வணக்கம். இது சின்னஞ்சிறு குழந்தைகள் முதற்கொண்டு மூத்தோர் வரைக்குமான கதை. https://youtu.be/McKHNjjwfts
வாசித்து அல்லது கண்டுணர்ந்து விட்டுத் தொடரலாம். வாசிக்காமலோ கண்டுணராமலோ வாசிப்பதால் முழுப்பயனையும் எட்டிவிட முடியாது. ஆகவே?!
எந்த ஒரு கதையையும் உள்வாங்கி, சிரிப்பு, அழுகை, உவப்பு, மருட்கை, ஏமாற்றம் இப்படி ஏதாகிலும் ஓர் உணர்வுக்கு ஆட்பட்டு, தகவலை மட்டுமே உள்வாங்கி இருப்பதென்பது களித்திருத்தல்(recreation), கேளிக்கை(entertainment) என்பது மட்டுமே ஆகும். அப்படியான கதைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் யாதொரு இலக்கிய விழுமியமும் இல்லை. துவக்கநிலை வாசிப்புக்கான, உணர்வு மதிப்பீட்டுக்கானவை மட்டுமே அவை.
மேலைநாடுகளில் படிப்படியாக மூன்றாம் வகுப்பு, அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்நிலைக்குப்(inference) பயிற்றுவிக்கப்படுவர். வாழ்வியலின் ஏதோவொரு கூற்றினை ஒவ்வொரு கதையும் கருவாகக் கொண்டிருக்கும், இப்படியானதொரு போக்குத்தான் அமெரிக்காவை முதிர்ந்தநிலையில் நிலைநிறுத்தி இருக்கின்றது. ஒவ்வொரு நூறு பேருக்கும் 120 துப்பாக்கிகள் உள்ளன. தெரு/ஊருக்கு ஒரு துப்பாக்கியென இருந்து விட்டால்கூடப் போதும், சில பல நாடுகள் இருக்கின்ற இடமில்லாமற்போய் விடும். கதைகளின், இலக்கியத்தின் தரம்தான் சமூகத்தின் முதிர்ச்சியைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது.
எளிய கதை. ஒரு சிறு அசைவில் துவங்குகின்றது. வளர்ந்த நாம் கூட ஒன்றிப் போகின்றோம். கற்பனை, சும்மானாச்சிக்கும் என்பதாகத்தான் துவங்குகின்றோம். அடுத்தபக்கம், அடுத்தபக்கம் என நகர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், முற்றிலுமாகக் கற்பனை எனும் எண்ணத்திலிருந்து விடுபட்டு மாயத்தில் கரைந்து போகின்றோம். கற்பனாமுரண் (paradox of fiction) நம்மை முழுமையாக ஆட்கொண்டு விடுகின்றது. சிறார்களின் மனம் எப்படியாக இருந்திருக்கும்? களிப்பில் கேளிப்பில் ஆழ்ந்து மீண்டும் வாசிக்கத் தூண்டியிருந்திருக்கும். சரி, வாழ்வியலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?
தத்துவார்த்த ரீதியில் நோக்குங்கால், மனம் உவப்புக் கொள்கின்ற ஒவ்வொரு செய்கையாகச் செய்து செய்து, படிப்படியாக மனங்களைக் கொள்ளைகொண்டு தமக்கான திட்டங்களை நைச்சியமாக நிறைவேற்றிக் கொள்வர் நிகழ்த்துவோர். அந்தப் பயணத்தில் இருப்போருக்கு அதன் முழுப்பார்வையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை(எ:கா: சனவரி ஆறாம் நாள், 2021). இதில் அகப்படாமல் இருந்து கொள்ள வேண்டுமேயானால், அந்த முதற்செய்கை, இரண்டாம் செய்கை, மூன்றாம் செய்கை என்பனவற்றிலேயே இது கற்பனை, உண்மைக்குப் புறம்பானது என்பதாக உணர்ந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு விளைவு(cause & effect) உண்டு. அதைத்தான் அழுத்தும் செய்கையில் மஞ்சள் வட்டம் இரண்டாதல், ஊதும் போது காணாமற்போதல் எனக் காணமுடிகின்றது.
விழாவில் வழங்கப்படுமென ஏராளமான விருதுகள், பரிசுகள் அறிவிக்கப்படுகின்றனயென வைத்துக் கொள்வோம்; . அறிவிப்புகளைக் கண்டு மகிழ்வோர் ஏராளம்(paradox of fiction). 150 பேருக்கு, பெயர் அறிவிப்பு, படமெடுத்துக் கொள்தலென ஒரு நிமிடமென வைத்துக் கொண்டாலும் கூட, இரண்டரை மணிநேர மேடை நேரம் தேவைப்படும். இது சாத்தியம்தானா, ஈடேறுமா? இப்படியெல்லாம் சிந்தைவயப்பட்டு, what would be the causality? என எண்ணத் தலைப்படுவதுதான் inference, வாசிப்பின் ஆழ்நிலை.
வாட்சாப் பகிர்வென்பதாலே சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. கூடுதல் தகவலுக்குக் கதைகுறித்த நிறையத் திறனாய்வுக் கட்டுரைகளை இணையத்திலேயேவும் காணலாம். இதோ அவற்றுள் ஒன்று: https://www.prindleinstitute.org/books/press-here/
No comments:
Post a Comment