4/28/2023

எப்படிணே?



இளவல் ஒருவர் அழைத்திருந்தார். “அண்ணா”. “சொல்லுங் தம்பி”. “எப்படினா எப்பயுமே மகிழ்வா, துள்ளலா இருக்கீங்க?”

“அப்படியெல்லா ஒன்னுமில்லீங் தம்பி. எனக்கும் கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், சினம்னு வருவதும் போவதுமாத்தான் இருக்கும்”

பேச்சு அதனைக் கடந்து சென்று விட்டது. ஆனால் சிந்தித்துப் பார்க்குங்கால், மகிழ்ச்சி, உவப்பு, இன்பம், களிப்பு முதலானவை எல்லாம் வேறு வேறானவை. ஒவ்வொரு மனிதனும் முக்காலே மூணுவீச நேரமும் இன்புற்றிருக்கவே ஆட்பட்டவர்கள். எப்படி?

மகிழ்ச்சி: மகிழ்தல் என்றால் பொங்கி வருதல். மனம், இருக்கும் நிலையில் இருந்து குதூகலநிலைக்கு மாறிய ஓர் உணர்வு. அது தற்காலிகமானது.

உவப்பு: ஏதோவொரு செயலின் ஈடு(result) மனநிறைவைக் கொடுத்தல். உவப்பும் கசப்பும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை.

களிப்பு: கேளிக்கை நிமித்தம் மனம் மற்றெதனின்றும் ஒன்றியிராமல் ஏதோவொன்றின்பால் மட்டும் பற்றியிருக்கும் போது ஏற்படும் விடு உணர்வு.

இன்பம்: வலியற்று இருக்கும் நிலை.

நடப்பில் நாம் இவை அத்தனையையும் மகிழ்ச்சி என்றே கருதிக் கொள்கின்றோம். நுண்ணிய வேறுபாடுகளுக்கு இடம் கொடுப்பதில்லை. இங்கே இளவல் அவர்களின் வினாயென்பது இன்பம் குறித்தானதே. ஆகவே நாம் இன்பம் என்பதை எப்படிக் கட்டமைத்துக் கொள்வது, தக்கவைத்துக் கொள்வது என்பதைப் பார்த்தாக வேண்டும்.

இன்பம் என்பது எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டது அன்று. காக்கை குருவிகளும் குழந்தைகளும் வலியுடனேவா இருக்கின்றன? எண்ணிப்பாருங்கள். இளவயதில் மனம் கொப்பளிக்கக் கொப்பளிக்க இருந்திருப்பீர்கள். நாட்கள் செல்லச் செல்ல அந்த நிலை அருகி வந்திருக்கக் கூடும். ஏன்? நாம் நம்மை நிபந்தனைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டதுதான். இது கிடைத்தால் வெற்றி, அல்லாவிடில் தோல்வி. தோற்று விட்டோமோயென்கின்ற வலி. அது அடைய உழைக்க வேண்டும். தோற்றுவிடுமோயென்கின்ற அச்சம், வலி. புது கார், அந்தா அவர் வைத்திருப்பதை நாமும் பெற்றுவிட்டால் இன்பம், அல்லாவிடில் அதனை அடையும் வரை வலி. ஆக, அப்படியான நிபந்தனைகளுக்கு மசியாமல் இருந்தால் வலியும் இல்லை. அதற்காக அதனை அடைய வேண்டுமெனும் குறிக்கோள் கொண்டிருக்கக் கூடாதென்பதுமில்லை. Consciously break free from such conditions.

இன்பம் என்பது அவரவர் தெரிவு. ஏமாற்றங்களும், தோல்விகளும், இழப்புகளும் வரும்தான். அழலாம். அடுத்தவருடன் பேசலாம். தனிமையில் இருக்கலாம். ஆனால் அவை எல்லாமே நம் கவனத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு சிந்தனையும் இல்லாமல் மனத்தை வெறுமைக்குப் பறிகொடுக்கும் போதுதான் அதிலிருந்து மீள முடியாமற்போய் விடுகின்றோம். சமூகத்தில் கேள்வி கேட்கும் பழக்கம் இருக்க வேண்டும். அது இல்லாத இடத்தில், தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் பழக்கமும் அருகிப் போய் விடும். அதனாலே இன்பத்தைப் பறிகொடுப்பதும் நேர்ந்து விடுகின்றது.

தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அறிதலும் பழகுதலுமாக. நம்முள் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களே தொடர்ந்து மனத்தைப் புத்துணர்வுடன் இருக்க வழிவகுக்கும். நடப்பில் நிகழ்வனவற்றுக்கொப்ப தகவமைத்துக் கொள்வதும் மாற்றம்தானே? நம்முள் மாற்றங்களே நிகழ்ந்திராத போது, உயிர்த்திருத்தலுக்கு ஒரு பொருளுமில்லை. வலிதான் மிஞ்சும். ஆகவே நிபந்தனைகளுக்கு ஆட்படாமல் இருப்பதும், தெரிந்து செயற்படுவதும் இன்புற்றிருத்தலுக்கே இட்டுச் செல்லும்.

Happiness depends upon ourselves. -Aristotle



4/25/2023

எப்படியாக உயிர் வாழணும்?

எதுக்காக உயிர் வாழணும்?’ என்பது குறித்து இருவேறு குழுக்களில் பேசத் தலைப்பட்டேன்.  பெரிதாக ஆதரவு கிட்டவில்லை. எனினும் நாம் நினைத்தவற்றைப் பதிவாக எழுதி வெளியிட்டோம். அன்பு காசி அண்ணன் அவர்கள் தம் காலவரிசையில் பகிர்ந்திருப்பதாய்த் தெரிவித்தார். மகிழ்வாக இருந்தது. 

அதற்குக் கிட்டிய மறுமொழியையும் தெரியப்படுத்தி இருந்தார். இனி அது குறித்துப் பார்ப்போம்.

1.”அந்த பயோ தான் கொஞ்சம் நெருடல்.”

வலைப்பதிவு துவங்கிய காலத்தில், முகப்பு மொழியாக, “எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!” எனும் சொலவடையைப் பகிர்ந்து, அது இன்னமும் அப்படியே இருக்கின்றது. இதே சொலவடையை இப்படியும் சொல்வார்கள், “இனம் இனத்தோட, வெள்ளாடு தன்னோட”.

இனம் என்பதைச் சாதி, ரேசிசம் எனப்படுகின்ற இனவாதம், மொழிவாதம் முதலானவற்றின்பேரில் வியந்தோதப்படுவதாகக் கருதும் போது நெருடல் கொடுக்கக் கூடியதுதான். ஆகவே அப்படியான மறுமொழிக்கு முகாந்திரம் உண்டு. அதே வேளையில், முகப்புமொழி இடம்பெற்ற வரலாறு, இடம், பொருள், ஏவலைக் கொண்டும் கொஞ்சம் மொழிப்புலமை கொண்டும் பார்க்கின் அந்நெருடலுக்கு வாய்ப்பிராது. எப்படி?

இணையம், வலைப்பதிவுகள் தோன்றிய காலம். திறன்பேசிகளோ(smart phone), மேம்பட்ட அலைக்கற்றைகளோ இல்லாததொரு காலம். 2006ஆம் ஆண்டு. தாய்த்தமிழ் நாட்டிலிருந்து பத்தாண்டுகளாகப் பெயர்ந்து  பூமிப்பந்தின் மறுகோடியில் வாழும் ஊரகத்தான் ஒருவன், சகதமிழரோடு புழங்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். சக தமிழர் என்பதையுங்கடந்து, மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஒவ்வாமை கொள்ளாமல் இயைந்து உரையாடக் கூடிய அளவில் ஒரு கூட்டத்தோடு சேருகின்றாமெனும் நினைப்பில் முகப்பு மொழி சிறப்புச் சேர்க்கின்றது. அமெரிக்காவில் இருந்தாலும், தனக்கான ஒரு கூட்டம் என்பது தேவையாக இருக்கின்றது. திருக்குறளும் அதையேதான் சொல்கின்றது.


இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

சுற்றம், கூட்டம், சமூகம், குழுமம், திரள் ஆகிய பொருட்களில்தாம் ‘இனம்’ எனும் சொல் திருக்குறளில் எடுத்தாளப்பட்டு இருக்கின்றது.  இனம் எனும் சொல்லின் வேர், ‘இன்’ என்பது. அதாவது ”இந்த” காலம், இடம், பொருள் என்பதுதான் வேர். இந்தக் காலத்தில், அதாவது நடப்பில் அண்டி இருக்கும் மக்கட்கூட்டம் இனம். சொலவடையின் பிறப்பிடமும் அதுவே. அண்ணன் அவர்கள் மிக அருமையாகச் சொல்லி இருக்கின்றார். “ஆடு மாடுகள் பல நிலப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக சென்று வந்தாலும் இரவில் அவை தனக்கான கொட்டிலில் தன் தோழமைகளோடு அடைந்து கொள்வது என்பதைக் கண்ட ஊர்ப்புறத்தார் சொல்லாடல் இது. இனம் என்பதற்கு இறுக்கமான பொருள் கொள்ளத் தேவையில்லை. ”

2.IMO, 4th point is is very weak. First three are good enough. YMMV.

இந்த மறுமொழியும் பொருளார்ந்த மறுமொழிதான்.  ஏன் வாழ வேண்டும் என்பது தலைப்பாக இருந்தாலும், சுருங்கச் சொல்லும் போது, ஏன், எதற்கு, எப்படி என்பனவற்றையும் உட்கொண்டாக வேண்டுமென்பதே அது இடம் பெற்றதற்கான காரணம்.  தம் மறைவுகாலத்துக்குப் பிறகு வருபவருக்கும் தீங்காய் இல்லாதபடிக்குச் சுவடுகள் இருக்கும்படியாக வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு வாழ்தல் இனிது.

https://maniyinpakkam.blogspot.com/2023/04/blog-post_25.html


எதுக்காக உயிர் வாழணும்?

1. உலகம் ஒவ்வொரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கின்றது. ஆக, புதுப் புது அனுபவங்களைக் கற்று இன்புற்றிருக்க வாழ்தல் இனிது. (Learning)

2. அண்டி இருப்போருக்கு நம் உழைப்பும் அக்கறையும் தேவையாக இருக்கின்றது. அதற்காக வாழ்தல் இனிது. (Supporting)

3. விரும்பிய வண்ணம் தன் செயல்களை வடிவமைத்துக் கொள்தலும் கட்டமைத்துக் கொள்தலுமாகப் பலவற்றையும் செய்து பார்க்க வாழ்தல் இனிது (experiencing)

4.மறைவுக்குப் பின்னரும் வாழ்ந்தமையின் பயனாக விட்டுச் செல்வதற்காகச் சுவடுகளைக் கட்டமைக்க வாழ்தல் இனிது(legacying)

It is not length of life, but depth of life.


4/13/2023

வெயில்


 ஒருநாள் அந்தவழியாக நடந்து கொண்டிருந்தேன். சரசரவெனும் ஓசை. திரும்பிப் பார்த்தேன். அல்லையில் இருக்கும் காட்டில் முளைத்திருக்கும் சோளப்பயிர்களின் தோகைகள் எல்லாம் வளைந்து நெளிந்து இளம்பச்சையில் அலையலையாய் அலையடித்துக் கொண்டிருக்க அந்த பசுங்கடலின்மீதாகப் பொழிந்தபடிக்கு மழை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நான் ஓடிச்செல்ல முற்பட்டேன். எதிர்த்திசையின் ஓரத்தில் கொங்காடையுடன் முத்துலட்சுமி தன்னுடைய ஆடுகளின் மீதான பார்வையைத் தொலைத்து விட்டு என்னைப் பார்த்தாள். என்னைப் பார்த்ததும் எனக்குப் பின்னால் துரத்திக் கொண்டு வரும் மழையையும் பார்த்திருக்க வேண்டும். ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ என்றபடிக்குப் பாட்டுப் பாடலானாள். சங்கிப் போயிருந்த நான் அந்தப் பாட்டில் திடுக்கிட்டு நின்றுவிட்டேன். ஆமாம். கிழக்கில் இருந்து வந்த மழை என்னை நனைத்து விட்டிருந்தது. அதே சக வேளையில் மேற்கில் இருந்து வரும் வெயில் என்னை உலர்த்திக் கொண்டிருந்தது. சிறுகுருவிகள் அங்கும் இங்குமாகப் பறந்து நுரைநாட்டியம் ஆடின. 

முத்துலட்சுமி மீண்டும் பாடினாள், ‘மழையும் பெய்யுது. வெயிலும் அடிக்குது. நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்.  நரிக்குங்கழுதைக்கும் கண்ணாலோம்’ அன்றைக்குப் பிறகு நிறைய முறை பலரும் இந்தமாரியான காட்சியில் இந்தப் பாட்டைப் பாடக் கேட்டிருக்கின்றேன். நானும் பாடியிருக்கின்றேன். நரிக்கும் கழுதைக்கும் கல்யாணம் நடந்ததா? அவர்களுக்கு குழந்தைகள் ஏதேனும் பிறந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதற்குப் பிறகு எனக்குத் தெரிந்து, பலருக்குக் கல்யாணம் ஆகி, அதாவது குரங்குகளோடு கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்து, பெயரன் பெயர்த்திகளைக் கூட கண்டிருக்கின்றனர். இப்படித்தான் எனக்கும் வெயிலுக்குமான அறிமுகம் உண்டாகிற்று.

வாகைத்தொழுவு வேலூரில் வக்கீல்நாயக்கர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தோம். காலையில் எழுந்ததும் அம்மாவென அடுக்களைக்குச் செல்வது வழக்கம். ஓட்டுக்கூரையில் இருந்து சிறுகீற்றுப் பிறந்து கண்ணாடிக்குழல்கள் போல ஆங்காங்கே வெயில்க்குழாய்கள் ஊடுருவித் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் நீள்வட்டங்களாக. அம்மாவை மறந்து அந்த வெயில்க்குழாய்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அந்தக் குழாய்களின் நடுவே துகள்கள், கோடானுகோடித் துகள் அங்கும் இங்குமாகப் பறந்து பறந்து ஆகாசவித்தைகள் காண்பித்துக் கொண்டிருக்கும். கொஞ்சநேரத்தில் அந்தத் துகள்கள் எல்லாம் காணாமற்போய் வெறும் வெயில்க்குழாய்கள் மட்டும் தன்நீட்டத்தைக் குறைத்து விட்டிருக்கும். பள்ளிக்கூடம் புறப்படும் போது வந்து பார்த்தால் அவை காணாமற்போயிருக்கும். இதன் அந்தரங்கம் பிடிபடுவதற்குப் பலகாலம் ஆகிற்று.

பத்தாம்வகுப்புத் தேர்வு எழுதி விடுமுறையில் இருக்கும் போது பள்ளியில் இருந்து ஓர் அழைப்பு. பள்ளியின் அறங்காவலர் எல்.ஜி.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியார், ஜிடி நாயுடுவின் மகளார் சரோஜினி அம்மாள் அவர்கள் அளித்த கொடையின் பேரில் ஒவ்வோர் வகுப்பிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு 12 நாட்கள் கல்விச்சுற்றுலா, நீயும் தெரிவாகி இருக்கின்றாயென்றார்கள். டி.கல்லுப்பட்டி எனும் ஊரில் இருக்கும் காந்திநிகேதன் ஆசிரமத்தில்  தங்கிக் கொண்டு, அவ்வளாகத்தில் இருக்கும் எல்லா கைவினை ஆலைகள், அருகில் இருக்கும் சில பல இடங்களெனப் போய்வருவதாக ஏற்பாடுகள். விடுதியில் ஒருநாள் மாலையில் ஏதோ பொருள்வாங்கி வரச் சொல்லி, “வெயிலூட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கடையில வாங்கிக்க” என்றார் உள்ளூர் ஆசிரியர்.

வா.வேலூரில் எங்கள் பக்கத்து வீட்டின் பெயர் கரியூடு. வீட்டுச் சுவர் முழுதும் சுண்ணாம்புக்கு மாற்றாய் கரிபூசப்பட்டு இருந்திருக்க வேண்டும். கரியூட்டு வேணுநாயக்கர் என்றார்கள். அப்படியானால் வேறென்ன வேணுநாயக்கர்கள் இருக்கின்றனர் என எதிர்க்கேள்வி கேட்டேன். சிந்தாமணி வேணுநாயக்கர், கொட்டாரத்துவீட்டு வேணுநாயக்கர் என்று அடுக்கினார்கள். நான் திகைத்துப் போனேன். சில ஆண்டுகளில் பக்கத்து ஊரான சலவநாயக்கன்பட்டிப் புதூருக்குக் குடிமாறிச் சென்றோம். அங்கே சென்றால் மச்சுவீட்டுக் கிருஷ்ணசாமி என்றார்கள். அப்படியென்றால் வேறென்ன கிருஷ்ணசாமி இருக்கின்றனர் எனக் கேட்டேன். பெரியவீட்டுக் கிருஷ்ணசாமி, செந்தோட்டத்துக் கிருஷ்ணசாமி என்று அடுக்கினர். இந்தப் பின்புலத்தில், கரியூடு, மச்சுவீடு, பெரியவீடு பார்த்துவிட்டோம். இதென்னடா வெயிலூடு என்ற வினா என் மண்டையைக் குடைந்தது. 

‘சார், நானும் கூடப் போய்ட்டு வர்றன்’ என்றேன். ‘நீ எங்கடா போற? பேசாம உக்கார்றா’ என்றார் இராமசாமி வாத்தி. உள்ளூர் ஆசிரியர் குறுக்கிட்டு, ‘வுடுங்க சார். பய்யன் ஆசப்படுதான்’. நெல்லை மொழியில்  நம் மனத்தில் பாலைவார்த்தார். இராமசாமி வாத்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும். உடன்போய், சக்கரை, பொட்டுக்கடலை எல்லாம் வாங்கி ஆகிற்று. ‘அண்ணா, கடை இங்க இருக்கு. அந்த வெயிலூடு எங்கங்ணா?’ என்று நான் என் கடையை விரித்தேன். ‘அங்கனா பார்றா. அதுதானாக்கும் வெயிலூடு’ என்று நாஞ்சில் மொழியில் ஓர் இழுவையைப் போட்டார் அந்த சமையற்கார அண்ணன். இஃகிஃகி. கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஓடுகளும் வெள்ளை வெளேரென இருந்தன. இளமஞ்சள் மின்னொளியில் அந்த வீடு தகத்தகவென பாலொளியில் பப்பரப்பேவேன இருந்தது. ஓ, இதுதான் அந்த வெயிலு? வெயிலூடாவென வந்து சேர்ந்தேன்.

காலைவெயில் கழுதைக்கு நல்லது. மாலைவெயில் மனிதனுக்கு நல்லது. இப்படியாக எவரோ என்றோ சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. பிற்பகலுக்கும் மாலைப்பொழுதுக்கும் இடையிலான நான்குமணி. சரியெனச் சொல்லி வீட்டின் முன்பாகப் போய் வெயிலில் உட்கார்ந்து கொண்டென். சுகமாக இருந்தது. நினைவுகள் பெருக்கெடுத்து ஓடின.

வெயிலில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் நம் உடற்தோலில் பட்டு ஊடுருவும் போது, தோலில் இருக்கும் கொழுப்புப்பசையை வைட்டமின்-டி ஆக மாற்றுகின்றது. அந்த வைட்டமின் டி, உடற்கொழுப்பில் சேமிப்புக்கிடமாகி எத்தனை காலத்துக்கும் நம்முள் இருந்து, தேவைக்கேற்ப பயன்பாட்டுக்குள்ளாகும். பற்றாக்குறை ஏற்படும் போது, நாம் உண்ணும் உணவில் கிடைக்கப்பெறும் உயிர்ச்சத்து-டி பயன்படுத்தப்படும். ஆனால் இத்தகைய கொள்மானம் மிகக்குறைவுதான். எனவேதான், வெயிற்புசிப்பு இல்லாத இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருக்க நேரிடுகின்றது. அதற்காக வைட்டமின் டி சத்துமாத்திரைகள் உட்கொண்டால், அவற்றின் பக்கவிளைவுகள் தோன்றலாம். ஆனால் வெயிலால் கிடைக்கப் பெறும் உயிர்ச்சத்துக்குப் பக்க விளைவுகள் இல்லையாம். ஆகவே வெயில் தரிசனம் நன்று. வெயிலில் குளித்த இவனுக்கு, மழையில் குளித்த வெயிலின் நினைவுகள்!



4/12/2023

your weakness is my strength


பொருளியல் உலகில் இந்தக் கூறு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. அதாவது, உன் வலுவீனமே என் வலு. எப்படி?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பிள்ளையை ’புவனா கோச்சிங் செண்ட்டர்’ அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை. அவர்கள் அனுப்புகின்றார்கள், இவர்கள் அனுப்புகின்றார்கள், அப்படி, இப்படி எனப் பீடிகை. நம் கேள்வி, ’தெரியாததைத் தெரியப்படுத்தும் வகுப்பா? அல்லது, வினாக்களை எப்படி எதிர்கொள்வதெனும் பயிற்சியா?’. உடனடி விடை, ‘இரண்டும்தான்’. ’அப்படியானால் அனுப்பத் தேவை இல்லை’, நம் பதில்.

வீடு இரண்டாகி அல்லோகலப்பட்டு விட்டது. அவர்கள் பிள்ளை விடிய விடியப் படிக்கிறாள். அது ரொம்ப முக்கியம். அல்லாவிடில் நல்ல பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. நான் வேண்டுமானால் என் அம்மாவிடம் பணம் வாங்கிச் செலவு செய்கின்றேன். அதறா புதறா. கண்ணீரும் கம்பலையுமாய்!

தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு இன்னமும் 10ஆம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. நம் பிள்ளை முதற்பத்து பதினைந்து இடங்களுக்குள் வருபவர். அது போக, பயிற்சிக்கான வளங்கள் ஏராளமானவை இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி இருக்க, வாராவாரம் போக ஒருமணி நேரம், வர ஒருமணி நேரம், வகுப்பு ஒன்னரை மணி நேரம், ஆக மொத்தம் மூன்றரை மணி நேரம், பிளஸ் ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் டாலர்கள் வரை பணச்செலவும். எதற்கு? பணத்தைக் காட்டிலும், பிள்ளையின் நேரவிரயம், அழைத்துச் சென்றுவர நம் நேரவிரயம். இத்தனையையும் கடந்து, கொள்கை அளவில் முரண்பாடான செயலைச் செய்கின்றோமேயெனும் குற்றவுணர்வுடன் வதைபட்டாக வேண்டும். ஆகவே, நோ!!

பதினோராம் வகுப்பில் பள்ளியிலேயே கட்டணமின்றி தேர்வு நடத்தப்படுகின்றது. அதில் கிடைத்த மதிப்பெண்களே போதுமானது. என்றாலும், கூடுதலாக்கிக் கொள்ளும் நப்பாசையில், குறைவாக மதிப்பெண் பெற்ற பாடங்களில் மேம்படுத்திக் கொள்ள, ஒரு மணிக்கு எண்பது டாலர்கள் வீதம் ஐந்து வகுப்புகளைப் பிறிதொரு பயிற்சி நிலையத்தில் கொள்வனவு செய்தாகிற்று. அதன்பின்னர் ஒருநாளில் தேர்வு. 36க்கு 35 மதிப்பெண்கள். மகிழ்ச்சி. அடுத்தடுத்த மாதங்களில் அறிவிப்பு. பல்கலைக்கழகங்களின் சேர்க்கைக்கு ACT, SAT தேர்வு மதிப்பெண்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இஃகிஃகி, போச்சா?

scarcity marketing

The fear of missing out can have a powerful effect on us. அதாவது அண்டி இருப்போரைக் கண்டு, அதை அடைவதற்கான வாய்ப்பு நமக்கு இல்லாமலே போய்விடுமோயென்கின்ற பதற்றம், அச்சம், பொச்சாவாமை என்பன நம்மைக் காவுகொண்டு விடும். இந்த வலுவீனம்தான் விற்பனையாளர்களின் வலு. ஐபோனிலிருந்து, கார்களிலிருந்து, எல்லாவற்றிலும் நாமே நம்மைத் தொலைத்துக்கொள்ளும் இடம் இதுதான். எருமைக்குப் புல் பிடுங்கலாம்; பெருமைக்குப் புல் பிடுங்கலாகுமா?

ஏக்கப்பாட்டினைக் கட்டமைத்து விட்டால் போதும். மக்கள் அந்தந்தப் பொருட்களைத் தேடிப் படையெடுப்பர். அதற்கான வழிகளாகச் சிலவற்றை, மார்க்கெட்டிங் உத்திகளாகப் பல்கலைக்கழகங்களிலேயே கற்பிக்கப்படுகின்றன.

1. இது இல்லாவிட்டால் உங்கள் எண்ணம் ஈடேறுவது கடினம் எனக் கட்டமைத்தல் எடுத்துக்காட்டு: கோச்சிங் இல்லாவிடில் மற்றவர்கள் உங்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவர்.
2. இருப்பு விரைவில் தீர்ந்து விடுவதாகக் கட்டமைத்தல், எடுத்துக்காட்டு: இன்னும் 3 பொருட்களே இருப்பில் உள்ளன
3. நுகர்வாளர்களுக்கிடையே போட்டியைக் கட்டமைத்தல். எடுத்துக்காட்டு: இன்னும் 12.5 நிமிடங்களுக்கு மட்டுமே இந்த விலை
4.உடனடிக் கொள்வனவு செய்வோர் முதலில் பயனை அடைந்தவர்களெனும் பெருமையை அடைவர். எடுத்துக்காட்டு: முதல் 100 பேருக்கு 10% விலைக்கழிவு
5. உடனடிக் கொள்வனவு செய்வோருக்கு கூடுதல் பொருள்/சேவை விலையில்லாமல். எடுத்துக்காட்டு: ஃபோன் வாங்கினால் உறை விலையின்றி முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே

இப்படிப் பட்டியல் நீளுகின்றன. இவற்றுக்கு அடிப்படை, எப்படியாகினும் நுகர்வாளரிடத்திலே ஏக்கப்பாட்டினைக் கட்டமைத்துத் துரிதப்படுத்தி விட வேண்டும் என்பதுதான். அப்படியானால் நாம் எதையுமே வாங்கத் தேவை இல்லையா? அப்படியும் இல்லை. தேவைக்கு ஏற்றாற்போல உகந்தவற்றை அதிக விலை கொடுத்தேனும் வாங்கத்தான் வேண்டும். “தேவைக்கு ஏற்றாற்போல” என்பது முக்கியம். இஃகிஃகி. நான் இன்னமும் ஐபோன்-6தான் வைத்திருக்கின்றேன். அதுவே தேவைக்கும் அதிகமானதாக இருக்கின்றது.



4/08/2023

perceptions

காரணமே இல்லாமல்
ஒருவரை பிடிக்கல;
காரணமே இல்லாமல் ஒருவரை பிடிச்சி போச்சு,
இதற்கு பின்னால்
ஒரு காரண காரிய இருக்கும்.
அது ஏதேனும் ஒன்றை காரணமாக அமைந்து இருக்கும்.
இது பெரும்பாலும் 
உணர்வு சார்ந்த காரணமாக இருக்கலாம்.



ஒருவரைப் பார்க்கின்றோம். நம்முள் சட்டென ஒரு நிலைப்பாடு உருவெடுக்கும். அந்நபரின் தோற்றம்,  ஆடை அணிகலன்கள், பேச்சுநடை, அங்க அசைவுகள் இவற்றின் பேரிலான நம் கடந்தகால நினைவுகளின்  அடிப்படையிலான யூகங்கள் அந்த நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கும். பின் அது சேமிப்பிலும் பதிவாகும். இப்படிப் பதிவாகும் நினைவுப்பதிவுகள்தாம் நாள்தோறும் எண்ணற்ற நிலைப்பாடுகளை நம்முள் விதைக்கின்றன. அவற்றைக் கேள்விக்குள்ளாக்காத வரையிலும், அது தொடரும். இப்படித்தான் ஒருவர் அவுட் டேட்டட்(தேய்வழக்கு) ஆவது.

மேற்கண்ட காணொலியைப் பார்க்கின்றோம். ஒருவருக்குப் பாலுணர்வு அடிப்படையிலான பார்வை அமையக் கூடும். ஒருவருக்கு, உடற்கட்டமைப்பு, அதன்பின்னால் ஆன உணவுப்பழக்கம், உடற்பயிற்சி என எண்ணங்கள் விரியலாம். மற்றவருக்கு மயிர்ப்பராமரிப்பு, ஒப்பனை, அதுசார்ந்த கூறுகள் குறித்தான கவனக்குவியல் ஏற்படலாம். மற்றவருக்கு நடன அசைவுகளின் கோர்வை குறித்தான அறிதல் ஏற்படலாம். இன்னொருவருக்கு அரங்க அமைப்பின் பின்னணி, அறைகலன் குறித்த நாட்டம் பிறக்கலாம். இப்படி எல்லையே இல்லை. அது, அவரவரின் கடந்த கால அனுபவத்தையும் கொடுக்கப்படும் முன்னுரிமையையும் பொறுத்து அமையும்.

இருவர் உள்ளம் என்கின்ற படத்தில் வரும் பாடல் இப்படிச் சொல்கின்றது. பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்,  பாடல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், கொடிகள் எல்லாம் பலவிதம், கொடிக்குக் கொடி ஒருவிதம், கொண்டாட்டம் பலவிதம், நானதிலே ஒரு விதம், இரவு பகல் என்று எதுவுமில்லை இன்று, உறவில் இன்பம் கண்டு உருகிடிவோம் என்றும்!

People see what they want to see! Often, what people want to see never has anything to do with the truth.


 

4/07/2023

We The People

 

அமெரிக்கா

உலகின் முதன்மை நாடாகக் கருதப்படுவது அமெரிக்கா. நாட்டின் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து தொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த நாட்டின் விழுமியங்களை, அரசியல் சாசனத்தை, தொடர்ந்து முதன்மை நாடாக இருந்து வருவதன் அடிப்படையைப் பெரும்பாலும் எவரும் கருத்தில் கொள்வதே இல்லை.

மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை என்பதுதான் அச்சாணி. அரசின் நெஞ்சுத்துடிப்பென எழுதப்பட்டிருப்பது, “We The People".

1787ஆம் ஆண்டு எழுதப்பட்டது அரசியல் சாசனம். வரையறுப்பதன் முதற்கட்டங்களில் இடம் பெற்றவர்கள் மாணவர்கள். அடுத்த கட்டமாக இடம் பெற்றவர்கள் தோராயமாக 40 வயதுக்குட்பட்டவர்கள். விர்ஜீனியா திட்டம் முன்வைக்கப்பட்டது. மாற்றாக நியுஜெர்சி திட்டம் முன்வைக்கப்பட்டது. விர்ஜீனியா திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. விர்ஜீனியா திட்டத்தின் முதன்மையாளரான ஜேம்ஸ் மேடிசனின் வயது அப்போது 30+. கடைசி கட்டப் பணிகளில் பங்காற்றியவர்களின் சராசரி வயது 42. ஜோநாதன் டேட்டன் என்பார் 26 வயதுடையவர்.  பெஞ்சமின் பிராங்ளினின் வயது 81.

மார்ச் 26, 2023 அன்று டென்னசி மாகாணத்தின் பள்ளியொன்றில் துப்பாக்கிச்சூடு இடம் பெற்று, ஆறு பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். அதன் நிமித்தம், துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமெனச் சொல்லி மக்கள் போராடுகின்றனர். மாகாண அவைக்குள்ளும் கொந்தளிப்புகள் இடம் பெறுகின்றன. அவையின் மாண்புக்குப் பெருமளவில் குந்தகம் விளைவித்ததாகச் சொல்லி மூன்று டெமாக்ரட் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய அவை முற்படுகின்றது. ஏப்ரல் 6, 2023 அன்று இரண்டு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த பொதுத்தேர்தலுக்கான இடைவெளி ஓராண்டுக்கும் மேலாக இருந்தால், சிறப்புத் தேர்தல் இடம் பெற்றாக வேண்டும். அந்த சிறப்புத் தேர்தல் இடம் பெறும் வரையிலும் அந்தந்தப் பகுதிகளுக்கான மாகாண அவை உறுப்பினராகப் பணிபுரிய, அந்தந்தப் பகுதி உள்ளூராட்சி மன்றங்களால் தற்காலிக உறுப்பின்ர் நியமிக்கப்படுவார். இந்த இரண்டு பகுதிகளுக்கும், தகுதி இழப்புச் செய்தவர்களையே மீண்டும் நியமிக்கப் போவதாக உள்ளூராட்சிகள் அறிவித்து இருக்கின்றன. ஆக, இவர்கள் மீண்டும் அவைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

தகுதி இழப்புச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் நியமனம் செய்யப்பட்டாலோ, தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்தாலோ, அவர்களை மீண்டும் ஒருமுறை, அதே காரணத்துக்காய் வாழ்நாள் முழுமைக்கும் தகுதி இழப்புச் செய்ய முடியாதென்பது அரசியல் சாசனம். Constitution says members can be expelled for disorderly behavior with a two-thirds majority vote, they cannot be expelled “a second time for the same offense.”

இவையெல்லாம் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? ஒருவரின் போராட்ட உணர்வு மதிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை என்பதாலேயே எதையும் முடக்கிவிடக் கூடாது. அப்படியான நிலை ஓங்குமானால் மக்களாட்சி, “We The People" என்பது அடிபட்டுப் போகும் என்பதுதான்.

தமிழ் அமைப்புகளில் இருப்போர் இத்தகைய அமெரிக்க விழுமியங்களைக் கற்றுணர முன்வர வேண்டும். குழுவாத வெறிகொண்டு அலையக் கூடாது. அல்லாவிடில், படிப்படியாக அது பெரும் தீங்காய் முடியும். எப்படி? இனவாதிகளும் தீவிரவாதம் தழுவியவர்களும் சொல்லி வருவது இதைத்தான், “குடிவரவாளர்களால் நாட்டின் இறையாண்மை, பண்பாடு சீர்குலைந்து வருகின்றது. ஆகவே இன்னாருக்கு வாக்களிக்க வேண்டும்” போன்றவையெல்லாம் அவர்களின் வாதங்கள். அதற்கு வலுச்சேர்க்கும்படியாக குடிவரவாளர்களும் செயற்படும்போது அது அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கவே செய்யும்.