Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.
வாழ்க்கை என்பது தெரிவு. எப்படி? அன்றாடமும் வாழ்வு என்பது ஒவ்வொன்றுக்குமென எண்ணற்ற தெரிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் எந்தத் தெரிவை மேற்கொள்கின்றீர்களோ அதைப் பொறுத்து உங்கள் வாழ்வின் அடுத்த கணம், அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்பன எல்லாமும் அமையும். இப்படியாக வாழ்வின் முடிவுப் புள்ளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது, உங்களின் பயணம் உங்கள் தெரிவுகளால் ஆனதான பயணமாக இருக்கும்.
இனிய நண்பர் அவர். உடனே தொடர்பு கொண்டார். சந்திக்கும் ஆவல். "என்ன திருப்பி...." என்பதற்குள்ளாகவே நான் சிரித்துக் கொண்டே இடைமறித்தேன், "ஏங்க, இது நம்ப கோயமுத்தூருங்க. எத்தினிவாட்டி வேணுமின்னாலும் வரலாம் போகலாம்", கலாய்த்தேன். 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்.
புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் ஒவ்வொருமுறை தாயகம் வரும் போதும் இக்குறிப்பிட்ட வினாவை எதிர்கொண்டு பழகிப் போய் விட்டது. ஆம், அவர் கேட்க வந்தது, "இப்போதுதானே வந்து போனாய், மீண்டும் இவ்வளவு சீக்கிரமே வந்திருக்கின்றாயே? எல்லாம் சுபம்தானே?"
இவ்வினாவின் தோற்றுவாய் என்பது இருவிதமான அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது மேற்கூறிய காரணம். இரண்டாவது, வெளிநாடு என்றாலே அடிக்கடி வந்து போக இயலாது. நான்கு, ஐந்து ஆண்டுகட்கு ஒருமுறைதான் என்பதான பொதுப்பழக்கமும் பொதுப்புத்தியும்.
இரண்டாவது அடிப்படை நிமித்தம்தான் நாம் "தெரிவுகள்(சாய்ஸஸ்)" என்பது பற்றிப் பேச வேண்டியதாகின்றது. ஆண்டுதோறும் வருவாயுடன் கூடிய விடுப்பு என்பது பெரும்பாலான நாடுகளில் உண்டு. தாயகம் வந்து செல்ல, சராசரியாக தனிநபருக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.
பிறகு ஏன் அப்படியான பொதுப்பழக்கம் உண்டாகிற்று? விடுப்பு எடுப்பதால் பொறுப்பு உயர்வுகள், வணிக விரிவாக்கம், கல்வி மேம்பாடு, சேமிப்பு முதலானவை மந்தமாகும். ஆகவே ஆண்டுதோறும் வந்து செல்ல இயலாது. இயலாது என்பதன்று. ஏற்புடையதாக இருக்காது. ஆனால் இது அவர் அவருடைய தெரிவு என்பதுதான் அடிப்படை.
பயணங்களைக் கட்டுப்படுத்தி அதன் வழியாக வளர்ச்சிகளைக் கொண்டோரும் இருக்கின்றனர். அது அவர்களுடைய தெரிவு. இயன்றமட்டிலும் பயணங்களை மேற்கொண்டு, பெற்றோர், உற்றார் உறவினரோடு பொழுதுகளைப் பகிர்ந்தவரும் இருக்கலாம். அந்த அனுபவத் தேவை என்பது அவர்களின் தெரிவு.
இடைப்பட்ட இந்த 11 மாதங்களில் விடைபெற்றதில் நெருக்கமானோர் 10 பேருக்கும் மேல். கடந்தமுறை வந்திருந்த போது நாரகிரி எனும் ஊரில் 2 நாட்கள் தாங்கி இருந்தோம். ஆருயிர் நண்பன் இன்று விடைபெற்றவனாகிப் போனான். நண்பர் அலெக்ஸ் அவர்களைக் கண்டு உறவாடினோம். மரணப் படுக்கையிலும் எமக்காக அகல விரிந்த அந்தக் கண்கள், பார்வை இம்முறை எமக்கில்லை. ஒருவேளை நான் சென்றமுறை வராமல் இருந்திருந்தால்? எல்லாம் அவரவர் சாய்ஸ். உங்கள் வாழ்க்கை உங்கள் மனத்தில், உங்கள் மனத்தில் மட்டுமே!
Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.
பழமைபேசி, கோவை.