10/30/2008

தமிங்கில அகராதியிலிருந்து..... 3

வணக்கம். எல்லார்க்கும் வாசகர் விருப்பம் பழமைபேசி எழுதறாரு, நமக்கு ஒன்னும் எழுதலையேன்னு நண்பர் மகேசு நினைக்கலாம். நினைக்காமலும் இருக்கலாம். ஆனாலும் பாருங்க, நாம எழுதறதுக்கு அவர் பேரை இழுத்துதானே ஆகணும். அவர் சமீபத்துலதான் திட்ட மேலாண்மை(project management)ல பட்டையம் வாங்கிட்டு வந்து இருக்காரு. அதுக்கு வாழ்த்துக்களை சொல்லிட்டு, அது சம்பந்தமா எனக்கு மனசுல தோணினதை பட்டியலிட்டு இருக்குறேன்.

மேனேஜ்மென்ட் - மேலாண்மை
ஆபரேசன் - பணி
ப்ராஜெக்ட் - திட்ட‌ம், படைப்பு
போர்ட்ஃபோலியோ - ஆக்க‌த்தொகுப்பு
டாஸ்க் - செய‌ல்
இன்டெக்ரேசன் மேனேஜ்மென்ட் - தொகுப்பு மேலாண்மை
ஸ்கோப் மேனேஜ்மென்ட் - வரைவு மேலாண்மை
டைம் மேனேஜ்மென்ட் - நிரல் மேலாண்மை
காஸ்ட் மேனேஜ்மென்ட் - செல‌வு மேலாண்மை
குவாலிட்டி மேனேஜ்மென்ட் - த‌ர‌க்க‌ட்டுப்பாட்டு மேலாண்மை
ஹ்யூமன் ரிஸோர்சு மேனேஜ்மென்ட் - ப‌ணியாள‌ர் மேலாண்மை
கம்யூனிகேசன் மேனேஜ்மென்ட் - த‌க‌வ‌ல் ப‌ராம‌ரிப்பு மேலாண்மை
ரிஸ்க் மேனேஜ்மென்ட் - இன்ன‌ல் மேலாண்மை
ப்ரொக்யூர்மென்ட் மேனேஜ்மென்ட - கொள்முதல் மேலாண்மை
ப்ளேனிங் - திட்டமிடுதல்
ப்ளான் - திட்டம்
எஸ்டிமேசன் - மதிப்பீடு
கன்ட்ரோல் - சீரமைப்பு, கட்டுப்பாடு
ரிப்போர்ட் - தரவுப் பட்டியல்
அனாலஸிஸ் - ஆய்வு
ஆடிட் - தணிக்கை
ரெகுலேசன் - ஒழுங்குமுறை
ஸ்கில் - திறன்
நாலெட்ஜ் - அறிவு
ப்ராஸஸ் - செய்முறை, ஆட்படுத்து, தொகு


நண்பர் மகேசு ஒரு தேர்ந்த மேலாளர், ஆகவே மேலாண்மை குறிச்ச நெளிவு சுழிவுகளை பதிவாப் போட்டாலும் போடலாம், போடாமலும் இருக்கலாம். அதுக்கு இந்தப் பதிவு உதவிகரமா இருந்தாலும் இருக்கலாம். கண்டிப்பா, இல்லாமையும் போகலாம். எதுக்கும் நாம பதியறதைப் பதிஞ்சு விடுவோம்.

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -2

கோவணத்துல காசு இருந்தா கோழி கூப்பிடப் பாட்டு வரும்!
இல்லாட்டியும் வரும் எங்களுக்கு!!

டேய், நக‌ருடா அந்தப் பக்கம்!




வாக்களியுங்கள் மக்களே, வாக்களியுங்க!

10/29/2008

அம்மினியும் பொன்னானும்......

கொங்குநாட்டுப் பிள்ளை, அன்பர் ராஜ நடராஜன் அவிங்களுக்கான வாசகர் விருப்பந்தானுங்க இன்னைக்கு நாம போடுற‌ பதிவு.

ஒரு நாள் பாருங்க, இராசக்கா பாளையம், இராச வாய்க்கால் போற வழில இருக்குற ஓட்டாங் குச்சிப் பள்ளத்துல ஒழிஞ்சிருந்து கஞ்சாக் குடிக்கறதுக்காக‌ ஒரு வயசுப் பொன்னான், பேரு தங்கவேலு, அங்க நின்னுட்டு இருக்குறான். அந்த சமயத்துல, வாய்க்காத் தண்ணி எடுத்துட்டுப் போறதுக்கு ஒரு வயசுப் பொண்ணு, பேரு சிவகாமி, அந்த வழியாப் போறா.

சிவகாமியப் பாத்த தங்கவேலுக்கு, இருப்பு கொள்ளல. சிவகாமி, நல்ல எடுப்பா, லட்சணமா இருக்குற பதனாறு வயசு அம்மினி. அப்படியே பேச்சுக் குடுத்து மடிக்கலாம்னு, தாகத்துக்கு தண்ணி கேக்குற மாதிரி வேலைய ஆரம்பிக்குறான் தங்கவேலு.

சிவகாமிக்கும், தங்கவேலன் மேல கொஞ்சம் இதுதான். அவனும் ஆள் நல்லா வாட்ட சாட்டமா இருப்பான். அவ மொகத்த நேராப் பாக்க முடியாம, ஒரு வெக்கத்துல குறுஞ் சிரிப்போட, வீட்டுக்கு வந்தியானா நல்ல குளுந்தண்ணி நாந்தாரேன்னு சொல்லி இராத்திரிக்கு வீட்டுப் பக்கம் வரச் சொல்லி கேட்டுக்குறா.

அவனும் இராத்திரி ஒம்பது, ஒம்பதரை வாக்குல அவுங்க வீடு இருக்குற வீதியில போயி காத்துகிட்டு இருக்குறான். சிவகாமிகூடப் பொறந்தது மொத்தம் ஏழு பேரு. இவதான் மூத்தவ. இவிங்க அம்மா இப்பவும் புள்ளத்தாச்சிதான், இப்ப பிரசவத்துக்காக அவிங்க அமுச்சி ஊரான சமுத்தூர்ல இருக்குறாங்க. இங்க இவதான் வீட்டப் பாத்துகுறது. இப்ப, ரெண்டு வயசான தன்னோட தம்பியத் தூங்க வெச்சிகிட்டு இருக்கா. ஆனா, அவந்தூங்குறான் இல்ல. இத‌ அவ‌னுக்குச் சொல்லுற‌துக்கு, அவ‌னைத் தூங்க‌ வெக்க‌ தாலாட்டுப் பாடுற‌ மாதிரி பாடி, அதுல‌ விச‌ய‌த்த‌ பொண்ணானுக்கு சொல்லுறா சிவ‌காமி.

இந்த சூழ்நிலையில தங்கவேலுவும், காதல் மயக்குத்துல வீதியில கெடந்து தவிக்குறான். இப்படியே வெடிஞ்சும் போகுது. இப்படி அவிங்களுக்குள்ள நடந்த பழமைகதான், இன்னைக்கு நாம சொல்லுற பாட்டு.


தங்கவேலு: ஓடற ஓட்டத்துல‌
ஓட்டாங்குச்சிப் பள்ளத்துல‌
கஞ்சாக் குடிக்கையில‌
கையூனி நிக்கையிலே
தங்கக் குடங்கொண்டு
தண்ணிக்குப் போற பொண்ணே
தங்கக் கையினாலே
தண்ணீருதான் குடுத்தா
ஆகாதோ?

சிவகாமி: வாய்க்காத் தண்ணியிலே
வண்டு வரும் தூசு வரும்
வீட்டுக்கு வந்தா நல்ல குளுந்
தண்ணியும் நாந்தருவேனே!

தங்கவேலு: வீடுந் தெரியாது வாசலுந் தெரியாது
வழியெனக்குத் தெரியாது, நான் அங்கயெப்படி
வருவேனடி வஞ்சிமலரே, வண்ணமயிலே?

சிவகாமி: ஒரு பத்தாஞ் செட்டி வீட்டோரம்
ரெண்டு தென்னம்பிள்ளை அடையாளம்
அதுக்கடியிலே ஒக்காந்திரு நான்வாரேன்!

தங்கவேலன் வந்த பொறகு:
பாலும் அடுப்புலதான்
பாலகனும் தொட்டிலிலேதான்
பால‌க‌னைப் பெத்தெடுத்த‌ எங்
க‌ப்ப‌னும் க‌ட்டிலிலேதான்
உன்ன‌ப் போக‌ச்சொன்னாப் பொல்லாப்பு
இருக்க‌ச் சொன்னா நிட்டூர‌ம்! (நிட்டூரம் - இடையூறு)

வெடிஞ்சதும் தங்கவேலன்:
கெழ‌க்கு வெளுத்தாச்சு
கீழ்வானம் கூடிப் போச்சு
க‌ண்ணாத்தா வாச‌லுலே
காத்திருந்து வீணாச்சு
இன்னாரு ம‌வ‌ளே!


அன்னைக்கு இதுதாங்க நடந்தது. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னு சேந்து இருப்பாங்கன்னும் நம்புவோம். சிறு வயசுப் புள்ளைக எங்கயோ நல்லா இருந்தாச் சரிதான். நாஞ்சொல்லுறதும் சரிதானுங்களே?!

ஆத்துத்தண்ணி வந்து சேரும், காலமும் கூடி வரும்

அந்த ஓட்டு மக்களே?!

சிரிங்க, சிரிச்சுகிட்டே இருங்க....

வாக்களியுங்கள் மக்களே, வாக்களியுங்க!

10/28/2008

நாள்மீன் (நட்சத்திரங்) களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள்...

அன்பர்களே, நாளைக்கு வேலைல சுளுக்கு எடுக்கப் போறதா முன் கூட்டியே சொல்லி இருக்காங்க. அதனால, நாளைக்கும் சேத்து இன்னைக்கே மேலதிகமா ஒரு பதிவைப் போட்டுட்டு, வேலையக் காப்பாத்துற வழியப் பாக்கலாம்னுதான் இந்த பதிவு.

பன்ணெண்டு இராசிகளையும் நல்ல தமிழ்ப் பேர்ல நாம பொழங்குறோம். ஆனாப் பாருங்க, நாள்மீன் (நட்சத்திரம்)களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள், அதாவது அசுவனியில இருந்து ரேவதி வரைக்கும் இருந்து இருக்கு. அதுக‌ பொழக்கத்துல இல்லாமயே போயிடுச்சு. சரி, அந்த தமிழ்ப் பேருக என்னன்ன, மேல படீங்க.

புரவி
அடுப்பு
ஆரல்
சகடு
மான்றலை
மூதிரை
கழை
காற்குளம்
கட்செவி
கொடுநுகம்
கணை
உத்திரம்
கை
அறுவை
விளக்கு
முறம்
பனை
துளங்கொளி
குருகு
உடைகுளம்
கடைக்குளம்
முக்கோல்
காக்கை
செக்கு
நாழி
முரசு
தோணி

இந்த‌த் த‌க‌வ‌ல் நெச‌மான்னு எல்லாம் யோசிக்காதீங்க‌. முத‌ற்க் குலோத்துங்க‌ சோழ‌ன் கால‌த்து வ‌ர‌லாறுல‌ இருக்குங்க‌. வாய்ப்புக் கெட‌ச்சா, அந்த‌ப் புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ணும். நிறைய‌ த‌க‌வ‌ல் கெடைக்குமே?!


மொடாவ‌ வெளக்கி வை!
இருந்த‌தை எழுதி வை!!

கோயில்ல, நம்ம காதுல விழறதுல சில‌....

நாம எல்லாம் கோயிலுக்குப் போறோம், போன இடத்துல அதுன்னுவாங்க, இதுன்னுவாங்க. நாமளும் புரிஞ்சா மாதிரி தலைய ஆட்டிட்டு வந்துருவோம். என்ன செய்ய? திருப்பிக் கேட்டாக்க, அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க. சிற்பிக, கோவில்லயே புழங்கறவங்களுக்குத் தெரியும். அப்படி அவிங்ககிட்ட தெரிஞ்சிகிட்டதுல இருந்து தெரிஞ்ச, கிடைச்ச கொஞ்சத்தப் பாக்கலாங்க இப்ப.

1. அங்கணம் - தூணிடைவழி
2. சந்திரசீலா - நிலாப்படி
3. கண்டம் - கழுத்து
4. அதபத்மம் - கீழ்நோக்குத் தாமரை
5. ஊர்த்வ பத்மம் - மேனோக்குத் தாமரை
6. பிரதி - மேற்கம்பு
7. ஸ்தம்பம் - தூண்
8. குத்ய ஸ்தம்பம் - அரைத்தூண்
9. பத்ம பந்தம் - தாமரைக் கட்டு
10. மத்ய பந்தம் - இடைக்கட்டு
11. நாகபந்தம் - பாம்புப் படம்
12. மாலாஸ்தானம் - மாலையிடம்
13. கலசம் - பானை
14. தாடி - மூடி
15. கும்பம் - குடம்
16. தரங்கம் - அலை
17. கோஷ்டம் - மாடம்
18. லலாட பிம்பம் - நெற்றி வடிவம்
19. உத்தரம் - விட்டம்
20. கபோதம் - கூரை நீட்சி
21. ஹம்சமாலா - வாத்துவரி
22. ஹாரம் - மாலை
23. ஹாராந்தரம் - மாலை இடைவெளி
24. அர்பிதம் - ஒட்டிய மாலை
25. அனர்பிதம் - விலகிய மாலை
26. மஹா நாஸிகை - பெருஞ்சாளரம்
27. அல்ப நாஸிகை - சிறு சாளரம்
28. சூத்ர நாஸிகை - குறுஞ் சாளரம்
29. அரமியம் - தளச்சுவர்
30. விமானம் - இறையகம்

31. கர்ப்பக்ருஹம் - கருவறை
32. த்வஜஸ்தம்பம் - கொடித்தூண்
33. த்வாரபாலகர் - வாயிற்காப்போர்

மேலதிகமா, உஙளுக்குத் தெரிஞ்சதையும் சொல்லுங்க. சேத்துக்குவோம்!



தெரியாக் கொறை, அழுதாத் தீருமா?

10/27/2008

அய்ய‌, சித்த‌ வந்து சொல்லிட்டுப் போங்க....

1. கடலுல கலக்குறது என்ன, கரையோரம் போறது என்ன? நண்டு

2. செடிய முறிக்கிறது என்ன, செடியோரம் போறது என்ன? ஆடு

3. திடுதிடுன்னு மழபேய‌,
திட்டெல்லாம் கரஞ்சோட‌
நாலு ராசக்கா, நனையாம வாராக,
அவுக யாரு? பசு மடி

4.தச்சு தச்சா மரம், தச்சன் அடியாமரம்,
பாசிபுடியா மரம், பயபுள்ளைக ஏறாமரம்!
அது என்ன மரம்? வாழை மரம்

5. குடுத்துட்டு குடுத்துட்டு
குத்தவைக்கும் கூதாரிப்பய புள்ளை!

அது என்ன? தண்ணிச் செம்பு

மக்களே, இன்னைக்கு இதான் நம்ப பதிவு. ஒரே வேலை, மெனக்கெட முடியல! நீங்க, உங்க பதிலுகளப் போட்டுத் தாக்குங்க.... நான் என்னோடதை நாளைக்குப் பதியுறேன்.

திங்குறவன் திங்க,
திருப்பாலைக் குடியாதவன்
தெண்டங் குடுத்தானாம்!

நீங்க ஓட்டுப் போட்டா, நான் வேண்டாம்னா சொல்லுவேன்?

10/26/2008

பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

இந்தப் பாட்டு, ஒரு வாசகர் விருப்பப் பாட்டுங்க. நம்ம வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன் அவிங்களோட விருப்பப் பாடல்.

பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

கருத்தபுள்ள முழிசுருட்டி
குளத்துக்குள்ள ஆள்பகட்டி
கொழந்தப்பய நான் வருவேன்
கொண்டணைக்க வேணுமடி
சடசடன்னு மழைபொழிய‌
சத்தத்தோட இடி இடிக்க‌
கொங்காடிபோட்டு நான்வ‌ருவேன்
கொண‌ம‌யிலே நீயிருக்க‌வேணும்!

ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

வ‌ட்ட‌ப்பொட்டு வெக்காத‌டி
குறுகுறுன்னு பாக்காத‌டி
காயில‌யும் ந‌ல்ல‌காயாம்
காட்ட‌மான‌ முருங்க‌க் காயாம்
அந்த‌ முருங்க‌க்காயத் தின்னுப்பிட்டு
ம‌ன‌சுலென்னை வெச்சுகிட்டு
த‌ங்க‌ம‌யிலே நீயிருக்க‌வேணும்!

ஆத்துப் பக்கம் போவமா,
அந்த வட்டப் பாறையோரம் போவமா?
இல்ல, பலபேருபாக்க
நாம கோயப்பக்கம் போவமா??
அட இன்னாரு பெத்த மவளே,
சிரிச்சிப் பேசி, சிணுங்கி நீயும்
இந்தப் பாவி மனசக் கெறங்க வெக்கிறியே?!

குறுங்கட்டலு, வெறுங்கட்டலாவே இருக்க முடியுமா?

அந்த ஓட்டு மக்களே?

10/25/2008

மஞ்சலவுக்க தாரேன்!

மஞ்சலவுக்க தாரேன்
மாருக்கேத்த சேலதாரேன்
கொஞ்ச லவுக்கதாரேன் - இப்ப‌
மச்சான்னு கூப்புடுடி!

அமராவதி ஆத்தங் கரையோரம்
அரும்பரும்பா வெத்திலையாம்
போட்டாச் செவக்குதில்லே
பூமயிலே ஒம்மயக்கம்
உழுத புழுதிக்குள்ள‌
உப்புக் கொண்டு போறபுள்ள‌
உப்புவெலை சொன்னியின்னா
கொப்புப் பண்ணி போட்டுருவேன்
ஏருக்கு முன்னால‌
எருப்பொருக்கி போற குட்டி
மாருக்கு முன்னால ரெண்டு
மயிலிருந்து கூவுதடி!

மஞ்சலவுக்க தாரேன்
மாருக்கேத்த சேலதாரேன்
கொஞ்ச லவுக்கதாரேன் - இப்ப‌
மச்சான்னு கூப்புடுடி!

--------------------------------------------------

தந்தனத்தான் தோப்புல‌,
தயிரு விக்கிற பொம்பளே,
தயிரு போனா மயிரு போச்சு,
கிட்ட வாடி எம்மயிலே!


நான் கோவனத்தோட பொறந்திருந்தா, அவ‌
கொசுவத்தோட பொறந்து இருப்பால்ல?!

10/24/2008

குரங்கே, புலிகளைச் சீண்டாதே!




வாக்களியுங்கள் மக்களே!

துயரம்டா, இது துயரம்!

வா வா கதிரவா,
தமிழன் நிலையத் தெரிஞ்சுக்க‌,
வஞ்சகர் அதிகம் உண்டு
நோக்கம் பாத்து நடந்துக்க!

தூங்கிக்கிடந்த உசுரெல்லாம்
துள்ளிக் குதிக்கும் காலையிலே
சோந்து கெடந்த கைகளெல்லாம்
துணிந்து எழும் பல வேளையிலே
ஒலகத்தை நெனச்சாலே
ஒடம்பு நடுங்குது!
ஊருகெட்ட கேட்டைப் பாத்து
நீதி பதுங்குது!
உருவங்க மனுசங்க‌போல‌
ஓடி அலையுது நம்ம‌
தமிழ் நாட்டுல!
உருவங்க மனுசங்க‌போல‌
ஓடி அலையுது நம்ம‌
தமிழ் நாட்டுல!!

நாடு முன்னேற பலபேரு
நல்லதொண்டு செய்யுறதுண்டு!
அதைக் கெடுக்கச் சிலபேரு
நாச வேலையும் செய்யுறதுமுண்டு!!
ஓடெடுத்தாலும் சிலபேரு,
திருவோடு எடுத்தாலும் சிலபேரு,
ஒத்துமையா இருப்பதில்லை; இந்த‌
உண்மைய‌த் தெரிஞ்சும் - நீ
ஒருத்த‌ரையும் வெறுப்ப‌தில்லை!

வா வா கதிரவா,
தமிழன் நிலையத் தெரிஞ்சுக்க‌,
வஞ்சகர் அதிகம் உண்டு
நோக்கம் பாத்து நடந்துக்க!


ஒரு ஆதங்கத்தோட‌ பேசுறது தப்பா, நாட்டுல? என்னவோ போங்க!!

10/23/2008

ஊரான் ஊரான் தோட்டத்துல‌...

ஊரான் ஊரான் தோட்டத்துல‌
ஊரான் ஊரான் தோட்டத்துல‌
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டான் வெள்ளக்காரன்
வெள்ளக்காரன் பணம் செல்லப் பணம்
வேடிக்கை பாத்தாலும் வெள்ளிப் பணம்
வெள்ளிப் பணத்துக்கு ஆசப்பட்டு
வேசம்
கொலஞ்சாளாம் பொன்னுத்தாயி!
வேலும் வாளும் தீட்டுவோம்!!
வெள்ளக்காரனை விரட்டி விரட்டி ஓட்டுவோம்


பல்லுக்குப் பத்தாத வெத்தலையும்
படுக்கைக்குப் பத்தாத ஆம்பளையும்
இருந்தென்ன? போயென்ன??

10/22/2008

"தம்பிடி", "வராகன்"ன்னா என்ன?

வணக்கம்! வட்டார வழக்குலயும், பேச்சு வழக்குலயும் பலதும் சொல்லிப் பேசுவோம். அந்த சொல்லுக்கு உண்டான அர்த்தம் தெரிஞ்சி இருக்கும், ஆனா அதனோட பின்னணி சரிவரத் தெரியாமலே போயிடுது. அதான், நாம இது குறிச்சு நமக்குத் தெரிஞ்ச தகவல்களைப் பல பதிவுகளாப் போட்டு இருக்கோம். அதுகளோட தொடுப்புக இதோ:

'கூப்பிடு தூரம்' என்றால் என்ன?
"கடுதாசி"ன்னா என்ன?
"சத்தக்கூலி"ன்னா என்ன?
"ஒறம்பு"ன்னா என்ன?
"இம்மி"ன்னா என்ன?
"மாமாங்கம்"னா என்ன?
"முக்கோடி", "யுகம்"ன்னா என்ன?

இன்னைக்கு நாம பாக்கப் போறது வந்துங்க, தம்பிடி, சல்லி இந்த மாதிரியான நாணய வகையறாக்கள். நீங்க பேச்சு வழக்குல, சொல்லக் கேட்டு இருப்பீங்க, ஒரு தம்பிடி கூடத் தர மாட்டேன், அவன் ஒரு சல்லிப் பய மவன் இப்படின்னு எல்லாம். அதுகளுக்கு ஒரு விளக்கம். அவ்வளவுதேன்!

'சல்லிப் பய', 'சல்லித்தனம்'ங்றது எல்லாம், சின்னத்தனம் அல்லது சில்லறைத் தனத்தைக் குறிக்குது. இதுல இருந்தே நாம தெரிஞ்சிகிடலாம் 'சல்லி'ங்றது ஒரு சிறு நாணயம்ன்னு.

ஒரு த‌ம்பிடி கூட‌க் குடுக்க‌ மாட்டேன்னா, ஒரு கைப்பிடி அல்ல‌து கொஞ்ச‌மும் த‌ர‌ மாட்டேன்னு அர்த்த‌ம் எடுத்துக்குவோம். ஆனா, த‌ம்பிடிங்ற‌தும் ஒரு சிறு நாண‌ய‌ம் பாருங்க‌.





ப‌ர‌ங்கிய‌ருங்க‌ வ‌ர‌ ஆர‌ம்பிச்ச‌தும், ரூப்யா, அந்த‌ ரூப்யாங்றது மாறி, அதாவ‌து இன்னைக்கு நாம‌ சொல்லுற‌ ரூபாய் வ‌ந்துச்சு. ரூப்யான்னா, அழ‌கான‌ வெள்ளை நிற‌ம், அப்ப‌டிப்ப‌ட்ட‌ வெள்ளின்னு அர்த்த‌மாம் அவிங்க‌ மொழில‌.

இதுவே, ப‌ழ‌ங்கால‌த்துல‌ ந‌ம்ம‌ பெரிய‌வ‌ங்க‌ செப்புக் காசு, வெள்ளிக்காசு, பொற்க் காசுன்னும் பொழ‌ங்கிட்டு வ‌ந்து இருக்காங்க‌. வராகன், மோஹர்ங்ற மொஹரா, பகோடா எல்லாம் த‌ங்க‌க் காசுக‌ தான். இதுல வராகங்றது தமிழ் மொழில, மத்தது வட மொழில. ஆயிர‌ம் வ‌ராக‌ன்ன்னு சொன்னா, ஆயிர‌ம் த‌ங்க‌க் காசுக‌ அப்ப‌, இல்லீங்ளா!

ப‌ல‌ பேர‌ர‌சு, சிற்ற‌ர‌சு கொண்ட‌து தானே இந்தியா. அங்க‌ங்க‌ ஒவ்வொரு வ‌கையான‌ நாண‌ய‌ப் பொழ‌க்க‌ம் இருந்து இருக்கு. பின்னாடி வ‌ந்த‌வ‌ங்க‌, அதை எல்லாம் ஒருங்கிணைச்சாங்க‌. அப்ப‌டித்தான், செப்புக் காசை, ட‌ப்பு (dubbu)ன்னு சொன்னான் ட‌ச்சுக்கார‌ன், அவ‌ன் வ‌ந்து ஆண்ட‌ இட‌த்துல‌. இப்படி ஏற்கனவே புழங்கிட்டு இருந்த 'பணம்', 'துட்டு', 'காசு', 'தம்பிடி', 'சல்லி' ங்ற சிறு நாணயங்களை ரூபாயோட இணைச்சாங்க.



ஒரு ரூபாய் - பதினாறு அணா
ஒரு அணா - ஆறு பைசா
ஒரு பணம் - ரெண்டு அணா
ஒரு அணா - மூனு துட்டு
ஒரு துட்டு - ரெண்டு பைசா
பனிரெண்டு தம்பிடி - ஒரு அணா
ஒரு சல்லி - கால்துட்டு
காலணா - முக்கால் துட்டு
அரையணா - ஒன்றரைத் துட்டு
ஒரு அணா - நான்கு காலணா (அ) மாகாணி ரூபாய்
இரண்டு அணா - அரைக்கால் ரூபாய்
நாலணா - கால் ரூபாய்
எட்டு அணா - அரை ரூபாய்
கழஞ்சு - ஒரு பொற்காசு (வராகன்)

வராகன் எடை - 3.63 கிராம்
சக்கரம் - ஒரு வெள்ளிக் காசு
பதினாறு சக்கரம் - ஒரு வராகன்
சக்கரம் - பதினாறு காசு (செப்பு)



---------------வராகன்-----------------------

“சல்லிக்கட்டு” என்பதுதான் சரியான வார்த்தை. சல்லிக்கட்டு = சல்லி+கட்டு. சல்லி என்பது காசு என்று பொருள்படும். கட்டு என்பது பொட்டளம் அல்லது பை என்று பொருள்படும். சல்லிக்கட்டு என்பதன் பொருள் காசு பை என்பதாகும். கொம்பில் இருக்கும் சல்லிப் பையை எடுக்கும் விளையாட்டு என்பதால், அது சல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்பது அல்ல.


பணத்தை எண்ணி வை! காசைத் தெரிஞ்சி வை!!

மக்களே, அந்த ஓட்டு?! பாத்துப் போடுங்க மக்களே...!!

10/21/2008

கனவில் கவி காளமேகம் - 7

ஆமாங்க, நேத்தைக்கும் வழக்கம் போல கவி காளமேகம் உறுமிகினே நம்ம கனவுல வந்தாருங்க. நாமதான், இந்தப் பொருளாதார நெருக்கடியில சிக்கி ஒரு கொழப்பத்துல இருக்கமே. அவரு அதை எப்படித்தான் கண்டு புடிச்சாரோ தெரியலை,

"என்னடா பேராண்டி, என்ன? மாய் மாலத்துல மாட்டிகிட்டு மெரள்ற மாதிரித் தெரியுது??"

"ஆமாங்க அப்பிச்சி! எதுக்கும் நீங்க கேக்குறதுக்கு முன்னாடி, நானே கேக்கறேன் இன்னைக்கு! இல்லாட்டி நீங்க எதனாக் கேட்டு உசுர எடுப்பீங்க?!"


"சரி, ஆகட்டுங் கேளு!"

"ஆமா அப்பிச்சி, உங்க காலத்துல எல்லாம் எப்பிடி இந்தப் பணம், மொதலீடு இதெல்லாத்தையும் பராமரிப்பு செய்தீங்க, அதைச் சொல்லுங்களேன் எனக்கு!"

"அடேய், நீ இன்னைக்கு தாண்டா உருப்படியாக் கேள்வி கேட்டு இருக்குற?! எல்லாம், பட்டாத்தானடா உங்களுக்கு ஞானம் பொறக்குது?!"

"என்ன‌ ப‌ண்ணுற‌துங்க‌ அப்பிச்சி, ச‌ரி நீங்க‌ சொல்லுங்க‌!"

"நாங்கள்ளெல்லாம் கொஞ்ச‌மாப் ப‌ண‌த்தைக் கையில‌ வெச்சுக்குவோம். அதுவும் பாத்தியானா, இந்த‌ நெல‌வ‌றைக்கு மேல‌ இருக்குற‌ பொந்துக‌, உப்பும் புளியும் பொட்டு வெக்கிற‌ மொடாவுக‌, கொஞ்ச‌ நிறைய‌ன்னா மொள‌காத்தூள் மொடாவுல‌ கூட‌ப் போட்டு வெப்பொம்."

"அப்ப‌ ச‌ம்பாதிச்சு மிச்ச‌ம் மீதி ஆவுற‌து எல்லாம்?"

"எல்லாமே, பொருளாத்தான்டா வெச்சுக்குவோம். சும்மா,அறுவ‌து மூட்டை இராகி, சோள‌ம், நெல்லுன்னு வ‌ச‌திக்குத் த‌குந்த‌ மாதிரி இருக்கும்டா! எல்லாமே, தானிய‌ம், ஊடு, வாச‌ல், ப‌ண‌ட‌ங் க‌ன்னுக‌, கோழி சாவ‌ல்ன்னு நாலும் க‌ல‌ந்து வெச்சிருப்போம். இந்த‌க் காயித‌த்தை ந‌ம்புற‌தெல்லாம் உங்க‌ கால‌த்துல‌ வ‌ந்த‌துதாண்டா பேராண்டி."

"அப்ப‌, சாமான் செட்டு வாங்க‌னுமின்னா?"

"ஊட்டுல இருக்குற‌ தானிய‌ம், ப‌ண்ட‌ங் க‌ன்னுல‌ எதோ ஒன்னு, ஆடோ, கோழியோ இப்ப‌டி எத‌னாச்சும் கொஞ்ச‌த்தை எடுத்துகிட்டு ச‌ந்தைக்குப் போவோம். அங்க‌ இதுக்கு ஒரு வெலை. அந்த‌ வெலைக்கு வேணுங்ற‌ சாமான் செட்டுக‌! பிர‌ச்சினை தீந்த‌து."

"அதெப்ப‌டி தாத்தா, ஒரு க‌டையில‌ விப்பீங்க‌...ஆனா, நீங்க‌ நாலு க‌டைக்குப் போக‌ணுமே. அப்ப‌, ரூவா?"

"ச‌ந்தைக்கு எல்லாம் ஒரு ஆளோ ரெண்டு ஆளோ இருப்பாங்க‌. அவிங்க‌ளை நாங்க‌, ச‌ந்தைப் ப‌ண்ணாடின்னு கூப்புடுவோம். அவ‌ரு வ‌ந்து காசு ப‌ண‌ம் சில்ல‌றை முறிச்சுக் குடுப்பாரு, எல்லா கணக்கு வழக்கையும் பாத்துகிடுவாரு. ஆனா, அத‌னால‌ அவ‌ருக்கு எந்த‌ லாப‌மும் இல்ல‌ பாத்துக்க‌. நாங்க‌, சுங்கம்(ச‌ந்தை வ‌ரி) இவ்வ‌ள‌வுன்னு க‌ட்டுவோம். அதுல‌ அவ‌ருக்கு பொழ‌ப்பு ந‌ட‌த்த‌ ஒரு கூலி. அவ்வ‌ள‌வுதான்!"

"ஆமா, கொண்டு போன‌ சாமான்ங்க‌ விக்க‌லைன்னா?"

"அட‌, இதென்ன‌ வெவ‌கார‌மா இருக்கு. சாய‌ந்த‌ர‌ம் மிச்ச‌ச் ச‌ந்தைல‌ ஏழை பாழைக‌ளுக்கு குடுத்துட்டு வ‌ந்திருவோம். மிச்ச‌ம் கொண்டு வ‌ந்தா ஊரு சிரிக்காது?"

"இப்ப‌டித்தான் இருந்தீங்ளா?"

"பின்ன‌? எல்லாமே அச‌ல்டா... பொருளுக்குப் பொருளு! உங்கிட்ட‌ நிற‌ய‌ப் பொருள் இருக்குதா, நீ முத‌லி. இல்லையா, கெட‌க்குது க‌ழுதை. உழைச்சுத் தின்னு. மாய் மால‌த்துக்கு இட‌ங் கெடையாது!"

"இப்பெல்லாம் அப்ப‌டி இல்லை அப்பிச்சி!"

"தெரியுந் தெரியும். எப்பப் பொருளே இல்லாம‌, அதுக்கு ஒரு தார‌த்தைக் (பணத்தைக்) கொண்டு வ‌ந்தீங்ளோ, அப்ப‌வே உங்க‌ பொருளாதார‌ம் வ‌லுவிருக்காதுன்னு தெரியுந் தெரியும்!"


"சரி, இன்னைக்கு வேற என்ன சொல்லப் போறீங்க?"

"இன்னைக்கு நீ மனசு சொகமில்லாம இருக்கே, அதனால நல்ல வார்த்தை நாலு சொல்லிட்டு நாங்கிளம்புறேன்,

பழைமைஎனும் பாதையிலே
பார்புதுமை மெருகேற்றி
உழைப்புக்கு வடிவேற்றி்
ஊர்வலமே போவாயோ!

மனிதம்என் றும்ஒன்று்
மதம்எல்லாம் சமமென்று
தொனிக்கின்ற பாட்டையிலே
தொடர்ந்தேநீ போவாயோ!!"



இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

10/20/2008

பிறழ்ந்த பழமொழிகள் - 3

நாம இதுக்கு முன்னாடி, இது சம்பந்தமா ரெண்டு பதிவுகளைப் போட்டோம். இன்னும் நீங்க அதுகளைப் படிக்கலையின்னா, ஒரு எட்டு போயிப் படிச்சுட்டு வாங்க! இதுதாங்க தொடுப்புக: பிறழ்ந்த பழமொழிகள்-1, பிறழ்ந்த பழமொழிகள்-2.

இன்னைக்கு நாம பாக்கப் போற பிறழ்ந்த பழமொழிகள்:

சனி நீராடு!

போக்கத்தவனுக்கு போலீசுக்காரன் வேலையும்,
வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலையும்,
வாட்ச்சத்தவனுக்கு வாட்ச்மேன் வேலையுமாம்!

தையல் சொல் கேளேல்!

சனி நீராடுன்னா, ஆம்பிளைங்க சனிக்கிழமை குளிக்கணும் இல்லைங்ளாம். சனின்னா குளிர்ந்த கிரகம், குளிர்ச்சி! அப்படியாக, இதுக்கு அர்த்தம், குளிர்ந்த தண்ணியில குளிங்றதுதானாம்.

போக்குக் கற்றவனுக்கு போலீசு வேலை, வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை, வாட்ச் பாக்கக் கற்றவனுக்கு வாட்ச்மேன் வேலைங்றது அர்த்தமாமுங்க.

தையல் சொல் கேளேல்ன்னா, பெண்கள் சொல்லுறதைக் கேட்டு நட அல்ல‌து ந‌ட‌க்காதேங்றது சரியான அர்த்தம் இல்லைங்ளாம். பெண்களை எட்டு பருவவகைப் பெண்களாப் பிரிச்சு வெச்சு இருந்தாங்ளாம் அந்தக் காலத்துல. அது என்னன்னா வந்து,

7 வ‌ய‌சு வ‌ரைக்கும் பேதை
8 லிருந்து 11 வ‌ய‌சு வ‌ரைக்கும் பெதும்பை
12 லிருந்து 13 வ‌ய‌சு வ‌ரைக்கும் மங்கை
14 லிருந்து 19 வ‌ய‌சு வ‌ரைக்கும் மடந்தை
20 லிருந்து 25 வ‌ய‌சு வ‌ரைக்கும் அரிவை
26 லிருந்து 31 வ‌ய‌சு வ‌ரைக்கும் தெரிவை
32 லிருந்து 40 வ‌ய‌சு வ‌ரைக்கும் பேரிளம்
40 க்கு மேல் இருப்பவர்கள் விருத்தை

இதுல‌ பாருங்க‌, ப‌தினோரு வ‌ய‌சு வ‌ரைக்குமான‌ ப‌ருவ‌ங்க‌ள், பேதை, பெதும்பை ரெண்டையும் சேத்து தைய‌ல்ன்னு சொன்னாங்க‌. அப்ப‌டியாக‌, தைய‌ல் ப‌ருவ‌த்துப் பெண்க‌ள் சிறு வ‌ய‌சுல‌ இருக்குற‌தால‌, அவிங்க‌ சொல்லுற‌த‌ ஆராயாம அப்ப‌டியே கேக்க‌ப் ப‌டாதுன்னு, ஔவைப் பாட்டி தைய‌ல் சொல் கேளேல்ன்னு சொல்லி வெச்சாங்க‌ளாம்.

தப்பாட்டம் ஆடுனாலும் தெரிஞ்சு ஆடுன்னானாம் ஆடுகத்தி!

வாக்களியுங்கள் மக்களே...., வாக்களியுங்க!

10/18/2008

பின் நவீனத்துவம் - அலசல்!

நண்பர் கூடுதுறை அவர்கள் பின் நவீனத்துவம் எனும் சொல்லை அறிமுகப் படுத்தினார். பின்னர் அது குறித்துத் தெரிந்து கொள்ள முற்பட்டபோது, பல தகவல்களைத் தெரிந்து கொள்ள நேரிட்டது.

அவரவர், அவரவர் வசதிக்கேற்ப இதற்கு விளக்கம் கொடுத்துக் கொள்கிறார்கள். அதற்கும் ஒரு படி மேலே சென்று, சர்ச்சைக்கு உரியவாறு பேசுபவர்கள், எழுதுபவர்களைக்கூட பின் நவீனத்துவவாதி என்கிறார்கள். இவற்றில், ஒரு விளக்கம் மட்டும் எனக்கு ஏற்பு உடையதாக இருந்தது. இதோ அந்த விளக்கம்,

"பின்நவீனத்துவம் ஓர் எதிர்க் கலாச்சாரம். நவீனமயப் படுத்தப்பட்ட சமூகங்களின் அனுபவங்களில் இருந்து உயிர்பெற்ற ஓர் எதிர்க் கலாச்சாரம். நவீனத்துவம் மனிதர்கள் மேல் செலுத்தும் நெருக்கடிகளுக்கு எதிரான கருத்தியல் மறுப்பு. அதன் முக்கியத் தளம் இலக்கியம் மற்றும் மானுட அறிவியக்கங்கள். அந்த நிலையில் பின் நவீனத்துவம் என்பது வட அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் மையம் கொண்ட கல்வித்துறைச் செயல்பாடு!"

இந்த இடத்தில், சுல்தான் பேட்டை இலக்குமி நாயக்கன் பாளையத்துப் பள்ளியில் எமக்குப் பாடம் பயிற்றுவித்த ஆசான் வேலப்ப நாயக்கன் பாளையம், ஜெயராமன் அவர்களுடைய நினைவுதான் வருகிறது. அவர் வேதியல் பாடத்துறைக்குத் தலைவர். நல்ல மனிதர். நாம் இருந்தது ஆண் மாணவர்கள் மட்டுமே இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு முதல் பிரிவில். அவர் எங்களுக்கு ஆங்கில ஆசிரியர். ஆனால், ஆங்கிலம் மட்டுமே கற்றுத் தருகிற சராசரி ஆசிரியர் அல்லர் அவர். வாழ்க்கைக்குத் தேவையான நல்ல பல சூட்சுமங்களை இளம் மாணவர்களிடத்திலே விதைக்கக் கூடியதில் திறம் வாய்ந்த்வர்.

இப்படி இருக்கையிலே, ஒரு நாள் ஆண் குறியைத் தெளிவாகக் கரும்பலகையில் வரைகிறார். வரைந்துவிட்டு, நுனித் தோல் பற்றிப் பேசுகிறார். காரணம், சிறு நீரும் இன்ன பிற மாசும் அங்கே தங்கி இருந்து, ஆரோக்கியம் பாதிக்கக் கூடும் என்கிறார். பின்னர், நீங்களனைவரும் கட்டாயம் அப்பகுதியை குளிக்கும்போதெல்லாம் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். உடனே நவீன‌வாதி முத்திரை குத்தப்பட்டது, அரசியல், தலைமை ஆசிரியர் விசாரணை, கூக்குரல்கள் எங்கும். ஆனால் அவரோ, "ஆம். நான் அது பற்றிப் பேசியது உண்மை!" என்றார். சிறிது காலம் சென்றது. குரல்கள் அடங்கியது.

வந்தது மழைக்காலம்! அந்தப் பள்ளியைச் சுற்றிலும் இருப்பது கிராமங்களும், மண் சாலைகளும். மாணவர்கள், அதே ஒன்பதாம் வகுப்பினுள் நுழைகிறார்கள். அதே ஆசான் ஜெயராமன் வருகிறார். அன்று ஆங்கிலத் தேர்வு நடக்க இருந்தது. இன்றைக்கு அது இல்லை என்கிறார். கோவில்களுக்கு நுழையும் முன் நாம் எப்படிக் கை கால் கழுவிவிட்டுச் செல்கிறோமோ, அப்படி வகுப்பினுள் நுழையும் முன்னும் இன்றையிலிருந்து கை, கால் கழுவி கழுவிட்டுத்தான் நுழைய வேண்டும் என்கிறார். காரணம், கால்நடையாகத்தான் பெரும்பாலும் மாணவர்கள் வருவது வழக்கம். ஆதலால், சேறும் சகதியும் இன்னபிற அசுத்தமும் வகுப்பு அறையினுள்.

அடுத்த நாள்! மாணவர்கள் தண்ணீர்க் குழாயடியில். இருப்பதோ, ஒரே ஒரு குழாய். ஆக, ஒரே அல்லோகலம்! கூடவே, சில மாணவர்கள் பிரார்த்தனைக்(prayer) கூட்டத்திற்குத் தாமதம். காரணம் அலசப் பட்டது. கோயில்களில் நுழையுமுன் அப்படியென்றால், பள்ளியிலும் அப்படியே இருக்க வேண்டுமா? அதே கூக்குரல்! அதே அரசியல், அதே விசாரணை!! முத்திரை மட்டும் வேறு, ஆம் இம்முறை பழமைவாதி என!!!

ஆனால், அதே ஆசான்! இரு வேறு முரணான முத்திரைகள்!! இது எப்படி? உண்மை என்ன?? பழமைவாதியுமில்லை, நவீனவாதியுமில்லை, அவர் ஒரு நவீன யதார்த்தவாதி!

நவீனம் எனபதே, பழமையில் மேம்பாட்டைக் கூட்டுவதால் வருவதுதானே?! பழமையைப் புறந்தள்ளிவிட்டு வருவது நவீனமாகுமா? ஒருக்காலும் ஆகிவிட முடியாது என்பது எம் தாழ்மையான எண்ணம். ஒரு வேளை, பழமையைக் கருத்தில் கொள்ளாமல் ஏதேனும் உயிர்த்தது என்றுச் சொன்னால், அவை முழுமையான ஒன்றாக இருக்கவே முடியாது. அதனால்தானே மேற்கத்திய நாட்டவன் இருப்பன‌ அலசுதல்(gap analysis) என்று ஒன்றை வைத்தான்.

உதாரணம், இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் ஒருவன் ஏற்கனவே இருக்கும் சக நாட்டவனின் அனுபவம், கருத்தறியாமல், ஒரு சில முடிவுகளை மேற்கொள்வது உண்டு. கேட்டால், இது நவீன யுகம். அப்ப‌டிச் செய்ப‌வ‌ன் ச‌ரியாக‌ச் செய்வ‌து என்ப‌து குறைவாக‌வே உள்ள‌து. அப்ப‌டியே அவ‌ன் சிற‌ப்பாக‌ச் செய்தாலும், எடுத்துக் கொண்ட‌ நேர‌ம் ம‌ற்றும் செல‌வு அதிக‌மாக‌வே இருக்கும். கார‌ண‌ம், மூதாதைய‌ர் அனைத்தும் அல‌சி ஆராய்ந்து, ந‌ல்ல‌ வ‌ழியை ந‌ம‌க்காக‌ விட்டுச் சென்று உள்ளார்க‌ள். அதைத்தான் நாங்க‌ள் இந்திய‌ ம‌ர‌பு(Desi Protocol) என்று சொல்கிறோம். அத‌னைச் ச‌ரிவ‌ர‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ன் புத்திசாலி என்ப‌து நித‌ர்ச‌ன‌ம்! அந்தப் பழமையில் மேம்பாடு காண்பது நவீனம்!! அந்த நவீனத்தின் வழு திருத்துவது பின் நவீனம்!!


கொசுறு: கொங்கு மண்டலத்தில் பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள். (உ‍-ம்: திண்ணையில ஒக்காந்து பழமை பேசிட்டு இருந்தேன்!) அதன் அடிப்படையில், அளவளாவி எனும் பொருளில் புனையப்பட்டதே, எம் புனைப் பெயரான பழமைபேசி. எனினும், பழமை பேசுகிறவன் என்கிற பொருள் கொள்வதிலும் எமக்கு மிக்க மகிழ்வே!


பசுவைக் கொன்றால், கன்று பிழைக்குமா?

தவுட்டுக்காசு!

பள்ளிகூடம்வுட்டு
நான் ஓடியாற‌,
அம்மா சொன்னா
ஆறுமணி வண்டிக்கு
ஊருக்குப் போடா
இன்னைக்கு அமுச்சி
ஊர்ல சிவராத்திரி!

ஊருக்கும் நான்வர‌
அமுச்சியும் தந்தா
ஒன்னேமுக்கா ரூவா
அதையுந்தானெடுத்து
கோயப்பக்கம் போனேன்
ஆசையா தவுட்டுக்காசு
நான் வெளையாட!!

ஊருசனம் கூடியிருக்க‌
கண்ணு சொழண்டது
கூட வெளையாடுற‌
கண்ணம்மாவை
எங்கயுங்காணமின்னு;
எங்க‌யின்னு கேட்டாக்க‌
அவிங்க‌ சொன்னாங்க‌,
அவ‌யினி வ‌ர‌மாட்டா!
பெரியமனுசி ஆயிட்டாடா!!!


தவுட்டுக்காசு: ‍‍ தவிடில் ஒரு பைசாக் காசுகளை மறைத்து, கூட்டிய தவிடை இரண்டாகப் பிரித்து, தனக்கு ஒரு பங்கெடுத்து, பின் அதில் இருக்கும் காசுகளை எடுத்துக் கொள்தல். சிவராத்திரி, ஏகாதசி போன்ற நாட்களில் இரவைக் கண்விழித்துக் கழிக்க விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று!

ஆடுன ஆட்டத்தைச் சொல்லி வை! குடுத்த கணைக்கை எழுதி வை!!

10/17/2008

பொடி வெச்சிப் பேசுற‌, நீ?

சின்ன வயசுல, பள்ளிக்கூடம் விடுமுறை விட்டாச்சுன்னா நாம மொதல்ல ஒரு விசாரணை நடத்துவோம், எங்க தோட்டம், அமுச்சியவிங்க தோட்டம், உடுமலை போடிபட்டியில் இருக்குற சின்னம்மா தோட்டம்ன்னு, சொந்தக்காரங்க தோட்டங்கள்ல என்ன என்ன வேலை நடந்துட்டு இருக்குன்னு. அதப் பொருத்துதான், நாம யார் வீட்டுக்குப் போறதுன்னு முடிவு பண்ணுவோம். காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா, எங்க நிறைய ஆட்கள் வேலை வெட்டி செய்யுறாங்களோ, அங்கதான் நிறைய வேடிக்கை இருக்கும். அதான்!

பாருங்க, இந்தத் தண்ணி கட்டுறது, மருந்து அடிக்குறது, ஏர் உழுவறது, மண் அள்ளிக் கொட்டுறது, அருகு தோண்டுறது, இந்த‌ வேலைகளுக்கு ரெண்டு மூனு ஆளுக இருந்தாப் போதும். அதே, இந்தக் களை எடுக்குறது, பருத்தி எடுக்குறது, கருது ஒடிக்குறது, பருத்திமார் புடுங்குறது, பருத்தியில கொட்டு எடுக்குறதுக்கெல்லாம் பத்து ஆள், பதினஞ்சு ஆள்னு நிறையப் பேர் வேலை செய்வாங்க. "பத்துஆள் களை நம்ம காட்டுல, எங்களுக்கு முப்பதுஆள் களை நாலு நாளைக்கு"ன்னு எல்லாம் புழக்கத்துல பேசிக்கிடுவாங்க.

இந்த மாதிரி வேலை நடக்குற இடத்துல, பெரும்பாலும் பொம்பளைங்கதான் நிறைய இருப்பாங்க. அங்கதாங்க சுவராசியமா, நிறையப் பழமை (பேச்சு) அவிங்களுக்குள்ள பேசிக்கிடுவாங்க. நமக்கு அது ரொம்பப் புடிக்கும். சாடை பேசுறது, பொரளி பேசுறது, விட்டேத்தியாப் பேசுறது, பொடி வெச்சிப் பேசுறதுன்னு நாலுங்கலந்து இருக்கும். நாம, கால் சட்டையோட சின்ன வயசுப் பையந்தானே, ஒன்னும் கண்டுக்கிடமாட்டாங்க. அதுனால, பெரிய பெரிய பழமைங்க எல்லாம் கூட சர்வ சாதாரணமா வரும் அப்ப‌ப்ப‌.

முத‌லாவ‌து ஆளும் ரெண்டாவ‌து ஆளும், மூனாவ‌து ஆளைப் ப‌த்தி மூனாவ‌து ஆளுக்கு முன்னாடியே, க‌ண் சாடையோட‌ அந்த‌ மூனாவ‌து ஆள‌ச் சாடிப் பேசினா அது சாடை பேசுற‌து. "என்ன‌டி பார்வ‌தி, நேத்து யாரோ அந்த‌ சோள‌க்காட்டுல‌ வ‌ள்ளுவ‌குல‌த்துப் பைய‌னோட‌ பேசிட்டு இருந்தாங்களாமே? உங்காதுல‌ யாராவ‌து.....?" "ஆமாமா, கேட்டங் கேட்ட‌ன். அங்க‌ க‌ட்டுன‌வ‌ன் குத்துக் க‌ல்லாட்ட‌ம் இருக்க‌, இவ‌ளுக்கு இன்னொன்னு கேக்குதாமா? ", இந்த‌ ரீதியில‌ போகும்ங்க‌. இது சாடை போட்டுப் பேசுற‌து.

சொல்ல‌ வேண்டிய‌தை அழுத்த‌ம் திருத்த‌மாத் தெளிவா சொல்லாம‌, அத‌ச் சாதுர்ய‌மா த‌விர்த்துட்டுப் பேசுற‌து விட்டேத்தியாப் பேசுற‌துங்க‌. அதாவ‌து, விட்டேற்றியாக‌ப் பேசுத‌ல். இதுதாங்க‌, ம‌ருவி விட்டேத்தியாயிடுச்சு. சொல்ல‌வேண்டிய‌தை விட்டு விட்டு, ஏற்றிப் பேசுத‌ல். "டேய், நாளைக்கு எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் இருந்து, சீமை எண்ணைய‌ வாங்கிட்டு வ‌ந்திரு என்ன‌?". "சீமை எண்ணையா? இப்ப‌த் துணி வேற‌ துவைக்க‌ப் போக‌ணும். மழை வேற வரும் போல இருக்கே?!". "என்ன‌டா, விட்டேத்தியாப் பேசுற‌? நான் சொன்ன‌து என்ன‌, நீ பேசுற‌து என்ன??". இந்த‌ ரீதியில‌ போகும்ங்க‌ விட்டேத்தியாப் பேசுற‌து.

பொர‌ளி பேசுற‌து ப‌த்தி சொல்ல‌வே தேவை இல்ல‌. சும்மா, அட்ச்சு உட‌வேண்டியதுதான். இன்னார், இன்னார் காட்ல‌ இப்ப‌டின்னு இட்டுக் க‌ட்டிப் பேச‌ற‌துதானே? க‌ளை வெட்டுற‌ ச‌ன‌ங்க, இதை வெகு லாவ‌க‌மாச் செய்வாங்க‌.


குத்திக் காட்டிப் பேசுறதுன்னா என்ன? எப்பவோ சொன்னதை நினைவுபடுத்தி, நீ அப்ப அப்படிச் சொன்னியே அன்னைக்கு, இப்ப என்ன மாத்திப் பேசுறன்னு குத்திக் காமிச்சுப் பேசுறதுதான்!

க‌டைசியா, பொடி வெச்சிப் பேசுற‌து. இது நாமெல்லாஞ் செய்யுற‌துதானே?! லேசுபாசா உள்ள‌ ஒன்னு வெச்சி, வெளில‌ ஒன்னு ப‌ட்டும் ப‌டாம‌ப் பேசுற‌து. கோதாவரியோட மாமன் மவன் ஒழவு ஓட்ட நாளைக்கு வர்றத தெரிஞ்சுக்கிட்ட ருக்குமணி, "என்ன‌ கோதாவ‌ரி, நாளைக்கு எல்லாம் எங்க‌கூட‌ப் பேசுவியோ மாட்டியோ? ம்ம், எல்லாம் அந்த‌ ஆண்ட‌வ‌னுக்கே வெளிச்ச‌ம்! ". இப்ப‌டி, உள்ள‌ ஒரு அர்த்த‌த்தை வெச்சிகிட்டுப் பேசுவாங்க‌. ச‌ரி, அது ஏன் பொடி வெச்சிப் பேசுற‌துன்னு சொல்ல‌ ஆர‌ம்பிச்சாங்க‌?

பொடின்னா, சிறு சிறு துக‌ளா இருக்குற‌த் சொல்லுவோம், மூக்குப் பொடி, காப்பிப் பொடின்னு எல்லாம். அதே ச‌ம‌ய‌த்துல‌, பொடிய‌ன், பொடுசு, பொடிப் பொடியாக‌ வெங்காய‌ம்ன்னும் சொல்லுறோம், அதாவ‌து சின்ன‌துங்ற‌து வேறொரு அர்த்த‌ம். இப்பப் பாருங்க‌, அந்த‌க் கால‌த்துல‌ திண்ணையில‌ ஒக்காந்து பேசுற‌துக்கு, ச‌த்திர‌த்துல‌ கூடிப் பேசுற‌துக்குன்னு ச‌ன‌ங்க‌ வ‌ரும் போதெல்லாம் திணை உருண்டை, பொரி உருண்டைன்னு த‌ர்ற‌து வ‌ழ‌க்க‌மாம். அப்ப‌ வாற‌ ச‌ன‌ங்க‌, குதூக‌ல‌மா இருக்க‌ட்டும்ன்னு பொடிப் பொடியா ந‌றுக்கின‌ க‌ஞ்சாப் பூ, இன்ன‌ பிற‌ப் பூக்க‌ள்ல‌ ஒன்னு ரெண்ட‌ உள்ள‌ வெச்ச‌ உருண்டைக‌ள‌க் கொடுக்க‌ற‌து வ‌ழ‌க்க‌ம். இப்ப‌வும் நீங்க‌ துடிய‌லூர், கோவ‌னூர்க்கு மேக்கால‌ இருக்குற‌ குருடி ம‌லைக்குப் போனா, இந்த‌ மாதிரியான தேனும் பூவும் க‌ல‌ந்து இருக்குற‌ ம‌லைத்திணை உருண்டைக‌ள‌ அங்க‌ இருக்குற‌ ம‌ல‌ச‌ருக‌கிட்ட‌ வாங்க‌லாம்.

இப்படிப் பொடி வெச்ச‌ உருண்டைக‌ மாதிரி, உள்ள‌ லேசுபாசா ஒன்னை வெச்சி, ஒன்னைப் பேசுற‌துதான் பொடி வெச்சிப் பேசுற‌துங்க‌. ச‌ரி, நீங்க‌ ப‌டிச்சாச்சு இல்ல‌, போயிப் பொடி வெச்சிப் பேச‌ற‌ வேலைய‌ ஒட‌னே ஆர‌ம்பிங்க‌! இல்லாட்டி, குருடி ம‌லைக்கு ஒருக்காப் போய்ட்டு வாங்க‌!!

அரைக் காசுக்குப் போன மானம், ஆயிரம் காசு குடுத்தாலும் வராது!

10/16/2008

"இரத்தினச் சுருக்கம்", "பொடி வெச்சுப் பேசுற‌து"ன்னா என்ன?


வணக்கம்! நேத்தைக்குப் பாருங்க, ஒரு தகவலைப் பத்தி நம்மோட கருத்தச் சொல்லும் போது, இரத்தினச் சுருக்கமா சொல்லி இருக்கீங்கன்னு குறிப்பிட வேண்டி இருந்துச்சு. அப்ப, எனக்குள்ள எழுந்த கேள்விதான் இது. சரி, இப்ப அதுக்குண்டான விளக்கத்தைப் பாப்பமா?

அதாவது, எப்படி பெருத்த ஒளி உருவத்தில சிறுசா இருக்குற இரத்தினத்துல இருக்கோ, அது மாதிரின்னு ஒப்பிட்டுச் சொல்லுறதுதான் இது.

பொடி வெச்சுப் பேசுற‌துன்னா என்ன‌? இத‌ப் ப‌டிக்குற‌வ‌ங்க‌, அவிங்க‌ அவிங்க‌ க‌ருத்துக்க‌ளைப் ப‌தியுங்க‌.

நாளைய பதிவுல, பொடி வெச்சுப் பேசுறது, சாடை பேசுறது, விட்டேத்தியாப் பேசுறது பத்தி விளக்கமாப் பாப்போம். உங்க விளக்கங்களை பின்னூட்டத்துல சொல்லிட்டிப் போங்க!


தெரிஞ்சதச் சொல்லு! தெரியாததைக் கேளு!!

10/15/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 9

கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற தலைப்புல நாம ஆசுகவி வகைல ஒட்டியம், நீரோட்டகம், மாலைமாற்றுன்னு பல வகையான பாடல்களைப் பாத்துட்டு வர்றோம். இன்னும் அந்த முயற்சி முடியலை. ஆனாப் பாருங்க நம்ம நண்பர் குடுகுடுப்பையார் ஒரு சின்ன அன்பு அறிவுறுத்தல் செய்தாரு. அதாவது பழசே எழுதினா எப்படின்னு. அவருக்கு மதிப்பு குடுக்குற வகையில, இன்றைய சூழ்நிலைய மனசுல வெச்சி, அதே சமயத்துல, கவி காளமேகத்தின் தாக்கத்துலயே ஒரு சிலேடைப் பாட்டு.

நமக்கு உடனே நினைவுக்கு வந்தது நடப்புப் பங்குச் சந்தையும், ரெண்டு நாளைக்கு முன்னாடி பூங்காவுல பெத்த மகளோட விட்ட பட்டமுந்தாங்க. அந்த ரெண்டுக்கும் பொருந்தற மாதிரி எழுதினதுதான் இந்தப் பாடல்.

மேலும்கீழும் ஏறியிறங்கித் தானடைவார் உச்சிதனை
கூடுசந்தைதான் பார்க்கப் பார்மகிழ‌! - பாய்ந்திடுமாம்
தாழ்மண்ணடி நோக்கியு மதுகண்டுப் பதறிடுவார்
நடவாதது நடந்ததென உளம்!!


பொருள்-1: சந்தை போல் கூடியிருக்கிற மக்கள் பார்க்க, பார்த்து மகிழ மேலும் கீழும் ஆடியாடிச் சென்று உயரத்தை அடையும் பட்டம். காற்றின் தாக்கத்தின் விளைவாக, திடுமென எதிர்பாரா விதமாகக் கீழே வந்து மண்ணில் விழ, மனம் பதறிடுவார் மகிழ்ந்த கூட்டம்.

பொருள்-2: பங்குச் சந்தையில் கூடியிருப்போரும் உலகளாவிய மக்களும், பங்குச் சந்தையில் போட்ட முதலீடு மெல்லக் கீழே இறங்குவதும் ஏறுவதுமாக உச்சத்தில் இருக்க மகிழ்ந்துடுவர். திடீரென அதள பாதாளத்தை வந்தடைய, நடக்கக் கூடாதது நடந்ததெனப் பதறிடுவர்.

நாம ஆசுகவி வகையில எஞ்சி இருக்குற வகைகளைப் பாத்த பொறகு, இன்னும் நிறைய சிலேடை வகைப் பாடல்களை எதிர்வரும் காலங்கள்ல பாக்கலாங்க.

தீட்டத் தீட்டத்தான் வைரம்! எழுத எழுதத்தான் நயம்!!

10/14/2008

எள்ளுத் தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-3

பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே!
பாமரர் ஏதறி வார்!!
-- பாரதியார்


நாம, எள்ளுத் தாத்தா 1880-ல எழுதி வெச்ச குறிப்புகளை தொடரா, எழுதிட்டு வர்றோம். இதனால, என்ன பிரயோசனம்ன்னு நீங்க யோசிக்கலாம். நமக்கு, இந்த தொடர் எழுதறதால கையெழுத்துப் பிரதிய, கணனியில தரவேற்றம் செஞ்ச மாதிரி ஆச்சு. உங்களுக்கும், அதப் படிக்கும் போது சுவராசியமா இருந்தாலும் இருக்கலாம். அதாவது, எருமைக்குப் புல் புடுங்கின மாதிரியும் ஆச்சு, காடு சுத்தமான மாதிரியும் ஆச்சு பாருங்க! அதான், இந்த ஒரு முயற்சி!!

லிங்க வீக்கத்திற்கு:

கற்றாழைச் சோற்றை ஏழுதிரம் கழுவியெடுத்து கொருக்குரிணம் கண்டு வீக்கம் உண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு இராத்திரி வைத்துக் கட்ட வாடிப் போகும்.

பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு:

கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடை வைத்தரைத்து, புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும்.

விக்கல் வாந்தி சுரத்திற்கு:

கண்டங்கத்திரிவிரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமனிடை போட்டு கசாயம் வைத்து, தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும்.

விரை வீக்கத்திற்க்கு:

கெச்சக்கா இலையை துளி விளக்கெண்ணை விட்டு வதக்கி விரையின் மேல் வைத்துக் கட்டி வைக்கவும். காலையில் பேதிக்கு சாப்பிட்டு வர வீக்கம் நீங்கும்.

காமாலை-சோகை-பாண்டுக்கு:

கோசலமென்னும் சிறுவர் சிறுநீறும் வெள்ளாட்டுப் பாலும் சரியாய்க் கலந்து உட்கொண்டு வந்தால், சோகை‍‍-காமாலை-பாண்டு‍-பித்தம் இவை தீரும்.

நாடியிறுக‌:

சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து, சக்கரை கலந்து திருகடியளவு உண்டு வந்தால் நாடியிறுகும். விந்து நன்றாக உண்டாகும்.

சுண்டைக்காய் ப‌ற்றிய‌ வெண்பா

நெஞ்சிற் க‌ப‌ம்போகும் நிரைகிருமி நோயும்போகும்
விஞ்சுவாத‌த்தின் விளைவும்போகும்! வ‌ஞ்சிய‌ரே
வாயைக்க‌ச‌ப்பிக்கும் மாம‌லையி லுள்ள‌சுண்டைக்
காயைச் சுவைப்ப‌வ‌ர்க்குக் காண்!

பாராம விட்டாக் கெடும், பழசு! பழசக் கேளாம விட்டாக் கெடும், புதுசு!!

(...இன்னும் வரும்...)

10/13/2008

கனவில் கவி காளமேகம் - 6

கனவில் கவி காளமேகம் - 5

நம்ம கனவுல வந்துட்டு இருந்த கவி காளமேகம், ரொம்ப நாளா வரலை பாருங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே படுத்தேன். குறிப்பு அறிஞ்சு, நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. அதுக்கு மேல என்ன சொன்னாருன்னு, மேல படிங்க!

"அப்பிச்சி என்ன நொம்ப நாளாக் காணோம்?"

"அது இல்லடா பேரான்டி, நீ நாட்டு நடப்புன்னு நாலும் எழுத ஆரம்பிச்சுட்டே, அதான் என்னோட தொந்தரவு எதுக்குன்னு வரலை"

"அப்பிடியெல்லாம் ஏன் நினைக்குறீங்க? சரி, சொல்லுங்க!"

"பேரான்டி, இந்த ஆறு அறிவுன்னு சொல்லுறாங்குளே, அது பத்தி விவரமா சொல்லு பாப்போம்!"

"அப்பிச்சி, இந்த வேலை எல்லாம் வேண்டாம், நீங்களே சொல்லிடுங்க!"

"நீதான் ஒரு அரை வேக்காடு ஆச்சே?! சரி, சொல்லுறேன், கேளு! மேலோட்டமா, எல்லாத்தையும் ரெண்டாப் பிரிச்சோம். நிலைத் திணை, இயங்கு திணைன்னு. இதுல நிலைத்திணை வந்து உடல் உணர்ச்சிய மட்டும் வெச்சி, இயங்கு திணை வகையறாக்களை வாழ வைக்கும். மரம், செடி, கொடி, புல், புதர் எல்லாம் இந்த வகை. ஒரே இடத்துல நிலையா இருக்கும். இதுக்கு ஒரு அறிவுதான். மெய்யறிவு!

ஒரு இடத்துல இருந்து, மத்த இடம் போறது எல்லாம் இயங்கு திணை. அதுல‌, நீருயிரி, நிலவூரி, பறவை, விலங்கு, மாந்தர்ன்னு அஞ்சு வகை. அதுகளப் பாப்போம் இப்ப:

நீருயிரி: மெய்யறிவு, வாயறிவு

நிலவூரி: ஊர்ந்து வாழுறது. மெய், வாய், கண்ணறிவு

பறவை: மெய், வாய், மூக்கு, கண்ணறிவு

விலங்கு: மெய், வாய், கண், மூக்கு, செவியறிவு

மாந்தர்: மெய், வாய், கண், மூக்கு, செவின்னு அஞ்சு புற அறிவு. கூடவே ஆறாவதா, அக அறிவான மனத்தால நல்லது கெட்டதுன்னு எண்ணங்களை பகுத்தறியறது!"

"அப்பிச்சி, இதெல்லாம் எனக்கு தெரியும். நீங்க வேற எதனாச்சும் சொல்லிட்டுப் போங்க!"

"இன்னைக்கு இது போதும். அடுத்த தடவை வரும் போது, உலகத்துல இருக்குற எல்லா மொழிகளும் எப்படி, எந்த எந்த ஒலிகள்ல இருந்து வந்ததுன்னு சொல்லுறேன். இப்பத் தூங்கு!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

10/12/2008

அறிவியலுன்னு சொல்வீகளா?


புணர்ச்சியேதும் இல்லாமலே
ஒத்தச்செல்லுல அச்சுஅசல்
மனுசனைத்தான் உண்டுபண்ணி
அறிவியலுன்னு சொன்னீங்க!

அன்புப்புணர்ச்சி இல்லாமலே
ஒத்தைநொடியில அணுகுண்டைத்
தலையில போட்டதைத்தானே
அறிவியலுன்னு சொல்வீகளா?

அலைபேசி காணொளியும்
இணையமும் கணினியும்
நல்லநல்ல மருத்துவமும்
அறிவியலுன்னு சொன்னீங்க!

ஈரெண்டுநாலு செவுத்துக்குள்ள
நடக்குறதெல்லாம் ஊருபூரா
போட்டுக் காசுபாக்குறதை
அறிவியலுன்னு சொல்வீகளா?

மாற்றுமரபணு விதைவிதைச்சா
உற்பத்திதான் கூடுறதையும்
காசுநிறையக் கிடைக்குறதையும்
அறிவியலுன்னு சொன்னீங்க!

பாட்டன் முப்பாட்டாந்தந்த
பொன்னு விளையுறபூமி
பட்டுப்போய் பல்இளிக்குறத
அறிவியலுன்னு சொல்வீகளா?

நித்தம்நித்தம் புதுசுபுதுசா
கேளிக்கை பெருகிப்போய்
மனிதகுலம் மகிழுறதை
அறிவியலுன்னு சொன்னீங்க!

மனிதநேயம் அருகிப்போச்சு
பயங்கரவாதம் பெருகிப்போச்சு
அமைதியும் கெட்டுப்போச்சு; இதை
அறிவியலுன்னு சொல்வீகளா?

நாம் அறிவியலுக்கு எதிரானவர்கள் அல்லர்! ஆனால், அறிவியலின் பேரால் நடக்கும் வியாபார மோசடிகளின் விட்டில் பூச்சிகள்!! இரண்டு வயது சிறுவனுக்கு, இருபது வயது ஆடவனின் சட்டையை அணிகிற பட்சத்தில், அதுவே அவன் தடுக்கிக் கீழே விழுந்து, இடர் அடைய வித்தாகும். ஆகவே, அளவுக்கேற்ற அறிவியல் ஆடை அணிவோம். எளிமை காப்போம்! வாழ்வில் இன்புறுவோம்!!


பழுத்த ஓலயப் பாத்து, பச்ச ஓல சிரிச்சதாம்!

10/11/2008

தண்ணியடி விரதம்!

அபிமானிகளின் வேண்டுகோளுக்கு இணங்க விரதம் முடிவு பெற்றது! (...ச்சும்மா, நாமளே சொல்லிக்க வேண்டியது தான்.... எத்துனை தலைவர்களை நாங்க பாத்து இருக்கோம்?!)







நேற்றைய பதிவினைப் பார்த்தும், அண்ணன் குடுகுடுப்பையார், அண்ணன் மலைக்கோட்டையார் (அணிமா) மற்றும் நண்பர் துக்ளக் மகேசு ஆகியோர் பேசாமல் கொள்ளாமல் சென்றுவிட்டமையால், பழமைபேசி இன்று தண்ணியடி விரதம்! எமது, பதிவும் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்படுகிறது.


பொண்டாட்டிய வித்து,
தண்டட்டிய வாங்குனானாம்!

தமிழில் பதிவிடுவது கேவலமா?

இப்பொழுதெல்லாம் தங்களுக்கென்று வலைப்பூ வைத்துக் கொண்டு, தமிழகத் தலைவர்கள் பணியாற்றி வருகிறார்கள். பாராட்ட வேண்டிய ஒன்று! நான் பார்த்த அனைத்தும் ஆங்கிலத்தில். அதில் ஆங்காங்கே, ஆங்கில எழுத்தில் தமிழ்! இங்கேதான் நமக்கு ஏமாற்றம். இதே வழியை மற்றவரும் தொடரக் கூடும்.

தமிழில் வலைப்பூ என்பது அவ்வளவு சிரமமான காரியமா? மெட்ராசு என்றே இருக்கட்டும் என்றார் சிலர்! தமிழ்நாடு என்றால், பிற மாநிலத்தவர் மத்தியில் அது பதியாது என்றார் அவர்!! இருந்தாலும், நம்து உரிமையப் பெற்றோம் அன்று! மற்றவர்க்காக நமது உரிமை, மொழியைத் துறக்கிறோம் இன்று!!

தமிழ் செம்மொழி என்றும், தழைத்து ஓங்க வேண்டும் என்றும் சூளுரைத்த நாட்டில், இது களையப் படவேண்டும் என்பதே எம் ஆவலும், பணிவான வேண்டுகோளும்!


முன்னத்த ஏர் போற வழியிலதான், பின்னத்த ஏரும்!

10/10/2008

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -2

நாம கோயம்பத்தூர்ல, இலக்குமி இயந்திர ஆலை(Lakshmi Machine Works, LMW)ல ஒரு ஐந்தரை ஆண்டு காலம் குப்பை கொட்டின அனுபவம் இருக்கு. அப்ப பாருங்க, தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்(ISO 9000) வாங்க, ஆலைல நடக்குற எல்லாப் பணிகளுக்கும் செயல்முறை எழுதி, அதைக் கோப்புத் தொகுப்புல சேர்க்க வேண்டிய ஒரு அலுவல் வந்தது. அதுவும் தமிழ்ல எழுதணும். நாமதான் மொதல் ஆள்! உரிய கௌரவமும் கிடைச்சது நமக்கு. அந்த நினைவுகள்ல இருந்து கொஞ்சம் இப்ப:

ஸ்பேனர் - வில்லை கழட்டி
நட்டு - மரை வில்லை
போல்ட் - மரை ஆணி
ஸ்க்ரூ - திருகு ஆணி
லிவர் - நெம்புகோல்
ரின்ச் - வில்லை திருப்பி
ச்சிசில் - உளி
ஹேமர் - சுத்தி
ப்ளேடு - அருதகடு
லேத் மெசின் - கடைசல் இயந்திரம்
மில்லிங் மெசின் - செதுக்கு இயந்திரம்
ட்ரில்லிங் மெசின் - துருவு இயந்திரம்
க்ரைன்டிங் மெசின் - உரைசல் இயந்திரம்
சாயிங் மெசின் - அறுத்தல் இயந்திரம்
போரிங் மெசின் - துளை இயந்திரம்

ஷேப்பிங் மெசின் - குடைவு இயந்திரம்
ஹீட் ட்ரீட்மென்ட் - வெப்பப் பதனிடுத்ல்
குவன்ச்சிங் - குளிர் பதனிடுத்ல்
கேஸ் ஹார்டனிங் - மேற்ப்பரப்பு திடமாக்கல்
டீப் ஹார்டனிங் - ஆழ்பரப்பு திடமாக்கல்
ப்ளேட்டிங் - முலாம் பூசுதல்
ஸ்பின்டில் - கதிர்
ஃப்ளூட்டட் ரோலர் - இழை உருளி
யார்ன் - நூலிழை
ஸ்பின்னிங் மெசின் - இழைமுறுக்கி இயந்திரம்
வீவிங் - மிந்நெசவு
கார்டிங் மெசின் - பஞ்சுதட்டி இயந்திரம்
ப்ளோரூம் மெசின் - பஞ்சு மாசுபிரிப்பு இயந்திரம்
ரிங் ப்ரேம் - வளைவச்சு இயந்திரம்
கியர்ஸ் டிபார்ட்மென்ட் - பற்ச்சக்கரப் பிரிவு
கியர் - வேக மாற்று
ஆக்சுலரேட்டர் - வேக முடுக்கி



பழைய ஆட்களுக்கு, புது தலைமுறைக்காரங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு பெரும்பாலும் புரியறது இல்ல பாருங்க! அதான், அவங்க வசதிக்காக தமிங்கில தமிழ் அகராதி!! வேணுமின்னா, தமிழ் தமிங்கில அகராதியும் எழுதலாம். அதாவது பழைய ஆட்கள் சொல்லுறது புது தலைமுறைக்கு புரிய வைக்க.

தமிங்கில அகராதியிலிருந்து..... பாகம் -1


ஊதற சங்கை ஊதணும்!
அடிக்கிற மணியை அடிக்கணும்!!

10/09/2008

இயற்கை எழில் அவனி

இயற்கை எழில் அவனி பற்றிய விவரணம்!


படங்களைப் பெரிதாகப் பார்க்க 22க்கு அருகில் உள்ள சிறு பெட்டியை சொடுக்குங்கள்.

கிராமியக் கேலிப் பாடல்!


குந்தாணி, கொழக்கட்ட
ஒம்புருசன் தவக்கட்ட!

குந்தாணி, கொழக்கட்ட
குந்தவெச்ச மாங்கொட்ட!

குண்டம்மா கொழக்கட்ட
குந்தவெச்ச மாங்கொட்ட!

ஓட்டப் பல்லு சங்கரா,
ஒரு வீட்டுக்கும் போவாத!
அப்பளம் வாங்கித் திங்காத,
அடிபட்டுச் சாவாத!!

அப்பசி மாசம் தீவாளி,
அக்கா புருசன் கோமாளி!!



தட்டான், தட்டாட்டா கெட்டான்!
பதிவன், பதியாட்டா கெட்டான்!!

10/08/2008

சரி செய்யுற கிராமியப் பாட்டு!

ஈசல் இறகுபோல இருபுறமும் கண்டாங்கி,
கல்லில் அடியாம கசக்கி நல்லா தந்திருவேன்!

கல்லில் அடியாம கசக்கி நல்லா தந்தியானா,
தாயாரு அறியாமலே தனியாக நான் வருவேன்!


தாயாரு அறியாமலே தனியாக வந்தியானா,
தட்டான் அறியாமலே தாலி பண்ணி நாந்தாறேன்!

தட்டான் அறியாமலே தாலி பண்ணித் தந்தியானா,
ஊராரு அறியாமலே நாலு சொகம் நாந்தாறேன்!

ஊராரு அறியாமலே நாலு சொகம் தந்தியானா,
அடுத்த ஊடு தெரியாம ராராட்டு நாந்தாறேன்!

அடுத்த ஊடு தெரியாம ராராட்டுத் தந்தியானா,
ஆத்தா அறியாம வாக்கப்பட்டு நான் வாறேன்!


நீ கோவணத்தோட பொறந்திருந்தா,
அவ கொசுவத்தோட பொறந்திருப்பா!

10/07/2008

போச்சு! போச்சு!! போச்சு!!!

சின்ன வயசுல, பூலாங்கிணறு முக்கோணம் முத்தாலம்மன் கோயில் நோம்பிக்கு எங்க அத்தையவிங்க ஊருக்குப் போயிருந்தேன். வரும் போது, ஒரு பந்து வாங்கியாந்தேன். சரின்னுட்டு அந்த பந்த எடுத்துக்கினு சோட்டாளிகளோட மொசப்பந்து விளையாடலாம்னு போய்க்கினு இருந்தேன். அப்ப பாருங்க, பெரிய வயசுப் பசங்க வந்து என்னோட பந்தைப் புடுங்கி, அவிங்க வெளையாட ஆரம்பிச்சுட்டாங்க. உடனே, நாம அழ ஆரம்பிச்சுட்டோம். அதப் பாத்த ஒரு தடி மாடு வந்து சொன்னான்,

புகையில விரிச்சாப் போச்சு
அப்பளம் நனஞ்சாப் போச்சு
மோர் புளிச்சாப் போச்சு
சோறு கொழஞ்சாப் போச்சு
இட்லி ஆறினாப் போச்சு
தோசை காஞ்சாப் போச்சு
பொழுது விடிஞ்சாப் போச்சு
அந்தி சாஞ்சாப் போச்சு
கொளம் வத்துனாப் போச்சு
வாய்க்கா வறண்டாப் போச்சு
அடுப்பு அவிஞ்சாப் போச்சு
சாயம் வெளுத்தாப் போச்சு
கூரை பிரிஞ்சாப் போச்சு
வண்டி கவுந்தாப் போச்சு
காவக்காரன் தூங்கினாப் போச்சு
அரக்கன் எழுந்தாப் போச்சு
பொம்பளை சிரிச்சாப் போச்சு
ஆம்பிளை அழுதாப் போச்சு!

'அப்பிடியிருக்க ஆம்புளைப் புள்ளை நீ அழலாமா?'ன்னான். அதைக் கேட்ட நான், 'இதைக் கேட்ட எம் பொழப்பு நாசமாப் போச்சு'ன்ட்டு எட்த்தைக் காலி பண்ணினேன்.

பங்குச் சந்தைல மொதலு போட்டாப் போச்சு!

10/06/2008

சாமான்யன்


அந்தக் கூடத்துச் சுவரோரம்
சிறு சர்க்கரைக் கட்டியை
சுமந்தபடி சென்றன
எறும்புகள்!
சுமை சுமக்கிறோம்
என்ற சலிப்பும் இல்லை;
விருந்து உண்ணப்
போகிறோம் என்ற
செருக்கும் இல்லை அவற்றுக்கு!!
----------------------------------------------------

கால் கடுக்க நின்றிருந்தேன்,
வரிசை வரிசையாய்ச்
சென்றன பேருந்துகள்
எதிர்த் திசையில்!

--------------------------------------------------

ஓடோடிச் சென்றேன்
பள்ளியில் மணி அடித்ததும்,
புதுப் புத்தகங்கள் பார்க்க!
அம்மா சொன்னாள்,
கடைக்கு இனியும்
வரவில்லை
இவ்வருட புத்தகங்கள்!!

கோவை அய்யாமுத்து - 2

வழக்கமாக தமிழுக்கே உரிய சாபக்கேடாக அய்யாமுத்து பற்றிய குறிப்புக்களும் நூல்களும் தமிழில் அதிகம் வரவில்லை. அவர் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் நன்றி மிகுந்த தமிழர்களாலும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தினராலும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மட்டுமே தனியொருவராக அய்யாமுத்து அவர்களின் நினைவினைப் போற்றி வருகிறார், அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் வெளிவரும் ஓம்சக்தி இதழ் பலமுறை அய்யாமுத்துவைப் பற்றிய நினைவுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியில் அருட்செல்வர் கட்டியுள்ள திருமண மண்டபத்தில் அய்யாமுத்து மற்றும் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாள் ஆகியோரின் உருவப்படங்கள் அவர்கள் உயிருடன் இருந்த போதே திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தவிர அந்த மாபெரும் மனிதர் மற்றும் அவருடைய ஒப்பற்ற துணைவியார் பற்றிய நினைவுகள் தமிழர்களின் நினைவுத் தடத்திலிருந்து முற்றாக அழிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலதிக விபரங்களுடன் கூடிய, கீழ்க் கண்ட பதிவினை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

காந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து


ஒழச்சித் திங்குறது ஒரு கோடி! ஏச்சித் திங்குறது ஏழு கோடி!!

10/05/2008

யாரிந்த கோவை அய்யாமுத்து அய்யா?

கோயம்பத்தூர்ல பொறந்து, இருவது இருவத்தி மூனு வருசம் அங்கயே படிச்சு, பொழப்பும் நடத்தி இருக்குறேன். கோவை அய்யாமுத்து அய்யாவைப் பத்திக் கேள்விப்பட்டது கெடையாது. இது எப்படி? இல்ல, அது என்னோட தப்பா?? கண்ட கண்ட கதையை எல்லாம் பள்ளித் துணைப் பாடத்துல வெச்சீங்களே, ஏன் இவரைப் பத்தி ஒரு பாடம் வெச்சிருக்கக் கூடாதா? ஏன் இந்த ஓரவஞ்சினை? ஒரு வேளை, இப்ப ஏதாவது அவருக்கான கௌரவம் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அப்படியே இருந்தாலும், அது தாமதமான, நிறைவற்ற ஒண்ணுதான். சரி, இனி அவரைப் பத்தி கொஞ்சம் பாப்பமா?!

அவர் அந்தக் காலத்துல பெரிய, நேர்மையான தலைவர்ங்க. காந்தி கூடவே இருந்து, நெருக்கமாப் பழகுனவர். தமிழ் நாட்டுல காதி, கதர் சங்கத்தை மூலை மொடுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேத்துனவர். அய்யா பெரியார் கூட வேலை செஞ்சு, நெருங்கிப் பழகுனவர். பாருங்க, பெரியார் காங்கிரசுல இருந்து வெளிய போனப்ப இவர் போகலை. ஆகவே, திராவிடம் இவரைக் கண்டுக்கலை. கர்மவீரர் காமராசர் கூடவும் போகலை. கடைசில மூதறிஞர் இராஜாஜி கூட இருந்தாரு. பொது வாழ்வுக்காக தன்னை அர்ப்பணம் செஞ்சவர். அவர் தயாரிப்புல, இயக்கத்துல வந்த
கஞ்சன் திரைப்படப் பாடல்தான் திராவிட, தமிழ் மேடைகள்ல தவறாம இசைக்கப்பட்டு மக்களைத் தெரட்ட ஒதவி இருக்கு. அந்தக் காலத்துல, இந்தப் பாட்டை கடவுள் வாழ்த்து மாதிரியே பாடினாங்களாம். ஆமாங்க, அந்தப் பாட்டு, "இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழில் உடையோன் எங்கள் தமிழன்" ன்னு தொடங்கும்.

இனியாவது அவரை முன்னிறுத்தி, அவரோட தியாகம், பண்புகள் எல்லார்த்தையும் அடுத்து வர்ற தலைமுறைக்கு கொண்டு போய்ச் சேருங்க. அவர் எழுதின சுயசரிதையப் பாடமாக்கலாம். பல்கலைக் கழகங்கள்ல பாவியுங்க. அந்தப் பாட்டை புத்தகத்துல போடுங்க. தியாகிகளைப் பத்தி சொல்லுறதுல எதுக்குத் தயக்கம்?

நல்லார நாவில் உரை! பொன்னைக் கல்லில் உரை!!

சார்லட்(Charlotte, NC, U.S.A) பதிவர் சந்திப்பு

ஆமாங்க.... சக பதிவர்ங்ற முறையில அறிமுகமாகி, ஒரு நல்ல குடும்பத்தினரை சந்தித்த வாய்ப்பு எமக்குக் கிட்டியது. பண்பாளர் சீமாச்சு அண்ணன் அவிங்களையும், அவிங்க குடும்பத்துல எல்லாரையும் நேத்து சந்திச்சோம். தமிழ் மண்ணுக்குரிய விருந்தோம்பல் முதலானவற்றையும் தாண்டி, என்னை பாதிச்சது மூணு விசயங்கள்.

முதலாவது: 1930ல ஒரு நல்ல கல்வியாளர் எழுதின நாட்குறிப்பு. ஆமாங்க, அவ்வளவு தெளிவா சிறு எழுத்துக்களால எழுதப்பட்டு இருந்தது, ரொம்ப வியப்பா இருந்தது. அதுல இருந்ததுல, என்னை மிகவும் பாதிச்சது, ஒருவர் மனம் புண்படும் போது அவரது மனம் வலிக்கும். ஆனால், அந்த வலி நீங்காமல் மீண்டும் மீண்டும் வந்து அவரை வதைக்கிறது என்றால், அதற்குக் காரணம் பொறாமை, ஆத்திரம், வஞ்சகம், கோபம், சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே காரணம்ன்னு குறிப்பிட்டு இருந்த வாசகம். படிச்சதும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. உண்மை சுடும்ங்கிறது இது தானோ?! சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இன்னைக்கும், 96 வயதிலும் கல்விக்கு முக்கியத்துவம் தருகிற அந்தக் கல்வியாளர், அண்ணன் அவர்களின் தந்தைதான்.

இரண்டாவது: நாம வீணைய புகைப்படம், ஒளிக்காட்சி, நிழல் படத்துல பாத்ததுதான். இன்னைக்கு நேர்ல பாத்ததும் மனசு சில மணித் துளிகள் அடங்கித்தான் போச்சு. அந்த உருவ அமைப்புக்கும் இசைக் கருவிக்கும், ஒரு தனித்தன்மை இருக்குறதை உணர்ந்துகிட்டேன்.

மூணாவது: அண்ணன் வீட்டில் பார்த்த நூலகம். ஏராளமான தமிழ்ப் புத்தகங்கள். நேர்த்தியா, நூலகம் போலவே அடுக்கி வைக்கப்பட்டு இருந்த காட்சி. நானும் ஒரு மூணு புத்தகங்களை இரவல் வாங்கி வந்திருக்கேன்.

மொத்தத்துல அந்த ஆறு மணி நேரங்கள் ஆறு நிமிடங்களா, இனிதாக் கரைஞ்சது. பதிவுலகத்துக்கு நன்றி சொல்லிகிறதைத் தவிர வேற என்ன சொல்ல?


கத்துகிட்ட வித்தை காலத்துக்கும் ஒதவும்!

10/03/2008

பழையதன் பெருமை புதுமையே!

From: XXXXXXXXXXXXXXXXXXXX
To: xxxxxxxxxxxxxxxxxxxxx
Subject:
Date: Fri, 3 Oct 2008 10:46:37 +0200

பழையதன் பெருமை புதுமையே


தமிழா என்றும் மறவாதே பழமையை,

தமிழா ஏற்றம் தந்ததும் பழமையே!

தமிழா குற்றம் இல்லை பழமையில்

தமிழா குன்றென நிற்குமே பழமை!!


தமிழா பழையதில் புதுமை காண்பாய்,

தமிழா பழகிய புதுமையும் பழமையே!

தமிழா பழய திராட்சை ரசத்திற்கே மதிப்பு,

தமிழா பழயதை பழகின் தருவது புதுமையே!!



தங்கள் வாசகன்,

அ.இராமலிங்கம்



நண்பரே,

வணக்கம்! இதை விடப் பெருமை, இனி எனக்கு என்ன வேணும்? ரொம்ப நன்றிங்க! அழகான கவிதையைப் பகிர்ந்து கொண்டமைக்கு!! மாற்றங்கள் அவசியமானது, தவிர்க்க முடியாதது! அதே வேளையில், பழமை பேணி காக்க வேண்டும். இல்லை என்றால், அடிப்படை மறந்து சிக்கலில் தவிக்கக் கூடும் என்பதே எம் தாழ்மையான எண்ணம். உதாரணம், சமீபத்திய அமெரிக்க நிதிச் சிக்கல். ஒரு சில ஆயிரங்களுக்கு, வீடு காட்டுப் பத்திரம் கேட்டு வாங்கிப் பெற்றது பழமை. பெரும் தொகைக்கு, எந்த அடிப்படையும் இல்லாமல் அன்றைய தினக் கூலியை மட்டும் கணக்கில் கொண்டு பெரும் தொகையை தூக்கிக் கொடுக்க, சிக்கலில் கொடுத்தவனும், வாங்கியவனுமாக. ஆனால், நம்மில் பலர் இந்த அடிப்படையை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

மிக்க நன்றி, நாம் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டே இருப்போம்.!

பணிவுடன்,
பழமைபேசி