12/09/2022

புதுமை

புதுமை என்பது எப்போதும் புதியதாகவே இருந்து கொண்டிருக்கும். மனித நாகரிகம், அறிவுத்திறம் வளர வளர நடப்பில் இருக்கும் பழக்க வழக்கங்கள் தேய்வழக்குகளாகத்தான் செய்யும். நமக்குச் சரி என்பதாக இருந்தது நம் அடுத்த தலைமுறையினருக்குத் தவறாகப் புலப்படும். அதுதான் அறிவியல்.

வயது கூடக்கூட இயக்குநீர்களின்(ஹார்மோன்) சுரப்பு அளவுகள் மாறும். விடலைப் பையனிடம் இருக்கும் துள்ளல், நடுத்தர வயதுள்ள ஒருவரிடம் இருக்காது. காரணம் இயக்குநீர்களின் அளவில் மாற்றம். குறைவதும் கூடுவதும் இயல்பு. ஆனால் இயக்குநீர்கள் ஒன்றுக்கொன்று இயைந்து செல்லக் கூடியன. ஒன்று கூடும் போது இன்னொன்று குறையும். அந்தச் சமன்பாட்டில் இடர்கள் ஏற்படும் போது உளவியற்கோளாறுகள் தோன்றுகின்றன.

உளவியற்கோளாறுகளினால் கவலை, வருத்தம், அச்சம், மருட்கை, சாலேச்சுவரம் உள்ளிட்ட பல உணர்வுகள் மேலிடுகின்றன. பத்து வீடுகள் கடந்து வந்தபின்னும் மனம் உறுதிகொள்ள முடியவில்லை. திரும்பவும் போய் கதவைத் தாழிட்டோமாயென்பதைச் சோதிக்கத் தோன்றுகின்றது மனம். இதுகூட ஓர் உளவியற்கோளாறுதான். இது குறித்துக் கேலி, கிண்டல், எள்ளல் செய்யத் தேவையில்லை.

கடந்த காலத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு நமக்கில்லை. தற்காலத்தில் அப்படியான விழிப்புணர்வுக்கு நாம் ஆட்படுகின்றோம். ஒரு சிறு சொல் போதும், நம் அம்மாவோ அப்பாவோ மூலையில் உட்கார்ந்து அழச் செய்வதற்கு. “அம்மாவுக்கு கண்பார்வைல கோளாறு” ”குருடு” என்பதற்கும், “அம்மாவுக்கு அப்பப்ப கண்பார்வை மங்கலாயிடும்” என்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. முன்னைய சொல்பாவனை அவரது மனத்தைப் புண்படுத்தி நிலைகுலைய வைக்கக் கூடியது. மனக்குறைபாட்டினைப் பெருக்கக் கூடியது.

ஆண்டுதோறும் உடற்பரிசோதனை என்பது அமெரிக்காவில் நடைமுறைப்பழக்கம். அத்தகைய சோதனையின் போது கேட்கப்படும் வினாக்களில் முதன்மையானது, மனச்சோகை, மனப்பதற்றம், மனச்சலனம் முதலானவைக்கு ஆட்படுகின்றீர்களா?, ஆம் எனில் அதன் வீச்சு எப்படி? நாளைக்கொருமுறையா? வாரத்துக்கொருமுறையா? இப்படியெல்லாம் வினவுவர்.

நடுத்தர, மூப்பெய்தியவர்களிடம் இப்படி இப்படியான வகையில் பேசக்கூடாது, இப்படி இப்படியெல்லாம்தான் அணுக வேண்டுமெனப் பயிற்றுவிக்கும் சிறப்புப் பயிலரங்கங்கள்கூட உண்டு. தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்வதில்லை. தற்கொலையால் இறந்து போனார் எனத்தான் சொல்ல வேண்டுமெனப் பயிற்றுவிக்கப்படுகின்றது. காரணம், செய்து கொண்டார் எனும் போது, உங்களாலும் செய்து கொள்ள முடியுமென்கின்ற தகவல் உட்பொதிந்து இருக்கின்றது. பின்னைய சொல்லாடலில், இறந்து போவதற்கான வாய்ப்பு அதில் இருக்கின்றதெனும் எச்சரிக்கையுணர்வு வெளிப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட பயிற்சிகள் சமூகத்தில் இருக்கும் எல்லாரிடமும் இருக்குமெனச் சொல்லிவிட முடியாது. ஆகவே, அக்கறையுடன், அன்புடன், வீட்டுப் பெரியவர்களை, தேர்ச்சிபெற்ற விருந்தோம்பல் இருக்கும் கூடங்களிலே வாழப் பணிக்கப்படுகின்றோம். அதைப் போய், வீட்டுப் பெரியவர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான், மூத்தவர்களை மதிக்க மாட்டேனென்கின்றானெனச் சொல்வதெல்லாம்கூட ஒருவகையில் சாலேச்சுவரம்தான். words matter!

No comments: