பொன்னூத்து பெரியசாமியின் மகள் சின்ன பேபியும், வரியூட்டு ஆறுச்சாமியின் மருமகளுமான சிவகாமியும் தத்தம் பட்டி ஆடுகளை அடைக்கும் பொருட்டு, அரக்கன் இட்டேரியில் அவற்றை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். பழையூர் மாரிமுத்துவின் தோட்டத்தில் பாத்தி பிடிக்க வந்த இரங்கனும் அவன் மனைவி பொன்னியும், அவசர அவசரமாய் காட்டு இரக்கிரியைப் பறித்துக் கொண்டு இருந்தார்கள்.
இட்டேரியின் மறுபக்கம், இரங்கண கவுண்டர் தோட்டத்தில் கறவைக்காக மாடுகள் தயார் நிலையில் கட்டப்பட்டுக் கொண்டு இருந்தன. ”அதைக் கொண்டா, இதைக் கொண்டா” என இரைக்கும் கட்டளைகள், இன்னும் சிறிது நேரத்தில் இட்டேரி அடங்கி, இராக்கோழிகளும் ஆந்தைகளும் கோட்டான்களும் தத்தம் இரவினை எதிர்கொள்ள இருக்கின்றன என்பதைச் சொல்லாமற் சொல்லிற்று.
இன்றைக்கு மதியச் சாப்பாடு ஏனோதானோவென, பக்கத்துத் தோட்டத்தில் குடி இருக்கும் கந்தசாமி சாளையில் கழித்தாயிற்று. கந்தசாமியின் மகள் ஈசுவரி ஓடியோடித்தான் கவனித்தாள். சோறும் சாறும் சுவை பொருந்தியதாகத்தான் இருந்தது. இருந்தும், அப்பச்சிக்கு மனநிறைவு இல்லை. இராச்சோறை நோக்கிக் கிளம்பினார் அப்பச்சி.
வயது எண்பதுகளில் இருக்கும். கட்டுக் குலையாத தேகம். முகவனூர் செந்தோட்டத்துக்காரர் என்றால், வடக்கே செஞ்சேரி மலைதொட்டு தெற்கே பெதப்பம்பட்டி வரையிலும், மேற்கே சமுத்தூர், காளியாபுரம், சின்னப்பம் பாளையத்திலிருந்து கிழக்கே பூளவாடி, பெரியபட்டி வரையிலும் பிரசித்தம். வம்புதும்புக்குச் செல்லாமல், ஏழைபாழைகளிடம் கண்டிப்பும், அதே நேரத்தில் கருணையும் கொண்ட ஒரு மத்தியதர உழவன்.
மகனைத் தன் உடன்பிறந்தவளின் மகளுக்கே கட்டிக் கொடுத்ததுதான் அவருக்கே வினையாகப் போனது. மூத்த சகோதரி தெய்வாத்தாவுக்கு ஒரே மகள். ஆனைமலையில் பெரிய விவசாயக் குடும்பம். தனது அண்ணன் மகனையே, வீட்டோடு மருமகனாக ஆக்கிவிட்டாள். மகன் தங்கவேலும், அத்தையின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஆனைமலையிலேயே பண்ணையம் பார்த்துக் கொண்டு இருக்க, அப்பச்சி மட்டும் இருக்கும் மூணு வள்ளத்துப் பூமியையும் தனியாளாய் இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.
தலையில் உருமாலை. நிமிர்ந்த நெஞ்சம். செம்பழுப்பு நிறமேறிய கைத்தறிச் சட்டை. இவருக்காகவே பிரத்தியேகமாக, வேலூர் சின்னக்காளி செய்து கொடுத்த செருப்பு. எப்பேர்ப்பட்ட முள்ளும் ஒடிந்துதான் போகணுமே ஒழிய, தைக்க இயலாத மாட்டுத்தோல்ச் செருப்பு அது. கறந்து எடுத்துச் செல்லப்படும் பால், வலதுகை தூக்குப் போசியில்!
எதிர்ப்படும் ஊர்க்காரர்களுடன் பாடுபழமையைப் பேசியபடியே, இராமச்சந்திராவரத்து அப்பன் வீட்டைக் கடந்து மேற்குத் தெருவில் நுழைந்தார் அப்பச்சி.
“டே... அப்பனு... நெகமத்துல இந்தக் கிழமை யாவாரம் எப்டறா போச்சு?”
“இந்த வாரந் தேவுலீங்க பெரீப்பா... என்ன கெரகம், நெறைய வடக்கத்துக்காரனுக வந்துதல... சம்பல் குறைஞ்சி போச்சிங்க பெரீப்பா...”
“செரி... கூடைக்கு எவ்வளவுதேன் கெடச்சது?”
“தக்காளிக்கு ஏழுமு, பாவக்காய் மூட்டைக்கு பதினாறுமு கெடச்சது...”
“செரி... பெரீம்மாகிட்டச் சொல்லி, அடுத்த வாரம் நம்முளதையுங் கொண்டு போய்ப் போடு...”
“ஆகுட்டுங்...”
சந்தில் நுழைந்து, படலைத் திறந்து உள்ளே நுழைந்தார் அப்பச்சி. சிறிது ஏமாற்றம். வீட்டுக் கதவு சாத்தப்பட்டு இருந்தது. அமுச்சியும் திண்ணையில் இருந்திருக்கவில்லை. எப்போதும் திண்ணையில் இருக்கும், வெத்தலை பாக்குத் தட்டும் இருந்திருக்கவில்லை. தூக்குப்போசியைத் திண்ணையிலேயே வைத்துவிட்டு, அருகில் இருக்கும் நெசவாளியான கோயிந்தன் வீட்டுக்குச் சென்றார்.
“சரசூ... சரசூ...”
பரபரத்துப் போனாள் சரசு. நம் வீட்டுக்கு செந்தோட்டத்துக்கார அய்யன் வந்திருப்பதில் அவளுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. மேலே, அட்டாலியில் இருந்த கிணத்துக்கடவுப் பாயை எடுத்து, திண்ணையில் விரித்தாள்.
“வாங்கய்யா... சொல்லி அனுப்பி இருந்தா, அவங்கப்பனே வந்திருப்பாருங்களே? இருங்க, காப்பியப் போட்டு எடுத்தாரேன்!”
“அட புள்ள... அதுக்கென்ன இப்போ! ஆத்தா இங்க இருக்காளான்னு பாக்க வந்தம்புள்ள!!”
“இங்க வல்லீங்களே... இருங்க, நான் வேணா ஒரு எட்டு மூலையூட்டுல இருக்காங்களான்னு....”
“வேண்டாம் புள்ள... அங்க எல்லாம் அவ போமாட்டா...”
மீண்டும் வீட்டுக்கு வந்தவர், திண்ணையிலேயே அமர்ந்து விட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு செருப்பைப் போட்டுக் கொண்டு புறப்படலானார்.
வீட்டில் இருந்து, கொங்கல் நகரம் ஆறேழு மைல் இருக்கும். தெற்கே இருக்கும் பள்ளத்தைக் கடந்து, அணிக்கடவு, இராமச்சந்திராவரம் கடந்து, நாகூர்க்காரன் தோப்பைக் கடந்துவிட்டால் தன் மகள் பரிமளாவின் தோட்டம். அப்பச்சியும், அமுச்சியும் பரிமளாவின் தோட்டத்துக்குச் செல்வதென்றால், எப்போதும் நடந்து செல்வதுதான் வழக்கம். கண்ணை இறுகக் கட்டிவிட்டாலும், சரியாகப் போய்ச் சேர்ந்துவிடும் அளவுக்கு பழக்கப்பட்ட தடம் அது.
”டொக்... டொக்...”
“டே மணியா... உங்கம்மாவை எழுப்புடா... சுண்டாச்சட்டியில இருக்குற மொளகாப் பொடிய சீக்கிரம் எடுக்கச் சொல்றா...”, அப்பா என்னை எட்டி ஒரு உதைவிட்டார். அப்பா எள் என்றால், அம்மா எண்ணெயாக இருந்தாள்.
சாளை விளக்கெதுவும் போடாமல், டக்கென அடுப்படிக்குச் சென்று, ஒரு சின்னக் குண்டாவில் எண்ணெய் ஊற்றிக் காய்ச்ச ஆரம்பித்தாள். அப்ப, கையில் ஈட்டியுடன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். நான் ஓடிப் போய், அம்மாவின் பின்னால் நின்று கொண்டேன்.
சிறிது நேர இடைவெளிக்குப் பின், மீண்டும்.... “டொக்... டொக்...”
இம்முறை வாய்திறந்தார் அப்பா, “யார்றா அது இந்த நேரத்துல?”
“நாந்தேனுங்க... மாப்புளை... நாந்தேனுங்க...” அம்மா, என்னைத் தள்ளிவிட்டு ஓடினாள் பெரிய கொட்டத்துக் கதவை நோக்கி.
“இதேனுங்கப்பா..... உள்ளுக்கு வாங்க...”, அம்மா படபடத்தாள். களத்து மேட்டில் இருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்து முன்வாசலில் போட்டார் அப்பா.
“மாமா, மொதல்ல ஒக்காருங்க... நீ போயி எதனாப் போட்டு எடுத்துட்டு வா மொதல்ல...”, அம்மாவை விரட்டினார் அப்பா. அப்பிச்சி, தன் உருமாலையைத் தலையில் இருந்து எடுத்து உதறிக் கொண்டே உட்காரலானார்.
“ஏனுங்... கடைசி வண்டிய உட்டுப் போட்டீங்ளாக்கூ? புக்குளத்து பெரிய பாப்பாத்தி ஊட்ல இருந்துட்டு வர்லாமுங்ளே?”
“அப்ப, அவ இங்க வருலீங்ளா மாப்ள? வடக்க, ஊர்லிருந்துதானுங் வர்றேன்...”, மனிதர் ஆறடி உடலை ஆறுசாண் அளவுக்கு குறுக்கப் பார்த்தார். உடல் ஒருமுறை சிலிர்த்தது. கைகள் நடுங்கின. கூடவே, அம்மாவின் ஓலமும் பீறிட்டது.
“எழவு, நீயேண்டி இப்ப ஒப்பாரி வெக்கிறே? என்னாயிடிச்சின்னு, கேட்டும் கேக்காம இப்ப...?”,
அப்பாவின் குரலையும் தாண்டி, அம்மாவின் அலறல் ஆர்ப்பரித்தது. “ஏந்தேன் இப்படிச் செய்யுறீங்களோ? பெத்த புள்ளையும் உட்டுப் போட்டு, கட்டுனவ பொறகால போயிட்டான்... நீங்களும் எட்டுக்கேழுதரம் எங்கம்மாவை... நான் இந்த நாயத்தை எங்க போய்ச் சொல்வேன்... எனக்குன்னு ஊருசனம் உண்டா? ஒன்னா??”
அம்மாவின் ஓலம் கேட்டு, பக்கத்து சாளையில் இருந்து நாகராசண்ணனும் செல்வராசண்ணனும் வந்திருந்தார்கள்.
“நான் ஒன்னுஞ் சொல்லலைங்க மாப்ள... நான் கடலைக்காட்டுக்கு நொவாக்ரானுமு, பருத்திக்கு சிம்புசுமு வாங்கலாம்ன்னு மேக்க போயிருந்தேன்... போன எடத்துல அவனுமு அகசுமாத்தா வந்திருந்தான்... வாங்க ஒரு எட்டு போலாமுன்னு தோட்டத்துக்கு கூப்ட்டான்... போய்ட்டு வந்தேன்... அதுக்கு, இவ....”
“பொண்டாட்டி பொறகால போனவம் பின்னாடிப் போனா, கேக்காம வேற என்ன பன்றதாமா? எங்கம்மா இனி எந்தக் குட்டையில வுழுந்தாளோ? எந்த வாய்க்கால்ல வடக்கமுன்னாப் போனாலோ??”, ஒப்பாரி பெருவேகமெடுக்க எடுக்க, அப்பச்சி நிலைகுலைந்து போனார்.
“ஏனுங் மாமா? நெம்பப் பேசிப் போட்டீங்களா?? தெகிரியமா இருங்கோ... அப்படியெல்லாம் அத்தை உங்களைத் தன்னந்தனியா உட்டுப் போட்டு எதுஞ் செஞ்சுற மாட்டாங்.... டே நாகராசு, மயிலை ரெண்டையும் புடிச்சுக் கட்டுங்டா வண்டிய...”
கண்ணிமைக்கும் நேரத்தில், மயிலைகள் அந்த ரேக்ளா வண்டியைச் செலுத்தத் தயார் நிலையில். நாகராசண்ணன், காளைகளின் கயிற்றைக் கையில் பிடித்தபடி வண்டியைத் தன்பிடியில் வைத்திருந்தார்.
“மாமா, வாங்க நீங்களுமு எங்ககோட... இங்கிருந்தா, அவ ஒப்பாரி வெச்சே உங்களைக் கொன்னுபோடுவா..”
வண்டி வல்லக்குண்டாபுரத்தைத் தாண்டி, அணிக்கடவு இட்டேரியில் சீறிப் பாய்ந்தது. யாரும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
”கிழவி, அரசூர் வாய்க்காலில் விழுந்து தொலைத்திருந்தாலும், சுல்தான்பேட்டையில் இந்நேரம் விபரம் தெரிய வந்திருக்கும். ஒன்று, கிணறுகளில் விழுந்திருக்க வேண்டும். அல்லது, மருந்தைக் குடித்துவிட்டுத் தோட்டங்காடுகளில் விழுந்து கிடக்கும். விடிந்தால், எல்லாம் தெரிந்துவிடப் போகிறது” என்கிற நினைப்பில் இருந்தார், மாமாவின் முன்னால் பீடி பிடிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கும் அப்பா.
“என்றா நாகராசூ, அதென்ன? எதுத்தாப்ல எதோ வருது போல இருக்கு??”
“ஆமாங் சித்தப்பா... ஆரோ, மொட்ட வண்டீல வாறாங்ளாட்ட இருக்கூ?”
“நீ இழுத்துப் புடிச்சு ஓட்டு வாக்கலாம்... ஆருன்னு பாக்குலாம்...”, வண்டியில் இருந்த எனக்கும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
“சின்னானுமு மந்தராசலனுமாட்ட இருக்குங் மாப்ள!”, கம்மிய குரலில் அப்பச்சி. வண்டியை நிறுத்திவிட்டு முதலில் இறங்கினார் அப்பா.
“டே, சின்னா... என்றா, எதுனாத் தகவலு கெடச்சுதா?”
“என்ன தகவலுங் மச்சான்? பண்றதும் பண்ணிப் போட்டு... நீங்க பண்றது வெகு ஞாயமாக்கூ??”
“தெள்ளவாரி... புடுச்சி, முதுச்சிப் போடுவனாக்கூ... யாருகிட்ட, என்றா பேசுற?”
“பின்ன என்னங்க மச்சான்... பெரீப்பனக் கூட்டீட்டு வந்து உங்ககிட்ட வெச்சிட்டு.... அங்க பெரீம்மா, அழுது பொரண்டு ஊரைக் கூட்டீர்ச்சல்லோ? செரி... செரி... வாங்க அல்லாரும்... ஊட்டுக்குப் போலாம்....”
மொட்டை வண்டி மெதுவாகப் பின்னால் வந்து கொண்டிருக்க, எங்கள் ரேக்ளா பறந்தது வடக்கு திசையில். தெரு முனையிலேயே அப்பாவும், அப்பச்சியும் வண்டியில் இருந்து இறங்கிக் கொண்டனர். நாகராசண்ணன் வண்டியை வீதியில் நிறுத்தவும், நான் குதித்து வேகமாக ஓடினேன்.
நிறையப் பேர் கூடி இருந்தார்கள். “நான் கண்ணுக்குள்ள வெச்சிப் பார்த்துட்டு இருந்தனே எம்மவராசன? இப்படி உட்டுப் போட்டுப் போய்ட்டாரே?? இந்த பாழாப் போன முண்ட, நான் எப்பவும் பேசுறதுதான? ஒரு அடி வெச்சாப் போச்சு... நான் இழுத்துக் கட்டீட்டு சும்மா கெடப்பனே??
சாயுங்காலம் ஊட்டு வந்த மனுசனைக் கண்டுக்காம ஊட்டுக்குள்ள இருந்தது ஒரு குத்தமா? இப்பிடி நட்டாத்துல உட்டுப் போட்டு போய்ட்டாரே மவராசன்??”, இப்படியாக அமுச்சி ஒப்பாரியுடன், மற்றவர்களும் அழுதழுது மூக்கைச் சீந்திக் கொண்டிருந்தார்கள்.
அப்பா வந்து திண்ணையில் அமர்ந்தார். பொடக்காளியில் அடைத்து வைக்கப்படாத கோழி, சேவல்களைப் பிடித்து அடைத்துக் கொண்டிருந்தார் அப்பச்சி. நாங்கள் வந்திருப்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. பொறுமையாக இருந்த அப்பா, மெளனத்தை விடுத்துக் கத்தினார் பெருங்குரலில்.
“எழவு, கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்னாயிப் போச்சுன்னு இப்ப?? ஏனுங்க அத்தை, மனசுல இவ்வளவு பாசத்தை வெச்சீட்டு... மொதல்ல, ஊடுகள்ல ஆம்பளைகளைப் பேசுறதை எப்ப நிறுத்தப் போறீங்க அல்லாரும்?”
மயான அமைதி!