12/23/2020

ராஜா

எப்படியாவது அந்த ஹம்ப்பாவ் கவரில்(gift envelop) என்ன இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் தன் விடாமுயற்சியை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார் இராஜா. ஆமாம். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத இராஜா மீண்டும் அந்தக் குடிலுக்குச் சென்று கதவைத் தட்டினார். எதற்காகத் தட்டுகின்றார் எனத் தெரிந்து கொள்ள ஆவலாகத்தான் இருக்கும் உங்களுக்கு. கடைசி வரை வாசித்தால்தான் அது புரிய வரும். தொடர்ந்து வாசியுங்கள்.

நமது சமூகத்தில் ஒருவரை மிகவும் இழிவாக, திட்டுவதற்குக் கழுதையை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் கழுதை பொது மக்களின் தினசரி வாழ்வில் மிகவும் உபயோகமான கால்நடை மிருகம். மிகவும் கேவலமான முறையில் பார்க்கப்படுவது வருத்தத்திற்குரியது. ஆனால் எனக்கு கழுதை மீது எப்போதும் ஒரு அன்பு உண்டு. நம் இளமைக் காலத்தில் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென பாடலில் கச்சிதமாக கழுதைக் குரலை பயன்படுத்தியிருப்பார்கள். சிரிப்பை வரவழைக்கும். பஞ்சகல்யாணி படத்தில் கழுதை மிகப் புகழ் பெற்றது. கழுதைக்காகவே படம் ஓடியது.பஞ்ச கல்யாணி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ”அழுதபிள்ளை சிரிச்சதாம், கழுதைப் பாலை குடிச்சதாம்” என்றுகூடச் சொல்வார்கள். அதாவது கழுதைப் பாலைக் குடித்தால் குழந்தைகள் நோய் நீங்கச் சிரிக்கத் துவங்கும். அப்படியாப்பட்ட கழுதைகள் கைவிடப்படலாயின. ஊர்வழிகளில் தடங்களில் கவனிப்பின்றித் திரிந்து கொண்டிருந்தன. அப்படியான கழுதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தார் நம் இராஜா.

கோட்டைமேடு சிக்னலில் இருந்த டிராஃபிக்போலீசுகாரர் வேகமாக ஓடிச்சென்று அந்த மெட்டாடர் வேனை இடைமறித்துச் சத்தம் போட்டார். ஆமாம். வேனின் பின்புறம் முழுக்க கழுதைகள் நின்று கொண்டிருந்தன.

“ஏம்ப்பா, என்ன இது? இப்படிக் கழுதைகளை ஏத்திகிட்டுப் போறியே?”

“வீட்ல வெச்சிட்டு என்ன சார் பண்றது? அதான் ஏத்திகிட்டுப் போறன்!”

“வீட்ல வெச்சிட்டு என்ன செய்றதா? இந்தவாட்டி உனக்கு மாப்புக் குடுக்குறன். வேணுமின்னா ஜூ(மிருகக்காட்சிசாலை)வுக்கு கொண்ட்ட்டுப் போயேன்!”

“நல்ல ஐடியா சார், அப்டியே செய்றன்”, சொல்லிவிட்டு அந்த திறந்தவெளி வேனைக்கிளப்பிக் கொண்டு பறந்தார் நம் ராஜா.

அடுத்த நாள். அதேநேரம். அதேசிக்னல். அதே போலீசுகாரர். கோபம் தலைக்கேறியது. பிக்-அப் வேன் முழுக்கக் கழுதைகள், கண்ணுக்கு கண்ணாடிகள் அணிந்திருந்தவண்ணம்.

“யோவ், நீயென்ன லூசா? கழுதைகளுக்குக் கண்ணாடி, மறுக்காவும் ஏத்திகிட்டு, அதுவும் ஓப்பன் வேன்ல?”

“இதுகளை வீட்ல வெச்சிட்டு என்ன சார் பண்றது? அதான், மதுக்கரை, பாலக்காடு வழியா கேரளா பீச்சுக்குப் போலாம்னு போய்கிட்டு இருக்கன்”

போலீசுக்காரருக்கு சினமெல்லாம் வடிந்து ராஜாமீது அளவுகடந்த பாசம் பொங்கியது. இப்படியொரு மனிதனா? அந்த போலீசுகாரரும் பஞ்சகல்யாணி படம் பார்த்துக் கிரங்கியவர். ”பஞ்சகல்யாணி இராசா, உன்னியமாரி ஆளுக இந்த லோகத்துல இருக்கிறதாலத்தான் நாட்டுல ஏதோ நாலுதுளி மழ பெய்யுது”, கையெடுத்துக் கும்பிடு போட்டு அனுப்பிவைத்தார். ”பஞ்சகல்யாணிராசா” என்று கோயமுத்தூர் கொள்ளேகால் கொழிஞ்சாம்பாறை வரையிலும் பிரபலமாகிப் போனார் நம் ராஜா. பின்னாளில் ராசா படிப்பெல்லாம் முடித்து வாழ்க்கையில் செட்டிலாகியிருந்த தருணம். இந்த விசியத்தைக் கேள்விப்பட்ட ராசாவின் மாமனார், சமூகத்தில் அலைக்கழிக்கப்படும் முதியோர்களுக்கான காப்பகம் நடத்துவதற்கு நம் மாப்பிள்ளைதான் சரியான ஆளென நினைத்தார். அதன்படியே முதியோர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகின்றார் இராஜா.

பூப்போன்ற மனசுக்கேற்றார்போல இராஜாவுக்கு நிறைய நண்பர்கள். சரி, இன்றைக்கு நம் வளாகத்துக்கு(கேம்ப்பஸ்) வந்துவிடுங்களெனச் சொல்லவே அன்று மாலை எல்லாரும் இராஜாவின் இடத்தில் கூடிவிட்டனர். இராத்திரி 11 மணிக்கெல்லாம் வந்தோர் கிளம்பிப் போய்விட்டனர், ஒரிருவரைத் தவிர. நித்திரை கொண்டு காலையில் எழுந்ததும், ‘காலை வெயில் கழுதைக்கு நல்லது. மாலை வெயில் மனிதனுக்கு நல்லது. காலைவெயிலில் நடந்து பழகிவிட்டேன். வாக்கிங் போலாம் வாங்க”, எனச் சொல்லி நண்பர்களைக் கிளப்பினார் ராஜா. அந்தநேரம் பார்த்து பணியாளொருவர், ‘அது இல்லை, இது இல்லை’ என அனத்திக் கொண்டு வரவே, ’நீங்கள் போய்க்கொண்டு இருங்கள். நான் வந்து சேர்ந்து கொள்கின்றேன்’ எனச் சொல்லி அனுப்பினார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தனர். அந்தக் குடிலின் முன்பாக மூன்று பெண்கள், அம்புஜம், பங்கஜம், சிந்துஜா ஆகியோர் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்ததும் கைகாண்பித்து அழைத்தார் ஒரு பெண்மணி. ‘நானா?’ என்றார் ஆனந்த். ’அல்ல, அடுத்த ஆள்’ என்பதாக இருந்தது அந்தப் பெண்களின் சைகை. ‘அப்ப, நானா?’ என்றார் வேணு. ‘இல்லய்யா, அடுத்து’ என்பதாக இருந்தது அவர்களின் குறிப்புமொழி. ‘அப்ப, நானா?’ என்றார் பீளமேட்டார்.

”ஆமாம், உங்க வயசு என்ன, பிறந்ததேதி என்னங்றதெல்லாம் எங்களாலக் கரக்ட்டா சொல்லமுடியும்”

“அதெப்பிடி? அதெப்பிடி??”, இரைந்தனர் மூவருமே.

“நீங்க உங்க பேண்டை இடுப்புக்குக்கீழ நழுவவிடுங்க, அட, அந்த கோவணத்தையும் கழத்துங்க சொல்றம்”

இடுப்புக்குக்கீழே நழுவவிட்ட நிலையில், அவை கணுக்கால்களில் போய் நின்றுகொண்டன. நிலைமையை உணர்ந்த ஆனந்த்தும் வேணுவும் பத்துத்தப்படிகள் கடந்து போய் நின்றுகொண்டனர்.

“சும்மா நின்னுட்டு இருந்தா எப்டி? ரெண்டு சுத்து சுத்திவாப்பா, பார்த்துச் சொல்றம் உன்ற வயசு என்னான்னு”, அவசரப்படுத்தின பெருசுகள். இரண்டு சுத்துச் சுத்தினார் பீளமேட்டார்.

”மேலகீழ ரெண்டு வாட்டிக் குதிப்பா பார்க்கலாம்”, குதித்தார் பீளமேட்டார்.

”இம்... உம்மோட வயசு நேத்தோட நாப்பத்தி ஆறு”

“எப்டிங்மா கரெக்ட்டா சொல்றீங்க?”, வியந்து போயினர் மூவருமே.

“மூதேவிகளா, தூங்க விட்டீங்ளாடா நீங்க? அதான் உனக்கு ஃபோர்ட்டிசிக்ஸ்த் பர்த்டேன்னு கூத்தும் கும்மாளமுமா இருந்தீங்களே நேத்து இராத்திரி. அதைத்தான் நாங்க அல்லாரும் பார்த்தமே? செரி போச்சாது, இங்க வா நீயி!”

அம்மணகோலத்தைக் கலைத்துக் கொண்டு பேண்ட் பெல்ட்டை இறுக்கியபடியே அருகில் போனார் பீளமேட்டார். உள்ளே சென்று வந்த பங்ஜம்பாட்டி, தன்னுடைய சிங்கப்பூர் பேரன் கொடுத்த சீன ஹம்ப்பாவ்கவர் ஒன்றைக் கொடுத்தார். அதில் எவ்வளவு சிங்கப்பூர் டாலர்கள் இருந்ததென்பதை இன்றளவும் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை பீளமேடு.

இவற்றையெல்லாம் அறிய நேர்ந்த ராஜாவுக்கு இன்றளவும் அந்த ஹம்ப்பாவ்கவருக்கு விடை கிடைத்தபாடில்லை. தாமும் பேண்ட் கழட்டப் போகலாமென்றால் அதற்கான தருணமே வாய்க்கப் பெறவில்லை. அந்தக் குடிலையே சுத்திச் சுத்தி வந்து கொண்டிருக்கின்றார். குடிலுக்கு இன்றும் சென்றிருந்தார். அங்கிருந்த பாட்டியொன்று ஓடி வந்து, “கோழி ஒண்ணுக்கு ஊத்துமா? ஊத்தாதா??” என்றது. மலங்க மலங்க விழித்தபடி, “தெரியலையே” என்றார். இந்த பதிலால் திருப்தி கொள்ளாத பாட்டி, கதவைப் படாரெனச் சாத்திக் கொண்டது. பாவம் இராஜா.

-பழமைபேசி.

12/08/2020

தட்டியெழுப்புவன கதைகள்

கதைகள் சொல்வதையும் கதைகள் எழுதுவதையும் கிண்டல் செய்து கொண்டிருந்தார் நண்பர். சமூகப் பணிகளில் ஈடுபாடு கொள்ளாது, கதபொக் ஆட்கள் பணம் பண்ணக் கிளம்புவது வாடிக்கைதானே என்பது அவரது அகங்கலாய்ப்பு. அவரது கலாய்ப்பில் உண்மை இருந்தாலும் கூட, கதைகளுக்கான தேவையின் அடிப்படையில் அவரது வாதம் முற்றிலும் புறந்தள்ளப்பட வேண்டியதே.

ஹரியத் பீச்சர் ஸ்டோவ், லைமேன் பீச்சர் – ரோக்ஸ்னா தம்பதியினருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் ஏழாவது குழந்தை. குடும்பம் வசதியான குடும்பமெனச் சொல்லிவிட முடியாது. பெண்கள் படிப்பதற்குச் சமூகத்தில் இடமில்லை. பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. அப்படியானதொரு காலகட்டத்தில், அதாவது 1811ஆம் ஆண்டு பிறந்தவர்தாம் ஹரியத் பீச்சர். சமூகநிலை அப்படியாக இருந்தாலும். தன் மகள்களுக்கும் கல்வி புகட்டினார் லைமேன் பீச்சர். ஹரியத் பீச்சருக்கு வயது ஐந்துதாம், அம்மா ரோக்ஸ்னா மரணமடைய நேரிடுகின்றது. லைமேன் பீச்சரின் மூத்தமகள், தன் இளையோர் பன்னிருவருக்கும் தாயாக மாறுகின்றார். அக்காவின் வளர்ப்பில் வளர்ந்த ஹரியத் தம் குடும்பத்துக்கு நேர்ந்துவிட்ட அடிமைகளிடம் கதைகள் புசித்து அன்பில் தோய்ந்து வளர்கின்றார். 1836 – 1841, பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு கறுப்பின மக்களின் மீது கழிவிரக்கம் கொள்வோர் பலர் கொல்லப்பட்டனர். அதனால், இனபேதம் குறித்துப் பேசவோ நினைக்கவோ மக்கள் அஞ்சினர்.

கறுப்பினமக்கள் அடிமைகளாய் இருப்பதைச் சகிக்காது புழுங்கித் தவித்த நிலையில் கால்வின் எலிஸ் ஸ்டோவ் என்பவரைச் சந்திக்க நேரிடுகின்றது. கால்வின் எலிஸ் மனைவியின் மரணத்தில் சோர்ந்து போயிருந்தார். அவருக்கும் சகமனிதர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு சகிக்கவில்லை. ஒத்தமனத்தைக் கண்டு காதல்கொண்டு கால்வினையே மணம் புரிந்து கொள்கின்றார் ஹரியத். அடிமைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு தம் வீட்டில் இடமளித்து உதவிகள் பலவும் செய்து கொண்டிருந்தவருக்கு அவ்வப்போது எழுதவும் வாய்ப்புக் கிடைத்தது. 1850ஆம் ஆண்டுவாக்கில், சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது நாளிதழ் ஒன்றில் எழுதி வந்தார் ஹரியத். அவற்றைச் சீர்படுத்தி 1951ஆம் ஆண்டில் தொடர்களைத் தொடுத்தார் ஹரியத். உருக்கமாக இருந்தன அவை.

அச்சம் கொண்டனர் பதிப்பாளர்கள். ஆனாலும், 1952ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் நாள், அங்க்கிள் டாம்ஸ் கேபின் எனும் நாவல் ஐயாயிரம் பிரதிகளோடு வெளியானது. படித்தோர் மருண்டு போயினர். மக்கள் மறைவாக வாங்கிப் படிக்கத் தலைப்பட்டனர். அமெரிக்காவில் மட்டும் மூன்று இலட்சம் பிரதிகள் விற்றன. பிரிட்டனில் பத்து இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. வாரத்தில் ஏழு நாட்களும், இரவுபகல் பாராமல் இருபத்தி நான்குமணி நேரமும் மின்விசை அச்சுகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. 1855ஆம் ஆண்டு, அந்த நூற்றாண்டிலேயே அதிகம் வாசிக்கப்பட்டதும் விற்பனையானதுமான நூலாக உருவெடுத்தது அங்க்கிள் டாம்ஸ் கேபின்.

மக்கள் மனத்தில் சொல்லவொண்ணாத் துயரத்தைக் கொடுத்தது அந்த நூல். உடனடியாகத் தத்தம் வசம் அடிமைப்பட்டுக் கிடந்தோரை விடுவிக்கத் துவங்கினர் மக்கள். இதன்நிமித்தம் ஆங்காங்கே போர் வெடித்தது. வட மாகாணங்களைச் சார்ந்த மக்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கனும் ஆதரவளிக்க, தென்பகுதியில் இருந்தோர் அத்தகைய போக்குக்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து ஐக்கிய அமெரிக்க மாகாணங்களில் இருந்து தத்தம் மகாணங்களை விடுவித்துக் கொள்வதாக அறிவித்துக் கொண்டனர். அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் வெடித்தது. ஆசிரியர் ஹரியத் ஸ்டோவைச் சந்தித்த ஆப்ரகாம் லிங்கன், “இந்த உள்நாட்டுப் போரைத் துவக்கி வைத்த பெண்மணி இவர்தானா?” என வினவி வரவேற்றுக் கொண்டார். இந்த நாவலானது, ’டாம் மாமாவின் குடிசை’ எனும் தலைப்பில் தமிழ்மொழியிலும் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. நாவலின் முக்கியக் கதாபாத்திரத்தின் பெயரான, ‘இவா’ எனும் பெயரை தத்தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர் மக்கள்.

’ரூபி பிரிட்ஜஸ் பள்ளிக்குப் போகின்றாள்’ எனும் நூல் பள்ளிச் சிறார்களிடையே மிகவும் பிரபலமான கதைப்புத்தகம். அங்க்கிள் டாம்ஸ் கேபின் வெளியாகி நூறாண்டுகள் ஆகியிருந்த காலமது, 1954 செப்டம்பர் எட்டாம் நாள், லூசைல் – அபான் பிரிட்ஜஸ் தம்பதியினரின் ஐந்து குழந்தைகளுள் முதலாவதாகப் பிறந்த குழந்தையின் பிறந்தநாள் இது. அம்மா அப்பா இருவரும் மிசிசிப்பியில் இருந்த பண்ணையொன்றில் விவசாய வேலை. குழந்தைகளின் வளர்ப்புக்காக நல்லதொரு வேலை தேடி லூசியானாவின் நியூ ஆர்லியனுக்குக் குடிபெயர்ந்தனர் ரூபி பிரிட்ஜஸ் பெற்றோர்.

கறுப்பினக் குழந்தைகளுக்குத் தனிப்பள்ளி, வெள்ளையின மக்களுக்குத் தனிப்பள்ளியென இருந்த காலம். அப்போதுதான் அமெரிக்க உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புவொன்றினைக் கொடுத்திருந்தது. தனித்தனிப் பள்ளிகளாக இருப்பது முடிவுக்கு வரவேண்டுமெனச் சொன்னது தீர்ப்பு. ஆனாலும், வெள்ளையினக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நுழைவுத் தேர்வு எனும் விதியைப் புகுத்தியபடியினாலே, கறுப்பினக் குழந்தைகளெல்லாம் தனிப்பள்ளியிலேயே படித்தாக வேண்டிய நிலை. தென்மாகாணங்களில் கடும் எதிர்ப்பும் நிலவியது.

ரூபியின் அம்மாவுக்குத் தன் பிள்ளையைப் பொதுப்பள்ளியில் படிக்கவைத்து ஆளாக்க வேண்டுமென்கின்ற ஆசை. அந்தப் பகுதியிலிருந்த மற்ற குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு தன் மகளையும் நுழைவுத் தேர்வு எழுத அனுப்பினார். மொத்தம் ஐந்து குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற்றனர். எனவே ஐவரும் பொதுப்பள்ளியின் சேர்க்கைக்குச் சென்றனர். பெரும் கொந்தளிப்பும் போராட்டமும் வெடித்தன.

ரூபியைத் தவிர மற்ற நால்வரும் தாங்கள் தற்போது படிக்கும் பள்ளியிலேயே படித்துக் கொள்வதாகச் சொல்லிப் பின்வாங்கினர். ரூபியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடும் மன அழுத்தம் ஏற்பட்டது. வேலையிலிருந்து நீக்கப்பட்டார் ரூபியின் அப்பா. இதனால் குடும்பத்தில் குழப்பம், மணமுறிவு பெற்றுக் கொண்டு விடை பெற்றுச் சென்றுவிட்டார் ரூபியின் அப்பா. ஆனாலும் ரூபியோ, ரூபியின் அம்மாவோ மனம் தளரவில்லை.

ரூபிக்குப் பாடல் சொல்லிக் கொடுக்க மறுத்து விலகினர் ஆசிரியர்கள். ஒரே ஒரு பெண் ஆசிரியர் மட்டும் துணிந்து முன்வந்தார். வகுப்பில் இருந்த மாணவர்கள் வேறு வகுப்புகள், பள்ளிகளுக்கு மாற்றலாகிப் போயினர். அந்த பெண் ஆசிரியருக்கும் ரூபியின் குடும்பத்துக்கும் கடுமையான மிரட்டல்கள் வந்து சேர்ந்தன. கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். பள்ளிக்குச் சென்று வரும் வழியெல்லாம் மக்கள் சாரைசாரையாக வந்து நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர். சிதைபெட்டியில் கறுப்பினக்குழந்தை இருப்பதைப் போன்று உருவாரங்கள் செய்து காண்பித்து போராட்டங்களை மேற்கொண்டனர். மனம் சோராமல் வந்து போய்க்கொண்டிருந்தனர் ஆசிரியரும் மாணவியும். வீட்டிலிருந்து வகுப்புக்கு வந்து செல்ல, ரூபியின் பாதுகாப்புக்கு நான்கு மார்ஷல்கள் நியமிக்கப்பட்டனர்.

மதிய உணவு இடைவேளையின் போது தன் ஆசிரியரான அந்த ஒற்றை வெள்ளையினப் பெண்மணியோடு மட்டுமே விளையாடியது குழந்தை ரூபி.

காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தைகளும் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். தன் கூடப் பிறந்தவர்களும் அந்தப் பள்ளிக்கு வந்து சேர்ந்தது கண்டு மகிழ்ந்தாள் குழந்தை ரூபி. 1964ஆம் ஆண்டு அதே பள்ளியில் தன் உயர்நிலைப்பள்ளி டிப்ளமோ படிப்பை முடித்தார் ரூபி. வெள்ளை மாளிகையில் சென்று சந்தித்தபோது, ”நீங்களும் உங்கள் அம்மாவைப் போன்றோரும் இட்ட பாதையினால்தான் என்னால் இன்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் எனும் பொறுப்பில் நான் இருக்கிறேன்” என்று அகமகிழ்ந்தார் ஒபாமா. ”என்னை வளர்த்து ஆளாக்கியதும் வெள்ளைப் பெண்மணிதான். ஹென்ரி என் தோழி. இனபேதம் இங்குமிருக்கக் கூடாது, அங்குமிருக்கக் கூடாது” உருகிச் சொன்னார் ரூபி. மனத்தை உருக்கிக் கரைக்கக் கூடியவை கதைகள்.

-பழமைபேசி.