இப்படியானதொரு இடுகையை இடுவது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது. மன்னிக்கவும்!!
May 28 மாலை: சட்டநூகா நகரில் இருந்து சார்லட் நகருக்கு வந்தடைதல்
May 28 இரவு 9.30 மணி: சொந்த அலுவல் காரணமாக, நண்பர், சகபதிவர் ஆருரன் அவர்களுக்கான அழைப்பு
நீண்ட நாட்களாக அழைக்காமல் விடுபட்டுப் போனதற்கான விளக்கம்; சொந்த அலுவல் குறித்தான அளவளாவுதல்; இடையூடாக, பதிவுலகத்தில் ஏதோ சலசலப்பு என்று மட்டுமான தகவல்
May 29 சனி, காலை 7.30: நண்பர், சகபதிவருமான கதிர் அவர்களுடன் மடலாடல்
பூக்காரி எனும் இடுகையை வாசிக்கச் சொல்கிறார். வாசிக்கிறேன். மிகவும் எரிச்சலுற்றேன். பின்னூட்டங்கள் வாயிலாக, ஏதோ விபரீதம் என்பதை மட்டும் உணர முடிந்தது. தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டதை அடுத்து, அலைபேசியில் கதிருடன் அளவளாவல். முழு விபரமும் தெரிய வருகிறது. வருத்தம் தெரிவித்ததோடு, அமைதி காக்குமாறு முடிவும் செய்தோம்.
May 29 சனி காலை 8.10: நண்பர், உடன்பிறவாச் சகோதரர் புதுகை அப்துல்லாவுக்கு அழைப்பு
சொந்த அலுவல் குறித்தான அளவளாவல். அவர் கேட்ட அலுவலை முடித்துத் தருகிறேன் என உறுதி கூறல். உரையாடல் முடியும் தருவாயில், நர்சிம் அவர்களது மேலான அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்தல். சில வினாடிகள் நேரமே அது குறித்துப் பேசிக் கொண்டோம்.
May 29 சனி காலை 9-10 காலை: அனைத்து இடுகைகளையும் வாசித்து, அந்தச் சிறு குழந்தையை நினைத்து நினைத்து பெரும் வருத்தம். மீண்டும் கதிர் அவர்களுக்கு அழைப்பு. இரு சாராருமே காரணம், எனினும் கொச்சைத்தனமான இழிவான சொற்களை நினைத்து அவமானமுற்றோம்.
May 29 சனி, நண்பகல்: பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கள் இல்லத்திற்குப் பயணம்
நித்திரையில் இருந்து, எழுந்து வந்தவருடன் செய்திப் பரிமாற்றம். அண்ணன் அவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினார். பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றியே பேச்சு. குடும்பத்தினரும் கவலையில் பங்கு கொள்கிறார்கள். இடையூடாக, மீண்டும் கதிருக்கு அழைக்க, அவருடன் சீமாச்சு அளவளாவுகிறார். எங்கள் வீட்டுச் சகோதரிக்கு நேர்ந்த இடர் ஆகவே நினைத்துப் புலம்பினோம். வெளியே எங்கும் செல்ல மனம் வரவில்லை.
May 29 சனி இரவு: திரு. மாதவராஜ் இடுகை. மனம் மேலும் இறுகி, நித்திரை கொள்ளாத த்விப்பில். அடுத்த சில மணி நேரங்களில், நட்சத்திர இடுகை. பிற்படுத்தப்பட்ட பெண் என, மெதுவாக சாதி தலையெடுக்கிறது.
இதுகாறும், புலம்பெயர்ந்த மண்ணிலே இருந்து கொண்டு, சொந்தச் சகோதரியாய் நினைத்த நாங்கள் மனிதர்கள் அல்லவா?? சாதியைப் பார்த்துத்தான் கவலை கொண்டோமா??
கவலையினூடே, அவள் ஒரு தொடர்கதை எனும் பெண்ணின் பெருமையைப் பறை சாற்றும் படத்தைக் காண்கிறோம். முற்போக்கு சிந்தனையும், அதேவேளையில் கட்டுப்பாடு தவறாமையும் அப்படத்திலே வெளிப்படுகிறது. அதைச் சிலாகித்துக் கொண்டே, தமிழ்மணத்தைத் தட்டுங்கால், செந்தழல் இரவியின் இடுகை.
நேர்த்தியான, மனதிற்குப் பிடித்தபடியாக இருந்தமையால், வணக்கமும் பரிந்துரைக்கான ஒப்பமுக்கும் செலுத்தி அரைகுறை நித்திரை கொள்கிறேன்.
May 30 ஞாயிறு காலை: பதிவுலகம் எங்கும் இதேதான். வேலையற்றுப் போய், பக்கம் பக்கமாய்ச் சென்று பின்னூட்டுகள் படித்து, மனம் நொந்து, வெந்து போகிறோம்.
May 30 ஞாயிறு நண்பகல்: மனக்குழப்பத்தில் எது செய்தாலும் அது தவறாகவே முடியும். எனவே அமைதி காப்போம் என ஒருமனதோடு நண்பருகளுக்குமான ஒரு அறிவுறுத்தல். சீமாச்சு அண்ணாவின் இல்லத்திலேயே உறக்கம்.
May 30 ஞாயிறு, மாலை 7 மணி: பதிவர், சகோதரி முகுந்த் அம்மா அவர்கள், வேறொரு நண்பருக்கு அழைத்து, அவரிடம் இருந்து என் அலைபேசி எண்ணை வாங்கி, என்னை அழைக்கிறார்கள்.
என்ன சொல்வதென அறியாது, அலைபேசியை அருகில் இருந்த சீமாச்சு அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். கண்ணீர் விடாதது குறையாக அவர் புலம்ப, நாங்கள் இருவரும் சமாதானப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறோம்.
May 30 இரவு: என் வீட்டாருடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள, அவர்களோ திகைத்துப் போய், அச்சமுறுகிறார்கள்.
May 31 காலை 5 மணி: மீண்டும், தமிழ்மணம் வாசம்; இடுகைகள் வாசித்து, மனநோய் மேலிடுகிறது. என் சார்ந்த நண்பர்களுக்குச் சொல்வதன் மூலம், என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். இடுகைகள் இட்டு, மேலும் தீயில் எண்ணெய் வார்க்கவா? செந்தழல் இரவி அவர்களுக்கு மட்டும் நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன் மடலாடல் வழியாக. இரு நாட்களும் சரிவரத் தூக்கமின்மையால், நித்திரையில் ஆழ்ந்து போகிறேன்.
May 31 காலை 9 மணி: உள்ளூர் நண்பர்களிடம் உரையாடல். அனைவருமே, ஒருவிதமான இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார்கள். அதன்பொருட்டு, மீண்டும் மடல். பொறுமையாக இருப்போம் என. சுயலாபம் கருதி என்றும் வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அறிவுரை சொல்வதன் மூலம், நானும் அதைக் கடைபிடித்தாக வேண்டுமே??
May 31 காலை 10 மணி: வினவு குழுமத்தின் இடுகை. நொந்து போயிருந்த மனது, மேலும் கசங்கிக் கண்ணீர் வடித்தது. தோழர்களே, சாதி பார்த்துத்தானா, நாங்கள் இந்த மூன்று நாட்களும் மனக்கண்ணீர் வடித்தோம்?? இடுகை இடாத காரணத்தால், நாங்கள் கள்ள மெளனிகளா ஆனோம்?? என்னால், என் நண்பர்களும் அவச்சொல்லுக்கு ஆளானார்களே?? செந்தழல் இரவியாரே, இதற்குத்தானா உம்மை நாங்கள் வணங்கினோம்??
முன்பின் பார்த்திராத சகோதரிக்காய், சகோதரனுக்காய், பாரெங்கும், எத்துனை எத்துனை தமிழ் உறவுகள் சாதி பார்க்காது, துஞ்சாது அல்லல் உற்றனரோ??