1/12/2013

பட்டி நோம்பி

”அட, என்ன பாக்கறீங்க? ஊர்ல மழைங்ளா? ஒரு ஒழவு மழை இருக்குமுங்ளா? பொங்கலூருக்கு வடக்கமின்னா நல்ல மழையின்னு பெரிய பாப்பாத்தியவிங்க ஊட்டுக்காரர், வந்திருந்தவரு சொன்னாரு. இங்க வாசத் தொளிக்குறதுக்கு மூத்த புள்ளியா ரெண்டு அடி அடிச்சிப் போட்டு, தாந்து போச்சுங்க. எதுக்குமு, இந்த தை பொறந்தா ஒரு வழி பொறந்துதானுங்க ஆகோணும்?”
”ஆமாங்க மச்சான். எங்களுக்குமு ஒழவு மழையல்லாம் பேயிலீங்கோ. காட்டுத்தண்ணியே காட்டைவுட்டுப் போகுலீன்னா பார்த்துகுங்க நீங்களே?”
“அது செரீங். தை பொறந்தாச்சின்னா, பட்டி பெருகோணும்; வெள்ளாமை வெளையோணும்; பொங்கல் பொங்கோணும்!! அது மாறாது பாருங்க. அல்லாம் நல்லாத்தான் ஓடி அடையும். என்ன நாஞ்சொல்றது சரித்தானுங்ளே?”
“ஆமாமாங். இப்பெல்லாம் ஆருங் முன்ன மாதர தை நோம்பியெல்லாங் கும்புடுறாங்க? அல்லாம் மாறிப் போச்சு பாருங்!”
“நெம்ப நல்லாவே. இங்க, நாங்க ஒரு நாலஞ்சி பண்ணையத்துக்காரங்க மட்டும் இன்னுமு பழைய மொறைக்கி அல்லாத்தையும் செஞ்சிட்டுதான் வாறம். நம்ம இருக்குற காலத்துக்கும் செஞ்சி போடலாம். அதுக்கப்பொறம் என்னமோ ஆயிட்டுப் போகுது போங்க!”
”பெரிய அமுச்சி இருக்கமுட்டும் நாங்களும் தொட்டி கட்டி, பட்டி மெரட்டிட்டுதா இருந்தமுங்க. அமுச்சி போய்ச் சேந்தவுட்டு, பெரியம்மணிய பெங்களூருக்கு கண்ணாலங்கட்டி தாட்டியுட்டதாச்சிங்? அதுக்குப் பொறகு அல்லாமே நெதானமாய்ப் போச்சுங்!”
”நாம சின்ன வயசுல இருக்கறப்பெல்லாம் ஒரு வாரம் பத்து நாளத்து நோம்பியா இருந்துச்சு. இப்பெல்லாம் ஆரும் மூனு நாள் நோம்பியாக்கோடக் கும்புடுறது இல்லை?!”
“கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்க பழமைய. ஏன் நிக்கிறீங்க? குக்கீட்டுச் சொல்லுங்க மச்சே! வேலை கெடக்கட்டும்; எப்பூஞ்செய்யுற வேலைதான?!”
”அது செரி. கார்த்திகை மாசம் சோதி வெச்ச நாள்ல இருந்தே பட்டி நோம்பிக்கான வேலைகளும் தெரக்கா ஆரமிச்சிரும். சோதியன்னைக்கு சூந்து விளையாடுவோம். வெடிய வெடிய ஆடுவோம். கருது அறுத்து குச்சுக வெச்சிருக்கும். அந்தக் குச்சுகள்ல இருந்து தட்டுக் கத்தைகளை ஒன்னு ஒன்னா எடுத்தாந்து, அதோட மொனையில தீயைப் பத்த வெச்சி வளைச்சி வளைச்சி சுத்துவோம்.
நாலுபேரு அஞ்சு பேருன்னு கூட்டாச் சேந்துட்டு போயி களவாடுவோம். மாங்கா திருடுவோம். தேங்கா திருடுவோம்; ஆகாதவன் கெணத்துக்குள்ள எறங்கி மோட்டாரைக் கழட்டித் தண்ணிக்குள்ள போட்டுட்டு வருவோம். ஊர் வெடலைக காயடிக்காத காளைகளுக்கு எணை ஆச்சுதே? ஆனாலும் அதுல ஒரு நேர்மை இருக்கும். பொண்டு புள்ளைக மேல கை வெக்க மாட்டம். ஏழைபாழைகளுக்கு சகாயமா நடந்துக்குவம்.
சூந்து ஆடி முடிஞ்சு ஊட்டுக்குப் போகும் போது கெழக்க வெளுத்துரும். அந்த நேரத்துக்கும், ஊட்டுக்குப் போயி நாலு அச்சு, அஞ்சு அச்சுன்னு இராகிக் களியோட சுண்டைக்கா வத்தக்கொழம்பு, தூதுவளைச் சாறுன்னு கலந்து கட்டி ஒரு எடுப்பு எடுத்துட்டுதா தூங்கப் போவம்.
அன்னிக்கி பொழுது பம்பலா அப்படி முடியும். அது முடிஞ்ச கொஞ்ச நாள்லயே மார்கழி மாசம் பொறந்திரும். மார்கழி மொதநாள் அன்னிக்கே வடக்க தங்காத்தா கோயலு, ஊருக்குள்ள விநாயகங்கோயல்னு எல்லாக் கோயல்லயும் அன்னாடப்பூசை ஆரமிச்சிரும். ஒவ்வொரு கோயல்லயும் காலையில அஞ்சரையிலிருந்து ஏழு மணி வரைக்குமு, சாயங்காலம் ஆறுல இருந்து ஒம்பது மணி வரைக்குமு பாட்டுப் போட்டியில சாமி பாட்டுக போடுவாங்க. பண்டாரத்தார் ஊட்டு சம்முகம் ரெண்டு வேளையும் பூசை செய்வான்.
ஊர்ல இருக்குற நாய்க்கமாருங்க எல்லாம் பசனை கோயல்ல காலையில அஞ்சு மணியிலிருந்து பசனை பாடுவாங்க. ஆறு மணிக்கு சங்கு சேகண்டி ஊதிட்டு பாடிட்டே ஊர் சுத்தி வருவாங்க. பெரிய சிங்கார் நாய்க்கர் ஆர்மோனியப் பொட்டி, சுப்புராயலு நாய்க்கன் மிருதங்கம், நம்ம பாட்டையன் கஞ்சிரா, நரசிம்ம நாய்க்கரும் காவேட்டி நாய்க்கரும் சால்ரா போடுவாங்க. மித்தவிங்க எல்லாரும் கை தட்டிட்டே பசனைக்கு பின்பாட்டு பாடுவாங்க. கோபால்சாமி நாய்க்கனும் குழித்தோட்டத்து பட்டீசுவரக் கவுண்டனும் நல்லாப் பாடுவாங்க. அந்த ஆதிசேசா, அனந்த சயனாங்ற பாட்டுப் பாடும் போது ஊரே முழிச்சுக்கும். அவிங்க மொத்தம் நுப்பது பேரு. இப்பெல்லாம் எங்க அந்த மாதர பசனை கோசுடியே இல்லை போ. எங்கியோ கோயமுத்தூருகிட்ட வடவள்ளியில இருக்குதுன்னு சொல்லிச் சொல்றாங்க. பீளமேடு இரங்கம்மா கோயல் கோசுடின்னு சொல்லிக்கிறாங்க.
கடைசி நாளன்னக்கி திருப்பாவை முச்சூடும் பாடி, பசனை கோயல்காரங்க ஊருக்குள்ள மெரவனை வருவாங்க. தங்காத்தா கோயல்லயும், புள்ளார்கோயல்லயும் பூசை செய்து அவிசாயங் குடுப்பாங்க. பசனை கோயல்ல மாசம் முப்பது நாளும் சக்கரைத் தளிகையுமு, கடைசி நாளன்னிக்கு கூடா தட்டவடையுங் குடுப்பாங்க.
அந்த முப்பது நாளும் ஊருக்குள்ள அல்லாரும் சாமி கும்புடுறதும், அறுவடைப் பம்பலைப் பாக்கறதும், பட்டி நோம்பிக்கான வேலைகளைப் பார்க்கறதுமா ஒரே தடபுடலா இருக்கும். அல்லாரும் மனசு நெறஞ்சி தாய் புள்ளையா பந்த பாசமா இருக்குறது எப்பன்னு கேட்டா, இந்த மார்கழி ஆரமிச்சி தை நோம்பி முடியுற காலத்தைத்தான் சொல்லோணும்.
பட்டி நோம்பி வாறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடியே சந்தைகளுக்குப் போயி வேணுங்றதை வாங்கிப் போட்ருவாங்க. அல்லாமே நெல்லு குத்தி அரிசி பொடச்சி, பொங்கலுக்குன்னு தனி அரிசி, படைப்புக்குன்னு தனி அரிசி கட்டி வெச்சிருவாங்க. ஊருக்குள்ள அரசாணிக் காய் ஊரெங்கும் பொழங்கும். அங்கங்க ஊட்டு வாசல்ல பூசணிப் பூ வெச்சிக் கோலம் போடுவாங்க. மார்கழி முப்பதும் பொம்பளைப் புள்ளைகளுக்குக் கோலம் போடுறதும் கோயல்களுக்கு மாலை கட்டுறதுதான் வேலை.
பொம்பளைப் புள்ளைகளுக்கு அந்த வேலைன்னா, ஆம்பளைப் பசங்களுக்கு வண்டியப் பழுது பார்த்து வெக்கிறது. கீல் போட்டு இருசுகளைப் பதனம் பன்றது. ஏர்க்கால், பார்ச்சட்டம், மூக்காணி அல்லாத்தையும் மராமத்து செய்யுறதுன்னு வேலை முசுவா இருக்கும். எருதுகளுக்கு இலாடம் போட்டு பருத்திக் கொட்டைப் புண்ணாக்கும் நல்ல அரிசித் தவிடுமாப் போட்டு பாங்காக்குவாங்க.
திமில் இருக்குற காயடிக்காத காளைக் கன்னுகளுக்கு கொம்புக் கவுறு பூட்டுறதும், கழுத்து மணி பூட்டுறதும், கொம்புச்சலங்கை கொழுவுறதும் நடக்கும். இந்த மாதரக் காளைகளை வெச்சிருக்கிற நாங்கெல்லாம் ஒரு மொறப்பாத்தான் ஊருக்குள்ள திரிவோம். எங்களைக் கண்ணு வெக்காத பொம்பளைப் புள்ளைக ஊர்ல கெடையாது.
மார்கழி கடைசி நாள் அன்னிக்கி, பசனை கோயல் சப்பரம் தூக்கிட்டு வந்து ஊருக்குள்ள பசனை பாடி முடிஞ்சதும் காப்புக்கட்டு ஆரமிச்சிரும். ஊட்டுல, தோட்டத்துச் சாளையில இருக்குற பழசு பரட்டை எல்லாத்தையும் கழிச்சிக் கட்டிட்டு செய்யுறதுதான் காப்புக்கட்டு. காப்புக்கட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊடு ஒட்டடை அடிச்சி பூசி வழிக்கிற வேலை ஆரமிச்சிருவாங்க. மொகுடு ஏறிப் பூசுறது, அட்டாலியில ஏறி சுத்தம் செய்யுறதுக்குன்னு நாங்க கொஞ்சப் பேர்தான் இருப்போம். எங்களை எல்லாரும் வந்து கூப்புடுவாங்க. ஒரே கிராக்கிதான் எங்களுக்கு. தெனை மாவும், அரிசி மாவும், கைமுறுக்கும், ஓலைமுறுக்கும், உப்பட்டும்னு எங்களை நெம்ப நல்லாக் கவனிப்பாங்க.
காப்புக்கட்டு அன்னிக்கு மத்தியானத்துல இருந்தே ஊட்டு வாசல் வழிக்கிறதும், களத்து மேட்டுல வழிக்கிறதும்னு பொம்பளைக முசுவா இருப்பாங்க. எளவட்டப் பொடுசுகெல்லாம் ஓடி ஓடிக் கோலம் போட்டு ஊரே ஜாகோன்னு இருக்கும். அந்த தாவணிட் தலப்புல மூஞ்சியத் தொடச்சிக்கிறதும், பாவாடைய கணுக்கால் தெரியுறா மாதர ஏத்தியுட்டுச் சொருகிக்கிறதும், எங்களையெல்லாம் அல்லைல பார்த்துட்டே கோலம் போடுறதும் விட்டேத்தியா வக்கணை பேசுறதும்னு அவிக செய்யுற லொல்லு கொஞ்ச நஞ்சமல்ல போங்க.
தெகோட்டுல இருக்குற பையான் வீட்டு ஆளுக ஒவ்வொரு வீட்டுக்கும் காப்புக்கட்டுக்கு வேண்டியதை எல்லாம் கொண்டாந்து குடுப்பாங்க. காலையில நேரத்துல அவங்க கொண்டார்ற மக்கிரியில, கோலப்பொடியும், அரப்புமு இருக்கும். அவங்கவங்க பண்ணையத்துல இருந்து மாட்டுச்சாணம் முந்துன நாளே வந்திடும் வாசல் வழிச்சுடுறதுக்கு. வழிச்சுட்ட ஈரம் காயம் போறதுக்குள்ளயே அம்மணிகளும் பாப்பாத்திகளும் கோலம் போட்டு உட்றுவாங்க. ஊட்டு கார வாசல், திண்ணையில எல்லாம் அரிசி மாவுக் கோலம் போட்டு உட்றுவாங்க.
மஞ்ச வெயில் வர்றதுக்கும் சித்தங்கூரத்துக்கு முன்னாடி, பையான் ஊட்டு ஆளுக மறுக்காவும் பூளைப்பூவு, புங்கங்கொழுந்து, வேப்பங்கொப்பு, மாவிலை, ஆவரம்பூக் கொத்துன்னு ஊட்டு ஊட்டுக்கும் கொண்டாந்து குடுத்துட்டு போவாங்க. தோட்டங்காட்டுல இருக்கிறவங்க, அவங்கவங்களுக்கு வேண்டியதை அவிங்களே பொறிச்சிக் கொண்டாந்துருவாங்க.
எல்லா தழைகளையுமு வேணுங்ற அளவுக்கு ஒன்னு கூட்டி, மொதல் கொப்பைக் கொண்டு போயி புள்ளார் கோயல்ல வெச்சிக் கட்டிட்டு வருவோம். கூடவே பக்கத்துல இருக்குற ஒன்னு ரெண்டு கோயல்லயும் கட்டிட்டு வந்திருவோம். ஊட்டு எறவாரம், மதில்சுவரு, தோட்டங்காட்டுல இருக்குற பொழிக்கல்லுன்னு எல்லா எடத்துலயும் பூளைப்பூக் கொப்புகளை வெச்சி காப்பு கட்டிட்டு வர இராத்திரி மணி ஏழெட்டு ஆயிரும்.
ஒவ்வொரு ஊட்டுலயும் பெத்து, பொறப்பு, ஒறம்பரைகன்னு ஒரே பம்பலா இருக்கும். ஊட்டுக்கூடு பலகாரம் பணடம் மாத்திக்கிறதும், அங்கங்க உக்காந்து பழமை பேசுறதும் நடக்கும். புள்ளார்கோயல் மைதானத்துல கோலாட்டம், ஒயிலாட்டம், கொட்டுமொழக்கு எல்லாமும் நடக்கும்.
அடுத்த நாள் பெரிய நோம்பி. காலையில வெடியிறதுக்கு முன்னாடியே எழுந்து தலைக்கு வாத்துட்டு, கார வாசலுக்கு அல்லாரும் வந்துருவோம். கார வாசல் நடுப்புல பெரிய அய்யன் கல்லு வெச்சு அடுப்புக் கூட்டுவாரு. உன்ற அக்கா வழிச்சி உட்டு மஞ்சத்தூவி கோலம் போட்டு உடுவா. நானும் உன்ற அக்காளும் கரும்பு, காப்பு கட்டுனதுல மிச்சமான வேப்பந்தழை, ஆவரம்பூவு, மஞ்சக்கொப்பு, துளசிச்செடி, துண்ணூர்ப்பத்திரி எல்லாமும் வெச்சி சோடனை செய்வோம். ஆத்தாவும் அய்யனும் சேந்து பொங்கல் வெப்பாங்க. உன்ற அக்கா பள்ளையம் போடுவா. பொங்கல் பொங்குனவுட்டு, கெழக்க வெளுத்து வர்ற கதிரவனுக்குப் பொங்கல் வணக்கமும் நாட்ராயனுக்கு பள்ளையமும் படைச்சி சாமி கும்புடுவோம். காலையில பொங்கச் சோத்தை உண்டு போட்டு, அல்லாரும் பொறப்புட்டு ஆண்டியூர் காளியம்மன் கோயலுக்கு போயிட்டு வருவோம். கொஞ்ச பேரு திலுமூர்த்தி மலைக்குப் போயிட்டு வருவாங்க. பெரியூட்டு ஆளுக எல்லாம் கெழக்க பழநிக்குப் போயிட்டு வருவாங்க.
பெரிய நோம்பி அன்னிக்கு இராத்திரி முச்சூடும் ஊர்த்தலைவாசல்ல, ஊர்த்தலைவருக்கு மொறை செஞ்சி ஆட்டபாட்டம் நடக்கும். ஒரு பக்கம் கொட்டுமொழக்கு நடக்கும். ஆம்பளை ஆளுகெல்லாம் ஒயிலாட்டம், கோயில்மாடு மிரட்டுறது, சலங்கையாட்டம்னு பல வேடிக்கைகளும் செஞ்சி பராக்கு பார்க்க வெப்பாங்க. பொம்பளையாளுக கும்மியடிச்சி கந்தபுராணம் சொல்லுவாங்க.
வெடிஞ்சி எந்திரிச்சா, பட்டி நோம்பி! பண்ணையம் வெக்கிறவங்களுக்கெல்லாம் இதான் நோம்பி நாளு. ஊர்க்குளத்துல அங்கங்க நின்னு பண்டங்கன்னுகளைக் கழுவியுடுவாங்க. நான் பெரிய வாய்க்கால்ல போயி மாடு கன்னுகளைக் குளிப்பாட்டியுட்டு ஓட்டிட்டு வருவன். கொம்பு சீவி பெயிண்ட் அடிச்சுடுவேன். மொட்டை வண்டிக்கும் பெயிண்டி அடிச்சுடுவேன். சவாரி வண்டிக்கு மழத்தண்ணி ஒழுகாதபடிக்குத் தார் பூசியுடுவோம். போனகிழமைச் சந்தையில வாங்கிட்டு வந்த மொகரைக்கவுறு, மூக்கணாங்கவுறு, கைக்கவுறு, கொம்புச்சூடி, கம்பளிக்கவுறு, கழுத்துச்சங்கு அல்லார்த்தையும் கொண்டாந்து பண்டங்கன்னுகளுக்குப் பூட்டியுடுவோம். காளைகளுக்கு கழுத்து மணியும் கொம்புச்சூடியும் பொருத்தியுடுவோம். இந்த வேலைக ஒரு பக்கம் நடந்திட்டு இருக்கும் போது, அய்யனும் ஆத்தாவும் களத்து மேட்டுல எல்லா வேலைகளையும் பார்த்துகிட்டு இருப்பாங்க.
சாய்ங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம், களத்து மேட்டுக்கு மேவறத்தல்லையில இருக்குற வில்வமரத்துக்கடியில அய்யன் பட்டி கட்டியுடுவாரு. ஆத்தாவும் அக்காவும் பாம்புப் புத்துக்கு விளக்கு வெச்சிக் கும்பிட்டுட்டு வருவாங்க. களத்து மேட்டுல இருக்குற கருப்பராயனுக்கு கலயத்துல பொங்கல் வெச்சிக் கும்பிடுவாங்க. கருப்பராயனுக்கும் தாத்தைய்யன் கோயிலுக்கும் பள்ளையம் வெச்சி படப்பும் போட்டுக் கும்பிடுவோம். அதுக்குள்ள இருட்டாயிருந்திருக்கும்.
ஒரு எட்டு மணி வாக்குல அல்லாரும் வில்வமரத்தடிக்கு வந்திருவோம். பண்ணையத்துல வேலை பாக்குற சித்தாள் சின்னமுத்தி, பார்வதி, மாட்டுக்காரன் சின்னான், வேலையாளுக வேலன், கந்தன் அல்லாரும் அவங்கவங்க ஊட்டு ஆளுகளோட வந்திருவாங்க. குருவனும் அமுசாவும் தீப்பந்தம் கொண்டாந்திருவாங்க. ரெண்டு தீப்பந்தம் எரியுற வெளிச்சத்துல வில்வமரமே எரியுற மாதிரி இருக்கும். அல்லையில தேங்கா மட்டைகளை எரிச்சுட்டு தப்பட்டைப் பலகைகளை காய்ச்சிட்டே குளிர் காஞ்சிட்டும் இருப்பாங்க.
அய்யன் கைவாகுல பட்டி தயாரா இருக்கும். களிமண்ணும் மாட்டுச் சாணியும் கலந்து தெப்பக்குளம் கட்டியுட்டு இருப்பாரு. அதுல நெம்ப அழகா ஆவரம்பூவு, மொடக்கத்தான் பூவு, மாவிலை எல்லாத்தையும் குத்தியுட்டு, கார்த்திகை விளக்குகளை அங்கங்க வெச்சிப் பத்த வெச்சிருப்பாரு. கட்டுன தெப்பக்குளம் பூராவும் செஞ்சேரிமலையிலயோ, திருமூர்த்தி மலையிலிருந்தோ கொண்டு வந்த தீர்த்தத்தை வுட்டு நெப்பியிருப்பாரு. குளத்துச் செவுத்துல கார்த்திகை விளக்கு எரியொ, குளத்துக்குள்ள இருக்குற வெங்கச்சாங்கல் சாமிக அப்படியே மின்னும்.
தெப்பக்குளத்தை ஒட்டி முன்னாடியே வெங்கச்சாங்கல்லுல சாமி வெச்சி, அதுக்கு சந்தனம், துண்ணூரு, குங்குமம் எல்லாம் வெச்சி உட்டிருப்பாரு அய்யன். அந்த சாமிக்கு முன்னாடிதா படையல் படைப்பாங்க.
அந்த படையல்ல, பண்ணையத்து ஆளுக அல்லார்த்துக்கும் மனசு நிறைஞ்சு, மனம் போல துணிமணிக வெச்சிருப்போம். ஒவ்வொரு துணிமணிகளுக்கும் மேல பொங்கப்பணம் ஆயிரம், ஐநூறுன்னு வெச்சிருப்போம். அந்த வருசம் வெளைஞ்ச வெளைச்சலைப் பொறுத்து, மூணு பொங்கல், ஆறு பொங்கல், பன்னென்டு பொங்கல்னு வெள்ளாமையப் பொறுத்து அது மாறும். கறந்த பாலைக் கொண்டாந்து பட்டிக்கு முன்னால வெச்சிறுவோம்.
அய்யன் செரின்னு சொன்னவுடனே, பண்ணையத்துல இருக்குற ஆளுக எல்லாரும் தப்பட்டை பலகை, கொட்டு மொழக்குன்னு வாத்தியம் போடுவாங்க. நாங்களும் ஒறம்பரைகளுமா சேந்து களத்து மேட்டுல கும்பிட்டு வந்து, பொங்கல் பொங்கி, தேங்கா பழம் உடைச்சி, பொரி கடலை எல்லாம் வெச்சி சாமி கும்புடுவோம்.
அய்யன் நாலு பேர்த்தை மின்னாடி வரச் சொல்லுவாரு. ஒருத்தர் கையில ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. ரெண்டாவது ஆளு கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. மூனாவது ஆள் கையிலயும் ஒரு தூக்குப் போசி நிறைய தண்ணி. நாலாவது ஆள் கையில வாணாச்சட்டி நெறைய பொங்கலும் குடுத்துருவாரு.
இப்ப மூனு பேரும், பண்டங்கன்னுக கட்டி இருக்குற கட்டுத்தாறையச் சுத்தியும் போகோணும். மொத ஆள் கையிலிருக்குற மாவிலைய தூக்குப் போசியில உட்டு எடுத்து, “கை கழுவு பட்டியார் கை கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்த ஆள் அதே மாதர, மாவிலைய போசிக்குள்ள உட்டு எடுத்து, “வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு”ன்னு சொல்லிட்டே போவாரு. அடுத்து வர்ற ஆளு, ”அரசன்னம் பட்டியார் அரசன்னம்”னு சொல்லுவாரு. நாலாவதா வர்ற ஆளு, ஒவ்வொரு பண்டங்கன்னுக்கும் ஒவ்வொரு கவளம் பொங்கச் சோத்தை ஊட்டியுடுவாரு. இப்படி ஒரு விசுக்காவோ, மூனு விசுக்காவோ, இருக்குற பொங்கச் சோத்துக்கு ஏத்தா மாதர மாடு கன்னுகளுக்கு பொங்கச் சோத்தை ஊட்டியுடுவோம்.
கை, கால் மூஞ்சியெல்லாங் கழுவிட்டு வந்து அல்லாரும் கட்டியுட்டு இருக்குற பட்டி மின்னாடி, தீப்பந்தத்து வெளிச்சத்துல உக்காந்துக்குவோம். பண்ணையத்து ஆளுகெல்லாம் தண்ணி வாத்து எடுத்துக் குடுத்த புதுத்துணிகளை உடுத்திட்டு வருவாங்க. அவங்களும் எங்களுக்கு எதுத்தாப்பல உக்காந்துக்குவாங்க. அறுவடை எல்லாம் எப்படிப் போச்சு, அடுத்த வருசம் பண்ணையத்துக்கு ஆரெல்லாம் இருக்கப் போறாங்க, அவங்களுக்கு வருசம் அளக்குறது எவ்வளவு, கூலி எவ்வளவுன்னு பேசுவாங்க. நோம்பி கழிச்சிப் பேசிக்கலாமுங்கன்னும் சொல்லீருவாங்க. ஆனா, மாடு கன்னு பாத்துகுறவங்களை முன்னாடி வரச் சொல்லி குத்தம் குறையிருந்தா மன்னிச்சுக்கப்பா; நீ மனசு நிறைஞ்சாத்தான் பட்டி நெறையும்; எதுனாலும் சொல்லிப் போடுன்னு சொல்லிக் கேட்டு மனசு நிறையப் பண்ணுவாங்க.
அது முடிஞ்சதீமு, கொட்டு மொழக்கு ஆரம்பமாயிரும். முடக்கத்தான் கொடியில பெரிய வடம் செஞ்சி, தண்ணி நெறஞ்சி இருக்குற பட்டிக்கு முன்னாடி ரெண்டு அல்லையிலயும் ரெண்டு பேர் அந்த வடத்தை குறுக்க புடிச்சிட்டு நின்னுக்குவாங்க. இதை கன்னுமெரட்டுன்னு சொல்லிச் சொல்றது. கொட்டு மொழக்கோட, இருக்குற தூக்குப்போசி, இரும்புச்சட்டின்னு கையிக்கு கெடைக்குறதை எல்லாத்தையும் கையில வெச்சிட்டு அடீஅடீன்னு அடிச்சி கொட்டு மொழக்குவாங்க. அந்த கொட்டுமொழக்குக்கு நடுப்புல, பொம்பளையாளுக குலுவை போட, ஆம்பளை ஆளுக “கலகலகலகல”ன்னு மாட்டுக்கன்னை புடிச்சாந்து மிரட்டியுட்டு பட்டிய மிதிக்க வெச்சி அழிச்சுடுவாங்க. மாட்டுக்கன்னும் அந்த வாத்தியம் குலுவை சத்தத்துக்கு மிரண்டு போயி சங்குசங்குன்னு குதி போட்டுட்டு ஓடிப் போகும். ஒரே கொண்டாட்டமா இருக்கும்.
சித்த நேரங்கழிச்சு, வந்திருக்கவங்க அல்லார்த்துக்கும்  பந்தி உடுவாங்க. மொதல் மரியாதை பண்ணையத்துல வேலை செய்யுற ஆளுகளுக்குத்தா. அவிகளை உக்கார வெச்சி, இலையில அரிசி மாவு, தினை மாவுப் பலகாரமெல்லாம் வெச்சிப் பந்தியுடுவாங்க. அப்புறம் ஒறம்பரைகெல்லாம் சேர்ந்து விருந்து உண்டு போட்டு ஊட்டுக்குப் போக மணி காலையில ரெண்டு மூனுன்னு ஆயிரும்.
வெடிஞ்சா, மூக்கரசு நோம்பி. பூநோம்பின்னும் சொல்லுவாங்க. வயசுப் பொண்ணுங்க பையங்கெல்லாம், ஊட்டுப் பலகாரத்தை கட்டுச்சோறா கட்டிகிட்டு ஆண்டியூர் கரட்டுல இருக்குற வழுக்காம் பாறைக்குப் போவாங்க. அங்க இருக்குற வழுக்காம் பாறையில வழுக்கி விளையாடுறது, பன்னாங்கல் விளையாடுறது, கூட்டாஞ்சோறு திங்கறது, ஆலமரத்துல தூரி கட்டி விளையாடுறதுன்னு விதவிதமா பொழுதா வரைக்கும் விளையாடிட்டு வருவாங்க.
நாங்கெல்லாம் சோமவாரப்பட்டியில இருக்குற மாலகோயிலுக்குப் போவம். அங்க, ஆல் கொண்ட மால் திருக்கோயில்னு ஒன்னு இருக்கு. சுத்துபத்து நூத்திப்பத்து கிராமங்கள்ல இருந்தும் பண்ணையத்துக்காரங்க அங்க வருவாங்க. கூட்டம்னா கூட்டம், அப்படியொரு கூட்டமா இருக்கும். அல்லாரும் அவங்கவங்க மாட்டுப் பாலைக் கொண்டாந்து, ஆல் கொண்ட திருமாலுக்கு ஊத்திட்டுப் போவாங்க. அவங்கவங்க காளை மாட்டுக்கு மணி கட்டி, கொட்டுமொழக்கோட ஆட்டம் போட்டுட்டே கோயலுக்கு வந்து கோயல் திருவமுது ஊட்டு விட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. வண்டி கட்டிட்டு நெறைய சனம் வந்து போகும். கோயல் மைதானத்துல ஆட்டம் பாட்டம்னு வேடிக்கைக நெம்ப இருக்கும். அதுகளைப் பாக்குறதுக்கும் நெறைய சனம் வந்து போகும்.
அன்னக்கி சாயங்காலம், ஊர்க்கிணத்துல வெச்சி பூநோம்பி. ஊர்ப் பொம்பளைங்க எல்லாம் வந்து ஒன்னு கூடி கும்மியடிச்சிப் பாடுவாங்க. பாட்டுப் பாடிட்டே ஊர்வழியில, இட்டேரியில, கோயல் தோட்டம் துறவுன்னு நாலாபக்கமும் பாட்டுப் பாடி, கும்மியடிச்சி, முளைப்பாரி எடுத்திட்டு போவாங்க. ஊர்முச்சூடும் போயி ஆவரம்பூவு, துளசிச்செடி, பொன்னரளி, பூவரளின்னு எல்லாம் பொறிச்சிட்டு வந்து சாமிக்கு சாத்திட்டு இராவு முச்சூடும் பாட்டுப் படிச்சி, கும்மியடிச்சி, விளக்குமாவு எடுத்து திருவிழாவை விழாவாக் கொண்டாடுவாங்க. கொட்டு மொழக்கு, உரிமி மேளம், பம்பை மேளம், சிலம்பாட்டம், இறகாட்டம்னு அதுகளும் ஊருக்குள்ள நடக்கும்.
இப்படியான பூ நோம்பியில மனசு மசிஞ்சு காதல் மலர்றதும் உண்டு. அப்படியான காதல்ல மனசு மசிஞ்ச காத்தவராயன், அவங்க அம்மாவுக்குப் பாடுற பாட்டோட இந்த பொங்கல் பத்தின நம்ப பழமைய முடிச்சிக்கலாமுங்க மச்சே, சரியா? இந்த சொல்றன் கேட்டுகுங்க.
அங்கே கண்டேன் மெய்மறந்தேன்
அழகான மாலையவளை
கண்டு வந்த பூநோம்பிதொட்டு
கண்ணுறக்கம் இல்லையம்மா
படுத்தா உறக்கமில்ல
பாய் போட்டாத் தூக்கம் வருகுதில்லே
பாத்துவந்த வங்கணத்தியவளை
சேத்துக்கூட்டியார விடை கொடம்மா
வாழ்த்தி வரங்குடம்மா
நானும் போயவர்றேனம்மா
பாவை வந்தாப் போதுமம்மா!!”
மாமனும் மச்சானும் விடை பெற்றுக் கொள்கிற வேளையில் ஒரு சேரச் சொல்லிக் கொண்டார்கள், “பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்!!”

1/07/2013

காதில் புகை

அவள் வரைந்திருந்த
செடியின் 
பூவைக் கொய்து
அவளுக்கே கொடுத்தேன்!
சட்டையில் 
தைத்துக்கொண்ட பின்
செடியிலிருந்த
கனியைப் பறித்து
இது அப்பாவுக்கு
ஊட்டியபடியே
கண்கள் விரிய
மோவாய் உயர
வலுவாய்ச் சிரித்தாள்!
வீட்டு வெளியெங்கும்
சிரிப்புச் சில்லுகள்!!
அடுப்பங்கரையில்
காதில் புகை
அம்மாவுக்கு!!!

1/06/2013

வெளியில வெளிச்சம் வந்திருக்கு!

விடியல்

அப்பா எழுந்திருங்க
வெளியில வெளிச்சம் வந்திருக்கு!
எழுந்திருங்கப்பா
வெளியில வெளிச்சம் வந்திருக்கு!!
எழுந்து விடுவோம்
வெளிச்சத்தைப் புழங்கி
நாளைச் சமைத்து
வாழ்வைப் பிசைந்து
அவளுக்கு ஊட்டிவிட வேண்டும்!
எழுந்து விடுவோம்
வெளியில வெளிச்சம் வந்திருக்கு!!

விடை இருக்கா?


நான்தான் அப்பா
நீங்க குழந்தை
நான் சொன்னபடி
நீங்கள்
செய்ய வேண்டும் என்றாள்!
நானும் சரி என்றேன்!! 


சரி,
இப்ப நீங்க அப்பா
நான் ஒரு சின்ன பாப்பா
உங்க கால் மேல
என்னை நிக்க வெச்சி
மேலயும் கீழயும்
ஆட்டுங்க பார்க்கலாம்!! 


ஆட்டுவது சுலபம்
ஆட்டிவிடலாம்!
ஆனால்
இப்போது
யார் அப்பா?
யார் குழந்தை?? 

1/05/2013

ஆமா, அப்பா சரியில்லை

நான்
சவாரி போகவேண்டும் என்றாள்!
முதுகில் வைத்து
நான்கு கால்களில்
நான்கு சுற்று சுற்றி வந்தேன்!!

இப்ப போயி
புல்லைத் தின்னு என்றாள்!
இலைக்கோசுத் தழையை
நாவால் துழாவித் தின்றேன்!!

நீ போயிட்டு
அப்பாவை வரச்சொல் என்றாள்!
நான்கு கால்களை
இரண்டாக்கி நிமிர்ந்து நின்றேன்!!

சொல்வதைச் சொன்னபடி
அந்த குதிரை செய்கிறது!
நீங்கள்தான் சொல்வதெதையும்
சொல்கிறபடி செய்வதே இல்லை!!
Bad Appa!!!

1/04/2013

உறுவது கூறல்

இந்த அடியவனை
ஏளனத்துடன்
தீண்டத்தகாதவனாய்
இறக்கப் பார்வையில்
இழிந்து பார்ப்பவனுக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
அவனிழுக்கும் மூச்சுக்காற்றில்
என் நாசி நுகர்ந்ததின்
எச்சமும் கலந்திருக்கக்கூடுமென!!

1/03/2013

பின்னந்தி வேளையில்

நாளையிலிருந்து 
பள்ளிக்கூடம் இருக்கு
பேசாமப் படுங்க
மூனு பேரும்!

ஒளியற்ற வெளி
அரவமற்ற அறை
வெளியே புல்வெளியில்
வெடிக்கும் பனிக்குமிழிகளின்
மெல்லொலி மட்டும் 
கூர்மையாய்க் கேட்கிறது 
ஒன்றுக்கும் 
மற்றொன்றுக்குமான
கால இடைவெளியில்!!

கணினியை முடுக்கி
வலை மேய ஆசைதான்
ஆனாலும் அச்சம்
ஆம்
இன்னமும்
திறந்தபடியேதான் 
இருக்கின்றன 
அந்த ஆறு காதுகளும்!!

1/02/2013

அம்மா வாசம்


ஊரிலிருந்து வந்திருக்கும் ரமேசிடம்
அக்கறையோடும்
அன்போடும்
வாஞ்சையோடும்
வெள்ளந்தியாய்
கொடுத்தனுப்பியிருக்கிறாள்
பேரக்குழந்தையை மனதில் வைத்து
கட்டத் தேவையில்லாத் தொட்டிலுக்காய்
தனது நூல் சேலையில் ஒன்றை!
அம்மாவின் வாசத்தில்
மெல்லிய இறகாகி
வானில் தவழும்
சுகமோ சுகம்
விரித்துப் போட்டு
அதன் மேல் படுத்துறங்கும்
குழந்தையாகிப் போன எனக்கு!!

நன்றி: தென்றல் மாத இதழ்

1/01/2013

கண்ணாள் ஓதுகம்


இன்று மனையாளிடமிருந்து இன்னமும் எதுவும் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை. இப்படியான நல்லதொரு தருணத்தில், என்றோ அறியப்பெற்ற இலவு காத்த கிளியின் கதைதான் நினைவுக்கு வருகிறது.
காய் பழுத்துக் கனியாகும் தருவாயில் உண்ணலாமெனக் கிளியானது காத்திருக்க, முற்றி வெடித்த காயிலிருந்து தெறித்த வெண்பஞ்சுத் திரள்கள் சிதறி வான் நோக்கிப் பறக்க, காத்திருந்த அக்கிளி ஏமாந்து போனதாம். ஆனால் நான் இங்கு கண்டு கொண்டிருக்கும் காட்சியோ அதனின்றும் மாறாக இருக்கிறது.  இந்த இலவம் பஞ்சுத் திரள்கள் போன்ற இவ்வெண்கீற்றுகள் நளினத்தோடு அசைந்தாடியபடியே கீழ் நோக்கி வந்து புல்வெளியின் மேல் படர்ந்து கொண்டிருக்கின்றன.
”ஒயிட் கிறிஸ்துமஸ் எனச் சொல்வது இதனால்தானோ?” என்று எண்ணியபடியே சாளரத்தினூடாய் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வானிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்த உறைபனிப் பிசிர்களின் நுரைநாட்டியம் எழிலார்ந்த கண்காட்சியாய் இருக்கிறது. இது போன்ற காற்றரவமற்ற பனிப்பொழிவின் போது பறக்கும் சன்னக்கீற்றுகளின் தவழோட்டப் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.
குறிப்பிட்ட உயரத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் இரு வேறு பனிக்கீற்றுகளை ஒரு சேரக் கவனித்து, அவை எப்படியான நளினங்களைக் கையாண்டு தரையிறங்குகின்றன; எது தரையைக் காலத்தாழ்ச்சியுடன் பிந்திச் சென்றடைகிறது என்பதே அவற்றுக்கிடையிலான போட்டியாகும். நாம் ஒன்றைக் கணிக்க, பெரும்பான்மையான நேரங்களில் அதுவே பிந்திச் சென்றடைந்து வெற்றி பெறும். ஆனால்  ஒரு சில கீற்றுகள் காற்றோடு கரைந்து விடும்; அல்லது, பிறிதொரு கீற்றோடு புணர்ந்து மறைந்து விடும். இப்போட்டிக்குச் சுவை கூட்டுவதே அத்தகைய எதிர்பாராதவைதான்.
“காலையில எழுந்ததுமே வேடிக்கைதானா? எந்திரிச்சதே காலையில பத்து மணிக்கு. இதுல இவருக்கு அப்படியென்ன வேடிக்கையோ? ஏங்க, வாங்க இங்க!”
பனிப்பொழிவுடனான இலயிப்பில் இருந்தவனை இடை மறித்ததிலிருந்து துவங்கியது, அன்றைய நாளுக்கான ஓதுகம்.  இதற்கு பொண்டாட்டி அர்ச்சனை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. நத்தார் நாளில் கிடைக்கப் பெறும் அர்ச்சனை என்பதால், அது ‘நத்தார் நாள் ஓதுகம்’ எனும் சிறப்பும் பெறுகிறது.
நத்தார் நாள்! டொரொண்டோ நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதில் இதுவுமொன்று. போர்ச்சுக்கீசியர் ஆண்ட நாடான இலங்கையில், கிறிஸ்துமசைக் குறிக்கும் போர்ச்சுக்கீசியச் சொல்லான ’நாட்டல்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததான் இந்த நத்தார் எனும் தமிழ்ச் சொல்.
அது கிடக்கட்டும். நத்தார் நாள் என்பதால் நமக்கான அர்ச்சனைகள் ஓய்ந்து விடுமா? அவை ஓய்ந்து விட்டால்,  நம்மால்தான் இயல்பாய் இருந்துவிட முடியுமா என்ன??
“என்ன நாஞ்சொல்றது காதில விழுதா, இல்லியா??”
“விழுகுது, விழுகுது! காபி போட்டுட்டே சொல்லலாம்ல?!”
“அதெல்லாம் போட்டுத்தான் வெச்சிருக்கு. உங்களுக்குதா நான் சொல்றது காதுலயே விழுகுறதில்ல! என்னங்க, எனக்கு ஒரு பொட்டுத் தூக்கங்கூட இல்ல தெரியுமா?”
“அட! ஏன், என்னாச்சி?”
“ஆமாங்க. திகழ் நல்லா தூங்கிட்டா. கமழ் கொஞ்சங்கூடத் தூங்கவே இல்ல. நாலஞ்சி வாட்டி வயித்துல போயிடிச்சி. ஒரே அனத்தல். ஆளே, கிரங்கிப் போயிட்டாளுங்க. ஒரு எட்டு எமர்ஜென்சிக்குப் போயிட்டு வந்திருங்க. கிறிஸ்துமஸ் நாளன்னிக்கு வேற யாரும் தெறந்திருக்க மாட்டாங்க!”
“ப்ச்! என்னை எழுப்பி இருக்கலாமே? இதா, நான் ஒடனே கிளம்புறேன்!!”
பாவம் பிள்ளை. சுருண்டு படுத்திருக்கிறாள். என்னைப் பார்த்ததும் கைகளை நீட்டுகிறாள்.
“இரு தங்கம்! அப்பா முகங்கழுவி, உடுப்பு மாத்திட்டு வந்து உன்னை எடுத்துக்கிறேன்!” ஒரு முத்தத்தோடு விடைபெற்று, குளியலறைக்குப் போய் ஆயத்தமாகினேன்.
”ஏங்க, அதுக்குள்ள எங்க போனீங்க? ஒன்னு சொன்னா, அதைக் கிரமமா செய்ய மாட்டீங்களா?? அதுக்குள்ள இன்ட்டர்நெட்டுல என்ன வேண்டிக் கிடக்கு?”
“நான் கீழ போயி, வண்டிய ஸ்டார்ட்ல நிறுத்திட்டு வந்தேன். அப்பத்தான கொஞ்சமாச்சும் வெதுவெதுப்பேறி இருக்கும்?!”
“அதுக்கு இவ்வளவு நேரமா? இன்சூரன்சு கார்டு எடுத்து வெச்சிகிட்டீங்களா?? கையில இந்த பிஸ்கெட் பாக்கெட்டும், தண்ணியும் வெச்சிகிங்க. வயித்துல போறதால நான் பால் எதுவும் குடுக்கலை. சரியா?”
“சரி!”
“என்ன சரி? கொழந்தைக்குக் குளிராதா?? இருங்க, ஸ்வெட்டர் போட்டு, தலைக்கும் குல்லா போட்டு வுடுறேன்!!”
குழந்தை என்னருகில் வந்து சொல்கிறாள், ”அப்பா, நான் நல்லாத்தான் இருக்கன்பா. கூட அம்மா வரலையா? அப்ப, நான் வரலப்பா!”
”அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா செல்லம்; போனவுடனே வந்திடலாம் செரியா?”
வீட்டில் மற்ற பிள்ளைகள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரவு படம் பார்த்த பின்னர் ஊரிலிருக்கும் தாத்தா, பாட்டி, பெரியப்பா வீட்டு அண்ணன், தங்கைகளுடன் பேசிவிட்டுப் படுக்கைக்குப் போக வெகு நேரமாகிவிட்டிருந்ததும், பனிபொழிவின் போதான சூழலின் இதமும்தான் அவர்களுக்கான இன்பத்துயிலைக் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் அகத்தாளின் தங்குதடையில்லா ஓதுகமும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டு இருக்கிறது.
அவசரகால மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஆறு மைல்கள்தான். ஆனாலும் அரை மணி நேரம் பிடித்தது. தெருவெங்கும் பனிப்பொழிவு. வேகமாகச் சென்றால் வண்டி ஒருபக்கமாக இழுத்துவிடும் என்கிற அச்சம். மிகக் கவனமாகவும் மெதுவாகவும் உருட்டினேன்.
“அப்பா, சாந்தாகிளாஸ் எப்பப்பா நம்ம வீட்டுக்கு வந்தாரு? டோரா பொம்மையெல்லாம் எப்பிடிப்பா நம்ம வீட்டுக்கு வந்திச்சி??”, வழியெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா புராணமே பாடினாள் கமழ். திடீரெனத் திசைமாறிக் கேட்டாளே ஒரு கேள்வி?! வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒன்றுக்கு நான்கு முறை மூச்சிழுத்துக் கொண்டேன்!! எப்படி, இந்தக் குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதோ??
“சொல்லுங்ப்பா. சாமிகிட்டப் போன குழந்தைகளோட வீட்டுக்கும் சாந்தா போயிருப்பாராப்பா? அவங்களுக்குக் குடுத்த கிஃப்ட் எல்லாத்தையும் அவங்க அப்பா, அம்மா என்ன செய்வாங்க??”, அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாய் எழும் இக்கேள்விகளால் எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தும் அதை அவளுக்குக் காண்பித்து விடாமல் உரையாடலைச் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் நானிருக்கிறேன்.
”இத பாரு கண்ணா! இது எமர்ஜென்சி டாக்டரைப் பாக்குற இடம்; கொஞ்ச நேரமாகும். அம்மாவைக் கேட்டு அழக்கூடாது. போனதும் டயாப்பரை மாத்திகிடணும். சரியா?”
சொல்லி முடிக்கவில்லை; அழைப்பு மணி ஒலித்தது. ஓதுகம் என்றால், ஓயாமல் ஓதப்பட வேண்டும்தானே? அல்லாவிடில் அதற்கான இலக்கணக் கூறுகள் பாழ்பட்டு விடுமல்லவா?! சரி, தயாராகுவோம் ஓதுகத்துக்குச் செவிமடுக்க!!
”சொல்டா!”
“போயிச் சேர்ந்ததும் கூப்பிட்டு சொல்ல மாட்டீங்களா? ரோட்டுல பார்த்துக் கவனமாப் போய்ச் சேர்ந்தீங்களா, இல்லையா??”
“இப்பதான் வந்து வண்டிய நிறுத்துறேன். நீ கூப்பிடுற!”
“இங்கிட்டு இருக்கிற ஆஸ்பிடலுக்கு எதுக்கு இவ்ளோ நேரம்?”
“வழியெல்லாம் இன்னும் பனி விழுந்திட்டு இருக்கு. அதான் மெதுவா ஓட்டிட்டு வர வேண்டியதாப் போச்சி!”
“சரீ..! சரீ… எதுக்கும் ஒரு பதில், ஒரு விளக்கம், தயாரா வெச்சிருப்பீங்களே?! உள்ள போனதும் முதல் வேலையா டயாப்பரை மாத்திடுங்க. பையைக் கார்லயே வெச்சிட்டு போயிடாதீங்க; சரியா?”
“இம், சரி! சொல்லியனுப்பினது ஞாவகம் இருக்கு. அப்ப நான் வெச்சிடவா?”, உடனே சரியெனச் சொல்வார்கள் என எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.
“இல்ல. இன்னொன்னு சொல்லணும் உங்களுக்கு. இன்னிக்குக் கிறிஸ்துமஸ்ங்றதால கொஞ்சம் முன்னபின்ன ஆகும். குழந்தைய பத்திரமாப் பார்த்துகுங்க. உள்ள, போன் வேலை செய்யாது. அப்பப்ப ரூமை விட்டு வெளியில வந்து எனக்குப் பேச முயற்சி செய்யணும். செரியா?”
”டே, வெளியில வந்து பேசறதெல்லாம் நடக்குற காரியமா? அதும் குழந்தைய விட்டுட்டு??”
“முயற்சி செய்யுங்கன்னுதான் சொன்னேன். புரியுதா? செரி, நான் வெச்சிடுறேன். பார்த்து டாக்டர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாங்க!!”
“ரொம்ப நல்லாவே!”, ஓய்ந்ததடா சாமி! மனத்துள் சிரிப்பு எக்காளமிட்டுக் கொண்டது.
மருத்துவ மனையிலிருக்கும் கழிவறைக்குச் சென்று குழந்தைக்கு இடப்பட்டிருந்த அரைக்கச்சையை மாற்றி, துடைத்து விட்டுப் பின்னர் புதியதொன்று அணிவிக்கப்பட்டது. வரவேற்பு பணிப்பெண் எங்களைக் கவனித்து உள்ளே அனுப்பினாள். அமெரிக்க மருத்துவ எமர்ஜென்சிப் பிரிவு எனும் அவசர கால சிகிச்சைப் பிரிவில் இது ஒரு வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும். நான்கைந்து பேர்தான் அங்கு குழுமி இருந்தார்கள். விடுப்புக்காலங்களில் குறைந்தது ஐம்பது, அறுபது பேராவது இருப்பார்கள். ஆனால் இன்று பெரிதாகக் கூட்டமெதுவும் இல்லை. பெருத்த மகிழ்ச்சி.
சென்றமர்ந்த பத்துமணித் துளிகளுக்கெல்லாம் உள்ளே அழைத்துச் சென்று எங்களுக்கான அறையில் அமர வைத்து விட்டார்கள். இவ்வணுகுமுறையானது அமெரிக்காவுக்கே உரிய ஒரு சிறப்பாகும். மருத்துவமனை, குடிபுகல் மற்றும் குடியுரிமை அலுவலகம் முதலான இடங்களில் இம்முறை கையாளப்படுகிறது. உலகுக்கே உயரிய தலைவர் என நம்பப்படுகிற அமெரிக்க குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலும் கூட இம்முறையே கையாளப்படுகிறது.
வருகையாளருக்கான நேர்முக நேரம் ஒதுக்கப்பட்டு அவருக்கான தனியறையும் ஒதுக்கப்பட்டு விடும். குறிப்பிட்ட நேரத்தில் குடியரசுத் தலைவரே அவ்வறைக்கு வந்து, வந்திருக்கும் வருகையாளரைச் சந்திப்பதுதான் அம்முறையாகும். இதன் மூலம், குடியரசுத் தலைவரின் நேர ஆளுமை கட்டுக்குள் வருகிறது; தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. அல்லாவிடில், அவருடைய அறைக்குள் வருகையாளர் வருதல், இருக்கையில் இருத்துதல், வழியனுப்புதல் எனப் பலவாறாக குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க நேரம் வீணாகும். இது போன்றே மருத்துவரின் நேரக்கட்டுப்பாடும் கையாளப்படுகிறது.
தன் கையில் இருக்கும் கரடி பொம்மையுடன் பேசிக் கொண்டு இருந்தாள் கமழ்.  நத்தார் நாளில் வேலை செய்ய நேர்ந்த வருத்தமெதுவுமின்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர் அறைக்கு வெளியே இருந்த மருத்துவமனைப் பணியாளர்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவர் நீட்றா கதவைத் தட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
உங்களை இந்த நன்னாளில் இங்கு வரச் செய்தது என்னவோ என வாஞ்சையாகக் கேட்டறிந்து கொண்டார் மருத்துவர் நீட்றா. கன்னத்தில் குழிவிழ, ”ஐ காட் கிஃப்ட் ஃப்ரம் சான்ட்டா” என்று சொல்லிச் சிரித்தாள் கமழ். அந்த அயர்விலும் அவள் அழகாய்க் காட்சியளித்தாள். உங்க குழந்தை மிகவும் அழகு எனச் சொல்லிக் கொண்டே அவளது காது, கண்கள் முதலானவற்றைப் பரிசோதித்துக் கொண்டார் நீட்றா.
”வயிற்றில் ஏதாவது வைரஸ் இருக்கக் கூடும். உடம்பு சுடவில்லையாதலால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறிக்கொண்டே மருந்துக்கான சீட்டெழுதிக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டார் அவர்.
குழந்தைக்குச் சட்டை, ஸ்வெட்டர் முதலானவற்றை அணிவித்து வெளியே அழைத்து வந்தேன். மருத்துவரைப் பார்த்ததற்கான உடன்தொகை(copay) செலுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தேன். என்னதான் மருத்துவக் காப்பீடு வைத்திருந்தாலும், உடன்தொகையாக சொச்சப் பணத்தை நாம்தான் கட்ட வேண்டுமென்பது அமெரிக்கக் காப்பீட்டு நடைமுறையாகும்.
“சார், கேன் யூ ஹெல்ப் மீ சார்?” என்றாள் அந்த வெள்ளைக்காரி. எனக்கு மனம் சஞ்சலமாக இருந்தது. விட்டேற்றியாக ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனால் உதவி கேட்டு நிற்பவர்களை நத்தார் நாளதுவுமாக எப்படி உதறித்தள்ளுவது? கமழ் வேறு உடனிருக்கிறாள். அந்தம்மாவைப் பார்க்கவும் பாவமாய் இருக்கிறது.  எந்த நேரத்திலும் அழலாம் என்கிற தொனியில் இருக்கிறது அவள் முகம். அவளுக்கென்ன துன்பமோ??
அவளுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என வந்திருக்கிறாள். கிறிஸ்துமசுக்காக இருந்த காசெல்லாம் செலவாகி, பற்று அட்டைகளிலும் இனி கடன் வாங்கப் பெறுமானம் இல்லையாம். மகளுக்கு மருந்து வாங்கச் செலுத்த வேண்டிய உடன்தொகைக்கு இருபது டாலர் வேண்டுமெனக் கேட்கிறாள். மனம் கனக்கிறது. அவளது குழந்தையின் முகமும் பெருஞ்சோகமாய் இருக்கிறது.
”என்னிடம் பணமாக இல்லை. வேண்டுமானால் இருபத்தி நான்கு மணி நேர வால்கிரீன்சு மருந்தகத்திற்கு வாருங்கள்; உடன்தொகையை நானே செலுத்தி விடுகிறேன்!” எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.
இந்த அமெரிக்காவில் இப்படியான ஏழைச்சோகம் நிறைய. காசு இருக்கும் வரையிலும் தாம்தூமென்று பொருட்களாய் வாங்கிச் செலவளிப்பது ஒரு பக்கம். தாய்மார்களின் இப்படிப்பட்ட அவலமும் அல்லலும் மறுபக்கம். கிட்டத்தட்ட முப்பது விழுக்காடு அளவிலான அமெரிக்கக் குழந்தைகளுக்கு அம்மாவின் ஆதரவு மட்டுந்தானாம். தனித்தாயா(single mom)க இருப்பாளோ இவளும்? மனம் பதைபதைத்தது. என்றுதான் இவர்கள் சேமிக்கக் கற்றுக் கொள்வார்களோ??
உப்பும் புளியும் இருக்கும் மொடாவில், அரைக்காசு, முக்கால்க்காசு எனச் சிறுகச் சிறுகச் சேமிக்கும் என் அம்மாவின் நினைவுதான் எனக்கு வருகிறது. அஞ்சறைப் பெட்டியில் காசில்லையென்றால் அம்மாவுக்கு தலையே வெடித்துவிடும். அதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்குத் தெரிவதே இல்லை. எதுவும் கிடைக்காத நேரத்தில் சாணி தட்டிக் காய வைத்த வறட்டிகளை விற்றாவது காசாக்கி விடுவாள் அம்மா.
விடுப்பு நாளான இந்நாளில் திறந்திருக்கும் ஒரே ஒரு மருந்தகம், இந்த வால்கிரீன்சு மருந்தகம்தான். நான் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் அந்த வெள்ளைக்காரியும் வந்து விட்டாள். எனது கையிலிருந்த மருந்துச் சீட்டினைக் கொடுத்தேன். அவளும் அவளது குழந்தைக்கானதைக் கொடுத்திருக்கிறாள். இன்னும் இருபது மணித்துளிகள் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள்.
“என்ன, நானே வெளியில வந்ததும் கூப்பிடச் சொன்னனே? கூப்பிட மாட்டீங்களா??”
“சாரி! நான் இப்பதான்…”
“எதுக்கும் ஒரு சாரி. அதெப்படிங்க உங்களால முடியுது? சரி, டாக்டர் என்ன சொன்னாரு?”
“ஸ்டொமக் வைரஸா இருக்கும்னு சொல்லி மருந்து எழுதிக் குடுத்திருக்காரு!”
“சரியப்ப, வீட்டுக்கு வாங்க. நான் வாங்கிக்கிறன்!!”
“இல்ல. நான் வால்கிரீன்சு பார்மசியில குடுத்து இருக்கன்!”
அவ்வளவுதான். சாமியாடி விட்டாள். “எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கணும். நான் ட்வெண்டிப் பெர்சண்ட் கூப்பன் வெச்சிருக்கன். அது போக, கிரிடிட் கார்டுல பே பண்ணக் கூடாது. ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் அக்கவுண்ட்ல பே பண்ணனும். உங்களை வெச்சிட்டு எனக்குப் பெரிய்ய்ய அக்கப்போரு!!”
“இல்லடா. நான் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் கார்டு எடுத்திட்டு வந்திருக்கேன்!”, ஒருவழியாய்த் தப்பித்தாயிற்று. நல்ல வேளையாக, நான் மருத்துவச் செலவுக்கான வருமானவரிக் கழிவு தரும் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் பற்று அட்டையைக் கொண்டு வந்திருந்தேன். அல்லாவிடில், அதற்கும் சேர்த்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
மீண்டும் அந்த வெள்ளைக்காரி என்னைப் பார்த்து ஒருவிதப் பணிவோடு சிரித்துப் பேச முயன்றாள். நான் மகளைக் கவனிக்கும் பாங்கில் தவிர்த்து விட்டேன். பேச்சுக் கொடுத்தால், சொந்தக்கதை சோகக்கதையைச் சொல்வார்கள். நமக்கெதுக்கு வம்பு?
முறை வந்ததும், வெள்ளைக்காரியின் மருந்துக்கும் எங்களது மருந்துக்கும் நானே உடன்தொகை செலுத்து விடுகிறேன் எனச் சொன்னேன். அங்கிருந்த வேலையாள் என்னை ஒரு மாதிரி வித்தியாசமாய்ப் பார்க்கிறாள்.
மருந்தைப் பெற்றுக் கொண்டவள் என்னைப் பார்த்து மீண்டும் நன்றி சொன்னாள். அடுத்த மாதம் காசோலை அனுப்புவதாகச் சொல்லி, அனுப்புவதற்கு ஏதுவாக என் வீட்டு முகவரியைக் கேட்டாள். பணிவுடன் மறுத்து விட்டேன். அலைபேசி எண்ணாவது கொடுங்கள் என வேண்டினாள். நத்தார் நாளில் உதவக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றியெனச் சொல்லி அலைபேசி எண் பகிர்வதையும் தவிர்த்து விட்டேன்.
கண்களில் நீர் மல்க அவளும், வீட்டிற்குப் போக வேண்டிய அவசரத்திலிருந்த நாங்களும் விடை பெற்றுக் கொண்டோம். கண்ணிலிருந்து மறையும் வரையிலும், அவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே வந்தாள் கமழ்.
”அட, நீங்க இவ்வளவு சுருக்கமா வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லங்க!”
“இன்னும் முன்னாடியே வந்திருப்போம். ஆனா அந்த இன்னொரு குடும்பத்துக்கும், அதான் அந்த வெள்ளைக்காரிக்கும் சேர்த்து பில் பே பண்றதுல கொஞ்சம் நேரம் செலவாயிடிச்சி!”
“இன்னொரு குடும்பமா? என்ன உளர்றீங்க?? யாரது?? எழவு, உங்களை அனுப்புனதே தப்பாப் போச்சி!!”
அவ்வளவுதான்! நத்தார் நாள் ஓதகம் பெருவேகம் கொண்டு சீற்றத்துடன் பொழியத் துவங்கியது.
“நீ கொழந்தையப் பாரு. எனக்கு செமயாப் பசிக்குது! சிறுகுடல் பெருங்குடலைத் தின்றும் போல இருக்கு. போயிக் குளிச்சிட்டு வந்து சோறுங்கணும் முதல்ல!”, நடந்ததை முழுமையாகச் சொல்லாமல் வேகமாய்ச் சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டேன். மெய்யாலுமே பசிக் கிரக்கமாயிருக்கிறது எனக்கு.
வீட்டு முகவரி, அலைபேசி எண் முதலான தனிப்பட்ட தகவலெதையும் பகிராமல் உதவி செய்து வந்த செருக்குடன் கூடிய மகிழ்ச்சியோடு, வெதுவெதுப்பான சுடுநீர்ச் சாறல்க்குளியலில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் நான்.  “யாரோ வெள்ளைக்காரியாம். யாரது? அவளை எப்படி இந்தாள் சந்திச்சாரு? இந்தாள் எதுக்கு அவளுக்குப் பணம் கட்டணும்??” இப்படியான பல குடைச்சல்களுடன் கூடிய கடுமையான தலைவலியோடு கிடைகொள்ளாமல் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறாள் என் கண்ணாள்.
நன்றி: வல்லமை