3/16/2019

Beware: Fake News

குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத ஆட்களோடு விவாதம் செய்வது வெட்டிவேலை. அப்படிச் செய்யத் தலைப்பட்டால், எதிராளி செய்யும் எல்லாக் கபட வேலைகளுக்கும் ஒரு படி மேலே சென்று அதே வகையான கபட வேலைகளை நாமும் செய்ய வேண்டும். செய்தால்தான் எதிராளியை வீழ்த்த முடியும்; அது எந்தத் தொழிலாக இருந்தாலும். இப்படியான மல்லுக்கட்டில், மக்களின் ஆதரவை, நுகர்வைப் பெறுவதில் முதலிடம் வகிப்பது புரிதற்போர். தமக்கு ஏதுவான புரிதலை மக்களிடையே கட்டமைப்பது. இந்த எழவு, மாய்மாலத்தால்தான் போலிச்செய்திகள், Fake News, பூதாகரமாக உருவெடுக்கின்றது. அரசியல் என்பது மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலும் இடம் பிடித்து மாந்தசமூகத்தையே சீரழித்துக் கொண்டிருக்கின்றது இத்தகைய கலாச்சாரம். தொன்றுதொட்டு இருந்து வருவதுதானென்றாலும், தகவற்தொழில் நுட்பம், தேசதேச எல்லையற்ற சமூக வலைதளங்கள் அவற்றைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டிருக்கின்றது.ஒரு கருத்தாடல், விவாதம், பரப்புரை என எதையாவது ஒன்றை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதில், ஒரு சாமான்யன் எப்படியெல்லாம் முட்டாளாக்கப்படுகின்றான் என்பதைப் பார்க்கலாம்.
1. குழப்புதல்: சாமான்யன் ஒரு பொதுப்புத்தியில் நிலை கொண்டிருப்பான். சமநிலையில் இருப்பவனை முதலில் குழப்பி விட்டுக் கொந்தளிப்புக்கு ஆட்படுத்தி, அவனை அச்சுறுத்தி விட வேண்டும். பின்னர் அதற்கு உரிய தீர்வாக தத்தம் நோக்கத்தை உட்புகுத்தி விட வேண்டும். சாமான்யனின் நிம்மதியும் கெட்டு, பணமும் பழுத்துப் போகும்.
2. சுமையேற்றுதல்: ஒரு சாமான்யன் அவன் போக்கில், அவனுக்குக் கிடைத்ததை வைத்துக் கொண்டு விழுமியமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பான். முன்னேற்றத்திற்கான தேவைகள் இருக்கும்தான். அந்தத் தேவைக்கான தேடல் அவனுக்குள் இயல்பாக நேரிடச் செய்தல் சமூகத்தின் கடமை. அத்தகைய தேவைக்கான காரணங்களை இலாகவமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவனைத் திணறடிக்கச் செய்யுமளவுக்கு தகவல், செய்திகளைக் கொண்டு போய் அவனுக்குள் இறக்கிவிட வேண்டும். தகவற்சுழலில் சிக்கிய அவன் இதைப் பிடிப்பதா, அதைப் பிடிப்பதா என அலைபாயத் துவங்குவான். அந்த நேரத்தில், ஆபத்பாந்தவனாகச் சென்று தத்தம் நோக்கத்தை அவனுக்குள் சொருகி விட வேண்டும். அவனுக்கு ஒரு மண்ணும் தெரிந்திருக்கப் போவதில்லை. பணத்தையும் கொட்டுவான். ஓட்டுகளையும் போடுவான்.
3.முடக்குவாதம்: எந்தவொரு சாமான்யனும், மரபார்ந்த கலை, இலக்கியம், உணவு, விளையாட்டு, மொழி, சமயம் என ஏதாவதொன்றில் பற்றுக் கொண்டிருப்பான். இவையெல்லாமுமே அவன் வாழ்வியலைச் செம்மையாக்க இருப்பனதான். ஆனாலும், அவற்றின் மீதான பற்றினைப் பெருக்கிப் பெருக்கி, ஐசு வைத்து, அதற்குள்ளேயே முடக்கி, மற்றவற்றின் மீதான பார்வையைக் குறுக்கி விடுவதன் வாயிலாக, சொல்வதை ஏற்றுக் கொள்ளச் செய்யும் மனப்பாங்கைக் கட்டமைத்து விடுதல். இப்படியானவற்றுக்கு கட்டுண்டவன், எளிதில் சோரம் போவான்.
4. சோர்வுறச் செய்தல்: தத்தம் பரப்புரை, போதனைகளின் போது, தத்தம் இழுப்புக்கு எளிதில் கட்டுப்படாதவனிடம் பேச்சுக் கொடுத்து, பேச்சுக் கொடுத்தே சோர்வுறச் செய்து ஓய்ந்து போன நிலையில் அவன் தலையில் எல்லாவற்றையும் கட்டிவிடுதல். ஆக, தெளிந்த சாமான்யன் என்ன செய்வான்? இடத்தை விட்டு எழுந்து போவான். தெளியாத சாமான்யன் ஓய்ந்து சோரம் போவான்.
5. கூடுவிட்டுக் கூடுபாய்தல்: பரப்புரையின் போதோ, உரையாடலின் போதோ, சிந்தனை வயப்பட்டு கேள்விகளைக் கேட்பதாக உணரும் போது, பேசு பொருளில் இருந்து பிறிதொன்று, அந்தப் பிறிதொன்றிலிருந்து மற்றொன்று என இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் போது, சாமான்யன் ஏதோவொரு இடத்தில் திணறுவான். அந்த நேரம் பார்த்து, தலையில் சுமையை, தகவற்சுமையை ஏற்றி விட்டு மேலும் திணறலுக்கு ஆட்படுத்திப் பதம் பார்த்து விடுதல். பேசுபொருளில் இருந்து விலகுவது தெரிந்தாலே, சாமான்யன் கவனத்துடன் இருந்து விட வேண்டும். பிறிதொரு இடத்துக்குப் பெயர்வதை அனுமதிக்கக் கூடாது.
6. பிரித்தாளுதல்: சாமான்யன் ஒரு குடும்பமாக, நண்பர்கள் குழுமமாக, ஓர் ஊராக, இப்படிக் கூட்டுறவாக இருத்தல் எதிராளிக்கு ஏதுவாக இருக்காது. சாமான்யனுக்கே தெரியாமல் கூட்டுறவைப் பிரித்தொழிக்கும் பாங்கில் தகவலைக் கசிய விட்டுத் திணறடித்து, பாடம் போட்டுக் கலைத்து விடுதல். அண்டி இருப்பவனிடத்தில் ஏதேனும் இடைஞ்சல் என்றால், அது அந்த சாமான்யன் தாமாக உணர வேண்டும். அடுத்தவர் சொல்லிப் புலப்படுவதாக இருந்தால், உசாரய்யா உசாரு.
7. அன்பு பாராட்டி, அமைதி பேணி வீழ்த்துதல்: சாமான்யனைப் பேணிப் பாதுகாப்பதற்காகவே பிறப்பெடுத்தது போலவும், இல்லாத அமைதியின்மைக்கும் கூட அமைதியூட்டிக் கொடுப்பது போலவும் கரிசனம் காட்டிக் காட்டி வளைய வந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வீழ்த்தும் முறைமை இது. தன்மானத்துக்கு எதிரான, தகுதிக்கு ஒவ்வாத, உழைப்பற்ற எந்தப் பரிசுப் பொருளோ, புகழ்ச்சியுரையோ அனுமதிக்கவே கூடாது. அனுமதித்தால், அதைக் காண்பித்தே அடிமைப்படுத்தி ஒழுங்கு செய்து வீழ்த்தி விடுவர் வீழ்த்தி.
8. மேட்டிமை: கல்வி, உழைப்பு, கலை, இலக்கியம் என எதையாவது ஒன்றைக் காண்பித்து, மேட்டிமையைப் படிப்படியாகக் கட்டமைத்து, அதிகாரத்தைச் செலுத்தி பண்டங்களை விற்பது, கருத்துகளை விதைப்பது, எப்படியான கருத்துகளை? போலித்தனமான, சாமான்யனுக்கு உசிதமற்ற கருத்துகளைத் திணிப்பது. எத்தகைய ஆளானாலும், அவர்தம் திறத்தை, ஆக்கத்தைப் பாராட்டலாம். அவ்வளவுதான். அவர்களைச் சாமான்யன் தொழுதிடத் தேவையில்லை.
9. ஏவுதல்: சாமான்யன் பேசாமற்கொள்ளாமற் சென்று கொண்டிருப்பான். நயமான சொற்கள் கொண்டு மனத்தைக் கிளரச் செய்தலின் வழி, அவன் ஏதோவொரு எதிர்வினையாற்றப் பணித்து, அந்த எதிர்வினையைக் கொண்டே குற்றவாளியாக்கி, அல்லது தத்தம் வளையத்துக்குள் கொண்டு வந்து வீழ்த்துதல். இணைய உரையாடலில், சாமான்யன் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அந்தச் செய்கையை மாத்திரம் திரைநகல் எடுத்து மானமிழப்புச் செய்து அடிமைப்படுத்து விடுவர். உசாரய்யா உசாரு.
10. குலைத்தல்: அடுத்தடுத்து எதிர்மறையான தகவல்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பதன் வழி, மனத்தின் நிலைத்தன்மையைக் குலைத்து, நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி, இணக்கத்தைச் சீர்குலைக்கச் செய்தல். இப்படியான தகவல்களின் உண்மைத்தன்மையைச் சாமான்யன் அறிந்து கொண்டு செயற்படுதல் காலத்தின் தேவை. அடுத்தடுத்து, எதிர்மறைச் செய்திகள் வந்தாலே போதும், உசாரய்யா உசாரு.
Not everything that counts can be counted, and not everything that can be counted counts! - Albert Einstein
உலகப் பொய்மையின் ஊற்று, நமது புரிதற்தன்மை!!
நீங்கள் எப்படிப்பட்டவரென நீங்கள் கருதுவது தவறு; நீங்கள் எப்படிப்பட்டவரென மற்றவர்கள் நினைப்பதுவும் தவறு; உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதன் பேரில், நீங்கள் உங்கள்மீதான நிலைப்பாட்டை கொண்டிருப்பதுதான் மெய்!! இந்தப் பண்புதான் போலித்தன்மை, பொய்மையின் ஊற்றுக்கண். எந்தப் பெரியவர், எந்த அறிவாளியாகக் கருதப்படுபவர், எந்த ஆளுமை, எந்த நாதாரி, எந்தத் தக்காளி, யாராக இருந்தாலும், செய்தியின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். Let's fight against Fake News!!
எடுத்துக்காட்டு: தென்காசி நாடாளுமன்றத் தொகுதி திமுகவுக்கு மிகவும் வலுவீனமான தொகுதி. அந்தத் தொகுதியில் ஒருமுறை கூட வென்றதே இல்லை. (this is called Fake News). 10 முறை காங்கிரசும், இருமுறை இந்திய கம்யூனிசக் கட்சியும் வென்றிருக்கின்றன. ஆக, அந்தத் தொகுதியில் காங் வாக்காளர்கள், இடது கம்யூனிச வாக்காளர்களைக் காட்டிலும் திமுக வாக்காளர்கள் குறைவு. அப்படியா?
இது ஓர் எடுத்துக்காட்டுதான். இதுபோலத்தான் டயட், உடல்நலம், அழகு, அரசியல், வரலாறு என எல்லா எழவும். ஒருவரை நல்லவிதமாய்ப் பேசுவதால் பின்னடைவு ஏதுமில்லை. குறைத்துப் பேசுவதற்கு முன், ஒருமுறைக்குப் பலமுறை நம்மை நாமே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட அனுபவத்தின் பேரில் செயற்படும் போது, தவறுதலுக்கான வாய்ப்புகள் குறைவு. எடுத்துக்காட்டாக, அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்தை நான் விமர்சிக்கின்றேனென்று சொன்னால், நான் என் தனிப்பட்ட அனுபவத்தின் பேரில் செய்கின்றேன். நானே என் ஐம்புலன்களால் உணர்ந்தவற்றின் பேரில் செய்கின்றேன். அடுத்தவர்கள் இப்படியெல்லாம் கருதுகின்றார்கள் என்பதன் அடிப்படையில் செயலாற்றுவதினின்று விடுவித்துக் கொள்ள முயல்கின்றேன். முயலவேண்டும்.
You are not who you think you are;You are not who others think you are; You are who you think others think you are! (source:unknown)
-பழமைபேசி.

3/15/2019

தனிமனிதனும் தன்னார்வத் தொண்டும்

குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கானது அல்ல பயணம். செல்லும் வழியெல்லாம் எதிர்ப்படும் மண், மரங்கள், மக்கள், மழை, மலை, ஆறு, கடல், ஊர்வன, பறப்பன யாவற்றோடும் கலந்து உறவாடிச் செல்லும் அனுபவம்தான் பயணம். முடிவுக்கான பயணம் துவக்கத்தின் போதே துவங்கி விடுகின்றது. மாந்தனுக்கான முடிவு சாவு. அந்த சாவின் பயணம் அவன் கருவாய்ச் சூல் கொண்ட போதே தொடங்கி விடுகின்றது. இப்படியானதொரு பயணத்திற்கு இன்னதுதான் இலக்கு என்பதே கிடையாது. துவக்கம், முடிவு என்பதற்கிடையிலான பயணத்தைச் செம்மையாய் அமைத்துக் கொள்வதுதான் பகுத்தறிவாளனின் செயற்பாடாய் இருக்க முடியும். அறிவுப்புலத்தில் நின்று செயலாற்றுகின்ற எவரொருவரின் செயற்பாடாகவும் இருக்க முடியும். பயணிக்கின்ற சக மனிதனோடு கொடுக்கல் வாங்கல் நிகழ்த்தியபடி நிகழ்த்தியபடி இயற்கையைப் பேணிக் கொண்டே செல்லும் போதுதான் பயணம் வசப்படுகின்றது. பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் பொருட்களைக் கொடுப்பதும் வாங்குவதும் மட்டுமே கொடுக்கல் வாங்கலாக இருக்க முடியாது. மனத்தால் ஒன்றின் மீது அக்கறை கொள்வதும், பள்ளத்தில் இருப்பவருக்கு ஒரு கை கொடுத்துத் தன்நிலைக்கு இழுத்துக் கொள்வதும், இயலாமைக்குச் செய்து கொடுத்து ஈடு கட்டுவது போன்ற அகநிலைக் கொடுக்கல் வாங்கல்களே மாந்தநேயத்தின் அடிப்படை.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இக்குறளுக்கு உரையாகப் பலரும் பலவிதமாய்த் தத்தம் புரிதலை நமக்குக் கொடுக்கின்றனர். அவற்றுள் பெரும்பாலானவை அறிவுப்புலத்திற் செயற்படுகின்றவர்க்கு ஏற்புடையதாய் இருக்காது. இல்வாழ்க்கை எனும் தலைப்பு என்பதற்காகவே, மனைவி என்றெல்லாம் கொண்டு கூட்டிக் கட்டமைக்கத் தேவையில்லை. அன்பும், அடுத்தவர்க்கு ஊறில்லாத வகையிலான நடத்தை கொண்ட அறமும் உடையதாக்கிக் கொள்வதே இல்லற வாழ்வின் பண்பாகவும் அதனால் விளையும் நன்மையுமாக இருக்க முடியுமென்பதாகவே நாம் பொருட்கொள்ள வேண்டும். அப்படியான நிலைப்பாடு கொண்டு, அவரவர் அவரவர்க்கு இயன்றமட்டிலும் மேன்மையைக் கொணர முயல்கிறோம். ஆசைப்படுகின்றோம். வெகுவாகத் தோல்வியையும் எதிர்கொள்கின்றோம். அத்தகைய தோல்விகளை நாம் இருவகையாகப் பிரிக்கலாம்.
முதலாவது தோல்வியென்பது அவரவரிடத்திலே ஏற்படுகின்ற, மேன்மைக்குத் தடையாக இருக்கின்ற அகநிலைக் கூறுகள். கொள்கை அளவிலே ஒன்றைச் சரியெனப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் செயலளவில் அதைச் செயற்படுத்த முடியாதநிலை. இதற்குக் காரணமான காரணிகளைக் கண்டாய்ந்து தெளிதல் உகந்த வழியை நமக்கு ஈட்டித்தரும். மேம்பட்டிற்கான நம் முன்னெடுப்புகளில் ஏற்படும் தோல்விகளில் இரண்டாவது வகையானது, ஒருவர் கையாள்கின்ற போக்கினைச் சார்ந்ததாகும். நம் சமூகத்திலே ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு பரிமாணங்களில் பீடித்திருக்கின்றது. அவற்றையெல்லாம் உகந்த சட்டங்களின் வாயிலாகக் களைந்து விட முடியுமென நம்புவது ஒரு போக்கு. முள்ளை முள்ளால்தான் களைய முடியுமென்பது ஒரு போக்கு. கலை, இலக்கியத்தின் வாயிலாகக் களைய முடியுமென்பது ஒரு போக்கு. இப்படி அவரவர் அவரவர் வழியில் பயணிக்கின்றோம். ஈடேற முடியாத நிலையில் துவண்டு, எந்த ஏற்றத்தாழ்வைக் களைய முற்பட்டோமோ அதற்கே அடிபணிந்து செல்லக்கூடிய சூழ்நிலையிலும் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். ஆக, தன்னார்வத் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்ற ஒவ்வொருவரும் இம்முறைமைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகும்.
மைக்கேல் ராபர்டோ. இருபத்து ஐந்து வயது இளைஞன். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தன் தந்தையார் நிறுவிய நிறுவனத்திலேயே தந்தைக்கு உதவியாகப் பணியாற்றுகின்றான். அவனளவில் நல்ல வருமானம். அந்த நகரின் குறிப்பிடத்தகுந்த செல்வந்தர்களில் இவனது குடும்பமும் ஒன்று. அதற்காக மில்லியன் கணக்கிலான சொத்துகளுக்கு உரியவனென நாம் நினைத்து விட முடியாது. மற்றவர்களைப் போல அல்லாமல், ஆண்டுதோறும் வருமான வரி கட்டக் கூடிய ஒருவன், அவ்வளவுதான். தன் ஊரின் ஏழ்மையைப் பற்றிய கவலை அவனுக்குத் தன் பிள்ளைப் பிராயத்திலிருந்தே உண்டு. அவனுடைய அப்பாவின் மீது சினம் கொள்வான். இன்று ஞாயிற்றுக்கிழமை. வழமை போல தன் நாயை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் பூங்காவை வந்தடைந்து விட்டான்.
அதே குளக்கரை. அதே இடம். அந்த அம்மையாரும் உட்கார்ந்திருக்கின்றார். இந்தக் காட்சியை மைக்கேல் ராபர்டோ பல மாதங்களாகக் கவனித்து வருகின்றான். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் அந்த மூதாட்டி இந்தக் குளக்கரையில் உட்கார்ந்து என்னவோ செய்து கொண்டிருக்கின்றார். இவனுக்கு வேட்கை தாளமுடியவில்லை. அந்த அம்மையாரை நோக்கி எட்டி நடையைப் போட்டான். நாய் ஏமியும் கூடவே ஆவலோடு நடந்து வந்து கொண்டிருந்தது.
அருகே செல்லச் செல்ல, அந்த அம்மையாரின் அருகே ஒரு சிறு தொட்டியொன்று தோன்றியபடி இருந்தது. நீலவண்ணத்தில் இருந்தது. என்ன ஆச்சரியம்? அந்த அம்மாவின் மடியில் ஓர் ஆமையொன்று ஓட்டுக்குள்ளிருந்து தலையை நீட்டியபடி இங்குமங்கும் பார்த்தபடி பரவசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குளத்தில் இருந்து மேலும் இரண்டு ஆமைகள், ஒன்றன் பின் ஒன்றாக அந்தத் தொட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தன.
அம்மையார், மடியிலிருந்த ஆமையின் ஓட்டினை மென்மையாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
“அகோ, நான் மைக்கேல். நான் உங்களை ரொம்ப நாளாக இங்க பாக்குறன். நீங்க??”, இழுத்தான் மைக்கேல்.
“ஓ, வாங்க, வாங்க. நான் வின்னி பிச்பெர்க். மார்னிங் டிரைவ் பள்ளிக்கூடத்துல டீச்சரா இருக்கேன்”.
“மகிழ்ச்சி. ஆமா, நீங்க இங்க என்ன செய்திட்டு இருக்கீங்க?”, உடன் இருந்த ஏமியும் வின்னியை வாஞ்சையோடு நோக்கியது.
“ஓ, நானா? இந்தக் குளத்தில நிறைய ஆமைங்க இருக்குது. அதுகளோட ஓடு எல்லாம் மண்ணும், குப்பையும் அப்பி அதுகளுக்குத் தொந்தரவா இருக்கு. அதனால அதுகளுக்கு வெப்பம் தாங்க முடியாது. குப்பைகள்ல நுண்ணுயிரிகள் தங்கிடுச்சுன்னா புண்கள் ஆயிடும். ஓட்டின் எடை கூடுவதால, சுலுவா நடக்க முடியாமப் போய்டும்”, அனுதாபத்துடன் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் மூதாட்டி வின்னி.
“அதுக்கு?”, இடை மறித்தான் மைக்கேல்.
“அதான் நான் வாராவாரம் இங்க இந்தத் தொட்டியோட வருவேன். முதல்ல என்னால ஆமைகளைப் பிடிக்கவே முடியலை. அப்புறம் எப்படியோ ஒரு நாள் ஒன்னைப் பிடிச்சிக் கழுவி மறுக்காவும் குளத்திலயே விட்டேன். அதற்கு அடுத்த வாரம் அதுவாகவே என்னைக் கண்டதும் என்கிட்ட வந்திச்சி. அடுத்தடுத்த வாரங்கள்ல, அந்த ஒரு ஆமையப் பார்த்திட்டு மத்த மத்த ஆமைங்களும் வர ஆரமிச்சிருச்சி”
சிரித்தான் மைக்கேல். “இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு? இந்தக் குளத்துல எப்படியும் நூற்றுக் கணக்கான ஆமைகள் இருக்கும். நீங்க வேணுமின்னா ஒரு பத்து பதினைஞ்சு ஆமைகளுக்கு ஓடு கழுவி உடலாம். அப்ப மத்த ஆமைகளுக்கு? இந்த உலகத்தில எத்தனை குளங்கள், நீர்நிலைகளோ? எத்தனை எத்தனை மில்லியன், பில்லியன் ஆமைகளோ?? அதுகளுக்கெல்லாம் யார் கழுவி விடுவாங்க? அவங்க துன்பம் எல்லாம் தீர்ந்திடுமா??”, எள்ளலோடு வின்னியைப் பார்த்தான் மைக்கேல்.
ஒரு கைத் தண்ணியைத் தொட்டியில் இருந்து அள்ளி, மடிக்கு வந்து உட்கார்ந்து கொண்ட அடுத்த ஆமையின் ஓட்டின் மீது தெளித்துக் கொண்டே சொன்னார் அந்த மூதாட்டி, “மைக்கேல், எனக்கு எல்லா ஆமைகளுக்கும் கழுவி விட ஆசைதான். மத்தபடி ஆமைகளின் துன்பம் தீர்ந்துச்சா? தீருமா?? அதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை”.
எதிர்ப்புறத்தில் தலையை நீட்டிக் கொண்டிருந்த ஆமையைத் திருப்பி அதன் தலையைப் பார்த்துக் கொண்டே மறுபடியும் பேசலானாள் அந்த மூதாட்டி.
“இந்த ஆமைக்கு சுகமா இருக்கா இல்லையா? வாயிருந்தா சொல்லுவதானே நீ?!”, கொஞ்சியபடியே ஓட்டினைத் தேய்க்கத் துவங்கி விட்டாள். ஆழ்ந்த யோசனையுடன் ஏமியைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான் மைக்கேல்.
தன்னார்வப் பணிகள் என்பது ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரேயடியாக மேன்மையைக் கொண்டு வந்திராது. தம்மால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பு. அவ்வளவுதான். அது அடுத்தவருக்கான நன்மையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நமக்கான புத்துணர்வு, மேன்மை, படிப்பினை, அனுபவம் என்பதாகக் கூட இருக்கலாம்.
தன்னார்வப் பணிகளில் ஈடுபடும் போது, நமக்கு எட்டாத பல வாழ்வியற்ச் சூழல், தொழிற்துறை சார்ந்த பலரோடு பயணிக்கின்ற வாய்ப்புகள் அமையும். எதிர்மறை எண்ணங்கள், தாழ்வுமனப்பான்மை, நம்பிக்கையற்ற நிலை முதலானவற்றில் இருந்து விடுபடக் கூடிய பல திறப்புகள் ஒருவருக்குக் கிட்டும். தம்முடைய பங்களிப்பால் ஏற்படுகின்ற மேன்மையை ஒருவர் உணரும் போது, அவருடைய மனநலத்தோடு மெய்நலமும் மேம்படுமென்பது அறிவியலாளரின் கோட்பாடாக இருக்கின்றது. இவையெல்லாம் உலகளாவிய அளவில் ஏற்றுக் கொண்டிருப்பதுமாகும்.
இப்படியான அடிப்படையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான இலாபநோக்கற்ற அறம்சார் அமைப்புகளில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்குப் போதிய மேன்மை கிட்டுகின்றதா? சமூகமேன்மைக்காகச் செயலாற்றுகின்ற நிலையில், தன்னார்வத் தொண்டனின் அகநிலையிலும் மேன்மை இடம்பெற்றே ஆகவேண்டும். அப்படியில்லையெனில், அமைப்புகளில் முன்னெடுக்கப்படும் பணிகளின் போக்கில் அறமும் மேன்மையும் இல்லையென்று பொருட்கொள்ளலாமா?? எது எப்படியாகினும், மாந்தனின் பயணம் தன்னார்வத் தொண்டுகளால் சிறக்குமென்பதே திண்ணம்.
-பழமைபேசி.
நன்றி: The common sense.