11/01/2022

வாசிப்பு

அண்மையில் இடம் பெற்ற சில நிகழ்வுகளை ஒட்டித்தான் வாசிப்பற்றநிலை என்னவென்பதைப் பார்க்கப் போகின்றோம். எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் குறிப்பிடுவார், “உலகம் தோன்றியதிலிருந்து என்னென்ன வளர்ச்சிகளை அடைந்திருக்கின்றதோ அத்தனையையும் விட, கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி அதிகமானது”. அதே நேரத்திலதான் ஒரு காணொலித் துண்டு பரவல் ஆனதையும் பார்த்தோம். செய்தி காதில் விழுந்தாலும் காதில் வாங்கிக் கொள்ளாதபடிக்குப் போய் வந்து கொண்டிருப்பர் மக்கள். முன்பொருகாலம், மாலை நேரம் எஞ்சோட்டுப் பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்த போது, காட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி, “செமதாங்கிச் சாயமரத்துக்குக் கீழ எதொ பொணம் இருக்குது”. அவ்வளவுதான், காட்டுத்தீ போலப் பரவியது செய்தி. வீதம்பட்டி, வேலூர், சலவநாயக்கன்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி என எல்லா ஊர்மக்களுக்கும் சாரைசாரையாகப் படையெடுத்தனர் பார்த்து வர. ஏனிந்த மாற்றம்? வாசிப்பற்றநிலைதான் காரணம்.

மேல்நிலை வாசிப்பு (skimming): மேலோட்டமாக ஆங்காங்கே இருக்கும் ஓரிரு வரிகளைப் பார்ப்பது. இது நெகடிவ் வைப், புறந்தள்ளுவோமென முடிவெடுப்பது அல்லது வெகுண்டெழுவது. நிறைய தகவல், செய்திகளை, இடையறாது உள்வாங்கிக் கொண்டிருப்பதால் மனம் நுண்மையை இழந்து போவதால்(insensitive) ஏற்படுவது. வாசிப்பு என்பது எழுத்துகளை வாசிப்பது மட்டுமேயல்ல, எந்த உருவிலிருக்கும் தகவலையும் உள்வாங்குவது என்பதேயாகும்.

முனைப்பு வாசிப்பு (active reading): மேலோட்டமாக வாசிப்பதற்கும் அடுத்தநிலையாக கவனத்தைச் செலுத்தி ஊன்றி வாசிப்பது. ஊன்றி வாசித்தாலும் கூட, வரிகளுக்கிடையே இருப்பதைக் கவனிக்கும் திறன் இல்லாமை, சொல்லாமற்சொல்லும் தகவலை உள்வாங்காமை போன்றவற்றால் முழுப்பயனையும் பெறாத வாசிப்பு.

ஆழ்நிலை வாசிப்பு ( critical reading): சொற்களையும் சொற்றொடர்களையும் நேரடியாக அப்படியப்படியே உள்வாங்கிப் புரிந்து கொள்வதற்கும் மாறாக, பகுப்பாய்வுக்கு உட்படுத்திப் புரிந்து கொள்தல். பகுப்பாய்வுத் திறன் திடமாக அமைய போதுமான பயிற்சிகள் இருந்தாக வேண்டும்.

பென்சில்வேனியா படிப்பு வட்டம் எனும் குழுவில் நண்பர் இணைத்து விட்டிருந்தார். பால்வாடிக் கதைகளைச் சொல்லி, அதை அமெரிக்கக் குழந்தைகள் எப்படி உள்வாங்கிக் கொள்கின்றன என்பதை நாள்தோறும் சொல்லி வந்தோம். நான்கு வரிக்கதைக்கு நான்கு பக்க வினாக்கள் இருக்கும். அவரவர் வாசிப்புத் திறனுக்கொப்ப புரிதல்களில் மாறுபாடுகள் இருப்பதை உணரும் விதமாக.

”Tired of seeing lot of writings with hurting, strong, painful and disrespectful words which is being going on many years from few life members. Unfortunately, nothing seems to stop them.” 

மேல்நிலை வாசிப்பில் ஏற்படும் புரிதல் என்ன? இது எதொ அக்கப்போர் போல இருக்கின்றது. நெகடிவ். நமக்குத் தேவையற்றது.

முனைப்பு வாசிப்பில் தோன்றும் புரிதல்? யாரோ சில உறுப்பினர்கள், காட்டமாக எழுதுவதே பொழப்பாக இருக்கின்றனர். எங்கும் சிலர் இப்படியானவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். பொறாமை பிடித்தவர்கள். இப்படி சொற்களினின்று நேரடியாகப் பொருள் கொள்தல். அல்லது பக்கச்சார்பு(bios), முன்முடிவு (prejudice) முதலானவை கொண்டு ஒரு முடிவுக்கு ஆட்படுதல்.

ஆழ்நிலைப் பகுப்பு வாசிப்பில் என்னவாக இருக்கும்? யாரவர்கள்? எழுதுபவர் யார்? எந்த பேசுபொருளை வைத்து இப்படிச் சொல்லப்படுகின்றது? குற்றம் சாட்டுபவர், சாட்டப்படுபவர்களென இருதரப்பின் உள்நோக்கங்கள் என்னவோ? பல ஆண்டுகளாக எதிர்வினையாற்றி வருகின்றனர் என்பதால், அமைப்பில் ஏதோ பின்னடைவுகள் இருக்கலாம் போலுள்ளது. ஏக்டிவிசம் என்பதே இடையறாது போராடிக் கொண்டிருப்பதுதானே? இவர்கள் இத்தகையவர்களா? இப்படி, தத்தம் அனுபவம், படிப்பு, சிந்தனைத் திறன் முதலானவற்றால் அவரவர் தன்மைக்கொப்ப பல வினாக்கள் அவர்களுக்குள் எழும். அவற்றுக்கான விடைகளைக் கொண்டு ஒரு புரிதலுக்கு ஆட்படுவது.

தமிழ் அமைப்புகளிலே இலக்கியக் கூட்டங்கள் என்கின்றனர். புகழாளர்களை அழைத்து வந்து பேச வைக்கின்றனர்.  பேசுகின்றார்கள். பல்வேறு தகவல்கள் உள்வாங்கப் பெறலாம். அல்லது நிகழ்த்துகலை போன்று அந்த நேரத்தைக் களிப்பாக்கிக் கொள்ளலாம். நாடலுக்கும் தேடலுக்கும் இட்டுச் செல்லலாம். கூடவே பகுப்பாய்வு வாசிப்புப் பயிற்சி ஏற்படுகின்றதா? சிந்தனைக்கு வாய்ப்பு அமைகின்றதா? உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.

No comments: