் பிரிவுங்ளா? நம்பவே முடீல... மொதல்ல ஒரே ஒரு டீக்கடை மட்டுமு இங்கிருக்கும்.... இதென்னங்ணா இப்போ இதே ஒரு ஊராயிருச்சு?”
“பல்லடத்து வரைக்குமு கோயமுத்தூருதான்... தெக்க பொள்ளாச்சி வரைக்குமு... வடக்க் அன்னூர் புளியம்பட்டின்னு ஊர் நெம்ப தூரத்துக்கு போயிருச்சு கண்ணூ...”
“அல்லாம் இந்த அஞ்சாறு வருசத்துலதாங்...”
“இந்த ரண்டு வருசமாத்தாங் கண்ணூ மம்மேனியாக் கட்டித் தள்றாங்...”
“ஆமாங்... அய்யன் அப்பவுஞ் சொல்லுச்சு.... ஊர்லயே ஊட்டை நல்லாக் கட்டீறலாம்னு.... டவுன்க்குள்ள இருந்து போய் வரவே முடியாதாட்ட இருக்குங்?”
“இன்னிக்கி நெம்ப கூட்டங் கம்மியா இருக்குது.... திருச்சி ரோட்டுக்கு வாறதுக்கே ஒரு மணி நேரத்துக்மேல ஆகும்...”
“அண்ணா, சூலூர் வந்துட்டமாட்ட இருக்கூ?”
”ஆமா கண்ணூ... வாருங்.... ரோட்டோரம் எம்புட்டு தூரத்துக்கு இடிச்சிருக்காங்ணு?”
சாலையின் இரு மருங்கிலும் ஆக்கிரமித்துக் கட்டி இருந்த கட்டிடங்கள், தயவு தாட்சண்யமின்றி இடிக்கப்பட்டிருந்தன.
“பாருங்... இவ்வளவு நாளுமு ரோட்டுலயே கடை வெச்சிட்டு இருந்துருக்குறாங்?”
“ஒன்னுங் கேக்காத போ.... பெரிய அழும்பு கண்ணூ...”
தெற்கே, கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல், இலட்சுமிநாயக்கன் பாளையம் என எங்கும் நவீன வீடுகள்... வீடுகள்... கிராமியம் கப்பல் ஏறிப் போயே போயிருந்தது. வண்டி மெல்ல உருண்டு, வேலப்பநாயக்கன் பாளையம் பிரிவையும் கடந்து தோப்புகளின் நடுவே பயணிக்கத் துவங்கியது.
ஆகா... ஆகா.... பச்சைத் தாரகைகள் நின்று நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தன. தென்னந் தோப்புகள் தொடர்ச்சியாய்.... இன்னும் அந்த பெரு மரங்கள் நிலைத்து நின்று, அசைந்து அசைந்து, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடென தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தன.
”ஏங்ணா வண்டிய நிறுத்துறீங்?”
“இன்ன கொஞ்சம் போனா ஊருக வந்துரும்... இங்கியே போயிட்டு வந்தர்றங் கண்ணூ!”
காசா, பணமா?? நாமும் இறங்கி, தண்மையில் இருந்த பச்சைப்புற்களை இயன்ற மட்டிலும் வெந்நீர் விட்டுச் சூடாக்கினோம்...நமக்கும் இதமாக இருந்தது.
பல்லடம் பொள்ளாச்சி சாலை... ஏ, அப்பா... என்னமாய்த்தான் நவீனம்... நினைத்துச் சுதாரிப்பதற்குள்... செஞ்சேரி மலை மணியம் திரையரங்கு உரிமையாளர் மணியன் கொலையுண்ட அந்த இடத்தை நமது வாகனம் கடக்க ஆரம்பித்தது...
“அண்ணா, இங்க வெச்சித்தான மணியனைப் போட்டுத் தள்ளுனது?”
“ஒனக்கு இன்னுமும் அது ஞாவகத்துல இருக்குதா கண்ணூ?”
”அய்ய... மறக்காட்டி என்னங்?”
வண்டி, மேட்டுக்கடையைக் கடந்து, ஒன்றிய அலுவலகங்கடந்து, செஞ்சேரிப் பிரிவில் இடது பக்கமாய்த் திரும்பியது... பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய் வெறுமனே பல்லிளித்தது. ஆனால், சாலையின் இருமருங்கிலும் பச்சைத்தாரகைகள் தென்னங் குலைகளைத் தாங்கியபடி, ஓங்கி நின்று கொண்டிருந்தன எங்கும்.
மந்திரகிரி ஆண்டவன் வீற்றிருக்கும் செஞ்சேரிமலை கடந்து, பச்சாக்கவுண்டன் பாளையம் கடந்து, மூங்கில்த் தொழுவுப் பிரிவில் மேற்கே செல்லச் செல்ல மனம் மெய்யை விட்டுக் குதித்துவிடும் போல இருந்தது. உற்சாகம்... உற்சாகம்....
வண்டி நின்றது.... வீட்டின் முன்னே போய் நின்றோம்....
“நான் ஆரு? அடையாளந் தெரீதுங்ளா?”
“ம்ம்.... அடடே.... வா...வா... மணிதானோ? பார்த்து எத்தன்னாளாச்சு?”
கன்றைத் தொலைத்த தாய், ஈன்ற கன்றைக் கண்டதைப் போல.... அந்த கிராமிய மானுடம்... இறுகக் கட்டித் தழுவியதில்.... அகம் அகற்றி, புறம் இலகுவாகிக் கரைந்தது....
“வா, வா.... ஊர்லிருந்து எப்ப வந்த மணீ?”
“ஆறுக்குட்டீண்ணா.... வந்து மூனுன்னாளாச்சுங்ணா!”
“ஊர்ல அப்பனாத்தா அல்லாரும் செளக்கியந்தானோ?”
“நல்லாருக்காங்!”
“அப்பொறம்... நீ இருக்குற பக்கமெல்லாம் நல்ல மழையா?”
“அப்பப்ப பேயும்ங்க...”
“இப்ப நீயி... அமெரிக்கவுலதான?”
“ஆமாங்ணா... அப்பொறம் சுப்ரமணியண்ணெங் காணம்?”
இயல்பாய்ச் சொல்ல விழைந்தார்.....
நெஞ்சு வெடித்துச் சிதறியது... பள்ளயம் எனும் சொல்லை எமக்கு அறிமுகப்படுத்திய மகாத்மாவே... பள்ளயம் உனக்குப் படைத்து எடுத்து வந்திருக்கிறேன்... ஊர்ப் பழமை எனும் நூலில், பள்ளயம் எனும் பகுதிக்கு நீதானே கதாநாயகன்? என்ன உலகம்டா இது?? இதற்குத்தானா ஆசைப்பட்டாய் மணியா??
அதனாலென்ன? என் நூலின் உள்ளீடாய், என்றென்றும் எங்களுடன், தமிழருள், பண்பாட்டுச் சின்னமாய் வீற்றிருப்பாய் வெள்ளந்தி வேந்தே!
7/28/2010
யாரந்த, நான் ஊறிய நலஞ்சூடி??
நாளும் நறுக்கென நாலு
நயமாய் நையக் கேட்டாய்
பேதமிலா வாசிப்பாளனுமானாய்
எழுதுவோர் ஊக்கனுமானாய்
ஆழ்ந்து படித்து பண்பனுமானாய்
மெல்ல முகம் காட்டினாய்
வியந்தது அவனிமிகு பதிவர்கூட்டம்
நாளொரு முகம் காட்டினாய்
நாடுவோர் கூட்டம் மிகுந்தவனானாய்
மகுடங்கள் பல சூடினாய்
வெல்லாமகனையும் வென்றாய்
நானூறு...
நான் நானாக நல்லதனமாக ஊறுகிறவனுமானாய்
நற்றமிழ், நல்லூழ், நல்லுயிர்
நலஞ்சூடி நாளும் நாளும் படைத்திடுவாய்!!
வாழ்க, வளர்க, வணங்குகிறோம்!!
தமிழ்ச் செம்மொழி நகரில் இருந்து....
கோயம்பத்தூர், கோயமுத்தூர், கோயம்புத்தூர்.... முதலானவற்றை, பெயர்ப்பலகைகளில் எங்கும் காண்கிறோம். இவற்றுள் எது சரி??
அவநாசி, அவனாசி, அவிநாசி, அவினாசி.... இப்படியாகவும், அந்நகரில் இருக்கும் பெயர்ப்பலகைகளில் இருக்கக் காண்கிறோம். இவற்றுள் எது சரி??
இராவத்தூர், ராவத்தூர், ராவுத்தூர், ராவ்ட்டூர்.... ஆகா, ஆகா!! ??
7/27/2010
கோவையில் கூடிடுவோம்!!!
என்னதான் கடிதங்களை வைத்திருந்து, வைத்திருந்து வாசித்து மகிழ்ந்தாலும், இதோ வந்தேன் உனைக் காணவென்று முன் தோன்றி, முகம் கொடுத்துப் பேசுவதன் முன் கடிதங்கள் நனைந்த அப்பளங்களாகின்றன. என்னதான் நயம்பட எழுதி, பணிவு, அன்பு, நேயம் முதலானவற்றை விரித்தாலும், நோக்குதலும் நோக்குதலும் இடும் பிணைப்புக்கு ஈடாவதில்லை.
நேரில் சென்று, முகம் கொண்டு, பார்த்து, பேசி, தமிழால் இணைந்திடத்தான் ஆசை. காலதேவன் கஞ்சனவன்; அளந்துதானே கொடுக்கிறான்? எனவேதான், இந்த எளியவனிவன், தம் பணிவார்ந்த அழைப்பை, வரி வடிவத்திலே உங்கள் முன்னே விரித்திடச் செய்திடுகின்றேன்.
எம் தாயகத்து வலையுலக உறவுகளே, உம்மில் பலர் எப்படியும் வந்திடுவோம் என ஏற்கனவே இசைந்திட்டீர். மகிழ்ச்சி! நீவிர் மட்டும் வந்திட்டால் போதுமென எண்ணாது, இன்னும் பல அன்பர்களைக் கொணர்ந்து சேர்த்திடுவீர். இசைந்தோரல்லாது இருப்பாரும், வந்திடுவீர் கண்டு மகிழ்ந்திடுவோம்.
ஆம், தென்மேற்குப் பருவச் சாரலில் குளுகுளுக்கும் கோவைதன்னில் கூடிடுவோம்... நட்பு வட்டத்தை விரியச் செய்திடுவோம்... நூல் அறிமுக விழாவென்றே அரங்கம் பிடித்தோம். பதிவர் பெருமக்கள் வந்திட இசைந்திட்டார். இசைந்தோர் அனைவரும் விழாவினூடே இனித்துக் கதைத்திட நேரம் கிட்டாதேயெனப் பணித்திட்டார், விழா துவங்குமுன்னே பதிவர் கூடலென!!
ஆம், வலையுலக நண்பர்காள், வந்திடுவீர் எதிர்வரும் ஞாயிறு, 01082010, பிற்பகல் மூன்று மணிக்கு, கோவை அன்னபூர்ணா வளாக கங்கா அரங்கம் நோக்கி! நேரில் காண்போம்; உறவு கொண்டாடிடுவோம்!!
இதோ, அருட்சுடர் பதிப்பகத்தார் வெளியிட்ட, எம் வலைப்பதிவுகளின் சில இடுகைகளை உள்ளடக்கிய நூலின் அறிமுக விழா குறித்த அழைப்பிதழும்!!
7/25/2010
கனவில் கவி காளமேகம் - 19
”என்றா பேராண்டி... தமிழ்த் திருவிழா எல்லாம் முடிஞ்ச கையோட நம்பூருக்கு வந்துட்டியாட்ட இருக்கூ??”
“அப்புச்சி வாங்க, வாங்க... ஆமுங்.... உங்களைக் கண்டு கன காலம் ஆயிடிச்சி பாருங்க...”
“ம்ம்... ஆமா, வெகு தொலைவுல இருந்து வந்துருக்கியே? உனக்கு இந்த மெய்க்குணகம் அல்லாம் இல்லியாக்கூ??”
“அய்யோ அப்பிச்சி.... உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா?? சித்த நல்ல பழமையில கேள்வியக் கேளுங்க...”
“அட, நான் நல்லாத்தான் பேசுறேன்... நீதான் இன்னும் பாடு பழமையத் தெரிஞ்சி வெச்சிருக்குலை போலிருக்கு...”
“செரீ.... செரீ.... மெய்க்குணகம்ன்னா என்ன? அதுக்கு பதிலை சொல்லிப் போட்டு, மேல பேசுவீங்களாமா??”
“நீ அப்பிடிக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ... சும்மா குத்தம் சொல்லீட்டு.... பார்த்தியானா, நெறைய காரியங்கள்ல, ஒன்னுக்கும் ஒன்னுக்கும் ஒரு ஒட்டு இணக்கம் இருக்கும்... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு சாவலு கூவும்.... மழை வாறதுக்கு முன்னாடி, தும்பிக கூட்டமாச் சேந்துகிட்டு ஆலவட்டம் போடும்.... இந்த மாதர நெறய....
இதுவே, அந்த கிரம ஒட்டுதல் மாறி, பொழுது சாயுற நேரத்துக்கு சேவல் கூவுச்சுன்னு வெச்சிக்கோ....அதை என்ன சொல்றது? கிரமத்துல குணகம் வுழுந்து போச்சின்னிதான சொல்வம்? out of synch அப்படின்னு ஆங்கிலத்துல சொல்றாங்க பாரு...
அந்த மாதர, நம்ம உடலுக்கும் கால நேரத்துக்கும் ஒரு கிரம ஒட்டுதல் தானா ஏற்பட்டுரும்டா பேராண்டி.... நீ அமெரிக்காவுல இருக்குறவன்... அப்ப, அமெரிக்காவோட கால நேரத்துக்கும் உன்னோட ஒடம்புக்கும் ஒரு கிரம ஒட்டுதல் இருக்கும்.... இப்ப நீ இங்க வந்து இருக்கே... என்ன நடக்கும்??”
“நீங்களே சொல்லிப் போடுங்க அப்பிச்சி...”
“கதிரவன் எழுந்து கிழக்கு வெளுக்குற நேரத்துக்கும், உன்னோட ஒடம்புகிட்ட இருக்குற கிரமத்துக்கும் குணகமாயிருக்கும்.... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு, அதாவது அமெரிக்காவுல பொழுது சாயுற நேரத்துக்கு தூக்கம் வரும்.... அந்தியில நித்திரையே வராது....”
“அட, ஆமாங்க அப்பிச்சி... நேத்துப் பூராவும், இராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட முழிச்சிட்டு அல்ல இருந்தன்?”
“ம்ம்ம்.... அப்படி வா, வழிக்கு! அதைச் சொல்றதுதான் மெய்க்குணகம் அப்படின்னு!! ஆங்கிலத்துல jet lag அப்படின்னும் சொல்வாங்க....”
”இப்ப விளங்குச்சுங் அப்பிச்சி...”
“செரி, ஊருல உனக்கு மனநிலை எப்படி இருக்கூ?”
“இன்னும் வெளீல எங்கியுமு போகவே இல்லீங்க... போனது வெச்சி சொன்னா, ஒருவக்கம் மகிழ்ச்சியா இருக்கு.... இன்னொரு வக்கம் வருத்தமா இருக்குங் அப்பிச்சி...”
“ஏண்டா, அட ஏன்?”
“பின்ன எங்க அப்பிச்சி... தென்றல் தளையத் தளைய வருது... ஊட்டுக்குள்ள ஒரு பொட்டுக் காத்தும் இல்ல... வெறும் உப்புசமாவல்ல இருக்கு?”
“ஆமா பின்ன, தும்பை வுட்டுட்டு வாலைப் புடிச்சா?? இருக்குற எடம் முச்சூடும் கட்டடம் கட்டிக்குவீங்க? நீலமலைக் காத்து உள்ள நுழையுற மாதரயாடா இருக்கு கட்டி இருக்குற இலட்சணம்?”
“அட ஆமாங்க அப்பிச்சி... அப்புறம், காந்தீவரம் சிந்தாமணி இருக்கும் பாருங்க... முன்னாடி காரவடை, மெதுவடை, பருப்பு வடை... கமகமன்னு காப்பி அல்லாம் போட்டுக் குடுக்குற கடையோட... சனங்க அல்லாம் போயி, சலீசா பொடி பொட்டெல்லாம் வாங்கியாருவாங்க... அதைத் தொலைச்சுப் போட்டு, இராசேசுவரி மாடம்ன்னு ஒன்னைக் கொண்டு வந்தாங்க....
இப்ப அது போயி, கணபதி மாடம்ன்னு ஒன்னு வந்து அதே இடத்துல நிக்கிது.... இராசேசுவரி மாடம் முச்சூடும் இடிச்சிப்போட்டு, இப்ப இது வந்திருக்கு.... பழைய நெனப்பு வந்து வாட்டுதுங்க அப்பிச்சி, வாட்டுது...”
“அட, இதுக்கெல்லாமா வெசனப்படுறது? அசோகர் காலத்து மரங்களே ஆடிப் போச்சுதாம்... இவன் வேற?”
“ஆமாங்க அப்பிச்சி.... நானு இன்னிக்கிப் போயி, இருக்குற மரங்களை அல்லாம் படம் புடிக்கலாமுன்னு இருக்குறன்... புரூக் பாண்டு வளாகத்துல, காப்பி வாசமும், சந்தன மரங்களும், செண்பங்கி மரங்களும் எப்படி எல்லாம் இருந்துச்சி?? இப்ப, கட்டடங்க பெருசா பெருசா எழும்பி நிக்கிதே?”
“சும்மா வேடிக்கை பாக்கப் போனாக் கூட, இருபது உரூவாய்க் கட்டணம், வண்டிகளை நிப்பாட்டத்தான்...”
“நான் அங்கெல்லாம் போகவே இல்ல அப்பிச்சி.... ஆளரவம் இல்லாத, குமரன் குன்றுக்குமு, குருடி மலைக்குமு போலாம்னு இருக்கேன்...”
“நல்லது... சரி, பார்த்துப் போயிட்டு வாடா பேராண்டி... நான் வாறேன்!”
இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மொதல்லயெல்லாம் வந்தா, அவரு கேள்வியாக் கேட்டு உசுரை வாங்குவாரு.... அப்பறம் வாறதையே நிறுத்திட்டாரு... இனிமேலாவது, அடிக்கடி வருவார்னு நம்புவோம்... நம்பிக்கைதான வாழ்க்கை? சரி அப்ப, நீங்க போயிட்டு நாளைக்கி வாங்க போங்க....
7/24/2010
தாய் மண்ணே வணக்கம்
ஆனா... ங்கொய்யால, ஊரே தலைகீழா அல்ல மாறிக் கிடக்கு? அதான், தூக்கமும் வர்லயா? இங்க இருக்குற பாடு பழமையப் பேசலாமுன்னு வெடியக் காத்தால நாலு மணிக்கு பொட்டியத் தட்டீட்டு இருக்குறங் கண்ணூ...இஃகிஃகி!!
சென்னையில வந்து எறங்குனுதீமு ஒன்னுந் தெரீல... வெளிநாட்டு விமான நிலையத்துல இருந்து, உள்ளூர் விமான நிலையத்துக்கு வந்தா இருக்குது வேடிக்கை.... ஆமாங்க... எடத்துல இருக்குறத வலத்துலயும், வலத்துல இருக்குறத இடத்துலயும் வெச்சி, ஒரே கொழப்ரேசனு வந்துருச்சுங்... புடிமானம் புடி படுறதுக்கு சித்த நேரம் புடிச்சதுங்க....
நாலு மணிகெல்லாம், வெளியூரு போற சனங்க வர ஆரமிச்சிட்டாங்க... என்னா கூட்டம்?? சாரை சாரையாய், சாரை சாரையாய் சனங்க... அடேய், விமானங்களுக்கே இப்படின்னா, தொடர்வண்டிகளுக்கும், பேருந்துகளுக்குமு? நெனச்சே பாக்க முடீல போங்க...
நாம ஊருக்கு வாறப்பவெல்லாம், உள்ளூர் விமான நிலையத்துல இருக்குற காப்பி கடையிலதான் உக்காந்து இருப்பமுங்க... இந்த வாட்டி, அந்தக் கடையில இருக்குற அம்மணி சிரிச்சிட்டே வந்து பழமையக் குடுக்குதுங்கோ... நானுமு செரீன்ட்டு ஒன்னு ரெண்டு பழமைக்கு எசைஞ்சி பேசுனேன்... திடு திப்புனு உங்களுக்கு கல்யாணம் இன்னும் ஆகுலீங்களான்னு கேட்டுச்சு பாருங்க... தூக்கி வாரிப் போட்டுச்சி.... துண்டைக் காணம், அட ச்சீ... நம்ம துவால் துணியக் காணோம், பொட்டிகளைக் காணோம்னு அடிச்சிப் புடிச்சி, வேற எடத்துக்க்கு ஓடியாந்து வந்து ஒக்காந்துட்டேன்.
வெளீல, தொலைபேசுற கடை தெறந்த மாதர இருந்திச்சின்னு போனேன்... அங்க பாத்தா, ஒரு பொன்னானுமு ஒரு அம்மணியுமு... அதைப் பார்த்து, அவன் நம்முளைக் குத்தம் செஞ்சவம் மாதர பாக்குறானுங்க... ஈஈ...னு இளிச்சிட்டே நிக்க, அவரு, you waanna make any call அப்படின்னு நல்ல தமிழ்ல கேக்கவும், நாம ஆமான்னு தலையாட்டினோம்... சரி, பேசிட்டுக் காசை வெச்சிட்டுப் போங்கன்னு சொல்லிட்டு, அவ்ரு அவரு பாட்டைப் பாக்க ஆரம்பிச்சிட்டாரு.... நாம, நம்ம பாலாண்ணனை, அதாங்க வானம்பாடிகள் அண்ணனை அழைச்சோம்... மறுக்காவும், அண்ணன் தூக்கத்துல இருப்பாருன்னு வெச்சிட்டு வந்துட்டேன்... ஆனா, அண்ணன் திலும்பவும் அந்த எண்ணுக்கு அழைக்கவும், அவன் வெறுத்துப் போயி, யோவ் நீ காசே தர வேணாம்... போனை மட்டும் வெளில வெச்சிருன்ட்டு, கதவைச் சாத்திகிட்டான்...
அப்புறம், நாம அண்ணங்கிட்ட, நல்லபடியா வந்து சேந்துட்டம்னு சொல்லிச் சொல்லீட்டு இருக்கக்குள்ள, இன்னொருத்தன் வந்தான்.... அந்தப் பொண்ணைக் கொண்டாந்து வுட்டவன் போலிருக்கு... போன் இங்கிருக்கு, பொண்ணை என்ன பண்ணினீங்கன்னு என்னைச் சாய்ப்பலா பாக்குறான்... யோய், அவங்க உள்ள இருக்காங்கன்னு சொல்லிப் போட்டு, பொட்டிகளைத் தள்ளீட்டு நேரா நானு கிங்பிசர் அம்மணிகிட்ட வந்தன்... ஏன் சார் மெரண்டு போய் இருக்கீங்கனு அது கேக்க? என்னடா, இது எழவாப் போச்சுன்னு, நானு ஆங்கிலந் தெரியாத மாதரயே நடிச்சிக் கிடிச்சு, பரிசோதனை எல்லாம் முடிச்சுட்டு உள்ள வந்து உக்காந்துட்டேன்...
சரியா, அஞ்சே முக்கால் மணின்னா, அஞ்சே முக்கால் மணி.... கோயமுத்தூர் வண்டி புறப்பட்டுதுங்க... ஆறே முக்காலுக்கு அந்த நீலகிரி மலையப் பார்த்துட்டே வந்து எறங்குனேன்.... ஆகா.... ஆகா.... சிலுசிலுன்னு அந்தக் காத்து இருக்கே காத்து... கோயமுத்தூர் கோயமுத்தூர்தானுங்... பையத் தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன்... நெம்ப வருசங்களா வந்து போற எடமாச்சே?? தூக்கத்துல வுட்டாக்கூட சரியா, வெளில வந்துருவேன்... ஆனாப் பாருங்க, 'கரேபுரே'ன்ட்டு ஒருத்தன் வந்து, ஒழுங்கு மரியாதையா இந்த வண்டியில ஏறிப் போங்றான்....
என்னங்கடா இது, நாலு எட்டு நடக்கறதுக்கு ஒரு வண்டியான்னு நெனச்சி ஏறி உக்காந்தா, அது எங்கயோ ஒரு மலை ஒசர கொட்டாய்க்குப் போகுதூ....ஒ, ஓ... அந்தமான் நிகோபாருக்கீன வந்துட்டமான்னு நெனச்சி நிமுந்து பார்த்தா, எழில் கோவை உங்களை வரவேற்குதுன்னு ஒரு பதாகை! டேய்... டேய்... ஆறு மாசத்துல எப்ப்ட்றா உங்களால இதெல்லாம்?? இதே மாதர, இந்த அறுவத்தி மூனு வருசமும் வேலை பார்த்து இருந்தா நம்ம நாடு எப்புடி அல்லாம் இருந்துருக்கும்?? அப்படி ஒரு வேலைப்பாடோட ஒரு புதுக் கொட்டாய்ங்க... அருமையோ அருமை... இன்னும் செம்மொழி மாநாட்டு வேலைப்பாடுகெல்லாம் அதுல இருக்குது...
நாமதான் பொட்டிகளைத் தூக்கிட்டு வந்த மொத ஆளு.... வெளிநாட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சா மாதரயே ஒரு இது.... சுத்தவத்தமோ சுத்தவத்தம்.... மச்சாங்காரன் தயாரா வண்டியோட நின்னுட்டு இருந்தான்... வண்டீல ஏறி, வெளீல வாறேன்.... மேன்ஃகாட்டன் நகரத்துக்குள்ள வாற மாதரயே இருக்குங்கோ.... ஆனா, மரங்களைத்தான் மொட்டை போட்டு வுட்டுட்டாய்ங்க.... அவ்வ்வ்....
அவனாசி சாலைச் சந்திக்கு வந்தா, ஒன்னுமே புலப்படலைங்கோ... அந்த சந்தி, எதோ சிகாகோ விமான நிலையம் மாதர இருக்குது.... பளிச்சுன்னு... சுத்த வத்தமோ சுத்த வத்தம்.... டேய்... டேய்.... இதெல்லாம் நெம்ப அதிகம்.... இப்படி ஒரே அடியாவா திருந்துறது??
போனவாட்டி வந்தப்ப, பூசாகோ கலை அறிவியல் கல்லூரி வாயிலை நெனைச்சிக் குறபட்டுகிட்டேன்.... இந்த வாட்டி, அலேக்கா ஒரே தூக்கா தூக்கிட்டாய்ங்க.... அரண்மனை வாசல்மாதர ஆக்கி, மரங்கெல்லாம் போட்டு.... காறித் துப்புற மாதர , குப்பை மேடா இருந்த அரசு பல்நிலை தொழிற்கல்வி நிலையத்துக்கு வந்தது பாருங்க வாழ்வு?? எப்புடி ஆயிப் போச்சு... எதுவும் நிரந்தரம் இல்லையாம்... சொல்லாமச் சொல்றாய்ங்க நம்பாளுங்க...
செரிந்ட்டு, எங்க கல்லூரியப் பார்த்தேன்... அதாங்க, கோவை தொழில்நுட்பக் கல்லூரி... ங்கொய்யால, இன்னும் பலமடங்கு அதிகமா மிடுக்கு கூடி நிக்கிதே?? எதுத்தாப்ல எல்லாம் சுத்தம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க... ஆனாலும் மாநாடு நடந்த சாயல் இன்னும் தெரீது....
அதிசயம்.... அதிசயம்... கோவையில் அதிசயம்.... எந்தவிதமான பாலத்து மேலயும் ஏறாம, தொடர்வண்டி பாதையையும் ஏறிக் கடக்காம, நான் ஏறுன வண்டி, ஏறி எட்டாவது மணித் துளியில கணபதி வந்துடிச்சி... அது எப்படி? அது எப்படி?? மருத்துவக் கல்லூரிக்குப் பக்கத்துலதாங்க அந்த அதிசயம், நிர்மாணம் ஆகி இருக்கு... வாற ஒன்னாந் தேதி, துணை முதல்வர் மறுபடியும் அங்க எதோ திறப்பு விழாவுக்கு வாறாராமுங்க... என்னை, மெரட்டி, சிறப்பு உள்நிழைவுச் சீட்டுக் குடுத்து, விழாவுக்கு வரச் சொல்லி இருக்காங்க.... இஃகிஃகி... பாத்துட்டு வந்து, வெவரமா எழுதுறேன்....
7/20/2010
FeTNA: சுட்டும் நேரமிது!!!
கடந்த டிசம்பர் மாதம் முதலே, திருவிழாவை மனதிற் கொண்டு ஒரு தன்னார்வத் தொண்டர் என்கிற முறையில் நாம் செயல்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே! சுய விருப்பின் அடிப்படையிலே, கிடைத்த நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தியமையால், கிட்டத்தட்ட பதினான்கு நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள தமிழ் நண்பர்களைச் சந்தித்து அளவளாவியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சென்ற இடமெலாம், திருவிழாவுக்கு வாருங்கள் எனச் சொல்லத் தவறவே இல்லை நாம்.
நாட்டின் சகல இடங்களில் இருந்தும் வந்திருந்த நண்பர்களைக் கண்டோம், மகிழ்ந்தோம். இயன்ற அளவுக்கு நமது பங்களிப்பையும் நல்கினோம். அந்த அடிப்படையிலே, இதோ எமது சில அவதானிப்புகளும், மனதில் எழும்பும் சுட்டலைகளும்!!
திருவிழாவானது, கோலாகலமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் நடைபெற்றது என்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். ஆனாலும், சுட்டிக்காட்டும் வகையில் சிலவும் உள என்பதில் ஐயமேதும் இராது.
விழா அரங்கம், எழிலோடும் மிகப் பிரமாண்டமாகவும் இருந்தது என்பதும் உண்மை. அதே அளவு, அரங்கின் முன்புறம் குறுகலாகவும், நெரிசலைக் கூட்டுமுகமாகவும் இருந்ததும் உண்மை. குறிப்பாக, இளஞ்சிறார்களை ஆற்றுப்படுத்தும் வகையில் எந்த இடமும் இல்லாமற்ப் போனது பெரும் குறை.
உணவு ஏற்பாடுகள் வெகுபிரமாதம்! இதைவிட மேலும் சிறப்பாகச் செய்ய இயலுமா, என்ன??
நுழைவுச் சீட்டு விநியோகமும், வரவேற்பும் நல்லபடியாகவே நிகழ்ந்தது. ஆனாலும், எத்துனை நாட்களுக்குத்தான் இன்னமும் இப்படிக் களேபரகதியில் இயங்கிக் கொண்டு இருக்கப் போகிறோம் எனும் கேள்வியும் எழமால் இல்லை. கணினி யுகமிது. தக்க மென்பொருளை நிறுவி, பயனர் கணக்கையும், சீட்டு விநியோகத்தையும் செம்மைப்படுத்த வேண்டியது உடனடிக் காரியமாக இருத்தல் மிக அவசியம். ஆண்டு தோறும் விழா நடந்து வருகிறது. அப்படியாக, இருபத்து மூன்று ஆண்டுகளாகக் கற்ற அனுபவம் இதில் வெளிப்படவில்லை என்பதே நிதர்சனம். உள்ளூர்த் தமிழ்ச் சங்கம் என்பதைவிட, பேரவையின் பங்களிப்பு இதில் இருத்தல் மிக அவசியம்.
நிகழ்ச்சி நிரல் மேலாண்மை என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை அருகில் இருந்து அவதானித்தவன். எனினும், நிரலில் நுண்ணியத்தைக் கடைபிடிக்கத் தவறவிட்டு விட்டோம். அரிய செய்திகளை, எழுச்சியூட்டும் உரைகளை அதற்கான நேரத்தில் மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். உணவு இடைவேளைக்கு முன்பு, அன்றைய நாளானது நிறைவு பெறும் நேரம் போன்ற தருணத்தில் அது போன்ற நிகழ்ச்சிகளை இடம் பெறச் செய்து, நோக்கர்கள் அதே மனநிலையோடு வெளியே சென்று, கேட்டது மற்றும் கண்டதைப் பற்றின சிந்தனைகளை அசை போடும் விதமாக இருத்தல் வேண்டும். அதைவிடுத்து, துள்ளாட்டமும், செறிவான உரையும், சிந்தனையூட்டும் நாடகமும், துள்ளிசையும் என ஒன்றோடு ஒன்று கலந்திருப்பது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம்.
மேலும், வட அமெரிக்காவில் பேரவையின் பங்கு மற்றும் அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பது பற்றிய தகவல்கள் எவரது உரையிலும் விரிவாக வெளிப்படவே இல்லை. ஆண்டு தோறும் நன்றாக நிகழ்ச்சி நடத்துவது, எவராவது வந்திருந்து இலைமறை காயாக எவரையாவது சாடுவது எனும் பாங்கில் நிலவி வரும் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும்படியான உரையை நாம் கேட்காமற்ப் போனதில் மிகுந்த வருத்தமே!
பேரவையின் முன்னோடிகள், தத்தம் வேலைகளில் மூழ்கி இருந்து, நிகழ்ச்சிகளைக் குறித்த நேரத்தில் நடத்தி முடிப்பதில் குறியாக இருந்தார்களே தவிர, வந்திருக்கும் பார்வையாளர்களைச் சந்தித்து உரையாடி, அவர்களது பங்களிப்பை ஈர்க்கும்படியான உரையாடல்களை மேற்கொண்டதாக நாம் பார்க்கக் காணோம். ஒவ்வொரு முன்னோடியும், தலா நூறு பேருடன் கலந்து பேசி, பேரவையுடனான பிணைப்பை வலியுறுத்த வேண்டும் என்கிற பாங்கு மிக அவசியமானது.
தன்னார்வத் தொண்டர்கள், வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். தேனீக்களாய்ப் பறந்து பறந்து வினையாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கான பயிற்சி என்பது அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வட அமெரிக்காவின், வலுவான கட்டமைப்புக் கொண்ட எந்தவொரு அமைப்புக்கும் தன்னார்வத் தொண்டர் பாசறை என்பது மட்டுமே அடிப்படையாக இருக்க முடியும். இங்கே, தன்னார்வத் தொண்டர்கள் நிறைய இருக்கிறார்கள். அரவணைப்பு மற்றும் போதிய வழிநடத்துதல் என்பது இன்னமும் செழுமையை ஊட்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது!
இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு, குறிப்பாக இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சிக்கு குறைவான நேரம் ஒதுக்கப்பட்டு, அந்நிகழ்ச்சியின் மகத்துவம் மேலோங்கிய நிலையில் வெளிப்படாமற்ப் போனதிலும் ஏமாற்றம்.
பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆனால், கவியரங்கம் குறித்த நேரத்திற்குள் முடிக்காமற் போனதிலும் பெருத்த ஏமாற்றம் எமக்கு. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அக்குறைபாட்டுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பது எம் கடமை.
விழா மலர் சிறப்பாக வந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனாலும், ஒருவருக்கு ஒரு படைப்பு மட்டுமே என்பதைக் கையாண்டு, புலம் பெயர்ந்து நாட்டில் இருக்கும் தமிழருக்கான செறிவார்ந்த படைப்புகளை இடம் பெறச் செய்வதில் முனைப்புக் கூட்டுவதும் நலம் பயக்கும்.
நிகழ்ச்சிக்கு வரும் முக்கியப் பேச்சாளர்கள், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சாடிப் பேசுதல் என்பது தவிர்க்க இயலாதது. ஆனால், அதுவே பிரதானம் என்பதை இயன்றளவு தவிர்க்க வேண்டும். புலம்பெயர்ந்த நாட்டிலே, பல பாகங்களிலும் இருந்து வருபவர்கள், சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்பதனை உறுதியடையச் செய்வதில் குறியாய் இருக்க வேண்டும். மொழி, இனம் முதலானவற்றில் முனைப்புக் கூட்டும்படியாக இருத்தலே இன்றியமையாததாய் இருக்க வேண்டும்.
விழா என்பதே, கூடிக் களிக்கவும், சமூகத்திற்கு செய்திகளை அளிக்கவும், பண்பாட்டைப் பேணுவதற்கும்தான். அவ்வகையிலே, மேற்சொன்ன மேம்பாட்டுக்கானவை இருப்பினும் விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்று இலக்கினை எய்தியது என்பதை எவரும் மறுக்க இயலாது. அடுத்து வரும் ஆண்டுகளில், தலைவர் உரையானது புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்குப் பேரவையின் அவசியம், பேரவையின் சாதனைகள், பேரவை வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றனவற்றோடு எழுச்சியுறும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம்!
7/16/2010
வாசிங்டன் முத்தமிழ் விழா, பட்டிமண்டபம் காணொலி
விழா துவங்குவதற்குச் சிறிது தாமதமாகிவிட்டபடியால், பட்டிமண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரமானது வெகுவாகக் குறைக்கப்பட்டது. நடுவர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் வெகு சிறப்பாக நடத்திச் சென்றார். கொடுத்த குறுகிய நேரத்திற்குள் செம்மையாக நிறைவு செய்யப்பட்ட பட்டிமண்டபக் காணொலிகள் இதோ!!
7/14/2010
ஊர்ப் பழமை
அக்காதலுடன் கொங்குச்சீமையில் வளைய வந்த நான், விதியின் வல்லமையால்தானோ என்னவோ, எனதருமைத் தமிழ்த் தேசத்தை விட்டகன்று புலம் பெயர்ந்தவன் ஆனேன்; அதுவும் பதின்மம் கடந்த சில காலத்திலேயே! பிரிவு என்பது கொண்ட காதலை மேலும் இறுக்கிப் பெருக்கும் என்பார்களே, அதேதான் எமக்குள்ளும் உண்டாயிற்று.
கண் இமைகள் விழிகளை மூடிச் சயனிக்க எத்தனிக்கும் போதெல்லாம், எம்மண்ணும், அம்மண்ணில் வாழும் மனிதர்களும், அவர்களுடைய வெள்ளந்தியான வாழ்க்கைமுறை பற்றிய நினைவுகளுமே எம்மனதை ஆக்கிரமிக்கும். அதன் பொருட்டே, நெற்களம், களையெடுக்கும் காடு கழனி, கோவில் முற்றங்கள், மரத்தடிகள், ஊர்ச்சத்திரங்கள், அரசமரத்தடி மேடைகள் எனக் கொங்குச் சீமையெங்கும் வியாபித்திருக்கும் பழமை பேசுதலைக் கருத்திற் கொண்டு, பழமைபேசி எனும் புனை பெயரோடு எமக்கான வலைதளத்தில் எம்நினைவுகளை படைப்புகளாய்ப் பதிய விழைந்தோம்.
பழமை பேசுதல் என்றால், அளவளாவல் எனும் பொருளில் கொங்குச் சீமையில் புழங்குவது வாடிக்கை! ”சித்த இரு, பாடு பழமையப் பேசிட்டு அப்பொறம் போலாம்”, “நெம்ப நல்லாத்தான் இருக்கு உன்ற பழமை”, “அவன் கோயத்திண்ணையில குக்கீட்டு வெட்டிப் பழமை பேசிட்டு இருப்பாம் போயிப் பாரு போ”, என்றெல்லாம் வெகு சரளமாக அன்றாட வாழ்க்கை முறையில் இடப் பெறக்கூடியதுதான் பழமை எனும் சொல். பழமை என்றால், பழம் போன்றது, பழகப் பாவிப்பது, பழனம் சார்ந்தது எனப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம். அவ்வகையிலே, பழகப் பாவிக்கும் தனித்தன்மையோடு பேசுதல் என்கிற பாங்கில் கொண்ட புனைபெயரே பழமைபேசி என்பதாகும்.
வட்டார வழக்கினை எழுத்தாக்குவதற்கென்று ஒரு நெறிமுறை கிடையாது. இலக்கண வரம்பும் கிடையாது. தனது வட்டாரத்தின் மீது ஈர்ப்புக் கொண்ட படைப்பாளிகளும், நாட்டுப்புறவியலில் ஆர்வம் கொண்டவர்களும்தான் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர். எனவே அதில் சில குறைபாடுகள் இருப்பதும் இயல்பே. சொற்களை எழுத்து வடிவில் பதிவு செய்யும் போது, ஒலிக்கும் முறையும் முகபாவனைகளையும் அப்படியே கொண்டுவர இயலாது என்பதே காரணம். இயன்ற வரையில் ஊர்ப் பழமைகளை அப்படியே வாசகர்கள் மனதில் விரியச் செய்திருக்கிறேன்.
கொங்குச் சீமையைப் பொறுத்த மட்டில் சைவ சமயத்தின்பால் அபரிதமான ஈடுபாடு கொள்வது என்பது மிகவும் தொன்மையானது என்றே கூறலாம். சிவராத்திரி என்று வந்து விட்டால், சீமை முழுதும் அறநெறியோடு வழிபாடுகளும், விழாக்களும் வெகு விமரிசையாக வடிவெடுக்கும். அத்தருணத்தில் இறைவனுக்கு, பயிரிட்டு அறுவடை செய்த பல தானியங்களையும் கலந்து வேக வைத்துப் படைப்பது என்பது வழமை. அதை நினைவிற் கொண்டு பள்ளயம் என்கிற தலைப்பின் கீழ், ஒரு பல்சுவைத் தொகுப்பாக நான் வாழும் அமெரிக்க மற்றும் தாயகத்து வாழ்வியற் கூறுகள் பற்றிய கட்டுரைகளை எமது வலைதளத்தில் இட்டிருக்கிறேன். அவை இப்புத்தகத்து வாசகர்கள் மனதையும் கவரும் என்றே எண்ணுகிறேன்.
மேலும் எனது படைப்புகளை வாசித்து வாழ்த்துரை வழங்கியோருக்கும், www.pazamaipesi.com எனும் வலைதளத்தை ஏற்படுத்தி அதில் எமது காலச்சுவடுகளைப் படைப்புகளாய் இட வைத்த அமெரிக்காவில் உள்ள சார்லட் நகரத்தில் இருக்கும் ஜெய் சுப்ரமணியம் மற்றும் செந்தாமரை பிரபாகரன் அவர்கள், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையினர், வலையுலக நண்பர்கள், வாசகர்கள், அட்டைப்படம் கொடுத்து உதவிய நண்பர் சுரேஸ்பாபு, எமது படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் பதிவர் ஆரூரன் மற்றும் அருட்சுடர்ப் பதிப்பகத்தாருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி!
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்,
கடைசியா இனத்துலதான வந்து அடையணும்!
புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்
1. விஜயா பதிப்பகம், கோவை
2. சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், கோவை
3. ரீடர்ஸ் பார்க்- கோவை
4. உடுமலை. காம். உடுமலைப்பேட்டை
5. நியூ புக் லேண்ட், தி.நகர், சென்னை
6. மதி நிலையம், கோபாலபுரம் சாலை, சென்னை
7. பாரதி புத்தகநிலையம், ஈரோடு
8. வள்ளலார் புத்தக நிலையம், ஈரோடு, பவானி, கோபி
என்றும் அன்புடன்,
பழமைபேசி
pazamaipesi@gmail.com
7/13/2010
FeTNA: கூடுதல் படங்கள் நகர் படக்காட்சியாக!!!
Thanks to Mr. Ramesh Ramanathan
படங்கள் மூலமும் உதவியும்: உயர்திரு. இரமேஷ் இராமநாதன் அவர்கள்
Thanks to Mr. Ramesh Ramanathan
காட்சிப் படங்கள்
சீரமைக்கப்பட்ட காணொலிகள் விரைவில்....
7/12/2010
சார்ல்சுடனும் பனை நிலமும்!!
அடுத்த ஆண்டு தமிழர் திருவிழா நடக்கப் போற இடம் சார்ல்சுடன் அப்படின்னு சொன்னதும் நான் சொன்னேன், கூட்டம் கூட்டுறது கடினமாச்சேன்னு. ஏன் அப்படி சொன்னேன்னா, அந்த ஊரு ஒரு கோடியில இருக்கிறதுதான் காரணம். ஆனா மக்கா, இவங்க இருக்கிற சுறுசுறுப்பைப் பார்த்தா, அடுத்த ஆண்டு விழா வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றுல ஒரு மாபெரும் திருப்பு முனையா இருக்கும் போல இருக்கே??
ங்கொய்யால, பனை நிலமா? கொக்கா?? பொளந்து கட்டுங்க.... உங்க நாட்டுப்புறத்து வாத்தியத்துக்கே வருவாய்ங்கய்யா மக்கள்! வாழ்த்துகள்!!
7/11/2010
அமெரிக்கத் தலைநகரில் கோலாகல முத்தமிழ் விழா - கண்ணோட்டம்!
மாலை நேரத்தில், மரங்கள் கூடிய சோலைவனம் போன்றதொரு இடத்தில், செர்மன் டவுன் ந்கர உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், கூடியது செந்தமிழர் கூட்டம். நான்கு மணிக்கு, ஆசான் கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் தமிழ் வாழ்த்துப்பா பாட, விழா இனிதே துவங்கியது.
முதல் நிகழ்ச்சியாக, மழலையர் பங்கேற்ற நடனப் போட்டி இடம் பெற்றது. எட்டுக் குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறினர். இப்போதெல்லாம் குழந்தைகள் சரிவர ஆடாவிட்டால், அதுதான் செய்தி. அந்த வகையிலே, அவர்கள் அனைவருமே வெகு சிறப்பாக ஆடினர்.
கல்பனா மெய்யப்பன் அவர்கள் ஒருங்கிணைப்பில், மேரிலாந்து மாணவர்கள் படைத்த நகைச்சுவை நாடகம் அவர்கள்தம் முயற்சியின் முதல்படி. இனிவரும் காலங்களில், இனியும் சிறப்பெய்தும் என்பதில் ஐயமேதும் இல்லை.
அடுத்து, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி தலைமையுரை ஆற்றிப் பேசினார். அவருடைய பண்பட்ட பேச்சுக்கும், பணிவுக்கும் தமிழ்ச் சங்கம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிந்தது.
செய்லாளர் உரையாக கல்பனா மெய்யப்பன் அவர்களும் முதன்மை விருந்தினர் என்ற முறையில் திரு.இராஜ் பாபு இ.ஆ.ப அவர்களும் பேசி முடித்ததை அடுத்து, சீரிய நோக்கமொன்றைக் கையிலேந்தியபடி அரிமாவாய்த் தோன்றினார் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள். அமெரிக்கத் தலைநகரில் தமிழ் மையம் நிறுவ இருப்பதை, பலத்த கரவொலிக்கு இடையில் அறிவித்துப் புன்னகை பூத்தார்.
புன்னகை இதழ்கள் விரிந்து, வெண்முத்துப் பற்கள் ஒளிர்வதற்கு வெகு நேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆம் அடுத்தடுத்து வந்த அறிவிப்புகள், அமெரிக்காவில் தமிழ் கோலோச்சுவதைப் பறை சாற்றும் விதமாகவே அமைந்தன. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள், தன் சொந்தப் பணமாக பத்தாயிரம் வெள்ளிகளையும் வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக முதல் தவணையாக பத்தாயிரம் வெள்ளிகளையும் அறிவித்தார். அடுத்து வந்த அறிவிப்போ, இதையும் விஞ்சி வானுயர இருந்தது. ஆம், திரு. ராஜ்பாபு இ.ஆ.ப அவர்கள் கட்டிட நிதிக்காக ஐம்பதினாயிரம் வெள்ளிகள் கொடையாக அளிப்பதை அறிவிக்கவும் அரங்கமே அதிர்ந்தது.
அடுத்தபடியாக, கெளரி சிதம்பரம் பயிற்சியில், இளமை இதோ இதோ எனும் பாடலுக்கான நடனம் சிறப்பாக நடந்தேறியது. கயாம்பு கண்ணன் அவர்கள் அழைப்பு விடுக்க, தமிழ்ர் பண்பாடு குறித்துப் பேச கம்பீரமுடன் மேடையேறினார் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள். தெளிவான, நிதானமான, ஆளுமையான பேச்சு இவருடையது. அடுத்தவரை தாழ்த்திப் பெறுவது சாதனையா? உழைப்பில் தோய்த்து வடிப்பதே வெற்றிச் சாதனை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தென்றல் முல்லை இதழ், அவ்விதழின் ஆசிரியர் திரு. கோபிநாத் அவர்களது முன்னிலையில் வெளியிடப்பட்டது. பிரதியை பெற்றுக் கொண்டவர்களுள், திரு மார்ட்டின் அவர்களும் ஒருவர். திரு. எழிலரசன் என்கிற இராசாமணி அவர்கள், தமிழ் ஒலிப்பின் ழகர விழிப்புணர்ச்சியைப் பற்றிப் பாடல்களுடன் அழகுற விளக்கினார். இவரை அடுத்து, சொர்ணம் சங்கர் அவர்கள் தோழர் தியாகு அவர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
தோழர் தியாகு அவர்கள், தன் கணீர்க் குரலில் தமிழின் செழுமை, வளமை, தமிழர் பண்பாடு குறித்து பல இலக்கிய மேற்கோள்களுடன் பேசி, அரங்கத்தினரைத் தன் பேச்சின் நயத்தால் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையாகாது; மடை திறந்த வெள்ளம் போல, தமிழாறு பாய்ந்தது அவரது பேச்சில்.
அடுத்து இடம் பெற்றதுதான், வாசிங்டன் தமிழ்ச் சங்க 2010ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சி என்று சொல்வேன். மாபெரும் கிராமிய நடன நிகழ்ச்சி அது. கிராமியம் சார்ந்த கலைகளும், வாழ்வும், இலக்கியமும் என்றென்றும் பசுமையானவை; இயற்கையை ஒட்டியவை; சுருங்கக் கூறின் மனிதனின் வாழ்வை அப்பட்டமாய்க் காண்பிப்பவை. அதிலே எந்தவொரு சோடிப்புகளும் இல.
தெருக்கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் முதலான இருபத்தியொரு வகையான நாட்டுப்புறக் கலைகள் இடம் பெற்றன. அமெரிக்காவில் இருக்கிற தமிழ்ச் சங்கங்கள் எல்லாம், கலைராணி நாட்டிய சாலையின் இந்த நாட்டுப்புறக் கலையை கண்டு களித்து, பண்பாட்டை முன்னெடுத்தச் செல்ல வேண்டும். அப்படிச் செய்யாவிடில், அது தமிழர்க்கே ஒரு இழப்பு என்பது எம் தாழ்மையான எண்ணம். சமீபத்தில் நிகழ்ந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் திருவிழாவில், இவர்களது பங்களிப்பு இடம் பெறாதது ஏனோ தெரியவில்லை. அமையப் பெற்றிருந்தால், விழாவுக்கு மேலும் சிறப்பைக் கூட்டி இருக்கும்.
நாட்டுப்புறக் கலையைக் கண்டு களித்த அதே வேகத்தில், மாலை உணவும் நல்லவிதமாகப் பரிமாறப்பட்டது. அதில், குறிப்பாக வடை மிகவும் சுவையாக இருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர், அனுகோபால் மற்றும் ஜான்சன் ஆகியோரது பயிற்சியில் உருவான நடனங்கள் இடம் பெற்றது.
லதா கண்ணன், கீர்த்தி, சகானா அவர்கள் அளித்த இசைச் சங்கமத்திற்குப் பின்னர், ஐந்தாவது தூண் அமைப்பின் சமூக விழிப்புணர்வு நாடகமாக, சுந்தந்திர அடிமைகள் எனும் நாடகம் இடம் பெற்றது. நண்பர் விஜய் ஆனந்த் அவர்கள் நெறியாள்கையில் அற்புதமாக அரங்கேறியது நாடகம். இலஞ்ச ஊழல் குறித்த விழிப்புணர்வை அப்பட்டமாக விளக்கியது. ஜெயலலிதா அவர்களைப் போன்றதொரு கதாபாத்திரத்தில், அனாயசமாகக் கலக்கினார் லதா கண்ணன் அவர்கள்.
மொழியும் இனமும் என்ற தலைப்பில், பேராசிரியர் ஜெயராமன் பாண்டியன் மொழி மற்றும் இன எழுச்சியின் அவசியத்தை உணர்த்திப் பேசினார். இதற்கு முன்னதாக, முனைவர் பாலாஜி அவர்கள் நடிகை ப்ரியாமணியுடன் கேள்வி பதில் நேரத்தை சுவாரசியமாக நடத்தி முடித்திருந்தார்.
பதிவர் பழமைபேசி, கவிஞர் தாமரையுடன் ஒரு கலந்துரையாடலை தொகுத்தளித்தார். அப்போது வினவிய வினாக்களுக்கு, கவிஞர் தாமரை அவர்கள் எளிமையாகவும், சிந்தனையைக் கிளறும் வண்ணமாகவும் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்.
இறுதியாக, முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் தலைமையில், அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி மற்றும் பண்பாடு வளர்ப்பது ஆண்களா? பெண்களா?? எனும் தலைப்பிலான பட்டிமன்றம் நடைபெற்றது. சுருக்கமாகவும், சுவையாகவும் நடத்தி முடித்தார். இறுதியில், வண்டியின் இரு சக்கரங்கள் குட்டையாகவும் நெட்டையாகவும் இருப்பதில்லை. அது போலவே, ஆண்களும் பெண்களும் வகிக்க வேண்டிய பங்கும் ஒரு போலவே அமைகிறது எனத் தீர்ப்பளித்தார். இறுதியில், நிறைவை எட்டியது முத்தமிழ் விழா; விழா மட்டுமல்ல, நம் மனதும்தான்!!
7/09/2010
வட அமெரிக்க வலைப்பதிவர்களின் சில படங்கள்!!!
அமெரிக்கத் தலைநகரில் முத்தமிழ் விழா 2010, அழைப்பு!
முத்தமிழ் விழா 2010
ஜூலை 10, 2010 சனி மாலை 3 மணி முதல் இரவு 10.30 வரை
கவிஞர் தாமரை (திரைப்படப் பாடலாசிரியர்), சொற்பொழிவு
திரு. எழிலரசன் (இராசாமணி), தமிழ் ஒலிப்பில் “ழ” விழிப்புணர்ச்சி(பாடல்களுடன்)
பேராசிரியர் ஜெயராமன் பாண்டியன் – மொழியும் இனமும்
செல்வி ப்ரியாமணி, திரைப்பட நடிகை (பார்வையாளர்களுடன் இணைந்து அளிக்கும் நிகழ்ச்சி)
இசைத்தமிழ்
திருமதி லதா கண்ணன் – இசை சங்கமம்
திரு. கிளெமெண்ட், திரு. அல்டிரின், திருமதி சுஜா – காக்கை சிறகினிலே..
பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி – ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலாஜி மாபெரும் கிராமிய நடனம் – கலைராணி நாட்டிய சாலை மாணவிகள் குழு நடனங்கள் நாடகம்: சுதந்திர அடிமைகள் (வெர்ஜீனியா நண்பர்கள்)
நாடகத்தமிழ்
நாடகம்: மெரிலாண்ட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் – வசூல்ராசா MBBS
7/08/2010
7/07/2010
ஃபிரான்சிசு கோத்!
”காலை மணி ஒன்பது இருபது ஆகிறது; இன்னும் இவர் வந்த பாடில்லையே? நேற்றைக்கே அந்த கோப்பைச் சரிபார்த்து ஒப்படைக்கச் சொல்லி இருந்தேன். பத்து மணிக்குள்ளாக கோப்பில் கையொப்பமிட்டு, தலைநகரில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கு மின்பிரதி அனுப்பியாக வேண்டுமே? இவர் ஏன் இன்னும் வரவில்லை?” என்று சக அலுவலரும், சக தமிழருமான ஃபிரான்சிசு கோத் என்பாரை உள்ளூரக் கடிந்து கொண்டிருந்தார் முக்கிய அதிகாரியான கொங்குநாதன்.
”hello! Mr. Kongu Naathaan?”
”Yes, Speaking!!”
“Yeah sir, we need to verify about Mr. Francis Goth!”
“Yes, he is my subordinate... And I need him right now!!”
“Sure sir! There is little confusion and would request him to come to you; and apologize for the inconvenience that happened!!”
“That’s fine; thank you!!”
வெகுநேரம் காத்திருக்க வேண்டியதில்லாமல், ஓரிரு மணித்துளிகளிலேயே வந்தடைந்தார் ஃபிரான்சிசு கோத்!
“வாங்க ஃபிரான்சிசு! என்னங்க ஆச்சு? ஏன் தாமதம்??”
”வணக்கம் ஐயா! முதல்ல இந்த கோப்பைச் சரிபார்த்து கையொப்பம் இடுங்க. பிறகு பேசலாம்!”
கொங்குநாதனும் பிரான்சிசு சொல்வது சரியென நினைக்கவே, இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கிப் போனார்கள். அனுப்ப வேண்டிய மின்பிரதியைக் குறித்த நேரத்திற்கு அனுப்பி வைத்து, அதையொட்டிய கலந்துரையாடலுக்கான பல்வழி அழைப்பில் பங்கேற்றுவிட்டுத் தன் இருக்கைக்குத் திரும்பிய வழியில் ஃபிரான்சிசும் எதிர்ப்பட்டார்.
“வாங்க ஃபிரான்சிசு, என்னோட அறைக்குப் போலாம் வாங்க!”
“ஆமாங்க ஐயா; நானே வரலாம்னுதான் இருந்தேன்!”
”சொல்லுங்க, உங்களுக்கு என்ன பிரச்சினை? காலையில ஏன் வர்றதுக்குத் தாமதம்??”
”ஐயா, இந்தப் பிரச்சினை அடிக்கடி எனக்கு வருதுங்க ஐயா! என்மேல இனவேறுபாட்டைக் காண்பிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்!”
“என்ன ஃபிரான்சிசு? என்ன சொல்றீங்க??”, ஃபிரான்சிசு சொல்வதைக் கேட்டு அதிர்ந்து உணர்ச்சி வயப்படலானார் கொங்குநாதன்.
“ஆமாங்க ஐயா! நான் இங்க வரும்போதும் சரி, வாசிங்டன்ல இருக்குற தலைமை அலுவலகத்துக்கு மாதாமாதம் போகும் போதும் சரி, வாயில்ல இருக்குற காவல் அதிகாரிகள் என்னை மாத்திரம் மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்துறாங்க! எனக்கு இது பெரும் மன உளைச்சலைக் கொடுக்குதுங்க ஐயா!”
“அஃகஃகா! இதுதானா பிரச்சினை? கொஞ்சம் நீங்க, உங்களை ஆசுவாசப்படுத்திகுங்க!!”
“என்ன ஐயா சொல்ல வர்றீங்க!”
”ஆமாங்க பிரான்சிசு! அவங்க, தன்னோட கடமையச் செய்யுறாங்க. அதுல என்ன தவறு இருக்க முடியும்? யாரும், தான் தானாக இருக்கிற வரையிலும் எந்த பிரச்சினையும் வர்றதில்லை. தன்னுடைய மரபு, பண்பாடு, அங்கம், இருப்பிடம், பின்புல அடையாளங்கள்னு எதோ ஒன்னுல இருந்து பிறழும் போது, தெரிந்தோ தெரியாமலோ, எதேச்சையா இந்த மாதிரி அசெளகரியங்கள் நடக்கத்தான செய்யும்? என்ன நாஞ்சொல்றது சரிதானே??”
”போங்க ஐயா! நீங்க சொல்றது சுத்தமா ஒன்னும் புரியலை!”
”அப்படிங்களா? ஆமா, நீங்க யார்??”
“என்னங்க ஐயா, இப்படிக் கேட்டுட்டீங்க? நாம நல்ல நண்பர்கள்; சக தமிழர்கள் அல்லங்களா?”
“ம்ம்... இப்படி வாங்க வழிக்கு! உங்களோட அடையாள அட்டையையும் என்னோட அடையாள அட்டையையும் ஒருசேரக் கொண்டு போய் அந்த அதிகாரிகிட்டக் கொடுத்தா, இதை அவர்னால உறுதிப்படுத்த முடியுமா?”
ஆழ்ந்த யோசனையினூடாகக் குழப்பத்தில் இருந்த பிரான்சிசைக் கண்டு, தானே உரையாடலைத் தொடர்ந்தார் கொங்குநாதன்.
“ஃபிரான்சிசு, காவல் அதிகாரிகள் உங்க அடையாள அட்டையையும், உங்களையும் மாறி மாறிப் பார்த்து இருப்பாங்க. நீங்களோ, செந்தமிழனாக் காட்சி அளிக்கிறீங்க. உங்க அடையாள அட்டையில இருக்கிற உங்க நாமகரணமோ வேற மாதிரிக் காட்சி அளிக்குது. அந்த மாறுபாடானது, அவருக்குள்ள ஒரு ஐயப்பாட்டைத் தோற்றுவிச்சி இருக்குமாய் இருக்கும்!”
“ஓ, அப்படிங்களா?”
“ஆமா; அவங்களும் மேலதிகமா உங்களைப் பற்றின தகவலை உறுதிப்படுத்தறதன் மூலம் தன் கடமையச் செய்ய முற்பட்டு இருக்கலாம் ஃபிரான்சிசு!”
“ஐயா, இதைத்தான் நாம நாமளா இருக்கிற வரையிலும் எந்த பிரச்சினையும் வராதுன்னு சொன்னீங்களா?”
”ஆமாங்க ஃபிரான்சிசு! சரி, நான் நாளைக்கு ஊருக்குப் போறேன் தெரியுமல்ல?”
“ஆமாங்க; மூணு வாரம் நீங்க இல்லாம நான் எப்படி இருக்கப் போறேனோ தெரியலை?”
”அதெல்லாம் நீங்க சமாளிச்சுடுவீங்க...”
“சரிங்க ஐயா! நிறையத் தமிழ்ப் புத்தங்கங்கள் வாங்கிட்டு வாங்க!”
“நிச்சயமா ஃபிரான்சிசு!”
மறுநாள் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கே சென்ற கொங்குநாதனுக்கோ மகிழ்ச்சி காத்திருந்த்து. ஆம், தம்மை வழியனுப்ப வந்திருந்த ஃபிரான்சிசு மற்றும் அவர்தம் குடும்பத்தினரைக் கண்ட்தில் பெருமகிழ்ச்சி அவருக்கு.
சார்லட்டில் இருந்து லுப்தான்சா விமானம் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து தொடர் வண்டி மூலம் கோயம்பத்தூரைச் சென்றடைந்தார் கொங்குநாதன். நகரின் மேம்பட்ட சாலைகளும், நவீன வசதிகளும் அவரைப் பெருமகிழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. ஆனாலும், நகரில் இருக்க மனம் கொள்ளாது தன் கிராமத்தைச் சென்றடைந்தார் கொங்குநாதன். அங்கு அவருக்கு நல்லதொரு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
கிராமத்தில் இருக்கும் அவருக்கு, தினமும் ஊர்ப் பிள்ளைகளுடன் நேரத்தைச் செல்வழிப்பதில் நாட்கள் நகர்வதே தெரியவில்லை. மேலும் இவரது தமிழார்வம் அந்தக் குழந்தைகளை இவரின்பால் கவர்ந்து, ஈர்ப்புக்கு உள்ளாக்கியது. இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த சிறுவன் மாடசாமியும் தன்பங்குக்கு வினவலானான்,
“சித்தப்பா, நீங்க ஏன் நம்ம ஊர் ஆலமரத்தை மட்டும் மறுபடியும், மறுபடியும் படம் எடுத்துட்டே இருக்கீங்க?”
“ஓ, அதுவா? ஆலமரம்ன்னா எனக்கு ரொம்ப புடிக்கும்டா. அங்கதான் நான் உங்கள மாதிரி இருக்கும் போது எப்பவும் இருப்பேன். தனியா உக்காந்து மரத்தோட பேசிட்டுக்கூட இருப்பன்ந் தெரியுமா?”, குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிப் போனார் கொங்குநாதன்.
”அப்புடியா சித்தப்பா? அப்ப, ஆலமரத்தைப் பத்தியும் சித்த சொல்லுங்க சித்தப்பா!”
“ஆமா அங்கிள், ஆலமரத்தைப் பத்தியும் சொல்லுங்க அங்கிள்!”, உடனிருந்த மற்ற வாண்டுகளும் நச்சரிக்கத் துவங்கவே, உற்சாகமாய் மேற்கொண்டு பேசலானார் கொங்குநாதன்,
“டே கண்ணுகளா, ஆலமரம் வலுவான மரம். அதோட விதை நிலத்துல விழுந்தவுடனே, முதல்ல விடுறது முளை. அப்புறமா நிலத்துக்குள்ள ஊன்றுறது ஆணி வேர். சரியா?”
“சரிங்க சித்தப்பா, இன்னுஞ் சொல்லுங்க!”
“சரி, முதல்ல வேர்களைப் பார்ப்போம். ஆணி வேர் நல்ல வலுவா நங்கூரமா நேர்த்திசையில நிலத்துல வெகுதூரத்துக்கு ஊன்றும். நிலத்துக்குள்ள செங்குத்தா வளர வளர, அதுக்கு பக்கபலமா பக்க வேர்களும் படரும்!”
“ஆமாங்க சித்தப்பா, நம்மூர் ஆலமரத்து வேர் பக்கத்துல இருக்குற வீதம்பட்டி மாரியாத்தா கோயல் முன்னாடி கூட இருக்குதாம்!”
“ஆமாடா மாடசாமி, இந்தப் பக்க வேருக பலகல் தொலைவுக்கும் படரும். பக்க வேர்களுக்கு வலுவா, பக்க வேர்ல இருந்து விரவி வேர்கள் விரவி இருக்கும். ஆணி வேர்ல இருந்து, அடுக்கடுக்கா இந்த பக்கவேர்களும் விரவி வேர்களும் படர்ந்து விரியும். விரவி வேர்கள்ல இருந்து பிரியுறது சல்லி வேர்கள். சின்னசின்னதா முளைச்சி, மரத்துக்கும் மற்ற வேர்களுக்கும் ஊட்டமா இருக்குறதுதான் இந்த சல்லி வேர்கள்!”
“அப்படிங்களா சித்தப்பா. கேக்க்க் கேக்க நெம்ப ஆசையா இருக்கு சித்தப்பா. அப்படியே நிலத்துக்கு மேல மரத்துல இருக்குறதையும் சொல்லுங்க சித்தப்பா!”
“சொல்றேன் சொல்றேன்.... அடி மரத்தினின்று பிரிவது கவை; கவையிலிருந்து பிரிவது கொம்பு; கொம்பிலிருந்து பிரிவது கிளை; கிளையிலிருந்து பிரிவது சினை; சினையிலிருந்து பிரிவது போத்து; போத்திலிருந்து பிரிவது குச்சு(சி); குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு!”
”இவ்வளவு இருக்குதுங்களா சித்தப்பா? அப்ப அந்த விழுதுங்றது?”
“ஆமாடா மாடசாமி, அதான் ஆலமரத்தோட சிறப்பே. கிளையில இருந்து, நிலத்தை நோக்கி கீழ்ப்புறமா விழுந்து தொங்குறதுக்குப் பேர்தான் விழுது. இதுவே நிலத்துல விழுந்தவுடனே, நிலத்துக்குள்ள வேரா மாறி ஊன்றவும் செய்யும்!”
“ஆமாங்க அங்கிள்; நம்மூர் ஆலமரத்தை மூனுவிழுது ஆலமரம்னு ஏன் சொல்றாங்க?”
“முதல்ல மூனு விழுதுகள் மட்டுந்தான் பிரதானமா நிலத்துல ஊன்றி ,பெரிய மரமாக் காட்சி அளிச்சுட்டு இருந்த்து. ஆனா, இப்ப நிறைய விழுதுகள் இருக்குடா செல்லம்!”
இப்படியாக்க் கிராமத்தில் இருந்த இரண்டு வாரங்களும், ஊரின் ஆலமர விழுதுகளான அடுத்த தலைமுறைக் குழந்தையினரோடு வெகு இனிமையாக்க் கழிந்தன கொங்குநாதனுக்கு. குழந்தைகளுக்கா, இவரைப் பிரிவதில் மிகுந்த வருத்தம். அந்த வருத்தத்திலும் வினவினாள் மச்சுவீட்டுக்காரனின் பேத்தியான செளம்யா,
“அமெரிக்கா அங்கிள், நீங்க அமெரிக்காவுல இருக்கீங்க? ஏன், தமிழ் தமிழ்னு ரொம்ப ஆவலா இருக்கீங்க?”
“ஆமாடா கண்ணு, எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும் கடைசில இனத்தோடதான வந்தடையணும்?”
செளம்யாவுக்குப் புரிந்ததோ இல்லையோ, செளம்யாவின் அம்மாவான மீனாட்சிக்குப் புரிந்திருந்தது, மிகுந்த மரியாதையுடன், இரு கரங்களையும் ஒன்று கூப்பி கொங்குநாதனை நோக்கி வணங்கினர் மீனாட்சியும், மச்சுவிட்டுப் பெரியவரான சேனாதிபதியும்.
கிராமத்தில் இருந்து கோயம்பத்தூர் வந்த கொங்குநாதன், வேண்டியனவற்றைக் கொள்வனவு செய்து உற்றார் உறவினரோடு இருந்து பொழுதைக் கழித்துவிட்டு, மீண்டும் சென்னை, ஃபிராங்க்பர்ட்டு வழியாக சனிக்கிழமை மாலையில் சார்லட் வந்தடைந்தார்.
ஞாயிற்றுக் கிழமை முழுதும் பயணக் களைப்பை நீக்கும் பொருட்டு ஓய்வெடுத்த கொங்குநாதன், திங்கட்கிழமை அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, நண்பர்களுக்காக வாங்கி வந்த தமிழ் நூலகளோடு ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்தார்.
மூன்று வாரங்களாகப் புழக்கத்தில் இல்லாவிட்டாலும், தூய்மை குறையாமல் இருக்கும் தனது அறையைப் பார்த்த்தும் வியப்பு மேலோங்கியது. தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு, அதில் இருந்த மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் எழுதிய, தமிழர் பண்பாடு எனும் நூலை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு, நண்பரான ஃபிரான்சிசு அவர்களுடைய அறையை நோக்கி நடக்கலானார்.
அங்கே சென்ற அவருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அறையில் இருக்கும் பரப்பு நாற்காலியின் மேலிருந்த அவரது பெயர்ப்பலகை மாற்றப்பட்டு இருந்தது. உடனே ஃபிரான்சிசைப் பார்த்து கட்டித் தழுவ வேண்டும் போல இருந்த்து கொங்குநாதனுக்கு. ஆம், பெயர்ப்பலகையில் புது வண்ணத்தில் மிடுக்கோடு மிளிர்ந்து கொண்டிருந்தது நாமகரணம், ஃபிரான்சிசு எழில் கோத்!”
குறிப்பு: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2010 ஆண்டு விழா மலரில் இடம் பெற்ற படைப்பு இது. மலரில் இடம் பெற்ற மற்ற படைப்பாளர்களும் சக பதிவர்களுமான பாலாண்ணன், மாப்பு ஈரோடு கதிர் மற்றும் தம்பி க.பாலாசி ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
7/05/2010
வட அமெரிக்கத் தமிழ விழா இனிதே நிறைவு!
அரங்க,ம் நிறைந்த நிகழ்ச்சியாக தெருக்கூத்து நடைபெற்று வருகிறது.... இரவு ஏழு மணி... எம் இருக்கைக்க்குப் பின்னாலே இருந்தவர் உணவுக்காக எழ, தமிழரின் தமிழறியா மகள் கூறினாள்.... இருந்தே ஆக வேண்டும்... நான் அம்மாவிடம் ஒவ்வொரு காட்சியையும் கேட்டுத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்கிறாள்...
தாய் தமிழில் உரைக்க, அவள் ஆங்கிலத்தில் தொடர்ந்து வினவிக் கொண்டே இருந்தாள்... இதிலிருந்து என்ன தெரிகிறது? கதைகளின் மூலமாக, கலைகளின் மூலமாகப் பண்பாட்டைக் கற்றுக் கொடுங்கள். பண்பாடு மேலோங்குகிற போது, மொழி தன்னாலே மேலெழும்.... பிள்ளைகளுக்கு ஆவல் மேலிடும் போது, வரலாறு, மரபு முதலானவற்றின் பின்னணியைக் கடைய முற்படும் போது... மொழி தேவைப்படுகிறது... நிச்சயம், எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் அவளுக்குள் உள்ளிறங்கி இருக்கும்.... பேரவையே... நீ தமிழை விதைக்கிறாய்!
மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இலக்கியக் கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது. சென்ற வருடம், இருநூறு பேர் கலந்து கொண்டதாக எம் நினைவு.... இவ்வாண்டோ, அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கலந்து கொண்டவர் எண்ணிக்கை மேலும் பல நூறுகளை கூட்டிக் காட்டியது.
முனைவர் பர்வீன் சுல்தானா, கவிஞர் தாமரை, முனைவர் இர.பிரபாகரன், முனைவர் ஆறுமுகம், தோழர் தியாகு, முனைவர் முத்துவேல் செல்லையா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியின் போது, வட அமெரிக்காவில் தமிழருக்கென்று ஒரு தமிழ் மையம் கட்டுவது என அறிவிக்கப்பட்டு, அதற்கு நிதியும் குவிந்தது. தமிழ் நூலகம், தமிழாராய்ச்சிக்கான ஒரு துறை, மண்டபம், அறைகள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக கட்டப்பட இருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று.
தமிழர் திருவிழாவில் கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும், பிரத்யேகமாக நன்றி கூறக் கடமைப்பட்டு இருக்கிறேன். சமூகப் பங்களிப்புகளில், தமிழ் வலைப்பதிவர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதைப் பறை சாற்றியவர்கள் இவர்கள் என்பதே எம் தாழ்மையான கருத்து.
சரியாக, நண்பகல் பனிரெண்டு மணிக்கு நிகழ்ச்சிகள் முடிவுற்று அருஞ்சுவை உணவு பரிமாறப்பட்டது. கூடியவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பிச் செல்கையில் மனம்தான் என்னமாய் கனத்திருக்கும்? ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக விடைபெறுவதைப் போலப் பாசாங்கு செய்வதை உற்றுக் கவனித்தேன்.
தமிழர்களே, விழாக்களும் நிகழ்ச்சிகளுமே நம்மை ஒன்று கூட்டிச் சேர்க்கும். உள்ளூர் விழாக்களுக்கும் சென்றிடுவோம். கலந்து,இசைந்து, தமிழராய் வாழ்ந்திடுவோம்.... தொல்லைதரு வினையகன்று உவகை ஓங்கி வாழ்வு செழிக்கட்டும்... தமிழ்க் கட்டமைப்பு வலுவாகிட பேரவையின் வளர்ச்சி விண்ணை முட்டட்டும்!! இதோ, புதிதாய்த் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைவர் முனைவர் பழனிசுந்தரம் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை உரித்தாக்கிடுவோம்!!
காணொலியின் 3 மணி 01 மணித்துளியில் எமது பட்டிமண்டப விவாதம் இடம் பெறுகிறது!
FeTNA: அமெரிக்க நகரை அதிர வைத்த காட்சிகளின் படங்கள்
இன்னும் காதில் பறையொலி ஒலித்துக் கொண்டே இருக்கிறது மக்களே!!!
மேலதிகப் படங்களுக்கு FeTNA2010 எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்.
7/04/2010
FeTNA: பறையொலியில் அதிர்ந்த அமெரிக்க நகர் வாட்டர்பெரி
நலிந்த கலைஞர்களை, கடும் இடையூறுகளுக்கு இடையே அமெரிக்கா வரவழைத்து. அட்டகாசமானதொரு நிகழ்ச்சியை அரங்கேற்றிய பேரவைக்கு தமிழ்ச் சமுதாயம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். நடிகைகளை அழைத்துக் கூத்தடிக்கிறார்கள் எனச் சொன்னவர்களே, தயை கூர்ந்து இத்திருவிழாவில் அவ்விதமாக எதுவும் நடக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்திக் கொள்வது எம் கடமை.
மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக, தமிழ்ப் பண்பாட்டினைப் பறைசாற்றும் விதமாகவே இருக்கிறது இது வரையிலும். உலகின் நாலா புறத்தும் இருந்து வந்த பதிவர்கள் மற்றும் இதழியலாளர்களின் கருத்தினைத் தெரிந்து கொள்வதில் நாட்டமுடன் இருக்கிறேன்.
விழாவில், விமர்சிக்கக் கூடியவையும் எம் பார்வையில் உண்டு. இதழியல்ப் பொறுப்பின் அடிப்படையில் அது குறித்தும் விரிவாக விரைவில் எழுதவிருக்கிறேன்.
விரைவில் இன்னிசைக் கச்சேரி..... தொடரவிருக்கிறது.... 5000 பேர் கொள்ளளவு கொண்ட அரங்கத்தில் எத்துனை பகுதிகள் நிரம்பவிருக்கின்றன என்பதைக் காண ஆவலாயிருக்கிறேன்.
விழா அரங்கின் முக்கிய விருந்தினர் பகுதியில் இருந்து உங்கள் பழமைபேசி!!!
FeTNA: அட்டகாசமான இரண்டாம் நாள்
நான் கண்டு களித்த தமிழ்த் தேனீ நிகழ்ச்சி... பிரமாதம் பிரமாதம்... சின்னஞ் சிறு குழந்தைகள் என்னமாய்த் தெளிதமிழை நுகர்ந்து இன்புறுகிறார்கள்? நிகழ்ச்சிக்கு பொறுப்பாளரான பொற்செழியனுக்கு வாழ்த்துகள்!!
அடுத்த வந்த இலக்கிய விநாடி வினா, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள், குழந்தைகளின் நடன நாட்டியம், தவப்பயிற்சி முதலான நிகழ்ச்சிகள் அபாரமாக இருந்தது. தற்போது அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக, தெருக்கூத்து இடம் பெற்று வருகிறது.
FeTNA: முதல்நிறைவு ஒரு கண்ணோட்டம்
பிரதான அரங்கில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அதே வேளையில், மற்றுமுள்ள எட்டு அரங்குகளில் மற்ற நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்த்து. நான் இங்குமங்கும் சென்று எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு வந்தேன்.
பிரதான நிகழ்ச்சியைப் பொறுத்த மட்டில் இயக்குனர் பாரதிராஜா, தோழர் தியாகு, கவிஞர் தாமரை, நடிகர் விகரம், முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் கூட்ட்த்தினரைக் கவர்ந்தனர்.
பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்குப் பிரதான அரங்கம் நிறைந்தே காணப்பட்ட்து. என்றுமில்லாத அளவுக்கு இவ்வாண்டு விழாவில் தமிழ்ப் பதிவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தமை, பேரவை முன்னோடிகளின் புருவத்தை உயர்த்த வைத்த்து.
கவியரங்கம் வெகு சிறப்பாக நடந்தேறியது. பங்கேற்ற அனைத்துக் கவிஞர்களும் தெள்ளு தமிழில் அசத்தினர். முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் மண் பயனுற வேண்டும் என்கிற தலைப்பில் பேச்சாளுமையோடு பல தகவல்களை அடுக்கினார்.
நண்பகலுக்குப் பின்னர் இடம் பெற்ற வட அமெரிக்கப் பதிவர் சந்திப்பு, நேர்த்தியாக நடந்தேறியது. மொத்தம் 40 பேர் கலந்து கொண்டனர். எனக்குத் தெரிந்த வகையில், அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய சந்திப்பு இதுவாகத்தான் இருக்கும்.
தனிப்பட்ட முறையில், நண்பகலுக்குப் பின்னர் பல பணிகளில் ஈடுபட வேண்டி இருந்த்தால் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தொகுத்தளிக்க முடியாமற்ப் போய் விட்ட்து. இன்றும் அவ்விதமே இருக்கும் என எண்ணுகிறேன். எனினும், நேரிடையாக வலையில் விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப்ப்படுவதைக் கண்டு மகிழ்வீராக. கிடைக்கும் அவகாசத்தில், அவ்வப்போது இடுகை இட முயற்சிக்கிறேன்.
அரங்கத்தில் இருந்து பழமைபேசி.
7/03/2010
FeTNA: நண்பகல் நேரத்தில்......
செந்தமிழ் நாட்டில் இருந்திருக்கும் சிறந்த கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்கள் குத்து விளக்கு ஏற்றுப்வார்கள் என அறிவிக்கப்பட,மேடையில் அழகாய், மிடுக்காய், கம்பீரமாய் இருந்த இரு கோடிக் குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன். அறிவிப்பாளரின் கணீர்க் குரலில்
அரங்கம் மெய்சிலிர்த்துப் போனது.
அடுத்து முனைவர் பழனி சுந்தரம் அவர்கள், பணிவார்ந்த மற்றும் உற்சாக வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கடும் உழைப்பை நல்கிய கனெக்டிக்கெட் தமிழ்க் குடும்பத்தினருக்கு உணர்ச்சி பொங்க நன்றியும் நவில்ந்தார்.
நல்ல நல்ல பிளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி...நல்ல தலைவன் அமைந்துவிட்டால் இனமே செழிக்கும்...எனச் சொல்லி நிறுத்திய அறிவிப்பாளர், தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களை அழைத்தார்.
பின்னர் வந்த அற்வாழி இராமசாமி அவர்கள் வெகு எளிமையாக மேடை ஏறினார். ஆனால், ஏறியதுதான் தாமதம், மடை திறந்த வெள்ளம் போல தமிழாறு பெருக்கெடுத்து ஓடியது. தெளிதமிழும், நற்றமிழும் தேனாய் இனித்தது. அரங்கம் கட்டுண்டு நிசப்த நிலையில் ஆட்கொண்டது.
அதற்கு பின்னர், பேரூர் அடிகள் பேசினார். இனம் மேன்மை காண வேண்டும் எடுத்துரைத்துப் பேசினார். அடிகள் உரைக்குப் பின்னர், தமிழகத்தில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் அனைவரும் மேடையேறி அறிமுகம் செய்து கொண்டனர். ஆனால், விக்ரம் பேசும் போது மட்டும் அரங்கம் கூடுதலாக வெறித்தனமாகக் கை கொட்டித் தீர்த்தது.
அறிமுகத்துக்குப் பின்னர், முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் மண் பயனுற வேண்டும் எனும் பேசினார். பேசினார் என்பதைவிட தீப்பொறியாய்ச் சீறினார் என்றுதான் சொல்ல் வேண்டும். இலக்கியச் சுவையும், தமிழுணர்வும் கலந்து கனலாய்க் கக்கினார். அருமை!!
தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்கிற நடனம் வெகு சிறப்பாக இருந்தது. அடுத்து வந்த அவ்வை 2010 எனும் நாடகத்தில் தமிழ், தமிழனின் சிறப்பு எப்படித் திரிபு அடைகிறது என்பதை இயல்பாகவும், சிந்தனையை ஊட்டுவதாயும் இருந்தது.
திருக்குறள் நடன நிகழ்ச்சிதான் எவ்வளவு நேர்த்தி? ஆகா... ஆகா... ஒவ்வொரு திருக்குறளையும் இசையாகவும், நடனமாகவும் காண்பித்தமைதான் எவ்வளவு அழகு??
அனைவரும் வெகுவாகச் சிலாகித்தனர்.
தற்போது, பனைநிலம் தமிழ்ச் சங்கம் வழங்கும் தமிழ்க் கூத்து நடைபெற்று வருகிறது. இன்னும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற இருக்கிறது. வலைப்பதிவர்கள்
ஏராளமானோர் வந்திருப்பதில், மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!
நேரடில் ஒளிப்பரப்பில் செந்தமிழ் விழா!!!
செந்தமிழ் நாட்டில் இருந்திருக்கும் சிறந்த கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்கள் குத்து விளக்கு ஏற்றுப்வார்கள் என அறிவிக்கப்பட, மேடையில் அழகாய், மிடுக்காய், கம்பீரமாய் இருந்த இரு கோடிக் குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன். அறிவிப்பாளரின் கணீர்க் குரலில்
அரங்கம் மெய்சிலிர்த்துப் போனது.
அடுத்து முனைவர் பழனி சுந்தரம் அவர்கள், பணிவார்ந்த மற்றும் உற்சாக வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கடும் உழைப்பை நல்கிய கனெக்டிக்கெட் தமிழ்க் குடும்பத்தினருக்கு உணர்ச்சி பொங்க நன்றியும் நவில்ந்தார்.
நல்ல நல்ல பிளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி...நல்ல தலைவன் அமைந்துவிட்டால் இனமே செழிக்கும்...எனச் சொல்லி நிறுத்திய அறிவிப்பாளர், தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களை அழைத்தார். பின்னர், தலைவர் அவர்கள் தலைமையுரை ஆற்றி வருகிறார். பேரவையில் தளத்தில், நேரடி ஒளிபரப்பு இடம் பெற்று வருகிறது அல்லது விரைவில் இடம் பெறும்.....
அரங்கத்திலிருந்து உங்கள் பழமைபேசி!
FeTNA funtion is on live streaming world wide!!
நேரடி ஒளிப்பரப்பில் செந்தமிழ் விழா!!!
FeTNA: முதல் நாள் நிகழ்ச்சி இனிதே துவங்கிச் செழிக்கிறது
செந்தமிழ் நாட்டில் இருந்திருக்கும் சிறந்த கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்கள் குத்து விளக்கு ஏற்றுப்வார்கள் என அறிவிக்கப்பட, மேடையில் அழகாய், மிடுக்காய், கம்பீரமாய் இருந்த இரு கோடிக் குத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன். அறிவிப்பாளரின் கணீர்க் குரலில்
அரங்கம் மெய்சிலிர்த்துப் போனது.
அடுத்து முனைவர் பழனி சுந்தரம் அவர்கள், பணிவார்ந்த மற்றும் உற்சாக வரவேற்புரை ஆற்றினார். மற்றும் கடும் உழைப்பை நல்கிய கனெக்டிக்கெட் தமிழ்க் குடும்பத்தினருக்கு உணர்ச்சி பொங்க நன்றியும் நவில்ந்தார்.
நல்ல நல்ல பிளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி...நல்ல தலைவன் அமைந்துவிட்டால் இனமே செழிக்கும்...எனச் சொல்லி நிறுத்திய அறிவிப்பாளர், தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களை அழைத்தார். பின்னர், தலைவர் அவர்கள் தலைமையுரை ஆற்றி வருகிறார். பேரவையில் தளத்தில், நேரடி ஒளிபரப்பு இடம் பெற்று வருகிறது அல்லது விரைவில் இடம் பெறும்.....
அரங்கத்திலிருந்து உங்கள் பழமைபேசி!
வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா முதல்நாள்!
எவ்வருடமும் இல்லாதபடி, விழா துவங்குதற்கு முந்தைய நாளே ஒரு விழா நாள் போல்க் காட்சி அளித்தது என்றுச் சொல்வது மிகையானது அல்ல. அப்பப்பா, என்ன கூட்டம்? என்ன கூட்டம்?? பேரவை விழாவுக்குத்தான் என்ன கூட்டம்??
முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்திய மாலை விருந்து நிகழ்ச்சி. வந்திருந்த விருந்தினர் எல்லாம், கூடிக் குலாவியதில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. மாநகர மேயர் விருந்தில் இருந்தவர்களை வெகு சுவாரசியமாக உசுப்பி விட்டமை இன்னுஞ் சிறப்பு.
கிட்டத்தட்ட 450 பேர் கலந்து கொண்ட அந்த மாலை விருந்து நிகழ்ச்சிகண்ட பேரவை நிர்வாகிகளே வியப்புற்றுத்தான் போனார்கள். இன்றைய முதல் நாள் கூட்டத்திற்கான வருகையும், இடம் பெறும் நிகழ்ச்சிகளும் இன்னும் எழுச்சியைக் கூட்டுமென்பதில் ஐயமில்லை.
மக்களொடு மக்களாக, சீயான் விக்ரம், சந்தானம், இயக்குனர் பாரதிராஜா, முனைவர் பர்வீன் சுல்தானா, நடிகைகள் ப்ரியாமணி, லட்சுமிராய் முதலானோர் வெகுவாக இயல்பாகப் பழகிப் பேசியமை கண்டு எல்லோரும் வியப்புற்றனர்.
நான் இன்னமும் விழா அரங்கத்திற்குச் செல்லவில்லை. விழா அரங்கத்தில் இருந்து, கல்லெறி தூரத்தில்தான் இருக்கிறேன். பின்னிரவு வரை, கவிஞர் தாமரையுடன் இருந்து, கவியரங்கிற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வந்தேன். எனது ஒருங்கிணைப்பில் நிகழ்விருக்கும், கவியரங்கிற்கு உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாடுகிறேன்.
மீண்டும் விழா அரங்கத்தில் இருந்து தொடர்பு கொள்கிறேன். மதில் மேல் பூனையென இருக்கும் வட அமெரிக்கத் தமிழர்காள், புறப்படுகாண்; வந்திடுகாண்; எழுச்சியுறும் தமிழர்காண்!!
7/02/2010
FeTNA: புத்தக வெளியீடும், மாலைப் பொழுது நிகழ்ச்சியும்
மக்களே, வணக்கம். நிகழ்ச்சியானது வெகு செம்மையாக நடந்தேறியது. இந்த எளியவனின் எழுத்துக்கும் சிறப்பானதொரு அங்கீகாரம் வழங்கப்பட்டது. தமிழர்கள் எல்லோரும் பழமைபேசி, பழமைபேசி எனச் சிலாகித்தது அதைவிடப் பெரியதொரு அங்கீகாரமாய் நினைக்கிறேன். நண்பர் ஆருரன் அவர்களுக்கும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!
FeTNA: சிறப்புத் தமிழர் மாலை நேரத்து விருந்து, காட்சிப்படங்கள்
சிறப்பு மாலை நேர விருந்து நிகழ்ச்சி, அரங்கம் கொள்ளாத கூட்டத்துடன் நடந்து வெருகிறது. கிழக்கு அள்வீடு மணி 8க்கு, அரங்கிலிருந்து உங்கள் பழமைபேசி!
செந்தமிழால் சேர்ந்திணைவோம்! செயல்பட்டே இனம் காப்போம்!!
FeTNA: மாலைக் கூடலுக்கான தருணத்தில்....
ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் என ஒரு விடுதியும், ஹாலிடே இன் என ஒரு விடுதியும் உள்ளன. இரண்டிலுமே பேரவைக்கான சிறப்புச் சலுகை உண்டு... எனவே எதோ ஒன்றில் முன்பதிவு செய்து விட்டு, மற்றொன்றுக்கு வர.... காட்சிகள் மிகச் சுவாரசியமாக இருந்தது... இன்னும் சுவாரசியம் தொடர்கிறது.... களேபரம் இல்லாமல் திருமணமா?? முருங்கை இல்லாமல் பந்தியா??
ஹாலிடே இன் சிறப்பு அரங்கத்தில், சிறப்பு அழைப்பாளர்களுடன் வள்ளல், கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல் போன்ற சிறப்பு வருகையாளர்களுக்கான மாலை விருந்து துவங்க இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் எனக்கான சிறப்பும் ஒன்று உண்டு. அதுபற்றி விரைவில் முறையான அறிவிப்பு ஒன்று வெளியாகும்.
வழக்கதினும் மாறாக, இவ்வாண்டு கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல் மற்றும் வள்ளல் எனும் பிரிவில் பதிவு செய்தோர் மிக அதிகம். நான் இவ்விடுகை இடும் தருணத்தில், VIT வேந்தர், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் அவர்கள் வருகை தந்திருக்கிறார்.
சிறப்பான இடுகையின் மூலம், விரைவில் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இருந்து உங்களை எல்லாம் தொடர்பு கொள்கிறேன்....
ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் விடுதியின் முன்றலில் இருந்து, உங்கள் பழமைபேசி!
FeTNA: உற்சாகத்தில் விழா அரங்கம்
கிட்டத்தட்ட நானூறு தமிழ்க் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் காட்சியை இத்தருணத்தில் கண்டு கொண்டிருக்கிறேன். வெளியூரில் இருந்த் வருபவர்களெல்லாம் தத்தம் விடுதிகளை வந்தடைந்து கொண்டிருப்பதாகப் பட்சிகள் சொல்லி விட்டுச் சென்றன.
உள்ளூர்த் தமிழர்கள் ஓடியோடி காரியமாற்றும் காட்சி.... ஆங்காங்கே எள்ளல்களும் நையாண்டிகளுமென சிரிப்பொலிகளும் எழுந்து மோதும் பரவ்சக் காட்சிகள். அதிலும் கொங்கு நாட்டைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் நிறைய இருப்பதாக உணர்கிறேன். அவர்களின் குசும்புடன் மற்றவர் போட்டியிடத் தோற்பதைக் கண்டு எத்தனிக்கிறது எம்முள் நகை....
இடையூடாக நாம் கண்ட குறுஞ்செவ்விகள் உங்களுக்காக....
வணக்கங்க உங்க பேரு??
திருமாறன், திருவாரூரைச் சார்ந்தவன். இங்க கனெக்கெட்ல இருக்கேன்.
நீங்க தன்னார்வத் தொண்டரா??
பாக்குற வேலையப் பார்த்தாத் தெரியலை?!
எத்தனை நாட்களாக இந்த் வேலை??
நான்கு மாதங்களா!
மனநிலை எப்படி இருக்கு??
மகிழ்வா இருக்கு. எங்கக்காவோட கல்யாணத்துக்கு அப்புறம் இப்பதாங்க எனக்குள்ள அந்த மேலான ஒரு குதூகல உணர்வு எனக்கு வந்திருக்கு.
மகிழ்ச்சிங்க... இது எல்லாம் எதுக்கு??
தமிழர்களுக்காகத்தான்!
ஜனனி.
உங்க வேலை??
நான் முழு நேர மாணவி.
எப்படி உணர்கிறீங்க இப்ப??
ரொம்ப மகிழ்வா இருக்கு. நான் ஊர்ல இருந்து வந்து 9 மாதம் ஆகுது. இப்பத்தாங்க எனக்கு ஊர்ல இருக்குற மாதிரி இருக்கு.
ருக்மணி.
நீங்க??
நான் எங்க மக வீட்டுக்கு வந்திருக்கேன். ஊர், கோபி செட்டி பாளையம். அடேயப்பா.... தமிழ்நாட்டுல கூட இந்தளவுக்குத் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லங்க... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்களுக்கும் எல்லாருக்கும் என் வாழ்த்துகள்!
FeTNA: படங்களும் உற்சாக எழுச்சியும்!!
மூன்று மணிக்கெல்லாம் வெளியூர் வண்டிகள் வந்து சேர்ந்துவிடுமென்கிறது அரங்கப் பட்சிகள். வந்து சேர்ந்ததும், ஆனந்தப் பள்ளுவின் தாக்கம் வெகுநிச்சயமாகக் கூடுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மேடையில் நடக்கும் ஒத்திகைகளைப் படம் பிடித்து வெளியிட வேண்டாம் எனப் பணிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அது குறித்த படங்களுக்குத் தடா. முக்கிய விருந்தினர்களைப் படம் பிடித்தவர், அடுத்து இருக்கும் விடுதியில் தொழில்நுட்பக் கடமைகளில் மூழ்கி இருப்பதால், அவை விரைவில் வெளியிடப்படும்
இதோ, எனது அலைபேசியில் பிடிக்கப்பட்டவை இப்போது. நாளைமுதல், பிரத்தியேகப் படப்பிடிப்பாளர் களம் இறங்குவதால், படங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும்.
தன்னார்வத் தொண்டர்கள் களத்தில் இருக்கும் காட்சி!
நிகழ்ச்சிக்கு வருவதா வேண்டாமா என இருமனதோடு இருப்பவர்களே, தமிழர் எழுச்சியைக் காணத்தவறாதீர்!!
செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!