11/02/2022

பேச்சு

ஒரு மனிதன் உண்ணுவதற்கும் உடுப்பதற்கும் உரையாடுவதற்கும் உறைவிடம் கொள்வதற்கும் எவ்விதமான தடையும் இருக்கக் கூடாது. ஏனென்றால் அவையில்லாமல் அவன் வாழ்வின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியாது. இந்த மெய்ப்பாட்டை கிரேக்கர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் உணர்ந்தனர். அதன் நிமித்தம் மனித உரிமைகளில் இவற்றைக் கட்டமைத்தனர்.

அமெரிக்காவில் 1791, டிசம்பர் 15ஆம் நாள் நடைமுறைப்படுத்த முதற்சட்டத் திருத்தத்தில் பேச்சுரிமைக்கான வரையறை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்படிக்கு ஒருவர் தங்குதடையின்றிப் பேசலாம்; எழுதலாம். அதுவே நாட்டை, பண்பாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடியது. ஆனால் அப்படியான ஏகபோக உரிமை வழங்கலால் ஏற்படும் தீங்குகளை எப்படிக் கட்டுப்படுத்துவது? யோசித்தவர் சில விதிவிலக்குகளைக் கட்டமைத்தனர்.

1.பாலுணர்வு உள்ளீடுகள்

2.அறிவுத்திருட்டு

3.மிரட்டல்

4.நற்பெயருக்குக் களங்கம்

இப்படியான விதிவிலக்குகள் பேசுவதற்குத் தயக்கத்தைக் கொண்டு வராதாயென யோசித்தனர். அதற்கும் ஒரு தீர்வாக ஒன்றைக் கொண்டு வந்தனர். குற்றம் சாட்டுபவர் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை ஐயம் திரிபற முற்றுமுழுதாக நிறுவ வேண்டும்.

கூட்டத்திற்கு நடுவே இருந்து கொண்டு, ‘தீ, தீ’ என ஒருவர் கத்துகின்றார். அதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி பலர் காயமடைகின்றனர். அவர் உண்மைக்குப் புறம்பாக சொல்லி இருப்பதை நிறுவும் போது அது குற்றம். பேச்சுரிமை காத்தல் பயனளிக்காது.

ஒருவர் இன்னொருவரைத் திருடன், ஃப்ராடு எனக் குற்றஞ்சாட்டுகின்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றம் செல்கின்றார். அவர் அப்படிச் சொன்னதற்கான சான்றுகள் கொடுக்கப்படுகின்றன. பயனில்லை. ஏன்? குற்றஞ்சாட்டப்பட்டவர் தாம் பிறந்ததிலிருந்து அந்த நொடி வரையிலும் திருட்டு, புரட்டு செய்யவே இல்லையென நிறுவியாக வேண்டும். இதுதான் அமெரிக்கா. செக் & பேலன்ஸ்.

அறம், நமக்கான அடிப்படை. உரிமைகள் எந்தெந்த வழியில் ஈட்டிக் கொடுக்க முடியுமோ அந்தந்த வழியில் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது அமெரிக்கநாடு. எல்லாச் சட்டத்திருத்தங்களும் உரிமைகளைக் கொடுப்பதற்காகவே. ஒருவர் என்னை நோக்கி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அதை உள்வாங்குகின்ற உங்களைச் சார்ந்தது, சொல்லப்படுவது மெய்யா பொய்யா எனப் புரிந்து கொள்வது. மெய்யைப் பொய்யென்றோ, உண்மையை இன்மையென்றோ, அல்லது நேர்மாறாகவோ புரிந்து கொண்டால், ஏமாற்றப்படுவது நீங்களே.

எங்கெல்லாம் பேச்சு மட்டுப்படுகின்றதோ அங்கெல்லாம் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான வாய்ப்பில்லை. நம் வீட்டில் பேசுவதைக் காட்டிலும் நம் குழந்தைகள் அமெரிக்க வகுப்பறையில் தங்குதடையின்றிப் பேசுகின்றன. ஏன்? bios, stereotypes, prenotion, prejudice என்பன ஒப்பீட்டளவில் அதிகம். இவற்றை உடைத்தெறிவதுதான் தமிழ்ப் பண்பாட்டு அமைப்புகளின் வேலையாக இருக்க வேண்டுமேவொழிய, பூடகங்களும் மடைபோடுதலுமாக இருத்தலல்ல!


No comments: