10/21/2022

வாசிப்பின் பயன்

தகவற்தொடர்புச் சாதனங்களால் சூழப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நொடியும் உங்களை அவை வந்தடைந்து கொண்டே இருக்கும். கணினி, செல்ஃபோன், டிவி, செய்தித்தாள், புத்தகம், விளம்பரப்பலகை, இசை, கலை இப்படிப் பல உருக்களில் ஏதோவொன்றை உங்களுக்குள் புகுத்த அவை படைக்கப்பட்டிருக்கின்றன. அதனை நாம் உள்வாங்குகின்றோம். புரிந்து கொள்ளப்படுகின்றது.

புரிதலில் மூன்று வகையான புரிதல்கள் உண்டு. நேரடிப்புரிதல் (literal), இடைவெட்டுப்புரிதல்(inferential), அறுதிப்புரிதல்(propositional) என்பனவாக.

நேரடிப்புரிதல்: சொற்கள், காட்சிகளைக் கொண்டு, யார், என்ன, எப்போது என்பதாகப் புரிந்து கொண்டு அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்வது. மேல்நிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.

இடைவெட்டுப்புரிதல்:  சொற்கள் நமக்குக் கடத்தும் உணர்வு, சொற்தேர்வு முதலானவை, சொல்லப்படாத ஒரு தகவலையும் உட்கொண்டிருக்கும். ஏன், எப்படி போன்ற வினாக்களுக்கான விடைகளைக் கொண்டு புரிந்து கொள்வது. இடைநிலைப் புரிதல் எனக் கொள்ளலாம்.

அறுதிப்புரிதல்: ஏற்பட்ட மேல்நிலைப் புரிதலையும் இடைநிலைப் புரிதலையும் கொண்டு, தமக்குள் இருக்கும் அனுபவம், கூடுதல் தகவற்தேடல் முதலானவற்றைக் கொண்டு தெளிவான ஒரு முடிவுக்கு வருதல். இது தேடலுக்கும் நாடலுக்கும் வழி வகுக்கும்.

துவக்கப்பள்ளியில் நீங்கள் பார்க்கலாம். ரீடிங் லெவல் எனக் குறிப்பிடுவர். புரிதலின் கூறுகளைக் கொண்டு இவை தரம் பிரிக்கப்பட்டு இருக்கும். தற்போது ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம். நண்பர் ஒருவர் தகவற்துணுக்கு ஒன்றினைப் பகிர்ந்திருந்தார். ஒவ்வொரு காலகட்டத்திலும் பெட்ரோல் விலை என்பது இன்னின்ன விழுக்காடு உயர்வு என்பதாகச் சொல்லி, கடைசி பத்தாண்டு காலத்தில் முன்னை விடக் குறைவாக 30% உயர்வுதாம் என்பதாக இருக்கும் அது. இதைக்கொண்டு புரிதலின் தன்மைகளை அறிந்து கொள்வோமாக.

கொடுக்கப்பட்ட சொற்களில் பொய், தவறு உள்ளதா? இல்லை. உள்ளதை உள்ளபடியே வாங்கிக் கொண்டால், அதுதான் தகவல். குறிப்பிட்டதன்படி கடைசி காலகட்டத்தில் 30% உயர்வுதாம். முன்னைவிடக் குறைவுதான். மேல்நிலைப்புரிதல்.

இந்தத் தகவற்துணுக்கு ஏன் பகிரப்படுகின்றது? எப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது, இந்தத் தகவலில் உள்நோக்கம் இருக்கலாம். ஆகவே இதை விட்டுத்தள்ளுவோமென்கின்ற புரிதல் ஏற்படுமாயின், அது இடைவெட்டுப் புரிதல்.

பெட்ரோல் என்பது எதிலிருந்து கிடைக்கின்றது? கச்சா எண்ணெயிலிருந்து கிடைக்கின்றது. கச்சா எண்ணெயின் விலை என்னவாக இருந்தது?  2013ஆம் ஆண்டு பீப்பாய் ஒன்றுக்கு 98 டாலர் என்பதாக இருந்து, படிப்படியாக 2020ஆம் ஆண்டு 40 டாலருக்கு வந்து, தற்போது மீண்டும் அதே 98 டாலருக்கு வந்திருக்கின்றது. ஆக, தோராயமாக 50% விலை குறைக்கப்பட்டு, மீண்டும் 2013ஆம் ஆண்டு விலைக்கே வந்திருக்க வேண்டும். எனவே 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறைப்புக்கான 50%, உயர்வுக்கான 30%, என ஏறக்குறைய 80% விழுக்காடு உயர்வுக்கு ஆளாகி இருக்கின்றது பெட்ரோல் என்பது அறுதிப்புரிதலாக ஒருவர் கொள்ளலாம். இது ஆழ்நிலைப் புரிதல்.

Books were written to change the reader on some level.  Thinking about texts at various levels deepens the understanding of the text and aids in the reader understanding and growing from what they have read. வாசிப்பின் பயனை நாம் ஓரளவுக்கு அறிந்து கொண்டோம். நம் லெளகீக வாழ்வில், எந்த அளவுக்கு பாப்கார்ன் செய்திகளுக்கு ஆட்பட்டு ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

No comments: