6/29/2024
மற்றும்
தற்போது 'அருவி' எனும் பெயரில் இதழ் வெளியாகி இருக்கின்றது. படங்களை நீக்கிப் பார்த்தால் ~20 பக்கங்கள் வரலாம். அந்த 20 பக்கங்களில், “மற்றும்” எனும் சொல், 61 முறை இடம் பெற்றிருக்கின்றது. படங்களுக்குள் இருக்கும் “மற்றும்”களைக் கணக்கிலெடுத்தால் இன்னும் கூடுதலாய் வரும். விழாமலரில் எத்தனை முறை அச்சொல் இடம் பெற்றிருக்கப் போகின்றதென்பதைக் காண ஆவலாய் இருக்கின்றேன். இஃகிஃகி.
o0o0o0o0o
‘மற்றும்’ என்னும் சொல் அங்கு தேவையற்றது. ’தேவையற்ற அச்சொல் அங்கு இருப்பதால் அங்கு இருக்க வேண்டிய ஒரு சொல்லுக்கு வாழ்வு போய்விடுகின்றது’ எனக் குறிப்பிட்டிருக்கின்றார் மா.நன்னன். அப்படிப் பறிபோகும் சொற்கள்தாம் எவை?
ஆங்கிலத்திலே, பெயர்களை வரிசையாகச் சொல்லி ’அண்டு’ இட்டுக் குறிப்பதால் அந்த வரிசை அத்தோடு முடிந்ததெனக் கொள்வது மரபு. அதே மரபையொட்டித்தான் இந்த ’மற்றும்’ என்கின்ற பிறமொழிக் கலப்பு தமிழ்மரபையும் சொற்களையும் சிதைக்கின்றது. எப்படி?
மா, பலா, வாழை முதலான பழங்கள் வாங்கி வந்தான் பழமைபேசி. மா, பலா, வாழை உள்ளிட்ட இன்னும் சில(முதலிய) பல பழங்களை வாங்கி வந்தான் எனும் பொருளைக் குறிக்கின்றது இச்சொற்றொடர்.
மா, பலா, வாழை ஆகிய பழங்கள் வாங்கி வந்தான் பழமைபேசி. ’ஆகிய’ எனும் சொல், வரிசைப்பட்டியலை நிறைவு செய்து விடுகின்றது. குறிப்பிடப்பட்டவை மட்டுமே, அதற்கு மேல் எதுவுமில்லை.
மா.நன்னன் அவர்களின் பெயர், அறிவிப்பு நறுக்கில் இடம் பெற்றிருப்பதாலே இதையெல்லாம் நாம் பேச வேண்டியதாயிருக்கின்றது! -பழமைபேசி Dated: March 2, 2024
o0o0o0o0o
"கணக்கு மற்றும் ஆங்கிலப் பாடங்களில் அவன் தேறவில்லை".
"திருச்சி மற்றும் தஞசாவூர் மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது".
மேற்காணப்பெறும் இரு தொடர்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் 'மற்றும்' என்னும் சொல் அங்குத் தேவையற்றது. தேவையற்ற அச்சொல் அங்கு இருப்பதால் அங்கு இருக்கவேண்டிய ஒரு சொல்லுக்கு வாழ்வு போய் விடுகிறது. மேலும் தமிழ் மொழியினுடைய ஒரு சிறப்பியல்பும் அழிந்து விடுகிறது.
இப்படி எழுதும் வழக்கம் அண்மைக் காலத்தில் தமிழில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகும்: இப்புதிய வழக்கம் ஏற்பட்டதற்குக் காரணம் நமக்குள்ள ஆங்கிலத் தொடர்புதான். ஆங்கிலத்தில் ’அண்டு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிற நாம் அதே முறையில் அச்சொல்லை மொழிபெயர்த்து 'மற்றும்' என்னும் சொல்லாகத் தமிழில் பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். இந்த வழக்கம் பண்டைய தமிழ். இலக்கண இலக்கியங்களிலோ, இடைக் கால இலக்கண இலக்கியங்களிலோ, பிற்கால இலக்கண இலக்கியங்களிலோ இல்லை. இக்கால இலக்கியங்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், அலுவலகக் கடிதப் போக்குவரத்துகள் போன்றவற்றில் மட்டுமே இவ்வழக்கம் காணப்படுகிறது.
அச்சொல் தேவையற்றதாயின் அப்பொருளை வேறு எப்படித் தெரிவிக்க முடியுமென்றால், அதற்கு இலக்கிய இலக்கணங்களைத் தேடிப் போக வேண்டியதில்லை. கல்லாத தமிழ்ப் பொது மக்கள் அப்படிப்பட்டவற்றை எப்படிக்கூறுகிறார்கள் என்று பார்த்தாலே போதும். சான்றாக அவனும் நானும், நேற்றும் இன்றும், சோறும் குழம்பும் என்பனவற்றைக் காணலாம். மேலும் அவர்கள் 'உம்' என்னும் அவ்விடைச் சொல்லைப் பயன் படுத்தாமலேயே அத்தகைய தொடர்களின் பொருள் சிறிதும் மாறாமல் வெளிப்படுத்துவதையும் காணலாம்.
சான்றாகப் பூரிக் கிழங்கு, இராப்பகல், வம்பு தும்பு போன்றவற்றைக் கூறலாம். இத் தொடர்களில் 'உம்' என்னும் இடைச் சொல் இல்லாமலேயே அச்சொல் இருந்தால் அங்கு என்ன பொருள் கிடைக்குமோ அதே பொருளை ஏனைய இரண்டு சொற்களும் சேர்ந்த சேர்க்கைச் சிறப்பால் எளிதாகவும் தெளிவாகவும் ஐயந்திரிபறவும் பெற்றுவிட முடிகிறது. ஆகவே "உம்: போன்ற இடைச்சொற்களைப் பயன்படுத்தியும் அவ்விடைச் சொல் இல்லாமல் வரும் தொடர்களில் தொகை ஆற்றலாலும் பெறப்படும் பொருளை ’மற்றும்' என்னும் வேறொரு சொல்லைக் கொண்டு பெற வைக்க முயல்வது தேவைதானா? நல்லதுதானா? என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் 'மற்றும்” என்னும் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால் விரைவில், பூரி மற்றும் கிழங்கு, இட்டிலி மற்றும் சட்டினி என்றெல்லாம் கூட பேசவும் எழுதவும் வேண்டி வந்துவிடும். -மா.நன்னன், தவறின்றித் தமிழ் எழுதுவோம், பக்கம் 20.
o0o0o0o0o
We all need people who will give us feedback. That's how we improve. -Bill Gates
-பழமைபேசி.
6/28/2024
பேரின்பம்
அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெளியில் செல்வது போவதென இருப்பர்.
எப்போதாவது ஒருநாள், டாலர் ஸ்டோர்களில் ரெண்டு டாலர், மூன்று டாலருக்கு பையனுக்கு ஏதாவது விளையாட்டுப் பொருள் வாங்கிப் போவேன். அப்படித்தான் ஒருநாள் “கார்” ஒன்று வாங்கிப் போனேன். அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி.
அடுத்தடுத்த வார ஈறுகள் சென்ற போதெல்லாம் கவனித்தேன். அந்த காரின் பெட்டியை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்பாட்டுக்கு. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”. அடுத்தடுத்த வாரங்கள். அந்தப் பெட்டி அடிவாங்கி, அழுக்காகி, நைந்தே போயிருந்தது. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”.
அடுத்தவாரம். சென்றமுறை சிவப்புவண்ணக்கார். இம்முறை நீலவண்ணம் வாங்கிக்கொள்ளலாமென வாங்கிக் கொண்டோம். பிரித்தெடுத்து, காரை பையில் வைத்துக் கொண்டு, பெட்டியை மட்டும் பிரிக்காதபடிக்கு மீண்டும் ஒட்டி, கொண்டு போய்க் கொடுத்தோம். ஒரே சிரிப்பு. ஓடோடி வந்தான். வாங்கி உள்ளே பார்த்தான். தூக்கிவீசி விட்டு, மீண்டும் பழைய பெட்டியையே ஓட்டலானான்.
நமக்குப் படு ஏமாற்றம். அண்ணன் பார்த்துச் சிரித்தார். நான் பையைத் திறந்து, புதுக்காரை வெளியில் எடுத்துக் கொடுத்தேன். அவன் கண்டுகொள்ளவே இல்லை. பெட்டிக்குள் வைத்து, புதிதாய்க் கொடுப்பது போலக் கொடுத்தும் பார்த்தேன். கண்டுகொள்ளவே இல்லை. அந்த வாரத்தங்கல் பெருந்துக்கமாகப் போய்விட்டது நமக்கு. அண்ணன் சொன்னார், “மணி, எடுத்துட்டுப் போயி ரிட்டர்ன்பண்ணிட்டு, ரெண்டொரு வாரம் கழிச்சி வேற எதனா வாங்கியாங்க, செரி ஆயிருவான்”.
ஒருமாதமே ஆகியிருக்கும். மஞ்சள்வண்ணக்கார், பதினைந்து டாலர்களுக்கு, ரிமோட்டுடன், கனடியன் டைர் எனும் கடைக்குச் சென்று தனிக்கவனத்துடன் வாங்கி வந்தேன். மனசெல்லாம் உலுக்கம். என்ன ஆகுமோ ஏது ஆகுமோவென.
“தம்பி, இங்கபாரு, இந்தவாட்டி என்னானு”. அமைதியாகக் கிட்ட வந்தான். கையில் வாங்கி, எடையைக் கணித்தான். உலுக்கினான். உட்கிடை இருப்பதை உணர்ந்து கொண்டான். இந்தப் பெட்டி, பளபளவென உயர்தரத்தில் இருப்பதைக் கவனித்துக் கொண்டான். சமையலறையில் இருக்கும் அவனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சமையலறைக்குள் போனான். வெளியில் வந்தான். பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே, படுக்கையறைக்குள் போனான். “அம்மா, இங்க வாங்க நீங்க”. கொஞ்ச நேரத்தில் முன்னறைக்கு வந்தான், வெறும் பெட்டியோடு. தரையில் ஓட்டுபவன், பக்கவாட்டில் சுவர்களினூடாக ஓட்டினான், ஓட்டினான், ஓட்டிக்கொண்டேவும் இருந்தான். சாப்பிடக் கூப்பிட்டாலும் அவனுக்கு வர விருப்பமில்லாது, ஓயாமல் ஓட்டிக் கொண்டே இருந்தான்.
“தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள பத்திரமா இருக்கு”.
புரியவே இல்லை. “இதென்னுங்ணா இது? புதுக்காரு, இதுக்கும் ரிமோட் காரு, இப்படிப் பண்றானே?”
“அது மணீ, சந்தோசம்ங்றது கார்ல இல்ல. நம்மகிட்டக் கார் இருக்குங்றதுல இருக்கு சந்தோசம். நீங்க வாங்க சாப்ட்லாம்”.
-பழமைபேசி.
6/25/2024
பெருமையும் சிறுமையும் தான்தர வருமே
நான் எட்டாம் வகுப்பு அரையாண்டு விடுமுறைக்கு என் பாட்டி ஊருக்குச்(லெட்சுமாபுரம்) சென்றிருந்தேன். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுத் தோட்டத்துக்கு அனுப்பிவிடுவார் பாட்டி. போகும் போது தாத்தாவுக்கு திருகணிச் செம்பில் காப்பி கொண்டு செல்ல வேண்டும். பால்கரந்த பின்னர், இரவுக் காவலுக்காய் தோட்டத்திலேயே தங்கியிருந்த தாத்தா தூக்குப்போசியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார். வீட்டுக்குச் சென்று, குளித்து, சாமிக்குப் பூசனை செய்து, கும்பிட்டுவிட்டு, காலைச்சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மீண்டும் தோட்டம் வர எப்படியும் காலை 10 மணி ஆகிவிடும். சில நாட்கள் வெளியூர், அல்லது உடுமலைப் பேட்டைச் சந்தையெனக் கிளம்பிவிடுவார். அப்படியான நாளொன்றை முன்கூட்டியே கணித்து வைத்திருந்தோம்.
தோட்டம் என்றால் நமக்கு எல்லாமும் வேலன் அவர்கள்தான். காலை 7 மணிக்கு வந்தால் மாலை 7 மணி வரையிலும் தோட்டத்தில் அருகு தோண்டுதல், தண்ணீர் பாய்ச்சுதல், உரம் வைத்தல், உழவு ஓட்டுதல், எரங்காட்டிலிருந்து மண்ணடித்தல் என ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார். என்னைக் கண்டதும் பரவசமாகிவிடுவார். இன்னதென்றில்லை, எங்களுக்கு வானமே எல்லை; பலதும் பேசிக்கொண்டிருப்போம். அவருக்கு எம்ஜிஆர் தத்துவப் பாடல்கள் மிகவும் பிடித்தமானவை. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடு ராஜா என வாய்விட்டுப் பாடுவார்.
அந்தநாள் இப்படியாகக் கனிந்தது. இரண்டு ரூபாய் நோட்டொன்று கைமாறியது. தக்காளிக்கூடை, கூடைக்குள் நாய்க்குக் கூழ் கொண்டு வந்த தூக்குப்போசி. எடுத்துக் கொண்டு கிளம்பினார். “நான் வீட்டுக்குப் போய்ப் பசியாறிவிட்டு, வரும் போது உங்களுக்கு இட்லிகளும் வாங்கி வந்து விடுகின்றேன்”.
வேலன் அவர்கள் வரும் வரையிலும் தோட்டத்துக்குள் இருக்கும் தாத்தய்யன் கோயில் சாயமரத்து ஊஞ்சலில் தூரி ஆடிக் கொண்டிருந்தேன். வெகுதூரத்தில், கிணற்றடி மதிற்சுவருக்குள் தலைச்சும்மாடு ஒன்று படிப்படியாக உயரும் காட்சி தெரிந்தது. நான் சாளைக்கு ஓடோடிச் சென்றேன். சென்று சேர்ந்த கொஞ்சநேரத்தில் வேலன் வந்து விட்டார்.
தூக்குப் போசி நிறைய கள்ளு. பரந்திருந்த கொட்டமுத்து இலையில் 3 இட்லிகள், இரு தேங்காய்ச் சிரட்டைகளில் சட்னியும் சாம்பாரும். வெறும் வயிற்றில் வேண்டும். குழந்தைப்பிள்ளை. முதலில் இரண்டு இட்லிகளைச் சாப்பிடுங்க என்று சொன்னார் வேலன். பேச்சுத்தட்டாமல் இரண்டு இட்லிகளையும் சாப்பிட்டேன். அமோக ருசியாய் இருந்தது. மற்ற இரண்டுக்கும் ஆசைப்பட்டேன். தடுத்து விட்டார். போசியில் இருக்கும் கள்ளில் கொஞ்சத்தை திருகணிச்சொம்புக்குள் ஊற்றிக் குடிக்கலானேன். பக்கத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருந்தவர், நாய்க்குட்டி குடிப்பதை மற்றவர் வேடிக்கை பார்க்கும் பாங்கில் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வயிறு நிரம்பி விட்டிருந்தது. இனி முடியாதென்றவுடன், மிச்சத்தை அவர் மாந்திக்கொண்டார். நாளெல்லாம் ஒரே சிரிப்பு. வானத்தையே வில்லாய் வளைத்து விட்ட சாகசம்!
ஆண்டுகள் ஓடோடி விட்டன. கல்யாணம் ஆகி, புதுமனைவி. வீட்டில் இருந்தோம். மாலை வேளை. அம்மா, அண்ணி, மனைவி மூவரும் பைகளைத் தூக்கிக் கொண்டு சூலூர்ச் சந்தைக்குச் சென்றிருந்தனர். ஆளாளுக்குப் பைகளைக் காவிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மருமகள்களைப் பார்த்து அம்மா சொன்னது, “போற வழியில பைய்யனுக்கு குடிக்கிறதுக்கு எதனா வாங்கிட்டுப் போகலாம்”. இஃகிஃகி, மனைவியார் பேஜாராகி விட்டார். “அம்மா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என மறுப்புத் தெரிவித்தவர், வீடு திரும்பிய பின்னர் என்னிடம் கடிந்து கொண்டார், “ஏன் வீட்டில இருக்குறவங்களையெல்லா இப்படி பயமுறுத்தி வெச்சிருக்கீங்க?”. “இல்லம்மா, அது பயம் கெடியாது. அன்பால் விளைந்தது. நம்பிக்கையால் விளைந்தது” எனச் சொன்னேன்.
மாந்தன் இருக்கும் வரையிலும் குடி இருக்கத்தான் செய்யும். அது பொறுப்புடன் கூடியதாய் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு வில்லத்தனமாய்ச் சமூகம் பார்க்கின்றதோ அதே அளவுக்கு ஈனத்தனமானதாகவும் அது அமையும். அதாவது, அமெரிக்காவில் இருந்தும், வீட்டின் மையத்தில் பெண்கள், பிள்ளைகள் எல்லாம் இருக்க, ஆடவர் மட்டும் வாகனத்தரிப்பிடத்துக்குள் சென்று துண்டு போட்டுக் குடிக்காத குறையாக இருந்து குடித்துவிட்டு வருவது போன்று.
கள்ளக்குறிச்சி சம்பவம். காரசாரமான விவாதங்கள். நான் கள்ளுக்குடிக்கும் படங்களைப் போட்டு விட்டேன். இயல்பான படங்கள் அவை. பொதுவெளியில் கிடைக்கக்கூடிய படங்கள்தான். பகிர்ந்ததே நார்மலைஸ் செய்யத்தான். இருந்தும், அதனை மீண்டும் பகிர்ந்து, பெண்கள் எல்லாம் இருக்கக் கூடிய இந்த குரூப்பில் இது போன்றவற்றை எப்படிப் பகிரலாமென வாதவிவாதம்.
கேள்வி முயல்; பீடுபெற நில்! Drink Responsibly.
-பழமைபேசி.
6/23/2024
இலக்கியக்கூட்டம் - 2
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.
-தேவதேவன்
கவிதையை வாசித்தமட்டிலும் சிலருக்குப் புதிராகத் தெரிந்திருக்கும். சிலருக்கு, உணவுச்சங்கிலி நினைவுக்கு வந்திருக்கக்கூடும். ஒரு உயிரினத்தை பிறிதோர் உயிரினம் உண்கின்றது. படிநிலைகளைக் கடந்து கடந்து மேல்நோக்கி வருங்கால் மனிதன் உச்சத்தில் இருக்கிறான். ஆட்டம் போடுகின்றான். அவனுக்கானதுதான் இந்தக் கவிதை. அப்படியானால் இக்கவிதையானது இந்த மனிதனுக்கு என்ன சொல்கின்றது?
நிலையாமையை உணர்த்துகின்றது. நீரின் மேற்பரப்பில் ஒரு மீன். துள்ளி விழுகையில் ஒரு சூடான பாறையின் மீது போய் விழுகின்றது. சூடுதாங்காமல் மீண்டும் துள்ளுகின்றது. துள்ளலைக் கண்ட பறவை ஒன்று விரைவாய்ப் பறந்து வந்து தம் காலால் போட்டு அமுக்குகின்றது. காலில் அகப்பட்டதால் மீண்டும் துள்ளுகின்றது அம்மீன். இது துள்ளுவதைக் கண்டதும் தம் அலகுகளால் கவ்வி விழுங்குகின்றது பறவை. மூச்சுத்தப்பி மரிக்கின்றது மீன். மரித்த அக்கணத்தில் பறவையாகவே ஆகிப் போகின்றது அம்மீன். எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில். இதைத்தானா இக்கவிதை சொல்கின்றது? இல்லையென்பதே நம் புரிதலாக இருக்கின்றது. ஏன்?
கவிதைக்குத் தலைப்பு என ஒன்று இருக்க வேண்டும்தானே? தலைப்புக்கான தெரிவுகள் என்னவாக இருக்கலாம்? மீன் என்பதாக இருக்கலாம். பறவை என்பதாக இருக்கலாம். துள்ளல் என்பதும் ஒன்றுக்கும் மேற்பட்டுப் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளதாலே, துள்ளல் என்பதும் தலைப்பாக இருக்கலாம்.
மீன் என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது இழப்பின் குறியீடாக உருப்பெறும். பறவை என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது கொள்தல்/வெற்றி என்பதன் குறியீடாக உருப்பெறும். துள்ளல் என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது செயற்பாட்டின் குறியீடாக அமையும். இங்கே கவிஞர் தேவதேவன் அவர்கள் நமக்குக் கொடுத்திருப்பது, “துள்ளல்” என்பதேயாகும். அதுதான் கவிதையின் வெற்றியாக, சிறப்பாகப் பார்க்கின்றேன். கவிதையின் பரிமாணத்தையே ஒட்டுமொத்தமாய் மாற்றிப்போட்டு விடுகின்றது அத்தலைப்பு.
துள்ளல் என்பதில் இருவகையுண்டு. தம் பாதுகாப்புக்காய், உரிமைக்காய், விழுமியத்துக்காய் செயற்படுவது ஒருவகை. முன்னணியில் இருந்து கொண்டு, செயற்பாடு, விழுமியம், நோக்கம், குறிக்கோள் முதலானவற்றின்பாலல்லாது, விளம்பரத்துக்காய், தன்முனைப்புக்காய், அப்போதைய இன்பத்துக்காய்ச் செயற்படுவது இரண்டாவது வகை. இவ்விருவகையானவையும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன இக்கவிதையுனுள்.
நீரின்மேற்பரப்பில் இருக்கின்ற மீன் துள்ளுகின்றது. தேவையின்றித் துள்ளுகின்றது. விழுமிய நோக்கில்லை. நோக்கற்றதினாலே போய்விழுகின்றது சுடும்பாறையினுள். தற்காப்புக்காய்த் துள்ளுகின்றது இம்முறை. ஒரு தவறினின்று காத்துக் கொள்ள மற்றொன்று, மற்றொன்றெனப் போய்க் கடைசியில் வல்லாதிக்கத்துக்குள் அடக்கமாகிவிடுகின்றது அம்மீன். இதுதான் கவிதை நமக்கு உணர்த்துவதாய்ப் பார்க்கின்றோம்.
ஒரு சிறுகவிதைக்கு இவ்வளவு மெனக்கெட்டுச் சிந்தித்து உணர்தல் தேவைதானா எனும் வினா உங்களுக்குள் எழலாம். அதுதான் நவீன இலக்கியம்!
ஃபிலடெல்பியா படிப்பு வட்டத்தில் ஏராளமான நவீனக் கதைகளுக்கு கோனார் உரை எழுதியிருந்தேன். அக்கதைகள் எல்லாமுமே 3- 6 வயதினருக்குட்பட்ட கதைகள் என்பதுதாம் சிறப்பு. என்னிடம் அதற்கான தரவுகள் தற்போது இல்லை. எனினும் The Dot எனும் 5 வயதுக்குழந்தைகளுக்கான கதை குறித்தும் எழுதியதாக நினைவு. https://www.prindleinstitute.org/books/the-dot/ அதற்கான மண்டைக்கசக்கல் எத்தகையது என்பதை இங்கு பார்க்கலாம்.
எதற்காக இதையெல்லாம் நாம் செய்ய வேண்டியதாய் இருக்கின்றது? மனிதன் என்பவனுக்கு மானம் எனும் நுண்ணுணர்வு உயிர்மூச்சாக இருக்க வேண்டியவொன்று. அத்தகு நுண்ணுணர்வுகள் சாகும்வரையிலும் நமக்குள் குடிகொண்டிருக்க வேண்டும். அதைப் பேணுவதற்கே கதை, கவிதை போன்ற இலக்கியங்கள் தேவையாக இருக்கின்றன. பார்த்த மாத்திரத்தில் ஒரு இன்முகச்சிரிப்பு, ’சாரி’ சொல்தல், முகமன் செலுத்துதல் இவையெல்லாம் நுண்ணுணர்வுள்ள சமூகத்தின் அறிகுறிகள்.
"அமெரிக்கப் பண்பாடு, கலையிலக்கியம் ஆகியவற்றுடன் ஓர் ஆக்கபூர்வமான உரையாடலுக்கு அவர்கள் முயல்வதே இல்லை. அங்குள்ள தீவிரமான அறிவியக்கம் பற்றி முழுமையான அறியாமையே இவர்களிடம் உள்ளது. அங்குள்ள அறிவியக்கத்துடன் உரையாடவேண்டும் என்றல் இங்குள்ள தரமான அறிவியக்கத்தையே கொண்டுசெல்லவேண்டும். ஆனால் அதை இவர்கள் அறிந்திருப்பதில்லை. இதன் விளைவாக இவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளரும் தங்கள் குழந்தைகள் முன் மிகக்கீழ்மையாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்" - எழுத்தாளர் ஜெயமோகன்.
அமெரிக்கவாசியான நான் இதனை எண்ணற்றமுறை அனுபவித்திருக்கின்றேன். கேலி, கிண்டலுக்காட்பட்டிருக்கின்றேன். என்னுடைய பதில் இப்படியாகத்தான் இருந்தது, “அம்மணாண்டிக லோகத்துல கோவணம் கட்டினவன் கோமாளி”.
-பழமைபேசி, pazamaipesi@gmail.com
6/22/2024
இலக்கியக் கூட்டம்
இலக்கியக் கூட்டம், வாசகர் கூட்டம், எழுத்தாளர் கூட்டம் முதலானவை எல்லாமே, மனப்பூட்டுகளை, கதை கவிதைச் சாவிகள் கொண்டு திறந்து விடுவதற்குத்தான். பங்கேற்பாளர்கள் தயக்கமின்றிப் பேச வேண்டும். சிந்தனைவயப்பட வேண்டும். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றவர் ஏதாகிலுமொன்றை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்குத்தான். ஆனால் பெரும்பாலான கூட்டங்கள் நிகழ்த்துகலை நிகழ்ச்சிகளாக இடம் பெறுகின்றன. எப்படி?
சிறப்பாளர்(performer) கலந்து கொண்டு பேசுவார். கதை சொல்வார். கூட்டம் கேட்டுக் கொண்டு இருக்கும்; இலயிப்பில், எந்த அளவுக்கு மனம் குளிர்கின்றதோ, பரவசமடைகின்றதோ, களிப்புக் கொள்கின்றதோ அந்த அளவுக்கு நிகழ்ச்சி மதிப்பீடு பெறும். தன்வயச் சிந்தனைக்கு இடமில்லை. இதுவே ஓரிரு படைப்புகளைக் கொடுத்து வாசித்து வரச்சொல்லிவிட்டு அவரவர் கருத்துகளைப் பகிரச் சொல்லிப் பார்க்கலாம். கடைசியாகச் சிறப்பாளர் அவற்றையெல்லாம் தொகுத்து விரித்துரைத்துச் சிறப்புரை ஆற்றலாம்.
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்
-தேவதச்சன்
இக்கவிதையைக் கொடுத்த மாத்திரத்தில் வாசிக்கின்றீர்கள். புரியாதது போல இருக்கும். ஒன்றுக்குப் பலமுறை வாசித்தபின் புரியத்துவங்கும். அது துவக்கநிலைப் புரிதல். உணர்வுகள் களிப்பூட்டும். இந்த அளவில் நின்றுவிட்டால் அது மேநிலை வாசிப்பு /புரிதல் என்றாகிவிடும்.
மேலும் சிலமுறை வாசிக்கின்றீர்கள். குறியீடு, படிமம், இடக்கரடக்கல், நவிற்சி, ஏற்றணி முதலானவற்றை இனம்காண முடிகின்றதென வைத்துக் கொள்வோம். அது இடைநிலை வாசிப்பு அல்லது புரிதல் என்றாகிவிடும்.
மேலும் சிலமுறை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றீர்கள். சிந்திக்கத் தலைப்படுகின்றீர்கள். தத்துவார்த்த நிலையில் சிந்தைவயப்படுகின்றீர்கள். ஆழ்நிலை வாசிப்பு அல்லது புரிதல் என்றாகிவிடும்.
ஆழ்நிலை வாசிப்பேயாகினும், ஆளுக்காள் புரிதல் மாறுபடலாம். காரணம், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவரவருக்கான பின்புலம், கல்வி என்பனவெல்லாம் வேறுவேறானவை. உங்களின் புரிதல், தத்துவார்த்த வெளிப்பாடு என்பது எழுதிய படைப்பாளனுக்கே கூட புதுத்திறப்பைக் கொடுக்கக் கூடும். அதுதான் படைப்பின் வெற்றி. படைப்பு என்பது ஓர் ஊடகம்தான். அந்த ஊடகம் எப்படியான வீச்சைக் கொடுக்கின்றது, அதனூடாக எப்படியான சிந்தனைப் பயணங்கள் அமைகின்றன என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமைகின்றது.
துணி துவைப்பதென்பது ஒரு குறியீடு. துணி துவைப்பதென்றால் என்ன? தூய்மைப்படுத்துவது, அழுக்கு நீக்குவது, புதுப்பொலிவூட்டுவதெனப் பலவகையாகக் கொள்ளலாம். அடிப்படை மேன்மை என்பது.
சமூகச்செயற்பாட்டில் ஈடுபடும் ஒருவருக்கு தேவையற்ற ஏச்சும் பேச்சும் இடம் பெறக்கூடும். காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.
சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன். காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம். தொடர்ந்து செயலாற்றி வருங்கால் கூக்குரல்கள் படிப்படியாக ஓய்ந்தே போகும்.
அடுத்த துணி எடுத்தேன். காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம். கூக்குரல்கள் நின்று போய்விட்ட நிலையில், ஏவப்பட்ட ஏச்சுகளும் பேச்சுகளும் மனத்தைத் தைக்கவல்லது. அவற்றைப் புரிந்து கொண்டு, சகித்துக் கொண்டு செயற்பட்டாக வேண்டும்.
இதே கவிதைக்குப் பொருந்தும்படியாக வேறொருவர் வேறொரு புரிதலை, அதாவது முழுமையானதொரு ஈட்டினைக் கொடுக்க இடமிருக்கின்றது; அதற்குப் பின்னால் வேறொருமாதிரியான தத்துவார்த்தம் வெளிப்படக் கூடும். அப்படிக் கிடைப்பதுதான் இலக்கியப்பழரசம்.
நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.
-தேவதேவன்
இஃகிஃகி, உங்கள் மண்டையைக் கசக்கி மேற்கொடுக்கப்பட்ட கவிதையின் இரசத்தைப் பிழிந்து கொடுங்களேன் பார்ப்போம்!
6/21/2024
எழுதுதல்
நண்பர் கார்த்திகைப் பாண்டியனின் நேர்காணல் கண்டேன். பொதுப்புத்தியின் மறுபக்கத்தைத் துல்லியமாகச் சொல்லியிருக்கின்றார். உடனடிக் கவனயீர்ப்புக்கும் விழுமியநிலைத்தன்மைக்குமான இழுபறியாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது. https://youtu.be/yeSxM10NanA?si=ml_nabY-krfKlmVN
ஒரு கூட்டத்திற்கான விளம்பரநறுக்கினைக் கண்டேன். கூட்டத்தின் கருப்பொருள், எழுத்துப்பிழை சவால்கள் என்பதைக் கண்டதும் ஆர்வம் பற்றிக் கொண்டது. அந்த நறுக்கிலேவும் பிழைகள் பல இருக்கக் கண்டேன். சுட்டியதும் நண்பர் சொன்னார், நீங்கள் ஏன் அவருடன் சேர்ந்து பணியாற்றக் கூடாதென? அவசியம் தொடர்பு கொள்கின்றேனெனப் பதிலுரைத்தோம்.
மீண்டும் எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் சொல்லியதிலிருந்து, “குறைவாக எழுதினாலும் நன்றாக எழுத வேண்டும்”. ஏன்?
தமிழ்க்கணிமையில் சவால்கள் நிறைய உள்ளன. கணிமைத்துவத்தின் அடிப்படையே சீர்மைதாம்(standard and consistency). எழுதுகிறேன், வாசிப்பவர்கள் சரியாகவே புரிந்து கொள்கின்றனர். உனக்கு என்ன பிரச்சினை எனக் கொதிக்கின்றனர். பொறுமையாகத்தான் எதிர்கொண்டாக வேண்டும்.
ஒரு பத்தி எழுதுகின்றீர்கள். அதனைத் தானியக்கமாக, ஒலிப்புத்தகம், செயற்கைநுண்ணறிவுப்புலத்துக்கான உட்கிடை, காணொலி, பதாகை முதலான பல உருக்களாக, ஒலிப்புச்சிதைவு, பொருட்சிதைவு, பொருள்மயக்கம் ஏற்படாதவாறு இடம் பெறுகின்றதா நம் எழுத்து? பெரும்பாலான எழுத்துகள் அப்படி அமைவதில்லை. வியந்தோதலின் பொருட்டு மிகைப்படுத்தி எழுதுகின்றோம். உண்மை பல்லிளித்து விடுகின்றது. கணிமைத்துவம் தோற்றுவிடுகின்றது.
Write elaborate content
Use consistent terms
Use of pronouns
Inclusive language
Use of “It” pronoun
Article labels – New, updated, deprecated
Structured format
Crafting the perfect SEO-driven prompt
Keyword optimization beyond the basics
இவையெல்லாம் எளிய எழுத்தின் முகாந்திரங்கள். தானியக்கப் புலங்களுக்குத் தோதான வரையறைகள். இவற்றைக் கடைபிடித்தால்தான் அந்த எழுத்து முழுமை பெறும். அண்மையில் தேர்தல் ஒன்றுக்காகப் பணியாற்றி இருந்தோம்(www.united4fetna.com). நவீன நுட்பப் புலங்கள் செம்மையாகவே பயனீட்டைக் கொடுக்கின்றன, எழுத்து எழுத்தாக இருக்கும் நிலையில்.
மீண்டும் கார்த்திகைப் பாண்டியன் அவர்களது கருத்தைத்தான் இரவல் பெற வேண்டியதாக உள்ளது. வெறும் பிடிஎஃப் கலாச்சாரமாகி விட்டது நம் எழுத்துக்களம். தேடுபொறிக்குக் கூட அவை அகப்படுவதில்லை. தேடலுக்கும் நாடலுக்கும் இடமில்லாவுலகில் இலக்கியமோ ஆவணமயமாக்கமோ அவை தோற்றே போகும்.
-பழமைபேசி.
6/12/2024
தேர்தல் 2024
“வேலைக்கு மதிப்பில்லை. வேலையே செய்யாதவர்கள், இருக்கும் நேரத்தையெல்லாம் பரப்புரைக்கான வேலையில் செலவிட்டு வென்று விட்டார்கள்”.
இப்படியான கருத்தினைக் காண நேரும்போது கருத்தாளர்களின்பால் இரக்கமே மேலிடுகின்றது. தேர்தலையும் தேர்தலில் பங்களித்த வாக்காளர்களையும், அவர்கள் இன்னமும் மனத்தில் கொள்ளவில்லையென்பதே பொருள்.
நடந்து முடிந்த தேர்தல் என்பது, 24 வேட்பாளர்களுக்கிடையேயான தேர்தலாக நான் கருதவில்லை. சாமான்யமக்களின் பிரதிநிதியான துணைத்தலைவருக்கும் தலைவருக்குமான தேர்தலாகவே இடம் பெற்றது என்பதுதான் சரியாக இருக்கும்.
தன்னுடைய செயற்குழுவில் இருக்கும் துணைத்தலைவரைக் கலந்தாலோசிக்காமலே தன்னிச்சையாகத் தம் கருத்தினை, செயற்குழுவில் வெளிப்படுத்துகின்றார் தலைவர். “இன்னாரை அடுத்த தலைவருக்காய் முன்மொழிகின்றேன். அதுதான் என் பரிந்துரை”. அக்கூட்டத்தில் இருந்த துணைத்தலைவர் வாளாது இருந்து விடுகின்றார்.
சிக்காகோ மாநாட்டில் வைத்து, முன்னாள் தலைவரும், இந்நாள் தலைவரும், துணைத்தலைவரிடம் அதே முன்மொழிவைத் தெரிவிக்கின்றனர். போட்டியின்றித் தெரிவு செய்வதானால் சரியென்றுதான் நீங்கள் முன்மொழிபவர் சொல்லி இருக்கின்றார். ஆனால் தேர்தலில் நான் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுவதாகவே இருக்கின்றேனெனச் சொல்லிவிடுகின்றார்.
சிலநாட்கள் கழித்து, பேரவைப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான குழுமத்தில் தலைவர், இன்னாரைத் தலைவராகப் பரிந்துரைக்கின்றேனெனப் பதிவு செய்கின்றார். அது கண்ட பொதுக்குழு உறுப்பினர் கேட்கின்றார், “ஏன் தற்போதைய துணைத்தலைவர் தலைவர் பொறுப்புக்கு முன்மொழியப்படவில்லை? இப்படியான பரிந்துரையை துணைத்தலைவர் ஒப்புக்கொள்கின்றாரா?”
துணைத்தலைவர் நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொல்லிவிடுகின்றார். தலைவருக்கான சறுக்கல் வெளிப்படையாகவே துவங்கிவிடுகின்றது. தேர்தல்களமும் சூடுபிடிக்கத் துவங்குகின்றது. “போட்டியின்றி” எனும் சொல் மறைத்துப் பதிவிடப்பட்டதும், "துணைத்தலைவர் தலைவர் பொறுப்புக்கு" என்பதான மரபும் பேசுபொருளாகிவிடுகின்றது.
துணைத்தலைவர்வசம் வாக்காளர் பட்டியல் அப்போதைக்கு இருந்திருக்கவில்லை. மேலும், தேர்தலில் போட்டியிடத் தகுதி வரையறைகள் உண்டு. அந்தத் தகுதியைக் கண்டறிவதற்கான தரவுகளும் கைவசம் இல்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகின்றது. அப்போதும் அந்தத் தரவுகள் கையளிக்கப்படவில்லை. ஆகவே யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதிகொண்டவர்கள் என்பது அறிந்திராதநிலை. கிட்டத்தட்ட, "கைகால்களைக் கட்டிப்போட்டுவிட்டு நீச்சலடி" என்பது போன்ற நிலைதான் துணைத்தலைவருக்கு.
தலைவர் அவர்களின் பங்களிப்பு கைகொடுக்கத் துவங்குகின்றது துணைத்தலைவருக்கு. எப்படி? பொதுக்குழுவில் வைத்து இடம் பெற்ற தலைவரின் பதிவைக் கண்டு வெகுண்ட பலரும் துணைத்தலைவரை நோக்கி ஒவ்வொருவராக வரத் துவங்குகின்றனர். பழைய விழா மலர்கள், கமிட்டி உறுப்பினர் பட்டியல் முதலானவற்றைக் கொண்டு தகுதிநிலையைக் கண்டறிய முற்படுகின்றோம் (ஆமாம், நானும்தான்). குறிப்பிட்ட ஆண்டின் விழா மலரேகூட இணையதளத்தில் கிடைக்கப் பெறவில்லை. மிகவும் இடர்ப்பாடாக இருந்தது.
நிறைய நண்பர்கள் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர். ஓரளவுக்குப் பரவலாக்கம், பேலன்ஸ் முதலானவையும் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும். தகுதிநிலையும் இருக்க வேண்டும். காலம் குறுகியதாகவே இருக்கின்றது. மன அழுத்தம் கூடிக் கொண்டே இருக்கின்றது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுமோயென்கின்ற பதற்றம். அச்சுறுத்தல்களும் நிலவி வந்தன. 12 இடங்களுக்கு மாற்று வேட்பாளருடன் 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. ”அப்பாடா” என ஓர் இரவுதான் உறங்க முடிந்தது.
ஆங்காங்கே துணைத்தலைவர்தரப்பு வேட்பாளர்கள் அணுகப்பட்டு, போட்டியிலிருந்து விலகச் செய்வதற்கான பணிகள் துவக்கப்பட்டிருந்தன. அச்செய்திகளைக் கேள்வியுற்ற, மேலும் பலர் எதிர்க்கோலம் பூண்டனர். ஆனாலும் எங்களுக்குள் கடும் மனச்சுமை ஏற்பட்டிருந்தது என்பதுதான் உண்மை. வாட்சாப்களில் உண்மைக்குப் புறம்பானதும், தனிமனித வன்மம் கொண்டதுமான தகவல்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டன. அவற்றுக்கெல்லாம் உடனுக்குடனே உரிய தரவுகளுடன் விடையளித்துக் கொண்டிருந்தோம் மிகவும் அமைதியாக.
தேர்தல் அலுவலர், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவிக்குமுன்பேவும் தலைவர் தம்தரப்புப் பட்டியலை வெளியிட்டுப் பரப்புரையைத் துவக்கினார். மேலும் பல வாக்காளர்கள் இதுகண்டு எதிர்க்கோலம் பூண்டனர். வெளிப்படையாக எவரும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் எங்களுக்குச் சன்னமாக அவர்களுடைய உணர்வுகள் வந்து சேர்ந்தபடியே இருந்தன.
சில மணி நேரங்கள் கழித்து, அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியானதும்தான் எங்களுக்குச் சற்று ஆசுவாசம் பிறந்தது. அதற்குப் பின்னர், நாங்கள் பரப்புரையைப் பறக்க விட்டோம் தரவுகளை முன்வைத்து. அத்தனை பொய்களையும் அனாயசமாகத் தவிடு பொடியாக்கினோமென்றால் அது மிகையாகாது!
தலைவர் தரப்புக்கான ஆதரவுப்பட்டியல் மிக நீளமானது. அவர்களுக்கான உறுதி ஓட்டுகள் 45%. துணைத்தலைவர் தரப்புக்கு 25%. நடுநிலை வாக்காளர்கள் 30%. இப்படியான நிலையில்தான் பரப்புரைக்காலம் துவங்கிற்று. தலைவரும், தலைவர் தரப்புக்கு ஆதரவு எனச் சொல்லிக் கொண்டோரும் செய்த சிலபல காரியங்களும்(சொசெசூ) நாங்கள் மேற்கொண்ட பணிகளும் களத்தை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இருந்த 45% ஓட்டுகளில் கொஞ்சம் இழப்புக்குள்ளாகி 40% ஓட்டுகளைத் தலைவர் தரப்பு பெற்றது. எஞ்சிய 60% ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் துணைத்தலைவர் தரப்புக்கு வந்து சேர்ந்தன. எல்லா வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
காலம் தாழ்ந்திடினும், வாய்மையே வெல்லும்!
-பழமைபேசி, 06/12/2024.
6/09/2024
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் 2024-2026
செயற்குழுவில் இருக்கின்ற எல்லாப் பொறுப்புகளுக்கும், ’எலக்சன்படி’ கட்டமைப்பைப் பயன்படுத்தி இணையத்தினூடாக நடந்த தேர்தல் இதுவே முதன்முறையாகும். தேர்தல் விதிமுறைகளை மிக நேர்த்தியாகக் கொண்டிருக்கும் சட்டக்கோப்பு விதிமுறை வகுப்பாளர்களான பேரவை முன்னோடிகளும், நெறிவழுவாமல் நடத்திக் கொடுத்த தேர்தல் அலுவலர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்களாவர்.
ஏன் இந்தப் பதிவினை எழுத வேண்டியுள்ளது? பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். எனக்கே கூட என்னெவெல்லாம் நிகழ்ந்தது என்பது எதிர்காலத்தில் மறந்து போகக் கூடும். ஆகவே எழுதிப் பதிய வேண்டிய தேவை நமக்கு உள்ளது.
பேரவையிலிருந்து முற்றாக ஒதுங்கி இருந்தேன். 2017ஆம் ஆண்டு விழாவுக்குப் பிறகு அமைப்பில் தலையெடுத்த வணிகமயம், தனிமனித ஆதிக்கம் முதலானவை பெருகிக் கொண்டே வந்தன. விருப்பு வெறுப்பின்றி அவற்றைப் பற்றி அவ்வப்போது தொடர்ந்து எழுதியும் வந்தோம். முழுக்க முழுக்க அமைப்பின் செயற்பாடுகளையும் பொறுப்பில் இருப்பவர்களின் செயற்பாடுகளைப் பற்றியும்தானேவொழிய, எவ்விதத்திலும், இயன்றவரை, தனிமனிதர்கள் குறித்தோ பெயர்குறிப்பிட்டோ விமர்சிக்காமல், கவனமாகவே இருந்து வருகின்றோம். எம் 18ஆவது வயதில் கோவையில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் Asst Foreman வேலைக்குச் சேர்ந்திருந்தோம். “கண்பதியப்பனே டிஸ்மிஸ் ஆர்டரை திரும்பப்பெறு” எனும் வாசகம் ஊரெங்கும் எழுதப்பட்டிருந்தது. தொழிற்சங்கத்தலைவர் கடிந்து கொண்டு, கணபதியப்பனே என்பதை எல்.எம்.டபுள்யூ நிர்வாகமேயென அழித்து எழுதுமாறு நடுரோட்டில் வைத்துத் தொண்டரை அறைந்த நிகழ்வு நமக்கான பாலபாடம்.
2022ஆம் ஆண்டுவாக்கில் திடீரென ஓர் அழைப்பு நண்பரிடமிருந்து. ”இன்னும் இருநாட்களே உள்ளன; வேட்புமனுத்தாக்கல் நிறைவுக்கு. நான் துணைத்தலைவர் பொறுப்புக்கு நிற்கலாமென இருக்கின்றேன். எனக்கு விருப்பமில்லை. ஆனால்...” என இழுத்தார். நாங்கள் சொன்னது இதுதான். “முடிவு உங்களுடையது. அது என்ன முடிவாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது எங்களுடையது”.
மிகக்குறுகிய காலத்தில் இணையதளம் கட்டமைக்கப்பட்டு, பரப்புரை வேலைகளைத் துவக்கியிருந்தோம். நிறைய புதுமைகளைப் புகுத்திச் செய்த வேலையில் சிறப்புக் காட்டினோம். தேர்தலில் நண்பர், நண்பர்தம் அணியினர் சிறப்பாகவே வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஒரு இரு வாரங்களுக்கு முன்பாக வேலையைத் துவக்கி இருந்தால்கூடப் போதும், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்குமென்பதில் எமக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஓரிருவர் மட்டுமே வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
இரு ஆண்டுகள். பேரவையின் பாதையில், மேலாண்மை என்பது மேலும் வீழ்ச்சியையே எதிர்கொண்டது. தனித்தனி நிகழ்ச்சிகளைச் சொல்லி அவையெல்லாம் பேரவையின் வளர்ச்சிக்கான அறிகுறிகள் என்றனர். அமைப்புச் செயற்பாடுகளை முன்வைத்து வீழ்ச்சி என்றது மறுதரப்பு. நம்மைப் பொறுத்தமட்டிலும், இத்தகைய போக்கானது, ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்துக்கும் பணக்காரவர்க்கத்துக்குமான வேள்வியாகவே பார்க்கின்றோம். பணக்காரவர்க்கம் வழிநெடுகிலும் எண்களைச் சுட்டிக்காட்டி பொருளியல் மதிப்பீடுகளை(economical values) முன்வைத்தது. நாமோ, அன்பு, அக்கறை, அரவணைப்பு, மரியாதை, எல்லாருக்குமான பங்களிப்பு முதலான சமூக விழுமியங்களை(social values) முன்வைத்து மாபெரும் சறுக்கல் என்றோம்.
சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நின்றுவிடும்தானே என்கின்ற நினைப்பில் அடுத்தடுத்துத் தடைகள் வந்து கொண்டேயிருந்தன. ஒவ்வொரு தடையையும் உணர்வு வயப்படாமல் எதிர்கொண்டு, அவற்றை நமக்கு ஏதுவானதாக மாற்றியமைப்பதில் தொடர்ந்து முன்னேறி வந்தோம். அச்சம் கலந்த ஒரு பதற்றம் இருந்தது. அவநம்பிக்கை குடிகொண்டிருந்தது. ஏவப்பட்டிருந்த பொய்கள் அவற்றுக்குக்காரணம்.. உடனுக்குடனே அவற்றுக்கான எதிர்வினை ஆற்றக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்தோம்.
ஒருகட்டத்தில் எம்மீதே எமக்கு நம்பிக்கையற்றுப் போனது. பொறுப்பில் இருக்கும் தரப்புக்கு ஆதரவாக 12 முன்னாள் தலைவர்கள், நம் தரப்புக்கோ மூன்றே மூன்று பேர். இருக்கின்ற 22 வாழ்நாள் உறுப்பினர்களில் 14 பேர் எதிர்ப்பு அல்லது ஆதரவில்லை. ஒருவேளை நாம்தான் தவறான புரிதலில் வெட்டிவேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோமோயெனும் சலனம், சஞ்சலம். எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போனோம். சில பல மைல்கள் இதே சிந்தனைதான். வீட்டுக்குத் திரும்பவும் வந்து சேர்ந்தபோது, மிகத் தெளிவாக இருந்தோம். நம் தரப்பு வென்றாக வேண்டிய தேர்தல் இது, ஆதரிப்பதற்கு எல்லாக் காரணங்களுமுண்டு என்பதில்.
தேர்தல் முடிவுகள் கிடைக்கப் பெற்றோம். போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நம்தரப்பு அணியினர் வெற்றி பெற்று இருந்தனர். பதிவான வாக்குகளில் (2928), நம் அணியினர் 1750 வாக்குகளைப்(~60%) பெற்றிருந்தனர்.
வேட்பாளர்கள் மிகக்கடுமையாக உழைத்திருந்தனர். இந்த வேட்பாளர்களுக்காய் கண்களுக்குப் புலப்படாத மனிதர்கள் ஏராளமானோர் ஆங்காங்கே பணிபுரிந்தனர் என்பதும் கண்கூடு. இந்த மனிதர்களின் உழைப்புக்கான மணிநேரங்களைத் தொகுத்துக் கணக்கிட்டால் சில ஆயிரம் மணி நேரங்களுக்கும் மேலாக வரும். அதன் பயனீடு? அவுட்புட்?? இந்த உழைப்பை அமைப்பின் கட்டமைப்பு, மனிதமேம்பாடு போன்றவற்றுக்குச் செலவிட்டிருந்தால்? இப்படியெல்லாம் வினாக்கள் பிறக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதேவும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. சொன்னேன், “உங்களுக்கான பொறுப்புகள் இந்த நொடியிலிருந்து துவங்குகின்றன. அவற்றை நிறைவு செய்யும் போதுதான் காத்திருக்கின்றது உங்களுக்கான வெற்றி”. அதுவரையிலும் அவர்களுக்கான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டியது நம் எல்லாரது கடமை!
-பழமைபேசி, 06/09/2024.