4/04/2021

வெற்றி இரகசியம்

தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன இவ்விரு கட்சிகளும். சராசரியாக வாக்குச்சாவடி ஒன்றுக்கு ஆயிரம் வாக்காளர்கள். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குமான வாக்குச்சாவடிகள் தோராயமாக 250. தற்போதை நிலவரப்படி, எல்லா சாவடிகளிலும் இவ்விரு கட்சிகளுக்கும் சாவடிக்குழுக்கள் உண்டு. வேறெந்தக் கட்சிக்கும் இத்தகைய அமைப்பு இல்லை.

வெற்றி தோல்வி என்பது இக்குழுக்களுக்கு இல்லை. இயன்றமட்டிலும் தத்தம் தரப்புக்கான வாக்குகளைக் கொண்டு சேர்த்துவிட வேண்டுமென்பதுதான் இலக்கு. அதிமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு சாவடிக்குழுவிலும் 70 பேர் வரையிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதில் 30 பேர் வரையிலும் பெண்கள். இவர்கள், தலா பத்து வாக்காளரைச் சென்று சந்தித்தல், தொடர்ந்து தொடர்பில் இருத்தல் போன்றவற்றைச் செய்வர். திமுகவைப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குழுவிலும் 15 பேர் வரையிலும் இருக்கின்றனர். ஒவ்வொரு குழு உறுப்பினரும் 100 பேர் வரையிலும் சென்று சந்திக்க வேண்டும்; தொடர்பில் இருக்க வேண்டும். தத்தம் பங்கில் இருக்கின்ற வாக்காளரின் நல்லன கெட்டன எல்லாவற்றுக்கும் இவ்விரு கட்சியிலும் இந்தக் குழுவே பொறுப்பு.

திமுக வாக்குச்சாவடிக் குழுவில் ஒரு ஒருங்கிணைப்பாளர், இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள் (ஒருவர் பெண்), எஞ்சிய 12 பேருள் 5 அல்லது 6 பேர் பெண்களாக இருக்கின்றனர். தேவையின் பொருட்டு அவ்வப்போது தற்காலிகப் பணிகளுக்கென கூடுதல் உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களின் தலையாய பணி, வாக்காளர் பட்டியல் பராமரிப்பு, வாக்காளர் சேர்ப்பு, சரிபார்த்தல், சாவடி முகவர் பணிகள், வாக்காளர் அட்டை பெறுதல், கட்சித் தகவற்தொடர்பு என்பதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருவர் அந்தந்த பகுதி தகவற்தொழில் நுட்பக்குழு(IT) உறுப்பினராகவும் இருப்பர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், கட்சிசார்பு கண்டறிய முடியாதவர்களாக ஒரு சில நூறு வாக்காளர்களே இருப்பர். அந்த அளவுக்கு இவ்விரு கட்சிக் குழுக்களிடம் தரவுகள் இருக்கும். வாக்குச்சாவடிக் குழுக்களுக்கென பிரத்தியேக வாட்சாப் குரூப்களும் உண்டு. அவர்கள் இயன்றமட்டிலும் வாக்காளரின் எண்களையும் சேகரம் செய்து வைத்திருப்பர். தொடர்ந்து, பிறப்பு, இறப்பு, கோவில் விழாக்கள், பொது விழாக்களென தத்தம் பங்கு வாக்காளர்களிடம் தொடர்பில் இருக்கும் போது தகவல்களைச் சேகரம் செய்து கொண்டே இருப்பர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அலுவல், சுகதுக்கங்களென எதற்கும் இவர்களைச் சென்று பார்க்கும் வகையில் இவர்கள் அந்தந்தப் பகுதியில் விளங்குவர்.

குழுவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் குறைந்தது நான்கு அல்லது ஐந்து தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாகவும் இருப்பர். அந்தந்தப் பகுதியின் சாதி அமைப்புக்கொப்பவும் குழுவின் அமைப்பு இருக்கும். தனிப்பட்ட வேலைகளுக்காக இவர்களை அணுகுபவர்கள் அந்தந்தப் பணிகளுக்கேற்ப உகந்த தொகை வழங்குவது உண்டு. அதை எவரும் இலஞ்சமாகக் கருதுவதில்லை. தன்னுடன் பயணித்து வந்து, உடனிருந்து, தேவையை நிறைவேற்றிக் கொடுத்தமைக்கான ஊதியமென்பதாகவே கருதப்படுகின்றது. ஊரக மக்களின், பாட்டாளிகளின் யதார்த்தம் அப்படித்தான். அவர்களுக்கும் குடும்பம், தேவைகள் இருக்கின்றன என்பதான புரிதல். சமூக அறம்!

குடிமைப்பணிகள் என்பன இப்படித்தான். தேர்தல் காலத்தின் போது மட்டும் உரக்கப் பேசி உலா வருவது மட்டுமேயல்ல. இப்படியான பொதுப்பணியாளரைக் கண்டால் ஒரு சிரிப்பைக் கொடையாகத் தாருங்கள். இயன்றால் நாமும் சேர்ந்து பங்களிக்கலாம். சமூகத்தைச் செம்மைப்படுத்தலாம். சோசியல் மீடியாவில் வெற்றுக்கூச்சல் போடுவதிலோ, ஃபேக்நிவூசுகளைக் கண்மூடித்தனமாகப் பகிர்ந்து சுய இன்பம் கொள்வதிலோ இல்லை நம் கடமை. வாழ்க ஜனநாயகம்!!

#தேர்தல்ஜூரம்

-பழமைபேசி, pazamaipesi@gmail.com