11/26/2016

சிலுவையேற்றம்

இன்றைய விடியலுக்குப் பின், வானம் மட்டுமல்ல, சாராவும் ஒரேயடியாக மாறிப் போய்விட்டிருக்கிறாள். இராத்திரி முழுவதும் வளைத்து வளைத்து வீசிய புளூரிட்ஜ்மலைக் காற்று அவளது பழுப்பு இலைகளை பறித்துக் கொண்டு போயிருந்தது.
வீட்டினின்று வெளிப்பட்டதும் நாலாபுறமும் பிரிந்து படபடத்த மயிர்க்கற்றைகளைத் தன் இருகைகளாலும் ஒன்று கூப்பி முடிந்து கொண்டே சாராவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்தாள் டானா.
சாராவும் டானாவுக்கும் பதினெட்டு ஆண்டுகால நட்பும் உறவும்!! சாரா டானாவைக் காட்டிலும் மூன்று வயது மூத்தவள். இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியவர் ஒருவரே. சாராவுக்கு வளர்ப்புத்தாயும் டானாவுக்கு பெற்ற தாயுமான பெத்சிதான்.
அல்பேமாலில் இருக்கும் நூற்பாலையொன்றில் வேலைபார்த்து வந்த பெத்சியும் எட்வர்டும், இந்த வீட்டுக்குக் குடியேறிய ஓரிரு மாதங்களில் நடப்பட்ட ஒயிட் டாக்வுட்களில் சாராவும் ஒருவள். சாராவுக்குத் தனது மூன்றாவது கூதிர்காலம் கடந்திருந்த போதுதான் டானா பிறந்தாள்.
அடுத்து வந்த கோடையின் மாலைநேரப் பொழுதொன்றில், தன் நிழலை அள்ளிப் பூசிக் கொள்ள வந்த டானாவின் மழலையில் சொக்கிப் போய்த் தன்னையே ஈந்து அவளோடு கலந்து கொண்டாள் சாரா.
காலம் காலண்டரில் சில பல மாதங்களை உதிர்த்திருந்த போது, டானா மெல்ல எழுந்து நடக்கத் துவங்கியிருந்தாள். அந்த காலகட்டத்தில்தான் ‘வா, என்னைத் தழுவிக்கோ’ என்பது போல தன்னிரு கைகளையும் இருபக்கக் கிளைகளாக விரித்துக் கொண்டாள் சாராவும். இலையுதிர்கால நிர்வாண கோலத்தில் பார்ப்பதற்கு சிலுவையைப் போன்றதொரு வடிவைச் சாரா கொள்வதற்கு வழிவகுத்தது அது.
குறும்புகள் கூடும் வேளையில், டானாவைச் சாராவின் இருகைகளுக்கும் தலைக்குமிடையே உயரத்தில் இருத்தி டைம் அவுட் கொடுக்கத் தலைப்பட்டான் எட்வர்டு. சாராவின்மீது இருப்புக் கொள்வதற்கென்றே போலியாய்க் குறும்புகள் செய்யவும் தலைப்பட்டாள் டானா. இதனைச் சாராவும் வெகுவாய் இரசித்தாள்.
துவக்கப்பள்ளி முடித்து, கிரேட் கிளிப்சு சிகைச்சிரைப்புக் கடையில் மயிர்  கூட்டிப்பெருக்கி வருவாய் ஈட்டி அம்மாவுக்கும்கூடக் குடிக்கக் கொடுத்து, அதேவூரில் இருக்கும் மூத்தோர் இல்லத்தில் தாதி வேலை பார்க்கும் நாட்களையும் கடந்து, முதன்முறையாக ஓட்டுப் போடும் நாள் கூட வந்து விட்டிருக்கிறது டானாவுக்கு.
சாராவுக்கு அருகில் வந்த டானா, சாராவின் அடியின் மீது சாய்ந்து உட்காரப் போன வேளையில்தான், உவ்வேக்… வந்து தொலைத்தால் நன்றாக இருக்கும்… வந்தபாடில்லை… கண்கள் இருட்டிக் கொண்டிருந்தது. பழக்க நிதானத்துடன் எழுந்து போய் அங்கிருந்த குழாயைத் திறக்க, வந்த தண்ணீரில் ஒரு மிடக்கு குடித்தாள். சாராவிடமிருந்த இரு அணிற்பிள்ளைகள் குதித்தோடி வந்து டானாவின் அருகில் வாஞ்சையாய் நின்றன. ”டானாப் புள்ளைக்கு என்ன ஆச்சுதோ? போய்ப் பாருங்கடே” எனும் வாக்கில் சாரா சிலிர்க்க, அவளிடமிருந்து பிரிந்த இலைகள் நான்கும் இணுக்குகள் மூன்றும் டானாவிடம் வந்து ஊக்கம் கூட்டி நின்றன. ஊக்கம் பெற்றவள் திரும்பி வந்து ஆரத்தழுவிச் சாய்ந்தபடி சாராவுக்குத் தன்னையே கொடுத்து நின்று கொண்டிருந்தாள்.
“ஏய், வெடிஞ்சதும் இங்க வந்திட்டியா? நானும் எட்வர்டும் ஓட்டுப் போடப் போறம். போய்ட்டு வர்றதுக்குள்ள நீயும் புறப்பட்டு தயாரா இரு. அவசியம் நீயும் ஓட்டுப் போடணும். அதான் உனக்கு இந்தவாட்டி ஓட்டிருக்கே?! இல்லன்னா, இறைவனோட பழிபாவங்களுக்கு ஆட்பட்டு நிர்மூலமாகிடுவே பாத்துக்க!!”, கறாராகச் சொல்லிக் காருக்குள் போய் ஏறிக் கொண்டாள் பெத்சி.
”யூ… ஃபக்கின் இடியட்… தற்குறி நாயே…” இரைந்து கத்திக் கொண்டே காரின் பின்னால் போனாள் டயானா. அருகே போனதும் ஓடி, பின் பறந்து போகும் தூக்குவால்க் குருவியைப் போலக் காணாமற் போயிருந்தது எட்வர்டின் கார்.
மீண்டும் போய் சாராவின் வேரடிக்குச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். இளங்குளிரைத் துரத்தியபடி சூரியப்பயல் வெளிச்சத்தை அள்ளி, இவள் மேல் பூசிக் கொண்டிருந்தான்.
சாராவின் அணுக்கமும் சூரியப்பயலின் வெளிச்சத் தகிப்பும்  சுகித்துக் கொடுக்க, மனமறுத்து வெறுமையாய்க் கிடந்தவளின் காதுகளில் பேச்சொலியை இட்டு நிரப்பி இம்சை செய்தாள் பார்பரா.
“ஏய்… வா போலாம்… அப்படியே நடந்து பேசிட்டே போய், நாமும் நம் ஓட்டைப் போட்டுட்டு வரலாம்”
”என்னடா? யார்க்கு ஓட்டுப் போடச் சொல்ற? நம்மையெல்லாம் அராவயசில…??”
கண்கள் மீண்டும் இருண்டு, தன்னையும் மீறி அடிவயிறு இறுகுவது போல இருந்தது. “உவ்வேக்…”
“ஆர் யு ஓகே? ஆர் யு ஓகே??”
தன் தலை கழன்று விழுவது போல உணர்ந்தாள். ஓய்வற்ற கடலலை போல மனம் பலவாறாகப் படபடத்தது. மனத்தின் பேரிரைச்சலை அடக்க பெரும்பாடுபட்டுப் போனாள் டானா. அதற்குள் பார்பராவும் ஓடோடி வந்து தாங்கிக் கொண்டாள்.
“ஒன்னுமில்ல… எதொ சரியில்ல”
“வா, உள்ள போயிடலாம்… நான் வெந்நீர் வெச்சித் தரட்டுமா?”, பரபரத்தாள் பார்பரா. பரபரத்த கையோடு டானாவை அவள் அறையில் கிடத்தியபின், மைக்ரோ ஓவனில் வெந்நீர் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அதற்குள் தன்னிலைக்கு மீண்டிருந்தாள் டானா.
“சரி, இப்ப வேண்டாம். நாம, மத்தியானத்துக்கு அப்புறம் ஓட்டுப் போடப் போகலாம். நீ கொஞ்சம் ஓய்வெடு” சொல்லிச் சென்றாள் பார்பரா.
கொள்கையில், இலட்சியத்தில், கோட்ப்பாட்டில், தொலைநோக்குப் பார்வையில், மாந்தநேயப் பார்வையில் நின்று மக்கள் எங்கே சிந்திக்கிறார்கள்? அரசியல் சக்திகளுக்கும் சமயசக்திகளுக்கும் அதிகாரசக்திகளுக்கும் வீண் போகும் இந்த மக்களுக்கு ஓட்டு ஒரு கேடா?? சிந்தனையினூடே மல்லாந்து படுத்தவாக்கில் சாளரத்தை நோக்கினாள் சாரா. சிலந்தியொன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. தன்னால் முடிந்த மட்டும் காறி அதன் மீது உமிழ்ந்தாள். அது பலவாறாக நாலாபுறமும் பிரிந்து சிறு சிறு பிசிறுகளாய் வலுவற்றுச் சிதறிப் போனது.
பாவம்! எல்லாமும் பாவம்!! மனிதப்பிறவியே பாவத்தால் விளைந்ததுதானே? பாவத்தின் பயன்தானே நாமெல்லாம்? விலக்கப்பட்ட பழத்தைத் தின்னாமல் இருந்திருந்தால், ஆதாம் ஏவாள் சந்ததியினர் ஏது?? அப்படியானால், பாபங்களை ஒழிக்கும் பிறப்பையல்லவா நாம் கொண்டிருக்க வேண்டும்?? இவர்கள் இப்படியானவற்றால்தானே எல்லாரையும் நெறியாண்டு கொண்டிருக்கிறார்கள்?? வேகமாக எண்ண அலைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தவளது மனம், திடுமென உறைந்து கற்சிலை போல நின்று விட்டிருந்தது.
பார்பரா சரியாக சமையலறைக் குழாயை மூடாமல் விட்டிருக்கக் கூடும். சரியான இடைவெளியில் ‘டக், டக், டக்’ ஓசை இடைவிடாது வந்து கொண்டிருந்தது. அணுவைப் பிளக்கும் போது வெளிப்படும் ஓசையையொத்த வெடிச்சத்தம் அது. டக், அதிர்வுகள்.. அறையெங்கும் பரவி தன் காதுகளுக்கும் பாய்கிறது. செவிப்பறையின் சவ்வு உட்பக்கமாக் குழிந்து ‘டக்’கென்று தன்னுள் அதை இறக்குகிறது. அது தன்மேனியெங்கும் தாக்குதலை நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி பூரணசம நிலைக்குத் திரும்பிவிட்டது என்பதை உணர்கிறாள் டானா. அவ்வளவுதான், மீண்டும் ‘டக்’!! என்னவொரு பெருஞ்சத்தம்!! அதற்கு மேலும் அவளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
எழுந்து போய் சொட்டும் அந்த குழாயை அடைத்து விட்டு தன் அறைக்குள் வருகிறாள். அந்த மூலையில் தூசிபடந்து கிடக்கும் ‘ஆல்வேஸ் அல்ட்ரா தின் ஜம்போ பேடுகள்” பொட்டலத்தைப் பார்த்ததும் எட்டி ஒரு உதை விடுகிறாள். விசுக்… கட்டிலுக்கடியில் போய் ஒளிந்து கொண்டது அது.
வெளியில் தணிந்திருந்த காற்றின் வேகம் கூடியிருந்தது. கிரமத்தின் நியதிதான் உருமாற்றமும் கொண்டகோலமறுத்தலும்! நிர்வாணம் தூய்மானம்!! இலைகளுக்கு பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். மரங்களுக்கும் செடிகொடிகளுக்கும் வாக்குரிமை இருக்கிறதாயென்ன கவலைப்பட?? கவலையின்றித் தன்பாட்டில் நிர்வாணம் தரித்துக் கொண்டிருக்கிறாள் சாரா.
அமெரிக்காவின் தென்பகுதி முழுமைக்கும் கரியநிற மண்காணிகள். முப்போகமும் பருத்தி விளையும் சமச்சீர் நிலங்கள். பட்டிதொட்டியெங்கும் நூற்பாலைகள். நூற்பாலைகளுக்குப் போட்டியாய் சமயமண்டபங்கள்.
மேம்பட்டவர் மேலாண் வேலை பார்க்கின்றனர். கீழ்ப்பட்டவர் உழைக்கின்றனர். மாந்தர்கள், விலங்குகளுக்குள் இருந்த இந்தப் போக்கு, எல்லைக்கோடுகள் வகுப்பட தனக்கும் இருக்கிறது பார் வடிவு எனச்சொல்லிக் கொள்ளும் நாடுகளையும் பீடித்துக் கொண்டது. இயற்கை வளம் சூழற்பொலிவினைக் குலைக்கும் வேலைகள் கீழான நாடுகளுக்குச் செல்ல, அல்பேமால் நூற்பாலைகளுக்குள் மனிதசஞ்சாரமற்ற இருட்டுப்பள்ளங்களும், கொலைவெறி பிடித்த பிட்புல்லுகளும் ரேட்டில்சிநேக்குகளும் வாசம்கொண்டு வாழ்ந்துகெட்ட குடும்பங்கள் சாட்சியாக சிதிலங்களும் புகுந்து கொண்டன. சிந்தனைக்காட்பட்டவர் நகரங்களை நோக்கிப் போய்விட்டிருக்கின்றனர். எஞ்சியவர்கள் சமயக்கூடங்களின் அருளாசியைப் புசித்துக் கொண்டே கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.
படிப்பது நல்லதுதான். முடிந்தால் படிக்கலாம். வேலை கிடைத்தால் வேலைக்குப் போகலாம். இது நமது பூமி. நாம் வாழ, கிடைத்ததைச் செய்து கொள்ளலாம். நமக்கு நமது நம்பிக்கை முக்கியம். பெரியவர்கள் நமக்கு நல்லதே சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறினால், பாவத்தால் விளைந்த நமக்குப் பாவங்களே வந்து சேரும்.
ஊரகப்பகுதியில் இருபத்து மூனுசதம் பேருக்கு எந்தவொரு வரிவடிவத்தாலான எழுத்தையும் இனங்காணத் தெரியாது. நாற்பத்து ஐந்துசதம் பேருக்கு துவக்கப்பள்ளிக்கான கல்வியறிவுதான். அதனாலென்ன? சமய நம்பிக்கையின்பாற்பட்டு நேர்மையாக வாழ்பவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு பிரியமாக இருந்து வருகிறார்கள். தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு எதற்கும் வளைந்து கொடுக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அதற்குத்தானே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்!!
”யேய்… பார்பரா, எப்ப வந்த நீ? நான் கவனிக்கவேயில்ல!!”
“நான் இப்பதான் வந்தேன். எங்க, உன்னோட பேரண்ட்சு?”
“ஓ, ஓட்டுப் போடப் போன அதுக அங்கெங்காவது குடிச்சிட்டுக் கிடக்கும்ங்க?”
“உனக்கு இப்ப எப்டியிருக்கு? காலையில அவ்ளோ சுகமில்லாம இருந்தியே??”
மின்னல்க்கீற்றுப் போல வந்துபோனது வாட்டம். சரிக்கட்டிக் கொண்டே சொல்கிறாள், “காலையில எதோ செரியில்ல… இப்ப சாப்ட்டதும் செரியாப் போச்சுடா பார்பரா!!”
“சரி, கிளம்பு… வுட்புரூக்கு போயி ஓட்டு போட்டுட்டு அப்படியே பர்கர்கிங்ல சாப்டுட்டு வர்லாம்… நாலு மைல் நடந்து வருவியல்ல??”
“நடந்து வர்லாம்… ஆனா என்கிட்ட காசில்லியே?”, குமைந்தாள் டானா.
“இட்ஸ் ஓகே… காசு கிடைச்சதும் திருப்பிக் கொடுத்திடப் போறே? என்கிட்ட இருக்கு, வா போகலாம்”, துரிதப்படுத்தினாள் பார்பரா.
“நான் வரணுமா? வந்தா நான் அம்மையாருக்குத்தான் ஓட்டுப் போடுவன். இருக்கிற பாவக்கணக்குல இன்னும் ஒன்னும் கூடுமே?”
“கமான்.. போடாட்டிதான் சபிக்கப்படுவோம்… நிர்மூலத்திலிருந்து விடுதலை கிடைக்காது… அதுதான் ஃபேக்ட்”
பணிந்து போகும் டானா மிரட்சியுடன் பார்பராவைப் பார்க்கிறாள். ‘நீயுமா அப்டி நினைக்கிறே? ஞாயித்துக்கெழம அவங்க பேசினதைக் கேட்டாய்தானே?? இலட்சக்கணக்கான கொலைகள் செய்தவள்ங்றாங்க. பாவத்தைச் சுமக்கும் வேசிங்றாங்க.. இந்த முப்பது ஆண்டு காலமும் கருவில் வைத்து அழித்தொழிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்ப்பறிப்புக்கு அவங்களும் காரணம்ங்றாங்க… இதையெல்லாம் மீறி நான் அவங்களுக்கு ஓட்டுப் போட்டது தெரிஞ்சா நிம்மதியாவே இருக்க முடியாதுடா பார்பரா… ப்ளீஸ், புரிஞ்சுக்கோயேன்”
“ஏய்… என்னாதிது? நீ ரொம்ப சீரியசாவெல்லாம் யோசிக்கிற?? மண்ணின் தவப்புதல்வர்கள்தான்… இல்லைன்னு சொல்லலை. அதெப்படி? நாம மட்டும்தான் பாவத்துக்கு நேர்ந்து விடப்பட்டவங்களா?? நாற்ப்பத்தி ஐந்து வயதுக்குட்பட்ட நம்மைச் சார்ந்த பெண்களோட சாவுரேட் மட்டும் நாற்பது நாற்பத்தஞ்சு பெர்சன்ட்டுக்கும் மேல ஏறியிருக்குங்றாங்க. அதே நேரத்துல கறுப்பு ஆட்களோட, இசுபானீஸ் ஆட்களோட சாவு பாதிக்குப் பாதியா குறைஞ்சிருக்காமே?? உங்க வீட்டுக்கு வந்த ஜென்சிதானே சொன்னாள். நாம அப்படியென்ன பாவத்தைச் சுமக்கிறோம்??”
முன்வாசலைப் பாவிக்கும் பழக்கத்தை என்றோ கைவிட்டாயிற்று. எப்போதும் பின்வாசலைத்தான் பாவிக்கிறாள். வெளியே வந்ததும் நோக்கினாள். முற்றும் துறந்து அம்மணமாய் நின்று கொண்டிருக்கிறாள் சாரா. ஆனால் அவளின் மொட்டைத்தலையில் சில செம்பங்கிப் பூக்கள், கார்டினல் குருவிகளின் ரூபத்தில் பூத்திருந்தன. அப்பூக்கள் சாராவின் தலையில் இடம் மாறி இடம் மாறி அமர்கின்றன. அம்மணாண்டி தலையில கலர் கலராப் பூக்களாவென உள்ளூரச் சாராவைப் பார்த்துச் சிரிக்கிறாள் டானா.
“யே… லுக் அட் தி கார்டினல்சு… அதுகளுக்கெல்லாம் பாவக்கணக்குகள் இல்லையோ என்னவோ? தெ ஆர் எஞ்சாயிங் யு சீ!!” பார்பரா முறுவல் பூண்டாள்.
வாஞ்சையுடன் கைகோத்து நடப்பது அல்பேமாலில் இவர்கள் மட்டுமாகத்தானிருக்கும். கணவன் மனைவியரிடையேகூட அப்படி நடக்கும் பழக்கம் அங்கு எவரிடமும் இருந்திருக்கவில்லை. நடைபாதையின் இருமருங்கிலுமிருந்த மரங்கள் நகரும் மரங்களாயிருந்தன இந்த நான்கு கண்களுக்குள். அந்த மொட்டை வெயிலிலும் ஆங்காங்கே அடைக்கோழியைப் போல அடைந்து கிடந்தது இருட்டு. என்ன ஆச்சர்யம்?! அந்த இருட்டும் கூட பின்னோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருந்தது அக்கண்களில்.
”ஊரகத்திலிருக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி பெருகும் போது அவர்களது நடமாட்டம் பெருகும். ஆனால், பாவத்தின் நடுகற்களாக விதைக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள். ஏனென்றால், ஒரு ஆண் தவறிழைக்க நேரிடும் போது அதற்கான காரணியாக ஒரு பெண்ணே இருக்கிறாள். அவனின் முன்னால் அந்த நேரத்தில் ஏன் அவள் தென்பட வேண்டும்? ஒரு பெண்ணுக்கு அதிகாரம் கிடைக்கிற போது அது எல்லாப் பாபங்களுக்குமான விதைகளைத் தூவிக் கொண்டே போகிறது”, பிரசங்கம் கேட்டுத் திடமாகிப் போனவனொருவன் அவர்களைக் கடந்து போகும் போது கொடுத்த ஒலிப்பான் சத்தம், இவர்களின் காதுகளைத் தீண்டவேயில்லை. மாறாக, அந்த நான்கு கண்களில் நகர்ந்து கொண்டிருக்கும் மரங்களிலிருந்த டிப்பர்க்குருவிகளும் கிங்பேர்டுகளும் உயரே எழும்பிப் பின்னர் தாழப்பறந்து மரங்களுக்குள் மீண்டும் புதைந்து கொண்டன.
தனக்கான பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்வதில்தான் ஏற்றத்தாழ்வேவொழிய, மற்றபடிக்கு எல்லாவற்றிலும் தாராளம்தான். இவர்களும் சுருட்டுப் பிடிக்கலாம். இவர்களும் தண்ணியடிக்கலாம். எல்லாரும் தழையை நசுக்கி உறிஞ்சலாம். அடித்துப் பிடித்துச் சமைத்துப் பரிமாறியதில் மிஞ்சியதைத் தாராளமாய் உண்ணலாம். அன்றாடம் உறங்கப் போகுமுன் அவ்வப்போதைய பாவங்களை இறைவனிடம் ஒப்புவிக்கப்படுகிறது. அவரும் அவற்றை நீக்கி தூய்மைப்படுத்தி விடுகிறார். தூய்மைப்படுத்தவியலா நேரங்களில், வாஞ்சையோடு முகம் நோக்கிக் கொடுக்கப்படுகிறது. இன்முகத்தோடு அவையாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
பொதுப்புத்தி விதைக்கப்பட்டிருக்கிறது பருத்திக் காணிகளில்!! அவை காற்றில் கலந்து நாசிகளில் உட்புகுந்து நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கான உயிர்ஜீவிதம் அவ்வப்போது ஞாயிற்றுக் கிழமைகளில் நாலுகால பூசை நடத்தி திருவமுதாய் அனைவருக்கும் வந்து சேரும்.
“நமக்காக நம் தந்தை இறைவனிடம் வேண்டுகிறார். இறைவனின் கட்டளைக்கொப்ப செயற்படுகிறார். நமக்காகவே வாழ்கிறார்! நமக்கு நல்லதே செய்கிறார்!!”, அந்தக் கணத்தில் அக்கானகத்துக் கிழவியொருத்தி தன் மகளைப் பார்த்துச் சொல்லிக் கண்களால் சொரிகிறாள். மகளோ, தன் தாயின் கண்களைத் துடைத்து விடுகிறாள்.
இதெல்லாம் ஒரு சடங்கு. எல்லாம் இந்த பார்பரா செய்த வேலை. பொழுதெல்லாம் சுமந்து முதுகெல்லாம் ஒடிந்து கால்கள் பின்னிக் கொண்டன. திரும்பி வந்தவள், தன் உயிர், உடைமை, ஊன், காமம், காதல் எல்லாவற்றையும் கண்களிலே தேக்கி வைத்துக் கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த எதிர் வீட்டுப் பையனையும் பார்க்கவில்லை; சாராவையும் பார்க்கவில்லை.  தன் அறைக்குள் வந்து விழுந்தாள்.
எரிச்சலாக இருந்தது. தனக்கான அறை என்றால் எப்படி இருக்க வேண்டும்? அந்தரங்கம் பேணுவதாய், தனிமை போற்றுவதாய், நலம் காப்பதாய், குதூகலம் கொடுப்பதாய், மகிழ்வில் திளைப்பதாய், பட்டுக்கூடு போலல்லவா இருக்க வேண்டும்?? மாறாக இந்த அறை தன்னைக் காவுகொண்டு விட்டதாய் நினைத்து துக்கித்துப் போகிறாள் டானா. அடி வயிறு என்னவோ செய்தது. சோர்ந்து மயங்கிப் போனாள்.
இருள் வீட்டுக்குள்ளே, தன் அறைக்குள்ளே எந்தவொரு அனுமதியுமின்றி வந்து ஆக்கிரமித்திருந்தது. குளத்தில் கூடியிருக்கும் கனடியகீசுகளும் நாரைகளும் ஒரேநேரத்தில், அப்படியானதொரு கரைபிடித்த கடுங்குரலில் கத்துவது போன்ற இரைச்சல், டிவியும் வீட்டு ஆட்களுமாக!! இவளால் எழ முடியவில்லை. எக்காளம் எனும் இசைக்கருவியை ஊதும் போது உப்பளத்து நரிகள் கூட அடங்கிப் போகுமாம். அந்த அளவுக்கு அதன் வீச்சு இருக்கும். இந்தக் காட்டுக் கூச்சலில் அந்த எக்காளம் கூடத் தோற்றுவிடும் போல இருந்தது.
“பிட்ச் இஸ் கான்… பிட்ச் இஸ் கான்!!”, கத்தினான் எட்வர்டு. பியர்பாட்டிலை எட்வர்டு கையிற்திணித்துச் சியர்சு சொன்னபடியே சொல்லிக் கொண்டாள் பெத்சி, ““கோடானு கோடிக் குழந்தைகளைக் கொன்ற வேசிமகள் ஒழிந்தாள் இன்றோடு! கடவுள் எழுத்தருளி விட்டார், கடவுள் எழுந்தருளி விட்டார்!!”
இடப்பக்கமாய் ஒருக்களித்திருந்தவளின் வலக்கை படுத்திருந்தவாக்கிலேயே துழாவியது. கிடைத்த செல்போனைக் கண்கள் பார்த்திருக்கவில்லை. ஆனால் எண்களைக் கட்டைவிரல் தட்டி எழுப்பியது.
“என்ன பார்பரா, என்ன நடக்குது?!”
பதிலைச் சரிவரக் கூடக் கேட்கவில்லை. செல்ஃபோனை படுக்கையின் எதொவொரு மூலையில் விட்டெறிந்தாள். அது மீண்டும் சிணுங்கியது. எதன் மீதும் நாட்டமற்றுப் போய் வெறுமையாய்க் கிடந்தாள். ஓரிரு நிமிடங்கள்தான். வெளியே வந்தாள்.
சாரா மூலியாய் நின்று கொண்டிருந்தாள். அருகே சென்று கட்டிப்பிடித்துக் கொண்டாள். எதிர்த்து வீட்டு நாய் ஜேசனின் கைக்கயிறு அங்கே கிடந்தது. அதையெடுத்து சாராவின் அந்த விரிந்த கைகளுக்கும் மேலாக உயரே செல்லும் கழுத்துத் தண்டுவடத்தின் மீது வீசினாள். ஸ்ஸ்க்… இலாகவமாய் கழுத்தின் வலப்பக்கம் சென்று இடப்பக்கமாய் கயிறின் முனை கைக்கு வந்து சேர்ந்தது. சாராவைப் பார்த்தாள் டானா. ?மூலி, மூலி… அம்மணமா நிக்கிற மூலி… உனக்கு ஒரு டாலர் வெச்ச செயின் போடுறன் பாரு!!” சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்தாள். அந்த ஒரு கோடி நட்சத்திரங்களும் ஓடி ஒளிந்து கொண்டன. வெறுமையாய் இருந்தது.
சரி, தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் டானா.
சாராவின் கால்முட்டிகளையொத்த திமில் போன்ற திட்டுகளின் மீது காலை வைத்து, கழுத்துமாலையாகத் தான் அணிவித்த கயிற்றைப் பிடித்தபடிக்கு மேலே போனாள். சாராவை கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டாள். அம்மாவையும் தாயாக்கி, தன்னையும் தாயாக்கியவன் குரல் ஓங்கி ஒலித்தது, “லாக் தி பிட்ச்! லாக் ஹெர் அப்!! லாக் ஹெர் அப்!!”. அப்பெருவோசையில் இச்சிறுவோசையான “கிறுக்” கரைந்து போனது.
சற்றுநேரத்திற்கெல்லாம் பெருமிதத்தோடு வெற்றியாளர் டிவியில் தோன்றிப் பேசியதுதான்மாயம், தெருக்கோடியிலிருந்து கிளம்பிய வானவெடியொன்று ககனமேறிக் கனவெடியாய் வெடித்ததில் எதிர்வீட்டுநாய் ஜேசன் குரைத்தலறினான். எட்வர்டு குதூகலக் கூப்பாடு போட்டான், “சாத்தான் ஒழிந்தது. லாக் தி குருகேட் பிட்ச்!! லாக் ஹெர் அப்!!!” பெருமரத்து ஆந்தைகளும் அலறின. அந்த நேரத்தில்தான், ஓருடல் ஈருயிரைத் தாங்கமாட்டாது தொத்தெனப் பிண்டங்களைப் பூமியில் கிடத்திக் கொண்டிருந்தது சாராவின் முறிந்த சிலுவைக்கழுத்து!!