10/31/2022

வாழ்க்கைத் தரம்

பிறந்த அந்த நொடிலிருந்தே துவங்குகின்றது சாவுக்கான பயணம் என்றார் கண்ணதாசன். ஆக, அப்படியான பயணம் எந்த அளவுக்குத் தரமாக இருக்கின்றதென்பதை அளவிடும் அளவுகோல்தான் இந்த வாழ்க்கைத்தரம் எனும் பதம். சரி, வாழ்க்கைத்தரத்தை எது கொண்டு, எப்படியாக அளவிடுவது? பலமுறைகள் இருக்கின்றன. அதில் தலையாயது ஈடுபாட்டுமுறை(engaged theory). அமெரிக்கா 15ஆவது இடத்திலும் இந்தியா அறுபதாவது இடத்திலும் உள்ளன.

ஈடுபாட்டுமுறையின் கூறுகளாக இருப்பது Beliefs and ideas, Creativity and recreation, Enquiry and learning, Gender and generations, Identity and engagement, Memory and projection, Well-being and health ஆகியனவாகும்.

இவற்றுள் படைப்பாற்றலும் கேளிக்கையும், தேடலும் கற்றலும், அடையாளமும் ஈடுபாடும், நடத்தையும் உயிர்நலமும் முதலான கூறுகள் பண்பாட்டு அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடையவை. எப்படி? எப்படியான கலைகள், படைப்புகளில் நாம் ஈடுபடுகின்றோம்? புதுப்புது சிந்தனைகள், அனுபவங்களுக்கான வாய்ப்புகள் கற்கப் பெறுகின்றனவா? தமிழ் என்பது நம் அடையாளம். அந்த அடையாளத்தின் பொருட்டு நமக்குப் பாதுகாப்புணர்வு மேலிடுகின்றதா? மனநலமும் மெய்நலமும் பொருந்தியதுதான் உயிர்நலம். அப்படியான மனநலம் மேம்படுகின்றதா? இத்தகு வினாக்களுக்கு அமையும் விடைகளைப் பொறுத்து அமைப்புகளின் செயற்பாடுகளை அளவிடலாம், விமர்சிக்கலாம், மேம்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அமைப்பு என்பதால்தான் அமெரிக்க அரசு வரிவிலக்குப் பெறும் நிறுவனமாக ஒப்புதல் அளித்திருக்கின்றது. மனநலம் குன்றக்கூடிய, சிந்தனை மட்டுப்படுத்தக் கூடிய, இருக்கும் தரத்தையும் சிதையச் செய்யக் கூடியதாக இருக்கும் போது அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் அறிவுப்புலத்தின் கடமை.

எடுத்துக்காட்டுகளுக்குச் சிலவற்றைப் பார்ப்போம். முழுப்பொறுப்புக்காலமான இரண்டு ஆண்டுகளும் இன்னார் தொடர்ந்து பொறுப்பில் இருந்திருக்கவில்லை எனும் பொய்யான தகவல் விதைக்கப்படுகின்றது. பொய்யான தகவல் என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது? அமைப்பின் செயற்குழுக் கூட்ட ஆவணங்களைப் பார்த்தால் தெரிந்து விடப் போகின்றது. இப்படிப் பொய்யான தகவல் விதைப்பவர் மனநலம் குன்றியவர், அல்லது அடுத்தவரின் மனநலக் கேட்டுக்கு வழிவகுக்கின்றார் என்றாகின்றது. ‘நாங்க அவரை அமைப்பிலிருந்து ஒதுக்கி வெச்சிருக்கோம்’ போன்ற சொல்லாடல்கள் நம் அடையாளத்துக்கும் பாதுகாப்புணர்வுக்கும் மிகப் பெரும் கேட்டினை விளைவிக்கக் கூடியவை. தரத்தை உயர்த்துவதற்கு மாறாக, பாழ்படுத்தக் கூடியன.

இந்திய மொழிவழி மக்களுக்கான நாடளாவிய அமைப்புகள் அமெரிக்காவில் 1960 துவக்கம் நிறையப் பிறந்தன. பிறந்த வேகத்திலேயே அவை செங்குத்துப் பிளவாக உடைந்தும் போயின. மலையாள அமைப்பில் பிளவு. தெலுகு அமைப்பில் பிளவுகள். கன்னட அமைப்பில் பிளவு. வங்காள அமைப்பில் பல பிளவுகள். இப்படி நிறைய. தமிழ் தனிப்பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கின்றது. காரணம், வழிவந்த தன்னலமற்ற தலைவர்களும் தன்முனைப்பற்ற தன்னார்வத் தொண்டர்களும்! அத்தகு தனிச்சிறப்பைப் பேண வேண்டியது நம் பொறுப்பு. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதாம். பொய்யுரைகளையும் அவதூறுகளையும் இனம் கண்டு களைவதேயாகும்!

No comments: