Showing posts with label கனவில் கவி காளமேகம். Show all posts
Showing posts with label கனவில் கவி காளமேகம். Show all posts

1/17/2011

கனவில் கவி காளமேகம் - 20

பாருங்க மக்களே, எல்லாம் ஒரு நிதானத்துலயே இல்ல பாருங்க. ஊர் முச்சூடும், வெட்டி வீறாப்பும் முறைச்சலுமுமாவே இருக்காங்க. கேட்டா, இது துன்பகாலம்னு அளக்குறாங்க. என்றா உனக்குத் தும்பம்ன்னு இழுத்துப் புடிச்சிக் கேட்டா, சாயங்காலமான கமுத்துறக்கு பணம் இல்லீங்கறானுக.

ஏண்டாப்பா, வாரத்துல இருக்குறது ஏழு நாளு? அதுல ஒம்போதுதரம் கருமத்தைக் குடிச்சுப் போட்டு அல்லாடாட்டி, கெடையில இருக்க முடியலையான்னு கேட்கலாம். கேட்டா, வுட்ருவாங்களா? செரி, அது அவனுகபாடு? ஆனாலும், இந்தியாவுல ஆண்டுக்கு ஒன்னரை இலட்சம் பேர் தற்கொலை செய்யுறது அறமாலும் அநியாயமுங்க! இதை நெனைச்சிக் கவலைப்படும் போது, நம்ம அப்புச்சி நாவகமும் வந்திட்டுது எனக்கு.

தமிழ்ச் சங்க விழாவுக்குப் போய்ட்டு வந்த களைப்புல, நம்ம அப்புச்சியும் தற்கொலை செய்திட்டாரோ? ஏம்பொறகு வாறதே இல்லைன்னு நினைச்சிட்டே தூங்கிப் போனனுங்க நேத்து. நாம் எப்ப அப்பிச்சிய நெனைச்சி கவலைப்பட்டாலும், குறிப்பறிஞ்சி வாறதுல அப்பச்சி பலே ஆளுங்க. ஆமாங்க, நம்ப கனவுல வந்த அப்பிச்சி, என்ன சொன்னாரு, ஏது சொன்னாருன்னு மேல படிங்க!!

”என்ற பேராண்டி, என்றா பண்றே?”

“க்கும்... சலுப்புல தூங்கீட்டு இருந்தவனை எழுப்பி உட்டுப் போட்டு, கேள்வியப் பாருங்க? ஆமா, ஏனுங்க இத்தினி நாளா ஆள் நடமாட்டத்தையே காணம்??”

“ஆமா, தூங்குறதுல நல்லா வசங்கண்டவன் ஆயிட்ட? அதான் வந்து எதுக்கு செரமத்தைக் குடுக்கோணுமின்னுதான் வாறதை நிறுத்திப் போட்டன் நானு??”

“ஏனுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்க? ஆமா, வசங்கண்டவன்னு சொல்லிச் சொன்னீங்களே, அதென்னோ??”

“அதா... ஒன்னைச் செய்யுறதுல நெம்ப அத்துபடி ஆனவன்னு சொல்றதைத்தான், வசங்கண்டவன்னு சொல்றது. ஆளுமை கண்டவன்னும் சொல்லலாம்டா பேராண்டி!”

அத்துபடின்னா?”

”என்றா நீயி, இன்னும் அரைவேக்காடாவேதான் இருக்கியா? ஒன்னைச் சொன்னா, அதுல இருந்து மறுக்கா ஒன்னைக் கேக்குற? ஆனாலும், கேட்டுத் தெரிஞ்சிக்கிற பாரு.... அங்கதாண்டா நீ எம் பேராண்டியா நிக்கிற?”

“அப்பிச்சி, இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கட்ட வேண்டாம்.. அத்துபடின்னா என்னொ? அத மொதல்ல சொல்லுங்க... அப்புறம் கேக்குறம் உங்க இராமயாணத்தை!!”

“சொல்றண்டா... சொல்றன்.. சொல்லாம எங்க போயறப் போறேன்? அத்து அப்படின்னு ஒன்னோட எல்லை, வரையறை, வன்மை, அவன்மைன்னு அதைப் பத்தின விபரங்கள். ஆக அத்துபடின்னா, ஒன்றைப் பற்றிய சகலவிபரங்களும்னு ஆகுது!”

“அப்பிச்சி... நான் என்ன திருவாத்தானா? சொல்றதை எல்லாங் கேட்டுப் போட்டுத் தலையாட்டுறதுக்கு... அத்துங்றதுக்கு விளங்குச்சு... அத்துபடிங்கும் போது, வாற ’படி’? இஃகிஃகி, யார்கிட்ட??”

“டேய்... டேய்... நீ ஒரு மஞ்சமாக்காண்டா... ஆனாலும் மடக்கிக் கேக்குறதுல எனக்கு நெம்பப் பெருமையா இருக்குதுடா பேராண்டி?”

“அப்பிச்சி... இன்னுமு ஒன்னைச் சொல்லி இருக்கீங்க இப்ப... அதையும் இதையும் பேசி என்னைக் கோமாளி ஆக்கிறலாம்ன்னு மட்டும் நெனச்சிறாதீக? அத்துபடில வாற, படிக்கு என்ன அர்த்தம்? அப்பொறம், மஞ்சமாக்கான்னு சொல்லித் திட்டுனீங்களே, அப்ப மஞ்சமாக்கான்னு சொன்னா என்ன அர்த்தம்?? மாட்டீட்டீங்களா... மாட்டீட்டீங்களா? இஃகிஃகி”

“டேய், டேய்... இர்றா, இர்றா.... அத்துபடி, பரும்படின்னு சொல்லிக் கேட்டு இருப்பியேடா? இதுகள்ல வாற படி அப்படிங்றது குணத்தின் நிலையக் குறிக்கும். அத்த்படி அப்படின்னா, அவன் அதைப் பற்றிய முழுவிபரமும் தெரிந்த நிலையில் இருப்பவன் அப்படின்னு அர்த்தம்”

“ஓ அப்படியா? அப்ப, பரும்படின்னா??”

“பரும்படியா இருந்துட்டேன்... தெனை இந்த வாட்டி பரும்படியாத்தான் முளைச்சி இருக்கு அப்படின்னெல்லாம் சொல்லிச் சொல்றதுடா... அதாவது, ஆழமும் நுணுக்கமும் இல்லாம, மேம்போக்கான நிலையில் இருக்குறதைச் சொல்றதுதான் பரும்படி. இரவை, மாவு அல்லாம் நுணுக்கமா இருக்கும்... பருப்புக எல்லாம், பெருசு பெருசா இருக்கில்ல? அதை உவமைப்படுத்தி வந்த சொல்தான் பரும்படி அப்படிங்றது... விளங்குச்சாடா?”

“நெம்ப நல்லாவே... ஆனா நான் மறக்கல...”

“என்னடா சொல்ற?”

“மஞ்சமாக்கானை உட்டுப் போடுவேன்னு நெனைச்சீங்களா?”

“அதுசெரி.... நீயி மஞ்சமாக்கான் மட்டும் இல்லடா... கோக்குமாக்கானுங்கூட... அதான், ஆறடி வளந்து நிக்கிறியே? அதைப்பத்திச் சொல்ல ஆரம்பிச்சா வெடிஞ்சி போயிரும்... அடுத்தவாட்டி வந்து சொல்றஞ்ச் செரியா?”

“செரீங் அப்பிச்சி... நீங்க சொன்னாச் செரீங்... ஆனா, எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு... உங்ககிட்ட கேக்குறதுக்கு?”

“செரி, விசுக்காக் கேள்றா? என்னோட பூமியில ஒளவை எனக்காகக் காத்திருப்பாடா!!”

“அப்பிச்சி... என்ன நடக்குது அங்க? அது ஆம்பளை ஒளவையா? பொம்பளை ஒளவையா?? அப்புறம் எங்கமுச்சீ...??”

“அதெல்லாம் பூலோகத்தோட போச்சி உங்கமுச்சியோட சங்காத்தம்... நித்திராலோகத்துல அம்சவல்லி ஒளவைதாண்டா எனக்கு எல்லாமும்!”

“அடக் கொடுமையே? இதா பாருங்யா... எங்கயும் இந்த அழிம்புதானா??”

“டேய்... சும்மா பொல்ம்பாமக் கேக்க வேண்டியதைக் கேளு... எனக்கு என்ற அம்சவல்லி காத்திருப்பாடா...”

“போங்க அப்பிச்சி... ஊர்ப் பேர்களைச் சொல்லிக் கேட்கலாமுன்னு இருந்தன்... எல்லாம் மறந்து போச்சுங்க... இந்த ஊர், பட்டி, பாளையம் இதுகளைப் பத்திச் சொல்லுங்க சித்த...”

“ஊர் அப்படின்னா, மக்கள் ஊர்ந்து சென்றடையும் இடம்; இருப்பிடங்கள் இருக்கும் இடம். பட்டி அப்படின்னா, மக்கள் தங்கிச் செல்லும் இடம்.”

“நிறுத்துங்க, நிறுத்துங்க... எங்கூர்ல இருந்து பொழில் வாய்ச்சி, அதாங்க பொள்ளாச்சி வரைக்குமு ஒரே பட்டிகதான்... அப்ப அதுக ஊருக இல்லையா?”

“அட, அந்த மாதிரியான இடங்க பின்னாள்ல ஊர்களாவும் மாறி இருக்கலாந்தானொ?”

“ஆமா... திப்பம்பட்டி, கோலாறுபட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, மாக்கினாம்பட்டி, அப்பொறம் பொள்ளாச்சி...”

“திப்பம் அப்படின்னா, பொன் நாணயம்; பொன் நாண்யங்கள் கண்ட இடம் திப்பம்பட்டி

கோலா(ர்)றுபட்டின்னா அப்ப?”

“பார்த்த வேலைக்கு ஈடாக, கோலால் நிலத்தை அறுத்து(அளந்து)க் கொடுத்த காணி நிலத்தில் அமைந்த பட்டி”

“ஊஞ்சவேலாம்பட்டி, நானே யூகிக்க முடியுது. அப்ப மாக்கினாம்பட்டி?”

“மாகினம் அப்படின்னா, மேன்மை பொருந்திய ஒருவன் நிர்வாகம் செய்வது. அப்படியானவனின் இடம், மாகினம்பட்டி.”

“நெம்ப சிறப்பாச் சொன்னீங்க அப்பிச்சி... இதுக்கு மேலயும் உங்களை தடுத்து நிறுத்தலை நானு... நெதானமாப் போய்ச் சேருங்க... ஆனா, அம்சவல்லி ஒளவைகூடச் சுத்தீட்டு, இந்தப் பேராண்டிய மறந்துறாதீங்க அப்பிச்சி!”

“செரிச்செரி... நான் வாறனப்ப?”

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மனுசன், நித்திராலோகத்துல போயிக் கூட அறம், பொருள், இன்பம்ன்னு மூணையும் விட்டபாடில்ல போலிருக்கு. அம்சவல்லியத் தேத்தி இருக்கார் பாருங்களே?! எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(கனவில் மீண்டும் வருவார்...)

7/25/2010

கனவில் கவி காளமேகம் - 19

எப்பனாச்சும் வந்து போற நம்ம அப்புச்சி, ஆமா..... ஆமா...., கனவுலதாங்க... குறுக்க குறுக்க பேசாமச் சொல்ற பழமைய, 'ஊம்' போட்டுக் கேளுங்க.... எப்பனாச்சும் நம்ம கனவுல வந்து போற அப்பிச்சி கவி காளமேகம் நம்ம கனவுல வந்து நெம்ப நாளாயிடுச்சி பாருங்க.... நேத்து ஓரளவுக்கு இருந்த பிரச்சினையெல்லாம் செரி ஆயி வந்த நித்திரையில வந்தாரு பாருங்க... நமக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி....

”என்றா பேராண்டி... தமிழ்த் திருவிழா எல்லாம் முடிஞ்ச கையோட நம்பூருக்கு வந்துட்டியாட்ட இருக்கூ??”

“அப்புச்சி வாங்க, வாங்க... ஆமுங்.... உங்களைக் கண்டு கன காலம் ஆயிடிச்சி பாருங்க...”

“ம்ம்... ஆமா, வெகு தொலைவுல இருந்து வந்துருக்கியே? உனக்கு இந்த மெய்க்குணகம் அல்லாம் இல்லியாக்கூ??”

“அய்யோ அப்பிச்சி.... உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா?? சித்த நல்ல பழமையில கேள்வியக் கேளுங்க...”

“அட, நான் நல்லாத்தான் பேசுறேன்... நீதான் இன்னும் பாடு பழமையத் தெரிஞ்சி வெச்சிருக்குலை போலிருக்கு...”

“செரீ.... செரீ.... மெய்க்குணகம்ன்னா என்ன? அதுக்கு பதிலை சொல்லிப் போட்டு, மேல பேசுவீங்களாமா??”

“நீ அப்பிடிக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ... சும்மா குத்தம் சொல்லீட்டு.... பார்த்தியானா, நெறைய காரியங்கள்ல, ஒன்னுக்கும் ஒன்னுக்கும் ஒரு ஒட்டு இணக்கம் இருக்கும்... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு சாவலு கூவும்.... மழை வாறதுக்கு முன்னாடி, தும்பிக கூட்டமாச் சேந்துகிட்டு ஆலவட்டம் போடும்.... இந்த மாதர நெறய....

இதுவே, அந்த கிரம ஒட்டுதல் மாறி, பொழுது சாயுற நேரத்துக்கு சேவல் கூவுச்சுன்னு வெச்சிக்கோ....அதை என்ன சொல்றது? கிரமத்துல குணகம் வுழுந்து போச்சின்னிதான சொல்வம்? out of synch அப்படின்னு ஆங்கிலத்துல சொல்றாங்க பாரு...

அந்த மாதர, நம்ம உடலுக்கும் கால நேரத்துக்கும் ஒரு கிரம ஒட்டுதல் தானா ஏற்பட்டுரும்டா பேராண்டி.... நீ அமெரிக்காவுல இருக்குறவன்... அப்ப, அமெரிக்காவோட கால நேரத்துக்கும் உன்னோட ஒடம்புக்கும் ஒரு கிரம ஒட்டுதல் இருக்கும்.... இப்ப நீ இங்க வந்து இருக்கே... என்ன நடக்கும்??”

“நீங்களே சொல்லிப் போடுங்க அப்பிச்சி...”

“கதிரவன் எழுந்து கிழக்கு வெளுக்குற நேரத்துக்கும், உன்னோட ஒடம்புகிட்ட இருக்குற கிரமத்துக்கும் குணகமாயிருக்கும்.... கிழக்கு வெளுக்குற நேரத்துக்கு, அதாவது அமெரிக்காவுல பொழுது சாயுற நேரத்துக்கு தூக்கம் வரும்.... அந்தியில நித்திரையே வராது....”

“அட, ஆமாங்க அப்பிச்சி... நேத்துப் பூராவும், இராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட முழிச்சிட்டு அல்ல இருந்தன்?”

“ம்ம்ம்.... அப்படி வா, வழிக்கு! அதைச் சொல்றதுதான் மெய்க்குணகம் அப்படின்னு!! ஆங்கிலத்துல jet lag அப்படின்னும் சொல்வாங்க....”

”இப்ப விளங்குச்சுங் அப்பிச்சி...”

“செரி, ஊருல உனக்கு மனநிலை எப்படி இருக்கூ?”

“இன்னும் வெளீல எங்கியுமு போகவே இல்லீங்க... போனது வெச்சி சொன்னா, ஒருவக்கம் மகிழ்ச்சியா இருக்கு.... இன்னொரு வக்கம் வருத்தமா இருக்குங் அப்பிச்சி...”

“ஏண்டா, அட ஏன்?”

“பின்ன எங்க அப்பிச்சி... தென்றல் தளையத் தளைய வருது... ஊட்டுக்குள்ள ஒரு பொட்டுக் காத்தும் இல்ல... வெறும் உப்புசமாவல்ல இருக்கு?”

“ஆமா பின்ன, தும்பை வுட்டுட்டு வாலைப் புடிச்சா?? இருக்குற எடம் முச்சூடும் கட்டடம் கட்டிக்குவீங்க? நீலமலைக் காத்து உள்ள நுழையுற மாதரயாடா இருக்கு கட்டி இருக்குற இலட்சணம்?”

“அட ஆமாங்க அப்பிச்சி... அப்புறம், காந்தீவரம் சிந்தாமணி இருக்கும் பாருங்க... முன்னாடி காரவடை, மெதுவடை, பருப்பு வடை... கமகமன்னு காப்பி அல்லாம் போட்டுக் குடுக்குற கடையோட... சனங்க அல்லாம் போயி, சலீசா பொடி பொட்டெல்லாம் வாங்கியாருவாங்க... அதைத் தொலைச்சுப் போட்டு, இராசேசுவரி மாடம்ன்னு ஒன்னைக் கொண்டு வந்தாங்க....

இப்ப அது போயி, கணபதி மாடம்ன்னு ஒன்னு வந்து அதே இடத்துல நிக்கிது.... இராசேசுவரி மாடம் முச்சூடும் இடிச்சிப்போட்டு, இப்ப இது வந்திருக்கு.... பழைய நெனப்பு வந்து வாட்டுதுங்க அப்பிச்சி, வாட்டுது...”

“அட, இதுக்கெல்லாமா வெசனப்படுறது? அசோகர் காலத்து மரங்களே ஆடிப் போச்சுதாம்... இவன் வேற?”

“ஆமாங்க அப்பிச்சி.... நானு இன்னிக்கிப் போயி, இருக்குற மரங்களை அல்லாம் படம் புடிக்கலாமுன்னு இருக்குறன்... புரூக் பாண்டு வளாகத்துல, காப்பி வாசமும், சந்தன மரங்களும், செண்பங்கி மரங்களும் எப்படி எல்லாம் இருந்துச்சி?? இப்ப, கட்டடங்க பெருசா பெருசா எழும்பி நிக்கிதே?”

“சும்மா வேடிக்கை பாக்கப் போனாக் கூட, இருபது உரூவாய்க் கட்டணம், வண்டிகளை நிப்பாட்டத்தான்...”

“நான் அங்கெல்லாம் போகவே இல்ல அப்பிச்சி.... ஆளரவம் இல்லாத, குமரன் குன்றுக்குமு, குருடி மலைக்குமு போலாம்னு இருக்கேன்...”

“நல்லது... சரி, பார்த்துப் போயிட்டு வாடா பேராண்டி... நான் வாறேன்!”

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மொதல்லயெல்லாம் வந்தா, அவரு கேள்வியாக் கேட்டு உசுரை வாங்குவாரு.... அப்பறம் வாறதையே நிறுத்திட்டாரு... இனிமேலாவது, அடிக்கடி வருவார்னு நம்புவோம்... நம்பிக்கைதான வாழ்க்கை? சரி அப்ப, நீங்க போயிட்டு நாளைக்கி வாங்க போங்க....

(......கனவுல இன்னும் வருவார்......)


5/24/2010

கனவில் கவி காளமேகம் - 18

அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம், மாசக் கணக்குல வராமப் போயிட்டாருங்க. நேற்றைக்குப் பாருங்க, இரவு மணி பதினொன்னு வரைக்கும் தமிழ், தமிழ்னு இலக்கியப் பல்வழி அழைப்பு. அதுல கலந்துகிட்டு, களைப்பாப் போயிப் படுத்தேன்... அப்படி ஒரு நித்திரை!

இடையில யாரோ வந்து, தலை மாட்டுல நின்னு கூப்புடுற மாதரயே இருந்திச்சி.... மனக் கண்ணைத் திறந்து பார்த்தா, நம்ம அப்பிச்சி... அவர் என்ன சொன்னார்னு மேல படிங்க....

“அப்பிச்சீஈஈ....”

“டே, பேராண்டீ....”

“என்னுங்க அப்பிச்சி, நெம்ப நாளாக் காணாமலே போயிட்டீங்க?”

“அட... ஆமா... நீதான் அல்லும் எல்லும் ஊரா ஊராத் திரிஞ்சிட்டு இருந்தே... அந்த நேரத்துல உனக்கெதுக்கு செரமம்னுதேன்...”

“நீங்கவாட்டுக்கு வந்து போயிட்டு இருங்க அப்பிச்சி.... பாக்குற நாலு சனம், என்ன அப்பிச்சிக்கும் பேராண்டிக்குமு இணக்கக்கேடான்னு கேக்குறாங்க பாருங்க?!”

“எலும்பு இல்லாத நாக்கு எப்பிடி வேணுமுன்னாலும் திலும்பும்டா... அவங்க கெடக்குறாய்ங்க... நீ மனசுல எதையுமு வெச்சிக்காத பாரு!”

“செரீங் அப்பிச்சி.... அதென்னங்கப்பிச்சி அல்லும் எல்லும்??

“அல் அப்படின்னா இரவு; எல் அப்படின்னா பகல்; அல்லும் பகலும் அப்படின்னு சொல்லிச் சொல்றதில்ல?! அதாண்டா, எங்க காலத்துத் தமிழ்ல அல்லும் எல்லும்!”

“ஓ, அப்படிங்களா அப்பச்சி?”

“ஆமாண்டா கண்ணு.... அதே கிரமத்துல சொல்றதுதான் அல்லோன்... அல்லில் வலம் வருபவன் அல்லோன்....அமாவாசையில் அல்லோன் அகப்படான்!”

பக்கிணிப் பொழுது வேலை செஞ்சும் பொல்லாப்புன்னு சொல்லிச் சொல்றாங்களே... அதென்னங்க அப்பிச்சி?”

“டே... எப்படறா இதையெல்லாங்கூட ஞாவகத்துல வெச்சிருக்க நீயி?”

“அய்ய... நம்ம கட்டைக்காட்டுல கல்லக்கா புடுங்க வாறவங்கல்லாம் பேசுன பழமை மறந்து போயுருங்ளாக்கூ?”

“என்ற பேராண்டியா? கொக்கான்னேன்?? ஆமாடா சின்னவனே.... கல்லக்கா எப்பப் புடுங்குவாங்க? தை, மாசில நல்ல வேசை காலத்துல புடுங்குவாங்க... அப்ப சில நேரங்கள்ல, இரவைக்குத் தூங்காமக் கொள்ளாம இருந்து வேலை செய்வாங்க... அப்பச் சொல்றதுதான் இந்த சொல்லு... பக்கிணிப் பொழுதுன்னா, காலைல இருந்து அடுத்த நா சாயங்காலம் வரைக்கும்... அதாவது, ரெண்டு பகலுமு, ஒரு இராத்திரியுமு!”

“ம்ம்ம்... இப்ப ஞாவகத்துக்கு வருதுங்க அப்பிச்சி....”

”நீயாவது இதெல்லாம் ஞாவகத்துல வெச்சிருக்கபாரு!”

“ஆமாங்க அப்பிச்சி.... நம்ம பக்கத்தூட்டு குப்புசாமியண்ணன் ஊட்டுக் கொமாரு திண்டுக்கல்லுல வேலை பாக்குறானுங்க.... பதினஞ்சி வருசங்களுக்கு அப்புறம் போன வாரந்தான் அவங்கூடப் பேசுனனுங்க அப்பிச்சி!”

“அப்படியா... அவனுமு நீயுந்தான மாடுகளைக் கொறைக்கு ஓட்டிட்டுப் போயி, ஒட்டுக்கா மாடு மேச்சிட்டு இருப்பீங்க?! அவனுமு, உன்ன மாதரயே நெறைய பழைய பழமைகளைப் பேசுவானே??”

”ஆமுங்... அப்பிச்சி, உங்ககிட்ட இன்னொன்னு கேக்கோணுமிங்க.... அடுத்தவிங்க குறுக்கால குறுக்கால பேசாம இருக்கச் செய்யுறதுக்கு ஒரு சொல் சொல்லுவாங்கல்லங்... அதென்ன சொல்லுங் அப்பிச்சி??”

மூகாத்துறதுன்னு சொல்றதைக் கேக்குறயாடா பழமை?”

“ஆங்... அதேதானுங் அப்பிச்சி! இப்ப அலைபேசி, தொலைபேசியெல்லாம் வந்திடுச்சி பாருங்க... தமிழ்ப் பேரவையோட தமிழ்விழாவுக்கு, கவியரங்கம், இலக்கிய வினாடி வினான்னு பலதுக்கும் பல்வழி அழைப்பு நடந்துட்டு இருக்குங்க அப்பிச்சி... அப்ப, அவங்க அலைபேசி, தொலைபேசில இருக்குற உள்வாங்கியில அவங்கவங்க ஊட்டு நாயமெல்லாம் கேக்குதுங்க அப்பிச்சி.... அதான், அதை எப்படி அமித்தி வெக்கிறதுன்னு சொல்லும் போது, இந்த சொல்லு தேவைப்பட்டதுங்.... உங்க அலைபேசியக் கொஞ்சம் மூகாத்துங்க அப்பிடின்னு இனி சொல்லலாம் பாருங்க....”

“நெம்ப நல்லா!”

“அப்பிச்சி... நெம்ப நாள்க் கழிச்சு நீங்க வந்ததுல மனசு நிறைஞ்சு போச்சுங்க... அப்பப்ப வரோணுமாக்கூ?”

"சரிடா பேராண்டி! இன்னைக்கு இது போதும் அப்ப. நீ தூங்கு, நான் வாறேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மொதல்லயெல்லாம் வந்தா, அவரு கேள்வியாக் கேட்டு உசுரை வாங்குவாரு.... அப்பறம் வாறதையே நிறுத்திட்டாரு... இனிமேலாவது, அடிக்கடி வருவார்னு நம்புவோம்... நம்பிக்கைதான வாழ்க்கை? சரி அப்ப, நீங்க போயிட்டு நாளைக்கி வாங்க போங்க....


(......கனவுல இன்னும் வருவார்......)

10/28/2009

கனவில் கவி காளமேகம் - 17

அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம் ரொம்ப நாள் வரவே இல்லை. என்ன நினைச்சாரோ நேற்றைக்கு வந்தாருங்க, வந்து என்னதான் அலப்பறை செய்தாருன்னு மேல படீங்க!

”டே பேராண்டி, அவஞ் சொல்றானா? சரி, சும்மா சொல்றான்னு பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? குறிப்பிட்டுச் சொன்னாத்தான ஆகும்? அதெப்படி, நறுக்குத் தெறிச்சா மாதிரி அவன் என்ன சொன்னான்னு எப்படிச் சொல்றது?”

“அப்பிச்சி, வாங்க! அவஞ்சொல்றானா? எவன் அவன்?? நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே? சுத்தி வளைச்சு நீங்க எங்க வர்றீங்கன்னு புரியுது. எனக்கு இப்ப அதை எல்லாம் யோசிக்க நேரம் இல்லை. நித்திரையில ஆழ்ந்து போயி இருக்கேன். சொல்ல வந்ததைச் சொல்லிட்டுக் கிளம்புறீங்களா சித்த?”

“சொல்லுறதுல பலவகை இருக்குடா. அதைக் கணக்காப் பாவிச்சாத்தான சொல்ல வந்ததை சரியாச் சொல்ல முடியும். சரி, அதென்னன்னு சொல்லுறேங் கேட்டுக்க!

விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது

விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது

விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது

விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது

வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது

மொழிதல்: வளமான சொற்கள் கொண்டு சொல்றது. கவிதைன்னு சொல்லிக்கிறீங்களே இப்பெல்லாம் நீங்க?

மிழற்றுதல்: குழந்தைகள் மாதிரி மழலையோட இனிக்க இனிக்கச் சொல்றது

பொழிதல்: இடைவிடாமச் சொல்றது.

பேசுதல்: இரண்டு பேர் மாறி மாறிச் சொல்லிக்கிறது

புலம்புதல்: தனக்குத் தானே சொல்றது

புகலுதல்: விருப்பத்தோட சொல்றது

புகழ்தல்: ஆகோ ஓகோன்னு மிகைப்படுத்திச் சொல்றது

பனுவுதல்: பாட்டுல புகழ்ந்து சொல்றது

பறைதல்: மறை ஒன்னை வெளிப்படுத்திச் சொல்றது

பகர்தல்: ஒன்னை ஒடச்சி சொல்றது

நுவலுதல்: நுண்ணிய ஒன்னைச் சொல்றது

நுதலுதல்: ஒன்னைச் சொல்லி, அதுல இருந்து சொல்றது

நவில்தல்: நாவால ஒழுகும்படியா சொல்றது

செப்புதல்: வினாவுக்கு விடை சொல்றது

சாற்றுதல்: ஒரே நேரத்துல பலர் அறியச் சொல்றது

கூறுதல்: கூறுபடுத்திச் சொல்றது, சூத்திரம் சூத்திரமா...

குழறுதல்: நாவு தளர்ந்து சொல்றது

குயிலுதல்: குடும்பக் கதை சொல்றது

கிளத்தல்: கடிந்து, கடுமையாச் சொல்றது

கரைதல்: குரலெழுப்பிச் சொல்றது

கத்துதல்: உரத்துச் சொல்லுதல்

ஓதுதல்: தொடர்ந்து சொல்லுறது

என்னுதல்: அடுத்தவங்க சொன்னது, செய்ததுன்னு சொல்றது

உளறுதல்: ஒன்னு கிடக்க ஒன்னைச் சொல்றது

உரைத்தல்: பொருள் விளங்கச் சொல்றது

இயம்புதல்: இசை கூட்டிச் சொல்லுறது

இசைத்தல்: ஓசை ஏற்ற இறக்கத்தோட சொல்றது

அறைதல்: வன்மையா மறுத்துச் சொல்றது

கதைதல்: கோர்வையா, அடுத்தடுத்துச் சொல்றது

அலப்புதல்: வீணா எதையுஞ் சொல்றது

ஊன்றல்: தெளிவாய்ச் சொல்றது

ஒக்கலித்தல்: அபிமானவங்களுக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் சொல்றது

கடுகுடுத்தல்: கோபமாச் சொல்றது

கம்பீரித்தல்: எடுப்பான குரல்ல சொல்றது

சடாய்த்தல்: பெருமிதமாச் சொல்றது

சித்தரித்தல்: அலங்காரமாச் சொல்லுறது

சிலேடித்தல்: இரு பொருள்ள சொல்றது, சாடை போடுறது

நருநாட்டியம்: குத்திக் காட்டிச் சொல்றது

நழுநழுத்தல்: பிடி கொடுக்காமச் சொல்றது

நிகண்டுதல்: எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்றது

மிண்டுதல்: திமிர்த்தனமாச் சொல்றது

நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது

இதெல்லாம் ஒருத்தர், இன்னொருத்தர்கிட்ட சொல்ற விதம். இதுவே, ஒன்னுக்கு மேற்பட்டவங்க மாறி மாறிச் சொல்லிகிட்டா, அது பேசுறதுன்னு ஆயிடும். அதுல நிறைய விதம் இருக்கு. சொல்லுட்டுமாடா பேராண்டி?”

“அய்யோ அப்பிச்சி, சித்த நீங்க கிளம்புங்க. நீங்க சொல்றதைப்பத்தி சொன்னது போதும். ஆளைவிடுங்க இப்ப!”

"சரிடா பேராண்டி! இன்னைக்கு இது போதும் அப்ப. நீ தூங்கு, நான் வாறேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை வரும் போது இனி என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

8/31/2009

கனவில் கவி காளமேகம் - 16

நேற்றைக்கு இட்ட காணொளியப் பார்த்திட்டு, என்னுடைய 12 ஆண்டுகால நண்பர், வகுப்பறைத் தோழர், கனடாவில் இருக்கும் சண்டிலிப்பாய் சகோதரன் சதீசு எழுதி இருக்கிற கடிதம் பாருங்க மக்களே! சந்தடி சாக்குல jokerனு சொல்லிப் போட்டாரே? அவ்வ்வ்வ்வ்.............

இதுல வேற நான் உடம்பு போட்டுட்டன்னு சொல்லி... அடக் கடவுளே... நெசமாலுமே போட்டுட்டனா? அல்லது, அப்ப அவ்வளவு ஒல்லியா இருந்தனா?? நல்லா இருடாப்பா மகராசா....

************************************************
Hello Sir,

I was wondering how did you get this tremendous interest in Tamil and making poems, speaches and other research in Tamil. I saw you before like a joker, human, helper, friend etc .. but I did not imagine you have such potential and influence person on Tamil literacy and language. Once in a while I see your blog and read "palamoli" translations. Keep it up your work.

You have putup some weight it seems.

Thanks.
Sathis

************************************************

சரி, நாம விசயத்துக்கு வரலாம் வாங்க. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விமானத்துல இருந்து எறங்கி வந்தேன். பயணத்தின் போது வழக்கம் போல, ஏன் நம்ம பெரியவங்க தா, கொடு, அளி, ஈ, வீசு இப்படி பல சொற்களை ஒரே அர்த்தத்தைக் கொடுக்கிறதுக்கு வெச்சிருக்காங்கங்ற கேள்வி தோணிச்சு.

யோசனையால இருக்க இருக்கவே நித்திரை வந்திட்டுது. குறிப்பறிஞ்சு, நித்திரையில எண்ட அப்பிச்சி கவி காளமேகம் வந்திட்டாரென்ன? வந்து, ஏண்டாப்பா மண்டையிடியே? நாஞ்சொல்றன் உனக்கு விசியமண்டு, கதைக்க வெளிக்கிட்டாரென்ன?

நானுஞ் சொல்லிட்டுத்தான் போங்கோவனென்டு சொல்லைக்க, அவர் சொன்னவர், ”நாங்கள் காரண காரியமாத்தான் பிரிம்பா ஒன்டு ஒன்டுக்கும் ஒரு சொல் பாவிக்கக் கொடுத்து வெச்சம். நீங்கள்தான்டாப்பா, எல்லாத்தையும் ஒன்டாப் போட்டு குழப்பியடிச்சுப் பாவிக்கிறீங்கள் என்டு” சொன்னவர் அவர். பேந்து சொன்னார்,

”இந்த சொற்கள் அனைத்தும் இரத்தலுக்கு பாவிக்கும் சொற்கள். உயர்ந்தவன் இடத்தே இரப்பது ’ஈ’யென. ஒப்பானவன் இடத்தே இரப்பது (யாசிப்பது) ’தா’வென. வறியவன் இடத்தே யாசிப்பது ‘கொடு’வென. கொடையில் கருணையுடன் செயல்படுவது, ‘அளிப்பது’. கொடையில் கருணையற்றுச் செயல்படுவது ’வீசுதல்’”.

அவர் சொல்லைக்கே வடிவா விளங்கிட்டது, ஆனா விமானத்துல இருந்த பெட்டை கதைக்கவும் கனவு கலைஞ்சிட்டதென்ன? ஆனால்டப்பா, நாம இனி இந்த சொல்லுகளைப் பாத்து பாவிக்கணுமென்ன?? குடுங்கோவென்டெல்லாம் சொல்லப்படாதென்ன? தாங்கோ என்டு சொல்லப் பழகிக்கணும்.

அவர் சொன்ன பாட்டு இதுதான்:

தா கொடுஎனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி யாகிடன் உடைய!
அவற்றுள் யென் கிளவி இழிந்தோன் கூற்றே!
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே!
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே!

சரி நான் வரட்டே, பேந்து நாளைக்கி வந்து வேற புதினம் எதன்டாலும் கதைப்பமென்ன? வாறன்ஞ் செரியே?!

6/22/2009

கனவில் கவி காளமேகம் - 15

வணக்கம் அன்பர்களே! கடந்த வாரம் கடுமையான வேலைப்பளு, வெளியூர் போக வேண்டி இருந்தது. மறுபடியும் இன்னைக்கு சாயுங்காலம் பெட்டி கட்டியாக வேண்டிய சூழ்நிலை. இதுக்கு நடுப்புல பாருங்க, நேத்து இராத்திரி கனவுல நம்ம அப்பிச்சி கவி காளமேகம் வந்துட்டாரு. கனவுல அவரு என்ன அக்கப்போர் செய்தாருன்னு மேல படிக்கலாம் வாங்க!

“அப்பிச்சி வாங்க வாங்க, என்ன நெம்ப நாளா உங்களை இந்தப் பக்கமே காணமுங்களே?”

“ஆமாடா பேராண்டி, நீயுமு விடுப்புல கொழந்தைகளோட நெம்ப முசுவா இருந்துட்டு கூடவே இடுகைகளையும் போட்டுட்டு இருந்தியா, அதான் எதுக்கு தொந்தரவுன்னு வருல!”

“ஓ அப்பிடீங்ளா?”

“ஆமா, நீயி இன்னியுமு முசுவாத்தான் இருக்குற மாதரத் தெரியுதூ? தமிழ்ச்சங்க விழாவுக்கு எதோ படிக்கிறயாமா? என்றா சங்கதியது?!”

“அதொன்னுமில்லீங், பல்லூடக(multimedia) நிகழ்ச்சியில கலந்துக்கலாமுன்னு....”

“அட்றா சக்கை, அட்றா சக்கை... நீயே ஒரு அரை வேக்காடு, நீ என்னத்தறா அவுங்க கேக்குற கேள்விகளுக்கு பதிலு சொல்லப் போற?”

“என்னுங்க அப்பிச்சி இப்பிடிக் கேட்டுப் போட்டீங்? நீங்க இப்பிடி வந்து சொல்லிட்டுப் போறதெல்லாமு ஞாவகத்துல வெச்சிருந்து சொல்லமாண்டனாக்கூ? அப்பிடியே அட்லாண்டாவுல நம்ம சனத்தையுமு பாத்து போட்டு வர்லாமல்லோ, அதான்...”

“அப்பச்செரி, அப்பச்செரி”

“நீங்க அப்ப எதுனா சொல்லுங்க இன்னிக்கி!”

“ஆமாமா, உங்கிட்ட கேக்குறதுக்கு விசியம் இருக்குதுறா... ஆமா, நாவல்ன்னா என்ன? சிறுகதைன்னா என்ன? காப்பியம்ன்னா என்ன??”

“நாவல்ன்னா பெரிய அளவுல எழுதுறது. சிறுகதை சின்ன அளவுல எழுதுறது. காப்பியம்ன்னா நெம்பப் பெரிய அளவுல எழுதறது. செரிதானுங் அப்பிச்சி?”

“நீயி இன்னமு ஒரு அரை வேக்காடுங்றது செரிடா பேராண்டி! ஏஞ்சொல்லுறேன்னா, நீயி சொன்னதுல அரவாசி செரி, அரவாசி செரியில்ல, அதான்!”

“என்னுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்? அப்ப நீங்களே சொல்லுங் சித்த!”

“செய்யுள், அல்லன்னா பாட்டுலயே ஒரு கதை, கருத்தைத் தொடர்ந்து சொல்லுறதுதான் காவியம், காப்பியம்ங்றது. அந்தக் காலத்துல எல்லாமே பாட்டுத்தேன்... அப்பறமா, நாம பேசற மாதரயே, பழமயிகள அடிப்படையா வெச்சி எழுதுனது நாவல். இந்தப் பழக்கம் சீமையில இருந்து வந்த பழக்கம்!”

“ஆமாங்க அப்பிச்சி, இப்பத்தான் இது ஞாவகத்துல வருது... அப்ப சிறுகதைக்குமு நாவலுக்குமு?”

“அந்த ரெண்டுமே உரைநடைகதான். சிறுகதைங்றது, ஒன்னைப் பத்தி தனிமரமாட்டம் நின்னு சொல்றது. நாவல்ங்றது பலதரப்பட்ட மரங்க ஒன்னு சேந்தா மாதர இருக்குற தோப்பு போலக் கட்டி எழுதுறது!”

“அப்ப புராணம், இதிகாசமுங்றது?”

புராணம்ன்னா நெம்ப பழையது, அதுனால பழைய பழக்க வழக்கங்கள், வரலாறு இதுகளையெல்லாமுஞ் சொல்ற நூல் புராணம். இதிகாசமின்னா, வட மொழியில உண்மை நிகழ்வுகளைத் தழுவினதுன்னு அர்த்தம்.”

“ஆகமமுன்னா?”

ஆகமம் அப்படின்னா வந்ததுன்னு அர்த்தம். ஆக, வழி வழியா தொன்று தொட்டு வர்ற மரபுகள், பழக்க வழக்கங்களை விவரணம் செய்யுறது ஆகமம்ன்னு சொல்லிச் சொல்றதுறா பேராண்டி!”

“இவ்வளவு இருக்குதுங்ளா இதுல?”

“ஆமாடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

4/06/2009

கனவில் கவி காளமேகம் - 14

வணக்கம் அன்பர்களே! நாளைக்கு எருமை(Buffalo, NY)க்கு வெள்ளெண எழுந்து விமானம் புடிச்சுப் போகணுமேங்குற யோசனையில நேரமே நித்திரை கொள்ளலாம்ன்னு போயி, சிவனேன்னு படுத்தேன். நல்ல நித்திரை! ‘திடீல்’னு, நெம்ப நாள் கழிச்சி கவி காளமேகம் அப்பிச்சி கனவுல வந்துட்டாருங்க.

”அப்பிச்சி, என்னங்க நெம்ப நாளா ஆளே காணோம்?”

“ஆமாடா பேராண்டி, நீ நாலும் எழுதுறே! முசுவா வேற இருந்தே, அதான் வரலை. ஆனா எவனோ பொழப்பத்தவன் பூனை மயிரை சிரைச்ச கதையாட்டம் எழுதத் தலைப்பட்ட மாதரத் தெரிஞ்சது. அதான், ஒரு எட்டு பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்!”

“அப்படியெல்லாம் இல்லீங்க அப்பிச்சி. இனத்துக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க முடியுமா? அதானுங்க!”

“அதெல்லாம் செய்யணும்டா... ஆனா, பாத்து நடந்துக்க!”

“சரிங்க அப்பிச்சி, வழக்கம் போல கேள்வி கேட்டு என்னைப் படுத்தாதீங்க. நான் எதுக்கும் இன்னைக்குத் தயாரா இல்லைங்க!”

“சரி விடு, நீ கேளு, நான் கிளத்துறேன்! கேட்டலும் கிளத்தலும்ன்னு இருக்கட்டும்”

“அப்படி வாங்க வழிக்கு! உங்ககிட்ட கேக்கோணுமின்னே காத்துட்டு இருந்தேன், நீங்களே சொல்லிட்டீங்க. அப்பிச்சி, பேச்சு வழக்குல சொல்லுறமே, அது அரைகுறையா? அறைகுறையா?? இதுல எது சரிங்க அப்பிச்சி???”

”அடேய், எங்க காலத்துல எல்லாம் அறைகுறையாத்தான் இருந்துச்சு. உங்க காலத்துல அது அரைகுறைன்னு மாறிடுச்சு. அறைச்சொல் அப்படீன்னா, எழுத்துல இல்லாம வாய்வழிப் புழக்கத்துல மட்டுமே இருக்குற சொல்லு. நீ எழுதுறதுல அரைவாசி, அறைதானடா பேராண்டி? அவர்கள்ங்றது தமிழ்ச் சொல். அதையே, அவுங்கன்னு சொல்லிப் பேசினா, அது அறைச்சொல். அப்படி ஒருத்தன், பாமரத்தனமா, அடுத்தவங்க விளங்காதபடிக்குப் பேசினாச் சொல்லுறது, அவன் அறைகுறையாப் பேசுறான்! இதனோட வழக்கத்துல, பழுதுபடப் பேசுறதையும், பழுதான ஒன்னைச் சொல்லுறதும் அறைகுறைன்னு ஆச்சுதுடா பேராண்டி. அதே நேரத்துல, பாதி சொல்லியும், பாதி சொல்லாமப் பேசுறதை அரைகுறைங்றதுல தப்பில்லை”

“இப்ப விளங்குதுங்க அப்பிச்சி. வாங்க அடுத்த வினாவுக்கு போகலாம். கோயம்பத்தூருக்கு கோவை. திருநெல்வேலிக்கு நெல்லை. தஞ்சாவூருக்கு தஞ்சை. சுருக்கமாச் சொல்லுறாங்கன்னு புரியுது. அதெப்படீங்க அப்பிச்சி, இராமநாதபுரம் மாவட்டம் முகவைன்னு ஆச்சுது? புரியலீங்களே??”

”அதுவா? இராமநாதபுரம், அதை ஒட்டி இருக்குற நிறைய இடங்களை ஆண்ட இராசா சேதுபதி, இராமநாதபுரம் தனக்கு முகம் போல சிறப்பா இருக்குன்னு நினைச்சாராம். அந்த ஊரை நினைச்சு, மகிழ்ச்சிக் கடல்ல ஆழ்ந்து போயி நான் முகவை நாட்டு இராசான்னு பெருமையாச் சொல்லி மகிழ்வாராம். அதுல இருந்து வந்ததுதான் இந்த முகவை!”

”அப்படீங்களா கதை!”

"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)


2/04/2009

கனவில் கவி காளமேகம் - 13

வணக்கமுங்க! நாம குப்பை கொட்டிட்டு இருக்குற சார்லட்டைத் தலைமையிடமா வெச்சிருக்குற அமெரிக்க (bank of america) வங்கியோட நிலைமை பத்திதாங்க இன்னைக்கு எங்கயும் பேச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, அல்லா வங்கியும் கீழவரம் போய்ட்டிருந்தப்ப, இது மாத்திரம் ஆலமரமா காட்சியளிச்சது. சரி, இருக்குற ஒரு விழுதை விட்டு, அடுத்த மரத்தையும் அணைச்சிக்குவோம்ன்னு மெரில் லின்ச்ச(Merrill Lynch) வாங்கினதுதாங்க தப்பாப் போச்சு. அணைச்சதுல, அந்த மரம் இந்த மரத்தையும் கீழ இழுக்குது. ஆமுங்க, அந்த மரத்தோட நிலைமை செரியில்லாமா, நிறையத் தொகை நட்டம் ஆயிடுச்சு.

ஆக மொத்தத்துல, ஒரு காலத்துல அம்பது வெள்ளிக்கு மேல இருந்த‌ பங்கு தொகை ஏழு வெள்ளிக்கு வந்துச்சு. சரி இனி இறங்காதுன்னு பாத்தா, இன்னைக்கு நாலு வெள்ளி எழுபது சதம் ஆயிடிச்சி. என்ன கூத்துன்னு கேட்டிங்கன்னா, அரசாங்கத்துகிட்ட அதிகப்படியா கையேந்தின நிறுவனங்கள்ல, அஞ்சு இலட்சம் வெள்ளிக்கு மேல யாருக்கும் ஊதியம் இருக்கப்படாதுன்னு சொல்லிட்டாங்களாம். ஆக, முக்கியப் புள்ளிகள் வெளில போயிடுவாங்கங்ற ஒரு இதுல, மறுபடியும் சரிவு. கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும்ங்றது இதுதானோ? அதை விடுங்க, நெம்ப நாளைக்கப்புறம் நேத்தைக்கு நம்ம கனவுல வந்த காளமேகம் அப்பிச்சி என்ன சொன்னாருன்னு பாக்கலாம் வாங்க!

"என்னடா பேராண்டி, பொங்கல் எல்லாம் நல்லாப் போச்சா? நல்லாதான இருக்கே?"

"வாங்க அப்பிச்சி, நெம்ப நாளா ஆளே காணோம்! எனக்கு உங்ககிட்ட கேக்க வேண்டியது ஒன்னு ரெண்டு இருக்குங் அப்பிச்சி!"

"கேள்டா, கேள்டா! அரை வேக்காடுக்கெல்லாம் ஆர்வம் வருதுன்னா, அது நல்ல விசியந்தான? கேளு, கேளு!!"

"அப்பிச்சி, இந்த செமக் கட்டைங்றாங்களே அது என்னுங்? செமையா இருக்குதுன்னு சொல்லுறாங்க, செமையா எழுதறன்னு சொல்லுறாங்க, செமையா அடிச்சிட்டன்னும் சொல்லுறாங்க. அந்த செமைன்னா என்ன?"

"ஆமாடா, அது தமிழ் வார்த்தைதேன்! உடகார்ங்றதை ஒக்காருன்னு சொல்றதில்லையா, அது மாதிரிதேன் இதுவும் மருவிப் போய்டிச்சி. தோட்டங் காட்ல இருக்குற பொழிய, கட்டைன்னும் சொல்லுறது உண்டு. கட்டை முறிஞ்சு, தண்ணி கடைப் போகுதுன்னெல்லாம் சொல்லக் கேட்டுருப்ப நீ! அப்ப மழைக் காலங்கள்ல போயி, இருக்குற கட்டைக எல்லாம் வலுவா இருக்கான்னு பாக்குறது உண்டு. அப்பச் சொல்லுறது, "இது செமக் கட்டை, ஒன்னும் முறியாதுன்னு!" அதாவது, இது செம்மையான கட்டை, ஒன்னும் சட்டை செய்யத் தேவையில்லன்னு. ஆக, நல்லா இருக்குற எதையும், செம்மையா, செமையா, செவ்வையான்னு சொல்லுறதும் வழக்கம் ஆயிடிச்சு. அதை ஒட்டி வாற சொலவடை ஒன்னு சொல்லுது, உக்கார்றவன் செமையா உக்காந்தா, செரைக்குறவனும் செமையாச் செரைப்பான்னு!"

"ஓ, அதானா இது? ஆமா, அந்தத் தொடையகராதின்னாங்?"

"நல்ல கேள்வியாத்தான் கேக்குற நீ இன்னைக்கி! தொடைன்னா, பாட்டோட ஒரு அங்கம். ஓசை குறிச்ச ஒன்னு. தமிழகராதிய வகைப்படுத்தும்போது சொல்லுறது, சதுரகராதின்னு. ஏன்னா, தமிழகராதிய நாலு வகையாப் பிரிக்கலாம். பெயரகராதி, the different signification of words. பொருளகராதி, containing words of the same signification. தொகையகராதி, containing collective nouns or generic words. தொடையகராதி, a rhyming dictionary. ஒத்த தொடை இருக்குற சொல்லுகளை வகைப்படுத்திச் சொல்லுறது தொடையராதின்னு."

"அப்பிடீங்களா அப்பிச்சி! இதுக்கு மேல நீங்க எதனாச்சியும் கேட்டு அக்கப்போர் செய்தாக்க, சுத்தமா எல்லாத்தையும் மறந்திடுவேன். நான் இப்ப தூங்கணும்!"

"ச‌ரிடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

1/19/2009

கனவில் கவி காளமேகம் - 12

அடிமைச் சங்கிலிய உடைச்சு எறியப் பாடுபட்ட தலைவர் மார்ட்டின் லூதர் கிங் அவிங்க நினைவு நாளை ஒட்டிய விடுமுறைய முன்னிட்டு மூனு நாளும் பதிவாப் போட்டாச்சு. எப்பவும் ஒரே சொல்லு, ஒரே பேச்சுதானுங்க நாம சொல்லுறது... ஆமுங்க, காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து, பொட்டியப் பொட்டி கட்டி பொட்டிதட்ட பிலடெல்பியா போகணும். ஆகவே, பதிவுகளும் பின்னூட்டங்களும் குறையும். என்னா ஒரு முகமலர்ச்சி உங்க முகத்துல?! இஃகிஃகி!!

இன்னைக்கு ஒரு மின்னஞ்சல்ல, நிலபுலன்கள்ன்னு எழுத வேண்டி இருந்துச்சு. உடனே, மனசுக்குள்ள கேள்விநாதன் வந்து ஒக்காந்துட்டான். ஆமுங்க, அவன் நிலம்ன்னாத் தெரியும். அதென்ன புலன்னு கேட்டுப் பாடாப் படுத்திட்டான். அவனோட இம்சை தாங்க முடியாம, சித்த தூங்கலாம்ன்னு போயிப் படுத்தவன் நல்லாத் தூங்கிட்டேன். பகல்ன்னும் பாக்காம, நம்ம அப்பிச்சி கவி காளமேகம் கனவுல வந்துட்டாரு. நல்ல நேரத்துல வந்தீங்க அப்பிச்சின்னு நினைச்சிட்டு, அவ்ரோட பேச ஆரம்பிச்சேன். அவர்கிட்டப் பேசினதில இருந்து,


"என்னடா பேராண்டி நல்லா இருக்கியா?"

"எதோ இருக்கேன், எனக்கு கேள்விநாதன் நொம்ப இம்சை தர்றான். அந்த சிக்கலைக் கொஞ்சம் தீர்த்து வையுங்க அப்பிச்சி!"

"அதான குறிப்பறிஞ்சு நான் வந்திருக்கேன், கேளு!"

"நிலம் தெரியும்... அதென்ன புலன்? ஏன் நிலபுலன்னு சொல்லுறோம்??"

"மொதல்ல நீ சொல்லுறதே தப்புடா பேராண்டி. அது நிலபுலம்!"

"என்னுங்க அப்பிச்சி? அப்ப, புலன்னா என்ன? புலம்ன்னா என்ன??"

"புலன்னா, உணர்வு, சுவை, இரசம், ஒளி, சத்தம், நாற்றம்ங்ற அர்த்தங்கள் பாவிக்கிற இடத்தைப் பொறுத்து வரும். புலம்ன்னா, திசை, சார்ந்த‌, நாடு,அறிவு, இருப்பிடம், புலமை, நூல், காட்சி, தேயம்ன்னு இதுவும் பொழங்குற இடத்தைப் பொறுத்து பல அர்த்தங்களைத் தரும். நாளா வட்டத்துல, புலனும் புலமும் ஒன்னுக்கொன்னு மாத்திப் போட்டு பொழங்கறது வழக்கத்துல வந்திடுச்சி."

"ஓ, அப்பிடியா? அப்ப, நிலபுலம்ன்னா என்ன அர்த்தம் வருதுங்க அப்பிச்சி?"

"நிலமும், அந்த நபரைச் சார்ந்தவை, தொடர்புடையன‌, உரியனவும்ங்றது அர்த்தம். அதான் உங்களுக்கு நிலபுலங்கள் எல்லாம் எங்க இருக்குன்னு கேட்கறது வழக்கம். இதையே, நிலபுலன்கள்ன்னும் பொழங்கறது வழக்கமாயிடுச்சி! காந்தப் புலம்ங்றோம்? அதாவது, காந்தத்திற்கு தொடர்புடைய சக்திதான் காந்தப் புலம். புலம் பெயர்ந்தவர்கள்ங்றோம். புன்செய் நிலத்தை விட்டுப் போனவிங்கன்னா அர்த்தம்? இல்லடா! தன்னைச் சார்ந்தவற்றை விட்டுப் பெயர்ந்தவங்கதான் அது!!"

"இப்ப விளங்குச்சுங்க. அப்ப, புலன் விசாரணைன்னா?"

"நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இதுவும் புலம் குறித்த விசாரணைதான். அதைத்தான், புலன் விசாரணைன்னு சொல்லுறது. அதாவது, சந்தேகத்தின் பேரில் இருப்பவரின், குற்றத்தின் புலம் குறிச்ச, அவருக்கு தொடர்பான, சார்ந்த அனைத்தையும் குறித்த விசாரணையத்தான் சொல்லுறது புலன் விசாரணை!"

இதையெல்லாஞ் சொன்ன அப்பிச்சிக்கு நன்றி சொல்லவும், தூக்கம் கலையவும் நேரம் சரியா இருந்தது. நம்மளுக்கு இருந்த ஐயம் தீர்ந்ததுன்னு தெரிஞ்ச கேள்விநாதனும், ந்ம்மை விட்டு சொல்லாமக் கொள்ளாம கம்பிய நீட்டிட்டாரு. இஃகிஃகி! அப்பிச்சி சொன்னதை சரி பார்ப்பமின்னு முயற்சி செய்தப்ப கிடைச்ச தகவல்:

"ஒரு குற்றம் குறித்த புலன் விசாரணை என்பது,
  • குற்ற நிகழ்விடம் சென்றடைவது,
  • வழக்கின் பொருண்மைகளை, சூழ்நிலைகளையும் உறுதி செய்து கொள்வது,
  • குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல்,
  • கைது செய்தல் குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது,
  • குற்றம் நிகழ்ந்த இடத்தையும், அது தொடர்பான மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல்,
  • சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது!"

இனி நான் நிலபுலம்ன்னே எழுதறேன். நீங்க எதுக்கும், அடிக்கிற பொருளாதார ஆழிப் பேரலைல உங்க நிலபுலமெல்லாம் பாதுகாப்பா இருக்கான்னு ஒருக்காப் பாத்துகிடுங்க... நாம்போயி பொட்டிய வெச்சி, பொட்டியக் கட்டி, பொட்டி தட்டப் போறதுக்குண்டான வேலையப் பாக்குறேன். இஃகிஃகி!!

மாடு காணாமப் போனவனுக்கு,
அந்த‌மணியோசை கேட்டுட்டே இருக்கும்!

1/04/2009

கனவில் கவி காளமேகம் - 11

வணக்கம் அன்பர்களே! மூனு மாசமா வீட்ல இருந்தே வேலை, கடைசி மூனு வாரம் விடுப்புன்னு நாள் போனதே தெரியலீங்க. பதிவுகளாப் போட்டு உங்களை எல்லாம் இம்சை பண்ணினது எல்லாம் இனி குறையும். இஃகிஃகி! ஆமுங்க, நாளையில இருந்து பொட்டி அடிக்கப் பொட்டி தூக்கணும். வெளியூர்ப் பிரயாணந்தேன். பதிவுகள், பின்னூட்டம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதைப் படிக்கும் போது உங்க முகத்துல என்னா ஒரு மலர்ச்சி?!

இதெல்லாத்தையும் நினைச்சிட்டே தூங்கிட்டு இருந்தேன், வழக்கம் போல நம்ம கனவுல‌ வந்தாருங்க கவி காளமேகம் அப்பிச்சி. மேல படீங்க, என்னாதான் அலப்பறை செய்தாருங்கறதத் தெரிஞ்சுக்குவீங்க.

"என்னடா பேராண்டி, வேலைக்குப் போகணுங்ற விசனமாட்ட இருக்கு?"

"ஆமுங்க அப்பிச்சி, நெம்ப வெசனமாத்தான் இருக்கு. இப்ப நீங்களும் வந்திட்டீங்க. சரி, ஆரம்பிங்க உங்க அலம்பலை! எப்பத்தான் உங்க தொந்திரவு தீரும்ன்னு தெரியலை?!"

"ஏண்டா இப்பிடி சலிச்சிக்குறே? மொதல் ரெண்டு நாள் கொஞ்சம் கடினமாத்தான் இருக்கு...அப்புறம் எல்லாம் செரி ஆயிடும்!"

"ஆமாங்க, நீங்க ஆரம்பிங்க!"

"நீங்கெல்லாம் இப்ப தமிங்கிலத்துல பேசுறீங்க. பேசும் போது, அவன் வந்து ஷோ(show) வுடுறான்னு சொல்லுறீங்க. அதுக்கான தமிழ் வார்த்தை என்ன, சொல்லு!"

"நடிப்பு?"

"இல்லடா பேராண்டி! ஒருத்தரைப் பார்த்த ஒடனே அவிங்க செய்யுற அலம்பல். அதைச் சொல்லுறது, கண்டுபாவனை!"

"அப்பிடீங்களா? இனி சொல்ல வந்ததை நீங்களே சொல்லிடுங்க அப்பிச்சி!"

"க‌ம்பிய‌ நீட்டுற‌துன்னா என்ன‌?"

"ஒருத்த‌ர் த‌ப்பிச்சுப் போற‌தும், இட‌த்துல‌ இருந்து ந‌ழுவ‌ற‌தையும் சொல்லுற‌து க‌ம்பிய‌ நீட்டுற‌து. ச‌ரிங்க‌ளா?"

"ச‌ரிதான்! அதுக்கான‌ விள‌க்க‌ம் என்ன‌ன்னா, சிறைச்சாலை, கூண்டு இங்கல்லாம் அடைச்சிருக்குற க‌ம்பிக‌ளை உள்புற‌மாவோ வெளிப்புற‌மாவோ வ‌ளைச்சி, நீட்டி விட்டுட்டு ஓடிப் போற‌தைக் கம்பிய நீட்டிட்டுப் போய்ட்டான்னு சொல்ல‌ப் போய், அதுவே ஒரு வ‌ழ‌க்குச் சொல்லாவும் ஆயிருச்சு!"

"ஓ அதுதானா, இது?"

"ஆமா. கடுக்காய் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்லுறோம். அது ஏன் தெரியுமா?"

"அதான், நீங்களே சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க சொல்லிட்டனே? மறுபடியும் கேள்வி கேட்டு இம்சை செய்றீங்க‌ளே???"

"சரிடா... கோவப்படாம‌ சித்த கேளு! வைத்தியன் வந்து நோவுக்கு என்ன மருந்து குடுப்பானோன்னு காத்திருக்க, அவன் வந்து காசை வாங்கிட்டு மருத்துவ கொணம் இருக்குற கடுக்காயக் குடுத்துட்டுப் போனதை, ஒரு இளக்காரமா, காசை வாங்கிட்டு கடுக்காயக் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்ல, அதுவே ஏமாத்திட்டு போறதையுஞ் சொல்லுற வழக்கா ஆயிப் போச்சு."

"ஓ, இதுதான் அதனோட அர்த்தமா?"

"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)


12/08/2008

கனவில் கவி காளமேகம் - 10

வணக்கம் அன்பர்களே! ஒரு நாளைக்கு ரெண்டு பதிவுன்னு போன வாரம் ரொம்ப முசுவா(busy)ப் போச்சு. நேத்தைக்கு சார்லட்ல (Charlotte, NC) பதிவர் சந்திப்பு! அதுவும் நல்லா, பம்பலா(fun)ப் போச்சு. எல்லாம் முடிச்சுட்டு வந்து சிவனேன்னு படுத்தேன். நல்ல நித்திரை! திடீல்னு வழக்கம் போல கவி காளமேகம் அப்பிச்சி கனவுல வந்துட்டாரு. மேல படீங்க, என்னாதான் சொன்னாருங்றதைத் தெரிஞ்சுக்குவீங்க.

"என்னடா பேராண்டி, பரவாயில்லையே, கெரமாத்தை உட்டு வந்து நொம்ப நாளானுலும், ஊர்ப் பழமயப் போட்டு, உன்னோட நட்சத்திர வாரத்தை ஓட்டிட்டயே?"

"ஆமுங்க, எழுதறதுக்கு வேற ஒன்னுங் கிடைக்கலை, அதான்!"

"சரிச் சரி, போனதைப் பத்திப் பேசறத உட்டுட்டு இப்ப விசியத்துக்கு வா. நீ அடிக்கடி பெனாத்தறயாமே, உண்மையா?"

"ஆமா பின்ன, இப்பிடி வந்து தூக்கத்துல அக்கப்போர்(trouble) பண்ணினாப் பினாத்தாம வேற என்ன செய்யுறதுங்க அப்பிச்சி?"

"சாமார்த்யமாப் பேசுறடா! ஆமா, பினாத்துறதுன்னா என்ன?"

"க‌ண்ட‌ப‌டி உள‌ற‌துதான் பினாத்துற‌து. என‌க்கு புரிஞ்சு போச்சு, நீங்க‌ அங்க‌ தொட்டு இங்க‌ தொட்டு, க‌ண்ட‌துக்கும் விள‌க்க‌ஞ் சொல்ல‌ச் சொல்லுவீங்க‌. இன்னைக்கு நான் த‌யாரில்லை. சொல்ல‌ வ‌ந்த‌தைச் சொல்லிட்டு ந‌டைய‌க் க‌ட்டுங்க‌ அப்பிச்சி!"

"என்ன‌டா இது? ச‌ரி சொல்லுற‌ன், அதையாவ‌து கேட்டுக்கோ!"

"சொல்லுங்க‌!"

"அல‌ட்டுத‌ல்ன்னா அல‌ட்சிய‌ப் ப‌டுத்த‌ற‌து. பீத்துத‌ல்ன்னா வீண் பெருமை பேசுற‌து. பினாத்துத‌ல்ன்னா நீ சொன்ன‌ மாதிரி, உள‌ற‌ல் அல்ல‌து பித‌ற்ற‌ல். அனாம‌த்துன்னா பொதுவா இருக்குற‌து. உன்னோட‌ வீட்டை ஊருக்கார‌ங்க‌ எடுத்துகிட்டாச் சொல்லுற‌து, வீடு அனாம‌த்தாப் போச்சு. இதுவே, அனாவ‌சிய‌ம்ன்னா, அவ‌சிய‌மில்லாத‌ ஒன்னு. அதாவ‌து, 'அ'னாவை மங்கலத்துக்கு முன்னாடி போட்டா அமங்கலம் ஆயிடும். அது மாதர, 'அ'னாவை அவசியத்துக்கு முன்னாடி போட்டா வர்றது அனாவசியம்.

"ஏன் அப்பிச்சி, இதெல்லாம் தமிழ் வார்த்தைகதானா?"

"ஆமா, இல்லாட்டி நான் எதுக்கு உங்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்?"

"சரிங்க அப்பிச்சி, இந்நேரம் நாம பேசினதப் பதிவாப் போட்டா, வாசகர்கள் தேடிப் பிடிச்சு உதைப்பாங்க. எதாவது விசியஞ் சொல்லிட்டுப் போங்க!"

"ம்ம், நம்ம காட்டுல அவரை போடுவமே, என்னன்ன அவரை போடுவோஞ் சொல்லு!"

"அவரை, துவரை ஞாபகத்துல இருக்குறதே பெரிய விசியம், நீங்க வேற! சரி சொல்லுங்க நீங்களே!!"

"முறுக்கவரை, காட்டவரை, கொத்தவரை, சிவப்பவரை, பேயவரை, நகரவரை, பேரவரை, பாலவரை, கணுவவரை, தீவாந்தரவவரை, கோழியவரை ,வாளவரை அப்புறமா சிற்றவரை!"

"இதுல ரெண்டு மூணு எனக்குத் தெரியும். மத்ததெல்லாம் மறந்து போச்சுங்க!"


"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.
(......கனவுல இன்னும் வருவார்......)

12/02/2008

கனவில் கவி காளமேகம் - 9

வணக்கம் அன்பர்களே! அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காள்மேகம் ரொம்ப நாள் வரவே இல்லை. நட்சத்திரப் பதிவர் ஆயிட்டதால, நிறைய பின்னூட்டம், எல்லார்த்துக்கும் பதில் சொல்லிட்டு நித்திரை கொள்ள தாமதமாயிடுச்சு, திடீர்னு கனவுல கவி காளமேக அப்பிச்சி! மனுசன், வழக்கம் போல கேள்வி கேட்டுத்தான் அலம்பலை ஆரம்பிச்சாரு. அவரு இன்னைக்கு என்ன சொன்னாருன்னு மேல படிங்க!

"என்னடா பேராண்டி, நட்சத்திரப் பதிவராமே? நல்லா இருடா, நல்லாயிரு!"

"எல்லாம் நீங்க செய்த வேலைதான்! இப்ப, இதுல கொண்டு வந்து விட்டுடுச்சி!"

"அதனாலென்ன?! ஆமா இரவல், குறியாப்பு இதுகளுக்கு வெளக்கஞ் சொல்லு பாப்போம். நீ சின்ன வயசுல பொழங்குறதுதான இதெல்லாம்!"

"ஓ, தெரியுமே! அடுத்தவங்க கிட்ட இருந்து எதனாக் கடனா வாங்கிட்டு வர்றதுதான். இது கூடத் தெரியாதா?"

"அது சரிடா, ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"அப்பிச்சி, வேலையக் காமிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?! ரெண்டும் ஒன்னுதான்!"

"இல்லடா பேராண்டி! இரவல்ன்னா, ஒரு பொருளை அடுத்தவங்ககிட்ட வாங்கிட்டு வந்து பாவிச்சுட்டு, பொழங்கிட்டுத் திருப்பித் தந்திடணும்!"

"அப்பக் குறியாப்பு?"

"அட‌, உங்க‌ அம்மாதான் அடிக்க‌டி ப‌க்க‌த்து வீட்ல‌ குறியாப்பு வாங்கிட்டு வ‌ருமே? தெரிய‌னுமேடா ஒன‌க்கு?!"

"ஐயோ, தூக்க‌த்துல‌ வ‌ந்து உசுரு எடுக்காதீங்க‌, சொல்லிட்டுக் கெள‌ம்புங்க‌. நான் தூங்க‌ணும்!"

"கோவ‌த்துக்கு ஒன்னும் கொற‌ச்ச‌ல் இல்ல‌டா! ச‌ரி, சொல்லுறேன் கேட்டுக்கோ!! குறியாப்புன்னா, எதோ ஒரு பொருளை குறிப்புல‌யோ, அல்ல‌து இவ்வ‌ள‌வு வாங்கிட்டுப் போறேன்னு குறிச்சு சொல்லி வாங்கிட்டு வ‌ந்துட்டு, அதை குறிச்ச‌ வெச்சா மாதிரி திருப்பிக் குடுக்குற‌ வாடிக்கைதான் குறியாப்பு!"

"அப்பிச்சி கொல்லுறீங்க‌! இர‌வ‌ல்ங்ற‌தும் அதான‌?!"

"இல்ல‌டா, இர‌வை ஒரு ப‌டி வாங்கிட்டு வ‌ரும் போது உங்க‌ம்மா என்ன‌ சொல்லிட்டு வ‌ருது? இந்த‌ ஒரு ப‌டி இர‌வைய‌ அடுத்த‌ விசாழ‌க் கெழ‌மை ச‌ந்த‌யில‌ வாங்கித் தாரேன்னு சொல்லிட்டு வ‌ருது. அதே மாத‌ர‌, திருப்பியும் குடுக்குது. இங்க‌ உங்க‌ அம்மா வாங்கியாந்த‌ இர‌வை வேற, குறிப்பிட்ட மாதர திருப்பிக் குடுக்குற‌ ர‌வை வேற‌!"

"ஓ அப்பிச்சி, வெள‌ங்கிடுச்சி! இர‌வ‌ல்ன்னா வாங்கியாந்த‌ பொருளையே திருப்பித் தார‌து. புத்த‌க‌ம் இர‌வ‌ல் வாங்கியார‌து!"

"ஆமாடா பேராண்டி, ச‌ரி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"


இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

11/06/2008

கனவில் கவி காளமேகம் - 8

நம்ம கனவுல வந்துட்டு இருந்த கவி காளமேகம், ரெண்டு வாரமா வரலை பாருங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே படுத்தேன். குறிப்பு அறிஞ்சு, நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. இதுவரைக்கும் நம்ம கனவுல வந்து அவரு சொன்னதைப் படிங்க. படிச்சுட்டு, அவரு இன்னைக்கு என்ன சொன்னாருன்னு மேல படிங்க!

"அப்பிச்சி என்ன நொம்ப நாளாக் காணோம்?"

"இல்லடா பேராண்டி, நீயும் நாலுங் க‌ல‌ந்து எழுத‌ ஆர‌ம்பிச்சுட்டே. கூட‌வே, நீ இருக்குற‌ பக்க‌ம் தேர்த‌லாமாவே?"

"ஆமாங்க‌ அப்பிச்சி. யாரு வ‌ந்தா என‌க்கென்ன‌? என‌க்கு எழுத‌ற‌க்கு நீங்க‌தான‌ எத‌னாச்சும் த‌ந்து ஆவ‌ணும். என்ன‌ சொல்லுறீங்க‌?"

"அட‌, என்ன‌டா ஆச்சு ஒன‌க்கு? நொம்ப‌த் தெளிவாப் பேசுறியே இன்னைக்கு??"

"அது கெட‌க்க‌ட்டும், நீங்க‌ உங்க‌ பினாத்த‌லை ஆர‌ம்பிங்க‌!"

"டேய், பெரிய‌வ‌ங்க‌ளை அப்ப‌டி ஒன்னும் சொல்ல‌ப் ப‌டாதுடா! ச‌ரி, இந்த‌ அக்கு வேரு(று) ஆணி வேரா(றா) அல‌சுற‌துன்னு சொல்லுறாங்க‌ளே, அப்பிடின்னா என்ன‌டா பேராண்டி?"

"ஆணி வேருன்னா தெரியும். பிர‌தான‌மா நெல‌த்துல‌ இருக்குற‌ வேர். ஆக‌, சின்ன‌ச் சின்ன‌ ப‌க்க‌ வேர்க‌ளையும், பிர‌தான‌மா இருக்குற‌ ஆணி வேர‌யும் அல‌சுற‌ மாதிரிங்ற‌ அர்த்த‌த்துல‌ இதைப் பொழ‌ங்க‌லாம்! நாஞ் சொல்லுற‌து ச‌ரிதான‌ அப்பிச்சி?"

"ந‌ல்லாத்தான் யூக‌ம் செய்யுற‌டா, ஆனா அது இல்ல‌!"

"என‌க்குத் தெரியுந் தாத்தா, நீங்க‌ இந்த‌ மாதிரி எதனாச் சொல்லி க‌ழுத்த‌றுப்பீங்க‌ன்னு. ச‌ரி சொல்லுங்க‌, நாந்தூங்க‌ணும்!"

"ச‌லிச்சுக்காத‌டா பேராண்டி. அக்க‌க்காப் பிரிக்கிற‌துன்னு சொல்லுறோம். அப்பிடின்னா, பாக‌ங்க‌ளைத் துண்டு துண்டாப் பிரிக்கிற‌துன்னு அர்த்த‌ம். ஆக‌, அக்குன்னா பாக‌ம், அல்ல‌து ஒரு துண்டுன்னு அர்த்த‌ம். உங்க‌ கால‌த்துல‌தான‌டா ப‌சை வ‌ந்துடுச்சு. ப‌சையில‌ ஒட்டி வ‌லுவில்லாத‌ சாமான்க‌ள‌ உண்டு ப‌ண்ணி ச‌ன‌ங்க‌ த‌லையில‌ மொள‌கா. எங்க‌ கால‌த்துல‌ எந்த‌ ஒரு சாமானும், துண்டுக‌ளை வெச்சி ஆணிக‌ளால‌ வ‌லுவாப் பூட்டி இருப்போம். அப்ப‌ அந்த‌ ஆணிக‌ளையும் அக்குக‌ளையும் த‌னித்த‌னியா பிரிக்குற‌த, அக்கு வேறா ஆணி வேறாப் பிரிக்கிற‌துன்னு சொல்லுவோம்டா! இதையே, ந‌ம்ப‌ ஊரு, கோய‌ம்ப‌த்தூர்ல‌ அச்சு வேற‌யா ஆணி வேற‌யாப் பிரிச்சுடுவேன்னும் சொல்லுவாங்க‌டா பேராண்டி. ச‌ரி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

10/21/2008

கனவில் கவி காளமேகம் - 7

ஆமாங்க, நேத்தைக்கும் வழக்கம் போல கவி காளமேகம் உறுமிகினே நம்ம கனவுல வந்தாருங்க. நாமதான், இந்தப் பொருளாதார நெருக்கடியில சிக்கி ஒரு கொழப்பத்துல இருக்கமே. அவரு அதை எப்படித்தான் கண்டு புடிச்சாரோ தெரியலை,

"என்னடா பேராண்டி, என்ன? மாய் மாலத்துல மாட்டிகிட்டு மெரள்ற மாதிரித் தெரியுது??"

"ஆமாங்க அப்பிச்சி! எதுக்கும் நீங்க கேக்குறதுக்கு முன்னாடி, நானே கேக்கறேன் இன்னைக்கு! இல்லாட்டி நீங்க எதனாக் கேட்டு உசுர எடுப்பீங்க?!"


"சரி, ஆகட்டுங் கேளு!"

"ஆமா அப்பிச்சி, உங்க காலத்துல எல்லாம் எப்பிடி இந்தப் பணம், மொதலீடு இதெல்லாத்தையும் பராமரிப்பு செய்தீங்க, அதைச் சொல்லுங்களேன் எனக்கு!"

"அடேய், நீ இன்னைக்கு தாண்டா உருப்படியாக் கேள்வி கேட்டு இருக்குற?! எல்லாம், பட்டாத்தானடா உங்களுக்கு ஞானம் பொறக்குது?!"

"என்ன‌ ப‌ண்ணுற‌துங்க‌ அப்பிச்சி, ச‌ரி நீங்க‌ சொல்லுங்க‌!"

"நாங்கள்ளெல்லாம் கொஞ்ச‌மாப் ப‌ண‌த்தைக் கையில‌ வெச்சுக்குவோம். அதுவும் பாத்தியானா, இந்த‌ நெல‌வ‌றைக்கு மேல‌ இருக்குற‌ பொந்துக‌, உப்பும் புளியும் பொட்டு வெக்கிற‌ மொடாவுக‌, கொஞ்ச‌ நிறைய‌ன்னா மொள‌காத்தூள் மொடாவுல‌ கூட‌ப் போட்டு வெப்பொம்."

"அப்ப‌ ச‌ம்பாதிச்சு மிச்ச‌ம் மீதி ஆவுற‌து எல்லாம்?"

"எல்லாமே, பொருளாத்தான்டா வெச்சுக்குவோம். சும்மா,அறுவ‌து மூட்டை இராகி, சோள‌ம், நெல்லுன்னு வ‌ச‌திக்குத் த‌குந்த‌ மாதிரி இருக்கும்டா! எல்லாமே, தானிய‌ம், ஊடு, வாச‌ல், ப‌ண‌ட‌ங் க‌ன்னுக‌, கோழி சாவ‌ல்ன்னு நாலும் க‌ல‌ந்து வெச்சிருப்போம். இந்த‌க் காயித‌த்தை ந‌ம்புற‌தெல்லாம் உங்க‌ கால‌த்துல‌ வ‌ந்த‌துதாண்டா பேராண்டி."

"அப்ப‌, சாமான் செட்டு வாங்க‌னுமின்னா?"

"ஊட்டுல இருக்குற‌ தானிய‌ம், ப‌ண்ட‌ங் க‌ன்னுல‌ எதோ ஒன்னு, ஆடோ, கோழியோ இப்ப‌டி எத‌னாச்சும் கொஞ்ச‌த்தை எடுத்துகிட்டு ச‌ந்தைக்குப் போவோம். அங்க‌ இதுக்கு ஒரு வெலை. அந்த‌ வெலைக்கு வேணுங்ற‌ சாமான் செட்டுக‌! பிர‌ச்சினை தீந்த‌து."

"அதெப்ப‌டி தாத்தா, ஒரு க‌டையில‌ விப்பீங்க‌...ஆனா, நீங்க‌ நாலு க‌டைக்குப் போக‌ணுமே. அப்ப‌, ரூவா?"

"ச‌ந்தைக்கு எல்லாம் ஒரு ஆளோ ரெண்டு ஆளோ இருப்பாங்க‌. அவிங்க‌ளை நாங்க‌, ச‌ந்தைப் ப‌ண்ணாடின்னு கூப்புடுவோம். அவ‌ரு வ‌ந்து காசு ப‌ண‌ம் சில்ல‌றை முறிச்சுக் குடுப்பாரு, எல்லா கணக்கு வழக்கையும் பாத்துகிடுவாரு. ஆனா, அத‌னால‌ அவ‌ருக்கு எந்த‌ லாப‌மும் இல்ல‌ பாத்துக்க‌. நாங்க‌, சுங்கம்(ச‌ந்தை வ‌ரி) இவ்வ‌ள‌வுன்னு க‌ட்டுவோம். அதுல‌ அவ‌ருக்கு பொழ‌ப்பு ந‌ட‌த்த‌ ஒரு கூலி. அவ்வ‌ள‌வுதான்!"

"ஆமா, கொண்டு போன‌ சாமான்ங்க‌ விக்க‌லைன்னா?"

"அட‌, இதென்ன‌ வெவ‌கார‌மா இருக்கு. சாய‌ந்த‌ர‌ம் மிச்ச‌ச் ச‌ந்தைல‌ ஏழை பாழைக‌ளுக்கு குடுத்துட்டு வ‌ந்திருவோம். மிச்ச‌ம் கொண்டு வ‌ந்தா ஊரு சிரிக்காது?"

"இப்ப‌டித்தான் இருந்தீங்ளா?"

"பின்ன‌? எல்லாமே அச‌ல்டா... பொருளுக்குப் பொருளு! உங்கிட்ட‌ நிற‌ய‌ப் பொருள் இருக்குதா, நீ முத‌லி. இல்லையா, கெட‌க்குது க‌ழுதை. உழைச்சுத் தின்னு. மாய் மால‌த்துக்கு இட‌ங் கெடையாது!"

"இப்பெல்லாம் அப்ப‌டி இல்லை அப்பிச்சி!"

"தெரியுந் தெரியும். எப்பப் பொருளே இல்லாம‌, அதுக்கு ஒரு தார‌த்தைக் (பணத்தைக்) கொண்டு வ‌ந்தீங்ளோ, அப்ப‌வே உங்க‌ பொருளாதார‌ம் வ‌லுவிருக்காதுன்னு தெரியுந் தெரியும்!"


"சரி, இன்னைக்கு வேற என்ன சொல்லப் போறீங்க?"

"இன்னைக்கு நீ மனசு சொகமில்லாம இருக்கே, அதனால நல்ல வார்த்தை நாலு சொல்லிட்டு நாங்கிளம்புறேன்,

பழைமைஎனும் பாதையிலே
பார்புதுமை மெருகேற்றி
உழைப்புக்கு வடிவேற்றி்
ஊர்வலமே போவாயோ!

மனிதம்என் றும்ஒன்று்
மதம்எல்லாம் சமமென்று
தொனிக்கின்ற பாட்டையிலே
தொடர்ந்தேநீ போவாயோ!!"



இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

10/13/2008

கனவில் கவி காளமேகம் - 6

கனவில் கவி காளமேகம் - 5

நம்ம கனவுல வந்துட்டு இருந்த கவி காளமேகம், ரொம்ப நாளா வரலை பாருங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே படுத்தேன். குறிப்பு அறிஞ்சு, நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. அதுக்கு மேல என்ன சொன்னாருன்னு, மேல படிங்க!

"அப்பிச்சி என்ன நொம்ப நாளாக் காணோம்?"

"அது இல்லடா பேரான்டி, நீ நாட்டு நடப்புன்னு நாலும் எழுத ஆரம்பிச்சுட்டே, அதான் என்னோட தொந்தரவு எதுக்குன்னு வரலை"

"அப்பிடியெல்லாம் ஏன் நினைக்குறீங்க? சரி, சொல்லுங்க!"

"பேரான்டி, இந்த ஆறு அறிவுன்னு சொல்லுறாங்குளே, அது பத்தி விவரமா சொல்லு பாப்போம்!"

"அப்பிச்சி, இந்த வேலை எல்லாம் வேண்டாம், நீங்களே சொல்லிடுங்க!"

"நீதான் ஒரு அரை வேக்காடு ஆச்சே?! சரி, சொல்லுறேன், கேளு! மேலோட்டமா, எல்லாத்தையும் ரெண்டாப் பிரிச்சோம். நிலைத் திணை, இயங்கு திணைன்னு. இதுல நிலைத்திணை வந்து உடல் உணர்ச்சிய மட்டும் வெச்சி, இயங்கு திணை வகையறாக்களை வாழ வைக்கும். மரம், செடி, கொடி, புல், புதர் எல்லாம் இந்த வகை. ஒரே இடத்துல நிலையா இருக்கும். இதுக்கு ஒரு அறிவுதான். மெய்யறிவு!

ஒரு இடத்துல இருந்து, மத்த இடம் போறது எல்லாம் இயங்கு திணை. அதுல‌, நீருயிரி, நிலவூரி, பறவை, விலங்கு, மாந்தர்ன்னு அஞ்சு வகை. அதுகளப் பாப்போம் இப்ப:

நீருயிரி: மெய்யறிவு, வாயறிவு

நிலவூரி: ஊர்ந்து வாழுறது. மெய், வாய், கண்ணறிவு

பறவை: மெய், வாய், மூக்கு, கண்ணறிவு

விலங்கு: மெய், வாய், கண், மூக்கு, செவியறிவு

மாந்தர்: மெய், வாய், கண், மூக்கு, செவின்னு அஞ்சு புற அறிவு. கூடவே ஆறாவதா, அக அறிவான மனத்தால நல்லது கெட்டதுன்னு எண்ணங்களை பகுத்தறியறது!"

"அப்பிச்சி, இதெல்லாம் எனக்கு தெரியும். நீங்க வேற எதனாச்சும் சொல்லிட்டுப் போங்க!"

"இன்னைக்கு இது போதும். அடுத்த தடவை வரும் போது, உலகத்துல இருக்குற எல்லா மொழிகளும் எப்படி, எந்த எந்த ஒலிகள்ல இருந்து வந்ததுன்னு சொல்லுறேன். இப்பத் தூங்கு!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

9/05/2008

கனவில் கவி காளமேகம் - 5

வணக்கம்! வழக்கம் போல கவி காளமேகம் இன்னைக்கும் வந்து நலம் விசாரிச்சுட்டு, அவரோட வேலையக் காமிக்க ஆரம்பிச்சாரு. நாம,

"அப்பிச்சி! சித்த இருங்க. நீங்க வேறெதுவும் இன்னைக்கு கேக்கவும் வேணாம், சொல்லவும் வேணாம்!". அவுரு,

"என்னடா பேராண்டி, என்ன ஆச்சு? உனக்கேதும் பிரச்சினையா?"

"அட, அதெல்லாம் ஒண்ணும் இல்ல அப்பிச்சி. அன்னைக்கு நீங்க சொன்னதுல பாதி மறந்து போச்சு. அதச் சொல்லுங்க மறுக்கா இன்னொரு தடவை."

"அட, அதுக்கேன் இப்ப அலுத்துக்கற, சொல்லுறேன் கேட்டுக்க"

இப்ப அவரு சொல்லி, நாம போன பதிவுல பதியாம விட்ட ஓரெழுத்து சொல்லுகளை கீழ குடுத்து இருக்கறன் பாருங்............

நா, நீ, நே, நை, நோ

நா: நாக்கு, தீயின் சுவாலை
நீ: நீ
நை: வருந்து, இகழ்ச்சி
நோ: நோவு, துன்பம், வலி

கா, கூ, கை, கோ

கா :சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
கூ: பூமி, ஏவல், கூழ், கூவு
கை: உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்
கோ: வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

வா, வீ, வை, வெ

வா: வருகை
வீ: மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு
வை: வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
வெ: வவ்வுதல்

சா, சீ, சே, சோ

சா: சாதல், சோர்தல், பேய், மரணம்
சீ: வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை
சே: சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்
சோ: மதில், அரண்

யா

யா: ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்

நொ

நொ: வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

து

து: உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்



(......கனவுல இன்னும் வருவார்......)

9/03/2008

கனவில் கவி காளமேகம் - 4

வணக்கம்! நாம எதிர்பார்த்தது மாதிரியே கவி காளமேகம் இன்னைக்கும் கனவுல வந்து, என்னடா பேரான்டி நல்ல சுகமானு விசாரிச்சுட்டு, ஓரெழுத்துச் சொற்கள எல்லாம் சொல்லுடான்னாரு. "போங்க தாத்தா, உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. நீங்களே சொல்லுங்க!"ன்னு நாஞ்சொல்ல அவரு சொல்ல ஆரம்பிச்சாரு.... சொல்லிகிட்டே இருக்காரு... ஆனா பாருங்க, எனக்கு பாதியிலயே கனவு கலைஞ்சு போச்சு. எனக்கு ஞாபகம் இருக்குறத கீழ குடுத்து இருக்குறேன். மிச்சத்தை அவரு அடுத்த தடவை வரும் போது கேட்டு சொல்லுறேன்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
ஆ -பசு, எருது, ஆச்சா மரம்
ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
ஊ -இறைச்சி, உணவு, விகுதி
ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

மா, மீ, மூ, மே, மை, மோ
மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்
மோ -முகர்தல்


தா, தீ, தூ, தே, தை
தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை
தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு
தே -கடவுள்
தை -தமிழ் மாதம், தையல், திங்கள்


பா, பூ, பே, பை, போ
பா -அழகு, பாட்டு, நிழல்
பூ -மலர், சூதகம்
பே -அச்சம், நுரை, வேகம்
பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
போ -செல்

(......கனவுல இன்னும் வருவார்......)

9/01/2008

கனவில் கவி காளமேகம் - 3

வணக்கம்! ரெண்டு மூணு நாளா நம்ம கனவுல வராத கவி காளமேகம், இன்னைக்கு வந்தாருங்க. வந்தவரு, வழக்கம் போல நலம் விசாரிச்சுட்டு பேரனுக்கு ஆப்பு வெக்க ஆரம்பிச்சுட்டாரு. அதை அப்படியே உங்களுக்குக் கீழ குடுத்து இருக்குறேன்.

"பேராண்டி, உணர்வும் உணர்ச்சியும் ஒன்னா, வேற வேறயா?"

"எனக்கு இது தெரியுமே? வேற வேற!"

"அப்படியா? விபரமா சொல்லு பாப்போம்"

"உணர்வு வந்து உடல் ரீதியா நடக்குறது. உணர்ச்சிங்கிறது மனசு சம்பந்தப்பட்டது. சரியா?"

"சரியாச் சொன்னடா பேராண்டி! உணர்வுகள்னா என்ன, என்ன?"

"வாய், கண், மூக்கு, காது, உடல் வழியா ஏற்பாடுற உணர்வுகள்தான்!"

"அப்ப உணர்ச்சிகள்?"

"நீங்களே சொல்லுங்க"

"நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகைன்னு ஆக மொத்தம் எட்டு"

"இளிவரல், மருட்கை இந்த ரெண்டும் வெளங்கலை!"

"அப்படிக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ! இளிவரல்னா வருத்தம். மருட்கைனா பெருமை!! இப்ப புரியுதா?"

"புரியுது தாத்தா!"

"இப்படி, மனசுல ஏற்பாடுற உணர்ச்சிகளை உடம்புல காமிக்கறதை மெய்ப்பாடுன்னும் சொல்லுவாங்க. "

"நீங்க, எட்டுதான் சொன்னீங்க. அப்ப நவரசம்னு சொல்லுறாங்குளே அது?"

"அடே, நாங்க இந்த எட்டுல ஒன்னு ஒன்னுக்கும் நாலு உட்பிரிவுன்னு மொத்தம் முப்பத்து ரெண்டு வகை உணர்ச்சிகளை எங்க காலத்துல வெச்சி இருந்தோம். அது பின்னாடி ஒன்பது வகையா சுருக்கி இருக்காங்க. அந்த ஒன்பதுதான், சிரிப்பு, அழுகை, ஏளனம், வியப்பு, பயம், வீரம், மகிழ்ச்சி, கோபம், சாந்தம்ங்றது."

கவி காளமேகம் இன்னைக்கு கனவுல வந்து இதைத்தாங்க "பட்"டுனு வந்து "பட்"டுனு சொல்லிட்டுப் போய்ட்டாரு. நாளைக்கும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

8/27/2008

கனவில் கவி காளமேகம் - 2

வணக்கம்! நாம எதிர்பார்த்தது மாதிரியே கவி காளமேகம் இன்னைக்கும் கனவுல வந்து, என்னடா பேரான்டி நல்ல சுகமானு விசாரிச்சுட்டு, "உணவு உட்கொள்ளுற முறைகள் என்னென்ன?" னு கேட்டாரு. "நேத்துதான் என்னால பதில் சொல்ல முடியலை. இதுக்கு எனக்கு பதில் தெரியுமே! உண்ணுவது, குடிப்பது!!"ன்னு சொன்னேன். அவரு, "அட, எனக்குத் தெரியாதா, நீ ஒரு அரை வேக்காடு"ன்னு சொல்லிட்டு "கட கட"ன்னு சிரிச்சாரு. நமக்கு நொம்ப தர்ம சங்கடமாப் போச்சு. அப்புறம் அவரே சொன்னாரு, "உண்டல், தின்றல், நக்கல், பருகல்னு நாலு விதம் இருக்குடா பேராண்டி. இந்த நாலு வகைய, இன்னும் குறிப்பிட்டு சொல்லணும்னா, அதை பனிரெண்டு வகையா பிரிக்கலாம்"னு. நாம, "சரி தாத்தா! நீங்களே அதைப் புரியும் படியா சொல்லுங்க!"ன்னு கேக்க அவரு சொன்னதிலிருந்து:

உண்டல்: பசியாற, ருசித்துப் புசிப்பது. காலை உணவு உண்டேன்.


தின்றல்: தின்னுவது, கொஞ்சமா ஆற அமர அவகாசத்தில் உட்கொள்வது. மொட்டுக் கடலை தின்றேன்.

நக்குதல்: நாக்கால் நக்கி உட்கொள்வது. தேன் நக்கியது நினைவுக்கு வந்தது.

பருகல்: திரவ உணவை சிறுக உட்கொள்வது. தேநீர் பருகினேன்.

அருந்துதல்: மிகச்சிறிய அளவு உட்கொள்வது. மது அருந்தினேன்.

உறிஞ்சுதல்: வாயைக் குவித்து திரவ உணவை ஈர்த்துக் குடிப்பது. சோறு உண்ட பிறகு தட்டில் மீதம் இருந்த மோரை உறிஞ்சினேன்.

குடித்தல்: திரவ உணவை பசி நீங்க சிறிது சிறிதாக உட்கொள்வது. கூழ் குடித்தேன். கம்பங்கஞ்சி குடித்தேன்.

துய்த்தல்: சுவைத்து மகிழ்ந்து உட்கொள்வது. அவள் அன்பில் கலந்து கொடுத்த அவலைத் துய்த்தேன்.

நுங்கல்: இருந்த திரவத்தை ஒரே எடுப்பில் உறிஞ்சுவது. அச்சோபாத்திர இளநீரை நுங்கியதில் இன்பம் கொண்டேன்.

மாந்தல்: தீராத வேட்கையுடன் "மட மட"வென உட்கொள்வது. தாகவேட்கையில் குடத்து மோர் முழுதும் எனது மாந்தலில் தீர்ந்து போனது.


மெல்லல்: திண்ணமாக(கடுமை) இருக்கும் பொருளைப் பல்லால் கடித்து துவைத்து உட்கொள்வது. கொப்புத்தேங்காயை மெல்லுவதில் பல்லின் வலிமை கூடியது.

விழுங்கல்: பல் மற்றும் நாக்கிற்குப் படாமல் தொண்டை வழியாக உட்கொள்வது. தாத்தா கொடுக்கும் இலைச்சாறை விழுங்க ஏனிந்தத் தயக்கம்?

இதாங்க சொன்னாரு. எனக்கு இப்பத்தாங்க புரியுது, ஏன் தமிழ் செம்மொழின்னு. ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமா குறிப்பிட்டுச் சொல்ல முடியுது பாத்தீங்களா? எதுக்கும் கவி காளமேகம் நாளைக்கும் வந்தா நல்லா இருக்கும். கனவுல அவரு வருவார்னு நம்புவோம். நம்பிக்கைதான வாழ்க்கையே?!


(......கனவுல இன்னும் வருவார்......)

8/26/2008

கனவில் கவி காளமேகம் - 1

கவி காளமேகம் எழுதி வச்ச பாட்டுகள், செஞ்ச குசும்புகளைப் படிச்ச நாம, அவரோட தாக்கத்துல பாட்டு எழுதும் முயற்சி, "கவி காளமேகத்தின் தாக்கம்"ன்ற தலைப்புல போய்ட்டு இருக்கு. அந்த தாக்கத்துலயே தினமும் நித்திரை கொள்ளப் போறோம் பாருங்க. அவரு கனவுலயும் வந்து எதாவது சொல்லிட்டுப் போறாரு. அதான், அவரு சொல்லிட்டுப் போறதை பதிவாப் போட ஆரம்பிச்சிட்டோம்.

மொதல்ல கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை, விரிவுரை, பொருளுரைன்னு சொல்லுறாங்குளே பழமைபேசி, உமக்கு அதுகளுக்கு அர்த்தம் தெரியுமானு கேட்டாரு. நாம அப்படியே கனவுலயும் கூட விட்டத்தைப் பாத்தோம். அப்புறம் அவரே சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. அவரு சொன்னதுல இருந்து:

பதவுரை: செய்யுள்ல வர்ற எல்லா சொல்லுகளுக்கும் அதுக்கு உண்டான அர்த்தத்தை தர வேணும். எழுதறதுக்கு வாகா, எப்படி வேணுன்னாலும் எழுதிக்கலாம்.
பொழிப்புரை: செய்யுள்ல வர்ற எல்லா சொல்லுகளுக்கும் அர்த்தம் தர வேணும். அதே சமயத்துல வரிசையும் மாறக் கூடாதாம்.
கருத்துரை: எல்லா சொல்லுகளுக்கும் அர்த்தம், ஒண்ணுக்கு ஒண்ணுங்ற அடிப்படைல தரத் தேவை இல்லை. வரிசையும் முக்கியம் இல்ல. ஆனா, செய்யுள்ல சொல்ல வந்ததை இரத்தினச் சுருக்கமா சொல்ல வேணும்.
அகலவுரை: இதை விரிவுரைன்னும் சொல்லுவாங்க. பொழிப்புரை, பொருளுரை கூடவே, விரிவா தகுந்த கதை, உதாரணம், இப்படி கூடுதலா விசயங்களை சேத்து பல தகவல்களோட விளக்கமா சொல்லுறது.

பொருளுரை: இது எங்க காலத்துல இல்லடா! உங்க காலத்துல வந்ததுடா பேராண்டி!! நீங்களா எதையோ சொல்லிட்டுத் திரியறீங்க. உன்னை மாதிரி ஒரு அரை வேக்காடு சொன்னதுன்னு சொன்னாரு, "இது வந்து கிட்டத்தட்ட கருத்துரையேதான். ஆனா, கொஞ்சம் கூடுதலா சொல்லுகளை சொல்லி அதுக்கு உண்டான அர்த்தத்தையும் சேத்துக்கலாம். நாம பெரும்பாலும் பாக்குறது, செய்யுள், பொழிப்புரை, அப்புறம் கடைசியா பொருளுரை"ன்னு.

கவி காளமேகம் இன்னைக்கு கனவுல வந்து இதைத்தாங்க "பட்"டுனு வந்து "பட்"டுனு சொல்லிட்டுப் போய்ட்டாரு. நாளைக்கும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)