12/30/2008

சூந்தோ சூந்து!

நமக்கு தீபாவளிய விட, கார்த்திகைத் திருநாள்ன்னா நொம்பப் புடிக்கும். மூனு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். அதுவும் அந்த வீதம்பட்டி வேலூர் வினாயகங் கோவில் மைதானம் இருக்கே? அட அட, சொல்லி மாளாது போங்க. கோயலைச் சுத்தியும் அரசமர வேப்பமர இணைகள், ஒவ்வொரு இணைக்கும் தனி மேடை கட்டி, அந்த மேடையில மரங்களுக்குக் கீழ சாமி சிலைகள வெச்சி, அவ்வளவு நேர்த்தியா இருக்கும். இதெல்லாம் மைதானத்துலன்னா, கோவில் வளாகத்துக்குள்ள அழகான வில்வமரம் எப்பவும் நல்ல வாசத்தோட தென்றல் காத்தை சிலு சிலுன்னு வீசிட்டே இருக்கும்.

கோயிலோட கொடி மரத்துக்கு, அழகான சிற்பக் கூடத்தை வடிவமைச்சு, அதுக்கு மேலதான் தீபம் ஏத்துறது. ஊரே கூடும், அந்த பதினாலு நாளும் வெகு விமரிசையா இருக்கும். கடைசி நாள் அன்னைக்கு தாங்க, வெடிகளும், சூந்தும், சொக்குப்பனையும் களை கட்டும். வெடிய வெடிய சிறப்பா இருக்கும். நாம பாட்டெல்லாம் பதிஞ்சிட்டு வர்றம் இல்லீங்களா, அப்ப சூந்து ஞாவகம் வர, சூர்யா அவிங்ககிட்ட அதுக்கான பாட்டைக் கேக்க, அவரு தெரியாதுன்னு சொல்லிப் புட்டாருங்க. சரிங்க, எனக்குத் தெரிஞ்ச மேலதிக விபரங்களைப் பாக்கலாம் இப்ப.

தீபம் வெச்சி, அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, ஆம்புளைப் பசங்க அவிங்க ஆட்டத்தை ஆரம்பிச்சிருவாங்க. அதுக்குத் தேவையான சூந்தை முன்னாடியே தயார் பண்ணி வெச்சிருப்பாங்க. திறவக்கொடி(பிரிமனை), இல்லீன்னா வட்டமா இருக்குற எதனா ஒன்னை துணியால சுத்தி, அதை தீபத்துக்கு வாங்கி வெச்சு இருக்குற எண்ணையில ஊற வெச்சிடுவாங்க. அந்த வட்டமா இருக்குறத, நாய்ச் சங்கிலி, இல்லீன்னா உறி தொங்க உடுற சங்கிலியோட ஒரு கொணை(முனை)யில கோத்து விட்டுடுவாங்க. மறு கொணைய கையில வாகாப் புடிச்சுக்குற மாதர ஒரு குச்சியோட கட்டி வெச்சிருப்பாங்க. இதைத்தாங்க சூந்துன்னு சொல்லுறது. சூந்துன்னா கொடும்பாவி எரிக்கிறதுன்னும் ஒரு அர்த்தம் இருக்கு.

தீபம் வெச்சி அவிசேகம் எல்லாம் குடுத்தவின்னாடி, இதைத் தீயில பத்த வெச்சி, லாவகமா சுழட்டி சுழட்டி வெளையாடுவாங்க. காலுக்குள்ள உட்டு சுத்துவோம். தலைமேல சர் சர்ன்னு சுத்துவோம். இப்பிடி அவனவன் அவனவன் திறமையக் காமிப்போம். சும்மா சுத்துனா, ஆட்டம் வாட்டம் அவ்வளவு நல்லா இருக்காது. சுத்தி இருக்குறவிங்க, அதுக்குன்னு இருக்குற பாட்டுகளைப் பாடுவாங்க. பாடப் பாட, சுதியும் ஏறும். ஆனா, அந்தப் பாட்டுகெல்லாம் கொச்சையாவும், பாமரத்தனமாவுந்தான் இருக்கு. கொஞ்சமா நல்லவிதமான பாட்டுகளும் இருக்கு. இஃகிஃகி! எனக்கு ஞாவகம் இருக்குறதெல்லாம், மோசமான பாட்டுகதேன்.

படக்கட்டு படக்கட்டு படுக்கையிலே
படலைச் சாத்தி இருக்கையிலே
............................... (தணிக்கை, இஃகிஃகி)
.....................................................
சூந்தோ சூந்து!

மேக்கால ஊட்டு மாரியப்பனுக்கு
தும்மல் வந்துச்சாம்
செவுட்டுச் சிவகாமிக்கு
ஒடனே மாரு வலிச்சதாம்
மாரு வலிக்குதுன்னு
மாரியப்பன் ஓடி வந்தானாம்
ஓடி வந்த மாரியப்பனுக்கும்
செவுட்டுச் சிவகாமிக்கும்
சூந்தோ சூந்து!

இப்பிடி நெறய இருக்குதுங்க. உங்களுக்கு அந்த மாதர எதனாத் தெரிஞ்சா எனக்கு மின்னஞ்சல் செய்யுங்க. இந்த வட்ட வளையத்துக்கு பதிலா, தட்டுப் போர்ல இருக்குற தட்டுக் கத்தையோட மொனையில தீயை வெச்சி, அதையும் சுத்துவாங்க. அப்புறம், மசத்தனமா கண்டதையும் எரிக்குறதுதேன். இஃகிஃகி!

சொக்கப் பனை/ சொக்கப் பானை எரிக்குற வழக்கமும் இருக்கு. அதாவது, சொக்கர் வந்து காமனை அழிச்சதை ஞாவகப் படுத்துற விதமா, பனையோலைல குச்சு கட்டி, அதையும் கார்த்திகைத் திருநாள் அன்னைக்கு எரிப்பாங்க. அந்த சூந்துப் பாட்டுக தெரிஞ்சா, எனக்கு சொல்லுங்க. அப்புறம், அடுத்த கார்த்திகைக்கு நீங்களும் சூந்து வெளயாடுங்க... இஃகிஃகி!

நீர் ஆழம் கண்டுகிட்டாலும், நெஞ்சு ஆழம் காண முடியாது!

12/29/2008

கொல கொலயா முந்திரிக்கா...

இன்னைக்கு நாம பதியுறது அமிர்தவர்ஷினி அம்மா அவிங்களுக்கான வாசகர் விருப்பம். தொகுப்பில் உதவிய நண்பர், ROCKFORT மகேந்திரன் அவ்ர்களுக்கு நன்றி!

சுத்தி வர்றவரும், வட்டமா ஒக்காந்து இருக்குறவிங்களும் பாடுற பாட்டுங்க இது:


கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா

கொல கொலயா முந்திரிக்கா
கோலார்பட்டிக் கத்திரிக்கா

கொல கொலயா முந்திரிக்கா
கொழ(குழை)ஞ்சு போச்சு கத்திரிக்கா

மாமரத்துல மாங்கா
உன்வாயில ஊறுகா

புழுங்கரிசியத் திம்பேன்
பூட்டத்தான ஒடப்பேன்

வடிச்சதண்ணி சிந்துச்சே
வாரி வாரி நக்கிக்கோ

கொல கொலையா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி!

கொல கொல(குலை)யா முந்திரிக்கா
நிறைய நிறைய சுத்தி வா!!

இந்தப் பாட்டு பாடுறதுக்கு முன்னாலே, அம்மணிகளையும் ஆட்டத்துல சேத்திகிட்டு வட்டமா உக்கார வச்சிட்டு ஆட்டத்துல ஒருத்தர் கொல கொலயா சொல்லிகிட்டே உருமா (துண்டு)மாதிரி ஏதாவதை யாராவது ஒருத்தர் பின்னாடி போட்டுட்டு ஓடி தொட்டு விளையாடறதும் சேர்ந்தாதான் பாட்டுக்கே ஒரு கம்பீரம் வரும்! சொன்ன மகராசரு: ராஜ நடராஜன்

கிட்டி விளையாடுற‌ப்ப‌ பாடுற‌ பாட்டு:


ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!
ஈச்சி, எலுமிச்சி, பால‌குடுத்துப் பால‌ச்சி!!

நாலுக‌ர‌ண்டி நல்லெண்ணெய்
நாப்பத்தாறு தீப்பெட்டி
வாராரய்யா சுப்பய்யா
வழிவிடுங்க மீனாட்ச்சி
மீனாட்ச்சியம்மன் கோயில்ல‌
மில்லல் வாங்கிப் போட்டு
காமாட்ச்சியம்மன் கோயில்ல‌
கம்மல் வாங்கிப் போட்டு
தும்பி, துளசி, தூக்கிப்போட்ட நம்பட்டி!

ஈச்சி.. எலுமிச்சி.. டண் டண் டாமுச்சி!!


சின்ன அம்மிணி / முத்துலெட்சுமி-கயல்விழி அவிங்க‌ நினைவூட்டிய‌ பாட்டு:


குத்த‌டி குத்த‌டி சைன‌க்கா
குனிஞ்சு குத்த‌டி சைன‌க்கா
ப‌ந்த‌லிலே பாவ‌க்கா
தொங்குத‌டி டோலாக்கு
அண்ண‌ன் வாராம் பாத்துக்கோ
ப‌ண‌ங்குடுப்பான் வாங்கிக்கோ
சில்ல‌றைய‌ மாத்திக்கோ
சுருக்குப் பையில‌ போட்டுக்கோ
சிலுக்கு சிலுக்குண்ணு ஆட்டிக்கோ!

தாயின் மன‌ம் குழந்தையின் பள்ளிக்கூடம்!

12/28/2008

உழைப்பு


ஒன்னு ஒன்னா பொறுக்கி வந்தேன்
ஒன்னுமொன்னா பின்னி வெச்சேன்
பார்த்துப் பார்த்துக் க‌ட்டி வெச்சேன்
ப‌க்குவ‌மா ஊஞ்சல் ஆட‌‌ வெச்சேன்
வாகா வாச‌ல் விட்டு வெச்சேன்
ந‌னையாம‌ ந‌ய‌மா இறுக்கி வெச்சேன்
ந‌ல்ல‌ நாள்ல‌ அவ‌ளைக் கூட்டி வந்தேன்
வெளிச்ச‌த்துக்கு மின்மினிய‌ கோர்த்து வெச்சேன்!கொசுறு: ஆண் குருவிதான் கூடு கட்டுமாமுங்க. நல்ல விதமாக் கட்டி முடிச்ச அப்புறம், துணையில்லாம இருக்குற பெண் குருவிய அழைச்சிட்டு வந்து, கட்டின கூட்டைக் காண்பிக்குமாம் இந்த ஆண் குருவி. பெண் குருவி வீட்டை நல்லா சுத்தி பார்த்துட்டு, பிடிச்சிருந்தா கட்டின வீட்ல ஆண் குருவியோட குடி இருக்குமாம். இல்லைன்னா, கட்டின ஆண் குருவியயும் சேர்த்துக் கை கழுவிடுமாம்.

ஒருவர் பொறுமை இருவர் நட்பு!

12/27/2008

தினமலர்

நம்ம சூர்யா கிராமத்து விளையாட்டுகளைத் தொடரா பதிஞ்சுட்டு வர்றாருங்க. படிக்கலையின்னா ஒரு எட்டுப் போயிப் படிச்சுட்டு வாங்க. அதைப் படிச்ச தாக்கத்துல, ஊர் வழில நாமெல்லாம் பாடின பாட்டுகள்ல இன்னும் கொஞ்சத்தைப் பார்க்கலாம் இப்ப.

நீயும் நானும் கூட்டு
பாடு ஒரு பாட்டு
சில்லரைய நீட்டு
சிவகாசி வேட்டு
திண்டுக்கல்லுப் பூட்டு
திருப்பித்தலைய ஆட்டு


================================================

பனமரமே பனமரமே பச்சக் கண்ணாடி!
பல்லுப் போன கெழவனுக்கு ரெண்டு பொண்டாட்டி !!

================================================

மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டு எறும்பு கடிச்சுச்சாம்
காள்காள்ன்னு கத்துச்சாம்!

================================================

ஒன்னு
ஓடிவா கண்ணு

ரெண்டு
ரோசாப்பூச் செண்டு

மூனு
முகட்டுமேல தேனு

நாலு
நாய்க்குட்டி வாலு

அஞ்சு
அவரக்காப் பிஞ்சு

ஆறு
அதாபாரு தேரு

ஏழு
பானையில கூழு

எட்டு
டமடமக் கொட்டு

பத்து
படுக்கப் போட்டு மொத்து!

================================================

பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்கங்
கொப்பம் பேரென்ன?

முருங்கைப்பூ

முருங்கைப்பூவும் தின்னவனே
முன்னூறு காசு கொடுத்தவனே
பாம்புக்கைய மடக்கு

மாட்டேன்

================================================

மழை வருது மழை வருது
நெல்லுக் குத்துங்க‌!
முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்குச் சுடுங்க‌!
ஏர் ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க‌!
சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு போடுங்க!

================================================

பொக்கைப் பல்லு டோரியா
பட்சி பாக்கப் போறியா?
பட்டாணி வாங்கித் தாறேன்
பள்ளிக்கூடம் வாறியா?

================================================

அவரவர் வீட்டுக்கு
அவரைக்கா சோத்துக்கு
பிள்ளைபெத்த வீட்டுக்கு
புளியங்கா சோத்துக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வர்றேன் விளையாட்டுக்கு

================================================

கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு

ஈரிரிண்டைப் போட‌டா
இறுக்க‌ மாட்டைக் காட்ட‌டா

ப‌ருத்திக் கொட்டை வைய‌டா
முக்க‌ட்டு வாணிய‌ஞ் செக்க‌டா

செக்கும் செக்கும் சேந்தாட‌
வாணிய‌ன் வ‌ந்து வ‌ழ‌க்காட‌
வாணிச்சி வ‌ந்து கூத்தாட‌

நாலைவ‌ச்சி நாலுஎடு
நார‌ய‌ணன் பேரெடு
பேரெடுத்தபின்ன‌ பிச்சையெடு

அஞ்சுவ‌ர‌ளி ப‌சு ம‌ஞ்ச‌ள்
அரைக்க‌ அரைக்க‌ப் ப‌த்தாது
ப‌த்தாத‌ம‌ஞ்ச‌ள் ப‌சு ம‌ஞ்ச‌ள்

ஆக்குருத்த‌லம் குருத்த‌ல‌ம்
அடுப்புத்த‌ண்ட‌ல‌ம் த‌ண்ட‌ல‌ம்
வேம்பு சுட்டா வெங்க‌ல‌ம்

ஏழுபுத்திர‌ச் ச‌காய‌ம்
எங்க‌புத்திர‌ச் ச‌காய‌ம்
மாட்டுப்புத்திர‌ச் ச‌காய‌ம்

எட்டும் பொட்டும்
எட‌க்க‌ண்ணு பொட்டை
வ‌லக்க‌ண்ணு ச‌ப்ப‌ட்டை

ஒம்போதுந‌ரி சித்திர‌த்தை
பேர‌ன் பொற‌ந்த‌து பெரிய‌க‌தை
பெத‌ப்ப‌ம்ப‌ட்டிப் பெரிய‌த்தை

ப‌த்துரா சித்திரா கோலாட்ட‌ம்
ப‌ங்குனி மாச‌ங் கொண்டாட்ட‌ம்!
ஆடிவெள்ளி வ‌ந்துச்சுன்னா
அம்ம‌னுக்க‌ல்ல‌ கொண்டாட்ட‌ம்!!


தலைவாசல்ல படிக்கிறது தினமலரு!
பின்வாசல்ல தாண்டுறது மதில்சுவரு!!

12/26/2008

அப்பிச்சி

முதுகு மேலஏறி பிஞ்சுக் காலால
மிதிச்சுவிட்டா பத்து பைசாகுடுப்பீங்க!
காலுரெண்டும் புடிச்சிவிட்டு வெத்தலை
பாக்கு கொட்டிக்குடுத்தா நாலனாவும்
திறகணிச்சொம்பு நிறைய காப்பித்தண்ணி
தோட்டம் கொண்டுவந்தா எட்டனாவும்
கெழக்காலூரு காளியாத்தா நோம்பிக்கு
கையில பம்பாய்முட்டாய்க்
கடியாரம் பூனைக்கண்ணாடியோட‌
ரெண்டு சீக்கியும் வாங்கித் தருவீங்க!

வேலூர் சந்தையில பொரிஉருண்டை
கெழங்கு வத்தலும் வாங்கிவருவீங்க!!
மணியாமணியான்னு மாருல போட்டுத்தான‌
கொஞ்சுவீங்க; தோள்ள ஒக்காரவெச்சு
காததூரம் காத்துவாங்கப் போவீங்க! இப்ப
எனக்கு சந்தையுமில்ல, நோம்பியுமில்ல,
வாகாக் கதைசொல்ல நீங்களுமில்ல!!

எழுதி வழங்கான் வாழ்க்கை, கழுதை புரண்ட களம்!

புதிதாய்ப் பிறந்தேன்!


புதிதாய்ப் பிறந்தேன்!

காலதேவனின் சுழற்சியில்
தினம் தினமும் புதிது
புதிதாய்ப் பிறக்கிறேன்!

இதயத்தில் உறையும் இருள்
அதில் அமிழ்ந்து சாவதும்,
பின் வீறுகொண்டு
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

கனவு மேகம் கலைகிறது, அது
கண்டு மனம் வாடுவதும்,
பின் துளிர்த்து
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

ஏமாற்ற இருள் சூழ்வதும், அது
கண்டு மனக் கண்கள் தவிப்பதும்
பின் நம்பிக்கையொளி கண்டு
எழுவதுமாய்ப் பிறக்கிறேன்!

காலதேவனின் சுழற்சியில்
தினம் தினமும் புதிது
புதிதாய்ப் பிறக்கிறேன்!

12/25/2008

பெய்த மழையில் காணாமல் போயினவா?

ஊர்ல மழையா கண்ணு? இந்த கேள்விங்றது நம்ம ஊர்கள்ல வணக்கஞ் சொல்லுற அளவுக்குப் புழக்கத்துல இருக்கும். ஆமுங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டா இதான் கேக்குறது. இன்னைக்கு அதெல்லாம் போயி, உங்க வீட்ல அந்தத் தொலைக்காட்சி காணக் கிடைக்குதா, இது கிடைக்குதான்னு கேட்கிற அளவுல வந்து நிக்குது. இங்க அமெரிக்காவுல கேக்குறது, "இன்னும் வேலைலதான இருக்கே? பிரச்சினை ஒன்னும் இல்லியே??"ங்ற அளவுல இருக்குங்க பொழப்பு.

நாம‌ இப்ப‌ விடுப்புல‌தான இருக்கோம். ச‌ரி, ந‌த்தார் விழாவ‌ முன்னிட்டு, ந‌ம்ம‌ அமெரிக்க‌ ந‌ண்பன் திமோதி (Tim)க்கு ஒரு வாழ்த்துச் சொல்வோமேன்னு, தொலைபேசில‌ அழைச்சு, வாழ்த்து சொல்லிப் பேசிட்டு இருந்தேன். அப்ப‌, அவ‌னோட‌ அண்ண‌ன் புது வீடு க‌ட்டி இன்னைக்கு குடி போறானாமுங்க‌. அதைப்ப‌த்தி சொல்ல‌, நாம‌ இந்த‌ சூழ்நிலையில‌ எதுக்கு புது வீடுன்னு கேட்க‌, அவ‌ன் சொன்னான், "ம‌ணி, இது அவ‌னும் எங்க‌ப்பாவுமா சேந்து க‌ட்டின‌ வீடு. வெளியாளுக‌ யாரும் க‌ட்ட‌லை, அத்னால‌ வெறும் $90000தான் செல‌வு ஆச்சு!". என‌க்கா ஒரே ஆச்ச‌ரிய‌ம், "என்ன‌து, அவிங்க‌ளே க‌ட்டிட்டாங்க‌ளா? க‌ட்டிட‌ வேலை செய்ய‌த் தெரியுமா??"ன்னு ம‌றுப‌டியும் கேட்டு உறுதிப் படுத்திகிட்டேன்.

போன‌ வார‌ம் என்ன‌டான்னா, நம்ம த‌மிழ் ந‌ண்ப‌ர் ஒருத்த‌ரு, அவ‌ரே ஒரு விசைப் ப‌ட‌கை, வீட்டுப் புற‌க்கொல்லைல‌யே க‌ட்டிகிட்டேங்றாரு. இப்ப‌ இது எல்லாம் எதுக்கு சொல்ல‌ வ‌ர்றேன்னா, இங்க‌ அமெரிக்கால, இது ஒன்னைப் பாராட்டியே ஆக‌னும்ங்க‌. என்ன‌தான் அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சின்னாலும், ப‌ழ‌மைய‌க் காப்பாத்துற‌துல‌ இவிங்க‌ள‌ மிஞ்ச‌ ஆளே கிடையாது. முழுநேர‌த் தொழில் ஒன்னா இருக்கும், ஆனாலும் கிடைக்குற‌ உப‌ரி நேர‌த்துல‌ விவ‌சாய‌ம், மீன்பிடித் தொழில், வீடு க‌ட்டுற‌து, தேனீ வ‌ள‌க்குற‌துன்னு எதாவ‌து ஒன்னு செய்துட்டு இருப்பாங்க‌. ஆச்ச‌ரிய‌மா இருக்கு. திமோதியோட‌ அண்ண‌ன் இங்க‌ இருக்குற‌ வ‌ங்கியில‌, மென்பொருள் க‌ட்டுமான‌ நுட்ப‌ இய‌க்குன‌ர் (technical director). ஆனாலும், கொத்த‌னார்/த‌ட்டான் வேலைல‌ அத்துப‌டியா இருக்காரே?! நான் போயி, ஏர் பிடிச்ச‌ன்னு வெச்சிகோங்க‌, ஊர்ச‌ன‌ம் சிரிப்பாச் சிரிச்சிப் போடும். என‌க்கு ஏர் பிடிக்க‌த் தெரியும்னு சொன்னா, நீங்க‌தான் ந‌ம்புவீங்க‌ளா என்ன‌?!

இப்ப‌டி அமெரிக்காவுல‌, ப‌ழ‌மை ப‌ற்றின‌ ஆராய்ச்சியும், பேணுவ‌தும் ச‌த்த‌மில்லாம‌ ந‌ட‌ந்துட்டுதான் இருக்கு. என‌க்குகூட‌, வீர‌ப்ப‌னைக் கொன்னு போட்டாங்க‌ன்னு சொன்ன‌ உட‌னே வ‌ருத்த‌மா இருந்துச்சு. அவ‌ர் மேல‌ இருந்த‌ அனுதாப‌மோ, அவ்ர் நிர‌ப‌ராதின்னோ நான் சொல்ல‌ வ‌ர‌லை. காட்டாட்சி ந‌ட‌த்தின‌ ஒருத்த‌ர்கிட்ட‌, அவ‌ரோட‌ அனுப‌வ‌ங்க‌ள், இய‌ற்கை ப‌ற்றின‌ நுணுக்க‌ங்க‌ள் எல்லாம் தெரிஞ்சி, அதுகளை ஆய்வுக்குட்ப‌டுத்துற‌ ஒரு வாய்ப்பு சாக‌டிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌தேங்ற‌ ஒரு ஆத‌ங்க‌ம்தான். அவ‌ருக்கு இய‌ற்கைய‌ப் ப‌ற்றின‌ விப‌ர‌ங்க‌ள் எல்லாம் அத்துப‌டியாமுங்க‌. அதுவும் அவ‌ரோட‌ அனுப‌வ‌த்துல‌ வ‌ந்த‌தாமுங்க‌. ம‌ழை வ‌ர்ற‌துக்கான‌ அறிகுறிக‌ள‌ அவர் சொன்ன‌தாப் ப‌டிச்ச‌துல‌ இருந்து, என‌க்கு நினைவுல‌ இருக்குற‌து.

தாழ்வான‌ ப‌குதியில‌ இருக்குற‌ எறும்புக‌ள், மேடான‌ இட‌த்துக்கு சாரை சாரையா உண‌வுப் பொருளைக் க‌ட‌த்தினா, அது ம‌ழை வ‌ர்ற‌துக்கான‌ அறிகுறி.

ப‌ற‌வைக‌ள் முன்கூட்டியே கூட்டுக்கு வந்து அடைஞ்சாலோ, அல்ல‌து வ‌ழ‌க்க‌மா கிள‌ம்பிப் போகுற‌ திசையில‌ ஏதாவ‌து மாற்ற‌ம் இருந்தாலோ, அது ம‌ழை வ‌ர்ற‌துக்கான‌ அறிகுறி.

புழுக்கமா இருந்து, தும்பிக் கூட்ட‌ம் தாழ்வா ஒரு தொகுதியாப் ப‌ற‌ந்து ஆல‌வ‌ட்ட‌ம் போட்டாலும், அன்னைக்கு ம‌ழை வ‌ருமாமுங்க‌.

தெளிஞ்சு இருக்குற‌ வான‌த்துல‌, நிலாவைச்சுத்தி வ‌ட்ட‌மா வெண்மேக‌ம் சூழ்ந்து இருந்தாலும் அது ம‌ழைக்கான‌ அறிகுறியாமுங்க‌.

காற்றோட்ட‌ம் திசைமாறி, ம‌ண்வாச‌னை அடிக்கிற‌ப்ப‌வும் ம‌ழை வ‌ருமாம். கொங்கம‌ழை, கோடை ம‌ழைன்னெல்லாம் சொல்லுவாங்க‌. அதுக‌ளுக்கான‌ விப‌ர‌ம் ம‌ற‌ந்து போச்சுங்க‌. ஊருக்குப் பேசும்போது கேட்க‌ணும்.

அடிவானங் கறுத்தாலும், சீக்கிரத்துல மழை வரும். இப்படி, பெரியவிங்க இயற்கைய நல்லாப் புரிஞ்சு வெச்சிருந்தாங்க. சரிங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி மழை அடிக்கும் போது, எனக்கு ஏற்பட்ட பழைய நினைவுகள‌யும் இங்க பதியுறேன்.

சூழல்: மழை பெய்த இரவுக்கு ஒட்டிய காலை நேரம்

முற்பகலிலே கட்டியம் கூறிய,
தும்பிக்கூட்டம்!
பெய்த மழையில் பெருத்துப்போன
வெடிக்காத பருத்திக்காய்கள் !!

சுற்றி வளைத்தடித்த சாரலில்
சுத்தமாகிப் போன கோபுரக்கலசங்கள்!
பொங்கிய கண்மாயைச்சுற்றி வேடிக்கை
பார்த்த ஊர்க்கூட்டம்!!

திடீர் எனப்பிறந்த சிறுகுளங்கள் ஊர்த்தெருவில்,
நீர் கிழிய அதில் ஏர்க்குச்சி ஓட்டிய சிறுவர்கள்!
ஊர்க்கண்மாயில் சில்லடித்துப் போட்டி
நடத்திய உற்சாக விடலைகள்!!

ஏர்க்கலப்பை தேடி அங்குமிங்குமாய்
அலையும் நேற்று வரை சோம்பிய உழவன்!
கைக் களை எடுக்க நெட்டி முறித்து,
ஆயத்தமாகிக் காடு நோக்கும் காரிகைகள்!!

மட்டம் உயரக்கண்டு கேணியில் சாலோட்ட
காளைகளை நோக்கும் உழைப்பாளி!
அடித்த மழையில் புடைத்த காளான்களைப்
பறிக்கப்போன முதியவர் கூட்டம்!!

அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!

ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
அலைகின்றேன் நினைவுகளின் எச்சமாய்!
ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இதனை!!


12/24/2008

பழசு படங்கள் பாருங்க!

1860ல புழங்கின பால் கொள்கலன்

1820ல உபயோகத்துல இருந்த குதிரை வண்டி!1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.

1860ல புழங்கின‌ மனிதர்களை மனிதனால் இழுக்கும் இழுவண்டி

அஞ்சல கூட, மங்கம்மா!

மங்கம்மா, அஞ்சலையுடன் உரையாடுவது:

பேரு: நானு அஞ்சாத தலை, அதான் எம்பேரு அஞ்சல.

வயசு: எவடி இவ? ஒரு உழவு உழுதாலும் உழவுதான், ஒரு புள்ள பெத்தாலும், கெழவி கெழவிதாண்டி!

வேலை: எனக்கு அடுப்பே திருப்பதி, கட்டுனவனே குலதெய்வம்.

பொழுது போக்கு: யானையேற யோகம் வந்தாலும் தவ்வத் தெரியனுமே! ஒரு மண்ணும் இல்லடி மங்காத்தா!!

பிடிச்ச நபர்: சோறு சிந்துனா பொறுக்கலாம், சொல்லு சிந்துனா பொறுக்கவா முடியும்? ம்ம், கட்டுன மவராசந்தான்!

சொல்ல விரும்புறது: ரெண்டு பொண்டாட்டிகாரன் சிண்டப்பாரு, கஞ்சாக்குடிச்சவன் கண்ணப்பாரு!

பிடிக்காதது: ஆடத் தெரியாதவதான், கூடம் கோணல்னு சொல்லுவா. என்னையேன்டி வம்புக்கு இழுக்குறே?

படிப்பு: மாங்காயத்தின்னு உங்கம்மா உன்னை மடியில பெத்தாக, தேங்காயத்தின்னு எங்கம்மா தெருவிலயா பெத்தாக? நானும் படிச்சு இருக்குறன்டி, மருவாதியா பேசுடி மங்காத்தா.

சொத்து: யாரடி இவ?
கொடுத்துக்கெட்டவன் மாபலி
கொடுக்காமக்கெட்டவன் துரியோதனன்
தொட்டுக்கெட்டவன் சூரபத்மன்
தொடாமக்கெட்டவன் ராவணன்
சொத்தாசைல கெட்டவன் நெறய!
எனக்கு சொத்து, நிம்மதிதாண்டி மங்கு!!

கேள்வி கேட்டு நொந்த மங்காத்தா:
உண்டு கெட்டது வயிறு!
உண்ணாமக் கெட்டது உறவு!!
கையக் கொஞ்சம் நனச்சிட்டு போடீ இவளே!!(இவங்க பேச்சக் கேட்ட நாம: எண்ணெ முந்துச்சா? திரி முந்துச்சா?? எதுக்கும் மெதுவாவே பேசுவோம். காதுல விழுந்திடப் போவுது?!)

12/23/2008

நண்பரோட பதில்


சொலவடைகள் பத்தின நம்ம பதிவுக்கு, நண்பர் வெற்றிச் செல்வன்(ஜெயக்குமார்) அனுப்பின பதிலுரை தான் இந்த பதிவு:

அசத்தல் மன்னர்கள் பாத்திட்ருக்கும்போது சில 'அறுப்புகள்' தாங்கமாட்டாம, கொஞ்சம் கணிணிய தட்டி, மணி என்னா சொல்றாருன்னு பாத்தா(மணி தப்பா எடுத்துக்காதீங்க... ச்சும்மா, ஒரு மொக்கைக்குத் தான்), தன்னோட பழைய நினைவுகள தட்டி, நம்மளையும் ஏக்க பெருமூச்சு விட வச்சிட்டாரு...

மணி, சொலவடைகள ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள்... இவற்றில் பல சொலவடைகளை எனது அம்மா, அப்பா மற்றும் அறிந்த சிலரிடம் இவ்வாறு கேட்டிருக்கிறேன்...

நாம: ஏம்மா...ஏன் உன்னை எல்லாரும் இப்ப‌டி எள‌க்கார‌மா நெனைக்கிறாங்க‌...

அம்மா: (சலித்துக் கொண்டே)ம்ம்ம்...கொண்டவன் சரியிருந்தா, கூரையேறி சண்டை போடலாம்...

நாம: ஏம்ப்பா...சில‌ ச‌ம‌ய‌ங்க‌ல்ல‌, உங்க‌ள‌ மாதிரியே என்னாலேயும் கோப‌த்த‌ அட‌க்க‌ முடிய‌ல‌...

அப்பா: வெத‌ ஒன்னு போட சொர‌‌ ஒன்னாடா மொளைக்கும்... அப்ப‌டித்தான்டா இருக்கும்..

ஒரு நீண்ட‌ ப‌ய‌ண‌த்தின் போது, ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் நம்ம‌ சிற்றூர்தி(car)ய, பின் தொட‌ர்ந்து ஓட்டிக்கிட்டிருந்தார். நாம‌தான் வேக‌க் க‌ட்டுப்பாட்டை சில‌ ச‌ம‌ய‌ங்க‌ல்ல‌ ம‌திக்க‌ற‌தில்லையே...அப்பாவி ந‌ண்ப‌னும் ந‌ம்ம‌ள‌ விடாம‌, ந‌ம்ம‌ வேக‌த்தில‌, பின் தொட‌ர்ந்து ஓட்டிக்கிட்டு தான் வ‌ந்தாரு... அதாவ‌து மாமா வ‌ந்து வேகத்துக்கான அபராதச்சீட்டு குடுக்க‌ற‌ வ‌ரைக்கும்... நாம‌ என்னடா ந‌ண்ப‌னை ரொம்ப‌ நேர‌மா பின்னாடி காணோமேன்னு, அவ‌ரோட‌ கைபேசிக்கு கூப்பிட்டு,

நான்: மாமா...என்னடா, வழி தவறிட்டியா? ரொம்ப‌ நேர‌மா பின்னாடி ஆளையே காணோம்??

ந‌ண்ப‌ன்: (நொந்த படியே) டேய்...நொங்க‌ தின்ன‌வ‌ன் ஓடிட்டே...அத‌ நோண்டித் தின்ன‌வ‌ன் மாட்டி கிட்டேன்...

ச‌த்திய‌பாமா கல்லூரில ப‌டித்துக் கொண்டிருந்த‌ கால‌ம். கால் க‌டுக்க‌, ப‌ல்ல‌வ‌னில் ப‌ழைய‌ ம‌காப‌லிபுர‌ம் சாலையில் ப‌ய‌ணித்துக் கொண்டிருந்த‌ போது, கந்தன்சாவடி அருகே கடைசி சீட்டுக்காக‌ இரு பெண்க‌ள் (ஐயே..பொம்ப‌ளைங்க‌ளா அதுங்க..ப‌ஜாரிங்க..)ச‌ண்டை போட்டுக் கொண்ட‌து,

முத‌லாம‌வ‌ள்: (சீட்டுக்கு போட்டி போட்ட இன்னொருத்தியைப் பார்த்து) ஐயே...கொஞ்ச‌னாச்சுக்கும் வெக்க‌மே இல்லாம‌, ஆம்ப‌ளைங்க‌ கூட‌ இடிச்சிகினு ஒக்கார‌ இப்ப‌டி அலையிறியே...

இன்னொருத்தி: முடி இருக்க‌ற‌வ‌ அள்ளி முடிச்சு முடிஞ்சிக்கிறேன்... மொட்டையா இருக்க‌ற‌வ‌ இந்த‌ சிலுப்பு சிலுத்துக்கிறியே...

தூக்க‌ம் க‌ண்க‌ளை சுழற்றுவ‌தால்..நாளை தொலைபேசியில், க‌தை பேசிக்க‌லாம்..

இவன்,
'புண்'ணிய‌ கேடி

சொலவடை

நம்ம ஊர்கள்ல பேசுற சொலவடைங்க நெறய;அப்பப்ப ஞாபகத்துக்கு வரும். அதுல கொஞ்சத்த பாப்போம் இன்னைக்கு.

எடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்.

அம்மி அடிச்சன்னைக்கே, குழவியும் அடிச்சு இருப்பான்.

கொண்டவனை அறிஞ்சுதான் கூரை ஏறி சண்டை போடணும்.

ரோசக்காரனுக்கு கடனக் குடு; மழுமாரிக்கு பொன்னக் குடு.

கம்மங்கருதக் கண்டா கை சும்மா இருக்குமா? இல்ல,
மாமன் மகளக் கண்டா வாய் சும்மா இருக்குமா??

வெதை ஒண்ணு போட சுரை ஒண்ணா முளைக்கும்?

புருசனும் பொண்டாட்டியும் சாமி ஆடுனா, புள்ள தூக்குறது யாரு?

புள்ள வேணுங்குறவ வாயக் கட்டணும்; புருசன் வேணுங்குறவ வயத்தக் கட்டணும்.

மக வரமுன்ன பூட்டிக்க கழத்திக்க; மருமக வரமுன்ன உண்டுக்க திண்டுக்க.

இனம் இனத்தோட; வெள்ளாடு தன்னோட.

ஆள் போனா அதர்மம்; மகன் போறது மததிமம்; தான் போறது தர்மம்.

பார்த்துக் கெட்டது புள்ள;பாராமக் கெட்டது பயிறு.

வெல்லந் தின்னவனை விட்டுட்டு வெரல் சூப்பினவனை
புடிச்சிட்டு போனா எப்படி?

முடி உள்ள மகாராசி முன்சடை போடுவா,பின்சடை
போடுவா;
மொட்டைத் தலைக்காரி என்ன செய்ய முடியும்?


(மனுசி வர்றா! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; போய், வேலை வெட்டி ஏதாவது செய்வோம். ராவுக்கு கஞ்சி குடிக்கணும் இல்ல?!)

பிரபலப் பதிவும், சூடான இடுகையும்!


தோணி வருகுதுண்ணு
துறைமுகமே காத்திருந்தேன்
தோணி கவுந்திருச்சே
துறைமுகமே ஆசையில்லை!

கப்பல் வருகுதுண்ணு நான்
கடற்கரையே காத்திருந்தேன்
கப்பல் கவுந்திருச்சே
கடற்கரையே ஆசையில்ல‌!

எலுமிச்சை வளரும் புளியங்குடி
வளர்ந்து என்ன செய்ய?
பறிக்கவும் ஆள் இல்ல,
பாதுகாக்கவும் ஆள் இல்ல!

கொச்சி மலையாளம்
கொடி படருங் குற்றாலம்
கொடிபடர்ந்து என்ன செய்ய?!
என் குணமுடையார் இல்லாம!

மஞ்சி மலையாளம்
மா படருங் குற்றாலம்
மா படர்ந்து என்ன செய்ய?!
மதிப்புடையார் இல்லாம!

பதிவு பிரபலமாகுமுன்னு
வலையுலகங் காத்திருந்தேன்
பதிவு புதைஞ்சே போவுது
அதெனக்கு ஆவுறதில்ல இனிமேலு!
அதெனக்கு ஆவுறதில்ல இனிமேலு!!


================================================

சூடான இடுகைக்கு ஒருநாளுங்
காத்திருக்க‌ வில்லை நானு!
சொக்குப் பொடியின்னானு
கேட்டு வைக்க, நானும‌தைச்
சொல்லி வெக்க, சூடாகிப்
போனெதென்ன‌ சொன்ன‌ப‌ழ‌ம‌!

பொன்னும‌ணி க‌ண்ணும‌ணி
வாய் சிரிச்சுப் பேசி வ‌ந்தா
வாழ்க்கை நெய் ம‌ண‌க்கும்
வாச‌நறும் பூ ம‌ண‌க்கும்
வாகை சூடி நீ ஆவ!
சூடான‌ துமுன்னைச் சூடிவ‌ரும்!!
சூடான‌ துமுன்னைச் சூடிவ‌ரும்!!

கண்டதே காட்சி கொண்டதே கோலம்!

12/22/2008

தமிழ் இலக்கியத்தின் ஒரு சர்ச்சை

பழமைபேசியாரே,

ஔவையாரும் ஒட்டக் கூத்தரும் சம காலத்தவர்களாக இருக்க முடியாது. ஏனெனில், திருவள்ளுவரும், ஔவையும் சம காலத்தவர்கள். ஔவையின் சிபாரிசால் தான், பாண்டிய மன்னன், திருக்குறளை, மதுரை பொற்றாமரைக் குளத்திலுள்ள சங்கப் பலகையில் ஏற்ற முடிந்தது. ஔவையின் சிபாரிசு இல்லாமலிருந்தால், அன்றே திருக்குறளை பரிகசித்து, அறியாமையால், பாண்டிய மன்னன் ஒதுக்கியிருப்பான். இதிலிருந்து மற்றொரு உண்மையும் புலப்படுகிறது. அதாவது, திருவள்ளுவர் நிச்சயம் நாஞ்சில் நாட்டவராகத்தான் இருக்க முடியும் (மைலாப்பூரில் அல்ல).ஒட்டக்கூத்தரும் கம்பரும் சம காலத்தவர்கள். ஆகவே, ஒட்டக் கூத்தருக்கு தக்க பதிலடி கொடுத்தவர் கம்பராகத்தான் இருக்க முடியும்.

--வெற்றிச்செல்வன் (ஜெய் சுப்ரமணியன்)


அய்யா,

வணக்கம்! _/\_ நேற்று தான் உங்கள் இளவல் அன்பர் கண்ணன் அவர்களிடம் உங்களைப் பற்றி அளவலாவிக் கொண்டு இருந்தேன். உமது கடிதம் கண்டு மகிழ்ச்சி. மேலும் பல அலுவல்களுக்கு இடையில் அக்கறையுடன் எமது பதிப்புகளையும், குழுமத்தாரிடமும் கேட்டறிந்தமைக்கு நன்றிகள். கிடைக்கும் கால அவகாசத்தில் பிறந்த மண்ணில் உற்றார் உறவினருடன் பொழுதைக் கழித்து இனிமையுற வாழ்த்துகிறோம்!

புலவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய உமது குறிப்புகள் கண்டு உவகை உற்றோம். யாமும் இவை பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் கேள்விப்பட்டது உண்டு. இருந்தாலும், அதனை உரிய தருணம் வாய்க்கும் பொழுது பதிவிடுவோம் என எண்ணி இருந்தோம். தாங்கள் அத்தகைய கிடக்கையை வெளிக் கொணர்ந்தமையால், வாய்க்கப் பெற்ற இத்தருணத்தை பயன்படுத்திக் கொள்வோமாக!!

"எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது."


யாம் குறிப்பிட்ட இந்தப் பாடல் ஔவையார் எழுதிய ஒன்றே! ஒட்டக்கூத்தரும் ஔவையாரும் சமகாலத்தில் வாழ்ந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆம், இன்றளவும் புலவர்கள் வாழ்ந்த காலம் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிராகவே உள்ளது. இருந்தாலும், ஔவையார் இந்தப் பாடலை ஒட்டக்கூத்தருக்கு எதிராகப் பாவித்தாரா அல்லது கவி காளமேகப் புலவருக்கு எதிராகப் பாவித்தாரா என்பது பற்றிய விவாதமே யாம் அறிந்த ஒன்று. நீங்களோ, மூன்றாவதாக, இந்தப் பாடலை ஔவையார் எழுதி இருக்க வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள்.

ஔவையார் கடைச்சங்க((கி.மு. 300 - கி.பி. 300) காலத்தில் வாழ்ந்த பெண் புலவராவர். இவர் இளமையில் மணம் புரிய மனம் இல்லாமல், தனக்கு முதுமையை அளிக்குமாறு இறைவனிடம் வேண்டவே, இவர் முதியவரானார் என கூறப்படுவதுண்டு. இவருடைய படைப்புகளுள் ஆத்தி சூடி, விநாயகர் அகவல், கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது, ஞானக் குறள், பந்தனந்தாதி ஆகியவை அடங்கும். புறநானூறு முதலிய சங்க நூல்களில் அவரது பாட்டுக்கள் காணப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் அளித்த நெல்லிக்கனியை உண்டு இவர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தாரெனச் சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த ஔவையார் தவிர, பல ஔவையார்கள் வேறு வேறு காலங்களில் வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.

உண்டிச் சுருக்குவது பெண்டிற்கு அழகு என்று கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை சங்ககாலத்தவரல்ல.

கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டுவரை ஒளவை என்ற பெயரில் எழுதியவர்கள் ஆறு பேர்.

கி.பி. 2ம் நூற்றாண்டு: சங்ககால ஒளவை: 59 சங்கப் பாடல்கள் எழுதியவர், அதியமான் நெடுமானஞ்சியின் தோழி

கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம்: பாரி மகளிர் பற்றி எழுதிய ஒளவை

கி.பி 14 முதல் 17ம் நூற்றாண்டு: ஆத்திச் சூடி கொன்றை வேந்தன் எழுதியவர்

கி.பி 18ம் நூற்றாண்டு : விநாயகர் அகவல் எழுதியவர், அசதிக் கோவை எழுதியவர்

18ம் நூற்றாண்டுக்குப் பின்: கல்வி ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதியவர். இதே காலத்தில் ஒரு ஒளவை இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான மகாகவியின் மகள். கவிஞர் சேரனின் தங்கை. அவரை மேற்குறிப்பிட்ட கணக்கில் சேர்க்கவில்லை.

ஆகவே, இந்தப் பாடலை ஏதோ ஒரு ஔவையார் ஒட்டக் கூத்தருக்கு எதிராகப் பாவித்து இருக்கலாம். கவி காளமேகத்துக்கு எதிராகவும் பாவித்து இருக்கலாம். அல்லது கம்பருக்கு எதிராகவும் பாவித்து இருக்கலாம். ஏனென்றால், இம்மூவருமே ஏதோ ஒரு ஔவையை இகழ்ந்தோ அல்லது எள்ளலாகவோ எழுதியதாக பாடல் உண்டு. இவர்களுள் ஒட்டக் கூத்தரும் கம்பரும் வாழ்ந்தது கி.பி. 11 ஆம் நூற்றாண்டு, காளமேகம் வாழ்ந்தது 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டு.

கொசுறு: நீவிர் பாண்டியர் புகழ் பாடுவதையே வழமையாக வைத்திருக்கிறீர்கள் போலும். யாமும் பதிற்றுப்பத்து கற்று எம் நாட்டு மன்னர்கள் பதின்ம சேரர் புகழ் பாட வேண்டி இருக்கும் என்பதை தங்கள் கவனத்திற்கு பணிவன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

"மாற்றுக் கருத்துகள் இருப்பின் தெரியப் படுத்தவும். சரியான தகவல்கள் சேகரிப்பதுவே எமது விருப்பம்!"

12/19/2008

உண்மைச் சம்பவம்: மிரட்டலுக்குப் பணிந்த பதிவர்!

வணக்கம்! இந்த பதிவர், சமீப காலமா வீட்ல இருந்தபடியே பொழப்பு பார்த்துட்டு இருந்தாரு. அவர் வேலை செய்யுற நிறுவனத்துல, "நீங்க இந்த ஆண்டு கடுமையா உழைச்சு இருக்கீங்க! போயி குடும்பத்தையும் பாத்துக்குங்க, இந்தாங்க உங்களுக்கு மூணு வாரம் ஊதியத்தோட விடுமுறை, போயி அனுபவிங்க!"ன்னு சொல்லவே, அந்த பதிவரும், முடிஞ்ச வரைக்கும் பதிவுகள எழுதி பொழுதைப் போக்கினாரு.

அந்த நேரத்துலதான் வந்தது ஒரு மிரட்டல்! என்ன இது? வீட்ல ஒக்காந்து பொட்டி தட்டிட்டு இருக்கறதுக்கா, வேலைல உங்களுக்கு விடுப்பு குடுத்து இருக்காங்கன்னு கேட்டு மிரட்டவே, அவரும் பணிஞ்சு, அவிங்களயெல்லாம் அழைச்சிட்டு வெளியூர் கிளம்ப ஆயத்தமாயிட்டாரு. இனி வீடு வந்த சேர்ற வரைக்கும் எத்துனை இடி விழுகுதோ? அடி விழுகுதோ?? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! அடச் சே... நாக்குத் தப்புது!! அந்த ஆள்பவளுக்கே வெளிச்சம்!!!


வீட்டுத் தலைவன், வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி கூற எதிர்த்த வீட்டுத் தலைவனிடம் சென்று சொல்வது:

சண்டையில்லா ஊருக்கு சண்டைக்குப் போறேன்!
எதிர்த்த வீட்டு வாயிலி, என் வீட்டைப் பாத்துக்கோ!!

வீட்டுத் தலைவனின் பரபரப்பைப் பார்த்த எதிர்த்த வீட்டுத் தலைவன்:

கத்தாளப் பொட்டி கத்திரிக்கா,
மத்தாளம் போடுது குட்டியப்பா!

எதிர்த்த வீட்டுக்குச் சென்றவனின் தமாதத்தைப் பார்த்த தலைவி:

வாரான் வாராண்ணு வழியப்பாத்து
வர்ற சமயத்துல வழிச்சிநக்கி
என்னையடிச்சான் புள்ளயடிச்சான்
வகுத்துக்குட்டிய நழுங்கடிச்சான்
எள்ளுக்காட்டுல இழுத்தடிச்சான்!

தலைவனின் பரபரப்பைப் நினைத்த, எதிர்த்த வீட்டுத் தலைவன்:

பகல்லயே பசு மாடு தெரியாது;
இருட்டுல‌ எருமைமாடு தெரியுமா இவ‌னுக்கு?

தலைவியின் சீற்றத்தை நினைத்தவாறு வீட்டுத் தலைவன்(பதிவர்) உங்களிடம் சொல்வது:

மானாம் ப‌த்தினி த‌ண்ணிக்குப் போனா!
மான‌ம் ப‌த்திகிச்சாம்!! அட‌
அந்த‌ ம‌யிலாப்பூரும் ப‌த்திகிச்சாம்!
அதுல‌யிருந்து திரும்பிப்பாத்தா
ஆல‌ம‌ர‌மும் ப‌த்திகிச்சாம்! அது
ந‌ல்லா இருக்குது ஞாய‌ம்!
வெளுத்துப் போச்சு சாய‌ம்!!
நான் வாறேன் அப்ப‌!!! இஃகி!ஃகி!!

12/18/2008

தமிழ்ப் பிரபலம் சுத்தி விடப்பட்டாரா?

வணக்கம்! இன்று இந்தப் பதிவின் மூலமாக, தமிழ்ப் பிரபலம் ஒருவரைப் பற்றிய நிகழ்வு ஒன்றைப் பதிவிடுகிறேன். அதன் முன்பாக, யாம் கனடா நாட்டில் இருந்த பொழுது, எமது நண்பரிடம் நடந்த ஒரு உரையாடலைத் தெரிந்து கொள்வது அவசியம். அன்று காலையில், வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் நூலகம் சென்றடைந்து, அங்கிருக்கும் வெண்குழல் ஊது மூலையை நோக்கிச் சென்றேன். அங்குதான் பெரும்பாலும் எமது நண்பர்கள் இருப்பர்.

அங்கேதான் நண்பர் பராபரன் இருந்தார், முகம் சற்றுப் பேயறைந்தாற்ப் போல இருந்தது. அதைக் கண்டதும், எமக்குள் நடந்த உரையாடல்,

"வணக்கம், பராபரன்! ஏன் மொகம் வெளிரிப் போய் நிக்கறீங்க‌?"

"ஒன்னும் இல்ல மணி, நம்ம‌ சுதன், மனுசனை நல்லாச் சுத்தி விட்டுட்டான், அதான்!"

"ச‌ரி, விடுங்க‌! இப்ப‌ எங்க‌ அவ‌ன்?"

"இங்க‌தான் இருந்தான் இந்நேர‌ வ‌ரைக்கும், நாயி! இப்ப‌த்தான் உள்ள‌ போயிருக்குறான் அந்த நாயி!!"

"ச‌ரி, ச‌ரி, எதுக்கு இவ்வ‌ள‌வு கோப‌ம்? அப்பிடியென்ன அவன் பொய் சொல்லிட்டான்?"

"சுத்தி விட்டுட்டானுங்றேன், நீங்க‌ என்ன‌ பொய் சொன்னான்னு கேட்டுப் ப‌டுத்துறீங்க‌ளே? இதுல‌ நீங்க‌ வேற‌?!"

"ப‌ரா, ஏன் இப்ப‌ நீங்க‌ எம்மேல‌ ச‌லிச்சுகிறீங்க‌? பொய் சொல்ற‌வ‌ங்க‌ளைத்தான‌, அவ‌ன் reel சுத்துறான்னு, கையில‌ reel சுத்துற‌ மாதிரி செஞ்சி காமிச்சி சொல்லுற‌து? அதான் கேட்டேன், அவ‌ன் என்ன‌ பொய் சொன்னான்னு!"

"அய்யோ ம‌ணி, இது சுத்துற‌து இல்ல‌! சுத்தி வுடுற‌து!!"

"ஒன்னும் புரிய‌லை நீங்க‌ சொல்லுற‌து!"

"ம‌ணி, நான் அவ‌ங்கிட்ட‌ நேத்து மென்ட‌ல்பாம்(Mandelbaum) சொல்லிக் குடுத்த‌ பாட‌த்துல‌ இருந்த‌ ச‌ந்தேக‌த்தைக் கேட்டேன். அவ‌ன், எதெதோ சொல்லிக் குழ‌ப்பி விட்டுட்டான். இன்னும் அஞ்சு நிமிச‌த்துல‌ தேர்வுக்கு போக‌ணும், அதான்! ஒருத்த‌னை சுத்தி விட்டா, எப்பிடி த‌லை சுத்துற‌மாதிரி கிறுகிறுன்னு இருக்குமோ, அந்த‌ மாதிரி எனக்கு இருக்கு இப்ப‌!"

இப்ப‌டியாக‌ ந‌ட‌ந்த‌ உரையாட‌லில், சுத்துவ‌து என்றால் பொய் சொல்வ‌து (கதை விடுவது) என்றும், சுத்தி விடுவ‌து என்றால், விப‌ர‌ம் தெரியாத வேளையில், அதைச் ச‌மாளிக்க‌, க‌ண்ட‌தையும் சொல்லிக் குழ‌ப்பி, கேள்வி கேட்ட‌வ‌ரையே பின்ன‌ங் கால்க‌ள் பிட‌ரியில் ப‌டும்ப‌டி ஓட‌ச் செய்வ‌து என்ப‌தையும் தெரிந்து கொண்டேன்.


இப்போது சொல்லுங்க‌ள், இந்த‌ உரையாட‌லைப் ப‌டித்த நீங்கள், த‌லை கிறுகிறுவென்ற‌ உண‌ர்வோடு, சுற்றி விட‌ப்ப‌ட்ட‌து போல‌ உண‌ர்கிறீர்க‌ளா? அப்ப‌டியானால், த‌லைப்பில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ பிர‌ப‌ல‌ம் நீங்க‌ளே! இஃகிஃகி!! அப்படிக் குழப்பம் ஏதும் இல்லையா? அப்படி எனில், நான் உங்களிடம் சுற்றி விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அஃகஃகா!!!

வாயுள்ள புள்ளை பொழச்சிக்கும்!

முதல் இரவு - என் அனுபவம்

நாம சிங்கப்பூர்ல இருந்ததுக்கு அப்புறம் மேல படிக்கணும்னு
ஆசப்பட்டு கனடா வந்தோம், யார்க் பல்கலைக்கழகத்துல
படிச்சோம்,பட்டம் வாங்கினோம்,பின்னாடி சார்லட் வந்து
குப்பை கொட்டிட்டு இருக்கோம்ங்றது உங்க எல்லாருக்கும்
தெரிஞ்ச விசயம். அந்த பின்னணியில கனடால நடந்த
உண்மைச் சம்பவம். கோபு குடும்பத்தோட நாம கனடா
போறதுக்கு முன்னாடியே அங்க குடியேறி இருந்தான்.
அவனுக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. அவங்க அப்பா அம்மா
ரெண்டு பேருமே கொறஞ்ச சம்பளத்துக்குதான் வேலைக்கு
போய்க்கிட்டு இருந்தாங்க. ஆனா வீடு வாங்கி இருந்தாங்க.

அந்த நாளும் (முதல் இரவு) வந்துச்சு. நேரம் இரவு ஒரு ஒன்பதரை இருக்கும். நாமளும் அவங்க வீட்டுல அந்த நேரத்துல இருந்தோம். (நாம தான்,சாப்பாடு கிடைக்கிற இடம், நம்ம இடம்னு இருக்குறது ஆச்சே?)கோபு அங்க போறான். இங்க போறான். தண்ணி எடுத்து குடிக்கறான். உடம்ப நெட்டி முறிக்கிறான். தம்பி தங்கயப் பாத்து குறுஞ்ச்சிரிப்பு சிரிக்கிறான். அறைக்குள்ள போறான். என்னவோ செஞ்சிட்டு கொஞ்ச நேரத்துல வீட்டு முற்றத்துக்கு போறான். மறுபடியும் வர்றான். ஒரே வெட்கம்,கூட ஒரு மகிழ்ச்சினு நினைக்கிறேன். கூடவே, நல்லா படிச்சு பட்டம் வாங்கின அவனுக்கு இத எதிர்கொள்ள கொஞ்சம் நெருடல்.

அறைக்கு முன்னாடி சுழன்டது போதும்னு நெனச்சானோ என்னவோ, எல்லார்த்தையும் பாத்து சிரிச்சான்,வெக்கத்த விட்டுட்டு அறைய மூடினான், கை மின்விளக்க(torch) எடுத்தான், வீட்டு வாசக்கதவ மூடிட்டு விறு விறுனு நடந்து போனான். ஆமாங்க, கோபு ராததிரிநேர காவலாளி வேலைக்கு போறான். இன்னைக்கு அவனுக்கு முதல் இரவு.

(நடந்தத நடந்த மாதிரி சொன்னா, இப்படி கோவிச்சிட்டு அடிக்க வர்றீங்களே?!)

12/17/2008

கிராமத்துல....

நாங்கள்ளாம் ஊர்வழி, தெரு, குளம், குட்டை, காடு, மேடுனு ஓடித் திரிவோம். ஹ்ம்...அதெல்லாம் இனிமையான வசந்தகாலம். அப்பெல்லாம் தெருக்கள்ள பார்த்தீனியா கெடயாது.குளங்கள்ள ஆகாயத்தாமரை கெடயாது. மாசம் மும்மாரிதான். கிராமங்களே அழியிற இந்த சூழ்நிலயில, நாம பாத்த கிராமத்தை நெனச்சி பாக்கறோம்.

ஆமாங்க, நாம பாத்தது எருக்களாஞ்செடி, ஊமத்தை செடி, சாணிப்பூட்டான் தழை, மப்பூட்டான் தழை, நெரிஞ்சி முள், காந்தி முள், வேலி முள் இதுகதான். இன்னைக்கி, என்னென்னமோ சொல்லுறாங்க. எல்லாம், நிலத்தையும் குளங்களயும் அழிக்க வந்ததுக. மேல சொன்ன, செடிகளப் பத்தி எனக்கு நினைவுல இருக்குறத எழுதறேன். படீங்க....

எருக்கஞ்செடி


இத நெனச்சாலே, இப்பக்கூட மனசு லேசாகி எங்க ஊர் இட்டேரி ஞாபகந்தான் வருது. ஒடக்காயப்(ஓணான்)புடிச்சி எருக்கஞ்ச்செடி பால் ஊத்தி, கூட எங்க உச்சாவயும் அதுக வாயில தீர்த்தமாக் குடுப்போம்.அத செய்யக்கூடாத சித்திரவதை பண்ணுவோம். அடடா, அதுக்கு எப்ப எங்களுக்கு தண்டனை கிடைக்கும்னு தெரியல? ஒரு வேளை நம்ம பாவக்கணக்க வெச்சி, அதுக்கு தகுந்த மாதிரி தான் மனுசியக் கோத்து உட்டு இருக்கானோ கடவுள்?! உங்களுக்கு, மனுசி அமஞ்சதுல எவ்வளவு அதிருப்தியோ அந்த அளவுக்கு தீர்த்தம் குடுத்து கொடுமை படுத்தி இருக்கீங்கன்னு அர்த்தம். இது எப்படி இருக்கு?

இதை ஆள்மிரட்டின்னும் சொல்வாங்க. காரணம், இரவுல இதைப் பார்த்தா, புதர்ல யாரோ ஒரு ஆள் நிக்குற மாதிரியே இருக்கும். அப்புறம் எருக்கஞ்செடி பூவை விநாயகர்க்கு மாலை செஞ்சு போடுவாங்க. இந்தச் செடியோட தடி நல்ல வலுவா இருக்கும். எங்க வாத்தி, இந்தச்செடியோட தடியோடதான், திருத்தின பரீட்சைத்தாள பூசையோட குடுப்பாரு. இந்த செடியோட பால் மருத்துவத்துக்கும் பாவிப்பாங்க.

ஊமத்தை


இத நிறய மருந்து செய்ய பாவிப்பாங்க. இதுல விசத்தன்மை நெறய இருக்குனும் சொல்லுவாங்க. கள்ளச்சாராயம் காச்சுறவங்க தேடித்தேடி புடுங்கிட்டு போவாங்க.

சாணிப்பூட்டான்

சாணிப்பூட்டான் தழை எங்கும் இருக்கும்.எங்க வீட்டு கால்நடைங்க விரும்பி தின்னும் ஒரு தாவரம் இது.பசங்க மிதிவண்டி ஓட்டும் போது கீழ விழுந்துட்டா, ஓடிப்போய் பறிச்சிட்டு வந்து காயத்துல புழிஞ்சு விடுவாங்க. பிழியும் போது எரியும், ஆனா காயம் உடனே காஞ்சிடும். கல்லடி விழும்போதும் இதே மருந்துவந்தான். ஆமா! நமக்கும் விழுந்து இருக்குல்ல?!

அப்புறம் அது பூத்து, பூ நெடு நெடுனு அரை அடி, ஒரு அடிக்கு தண்டு ஒசந்து நிக்கும். நாங்க தண்டோட அதப் பிடுங்கி,

தாத்தா தாத்தா காசு தருவியா? மாட்டியா??
குடுக்கலைனா, தலைய வெட்டிருவேன்.
குடுக்க மாட்டியா, இந்தா உன் தலைய வெட்டுறேன்னு

சொல்லிப் பாடி, கடைசில, பெருவிரலால நுனீல இருக்குற சிறு பூவை சதக்னு லாவகமா வெட்டி சந்தோசப்படுவோம். என்ன சந்தோசம்டா சாமி, சொல்லி மாளாது போங்க.

மப்பூட்டான்

இதனோட தழை, பூ, காய் எது பட்டாலும் பட்ட இடத்துல, சரியான பிப்பு எடுக்கும். பொண்ணுங்கள சிணுங்க வெக்க, நாங்க இத அடிக்கடி பாவிப்போம். அவங்க புத்தகப்பையில தெரியாம போட்டு விட்டுருவோம். புதூருக்கும் வேலூர்க்கும் மூணு மைல். நடந்துதான் பள்ளிக்கூடம் போவோம். போற வழில, என்னா கூத்து, கும்மாளம்?! அதுக எல்லாம் எங்க, யாரோட குடித்தனம் நடத்துதுகளோ என்னவோ, போங்க!! எல்லாரும் நல்லா இருந்தா சரி.

நெரிஞ்சி


ஆடுக, நெரிஞ்சிமுள் கொடியோட இலைகள, விருப்பமா திங்கும். நெரிஞ்சியோட பூ, சின்னதா வெகு அழகா சுத்தமான மஞ்சள் நெறத்துல இருக்கும். பூ, காயாகி அந்த காய்ல முள் வரும் பாருங்க, அது அப்படி ஒரு எடஞ்சலா மாறும். மாடு மேய்க்கும் போதும் மொசப்பந்து விளையாடுறப்பவும் அப்படி ஒரு குத்து குத்தும். இது கூட மருத்துவத்துக்கு ஒதவுதுங்க.

காந்தி முள்
இப்ப எப்படி பார்த்தீனியாவோ, அப்படி இந்த காந்தி முள் எங்கயும் இருக்கும். பத்தைல பூ நெறய இருக்கும்.அந்தப் பூவோட இதழ்கள் தான் சிறு முள்ளா மாறி குத்துங்க. அதுபோக, இது காஞ்சதுக்கப்புறம் காத்துல இங்கயும் அங்கயும் ஓடி, ஒரே எடஞ்சல். பட்டாம்பூச்சி புடிக்கறப்ப, தும்பி புடிக்கறப்பனு, மொத்தத்துல விளையாடுறப்ப படு எடஞ்சல்.

கள்ளி முள்


இத சப்பாத்திக்கள்ளினும் சொல்லுவாங்க. ஒடக்கா புடிக்கப்போனா, இது குறுக்க இருக்கும். பல தடைகள் தாண்டிதான் போய் புடிக்கனும். இதனோட முள் குத்தினா ரொம்ப வலிக்கும். எடுக்கறதும் கொஞ்சம் கடினம். இதனோட பழம் சாப்டுவோம்.நல்லா இருக்கும்.

(உங்ககிட்ட, மேல சொன்ன செடிகளோட படம் இருந்தா, அனுப்பி வையுங்க.....)

சுக்கும்! சொக்குப் பொடியும்!!

பழம்பெருமை அறிதல் ஒரு கண்டுபிடிப்பே
புத்தம் புது சாதனையும் ஒரு கண்டுபிடிப்பே
பழம்பெருமை பேசி அமர்வோர் மடிவர்
பழம்பெருமையறிந்து புதுமை காண்போர் சாதிப்பர்!

நேற்றைய பதிவுல பட்டையக் கிளப்புறதப் பத்திப் பார்த்தமுங்ளா? இன்னைக்கு பட்டையக் கழட்டுறதுன்னா என்னங்றதை பத்திப் பாப்போம். எங்க ஊர்ப் பக்கம், கோபத்துல ஒருத்தர் அடுத்தவரைப் பார்த்து சொல்றது, 'டேய், எங்கூட வெளையாடாதடா, பட்டையக் கழட்டீருவேன், ஜாக்கிரதை!'. அதாவது வந்துங்க, தோலை உரிச்சுருவேன்னு சொல்லுறது, தோல்பட்டைய உரிச்சுருவேனுங்ற அர்த்தத்துல, பட்டைய எடுத்துருவேன்னும் பட்டையக் கழட்டீருவேன்னும் ஆயிப்போச்சு. ஆக, பட்டயக் கிளப்புறது ஊக்கத்த சொல்றது, பட்டயக் கழட்டுறது (அ) எடுக்குறது கோபத்துக்கு புழங்குறதுன்னு ஆகிப்போச்சுங்க.

ஒருத்த‌ர், அதிக‌ப் பிர‌ச‌ங்கித்த‌ன‌மாவோ, குறும்புத்த‌ன‌மாவோ பேசிட்டு இருக்குற‌ப்ப‌ சொல்லுற‌து, அவ‌ன் ஏன் நாயாட்ட‌ம் குரைச்சிட்டு இருக்கான்னு. அதுவே கொஞ்ச‌ம் திரிஞ்சு, அவ‌ன் ஏன் லொள் லொள்ன்ட்டு இருக்கான்னு ஆச்சு. கூட‌வே இன்னும் அது திரிஞ்சு, அவ‌னோட‌ லொள்ளு தாங்க‌ முடிய‌ல‌டான்னும் ஆச்சு. க‌டைசில‌, அதிக‌ப் பிர‌ச‌ங்கித் த‌ன‌த்துக்கும், குறும்புத் த‌ன‌த்துக்குமான‌ ஒரு சொல்லாவே ஆயிப் போச்சு பாருங்க‌ இந்த லொள்ளு!

சுக்கு நூறா உடைச்சிட்டான்னு சொல்லுறோம். சுக்குன்னா காய‌ வெச்ச‌ இஞ்சி. சுக்குக் காப்பின்னு சொல்லுறோம், சுக்கு, மிளகு, திப்பிலி மூணும் திரி கடுகம்ன்னும் சொல்லுறோம். ஆனா, சுக்கு சுக்கா உடைச்சிட்டான்னு சொல்லுறப்ப வர்ற சுக்கு, அது இல்லையாமுங்க‌. சுக்குன்னா சிறு துண்டு அல்ல‌து சிறு க‌ல். அதான், ஒரு பொருளை உடைச்ச ச‌ம‌ய‌த்துல‌ சொல்லுற‌து, 'பாவி, இப்பிடி சுக்கு நூறா ஒடைச்சிட்டானே!'.

சுக்குன்ன‌ ஒட‌னே, ஞாப‌க‌த்துக்கு வ‌ர்ற‌து சொக்குப் பொடிங்க‌. சொக்குன்னா ம‌ய‌ங்குற‌து. ம‌ய‌ங்க‌ வெக்கிற‌துக்குப் பாவிக்கிற‌ பொடிதாங்க‌ சொக்குப் பொடி. ஒருத்த‌ர் அடுத்த‌வ‌ரை எத‌னா சொல்லிப் ப‌ணிய‌ வெக்கிற‌ப்ப‌, ச‌மாதான‌ப் ப‌டுத்துற‌ப்ப‌, குறும்பா சொல்லுற‌துதாங்க, "என்ன‌டா, என்ன‌மோ சொக்குப் பொடி போட்டு ஆளை ம‌ய‌க்கிட்டியே!"ன்னு. இந்த‌த் த‌லைப்பைப் போட்டு, இந்த பதிவைப் ப‌டிக்க‌ வெச்ச‌துகூட‌ ஒரு வித‌மான‌ சொக்குப் பொடிதாங்க‌. இஃகி!இஃகி!!

கெண்டையைப் போட்டு வராலை இழு!

உன்னால் முடியும் நண்பா!


வணக்கம்! அன்புத்தம்பி தன்னம்பிக்கையப் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். அதன் ஒரு படம்தான் இது. மேலதிகத் தகவலுக்கு, அவரின் பதிவைச் சென்று பாருங்கள்.

12/16/2008

பட்டையக் கிளப்புங்க!

பட்டையக் கெளப்புடா மாப்ளே!

வணக்கம் வாசகர்களே! நான் என்னோட பால்ய நண்பனோட நேற்றைக்கு பேசிட்டு இருந்தேன். அப்ப, பேச்சு வலைப்பூ எழுதறது பத்தியும் வந்திச்சு. நண்பன் சொன்னான், இப்பிடி அருகிவர்ற கிராமப்புற பழக்க வழக்கங்களையும், அந்தக்கால நினைவுகளையும் நினைச்சு எழுதிட்டு வந்தா, நீ அந்நியப்பட்டு போயிட மாட்டயான்னு கேட்டான். நான் அப்பிடியே ஆடிப் போய்ட்டேன். காரணம், அவன் சொல்வது நியாயமாகப் பட்டது எனக்கு.

கடந்த முறை ஊருக்கு வந்தப்ப, கோயம்பத்தூர்ல இருக்குற என்னோட வீட்ல இருக்குறவிங்க கூடவே நான் ஒரு அந்நியனாத்தான் இருந்தேன். கிராமத்துப் பக்கம், எங்க அத்தையவிங்க ஊருக்குப் போனப்புறந்தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. தெரியும், குசும்புப் பதிவர்கள், அத்தை வீட்ல பொண்ணு இருந்திருப்பான்னு நினைச்சு, வம்பு வளர்க்கத் தயார் ஆவீங்களே இந்த இடத்துல. அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லைங்க இராசா, ரெண்டு அத்தைங்க‌ வீட்ல அவிங்க பையங்கதான் இருக்காங்க. இஃகிஃகி!! அவிங்க விவசாயம் செய்யுறவிங்க, அதனால எனக்கு அங்க இருக்க பிடிச்சு இருந்துச்சு.

ச‌ரி, விச‌ய‌த்துக்கு வ‌ருவோம். என்னோட‌ தாழ்மையான‌ எண்ண‌ம் என்ன‌ன்னா, கிராம‌க் க‌ட்ட‌மைப்பு, ப‌ண்பாடு, கலாசார‌த்திலிருந்து வில‌கிப் போற‌ ச‌முதாய‌ந்தான் அந்நிய‌ப்ப‌ட்டுகிட்டு இருக்கு. விவ‌சாய‌ங்கூட‌, இனி பெரிய‌ நிறுவ‌ன‌ங்களால‌ ம‌ட்டுந்தான் செய்ய‌ முடியும்ங்ற‌ நிலை வ‌ர‌ப் போகுதுன்னும் சொல்லுறாங்க‌.

உடனே, ஒரு சாரார் கிளம்பிடுவாங்க, இவனுக்கு எதிர்காலம், மாற்றங்களைக் கண்டு ஒரு அச்சம், அதான் பினாத்த ஆரம்பிச்சுட்டான்னு. ஐயா, வாதத்துக்கு எதிர்வாதந்தான் சரி. அதை விட்டுப்பிட்டு, இப்பிடிப் பழியைப் போட்டு, விவாதத்தை திசை திருப்பக் கூடாது பாருங்க. ஆமா, எங்களுக்கு பயம்தான். அதுல, என்ன தப்பு? மேல்நாட்டுல, இடைப்பட்ட‌, கீழ்த்தட்டு மக்கள் அவதிக்கு ஆளாயிட்டு வர்றாங்களே, தெரியலை உங்களுக்கு? அந்த அவதியும், அல்லலும் இங்கயும் வந்திடக் கூடாதுங்ற பயந்தான் கண்ணுகளா! சரி, கால அவகாசம் இருந்தா, இந்தக் கட்டுரையப் படிச்சுப் பாருங்க.

புலம்பலை நிறுத்திட்டு, நாம நம்ப விசயத்துக்கு வரலாம். ஒரு ஆண்மகன், வில்வித்தை, மல்யுத்தம், குத்துச் சண்டை இப்பிடி வீர விளையாட்டுகள ஆரம்பிக்குறதுக்கு முன்னாடிச் செய்யுற‌ செய்கை ஒன்னு இருக்குங்க. வீர விளையாட்டுகள் மாத்திரம் அல்லங்க, இது பாட்டாளிகளுக்கும் பொருந்தும். முதல்ல ஒரு பாட்டாளியின் செயலைப் பாப்போம்.

ஒரு பெரிய கல் நிலத்துல இருக்கு, இவன் அதைத் தூக்கி அந்தப் பக்கம் வைக்கணும். அதைத் தூக்கறதுக்குத் தேவையான வலு இருக்கு அவங்கிட்ட, ஆனாலும் அதைத் தூக்குறதுங்றது ஒரு சவாலான காரியம். அந்த அளவுக் கல்லுங்க அது. இவன் அந்தக் கல்லுகிட்ட போறான், ஒரு சில வினாடி அந்தக் கல்லைப் பாக்குறான். பாத்துட்டு, தோள்ப் பட்டையக் கிளப்பு(ஒசத்து)றான், அதாவது ரெண்டு கையாலயும், தன்னோட தோள்ப் பட்டையக் கிளப்பிட்டு, ஒரு வினாடி நிக்குறான். அதே சமயத்துல, பார்வை அந்த கல் மேலயே இருக்கு. என்ன நடக்குது அங்க? அவனுக்கே தெரியாம, அவனுக்குள்ள துணிச்சல் வருது. அதே வேகத்துல, பார்வை மாறாமப் போயி அந்தக் கல்லையும் அலாக்காத் தூக்குறான், இது இயல்பா நடக்குற ஒன்னு!

இப்ப‌ ம‌ல்யுத்த‌ வீர‌னை நினைச்சுப் பாருங்க‌. போட்டி ஆரம்பம்ன்ன‌ ஒட‌னே, தோள் ப‌ட்டையக் கிள‌ப்பி, ரெண்டை கைய‌யும் உள்ளங்கைகள முன்பக்கமா மூடிமுறுக்கின‌ மாத‌ர‌யே தூக்குறான். அப்ப‌த்தான் அவ‌னுக்குள்ள‌, ந‌ம்பிக்கையும் துணிவும் பொற‌க்குது. இதுவே, அவ‌ன் தோள் ப‌ட்டையக் கிள‌ப்பாம‌ ரெண்டு கையையும் முன்ப‌க்க‌மா ஒச‌த்துறான்னு வெச்சுகுங்க‌, துணிவு அவ்வ‌ள‌வா வ‌ராது. இது அங்க‌த்தின் இய‌ல்பு. இத‌னால‌தான் இராணுவ‌ப் ப‌யிற்சியில‌ எல்லாம், தோள்ப‌ட்டைய‌க் கிள‌ப்புற‌த‌ ஒரு ப‌யிற்சியாவே வெச்சு இருக்காங்க‌.

இதைதாங்க சரித்திர நாவல்கள்ல, நம்ப பெரியவிங்களும் வர்ணனை செய்யுறது உண்டு. தோட்பட்டை கிளப்பி, நெஞ்சம் நிமிர்ந்து, கூரிய பார்வையுடன் வெளிப் பட்டான்ன்னு எல்லாம், அங்க அசைவுகளை வர்ணிச்சு எழுதி இருப்பாங்க. சாண்டில்யன் புத்தகங்கள் படிக்கும் போது கவனிச்சுப் பாருங்க, அவ்வளவு துல்லியமா வர்ணிச்சி இருப்பாரு. ஆக, துணிவுக் கிளர்ச்சிக்கு தோள்பட்டையக் கிளப்புறதச் சொல்லி பேச ஆரம்பிச்சாங்க. அதாங்க, அவனுக்குள்ள இருக்குற துணிவை ஊக்குவிக்கறதுக்கு சொல்லுறது, பட்டையக் கிளப்புங்றது ஆயிப் போச்சு. இப்ப நீங்களும், இதை படிக்கப் படிக்க உங்க தோள்பட்டையக் கிளப்பி இருப்பீங்ளே?! கண்டிப்பா, உங்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி வந்திருக்குமே! இஃகி!ஃகி!!


போன பதிவுல சொன்ன, மத்த ஊர் மொழிகளை அடுத்த பதிவுல பாக்கலாங்க! ஆமா, எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லிட்டா எப்பிடி? எனக்கும் வேற வேலை இருக்கு, உங்களுக்கும் அதே மாதிரி இருக்கும். போங்க, போயி உங்க வேலை என்னவோ அதுல‌, பட்டையக் கிளப்புங்க!

ஊக்கமது கைவிடல்!

12/15/2008

பட்டையக் கெளப்புடா மாப்ளே!

அன்பர்களே, நண்பர்களே, வணக்கம்! நாம வழக்கத்துல பேசுற பேச்சுத்தான். ஆமாங்க, அந்த பட்டையக் கெளப்புறது, பட்டையக் கழட்டுறது, பட்டய எடுக்குறது, சக்கப் போடு, போடுறது, லொள்ளுப் பண்ணுறது எல்லாம்! பேசுறோம், நம்ம செளரியத்துக்கு அதுகளப் புழங்குறோம்!! அதுகளுக்கு உண்டான விளக்கந் தெரிஞ்சா இன்னும் நல்லா இருக்குமே?

அப்ப, நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச‌ விளக்கத்தை பின்னூட்டமாப் போட்டுப் பட்டையக் கிளப்புங்க. நான் என்னோடதை நாளைக்குப் பதியுறேன். அப்ப, நாங்களும் நாளைக்கே பின்னூட்டத்துல சொல்லுறோம்ன்னு, நீங்க மொடக்கடி பேசப்படாது. இன்னைக்கே போடுங்கன்னு உங்களைக் கேட்டுக்கறதுக்கும், ஒரு விளக்கம் இருக்குது இராசா!

இராசா, என்னோட விளக்கத்தைப் பாத்துட்டு நிறையப் பேரு, அவிங்க விளக்கத்தைச் சொல்லுறதுக்குத் தயங்குறாங்க. போன வாரம், நம்ம சீமாச்சு அண்ணன் எதோ ஒன்னுக்கு அவரோட விளக்கத்தை நேர்ல பாத்தப்ப சொல்லுறாரு. அண்ணே, அதை அங்கயே பின்னூட்டத்துல சொல்லி இருக்க வேண்டியதுதானேன்னு கேட்டா, அவரு தன்(ண்)மையா சிரிச்சு சமாளிச்சுட்டாரு.


என்னோட விளக்கத்துக்கு எதிர்ன்னு ஏன் நினைக்குறீங்க? மாற்று விளக்கம் அவ்வளவுதேன். அப்பிடி சொல்லுறதையும், நான் பதிவுல ஏத்திட்டுதான வர்றேன். ஆகவே, உங்க கருத்துக்களைப் போட்டுத் தாக்குங்க, நான் நாளைக்கு எனக்குத் தெரிஞ்ச‌ விபரத்தோட வர்றேன்.

பதிவரின் காதல்!

காதலியத் தவிக்க விட்டுட்டு, சக பதிவர் நைசீரியாவுல போயி, அங்க அவர் கொட்டமடிக்க, திருச்சியில அவரோட காதலி அவரோட காதுக்கு எட்டுற மாதிரி என்ன பாடலாம்ன்னு யோசிக்கிறதை மேல படிச்சுப் பாருங்க.

சாமி எனக்காகுமா?
சதுரகிரி பொட்டாகுமா??
நிலாவும் பொழுதாகுமா?
நெனச்ச சாமி எனக்காகுமா?
ஆசை தீர அணைஞ்ச கையி
அவரு மேல போடுங் கையி
பன்னீரளைஞ்ச கையி
போயி ரெண்டு வருசமாச்சே?
சுக்குப் போல நானுலர்ந்து
சோறு கறி செல்லாம சீமையில‌
கொக்குப் போல் அவரிருக்க‌ நானு
சோல‌க் கிளி வாடுத‌னே?!
சாலையில‌ ச‌முத்திர‌மே
சாமி கையில் புத்த‌க‌மே
என்னைத் தொட்ட‌ ம‌ன்ன‌வ‌ர்க்கு
என்ன‌ க‌வி பாட‌ட்டும் நானு?!

12/14/2008

வாசித்தல் அனுபவம் - 2

வாசித்தல் அனுபவம்-1

பத்தாம் வகுப்பு விடுமுறை எல்லாம் முடிஞ்சி, கிராம சூழ்நிலைய விட்டு நகரச் சூழ்நிலைக்கு மாறியிருந்த நேரமது. கூடவே பதின்ம வயசுல நாம. கையில சாண்டில்யன் எழுதிய கடல் புறான்னு நினைக்குறேன். அவரோட நூல்கள் நிறையப் படிச்சதுல, அந்த நேரத்துல இருந்தது எதுங்றது மறந்து போச்சு. அந்த வர்ணனையும் காதல் உணர்வுகளும் படுத்திய கிளர்ச்சி சொல்லி மாளாது போங்க. ஆனாக் கடல் புறாவும், கன்னி மாடமும் நெஞ்சில் இன்னமும் இருக்கும் பெயர்கள்.

அந்த நேரத்துலதான் நண்பர் வேலுச்சாமி அறிமுகம் ஆனாரு. அவர் கருமத்தம்பட்டி நூலகத்தில இருந்து, புத்தகங்களை வாரம் ரெண்டு வாட்டி எடுத்துட்டு வந்து தருவாரு. குடுத்தா, ரெண்டே நாள், அதுகளைப் படிச்சு முடிச்சுட்டுத்தான் மறுவேலை. இப்ப்டியே ஒரு ரெண்டு வருசம் போச்சுங்க. அந்த சமயத்துல பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிச்சு, பாதியிலயே அந்த முயற்சி நின்னும் போச்சு. ஆனா, அதுக்கு பதிலா ஜானகிராமன் எழுதிய நாவல்கள் மரப்பசு, நளபாகம், மோகமுள், அப்புறம் அம்மா வந்தாள் படிச்சேன். ஒன்னு முடிய அடுத்ததுன்னு ஒரு மூணு மாசம் ஓடுச்சு. மரப்பசு, ஒரு நாலஞ்சு தடவை படிச்சு இருப்பேன். கோபாலி, அம்மணி, பட்டாபி, புரூசு இவிங்களைப் புரிஞ்சுக்க, அந்த நாவலை மறுபடியும் ம‌றுபடியும் படிச்சேன். காரணம், என்னோட வயசுக்கு அந்த நாவல் கொஞ்சம் அதிகம்ன்னு இப்ப நான் நினைக்குறேன்.

அந்த சமயத்துலதாங்க, நடிகர் ரகுவரனைப் பத்தி எதோ பேச்சு வர, அவர் நடிச்சு வெளி வந்த தொலைக்காட்சி நாடகம் பத்தி பேசிட்டு இருக்கவே, அதன் மூலமான அவன். சிவசங்கரி அவிங்க எழுதின நாவல், அடுத்த நாளே நம்ம கையில. ரொம்ப உதவியா இருந்தது. போதைக்கு அடிமையான வாழ்க்கை எப்பிடி ஆகும்ங்றதப் பத்தி தெளிவா எழுதி இருப்பாங்க. இதைப் படிச்சு முடிச்சுட்டு, ல.ச.ரா, இலட்சுமி, சுஜாதா, பாலகுமாரன் இப்பிடிப் பல பேரோட புத்தகங்களை எல்லாம் படிச்சுட்டு, ஊரை விட்டு வெளில வர்றதுக்கு முன்னாடி கடைசியாப் படிச்சது, கவியரசரோட அர்த்தமுள்ள இந்துமதம், எல்லா பாகங்களும்.

அதுக்கப்புறம் படிக்கிற பழக்கம் கிட்டத்தட்ட எட்டு வருசங்கள் சுத்தமாக் கிடையாதுங்க. கடுமையா வாசிச்சுட்டு இருந்த நான், அறவே படிக்கிற பழக்கத்தை விட வேண்டியதாப் போச்சு. சூழ்நிலைதான் காரணம். இப்ப, ஒரு வருசமா தமிழ்ப் பண்பாட்டுக் குழுவுல ஈடுபட ஆரம்பிக்கவே, மறுபடியும் புத்தகங்களப் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன். சமீபத்துல படிச்சது பெரும்பாலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவிங்க எழுதின நூல்கள். பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி அவிங்க எழுதின நூல். உதயமூர்த்தி ஐயா எழுதின, தம்பி உன்னால் முடியும் நம்பு. இப்ப படிச்சுட்டு இருக்குறது, தமிழ் முதுகலைப் பட்ட பாட நூல்கள். இஃகி!ஃகி!! ஆமுங்க, தமிழ்ல ஒரு பட்டம் வாங்குற யோசனையும் இருக்கு!

இதுபோக நிறைய கிராமியக் கதைகள், பாடல்கள், சொல்வடைகள்ன்னு நிறைய, நம்ம ஊர்க் காடு, மேடு, தோட்டங்கள்ல, நம்ம ஊர் சனங்க சொல்லிக் கேள்விப்பட்டது உண்டு. அதுகளைத்தான் பதிவுல பாத்துட்டு வர்றீங்களே?! சரிங்க, நாளைக்கு இனியொரு பதிவுல சந்திக்கலாமா?! வேண்டாமா??! உங்களை அப்பிடியெல்லாம் விட்டுடுவேனா? இஃகி!ஃகி!!

அண்ணன் குடுகுடுப்பை செய்தது சரியா? இந்தப் பதிவைப் படிச்ச நீங்க சொல்லுங்க. ஏன்னா, வாசித்தல் அனுபவம் அப்படீங்ற பேர்ல எழுதறதுக்கு கொக்கி போட்டது அவர்தான். பதிவு ரொம்பவும் சுமாரா இருக்குன்ன்னா, அவர் செய்ததும் சுமார்தான். பதிவு நல்லா இருக்குன்னு நீங்க நினைச்சா, அவர் செய்தது சரிதான். இஃகி!இஃகி!!.

செருப்புக்காகக் காலைத் தறிக்கலாமா?

12/13/2008

வாசித்தல் அனுபவம்

வணக்கம்! அண்ணன் குடுகுடுப்பையார் என்னோட வாசித்தல் அனுபவம் பத்தி எழுதச் சொல்லி கொக்கி போட்டு இருக்கார். அதனோட விளைவுதான் இந்தப் பதிவு. நான் ஒன்னாம் வகுப்பு படிச்சுட்டு இருக்கும் போது, எங்க வீட்லயும் பக்கத்து வீட்லயும் எல்லாருமாச் சேர்ந்து, சோமனூர்க்குப் பக்கத்துல இருக்குற வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்குப் போனோம்.

அப்பிடிக் கோயிலுக்குப் போய்ட்டு திரும்புற வழியில ஒரு மணி நேரத்துக்கு மேலயே சூலூர் பேருந்து நிலையத்துல, தெற்குப்புற கிராமங்களுக்குப் போற சிந்திலுப்பு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்துச்சு. அப்ப, சூலூர் இப்ப இருக்குற மாதிரி இல்லங்க. அது ஒரு பெரிய கிராமமா இருந்துச்சு அவ்வளவுதான். அந்த பேருந்து நிற்குமிடத்துல‌, தி.மு.க வாசகம் பொருந்தின ஒரு சாப்பாட்டுக் கடை மட்டும் இருந்ததா நினைவு. இன்னைக்கு அந்த இடம் பேருந்து நிலையமா மாறி, சுற்றிலும் எத்துனை கடைகள், ஏ அப்பா?

அந்த‌க் க‌டையில‌ ஒரு க‌யிறுல‌ புத்த‌க‌ங்க‌ள் எல்லாம் தொங்கிட்டு இருந்துச்சு. நான் சும்மா இங்க‌யும் அங்க‌யும் ஓடிட்டு இருக்குற‌த‌ப் பாத்த‌ ப‌க்க‌த்து வீட்டு அக்கா, அந்த‌க் கொடியில‌ இருந்த‌ பொம்மை வீடுங்ற‌ புத்த‌க‌த்தை வாங்கிக் குடுத்தாங்க‌. அதுதாங்க‌, நான் வாழ்க்கையில‌ பார்த்த‌ முத‌ல் புத்த‌க‌ம். கிட்ட‌த்த‌ட்ட‌ மூணாம் வ‌குப்பு வ‌ரை அதை நான் வெச்சிட்டு இருந்ததா நினைவு. அதுக்க‌ப்புற‌ம் நாங்க‌ வீடு மாறினோம், அப்ப‌ எப்பிடியோ தொலைஞ்சு போயிருச்சுன்னு நினைக்குறேன்.

அதுக்க‌ப்புற‌ம், என‌க்கு க‌ருணாநிதின்னு ஒரு ந‌ண்ப‌ன் இருந்தான். அவிங்க‌ப்பா, ஒரு தி.மு.க‌ பிர‌முக‌ர். அவிங்க‌ வீட்டுக்கு போகும் போதெல்லாம் முர‌சொலியும், தின‌க‌ரனும் வாசிக்கிற‌து உண்டு. அதுக்க‌ப்புற‌ம் எங்க‌ சொந்த‌க்கார‌ அக்கா, தாய் வார‌ இத‌ழை இனியொருத்த‌ங்க‌ வீட்ல‌ இருந்து வாங்கிட்டு வ‌ர‌ச் சொல்லி அனுப்புவாங்க‌. அப்ப‌, வ‌ர்ற‌ வ‌ழில‌ அதுல‌ இருக்குற‌ துணுக்குக‌ள வாசிப்பேன்.

இப்பிடியே இப்ப‌ ஆறாம் வ‌குப்பு வ‌ந்து சேர்ந்துட்டேன். ஒரு நாள் ஊருக்குப் போடான்னு எங்க‌ம்மா என்னை, எங்க‌ அமுச்சிய‌விங்க‌ வீட்டுக்கு அனுப்பி வெச்சாங்க‌. நான்காம் எண் பேருந்துல‌ வ‌ந்து உடுமலைப் பேட்டையில‌ இற‌ங்கி, மூணாம் எண் பேருந்துல‌ லெட்சுமாபுர‌ம் போக‌ணும் நான். அப்ப‌, உடும‌லைப் பேருந்து நிலைய‌த்துல‌ ஒரு மூலைல‌ புத்த‌க‌க் க‌டை ஒன்னு இருக்கும். வெறும் புத்த‌க‌ங்க‌ளும், செய்தித் தாள்க‌ளுமா அவ்வ‌ள‌வு நேர்த்தியா ப‌ர‌ப்பி வெச்சு இருப்பாங்க‌. அவ்வ‌ள‌வு அழ‌கா இருக்கும் அதைப் பார்க்க‌வே. மேலதிகமா இருந்த ரூபாய்க்கு, இராணி முத்தும் குமுதமும் வாங்கினேன். இப்பிடி சொந்தமா அன்னைக்கிதான் புத்தகம் வாங்கினேன்.

அதுக்கப்புறம், இலட்சுமி எழுதின நாவல்கள், இராணி, இராணி முத்துல வர்ற கதைகள்ன்னு நிறைய படிச்சிட்டு, பள்ளிக் கூடம் போகும்போது அதைப் பத்தி பேசிட்டுப் போவோம். இப்பிடியே, பத்தாம் வகுப்பு விடுமுறையும் வந்துச்சு. அப்ப நான், கிட்டத்தட்ட ஒரு மாதம், பல்லடம் பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல எங்க பெரியம்மாவிங்க ஊர்ல இருந்தேன். எங்க பெரியப்பா, இராமாயணம், பெரிய புத்தகம் வெச்சி இருந்தாரு. வெறுமை(boredom) மனுசனைக் கொல்லவே, அதை வாசிக்க ஆரம்பிச்சேன். ப‌தின‌ஞ்சு நாள் பிடிச்ச‌து அதை முடிக்க‌. அதுக்க‌ப்புற‌ந்தாங்க‌, புத்த‌க‌ம் ப‌டிக்கிற‌ ப‌ழ‌க்க‌ம் ஒரு வேக‌ம் எடுத்துச்சு. கூட‌வே, மனசுல வேற‌ மாதிரியான‌ எண்ண‌ங்க‌ளும்!!

(தொடரும்...)

12/12/2008

முட்டலும் மோதலும்!

நம்ம கற்பனைல மாடுமேய்ப்பனும், தளபதியும்.


மாடுமேய்ப்பன்: என்னாட்டைக் காணோமே?

தளபதி: தேடித்தான் புடிச்சுக்கோ!

மாடுமேய்ப்பன்: அடுப்பு மேல ஏறுவேன்!

தளபதி: துடுப்பைக் கொண்டு சாத்துவேன்!

மாடுமேய்ப்பன்: நெல்லைக் கொறிப்பேன்!

தளபதி: பல்லை ஒடைப்பேன்!

மாடுமேய்ப்பன்: வடிதண்ணியக் கொட்டுவேன்!

தளபதி:வழிச்சு வழிச்சு நக்கிக்கோ!

மாடுமேய்ப்பன்: கோட்டை மேல ஏறுவேன்!

தளபதி: கொள்ளி கொண்டு சாத்துவேன்!

மாடுமேய்ப்பன்: செக்கு மேல ஏறுவேன்!

தளபதி: செவினியில அடிப்பேன்!

மாடுமேய்ப்பன்: ஓட்டுமேல ஏறுவேன்!

தளபதி: ஈட்டியால குத்துவேன்!

மாடுமேய்ப்பன்: காலே வலிக்குது!

தளபதி: கட்டையத் தூக்கிப் போட்டுக்கோ!

மாடுமேய்ப்பன்: நான் போடுறேன் பதிவு!

தளபதி: நான் போடுறேன் பின்னூட்டம்!!


இப்பிடித்தாங்க சின்ன வயசுல ஒன்னுக்குள்ள ஒன்னு விளையாடிக்குவோம். வீட்டுக்குப் போகும் போது அன்பா ஒருத்தர்க்கு ஒருத்தர் விட்டுக் குடுத்துடுவோம். அதான வாழ்க்கையே! இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? வாங்க, நாமளும் போயி எதானாச்சும் நமக்குப் பிரியமான விங்களோட வெளையாடலாம்.

கிட்டாதாயின் வெட்டென மற!

12/11/2008

உடனே மலராதோ??

வணக்கங்க! நேற்றைக்கு நாம நெனைச்சோம், நாளைக்கு நிறைய எழுதணுமின்னு. காலையிலயிருந்து, நாம பாக்குற, படிக்கிற காட்சிகள் எல்லாம் வெகுவா மனநிலையப் பாதிச்சுடுச்சுங்க. ஒரு பக்கம் வேலை இழப்புச் செய்திகள், மறுபக்கம் நண்பர்களின் வேதனைகள், வலையில மேயலாம்ன்னா கவிதைகள்ங்ற பேர்ல சோகங்கள், அல்லது அவரவர் மனத் தாங்கல் பற்றிய படைப்புகள், இப்படியாப் போச்சு நம்ம பொழுது.

இருக்குறவனும் புலம்புறான், இல்லாதவனும் புலம்புறான், அடச் சே! எங்கயோ காட்டுல மேட்டுல வேலயச் செய்துகிட்டு இருந்தப்ப கூட இவ்வளவு ஆழமான வேதனைகள் வந்ததில்லை. இனியும் இது பத்தி விபரமாப் பேசி, உங்களையும் அந்த மனநிலைக்குக் கொண்டு போக விரும்பலை!

ஆனா ஒரு செய்திய மட்டும் சொல்லிக்கிறேன். வெளிநாட்டு வாழ்க்கைல எல்லாமுங் கிடைச்சிடாது. முதல் ஆறேழு ஆண்டுகள் பல ஏற்றங்கள் இருக்கும். அதன் பின்னும், ஒருவரது வெளிநாட்டு வாழ்க்கை தொடரும் பட்சத்தில் நிறையவற்றைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கும். இது என்னோட அனுபவம். நான் ஒரு சாமான்யங்ற பட்சத்துல, அதுக்கும் சபைல ஒரு இடம் இருக்கும்ன்னும் நம்புறேன்.


எட்டப் பறி பூவை
விட்டு விடு அரும்பை
தாவிப் பறி பூவை
தள்ளி விடு அரும்பை
ஓடிப் பறி பூவை
ஒதுக்கி விடு அரும்பை
தள்ளிவிட்ட அரும்பு
தானாய் மலராதோ?
ஒதுக்கி விட்ட அரும்பு
உடனே மலராதோ??

ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்!

12/10/2008

அலைய‌விட்ட‌ ச‌ண்டாளி!!

வணக்கம்! இன்னைக்கு ஒரே வேலைங்க. பதியறதுக்கு ஒன்னும் தயார் செய்யலை. ஆனாலும் நம்ம வாசகர்கள், ந்ம்ம ஊட்டுக்கு வந்துட்டு, 'பொக்'குனு போயிருவாங்களே? அதான், நம்மூர்ல வடக்கால ஊட்டு வஞ்சியாத்தாவும், தெக்கால ஊட்டுத் திருமனும், மேக்கால இருக்குற வயக்காட்டுல எப்பிடியெல்லாம் பேசி, சமாதானம் ஆகுறாங்கன்ற‌ பழமய்களப் போடலாமுன்னு இந்த பதிவு. மொதல்ல வஞ்சியாத்தா தான் பாட்டை ஆரம்பிக்குறா,


அடுப்புநக்கி துடுப்புநக்கி
அடுப்பங்கரை சாம்பல்நக்கி
பருப்பு பலகநக்கி
பாடிவாடா ஒம்பாட்டை!

பச்சைப்பட்ட தூக்கிபுள்ள‌
பனங்காட்டை சுத்திபுள்ள‌
எச்சிப்பட்ட நக்கிப்புள்ள‌
எடுத்துவாடி ஒம்பாட்டை!

சாலையில‌ ச‌வுக்கும‌ர‌ம்
ச‌ருக்காரு வ‌ச்ச‌ம‌ர‌ம்
ஓங்கி வ‌ள‌ந்த‌ம‌ர‌ம்
ஒன‌க்கேத்த‌ தூக்கும‌ர‌ம்
ச‌ம்ம‌ங்கி எண்ண‌தேச்சு
சாட்ட‌போல‌ முடிவ‌ள‌த்து
பாவிப்ப‌ய‌ வாச‌லுல‌
ப‌ஞ்சா உதுத்த‌னடா!

குருதாலி காட்டுக்குள்ள‌
குனிஞ்சு க‌ளை எடுக்க‌யிலே
குத்துக்க‌ல்லு மேல‌நின்னு
கூப்புட்ட‌து நாந்தான‌டி
கும்ம‌ப் ப‌னைக்கும்
காளியாத்தா கோயிலுக்கும்
அலைய‌விட்ட‌ ச‌ண்டாளி!!

அதுக்க‌ப்புற‌ம் ரெண்டு பேரும் ஒரு வ‌ழியா ச‌மாதான‌மாயி, ஒரு எட்டுத் த‌னியா இருக்க‌லாமுன்னு சோள‌க் காட்டுப் ப‌க்க‌ம் ஒதுங்க‌, மேக்கால‌ ஊட்டு ம‌யில‌க்கா, ஆடு ஓட்டிட்டு வார‌து தெரியுது. ரெண்டு பேருக்கும் ம‌ன‌சு பொசுக்குனு தாம்போச்சு. அதுக்கப்புறம் அவிங்க‌விங்க‌, அவிங்க‌ அவிங்க‌ வேலைய‌ப் பாக்க‌ப் போய்ட்டாங்க‌. வாங்க‌, நாம‌ளும் ந‌ம்ம‌ வேலைய‌ப் போய்ப் பாக்கலாம், என்ன‌ சொல்றீங்க‌?!

பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

12/09/2008

வெக்க‌க் கேடு நான் போறேன்!

வணக்கம் அன்பர்களே! பாருங்க, நாங்கெல்லாம் பள்ளிக்கூடம் விட்டு சரியா நாலு மணிக்கு ஊட்டுக்கு ஓடி வருவோம். வந்ததும் வராததுமா பைக்கட்டத் தூக்கி மூலைல போட்டுட்டு நேரா சமையக் கொட்டத்துக்கு போயி, நாம சொல்லுறது, "அம்மா, எனக்குத் திங்றதுக்கு எதனாச்சும் வேணும்!".

அவிங்க, பொரி கடலை, நிலக்கடலை உருண்டை, மாம்பழம், கொய்யாப் பழம், பலாப் பழம், வெள்ளரிப் பிஞ்சு, தோசைக் காய், வேக வெச்ச மக்காணிக் கருதுன்னு எதனாச்சும், அந்த அந்த பருவத்துக்கு ஏத்த மாதர, இருக்குறதக் குடுப்பாங்க. அவசர கதியில தின்னுந் திங்காம‌, பக்கத்துல இருக்குற கோய்ந்தன் ஊட்டுக்குப் போவோம். அவிங்க வீட்லயும், எங்க ஊட்ல இருக்குற மாதரயே மூணு பையங்க. அவிங்களுக்கு நெசவுத் தொழில். அதனால், அவிங்க வீடு ஒரே பரபரப்பா இருக்கும். ரெண்டு தறியில அவிங்க அப்பாவும், மாமான் மகனும் நெய்துட்டு இருப்பாங்க. ஊட்டுப் பொம்பளைங்க இராட்டைல கழி சுத்திட்டு இருப்பாங்க.

வீட்டு வாசல்ல நாங்க எல்லாம் எதனா விளையாடிட்டு இருப்போம். அப்ப சின்ன சின்னச் சண்டை எல்லாம் வந்திரும். அப்ப விளையாட்டுல இருந்து ச்சும்மா விலகி வந்துட்டா, நம்ம கெளரதை என்னாவறது?! அப்ப, அங்க‌ அவிங்களுக்கு எரிச்சல் வர்ற மாதர எதனாச்சும் செஞ்சிட்டுதான் எடத்தைக் காலி பண்ணுறது. அப்பிடி எரிச்சல் ஊட்ட, இதையும் பாடுவம் அப்பப்ப:


பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
ஒலகம் எல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேல ஊர்கோலமாம்
ஒட்டகச் சிவிங்கி நாட்டியமாம்
குடு குடு கெழவி பிம்பாட்டாம்
தடல்புடலான சாப்பாடாம்
தாலிகட்ட மேடையில‌,
மாப்பிள்ளைப் பூனைய‌ காணோமாம்
ச‌ந்த‌டி ச‌ந்த‌டி செய்யாம‌
ச‌ய்ய‌க் காட்டுல‌ தொலைஞ்சானாம்
வாங்கி வெச்ச‌ பாலெல்லாம்
ஒரே மூச்சுல‌ குடிச்சாளாம்
பாட்டி ஊட்டுப் புள்ளைக‌ளாம்
வேணாம் இந்த‌ ச‌க‌வாச‌ம்
வெக்க‌க் கேடு நான் போறேன்!

சும்மா இருக்குற சிட்டுக்குருவிக்குச்
சோத்தைப் போடுவானேன் - அது
கொண்டயக் கொண்டய ஆட்டிகிட்டு
கொத்த வருவானேன்?!

12/08/2008

கனவில் கவி காளமேகம் - 10

வணக்கம் அன்பர்களே! ஒரு நாளைக்கு ரெண்டு பதிவுன்னு போன வாரம் ரொம்ப முசுவா(busy)ப் போச்சு. நேத்தைக்கு சார்லட்ல (Charlotte, NC) பதிவர் சந்திப்பு! அதுவும் நல்லா, பம்பலா(fun)ப் போச்சு. எல்லாம் முடிச்சுட்டு வந்து சிவனேன்னு படுத்தேன். நல்ல நித்திரை! திடீல்னு வழக்கம் போல கவி காளமேகம் அப்பிச்சி கனவுல வந்துட்டாரு. மேல படீங்க, என்னாதான் சொன்னாருங்றதைத் தெரிஞ்சுக்குவீங்க.

"என்னடா பேராண்டி, பரவாயில்லையே, கெரமாத்தை உட்டு வந்து நொம்ப நாளானுலும், ஊர்ப் பழமயப் போட்டு, உன்னோட நட்சத்திர வாரத்தை ஓட்டிட்டயே?"

"ஆமுங்க, எழுதறதுக்கு வேற ஒன்னுங் கிடைக்கலை, அதான்!"

"சரிச் சரி, போனதைப் பத்திப் பேசறத உட்டுட்டு இப்ப விசியத்துக்கு வா. நீ அடிக்கடி பெனாத்தறயாமே, உண்மையா?"

"ஆமா பின்ன, இப்பிடி வந்து தூக்கத்துல அக்கப்போர்(trouble) பண்ணினாப் பினாத்தாம வேற என்ன செய்யுறதுங்க அப்பிச்சி?"

"சாமார்த்யமாப் பேசுறடா! ஆமா, பினாத்துறதுன்னா என்ன?"

"க‌ண்ட‌ப‌டி உள‌ற‌துதான் பினாத்துற‌து. என‌க்கு புரிஞ்சு போச்சு, நீங்க‌ அங்க‌ தொட்டு இங்க‌ தொட்டு, க‌ண்ட‌துக்கும் விள‌க்க‌ஞ் சொல்ல‌ச் சொல்லுவீங்க‌. இன்னைக்கு நான் த‌யாரில்லை. சொல்ல‌ வ‌ந்த‌தைச் சொல்லிட்டு ந‌டைய‌க் க‌ட்டுங்க‌ அப்பிச்சி!"

"என்ன‌டா இது? ச‌ரி சொல்லுற‌ன், அதையாவ‌து கேட்டுக்கோ!"

"சொல்லுங்க‌!"

"அல‌ட்டுத‌ல்ன்னா அல‌ட்சிய‌ப் ப‌டுத்த‌ற‌து. பீத்துத‌ல்ன்னா வீண் பெருமை பேசுற‌து. பினாத்துத‌ல்ன்னா நீ சொன்ன‌ மாதிரி, உள‌ற‌ல் அல்ல‌து பித‌ற்ற‌ல். அனாம‌த்துன்னா பொதுவா இருக்குற‌து. உன்னோட‌ வீட்டை ஊருக்கார‌ங்க‌ எடுத்துகிட்டாச் சொல்லுற‌து, வீடு அனாம‌த்தாப் போச்சு. இதுவே, அனாவ‌சிய‌ம்ன்னா, அவ‌சிய‌மில்லாத‌ ஒன்னு. அதாவ‌து, 'அ'னாவை மங்கலத்துக்கு முன்னாடி போட்டா அமங்கலம் ஆயிடும். அது மாதர, 'அ'னாவை அவசியத்துக்கு முன்னாடி போட்டா வர்றது அனாவசியம்.

"ஏன் அப்பிச்சி, இதெல்லாம் தமிழ் வார்த்தைகதானா?"

"ஆமா, இல்லாட்டி நான் எதுக்கு உங்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்?"

"சரிங்க அப்பிச்சி, இந்நேரம் நாம பேசினதப் பதிவாப் போட்டா, வாசகர்கள் தேடிப் பிடிச்சு உதைப்பாங்க. எதாவது விசியஞ் சொல்லிட்டுப் போங்க!"

"ம்ம், நம்ம காட்டுல அவரை போடுவமே, என்னன்ன அவரை போடுவோஞ் சொல்லு!"

"அவரை, துவரை ஞாபகத்துல இருக்குறதே பெரிய விசியம், நீங்க வேற! சரி சொல்லுங்க நீங்களே!!"

"முறுக்கவரை, காட்டவரை, கொத்தவரை, சிவப்பவரை, பேயவரை, நகரவரை, பேரவரை, பாலவரை, கணுவவரை, தீவாந்தரவவரை, கோழியவரை ,வாளவரை அப்புறமா சிற்றவரை!"

"இதுல ரெண்டு மூணு எனக்குத் தெரியும். மத்ததெல்லாம் மறந்து போச்சுங்க!"


"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.
(......கனவுல இன்னும் வருவார்......)

தாட்டு பூட்டு தஞ்சாவூரு!

வணக்கம்! பாருங்க நண்பர் குடுகுடுப்பையார் தஞ்சாவூர் குறிச்சு நல்ல நல்ல தகவல்களைப் பதிவா எழுதி, நமக்கெல்லாம் தெரியப் படுத்திகிட்டு வர்றாரு. தஞ்சாவூர் அப்பிடீன்னா, நமக்கு உடனே நினைவுக்கு வர்றது "தாட்டு, பூட்டு தஞ்சாவூரு!"ங்க. எங்க ஊர்ப் பக்கம் யாராவது வந்து அலப்பறை செய்துட்டு போனாங்கன்னா சொல்லுறது, "தாட்டு பூட்டு தஞ்சாவூருன்னான்! போய்ட்டான்!!".

தமிழ்ல தாட்டுன்னா வீழ்த்துறதாமுங்க. பூட்டுன்னா இறுக்கறதுங்க. ஆக இதுக்கு அர்த்தம், "வீழ்த்தணும் இறுக்கணும்!" ன்னு வருமா? இல்ல, அதுக்கான வேற விளக்கம் இருந்தா சொல்லுங்க. அப்புறம் ஏன் தஞ்சாவூர் பேரு அந்த சொலவடைல வருது? இதைத் தலைப்பா வெச்சி ஒரு திரைப்படமும் இருக்கு. நான் நேற்றைக்கு நடந்த சார்லட் பதிவர் சந்திப்புல கலந்துகிட்ட எங்க தஞ்சாவூர்க்காரர்கிட்ட கேட்டேன், அவரு நகைச்சுவையா, ச்சும்மா ஒரு யூகத்துல, வெள்ளக்காரன் நினைச்சான்(thought), சப்பாத்து(boot) எடுத்துப் போட்டான், போய்ட்டான்னு ஒரு நவீன விள்க்கம் குடுத்தாரு. இஃகி!ஃகி!! சரியான விபரந் தெரிஞ்சா சொல்லுங்க!! மத்தபடி இதுல ஏதாவது பொடி இருந்தா, என்னை மன்னிச்சு உட்டுடுங்க, நான் பொழச்சிப் போறேன், தெரிஞ்சுக்கலாம்ங்ற ஒரு ஆர்வத்துலதான் கேக்குறேன்!


வாங்கிறதைப் போலிருக்க வேண்டும், கொடுக்கிறதும்!

12/07/2008

நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழு!

அன்னைதந்த பால் ஒழுகும் குழந்தைவாய் தேன் ஒழுக அம்மா என்று
சொன்னதுவும் தமிழன்றோ! அக்குழந்தை செவியினிலே தோய்ந்த தான
பொன்மொழியும் தமிழன்றோ! புதிதுபுதி தாய்க்கண்ட பொருளி னோடு
மின்னியதும் தமிழன்றோ! விளையாட்டுக் கிளிப்பேச்சும் தமிழே யன்றோ!

--பாவேந்தர் பாரதிதாசன்

வணக்கம். மாந்தனின் வாழ்வில், எதற்கும் முடிவு ஒன்று உண்டு என்பது நிதர்சனம். அந்த வகையிலே, தமிழ் மணம் வீசித் திகழும் தமிழ்மணம், இந்த வார நட்சத்திரப் பதிவராக்கி, எமக்கும் ஒரு வாய்ப்பளித்தது. அந்த நல்ல வாய்ப்பு முடிவுக்கு வந்து விட்டதான படியால், உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

தமிழ்மணம் நல்கிய நல்லதொரு வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, இயன்றளவு இடுகைகளை இட்டதில், அவையாவும் வாசித்த வாசகர்களுக்கும், இனி வாசிக்கப் போகிற வாசகர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் யாமொரு சாமன்யன் என்ற வகையிலே, அவற்றுள் மேம்பாடு காணக்கூடிய கூறுகள் மலிந்து கிடக்கும் என்பதிலும் ஐயமெதுவும் இல்லை. ஆகவே, தாங்கள் அது குறித்து, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் பட்சத்தில், எதிர்வரும் காலத்தில் அவற்றைக் களைந்து, பதிவுகளை மேம்படுத்திக் கொள்ள முயல்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

எங்க‌ள் ம‌ண்ணின் மைந்தன், அன்புத் தோழ‌ன் ப‌ரிச‌ல்கார‌ன் அவ‌ர்கள், எம்மை வ‌லைச்ச‌ர‌ம் வாயிலாக‌ அறிமுகப் ப‌டுத்திய‌ பொழுது நினைவு கூர்ந்ததையே, இன்றும் நினைவு கூற‌ விரும்புகின்றேன். எட்டாம் வ‌குப்பு ப‌யின்று கொண்டிருந்த‌ நேர‌த்தில், த‌லைமை ஆசிரிய‌ர் அவ‌ர்க‌ள் எம்மை அழைத்து, இனி நீதான் பிரார்த்த‌னைக் கூட்ட‌த்தை வ‌ழி ந‌டாத்திச் செல்ல‌ வேண்டுமென‌ச் சொல்ல‌வே, எம் ம‌ன‌து ஆன‌ந்த‌ச் சிற‌க‌டித்துப் ப‌ற‌ந்த‌து. வ‌ழ‌மையாக‌, ப‌த்தாம் வ‌குப்பில் உள்ள சிறந்த‌ மாண‌வ‌ன்தான் கூட்ட‌த்தை வ‌ழி ந‌ட‌த்திச் செல்வ‌து. அந்த‌ வாய்ப்பு எம‌க்குக் கிட்டிய‌தை எண்ணிப் பெருமையும்! ம‌கிழ்வும்!!

அன்று மாலை, எம் வீட்டுக்க‌ருகில் வ‌சிக்கும் ஆசிரிய‌ர் வ‌ருகிறார், "டேய், நீ ந‌ல்ல‌ பைய‌ன்கிற‌தால‌ இந்த‌ வேலைய‌ உன‌க்குக் குடுத்து இருக்குறோம். இப்ப‌த்துல‌ இருந்து ப‌த்தாம் வ‌குப்பு முடிய‌ற‌ வ‌ரைக்கும், ப‌ள்ளிக்கூட‌த்துக்கு முன்கூட்டியே வ‌ந்திட‌ணும். துணி ம‌ணி எல்லாம் ந‌ல்லாப் போட்டு சுத்த‌ வ‌த்த‌மா இருக்க‌ணும். புரியுதா?" என்று சொல்கிறார். ம‌ன‌தில் இருந்த‌ அந்த‌ ம‌கிழ்வும், அந்த‌ இட‌த்தை அடைந்து விட்டேன் என்ற‌ உண‌ர்வும் ப‌ஞ்சாய்ப் ப‌ற‌ந்து, பொறுப்பு என்னும் க‌வ‌லை தொற்றிக் கொண்ட‌து. அதே உண‌ர்வுதான் மீண்டும் இந்நாளில் என‌க்கு. இயன்றவரை த‌னித்த‌மிழ், ந‌ம‌க்கென்று ஒரு எழுத்து ந‌டை என்றாகிவிட்ட‌ பிற‌கு, கால‌ம் முழுமைக்கும் அம்முகத்தைக் காப்பாற்ற வேண்டிய‌ பொறுப்பில் கால‌டி எடுத்து வைக்கிறேன். இய‌ன்ற‌வ‌ரை அத‌ற்குப் போராடுவேன் என்றும் உளமார‌ உறுதி கொள்கிறேன்.

விடைபெறும் முன்பாக‌, வ‌ட‌க்குக் க‌ரோலைனா, சார்ல‌ட் ந‌வ‌ச‌க்தி ப‌ண்பாட்டுக் குழு, மேலும் அத‌ன் செய‌லாக்க‌ம் குறித்த விப‌ர‌ங்களை உஙளுடன் பகிர்ந்து கொள்வதில், குழுவின் உறுப்பின‌ர் என்ற‌ முறையில் ம‌கிழ்ச்சி கொள்கிறேன். புல‌ம் பெய‌ர்ந்த‌ ம‌ண்ணிலே, த‌மிழ்ப் ப‌ண்பாடு பேண‌வும், அயல் மண்ணில் பிறந்த அடுத்த‌ தலை முறையின‌ர்க்கு த‌மிழை எடுத்துச் செல்வ‌துவுமே இத‌ன் ப‌ணி. அந்த‌ வ‌கையிலே குழும‌ம் ஒரு வார‌ம் விட்டு ஒரு வார‌ம், ஒவ்வொரு உறுப்பின‌ரின் இல்ல‌த்திலும் வ‌ரிச‌யாகக் கூடும். அப்போது, யோகா, த‌மிழ், ச‌மூக‌ம் குறித்த‌ பாட‌ங்க‌ள் க‌ற்பிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. மேலும், விழாக் கால‌ங்க‌ளில் ந‌டைபெறும் நிக‌ழ்ச்சிக‌ளில் குழ‌ந்தைக‌ள் ப‌ங்கு பெறும் வ‌ண்ண‌ம், த‌மிழ்க் க‌லாசார‌ம் சார்ந்த‌ நாட‌க‌, நாட்டிய‌ங்க‌ளும் நடாத்துவதில் குழும‌ம் ப‌ங்கு பெற்று வ‌ருகிற‌து.

என்னாலும் எழுத‌ இய‌லும் என்று தெரியாம‌ல் இருந்த‌ என்னை, தெரிந்த‌ த‌மிழில் எழுத‌ வைத்த‌தில், பிள்ளையார் சுழி இட்ட‌ ந‌வ‌ச‌க்தி குழும‌த்திற்கும், செந்தாம‌ரை பிர‌பாக‌ர‌ன் ம‌ற்றும் ஜெய் சுப்ர‌ம‌ணிய‌ன் ஆகியோருக்கும் ந‌ன்றி கூறிக் கொள்கிறேன். குழும‌த்தின் மின்ன‌ஞ்ச‌ல் ப‌க்க‌த்தில் ஏற்ப‌ட்ட பார‌ம‌ரிப்புச் சிர‌ம‌ங்க‌ளின் கார‌ண‌மாக, எமக்கென்று வ‌லைப்பூ என்றாகி விட்ட‌ பிற‌கு, ப‌திவுக‌ளுக்கு ம‌றுமொழி இட்டும், ப‌திவில் நிக‌ழும் த‌வ‌றுக‌ளைச் சுட்டிக் காட்டியும் ஊக்க‌ம் அளித்து வ‌ரும் ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும், வாச‌க‌ர்க‌ளுக்கும், மீண்டுமொருமுறை த‌மிழ‌ம‌ண‌ம் நிர்வாக‌த்திற்கும் ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!


பட்டு(த்) தெரிஞ்சுகிட்டேன்!

வணக்கம்! தீபாவளி சமயத்துல பட்டு சேலைகளைப் ப்ற்றி தங்கமணி ஏதோ கேட்க, நான் மேலும் கீழுமாக‌ப் பார்க்க, அவர்கள் அவர்களுக்கு தெரிந்த பட்டு வரலாறு பற்றிக் கூறினார்கள். மிகவும் சுவ்ராசியமாக இருந்தது. நானும் மேலதிகத் தகவலுக்காக வலையில் மேய்ந்த போது, மேலும் பல தகவல் கிடைக்கப் பெற்றேன். அதன் சாராம்சமே இந்தப் பதிவு.

சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி(Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அத‌னைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப் பட்டதாம்.

இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.

இந்த‌ச் சூழ‌லில், ஜ‌ப்பானிய‌ர்க‌ள் வெகு சாம‌ர்த்திய‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்க்க‌த் தெரிந்த‌ நான்கு சீன‌ப் பெண்ம‌ணிக‌ளைக் க‌ட‌த்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திரும‌ண‌ம் செய்து கொண்டார்க‌ள். அத‌ன் பின் ஜ‌ப்பானிய‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ ப‌ட்டு நூல் வ‌ள‌ர்ப்பைத் துவ‌க்கி, அத‌ன் உற்ப‌த்தியில் மேம்பாடு க‌ண்டு சீனாவின் உற்ப‌த்தியை விட‌ ப‌ன்ம‌ட‌ங்கு உற்ப‌த்தி செய்ய‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ளாம். ஆனால், சீன‌ர்க‌ளுக்கு அபிவிரித்தி செய்ய‌த் தெரிந்து இருக்க‌வில்லையாம்.

அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது. இப்படித்தான், இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டுச் சேலை வாங்கித்தர இயலாததின் காரணமாக, பட்டுத் தெரிந்து கொண்டேன் பட்டு பிறந்த கதையினை!

பட்டே நீஎன்றன் பட்டினைப்
படாமல் பட்டேன் பெரும்பாடு!

12/06/2008

மாங்கா மடையன் யாரு?

1. வாத்து மடையன்

இது சம்பந்தமா ரெண்டு விளக்கம் சொல்லுறாங்க. முதலாவது, நம்ப ஊர்ல கோழி, சேவல அந்திசாயும் நேரத்துல அடைக்கப் போனா, நாலும் நாலு திசைல ஓடி, வேலை வாங்குமாம். அந்த அளவுக்கு சாதுரியமானது அதுக. ஆனா, ஒரு வாத்தப் புடிச்சு சாக்குப் பைல போட்டா, அடுத்தடுத்த வாத்துக, தானா வந்து கோணிப்பை (சாக்குப்பை)ல விழுமாம். அந்த அளவுக்கு மடம் கொண்டதாம் வாத்து. அதனால, புத்திக்கூர்மை இல்லாதவங்களை வாத்து மடையன்னு சொல்லுவாங்களாம்.

ரெண்டாவது விளக்கம், தங்க முட்டை இடும் வாத்தை, பேராசைப்பட்டு வயித்த அறுத்த மடையனை ஒப்பிட்டு சொல்லுற மாதிரி, வாத்தை அறுத்த மடையன் வாத்து மடையன்னும் சொல்லுறாங்க.

2. மாங்கா மடையன்

சிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்‌சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.

அந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்டு, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.

ரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார். நன்றி: பாலராஜன்கீதா

3. மடச்சாம்பிராணி

அந்தக் காலத்துல மடம், கோயில் கூடம், சத்திரம்னு சனங்க கூடுற பொது இடங்கள்ல பெரிய சாம்பிராணிக் கட்டிய வெச்சிருப்பாங்களாம். இது தணல்ல போட்டு தூபம் போடுற சாம்பிராணி இல்லங்க. இருந்த இடத்துல இருந்து நல்ல வாசம் குடுத்து, காத்துல இருக்குற கிருமிகளநீக்குற சாம்பிராணி. இருந்த இடத்துல இருந்து, காத்துல கரைஞ்சு உருமாறி, நாளடைவுல இது அரை குறையா ஆயிடுமாம். அத வெச்சி, அரை குறையா புத்திக்கூறு இல்லாம இருக்கறவங்கள 'மடச்சாம்பிராணி'னு திட்ற பழக்கம் பொழக்கத்துல வந்தது. மடையன் சாம்பிராணினு ஒரு செடி இருக்குதுங்க. ஆனா, அதுக்கும் இந்த சொல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்களாம். அது ஒரு மூலிக மருந்தாம்.

4.பல வண்ணங்கள் இருக்க, நம் ஊர்களில் சுவர்களுக்கு வெண்மை நிறம் அடிப்பதேன்?


வீடு குளிர்ச்சியா இருக்கவும், கூட வெளிசசமா இருக்கவும் பெரியவங்க வெண்மை நெறத்தை தேர்வு செஞ்சாங்க. அதே சமயம், கரியும் சில தாவரங்களும் கலந்து பூசின கருப்பு நெற வீடுகளும், கட்டிடங்களும் இருந்ததாம். இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட இடங்களான கோழிப் பண்ணை, கால்நடைக் கொத்தளங்கள், பட்டுப்பூச்சி வளர்ப்புனு கொஞ்ச இடங்கள், அப்புறம் பார்வைக்கு எட்டக் கூடாத இடங்கலான கோட்டை, பதுங்கு குழிகள், அமைதி வேண்டிய இடங்கள்னு இருக்குற இடங்கள, கருப்பு நெறத்துல பூச்சு பூசி இருப்பாங்களாம்.

5.பல வண்ணங்கள் இருக்க, குடைகள் கருப்பு நிறத்தில் இருப்பதேன்?

குடைகள் கருப்பு நெறம்னு சொன்ன உடனே, கருப்பு நெறம் ஒளி வீச்சுக் கதிர்களை கவரக் கூடியதுனு சரியா சொல்லுவாங்க. அப்ப, பெரியவங்க ஏன் ஒளி வீச்சுக் கதிர்களை உடனே திருப்பி அனுப்புற வெள்ளை நெறத்தை தெரிவு செய்யல? பெருசு சொன்னது, 'கொடை தலைக்கு மேல அரை அடி ஒசரத்துல கருப்பு துணியோட இருக்கும். ஆனா, ஆறு அடி மனுசனை சுத்தி இருக்குற சூட்டையும் உறிஞ்சீரும்'னு. அதே சமயத்துல வயசுல மூத்தவங்க, கௌரவத்துல மூத்தவங்க, வெள்ளை நெற கொடைகள வெச்சிக்கறதும் பழக்கத்துல இருந்ததாம். இந்தப் பழக்கம் தன்னை தனிச்சுக் காமிக்கறதுக்காக இருந்து இருக்கலாம். இன்னைக்கும் நூறு வருசப் பழமையான லக்ஷ்மாபுரம் விநாயகர் கோயில் கல்வெட்டுல, 'மிராசுதார் வெண்குடை சுப்பையா'னு தான் போட்டிருக்கு.

6.பரிணாம வளர்ச்சி என்று கூறினாலும்,இறைவனின் ஒவ்வொரு படைப்புக்கு பின்னும் ஒரு அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்று நம்புகிறேன். நீங்களும் அதே கட்சியா? அப்படியானால், பிறப்பில் தலை மயிர் கருப்பாகவும் பின் (சிலருக்கு)வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. அது ஏன்?

கிட்டத்தட்ட மேல சொன்ன பதில் தான் இதுக்கும். ஆனா, ஒரு சிறு வித்தியாசம். அடர்ந்து இருக்குற கருப்பு நிற தலை முடி, சூட்டை உறிஞ்சி மேல் புறமாத்தான் வெச்சு இருக்கும். தலைக்கு உள்ள விடாதாம். ஆக, வெப்பம் நெறஞ்ச பூமியில உடலை சுத்தி இருக்குற சூட்டை கிரகிச்சு, அதைத்தணிக்க கருப்புத் தலை முடி ஒதவுது. வயசான காலத்துல தலையில் மயிரின் அடர்த்தி கொறயக் கொறய, ஒளி வீச்ச திருப்பி அனுப்புற மாதிரி வெள்ளை நெறமா நரைக்க ஆரம்பிக்கும், மண்டைல சூடு உள்ள போகக் கூடாதுன்னு. ஆனா, இந்த வயசுல உடல சுத்தி இருக்குற சூட்டை தணிக்க தலை முடி ஒதவறதது இல்ல. அதான் சூட்டை உறிஞ்சுற கருப்பு நெறம் இல்லையே?!

குறிப்பு: இது ஒரு மீள்பதிவு!