11/29/2015

அவரைக் காணவில்லை!!

அவரைக் காணவில்லை!!
நம்மில் ஒருவராக அவர்
இருக்க வாய்ப்பேயில்லை!
நம்மிலும் மேலானவராக
நம்போல் மனிதரல்லவராக
இருப்பதினாலேயே அவர் கடவுள்!
ஏரணம் பகர்கிறாள் மூத்தவள்!!
இம்ஃகூம்.... நாம் பார்க்கிறோமே?
சமையலறையில் அம்மா
வைத்திருக்கும் சாமி படத்தில்
அம்மா போல ஒரு பொம்பள சாமி
அப்பா போல ஒரு ஆம்பள சாமி
ஆதலின் அம்மா அப்பா போல
நம்மைப் போன்றவர்தான் கடவுள்!!
கிடையாது கிடையாது மூன்றாமவள்!
ஏதாகினும் தேவை ஏற்படும்போது
கோயிலில் இருக்கும் சாமி
வர வேண்டிய நேரத்துக்கு வந்து
செய்ய வேண்டியதைச் செய்பவர்
நம்மைப் போன்றவர், ஆனால்
அவ்வப்போது வந்து போகிறவர்!!
குழப்பம் முகமேகுகிறது!!
அப்பா நீங்க சொல்லுங்ப்பா!
கடவுள்ங்றவர் யாரு?!
ப்ச்... பேசாமல் இருங்களேன்?!
ஒன்பது நாள் விடுப்பும்
ஓடிப் போன வருத்தம்
பேசும் மனநிலையிலில்லை நான்!!
அவரவர் அவரவர்பாட்டில்
திசை கலைந்து போக
உற்று நோக்குகிறேன்!
அந்நேரம் அங்கிருந்த
அவரைக் காணவில்லை!!
மூத்தவள் மட்டும் இன்னும்
முறைத்துக் கொண்டே இருக்கிறாள்!!