3/24/2011

2011: அதிமுக தோற்பதற்கான காரணங்கள்

என்னைப் போன்றவர்கள் எல்லாம், அதிமுகவைக் கேலி பேசுவார்கள். அதிமுக உள்ளூர்த் தலைவர்களைக் கிண்டல் செய்வார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பேச்சுகளை நையாண்டி செய்து, ஊர் முழுக்கப் பகடிப் பாட்டுகள் பாடுவார்கள்.

பரங்கிமலைத் தாத்தனுக்கு
ஒத்தடம் குடுக்கப் போன இரத்தினமே!
ஒதடு வீங்கி
நொம்பலத்துல வீங்குறயே இரத்தினமே!!
********************
********************

இப்படியெல்லாஞ் சொல்லிக் கூத்தடிப்போம். ஆனால், அதிமுகவின் மீதோ, அதன் தலைவர் மீதோ, ஒருபோதும் மனதில் வெறுப்பு, சினம், கோபம் என்பது வந்தது கிடையாது. மக்களொடு மக்களாக, நாங்களும் போய் புரட்சித் தலைவர் பேச்சைக் கேட்போம். அதே போலப் பேசி நையாண்டி செய்வோம். அதெல்லாம் ஒரு காலம்!

ஆனால் இன்றைக்கு? எப்படி M.G.R அவர்கள் தனக்கென ஒரு நிரந்தர ஓட்டு வங்கியை வைத்திருந்தாரோ, அதேபோல அதிமுகவுக்கு நிரந்தர எதிர்ப்பு வாக்குகளும் அமையப் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே, ஓட்டுகள் பலவிதமாகப் பிரிந்து தேமுதிக முதலான கட்சிகளுக்குப் போய்ச் சேரவும் செய்கிறது. அப்பின்னணியில், 2011 தேர்தலில் அதிமுக எதிர்ப்பு வாக்குகளைக் கொண்டு சேர்க்கும் காரணங்கள் கீழே வருமாறு:

10. ஒரு குறிப்பிட்ட சாதியினர்க்கு மட்டுமே ஆதரவான கட்சி அதிமுக.

9. கடந்த கால ஆட்சியில், சொல்லிக் கொள்ளும்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

8. திராவிடத்திற்கு ஒவ்வாதவர் அதிமுக பொதுச் செயலாளர் எனும் பிம்பம்.

7.பழிவாங்கும் போக்கினைச் செயல்படுத்தும் கட்சி அதிமுக எனும் கருத்து.

6. நல்லதொரு எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை எனும் ஆதங்கம்.

5. அதிமுக பொதுச் செயலாளர், சிறுபான்மையினருக்கு எதிரானவர் எனும் பிம்பம்.

4. கடந்த காலத்தில், அரசு ஊழியர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார் எனும் மனப்பான்மை.

3. தலைவர்களைச் சிறையில் அடைத்ததால், அதன்பொருட்டுப் புழுங்கும் பொதுமக்கள்; குறிப்பாக தமிழார்வலர்கள்.

2. அதிமுக பொதுச் செய்லாளர் ஆணவம் பிடித்தவர். தனிமனிதராக, அரவணைத்துச் செல்லும் போக்கு அற்றவர். எனவே அவர் முதல்வராக வரக்கூடாது எனும் பாங்கு.

1. கூட்டணிக் கட்சிகளை அலைக்கழித்துப் பேசியது; தேவையான இடங்களைக் கொடாமல் இறுதி வரையிலும் காத்திருப்பில் வைத்திருந்தமை.

திமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணிகளை எவ்வித விருப்பு வெறுப்புமின்றிப் பார்த்துவிட்டோம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, வாக்காளர்களில் கட்சி சார்புடையவர்கள் 35% பேர். கட்சி சார்பற்றவர்கள் 65% பேர் எனத் தோராயமாகக் கணக்கிட்டுள்ளோம்.

தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடியால், தேர்தல் வேலைகள் மிகவும் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சைக் கேட்க, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கூட்டமும் வரவில்லை. குறிப்பாக, நகர மக்கள் தத்தம் வேலைகளில் மூழ்கிப் போயிருப்பதைக் காண முடிகிறது. இது இப்படியே தொடருமானால், அதிமுக கூட்டணிக்கு மிகப் பெரும் சரிவாகவே முடியும்.

மேலும், திமுக ஆதரவு வாக்குகளுக்கும் அதிமுக ஆதரவு வாக்குகளுக்கும் பெரிதாக ஏற்றத்தாழ்வு இருக்காது. திமுக, அதிமுகவை விடச் சற்றுக் கூடுதலான வாக்குகளைப் பெறும். ஆனால், எதிர்ப்பு வாக்குகளில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது.

நடப்பு ஆட்சியின் மீது ஒரு அதிருப்தி கொண்டிருப்பது மனித இயல்பு. அவ்வகையில், திமுக எதிர்ப்பு வாக்குகள், அதிமுக எதிர்ப்பு வாக்குகளைவிட மிக அதிகம். இதைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், ஜெயலலிதாவின் முதல்நாள் பிரச்சாரம் அமையவில்லை. குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பதற்கே முன்னுரிமை கொடுத்துப் பேசுகிறார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளப் படம் பிடித்துக் காட்டத் தவறுகிறார். குறிப்பாக, உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவே இல்லை. இது திமுகவுக்கே சாதகமாய் இருக்கும்.

முடிவாக, திமுக எதிர்ப்பு வாக்குகள் என்ன ஆகும் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமைய இருக்கின்றன. கள நிலவரத்தை மீண்டுமொரு இடுகையில் இட்டுச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது,

கோவையிலிருந்து பழமைபேசி!

2011: அதிமுக வெல்வதற்கான காரணங்கள்

முந்தைய இடுகையில், கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பிரதிநிதித்துவம் மொத்த வாக்காளர்களில் 35% இருக்கும் எனக் கணக்கிட்டு இருந்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த அளவானது 50% இருக்கும் என நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. அது ஏற்புடையதாக இல்லை.

இது வரையிலும், திமுக வெல்வதற்கான காரணிகள், திமுக தோற்பதற்கான காரணிகள் முதலானவற்றைப் பார்த்தோம். எஞ்சி இருப்பது, அதிமுக வெல்வதற்கான காரணிகள் மற்றும் தோற்பதற்கான காரணிகள் மட்டுமே. இவற்றில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போவது திமுகவின் தோல்விக்கான காரணிகளே!!

அதிமுக வெல்ல வேண்டும் என வெகுவாக யாரும் வாக்களிக்கப் போவதில்லை என்பதே இன்றைய வாக்காளரின் மனநிலை. ஒரு கட்சியை, தலைவரை நேசித்து வாக்களித்தது என்பது புரட்சித் தலைவர் M.G.R அவர்கள் காலத்தில் மட்டுமே. இன்னும் எமக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. பெருவாரியான மக்கள், அவரைக் கொடை வள்ளல் என்றார்கள். கண்மூடிகளாக நேசித்தார்கள். அந்த நேசிப்பு, நிச்சயமாக ஜெயலலிதா அம்மையாருக்குக் கிடையாது.

இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையும் தாமதமான ஒன்றாகும். இவரைப் பொறுத்த வரையில், தம்மீதான நம்பகத்தன்மையைத் தாமே சீர்குலைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். எனவே, என்னதான் இலவசங்களை அள்ளி வீசினாலும், மக்கள் ஐயத்துடனே அதை நோக்குவர்.

எனினும், அவருக்கே உரிய பல சிறப்பம்சங்களும் உண்டு. அவை, எஞ்சிய அந்த 65% வாக்காளர்களிடமிருந்து கணிசமான ஆதரவு வாக்குகளைக் கொண்டு சேர்க்கும் என்றே நம்பலாம்.

10. ஒடுக்கப்பட்ட(?) சமூகத்திற்கு ஆதரவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

9. அண்டை மாகாணங்களுடன் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.

8. உலகவங்கிக் கடனைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

7. சமூகநலத்துறை வாயிலாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் தீட்டப்படும்.

6. தொலைக்காட்சி இணைப்பகத்தில் நாட்டுடமை அறிமுகப்படுத்தப்படும். தனியாரின் ஆதிக்கம் ஒழிக்கப்படும். திரைப்படத்துறையில் இருக்கும் ஆதிக்கம் ஒழிக்கப்படும்.

5. மின்சாரப்பற்றாக் குறைக்குத் தீர்வு காண்பதில் அதிமுக முனைப்பாக இருக்கும்.

4. கல்வித்துறையைச் சீர்படுத்தி செம்மைப்படுத்துவதில் அதிமுக சிறந்து விளங்கும்.

3. அதிமுக செயலாளர் மிகவும் கண்டிப்பானவர். அதிகாரிகளிடம் கண்டிப்பைக் காண்பித்து, நிர்வாகத்தைச் செம்மைப்படுத்துவார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.

2. திமுகவை விட, அதிமுக அதிக இலவசங்களை அளிக்கும் (மின்விசிறி, அரவைப்பொறி, கலவைப்பொறி, இலவசத் தொலைக்காட்சி இணைப்பு )

1. தேமுதிக மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடனான கூட்டணி, அதிக வாக்குகளைக் கொண்டு சேர்க்கும்.

குறிப்பு: திமுக ஆதரவு வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் அதிமுக ஆதரவு வாக்குகள் முதலானவற்றுக்கான காரணிகளை இதுவரையிலும் பார்த்திருக்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான பிரச்சாரத்தை முதன்மையாக அதிமுக மேற்கொள்ளுமா? அல்லது, தேர்தல் வாக்குறுதி மற்றும் கடந்தகால சாதனை(?)களை முன்னிறுத்தி ஆதரவு வாக்குகளைப் பெற முயற்சிக்குமா என்பதை அரசியல் ஆய்வாளர்கள் எதிர்நோக்கி உள்ளனர். அதற்கான விடை இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும்.

அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணிகளைப் பார்க்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது, கோவையிலிருந்து பழமைபேசி!

3/22/2011

2011: திமுக தோற்பதற்கான காரணங்கள்

ஒரு கட்சியினுடைய உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகளைப் பொறுத்த வரையில், அவர்களது நிலைப்பாடு என்பது எக்காரணத்திற்காகவும் மாறப் போவது இல்லை. வாக்களிக்கும் வாக்காளர்களில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து விழுக்காடு இவ்வகையினரைச் சார்ந்தவரே!

2011 பதினான்காவது சட்டமன்ற தேர்தலைப் பொறுத்த மட்டிலும், இந்த எஞ்சியுள்ள அறுபத்தி ஐந்து விழுக்காட்டினரை நாம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக திமுக ஆதரவு வாக்குகள், இரண்டாவதாக திமுக எதிர்ப்பு வாக்குகள், மூன்றாவதாக அதிமுக ஆதரவு வாக்குகள், மற்றும் நான்காவதாக அதிமுக எதிர்ப்பு வாக்குகள்.

திமுக ஆதரவு வாக்குகளுக்கான காரணங்களை, திமுக வெற்றி பெறுவதற்கான காரணங்கள் எனும் தலைப்பிட்ட இடுகையில் நாம் நேற்றுப் பார்த்தோம். இதோ, திமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணங்கள்:

10. உள்ளூர்ப் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு ஏற்படுத்திய மனநிறைவின்மை மற்றும் ஏமாற்றம். உதாரணம் - சாயப் பட்டறைகள் மூடியமை

09. இந்து மதத்தினரை மட்டும் அலட்சியப்படுத்துவது அல்லது கொச்சைப்படுத்துவது போன்ற செயல்கள்

08. தனது அபிமானக் கலைஞர்(நடிகர்கள், திரைப்படம் சார்ந்தவர்கள்) தோற்பதற்கு இவர்களே காரணம் மற்றும் அபிமானத்துக்குரியவருக்கு நாட்டமில்லாத கட்சி இது எனும் மனப்பான்மை

07. வேட்பாளர் மீதான அதிருப்தி. கடந்த முறை வந்து சென்ற இவர், இதுவரையிலும் தொகுதிக்கென்று ஒன்றுமே செய்யவில்லை.

06.தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.

05. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தவறிய இவர்கள் துரோகிகள்!

04.தொலைக்காட்சி, திரைப் படத்துறை, பத்திரிகை, மத்திய அரசு, மாநில அரசு, கல்விச்சாலைகள்  என சகலமானதையும் இவர்களே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

03.கல்விக் கட்டணம் பல மடங்கு ஏறிவிட்டது. கட்சியினரே கல்விச் சாலைகள் நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள்.

02.குடும்ப ஆட்சி. குடும்பத்தில் உள்ளவர்கள் கோலோச்சுகிறார்கள். கோடி, கோடிகளாய்ச் சம்பாதிக்கிறார்கள்.

01. மாற்றம் வேண்டும். இவர்களே தொடர்ந்து இருந்தால், கேள்வி கேட்பாரற்றுப் போய்விடும். வளர்ச்சி தடைபடும்.

குறிப்பு: திமுகவிற்கு, அதிமுகவின் ஆதரவு வாக்குகள் பற்றிய கவலை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த திமுக எதிர்ப்பு வாக்குகளை, ஆதரவு வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பதுதான் திமுகவினரின் இலக்காக இருக்கும்.  வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, தமிழகத்திலே எதிர்ப்பு வாக்குகளை ஆதரவு வாக்குகளாக்கிக் காட்டுவது மிகவும் கடினமான செயல். 

திமுகவின் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், பணபலம், ஆள்பலம் முதலானவை, எதிர்ப்பு வாக்குகளை ஆதரவு வாக்குகளாக்கிக் காட்டுமா?? அதிலேதான் திமுக/அதிமுகவின் வெற்றி, தோல்வி அடங்கி இருக்கிறது!! 

2011: திமுக வெல்வதற்கான காரணங்கள்!!!

10. நுகர்வோர் நேரிடையாகப் பாதிப்புக்குள்ளாகும் பிரச்சினைகள் வெகுவாக இல்லை. இசுபெக்ட்ரம்(Spectrum) என்று சொல்லப்படுகிற அலைக்கற்றை ஊழல் கவனிக்கத்தக்க ஒன்று என்றாலும், அதனால் நேரிடையான பாதிப்பு இல்லை. நேரடி பாதிப்பான, மின்வெட்டுப் பிரச்சினை என்பது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தாலும், மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள் என்பதே யதார்த்தம்.

9. அரசு அலுவலகங்கள், சொத்துப் பிரச்சினை, விபத்துக்கால அவசர உதவி முதலானவற்றுக்கு ஓடிவரும் திமுகவினரின் அன்னியோன்யம். கையூட்டு என்பது இடம் பெற்றாலும், காரியம் ஆகிறது எனும் மன ஆற்றுமை!

8. அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் முந்தைய காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாதன எதுவும் நடப்பு ஆட்சியில் இடம் பெறாமை.

7. துணை முதல்வரின் எளிமை மற்றும் அனைவரையும் அனுசரித்துப் போகும் தன்மை. மேலும் அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.

6. கட்டித்தரப்பட்ட ஏழைகளுக்கான உயர்தர வீடுகள்.

5. தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்குள் ஈர்த்துப் போற்றுவதால் ஏற்படும் நேரிடையான வேலைவாய்ப்புகள்.(மறைமுகமாக ஆட்சியாளர்கள் பெரும்பேறு பெறுகிறார்கள் என்பது விமர்சனத்திற்கான ஒன்று!)

4.தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம்

3. தேர்தல் வாக்குறுதிக்கொப்ப வழங்கப்பட்ட இலவசத் தொலைக்காட்சிகள்

2. கிலோ அரிசி, ரூபாய் ஒன்றுக்கு தொடர்ந்து வழங்கப்படுவது

1. களப்பணி, கட்டமைப்பு, கூட்டணியினரிடம் காணப்படும் இணக்கமான போக்கு

குறிப்பு: மக்களே, அதிமுக வெல்வதற்கான காரணங்களும் வரும். அதுக்குள்ள பொங்கிடாதிங்க... ஆனாலும், திமுகவே முந்திய நிலையில் இருக்கிறது என்பது பொதுப்புத்தியுடன் கூடிய யூகம்.

3/19/2011

மதிமுக பரபரப்பு முடிவு!

போதிய அளவு இடங்கள் கிடைக்காததால் மதிமுக பதினான்காவது சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது. மதிமுக கட்சியினர் அதிமுகவின் மேல் கடும் எதிர்ப்பிலேயே உள்ளனர்.

மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவதன் மூலம், போதிய வாக்குகளைப் பெற முடியாமல் கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்பதால், மதிமுக இம்முடிவினை எடுக்க நேரிட்டு இருக்கிறது. இந்த யோசனையைத் தெரிவித்த அரசியல் விற்பன்னர் பதிவர் குடுகுடுப்பையாருக்கு வைகோ நன்றி தெரிவித்து உள்ளார்.

ஆனால், தமிழ் இனமான உணர்வாளர்கள் நிலை என்ன? தமிழகத் தேர்தல் காட்சிகள், என்றுமில்லாத அளவுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்க உள்ளது. பிரச்சார பீரங்கிகள், பரப்புரையாளர்கள் புரட்சிப்புயல் வைகோ, நாஞ்சில் சம்பத், செந்தமிழன் சீமான் முதலானோர் முழங்காமல் இருப்பார்களா? சுயமரியாதையை இழந்து குறைவான இடங்களைப் பெறாதவர்கள், மேடையேறாமல் இருப்பதன் மூலம் அந்த சுயமரியாதையைத் தக்கவைத்துக் கொள்வார்களா?? அவர்கள் எடுக்கவிருக்கும் நிலையைத் தமிழகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்குகிறது. அவர்களுக்கு, அண்ணன் குடுகுடுப்பையாரின் ஆலோசனை என்னவாக இருக்கும்??

திமுக கதாநாயகியின் கவர்ச்சி

 • மாதம் 35 கிலோ அரிசி இலவசம்
 • குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாவு அரைபொறி (grinder) இலவசம்
 • ஒரு ரூபாய் அரிசித் திட்டம் தொடரும்
 • மாவு அரைபொறி விரும்பாதவர்க்கு, எந்திர அம்மி(Mixi) இலவசம்
 • கோவையில் மின்சாரத் தொடர்வண்டி இயங்கு திட்டம்
 • 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கட்டணம் இலவசம்
 • தகுதியுள்ளோருக்கு மடிக்கணினி இலவசம்  
 • கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற்க நுகர்வோர் சந்தை
 • வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை.
 • அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை
 • அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்
 • பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்
 • சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே அதிவேக ரயில
 • முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு
 • 2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.
 •  மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு இலட்ச ரூபாய் மானியம்

முடியலை சாமி...முடியலை.... திமுகவின் கதாநாயகி ஊர்கோலம் போகப் புறப்பட்டு விட்டாள். வெற்றிக்கனி அவளுடையதுதானா?? 

3/17/2011

வெல்வது திமுகவா? அதிமுகவா?? ஒரு நாடோடியின் பார்வையில்!

மார்ச் 17, அதிகாலை 3.15, கோயம்பத்தூர்.


முன்பெல்லாம் ஒரு ஊரை எடுத்துக் கொண்டால், இந்தந்த வீட்டார் இன்ன கட்சி, இந்த வீட்டாரைச் சேர்ந்தவர்கள் எக்கட்சியையும் சாராதவர் என எளிதில் தெரிந்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. யாரும், யாரையும் அவ்வளவு எளிதில் எடை போட முடியாதபடிக்கு, தத்தம் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பின் பாதிப்பு அதைவிடப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் கண்கூடு. இதுகாறும் எங்கள் ஊர் இருந்து வந்த தொகுதி, உடுமலைப் பேட்டை சட்டமன்றத் தொகுதியாகும். அது நிலப்பரப்பிற்கு ஏற்றபடியாகவும் இருந்தது. உடுமலைப் பேட்டையில் இருந்து ஏழு மைல் தொலைவில் இருக்கும் ஒரு ஊர், உடுமலைப் பேட்டைத் தொகுதியில் இருப்பதில் என்ன பிரச்சினை இருந்துவிட முடியும்?

ஆனால் இன்றைய நிலை? உடுமலையைக் கடந்து கிழக்கே வெகுதொலைவில் இருக்கும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது எனச் சொல்கிறார்கள். பெருவியப்பாக இருக்கிறது. மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உடப்பட்ட ஊர்கள் கீழே வருமாறு:

செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெரிய பாப்பனூத்து, சின்னப் பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு பூதநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி, அமராவதி, குதிரையார், குக்கல், மற்றும் கஞ்சம்பட்டி, கொமாரலிங்கம், தளி, கணியூர் மற்றும் கணக்கம்பாளையம்.

நகராட்சி எனபது இல்லாது, நூறு விழுக்காடு ஊராட்சிகளைக் கொண்ட ஒரு தொகுதியாகும். வேளாண்மை என்பதே பிரதானம். எம்.ஜி.ஆர் காலத்திலே, இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரட்டை இலை மட்டுமே. அதைக்கடந்து வந்தோமானால், மிட்டா மிராசுகள் அடங்கிய பேராயக் கட்சி. நிலச்சுவான்தார்கள் எல்லாம், காங்கிரசுப் பாரம்பரியத்தைப் போற்றி அதையொட்டி வாழ்ந்து வந்தார்கள். இவ்விரு கட்சிகளுக்குப் பின்னர்தான், திமுக என்பது வரும். உடுமலை நகராட்சியை விடுத்துப் பார்த்தால், இப்பகுதியில் திமுக வெல்வது என்பது குதிரைக் கொம்புதான்.

ஆனால் இன்றைய நிலை என்ன?? காட்சிகள் அடியோடு மாறிப் போய்விட்டன. எம்.ஜி.ஆரின் அடித்தட்டு வாக்குகள் அப்படியே பலவாறாகப் பங்கு போடப்பட்டு விட்டன. அவ்வாக்குகள், 50%, 30%, 20% என முறையே அதிமுக, திமுக, தேமுதிக என்ப் பிரிந்து விட்டன. எம்.ஜி.ஆரின் கட்சி நிர்வாகிகள் என்று எடுத்துக் கொண்டால், 50%, 40%, 10% என முறையே, அதிமுக, தேமுதிக, திமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியம் ஆகிக் கொண்டார்கள். அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்குள் பங்காளி மனப்பான்மை(கசப்புணர்வு) இருப்பதைக் காண முடிகிறது.

இச்சூழலில்தான், தமிழக சட்டமன்றத்தின் பதினான்காவது தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. மக்கள் சகலவசதிகளுடன் இருக்கிறார்கள். கட்ந்த ஐந்தாண்டு காலத்தில் எங்களுக்குக் கிடைத்தது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிறைவாக இருக்கிறது. ஆனால், அவர்கள் ஊழல்வாதிகள் என முணுமுணுக்கிறார்கள்.

ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி சேலைகள், தொலைக் காட்சிப் பெட்டி, மலிவு விலையில் இதரப் பொருட்கள் என்பனவற்றை சரளமாக நினைவு கூறுகிறார்கள். அதே வேளையில், வண்டி வண்டியாகக் கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசியையும் நினைவு கூறுகிறார்கள். அத்தோடு, அரசியல்வாதிகள் பெரும் பணக்காரர்களாக மாறிவருவதையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை இவர்கள்.

பொருளாதாரத்தில் சிறிது மேம்பட்டவர்கள், அரசியலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எல்லாருமே திருடர்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவர்கள்தான் உணர்ச்சிகளுக்கான இலக்கு என்பதை அரசியல்வாதிகளும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். சாதி, மதம், பிடித்த நடிகர் முதலானவற்றில் ஏதோவொன்றின்பால் இரையாவதற்கு, அவர்களும் தயாராக இருப்பதையே காண முடிகிறது. சாதியுணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தலைவிரித்தாடுகிறது.

பொருளாதாரத்தில் மேம்பட்ட தொழில் அதிபர்கள், நிலப்பண்ணையார்கள் முதலானவர்கள், எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுவது மின்பற்றாக் குறை, சாலை வசதிகள் ஆகிய இரண்டையும்தான். குறை கூறுவதை எல்லாம் குறிப்பிட்டுவிட்டு, அதிமுகவுக்கு திமுக எவ்வளவோ மேல் என்பதையும் சொல்கிறார்கள். காசைக் கொடுத்தாவது காரியம் சாதிக்க முடிகிறது. எந்த நேரத்திலும் இவர்களை அணுக முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மற்றபடி, ஈழப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், அண்டைய மாகாணங்களுடன் இருக்கிற நதிநீர்ப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி நிலை, நிதி நிலை முதலானவற்றை எல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கவோ அல்லது அதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியான சூழலில் யார் முந்துகிறார்கள் என்பதைக் கணிப்பது எவருக்கும் இயலாத காரியம். அப்படி யாராவது சொல்வார்களேயானால், அது ஒருபக்கச் சார்பாகவே இருக்கும் என்பது திண்ணம்.

அதிமுக கூட்டணியின் வெற்றி என்பது கூட்டணிக் கட்சியினரின் அரவணைப்பில் அடங்கி இருக்கிறது. திமுக கூட்டணியின் வெற்றி என்பது, அவர்களின் பிரச்சாரத்தில் அடங்கி இருக்கிறது. அரவணைப்பு முந்துமா அல்லது களப்பணி முந்துமா என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியத்தானே போகிறது?!

- பழமைபேசி.

3/16/2011

2011 தாயகப் பயணம் - 2

எம் தாயகப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்தாலும், கடைசித் தருணத்தில் ஒரு வாரம் முன்கூட்டியே வந்திறங்க வேண்டுமென உரிமை கலந்த வேண்டுகோள். எனது நெருங்கிய உறவினர் ஒருவரது இல்லத் திருமணம்.

இரு நாள் நிகழ்ச்சிகளாக மார்ச் 15 ம்தியம் துவங்கி, இன்று மார்ச் 16 மதியம் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெற்றன. என் வாழ்க்கையில் நான் மனதாற இரசித்த நிகழ்ச்சிகள். முழுக்க, முழுக்கத் தமிழில், ஆன்மிக உணர்வோடு, உள்ளன்போடு நடந்தேறிய நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையில்லை.

வெறுமனே ஒரு சடங்காகத் திருமணங்களுக்கு வந்து போவார்கள். இதற்கும் மக்கள் அப்படித்தான் வந்திருப்பார்கள். ஆனால், திருமணம் நடந்த பாங்கினைப் பார்த்து, நாத்திக அரசியல்வாதிகள் முதற்கொண்டு, உற்றார் உறவினர்கள் வரை அனைவராலும் அரங்கம் நிரம்பி வழிந்து, திருமண நிகழ்ச்சி இதற்குள் நிறைவுக்கு வந்துவிட்டதே என எண்ணியபடிப் பிரிந்து செல்வதைக் கண்டு கொண்டிருக்கிறேன்.

தூய தமிழில், மிக எளிமையாகச் சிறப்புறச் செய்த அந்தத் தமிழ் ஓதுவார்களுக்கு எம் பணிவார்ந்த நன்றிகள்! எம்மை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்த எம் உறவினர்க்கும் நன்றிகள்!!

--கோவை இராமகிருஷ்ண திருமண அரங்கில் இருந்து பழமைபேசி.

3/15/2011

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, தாக்குதல் நடக்கின்றன. என்ன காரணம்??

"ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இதே அபாயம் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ளது. பியூஜி தீவில் இருந்தும் இந்தியர்கள் விரட்டப்பட்டனர். இப்போது, அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, இந்தியர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்??"

பொதுவாக, மற்ற இடத்துக் கட்டுரைகளை நமது பக்கத்தில் வைத்து வியாபாரம் செய்வதில்லை. எனினும், இது மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவதால்... இதோ, அக்கட்டுரையின் தொடுப்பு இங்கே!!

3/13/2011

2011 தாயகப் பயணம் - 1

பெருநடை தாம்பெறினும் பெற்றிப் பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர் - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட
வற்றாம் ஒருநடை கீழ்!

அதிகாலை நான்கு மணி. கட்டார் நாட்டு நகரான தோகா நகரில் இருந்து வந்த விமானம் மெல்லத் தரையைத் தொட்டது. என்றுமில்லாதபடிக்குப் பயணியர் எவரும் தள்ளுமுள்ளுகளுக்கு ஆட்படவில்லை. தத்தம் முறை வந்தபோதும், அருகில் இருப்பவருக்கு முன்னுரிமை கொடுப்பதைப் பார்த்துச் சிலிர்த்தது மனம்.

புன்னகை தரித்து, மென்மனம் படைத்து, விமானநிலையக் கிரிகைகள் முடித்து வெளியேற முற்படுகையில், அருகில் வந்த விமான நிலையப் பணியாளர், “மணிவாசகம் நீங்கதான? நல்ல பெயருங்க... உங்க சரக்குப் பெட்டிகள் தாமதமாத்தான் வந்து சேரும். இந்தாங்க அதுக்காக நீங்க கொடுத்த விண்ணப்பத்தின் நிழற்படிவம்” எனக் கையளித்தார். ஊர் மண்ணை மிதித்ததும் உயிர்க்கும் கீழ்மை என்னை ஆட்கொண்டது. சட்டைப்பையைத் துழாவினேன். “என்ன தேடுறீங்க? நான் நல்ல ஊதியத்துக்கு வேலை பாக்குறவங்க. நீங்க நிம்மதியாப் போய்ட்டு வாங்க.. 48 மணி நேரத்துக்குள்ள உங்க பெட்டிக வீட்டுக்கே வந்து சேரும்!”.

என்னை நானே நொந்து கொண்டேன். இருப்பினும், அவரின் செயல்பாடு குறித்த பெருமிதத்தில் மிதந்தபடியே, உள்ளூர் விமான நிலையத்தில் நுழைந்தேன். ”கோயமுத்தூர் செல்லும் விமானம்,IT-2901, பயணிகள் பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனும் அறிவிப்பு, தெளிதமிழில் கொஞ்சு மொழியில் சிணுங்கியது. மனம் குதூகலித்தது.

நுழைந்த பதினைந்து மணித் துளிகளில் எல்லாம் உள்ளூர் விமானமான கிங் பிஃசர் IT-2901 ஊர்தியில் இரண்டாவது வரிசையில், தாய் மண்ணைத் தரிசிக்கும் பொருட்டு சாளர ஊடாடியோரம் அமர்ந்தேன். சென்னை வந்தடைந்ததும் வீட்டாருக்கு அழைத்துச் சொல்கிறேன் எனக் கூறியிருந்தமை மனதிற்குள் சலனமூட்டியது. அழைத்துச் சொல்வதற்கு வாய்ப்பேதும் அமையப் பெற்றிருக்கவில்லை.

நியூயார்க்கில், ச்செட் ஏர்வேசு விமானம் தொழில்நுட்பக் கோளாறுகளால் புறப்படவே இல்லை. மாற்று ஏற்பாடாக, கத்தார் ஏர்வேசில் தோகா அனுப்பி வைத்தார்கள். என்னுள்ளிட்ட 32 சென்னை நகரப் பயணிகளை எதிர்பாராமல் உள்வாங்கியதால், அவ்விமானம் தாமதமாகவே நியூயார்க் நகரைவிட்டுப் புறப்பட்டது. அதன் பொருட்டு, தோகா நகரில் சென்னை செல்லும் விமானமும் இரண்டு மணித்தியாலங்கள் தாமதம். இப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக, இடைவெளி ஏதுமில்லாத் தொடர்ச்சியால் வீட்டாரை அழைக்க இயலாமற்ப் போய்விட்டிருந்தது. கிடந்து தவிப்பார்களே என எண்ணிப் புழுங்கிக் கொண்டு இருக்கையில் எமது அடுத்த இருக்கையில் இளைஞ்ர் ஒருவர் அமரக் கண்டேன்.

“Excuse me sir! Could I ask for a help?"

"Sure... Sure.."

"May I borrow your cell phone for a minute?"

"Certainly"

நன்றிகூடச் சொல்லாமல் மனையாளின் அலைபேசி எண்களை அழுத்தினேன், “மாமாய், எங்க இருக்கீங்க? பத்திரமாத்தானே இருக்கீங்க??””, பதைபதைத்தாள்.

“நல்லபடியா இருக்கேன். இதான் கிங்பிஃசர்லதான் உக்காந்திருக்கம் பாப்பு. அப்ப வந்துருங்க.. செரியா? வச்சிர்றேன்”

அலைபேசியைத் திருப்பிக் கொடுக்கும் இத்தருணத்தில் நன்றிகூறத் தலைப்பட்டேன். ஆனால் அவர் அதைக் காதிலே வாங்காமல் மகிழ்ச்சிப் பிரவாகத்தில்,

“அண்ணா நீங்க நம்பூருங்களா?”

“ஆமாங்க தம்பி, நான் உடலப்பேட்டைதானுங்”

“எம்பேரு அருணுங்... நான் பல்லடமுங்...”

“பல்லடமேதானுங்களா.. பக்கத்துல வேற எதனாச்சியுமு ஊருங்ளா?”

“இப்ப எல்லாமும் பல்லடந்தானுங்க.. ஆனா, எங்கூரு ஆண்டிமுத்தம் பாளையமுங்க, கரடிவாவிக்குப் பக்கத்துல...”

“தெரியுந் தெரியும்... எங்க பெரியம்மாவிக ஊரு, மல்லேகவுண்டன் பாளையந்தானுங்க... ரேமண்ட்சு விநியோக உரிமையல்லாங்கூட அவிகளுதுதானுங்..”

”அப்படீங்களா? இப்ப நீங்?”

“நான் அமெரிக்காவுல இருக்கணுங்க... ஊட்டுல அல்லார்த்தையும் பார்த்துட்டுப் போலாமுன்னு வந்துட்டு இருக்கறனுங்க...”

“அது உங்க நெறத்தைப் பாத்தாலே தெரீதுங்களே?”

“நீங்க தம்பீ?”

“நான் சிட்னியில MBA படிச்சனுங்க... இப்ப, அப்போவோட தொழில்களை அல்லார்த்தையும் நானே பாக்க ஆரமிச்சிருக்கனுங்க..” எனச் சொல்லிவிட்டு, பின்னால் யாரோ இருப்பதாகவும், பார்த்துவிட்டு வருவதாகவும் சொல்லிச் சென்றார்.

இடைப்பட்ட இந்நேரத்தில், உள்ளூர் விமானம், கிட்டத்தட்ட 30 மணித்துளிகளுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து புறப்பட்டு, கொங்குதேசம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. சாளர ஊடாடியின் வாழியாக தாய்மண்ணைப் பார்த்தேன். காரிருட்டையும் கடந்து ஊர்கள் தெரிந்தன. மகிழ்வாய் உணர்ந்தேன்.

கிங்ஃபிசர் விமானத்தில் ,முதலிரு வரிசைகளிலும் எதிரெதிர் இருக்கைகள். மிகவும் வசதியாகப் போனது. பல்லடம் அருண் அவர்கள், அவர்தம் நண்பர் திருப்பூர் மதன் அவர்களோடு தம் இருக்கைக்குத் திரும்பி இருந்தார்.

திருப்பூர் மதன் அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொள்ளலானேன். “நான் மணிங்க; சார்லட்டுல இருந்து வாறனுங்க”

“நான் மதனுங்க... எல்லாமே திலுப்பூர்தானுங்.. சொந்தமாத் தொழில்... பனியன், ஏற்றுமதின்னு போகுதுங்க வாழ்க்கை... நீங்க எவ்வளவு காலமா வெளியூர்ல?”

“நான் போயி பத்து ஆண்டுகளுக்கும் மேலாவுதுங்க... திலுப்பூர் கேரளா க்யூன் ப்ரா கிருஷ்ணமூர்த்தி என்ற கூடப் படிச்சவனுங்க...”

“அட, அவன் நம்ம பங்காளிதானுங்.. இப்ப ப்ராவெல்லாம் கெடையாதுங்க... அவன் ஆப்செட் ப்ரிண்டிங் பார்த்துட்டு இருக்காருங்க... அவங்கண்ணன் பாலுதான் எல்லாமே.. ஆமா, அவரை எப்படி உங்களுக்கு?”

“நானுமு அவனுமு ஒட்டுக்கா, லட்சுமிநாயக்கான் பாளையத்துல படிச்சமுங்க... அறைத் தோழர்களுங்கூட...”

“அப்படிங்களா? நான்பாருங்க ஒரு கான்பெரன்சுக்கோசரம் ஃபின்லாந்து போய்ட்டு வாறனுங்க...”

”செரிங்க... சாயப்பட்டறை எல்லாம் மூடிக் கெடக்குதுங்களே? மாற்று ஏற்பாடுங்க??”

வினா தொடுத்ததுதான் மாயம், இளைஞர்கள் இருவரும் சடசடவென[ப் பொழிந்து தள்ளினார்கள். வாய்ப் சொல் வீரர்கள் நாங்களடா என்பதெல்லாம் அக்காலமடா எனச் சொல்லாமற் சொல்லியது அவர்கள் பகர்ந்து கொண்ட தகவல்கள். உலகநாடுகளில் இருக்கும் தொழில்நுட்பங்களை விரலிடுக்கில், நாநுனியில் வைத்திருக்கிறார்கள்.

ஆற்றுத் தண்ணீரில் உப்பின் அளவு 2000 TDS அலகுகள், கடல்தண்ணீரின் உப்பளவு 5000 TDS(total dissolved solids) அலகுகளுக்கும் மேலாக... உயிர்வழிச்செலுத்தலின் மூலம் சாயக்கழிவை பிரித்தெடுத்தல், seeweed கடற்பாசிகள் கொண்டு, சாயக் கழிவிலிருந்து உப்பு நீரைத் தனியாகவும் திடமக் கழிவைத் தனியாகப் பிரித்தெடுத்தல், திருப்பூரில் இருந்து குழாய்கள் வழியாக கடலுக்குக் கொண்டு செல்லப்படுவதன் சாதக, பாதகங்கள், குசராத் முதல்வர் மோடியின் பரிந்துரை எனப் பல தகவல்களை, முழுமையான தகவுகளுடன் அடுக்கிக் கொண்டே போனார்கள்.

குறிப்பாக மதன் அவர்கள், தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூறுகளை தனக்கேயுரிய அமைதியுடன் வெளிப்படுத்துவதில், அவருக்கு நிகர் அவரே எனும் பாங்கில் மிளிந்தார். மின்பற்றாக் குறையை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என வினவினேன். மிக அனாயசமாக, அருணும் மதனும் தத்தம் முயற்சிகளை நம்முடம் பகர்ந்து கொண்டார்கள்.

சக்தி சர்க்கரை ஆலையில் தான் பெற்ற அனுபங்களை மதன், தெள்ளத் தெளிவாகப் பகர்ந்தார். ஒரு வினாடிகூட இடைநிறுத்தம் இல்லாது இருத்தல் வேண்டும் சர்க்கரை ஆலைக்கு. ஒரு வினாடி இடை நிறுத்தம் என்றாலுங்கூட, கிட்டத்தட்ட 20-25 நாட்கள் ஆகுமாம் மீண்டும் இயந்திரங்களும், ஆக்கச்செலுத்தலும்(process control) நடைமுறைக்கு வர. ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கூட மின்தடை என்பது இல்லாமல் எப்படி அவர்களால் செய்ல்பட முடிகிறது? Biofuel உயிர்கலவையின் மூலம் எரிசக்தி என்பது அவர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? நம்மால் ஏன் அதை நடைமுறைக்கு கொண்டுவர இயலாது? கொண்டுவர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?? மதன் அடுக்கிக் கொண்டே போனார்.

இடையில், நாமும் நம்பங்குக்கு சிலதைப் பகர்ந்து கொண்டோம். சைப்ரசு மற்றும் வடகரோலைனாவில், சூரிய எரிசக்தி தயாரிக்கப்படுவதைப் பகர்ந்தோம். கற்றைத்தகடுகள் வடிவமைப்பு மற்றும் கல்நெய்யுடன் கூடிய சூரிய எரிசக்தி, மின்கல எரிசக்தியுடன் கூடிய கல்நெய் எரிசக்தி முதலானவற்றின் சாதக, பாதங்களைக் குறிப்பிட, வினாக்களால் துளைத்தெடுத்தார்கள் இருவரும்.

அடுத்து வந்த அருண் போட்டாரே ஒரு போடு! ஆடிப் போய்விட்டேன் நான். மனித எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிசக்தி பரவலாகப் பாவிக்கப்படுகிறது நம்நாட்டில். அதன் சாதக பாதகங்கள் இன்னவை என அடுக்கினார். அதைத் தொடர்ந்து, கோழிப்பண்ணையில் இருந்து கிடைக்கும் எச்சங்களின் பய்ன்பாடு பற்றிச் சொல்ல, நாம் இனி அமைதியாகக் கேட்டுக் கொள்வதே உசிதம் என வாளாதிருந்தோம்.

அப்படியாக நினைத்திருந்த தருணம், விமானத்தில் இருந்தோர் அனைவரும் கீழே இறங்கி விட்டுப் போயிருத்தனர். “அட, அதுக்குள்ள ஊர் வந்துருச்சுங்களா? உங்க ரெண்டு பேர்த்து கூடவமு பேசுனதுல, ஊர் வந்ததே தெரில போங்க தம்பி” எனச் சொல்லி விடைபெற்றோம்.

இந்த இரு இளைஞர்களிடத்தும் நாம் கண்டவை இவைதான். யார் மீதும், குற்றம்குறை கூறவில்லை. மாறாக, இருக்கும் சவால்களை ஆராய்கிறார்கள். அதற்கான மாற்றுத் தேடி அலைகிறார்கள். மனிதநேயம் போற்றுகிறார்கள். தாயகம் வெல்லப் போவது இவர்களாலன்றோ?! இவ்வேளையில்தான் நமக்குத் தெரிந்த நாலடிகளில் ஈரடி நினைவுக்கு வந்தது; பெருநடை தாம்பெறினும் பெற்றிப் பிழையாது ஒருநடையராகுவர் சான்றோர்!!

3/10/2011

அமெரிக்கத் தமிழ் வில்லுப்பாட்டு

ஆண்டுதோறும் நடைபெற்று வரும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவானது இம்முறை தென்கரோலைனா மாகாண கடற்கரை நகரான சார்ல்சுடன் நகரில் நடைபெற உள்ளது. இவ்வாண்டுத் தமிழர் விழாவை அமெரிக்காவில் நடத்த இருப்போர் மிகுந்த பெருமைக்குரியவர்கள் ஆவர்.

ஆம்; இவ்வாண்டுக்கான தமிழர் விழாவை நடத்த இருப்பவர்கள் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர். தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு போற்றுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அங்கே இருப்போர் பெரும்பாலும் முனைவர்கள் ஆவர். தமிழ்க் கலை, இலக்கியத்தை வார்த்தெடுப்பதில் மகா விற்பன்னர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியைச் செய்தாலும், அதிலொரு தனிமுத்திரை பதித்திடுவர். அப்படியானவர்கள் ஒருங்கிணைந்து நடத்தப் போகும் இவ்வாண்டுக்கான விழாவானது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாக மிளிரப் போவது திண்ணம்.


2011 சூலை மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெறப் போகும் இவ்விழாவில், வழக்கம் போல பல தரப்பட்ட நிகழ்ச்சிகளும் சமச்சீரோடு இடம் பெறப் போகிறது. அதற்கும் மேற்பட்டு, அழகிய இந்த கடற்கரை நகரில் பல எழிலார்ந்த இடங்களும் கண்டு களிக்க அமையப் பெற்றிருக்கிறது. ஆகவே, அமெரிக்கத் தமிழரெலாம் வாரீர். நமக்குள் ஒன்றிணைவோம்! தமிழருக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவோம்!!தமிழால் இணைந்தோம்!
தமிழராய் வாழ்ந்திடுவோம்!!


   24th Annual Tamil Convention, July 2-4, 2011
  Gaillard Municipal Auditorium, Charleston, SC, USA
  தனித் தமிழே நனிச் சிறப்பு ! 
இனம் பேணல் நம் பொறுப்பு !!

3/09/2011

மதுரை டெசோ மாநாடும், மு.கண்ணப்பன் அவர்களும்!!

இரம்யமான கிராமியச் சூழல். சாதிகளும், வேறுபாடுகளும் இருந்தனவே ஒழிய, இணக்கத்தில் எக்குறைபாடும் இருந்திருக்கவில்லை. பூர்விக அடிப்படையில் நாங்கள் வெளியூர்க்காரர்களாகவே இருந்திடினும், நாங்கள் வசித்து வந்த மற்றும் அண்டைப்புற ஊர்களான வீதம்பட்டி, வேலூர், சலவநாயக்கன்பட்டி, வாகத்தொழுவு, சங்கமநாயக்கன் பாளையம் முதலான ஊர்களைச் சேர்ந்தோர் எங்களுடன் மிகவும் பந்தபாசத்துடன் பழகி வந்த நாட்கள் அவை.

உழவு, வணிகம், நெசவு, மரமேறுதல், மட்பாண்டம் செய்தல், வேட்டையாடுதல், கட்டிடம் கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், தச்சுத் தொழில், தையல், இசைத்தொழில் முதலான தொழில்களைத் தன்னகத்தே கொண்டு முழுமை பெற்ற கிராமம்தான் வாகத்தொழுவு கிராமம். வாகத்தொழுவு கிராமத்தில், வீதம்பட்டி, வேலூர், சங்கமநாயக்கன் பாளையம், சலவநாயக்கன் பட்டி, சலவநாயக்கன் பட்டிப் புதூர், கொசவம்பாளையம் ஆகிய ஊர்கள் அடக்கம்.

அன்றாடம், சலவநாயக்கன் பட்டிப் புதூரில் இருந்து வேலூர் உயர்நிலைப் பள்ளிக்குக் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டும். பள்ளிக்குச் சென்று வந்த பின்னர், மாலையிலும் வார ஈறிலும் உள்ளூர்ச் சிறுவர்களோடு மாடு மேய்க்கச் செல்வது வழமை. அப்படிச் செல்லும் போதெல்லாம், அங்கு குழுமி இருக்கும் என்னையொத்த சிறுவர்களுக்குள் அரசியல் பேச்சுகள் வெகு சூடாக நடைபெறும். ஒட்டு மொத்தமும் அதிமுகவை ஆதரிக்க, அடியேன் மட்டும் திமுகவை ஆதரித்துப் பேசுவேன். இதற்கும், எங்கள் வீட்டார் அனைவரும் அரசியல் எதிர்ப்பாளர்கள்; அதிலும் திமுகவை மிகக்கடுமையாகச் சாடுபவர்களும் கூட.

அப்படிப்பட்ட சூழலில்தான், மா.அரங்கநாதன் என்பவரும், சர்க்கரை ஆலையில் அலுவலராகப் பணியாற்றி வந்த கோ.சாரங்கபாணி அவர்களும் எங்கள் ஊருக்குப் புதிதாக குடி வந்திருந்தார்கள். இருவருமே திமுகவைச் சார்ந்தவர்கள். என்னுடைய நினைவுக்கு எட்டியவரை, அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஊர்களுக்கும் இவர்கள்தான் திமுகவினர். அதிமுகவும், பேராயமும்தான் கோலோச்சிக் கொண்டிருந்தன. பின்னர், அவர்கள் இருவருமாகச் சேர்ந்து, பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போன டாக்டர் கிருஷ்ணசாமியின் உதவியோடு, திமுக கிளைக் கழகத்தை நிறுவி இருந்தார்கள்.

நான் கோடை விடுமுறையில், மாடு மேய்ப்பதை முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருந்தேன். அப்படித் தரிசு நிலங்களில் மாடு மேய்க்கும் வேளையில், அரசியல் விவாதங்கள் சூடு பறக்கும்.

இப்படியாக, நான் திமுகவின் அபிமானியாக இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட சாரங்கபாணி அண்ணன், என் பெற்றோரிடம் வந்து உங்கள் பையனை மதுரைக்கு அழைத்துச் சென்று வருகிறேன்; அனுப்பி வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். என் தாயார், முடியவே முடியாது என மறுத்து விட்டார். நான் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.

அதைப்பார்த்த என் தந்தையார், நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என ஆற்றுப்படுத்தி, காலையில் எட்டு மணிக்கெல்லாம் என்னை சாரங்கபாணி அண்ணாவின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். நான் பள்ளிக்கு அணிந்து செல்லும் காக்கி அரைக்கால்ச் சட்டையும், வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருந்தேன். சாரங்கபாணி அண்ணா, அவரது மூத்த மகனான பார்த்தசாரதியின் சல்லடத்தையும்(pant), சட்டையையும் கொடுத்து, என்னை அணீந்து கொள்ளச் செய்தார்.

சரக்குந்து ஒன்று வர, நாங்கள் அதில் ஏறிக் கொண்டோம். அது, ஊர் ஊராகச் சென்று மற்றவர்களையும் ஏற்றிக் கொண்டு உடுமலைப் பேட்டையை அடைந்தது. சாரங்கபாணி அண்ணன் எங்களுக்கெல்லாம் தின்பண்டம் வாங்கிக் கொடுத்தார். நல்ல வெள்ளை உடுப்புடன் ஒருவர் எங்கள் அருகே வந்து, ”என்ன சாரங்கன், இந்த ரெண்டு பொடிப்பசங்களுமா மாநாட்டு வர்றாங்க?” என்றார் அவர். அப்படிக் கேட்டவர் வேறு யாருமல்ல; கோவைத் திமுகவின் மாவட்டச் செய்லாளரும், சாரங்கபாணி அண்ணனின் நண்பரும், திமுக தலைவரால் அன்போடு அழைக்கப்பட்ட காரோட்டிக் கண்ணப்பன்தான் அவர்.

பிறகு ஏராளமான வாகனங்களுடன் மதுரை சென்றடைந்தோம். 1986, மே மாதம் நான்காம் நாள், மதுரையில் கூடிய பெரும் கூட்டத்தைப் பார்த்தேன். எங்கு சென்றாலும், சாரங்கபாணி அண்ணன் அவர்கள் என்னையும், பார்த்த சாரதியையும் கூடவே அழைத்துச் சென்றார். அன்றைய தினத்தில் அதிமுகவில் இருந்த கா.காளிமுத்து அவர்களின் மனைவியான நிர்மலா அம்மையார் வீட்டிற்கு கூடச் சென்றிருந்தோம்.

அம்மாநாட்டில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி., சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸாம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி., க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம், வல்லரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன், சாரங்கபாணி அண்ணன் அவர்கள் அவர்களுடைய மகன் பார்த்தனையும், என்னையும் அழைத்துப் போய் வாடிப்பட்டி அருகில் உள்ள குட்லாடம்பட்டி சர்க்கரை ஆலை விருந்தினர் இல்லத்தில் நித்திரை கொள்ளச் செய்தார்கள். நாங்கள் நித்திரை கொண்டு எழுந்ததும், மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வந்தோம்.

அதற்குப் பிறகு, எனது மாபெரும் வளர்ச்சியை(?)க் கண்டு மிரண்ட என் பெற்றோர், என்னைக் கொண்டு போய் விடுதியில் சேர்த்து விட்டார்கள். குடும்பப் பொருளாதாரம் அதற்கு ஈடு கொடுக்க இயலாத சூழ்நிலை இருந்தும். அப்படியாக்ச் சில காலம் கழிந்தது. என் மூத்த சகோதரர், சூலூருக்கு வடக்கே, கோவை - அவினாசி சாலையில் இருக்கும் செங்கோட கவுண்டன் புதூர் எனும் ஊரில் வசித்து வந்தார். நானும் அவருடன் சென்று இணைந்து கொண்டேன்.

அந்தக் காலகட்டத்தில், செங்கோட கவுண்டன் புதூருக்கு இரு பிரச்சினைகள். முதலாவது, குடிநீர்ப் பிரச்சினை. அடுத்தது, இருக்கும் ஓராசிரியர் பள்ளியை இரத்துச் செய்யும் சூழல். எங்கள் ஊரான செ.க.புதூரோ மிகவும் சிறிய ஊர். யாருமே உதவ முன் வரவில்லை. இருந்தாலும், ஊருக்குள் இருந்த இளைஞர்களான எங்களுக்குள் ஒரு வேகம் மற்றும் துணிவு.

அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரான A.K.பழனிச்சாமி அவர்களைச் சென்று பார்த்தோம். சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவரான செ.ம.வேலுச்சாமி அவர்களைச் சென்று பார்த்தோம். பலனில்லை!

இறுதியாக, யாரோ சொன்னார்கள் என்று, சூலூர் பேரூராட்சித் தலைவரான S.S.பொன்முடியைச் சென்று பார்த்தோம். நாங்கள் கிட்டத்தட்ட நான்கைந்து பேர்தான் சென்றிருந்தோம். எங்களை நன்கு வரவேற்று உபசரித்தார். ”நான் வேறு ஊராட்சியின் தலைவர்; என்னால் ஒன்றும் செய்ய இயலாது; ஆனால், அமைச்சர் வரும் போது நான் உங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்”, என்று கூறினார் பொன்முடி.

அவர் சொன்ன நாளில், செங்கோட கவுண்டன் புதூர் இராசகோபால், சுந்தரான், மனோகர் அண்ணன், இராசகோபாலின் தாய்மாமா தங்கவேலு அண்ணன் மற்றும் நான் ஆகிய ஐந்து பேரும், கோவை சுங்கம் அருகில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்றோம். சென்ற பத்து மணித் துளிகளில் எல்லாம், எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

அங்கே முன்னறையில், காட்டம்பட்டிக் கந்தசாமி M.L.A, மாவட்ட துணைச் செயலாளர் R.T.மாரியப்பன் முதலானோர் அமர்ந்திருந்தார்கள். “நீங்கெல்லாம் யாருப்பா? காலேஜ் பசங்களா??” என்று கேட்டார் கந்தசாமி M.L.A. நாங்கள் அமைச்சரின் தொகுதியில் இருந்து வந்திருக்கிறோம் எனக் கூறினோம். உடனே அமைச்சரைப் போய்ப் பாருங்கள் எனக் கூறினார்கள்.

உள்ளே சென்று, அமைச்சரைப் பார்த்தோம். பிரச்சினையை எடுத்துக் கூறினோம். ”யாருமே உதவ முன்வரவில்லை. எங்கள் ஊர் சிறிய ஊர், மொத்தமே அறுபது வீடுகள்தான் உள்ளன. எனவே, அதிகாரிகள் செவிமடுக்க மறுக்கிறார்கள்” எனக் கூறினோம். குறைந்தபட்சம் நாற்பது குழந்தைகளாவது வேண்டுமே என அங்கலாய்த்தார். எங்கள் ஊரில் 22 குழந்தைகள்தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். தேசியப் பெருஞ்சாலையைக் கடந்து, அண்டை ஊரான அரசூர்ப் பள்ளிக்குச் சென்று வருவதில் இருக்கும் இடைஞ்சல்களை எடுத்துச் சொன்னோம். கேட்டுக் கொண்டார்.

அடுத்ததாக, எங்கள் ஊருக்கென இருந்த ஆழ்துளைக் கிணற்றினை அண்டைக் கிராமத்தார் அபகரித்துக் கொண்டதைப் பற்றிக் கூறினோம். சரி, உங்களுக்கு வேண்டுமானால் வேறு இடத்தில் புதியது உடனே என் செலவில் தோண்டித் தருகிறேன் என்க் கூறி, அதற்கான வேலைகள் உடனே ஆகட்டும் என ஆணையிட்டார். பள்ளி குறித்து, கல்வி அமைச்சருடன் பேசுகிறேன் என்றும் உறுதி அளித்தார். அனைத்தும் முடிந்து, கிளம்பும் போது அவரிடம் கூறினேன், நான் சாரங்கபாணியின் நண்பனென. “அட, மொதல்லயே சொல்லி இருக்கலாமல்லோ?”, கொங்கு மொழியில் அன்பு மொழிந்தார்.

இக்காலகட்டத்தில் நடந்த அரசியல்? எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைய, பேராயக்கட்சி தனித்து நிற்க, ராஜீவ் காந்தி வாயுதூத்தில் ஊர் ஊராக வந்து பிரச்சாரம் செய்ய, ஓட்டுகள் பலவாறு பிரிய, 1989 ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த ஆட்சியில்தான், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மு.கண்ணப்பன் அவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர்.

ஜனவரி மாதம் பிரிந்திருந்தவர்கள் அனைவரும் ஓரணியில் திரள, 1989 நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து, ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற இயலவில்லை. கூட்டணிக் கட்சியான பொதுவுடமைக் கட்சி மட்டும் நாகப்பட்டினத்தில் ஒரு இடத்தை வென்றது. மீதம் இருந்த 39 இடங்களையும் அதிமுக கூட்டணி வென்றது. ஆனாலும், மத்தியில் வென்றது வி.பி.சிங் ஆயிற்றே? முரசொலி மாறன் கேபினட் அமைச்சரானார்.

இடப்பட்ட காலத்தில், நாங்கள் மீண்டும், மீண்டும் அமைச்சரைச் சென்று பார்த்ததின் விளைவு, செங்கோட கவுண்டன் புதூர் ஓராசிரியர் துவக்கப் பள்ளியின் இரத்து ஆணை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆழ்துளைக் கிணறும் வெட்டப்பட்டது. ஊர் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

வி.பி சிங் அரசு கவிழ, சந்திரசேகர் அரசு பதவி ஏற்றது. 1986 டெசோ மாநாட்டில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சாமி அமைச்சர், சுபோத்சிங் சகாய் அமைச்சர், இருவருமாகச் சேர்ந்து கவிழ்த்தார்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த திமுக அரசினை. மீண்டும், 1991 ஜூன் மாதம் 24ந் தேதி சட்டமன்றத் தேர்தல்.

திமுக எதிர்ப்பு அலை பேராவேசமாக வீசிக் கொண்டிருந்தது. இராஜிவ் காந்தியின் மரணம் தமிழகத்தை உலுக்கிவிட்டிருந்த நேரமது. திமுகவுக்கு ஓட்டுக் கேட்டு எவனாவது போவானா?? ஆனால், செங்கோட கவுண்டன் புதூர் ஊர்க்கூட்டத்தில், கட்சி சார்பின்றி அனைவரும் திமுகவுக்கே வாக்களிப்பது என முடிவு செய்தோம். ஊர்ப் பொதுமக்கள் சார்பில், சுவரொட்டிகள் ஒட்டினோம்.

சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குகள், சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டது. தொகுதிக்கு யாரென்றே தெரியாத, அதிமுகவுக்குத் துளியும் தொடர்பில்லாத, ஜெயலலிதா அம்மையாரின் வகுப்புத் தோழியினுடைய சகோதரன், K.S. துரைமுருகன் என்பார் ஏராளமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னுக்கு வந்தார், அனைத்து வாக்குச் சாவடிகளிலும்! செங்கோட கவுண்டன் புதூர் வாக்குச் சாவடியைத் தவிர!!

செங்கோட கவண்டன் புதூர் மற்றும் சுப்பராம்பாளையம் அடங்கிய எங்கள் ஊர் வாக்குச் சாவடியில் எண்பது சத வாக்குகள், எங்கள் மக்களுக்கு குடிநீரும், கல்விச்சாலையும் அளித்த வேட்பாளருக்குப் பதிவானது தெரிந்து, கட்சி சார்பின்றி வெடிகள் வைத்து மகிழ்ந்தோம் நாங்கள்!!

பொறுப்பி: என் நினைவில் இருப்பதைப் புலம் பெயர்ந்து வாழும் சூழலில், அயல் மண்ணில் இருந்து எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க!

எம் தாய் மண்ணுக்குச் சேவை புரிந்த, காலஞ்சென்ற அதிமுக அமைச்சர் ப. குழந்தைவேலு M.A.B.L அவர்களை, எம் தாய் மண்ணில் இருந்து கொண்டு நினைவு கூறுவேனாக!! அதுகாறும் தங்களிடம் இருந்து வணக்கம் கூறி விடைபெறுவது,

பணிவுடன்,
பழமைபேசி.

3/08/2011

எழுச்சி நாயகன் டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலமது. பட்டி தொட்டி எங்கும் இரட்டை இலைச் சின்னமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு, ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்த காலம்.

தேவனூர்புதூர் காளியம்மன் கோவில் திருவிழாவுக்குச் சென்ற எனக்கு எப்படியோ ஒரு உதயசூரியன் சின்னமிட்ட கொடி ஒன்று அகப்பட்டுவிட, இரவு பகல் என்றும் பாராது அதைக் கையிலே வைத்துக் கொண்டிருந்தேன். நித்திரையின் ஊடாகவெல்லாம் எழுந்து, அக்கொடியானது என்னிடத்திலே பத்திரமாக இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்ட இரவுகளும் உண்டு.

இந்த நேரத்திலேதான், என்னுடன் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவனும், எனது அண்டை வீட்டு நண்பனும், இரட்டை இலைச் சின்னத்தை அபிமானமாகக் கொண்டவனுமான பூராண்டாம் பாளையம் செல்வராசு என்பவன், என்னுடைய உதயசூரியனைக் கிழித்தெறிந்து விட்டான். எனக்கோ ஒரே அழுகை!!

அவனுடைய மாமாவும், சலவ்நாயக்கன் பட்டிப் புதூர் அதிமுக கிளைக் கழகச் செயலாளருமான அண்டை வீட்டு குப்புசாமி அண்ணன் அவர்கள், நான் உனக்கு உதயசூரியன் படம் போட்ட கொடியைத் தருகிறேன் என்று சொல்லி அலைந்து திரிந்தார். இருந்தும் அவரால் கொண்டு வந்து தர இயலவில்லை. மாறாக, ஒரு திமுக கொடியைக் கொணர்ந்து என்னை இணக்கப் படுத்தினார்.

சலவநாயக்கன் பட்டிப் புதூரில், எங்கள் வீட்டிற்கு முன்னே பெரிய மைதானம் போன்ற அளவுக்கு பெரிய வாசல் இருக்கும். உள்ளூர்க் கூட்டம் எதுவாயினும் எங்கள் வீட்டிற்கு முன்னால்தான் நடைபெறும். எனக்கு நினைவு தெரிந்து, பல அதிமுக கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. திமுக கூட்டங்களும் நடைபெற்று இருக்கிறது.

செஞ்சேரிமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் வழியில், பிரதான சாலையில் இருந்து உள்புறமாக வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா நாராயணசாமி அவர்கள் கலந்து கொண்ட கூட்டம், மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும். அவர் பேசிச் சென்ற ஒரு சில வாரங்களில் பெரிய அளவில் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. உடுமலைப் பேட்டையில் கிட்டத்தட்ட ஒன்பது விவசாயிகள் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார்கள். உள்ளூர்த் தலைவர்களை எல்லாம் சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்தது எம்ஜிஆர் அரசு.

நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலே, மாலை ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை உட்கொள்ளாமலேகூட நித்திரையாகிவிடுவது வழக்கம். என் அம்மா, தூக்கத்தோடு தூக்கமாக எனக்கு உணவு ஊட்டி விடுவார்கள். அன்றைக்கும் அப்படித்தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரெனப் பார்த்தால், எங்கள் வீட்டு முன்னே ஒரே சத்தம். அது கண்டு எழுந்து முன்வாசலுக்கு வந்து பார்த்தால், ஆச்சரியம்! நிறைய மக்கள் குழுமி இருந்தார்கள்!!

ஆங்காங்கே திமுக கொடிகளோடு மிதிவண்டிகள். ஒரு வாகனத்தில் மட்டும், திமுக வேட்பாளர் உங்களை எல்லாம் காண வந்து கொண்டிருக்கிறார் என அறிவித்தவண்ணம் இருந்தார்கள். நான் எங்கள் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டேன். எனது வகுப்புத் தோழன் செல்வராசும், பக்கத்து வீட்டுக் குமாரும் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் எல்லாம் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தோம்.

வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர, உள்ளே இருந்தவர்கள் எல்லாம் வாகனத்தை விட்டிறங்கிய பின்னர் வாகனங்களைத் தொலைவில் கொண்டு போய் நிறுத்தினார்கள். ஊர்த் தலைவாசலில் இருந்து, கையைக் கூப்பியபடியே ஓட்டுச் சேகரித்தபடியே வந்து கொண்டிருந்தார் அவர். பசுமையாக நினைவிருக்கிறது. நல்ல உயரம். சிவந்த முகம். கேசப்பொலிவு கொள்ளை அழகாக இருந்தது. கரிய முடியானது, திடல் திடலாக மேலெடுத்துச் சீவிய தோற்றம். கதாநாயகத் தோற்றம் என்றால் அதுதான் கதாநாயகத் தோற்றம். பழைய படம் எதுவும் எனக்கு அகப்படவில்லை. ஆனால் என் மனக்கண் முன், இன்னும் அந்த சிகையழகுடன் கூடிய தோற்றம் நன்றாக நிழலாடுகிறது.

என் தகப்பனாரைத் தேடி வந்து வணக்கம் தெரிவித்தார் அவர். புன்முறுவல் பூத்துச் சிரித்தபடி வந்தவரை, எங்கள் வீட்டுத் திண்ணையில் அமரச் சொன்னார்கள். என் மூத்த சகோதரர் ஜமுக்காளத்தை விரித்தார். என் தாய், குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். என் தாயின் பின்னாலே ஒளிந்து, ஒளிந்து சென்றவன் வாய் திறந்து சொன்னேன், “அண்ணா, அங்கிருக்கறாம் பாருங்க செலுவராசு. அவன் என்ற உதயசூரியன் கொடியக் கிழிச்சுப் போட்டானுங்”. உடனே என் கையைப் பிடித்து தன்னோடு இருத்திக் கொண்டவர், இந்தத் தம்பிக்கு வேணுங்றதைக் குடுங்க என்றார்.

யார் அவர்? கொஞ்சும் எழில் முகத் தோற்றம் கொண்டவரும், சிகை அழ்கு சிறப்புறக் கொண்டவரும், எங்கள் பகுதியில் இருக்கும் பூளவாடி எனும் ஊருக்கு அருகில் உள்ள மசக்கவுண்டர் புதூரைச் சார்ந்தவ்ரும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருமான மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள்தான் அன்றைய நாளின் கதாநாயகன்.

இவர் எப்படித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரானார்? பொள்ளாச்சித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான C.T.தண்டபாணி அவர்கள் நீலகிரித் தொகுதிக்கு மாற்றப்பட, பொள்ளாச்சித் தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளர் தேவைப்பட்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பிலும், சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த திராவிடர் கழக உறுப்பினரை, மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவரை, அத் தேர்தலிலே நிற்க வைத்துவிட்டார்கள்.

சரி, ஏன் C.T.தண்டபாணி அவர்கள் நீலகிரித் தொகுதியில் போட்டியிட வேண்டும்? நீலகிரித் தொகுதியிலே, செல்வந்தரும் செல்வாக்கும் உடைய ஆர்.பிரபு அவர்கள் பேராயக் கட்சியின் சார்பிலே வேட்பாளர். அவருக்கு இணையாக்ப் போட்டியிட, வலுவான வேட்பாளர் தேவை இருந்தது.

கூடவே, பிரபுவின் குடும்பத்தில் பங்காளிச் சண்டைகளும் நடந்து கொண்டிருந்த நேரமது. அவரது தந்தையார், P.R.இராமகிருஷ்ணன். தந்தையோடு பிறந்தவர், R.வெங்கிடுசாமி. கோயம்பத்தூரில், இராதாகிருஷ்ணா மில், ஜெயலட்சுமி மில், நவ இந்தியா, மேட்டூர் மால்கோ அலுமினியத் தொழிற்சாலை, சிறுமுகை விஸ்கோஸ் முதலானவற்றுக்கு உரிமையாளர்கள். அதிலே ஒருவரான, ஆர்.வி.எஸ் அவர்களும் C.T.தண்டபாணியையே தன் சகோதரன் மகனை எதிர்க்க நிறுத்த வேண்டும் எனவும் விரும்பியதாகச் செய்திகள் உண்டு.

இச்சூழலில்தான், இளைஞரும் உத்வேகமும் கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் எங்கள் முன்னாலே திமுக வேட்பாளராகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். ஒலி பெருக்கியைப் பிடித்ததும் மடை திறந்த வெள்ளம் போலத் தெளிவான உரை. இரட்டை இலைச் சின்னத்தையும், புர்ட்சித் தலைவரையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த இளைஞர்கள் அப்படியே அவரது தோற்றத்திற்கும், பேச்சுக்கும் கட்டுண்டு உதயசூரியனுக்கு மாறிப் போனார்கள்.

அடுத்த நாள் வழக்கம் போலப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றேன். ஆங்காங்கே இருக்கும் சுவர்களில், புதிதாக பல உதயசூரியன்கள் படர்ந்திருந்தன. துண்டு சுற்றப்பட்ட கழுத்து, திடலழகுடன் கூடிய சிகையழகன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களது படத்துடன் கூடிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தன. ஆச்சரியமாய் இருந்தது.

நாடாளுமன்றத்தின் பிரதான் எதிர்க்கட்சியாய் இருந்த திமுக படுதோல்வியுற்றது. டாக்டர் கிருஷ்ண்சாமியும் தோல்வியுற்றார். வட சென்னையில் N.V.N.சோமு, மத்திய சென்னையில் மற்றொரு மருத்துவர் அ.கலாநிதி என, இரண்டே இரண்டு இடங்களைத்தான் திமுகவால் கைப்பற்ற முடிந்தது.

அதற்குப் பிறகு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களைக் காணக் கிடைக்கவே இல்லை. அவ்வப்போது நாளிதழ்களில் அவரைப் பற்றிய செய்திகள் வரும். குனியமுத்தூரில் மருத்துவமனை நடத்தி வருவதும், திமுக கட்சிக் கூட்டங்களில் பேசுவதுமான செய்திகளை வாசித்திருக்கிறேன். அதன் பின்னர் எனக்கும், வீதம்பட்டி வேலூரில் எட்டாம் வகுப்பு, பின்னர் இலட்சுமிநாயக்கன் பாளையத்தில் மேல்நிலை, கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியில் படிப்பு என நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

அக்காலகட்டத்தில், எனக்கும் சம்காலத்து மாணவர்களுக்கும் ஒருவிதமான நாட்டம் இருந்தது. ஆம்; வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, பசி பட்டினியோடு இருந்தாலும் இருப்போமே ஒழிய, சிகை திருத்துவது என்பது கோவை குதிரைப் பந்தய சாலையில் இருக்கும் சூர்யா விடுதியின்(Surya International Hotel)கீழ்ப் புறம் உள்ள ஓப்ராய் முடித் திருத்தகத்தில்தான் முடி வெட்டுவது என்பதில் அதிக நாட்டமுடன் இருந்தோம். அன்றைய நாளில் ரூபாய் 70 என்பது மிகப் பெரிய கட்டணம்.

ஓப்ராய் கிட்டு(சரியான பெயர் நினைவில் இல்லை) என்பவர், கோவையில் எங்கும் பிரசித்தம். அவரிடம்தான் நாங்கள் முடி திருத்திக் கொள்வது வழக்கம். நானும் எனது நண்பன் கார்த்தியும் ஓப்ராய் சென்றிருந்தோம். அங்கேதான் மீண்டும் அவரைக் கண்டேன். அவரும், கிட்டுவும் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு நான் சிங்கப்பூர் சென்று, உலகஞ்சுற்றும் நாடோடி ஆகிவிட, அவரைக் காணும் வாய்ப்பு இதுவரையிலும் அமையப் பெறவில்லை.

சமீபத்தில், நண்பர் ஓசைச் செல்லா அவர்கள் அவருடைய படங்களை மற்றவர் பார்வைக்கு வைத்திருந்தார். பழைய நினைவுகளைக் கிளறுவதற்கு அது ஏதுவாய் அமைந்தது.

கிராமத்து இளைஞர்களை எல்லாம் தட்டி எழுப்பிய வசீகர இளைஞன், கல்வியாளர், சமூக சேவையாளர் இன்னும் வளர்ந்திருக்க வேண்டும். அரசியல் ஏனோ அவரை அரவணைக்கவில்லை?! அல்லது அவரேதும் தடுமாறி விட்டாரா என்பதும் தெரியவில்லை. என் நினைவுகளின் ஆழத்திற்கு ஏற்ற அங்கீகாரம், பொது வாழ்வில் அவருக்குக் கிடைக்காமல் போனதில் எமக்கு சிறிது ஏமாற்றமே!!


(தொடரும்)

(மக்கா, என் நினைவில் இருப்பதைப் புலம் பெயர்ந்து வாழும் சூழலில், அயல் மண்ணில் இருந்து எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க!)

3/07/2011

அஞ்சா நெஞ்சன், மாவீரன் T.இராஜேந்தர்

காலச் சக்கரம் சுழலச் சுழல, என்றோ இளந்தளிராய் இருந்தவை பழுத்துப் பட்டுப் போனவையாகக் காட்சி அளிக்கின்றன. வேடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இளக்காரமாய் இளப்பத்துக்கு ஆளாக நேரிடுகிறது. கேலிக்கு ஆளாகிறது. ஆனால்? சமகாலத்தில் வாழ்ந்தவனுக்குத்தானே அதன் அருமையும் பெருமையும் தெரிய வரும்?!

சிம்ம சொப்பனமாய், பெரும்புனலில் வீறு கொண்ட புரவியாய்ப் பறந்து திரிந்த சதாம் உசேன் கேலிக்கு ஆளானான். கொச்சைப் படுத்தப்பட்டான். ஆனாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, வீடுதோறும் உண்ணச் சோறும், பருகப் பானமும் அனுப்பி வைத்த நாட்களை அவனுடன் சமகாலத்தில் வாழ்ந்த குடிமக்களால் மறந்துவிட முடியுமா? அல்லது மறக்கத்தான் முடியுமா??

இராமாவரம் தோட்டம் என்று சொன்ன மாத்திரத்தில், மெய் சிலிர்க்கும். கனிவானவனுக்கு நெஞ்சில் கருணை பிறக்கும். நல்லவனுக்கு கொடையுள்ளம் அருள் பாலிக்கும். கயவனுக்கு நெஞ்சு பதைபதைக்கும். இருபத்தி நான்கு மணி நேரமும், மாதம் பனிரெண்டும், நாட்கள் முன்னூற்று அறுபத்தி ஐந்தரை நாட்களும் மக்கள் வெள்ளம் அலைமோதும். நான் சென்ற முறை சென்னை சென்றிருந்த போது, சக பதிவர் இரம்யா அவர்கள் என்னை அந்த இராமாவரம் தோட்டத்து வழியாக அழைத்து வந்தார். ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடந்ததைப் பார்த்தேன். மற்றவர்களுக்கு வெறுமனே அது ஒரு காட்சிப் பொருள். எனக்கோ அது ஒரு நினைவுச் சரணாலயம்.

நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலமது. தமிழ்நாட்டிலே கள்ளுக் கடைகள் திறந்திருந்த காலம். கேரள் எல்லையான கொழிஞ்சாம் பாறையிலிருந்து, கிழக்கே தாராபுரம், கரூர் வரையிலான கள்ளுக் கடைகள் அனைத்தும் இவருக்குத்தான் சொந்தம். இவர் அன்றி வேறு எவரும் எடுக்கலாகாது என்பது எழுதாத சட்டம். நெகமம் நெபோலியன், காளியம்பாளையத்துக் கட்டபொம்மன் K.V.K என்றால், கொங்கு மட்டுமல்ல, அந்த இராமாவரத்து இராமச்சந்திரனும் நடுங்கிய நாட்கள் அவை. நெகமம் மற்றும் அண்டியுள்ள சுத்துபத்து பதினெட்டுக் கிராமங்களிலும் திமுக என்ற சொல்லே உச்சரிக்கப்படக் கூடாது. தினகரன் வாசிக்கும் கண்கள் பொசுக்கப்படும்.

திரைப்பட விநியோகமா, சியாமளா மூவிஸ் வைத்ததுதான் சட்டம். அதிமுக மாவட்டச் செயலாளர் தேர்தலா?? நெகமம் வைத்ததுதான் சட்டம். மதர்லேண்டு மூவிஸ் சுருண்டது. அதன் உரிமையாளர் கோவைத் தம்பி நெகமத்துடன் தாக்குப் பிடிக்காது ஓடிப் போனார். நெகமம் நெபோலியன் மாவட்டச் செயலாளர் ஆனார்.

பொள்ளாச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் நான் என்ற மமதை அவருக்கு. காளியம்பாளையத்து கட்டபொம்மனிடமா உன் வேலையைக் காண்பிக்கிறாய் என உறுமியது நெகமம். உறுமலைக் கேட்டு அஞ்சிய பொள்ளாச்சி, இராமாவரத்திற்குப் புகலிடம் தேடிச் சென்றது. நெகமத்தார், பொள்ளாச்சியை மட்டுமல்லாது அந்த இராமச்சந்திரனையும் சேர்த்து மிரட்டிவிட்டு வந்தார்கள்.

ஆனைக்கும் அடி சறுக்கும்! எந்த ஒரு வில்லாளனுக்கும், ஒரு எதிர் வில்லாளன் உண்டல்லவா? இந்த வில்லாளன், மயிலாடுதுறை வில்லாளன், T.இராஜேந்தர் என்னும் பெயரில் ஒரு கட்டையான குட்டை உருவம், வெறும் ஒரு சில நூறு பேருடன் அவ்வூருக்குள் நுழைந்தது.

எந்த நெகமத்தில் கருப்பும் சிவப்பும் ஒட்டிக் காணக்கூடாதோ, அந்த நெகமத்துச் சந்தியில் வைத்து கருப்பு சிவப்புக் கொடியைப் பறக்கவிட்டுச சிம்மம் போலக் கர்ச்சித்துச் சென்றது அம்மானுடம். நாலரைக் கோடி மக்களின் நவநாயகன் என்றுக் கொப்பளிக்கக் கொப்பளிக்கக் கூக்குரலிடும் திமுக உடன்பிறப்புகளோடு, ஒட்டு மொத்த தமிழகமே வாய் மூடி அசந்து நின்றது.

நாட்கள் பெருவேகத்தில் நகர்கிறது. அந்த ஆறு ஆண்டுகளில், தமிழகத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. நடக்கக் கூடாதது என்னவெல்லாம் இருக்கிறதோ, அத்துனையும் நடந்தது. தமிழுக்கும், தமிழனுக்கும் நேர்ந்த கறுப்பு வரலாறு அக்காலம். இதோ வந்துவிட்டது 1991 தேர்தல். ஆளுங்கட்சியோ பெருஞ்சோதனையில் கடலின் பெருங்காற்றில் சிக்கிய் பாய்மரக்கப்பலாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சிலிர்த்து எழுந்தான் மாவீரன்! தாயக மறுமலர்ச்சிக் கழகத்தை நிறுவி, அரிமாப் போல வலம் வந்தான்.

ஜெய்லலிதா என்னும் மாயத்தை எதிர்க்கத் திராணி இல்லாது இருந்தது தமிழக அரசியற்களம். பர்கூர், காங்கயம், பழனி எங்கும் சிக்குபுக்கு இரயிலை ஓட்டிக் காட்டினான். ஆளுங்கட்சியின் வேட்பாளரே போட்டியில் இருந்து விலக, இம்மாவீரன் பர்கூரில் ஒத்தையாளாகக் களம் கண்டான். எதிர்த்துப் போட்டி இட்டதே மாபெரும் வெற்றி என கன்னியாகுமரியில் இருந்து கைலாயமலை வரையிலுமிருந்த அரசியல் விற்பன்னர்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள்.

1991 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 150 இடங்களுக்கு மேலான இடங்களில் நின்ற திமுக பெற்ற இடங்கள் இரண்டே இரண்டுதான். துறைமுகத்தில் கலைஞர் மு.கருணாநிதி, எழும்பூரில் பரிதி இளம்வழுதி ஆகிய இருவர் மட்டுமே வெல்கிறார்கள். க.சுப்புவை விட முதல்வர் கருணாநிதி வெறும் 890 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெல்கிறார்.

ஆனால், மாவீரன் தலைமையில், கூட்டணியினராக சு.திருநாவுக்கரசு, K.K.S.S.R.இராமச்சந்திரன், V.கருப்பசாமிப் பாண்டியன், S.D.உக்கம்சந்த் உள்ளிட்டோர் எட்டுத் தொகுதிகளில் போட்டியிட, மாவீரனின் கூட்டணியும் வெற்றி பெற்றுக் காட்டியது இரண்டு தொகுதிகளில்!! அறந்தாங்கியில் இருந்து திருநாவுக்கரசும், சாத்தூரில் இருந்து K.K.S.S.R. இராமச்சந்திரனும் தமிழக சட்டமன்றத்தினுள் நுழைந்தார்கள்.

ஐம்பெரும்படையுடன் களத்தில் நின்ற ஜெயலலிதா எனும் பெரும் சக்தியை எதிர்த்து நின்றவன் கணக்கில் தோற்றானே ஒழிய, வரலாற்றில் வெற்றி கண்டது என்னவோ அம்மாவீரனே!

(தொடரும்)

(மக்கா, என் நினைவில் இருப்பதைப் புலம் பெயர்ந்து வாழும் சூழலில், அயல் மண்ணில் இருந்து எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க!)

காங் - திமுக கூட்டணி தொடர்கிறது!!

தில்லியில் இருக்கும் நமது தமிழ் வலைஞர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நம்மிடம் பகர்ந்து கொண்ட பின் தேதியிட்ட தகவல் கீழே வருமாறு:

நாடு பெரும் சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மதவாத சக்திகளை வேரோடு முறியடித்து நெருக்கடிகளைக் களையும் பொருட்டும் பேராயக் கட்சி(காங்கிரசு) மற்றும் ஆளும் கட்சிக் கூட்டணியைத் தொடர்வது என முடிவு செய்திருக்கிறார்கள். முறிந்தது கூட்டணி எனக் கொண்டாடியவர்கள், கொண்டாட்டங்களை நிறுத்தி புலம்பல்களைத் துவங்க இதுவே சரியான தருணம் எனவும் தெரிவிக்கிறார். துப்பிய பாக்குத் தூளை? அவ்வ்வ்.....

3/04/2011

நசரேய இளம்பாண்டியனார் வாழிய, வாழியவே!!

அமெரிக்கத் தூங்காநகரம்
நியூயார்க் நகரம்
மெய்சிலிர்த்துக் குதூகலித்தது
தம்மண்ணை அலங்கரிக்க
தமிழ்மொட்டு ஒன்று மலர்ந்ததென!

தமிழுக்கு உயிர்த்த
தென்பாண்டித் தேரடா நீ!
குருவின் தினத்தில்
தமிழ்க் குலவிளக்காய்
பாராள வந்தாய் நீ
பொங்குதமிழ்ப் பாடுவாய் நீ
அவனியெங்கும் தமிழ் பவனி வர
டேவிட் கவின் நீ
எம்மவர்க்கு அணி சேர்ப்பாய் நீ
தென்பாங்குத் தமிழே நீ வாழ்க!
செழிப்பும் செம்மையும் நினதாக!!