12/21/2022

மனத்தடை

எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!

எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வரவில்லை. செல்லக் கூடாதென்பதும் இல்லை. அமையவில்லை, அவ்வளவுதான். உலகில் நடக்கின்ற, இடம் பெறுகின்ற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்தே ஆக வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் காரணங்களைத் தேடுகின்றோம். கிடைக்காத பொழுதில் நாமாக ஒன்றைக் கட்டமைத்துக் கொள்கின்றோம். இதுதான் நம்மில் பலருக்குமான நிம்மதிக் கேட்டுக்கும் வழிவகுக்கின்றது. இவர் என்னிலிருந்து தோட்டத்தைக் காண்பிக்கத் தயங்குகின்றாரென நானே ஒரு காரணத்தைச் சூட்டிக் கொண்டு வெம்பிப் புழுங்கிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அதற்கு ஒருபொருளுமில்லை. இம்முறை அந்தப் பக்கமாக அன்னையர் தொழுதல் மிகப் போற்றுதலாக அதன் போக்கில் இடம் பெற்றது. அப்படித்தான் எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களின் தோட்டம் சென்று வந்தோம்.

நிறையத் தகப்பன்கள் வளர்ந்து ஆளாகிய மகளைக் குழந்தைகளாகவே எண்ணி சோறூட்டுவது முதற்கொண்டு செய்வதைச் சிலாகித்து வலைதளங்களில் மனமுருகுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதே தகப்பன்கள்தாம் அன்னையர்களையும் குழந்தைகளாகவே பார்க்கின்றனர் என்பதும்.

அம்மாவுக்கு ஏட்டுக்கல்வி என்பது அறவே கிடையாது. ஆனாலும் கூட, நிர்வாகம், நிதிமேலாண்மை(ஃபைனான்சிங்), இடர் மேலாண்மை(crisis management) இப்படிப் பல துறைகளிலும் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வீட்டில் வசதி இருந்திராது. விருந்திநர்கள் வந்து விடுவர். புறக்கொல்லை, இட்டேரி, ஊர்நத்தம் என எங்கிருந்தாவது ஏதாவது  காய் கனி தாவரம் பண்டங்களைக் கொணர்ந்து ஒரு நிறைவான விருந்தோம்பலை அரங்கேற்றி விடுவர். இதற்கெல்லாம் என்ன அடிப்படை? மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. வந்திருப்போரைக் கவனித்து அனுப்ப வேண்டுமென்கின்ற ஆவல் பிறந்து விடுகின்ற போது அது ஈடேறி விடுகின்றது. அண்ணன் காசி ஆறுமுகம் அவர்களின் தாயார் அவர்களது செய்கைகள் இப்படியானதாக இருக்கின்றதைப் பார்க்கின்றோம். இப்படி நிறையப் பேர் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தோட்டத்தை விட்டுக் கிளம்பி வருகின்றபோது பேசலானார் மாப்பு. ஆங்கில வரி வடிவங்களின் அடையாளம் கூடத் தெரியாது. ஆனாலும் காணொலிக் கூட்டங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு குறித்த நேரத்தில் அவற்றில் கலந்து கொள்வது, பேசுபொருளின்பாற்பட்டுக் கற்றுக் கொள்வது, யுடியூப்களில் எது சரியான செய்திகள், போலிகள் என்பனவற்றைப் பகுத்துணர்ந்து கொள்வது முதலானவற்றைக் குறிப்பிட்டு, ஒரு குழந்தையின் அசைவுகளைப் பார்த்துப் பார்த்து இலயித்து இன்புறும் தகப்பனைப் போலே பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கும் அடிப்படை இதுதாம், மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. துள்ளுமனம் வாய்த்து விடுகின்றது அவர்களுக்கு. அதுவே நோயெதிர்ப்பு ஆற்றலுக்கும் வழிவகுத்து மூப்பெய்துதலின் வேகத்தையும் குறைத்து விடுகின்றது.

காசி, அயோத்தி இன்னபல இடங்கள் குறித்த வடநாடு என்பதான பயணம், சென்று வர வேண்டுமென அனுமதி கோரினார். எண்பத்து இரண்டு வயது மூதாட்டி முடங்கிக் கிடக்காமல் உலகைச் சுற்ற வேண்டுமென நினைப்பதே மனத்தடை இல்லாமைக்கான வேர்தான். அந்த வேரில் வெந்நீரைப் பாய்ச்சுவதற்கு நான் யார்? அடுத்தவர்களின் ஊக்குவிப்பு என்பதான புறத்தாக்கமாக அல்லாமல், போய்வர வேண்டுமென்கின்ற திண்ணிய மனம் உங்களிடத்தே இருக்குமானால் சென்று வாருங்களெனச் சொன்னேன்.

வானூர்திப் பயணத்திலே தள்ளுவண்டி(வீல்சேர்)க்குப் பணித்திருக்கின்றார்கள். கண்டு மனம் பதைப்புக்கு ஆட்பட்டிருக்கின்றது. என்னால் மற்றவர்களைப் போல இயல்பாய் நடக்க, ஏற முடியும், மறுத்து விட்டிருக்கின்றார். இவரின் ஊக்கம், தொய்வின்மையைக் கண்டு மற்றவர்கள் சோம்பலுக்கு ஆட்படாமல் ஊக்கம் கொண்டிருந்திருக்கின்றனர். அன்றாடமும் காலையில் வந்து இவரிடம் ஆசி பெற்றிருக்கின்றனர். வீடு திரும்பும் தருவாயில், மனநிறைவுடன், அடுத்தடுத்த பயணங்களுக்கும் தாங்கள் வர வேண்டுமெனக் கோரியிருக்கின்றனர். உவப்புடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பயணத்தில் தம்மை ஈடுபடச் செய்த மருமகள் குறித்தும் பாராட்டுதல்களைப் பணித்துக் கொண்டார். மழலைச் சொல் கேட்டுக் கொண்டிருப்பது போல இருந்தது.

குழந்தைகள் எல்லாருமே பிறவிக்கலைஞர்கள்தாம். வளர்ந்து ஆளாகி மூப்பெய்திப் பெரியவரானதும் அந்தக் கலைஞருக்குள் இருக்கும் கலைக்கு உயிரூட்டுவதில்தான் சிக்கல்! நீரை ஊற்றினால், எந்தச் செடியும் உயிர்ப்புடன் இருக்கும்தானே!!



No comments: