10/24/2022

பொதுக்குழுத் தொடர்ச்சி

அண்மையில் நடந்த தமிழ்ச்சங்கத் தேர்தல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒன்று புரியும். பெரும்பாலான இடங்களில் 55 : 45 என்பதாக வாக்குகள் பிரிந்திருக்கும். என்ன காரணம்? ஒருவேளை ஒரு தரப்புக்கு 60+%க்கும் மேல் ஆதரவு இருக்குமேயானால் தேர்தலே வந்திருக்காது. இரு அணிகளும் கிட்டத்தட்ட வெற்றிக் கோட்டுக்கு அருகில் இருப்பதால்தான் தேர்தலே வருகின்றது.

வென்று பொறுப்புக்கு வரும் அணி இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். எல்லாத் துணைக்குழுக்களிலும் மாற்று அணிக்கும் வாய்ப்பளித்து ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்க வேண்டும். தலைவர்களுக்கு பரந்த மனம் இருந்தால்தான் இது சாத்தியம். ஆனால் நம்மவர்களுக்கு அது கொஞ்சம் பற்றாக்குறை. இஃகிஃகி.

பொறுப்பாளர்களின் தீண்டாமை, புறக்கணிப்பு, மேட்டிமைத்தனம் என்பது மாற்று அணியினரைக் கிளர்ச்சிக்குள் ஆழ்த்தி விடுகின்றது. என்ன கிடைக்கும் போட்டுச் சாத்தலாமென்பதும் நிலைபெற்று விடுகின்றது. ஒரு நல்ல தலைவர் என்ன செய்யலாம்?

கிளர்ச்சியாளர்களின் கொந்தளிப்பைத் தணிக்கும் முகமாக, அவர்கள் எழுப்பக் கூடிய பிரச்சினைகளை ஆய்ந்து, பேசி, பொதுத்தீர்வினைக் கண்டடைவதற்காக சாய்மனம் இல்லாதவர்களைக் கொண்ட குழுவை நியமித்து, அவர்களின் பொறுப்பில் விட்டு விடலாம். அவர்கள் முன்வைக்கின்ற தீர்வினை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டியதுதான். அதுதான் நல்ல தலைமைக்கு அழகு. ஆனால் இவர்கள், எவராயினும், they love only yes-manship. 

நாம் பெரும்பாலும் anti-establishmentதாம். ஏனென்றால் ஆதரவாக, நேர்மறை எண்ணங்களை மட்டுமே பேசுவதற்கு எத்தனை எத்தனையோ பேர். எதிர்க்குரல் எழுப்பச் சமூகத்தில் ஆட்கள் இராது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதுதான் நம் பணி என்பதாகக் கருதுகின்றோம். எடுத்துக்காட்டாக, 2016, 2018, 2020இலும் தமிழ் அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடந்தன. அதிகார வர்க்கத்தை விமர்சித்தே பங்காற்றினோம். எதிரணியாகக் களம் கண்டவர்கள் பாராட்டினர். சில பலர் வெற்றியும் கண்டனர். இன்று அவர்கள் அதிகார வர்க்கம். நம் இன்றைய பங்களிப்பானது அவர்களுக்குக் கசப்பானதாகத்தான் இருக்கும். இஃகிஃகி.

அமெரிக்காவில் இருக்கின்றோம். அமெரிக்க ஆட்சியமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கவனித்தாலே போதும். நம் அமைப்புகளும் வாழ்வும் செழிக்கத் துவங்கி விடும்.

No comments: