3/31/2023

முட்டாள்கள் நாள்

 

அள்ளக்கை, முட்டாள் என்பன அறிவுத்திறமும் உழைப்புமற்று சொன்னதைச் செய்யும் நபர்களுக்கான சினையாகு பெயர். தானிய வணிகம் செய்யச் செல்லும் போது, தரத்தைக் கண்டறிவதற்காக, சொன்னதும் கொஞ்சமாக  பதக்கூறு(sample) அள்ளி எடுப்பதற்காகக் கூடவே வரும் ஆள் அள்ளக்கை. அது போன்றே இழுத்துவரும் தேரின் சக்கரங்களுக்கு முட்டுப் போடுவதற்காகவே வரும் ஆள் முட்டாள். இதில் முட்டாள் என்பது ஏமாறுபவர்களைக் குறிக்கும் குறிச்சொல்லாகவும் புழங்கப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் வாக்கில் ஆற்றில் பெருவாரியாக மீன்பிடிப்பது வழக்காறு. பிடிபடும் மீன்கள் ஏமாற்றத்துக்கு ஆளானது என்பதான குறியீடாகப் போனது ஐரோப்பிய நாடுகளில். அதைத்தொட்டு ஏப்ரல் முதல்நாள் மீன்கள் நாளென்றும், ஏமாறுபவர்களின் நாளென்றும் கடைபிடிக்கப்படுகின்றது. அதன்நிமித்தம் அறியாதவாறு முதுகுப்புறத்தில் காகிதமீன்களை ஒட்டிவிட்டுச் சிரிப்பதும் வாடிக்கையானது; நம் ஊரில் முதுகுப்புறத்தில் பேனா மை அடித்துச் சிரிப்பதைப் போலே!

குதூகலத்திற்குச் செய்யும் சிறுசிறு விளையாட்டுகள் அந்தந்தத் தருணத்தை இலகுவாக்கக் கூடியவை; மச்சினியின் மீது ஊற்றப்படும் மஞ்சநீரைப் போலே! சடையின் பின்னால் ஒட்டப்படும் ஒட்டுப்புல்லைப் போலே!!

எட்றா வண்டிய... எங்கடா அந்த ஒட்டுப்புல்லு?!3/29/2023

அறியாமை

தம்பி ஒருவர் நடைப்பயிற்சியில் இணைந்து கொள்வது வழக்கம். அண்மைக்காலமாக நிலைமை அப்படி இல்லை. எப்போதாவது இணைந்து கொள்கின்றார். நான்கரை மைல்கள் நடந்து வந்தோம். நடையின் துவக்கத்திலே சொல்லிக் கொண்டேன், ’அறியாமையில் இருந்தால் நல்லது; அறிந்து கொள்தல் கூடக்கூட, வருத்தங்களும் ஏமாற்றங்களும்தான் மிகுகின்றது’ என்றேன். தொடர்ந்து அவர், ‘நீடித்த உண்ணாநிலையால் கவனச்சிதறலின்றி கூர்மையுடன் இருக்க முடியும்’ என்றார்.

வினை இப்படித்தான் துவங்குகின்றது. உடல்நலப்பித்து, இணையப்பித்து முதலானவற்றால் ஏதோவொன்றைச் செய்யத் தலைப்படுகின்றனர். அதில் அவர்கள் முன்னேற்றத்தை அடைய அடைய பித்துநிலையின் எழுச்சியும் மேலோங்கி விடுகின்றது. யுஃபோரியா(yoo-FOR-ee-uh) என ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. EUPHORIA is a feeling of well-being or elation. புளகாங்கிதம்!  இது தற்காலிகமானது. இவர் என்ன காலாகாலத்துக்கும் உண்ணாநிலையில் இருக்கப் போகின்றாரா? உண்ணாநிலையில் இருக்கும் போதும், அடுத்த சிலநாட்களும் அப்படியான உணர்வில் இருப்பார், இருக்கும் போது உள்ளெழுச்சியுடன் போற்றிக் கொண்டிருப்பார். அதைப் பலர் கேட்க, அவர்களும் மேற்கொண்டிருக்கப் போகின்றனர். இப்படியாக ஆங்காங்கே குற்றலைகள் எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டேதான் இருக்கும். அவை தற்காலிகமானது, மங்கிவிடப் போகின்றவை.

சீரான உணவு, உடற்பயிற்சி, அவ்வப்போதைய குறுகியகால உண்ணாநிலை என்பன, நல்ல கவனக்கூர்மை, ஊக்கம் முதலானவற்றை எல்லாருக்கும் எப்போதும் கொடுக்கவல்லன. நீடித்த விளைவை அவைதான் தோற்றுவிக்கும்.

அடுத்து, எடைக்குறைப்பு, அதன்நிமித்தம் ஏற்படுகின்ற யுஃபோரியா குறித்துப் பேச்சு திரும்பியது. பத்து கிலோ குறைத்து விட்டேன், பதினைந்து கிலோ குறைத்து விட்டேன், நல்ல தோற்றம், பொலிவு என்றெல்லாம் புளகாங்கிதம் கொள்வதை எங்கும் காணலாம். ஆனால், என்னால் இப்போது நிற்காமல் மூன்று மைல்கள் ஓடமுடிகின்றது, ஒருமணி நேரம் ஓய்வின்றி நீச்சல் அடிக்க முடிகின்றது, சென்ற ஆண்டைக்காட்டிலும் நாற்பது பவுண்டு எடை கூடுதலாகத் தூக்க முடிகின்றது என்றெல்லாம் சொல்வதை அரிதாகவே காணமுடியும். இஃகிஃகி, இந்த வேறுபாட்டில் இருக்கின்றது வினயம்.

உடலில் 60% நீர். மனிதனின் உடம்பில் இருக்கும் கொழுப்பின் சராசரி அளவு 30 - 40%. தசைநார்களின் அளவு 25%. எடுத்துக்காட்டாக, ஒருவர் 20 கிலோ எடைக்குறைப்பு எனப் புளகாங்கிதம் கொள்கின்றாரென வைத்துக் கொள்வோம். 12கிலோ எடை நீரின் அளவு என்றாகின்றது. எஞ்சிய 8 கிலோவில் கொழுப்பின் அளவு 3.5  கிலோ.  தசைநார்களின் அளவு 2.5 கிலோ. கட்டமைப்புத்தசை உள்ளிட்ட உறுப்புச்சிறுத்தல்கள் 2 கிலோ எனத் தோராயமாக இருக்கலாம்.

30 வயதுக்குப் பின்னர், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஐந்திலிருந்து பத்து விழுக்காடுகள் வரையிலும் தசைநார்ச் சிதைவு ஏற்படுமென்பதும் அறிவியற்கூற்று. தசைநார்களின் சிதைவு என்பது ஆண்டுக்காண்டு கூடிக் கொண்டே போகும். வளர்த்தெடுப்பது மிகவும் கடினம். தக்கவைத்துக் கொள்வதற்கேவும் முறையான உணவு, உடற்பயிற்சி என இருந்தாக வேண்டும். அப்படி இருக்கும் போது, கண்டதையும் மேற்கொண்டு ஒருவர் எதற்காக தசைநார்ச்சிதைவுக்கு ஆட்பட வேண்டும்? தசைநாரில்தான் உடலின் நகர்வுக் கட்டுமானமே இருக்கின்றது.

ஆக எடைக்குறைப்பில் புளகாங்கிதம் என்பதில் அவ்வளவு பொருண்மியம் இல்லை. மாறாகக் கொழுப்பைக் குறைத்து உடல் வலுவைக் கூட்டி இருக்கின்றேனென ஒருவர் சொன்னால் அது புளகாங்கிதப்பட்டுக் கொள்ள வேண்டியதே. கவனித்துப் பாருங்கள், அளவில் சிறிய தோற்றத்தை எட்டி இருப்பார்கள். முகம் சிறுத்திருக்கும். கைகால்கள் சூம்பிப் போயிருக்கும். தொப்பையின் அளவு சற்றுக் குறைந்திருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று விகிதாச்சாரம் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கும். பெரிய பயனில்லை. மாறாக உருவின் தோற்றம் சிறுத்து, அதே வேளையில் எடை குறையாமலோ, கூட்டியோ இருப்பாரெனில், வலுவும் ஆற்றலும் கூடி இருக்கின்றதெனப் பொருள்.

வலுப்பெருக்குடன் ஒரு பவுண்டு எடை கூட்டுவதென்பது அவ்வளவு கடினமான வேலை. முறையான உணவும், உடற்பயிற்சியும் உடலின் இன்னபிற இயக்குநீர் சுரப்பு ஒத்துழைப்பும் இருந்தால்தான் அது செயலாக்கம் பெறும். அப்படியான நிலையில், இருக்கும் தசைநார்களை இழப்பதென்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் வேலை. சரி, கொழுப்பை மட்டுமே குறைக்க முடியுமா? முடியும். மருத்துவக் கண்காணிப்பு, புரதம், கொழுப்பு, நார்ச்சத்துகளுடன் கூடிய உணவுடன் போதுமான உடற்பயிற்சியும் நிதானத்துடன் கடைபிடித்துவருங்கால் படிப்படியாக உடற்கட்டின் தன்மை மாறிவரும். 

The only difference between being uninformed and misinformed is that one is your choice and the other is theirs.3/28/2023

தன்னெரிமம்

ஆங்கிலமொழியில் Autophagy;இது ஆங்கிலமேதானா என்றால், இல்லை. ஜப்பானிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட சொல். Phagy என்றால் எரிமமெனப் பொருள். தனக்காகத் தாமாக எரித்துக் கொள்வதால் Autophagy என்றாளப்படுகின்றது. (aw-TAH-fuh-jee) A process by which a cell breaks down and destroys old, damaged, or abnormal proteins and other substances. The breakdown products are then recycled for important cell functions, especially during periods of stress or starvation.

நம் உடல் என்பது ஆகப்பெரிய வேதிச்சாலை. இப்பேரண்டத்தில்(universe) நிகழ்கின்ற எல்லாமும் ஒரு மனித உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆக நம் உடலும் ஓர் அண்டம்தான். நம் உடலுக்குள் இல்லாத தொழில்நுட்பம் இல்லை, வேதிநுட்பம் இல்லை.

ஐம்பொன் போன்ற சத்துக்கற்களால், கோடானு கோடிக் கற்களால் (அணுக்களால்) கட்டப்பட்டிருக்கின்றது நம் உடல். இயக்கத்திற்குப் போதுமான தனிச்சத்துகள், உணவாக உட்கொள்ளப்படாத போது, இப்படியான கற்களில் சிலவற்றைச் சிதைத்து அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைக் கொண்டேவும் இயங்கத் தலைப்படும். 

ஒருவர் உண்ணாநிலை மேற்கொள்கின்றார். இயக்கத்திற்காக குருதியிலும் உடலிலும் இருக்கும் எரிபொருள் எரிக்கப்படும். ஏறக்குறைய எட்டுமணி நேரத்துக்குப் பின் கல்லீரலின் தற்காலிகச் சேமிப்பில் இருப்பதை எரிபொருளாகப் பயன்படுத்தும். அடுத்த எட்டுமணி நேரத்தில், அது தீர்ந்து போனதும், உடலின் கட்டுமானத்தில் இருக்கும் அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் எல்லாவற்றையும் சிதைத்து அதன்வழி கிடைக்கும் சத்துகளை அதனதன் வேலைகளுக்காகப் பயன்படுத்தும். இதுதான் தன்னெரிமம் எனப்படுகின்றது. இப்படியான தன்னெரிப்புப் பணி முடிந்ததும், உடலில் நிரந்தரமாக சேமிக்கப்பட்டிருக்கும் கொழுப்பு, எரிபொருளாக மாற்றப்பட்டு இயக்க ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படும். நிற்க!

தன்னெரிமத்தால், அரைகுறை, ஒவ்வா, உபரி அணுக்கள் சிதைக்கப்பட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுவதால் உடல் பொலிவுறுகின்றது. புற்று, வீக்கம், வீண் அணுக்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன.  ஆக, ஆயுள் நீடிக்க வழிவகுக்கும் தன்னெரிமச் செயற்பாட்டுக்கு, 48 மணி நேரம் வரையிலான உண்ணாநிலை சிறந்தது; 16 மணி நேர உண்ணாநிலைக்குப் பிற்பாடு தன்னெரிமம் துவங்கும். 

இத்தகவலை விழுமுதலாகக் கொண்டு, தேடலையும் நாடலையும் மேற்கொள்கின்றோம். தன்னெரிமம் குறித்தான கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. மெய்யெனும் வேதிச்சாலையில் பல்வேறு உறுப்புகள் பல்வேறு பணிகளைச் செய்கின்றன. அவற்றுக்கு உள்ளீடு பல்வேறு சத்துகள். சில சத்துகள் சேமிப்புக்குள்ளாகின்றன. சில சத்துகள் அன்றாடமும் நாம் உட்கொண்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக, சில உயிர்ச்சத்துகள்(vitamins) நீரில் கரையக் கூடியன. பயன்பாட்டுக்கு உரியது போக எஞ்சியது கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். இப்படியான தனிச்சத்துகளில் எதற்குப் போதாமை ஏற்படும் போதும், மெய்யெனும் வேதிசாலையானது எங்காவது எதையாவது மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியுமாயெனப் பார்த்து, அதனைச் சிதைத்து, அதிலிருந்து கிடைக்கும் சத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளும். இப்படியும் தன்னெரிமம் நிகழ்கின்றது. ஆக, தன்னெரிமத்துக்குப் பதினாறு மணி நேரம் உண்ணாநிலை மேற்கொண்டேயாக வேண்டுமென்பதில்லை என்றுமாகின்றது.

மேற்கூறிய கூற்றுகளில் எது சரி? இரண்டுமே சரிதான். எப்படி? தொடர்ந்து மூன்று வேளை உணவு, கூடுதலாக அவ்வப்போது சிறுதீன்கள், பழங்கள், காய்கள், குடிநீர்களென எதையாவது உட்செலுத்திக் கொண்டே இருப்பவருக்குச் சத்துப் போதாமை என்பதே கிடையாது. மாறாக செரிமானப்பளுவும் சேமிப்புச்சுமையுமென ஆகிவிடுகின்றது. அப்படியான ஒருவர் நீடித்த உண்ணாநிலை மேற்கொள்ளும் போது தன்னெரிமம் வாய்க்கின்றது.

உடற்பயிற்சியோ அல்லது உடலுழைப்போ கொண்டு உணவுக்கட்டுப்பாடும் தரித்திருக்கும் ஒருவர், உண்ணுவதில் சற்றுக் காலம் தாழ்த்தும் போதேவும் அவருக்குத் தன்னெரிமம் வாய்த்து விடுகின்றது. இப்படியானவர், நீண்ட ஆயுளுக்கும் பொலிவுக்குமென நீடித்த உண்ணாநிலைக்கு ஆட்படத் தேவையில்லை.

தேடலும் நாடலுமற்ற உடலுழைப்புக் கொண்ட ஒருவர், ஏதோவொரு காணொலியோ கட்டுரையையோ அடிப்படையாகக் கொண்டு நீடித்த உண்ணாநிலை மேற்கொண்டால் என்னவாகும்?  மறுசுழற்சிக்கான  ஒவ்வா, அரைகுறை, புற்று, உபரி அணுக்கள் இல்லாத போது, தன்னெரிமச் செயற்பாடென்பது திடமாய் இருக்கும் தசைநார்கள், இன்னபிற கட்டுமானத்தையும் எரிக்கத் துவங்கும். இது தேவைதானா? சொந்த செலவில் சூனியமல்லவா?? உடல்நலம் எனக்கருதிக் கொண்டு பித்துப்பிடித்து அலைபவர்கள், சொல்வதைத் தின்று கேட்பதைச் செய்து மனநோய்க்கு ஆட்பட்டு விடுகின்றனர். 

தேடலும் நாடலும் உடையவர் ஆழ்நிலைக் கற்றலுக்கு ஆட்படுவார். மற்றவர் மேல்நிலைப் பரப்புரைகளுக்குச் சோரம் போவார்!!3/23/2023

அமெரிக்கத் தமிழ்ச்சூழல்

ஊடகத்தில் பணியாற்றக் கூடியவர்கள், அதே துறையில் பணியாற்றக் கூடியவர்களுடன் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுகின்றனர். அப்படியான கலந்துரையாடல்களில் இடம் பெறுகின்ற தகவல்கள், காட்சிகள் எல்லாமும் அவர்களின் கவனத்துக்குட்படாமல் திரட்டப்பட்டிருக்க, பின்னொருநாளில் அவை வெளியாகின்றன. அந்தரங்கமான தகவல்கள் பொதுவெளியில் பகிரங்கமாகும் போது, தொடர்புடையவர்களுக்கு நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அவர்களின் பேரிலான நன்மதிப்பும் குறையத்தான் செய்யும்.

இப்படியானவற்றில் சிக்குண்ட ஒருவர் மன்னிப்புக் கோரி ஒரு காணொலியை வெளியிடுகின்றார். பார்ப்போர் மனம் கலங்குகின்றனர். இதெல்லாம் நாடகம் என்பதாக விமர்சிப்பவர்களும் விமர்சிக்கின்றனர். இந்த நேரத்தில்தாம், அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகளில் இடம் பெறுகின்ற போக்கும் நினைவுக்கு வருகின்றது.

தமிழ்மொழி, தமிழ்ச்சமூகம், தமிழ்க்கல்வி முதலானவற்றின் பேரில்தான் முக்காலே மூன்று வீசம் பேரும் தன்னார்வத் தொண்டு புரிய வருகின்றனர். குடும்பத்துக்கான, குழந்தைகளுக்கான, தனக்கான நேரத்தைத் தமிழுக்காக ஒதுக்கித்தான் வருகின்றனர். ஏதோ சிலர் வேண்டுமானால், வணிகநோக்குடன் வருபவர்களாக இருக்கலாம். இப்படி வந்தவர்களுள், சாதி, சமயம், அரசியல், விருப்புவெறுப்பு ரீதியாக அணி சேர்ந்து கொண்டு அக்கப்போர் செய்வது ஒரு பாதி. வணிகநோக்கர்களின் சூட்சுமத்துக்கு இரையாவது தெரியாமலே சோரம் போய்க் கொண்டிருப்பது மறுபாதி. இவற்றுக்கிடையேதான் நற்செயல்களும் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.

மேற்கூறிய மன்னிப்புக் கோரல் காணொலிக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சூழலுக்கும் என்ன தொடர்பு? இருக்கின்றது. அணி என்பதற்காகவே சார்புடன் செயற்படுவதும், குழுவாதத்துடன் செயற்படுவதுமாகப் பெரும்பாலான தன்னார்வலர்கள் இருக்கின்றனர். தன்னாட்சி, தன்பொறுப்பு, தன்னுமை என்பன அடிபட்டுப் போகின்றன. எடுத்துக் கொண்ட தமிழ்ப்பணியைக் காட்டிலும், எதிர்-உளவியலில் சிக்கிக் கொண்டு விடுகின்றனர். கூட்டுக் குறுங்குழுவாதத்தின் பொருட்டு ஒருவருக்கொருவர் மற்றவர்களின் பேரிலான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். இவையெல்லாம் ஆங்காங்கே பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறித்த நினைவில்லாமலேவும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் அணிகள் மாறலாம். இணைந்து இருப்போருக்குள்ளும் முரண்பாடுகள் எழலாம். அப்போது இப்படியான தனிப்பட்ட உரையாடல்களின் பதிவுகள் வெளியாகக் கூடும்; வெளியாவதும் வழமை. இப்படித்தான் தமிழ்ச்சூழல் என்பது, நச்சுச்சூழலாக(toxic) மாறிப் போகின்றது. அவர்களுக்குத் தாம் அகப்பட்டுக் கொண்டிருப்பது புலப்படாது. புலப்பட்டிருக்குமாயின், ’அப்படியான எதிர் மனோநிலையே முதன்மை’ என இருக்கமாட்டார்கள்தானே? என்னதான் தீர்வு?

அறம்சார் அமைப்பில், அறமும் சகமனிதனின் பேரிலான அக்கறையுமே முன்னுரிமை கொண்டதாக இருத்தல் வேண்டும். குழுவில் பெரும்பான்மையெனும் தோற்றத்தில் கூட்டுணர்வு ஊக்கம் கொண்டு செயற்படும் போது, தவறானவற்றில் அது நம்மை ஆழ்த்திவிடும். பின்னாளில் பூசல்கள் மேலிடுகின்ற போது, உடனிருந்தவர்களே மோதுகின்ற சூழலும் ஏற்படும். அப்போது அவர்கள் முந்தைய அந்தரங்கத் தகவல்களை பகிரங்கப்படுத்தக் கூடும். சார்புத்தன்மை தவிர்த்து, தம் கொள்கை, கோட்பாடு, அமைப்பின்நலமென இருந்து விட்டால் என்றும் நலம். தலைநிமிர்ந்து காலகாலத்துக்கும் பீடுநடை இடலாம். Volunteerism isn't beautiful and easy, or a bunch of people getting together and working; it's a lot more than that. Why do I say this? "Writing is also a form of activism". -Angie Thomas

நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை [தேவாரம்]

நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை!!

o0o0o0o0o

//படிக்கச் கூட கசக்கும்.//

மிகவும் நேரிடையானதும் உண்மையானதுமான கருத்து. மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

எதிர்மறையானவற்றைப் பேசுவது ஆகாதவொன்று. புறம்பானவொன்று. பின்னடைவைத் தரக்கூடிய ஒன்று என்கின்ற அருவருப்பு(stigma) தமிழ்ப்பண்பாட்டில் உண்டு. குறிப்பாக அமெரிக்கத் தமிழ் அமைப்புகளில்.

பேசினால், அது பாராட்டாக, புகழக்கூடியதாக, வாழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும்.  அல்லாவிடில், பேசாமாலே இருந்து விட வேண்டும். ஆனால், மூத்தகுடி, தொன்மை, தொடர்ச்சி என்றெல்லாம் சொல்லி நெஞ்சை நக்கிக் கொள்கின்றோம்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். (ஒளவை)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு (குறள்)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு (குறள்)

ஒளவையாரும் திருவள்ளுவரும் சொல்வதென்ன? எண்ணுவதும் எழுத்தைப் (வாசிப்பது, எழுதுவது) போற்றுவதும் கண்களெனச் சொல்கின்றனர். இந்தக் குழுமத்திலேயே கூட முன்பொருமுறை சொல்லப்பட்டது. நேர்மறையான கருத்துகளையே பகிர்வோமென. கசப்பு என்பதற்காக, மருந்தினை உட்கொள்ளாமல் இருக்க முடியுமா?  எழுத்தில் உண்மையும் அறமும் இருக்கின்றதா என்பதுதான் பார்க்கப்பட வேண்டியது.

தத்துவஞானி சாக்ரடீஸ், உரையாடல் என்பது மட்டுமே மனிதனை முழுமையாக்கும் என்றார். ஆனால், உரையாடத் தயக்கம், தடை, அச்சம் என்பதான போக்குடையவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். என்ன காரணம்? நம்முடைய கருத்தினால், மற்றவரின் ஒவ்வாமைக்கு நாம் ஆளாக நேரிடுமோ என்கின்ற அச்சம் அல்லது தன் புகழ், பொறுப்பு போன்ற தன்னலம். இப்படியானவர்களின் தன்னார்வத் தொண்டினால் ஒரு பயனுமில்லை. கூடிக் கலைவதற்கும் களிப்புக் கொள்வதற்கும்தான் பயன்படுமேவொழிய, மேன்மையை ஈட்டித் தராது.

3/12/2023

எண்ணங்கள்

“தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல். மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள். ‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.” இதை எழுதியவர், சுகா என்னும் சுரேஷ் கண்ணன், திரைப்பட இணை இயக்குநரும் எழுத்தாளரும் நெல்லை கண்ணன் அவர்களின் மூத்த மகனும் ஆவார். 

தற்போது இதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? நண்பர் அழைத்திருந்தார். ”கருத்துகளைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருக்கின்றாய். என்ன பயன்? எதிர்மனோநிலைக்காரன் எனும் அருவருப்பு(stigma)தானே ஏற்படும்?”. “இருக்கலாம். அதற்காகத் தன் தரப்புக் கருத்துகளை மாற்றிச் சொல்வதும், சொல்லாமலே இருப்பதும் ஏமாற்றிக் கொள்தல்(தன்னைத்தானே) அல்லவா?” என்றேன். மறுமுனையில் ஆழ்ந்த அமைதி. எண்ணிக்கையில் இல்லை வெற்றி. தரத்தில் இருக்கின்றது வெற்றி. It's quality that matters over quantity. நூறு பேராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்துலகில் கோலோச்சிய ஜெயகாந்தன் என்பது அல்லாமற்போய் விடுமாயென்ன?

இது அமெரிக்கா. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். முழுமையான தன்னுமைக்கு(லிபர்ட்டி) உரித்தானவர்கள். அழகானதும் அருமையானதுமான வாழ்வுக்கு ஆட்பட்டவர்கள். பொய், புரட்டு, திரிபு, முலாம்பூசப்பட்ட பேச்சுகள் போன்றவற்றுக்குச் சோரம் போகத் தேவையில்லை. சமூகத்தில் பொதுமைப்படுத்தல்களின்வழி உழைப்புச் சுரண்டல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ”ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்”, “ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்”, ”one bad apple ruining the entire bunch” என்பனவெல்லாம் அமெரிக்காவுக்கு, அமெரிக்கப் பண்பாட்டுக்கு எதிரான தேய்வழக்குகள். ஏனென்றால், இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையான தனித்துவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடு. குழந்தைகள் எதிர்க்கேள்வி கேட்பார்கள். அல்லது, குடிவரவாக வந்திறங்கிய பெற்றோரின் ஆதிக்கத்துக்குப் பணிந்து அகநகைப்போடு கடந்து செல்பவர்களாக இருப்பர்.

அந்த ஒரு துளிதான், அந்த ஒரு பானைதான், அந்த ஒரு கூடைதான்! அதனை வைத்து எல்லாமுமே அப்படித்தானென்பதான போக்கில், நல்லது, தீயது எனப் பேசுவதை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிறைய மகளிர்நாள் கூட்டங்களை, தமிழ்ச்சூழலில் கேட்க முடிந்தது. விழிப்புணர்வுமிக்க நல்ல பல தகவல்கள். மகிழ்ச்சி. ஆனால் அவற்றினூடே, போகின்ற போக்கில், பொதுமைப்படுத்தல்களையும் பார்க்க முடிந்தது. ’அமாவாசையில் பிறந்தவன் திருடன்’ என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஏதோவொரு திருடன் அமாவாசையில் பிறந்திருக்கலாம். அதற்காக? 


3/10/2023

டைரி - அருள்மொழி

இலக்கியப் படைப்பின் அடிப்படை என்ன? பேசாப் பொருளைப் பேசுவதும், பொதுப்பார்வைக்குப் புலப்படாதவற்றை பொதுவுக்குக் கொண்டு செல்வதும்தான் அடிப்படை. அதுதான் விழுமியமார்ந்த ஓர் எழுத்தாளரின் செயலாக இருக்க முடியும்.

பொதுவாக, வணிகமய உலகில், வெற்றிக்கான வழிகளென அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டு, அதற்காக ஓட்டத்தில் ஈடுபட்டுப் பொருள் தேடிக் கொள்வது வாடிக்கை. அதில் இலக்கியம் விதிவிலக்கன்று. நிறைய வாசகர்களைச் சென்று சேர வேண்டும், புகழெய்த வேண்டும், பாராட்டுகள் பெற வேண்டும், ஒளிவட்டத்தில் நிற்க வேண்டும், இப்படியான பல ஆசைகளின்பாற்பட்டு, நாங்களும் எழுதுகின்றோமென வரிசை கட்டி நிற்போர் ஏராளம். அதில் சிறுகதை எழுத்தாளர்களும் அடக்கம்.

அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக, படிப்போரின் மனத்தைக் கொள்ளை கொள்வதற்காக, சொல்லிக் கொண்டே போய் திருப்பமென்கின்ற வகையில் களிப்பூட்டுவதற்காகயெனக் கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றுக்கு இலக்கிய மதிப்பீடு என்பது எதுவுமில்லை.

’டைரி’ எனும் நூலின் ஆசிரியர் இவற்றினின்று முற்றிலும் மாறுபட்டவராகத் தெரிகின்றார். அவரது கதைகள் வழமையான பாதையில் பயணித்திருக்கவில்லை. புனைவுக்கதைகளெனக் கருதினாலும்கூட, உண்மைக்கு மிக நெருக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாகக் காட்சிகளை அடுக்கிக் கொண்டே போய் விசுக்கென எதிர்பாராத ஒன்றைச் சொல்லிப் பரவசம் ஊட்டுவதற்காக உற்பத்தி செய்யப்பட்ட கதைகள் போல இல்லை இவை. சமூகத்தில், சொல்லப்படாத திசையிலிருந்து சொல்லப்படுகின்ற கோணங்களும் உணர்வுகளுமாகப் பயணிக்கின்றன இந்தப் பதினான்கு கதைகளும்.

கடைசியில் முடிச்சவிழ்த்துத் திகில் ஊட்டுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கவில்லை இந்தக் கதைகள். நம்மில், நம் வீட்டில் நிகழ்கின்றவற்றை, ஆரவாரமும் கொந்தளிப்பும் கூச்சலுமுமில்லாமல், கடைமடையில் பயணிக்கின்ற ஆற்றைப் போல, தணிந்த குரலில் படர்ந்து கடலினூடே கலப்பதைப் போல மனத்துள் கலந்து போகின்றன கதைகள்; எண்ணற்ற சிந்தனைப் புடைப்புகளோடு. 

புடைத்திருப்பது காளானாகவும் அமையலாம். பெருமரமாகவும் ஓங்கி வளரலாம். அது அவரவர் மனப்போக்கைப் பொறுத்தது. காளான்களாக, புடைத்த மறுகணமே இருக்குமிடமில்லாமற்போகுமேயானால், வாசகருக்காக உழைக்க வேண்டியது இன்னமும் இருக்கின்றதெனப் பொருள். மாறாகச் சிந்தனைத் தாக்கம் எழுந்திருக்கின்றதென்றால், படைப்பின் நோக்கம் கைகூடி இருக்கின்றதெனக் கொள்ளலாம். அப்படியான கதைகள்தாம் இவை.

“எதையும் வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. அவள் கை, தானாக இரசத்துக்குப் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது”.

இப்படித்தான் நூலின் கடைசி வரி அமைந்திருக்கின்றது. பிரச்சார நெடியற்ற கதைகள். மெல்லிய கதைகள். விளம்பரத்துக்காய் அலைமோதும் பரபரப்பான உலகில், பரபரப்பற்றதும் சக மனிதரின்பாற்பட்ட மனிதமார்ந்த பொழுதுகளாகவும் இருக்க வேண்டிய பண்பாட்டுக்காகப் பூத்திருக்கும் கதைகள்!


3/08/2023

பெண்கள் நாள்

1909ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள், நியூயார்க் நகரில் பெண்களின் உரிமைகளுக்கான முன்னெடுப்பாக ஒரு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதனின்று கிளைத்ததுதான் இன்றைய மார்ச் 8, பன்னாட்டுப் பெண்கள் நாள் என்பது. அதற்குப் பிறகு, ஓட்டுரிமை, கல்வி, தொழில் எனப் பல தளங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டு எண்ணிமத்தளத்தில், அதாவது மின்னணுவியலை அடிப்படையாகக் கொண்ட கணினி, தொழில்நுட்பத்தளத்தில் சமத்துவத்துக்கான வழிமுறைகளைக் கட்டமைக்க அறைகூவல் விடுத்திருக்கின்றது ஐக்கியநாடுகள் சபை.

பொதுவாக, இப்படியான நாட்கள் கொண்டாட்டமாக இடம் பிடிக்கின்றன. கொண்டாட்டத்தின் பொருட்டு வணிகக்கடைகளும் விரிக்கப்படுகின்றன. அது சரியா, தவறா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய பற்றியம்.

நம்மைப் பொறுத்த மட்டிலும், 1909ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட அந்த நாளை அடிப்படையாகக் கொண்டு சிறு மாற்றத்தையாவது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதுதான். பொதுவாழ்வில், தொழிலில் பெரும்வெற்றி பெற்ற ஒரு பெண். கொண்டாடடப்படுவது சரியே. இணையர் தன் காலுறையைக் கொணரச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். மேற்தளத்தில் இருக்கும் அவர் வந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்கின்றார். இப்படியான ஒரு காட்சியை எண்ணிப் பாருங்கள். இருவருமே தோற்றிருக்கின்றனர். அவரைக் கொண்டாடுவதால் என்ன பயன்?

பண்பாட்டில், வீட்டு அடுக்களையில் இருந்து துவக்கப்பட வேண்டிய பயணம் இது. காய்கறி நறுக்குவது என்பதாகக்கூட வைத்துக் கொள்ளலாம். அப்படி நிகழும் போது, இவருக்கும் தாம் ஏவலாள், குற்றாள் எனும் எண்ணம் அடிபட்டுப் போகின்றது. அவருக்கும் அப்படியான அனுபவம் கிடைக்கப் பெறுவதோடு உடல்நலமும் மேம்படும். அண்மையில் கூட, சக ஆண்களைப் பொதுநிகழ்வில் அண்ணா, அண்ணாயெனக் குழைந்து குழைந்து விளிப்பதைச் சாடி எழுதினோம். காரணம், இது, தொடர்புடைய தனிமனிதர்களின் நட்பு குறித்தானது அன்று. பொதுநிகழ்வு என்பதாலே, இது ஒட்டுமொத்த பெண் இனத்தின் மாண்பு குறித்தானது. ஆகவே, பெண்கள் நாளில், டிஜிட்டல் உலகில் இடம் பெறும் இப்படியான சறுக்கல்கள் குறித்து உரையாடுவோம்.

No one can make you feel inferior without your consent. –Eleanor Roosevelt


2/26/2023

வரிகளுக்கிடையே

read between the lines: look for or discover a meaning that is hidden or implied rather than explicitly stated.

வாசிக்கும் போது, காட்சிகளைக் காணும் போது, செவியுறும் போதென, எல்லாச்சூழலுக்கும் இது பொருந்தும். குழுவில் இடம் பெற்ற இரு உள்ளீடுகள் குறித்துக் கருத்துகளைப் பகிர விழைகின்றேன்.

முதலாவது, உலகத் தாய்மொழி நாள் காணொலியைக் கண்டு இன்புற்றேன். நல்லதொரு முயற்சி. வட்டாரத் தமிழில் பேசி அவற்றை அறிமுகப்படுத்தியமை நன்று. சீர்நிலை போற்றுதலும் அவசியம். தமிழ் மொழி பரவலாக ஆட்சி புரிந்து வருகின்றது. எல்லாப் பகுதிகளுக்கும் சீராக நேரம் இருந்து விட்டால் நலம். அல்லாவிடில் கூடுதலாக இடம் பெறுகின்ற உள்ளீடு இன்னபிற தகவலுக்கு வித்திட்டு விடும். When everything comes together, life is in balance.

அடுத்தது, மருத்துவர் ஷாலினி அவர்களிடம் விடுக்கப்பட்ட வினா: நம்மவர்கள் முன் பிள்ளைகள் அப்படி இப்படி நடந்து கொள்கின்றனர். ஆனால் பொதுயிடத்தில் நன்றாக நடந்து கொள்கின்றனர். இது நம்முடைய தாக்கத்தினாலா? சிரிப்புக்கிடையே, ஆமாம் என்கின்ற விடை அமைகின்றது.

நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பற்றியம் இது. தமிழ் அமைப்புகள் அமெரிக்க விழுமியத்தை இயன்றமட்டிலும் ஒழுக முற்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர், ‘வார்னிங்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றார். உடனே தலைவர் பொறுப்பில் இருப்பவர் தனிநபர்த் தாக்குதலில் ஈடுபடுகின்றார். என்ன காரணம்? சொல்லைக் காதில் வாங்கியதுமே, மனத்தில் படிநிலை மனப்பான்மை சட்டெனத் தோன்றுகின்றது. மேல், கீழ் என்றெல்லாம் எண்ணம் விரிவடைந்து கொந்தளிப்புக் கொள்கின்றது. இப்படியான செயற்பாடுகள்தாம் கசடான பண்பாட்டுச் சீர்கேட்டுக்குக் காரணம். பிள்ளைகளின் மீதும் இதன் தாக்கம் படிய நேர்கின்றது. Because, American Kids read in between lines as they are trained that way since childhood.

2/19/2023

மயிலே மயிலே

இந்திரன் எழுதிய பதிவைப் படிக்கையில் பொன் விஜயன் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிகிறது. இந்நாட்டில் பணமில்லாமல் அரூபமான லட்சியங்களுக்காக வாழவே கூடாது. லௌகீகமே நிஜம். அதற்காகவே வாழ வேண்டும். அதற்கும் அப்பால் நேரமிருந்தால் எழுதலாம், படிக்கலாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ள கணிசமானவர்கள் பண்பில்லாதவர்கள், அறிவை விட சாப்பாடும் பொழுதுபோக்குமே பிரதானம் என நம்புகிறவர்கள். இந்தியர்கள் அடிப்படையில் நாகரிகமடையாத பாதி-மிருகங்கள். படித்தவர்கள்தான் அதிக மிருமாக வாழ்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் 1% மக்களே புத்தகம் படிப்பவர்கள். பளபளப்பாக ஆடையணிந்த, காரிலும் பைக்கிலும் பயணிக்கிற காட்டுமிராண்டிகள் இந்திய மக்கள். இவர்கள் மத்தியிலே நாம் வாழ்கிறோம்.

அவர்கள் பணமில்லாதவர்களை கரப்பான்பூச்சியைப் போன்றே பார்ப்பார்கள். சாரு சொல்வதைப் போல இது ஒரு சீரழிந்த சமூகம். இங்கு சுயநலமாக வாழ்ந்தால் உங்களை பெரிய ஆளாக நினைத்து அன்பு பாராட்டுவார்கள். பணமும் இருந்து தியாகமும் செய்தால் உங்களைக் கடவுளாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றுக்கும் - அன்பு, கருணை, சமூக மரியாதை - அடிப்படை இங்கு பணம் தான். இவர்கள் நடுவில் நாமும் நம்மை காளகேயர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும். பொன் விஜயனைப் போல் எல்லாம் வாழவே கூடாது. வேலூர் இப்ராஹிமே சரணம்!

- ஆர். அபிலாஷ்

இதழியலாளர் பொன் விஜயன் அவர்கள் சமூக மேம்பாட்டுக்காக உழைத்து தன்னையே அதற்காக இழந்தவர். அது குறித்து எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் அவர்கள் எழுதியதுதான் மேற்கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு. இக்குழுமத்தில் பல நிகழ்வுகளின் விளம்பரப் பதாகைகள் இடம் பெறுகின்றன. அப்படியானதில், ஒன்றில் கலந்து கொள்ள விரும்பி அலைபேசியில் அறிவுறுத்துக்குறிப்பு பதியப்பட்டு குறித்த நேரத்துக்கு உள்நுழைய முற்பட்டேன். கிட்டத்தட்ட 40 மணித்துளிகள் இருந்தும் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

1. சக கலைஞரின் மறைவினால் விருந்திநர் வருகையும் நிகழ்வும் தள்ளிப்போடப்பட்டிருக்கலாம். அல்லது

2. எனக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம், கடந்த கூட்டமொன்றுக்கு மறுக்கப்பட்டதைப் போலவே!

முதலாவது காரணமாக இருப்பின், தள்ளிவைப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது காரணமாயின், அதுவும் பொது அமைப்பில் இடம் பெறக்கூடாத புறம்பானவொன்று. இப்படியான ஒழுங்கீனமான செயல்களுக்குக் காரணமானவர்கள்தாம், “ஒழுங்கு” என்பதற்கான இலக்கண வகுப்பெடுக்கின்றனர். மீண்டும் எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் பதிவைப் படிக்க வேண்டுகின்றேன்.

2/18/2023

warning

"unfortunately அதுதான்  சென்றமுறை பைலா ரிவியூ செய்தப்ப, அவசர அவசரமா பைலா பாஸ் செய்தமாரிதான் எல்லாருடைய அனுபவமும்கூட. சென்றமுறை போர்டு இருந்தப்பவந்து, ஒரு வருசம் போர்டு இநேக்டிவா இருந்திட்டு, கடைசில தேர்தலுக்காக அவசர அவசரமா  240 பேருல் ரொம்ப ரொம்ப கொறஞ்சு பேரு ஓட்டுப் போட்டு தீர்மானங்களும் பைலா சேஞ்சஸ்மு நிறைவேற்றப்பட்டு இருக்கு. கான்ஸ்டியூசன் ஆக இருக்கட்டு, பைலா சேஞ்சஸாக இருக்கட்டும், they make it very difficult to change it. இருங்க, let me finish it... I have the floor.. anyway, coming back to point... ... கூட்டம் போட்டுப் பேசி பலரோடு கருத்துகளும் கேட்கப்பட்டுத்தான் பைலா சேஞ்ச் ஆகணும். சும்மா மெயில்ல yes or no கேட்டுப் பாஸ் ஆகக் கூடாது. அதுதான் டெமாக்ரடிக் வே. I may kind of a warning. state of Illinios law supersedes our bylaw. so what is happening, earlier bylaws is unethical, it was not the correct way to do, so that was a warning; நடந்தது நடந்து போகட்டும். இனிமேலும் நடக்கப் போற changes வந்து, அது முறைப்படி நடக்கலைனு சொன்னா, am challenging, and warning, and this should be challenged in court of law, and we don't want to face another court of law, and I am serious about this. And, I talked to sevral experts on this, they agreed with me on this. Thank you for the time."  -முன்னாள்தலைவரின் பேச்சு.

பதிலளித்துப் பேசிய இந்நாள் தலைவரும் நாகரிகமாக, முறையான பதில்தான் கொடுத்துக் கொண்டிருந்தார். அதாவது, மாற்றங்களைக் கொண்டு வந்து செயற்குழுவின் முன்னாள் வைத்தால், இருக்கும் பைலாவை மாற்ற பொதுக்குழுவுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, மாற்றலாமெனச் சொல்லிக் கொண்டிருந்தவர், திடுமென அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டு, “மாற்றத்துக்கு பைலால ஆர்டிகிள் 12ல இடம் இருக்கு. அதெல்லாம் நீங்க படிச்சீங்ளா என்னானு தெரியலை. அதனாலத்தான் தடித்த வார்த்தைகளை பேசிட்டு இருக்கீங்க. This is not a place to do warning. அப்படிப் பண்றதுன்னா உங்களுக்குத் தெரிஞ்ச வழியில நீங்க பண்ணுங்க. இந்தமாரியெல்லாம் பேசிட்டு இருக்காதீங்க. உங்க வயதுக்கு இதெல்லாம் நல்லது கிடையாது. நீங்க நாலு பேரு சேர்ந்து மிரட்டலாம்னு நினைச்சா அது நடக்காது.” செயலர் இடைமறித்து பேச்சின் போக்கினை மாற்றுகின்றார்.

என்னுடைய நயாப்பைசா: நான் பலமுறை என்னுடைய இந்த குறிப்பினை மீண்டும் மீண்டும் வாசித்து, யோசித்தும் விட்டேன். அமைப்பின்பால் நாட்டம் கொண்ட எவனொருவனும் முன்னாள்தலைவரைப் போலத்தான் பேசியாக வேண்டும். அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் பேசி இருப்பேன். ”அறிவுறுத்துகின்றேன் அல்லது எச்சரிக்கிறேன்” என்பது அப்படியானதொரு தடித்த சொல்லா? அக்கறையின்பாற்பட்ட சொல்லாக ஏன் இருக்கக் கூடாது? சரி, அது முறையற்ற சொல் என்றே வைத்துக் கொள்வோம். பொறுப்பில் இருக்கும் தலைவரது பேச்சு சரியானதா? தனிநபர்த் தாக்குதலுக்கு மடைமாற்றிச் செல்வது ஏன்? காரணம், prejudice. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தின் போது பிரசிடெண்ட் பேசுவார். எதிர்க்கட்சி உறுப்பினர் உரத்த குரலில், “பொய்யர்” எனக் குரல் எழுப்புவார். அதற்குப் பிரசிடெண்ட்டும் எதிர்த்துக் குரலெழுப்பி அக்கப்போரில் இறங்கினால் அவரது மாண்பு எப்படி இருக்கும்? A fiduciary duty is the legal responsibility to act solely in the best interest of another party. “Fiduciary” means trust, and a person with a fiduciary duty has a legal obligation to maintain that trust. இதற்குக் கட்டுப்பட்டவர்தாம் பொறுப்பில் இருப்பவர்.

விழாக்கள் நடத்துவதும் பணம் பண்ணுவதும் புகழ்மாலை பாடுவதும் அல்ல தமிழ்ப்பணி. பண்பாட்டில், வாழ்வின் விழுமியத்தில் மேம்பாடு கொள்வதுதான் தமிழ்ப்பணி.

2/14/2023

காதல்நாள்

பிணைப்பில் இருக்கும்
பேச்சுமடத்தின்மீது காதல்

பச்சிளங்காற்றைப் புசிக்க
சுமந்துசெல்லும் சைக்கிளின்மீது காதல்

சாளரக்கதவைத் திறந்ததும்
மறுபக்கம்வரும் குருவியின்மீது காதல்

அஞ்சலெடுக்கச் செல்லும் போதெலாம்
அகோ சொல்லும் எதிர்வீட்டுத் தாத்தாவின்மீது காதல்

கணக்குவழக்குகளில் பிழைகள் இருப்பினும்
சகித்துத்திருத்திக் கொள்ளும் அட்மின்பாட்டிமீது காதல்

மூன்றுதிங்களுக்கொருமுறை பல்மராமத்து செயும்
தூய்மைக்கலைஞர் டேவிட்காக்ஸ்மீது காதல்

வீட்டுப்பிறவடையின் புற்தரையினைப் பேணும்
அழகுநர் ஆன்செரகோவின்மீது காதல்

காதலுக்குக் கண்ணில்லை
வீட்டுநாயின் மீது காதல்
அமர்ந்து கதைகள்பல பேசும்
மொட்டப்பாறையின்மீது காதல்

காலைக்காஃபிகுடித்து உட்கார்ந்ததும்
கழிபடுசுகத்தைக் கொடுக்குமந்த பேசின்மீது காதல்

உற்றார்மீது காதல் உறவினர்மீது காதல்
நட்பின்மீது காதல் கேட்பின்மீது காதல்
புல்லின்மீது காதல் பூண்டின்மீது காதல்
மரத்தின்மீது காதல் மனிதனின்மீது காதல்

காதலைப் போற்றுவோம்!
வாழிய காதல்! வாழியநலம்!!

💓💓💓💓💓💓💓💓💓

2/09/2023

Bandwagon Fallacy

நண்பர் அழைத்திருந்தார். ஒரு தமிழ்ப்பள்ளி. செயற்பாட்டில் முன்பின் முரண். தன் கருத்துகளைச் சொல்லி ஆற்றாமையை வெளிப்படுத்தினார். ஆறுதல்களைச் சொல்லி, என் கருத்துகளையும் சொன்னேன். நிலைமை காரசாரமாகி விட்டது.

நண்பர் செயற்குழுவில் இருப்பவர். பல்லாண்டு காலமாகத் தமிழ்ப்பணி செய்து வருபவர். அமைப்பில் சில செயற்பாடுகளைத் தொன்று தொட்டுச் செய்து வருகின்றனர். புதிதாக வந்த சிலர் அவற்றைக் கேள்விக்குள்ளாக்கி விட்டனர். நானும் அதை ஒட்டியே கருத்துச் சொல்லப் போய், அவருக்கு என்மீதும் சினம் கிளர்ந்து விட்டது.

செயற்குழு, பொதுக்குழு, துணைக்குழு, எதுவானாலும் சரி, கொள்கை முடிவுகளில் பெரும்பான்மை எந்தப் பக்கமோ அந்தப் பக்கமாக முடிவு மேற்கொள்வது சரி. ஆனால் அமைப்பின் செயற்பாட்டு விதிகளை, குழுவில் பெரும்பான்மை என்பதற்காகவே அதுதான் சரியென்பது பத்தாம் பசலித்தனம். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்பதும் இல்லை. எதிர்ப்பு, மாற்றுக் கருத்து வருகின்றதென்றால், அதுகுறித்த விழைவும் தேடலும் நாடலும் நாம் கொள்ள வேண்டும். தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

வரிவிலக்குப் பெற்ற அமைப்பாக இருக்கும் போது, அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் மிகவும் கண்ணியத்தோடும் கடமையுணர்வோடும் இருந்தாக வேண்டும். ஒன்றிய அரசின் compliance guide (https://www.irs.gov/pub/irs-pdf/p4221pc.pdf), அடுத்து, பதிவு செய்யப்பட்டிருக்கின்ற மாகாணத்தின் நிறுவன அமைப்பு நெறிமுறைகள் இவற்றுக்குத்தான் முன்னுரிமை.

Transparency

Public charities are encouraged to adopt and monitor procedures to ensure that information about their mission, activities, finance and governance is made publicly available.

எந்தக் குடிமகனும் எந்தவொரு இலாபநோக்கற்ற அமைப்பின் எந்தவொரு தகவலையும் அறிந்து கொள்ள முற்படலாம். கூடுமானவரை அவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். தகவலே கேட்கக் கூடாதென நினைப்பதும், அமைப்பின் பெரும்பான்மை என்ன சொல்கின்றதோ அதுதான் சரியென்பதெல்லாம் கூட்டுக்குழுவாத மேட்டிமைத்தனம். அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. இதற்கும் இவர்களிடம் வினவியவர் ஒரு சக ஆசிரியர்.

Bandwagon Fallacy: The bandwagon fallacy describes believing something is true or acceptable only because it is popular. 

அந்த ஆசிரியர் அப்படி என்ன கேட்டுவிட்டார்? தைப்பொங்கல் கொண்டாடுவது இந்த ஆண்டுக்கு இல்லை என்பது செயற்குழுவின் முடிவு. அந்த முடிவுக்கான கோப்பு கேட்டிருக்கின்றார். அது இவர்களிடத்திலே இல்லை என்பதாக நான் புரிந்து கொண்டேன். அல்லது, இவர் கேட்டு நாம் ஏன் கொடுக்க வேண்டுமென்கின்ற ஒரு போக்கு.

How are minutes approved?

Meeting minutes should be approved by the appropriate body at its next meeting. So, for a board meeting, the board would approve those minutes at its next meeting. For a membership meeting, the membership body would approve the minutes at its next meeting.

The organization should carefully review the meetings to ensure that it is an accurate record of the previous meeting. Make sure that not too much time passes between meetings so that mistakes can be caught.

Do we have to keep copies of minutes?

Yes, your organization must keep copies of all meeting minutes.

https://cullinanelaw.com/nonprofit-board-minutes/

இத்தகைய பிணக்குகளின் அடிப்படை என்ன?

குறுங்குழுவாதமும் வணிகநோக்கமும்தான். வணிகநோக்கத்தைக் கூட சகித்துக் கொண்டு விடலாம். குறுங்குழுவாத மனப்பான்மை என்பது மற்றவருக்குத் தீங்கானது என்பது மட்டுமேயல்ல. அத்தகைய போக்குடையவருக்குத்தான் மிகவும் தீங்கானது. கூட்டமாகச் சென்று குழியில் விழ வேண்டி வரும். Americans usually view every person as self-sufficient individual, and this idea is important to understanding the American value system. 


1/31/2023

திருவாசகம்

 

நண்பர்கள் எங்கிருந்தும் அழைப்பார்கள். எந்த நேரத்திலும் அழைப்பார்கள். தோராயமாகச் சொல்லின், எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக எனச் சொல்லலாம்; அழைப்புக்குச் செவிமடுத்து விடுவேன். வேலைநிமித்தமாக இருந்தாலும் கூட, அழைப்புக்குச் செவிமடுத்து, வேலையாக இருக்கின்றேனெனச் சொல்வதுதான் வாடிக்கை.

பெரும்பாலான நேரங்களில் வேலைபார்த்துக் கொண்டேவும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பேன். இப்படியான பின்னணியில்தாம், அண்மையில் ஓர் அனுபவம்.

நண்பருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுதான். சில நாட்களில் அழைக்காமல் விட்டுவிட்டாலும், நான் அழைத்து விடுவேன். பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்பவர் அவர். சென்றிருக்கின்ற இடத்திலே நலமாக இருக்கின்றாரா என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால் மனம் சமநிலை கொள்ளும். அவ்வளவுதான்.

தனிப்பட்ட அழைப்பாக இருந்திருந்தால் அவர் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கூட்டழைப்பு; பலரும் அழைப்பில் இருந்தனர். இப்படிச் சொல்லிவிட்டார், “பழமைபேசி நம்முடன் பேசித் தம் பொழுதைப் போக்கிக் கொள்கின்றார்”. அப்போதைக்கு நான் சிரித்துக் கொண்டேன். ஆனாலும் கூட, நம் மன அகந்தை நம்மை விட்டபாடில்லை. அவர் வெறுமனே நையாண்டிக்குக்கூடச் சொல்லி இருக்கலாம். அறிவுக்குத் தெரிகின்றது. ஆனால் அகந்தை அடங்க மாட்டேனென்கின்றது.

பெரும்பாலான நேரங்களில், கூட்டு அழைப்புகளில் நாம் பேசுவதில்லை. மற்றவர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருப்பதுதாம் நம் வாடிக்கை. அழைப்பு தொய்வடைகின்ற நேரத்திலே அல்லது சுவாரசியம் இழக்கின்ற நேரத்திலே எதையாவது கிள்ளிப் போட்டுவிட்டு மீண்டும் அடங்கிவிடுவது. நாம் நம் வேலையைப் பார்க்கவும் வசதியாக இருக்கும். இப்படியான சூழலிலே, மனம் அடங்க மாட்டேனென்கின்றது.

உண்மையில் சொல்லப் போனால் நமக்கு 24 மணி நேரம் என்பது போதுமானதாக இல்லை. பிழைத்திருப்பதற்கான வேலையில், அதாவது வருமானம் கொடுக்கின்ற வேலையில், உடன் பணி செய்வோர் அயல்நாடுகளில் இருந்து பணி செய்வோரும் உண்டு. ஆகவே இன்ன நேரமென்று இல்லை. பணிநிமித்தம் தகவல் கேட்பார்கள். பேச விரும்புவார்கள். உடனுக்குடனே பேசிவிட்டால், வேலையில் தொய்வு ஏற்படாது.

நமக்கான சமையலை நாமே பார்த்துக் கொள்வதென்பது இன்பகரமாக ஆகிவிட்டது. விருப்பமானதை, விரும்பிய அளவில், விருப்பமான முறையில் உண்டு கொள்ளலாம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழக்கவழக்கமது. அதனாலே, கடைகளுக்கும் நாமே சென்று நமக்கானதை வாங்கியாக வேண்டும். அதன்நிமித்தம், புதிது புதிதாக பன்னாட்டுத் தாவரப்பொருட்களை வாங்கி முயல்வதிலே ஒரு நாட்டம். எடுத்துக்காட்டாக, சிக்கரிப்பூ என்பது ஆண்டுமுழுமைக்கும் கிடைக்காது. அந்தப் பருவத்தில்மட்டும்தான் கிடைக்கும். இப்படி அந்தத்தந்தப் பருவத்தில் மட்டுமே கிடைப்பவற்றை வாங்கிச் சமைப்பதில் ஒரு சுவை. அம்மா அவர்கள் ஊரிலிருந்து கொடுத்தனுப்பும் நாட்டுக்காய்களில் வற்றல் முதலானவற்றைக் கொண்டு எதையாவது செய்வது, இப்படியாக அதற்கும் நேரம் ஒதுக்கியாக வேண்டும்.

உடற்பயிற்சி என்கின்ற பேரிலே எதையாவது செய்வது. அருகிலே தம்பி ஒருவர் இருக்கின்றார். அவருடன் சேர்ந்து கொண்டு ஊர்நாயம் பேசிக் கொண்டு வீதிகளில் திரிவது. அல்லது நாமகவே ஓடித்திரிவது, சைக்கிள் ஓட்டுவது, பூங்காக்களில் திரிவது, இப்படியாகப் பொழுதுகள் ஒதுக்கியாக வேண்டும்.

அமெரிக்கத் தமிழ் அமைப்புகளிலே எப்போதும் ஏதாகிலும் ஓர் அக்கப்போர் இருந்து கொண்டிருக்கும். அதைப்பற்றிப் பேசியாக வேண்டுமே? இஃகிஃகி. சிரிப்பும் நக்கலும் நையாண்டியுமாக அதற்கும் சில பொழுதுகள் ஒதுக்கப்பட்டாக வேண்டும். உரையாடல் என்பது இடம் பெற்றால்தான், நாம் நம்மை திருத்திக் கொள்ள முடியும். அல்லது திருத்த முடியும். குழந்தைகளிடமிருந்தே அமெரிக்க வாழ்வுமுறை, பண்பாடு போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். ஆனால் இந்தத் தமிழ் அமைப்புகள் அவற்றைக் கிஞ்சிற்றும் தத்தம் செயற்பாடுகளிலே இடம்பெறச் செய்வதில்லை. ஆகவே தொடர்ந்து சக நண்பர்களிடத்திலே பேசுவதன் மூலம் கற்றுக் கொள்ளவும் சுட்டிக்காண்பிக்கவும் முடிகின்றது.

அன்றாடம் குறைந்தது ஒருபக்கமாவது நம் எண்ணவோட்டங்களை எழுதிப் பார்க்க வேண்டியதாய் இருக்கின்றது. சிந்தையைக் கசக்கி எழுதத்தலைப்படும் போது, நம்முள்ளே இருக்கின்ற கசடுகள் புலனாகின்றது. அதற்காகவேனும் எழுத வேண்டி இருக்கின்றது. எழுதுகின்ற நேரத்திலே நீரில்லாக் கொடியைப் போலே மனம் அறியாமையின் பொருட்டுத் தத்தளிக்க நேரிடுகின்றது. நாடலுக்கும் தேடலுக்கும் அது வித்திடுகின்றது. நூல்கள், காணொலிகள், ஆவணங்கள் போன்றவற்றுக்காக நேரம் செலவிட்டாக வேண்டும்.

ஊரில் இருப்பவர்களுடன் பேச வேண்டும். பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டால் அன்றைய நாள் இனிதாய்க் கழியும். அல்லாவிடில் மூளையின் ஏதோ ஓர் ஓரத்தில் அந்த ஓர் நரம்பியலணு குத்திக் கொண்டே இருக்கும். மற்ற மற்ற வேலைகளின் போக்கினைப் பாழ்படுத்தும்.

முன்பெல்லாம் இப்படி இல்லை. வீடு கட்டிக் குடியேறிவிட்டால் இன்பம். காலாகாலத்துக்கும் வீடு நமக்குத் தொண்டாற்றிக் கொண்டு இருக்கும். அஞ்சாது அரவணைப்புடன் உறங்கிக் கிடக்கலாம். தற்காலத்தில் அப்படியன்று. வீட்டுக்கு நாம் தொண்டு செய்தாக வேண்டும். துப்புரவாக வைத்திருப்பதினின்று, வீட்டிலே பூட்டப்பட்டிருக்கின்ற கருவிகளைப் பழுது பார்ப்பது, மாற்றுவது, பேணுவது எனப் பல பணிகளும் இடையறாது இருந்து கொண்டுதான் இருக்கும். அவற்றைப் பங்கு போட்டுக் கொண்டாக வேண்டும். வீட்டுப்பணிகளென்றால் வீட்டுப்பணிகள் மட்டுமேயல்ல. மாதாமாதம் சில பல கட்டணங்கள் கட்டியாக வேண்டும். அவையெல்லாம் கிரமத்தில் இருக்கின்றனவாயெனப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி வீட்டுக்குள்ளேயும் ஏராள பணிகள் உண்டு.

சில பல குழுக்கள். அமைப்புகள். அவற்றுக்கும் தீனி போட்டாக வேண்டும். ஒரு கை நமக்கு வேலை செய்து கொள்கின்றதென்றால், இன்னொரு கை சமூகத்துக்காக எதையாவது செய்துதானே ஆக வேண்டும்?  ஊரைத் திருத்தி விட முடியுமாயென்றால் முடியாதுதான். ஆனால் நம்மால் பயன் அடைபவர் ஏதோவொருநாள், ஏதோவொருவர் இருக்கத்தானே செய்வர்? அந்த ஒருவருக்காக நாம் தொடர்ந்து இயங்கித்தானே ஆக வேண்டியுள்ளது??

இத்தனைக்கும் மேற்பட்டு பொழுது போக்க வேண்டிய தேவை ஏற்படாது. ஏதோவொன்றின் காரணம், மனவலி, மனச்சோகை. இருக்கவே இருக்கின்றது மணிவாசகரின் திருவாசகம். 13 ஆண்டுகட்கு முன்பு நண்பர் ஆரூரன் அவர்கள் கொடுத்தது. பிரித்து உரக்கப் படிக்கலாம். பாடலாம். பழந்தமிழ்ப் பாடல்களுக்கு இசைப்பயிற்சி தேவையே இல்லை. உரக்கப் பாடுங்கள். கோர்வையாக வராமல் தடுமாற்றம் ஏற்படும். அதற்கொப்ப சொல்லை நீட்டியும் விரைவாக்கிக் குறுக்கியும் பலுக்க முற்படுவோம். பாடலாக அதுவாகவே உருவெடுத்து விடும். தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கலாம். இஃகிஃகி. மனம் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அம்மணமாக நிலைகொண்டிருக்கும்.  தமிழ் கற்கலாம். நம் சிந்தனை என்பதையே ஈசனாக உருவகப்படுத்தி, பாடலுக்குக் கீழே கொடுத்திருக்கும் உரையை வாசிக்கும் போது புதுப்புது தத்துவார்த்த எண்ணங்கள் மேலெழும்.  எடுத்துக்காட்டாக,

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!

ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர், உண்மை இன்மை என எல்லாமும் தாமேயெனவும் கருதிக் கொள்பவரைக் கண்டு மனம் கோணாமல் தற்காலிகக் கொண்டாட்டத்தில் இருப்பவரெனக் கருதுகின்ற சிந்தையை நான் வாழ்த்துவனே!!

இப்படியாக, தனியாக ஓர் அறையில் இருந்து படிக்கப் படிக்கப் போதாமை எங்கிருந்து வந்து விடப் போகின்றது?  கருவிகளின் உதவியோடு பலவற்றையும் செய்யத் தலைப்படும் போது போதாமை வரும். நினைத்துப் பாருங்கள். 100 ஆண்டுகட்கு முன்னம், உடற்பயிற்சி செய்தாக வேண்டுமென்கின்ற கட்டாயம் இருந்ததா? இல்லை. ஏதோவொரு வகையில் உழைப்புக்காட்பட்டதாக இருந்தது உடல். பாடுவதைக் கூட ஏனோதானோவெனப் பாடிக்கொள்ளலாம். அந்த ஒலியைக் கருவிக்குள் செலுத்தி எடுத்துவிட்டால் அது தரம்கூட்டப்பட்டதாக ஆகிவிடுகின்றது. பாடும்கலை செத்துப் போகின்றது. கலை செத்துப் போவதுமட்டுமன்று. அந்த இடத்தில் வேறு ஏதோவொரு பிரச்சினை வந்து உட்கார்ந்து கொள்கின்றது. புலன்செய்ப்(conventional methods) பண்புகள் நம்முள் குடிகொண்டிருக்கும் வரையிலும் போதாமைக்கு இடமில்லை.

1/29/2023

கஞ்சாப்பித்து

ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எது கொண்டு மதிப்பிடலாம்? அவருடைய மனநிலையைக் கொண்டு, அவரால் மட்டுமே மதிப்பிட முடியும். எப்படி?

ஒருவரைப் பார்த்து, ’அவருக்குக் கார்கூட இல்லை; அவர் இன்ன வேலைதான் செய்கின்றார்.  அப்படி, இப்படி...’ எனப் பலவாறாக எடைபோடுவது, எடைபோடுபவரின் கண்ணோட்டம்தானேவொழிய, அவரின் வாழ்க்கைத்தரமாக இருந்துவிடாது.

மருத்துவர் அவரைப் பரிசோதித்து, நல அளவீடுகள் எல்லாமும் வரையறைக்குள் இருக்கின்றன. இவரின் வாழ்க்கைத்தரம் நன்று எனச் சான்றிதழ் அளித்துவிட முடியுமா? முடியாது. அவருடைய மனத்துக்குள் என்னமாதிரியான சூழல்நிலவு என்பது மருத்துவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்புடையவரேயாகிலும், அக்குறிப்பிட்ட வேளையில் மற்றவர்கள், சமூகம் எப்படி அவரைக் கருதுகின்றதென்பதை வைத்து மகிழ்வோ, வருத்தமோ கொண்டு, அதற்கொப்ப தம்நிலைப்பாட்டைச் சொல்வாரேயெனில் அது தற்காலிகமானதாகவே இருக்க முடியும். அடுத்த சிலமணி நேரங்களில் அவரின் இயல்பான நிலை அவரைப் பீடித்துக் கொள்ளும்.

சரி, எப்படித்தான் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளவிடுவது?

அவருக்கு மெய்நலம் நன்றாக இருத்தல் வேண்டும். மெய்நலம் நன்றாக இருந்தால்தான் உளநிலை சமநிலை கொள்ளும். வருத்தங்கள், கவலைகள் இல்லாத நிலை ஏற்படும்.

மெய்நலம் நன்றாக இருக்க, மெய்நலத்தைத் தொடர்ந்து அவர் பேணிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படிப் பேணுவதற்கான தொடர் ஊக்கம் அவரிடத்திலே இருந்தாக வேண்டும். அத்தகு தொடர் ஊக்கத்திற்கு மனநலம் நன்றாக இருத்தல் வேண்டும். 

இஃகிஃகி, இது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா என்பதைப் போன்றது. ஆமாம். உளநலம் மெய்ப்பட மெய்நலம் வாய்க்க வேண்டும். மெய்நலம் வாய்க்க உளநலம் வாய்க்க வேண்டும். 

ஒருவர் தன்னிச்சையாக மனம் திறக்கும் போது, அவர் அவரைப் பற்றியே யோசித்து, மனநிறைவில் எப்படி இருப்பதாக உணர்கின்றாரோ அதுதான் அவரின் வாழ்க்கைத் தரமாக இருக்க முடியும்.

சரி, ஒருவர், தம் வாழ்க்கைத்தரம் ஐம்பது விழுக்காடு என்பதாக உணர்ந்து, அதை மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்றார். எந்தப் புள்ளியிலிருந்து துவங்குவது?

இந்த என் எண்ணவோட்டத்தை மீண்டும் மீண்டும் படிப்பதில் இருந்து துவங்கலாம். எப்படி? மேற்கொண்டு படிக்கத் தெரியவரும். உடல்நலம், உளநலம், சைக்கிளிக் ரெஃப்ரன்ஸ் (ஒன்றிலிருந்து இன்னொன்று) எனப் பார்த்தோம். ஆனாலும் ஏதோவொரு புள்ளியிலிருந்து மேம்பாட்டைத் துவக்கித்தானே ஆக வேண்டும். ஆக, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, விளையாட்டு, ஏதோவொரு உடற்பயிற்சி, சேர்ந்திசை(பஜனை), கும்மி போன்ற கலைப்பயிற்சியிலிருந்து துவங்கலாம். எடுத்துக்காட்டாக நடைப்பயிற்சி/ஓட்டப்பயிற்சி என வைத்துக் கொள்வோம்.

உடற்பயிற்சி மேற்கொள்வதாலேயே மரணத்தை வென்று விடலாமா? முடியாது. அவர் ஃபிட்னஸ், ஆனாலும் செத்து விட்டாரேயென்கின்றனர் பலர். சாவுக்கான காரணங்கள், மரபணு, சூழல், விபத்து எனப் பலவாகவும் இருக்கலாம். அறிந்தது சிட்டிகையளவு; அறியாதது பெரும் கடலளவு. அவற்றுள் நாம் அறிய முற்படுவது, வாழ்ந்திருக்கும் காலத்தில் மனநிறைவாக, தரத்துடன் இருக்க என்ன செய்யலாமென்பதே!

இயல்பான உங்களின் ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்டு அதில் ஈடுபடும் போது, உடலில் ஆங்காங்கே மெல்லிய வலி தோன்றும். அதுகண்டதும் உடலின் சிலபல இயக்குநீர்கள்(ஹார்மோன்கள்) சுரக்கத் துவங்கும். அதாவது உடல்வலியை மனக்களிப்பால் ஈடுகட்டுவதற்காக. அத்தகைய இயக்குநீரில் முக்கியமானது எண்டோர்ஃபின். உடல் எனும் வேதிக்கூடத்தில் இயக்குநீர்கள் எல்லாமே ஒரு தகவற்சமிக்கைதாம். ஆற்றில் செந்நீர் வந்தவுடன் நாம் மேல்நாட்டில் எங்கோ மழை பெய்திருக்கின்றதெனப் புரிந்து கொள்கின்றோமல்லவா அது போலே. இந்த எண்டோர்ஃபின் வேதிப்பொருளை குருதியாற்றில் கண்டதும், கீழுறுப்புகள் வலியறு நிலை, களிப்புறுநிலை முதலானவற்றுக்கான செயலிகளுக்குத் தகவற்சமிக்கைகளை மேற்கொள்ளும். அவற்றுள்,  எண்டோக்கானபினாய்ட் endocannabinoid எனும் தகவற்சமிக்கையானது மூளையில் களிப்பூக்கப் பித்துநிலையைக் கட்டமைக்கும். இரண்டு மைல்கள் ஓடிவந்து, இளைப்பாரும் நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள். மிக இலேசாக உணர்வீர்கள்; சிரிப்பு வரும். எதிர்காலம் ஒளிமிகுந்ததாகக் கருதுவீர்கள். இப்படிப் பல உணர்வுகள்.  நடுவே கஞ்சாப்பூ வைத்திருக்க, தேன்கலந்த திணையுருண்டையைத் தின்றால் எழும் களிப்புநிலை ஏற்படும். அந்த மெல்லிய நுண்ணர்வே அடுத்தடுத்த செயற்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கநிலையையும் மேற்கொள்ளும்.

கடந்தகாலம், எதிர்காலம் சார்ந்த கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட்டுத் தற்காலத்தில் வாழத் தலைப்படுவீர்கள். அடுத்தநாளும் ஓட்டப்பயிற்சிக்கு அது நம்மை இழுத்துச் செல்லும். சிலருக்கு அது போதையாக மாறிவிடுவதும் உண்டு. மனத்தளவில் பெரும்பாலும் துள்ளலாக இருப்பீர்கள். இப்படியாக, வாழ்க்கைத்தரத்திலும் மேம்பாடு நிலைகொள்ளும்.

1/21/2023

விற்பனைநுட்ப நிறுவனங்களும் சீனாவும்

சீனா தன் பொருளாதாரத்தை 1978ஆம் ஆண்டு, பன்னாட்டுப் பொருளாதாரமயமாக்கலுக்கு உட்படுத்துவதாக அறிவித்துக் கொண்டு அதற்கேற்ப தம் நாட்டு பொருளாதாரக் கொள்கைகளைச் சீரமைத்துக் கொண்டது. இருப்பினும், 1995ஆம் ஆண்டு வரையிலும் எதிர்பார்த்த வளர்ச்சியை, முன்னேற்றத்தை அதனால் எட்டமுடியவில்லை. 1978ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 150 பில்லியன் டாலர்களில் துவங்கி, 1995 ஆம் ஆண்டு வெறும் 600 பில்லியன் டாலர்கள் என்பதாக இருந்ததைக் கண்டு ஏமாற்றம் கொண்டது சீனா. அதன்பொருட்டு, கடந்த 15+ ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கங்களை மீளாவு செய்து கொள்ளத்தலைப்பட்டது.

கொள்கை அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, சட்டதிட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டது. அதன்படி டெக் கம்பெனிகளைக் கூடுமானவறை முடக்கிக் கொள்வதென்பதாகி விட்டது. இங்கே டெக் கம்பெனிகள் என்றால், எல்லாத் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது மென்பொருள்/கணினி சார்ந்த நிறுவனங்கள் எனப் பொருள் கொள்ளலாகாது. குறிப்பிட்ட தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களென்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். அவை எத்தகைய நிறுவனங்கள்?

பொருட்களின் விற்பனையை நாட்டுமக்களிடம் சூதனமாகத் திணிக்கும் நிறுவனங்களெல்லாமும் இத்தகு நிறுவனங்களெனக் கருதியது சீனா. எடுத்துக்காட்டாக, அலிபாபா, Google, Facebook, Tencent, DiDi, Meituan போன்றவை. என்ன காரணம்?

உற்பத்தித்திறன், தரம், உலகளாவிய விற்பனை போன்றவற்றுக்கான கவனம் என்பது, உள்நாட்டு விற்பனை, பணம், இலாபம் என்பதான அடிப்படையில் சொந்தநாட்டு மக்களையே சுரண்டுவதும் ஒருசாரார் மட்டுமே இலாபம் அடைவதுமாகக் கொண்டு, மற்ற மற்ற துறைகள் எல்லாம் முடங்கிப் போகும் என்பதுதான் காரணம். மென்பொருள், மறைபொருளாக விளங்குகின்ற அல்கோரிதங்கள், விளம்பர யுக்திகள், சோசியல் மீடியா போன்ற கன்சூமரிசத்தைப் பெருக்குகின்ற கருவிகள் போன்றவற்றுக்கு கடுமையான நெறிமுறைகள்(ரெகுலேசன்) வகுக்கப்பட்டு செயற்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அவை பொருந்தக் கூடியதாக இருந்தன. ஆகவே, தொழில்முனைவோர் எல்லாம் தளபாட உற்பத்திக்குத் தள்ளப்பட்டார்கள். கணினிக்குத் தேவையான மின்னணுக் கருவிகள், மருத்துவக்கூட நவீனக் கருவிகள், மற்ற மற்ற மின்னணு சாதனங்கள் இப்படியாக.

விளைவு, நாட்டின் உற்பத்தித்திறன் வேகமெடுத்தது. 1995ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர்கள் என இருந்த உற்பத்தித்திறன் 2022ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 8250 பில்லியன் டாலர்கள் என்பதாக இருக்கின்றது. இப்படியான டெக்நிறுவனங்களுக்கு எதிரான கிடுக்கிப் பிடிகளைக் கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் கடுமையாக்கிக் கொண்டது சீனா. அதனால் பொருளாதாரத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டன. அவை தற்காலிகமானவை; தொலைநோக்குப் பார்வையில் கடந்த இருபதாண்டு கால வளர்ச்சியைப் போலவே இதுவும் மேம்பாட்டையே தருமென்பது அரசின் கொள்கையாக இருக்கின்றது. விளம்பர யுக்திகள் எனும் போது, பொய், புரட்டு, மிகைபடக் கூறல், குன்றக்கூறல், மறைத்துக்கூறல், புனவுபடக் கூறல், செயற்கையாக அழகூட்டிக் கூறல் என எல்லாமும் உள்ளடக்கம்தானே? அவற்றுக்குக் கடிவாளம் இட்டுக் கொள்கின்றது. மேலும், தம் குடிமக்களின் தகவலைத் தனியார் நிறுவனங்கள் கொண்டிருப்பது தம் மக்களுக்கு எதிரானதென்றும் கருதுகின்றது சீனா.

சோசியல் மீடியாவில் வெகுமுனைப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலமும் உண்டு. 2017ஆம் ஆண்டு வாக்கில் குறைத்துக் கொண்டேன். காரணம், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக எவரோ வழிநடத்திச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதுதான் காரணம். அத்தகு கட்டமைப்புகள் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றன. அதனைப் பயன்படுத்தி வணிகம் வளர்த்துக் கொள்ள தனிமனித விற்பன்னர்கள். இவர்களின் இலக்கு சாமான்யர்களான நுகர்வோர். எது சரி, தவறு என்பதையெல்லாம் சிந்தித்தறியாதபடிக்கு உள்வாங்குதிறன் கூட்டப்பட்டுவிடுகின்றது. ஆள்பிடிக்கும் களமாக உருவெடுத்திருக்கின்றன இவை. விளைவு, விழுமியம், அறம் போன்றவற்றில் தொய்வு.

சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட பங்குகளைப் பெருமைப்படுத்திப் பேசி சாமான்யர்கள் பெருத்த பொருள் இழப்புக்கு ஆட்பட்டதாகச் சொல்லி, நடவடிக்கை மேற்கொண்டதாகப் பல செய்திகள். SEC Charges Eight Social Media Influencers in $100 Million Stock Manipulation Scheme Promoted on Discord and Twitter. Cary man pitched real estate deals to defraud people in the Indian community, prosecutors say. இப்படியெல்லாம் செய்திகள் காணக்கிடைக்கின்றன. இந்த நேரத்தில்தாம் நம் கடந்தகால அனுபவங்களைத் திரும்பப் பார்க்கின்றோம்.

சகமனிதர்கள், ஒத்த விருப்பங்கள், ஒத்த கலை இலக்கியம் போன்றவற்றுக்காக மக்கள் தாமாக வந்து அமைப்புகளிலே குழுமினார்கள். தற்போதெல்லாம் இலவச உணவு, விருதுகள், பரிசுகள், அது, இது என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகின்றது. எதற்காக? விருந்தோம்பல் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் விளம்பரப்படுத்துவது எதற்காக?  தனிமனிதர்களுக்கும் விளம்பரங்கள் இடம் பெறுகின்றன. விளம்பரம் என்று வந்து விட்டாலே, அங்கு பொய்யும் புரட்டும் நூதனமான திணிப்பும் இடம் பெறத்தானே செய்யும்? சீனாவின் கொள்கையில் இருக்கும் தத்துவார்த்த உண்மை ஏதோவொன்றை நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றதுதானே?

References:

How China Destroying Its Tech Companies is Actually a Smart Move https://youtu.be/-lW1M8lLZbo

Cary man pitched real estate deals to defraud people https://www.bizjournals.com/triangle/news/2023/01/17/ponzi-scheme-cary-town-of-chapel-hill-employee.html

SEC Charges Eight Social Media Influencers https://www.sec.gov/news/press-release/2022-221


1/19/2023

இளம்பிராயம்

அடிக்கடி எதிர்கொள்ளும் வினா இது. எப்படி சிற்சிறு நுண்ணியமான பற்றியங்களையெல்லாம் நினைவில் வைத்திருந்து சொல்ல முடிகின்றது? நேரிடையாக இதுதான் விடையென ஒன்றைச் சொல்லிவிட முடியாது. பரந்த பார்வையில்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. கூடவே அறிவியற்பூர்வமான அணுகுமுறையும்.

In people, for example, researchers have found that having a greater density of dopamine receptors in the hippocampus results in better episodic memory. The Genetics of Why Some People Remember Events Better than Others as They Age: https://www.cogneurosociety.org/memorygenetics_papenberg/

நினைவேக்க அணுக்களின் அடர்த்தி காரணமென்கின்றது அறிவியற்கட்டுரை. சரி, அத்தகைய நினைவேக்க அணுக்களை எப்படிப் பெருக்கிக் கொள்வது?

சமூகமும் பெற்றோர்களும்தான் உயிர்ப்புள்ள சூழலைக் குழந்தைகளுக்கு அமைத்துத்தர வேண்டும். எடுத்துக்காட்டாக, நாங்கலெல்லாம் ஊராரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அம்மா, அப்பா வளர்ப்பில் மட்டுமே வளர்ந்தவர்கள் அல்லர். பாட்டி, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, பக்கத்து வீட்டு அக்கா, ஹவுஸ் ஓனர், வேலைக்காக வருபவர்கள் இப்படிப் பல தரப்பின் மேற்பார்வையில். அப்படியான பலரும் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வர். ஒரே இடம், ஒரே மனிதர்கள், ஒரே பண்பாடு என்பதில்லை. குழந்தைகளுக்கு பன்மைத்துவம் அமைகின்றது. ஒப்பீட்டளவில் உள்வாங்குவதன் அளவு அதிகம்.

பாட்டி ஊரில் ஒரு விநாயகர் கோயில். அதையொட்டியே ஒரு பிறவடை. அந்தப் பிறவடைக்கு அப்பாலே ஒரு சேந்து கிணறு(பொதுக்கிணறு). மாலை வேளையில் எஞ்சோட்டுப் பையன்களெல்லாம் கூடிக் குலாவிக் கொண்டிருப்பர். கோயிலுக்குள்ளேயே ஒரு வேம்புமரம். அந்த மரத்துக்கடியில் ஒரு மடப்பள்ளி. மடப்பள்ளிக்கு ஒரு மரக்கதவு. அதைத் திறந்தவுடனே அந்த இடத்துக்கேவுரிய மணம்; கற்பூரமும் பச்சரிசியும் கலந்ததொரு மணம். கதவடிக்கு வந்ததுமே வேம்புமரத்தின் வாடை. மரநிழலைக் கடந்தவுடன் சுண்ணாம்பு வாடை. ஒரு அடி கோவிலுக்குள் வைத்தவுடன், பிசுபிசுத்துப் போன அந்த எண்ணெய் வாசம். அய்யோ அவன் வந்துருவானேயென ஓடுகையில், பிறவடையெங்கும் முளைத்துக் கிடக்கின்ற தும்பைச்செடியின்(பட்டாம்பூச்சிச் செடி) வாசம். கிணற்றடி வந்து விடும். ஈரத்தில் நனைந்து கிடக்கும் அந்த சேந்து கயிற்றின் வாசம். கைப்பிடிச் சுவருக்கு மேலே எத்தனித்துக் குனிகையில், கைப்பிடிச் சுவரில் ஆங்காங்கே இருக்கும் சிட்டுக்குருவிகளின் பீ மணம். ஆழப்பார்க்கையில் நீரின்வாசம். இவையெல்லாமுமே அந்தச் சிறுவனின் மூளையில் பதிகின்றது. இப்படியாக, ஒரு பிள்ளை வெவ்வேறான புலனனுபவங்களை பெற்றுக் கொண்டே இருக்கும் போது, அந்த மூளைபூமி வளம் பெற்றதாய் ஆகிவிடுகின்றது. களிப்பூட்டு அணுக்களின் அடர்த்தியும் செறிவடைகின்றது.

மாறாக இப்படி எண்ணிப் பாருங்கள். ஆறு மணிக்கு எழுந்த குழந்தை துரித கதியில் புறப்பட்டு, வண்டியேறி பள்ளிக்குப் போய், மீண்டும் வீட்டுக்கு வந்து, வீட்டுப்பாடங்கள் செய்து, மனப்பாடம், மனப்பாடம், மனப்பாடம் செய்து, டிவியிலோ செல்போனிலோ கொஞ்ச நேரம் மூளையைக் கசக்கி விட்டுத் தூங்கி எழுந்து, மீண்டும் துரிதகதியில் புறப்பட்டு. விடுமுறை வருகின்றது; பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஆண்ட்டிக்கும் ஒரு ஹாய் சொல்லியான பின்னர், சிறப்பு வகுப்புகளில் சேர்க்கப்பட்டு, சிறப்புப்பாடங்களை உள்வாங்கி, பணம் பெண்ணுவது எப்படி?, தலைவன் ஆவது எப்படி? பாசறைகளுக்குச் சென்று, பெரியவனாகி, இஃகிஃகி.

Let's give him/her a life!

1/18/2023

விடைநாள்

தத்துவஞானி அரிஸ்டாட்டில் சொன்னதாகப் படிக்கின்றோம். அதையே திரும்பத் திரும்ப பலரும் பலவிதமாய்ச் சொல்லிக் கொண்டேதானிருக்கின்றனர்; இப்போது நானும் அந்தவரிசையில் ஒருவன். Man is a social animal. He can't survive in isolation. மாந்தன் ஒரு சமூகவிலங்கு. அதாவது கூட்டம் கூட்டமாக இருந்து வாழத்தலைப்பட்டவன். அதன்பின்னாலே பரிணாமவியல், சூழலியற்காரணங்களும் உண்டு. முதலாவது இன்னபிற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு. அடுத்தது உட்கிடைப் போர். சகமாந்தனின் ஆதிக்கவெறிக்கு ஆளாகிவிடாமல் இருக்க வேண்டுமேயானால் ஏதோவொரு கூட்டத்தில் இருந்து கொண்டால் வசதி. 

நடப்புக்காலத்தில், பொருள்முதல்வாத உலகின் வணிகத்துக்காக புத்தாக்கப் பொருட்கள் தேவைக்கும் மிகுதியாக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பாவிக்கவே அவனுக்கு நேரமில்லை. அதையுங்கடந்து, சக மனிதர்களுடன் கூட்டுறவாகக் கொண்டாட்டத்தைக் கடைபிடிக்க அவனுக்குத் தேவையில்லாமற்போய் விட்டது. ஒருகட்டத்தில், சலிப்பும் அலுப்பும் தோன்றுகின்றது. உடனிருந்த கொண்டாட ஆட்களில்லை. பொங்கல்விழா என்பது அப்படியானது அன்று.

சில பல வாரங்களுக்கு முன்பே மட்பாண்டங்கள் வனையப்படுகின்றன. கூடைகள் பின்னப்படுகின்றன. கயிறுகள் திரிக்கப்படுகின்றன. பொங்கலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மஞ்சள், வெல்லம் என எல்லாமும் பார்த்துப் பார்த்து கொள்வனவு செய்யப்படுகின்றன. உற்றார் உறவினரெல்லாம் ஊருக்குள்ளே ஒன்று சேர்கின்றனர். பட்டிகளெல்லாம் ஆர்ப்பரிக்கின்றன. படல்களெல்லாம் பிரித்து வேயப்படுகின்றன. கட்டுத்தாரைகள் புனரமைக்கப்படுகின்றன. சகமனிதர்கள் ஒருவருக்கொருவர் இல்லாததைக் கேட்பதும் இருப்பதைக் கொடுப்பதுமாய் இருக்கின்றனர்.

காப்புக்கட்டி, அவரவர் வீடு, அவரவர் குடும்பம், அவரவர் பட்டி, அவரவர் பொங்கல் என முதல் மூன்று நாட்களும் ஆனபின்னர், கூட்டுவிழாக்கள் கோலோச்சத் துவங்குகின்றன. பட்டி ஆவுடையாருக்குப் பொங்கல் வைத்து வழிபட்ட கட்டாந்தரையிலே கூட்டமாகக் கூடி அமர்ந்திருக்க துவரைமார் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும். அந்த வெளிச்சத்தின் கதகதப்பிலே திட்டமிடல்களும் ஆலோசனைகளும் பரபரக்கும்.

கரட்டுமடத்துக் கரடுகளுக்குப் பின்னாலே கோச்சைகள் நடக்கும். வெட்டாப்புச்சேவல், கட்டுச்சேவலென இரண்டு இரகம். வெட்டாப்புச்சேவலென்றால் எப்போது தண்ணிகாட்ட வேண்டும், முகைச்சலுக்கு என்ன செய்ய வேண்டும், யார் நடவுபோடுவது, நடவுபோடுகையில் எதிராளியிடம் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும், கட்டுச்சேவலென்றால் கத்தியைக் கட்டும்பகுமானமென்ன, கத்தியிலே மொளகாய் பூசியுடலாமா? இப்படியெல்லாம் பேச்சுகளில் அனலடிக்கும்.

தகர் சண்டையென்றால் சும்மாயில்லை. தகர் என்றால் ஆடு. ஆட்டுக்குக் கொம்புமுளைத்ததுமே பட்டும்படாமல் மேலாக உடைத்து விட வேண்டும். உடைத்துவிட்டதும் அது ஊதிப் பெருக்கும். மீண்டும் மேலாக உடைத்து விட வேண்டும். அது மீண்டும் பருத்துப் பெருக்கும். பொங்கல் வருவதற்குள்ளே இப்படியாக நான்கைந்து முறையாவது செய்து விட்டால்தான் அது கெட்டிப்படும். ஆடு பெருத்தும் போய்விடக் கூடாது; இளைத்தும் போய்விடக் கூடாது. மந்திராலோசனைகள் கொடிகட்டிப் பறக்கும்.

ரேக்ளாரேஸ் என்றால் வெறுமனே காளைகளைக் கட்டிப் பரிபாலனம் செய்வது மட்டுமேயன்று. வண்டியையும் பராமரிக்க வேண்டும். ஓட்டுகின்ற மனுசனும் வாகாய் உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும். வாலை எப்போது பிடிக்க வேண்டும், கயிற்றை எப்போது விட வேண்டும், சுண்ட வேண்டுமென்பதில் இருக்கின்றது ஓட்டுதாரியின் நுட்பம்.  இதெல்லாமுமே கூட்டுப்பணிதாம், கூட்டுறவுதாம். தனியாட்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. இப்படித்தான் சமூகத்திலே பிடிப்பும் கூட்டுறவும் நட்பும், தகைசால் மாண்பும் நிலைபெற்றது.

பாரி வேட்டை (முயல், காடை, கவுதாரி, முள்ளெலி, வெள்ளெலி) நடக்கும். எந்த மண்ணிலே, எந்த வங்கில் முயல் இருக்குமென்பது வேட்டையாளிக்குத்தான் தெரியும். அவனோடு இருந்துதான் மற்றவர் நுட்பம் பழகியாக வேண்டும். எந்தப் புதரில் எது இருக்குமென்பதும் அப்படியே. இவையெல்லாமுமே வழிவழியாய் அமையப்பெற்ற அறிவுக்கொடை, அனுபவக்கொடை. கூட்டியக்கமாய் செயற்பட்டால்தான் சாத்தியம்.

கூட்டியக்கத்துக்கு அவ்வப்போது புத்துணர்வும் ஊக்கமும் ஊட்டியாக வேண்டும். ஆங்காங்கே அதற்கேயான தந்தனத்தான்கள் உண்டு. அவர்களின் வாய் வருசம் முன்னூத்தி அறுவத்தி ஐந்து நாட்களும் தந்தனத்தன, தந்தனத்தனவென்று முணுமுணுத்துக் கொண்டே ஏதோவொரு பாடலைப் பாடிக்கொண்டேதான் இருப்பர். அவர்களுக்கு வேறுவேலை வெட்டி இருக்காது. அதனாலே அவர்கள் எள்ளிநகையாடப்பட்டனர். ஆனாலும் தைமாதம் வந்துவிட்டாலோ அவர்களின் இராஜ்ஜியத்தில் உய்யலாலா. அவர்களுக்கு வெகுகிராக்கியாய் இருக்கும். அவனைப் பார்க்கப் பார்க்க மற்றவர்காதுகளில் புகை. இப்படியாகப் பாடி தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வர்:


எல்லாரும் கட்டும் வேட்டி
ஏழைக்கேத்த சாய வேட்டி! ஆனா,
தந்தனத்தான் கட்டும் வேட்டி
சரியான சரிகை வேட்டி!!

எல்லாரும் போடும் சட்டை
ஏழைக்கேத்த நாட்டுச்சட்டை! ஆனா,
தந்தனத்தான் போடும் சட்டை
சரியான பட்டுச் சட்டை!!

எல்லோரும் கட்டும் பொண்ணு
ஏழைக்கேத்த கருத்த பொண்ணு! ஆனா
தந்தனத்தான் கட்டும் பொண்ணு
சரியான செவத்த பொண்ணு!!

தந்தனத்தானுக்கு எல்லாமும் எளிதில் கிட்டும். இப்படியும் ஒரு பாட்டு உண்டு.

தந்தனத்தான் தோப்புல
தயிர் விக்கிற பொம்பள
தயிர்போனா மயிர்போச்சு
தங்கமடி நீயுங்கிட்ட வாடி!

இப்படியெல்லாம் தை நான்காவது, ஐந்தாவது நாட்கள் கூட்டுறவிலும் பல்விதமான செயற்பாட்டுப் பணிகளிலும் கரைபுரண்டு கிடக்கும் சமூகம். ஆவுடையப்பனுக்கு விளக்கேற்ற மாவிளக்குகள். அந்த மாவிளக்குகளுக்காகச் செய்யப்படுவதுதான் பச்சமாவும் தினைமாவும். அதையே விளக்குமாவு என்றுஞ்சொல்வர். நெல்லரிசி அல்லது தினையரிசியை நன்றாக இடித்து வெல்லஞ்சேர்த்து, தேன்சேர்த்துச் செய்யப்படும் மாவு. கூடவே அரிசி முறுக்கு, இராகி வடை. இதெல்லாம் தின்று ஆனதும், கரிநாள். கிடாவெட்டுகளும் வேட்டையாடிக் கொண்டு வந்ததுமாய் உண்டாட்டுகளில் ஊரும் ஊர்சார்ந்தகாடும் பரபரத்துக் கிடக்கும்.

எதற்கும் ஒரு முடிவு என்பது உண்டுதானே? உற்றார் உறவினரெல்லாம் மிஞ்சியதைக் கட்டத் துவங்குவர். மனம் கனத்துப் போகும். விடைநாள்! அதாவது விடை பெற்றுக் கொள்ளும் நாள்!!

காரிமயிலக்காளை பொன்னுப்பூங்குயிலே
கட்டினேண்டி வண்டியிலே பொன்னுப்பூங்குயிலே
பாதை கிடுங்ககிடுங்க பொன்னுப்பூங்குயிலே
போயிவாரேன் புங்கமுத்தூரு பொன்னுப்பூங்குயிலே

பண்ணையம் பார்க்க விடைபெற்றுப் புறப்படுகின்றான் கந்தசாமி! நாமும் பொங்கற்திருவிழாவினின்று விடைபெற்றுக் கொள்கின்றோம்!! 💓🌷🌷🌹


1/17/2023

பூ நோம்பி

பொங்கலோ பொங்கல்! தை பிறந்த முதல் நாள் பெரும்பொங்கல். அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மூன்றாம் நாள் பூப் பொங்கல். தை பிறந்தால் இப்படிக் கிராமங்களிலே ஒரே பொங்கல் மயமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்!  மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள், ஆண்களெல்லோரும் மாலை கோவிலுக்குப் போய்விடுவார்கள்.  ஆண்களெல்லாம் மாலை கோவில் சென்ற பிறகு ஊரிலே சிறுமிகளும் பருவமடைந்த மங்கையரும் பூப் பொங்கல் விழாக் கொண்டாடுவார்கள். 

ஊனான் கொடி என்று ஒருவகையான கொடி மைதானத்திலே நீண்டு வளைந்து வளைந்து கரும்பச்சைப் பூப் பொங்கல் புதராகப் படர்ந்திருக்கும்; வெண்சிவப்பான பூக்கள் கொத்துக் கொத்தாக அதிலே பூத்துக் குலுங்கும். அவற்றை மாட்டுப் பொங்கலன்றே பறித்து வந்து சிறுமிகள் தங்கள் பூக்கூடைகளில் நிரப்பிக் கொள்ளுவார்கள். பூப் பொங்கலன்று அவர்கள் அனைவரும் பூக்கூடைகளுடனும் பலகாரக் கூடைகளுடனும் விநாயகர் கோயிலில் கூடிக் கும்மியடிப் பார்கள். எத்தனை வகையான வண்ணப் பாட்டுகள் அவர்கள் வாயிலே!  பாட்டைத் தொடங்குவாள் ஒருத்தி. அவளைத் தொடர்ந்து அனைவரும் பின்னால் பாடிக்கொண்டு கும்மியடிப்பார்கள். எங்கள் ஊரான லெட்சுமாபுரத்தைப் பொறுத்த மட்டிலும் சம்பங்கியக்காதான் டீம்லீட். இதோ அந்த அக்காவின் ஒரு பாட்டைப் பாருங்கள். 

ஒரு மிளகு கணபதியே
ஒண்ணா லாயிரம் சரவிளக்கு
சரவிளக்கு நிறுத்தி வச்சு
சாமியென்று கையெடுத்து
பொழுது போர கங்கையிலே
பொண்டுக ளெல்லாம்
நீராடி நீராடி நீர் தெளிச்சு
நீல வர்ணப் பட்டுடுத்தி
பட்டுடுத்திப் பணிபூண்டு
பாலேரம்மன் தேரோட
தேருக்கிட்டே போகலாமா
தெய்வமுகங் காண்கலாமா?

பாட்டுக்களெல்லாம் பள்ளிக்கூடத்திலே படித்தவை அல்ல; நாடோடிப் பாடல்கள். எந்தக் காலத்திலிருந்தோ தெரியாது. அவை கிராமங்களிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  இந்தக் கும்மி, அன்று ஊரெல்லாம் நடைபெறும். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துவிட்டுச் சிறுமிகள் ஆற்றங் கரைக்கும் குளக்கரைக்கும் புறப்படுவார்கள்.  கூடையிலே பட்சணங்கள் இருக்கும். மார்கழி மாதத்திலே நாள்தோறும் வாசலிலே வைத்த பிள்ளையார்கள் இருக்கும். பலவகையான பூக்களும் நிறைந்திருக்கும்.  பிள்ளையார்களை ஆற்றிலோ குளத்திலோ போட்டுத் திரும்ப வேண்டும். அதற்காகத்தான் சிறுமிகள் புறப்படுகிறார்கள்.  அவர்கள் 'ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்றவர்களெல்லாம் "ஓலே....." என்று கூறுவார்கள். 

ஓலையக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு
(ஓலே)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலை குறைச்சலென்று
மயங்குறாளாம் ஓலையக்கா
(ஓலே)

சேலை அரைப்பணமாம்
சித்தாடை கால் பணமாம்
சேலைக்குறைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா
(ஓ...லே)

பூப் பொங்கல்
தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போறா ஓலையக்கா
(ஓ...லே)


மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனாட்டு ஓலையக்கா
மேற்கே குடிபோறா
(ஓ..லே)


நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போறாளாம் ஓலையக்கா
(ஓ...லே)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போறாள் ஓலையக்கா
(ஓலே)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
(ஓ...லே)

போறாளாம் ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையிலே
ஒரு சாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாட
தலைநிறைய முக்காடு
(ஓ...லே)

ஊர்நத்தம், மந்தைவெளி, காடுகரைகளுக்குச் சென்ற பிறகு மறுபடியும் ஆவாரம்பூ, துளசி, பொன்னரளி போன்ற பூப் பறிப்பார்கள். பெண்களுக்குப் பூவென்றால் ஒரே ஆசை. எத்தனை பூக் கிடைத்தாலும் ஆசை அடங்காது. இறைவனுக்குப் பூப் பறிப்பதிலே ஒரு தனி ஆர்வம் அவர்களுக்கு உண்டு. 

ஆத்துக்குள்ளே அந்திமல்லி
அற்புதமாய்ப் பூ மலரும்
அழகறிந்து பூ வெடுப்பாய்
ஆறுமுக வேலவர்க்கு 
சேத்துக்குள்ளே செண்பகப்பூ
திங்களொரு பூ மலரும்
திட்டங்கண்டு பூ வெடுப்பாய்
தென்பழநி வேலவர்க்கு

இப்படிப் பாடிக்கொண்டு பூப்பறிக்கும்போது ஆடவர்களும் அந்த இன்பப் பணியிலே உதவி செய்ய வருவார்கள். அவர்களும் விளையாட்டாகப் பாடுவதாகப் பல பாடல்கள் வரும். 

பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக் கொடுத்தால் ஆகாதா?
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூச்சொரிந்தால் ஆகாதா?
பறித்த பூவையும் பெட்டியிலிட்டுத்
தொடுத்த மாலையும் தோளிலிட்டும்
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக்கொடுத்தால் ஆகாதா?

இந்தக் கேள்விக்குப் பெண்கள் பதில் சொல்லுவார்கள்.

பூப் பறிப்பதும் இன்னிக்குத்தான்
பெட்டியிலிடுவதும் இன்னிக்குத்தான்
அதிசயமான இந்த ஊரிலே
அள்ளி இறைப்பதும் இன்னிக்குத்தான்
நெல்லுவிளையுது நீலகிரி
(பூவோ... பூவு)

நெய்க்கும்பம் சாயுது அத்திக்கோடு
பாக்கு விளையுதாம் பாலக்காடு
பஞ்சம் தெளியுதாம் இந்தஊரில்
(பூவோ... பூவு)

பிறகு பலவகையான பழங்களைப் பறிக்கத் தொடங்கு வார்கள். அங்கேயும் பாட்டுத்தான்.  கடைசியாக ஊரெல்லாம் சென்று அங்கங்கே பூக்கூடைகளை நடுவிலே வைத்துக் கும்மியடிப்பார்கள். அதிகாலை மணி நான்கு ஆகிவிடும். சின்னப்பாப்பக்கா குரல் கொடுப்பார். ‘வெடிஞ்சிருமாட்ட இருக்கு. ம்ம், வாங்க போலாம்’. எல்லாரும் மந்தைத்தோட்டத்து பொதுக்கிணற்றுக்குச் சென்று, மார்கழி முப்பதும், வாசலில் நாளொரு புள்ளையாராக, வைத்து அழகு பார்த்த புள்ளையார்களையெல்லாம் வழி அனுப்புவார்கள்.

போறாயோ போறாயோ
போறாயோ புள்ளாரே?
வாராயோ வாராயோ
வருவாயோ புள்ளாரே?
போறாயோ புள்ளாரே
போறாயோ புள்ளாரே?
வாராயோ புள்ளாரே
வருவாயோ புள்ளாரே?
சிந்தாமல் சிதராமல்
வளர்த்தினேன் புள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே
சிந்துகிறேன் புள்ளாரே(போ)

வாடாமல் வதங்காமல்
வளர்த்தினேன் புள்ளாரே
வாய்க்காலுத் தண்ணியிலே
விட்டேனே புள்ளாரே(போ)

பூவோடு போறாயோ
போயிட்டு வாராயோ
பூவோடு வாராயோ
பெண்களைப் பாராயோ (போ)

பிள்ளையாரை வழியனுப்பிவிட்டு அவரவர் வீதிகளுக்குள்ளே பலவாகப் பிரிந்து செல்லும் போது, களிப்பெல்லாம் தீர்ந்துவிட்டதேயெனும் அங்கலாய்ப்பு மனமெல்லாம் பாரமாகிப் போக, துளிர்க்கும் கண்ணீர்த்துளிகளுடன் ஆடிப்பாடிய களைப்பில் உறங்கிப் போவர். நவீனத் திரைப்படப் பாடல் ஒன்று இப்படியாக,

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க….. அண்ணே வாங்க
அட ஏங்க?….?
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அப்படி போடுங்க…

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
ஐயா வாங்க….. அண்ணே வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க

காரமடை கன்னிப்பொன்னுதாங்க
ஐயா காரமடை கன்னிப்பொன்னுதாங்க
எங்க கண்ணீர் பட்டா காரம் தூரம்தாங்க
அரேரேரேஏஏஏஏ

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
சேத்து வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா……ஆமா..
தேக்கி வைக்கிற ஆசைதான்
தீத்து வைக்க வேணுமா
சின்ன சின்ன பொன்னுதான்
பார்த்தும் பசியாருமா…

பூப்பறிக்க்கோனும் தினம் தினம் பூப்பற்க்கோனும்
பூத்திருக்கிற மனசுக்குள்ள நானிருக்கோனும்
அப்படியொரு எண்ணம் இல்ல போஙக
நாங்க ஆக்க வந்தா சொல்லியனுப்புறேன் வாங்க

ஹொய்… ஹொய்ய்ய்ய்ய்ய்

பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க.. வாங்க
ஐயா வாங்க…..வாங்க
அண்ணே வாங்க.. வாஆஆங்க…
பொன்னுங்க தன்னாலே நம்ம பின்னால வருவாங்க
அட போங்க…

https://youtu.be/KNpVVikRZb4

பூநோம்பி வாழ்த்துகள்!


1/16/2023

சலகெருது நாள்

 

பொங்கற்திருவிழா என்பது, காப்புக்கட்டு, கதிரவன் பொங்கல், ஊர்ப்பொங்கல், பெரிய நோன்பு, மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும்பொங்கல், பாரிவேட்டை, வேடிக்கைநாள், மூக்கரசு, சலகெருதுநாள், பூப்பொங்கல், விடைநாள் என்பதாக அமைந்த ஒருவாரகாலத் திருவிழா. 

காணும்பொங்கலன்று பொது இடங்களுக்குச் சென்று களித்திருந்து வருதல், உற்றார் உறவினரைக் கண்டுவருதல், சல்லிக்கட்டு காண்பதென்பதுதான் பொதுவாகப் பார்க்கப்படுகின்றவொன்று. ஆனால் அன்றைய நாளிலே, சேவற்கோச்சை, புறாப்பந்தயம், தகர் சமர் எனப்படுகின்ற கிடாமுட்டு, ரேக்ளாபந்தயம், முயல்வேட்டை, தேனெடுப்பு, வழுக்காம்பாறை, ஆற்றங்கரை, மலைமுகடு, காட்டுமுகடு போன்ற இடங்களிலே தின்பண்டங்களுடன் கூடிக் கதை பேசிக்களிக்கும் மூக்கரச்சும் இடம் பெறும். இதேநாளில்தான் சலகெருது ஆட்டங்களும் இடம் பெறும். இது பழைய சிஞ்சுவாடி ஜமீன், மைவாடி ஜமீனுக்குட்பட்ட வட்டாரத்துக்கேவுரிய தனிப்பட்ட வாடிக்கையாக இன்றளவும் நிலைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

காப்புக்கட்டிய தருணத்திலிருந்து பூப்பொங்கல் முடியும் தருணத்துக்குள் (நான்கு நாட்கள்) சினைமாடு ஈன்றுமேயானால் அது ஆலாமரத்தூர்/சோமவாரப்பட்டியில் இருக்கின்ற ‘ஆல் கொண்ட மால்’ திருக்கோயிலுக்குச் சொந்தமானது என்பது மரபு.

பிறந்த கன்று கிடாரிக்கன்றாக இருக்குமேயானால் அது குடிக்குமளவுக்கும் விட்டு விட்டுப் பிறகுதான் பசுமாட்டின் உரிமையாளர் அதனின்று பால்கறக்கலாம். பால்குடி மறந்தபின், அந்தக் கன்றினைக் கொண்டு போய் திருக்கோயில் வசம் ஒப்படைத்து விட வேண்டும். காளைக்கன்றாக இருக்குமிடத்து, அது சாமிக்கன்றென அழைக்கப்படுகின்றது. கீழ்த்தாடையில் பால்பற்கள் விழுந்து புதிய பற்கள் முளைக்கும் போது, அதாவது அதன் மூன்றாவது வயதில், ஊர்ப்பெரியவருடன் அந்த சாமிக்கன்று ஆல்கொண்ட மால் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. அங்கே அதற்கு சிறப்புவழிபாடு நிகழ்த்தி,  வழிபாடு செய்யப்பட்ட திருநீர் அதன்மீது தெளிக்கப்பட்டுச் சலகையடிக்கப்படுகின்றது.

சலகைச்சடங்கின் ஒருபகுதியாகக் காதுகளின் ஓரங்களை நறுக்கிப் பின்னர் ஆண்மைநீக்கத்திற்காக விதைப்பைகள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகின்றது. இப்படியாகப்பட்ட சடங்கின் நிமித்தமே அவை சலகெருது என அழைக்கப்படுகின்றது.

கொம்பு, நெற்றி, முதுகின்மேற்பகுதி முதலான இடங்களில் மஞ்சள்பூசப்பட்டு, திருநீறு குங்குமம் வைக்கப்பட்டு, கழுத்தில் காணிக்கைப் பை கட்டவிடப்பட்டு, கிழக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தேங்காய் பழம் வைத்து வழிபடுவர் கோயிலில் கூடியுள்ள ஊர்மக்கள். இதன்பின்னர் அனைவராலும் தொழத்தக்க சலகெருதுவாக உருவெடுக்கின்றது அந்தக் காளைக்கன்று.

கயிறு கொண்டு கட்டப்படமாட்டாது. எவர் நிலத்திலும் மேய்ந்து கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், உருமிமேளத்துடன் கூடிய ஆட்டத்துக்கு அது பயிற்றுவிக்கப்படும். சலங்கைகள் பூட்டப்பட்டு, உருமிமேளத்துடன் கூடிய நளினமான ஆட்டத்துக்கும் வேகத்துக்கும் ஏற்றபடி வளைந்து வளைந்து தலையைச் சிலுப்பியபடியே அது ஆடும் கலைஞனுக்குச் சவால் விடுக்கும்வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தும். உருமிமேளத்தின் வீச்சா, கலைஞனின் ஆட்டமா, சலகெருதுவின் ஆட்டமாயென்பதில் பெரும்போட்டி நிகழும். சுற்றிலும் நின்று ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக் களிப்பெய்துவர்.

’ஜாகோ’ எனச் சொல்லியபடித் தன்கைகளில் இருக்கும் சிலம்புகளையும் அந்தக் கலைஞன் வெவ்வேறு விதமாகச் சமிக்கைகள் செய்து கொண்டே உயர்த்தியும் தணித்தும் ஆடிவர சலகெருதுக்கும் கலைஞனுக்கும் ஆட்டத்தில் பெரும்போட்டி நிகழும். இப்படியான ஆட்டங்களினூடே அந்தந்த ஊர்மக்கள், அந்தந்த ஊர் சலகெருதுகளுடனும் மேளதாளத்துடனும் ஆட்டபாட்டங்களுடனும் ஆல்கொண்ட மால் திருக்கோயில் நோக்கி அணியணியாகச் செல்வர். இந்த இரு ஜமீன்களுக்குரிய பகுதிகளிலே எங்கும் ஆரவாரம் கோலோச்சும். இதுதான் சலகெருதுநாள். சலகெருதுநாள் வாழ்த்துகள்!

எங்கள் ஊரான அந்தியூரில், இன்று, வீடு வீடாக சலகெருது வந்த காட்சிகள்.


1/14/2023

வாழ்த்து

ஆடுகளை மேய வைக்க வேண்டும். துணைக்கு ஒரு நாயை வைத்துக் கொண்டான் மனிதன். அந்த நாய் ஆடுகளைக் கட்டுப்படுத்தி வழிநடத்தியது. பார்த்த மனிதன், மனிதர்களையும் கட்டுப்படுத்த விழைந்தான். அதற்காக தகவற்பெருக்கிகளைப் பயன்படுத்தத் துவங்கினான்.

காரண விளைவு (cause and effect) எனும் கருதுகோளின்படி, இடம் பெறும் ஒவ்வொர் அசைவுக்கும் ஒரு விளைவு உண்டு.

போகிப்பண்டிகை வாழ்த்துகள் என்பதாக, கூந்தப்பனை எரிப்பு போன்ற ஒரு எரிப்புப் படத்தைப் பின்னணியாகக் கொண்ட வாழ்த்து மின்னட்டைகள் ஒவ்வொன்றாக வரத் துவங்கின. பார்த்த நான், இது நம்ம ஊர் வாடிக்கை இல்லையே என வருத்தமுற்று, இணையத்தில், வேம்பு, பீளை, ஆவரை கலந்த காப்புக்கட்டுப் படத்தைத் துழாவி, அப்படியான படத்தைக் கொண்டு ‘காப்புக்கட்டு நாள் வாழ்த்துகள்’ என்பதைப் பகிர்ந்தேன். கண்டவர்களுள் சிலரும் அதையே செய்தனர். நிற்க!

எரியூட்டும் படம் தமிழர் மரபென உலகம் யாவிலும் பயணிக்கின்றது. அப்படி எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் மாசு நேர்கின்றது. யாரோ சில இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் இப்படியான செயலைச் செய்யக்கூடும். இதுதான் தமிழர் மரபென உண்மைக்குப் புறம்பானது வரலாற்றில் நிலைகொள்ளும். இப்படித்தான் தகவற்பெருக்கிகளை மனிதன், மற்ற மனிதர்களைக் கட்டுப்படுத்துவதில் கையாள்கின்றான்.

தம்பியானவர் ஒரு பன்மடிக்காணொலியை(viral video)ப் பகிர்ந்திருந்தார். நெஞ்சை நக்குவதான ஒரு பேச்சு. அதில் மடிந்த ஒருவர் மற்றவர்களுக்குப் பகிர, அந்த மற்றவர்கள் அவரவர் மற்றவர்களுக்குப் பகிர, பன்மடங்குப் பெருக்கமாக அது உலகில் உள்ள தமிழர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவருக்கு அது பணம்பண்ணும் தொழில். நமக்கு அப்படியல்லவே. உரத்துப் பேசுகின்றார். கேட்கும் நம்மை அது பதற்றத்துக்குள் அதிர்வூட்டி நெருக்கடிக்குள் இட்டுச் செல்லும். இதற்கும் அவர் அண்மையில்தாம் மூளைநரம்போ, நெஞ்சுநரம்போ பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்த்துக் கொண்டாரெனச் செய்திகள் வந்திருந்தன. உறவா நட்பா என்பதில், நட்பேயென கத்திக் கத்திப் பேசுகின்றார். உண்மையென்ன? மகனாக, மகளாக, பேரனாக, பெயர்த்தியாக, மருமகராக, அக்காள் பிள்ளையாக, தம்பி பிள்ளையாக ஏதோவொரு குடும்பத்தில்தான் பிறக்கின்றோம். பிழைத்துக் கிடக்கின்றோம். சாகின்றோம். எப்படி? பிறந்த போது என்னென்ன உறவுகள் இருந்தனவோ, அவற்றுடன் கூடுதலாக அப்பாவாக, அம்மாவாக,  பெரியம்மாவாக, பாட்டியாக, சித்தப்பாவாக, மாமனாக, மாப்பிள்ளையாக இப்படிப்பலவாக ஒரு குடும்பத்தில் ஒருவராகச் சாகின்றோம்.

“Family is not an important thing. It's everything.” – Michael J. Fox  பணம், புகழ், பாதுகாப்பு, அது எதுவானாலும் சரி, அதற்கும் முன்பாக அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டியது குடும்பமும் உறவுகளுமே. அதுதான் சமூகத்தின் அச்சாணி. இண்ட்டர்னெட், மீடியா, சினிமா, லொட்டு, லொசக்குகளினின்று விடுபட்டு உறவுகளோடு தங்கள் பொங்கற் திருநாள்ப் பொழுதுகள் திளைத்திருக்க வாழ்த்துகளும் வணக்கமும்!1/10/2023

மனச்சோகை

ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஒரு குறிப்பிட்ட நண்பரின் வீட்டில் கூடுவது வழக்கம். எட்டு அல்லது ஒன்பது குடும்பங்கள் கூடுவது வாடிக்கை. இம்முறை ஓரிரு குடும்பத்தினரால் கலந்து கொள்ள இயலவில்லை. வழமையான ஆர்ப்பாட்டமின்றி எளிமையான சந்திப்பாக அமைந்தது. நண்பர் வினவினார், “பழமை, எப்படி இருக்கீங்க?”. “ரொம்ப நல்லா இருக்கன்”. “அதெப்படி? விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை வீழ்ச்சி, பொருளாதார மந்தத்தின் அறிகுறி இப்படின்னு எல்லாரும் பதற்றத்துல இருக்கும் போது நீங்க மட்டும்?”. “எதையுமே தெரிஞ்சிக்கிறது இல்லைங்க. ஆட்களைச் சந்திப்பதும் மிகக் குறைவு, அதுதான் காரணம்”. மிகவும் பாராட்டினார். “நானும் முயன்று பார்க்கிறன். முடியலை” என்றார். 

தகவல். அதை இருவிதமாகப் பகுக்கலாம். நாமாகத் தேடிச் சென்று ஒன்றைக் கொண்டாலோ, தெரிவு செய்து அறிந்து கொண்டாலோ அது கல்வி. அடுத்ததாக, எதிர்கொள்வதையெல்லாமும் உள்வாங்கிக் கொள்வது. எடுத்துக்காட்டாக, இந்தப் பதிவு. உங்கள் கண்களில் படுகின்றது. வணிகம், அரசியல், சமயம் இப்படி ஏதோவொன்றின் அடிப்படையிலான உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாமென நினைப்பீர்களேயானால், தவிர்த்து விட்டுத்தான் சென்றாக வேண்டும். எனக்கும் உங்கள் நேரத்தை வீணடிக்க யாதொரு தேவையுமில்லை. பிறகு எதற்காக எழுதுகின்றேன்? என் சிந்தனையைப் பகிர்கின்றேன். எழுத்தாற்றலைப் பயில்கின்றேன். தற்காலத்தில் வாழ முனைகின்றேன். தேவையின்றி கடந்த காலத்தில் மனம் ஒன்றியிருந்தாலோ, அல்லது அளவுக்கும் மிஞ்சிய வகையிலே எதிர்காலத்தை எண்ணிக் கொண்டிருந்தாலோ மனம் கவலை கொள்ளவே நேரிடும். விளையாட்டு, இசை, சமையல், உடற்பயிற்சி, ஓவியம், வேலை முதலானவற்றைப் போலவே சிந்தித்து எழுவதும் தற்காலத்துக்குள் நம்மைப் பணிக்கும். வருத்தங்கள், கவலைகள், துன்பவுணர்வுகள் மேலிடாது. மனம் சமநிலை கொள்ளும். ஆகவே எழுதுகின்றேன்.

தகவல் என்பதை நாம் ஏன் பகுத்துட்கொள்ள வேண்டும்? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உகந்த அளவுக்கும் மிகுதியாகும் போது உள்வாங்கப்படும் தகவலைச் செரிக்க முடியாதநிலை ஏற்படும். மாறாக, செரிபடாமல் உணர்வுகளை மேலும் கீழுமாகச் செலுத்திக் கொண்டே இருக்கும். உணர்வுகள் உயர்ந்து தணியும் போது மெய்யுறுப்புகளின் வேதிவினைகளும் பெருத்துச் சிறுக்கின்றன. அதனாலே உடல்நலத்தில் கோளாறுகள் தோன்றுகின்றன. கற்கை என்பதைக் கடந்து, உள்வாங்கப்படுகின்ற தகவல் எல்லாமுமே ஏதோவொரு உள்நோக்கத்தைக் கொண்ட நிலைப்பாடுகள்(ஒப்பீனியன்)தாம். தற்போது நான் எழுதிக் கொண்டிருப்பதுகூட நான் முன்வைக்கின்ற என் மனம்சார்ந்த நிலைப்பாடுகளின் தொகுப்புதான். உங்களை நாடி வரும் தருணத்தில், விலக்கிச் செல்வதற்கு எல்லா உரிமையும் உண்டுதானே?

விடுப்புக்காலத்தில் குழுமியிருந்த மூன்று பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை எட்ட நின்று வேடிக்கை பார்க்க முடிந்தது. 'in my opinion, doesn't make sense to me, to me it appears' போன்ற சொல்லாடல்களெல்லாம் தங்கு தடையின்றிப் புழங்கப்படுகின்றன. தமிழில் இவற்றுக்கு நிகரான சொல்லாடல்களே இல்லை. எப்படி இல்லாமற்போகும்? பண்பாட்டிலே அத்தகைய தன்மை தூக்கலாக இல்லாததினாலே அவற்றுக்கான தேவையும் இல்லாமற்போய் விட்டதென்றுதான் கருத வேண்டி இருக்கின்றது. இஃகிஃகி.

எண்ணிப்பாருங்கள். ஒருவர் ஒரு நிலைப்பதிவினை இடுகின்றார். அல்லது, ஏதோவொன்றைச் சொல்கின்றார். ‘இது எனக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை, சரியாகப்படவில்லை’ என்றோ, அல்லது அதற்கு நிகராகவோ மறுமொழிகின்றோம். என்ன நடக்கும்? சொன்னவர் நல்லவிதமாய் எடுத்துக் கொண்டு, கூடுதல் விபரம் கொடுக்க முன்வரலாமாயிருக்கும். ஆனாலும் கூட, பார்க்கும் வாசகர்கள், பார்வையாளர்கள், இவன் எழவைக் கூட்டுகின்றானென்றே நினைப்பர். அவர்கள் நினைக்கின்றார்களோ இல்லையோ, நமக்குள் அப்படி ஒரு முன்முடிவு(prejudice) நிலைகொண்டிருக்கின்றது. இதனால்தாம் நம் பிள்ளைகள் தமிழிலே பேச முன்வருவதில்லை. மனத்தில் தோன்றியதைச் சொல்வது மேலைநாட்டிலே இயல்பாக்கப்பட்டவொன்று(normalized). நம்மிடத்திலே இல்லை. காரணம் என்ன? நிலைப்பாடுகள்(opinion) என்பது வேறு, உள்ளமை என்பது வேறு, தனக்கான அறம் என்பது வேறு, பொது அறம் என்பது வேறு என்பதெல்லாம் பண்பாட்டிலே நிலைகொள்ளாமலிருப்பதுதான் காரணம்.

தங்குதடையின்றிப் பேசக்கூடிய நிலை இல்லாதவிடத்திலே உரையாடல் நிகழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை. வெறுமனே தகவலை, உள்நோக்கமுள்ள தகவலை உள்வாங்கிக் கொண்டே இருக்க நேரிடுகின்றது. அது அகச்சிக்கலுக்கு வழி வகுக்கின்றது. மனச்சோகை மேலிடுகின்றது. வாழ்க்கைநலம் சீர்கெடுகின்றது.

1/07/2023

அமெரிக்க மக்களவைத் தலைவர் தேர்தலும் இழுபறியும்

கடந்த நவம்பர் மாதம் இடம் பெற்ற ஒன்றிய மன்றத் தேர்தல்களில், டெமாக்ரட் கட்சி படுதோல்வி அடையுமென எதிர்பார்க்கப்பட்டது. காரணம், விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பதற்றம், குடியரசுத்தலைவர் சார்ந்த கட்சிக்கு எதிராக ஒன்றிய மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மரபு போன்றவை. ஆனால் கணிப்புகளுக்கு எதிராக முடிவுகள் அமைந்தன. மாகாண அவை(செனட்)யில் டெமாக்ரட் கட்சிக்குப் பெரும்பான்மை இடங்கள் அமைந்தன. மக்களவை(காங்கிரசு)யில் குடியரசுக்கட்சிக்கு 222 இடங்களும் டெமாக்ரட் கட்சிக்கு 213 இடங்களும் கிடைத்தன. அதாவது பெரும்பான்மைக்குத் தேவையானதையும் விட நான்கு இடங்களே குடியரசுக் கட்சியால் பெற முடிந்தது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் குடியரசுக் கட்சியின் தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுவது, கருக்கலைப்பு குறித்தான குடியரசுக்கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகப் பெண்களும் இளைஞர்களும் திரண்டு வாக்களித்தமையும். டிரம்ப்பின் தூக்கலான ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எதிராக குடியரசுக் கட்சியினரே கிளர்ந்ததும் என்பதுதான்.

ஒன்றிய மக்களவையின் ஆயுட்காலம் டிசம்பர் 31ஆம் நாளுடன் முடிவுக்கு வரும். அடுத்து வரும் அலுவலக நாளில் அவைகூடி, அவைத்தலைவரைத் தெரிவு செய்யும்; அதற்குப் பின்னர் மக்களவை உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொள்வர். இதுதான் நடைமுறை. ஆனால், கடந்த 150+ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்முறை இழுபறிகள் இடம் பிடித்தன. ஏன்? எப்படி??

குடியரசுக்கட்சி வசம் 222 இடங்கள் இருக்கின்றன. அவைத்தலைவர் தெரிவுக்குத் தேவையான வாக்குகள் 218. கூடுதலான இடங்கள் இருந்தும், குடியரசுக் கட்சியினரால் தலைவரைத் தெரிவு செய்ய இயலவில்லை. ஏனென்றால், கட்சி உறுப்பினர்களுக்கிடையேவும் சில பல குழுக்கள்(caucus) இருக்கும். அப்படியானதில், தீவிர வலதுசாரிக் குழுவைச் சார்ந்த 20 பேர், தலைவராக முன்மொழியப்பட்ட கெவின் மெக்கார்த்தி என்பாருக்கு எதிராக ஆர்ப்பரித்தனர்.

முதற்சுற்றில் எவரும் வாக்களித்தோரில் பெரும்பான்மையை எட்டமுடியவில்லையெனில், மறுசுற்றுக்கு போய் மறுதேர்தலை எதிர்கொள்ள வேண்டியதுதான். இப்படியாக கடந்த வாரம் முழுதும், அடுத்தடுத்து 15 சுற்றுத் தேர்தல்கள் இடம் பெற்றன. 125 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி இடம் பெறுவது இதுதான் முதன்முறை.

அமெரிக்கா பெரிய நாடு என்கின்றனர். வல்லரசு என்கின்றனர். ஒரு சபாநாயகரைத் தெரிவு செய்வதில் எப்படி அடித்துக் கொள்கின்றனர் பாருங்கள் என்றெல்லாம் மேலெழுந்தவாரியான பேச்சுகள் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம். மக்களாட்சியின் அருமை கருதித்தான் இப்படி நடக்கின்றது என்பது பலருக்கும் புலப்படுவதில்லை. ஏன், எப்படி?

அமெரிக்க மக்கள் சாசனம் என்பது ஒப்பீட்டளவில், உலகில் எங்குமில்லாதபடிக்கு உயரியதும் தனித்துவமானதுமாகும். அமெரிக்காவின் உயிர்நாடி என்பதே ஒவ்வொரு தனிமனிதனும் தனித்துவமானவன். அவனைப் பொதுமைச் சட்டகத்தில் இட்டு அடைக்கக் கூடாது என்பதும், அதிகாரம் எக்காரணம் கொண்டும் ஒரு புள்ளியில் குவிந்துவிடக் கூடாது என்பதும்தான்.

அவை இருக்கும். அதிலே சிலபல கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சிக் குழுவுக்கும் ஒரு கொறடா(whip) இருப்பார். அந்த கொறடா சொல்லும் ஆணைக்கொப்ப அந்த உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும். அந்தக் கொறடா கட்சித் தலைவரின் ஆணைக்கொப்ப செயற்படுவார். கொறடாவின் ஆணையை மீறிச் செயற்பட்டால், நடவடிக்கைக்கு உட்பட்டாக வேண்டுமென்பது சட்டம். இப்படி இருக்கும் போது, அந்த மனிதனின், உறுப்பினரின் தனித்துவம் காற்றில் பறக்க விடப்படுகின்றது. மேலும், மொத்த அதிகாரமும் கட்சியின் தலைவரின் பிடிக்குள் சிக்குண்டு போகின்றது. அடிமைத்தனம் கோலோச்ச வழிவகுக்கின்றது. அப்படியானதல்ல அமெரிக்கா. எப்படி?

ஒவ்வொரு மக்களவைத் தொகுதி உறுப்பினரும் அந்தத் தொகுதி மக்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டவர். அந்தத் தொகுதி மக்கள் என்ன சொல்கின்றனரோ அதைத்தான் அவர் செய்ய வேண்டும். கொறடா அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. குடியரசுக் கட்சி உறுப்பினராக இருந்தாலும், தன்னிச்சையாக எப்படியும் ஓட்டுப் போடலாம். கட்சியிலிருந்தோ, மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்தோ நீக்க முடியாது. பேச்சுவார்த்தை நடத்தி நடத்தி பரந்துபட்ட அளவில் சுமூகமான நிலை நிலவும் வரையிலும் முன்னெடுப்புகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். இப்படித்தான் அதிகாரக் குவிப்பு முறியடிக்கப்படுகின்றது.

அமெரிக்கக் குடியரசுத்தலைவர் நிர்வாகத்தலைவர் மட்டுமே. நிர்வாகத்தை நடத்தும் பொறுப்புமட்டும்தான் அவருடையது. அவர் மக்களவையிலோ மாகாண அவையிலோ உறுப்பினர் அல்லர். ஆகவே சட்டங்களை இயற்றும் வல்லமை மாகாண அவையிடமும் மக்களவையிடமும் மட்டுமே. நிர்வாகத்தில் குற்றச்செயல்கள் இடம் பெறுமேயானால், அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கும் வல்லமை மாகாண, மக்களவைக்கு உண்டு. இப்படியாக பிரசிடெண்ட்டின் அதிகாரக்குவிப்பும் முறியடிக்கப்படுகின்றது.

மக்களவை சட்ட வரைவுகளை முன்மொழியலாம். அவ்வளவுதான். அதை மாகாண அவை வழிமொழிந்தால்தான் சட்டநகர்வுகள் அடுத்த இடத்துக்கு நகரும். எனவே மக்களவையின்பால் அதிகாரம் குவிவதும் முறியடிக்கப்படுகின்றது. நடப்பு மக்களவை குடியரசுக்கட்சியின் வசம்.

மாகாண அவையினால் சட்டமுன்மொழிவுகளை வழிமொழியத்தான் முடியும். தாமாக ஒன்றைச் சட்டமாக்க முடியாது. இப்படியாக மாகாண அவையின்பால் அதிகாரம் குவிவதும் முறியடிக்கப்படுகின்றது. நடப்பு மாகாண அவை டெமாக்ரட் கட்சியின் வசம்.

இரு அவைகளும் முன்மொழிந்து வழிமொழிந்து அனுப்பும் சட்ட வரைவினை அதிபர் ஒப்புக்கொண்டால்தான் அது சட்டமாகும். செயற்படுத்துவதில் இன்னின்ன சிக்கல்களெனக் குறிப்புடன் நிராகரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. ஆனால் ஒன்றினை இருமுறை மட்டுமே அவரால் நிராகரிக்க முடியும். 

இப்படியாக, அவைக்குள் பொறுப்பென்பது ஒருவரிடத்தில் குவிந்திருக்க முடியாது.  அதிபர், மாகாண அவை, மக்களவை இவற்றுக்கு இடையேயும் அதிகாரம் குவிந்திருக்க முடியாது. பேசிப் பேசி, பேசிப் பேசி, மக்களிடையே பரந்துபட்ட அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டால் மட்டுமே அது செயலாக்கம் பெறும். 

15 சுற்றுகளென்ன, 150 சுற்றுகளே ஆயினும் அது மக்களின் அதிகாரக் கொண்டாட்டம்! அதுவே மக்களாட்சியின் மகத்துவம்!!


1/02/2023

உக்ரைன் போர் - 314

உக்ரைன் போரின் இன்றைய வயது 314 நாட்கள். யார் வெற்றி பெறுகின்றார்கள்? அறுதியிட்டுச் சொல்ல முடியாத இழுபறி நிலைதான் நீடிக்கின்றது. எப்படி?

உக்ரைன் நாட்டில் இருக்கும் ஆட்சியாளரகளை மாற்றவும்(டிநாஜிபிகேசன்), இராணுவமில்லா நாடாக்கவும் (டிமிலிட்டிரைசேசன்) முன்னெடுக்கப்படுகின்ற சிறப்பு இராணுவ நடவடிக்கையெனச் சொல்லி, இரண்டு இலட்சம் படை வீரர்களுடன் 2022 பிப் 20ஆம் நாளன்று களமிறங்கியது இரஷ்யா. ஒருவாரத்துக்குள்ளாக ஒட்டுமொத்த நாடும் இரஷ்யாவின் பிடிக்குள் வந்துவிடும்; ஆகவே ஆட்சியாளர்களைப் போலந்து நாட்டில் இருந்து கொண்டு கொரில்லாப் படைகளை வைத்துப் போர் புரியுமாறு ஆலோசனை கூறின மேற்கத்திய நாடுகள். தலைநகரை விட்டு வெளியேற மாட்டோமெனச் சொன்னார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

உக்ரைநாட்டின் கிரைமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டே எவ்வித எதிர்ப்புக்குமிடமின்றித் தன் வசமாக்கி இருந்தது இரஷ்யா. அதே காலகட்டத்தில், உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் இருக்கின்ற டான்யெஸ்க், லுகான்ஸ்க் வட்டாரத்தின் கணிசமான பகுதிகள் இரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படையினரின் வசம் இருந்து வருகின்றன. இதையொட்டி இருக்கின்ற தெற்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளில் இருந்து மளமளவென முன்னேறி, டிநிப்ரோ ஆற்றுக்கு வலப்புறமாகப் பெரும்பகுதிகளை ஓரிரு நாட்களுக்குள்ளாகவே கைப்பற்றிக் கொண்டது இரஷ்யா. ஆனால் தலைநகர் கீய்வ் நகரை நெருங்க முடியவில்லை. உக்ரைனின் எதிர்ப்பு என்பது அல்ல. இரஷ்யப் படைகளின் நகர்வுப் பணிகளில் உணவின்மை, தளபாடங்கள் பழையனவாக இருந்து அடிக்கடி பழுதானமை, பல பகுதிகளிலும் இருக்கும் படைகளுக்கிடையே தகவற்தொடர்பில் ஒருங்கிணைப்பின்மை போன்றவற்றால் செய்வதறியாது திணறியது இரஷ்யா. 

வான்வெளிப் படையை மட்டுமே முழுதாக நம்பி இருந்தது இரஷ்யா. சோவியத் ரஷ்யாவின் அதே தளபாடங்கள் உக்ரைன் வசமும் இருந்தன. அவற்றைக் கொண்டு இரஷ்யவசம் வான்வெளி சென்று விடாதபடிக்குப் பார்த்துக் கொண்டது உக்ரைன். மேலும், உக்ரைன் மக்களும் சிதறுண்டு போகாதபடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கியின் பின்னால் ஒன்றுபட்டு நின்றனர். இதைக் கண்ட நேட்டோ நாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்களை அனுப்பத் துவங்கின. ஏப்ரல் மாதக் கடைசிவரை கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு, தற்காப்பில் இருந்து எதிர்த்தாக்குதல் எனும் முறைக்கு மாறின உக்ரைன் படைகள். அதன்நிமித்தம், தலைநகர் கீய்வ், இரண்டாவது பெரிய நகரமும் இரஷ்ய எல்லைக்கு அருகில் இருப்பதுமான கார்கிய்வ் எனும் பகுதியிலிருந்து பின்வாங்கிக் கிழக்குப் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தது இரஷ்யா. இதற்கிடையில், கடல் மார்க்கத்திலும் தன் சொந்தத் தயாரிப்பான நெப்டியூன் ஏவுகணைகளை வீசியது உக்ரைன். அதன் நிமித்தம் இரஷ்யாவின் அடையாளமான மாஸ்க்வா போர்க்கப்பல் மூழ்கிப் போனது.

இரஷ்யாவின் பீரங்கிகளைத் தாக்கவல்ல அமெரிக்காவின் ஸ்டிங்கர், ஜாவலின் ஏவுகணைகளைக் கொண்டு, மேலும் முனைப்புடன் துரத்தியடிக்கும் தாக்குதலுக்கு முன்னேறியது உக்ரைன். அதன்விளைவாக இன்ஸ்யூம், லீமான் போன்ற பகுதிகளையும் களத்தில் இருந்த படைவீரர்களில் மூன்றில் ஒருவரையும் இழந்தது இரஷ்யா. மேலும் மூன்று இலட்சம் தற்காலிகப் படைவீரர்களைக் களத்தில் இறக்கப்போவதாக அறிவித்தார் புடின். மேலும் மூன்று இலட்சமென்றால், உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியாது; எனவே துல்லியமாகத் தாக்கவல்ல நவீன பீரங்கிகள் வேண்டுமெனக் கேட்டார் ஜெலன்ஸ்கி. அதன்காரணம், ஹைமார்ஸ் எனும் நவீனரக பீரங்கிகளை அனுப்பியது அமெரிக்கா. இவற்றைக் கொண்டு உக்ரைன் மேலும் முனைப்பாகத் தாக்கத் துவங்கியது. கிரைமியாவையும் இரஷ்யாவையும் இணைக்கின்ற பாலம், கீர்சான் நகருக்கும் அக்கரைக்கும் இடையேயான பாலம் முதலானவற்றை ஹைமார்சுகள் தாக்கிச் சேதாரத்தை உண்டு செய்தன. இதன்விளைவாக, இரஷ்யா பிடித்து வைத்திருந்த ஒரே மாகாணத்தலைநகரான கீர்சான் நகரில் இருந்தும் பின்வாங்க நேரிட்டது.

இரஷ்யாவின் இருப்பில் இருக்கும் ஏவுகணைகள் பெருமளவு தீர்ந்து போயிருந்தன. சுதாரித்துக் கொண்ட இரஷ்யா, ஈரானின் உதவியை நாடியது. ஈரானின் ஷஹெத் டிரோன்களைக் கொள்வனவு செய்து, உக்ரைன் நாடெங்கும் தாக்குதலைத் தொடுத்தது. உக்ரைன் திணறிக் கொண்டிருக்கின்றது. என்ன காரணம்? ஒரு ஷஹெத்தின் விலை இருபதினாயிரம் டாலர். இதனை எதிர்த்தொழிக்கும் தடுப்பு ஏவுகணையின் விலை நான்கு இலட்சம் டாலர் முதற்கொண்டு ஒரு இலட்சம் டாலர் வரையிலும். பெருமளவு டிரோன்களை உக்ரைன் தடுத்தழித்து வந்தாலும், இலக்கின் மதிப்பு தடுப்புக்கான செலவைக் காட்டிலும் குறைவாக இருக்கும் போது விட்டுவிடுவதான முறையைக் கையாண்டு வருகின்றது. இதன்காரணம், நாடெங்கும் இருக்கிற மின்விநியோகங்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. டிரோன்களுக்கு இடையே ஏவுகணைகளையும் கலந்தடித்து வருகின்றது இரஷ்யா. பதிலுக்கு, உக்ரைனும் துருக்கியிடம் கொள்வனவு செய்த TB2 டிரோன்களை இரஷ்யாவுக்கு அனுப்பி வருகின்றது. இதனால், தாம் அனுப்பும் டிரோன்களைத் தமது நாட்டு தானியங்கி எதிர்ப்புக்கலங்களே தாக்குவதைப் பார்ப்பதற்கும் ஆளாகின்றது இரஷ்யா.

இருநாடுகளும் கிட்டத்தட்ட தலா ஒரு இலட்சம் படைவீரர்களை இழந்திருக்கலாமென்கின்றது அமெரிக்கா. எண்ணிக்கையில் சமமாக இருந்தாலும், நாட்டின் அளவோடு ஒப்பிடுகையில் உக்ரைனுக்குப் பெரும் சேதம். ஆகவே இழுபறியாகவே இருக்கட்டும். உக்ரைன் அடுத்த நாட்டின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்கும்? எத்தனை வீரர்களைத்தான் இழக்குமென்பது இரஷ்யாவின் கணக்காக இருக்கின்றது.

2023. இரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு உள்ளாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை, போருக்கு முந்தைய நிலை என்னவோ அந்தநிலைக்கு வந்திருக்கின்றது. இதற்கிடையே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் முட்டல்கள் அதிகரித்து உள்ளன. இதன்விளைவாக இஸ்ரேலின் ஏவுகணை வீச்சுக்காளான சிரியாவின் டமாஸ்கஸ் விமானநிலையம் தன் சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஈரான் இரஷ்யாவை நெருங்கி இருப்பதால், ஈரானின் பரமவைரியான சவூதி இரஷ்யாவினின்று எட்டத்தான் நின்றாக வேண்டும். ஆகவே பெட்ரோலிய நாடுகளான ஓபெக்நாடுகளும் இரஷ்யாவுக்கு ஏதுவாக இருக்கப் போவதில்லை என்பது கணிப்பாக இருக்கின்றது. ஆனாலும் ஈரான், இரஷ்யா, சீனா கூட்டாக இயங்கினால், இந்தப் போர் மேலும் முனைப்பாக நடைபெறுவதற்கும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகின்றது.