3/23/2022

இடது vs வலது

கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், தொழில் என எதை எடுத்துக் கொண்டாலும், பொதுவாகப் பெரும்படியாக நோக்கின் இருவிதமான கோட்பாடுகள் இருக்கும். அதனை இடது, வலது எனச் சொல்வர். லிபரலிசம், கன்சர்வேடிசம் என்றும் சொல்வர். கட்டுடைத்தல்(தாராளமயம்), கட்டுப்பாடு(மரபுபோற்றல்) என்பதாக அவற்றைப் பொருள் கொள்ளலாம்.

மேலைநாடுகளில் லிபரலிசத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வலதுசாரியாக இருந்தாலும் கூட, தேவையான இடங்களில் கட்டுடைப்புக் கொள்கைகளையும் கொண்டவராக இருப்பார். அல்லாவிடில், புத்தாக்கம், மேன்மை, மாற்றம் என்பன இல்லாமலே ஆகிவிடும். எடுத்துக்காட்டாக, கருக்கலைப்பு என்பது கொலைக்குச் சமம், கூடாது என்பது வலது. அது அந்தப் பெண்ணின் உரிமை, தன் உடலுக்குள் என்ன நடக்க வேண்டுமன்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு உண்டு என்பது இடது. அக்கப்போர். முதல் 12 வாரங்களுக்குள் கலைத்துக் கொள்ளலாம். உடல்நலத்துக்கு ஊறு எனும் போது கலைத்துக் கொள்ளலாம் போன்ற சலுகைகளுடன் வலதுகள் விட்டுக்கொடுக்க, நடுவாந்தரமாக இருக்கின்றது இன்றைய அமெரிக்க நிலைமை.

எதுவானாலும் அதன் செயன்முறைதான் பொறுப்பு என்பது இடது. இல்லை, செயன்முறை என்பதே ஆட்களால் கட்டமைக்கப்படுவதுதானே, ஆகவே ஆட்களே பொறுப்பு என்பது வலது. shift left testing vs shift right testing. அக்கப்போர். எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம்.

When problems are perceived during a project, they are most often traced back to an individual or team, not the processes or operational procedures in place that created the environment where the problem happened. Instead of examining the situation, organizational norms, processes and methods (and their implementations), we have a strong tendency to look for a scapegoat, a person that is at fault. https://sciodev.com/blog/major-concerns-offshore-outsourcing/

ஆஃப்சோர் என்றால் இந்தியா. நியர்ஷோர் என்றால் மெக்சிகோ அல்லது தென்னமெரிக்க நாடுகள் என்பது பொதுப்பழக்கம். ஏதாகிலும் பிரச்சினையென்றால், ஆஃப்சோரிலிருந்து கிடைக்கும் உடனடி பதில், “இன்னார் கோட்டை விட்டுவிட்டார். அவர் சரியாகக் கடமையைச் செய்யவில்லை. எனவே அவரைத் தூக்கிவிட்டு, நல்ல திறமையான ஒருவரைப் போட்டிருக்கின்றோம்”, என்பதாகப் பதில் வரும். இப்படியான பதில் இரசிக்கப்படுவதில்லை. அது அப்போதைக்கான தீர்வாக இருக்குமேவொழிய, நெடுங்காலத் தீர்வாக இருக்காது. 35 ஆண்டுகாலப் பரிணாமத்தில், சில மரபுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, இப்போதெல்லாம், எந்தநாட்டில் தமக்கான வேலை நடக்கின்றதோ, அங்கே செயன்முறைகளைக் கட்டமைப்பது, அதனைக் கண்காணிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர் மேலைநாட்டவர்கள். ஆட்கள் வருவார்கள், போவார்கள், அவர்களை நம்பித் தொழில் நடத்த முடியாது. செயன்முறை தரமானதாக இருந்து, அதற்கொப்பப் பணிகள் இடம்பெறும் போது தரமான அவுட்புட் மேலோங்கும் என்பது அடிப்படை.

உக்ரைன் போர் நடக்கின்றது. உக்ரைனின் தற்போதைய இராணுவத்துக்கு வயது 8; இரஷ்யா, கிரேமியாவை ஆக்கிரமித்துக் கொண்டபிறகு கட்டமைக்கப்பட்டதுதான். இரஷ்ய இராணுவமோ தொன்மை வாய்ந்தது, அளவில் 20 மடங்கு பெரியது. உக்ரைன் செயன்முறையின் அடிப்படையில் இயங்குகின்றது. இரஷ்யா, ஆட்களின் அடிப்படையில் இயங்குகின்றது; செயன்முறையில் பெரும் ஓட்டை. எனவேதான் முன்னணித் தளபதிகளே களத்துக்கு வர வேண்டி உள்ளது. 15ஆவது தளபதி பலியானதாகச் செய்தி. https://www.newsweek.com/alexei-sharov-russia-ukraine-kyiv-mariupol-general-putin-death-1690834

Let's focus on the subject, process! Not on the individual!!


3/22/2022

மனிதவளம்

ஒருநாட்டுக்கு மனிதவளம் மிக முக்கியமானது. நாளைய உலகம், இந்தியாவின் கைகளில் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. ஏனென்றால், அங்கேதான் இளைஞர்கள் வாழையடி வாழையாகத் தொய்வில்லாமல் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்.  சீனாவில், ஒரு குழந்தை என்கின்ற சட்டம் போட்டதன் தாக்கம், இளைஞர்கள் குறைந்து போவதற்கான ஒரு சூழல். இருப்பவர்களுக்கும் தயக்கம். China’s population outlook worrying as young people baulk at high cost of having kids. https://www.scmp.com/economy/china-economy/article/3133078/chinas-population-outlook-worrying-young-people-balk-high

இரஷ்யாவில் நிலைமை இன்னும் மோசம். கடந்த பத்து ஆண்டுகளாகவே இளைஞர்கள் வெகுவாக வெளியேறிக் கொண்டிருந்தனர். காரணம், சர்வாதிகார ஆட்சியும் நவீனமின்மையும் அதீத நேசனலிசமும் தலைவிரித்தாடியதுதான்.  The survey by the independent Russian pollster Levada Center, released on November 26, found that more than half of Russians between the ages of 18 and 24 want to leave for other countries. The next age group that was most interested in emigrating was 25 to 39 at 30 percent, the poll showed. [Dated November 26, 2019, https://www.rferl.org/a/number-of-young-russians-who-want-to-emigrate-hits-highest-level-in-decade/30292951.html]

தற்போது, இன்னும் அது விரைவாக நடைபெறத் துவங்கி இருக்கின்றதென இரஷ்ய நாளிதழ் சொல்கின்றது.  RAEC predicted the departure of up to 100 thousand IT specialists from the Russian Federation in April. https://www.interfax.ru/russia/830581

உலகத்திலேயே பெரியநாடு நிலப்பரப்பில். இரண்டாவது பெரிய நாடான கனடாவைக் காட்டிலும் இருமடங்கு பெரிய நாடு. மக்கள்தொகையோ வெறும் 14 கோடிகள்தான். எகானமியோ வெறும் 1.5 டிரில்லியன் டாலர்கள்தாம். அதே நேரத்தில் சரிபாதியாக 7 கோடி மக்கள்தொகை கொண்டதும், பரப்பளவில் உத்திரப்பிரதேசத்தின் அளவு மட்டுமே கொண்ட பிரிட்டனின் எகானமி 2.8 டிரில்லியன் டாலர்கள். இந்த இலட்சணத்தில், இருக்கும் இளைய தலைமுறையும் வெளியேறிக் கொண்டால்? சொந்த செலவில் சூன்யம். நேசனலிசம், இம்ப்பீரியலிசம் என்பது இலைமறையாக இருக்க வேண்டியதுதான். அதுவே பிழைப்பென இருந்தால், எந்தநாடும் இப்படியானதொரு தேக்கத்திற்கே ஆளாகும் இலங்கையைப் போலே!!


3/20/2022

உக்ரைன் போர் 26ஆம் நாளில்

போர் என்பது பல உருவில் இடம் பெறும். அவையென்னன்ன? hard power, soft power, smart power, supreme power என்பனவாக இருக்கும்.

hard power: ஆயுதங்களைக் கொண்டு நேரடியாகக் களத்தில் இறங்கி, இரு தரப்போ அல்லது அதற்கும் மேற்பட்டவர்களோ மோதிக் கொள்வது.

soft power: பேச்சுவார்த்தைகளில், இன்னபிற நாடுகளின் ஆதரவைப் பெற்று, அல்லது இழப்பதன் மூலம் மேற்கொண்ட இலக்கினை அடைவது அல்லது இழப்பது.

smart power: தொழில்நுட்பங்களைக் கொண்டு தாக்குவது, ’இன்ஃபர்மேசன் வார்’ என்பதன் மூலம் ஒன்றைக் கட்டமைத்துப் பொதுவெளியில் பின்னடைவைச் சந்திக்கும்படியாக்குவது, நாட்டின் அன்றாடப் பணிகளைச் சீர்குலைப்பது போன்றவை.

supreme power: பொருளாதாரத் தடைகள், பொருட்குவிப்புக் கூடுதல் வரிகள், செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்துவது அல்லது கூடுதல் உற்பத்தியின் மூலம் விலையைக் குறைத்து நிலைகுலைய வைப்பது போன்றவை.

hard power: இரஷ்யாவால் உக்ரைனை வெல்ல முடியவில்லை. attrition எனும் முறையில், வான்வெளியின் மூலம் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்துச் செல்லரிப்பது போலக் கொஞ்சம் கொஞ்சமாக எதிரியைச் சீர்குலைப்பது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதன்மூலம் வெற்றியும் கிட்டலாம். தோல்வியும் கிட்டலாம். ஆனால் ரிஸ்க்குகள் அதிகம். பொதுவாகப் பார்க்கின், அட்ரிசியன் வார்கள் பெரும்பாலும் தோற்றே போயிருக்கின்றன. வியட்நாம், ஆப்கானிஸ்தான், கொரியா போன்றவை எடுத்துக்காட்டுகள். ஏன்? நீண்டநாட்கள் களத்தில் இருப்பதால், தொடர்ந்து ஆட்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ammunition, யானைக்கு எப்படித் தீனி போட்டே அழிவது என்று சொல்வார்களோ, அது போலப் போர்க்களத்துக்கு வெடிகுண்டுகளும், துப்பாக்கிக் குண்டுகளும், படைக்கலன்களும், உணவு உடுப்புகளும், மருந்துகளும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். களத்தில் இருக்கும் ஆள் ஒன்றுக்கு, நாளொன்றுக்கு ஆயிரம் டாலர்கள் செலவாகும். இரஷ்யாவால் அந்த செலவுகளைச் செய்ய முடியுமா? சீனாவிடம் கேட்கின்றது, அம்மோக்களை(ammunition). சீனாவை மிரட்டுகின்றது அமெரிக்கா. ஏனென்றால், ஏற்கனவே பங்குச் சந்தையில் 72% வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றது சீனா. தொடர்ந்து மாதாமாதம் பையர் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தால்தான் ரொட்டேசனுக்குக் கம்பெனியிடம் பணம் இருக்கும். அவன் இழுத்தடித்து விட்டால், கம்பெனியை இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதான். அதேதான், சீனாவின் பெரும்பணம் அமெரிக்காவிடம். ஆகக்குறைந்தது 35 ஆயிரம் கண்ட்டெய்னர்கள் நாளொன்றுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை இறக்குவதில் காலதாமதம் செய்தால் கூடப் போதும், தொய்வு ஏற்பட்டுவிடும்.

soft power: ஏற்கனவே இரஷ்யா தனிமைப்பட்டு விட்டது. நாட்கள் கூடக் கூட, வார்கிரைம் என்பதன் வீச்சு அதிகரிக்கும். புடின் எனும் தனிமனிதனின் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்கப் போவதில்லை.

smart power: இரஷ்யா 30 ஆண்டுகாலம் பின்னோக்கிப் போய்விட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் சொல்கின்றன. The first casuality of the war is TRUTH என்பார்கள். ஆனால், இளைஞர்கள் வெளியேறி அயல்நாடுகளுக்குக் கொத்துக் கொத்தாகச் சென்று சேர்வது உண்மை. அயல்நாட்டுத் தூதரகங்களின் செய்திக் குறிப்புகளே சொல்கின்றன.

supreme power: சொத்துகளை முடக்குவது. நாணய மதிப்பைச் சீர்குலைப்பது. இரண்டிலுமே வீழ்ச்சியையே கண்டிருக்கின்றது இரஷ்யா. ஆனால் அதன் தாக்கம் எப்படியாக இருக்கின்றது என்பதை, இரஷ்யாவாகச் சொன்னால்தான் நமக்குத் தெரியவரும். அங்கு பொது ஊடகங்கள் இல்லை.

https://cepa.org/the-next-10-days-will-decide-this-war/

https://twitter.com/DefenceHQ/status/1505427498313596928/photo/1
3/19/2022

திடம்

 

ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு, Robust. தமிழில் திடமான, வலுவான எனப் பொருள் கொள்ளலாம். கம்ப்யூட்டர் துறையில், குறிப்பாக மென்பொருள் கட்டுமானத்தில் அடிக்கடி இந்த சொல் பயன்படுத்துவதைக் காணலாம். அதாவது, எந்தவொரு அப்ளிகேசனைப் பயன்படுத்தும் போதும், அதன் செக்யூரிட்டி முக்கியம். அல்லாவிடில், களவாளிகள் உட்புகுந்து தகவல்களைத் திருடிச் செல்லலாம்; அப்ளிகேசனை, ஏன் நிறுவனத்தையே கூட முடக்கலாம். அது நிகழாதவண்ணம் இருக்க வேண்டும். எந்தநேரத்திலும், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை திடீரென உயரக்கூடும். அப்படி உயரும் போது, அத்தனை பேருக்கும் சேவையளிக்கக் கூடிய வகையில் அது தாங்கி நிற்க வேண்டும். எந்த நேரத்திலும் சேவையின் அளவு அதிகரிக்கக்கூடிய தேவை வரலாம். அந்தவகையில் அது தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். சேவையின் தரமும் நிலைத்திருக்க வேண்டும். சேவையின் பரப்பளவு, பலமாநிலங்களுக்கும் பலநாடுகளுக்கும் விரிந்து கொண்டேயிருக்க வேண்டும். தங்குதடையற்ற சேவையாக இருக்க வேண்டும். இப்படிப் பல பரிமானத்திலும், தாங்கி நிறகக்கூடியதாக இருத்தலைத்தான் திடமான அமைப்பு, robust system என்கின்றோம்.

அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு திடமானதா? அவ்வப்போது விமர்சனங்கள் எழும். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்திருக்கக் கூடாது. தன்னாட்சி மிக்க படிநிலைகள் இருக்க வேண்டும். மக்களின் பங்களிப்பால் பொறுப்புகள் கையாளப்பட வேண்டும். மக்களின் நேரடி பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேர்தல்கள் இடம் பெற வேண்டும். அந்தத் தேர்தல்கள், சட்டத்தின்பாற்பட்டு நியாயமான முறையில் இடம் பெற வேண்டும். இவையெல்லாமும் அதனதன் கிரமத்தில் செவ்வனே இயங்கினால்தான் அது திடமானதாகக் கருதப்படும். டிரம்ப், இத்தனையையும் உடைத்து முன்னேற எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார். முடியவில்லை. ரோபஸ்ட்னஸ் ஸ்ட்ரஸ் டெஸ்ட்டில், சோதனையில் அமெரிக்காவின் டெமாக்ரசி எளிதில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்புகள் இடம் பெற்றன.

நாட்டுக்கு, நிறுவனங்களுக்கு, தனிமனிதனுக்கு என எல்லா இடத்திலும் திடம் என்பது அவசியம். அதனைச் சோதிப்பதற்கான வழி என்ன? மாற்றுக்கருத்துகளும் விமர்சனங்களும்.

ஒரு புராடக்ட். ஒரு கட்டுரை. ஏன் இந்தக் கட்டுரை என்பதாகக் கூட வைத்துக் கொள்ளலாம். கட்டுரையாளர் தன் எண்ணங்களை, சிந்தனைகளை, தகவல்களைக் கொண்டு கட்டுரையை எழுதுகின்றார். படிப்பவர்கள், கட்டுரையாளனை மனத்தில் கொண்டு, ஊக்கமளிக்கும் பொருட்டும் ஆதரவளிக்கும் பொருட்டும், பாராட்டுதல்களையும் நன்றிகளையும் சொல்லிச் செல்கின்றனர். என்ன ஆகும்? காலப்போக்கில், திடமற்ற ஒருநிலையையே அது அடையும். மாறாக, படிப்பவர்கள் வினாக்களைத் தொடுக்கின்றனர். மாற்றுக்கருத்துகளை வைக்கின்றனர். என்ன ஆகும்? கட்டுரையானது மென்மேலும் வலுப்பெறும். முழுமையை நோக்கி நகரும். கட்டுரையாளன் அடுத்த பதிப்பில் அவற்றையெல்லாம் செம்மைப்படுத்துவார். ரோபஸ்ட் ஸ்ட்ரஸ் டெஸ்ட்டில் பாஸ் ஆகும்.

மாற்றுக்கருத்துகள் மனிதனை முழுமையாக்கும். படைப்பின் உட்பொருளை நோக்கியே பார்வை இருக்க வேண்டும்; படைப்பாளனை நோக்கியதாக இருக்கக் கூடாது. விமர்சகர்கள் கொண்டாடப்பட வேண்டும். வசைக்கு ஆட்படக் கூடாது.

நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்றார். அதன் சாரங்களைச் சாமான்யன் அறிந்து கொள்ள முற்பட வேண்டும். சமூகத்துக்குப் பயனளிக்கக் கூடியதுதானா? தேவையானதுதானா? சரியானதுதானா? நோக்கத்தில் பிழை இருக்கின்றதா? இதெல்லாமும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மாநில நிர்வாகம் ரோபஸ்ட்னஸாக இருக்கும். நாம் என்ன செய்கின்றோம்? மூன்று மணி நேரப் பேச்சில், எங்கெல்லாம் அவரது உச்சரிப்புக் குளறுபடியாகின்றதோ, அந்தக் காட்சிகளையெல்லாம் தொகுத்து ஒருசில நிமிடக் காணொலியாக்கி, அதைப் பார்த்துக் கேலியும் கிண்டலுமாகப் பொழுதைக் கழிக்கின்றோம். அமெரிக்கா வல்லரசுத்தன்மையை இழப்பதற்குக் கனவுகாணும் நாம், நம் ஜனநாயகத்தைத் திடமாக்குகின்றோமா?!


3/18/2022

மந்தைத்தனம் (bullying)

மேலைநாடுகளில் காடைத்தனத்திற்கு எதிரான சட்டங்கள் பல உண்டு. குறிப்பாக, இளைய சமூகத்தினரைப் பாதுகாக்கும் பொருட்டுப் பள்ளி, கல்லூரிகளில் மிகக் கவனமாக செயற்படுத்தப்படுகின்றது.

மந்தைத்தனம் பலவேறு விதங்களில் ஒருவர் அல்லது கூட்டத்தின் மீது ஏவப்படலாம். அவை கீழேவருமாறு:

1. ஒருவர்மீது வதந்தி பரப்புதல் அல்லது பொய்/அவதூறு கட்டமைத்தல் 

2. கேலிப்பெயர்களைச் சூட்டுவது, அவமானத்துக்குள்ளாக்குவது 

3. தள்ளிவிடுவது, எச்சில் உமிழ்வது, உடுப்புகளைக் கிழிப்பது 

4. நிராகரிப்பது அல்லது தனித்து விடப்படுவது 

5. மிரட்டுவது, பொது இடத்தில் வைத்து சிறுமைப்படுத்துவது 

6.குற்றேவற்பணிகளுக்கு ஏவிவிடுவது 

7. உடைமைகளைச் சேதப்படுத்துவது 

இணையக் குழுமங்களில் பெரும்பாலும் இவை, மந்தைக் கூட்டங்களினூடாக உருவெடுக்கும். Mobbing means bullying of an individual by a group, in any context, such as a peer group, school, workplace, neighborhood, community, or online.

கண்ணெதிரில், யாராவது ஒரு தனிநபர் (targeted individual) அல்லது கூட்டம், இப்படியான மந்தைத்தனத்துக்கு ஆட்படும் போது, அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியதும், மேட்டிமையை எதிர்த்தொழிப்பதும்  நம் அனைவரது கடமை. சமூகத்தில், அமைதி, இணக்கம், புத்தாக்கம், மேன்மை போன்றவை தழைக்க வேண்டுமானால், இதற்கெதிரான சமூகத்தின் பங்களிப்பு மிக மிக அவசியம். உங்களின் சிறு செய்கையால், ஓர் உயிர் காப்பாற்றப்படலாம். உங்களுக்கு வேண்டியவர் குற்றச்செயல்களில் இருந்து காப்பாற்றப்படலாம். ஏன், உங்களை நீங்களேகூடக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

இவற்றுக்கு எதிராக இருக்கவும் சமாளிக்கவும் நாம் என்ன செய்ய வேண்டும்? 

1. தம்மை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். படிப்பு, பொது அறிவு, பொருளாதாரம், நட்பு வட்டம், குடும்பம் எனப் பலவற்றிலும் தன்னிறைவு பெற்றதொரு சூழலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும் அல்லது அப்படியானோரின் ஒத்துழைப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். Empower yourself as much as possible in everything.

2. Face your fears and weaknesses. தமக்கான வலுவீனம், அச்சம், மருட்கை போன்றவற்றுக்கான காரணங்கள் என்னவென்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம். அவற்றுக்கான சூழல் நேரும் போது, கவனமாக இருக்கலாம். அல்லது அதிலிருந்து மீண்டு கொள்ளும் வழியைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.Build up your mind & body. மனப்பழக்கம், தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை. சரியானோர், தவறானோர் என்பது மட்டுமே உண்டு. சரியாய் இருக்கப் பழகிக் கொள்தலும், முயல்வதையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

4. நாம் நாமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். முலாம் பூசிக்கொண்டோ, நடித்துக் கொண்டோ, மூடிமறைத்துக் கொண்டோ இருக்கத் தேவையில்லை. அவரவர் அடையாளம், விழுமியங்களைக் கொண்டு தன்னிச்சையாக இருப்பதே வாழ்வினை எளிமைப்படுத்தும். Accept the things about yourself that you can’t change and change what you can.

5. பேச வேண்டும். கருத்தைச் சொல்ல வேண்டும். ஐயோ, நமக்கெதுக்கு வம்புயென வாளாதிருத்தல் கடமையினின்று தவறுவதற்கே வழிவகுக்கும். வாழப்பிறந்த மாந்தனின் தன்னாட்சியை மட்டுப்படுத்தும். Exercise the liberty.

வாட்சாப், ஃபேசுபுக், கூகுள் போன்ற குழுமங்களில் பலர் சேர்ந்து இயங்கும் போது, பொது இலக்கு என்பது துவக்க காலத்தில் செயன்முறையில் இருக்கும். போகப்போக, வீக் டார்கெட், அல்லது தம் கொள்கை, விருப்பு வெறுப்புகளுக்கு உட்படாதவர் போன்றோரின் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கும் தருணத்தில் டார்கட்கள் குறிவைக்கப்படும். அப்படியான கூட்டத்தில் நாமும் ஒருவரா? யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியாயின், உணர்ந்து செயற்படல் நன்று. 

உயிர்களிடத்தில் அன்பு வேணும்;  தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்; வயிரமுடைய நெஞ்சு வேணும்;  இது வாழும் முறைமையடி பாப்பா!!


3/14/2022

படையெடுப்பு

உலகம் பல போர்களைச் சந்தித்து இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து, ஃப்ளூபுக், கட்டுப்புத்தகம் பரிணாமம் பெற்று வருகின்றது. அதன்படி, படையெடுப்புக்கான ஆட்களின் தேவை கணக்கெடுக்கப்படுகின்றது.

அதுவும் இடம், சூழலுக்கொப்ப மாறுபடும். குறுகிய இடத்தை வளைத்துத் தனதாக்கிக் கொள்வது, ஒரு பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்துத் தனதாக்கிக் கொள்வது, அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை, தற்காலிக ஆக்கிரமிப்பா அல்லது நெடுங்காலத்திற்கான ஆக்கிரமிப்பா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் கூறுகள்.

போலீசைப் பொறுத்த மட்டிலும், ஆயிரம் பேருக்கு 2 - 4 காவற்படையினர் தேவை என்பது ஒரு கணக்கு. அது போலவே, படையெடுப்பு என வந்துவிட்டால், 10 பேருக்கு ஒரு இராணுவ வீரர் தேவை. அதாவது அந்த ஊரின் மக்கள்தொகை 1000 என்றால், சுற்றி வளைத்துத்  தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள குறைந்தது 100 வீரர்கள் தேவை.

உக்ரைன் நாட்டின் மக்கள்தொகை 4 கோடி. தலைநகரின் மக்கள்தொகை 3 மில்லியன். 2 மில்லியன் பேர் வெளியேறிவிட, ஒரு மில்லியன் பேர் இருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம். அதாவது 10 இலட்சம் பேர். அங்குமட்டும் ஒரு இலட்சம் படை வீரர்கள் தேவைப்படுகின்றனர். இரஷ்யத் தரப்பு வைத்திருப்பதோ இரண்டு இலட்சத்துக்கும் சற்றுக்குறைவுதான். பெரிய நாடு. பெரிய எல்லைக்கோடு. தடுப்புக்காவல் காப்பதெற்கெல்லாம் சாத்தியமேயில்லை.

படையெடுப்பு நடத்தும் தரப்புக்கு உள்ளூர் மக்கள் ஆதரவளிக்கும் போது, தேவைப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறையும். அதேபோல எதிர்ப்பின் நிலைக்கொப்ப, தேவைப்படுவோரின் அளவு அதிகரிக்கவும் செய்யும்.

எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இரஷ்யத்தரப்பின் உளவு, உத்தியில் பெரும் ஓட்டை. தலைநகரைப் பிடித்தாலும், தக்கவைத்துக் கொள்ள முடியாது. Simply they are not ready for conventional war. கிரேமியாவை ஆக்கிரமித்துக் கொண்டு போது, அது சிறு தீபகற்பப்பகுதி. அதில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானோர் இரஷ்யமொழியைப் பிரதானமாகக் கொண்டோர். மேலும், அப்போது உக்ரைனுக்கான இராணுவம் வலுவாக இருந்திருக்கவில்லை.

https://worldbuilding.stackexchange.com/questions/20826/what-percentage-of-a-population-can-be-part-of-a-medieval-military

கெமிக்கல், பயோ, நியூக்ளியர்?  ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார். விரைவில் சமாதானம் பிறக்க வேண்டும். Diplomacy is essential if we are to find peaceful resolutions in times of tension.

உக்ரைன் போர், 19ஆம் நாளை நோக்கி

இருபக்கமும் பலத்த உயிரிழப்புகள். யார் வெற்றி, தோல்வி எனக் கணக்குப் போடுவதற்கான நேரமல்ல. ஓர் உயிர் என்றாலும், அது வாழப்பிறந்த உயிர்தானே? யாரோ சிலர் எடுக்கும் முடிவுகளுக்காக பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாவது சகித்துக் கொள்ள முடியாதவொன்று.

இரஷ்யா, நேட்டோ இருதரப்பும்தான் இதற்குப் பொறுப்பு. பரமபத விளையாட்டின் நகர்வுகளை ஒரு பார்வையாளனாகப் பார்க்கின்றோம். அது தவிர்க்க முடியாதது.

இப்படியான போர் வரும், நமது நகர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டுமென அங்குலம் அங்குலமாகத் திட்டமிட்டுக் கொண்டதில் மேற்குலக நாடுகள் முன்னணி வகிக்கின்றன. எப்படி? ஒவ்வொரு துறையிலும், சொல்லி வைத்தாற்போல தடைகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன. நினைத்தால் அணைப்பதற்கு இது ஒன்றும் நம் படுக்கறை விளக்கின் சுவிட்ச் அல்லவே? அணைப்பதற்கும், நிறைய வேலைகள் தேவைப்படும். ஒருநாளில் செய்யக்கூடிய காரியமல்ல அது. ஆனால் இவர்கள் செய்கின்றனர். ஆகவே, முன்கூட்டிய திட்டமிடல் இருந்திருக்கின்றது எனக் கருதவேண்டி உள்ளது. 

இரஷ்யாவைப் பொறுத்த வரையில், முன்னுக்கும் செல்லமுடியாமல் பின்வாங்கவும் முடியாமல் சிக்குண்டு கிடக்கின்றதென்றே சொல்லலாம். ஏன்? முதல்வாரத்தில் பிடித்த இடங்கள்தாம். அதற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான தரைவழி முன்னேற்றம் இல்லை. மாறாக, ஏவுகணை வீச்சுகளால் சேதத்தை உண்டு செய்து வருகின்றது. அதில் உக்ரைன் தரப்பில் பலத்த உயிர்ச்சேதம். எத்தனை நாளைக்கு இது நீடிக்கும்?

இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரே சொன்னது இது, ”எங்களது பணம் 650 பில்லியன் டாலரில் 300-350 பில்லியன் மேற்குலக நாடுகளிடம் சிக்குண்டு போய்விட்டது. எஞ்சியது தங்கமாகவும், சீனப்பணமாகவும் உள்ளது”. இந்த சீனப்பணத்தை டாலராக மாற்ற முடியாது. ஏனென்றால், வங்கிப் பரிவர்த்தனைக்குள் வந்தால் இரஷ்யப் பணம் மீண்டும் சிக்குண்டு போய்விடும். சீனப்பணமாக மற்ற நாடுகளுடன் வணிகம் செய்யலாம் அல்லது தன் பணமான ரூபிளுக்கு மாற்றிக் கொள்ளலாம். 

ஒருநாள் போருக்கு இரஷ்யாவுக்கு ஆகும் செலவு 20 பில்லியன் டாலர்கள் என்கின்றது உலகவங்கி. நாம் 10 பில்லியன் டாலர்கள் என்றேவும் வைத்துக் கொள்வோம். எஞ்சிய பணமான 300 பில்லியன் டாலர்களில், நாளைக்கு பத்து பில்லியன் என்றால், இன்னும் 30 நாட்கள் வரை நீடிக்கலாம் எனக் கணக்குப் போடுவதா தெரியாது. இதேவேளையில், எதிர்வரும் புதன்கிழமை, 117 மில்லியன் டாலர்கள் தவணைத் தொகை கட்ட வேண்டி உள்ளது. அதை இரஷ்யாவால் திருப்பிச் செலுத்த முடியாமற்போவதற்கான வாய்ப்புகள் இல்லாமலில்லை என்கின்றார் உலக நிதி ஆளுநர் அவர்கள். https://fortune.com/2022/03/14/russia-sovereign-debt-default-imf-kristalina-georgieva-bonds/

இதற்கிடையே, நாட்டில் இருக்கும் சுயசார்புத் தொழில்கள் முற்றாக முடங்கிப் போய்விட்டன; இன்ஸ்டகிராம் முடக்கத்தால் மட்டுமே 8 கோடிப் பேர் பாதிப்புக்குள்ளாவர் என்கின்றது நியூஸ்வீக் நாளேடு. 

இளைஞர்கள், இரஷ்யாவை விட்டு வெளியேறுவதும் இடம் பெற்று வருகின்றது. பக்கத்து நாடான, ஜியார்ஜ்யாவுக்குச் செல்பவர்கள் அங்கே வங்கிக் கணக்கு துவங்குகின்றனர். துவக்கும் போது வைக்கப்படுகின்ற நிபந்தன, “நான் உக்ரைன் போருக்கு எதிரானவன்” என உறுதிமொழிச் சான்று கொடுக்க வேண்டும். கொடுத்துத்தான் அவர்கள் அங்கே வாழத் தலைப்படுகின்றனர்.

https://www.consultancy.eu/news/7433/research-ukraine-war-costs-russian-military-20-billion-per-day

https://fortune.com/2022/03/03/russia-sanctions-central-bank-ruble-us-eu-foreign-reserves/
3/12/2022

உக்ரைன் வான்வெளி ஆதிக்கம் யார் கையில்?

வெளியாகும் செய்திகளை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால், இடம் பெற்ற நகர்வுகளைக் கொண்டு சிலவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கு, அதுகுறித்த விரிவான பார்வை நமக்கிருத்தல் வேண்டும். சில அடிப்படை விபரங்கள் தெரிந்திருக்கப்பட வேண்டும்.

வட வியட்நாம் கம்யூனிச ஆட்சி. தென் வியட்நாம் ஜனநாயக ஆட்சி. இருபிரிவுகளுக்கும் இடையேயான பிணக்கில், தென் வியட்நாமுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்குகின்றது. வான்படைகள் தோற்றுப் போகின்றன. வான்வெளியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அந்த காலகட்டத்தில், வான்படைத் தடுப்பு அழிப்பு எனும் தொழில்நுட்பம் இருந்திருக்கவில்லை. அதற்குப் பிறகு படிப்படியாக பரிணாமம் பெற்று அமைந்ததுதான் சீட்/டீட் எனப்படும் வான்படைத் தடுப்பு அழிப்பு தொழில்நுட்பம் (Suppression of Enemy Air Defenses (SEAD)/Destruction of Enemy Air Defenses (DEAD)). சீட்/டீட் என்பது ஒரு கட்டமைப்ப்ய், ஃப்ரேம்வொர்க். அந்தக் கட்டமைப்புக்கள் பல பாகங்கள் இடம் பெற்றுள்ளன.

Radar: மின்காந்த அலைகளை வெகுதொலைவுக்கு வெளிப்படுத்தும்(radiation). அந்த அலைகளுக்குக் குறுக்கே வரும் பொருட்களைத்(மேகம், வான்கலம்) துல்லியமாக அளந்து, அதன் உருவைக்கூட வெளிப்படுத்தும்.

Surface-to-air missiles (SAMs): நிலப்பரப்பிலிருந்து ஏவப்படக் கூடிய ஏவுகணைகள்

anti-aircraft artillery (AAA): வானூர்திகளைக் குறிவைத்துத் தாக்கக்கூடிய பீரங்கிகள்

command, control and communication (C3): வான்வெளியில் இருப்பனவற்றைக் குறித்த தகவற்பரிமாற்றமும், ஏவுதலைக் கட்டுப்படுத்துதலும்

ground-controlled interception (GCI): வான்வெளியில் வருவனவற்றை (ஏவுகணை, வான்கலம்)த் தடுத்தழிப்பது அல்லது செயலிழக்கச் செய்வது.

electronic-warfare aircraft (EWA): தடுத்தழிக்காமல், தொலைவிலிருந்தேவும் மேற்கூறியவற்றின் மின்னணுக்கருவிகளைக் கரப்ட் செய்து செயலிழக்கச் செய்யும் சாதனங்களைக் கொண்ட விமானம்.

anti-radiation missiles (ARMs): ரேடாரிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளைக் கொண்டே அவற்றின் இருப்பிடமறிந்து தாக்கியழிக்கும் ஏவுகணை

ballistic missiles: எரிபொருள் வெடிப்பதன்மூலம்(ராக்கட்) சக்தியுற்று வேகமெடுத்து, பிற்பாதியில் அதுவாக வந்து விழும் ஏவுகணை

cruise missiles: எந்தப் பாதையில் செல்லவேண்டுமென்கின்ற சக்தியுடன்கூடியதும் கடைசி வரையிலும் கட்டுப்பாடு கொண்டதுமான ஏவுகணை

Stinger missile: கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய கையேவுகணைகள்

பிப்ரவரி 24ஆம் நாள், இரஷ்யா தன் ஆக்கிரமிப்புப் பணியினை தோராயமாக 100 பாலஸ்டிக்/குரூஸ் ஏவுகணைகளை உக்ரைனின் இராணுவத்தளங்களின் மீது ஏவியதன் மூலம் முன்னெடுத்தது. இவையெல்லாமுமே, ஏற்கனவே தெரியப்பட்ட இராணுவநிலைகள். நகரக்கூடியன அல்ல. எனவே எல்லாமுமே துல்லியமாகச் சென்று தாக்கின. இருந்தாலும் கூட, எண்ணிக்கையில் மிகவும் குறைவு. கூடவே தரைவழியாக, உக்ரைனின் தென்பகுதியிலிருக்கும் கிரேமியா, வடபகுதியில் இருக்கும் பெலருசியாப் பகுதியில் இருந்து தரைப்படைகள் தன் நகர்வைத் துவக்கின. அவர்களுக்குத் துணையாகப் பறந்த விமானங்கள் தாக்குதலை எதிர்கொண்டன. வீழ்த்தப்பட்ட விமானங்கள், பீரங்கிகள் ஆங்காங்கே கிடப்பதை உக்ரைன் தரப்பு சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தது. அதற்குக் காரணம், இரஷ்யத் தரப்பு எவ்விதமான சீட்/டீட் பணிகளை மேற்கொள்ளாதது அல்லது மேற்கொள்ள முடியாமல் உக்ரைன் தரப்பு வியூகம் வகுத்துக் கொண்டதெனலாம். எப்படி செய்ய முடியும்?

தனது ரேடார்களை அணைத்து வைப்பதன் மூலம், ஏஆர்எம்(anti-radiation missiles)களுக்கு இலக்கில்லாமல் ஆக்குவது. அதன்காரணம், ரேடார்கள் இல்லை அல்லது தடுக்கும் மெக்கானிசம் இல்லையென்கின்ற மனப்பான்மையில் வெளிப்படும் விமானங்களை, நேட்டோ தரப்பு ரேடார் தகவல் உதவியுடன் AAA அல்லது ஸ்டிங்கர் ஏவுகணைகள் மூலம் தடுத்தழிக்கும் வேலைகளில் இறங்கின உக்ரைன் தரப்பு. எனினும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தன இரஷ்ய விமானங்கள். பிப்ரவரி 28ஆம் நாள், உக்ரைன்பகுதியின் ஒட்டுமொத்த வான்வெளியும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அறிவித்தது இரஷ்யா.

மார்ச் முதல் வாரத்தில், உக்ரைனின் ஹெலிகாப்டர்கள் ஆங்காங்கே சென்று வந்தன. உக்ரைன் தரப்பிடம் இருக்கும், துருக்கியில் இருந்து வாங்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) ப்லவும் சென்று இரஷ்யத்தரப்பு பீரங்கிகளையும் படைவீரர்களையும் வாகனங்களையும் தாக்கி ஒழித்தது. இதன் காரணம், இரஷ்யாவின் கூற்று உண்மை அல்ல என்பதும், உக்ரைன் தரப்புக்கும் வான்வெளி ஆதிக்கம் இருப்பதென்பது தெரிய வருகின்றது. கூடவே, நிலப்பரப்பில் இருந்து ஏவப்படக் கூடிய SAMகளும் சிலமுறை பயன்படுத்தப்பட்டு ஓரிரு இரஷ்ய விமானங்கள் தாக்கப்பட்டு, அதன் விமானிகள் சிறைபிடிக்கப்பட்டனர். மார்ச் ஏழாம் நாள், உக்ரைன் வான்வெளி சமபலத்துடன் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் தலைமையகம் அறிவித்தது. நேட்டோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஸ்டிங்கர்களுடன், சோவியத் அரசில் இருந்து கிடைக்கப்பெற்ற பல AAA, SAM, C3 ஆகியன இன்னமும் உக்ரைன் தரப்பிடம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. கூடவே, அண்மையிலிருக்கும் நேட்டோ நாடுகளிலிருந்து, ரேடார் தகவல்கள் உடனுக்குடன் உக்ரைன் தரப்புடன் பகிரப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

நிலைமையை உணர்ந்த இரஷ்யா, முன்கள விமானத்தை அனுப்பியது. அதனைக் கண்டவுடன், எந்தப்பக்கமிருந்து தடுப்பு ஏவுகணை வருகின்றனவோ அவற்றைக் குறி வைத்து பின்னால் வரும் இரண்டாவது விமானத்தால் தாக்கியழிக்கும் வேலைகளைச் செய்யத் துவங்கியது. ஆனால் அதில் சில முறை வெற்றியும், சில முறை தோல்வியும் ஏற்பட்டது. இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த உக்ரைன் தரப்பு, இரவுண்ட் ராபின் முறையில் எதிர்ப்பு ஏவுகணைகளைச் செலுத்தத் துவங்கின. அதாவது முதல் முறை ஓரிடம் என்றால், இரண்டாவது முறை வேறொரு இடம். இப்படிச் செய்கின்றபோது, இரண்டாவதாக வரும் விமானமும் தாக்குதலுக்கு உண்டானது.

உக்ரைன் தரப்பு, தன் விமானங்களைப் பெரிதாக வெளியே எடுப்பதில்லை. காரணம், பெலருசியா, இரஷ்யாவில் நிறுத்தப்பட்டிருக்கும் S-400 தடுப்பு ஏவுகணைகள் தம் தரப்பு விமானங்களைப் பதம் பார்த்துவிடுமென்கின்ற காரணத்தால். குறுகிய தொலைவுத் தாக்குதலுக்கு மட்டும், தானியங்கி விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது உக்ரைன். தற்போதைக்கு, நேட்டோ ரேடார்களில் சிக்காதவண்ணம் தாழ்வாகப் பறந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது இரஷ்யா. அதிலும் சில ரிஸ்க்குகள் உண்டு என்றாலும், ஓரளவுக்குச் சேதங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டதெனச் சொல்லலாம்.

இந்தநிலையில்தான், நோ ஃப்ளை சோன்(no fly zone) அறிவிக்கப்பட வேண்டுமென்கின்ற குரல்களும் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றன. ஆனால் அதற்கு சாத்தியமில்லை. அறிவிக்கப்பட்ட பின்னர், இரஷ்ய விமானம் அத்துமீறி நுழைகின்றது. நேட்டோ குறுக்கிட வேண்டும். நேட்டோ குறுக்கிட்டால், பெலருசியா/இரஷ்யாவில் இருக்கும் S-400 தடுப்பு ஏவுகணைகள் பாயும். அவற்றைத் தடுக்க வேண்டுமானால், பெலாரஸ்/இரஷ்யா மண்ணில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். அது, உலகப் போருக்கு இட்டுச் செல்லும். ஏன், அணு ஆயுதப் போருக்கேவும் இட்டுச் செல்லும்.

அடுத்து என்ன நடக்கும்? இரஷ்யா, படிப்படியாக பல நகரங்களையும் சுற்றி வளைக்கத் துவங்கி விட்டது. ஆனாலும் ஒப்பீட்டளவில், வான்வெளி ஆதிக்கம் குறைவேயென்கின்றனர். இடைப்பட்ட நேரத்தில், எப்படியான எதிர்ப்பு ஏவுகணைகள் உக்ரைன் வந்து சேருமெனத் தெரியவில்லை. நேட்டோ நாடுகளில் இருக்கும் இரஷ்யாவின் ஒரே ஒரு S-400 எதிர்ப்பு ஏவுகணை பேட்டரியானது வந்துவிட்டாலும் கூட, இரஷ்யாவின் வான்வெளித்தாக்குதல் படுத்துவிடும். மாறாக, இரஷ்யா இன்னமும் தன் அதிநவீன, உயர்ரக விமானங்களைப் பயன்படுத்தவில்லை. அவற்றைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டால்?


3/11/2022

delusion கானல்நீர்

எதையும் ஒரு குறுகிய பார்வையில் பார்த்தால், அது முற்றிலும் மாறுபட்ட புரிதலையே கொடுக்கும். விரிவாகப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.சொல்வதைக் கூட, அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்ளலாகாது. அதன் பின்னணி என்ன என்பதைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும். அதைத்தான் நம் பெரியோர், விசாலமான(அகலமான) பார்வை வேண்டுமெனச் சொன்னார்கள்.

ஜியோபாலிடிக்ஸ் என்றாலே, சாய்வுச் செய்திகளை உள்ளடக்கியதுதான். ஒரே பிரச்சினையை, ஒவ்வொரு நாடும் தத்தம் பார்வையில் சொல்லும். அமெரிக்காக்காரன், அமெரிக்க ஊடகங்களில் சொல்லப்பட்டதற்கொப்பப் பேசுவான். இரஷ்யாக்காரன், இரஷ்ய ஊடகங்களில் சொல்லப்பட்டதற்கொப்பப் பேசுவான். சீனாக்காரன் சீன ஊடகங்களில் சொல்லப்பட்டதற்கு ஏற்றபடிப் பேசுவான். இதற்கு மேல், அவரவருக்கு அவரவர் தாய்நாட்டின் மீதான பற்றுதலும் இருக்கும். எனவே அவரவர் பார்வை மாறுபடும். நிற்க.

அந்தந்த நாட்டு ஊடகங்களின் பேச்சுக்கொப்ப மக்கள் பேசுவர் எனப் பார்த்தோம். இங்குதான், ஒருநாட்டின் பேச்சுரிமை, கருத்துரிமை, அரசியற்தன்மை என்பது முக்கியமாகப்படுகின்றது. அமெரிக்காவில், புடினுக்கு ஆதரவாகப் பேசலாம். வீட்டிற்கு முன்பாக எந்த நாட்டுக் கொடியை வேண்டுமானாலும் நட்டு வைக்கலாம். பைடனைக் கண்டபடி ஏசலாம். https://twitter.com/TulsiGabbard/status/1497879015998197765 அரசியல் சாசனம் அந்த உரிமையைக் கொடுக்கின்றது. இரஷ்யாவிலும் சீனாவிலும் செய்ய முடியுமா?

 உக்ரைன் போர் எனச் சொன்னால் குற்றம். இரஷ்யா படையெடுப்பு என்று சொன்னால் குற்றம். சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படுகின்றது. 15 ஆண்டுகள் வரை சிறைவாசம். ’இராணுவ நடவடிக்கை’ என்று மட்டுமே சொல்ல முடியும். ஓவர் நைட்டில் அலிபாபாவின் ஜேக்மாக்கள் காணாமற்போகலாம். இப்போது கூட, இரஷ்ய அரசுதரப்புச் செய்திகளை மட்டுமே நுகர்ந்திருக்க என்னால் முடியும். rt.com, themoscowtimes.com இப்படிப் பலவும் நுகரக்கிடைக்கின்றன. நுகர்வதற்குத் தடையேதும் இல்லை. அதேபோல, அமெரிக்கச் செய்திகள், வலைதளங்கள் இரஷ்யாவிலும் சீனாவிலும் காணக்கிடைக்குமா? கிடைக்காது. ஏன்? சர்வாதிகாரம், இரும்புத்திரை.

அமெரிக்காவின் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். விமர்சனத்திற்கு உட்படாதவர், உட்படாத நாடென எதுவும் இருக்க முடியாது. ஆனால், கண்மூடித்தனமாகப் போரில் இந்தத் தரப்பு வெற்றி, தரைமட்டம், அப்படி இப்படி என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனம். தோராயமாக, இருதரப்பிலும் சேர்ந்து 20,000 பேர் இதுவரை மரணம். ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் மீது படையெடுத்தது இரஷ்யா எனும் நாடா? இல்லை. அந்த நாட்டுமக்களின் விருப்பமல்ல. அந்த நாட்டின் தலைவன் எனும் ஒரு சர்வாதிகாரியின் முடிவு. அமெரிக்காவில் மட்டும், 35 இலட்சம் இரஷ்யநாட்டு மக்கள் வாழ்கின்றனர். அந்தப் புரிதல் இருக்கின்றபடியினாலேதான், அவர்கள் வெகு இயல்பாகத் தங்கள் வாழ்க்கையை அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு தனிநபரின் முடிவு, அந்த நாட்டுமக்களை ஏழைகளாக்கி இருக்கின்றது. அந்த நாட்டுப் பங்குச்சந்தை மூடப்பட்டு இருக்கின்றது. நாட்டு மக்களுக்குத் தங்கள் பங்குகளை விற்றுப் பணமாக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டிருக்கின்றது. அதேநேரம், இரஷ்யநாட்டு நிறுவனங்களின் பங்குகளின் விலை 95% பறிபோய் விட்டது. 100 ரூபிளுக்கு விற்ற பங்கின் விலை இன்று 5 ரூபிள். Russian Stocks in London Wipe Out 98% of Value in Two Weeks https://www.bloomberg.com/news/articles/2022-03-02/london-listed-russian-stocks-erase-570-billion-in-two-weeks அந்நிய நாடுகளில் இருப்பவர்கள் ஏற்கனவே விற்றுத் தீர்த்து விட்டனர். உள்நாட்டில் இருப்போருக்கு பட்டைநாமம். பெரும்பாலான நிறுவனங்கள் திவாலாகப் போகின்றன. நாடும் ஏப்ரல் மாதவாக்கில் திவாலாகி விடும். இரஷ்யநாட்டுப் பணம் அதன் மதிப்பைக் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் இழந்து விட்டிருக்கின்றது. கடைசியில், பாதிக்கப்படுவது இரஷ்யநாட்டுச் சாமான்யர்கள்தாம். 

எண்ணிப் பாருங்கள். இரண்டு இலட்சம் வீரர்கள், உறைநிலைக் குளிரில் அந்நிய மண்ணில் இரவுபகலெனப் பாராமல் சண்டை இட்டுக் கொண்டிருக்கின்றனர். வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது. எதிரி வந்துவிடக் கூடாதென்பதற்காகப் பாலங்கள் எல்லாம் தகர்த்தெறிப்பட்டு விட்டன. இவர்களுக்குச் சோறு தண்ணி எங்கிருந்து வரும்? எப்படி வரும்??

அமெரிக்கா ஒன்றும் வெல்ல முடியாத நாடல்ல. போட்டியிட முடியாத நாடல்ல. ஆனால், எதனை முன்வைத்துப் போட்டியிடுகின்றோம் என்பதே முக்கியம்? சும்மாவேனும் பொறுமிக் கொண்டிருப்பதில் ஒரு பயனுமில்லை. அப்படியான பதிவுகள், உங்கள் உணர்வுகளை வைத்துக் காசாக்கும் செப்பிடுவித்தை; அதுவும் அமெரிக்காக்காரனின் யுடியூப் கொண்டேவும். இஃகிஃகி.  

இது உலகமயமாக்கல் யுகம். உற்பத்தி பெருகினால், வலுக்கூடும். உற்பத்தி பெருக வேண்டுமானால், பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டும். சட்டம் ஒழுங்கு மேம்பட்டால், உள்ளூர் நிறுவனங்கள் பெருக்கெடுக்கும். சட்டம் ஒழுங்கு மேம்பட வேண்டுமானால், தனிமனிதர்கள் சிறக்க வேண்டும்.


3/06/2022

போலிகளிலிருந்து தற்காத்துக் கொளல்

உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து.

The fake news problem is too big for one person to solve, but students can be part of the solution. When students spot a fake or misleading story, they can follow these steps to limit the damage. In doing so, they promote a free and truthful flow of information, a key tenant of democracy.

Step 1: Refuse to share it.

The fewer times a story is shared, the fewer people will see it, and the less the newsmaker will profit from it. Never share a story that you recognize as fake or misleading.

Step 2: Call it out.

If it is possible to respond to or comment on a fake story, do so with evidence that shows why it is false. If a friend or family member shares the story, kindly explain why are you are having a hard time believing it. Share specific examples and strategies that helped you reach your conclusion.

Step 3: Offer alternatives.

Search for stories or information from a variety of reliable sources that debunk the story. Share the stories with people who believe the fake news. Again, be polite about it.

Step 4: Diversify your media habits.

Avoid getting all your news from the same place. When you search for multiple perspectives from different sources, you get a broader understanding of the news. Especially seek sources and stories you might not initially agree with. By broadening your media palate, you’ll more easily be able to recognize and react to false news.

https://k12.thoughtfullearning.com/blogpost/lessons-combating-fake-news

ஸ்டெப்#2.  சுட்டிக் காண்பிக்கின்றோம். நிறையப் பேர் நன்றி சொல்வார்கள். கொஞ்சம் பேர், கடுமை காண்பிப்பார்கள். ஆனாலும், சுட்டுவது நம் கடமை.

ஸ்டெப்#3: முறையான சொற்கள் கொண்டு, அநாகரிகம் தவிர்த்து, மாற்றுக் கருத்தை முன்வைக்க வேண்டும். பத்திரிகையாளர் மணி (highly recommend to watch this: https://youtu.be/wt38NreXSD8) சொல்வதைப் போல, முத்திரை குத்துவார்கள். புறங்கூறுவார்கள். புறம் பேசுவார்கள். சகிப்போடு கடமையைச் செய்தாக வேண்டும். அதுதான் மனிதனுக்கு அழகு.

புறங்கூறுவது vs புறம் பேசுவது??

அந்த இடத்தில் இல்லாத நபரைப் பற்றி, குறை சொல்லிப் பேசுவது. அவதூறு கிளப்புவது, புறங்கூறல். கருத்துகளை முன் வைக்கும் போது, அதைத் திசை திருப்பும் விதமாக, பேசு பொருளுக்கு வெளியே, கருத்துச் சொல்லும் நபரைக் கேலி செய்து, கிண்டல் செய்து, பகடி செய்து, இப்படியாகப் பேசுவது புறம் பேசுவது. கருத்து முன்வைக்கும் நபரைக் கொச்சைப் படுத்துவதால் கருத்து சாவதில்லை. புறம்பேசுபவரின் மனவக்கிரம் வெளிப்படுகிறதென்றே பொருள் (wickedness been exposed while audience are watching).

இதை ஏன் எழுதுகின்றோம்?

தனக்கான கடிவாளம் (guardrail), தாமும் இவற்றைக் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு தரித்தல். கூடவே சமூகத்துக்குமான ஒரு தகவல்.


3/04/2022

No Body Is Disposable

அண்மையில் ஒரு காணொலி. அதில் ஒரு மாநகராட்சி உறுப்பினர் பதவி ஏற்றுக் கொள்வார். சொல்வதைத் திரும்பச் சொல்வதில் சிரமப்படுவார். அதை நகைப்புள்ளாக்கி, அந்தக் காணொலி வைரலாக பல குழுமங்களில் காணப்பெற்றது.

சமூகத்துறை (சோசியல் டிப்பார்ட்மெண்ட்) என்பது வேறு. அறிவுத்துறை( இண்ட்டெலக்சுவல் டிப்பார்ட்மெண்ட்) என்பது வேறு. ஆசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், எஞ்ஜீனியர் போன்றதெல்லாம் அறிவுத்துறையைச் சார்ந்தது. மாநகராட்சி உறுப்பினர், தமிழ்ச்சங்க இயக்குநர், சுய உதவிக்குழுச் செயலர், வீட்டு உரிமையாளர் சங்கத் தலைவர் போன்றவையெல்லாம் சமுகத்துறையைச் சார்ந்தது.

அறிவுத்துறையில், படிப்பு, அனுபவம், தேர்வு முதலானவையெல்லாம் கட்டாயம். சமூகத்துறை அப்படியல்ல. ஓர் ஊரிலே ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். பலதரப்பட்ட மக்கள் இருப்பார்கள். படித்தவர்கள், படிக்காதவர், ஆண்கள், பெண்கள், பாலியல்தொழிலாளர்கள், துப்புரவுத்தொழிலாளர்கள், பிணத்தூய்மையாளர்கள் இப்படிப் பலவாக. ஒவ்வொரு மனிதனும் வாழத்தலைப்பட்டவன். ஆக, சமூகத்துறையில் எல்லோரது குரலும் ஒலிக்கப்பட வேண்டும். சொல்வதற்கு மன்னிக்கவும். தற்குறிகள் 100 பேர் இருக்கின்றார்கள். மாற்றுத்திறனாளிகள் 100 பேர் இருக்கின்றார்கள்.  அதிலிருந்தும் ஒரு சிலரை உள்ளடக்கி, அவர்களின் தேவை, நல்லது கெட்டதென அறிந்து ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தேவையானதைச் செய்வதுதான் சமூகத்துறையின் பணி.

பேசியவருக்கு  செவிப்பிரச்சினை இருக்கலாம். ஒலியைக் கிரகித்துக் கொள்கின்ற மூளைநரம்புப் பிரச்சினை இருக்கலாம். கூட்டத்தைப் பார்த்ததும் பேதலித்துப்(ஃபோபியோ) போகின்ற பிரச்சினை இருக்கலாம். அல்லது, சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டு, இப்படியானதொரு நிகழ்வில் கலந்து கொண்டதில் மனப்பதற்றம் ஏற்பட்டிருந்திருக்கலாம். நமக்குத் தெரியாது. இப்படியான நிகழ்வு, அமெரிக்காவில் நிகழ்கின்றது. அடிக்கடி நிகழ்வதைப் பார்த்திருக்கின்றேன். குடிவரவாளராக இருப்போரில், 95% மக்களுக்கு ஆங்கில ஒலிப்பு என்பது உள்ளூர் ஒலிப்புபோலச் சரியாக இருக்காது. கிரேக்க மொழியிலும், ஒடிசியா மொழியிலும், தமிழ்மொழியிலும் ஆங்கிலம் பேசுகின்றோம். San Jose, சேன் ஓசே... ஆனால், சேன் ஜோஸ் என்கின்றோம். Buffet பஃபே , பிஃபே. ஆனால் பஃபட் என்பதையும் பார்க்கின்றோம். இப்படி எத்தனையோ. போகின்ற போக்கில் சரிக்கட்டிக் கொண்டே நகர்ந்து விடுகின்றோம். 

பெரிய பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்களில், அரவணைத்தல் (inclusiveness) என்பதற்கான வகுப்புகள் இடம் பெறுகின்றன. நிறம், மொழி, பால், உயரம், பண்பாடு என எல்லாவற்றையும் உட்கொண்டு செல்வது அவசியமெனக் கட்டமைக்கப்படுகின்றது. இது உலகளாவிய யுகம். எல்லாரையும் உள்ளடக்கிச் செல்வதிலேதான் மேம்பாடு உண்டு. அதுதாம் மனிதம்.

https://msmagazine.com/2021/08/30/disabled-women-politics-elections-representation/

https://youtu.be/RJFwKG1lN5Y


Diversity is a fact!

Equity is a choice!

Inclusion is an action!

Belonging is an outcome!!

Representative Democracy Requires Inclusion of All Abilities


3/03/2022

கருத்துரிமை

கருத்துரிமை என்பது அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விசயம். ஏன்? அதன் வரையறை ஆளுக்காள் மாறுபடுவதுதான். ஒருவர் பார்வையில் சரியாக இருக்கும். இன்னொருவர் பார்வையில் தவறாக இருக்கும். இதற்கு அடுத்த கட்டம், கொடுத்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு, பயங்கரவாதச் செயல்களுக்குப் பாவிப்பது. 2012 துவக்கம், அமெரிக்காவில் ஃபேக்நியூஸ் என்பது பெருவேகம் கொண்டு கொடிகட்டிப் பறந்தது. காரணம் டிரம்ப். நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர், எல்லா சோசியல் மீடியா பிளாட்பார்ம்களில் இருந்தும் கழட்டி விடப்பட்டார். 

இரஷ்யாவில், தனியார் ஊடகங்களுக்கு இடமில்லை. அரசாங்க ஊடகங்களுக்கு மட்டுமே இடம். அத்தகைய ஊடகங்களையும் அமெரிக்காவில் இருக்கின்ற சோசியல் மீடியா பிளாட்பார்ம்கள் தடைசெய்யவில்லை. ஆனால், உக்ரைன் குறித்து அப்பட்டமான ஃபேக்நியூஸ்கள் எனும் வகையில், அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க மட்டுப்படுத்தித்தான் வைத்திருக்கின்றன. தோதாக, அமெரிக்காவின் இப்படிப்பட்ட முன்னெடுப்புகளைக் குறைகூறுவோர், இரஷ்யாவின் கருத்துரிமை நசுக்கலைப் பற்றிப் பேசுவதே இல்லை. இரும்புத்திரை கொண்டு தன் நாட்டுமக்களைப் பிரித்து வைத்திருக்கும் சர்வாதிகாரியைப் பற்றியும் பேசுவதில்லை. மாறாக, ஃபேசுபுக்/வாட்சாப் போன்றவற்றுக்கு மாற்று என வெட்டிப்பேச்சுப் பேசுகின்றனர். இப்படித்தான், வாட்சாப் பிரைவசி பாலிசிகள் நிமித்தம் எல்லாரும் டெலிகிராம் எனும் பிளாட்பார்ம்க்கு சென்றனர். சென்ற வேகத்தில், வாட்சாப்புக்கே திரும்பினர். என்ன காரணம்? மென்பொருள் வடிவமைப்பு, பயன்படுத்துவதில் இலகுதன்மை போன்றவைதாம். நிற்க. இப்போது டெலிகிராம் பற்றிப் பேசுவோம்.

டெலிகிராம் என்பது இரஷ்யர்களால் உருவாக்கப்பட்டு, இன்றளவும் இரஷ்யாவின் முக்கிய தளமாக இருந்து வருகின்றது. பேசுபுக் என்பதற்கு மாற்றாக விகே எனும் தளம், அதுவும், இரஷ்யாவின் முக்கிய தளமாக இருந்து வருகின்றது. அதை உருவாக்கியவர் யார்? Pavel Durov. புடின் அவர்களுடைய சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சார்ந்தவர். தன் 21ஆவது வயதில், விகே எனும் நிறுவனத்தைக் கட்டமைத்து ஃபேசுபுக்கிற்கு இணையாக விகே எனும் தளத்தை உருவாக்கினார். மிகவும் பிரபலமானது.

இரஷ்யநாட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கான பக்கமும் அதில் இயங்கி வந்தது. அந்த பக்கத்தை முடக்கி வைக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது. உரிய காரணங்களின்றி முடக்க முடியாதென்றார் பேவல். மேலும், தனக்கு வந்த கடிதத்தை வெளியிட்டுப் பகிரங்கப்படுத்தினார். இது கண்டு, இவர்களின் புகழ் மேலும் ஓங்கத் துவங்கியது. அதே காலகட்டத்தில் டெலிகிராம் எனும் மெசஞ்சரையும் கட்டமைத்து, அதுவும் பிரபலமானது. 2010 துவங்கி, 2013 வரையிலும், சமூக ஊடங்களினால் ஏற்பட்ட புரட்சி உலகை உலுக்கியது. அதன் நீட்சியாக, உக்ரைன்,இரஷ்யாவிலும் இளைஞர்கள், தத்தம் அரசுகளுக்கெதிராக சமூக வலைதளங்களில் தகித்தனர். குறிப்பாக, உக்ரைனில் இரஷ்ய ஆதரவு பிரசிடெண்ட்டுக்கு எதிராக எழுதுவோர் கணக்கு வழக்குகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், பரிமாறப்பட்ட தகவல்களை டிகிரிப்ட் செய்துதருமாறும் இரஷ்யத்தரப்பின் கண்கள் கனன்றன. பாவெல் மசியவில்லை. அவரை, அவரின் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் துவங்கின. ஒருகட்டத்தில், நாட்டை விட்டு வெளியேறுவதாகச் சொல்லி, பிரான்சு நாட்டுக் குடிமகனாகிவிட்டார் பாவெல். படிப்படியாக புடினின் ஆட்கள் நிறுவனைத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். It is better for Durov to lose 50 percent of 10 million users in Russia than to lose the entire world with its potential billions.

பாவெல் வெளியேறியதைக் கண்டு, ஏராளமான இளம் தொழில்முனைவோரும் இரஷ்யாவை விட்டு வெளியேறினர். ஏனென்றால், தம் கண்டுபிடிப்புகள் வெற்றி பெறவேண்டுமானால் அது உலகத்தைச் சென்று சேர வேண்டும். குளோபல் சிட்டிசனாக இருக்க வேண்டும். இரும்புத்திரைக்குள் உழன்று கொண்டிருந்தால், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான். எல்லாமே, இருப்பதில் எது பெஸ்ட் என்பதுதான்.  அமெரிக்கா ஒன்றும், பெர்ஃபெக்ட் இல்லைதான். ஆனால், freedom of expression என்பதில் உலகத்தின் தலைவன்.

சீனாவின் கதை இன்னும் விநோதமானது. தம் நாட்டு மக்கள், வெளிநாட்டு மக்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது. அதே போல, தம்நாட்டு விசயங்கள் வெளியுலகுக்குத் தெரியக்கூடாதென்பதற்கான இரும்புத்திரை. இப்படியான நாடுகளை நம்பி, அவர்கள் கட்டமைக்கும் நெட்வொர்க்குக்குள் அந்தந்த நாட்டு மக்கள் வருவரா? மக்களிடம், நம்பகத்தன்மை பெறுவதும், மனிதநேயம் போற்றுவதும் முதன்மை. முதலில் அவை நிலைநாட்டப்படட்டும். மக்கள் விடுதலை பெறட்டும்!! அதுவரையிலும், அமெரிக்கா குறித்தான கூச்சல்கள் இளைப்பாரலாம்.


3/01/2022

குருதிவழியும் உக்ரைன் மண்ணில்...

அடிக்கடி ஜியோபாலிடிக்ஸ் குறித்து எழுதும் உங்களிடமிருந்து ஏன் ஒன்றுமே காணோமெனக் கேட்டுவிட்டனர். எழுதக்கூடாதென்பதில்லை; தமிழ்ச்சூழலில் காணப்படும் ஃபேக்நியூஸ்களும், ஒருதலைப்பட்சமான அமெரிக்க எதிர்ப்பு மனநிலையும்தான் காரணம், எழுதாமல் இருப்பதற்கு.

கடைசியாக இது குறித்து நாம் எழுதியதில் குறிப்பிடப்பட்டது, உக்ரைன் நாட்டு மக்களிடையே இருக்கும் நேசனலிசம்தான் சாய்வுத்தன்மைக்கு வித்திட்டுவிட்டது; அதுவே போர்வரையிலும் இழுத்து வந்துவிட்டதெனக் குறிப்பிட்டு இருந்தோம். அது இன்றளவும் அப்படியே இருக்கின்றது. கூடவே, சர்வாதிகாரி புடினின் மனக்குலைவு என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. புடீனுக்கு வயது 69. வயோதிகத்தின் பொருட்டு, தன் செங்கோலாட்சி முடிவுக்கு வந்து கொண்டிருப்பதை உணர்ந்து, அதற்குள் இன்னின்னது செய்து கோலோச்ச வேண்டுமென நினைத்திருப்பார் போலிருக்கின்றது. சொந்த செலவில் சூன்யம். ஏழாவது நாளுக்குள் போர்க்களம். குறிப்பிடத்தக்க வெற்றி ஏதுமில்லை.

உக்ரைன் தரப்புச் செய்திகளை எங்கும் காணலாம். ஆனால் இரஷ்யத் தரப்புச் செய்திகளைப் பார்க்கவே முடியாது. என்ன காரணம்? இரஷ்யாவில் அடிப்படை மனிதவுரிமைகள் இல்லாததுதான் காரணம். அரசுதரப்பு ஊடகங்கள் மட்டுமே இயங்கலாம். அத்தகைய அரசுதரப்பு ஊடகங்கள், புடினின் ஊதுகுழலாக இருப்பதால், அவற்றுக்கு ஊடகவெளிச்சம் இல்லை. மாறாக, தனியார் ஊடகங்கள் அல்லது தனிமனிதர்களின் கருத்துப் பகிர்வுகள் இருக்குமேயானால், அவை வெளியுலகத்தின் பார்வைக்குக் கிடைத்திருக்கும். https://www.themoscowtimes.com/, https://www.rt.com/ முதலான இரஷ்யாவைச் சார்ந்த பக்கங்கள் இருப்பினும், அவையும் வெளியுலகச் செய்திகளைத்தான் அறியத் தருகின்றனவேவொழிய, போர் குறித்த தன் தரப்புத் தகவல்களைக் கொடுக்கமாட்டேனென்கின்றது. ஆக, மொத்தத்தில் 22 ஆண்டுகளாக இருண்டவுலகில் இரஷ்யா.

 ஒரு காலத்தில் இரஷ்யாவின் ரூபில்  37 அமெரிக்க செண்ட்கள்; இன்று ஒரு ரூபிலுக்கு 9 அமெரிக்க செண்ட்கள். கிட்டத்தட்ட வெளியுலகப் பணப்பரிவர்த்தனை, வணிகம் என்பதினின்று ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுவிட்டது இரஷ்யா. நல்லகாலத்திலேயே, சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் 50%, சாப்பாட்டுக்கே போய்விடும். இனி எப்படி இருக்கப் போகின்றதோ தெரியாது. மக்களின் சேமிப்பு காற்றில் கரைந்து விட்டது. வங்கியில் பணம் போட்டால், 10% வட்டியாக இருந்ததை 20% என்பதாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்கள் மூடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு வான்வெளியில் பலநாடுகள் தடை. இப்படி, உலகினின்று சமூகவிலக்கம் செய்யப்பட்டநிலை.

உக்ரைன் பகுதியில் பலத்த உயிர்ச்சேதம். 600 பேருக்கு மேல் குண்டுவீச்சுக்கு பலியானதாக அரசு தரப்பு குறிப்பிடுகின்றது. இரஷ்யத் தரப்பில் 3000+ மேல் பலியானதாக, உக்ரைன் தரப்புச் சொல்கின்றது. ஆனால் அது நம்பகமானதா தெரியாது. மூன்றாம் தரப்பின்படி, 700க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. , இரஷ்யவீரர்களை அடையாளம் கண்டு கொண்டு இருப்பிடம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் என்பதாக ஒருவலைதளத்தைக் கட்டமைத்திருக்கின்றது உக்ரைன் தரப்பு. https://200rf.com/ அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் டெலிகிராம் சேனலுக்குச் சென்று பார்த்தால், ஏராளமான சிதைந்த தளவாடங்கள், வீரர்கள், உயிருடன் பலர் எனக் காண்பதற்கு ஒவ்வாத வகையில் வீடியோக்களும் படங்களும். இரஷ்யன் மொழியில் பேசுகின்றனர். வலுக்கட்டாயமாகப் போர்முனைக்கு அழைத்து விட்டனர் என்பதாகப் பேசுகின்றனர்.

அண்மையில் கிடைத்த செய்தியின்படி, ஆங்காங்கே இருந்த இரஷ்யப்படையினர் ஓரிடத்தில் கூடியிருப்பதாகவும், அவர்களுக்கு உரிய பெட்ரோல், உணவு இல்லாத நிலையில், மனம் தளர்ந்த நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. https://www.reuters.com/world/europe/russian-move-kyiv-stalled-now-may-be-rethinking-approach-us-official-2022-03-01/ வான்வெளியையும் முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் இரஷ்யாவினால் கொண்டுவர முடியவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. The Russian military advance drew to within 15 miles of Kyiv’s center amid signs that troops are running out of gas and food, a senior U.S. Defense Department official said Tuesday. Russia has committed about 80% of the combat force President Vladimir Putin deployed to invade Ukraine, the official said. https://www.usatoday.com/story/news/politics/2022/03/01/ukraine-russia-invasion-live-updates/9327835002/

புடின் அவர்களோடு ஒரு மணி நேரத்துக்கும் சற்று கூடுதலாகப் பேசிய பிரான்சு அதிபர் அலுவலகச் செய்திகளின்படி, அவரின் மனநிலையில் என்றுமில்லாத தளர்வு இருப்பதாகவும், தனிமையில் நேரத்தைக் கழிப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சர்வாதிகாரியின் மனம் மிகவும் பொல்லாதது. கைகளில் அணு ஆயுதங்கள். அவரது ஈகோவுக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டேவும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதில்தான் மேற்குலகத்தின் வெற்றி இருக்கின்றதெனக் குறிப்பிடுகின்றார் ஜியோபாலிடிக் பத்திரிகையாளரொருவர். https://www.msnbc.com/opinion/msnbc-opinion/russia-s-ukraine-invasion-could-lead-putin-s-downfall-n1289955

-பழமைபேசி. 03/01/2022, 5.30pm EST.