3/31/2013

தமிழ் ஏஸ்வெல்?!


மெம்ஃபிசு விமானம் சற்று காலத்தாழ்ச்சியுடனே வந்தது. மூன்று நாட்களுக்கென முப்பதுநாள் மூட்டை முடிச்சுகளுடன் பயணம் செல்பவன் அல்லன் நான். சிறு பெட்டியில் மூன்றே மூன்று நாட்களுக்கான உடுப்புகளும் சிறுகதை நூலொன்றும் போதுமெனக்கு. எபோதோதாவது ஏதோவொரு  இதரத்துக்கான தேவை வரும். ஒன்று நான் தங்கியிருக்கும் விடுதியானது அதைக் கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அல்லது, எனது ஒப்பந்தக்காரன்  புதிதாய் நான் வாங்கியதற்கான இழப்பைச் சரிக்கட்ட வேண்டும். ஏன் இதையெல்லாம் நான் சொல்கிறேனென்றால், காரணமிருக்கிறது. இவ்வுலகில்  எது  நடப்பதற்கும்  நிமித்தமோ  காரணமோ இல்லாமலில்லை. 

முன்பொரு காலத்தில், அதாவது 2005ஆம் ஆண்டுவாக்கிலெல்லாம் உள்ளூர்ப் பயணங்களுக்குக் கூட பெரிய பெரிய வானூர்திகளைப் பாவித்தன நிறுவனங்கள். பொருளாதாரத்தில் கட்டுப்பாடு கொணரவேண்டிய சூழல் வந்து இரங்கராட்டினம் ஆடவே, சிறிய அளவிலான வானூர்திகளைப் புழக்கத்தில் விட்டார்கள். அவரவர் அடுத்தவர் மூச்சுக்காற்றை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும்.  ஒன்றினுள்ளே புகுந்து வெளியே வந்து மற்றொன்றினுள் புகுந்து வெளியே வந்தென மணிகளைக் கோக்கும் நூலிழையைப்போல, இருக்கும் நூற்று சொச்சங்களின் இருநூற்று சொச்ச
நாசித்துவாரங்களிலும் புகுந்து புகுந்து வெளியேவந்து அடங்கிப் போகும் ஆசனத்தின் அடிநழுவி மேலெழும்பிய அந்த மலக்காற்று. அடிச்சிக்கோபுடிச்சிக்கோவென இருக்கும், கூடக் கொண்டு வரும் பைகளை எஞ்சி இருக்கும் இடுக்களில் திணிப்பதற்காய். 

கட்டிப்பறக்கும் மனிதமூட்டைகளில் இவனுக்கு முதலிடம். சிக்குண்டு போவதில் என்ன முதலிடம்? சிலபல பெருவிரற்கடைகள் அகலமான இருக்கை கிட்டும். கலோரியில்லாத உருளைக்கிழங்கு நொறுவல் என்று சொல்லி இல்லாத ஊத்தைஉருளைக் கிழங்குகளின் சீவல்ப் பொட்டணங்கள் சிலவற்றைக் கொடுப்பார்கள். இவனைப் போலவே இருக்கும் அந்த மற்றவர்களும் வாராவாரம் வந்து தொலைப்பார்கள். என்ன இழவுடா சாமி? வாராவாரம் அதே மூஞ்சிகளோடு பயணம். இதிலென்ன சுவாரசியம் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். அதே ஆட்களை மீண்டும் மீண்டும் பார்க்கும் போதுதானே சிலபல கதைகள் நமக்குக் கிடைக்கிறது. 

நேற்று அந்த மூவரும் பேசிப் பேசி வானூர்தியைச் சொற்களால் நிறைத்தலிருந்து, “ஓ, யு ஸ்பீக் ரஷ்யன் லேங்வேஜ்? யு நோ, மை சன் ஆல்சோ ஸ்பீக்ஸ் ரஷ்யன் வெரி வெல். ஹி லேர்ன்ட் இட் ஃப்ரம் மை பாய் பிரண்ட் ஹு இஸ் எ ரஷ்யன். ஹிஸ் டேட் வாஸ் சோ சர்ப்பரைஸ்டு வென் ஹி வாஸ் ஸ்பீக்கிங் இன் ரஷ்யன் யு நோ?!”. களத்து மேட்டுக்குள்ள புகுந்த கவுதாலியப் போல இது நாம,”வெரி இண்ட்ரஸ்டிங். ப்ளீஸ் ஆஸ்க் ஹிம், ஹி மே வான்ட் டு லேர்ன் தமிழ் ஏஸ்வெல்?!”

3/29/2013

புவிக் குழந்தைகள்!

குளக்கரையில்
மஞ்சக்குளித்து
அந்தி தொலைத்து
இருள் பூசிக்கொள்ளும்
குருவிகள் பூத்த
புவிக் குழந்தைகள்!


Live from Halle Park Lake, Collierville, TN, U.S.A!!


3/27/2013

நான் வித்யா!

யோகா கிளாசுக்கு
பாரதி நகர் போயிருக்கும்
அம்மாவுக்குத் தெரியாமல்
தாத்தாவுக்கு காப்பி
போட்டுக் கொடுக்கிறாள்
தாயம்மா பாட்டி!
அந்த மாமாவிடம்
இனிமேல் இங்கு
வர வேண்டாமென்று
சொல்லி அழும்
சின்னமணி அக்காவுக்கு
கன்னத்தில் நல்ல அறை!!
சாக்கடையில்
தவறி விழுந்த
பிரவீணாவுக்கு
கைகால் கழுவிவிட்ட
பிச்சைக்காரத் தாத்தாவை
பிடித்துக் கொண்டு
போகிறது போலீசு!
சதர்ன் மில்
முரளி அண்ணனுக்கு
ஷிப்ட் மாறினது தெரியாமல்
மொட்டை மாடிக்குப் போகும்
மெளலி மாஸ்டர் வீட்டு
சந்திரகலா அக்கா!
மேரி மிஸ்ஸுடைய
செல்போனில் ரீடையல்
போட்டுப் பார்த்ததில்
அது எங்க ஸ்கூல் பஸ்
டிரைவர் அண்ணன்தானாம்
பிடீ பிரியடில் சொன்னான்
த்ரீ ஏ தினேஷ் குமார்!
அம்மாவிடம் சொல்லி
பெர்மிசன் வாங்க வேண்டும்
என்னுடைய ஸ்கூல் டே
பெர்பாமன்சுக்கு ட்ரீட்
ஓசன் ரெஸ்டாரண்ட்டில்!
ஆமாம் நான் இன்றைக்கு
கலைமகள் வித்யாலயா
பிரைமரி ஸ்கூலில்
ஒன் சீ படிக்கும் வித்யா!!

3/25/2013

அம்மா மரம்


அப்பா
அந்த மரத்தோட
அம்மாமரம்
எங்கப்பா?
புறத்தே
தனியாய்
நிற்குமந்த
மரத்தின்
அம்மாவை
நினைத்து
அவளுக்கு நாட்டம்!
வெகுதொலைவே
ஊரிலிருக்கும்
அம்மாவை
நினைத்து
எனக்கு வாட்டம்!!

3/24/2013

கடைத்தேற்றம்

வால்மார்ட்
டார்கெட்
மேசீசு
சியர்சு
சேம்சு கிளப்
ஈபே
அமேசான்
டீல்டைம்
இன்னும்
பல கடைகளும்
சுற்றி வந்தாயிற்று!
என்ன வாங்கிக் கொடுப்பது?
தெரியாமல் தவிக்கிறேன்!
ஊர் எல்லைக்குள் இருந்த
அந்த பனிரெண்டாவது கிணறும் 
வற்றிப் போனதாய்ச் சொல்லி
அழும் அப்பாவுக்கு?!

3/23/2013

இரட்டிப்பு

விமான நிலைய 
விரிவாங்கு முனையத்தில் 
எதையோ நினைத்து 
எங்கோ பார்த்து 
இடையூறு விளைவித்த நான் 
சாரி சொல்வதற்குள் 
என்னை அறைந்தது சாரி! 
இரட்டிப்பு வலி 
மனத்துக்கு!! 
நையப் புடைக்க வேண்டும், 
வெள்ளைக்காரனுக்கு 
நாண 
நன்னயம் 
சொல்லிக் கொடுத்த 
திருவள்ளுவரை!

3/21/2013

ககனமார்க்கம்

நீங்கள் நினைப்பது போல அதற்கும் எனக்கும் எந்த வாய்க்காவரப்பும் கிடையாது. அதனோடு தகராறு செய்வதால் எனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது? ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
ஞாயிற்றுக் கிழமை மாலை ஆகி விட்டால் போதும். நான் எதைச் செய்தாலும் இதைத்தான் காரணம் சொல்வார் என் மனைவி. விடிந்தால் திங்கட்கிழமை என்பதால் நீங்கள் எங்கள் மீது எரிச்சலைக் கொட்டுகிறீர்கள் என்று. உண்மையிலேயே அந்தத் திங்கட்கிழமையோடு எனக்கு எந்தத் தகராறும் இல்லை. வீட்டில் இருப்பவர்கள் மீதும் எந்தவிதமான எரிச்சலும் எனக்கு இல்லை.
ஆனால் என்ன? அந்தப் பாடாவதி திங்கட்கிழமையன்று, நான்தான் வைகறையையே எழுப்ப வேண்டி இருக்கிறது. ஐந்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி முதல் விமானத்தைப் பிடித்து ககனமேற வேண்டும். மேலாண்மைக் கலந்துரையாடலில் இருக்கிற முக்காலே மூணு வீச மணி நேரமும், தான் மட்டுமே பேசிச் சாவடிக்க வேண்டுமென்பதில் குறியாய் இருப்பான் டேவிட் பங்கி. இதுவும் அந்தக் கடூரமான திங்கட்கிழமையில்தான் நடக்கிறது. அதைத் தொடர்ந்துதான் செவ்வாய், புதன், வியாழன் போன்ற நாட்களும் வந்து தொலைக்கிறது. இந்தத் திங்கட்கிழமைக்கு என் போன்றவர்கள் மீது ஏன் இத்தனை வன்மம்? இதை உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்ல முடியும்??
திங்கட்கிழமைத் திருட்டு யாமத்தில் எழுவதால் என்னைத் திருடன் என்று நானிருக்கும் காலியர்வில்லில் எத்தனை பேர் சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ தெரியவில்லை. காலை நான்கு மணிக்கு நாய்கள் மட்டுமல்ல, எந்நேரமும் கூகுள் கூட்டலில் இருக்கும் எங்களுடைய பாலா அண்ணன் கூட உறக்கம் கொள்ளும் நேரம். அப்படிப்பட்ட உறக்கத்தையே என்னிடமிருந்து திருடிவிடும் திங்கட்கிழமை திருட்டுத் திங்கட்கிழமைதான். மற்றபடி எனக்கும் திங்கட்கிழமைக்கும் வாய்க்காவரப்பெல்லாம் ஒன்றும் இல்லை.
காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கூகுள் பிளஸ்ஸில் யார் மண்டை உருளுகிறது, ஃபேசுபுக்கில் எந்தப் பெண்ணின் படத்துக்கு எத்தனை லைக் விழுந்திருக்கிறது, டுவிட்டரில் எவன் எவனை வம்புக்கு இழுத்திருக்கிறான் போன்றவற்றைப் பார்த்த கையோடு மின்னஞ்சல் மேய்ச்சல் செய்தானது. இழுத்துப் பிடித்துச் சமாளிக்க முடியவில்லை. குளிர்காலம் என்பதால் கூடுதலான அவசரம்.
வண்டிக்கு அச்சு முறிந்து விட்டால் என்ன செய்வதென்று சேமஅச்சு ஒன்றினைக் கூடவே எடுத்துச் செல்வார்களாம் பண்டைக் காலத்தில். இப்போதும் ஸ்டெப்னி டயர்கள் எடுத்துச் சொல்வது வழக்கத்தில்தான் உள்ளது. அதைப் போல கூடுதலாக ஒரு சேமச்சிறுநீர் வைப்பறை ஒன்றை மனிதனுக்குள்ளும் வைத்திருக்கலாம். முட்டுகிற நேரத்தில் பாவிப்பதற்காய். அவசரத்தில் கதவை மூட மறந்து விட்டேன். குழந்தைகள் யாரும் எழுந்து அலறிவிடக் கூடாது. என்ன எழவு இது? எங்கள் அமுச்சி வீட்டுப் பெரியெருமை பெய்வதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இனிமேல் ஞாயிற்றுக்கிழமை இரவில் பீர் குடிக்கவே கூடாது.
விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்புமா என்பதைச் சரி பார்த்தாகிவிட்டது. குழந்தைகளைப் பார்த்தால் பிரிவின் ஏக்கத்தில் அழுது விட்டால் என்ன செய்வது? பல் துலக்கி, தும்பிக் குளியல் முடித்து, உடுப்புக்கு மேல் உடுப்பு போட்டு வந்தாயிற்று. என்னாவொரு இன்பமடா? அமெரிக்காவின் காற்று நூற்றுக்கு நூறு வாங்கிவிடும். வசந்தத்தின் குழந்தைகள் செரிமரங்கள். செம்பூக்கள் பூத்து மணப்பெண் போலக் குலுங்கி நிற்கின்றன.
மனையாளின் அணுக்கச் சூட்டினை வீட்டிலேயே வைத்து விட்டு பெருந்தெருவில் இந்நேரத்துக்கு ஏன் இத்தனை பேர் கார்களில் போய்க் கொண்டிருக்கிறார்கள்? என்னைப் போல அவர்களும் திங்கட்கிழமையால் சபிக்கப்பட்டவர்களோ? திருடர்கள் வேறு ஆங்காங்கே கன்னக்கோல் வைக்கிறார்களாம். இதைப் படுவாப் பயல் டேவிட் பங்கியிடம் சொன்னால், முந்தின நாள் இரவே வந்துவிடு என்று சொல்லி, ஞாயிற்றுக் கிழமைக்கும் எனக்குமிடையில் சதி செய்கிறான்.
மெம்ஃபிசு விமான நிலையப் பணிப் பெண்கள் எறும்புகளின் தாவளத்தில் இருந்து வருகிறார்களா எனக் கேட்டறிய வேண்டும். இந்தக் குளிர்காலத்திலும் விடியலுக்கு முந்தைய யாமத்தில் என்ன சுறுசுறுப்புக் காண்பிக்கிறார்கள். முகமலர்ச்சிக்கென்றே தனிச்சம்பளம் தருவார்களாய் இருக்கும். முசுடுகளைப் பார்த்து விட்டுப் போய் விமானம் ஏறினால் நன்றாக இராது என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
பரிசோதக ஆண்களுக்கு மட்டும் காண்டாமிருக வயிறு. பார்க்கப் பாவமாக இருக்கிறது. உள்ளே காற்றை அடைத்து வைத்திருக்கிறார்கள் போலும். அதனால்தான் நாள் முழுதும் அதைச் சுமந்தபடியே நின்று கொண்டிருக்க முடிகிறது அவர்களால். உள்ளே இருக்கும் காற்றைப் பிடுங்கி விட்டால் என்ன? கைவசம் குண்டூசி எதுவும் இல்லை. வேட்டியும் போச்சு. அதையிழுத்துப் புடிக்கிற அரைஞாண் கயிறும் போச்சு. அரைஞாண் கயிறு கட்டி இருந்தாலாவது அதிலொரு காப்பூசி தொங்கும். ஆனால் வீட்டில் நிறையக் காப்பூசி இருக்கின்றன. எதற்கு இவ்வளவு காப்பூசிகள் வைத்திருக்கிறாயெனக் கேட்டால், காப்பூசியென்றால் என்ன என்ற கேள்வி நம்மை அறைகிறது. பின்னூசி என்றதும், ஓ அதுவா? தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே எனும் ஏகடியம் வேறு. பின்னும் ஊசியும் கலந்து நடுசென்ட்டர் போல ஆகிவிட்டது.
பரிசோதனையெல்லாம் முடிந்தது. இன்னுமந்த பேய்ப்பறவையின் வயிற்றுக்குள் போவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. பெரிதாக எது இருந்தாலும் முன்னொட்டாக பேய் வரும். வலுவான காற்றுக்கு பேய்க் காற்று. பெரும்புடலைக்கு பேய்ப்புடலை. அதென்றா அமெரிக்காக்காரிகளுக்கு மட்டும் பேய்மொலைகளா இருக்குதூ என்பான் திர்றான் என்கிற திருமூர்த்தி. விகாரமாக விரிந்திருக்கும் பெரிய அளவிலான கிணறுக்கு பேய்க்கிணறு. அது வெள்ளந்தி மக்களின் மொழி.
ஸ்டார்பாக்சு காப்பி குடிக்காமல் நாளைத் துவக்கினால் திருடிக் கொண்டு வந்த ஆட்டை புளியமரத்தடியில் எவனோ அடித்துப் புடிங்கிக் கொண்டு போய்விட்டதைப் போல மனசு சூம்பிக்கிடக்கும். அமெரிக்காவில் பலவிதமான அடிமைகள் உண்டு. அதில் வெகுமுக்கியமானது ஸ்டார்பாக்சு அடிமைகள். எனக்கு முன்னால் ஏற்கனவே ஆறேழு அடிமைகள் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள்.
கடலைபொரி தின்று கொண்டு கூரைக்கொட்டாயில் சிலுக்கு டான்ஸும், ஈசல்பொரி தின்று கொண்டு அடைமழையை வேடிக்கை பார்ப்பதும் போலத்தான் ஸ்டார்பாக்சு காப்பியோடு அலைபேசியில் வலைமேய்வதும். இதுக்கு இது என்று எப்படியோ அமைந்துவிடுகின்றன. அவற்றால் வாழ்க்கையும் சுபீட்சமடைகின்றது.
ககனமேறி விட்டால் வண்ணதாசனின் கவிதைகளையும், நாஞ்சில நாடனின் சிறுகதைகளையும் புசித்துக் கொண்டே போகலாம். வண்ணதாசனின் கவிதைகள் பதநீர், நாஞ்சில் நாடன் சிறுகதைகள் பனங்கற்கண்டு. இரண்டையும் மாறி மாறி உட்கொண்டால் விமான நெடியின் வீச்சில் இருந்து விமோசனம் கிட்டும்.
ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து, தட்டுமுட்டு சாமான்களை கிடைத்த பொந்துகளில் திணித்து அமர்ந்தாயிற்று. கச்சைகளும் கட்டியாயிற்று. முதல் வகுப்பு இருக்கையில் அமர்வதில் எப்போதும் இது கைகூடும் நமக்கு. அடுத்து உள்ளே வரும் ககனமேறிகளைப் பார்த்து மனிதமொழி பேசிக் கொள்ளலாம்.
என்ன ஒரு அழகு? நான்குமாதங்கள்தான் ஆயிற்றாம். கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிச் சிரிக்கிறான். என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்றே கவனித்திருக்கவில்லை நான். பார்வைகளால் ஒருவரையொரு நனைத்துக் கொண்டிருந்தோம். விமானம் முப்பத்து ஏழாயிரம் அடிகளைத் தொட்டுவிட்டதாம். நம்மைச் சுமந்து சொல்லும் விமானம் இன்னும் ஒரு மணி பத்து மணித்துளிகளில் சார்லட் நகர மண்ணை முத்தமிடும்  என்கிறாள் விமானப் பணியாளச் சீமாட்டி.
முன்பக்க திசை நோக்கித் திருப்பி வைத்தாலும் அவன் என்னையே பார்க்கிறான். நான் அவனைப் பற்றி எழுதுவேனென்று அவனுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமோ? அல்லையில் நோக்கின் முகில்கள் பல்வேறு உருவங்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அந்த உருக்களுக்கு இன்ன உருவம் பொருந்துமெனப் பார்த்துப் பொருத்துவது எனக்கு வாடிக்கை.
”ஐயா தாங்கள் என்ன குடிக்கிறீர்கள்?”, கேட்கிறாள் சீமாட்டி. ”கிரேன் பெரி ஜூஸ்!” என்றேன். உங்களுக்கு பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி என்கிறாள். இவள் நல்லவள். இனிமையாய்ப் பேசுகிறாள். நாளின் துவக்கம் என்பதால் புத்துணர்வோடு இருக்கிறாள். திடுமென வந்தது அறிவிப்பு.
பொன்னமராவதி நடுகற்கள் வானப்பரணில் அணிவகுத்து அமர்ந்திருக்கின்றன. பணியாளச் சீமாட்டிகள் அங்குமிங்கும் ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். சொக்கறைப் பையன் கன்னத்தில் குழிவிழ என்னையே பார்க்கிறான். சிரிக்கிறான். அம்மாவின் தலை கவிழ்ந்திருந்தது. இறைவனை இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
மூன்றாவது வரிசையில் இருக்கும் நான் ஐந்தாவது வரிசையைத் திரும்பிப் பார்க்கிறேன். நான்கைந்து பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அனைவருமே மருத்துவர்கள். ஒரு மலரை நோக்கி ஐந்தாறு வண்டுகள் வந்தன. சிறு இறகுகள் செல்லமாய்ப் படபடக்கக் கண்களாலேயே பேசிக் கொண்டன அவையாவும். மலரின் கட்டுப்பாட்டினை ஒன்று தனக்குள் கொண்டுவர, மற்றன எல்லாமும் தத்தம் திசையில் பறந்து மறைந்தன சுவடு தெரியாதபடிக்கு.
பணியாளச் சீமாட்டியவள் ஓரடிப் பீர்க்கங்காய் போன்ற ஆக்சிஜன் கலத்தைக் கொணர்ந்து கொடுத்தாள். மற்றவள் ஓடிச்சென்று முதலுதவிப் பையினைத் தூக்கி வந்தாள். எஞ்சிய பயணியர் அனைவரும் தத்தம் தலை கவிழ்ந்திருக்க, ஆழ்ந்த தவத்தில் சயனித்திருந்தனர். கண்களால் கூடப் பேசிக் கொள்ளவில்லை யாரும். என்னையும் என்னைத் தொடர்ந்து கவனித்துச் சிரிக்கும் ஐந்து வயதுப் பையனையும் தவிர.
நனைந்த துணியைக் கேட்டார் மருத்துவர். நெஞ்சினைத் தடவிக் கொடுத்துக் கொண்டே நெஞ்சுத்துடிப்பு, இரத்தழுத்தம் முதலானவற்றைக் கவனித்து குறித்துக் கொண்டிருந்தார். விமானம் மீண்டும் மெம்ஃபிசுக்கே திருப்பி விடப்பட்டிருப்பதாக விமானச்சாரதி அறிவிப்புச் செய்தார்.
விமானத்தில் இருந்த நடுகற்கள் நடுகற்களாகவே இருந்தன. கிஞ்சித்தும் அசையவில்லை எதுவும். ஒவ்வொரு மனத்துள்ளும் ஒரே ஒரு வேண்டுதல்தான் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரது முகமும் சிவந்து கொண்டிருந்தது தொடுவானத்துக் கதிரவன் போல.
கீழே பார்க்கிறேன். தரை மார்க்கம் கண்களின் எல்லைக்குள் வந்து விட்டது. இது வரையிலும் எந்தவொரு சலனமுமின்றிச் சுற்றுமுற்றும் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு, இப்போது நெஞ்சு கனத்துப் படபடப்புக் கூடி வருகிறது. மீண்டும் ஐந்தாம் எண் வரிசையில் வலது புற இருக்கைகளைக் கவனிக்கிறேன். மருத்துவரின் கைகளுக்குள் மாந்தனா? மாந்தக் கூடா?? ஒன்றும் தெரியவில்லை.
அந்தக் குழந்தைகூட அழாமல் ஆழ்ந்ததொரு அமைதியைத் தன்மேலும் பூசிக் கொண்டிருக்கிறது. கண்களை மூடி அமர்ந்திருக்கிறேன். விமானம் தரையைத் தொடுவதை உணர்கிறேன். கண்கள் விழித்து வெளியில் பார்க்கிறது என் உத்தரவுவெதும் இல்லாமலேயே.
மூன்று தீயணைப்பு வண்டிகள்; நான்கைந்து மருத்துவ விரைவூர்திகள். சிவப்பு, மஞ்சள் ஒளிக்கீற்றுகளைப் பெருவாரியாக உமிழ்ந்து கொண்டிருக்கிறது. விமானம் படிப்படியான வேகக் குறைப்புடன் தரிப்பிடம் வந்து சேர்ந்து விட்டது. நடுகற்களாய் அமர்ந்திருக்கும் பயணியர் யாவரும், நடுகற்களாகவே தொடர்ந்து தம்மை இருத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் இங்குமங்கும் சிரமாடி விழிகளசைத்துக் கண்டு கொண்டிருக்கிறேன். கதவு திறக்கப்பட்டதுதான் தெரியும். திரும்பிப் பார்க்கிறேன் ஐந்தாம் எண் வரிசையில் யாருமே இல்லை. நடுகற்கள் உயிர் பெற்றுக் கொண்டிருந்தன. பணியாளச் சீமாட்டி முதன் முறையாகப் பேசினார். “கழிப்பறைக்குச் செல்வோர்; எழுந்து நிற்க விருப்பப்படுவோர் அவ்வண்ணமே செய்யலாம். நீங்கள் அனைவரும் மிகவும் உன்னதமானவர்கள். நன்றி!”, என்றார். நான்குமாதச் சிறுவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
பேணிய மருத்துவரும் மற்ற மருத்துவர்களும் அளவளாவுகிறார்கள். உயிர்பெற்ற நடுகற்கள் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.
ஒருவரை ஏற்றிச் செல்ல, எதற்காக மூன்று தீயணைப்பு வண்டிகள்? எதற்காக நான்கு மருத்துவ விரைவூர்திகள் வர வேண்டும்? ஆபத்துக்கான சமிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட முனையங்களுக்கு உடனே தெரிவிக்கப்படும். அந்த இடத்துக்கு அருகில் இருக்கிற இரண்டு அல்லது மூன்று இடங்களிலிருந்து இவ்வண்டிகள் உடனே அனுப்பப்படுவது வழக்கப்பாடு. ஏதாவது ஒரு வழியில் வந்து சேர வேண்டியது வரவில்லையென்றாலும் மற்றது வந்து சேர்ந்துவிடும் என்பதற்காக.
நெஞ்சுத் துடிப்பை வைத்துப் பார்க்கும் போது தான் எந்த முடிவுக்கும் வர இயலாது எனச் சொல்லிவிட்டார் மருத்துவர். பணியாளச் சீமாட்டிக்கும் நம்பிக்கையானது முகக்குறிப்பில் இடம் பெறவில்லை.
தத்தமது அடுத்த விமானங்களை யாரும் பிடித்துச் சென்று சேர்வதென்பது முடியாத காரியம். ஏற்கனவே இரண்டு மணி நேரம் காலத்தாழ்ச்சியாகி விட்டிருந்தது. எனினும் யாரும் ஏமாற்றத்தையோ, விரக்தியையோ காண்பித்துக் கொண்டிருக்கவில்லை. சோகம் அனைவரையும் உலுக்கி விட்டிருந்தது.
மீண்டும் விமானம் புறப்பட்டு வானேறியது. எல்லோரது மனத்திலும் அந்த மனிதனுக்கு என்னாயிற்றோ எனும் கவலைதான். வழக்கமாக விமானத்துக்குள் இருக்கும் சூழலை, அந்த விமானம் அன்றைக்குத் துப்புரவாக இழந்திருந்தது. பதநீரும் கற்கண்டும் பதம் பார்க்கப்படாமல் வெறுமன கிடந்தது. ஐந்தாவது வரிசையில் இருக்கும்  5F இருக்கையை அண்டியிருப்பவர்கள் எல்லோரும் சபித்துச் சபித்துப் பார்த்ததில் ஆடை இழந்து அம்மணமாய்த் தெரிகிறது. ”நீயும் ஏன் என்னை அடிக்கடி திரும்பிப் பார்க்கிறாய்?” என்று கேட்டு அழுகிறது  சக பயணியின் வெற்றிடமான அந்த அம்மண இருக்கை.
நூற்று ஐந்து பேருடைய பயணத்தில் காலதாமதம். அன்றைய அலுவல் பாதிப்பு. விமானத்தின் அடுத்தடுத்த வழித்தடங்கல்களிலும் இதனால் பாதிப்பு. கனெக்ட்டிங் பிளைட்டுகளையும் பாதிக்கும். எப்படிப் பார்த்தாலும் பாதிப்பின் மதிப்பு நூறாயிரம் டாலர்களுக்கும் அதிகமாகலாம். யாரும் அதைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
நான் உடனே இன்றைய எனது அலுவல் பாதிப்புக்குள்ளாகுமென எனது நிறுவனத்திற்கு அறிவுறுத்தினேன். “நீயும், உன்னை அண்டி இருப்பவர்களது பாதுகாப்புத்தான் முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை!” எனும் மறுமொழி உடனே வந்து சேர்ந்தது.
விமானம் சார்லட்டையும் வந்தடைந்து மண்ணைத் தொடப் போகிறது. விமானப் பணியாளச் சீமாட்டிகள், இழவு வீட்டுப் பணியாளர்கள் போல இருந்தார்கள்.  நாம் சார்லட் நகரை வந்தடையப் போகிறோம் என்று தொய்ந்த குரலில் அறிவிப்புச் செய்கிறாள் அவள்.
விமானச் சக்கரங்களின் ’டடக்ச்’ ஒலி கேட்கிறது. யாரோ விசும்பி அழும் ஒலியினால் பின்னிருக்கைகளிலிருந்து சன்னமான சத்தம் வருகிறது. விமான ஓட்டி அறிவிப்புச் செய்கிறார், “ஐ காட் எ மெசேஜ் ஃபிரம் யு.எஸ் ஏர்வேஸ்; எதிர்பாராத விதமாக நமது பயணத்திலிருந்து பிரிந்து சென்று போனவரது உடல்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்து, சீரான நிலையில் இருக்கிறார்!:.
நடுகற்கள் யாவும் புத்துயிர் பெற்று ஒத்த குரலில் கூவின, “ஹே… யு காய்ஸ் ஆவ்சம்யா! சீயர்ஸ்!!”. முன்பக்கம் இருந்த பணியாளச்சீமாட்டி கூவுகிறாள், “யு மேட் மை டே. காட் ப்ளஸ் அமெரிக்கா!”. ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறார்கள். மருத்துவருக்குப் புளகாங்கிதம்.
வெளியே வந்து விமான முனையத்தில் பார்த்தால் எங்கும் மக்கள் வெள்ளம். அங்குமிங்குமாக ஓடிச் சென்று தத்தமது அடுத்த விமானங்களுக்கு ஏகியபடி இருந்தனர். நாங்கள் வந்த விமானத்திலிருந்து வெளியேறியவர்களும் ஒவ்வொருவராகக் கூட்டத்தில் கரைந்து கொண்டிருக்கிறார்கள். “ஏதாகிலும் துயர் நேரிடின், இந்த தேசத்து மக்களின் உள்ளார்ந்த பேணுகை எனக்கும் உண்டல்லோ?”, வானுயர்ந்த நம்பிக்கைப் பேரொளியில் கரைந்து போகிறேன் நான்!!
நன்றி: வல்லமை

3/18/2013

முத்தம்

இது என்றாவது நிகழ்கிற சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ அன்று. நியூயார்க் பங்குச்சந்தை திறவுபடுகிற நாட்கள், திறவுபடாத நாட்கள், அமெரிக்க டாலருக்கும் தங்கத்துக்கும் ஒட்டு உறவு இருக்கிறதாக நினைத்துக் கொள்கிற நாட்கள், நினைக்காத நாட்கள் என அனைத்து நாட்களிலும் நடைபெறுகிற உவப்புகால பூசையிது. உடனடியாக குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது எனக்கு. 

சிந்தைக்கெட்டிய முதல் முத்தமாரி அதுதான். இரு கன்னங்களிலும் அடுத்தடுத்து மாற்றி மாற்றித் தொடர்ந்து முத்தங்கள் கொடுத்துக் கொஞ்சி நனைத்தவள் என் சின்னம்மா. அந்த நாள் தொட்டு, என்னை இடைவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது முத்தம்.

காத்து கறுப்பு அண்டிவிட்டதென்று சின்னம்மாவுக்குக் கல்யாணம் செய்து வைக்காமலே விட்டு விட்டார்கள். வீட்டில், ஊரில், எல்லாருக்கும் அவளைக் கண்டால் வேடிக்கை. அம்மா சாயலை ஒத்திருக்கும் சின்னம்மாவுக்கும் அம்மாவுக்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சின்னம்மாவுக்கும் அது வசதியாய்ப் போயிற்று. இடுப்பில் வைத்துக் கொண்டு எங்கும் கிளம்பி விடுவாள். அடிக்கடி கொஞ்சி முத்தமிட்டு அணைத்துக் கொள்வாள். அள்ளியள்ளிக் கொடுத்தவள் தனக்கொரு போதும் கேட்டு வாங்கிப் பெற்றதாக எனக்கு நினைவில்லை. அந்நினைவுகள் அறிவுப்புலத்தில் வாசம் கொள்ளத் துவங்கிய நாளிலிருந்து என்னை ஆண்டு வருகிறது முத்தமாரி.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு எதுவும் நிகழாத இனிய இந்நாளில், முத்தக் கச்சேரி இடம்பெறுகிறது எங்கள் அலுவலக நண்பர்களிடத்திலும். அதற்குக் காரணம் குதிரைவால் டீனா. முகபாவங்களுக்கொப்ப நர்த்தனம் மேற்கொள்ளும் அந்த குதிரைவால் சடை. எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அவள். வாய்த்துடுக்கும் விம்மித்திமில்கிற குயமிரண்டும் உடையவள். சிரித்து மாளும் அவளுக்கு ஒரே ஒரு கணவன், மைக் ஜெஃப்பர்சன்.  ஃபெட்எக்ஸ் கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அவனுக்கு வேலை. அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் டீனாவை எங்கள் அலுவலக வாயிலில் இறக்கி விட்டுப் போவான். போகிறவன் சும்மா போக மாட்டான். மனங்குழையும் காட்சியொன்றை எங்களுக்கு ஊட்டிவிட்டுப் போவானவன். இன்றைக்கு அது நிகழாமற்போனதுதான் முத்தம் குறித்தான எங்களது அரட்டைக் கச்சேரிக்கான வித்தாகும்.
நண்பகல் பசியாற்றுகைக்கு மெக்சிகன் உணவகமொன்றுக்குப் போவதெனத் தெரிவானது. அதன்படியே குதிரைவால் டீனாவும் நாங்களும் குடோபா துரித உணவகத்துக்குப் போய்ச் சேர்கிறோம். மோவாய் உச்சிநோக்க, கண்ணிமைகள் சரிந்திருக்க அவள் சிரித்துக் கொண்டிருக்கிற தருணமொன்றில், அவளது பெருமானங்களைக் களவாய்க் கண்டு இரசிக்கிறான் தொப்பை தீபக். அப்படியே நேக்காய்ச் சந்தில் சிந்துவும் பாடுகிறான்.
“”என்ன டீனா? காட்சி எதுவும் எங்க கண்களுக்கு சிக்கலையே இன்னைக்கு??”, வாகாய் வீசியெறிகிறான் தூண்டிலை.
“ஏய், காய்ஸ்? அதெல்லாமா பார்த்திட்டு இருக்கீங்க?? மைக்கேலுக்கும் எனக்கும் சும்மா ஒரு சின்ன ஊடல். அவன் ஃபேசுபுக்ல என்னோட தங்கச்சிகூட எதோ வறுத்துகிட்டு இருந்தான். அதான் சும்மா தொங்கல்ல விட்டிருக்கேன்!!”, மீண்டும் மோவாயை உயர்த்திச் சிரித்தாளவள். இம்முறை தொப்பை தீபக்கோடு சேர்ந்து நாங்களும் கண்ட பேறு கொண்டோம். அது படைக்கப்பட்ட படைப்பினுடைய வெற்றியேயன்றி காமனின் சிருங்காரக் குறும்பல்ல.
அமெரிக்காவில் அப்படித்தான். அவ்வப்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அல்லாவிடில் அவனுக்கு வேறொருவளுடன் தொடுப்போவென மனம் கிலேசங்கொள்ளும் அவளுக்கு. முத்தம் கொடுத்து அண்டியிருக்காவிடில் தொடுப்பு தூர்ந்து அந்தோவெனப் போய்விடுவாளோ என்கிற அச்சம் ஆடவனுக்கு. இப்படியாகத்தான் அடிக்கடி ஐலவ்யூ சொல்லிக் கொள்வதும் இச்சு கொடுத்துக் கொள்வதும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நாம் சொல்லிக்கொள்கிற இந்த மணித்துளியிலே கூட ஆயிரமாயிரம் இச்சுகள் பிறந்திருக்கும். சம்பிரதாயச் சடங்குகளாய் சிலபல ஆயிரங்களும், உள்ளபடியே மனத்தின் ஆழத்தில் இருந்து சிலபல ஆயிரங்களுமாக ஐலவ்யூக்கள் உதிர்ந்திருக்கும். ஹனி தடவப்பட்ட அம்புகளுக்குக் கூடுதல் வீரியம் உண்டு.
போட்டு வாங்கி நூதனம் கறப்பதில் யோகாசன கார்ப்பரேட் குருக்களை எல்லாம் மிஞ்சக்கூடியவன் தொப்பை தீபக். அதனாலேயே அவன் எங்கள் நிறுவனத்தினுடைய விற்பனைப் பிரிவின் இயக்குநராய் கோலோச்சுகிறான். முத்தக்கச்சேரியில் முதல் கறவையை நடத்திக் கொண்டிருப்பவனும் அவனே. நாகரிகமாயும் படிப்படியாயும் அடி மேல் அடி வைத்துக் கொண்டிருக்கிறான். அதை இரசித்தபடியே கச்சேரியில் முனைப்பாய் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள் டீனா.
காலையில் எழும்பும் போதே முத்தம் கொடுத்துவிட்டுத்தான் எழுவான் மைக்கேல். கண் விழித்த கணம் முதல் அலுவலகம் வந்து சேரும் வரையிலுமாக நான்கைந்து இச்சுகள். காரை விட்டு இறங்கும் போது ஒரு இச்சும் ஐலவ்யூக் கொஞ்சகமும். பிற்பாடு மாலையில் திரும்ப வந்து ஏற்றிச் செல்வதற்குமான இடைப்பட்ட நாழிகைகளில் அலைபேசியினூடாக நான்கைந்து. மஞ்சத்தில் நடப்பனவற்றை இக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டாள் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு. அத்தோடு அவர்கள் வீட்டுச் செல்ல நாய்க்கு மைக்கேல் கொடுக்கும் முத்தங்களும் வர்ணிக்கப்பட்டன. தூய்மைச் சிநேகத்தின் தூதுவர்கள் நாய்கள்.
இளம்பிராயத்தின் போழ்து வகுப்புத் தோழன் ஒருவனிடத்தில் எல்லாமும் ஈந்திருக்கிறாள். அக்காலகட்டத்தில் இடம் பெற்ற இச்சுகள்தான் துவக்ககால இச்சுகள். மழலைப்பருவத்தில் அம்மாவோ அப்பாவோ அவ்வளவாய் அணுக்கம் காட்டியிருக்கவில்லை. பாட்டிதான் எல்லாமும். ஆனாலும் பாட்டியின் முத்தங்கள் அரிதினும் அரிதாய் பிறந்த நாள் அன்று மட்டுமே. அவளுடைய  முத்தகளத்தின் வளம் என்பது மைக்கேல் ஒருவனின் துணை கொண்டு மட்டுமே கட்டியெழுப்பப்பட்ட ஒன்று.
முத்தக்கச்சேரியில் அடுத்த ஆலாபனை நிகழ்த்தியவன் பிரையன் வோஷ்னி. ஏற்கனவே இரண்டு துணைகளோடு காதல்வீணையை மீட்டி மணமுறிவு பெற்று, தற்போது மணமெதுவும் முடிக்காமல் தாம்பத்தியப் பேரரசுக்கு ஈடு கொடுத்து வருகிறான். பஞ்சணை இச்சுகளைக் கொண்டு மட்டுமே இணையாளை ஆண்டு வருகிறான். வசியப்படுத்துவதில் கில்லாடி. காமவனக் கதைகள் எவ்வளவும் எழுதலாம். கிடைகொள்ளாமல் நெளியும் குதிரைவால் டீனாவைப் பார்த்து மனம் இளகி, ஆலாபனையைச் சுருக்கமாகவே முடித்துக் கொண்டான் சிநேக முத்தமலடு கொண்டவன்.
ஒடிசலாய்த் தலையை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தான் தொப்பை தீபக். அவனை டீனா இடைமறித்துச் கேட்கிறாள், “ஏய், நீர் சொல்லுமய்யா! சும்மா எங்களை மட்டும் துவையல் கல்லுல துடைச்சி எடுக்குற மாதிரி வளிச்சு வளிச்சு எடுத்தியே?”.
நன்றாகப் பேசுவான் தொப்பை. அடிக்கிற காற்றில் இருந்தே வெண்ணெய் எடுக்கக் கூடியவன். மிசிசிப்பி ஆற்றில் ஓடுவதெல்லாம் மின்னசோட்டாக் கால்நடைகளின் உச்சாதான் என மெய்ப்பிக்கும்படியான தந்திரச்செப்புகை கூட கைகூடி வரும் அவனுக்கு.
பாலகனாய் இருந்த நாட்களில் அம்மா அப்பாவின் வழமையான முத்தங்கள் அவனுக்கும் கிடைத்திருக்கிறது. சிறுவயதிலேயே வணிகச்சிந்தனை ஆட்கொண்டுவிட்டதால் மெல்லுணர்வுகளுக்கு அவ்வளவாக ஆட்பட்டிருக்கவில்லையவன். காதல் உணர்வு என்பதே கூட அரிதாய்த்தான் மேலெழுந்திருக்கிறது. கல்யாணமும் பெற்றோர் பார்த்து வைத்த உறவுக்காரப் பெண்ணோடுதான்.
தொப்பை தீபக்கின் மனைவி ஜெயஸ்ரீ. அலுவலக நிகழ்ச்சிகளின் வாயிலாக ஜெயஸ்ரீயை எங்களுக்கும் தெரியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிந்துணர்வு உண்டு. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அக்கறையின்பால் நிகழும் இச்சுகள்தான் பெரும்பாலும். அதுவும் என்றாவது ஒருமுறைதான். துயரம், சோகம், துக்கம் முதலானவற்றின் போது அவள் அழுகையைக் கட்டுப்படுத்த இவன் பாவிப்பது முத்தங்களைத்தான். இவனும் இச்சைப் பொழுதில் எழுவனவற்றை முத்தக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை.
கிரங்கிய கண்களோடு என்னைப் பார்க்கிறாள் டீனா. எந்த ஹார்மோன் சுரந்து என்ன விளையாட்டு விளையாடுகிறதோ அவளுக்குள்? தொப்பை தீபக்கும், பிரையன் வோஷ்னியும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.   சாலையோரத்தில் நின்று போலீசுகாரரிடம் தண்டச்சீட்டு பெற்றுக் கொண்டிருக்கும் அகப்பட்ட வாகன ஓட்டியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தார்கள் என்னை.
கச்சேரியில் என்னுடைய ஆலாபனைக்கான நேரம். எழில் சிந்தும் அழகுப் பெட்டகமாய் என் முன்னால் அமர்ந்திருக்கும் டீனாதான் எனக்கிருக்கும் ஒரே இடைஞ்சல்.
நெளிகிறாள். சிரிக்கிறாள். சாய்த்த செவிகளில் உள்வாங்கி கண்களால் கொப்புளிக்கிறாள் தான் சுவையோடு நுகர்வதாய்ச் சொல்லும் உளக்குறிப்பை. குதிரைவால் சிலுப்பிச் சிலுப்பி ஆடுகிறது. ஒருசோட்டு பப்பாளிகளிரண்டும் அவ்வப்போது என் கண்களைச் சுண்டுகிறது. ஆனாலும், முத்தம் என்பதன் மீதான தாக்கம் எனது கச்சேரியைச் செவ்வனே செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
உதடுகளால் செய்கிற செய்கையெல்லாமே முத்தம் ஆகிவிடுமா? மாந்த நேயம் அற்ற பதர்கள் இதிலும் கலப்படம் செய்து தொலைத்து விட்டார்கள். அவர்களுள் முதலாவதாகக் காமனைத்தான் நான் சுட்டுவேன்.
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான்தான் வகுப்புக்கு சட்டாம்பிள்ளை. சட்டாம்பிள்ளைக்கென்று சில சிறப்புகள் உண்டு. ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் அதில் ஒன்று. சத்துணவு டீச்சர் என்னைத்தான் எதற்கும் நாடுவார்கள். டீச்சர் என்பதில் ஒரு முரண் உண்டு. ஆனால் கிராமத்தான்கள் நாங்கள் சொல்வதுதான் வெல்லும். வெல்ல வேண்டும்.
பள்ளியில் ஆண் ஆசிரியர்களை வாத்தியார் என்போம். பெண் ஆசிரியர்களை டீச்சர் என்போம். நகரத்து ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிர்மல் எங்களைப் பார்த்து கேலி செய்தான். ”டீச்சரும், வாத்தியாரும் ஒன்னுதானடா?”, கெக்கலித்தான். “டீச்சருக்கும் வாத்தியாருக்கும் வித்தியாசமே தெரீல இவனுக்கு? டவுன் பள்ளிக்கூடத்துல படிக்கறானாமா இவன்??”, ஒட்டுமொத்தமாய் நாங்கள் சொல்லிச் சிரித்ததில் அழுது கொண்டே போனவன் வெகுநாட்களுக்கு எங்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை.
சத்துணவு ஆயா என்பார்கள். ஆனால் எங்களுக்கு சத்துணவு டீச்சர்தான் அந்த சிவகாமி அக்கா. பக்கத்திலிருந்து அடுப்புக் கூட்டுவதற்கு என்னைத்தான் கூப்பிடுவார்கள். பெரிய காவுமொடாவில்தான் சோறுக்கு உலை வைத்து அரிசி போடும் சிவகாமி அக்கா. நான் பக்கத்திலிருந்து விறகுகளை உள்ளே தள்ளி, ஊதி விட்டு சமேதரம் பார்ப்பேன். முதலில் தொளக்புளக் சத்தம் வரும். பிற்பாடு சத்தம் மங்கி, மொடாவில் முக்கால் அளவில் தண்ணி அடங்கி நிற்கும். தண்ணியைத் தன்னுள் வாங்கி அரிசிப் பருக்கைகள் மகிழத் துவங்கும். ஒவ்வொரு பருக்கையும் மகிழ மகிழ அளவில் அது பெரிதாகிக் கொண்டே வரும். சரியாக நெகமம் பஸ் மேற்கே போகும் போது காவுமொடாப் பொங்கி, மூடியிருக்கும் தட்டினைப் புறந்தள்ளியபடி சோறு வெளித்தள்ளிக் கொண்டு இருக்கும்.
சிநேக பாவங்களுக்காய் மாந்தன் மனம் மகிழ்ந்து வரும். உள்ளம் கனிந்து, பின் உணர்வு மகிழ்ந்து மேலெழும்பிக் கொண்டே வந்து செவ்வாம்பல் இதழ்களில் முத்துகள் தெறிக்கும். அத்தகு முத்தங்களைக் கொடுக்கவும் பெறவும் ஆசைப்பட்டுப் பித்தனானேன் நான்.
உளம் கனிந்து மனம் மகிழாமல் கொடுக்கிற, கொடுக்கப்படுகிற எதுவும் வெறும் இச்சு மட்டுமே. நீர்க்குமிழி போல வெறுமனே பெரிதாகி வெடித்துச் சிதறும் ஒலிக்கூளமது.
இச்சைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் இடம் பெறுவன முத்தங்களா? அவை சும்பனங்கள். ”சும்பனத்துக்கடங்காத கொம்பன் எவன்டா நாட்டுல?” என்று எக்காளமிடுவார்கள் நாட்டுப்புறத்தில். கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ் கொடுப்பர். கூடவே சும்பனமும் உகப்பர் பரத்தையர் என்று கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.
டீனாவுக்கு இவையெல்லாமே புதிதாய் இருந்தன. முத்தமலட்டிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தான் பிரையன் வோஷ்னி. எங்க ஊர் நாட்டாமை சோமலிங்கத்தின் கைத்தடி நாகசாமியைப் போலவே, சொன்னதற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான் தொப்பை தீபக். “வாட் மேன், வாட் டு யு திங்க்?”, தொப்பையின் தொடையைத் தட்டினாள் டீனா தனக்கேயுரிய ஏகடியச் சிரிப்போடு. தொப்பை நெளிந்து நாணுகிறான்.
கலப்படமேதுமின்றி சிப்பிக்குள்ளிருந்து கிடைப்பது முத்து. முத்தமற்ற இதழ்கள் வெறும் கிளிஞ்சல்கள்.
சின்னம்மாவின் அன்பு முத்தங்கள் அகாலத்தில் நின்று போனது எனக்கு. என் அப்பாவுக்கும் தாய்மாமான் ஒருவருக்கும் நேர்ந்த பிணக்கில், என் பாட்டி வீட்டிலிருந்து எங்கள் ஊருக்கே கொண்டு வரப்பட்டேன். ஆனால் எனக்கான முத்தங்கள் நின்று விடவில்லை.
வீட்டில் கடைப்பிள்ளை என்பதால் நான் அப்பா செல்லம். வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னைக் கொஞ்சிக் கொண்டேயிருப்பார் அப்பா. “முலுவா, முலுவா” என்று விளித்துக் கொஞ்சுவார்.
“முலுவா, எனக்கொரு முத்தங்குடு பாக்கலாம். டேய், ஒன்னு குடுறா!”, கெஞ்ச விட்டுக் கொடுப்பேன் நானும். அவர் கொடுக்க எத்தனிக்கும் போதெல்லாம், “பீடி நாத்தம், பீடி நாத்தம்” எனச் சொல்லி போக்குக் காட்டி மகிழ்வேன்.
ஏழாம் வகுப்பு படிக்கத் துவங்கிய நாட்களில் படிப்படியாக அவருடைய நின்று போனது. ஆனால், கடவுள் மறுபக்கக் கதவுகள் பலவற்றைத் திறந்து வைத்தார் எனக்காக. என் அம்மாவின் மற்றொரு தங்கையின் வழியாக தம்பி தங்கைகள் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்தார்கள். முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்வேன். அவர்களும் எனக்கு வேண்டிய முட்டும் கொடுப்பார்கள்.
சின்னம்மாவின் குழந்தைகளில் சின்னவனுக்குக் கன்னத்தில் குழி விழும். அதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் உவந்து வரும். அப்போதிருந்து கன்னத்தில் குழிவிழச் சிரிக்கும்படியாக யாரைப் பார்த்தாலும் எனக்கு சிநேகம் சுரக்கும். முத்தங்கள் கொடுக்கத் தோன்றும். அதனால்தானோ என்னவோ, கன்னக்குழிக்கு சொக்கறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. எப்பேர்ப்பட்ட சிநேக மலட்டுக்காரரையும் சொக்க வைக்கும் அது.
கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது பக்கத்து வீட்டில் ஒரு சின்ன வாண்டு இருந்தது. சொக்கறை கொண்ட வாண்டு அது. எந்நேரமும் என்னுடன்தான் விளையாடித் திரியும். அதுக்கு நான் கொடுப்பேன் முத்தங்கள். அதுவும் எனக்கு வஞ்சனையில்லாமல் கொடுத்துச் சிரிக்கும். எங்களுக்குள்ளான அணியம் அந்த ஊரிலிருந்தே என்னை அந்நியனாக்கியது.
இந்நேரமும் நொட்டை நாகசாமியாய் தலையாட்டிக் கொண்டிருந்த தொப்பை தீபக் தன்னுடைய வேலையைத் துவங்கியிருக்கிறான் இப்போது.
“நம்ம ஆபிசுல யாருக்காவது டிம்பிள் இருக்கா? இவன்கிட்ட இருந்து எட்ட வைக்கணும். நல்லவேளை டீனாவுக்கு டிம்பிள் இல்லை!”, என்றான் நக்கல் சிரிப்போடு. “என்னோட கேர்ள் பிரண்டை இவன் கண்ணுலயே காண்பிக்க மாட்டேன்பா. ஏன்னா அவளுக்கு இருக்கு!”, என்றான் முத்தமலட்டு வோஷ்னி. சிரிப்பினை அடக்க வேண்டி தண்ணீர் குடித்துச் சிரிப்பினைத் திசை திருப்ப முயன்றாள் டீனா.
சிங்கப்பூரில் இருந்து விடை பெறும் நாளில், நிறுவன மேலாளர் ஷியாவ் லீ தன் மனைவியோடு விமானநிலையத்திற்கு வந்திருந்தான். கைகுலுக்கி முதுகு தட்டிக் கொடுத்துப் பிரியாவிடை கொடுத்தான் ஷியாவ்.  டொங் லீயும் எங்கள் அலுவலகத்தில்தான் சம்பளப்பிரிவில் கணக்காளராக வேலை பார்க்கிறாள். ஆனால் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. கைகுலுக்கப் போனேன். இரு தோள்ப் பட்டைகளையும் சாதுவாய்ப் பிடித்துக் கொண்டு வலது கண்ணத்தில் இதழ் பதித்து, “விஷ் யூ ஆல் தி பெஸ்ட்”, என்றாள்.
சிநேகம் சிவந்து வராத முத்தங்கள் நீர்க்குமிழி போலச் சற்று நேரத்திலேயே மரித்துப் போகின்றன. மனம் நெகிழ்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்து இதழ்களில் வெடிக்கும் முத்தங்களுக்குச் சாவே இல்லை. ஷியாவ் இணையரோடு தொடர்பு இல்லாவிடினும், டொங் லீ கொடுத்த முத்து மனச்சிப்பிக்குள் காத்திரமாகவே இருக்கிறது இன்னமும்.
அமெரிக்க விமான நிலையங்களை எல்லாம்  செயலிழக்கச் செய்தது உயிரோட்டம் கொண்ட முத்தமொன்று. பாதுகாப்புச் சோதனை வளையத்துக்குள்ளிருந்த ஒருவர் வெளியிலிருந்த துணைவருக்குப் பரிசுத்தமான முத்தமொன்று கொடுக்க, இழுத்து மூடப்பட்டது நியூஜெர்சி விமான நிலையம். அந்நேரத்தில் நானும் விமான நிலையத்தில்தான் இருந்தேன்.
சிலகாலம் முத்தங்களை இன்னபிற தளங்களிலும் தேடித்திரிந்தேன். எங்கள் வீட்டுக் குழாயடிக்கு அண்மையில் எப்போதும் சேறும் சகதியுமாகவே இருக்கும். அங்கே போய் உட்கார்ந்து கொள்வேன். அரிதினும் அரிதாய்ப் பறந்து கொண்டே கொசுக்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிக்காகக் காத்திருப்பேன். அவை முகர்ந்து கொண்ட காட்சியைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மனம் மகிழ்ந்து வரும். ஓடிச் சென்று என் அண்ணன் மகனைக் கொஞ்சுவேன்.
முத்தம் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகவும் இருக்கிறது. கோத்தகிரியில் இருக்கும் நண்பன் மோகனுடைய அம்மா என் நெற்றியில் சிலுவையிட்டு முத்தம் கொடுப்பார்.
டொரொண்டோவில் இருக்கும் வகுப்புத் தோழன் பிரான்சிஸ் பிரெஞ்ச் நாட்டுக்காரன். அவர்கள் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் அவனுடைய அம்மாவும், அக்காவும் வரவேற்புக்காகவும் பிரியா விடைக்காகவும் முத்தமிடுவார்கள். வலது கன்னத்தோடு வலது கன்னமும், இடது கன்னத்தோடு இடது கன்னமுமாக மாற்றி மாற்றி ஒத்தி எடுப்பார்கள். ஒத்திக் கொள்ளும் போது அதரங்கள் உச்சுக் கொட்டும்.
பல்கேரியா நாட்டு சோஃபியாவைச் சார்ந்தவன் நண்பன் மேத்யூஸ். நானும் அவனும் டொரொண்டோவில் அலுவலக நண்பர்கள். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் வரவேற்புக்காய் வலது கையைப் பற்றிப் புறங்கையில் முத்தமிட்டு நலம் விசாரிப்பார்கள்.
அமெரிக்காவில் பண்பாட்டுத் தளத்தில் இன்னமும் வடக்கும் தெற்கும் பிரிந்தே இருக்கின்றன. வடக்கில் இருப்பவர்களுக்கு கைகுலுக்குவதே வழமை. தெற்கில் இருப்பவர்கள் அரவணைத்து நெற்றியில் உச்சி முகர்ந்து கொள்கிறார்கள். புளோரிடாவில் இருக்கும் நண்பன் ரிக்பெரியின் மனைவி, மருமகள்கள் எல்லாரும் என்னை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்புகிறார்கள்.
கனடிய நகரான பிக்கரிங்கில் இருக்கும் பஞ்சாப் நண்பன் லலித்தும் நானும் பதினேழு ஆண்டுகால நண்பர்கள். பங்காளிகள் எல்லாரும் கூட்டுக் குடும்பம். எப்போது போனாலும் பத்துப் பதினைந்து பேராவது வீட்டில் இருப்பார்கள். அவனுடைய குடும்ப வழக்கத்துக்கொப்ப இருக்கும் பெரியவர்கள் எல்லாருடைய காலிலும் விழுந்து ஆசி வாங்குவேன். அவர்களும் தோள்பிடித்து எழுப்பி தலையில் முத்தமிட்டுக் கைவத்தபடி ஆசி கொடுப்பார்கள்.  கிராமத்து மனிதரான லலித் அப்பாவுக்கு பஞ்சாபிமட்டும்தான் தெரியும். பஞ்சாபி தெரியாத நானும் அவரும் வணங்கிக் கொள்வதோடு சரி. நாவொலியால் பேசிக்கொண்டதில்லை. ஆனாலும் ஆசைதீரப் பேசிக் கொள்வோம். ஆசி வழங்கிய கையோடு என் வலக்கையைப் பறித்துத் தனது கைகளுக்கிடையில் வைத்துப் பொத்திக் கொள்ளும் அந்த வெள்ளந்தி. எங்களது கைகள் தொடர்ந்து மாந்தம் பரிமாறிக் கொண்டிருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை அந்த வாஞ்சனைகள். “அவனைக் கொஞ்சம் வுடுறியா? வந்த எதனா சாப்பிடட்டும்!” என்று லலித் இரையும் வரை,  சமவெளியில் அமைதியுற்றுப் பாயும் முதுநதி போல நேயசுகம் எங்கள் உடம்புக்குள் அசும்பிக் கொண்டிருக்கும்.
ராலேவில் இருக்கும் பாகிசுதான் நண்பன் இர்ஃபான் வீட்டுக்குப் போனால் இடது புறமும் வலது புறமும் மாறி மாறி அரவணைத்துக் கடைசியில் உச்சியில் முத்தமிட்டு வாழ்த்துவார்கள். மிசிசாகாவில் இருக்கும் பங்களாதேசு நண்பன் ஷகாரியர் இமாம் வீட்டுக்குப் போகும் போது, நம் இரு கைகளையும் ஒரு சேரப்பிடித்துக் குலுக்கி நான்கு கைகளும் இணைந்திருக்கும் இடத்தில் முத்தமிட்டு வரவேற்பான் அவன். இப்படி முத்து முத்தாய் முத்தங்கள் சூழ சுவாசித்து வாழும் வாழ்க்கையானது பரவசத்தில் ஆழ்த்தித் திளைக்கச் செய்கிறது.
மனைவி, மக்கள் என ஆன பிறகு முத்தங்களே வாழ்க்கையாகிப் போனது. முத்தங்களற்ற வாழ்க்கை ஒரு சூனிய வாழ்க்கை. பிள்ளைகள் செய்யும் சில விநோத செயல்களைப் பார்த்ததுமே மனம் வாஞ்சையுற்று மகிழத் துவங்கும். அடிக்கடி பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள் என மனையாள் கடிந்து கொள்வாள். எல்லாமும் தனக்கே வந்து சேர வேண்டியது எனும் ஆற்றாமையாகக் கூட இருக்கலாம் அது. யாருக்குத் தெரியும்?
வயதான கிழவன் கிழவிகள் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருந்து, சார்ந்தொழுகிக் கொள்வதைப் பார்த்தாலும் எனக்கு மனம் வாஞ்சையுற்றுப் பொங்கி வரும். இதற்காகவே மாலை நேரங்களில் குளக்கரைக்குப் போவதும் உண்டு. அங்கிருக்கும் அமர்விடங்களில் பெரியவர்கள் ஆற அமர இருக்கும் பாசமுறு காட்சியை எப்போதும் காணலாம். அக்கணங்களில் மனைவியோ, பிள்ளைகளோ இருந்தால் அவர்களுக்கு முத்தமிட்டு இன்புற்றுக் கொள்வேன். அவர்கள் இல்லாத நேரங்களில், வலது கை விரல்களை உள்மடக்கி உள்ளங்கையினைக் குவித்து அதன் மீது முத்தமிட்டுக் கொள்வேன். வலது கைக்குமிட்டியில் கொட்டிக் கிடக்கின்றன ஜீவனுள்ள முத்தங்கள் மாமாங்கமாய்.
முதல்முறையாக இடைமறித்தாள் குதிரைவால் டீனா. “காலையில் வேலைக்குக் கிளம்பி வரும் போது உங்களுடைய முத்தப்பரிமாற்றம் எப்படி இருக்கும்?”, ஏக்கமுசுமுசுப்போடு கேட்கிறாள் அவள்.
அப்படியொரு பழக்கமே எங்களுக்கில்லை என்றதும் அவள் முகம் சூம்பிப் போனதே பார்க்கலாம். இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
பிற்பகல் மணி மூன்று இருக்கும். இராலே நகரத்தின் ஊர்ப்புறமொன்றில் இருக்கும் அலுவலக வளாகம். ஆந்திர நண்பன் பெஞ்சல் ரெட்டிதான் வந்து முதலாவதாகக் காதைக் கடித்தான். அடுக்ககத்தில் பழக்கமான ஜெகன் சவுத்ரி நெஞ்சு வலியால் போய்ச் சேர்ந்து விட்டானாம். உடனே போயாக வேண்டுமென்கிறான்.
சேப்பல்ஹில் மருத்துவமனைக்குப் போகும் வழியில் அவன் மனைவிக்குத் தெரியப்படுத்தி விட்டு வரச் சொல்கிறான் பரத் ரெட்டி. கணவனை இழந்திருக்கும் மனைவியிடம் போய் என்னவென்று எப்படிச் சொல்வது? நெஞ்சு பிசைகிறது எனக்கு. கூடவே வாந்தி பேதியும் வருவது போல இருக்கிறது. பொழையாப் போன பெஞ்சல் ரெட்டி என்னை விட்டானில்லை. என் மனைவியையும் கூட அழைத்து வரச் சொல்லி அக்கப்போர் செய்கிறான். “ஒதனம்மத்தோ நேனே செப்பானு!”, இந்தக் குழைச்சலுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்லை.
என் மனைவி, நான், அவன் என மூன்று பேருமாகச் சென்றோம். ஏற்கனவே செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே அழுகைச் சத்தம். தரையில் விழுந்து புரண்டு கொண்டிருக்கிறாள் ஜெகனின் மனைவி சாரதா. “எப்பவும் இல்லாதபடிக்குக் கிளம்பும் போது முத்தமெல்லாங் குடுத்திட்டுப் போனயே, நாவாடு இங்க்க ராடா? கொண்டமார உண்டுத்துடே?!”, ஓலமானது கடைக்கோடி வீட்டு வரைக்கும் உள்ள எல்லா மேப்பில் மரங்களையும் அதிரச் செய்து, எல்லாரும் வெளியில் வந்து பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
அன்று தீர்மானமானது; வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஒருநாளும் முத்தம் கொடுக்கவே கூடாதாம். தீர்மானமாய்ச் சொல்லி விட்டாள்.
இந்த அமெரிக்கப் பெண்மணிகளுக்குத்தான் அடுத்தவர் மேல் எவ்வளவு கரிசனம்?  நாகரிகம், மாந்தநேயம், பண்பாடு, இங்கிதம் முதலானவற்றைக் கருவில் வைத்தே ஏதாவது ஊசிமூலம் செலுத்தி விடுவார்களோ? அப்படியிருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும்?? “சாரி! ஐ ஃபீல் சாரி!!”, மனமுருகிச் சொல்வது தெரிகிறது அவள் கண்களில்.
பேசிக் கொண்டே உணவகத்திலிருந்து வெளியே வருகிறோம். வானம் பூராவும் நீலம் பாய்ச்சிக் கிடக்கிறது. உயரெழும்பி அலை பாய்ந்து சேட்டை செய்து கொண்டிருக்கக்கூடிய நான்கு மனங்களும், வாளாது தாழ்ந்து பணிந்தே இருக்கின்றன.
அந்த ஓக் மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை ஏன் கரைகிறதென்று அதற்கே தெரியாது. தன் கால்களால் அமர்ந்திருக்கிறதா, அல்லது நின்று கொண்டிருக்கிறதா அந்தக் காகம்? காகங்கள் கூடத் தன் அலகுகளால் ஒன்றையொன்று உரசி முத்தமிட்டுக் கொள்கின்றன. மனம் கசிந்து முத்தமிட்டது போக, எதையாவது கொண்டு வந்து பங்கித் தருகிறது மற்றவர்களுக்கும். காகம் ஒரு பகுத்துண்ணி. மனப்பாடம் செய்தால் மட்டும் போதுமா?
இனி நாங்கள் மூவரும் தொப்பை தீபக்கின் காரில் அலுவலகம் போய்ச் சேர வேண்டும். டீனா அவளது காரில் தனியாக வந்திருக்கிறாள். போகிற வழியில் வங்கி வேலை எதோ இருக்கிறதாம் அவளுக்கு.
எதுவும் சொல்லிக் கொண்டா நடக்கிறது? அதற்கான தருணங்கள் வாய்க்கும் போது அதனதன் வீச்சில் யாவும் நடக்கத்தான் செய்கின்றன. நினைத்த மாத்திரத்தில் கனடியன் கீசுகள் மேலெழும்பிப் பறக்கின்றன. காரணகாரியம் எதுவுமேயில்லாமல் வெறுமனே துள்ளிக் குதிக்கிறது குளத்து மீன். எனக்கும் இன்று மாலையில் மனைவி மக்களோடு குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது.
நாங்கள் நால்வரும் பங்கேற்ற முத்தக் கச்சேரியின் கடைசிக் கட்டமான மங்களம் பாடும் நேரம் வந்து விட்டது.
மணவாளனுக்குக் காலையில் தராமல் விட்டுப் போனதற்குப் பிராயச்சித்தமாய், இப்போது காகமாகவே மாறிப் போயிருக்கிறாள்.
உறவு கலப்பதிலும் முத்தம். பிரிவதிலும் முத்தம். சிநேகச்சாறு வழிந்தோடி முத்தப் பெருநதிகளாய் உருக்கொண்டு பிரபஞ்சத்தின் பிறவிப்பயனை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது. முத்தப்பெருநதிகள் வற்றும் போது பிரபஞ்சமும் இல்லாது போகும்.
தேனுண்ட வண்டுப் போல முயங்கிவந்து ஆளாளுக்கும் கனிந்த மெலிந்த முத்தமொன்றை நெற்றிப் பொட்டில் கொடுத்துப் போகிறாள் குதிரைவாலி! கணிசமாக நீட்சி கொள்கிறது பிரபஞ்சத்தின் ஆயுளும்!!  இந்த நாள் நமக்கு நல்ல நாள் என்கிற களிப்பில் தத்தம் வலக்கைகளை உயர்த்தி ஒன்றோடொன்று மோதிச் சப்பாணி கொட்டிக் கொண்டன சிநேகமும் முத்தமும்!!!
நன்றி:வல்லமை

3/06/2013

சேய் ஈன்ற தாய்

விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய்
ஊசலாடிக் கொண்டிருக்க
அடை அண்டிய தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்!
யார் கவனித்தார்கள் அவளை?

இரண்டாம் தூணில் சாய்ந்து
அலுங்கிக் குலுங்கி
கண்ணீர் உகுக்குமந்த
இசுபானிய இளம்பெண்ணை?!

அண்டி அவளைக் கேட்கலாமா?
நூறோடு நூற்றொன்றாய்
நாமும் கடந்து சென்றுவிடலாமா??
மனத்துக்குள் நிகழ்ந்த
சஞ்சலப்புயல் ஓயந்தபின்
ஏங்க, உங்களுக்கு உதவி ஏதும்?
சென்று வினவியதற்கு
உகுத்த கண்ணீர் துடைத்து
அமைதியாய் மறுமொழிந்தாள்
நன்றி! நீங்கள் கவலைப்படாதீர்கள்!!
யாரோ வீசிச்சென்ற இக்குழந்தையை
தத்தெடுத்து வளர்க்கும் என்னை
இன்று
இப்போதுதான்
முதன்முதலாய்
மம்மி மம்மி எனச்சொல்லி
அழைக்கத் துவங்கியிருக்கிறாள்!

ஏதுமறியாப் புன்முறுவலுடன்
எங்களைப் பார்த்துச் சிரித்த
அச்சிறுகுழந்தையின் கண்களில்
தாயொன்றின் பிரசவம்!!


நன்றி: தென்றல் மாத இதழ்

3/05/2013

மறுவினை


காலையில்
பள்ளி செல்லும் போது
பெய்த வசவு மழைக்காய்
மாலையில்
புடைத்திருக்கிறது
சித்திரக் காட்சி! 
புடைத்தது சித்திரம்
மட்டுமல்ல!! 

குரங்குகளுக்கும்
குரங்குகளுக்கும்
இடையிலொருவன்!
அது யாரென
வினவ மாட்டாரா
தவமும் சேர்த்து!! 

பச்சை மனசு
நோவது ஏன்?
கேட்டு விடலாம்
நல்லா இருக்கு
அந்த ஆள் யாரு?? 

3/04/2013

வாருங்கள் அடை தின்ன!!


சமைத்திட விரும்பி
தாய்த்தமிழின் எண்ணிலடங்கா
ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி
இட்டரைத்தேன் மெல்லென
சிந்தையம்மியில் நான்!
சரியாய்த் துலங்கின
சிறுகதை ஒன்றும்
சொல்லடை இரண்டும்!
உருசியாய் இருக்கிறதாம்
எதிரில் நின்று பகர்ந்தாள்
சிறுகதையைத் தின்ற
என்வீட்டுக் கண்ணாட்டி!
சுவையாய் இருக்கிறதாம்
சொல்வது யாரெனில்
அடையில் ஒன்றைத் தின்ற
தமிழ்ச்சங்கத் தலைவன்
செவலை மாடன்!
அந்த எஞ்சிய அடையும்
எப்படியிருக்கிறது
சொல்லிவிடலாமே
அதைத் தின்னும் நீங்கள்?!

3/03/2013

நிறைகுடம்


செம்மாந்து போயிருந்தேன். என்றுமில்லாதபடிக்கு அன்றைய நாளில் மண்ணின் மீதிருக்கும் பாசம் பொத்துக் கொண்டு வழிந்தோடியது. வெளியுலகமே அறியாத உள்ளோங்கிய கிராமத்தில் மக்களொடு மக்களாய், மண்ணோடும் மண்ணடி வேரோடும், நாகரிகம் என்பதையெல்லாம் சட்டை செய்யாமல் ஓடித் திரிந்தவன். பதினாறு ஆண்டுகளாய் புலம் பெயர்ந்த மண்ணில் தட்டுத்தடுமாறி முட்டி மோதித் திரிகிறேன். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனத் திரிய முற்பட்டாலும் போகவிட்டுச் சுண்டி இழுக்கிறது மண் வாசம்.

ஆறு மணிக்குத்தான் வரச் சொல்லி இருந்தார்கள். எங்கோ கத்திய கிடாயின் குரல் கேட்டுக் கிடைகொள்ளாமல் இருக்கும் பால் வற்றிய ஆடு போலத்தான் எனக்கும் கிடை கொள்ளவில்லை. மனையாளையும் குழைந்தைகளையும் பிந்திச் சில நேரம் கழித்து வாருங்கள் எனச் சொல்லிவிட்டு, அடுத்த இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மேரியாட் வளாகத்திற்கு ஏகினேன்.

முன்கூட்டிச் சென்றமைக்குப் பல காரணங்கள். ஆயினும் இது முதன்மையானது. நான் ஊரிலிருந்து புறப்படுமுன்னமே அறிவுறுத்தப்பட்டு இருந்தேன். ”ஐயா அவர்கள் வருகிறார்கள். நான் உடனிருந்து எல்லாப் பணிவிடையும் செய்யக் கடமைப்பட்டவள். ஆனால் என்னால் வர இயலாது. ஆகவே நீங்கள் அது குறித்துக் கடமையாற்ற வேண்டும்!” என அன்புத் தமிழுள்ளம் ஒன்று எம்மைப் பணித்திருந்தது.

வளாகத்தில் நுழைகையில், யாதோ ஒரு திருமண விழாப் பந்தலுக்குள் நுழைவதாயும் உற்றார் உறவினர் இருக்க வளாகத்தைச் சுற்றிலும் எஞ்சோண்டுப் பிள்ளைகளோடு ஓடித்திரியலாமெனும் புளகாங்கித வேட்கைத் துள்ளலுடனும் மனம் ஆர்ப்பரித்தது.

முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா, வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழா, இது ஒரு தமிழ் விழா என்கிற வகையில் விழா ஏற்பாடுகளுக்கும் எம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டுமெனக் கருதி வருவோரை வரவேற்பதற்கான முகாமையில் போய்ச் சேர்ந்து கொண்டேன். அங்கே கட்டுக் கட்டாய் விழா மலர்கள். அதிலொன்றை எடுத்துப் பார்த்து இன்பமுற்றுக் கொண்டிருந்தேன். அதற்கொரு காரணமும் உண்டு. விழா மலருக்காகப் பணி புரிந்தவர்களுள் நானும் ஒருவன். மலரில் இடம் பெற்றிருந்த படைப்புகளைப் பார்த்து மகிழ்ந்தேன். ஓரிருவர் வந்து மலர் நன்றாக வந்திருப்பதாய்ச் சொல்லிப் பாராட்டினார்கள். தலைதாழ்ந்து பணிவோடு நன்றி அறிதலைப் பணித்தேன்.

ஐயா அவர்களும் எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களும் உள்நோக்கி வந்து கொண்டிருந்ததைக் கண்டதும், இருந்ததை இருந்தபடியே கிடத்தி விட்டு ஓடோடிச் சென்று எம் வணக்கத்தை உரித்தாக்கினேன். அமைதியான பாங்கும், அதிர்வற்ற குரலும் எம்மை நிலைகுலையச் செய்தன. அரசியல்வாதி என்றாலே உரத்துப் பேசுவதும், அதிர்வை வெளிப்படுத்துவதும், மேட்டிமையைப் பகர்வதும் என்றில்லாமல் அப்படியானதொரு கள்ளங்கபடமற்ற சிரிப்போடு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

ஓடிச் சென்று இருக்கைகளைப் பறித்துக் கொண்டு வந்து முன்பக்கமாகவே இட்டு அமரும்படி வேண்டினேன். அந்தச் செய்கையை அவர் அவ்வளவாக இரசித்திருக்கவில்லை. ”இதெல்லாம் என்ன பழக்கம்? நானே எடுத்துக்குவனே??”, மெய்முழுதும் கூசியது எனக்கு. போ என்றவுடன் போய்விடுமா தொட்டிற்பழக்கம்?!

குடிக்கத் தண்ணீர் கொடுத்து விழாவினுடைய சிறப்பு விருந்தினருக்குக் கொடுத்துச் சேர வேண்டிய நுழைவுச் சீட்டுகள், குறிப்பேடுகள், விழா மலர் உள்ளிட்ட புரவுப்பை(souvenir)யை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தோம். இன்முகத்தோடு வாங்கி வைத்துக் கொண்டு, உள்ளீடுகளை எல்லாம் ஆய்ந்தபடி ஒவ்வொன்றும் எதற்கு உரிய சீட்டுகள் போன்ற தகவலைக் கேட்டறிந்து கொண்டார்.

தமிழ்விழாவுக்கு வரும் முதன்மை விருந்தினர்களை வரவேற்று,  அவர்கள் தங்கியிருக்கும் வரையிலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கும் நேரப்பராமரிப்பினைப் பேணுவதற்கும் ஓம்புநர்களை நியமிப்பது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மரபாகும். அதன்படி, நானே அவருக்கான ஓம்படையாளனாக இருப்பது என்றும், அது எமக்குக் கிட்டிய வாழ்நாள்ப் பேறும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது தமிழிசை நிகழ்ச்சி இடம் பெற்றது. தனக்கு எப்போதுமே தமிழிசையின்பால் நாட்டம் உண்டென்று சொன்னவர், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே சென்று அமர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட ஐம்பது சிறார்கள் தமிழிசையை இசைத்தார்கள். பாடிய குழந்தைகளை எல்லாம் பாராட்டி ஊக்கமூட்டி எழுச்சியூட்டினார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட எனது மகளையும் அவர் வாழ்த்தியதில் நானும் என் மனைவியும் மிகுந்த இன்பம் கொண்டோம்.

வரவேற்பு நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலும் இரைச்சலும் வெகுவாக இருந்தது. அது கண்டு இவர் என்ன நினைப்பாரோவென மனக்கிலேசம் கொண்டிருந்தேன் நான். ஆனால் அவர் அதைக் கண்டு பெரிதும் உவகையுற்றார். ஊரு விட்டு ஊரு வந்து, அதுவும் அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்களா? “நம்மூருக் கோயில் திருவிழா மாதிரி இருக்கு. நான் ஊர்லயே இந்த மாதிரிப் பார்த்து நாளாச்சு” எனச் சொல்லி மக்களோடு மக்களாகத் தன்னையும் இணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியாக இருந்தது.

பணிவுக்கு இலக்கணம் ஐயாதான். அமெரிக்க வெளியுறவுத்துறை அங்கீகரிக்கிறது என்றால் அதற்கென்று ஒரு விலை இருக்கத்தானே செய்யும்? தமிழ்விழாவுக்கு இவரை அழைப்பது என்ற பேச்சு மேலெழுந்தவுடனேயே பெரும்பாலானோர் சொன்னது இதுதான். “அவ்ளோ பெரிய கம்யூனிஸ்டுக்கு விசா கிடைக்குமா? அதுவும் அமெரிக்க விசா?! வாய்ப்பே இல்லை!!” என்றார்கள். ஆனால் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது.

ஐயா அவர்களுடைய உள்புகலுக்கான விண்ணப்பம், மற்ற விருந்தினர்களுடைய விண்ணப்பத்தினொடு மற்றொன்றாக முகவர் ஒருவரின் வழியாக அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. தூதரகத்தின் மூத்த செயலாளரும் தூதரகத்தில் பணியாற்றும் பொருளாதார நிபுணருமாக இருவரும் ஐயா அவர்களின் வீட்டுக்கே வருகை தந்து, உள்புகலுக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து உரிய மரியாதையையும் சிறப்பையும் அளித்துச் சென்றார்கள்.

தமிழ்விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி காலை எட்டு முப்பது மணிக்குத் துவங்கும் என குறிப்பேட்டில் இருப்பதைப் பார்த்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் தான் தங்கியிருந்த விடுதியின் முன்றலுக்கு வந்து விட்டார். ஐயா, நிகழ்ச்சி துவங்க நேரம் பிடிக்கும்; ஆகவே கொஞ்சம் தாழச் செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டார். “அதனாலென்ன? போயி சனங்களை வேடிக்கை பார்த்திட்டு இருக்கலாம். நாம போயிறலாம்!” என்று வற்புறுத்தியபடியே இருந்தார். பிறகு தனியொரு வண்டியில் கவனகர் கலை.செழியன், திருமிகு கலைச்செல்வன், முனைவர்.பொன்னவைக்கோ முதலியோருடன் விழா வளாகம் சென்றடைந்தோம்.

முழுநாள் விழாவாக நடந்த அந்த இரு நாட்களிலும், முழு நேரமும் அவையிலேயே இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க விரும்பினார். இணை அரங்குகளாகப் பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒரு சிலவற்றுக்கு ஐயாவையும் அழைத்திருந்தனர். பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களை விட்டுப் பிரிய அவருக்கு மனம் இடங்கொடுக்கவில்லை என்பது அவரது முகக்குறிப்பிலிருந்து அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இடம் பெற்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளின் மீது அளப்பரிய நாட்டம் கொண்டவரானார். பல்லூடகத் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தாம் மிகுந்த வியப்புற்றதாகவும், இதை எப்படி வடிவமைக்கிறீர்கள் என்றும் பெருவிருப்போடு கேட்டுத் தெரிந்து கொண்டார்.

எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அவர்களது கவனகக்கலை நிகழ்ச்சியின் போது, ஐயாவை இணையரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு சிறப்பாளராக வரச் சொல்லி விழா அமைப்பாளர் அழைத்தார். ஐயா அவர்கள் தயங்கித் தயங்கி வேண்டினார். ஒரு நூற்றாண்டு போற்றும் மாமனிதர் தயங்கி வேண்டுவதைப் பார்க்கும் போது எனக்குக் கண்கள் பொங்கி வழிந்தது. “ஊர்லிருந்து எங்கூடவே வந்தாரு. கூடவே இருக்காரு. ஆசையா என்னோட நிகழ்ச்சியப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க ஐயான்னு சொல்லிட்டுப் போயிருக்காரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இந்த நேரத்துல கூப்பிடுறீங்களே?”, மனிதர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்பால் கொண்ட பற்றினால் அல்லாடினார்.

நண்பகல் இடைவேளையின் போது உண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்று, முக்கிய விருந்தினர் என்பதால் வரிசையில் நிற்க வேண்டாமேயெனக் கருதினேன். மனிதர் விட்டுக் கொடுத்தாரில்லை. ஐயா, உங்களால் வேண்டுமானால் நிற்கலாம். காலையிலிருந்து இங்குமங்கும் ஓடித்திரியும் என்னால் இயலாது எனச் சொல்லவுமே என்னுடன் வர ஒப்புக்கொண்டார். காரம், இனிப்பு ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார். அதே வேளையில் தனக்கு வேண்டுமென்பதைக் கேட்டு வாங்கி உண்டார்.

சாதிக்கொடுமைகளைக்கு எதிராக மக்களோடு மக்களாகச் சேர்ந்து போராடியவரின் தமிழ்ப்பற்றினை நாடறியாது. அவர் ஒரு பெரிய எழுத்தாளர். இலக்கியநயம் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழ்விழாவில் இடம் பெற்ற கவியரங்க நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அந்த நேரத்தில் என்னை அரங்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார். அதைப் போலவே கவியரங்கத்தை மிகவும் நெகிழ்ச்சியோடு கண்டு களித்தார். உடனமர்ந்திருந்தவர்களிடம் உடனுக்குடனே தனது விமர்சனத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார். கவியரங்கம் முடிந்தவுடனே, கனடாவில் இருந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரினார். அதன்படியே அவரையும் கண்டு, அவர் வாசித்த கவிதையை வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். கூடவே தமிழ்நாட்டு இதழொன்றிலும் அதை இடம் பெறச் செய்வதற்கான ஒப்புதலையும் கவிஞரிடம் கேட்டுப் பெற்றார் ஐயா.

மாநாட்டில், சாதியொழிப்பு குறித்தும், தமிழ்மக்களின் மேன்மை குறித்தும் ஆய்ந்தெடுத்த மேன்மையான உரையொன்றை அவர் வழங்கினார். வந்திருந்தவர்களுள் கணிசமானவர்களைத் தவிர மற்றவர்கள் அவர்தம் பேச்சைக் கேட்டுப் பயன்கொள்ளத் தவறிவிட்டனர் என்பது மிகவும் ஏமாற்றத்துக்குரிய ஒன்றாகும். வேடிக்கையில் மூழ்கியவர்களுக்கு அவரது பேச்சின் முக்கியத்துவம் தெரிந்திருக்கவில்லை. தனியரங்குகளில் அவர் ஆற்றிய உரைகளுக்குப் பெருமளவில் வரவேற்புக் கிட்டியது.

ஐயா அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் தொடர்ந்து வந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர். சாதிக் கொடுமைகளுக்கெதிராகவும், ஆதிக்க மனப்பான்மைக்கெதிராகவும் போராடி பல இன்னல்களை நேர்கொண்டு குடும்ப உறுப்பினர்களை விட்டுத் தவித்துத் தான் ஈந்தவற்றை ஒரு கணமேனும் அவர் வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. தன்னை மிகவும் அடக்கத்தோடும் கூடியிருந்த மக்களுள் தன்னையும் ஒருவனாக இருக்குமாறும் இருந்து கொண்டார். அவரது போக்கே அப்படிப்பட்ட இயல்பான ஒன்றாக இருந்தது.

மாணவர்களுக்கான தமிழ்ப்போட்டியில் பங்கு பெற்று கூடுதலாகப் பரிசுகளை வென்ற என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு பெரிதும் வியந்தார். அமெரிக்காவுல இருந்துட்டு கோயமுத்தூர்ல இருக்குற மாதிரியே இருக்குறீங்க என்று சொல்லி அவளை உச்சி முகர்ந்தார். எனக்கு தலைகால்ப் புரியாத உள்ளக்குளிர்மை.

தமிழன் தமிழச்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவி யாழினி அவர்களது சிலம்பாட்டத்தைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். விழாவில் எத்தனை எத்தனையோ மனிதர்களை அவர் சந்தித்துப் பேசினார். ஆனாலும் தாம் சந்தித்த ஒருவரை மறுமுறை பார்க்கும் போது, அவர்தம் பெயர் சொல்லியே விளித்தார். எண்பத்து எட்டு வயது மனிதரின் நினைவாற்றல் கண்டு அதிர்ந்து போனேன்.

நான்காம் நாள் காலையில் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினார். இதுக்குள்ள விழா முடிஞ்சி போச்சா? வந்தவங்க எல்லாரும் திரும்பவும் அவங்கவங்க ஊர்களுக்குப் போயிட்டாங்களா?? சிறு குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு வினவினார். அவர் முகம் பார்த்து எனக்கு வந்துவிட்டது பசலை எனப்படுகிற பிரிவுநோய்.

இரவில் சரியாகத் தூக்கம் வரவில்லையாதலால் விழா மலர் முழுக்கப் படித்து விட்டேன். இப்போது இரண்டாம் வாசிப்பு போய்க்கொண்டிருக்கிறது எனச் சொல்லி, அதிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அளவளாவத் துவங்கி, அடியேன்தான் மலரின் ஆசிரியர் என்ற முறையில் என்னிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கவே, அவை குறித்து எதுவும் நினைவில் இல்லாமையால் குற்ற உணர்வோடு அல்லலுற்றேன். அவரது நினைவாற்றலுக்கு முன்னால், இருக்கும் இரு கால்களை நான்காக்கி அவற்றுள் உள்ள பின்னாங்கால்கள் பிடரியில்படத் திரும்பி ஓட வேண்டும் போல இருந்தது.  மலரின் படைப்புகளைப் பல முறை வாசித்துப் பிழை திருத்தியவன் நான். எனினும் அவர் வினவும் வினாக்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. . மனிதர் ஒவ்வொரு வரியையும் மேற்கோள் காட்டிப் பேசுகிறார்.

அவருடன் இருந்த அந்த நான்கு நாட்களும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டி இருந்தது. எளிய மனிதனின் ஓம்புதலுக்குரிய எல்லைக் கோட்டுக்கும் வெளியே செல்லாமல், அதே வேளையில் ஒரு வாழும் வரலாற்றுக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகள், சிறப்புகள் செய்தாக வேண்டுமென்பது மிகக் கடினமான ஒன்றாகும்.அதைத்தான் நான் அங்கு செய்து கொண்டிருந்தேன்.

மக்களுக்காய்ச் சிறைக்கொட்டடியில் வாழ்ந்த மனிதருக்கு இந்த மக்கள் மேல்தான் எவ்வளவு அன்பும் அக்கறையும்? ”ஊருக்குத் திரும்பி வந்த வழி நெடுகிலும் அந்தத் தாத்தா மட்டும் ஏன் ஸ்பெசல்? எனக்கும் அவரைப் பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு எப்ப வருவாரு??”, மகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். அவருடைய தனிப்பட்ட தகவலோ, தொடர்பு எண்ணோ எதையும் கேட்டுப் பெற விரும்பவில்லை நான். தவறு செய்து விட்டேனோ என மனமும் சஞ்சலத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தது அந்த வாரம் முழுமைக்கும்.

“பழமைபேசி, நான் நல்லகண்ணு பேசுறன். இப்ப நான் அட்லாண்டா போய்ட்டு இருக்குறேன். நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பலாம்னு கூப்பிட்டேன். இந்த ரெண்டு மூனு நாளா, உங்க ஊர்ப்பழமை புத்தகம்தான் படிச்சிட்டு இருக்குறன். இப்ப மூனாவது வாட்டி படிச்சிட்டு இருக்குறன். கொங்குநாட்டைக் கொண்டாந்து அப்படியே கண்ணுல நிறுத்திட்டீங்க. நல்லா இருக்கு!!”, அவர் அறிந்திருக்க மாட்டார்; மறுபக்கத்தில் அலைபேசியைப் பிடித்துக் கொண்டிருப்பவனின் விழிகள் சொரிந்து கொண்டிருக்கின்றன என்பது.