5/30/2013

பார்த்தால் சொல்லுங்கள்

இன்று காலையில்தான்
விடுதி வாயிலில்!
அவர் யாரோ
நான் யாரோ
புன்னகைத்தார்;
நானும் புன்னகைத்தேன்!
ஒருவரையொருவர்
கடந்து சென்று
சற்றுத் தொலைவு
வந்தவுடனே
திரும்பிப் பார்த்தேன்;
அவரும் திரும்பிப் பார்த்தார்!!
அவரும் உயர்த்திய கையை
அசைத்துக் கெழுமையூட்ட
அதே நேரத்தில் நானும்
உயர்த்திய கையை அசைத்து 
வந்து விட்டேன் அதே பாங்குடன்!
ஏனோ தெரியவில்லை இன்னும்
அவரது நினைவில் நானிருக்க 
இணையத்தில் எழுதுகிறேன்!!
பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்
அவரும் இணையத்தில் எங்காவது 
என்னைப் போலவே என்னைப்பற்றி
எழுதிக் கொண்டிருக்கக் கூடும்!!

5/23/2013

சாகும் வரை. . .பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை
எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல்
எதைக் கொண்டு வாங்குவேன் இசை?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் நூலகம்
எதைக் கொண்டு வாங்குவேன் அறிவு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் எட்டுத்தொகை பத்துப்பாட்டு
எதைக் கொண்டு வாங்குவேன் தமிழ்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் திரவியம்
எதைக் கொண்டு வாங்குவேன் நறுமணம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் என்சைக்ளோபீடியா
எதைக் கொண்டு வாங்குவேன் நினைவாற்றல்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பேரழகி
எதைக் கொண்டு வாங்குவேன் பேரன்பு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பட்டம்
எதைக் கொண்டு வாங்குவேன் படிப்பினை?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கூத்துப்பட்டறை
எதைக் கொண்டு வாங்குவேன் களிப்பு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் களிமாடம்
எதைக் கொண்டு வாங்குவேன் சிற்றின்பம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கடிகாரம்
எதைக் கொண்டு வாங்குவேன் நேரம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் மனிதர்கள்
எதைக் கொண்டு வாங்குவேன் நட்பு?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் ஆசிரமம்
எதைக் கொண்டு வாங்குவேன் மனநலம்?
பணம் கொண்டு வாங்கிவிடுவேன் குடிசை
எதைக் கொண்டு வாங்குவேன் எளிமை?
மனம், மனம், மனம்!
மனம் பண்பட வாசிப்போம்!!
சாகும் வரை வாசித்திருப்போம்  நூல்கள் பல!!!

5/21/2013

நகைச்சுவைத் திருவிழா


நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு கண்ணை மூடியபடி பத்மாசனத்தில் தொடர்ந்து அரைமணி நேரம் இருக்கும் வல்லமை இருக்கப் போகிறது? அளவுக்கு மீறிய பொறுமையும் நிலைத்தன்மையும் அதற்குத் தேவை என்பது சிரிப்பவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் அவர்கள் சிரிக்கிறார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும்.
வீட்டில் உள்ள சாளரங்கள், அறைக்கதவுகள், நிலைப்படித் திரைகள் என எல்லாவற்றையும் மூடிய கையோடு முன்னறைக்கு வந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்தாயிற்று. பக்கவாட்டில் இருக்கும் சமையலறை நுண்ணலைப் பெட்டியின் எண்ணிம மணிகாட்டி மட்டும் அறையைக் கப்பியிருந்த இருளின் அடர்த்தியைத் தனது இளம்பச்சை நிறத்தால் சற்றே குறைத்துக் கொண்டிருக்கிறது.
ஊரிலிருந்து தருவிக்கப்பட்ட ஈச்சம்பாயினை முன்னறையின் மையப்பகுதியில் விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டேன். காற்கழல் ஒவ்வொன்றும் மறுதொடையின் மேல் இருக்கும்படியாகவும் முதுகுத்தண்டு செங்குத்திட்டும், நெஞ்சம் விரிந்து நிமிர்ந்துமிருக்க நேர்கொண்ட தலையோடு அமர்ந்திருந்தேன்.
எல்லாமும் சரியான நிலையிலேயே இருக்கிறது என்று மனத்துக்கு மனமே சொல்லிக் கொள்ள ஓரிரு மணித்துளிகள் தேவைப்பட்டிருந்தன. மனம் சமிக்கை கொடுத்தானவுடன் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. சமையலறையில் இருந்த குளிர்மி அடிக்கொருதரம் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. தலையின் பின்னால் இருக்கும் சுவர்க்கடிகாரமோ வினாடிக்கொருதரம் ’லொக்’கென்று இருமும். அந்த சத்தத்தின் அதிர்வில் உட்காதுச் சவ்வுகள் கிழிந்து விடும்போல இருந்தது.
அனுமானத்தின் பேரில் சொல்கிறேன். கிட்டத்தட்ட பத்து மணித்துளிகளுக்கும் மேலாயிற்று. ஆனாலும் அந்த இருமல்ச் சத்தத்தின் இடையூறு தணிவதாக இல்லை. எழுந்து விடலாமா என்று யோசித்தேன். பத்மாசனக் கூறுகள் அதனதன்பாட்டுக்கு அதனதன் சீரைச் செம்மையாய்த் தரித்துக் கொண்டுதானிருந்தன.
புண்பட்ட மனத்தை புக விட்டு ஆத்து என ஊரில் சொல்வது நினைவுக்கு வர, “ஓம்” சொல்வதில் மனத்தைப் புகட்டினேன். இருமல்சத்தம் துப்புரவாக நின்று போயிருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் மகள்களைப் பற்றிய எண்ண அலையில் ’ஓம்’ சொல்வதும் தொடர்ந்தது. அதற்குப் பிறகு என்னை நானே எப்போது தொலைத்து விட்டிருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. இப்படியாக நேரிடும் என்பதை மனத்திற்கொண்டுதான், மாலை நான்கு மணிக்கு ஒலிக்கும்படியாக முன்கூட்டியே எனது ஐபோனில் அலறியைக் கட்டமைத்திருந்தேன்.
ஐபோனின் ஒலி கேட்டுக் கண் விழித்தேன். அலறிக்கு மாறாக, யாரோ அழைப்பது போல உணர்ந்தேன். ஆமாம். நண்பர் கல்யாண் குமார்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார். அழைப்போசைதான் தொடர்ந்து ஒலிக்கிறது.
”சொல்லுங்க கல்யாண்!”
“விஜய், என்ன செய்றீங்க? ரொம்ப நேரமாக் கதவு தட்டிட்டு இருக்கேன். வீட்டிலதான இருக்கீங்க?”
“ஓ, அப்படீங்களா? இதா, வந்துட்னுங்க!”
ஓடிப் போய் கதவைத் திறந்து விட்டேன். நண்பர் கல்யாண் குமார் தமிழ்ச்சங்க நிறுவனர்களுள் ஒருவர். சமூகத்தொண்டு புரிவதில் அவருக்கு நிகர் அவர்தான். அக்கம்பக்கத்தில் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், அழைப்பது கல்யாண் அவர்களைத்தானாக இருக்கும்.
“குளிச்சிட்டு ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தனே? மறந்துட்டீங்களா??”
“இதென்ன, இப்ப ஆச்சுங்க கல்யாண்!”, சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் ஓடிப் போய் துரிதகதியில் புறப்பட்டு வந்தேன்.
இன்றைக்கு எங்கள் ஊர் தமிழ்ச்சங்கத்தினுடைய நகைச்சுவைத் திருவிழா. திருவிழாவில், உள்ளூர்க் கலைஞர்களின் ’காதலிக்க நேரமுண்டு’ நாடகமும், ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினருடைய ‘வெங்கட்டா3” நாடகமும் இடம் பெறுகிறது. முன்கூட்டியே விழா அரங்கிற்கு அழைத்துச் செல்லத்தான் கல்யாண் வந்திருக்கிறார்.
அவர் அவரது சிற்றுந்தில் பயணிக்க, நான் எனது சிற்றுந்தில் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே காலியர்வில் காரல் அரங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன்.
தமிழ்ச்சங்க விழாக்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நண்பர்களைச் சந்திக்கலாம். ஆசை தீர மொக்கை போடலாம். பயனுள்ள தகவல்களை அறிந்து வரலாம். மிக முக்கியமாக, சுவையுள்ள சாப்பாடு உண்ணக் கொடுப்பார்கள். அதுவும் மனைவி மக்கள் ஊருக்குப் போயிருக்கும் இத்தருணத்தில் சோறு முக்கியமல்லவா? ஓடியாடி வேலை செய்தால், வீட்டிற்கு எடுத்துச் செல்ல ”டு-கோ” கூடக் கொடுப்பார்கள்.
முதன்முதலில் அவன்தான் எதிர்ப்பட்டான். விழாவிற்கு ஏனடா வந்தோம் என்றிருந்தது. எல்லாம் இந்த கல்யாண் குமாரால் வந்தது வினை. உனக்கு எவ்வளவு சம்பளம்? எவ்வளவு மிச்சமாகுது? வகைதொகையில்லாமல் கேள்வியாய்க் கேட்டுத் தொலைப்பானே இந்த முருகவேல்??
நான் அவனைப் பார்க்காதது போல மறுவாசலில் வைத்திருந்த எதோவொரு பெட்டியை எடுப்பதாகப் பாவனை செய்து கொண்டு போனேன்.
“ஏனுங் விஜய்? எப்பிடி இருக்கீங்க? போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டீங்றீங்க?? எங்க ஊட்டுல நங்கையாளையும் பாப்பாக்களையுங் காணம்??”, அவ்வளவு எளிதில் விட்டுவிடுவானா இந்த இருகூர்க்காரன்.
முருகவேலின் மனைவியினுடைய அண்ணன் கரையாம்பாளையம் சண்முக சுந்தரமும் நானும், கோயம்பத்தூர்க் கல்லூரியில் ஒரே வகுப்பு. அதன் நீட்சியாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையே கூடுதலான பழக்க வழக்கம். அதை வைத்துக் கொண்டுதான் என்னைப் படுத்துகிறான் என்று சொல்வதும் சரியாக இருக்கும். ஆனால் கள்ளங்கபடமில்லாதவன். கோயமுத்தூர் ஊரக நாகரிகம் அமெரிக்கா வந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது அவனிடம்.
”வாங்க சித்த நேரம் இருந்து பேசீட்டுப் போகுலாம்!”, அருகிலேயே வந்துவிட்டான் முருகவேல்.
“நான் நல்லா இருக்கணுங்க? நீங்க??”
”எதோ பொழப்பு ஓடுதுங்க? ஏனுங், ஊட்ல ஆரையுங் காணமுங்க??”
“எல்லாரும் ஊருக்குப் போயிருக்குறாங்க முருகு!”
“அப்படீங்களா? செல்வி சொல்லவே இல்லை. அவளுக்குத் தெரியாதாட்ட இருக்குது? ஆமா, நீங்க போகலைங்களா??”
“போகணும். லீவு எசவாக் கெடைக்க மாட்டீங்குதுங்க முருகு, அதான்! உங்க வீட்டுல?”
“எங்கீங்க, உங்களுக்குத்தான் தெரீமே எல்லாம்? இன்னும் அட்வான்சு பரோல்லதான் இருக்கறோம். இன்னும் கிரீன் கார்டுக்கு பிரியாரிட்டி வர்ல? ஆறு வருசம் ஆச்சுங்க அப்பன் அம்மாளைப் பார்த்து! படுத்தா நிம்மதியாத் தூக்கம் வரமாட்டீங்குதுங்க! எங்கம்மாவுக்கு வேற நாளுக்கு நாள் ஒடம்புக்கு ஆகாமப் போய்ட்டு இருக்குது!”
“அதெல்லாம் கவலைப்படாதீங்க முருகு. இப்ப ஊர் முன்ன மாதர இல்ல பாருங்க. தடுக்கி உழுந்தா ஆசுபத்திரிங்க!”
“ஆமா, நீங்க ஊருக்குப் போயிட்டி வந்து எத்தினி நாளாச்சுங்க?”
“ஒன்ரை வருசம் ஆச்சுங்க முருகு!”
“நீங்கதான் அமுச்சி செத்த எழவுக்கே போக முடியலைன்னு சொல்லிச் சொன்னீங்களே? ஞாவகத்துக்கு வருதுங்க. வெளிநாட்டுக்கு ஏண்டா வேலைக்கு வந்தம்னு இருக்குதுங்க இப்பெல்லாம். அப்பனாத்தாளைக,  கூடாமாடா இருந்து பாக்க முடியாட்டிப் போகுதுங்க. செத்ததுக்கும் பொறகு எழவுக்குக் கூட போக முடியாதாட்ட இருக்குது பொழப்பு? போன வாரம் நடந்த விசியந் தெரீந்தான உங்களுக்கு??”
“ஏனுங்? என்னாச்சுங்க??”
“நம்ம, பரஞ்சோதி இருக்காரல்லங்க? பெட்எக்ஸ் விசுவநாதம் பிரண்டு??”
“ஆமா, தெரியுஞ்சொல்லுங்க!”
“அவரோட தங்கச்சி ஊட்டுக்கார்ரு, எளவயசுதானாமா, நாப்பத்தஞ்சு நாப்பதாறு இருக்கும்னு சொல்லிச் சொன்னாங்க. திடீல்னு ஆர்ட் அட்டேக்ல போயிட்டாருங்லாமா. இங்கிருந்து இவிங்க பத்தாயரம் டாலர் செலவு வண்ணிப் போயிருக்குறாங்க. போய்ச்சேர்றதுக்குள்ளயே பாடி எடுத்துப் போட்டாங்களாமா. என்ன பொழப்புங்க இது? ஆமா, உங்கூட்டுல நீங்க எத்தினி பேருங்கொ?”
“நாங்க மூனு பேரு. நாந்தான் கடைசிங்க முருகு”
“அல்லாருமே வெளிநாடுதானுங்களா?”
“அக்கா, அம்மா அப்பாகோட ஊர்ல இருக்காங்க!”
”உங்க மச்சானுக்கு என்ன வயசாச்சுங்க?“, கேட்டு முடிக்கவும் ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் அந்தப் பக்கம் வரவும் சரியாக இருந்தது. இந்த அளவில் முருகவேலுவிடம் இருந்து தப்பித்தோம் என்கிற நினைப்பில் நழுவி வந்து விட்டேன்.
சற்று நேரம் ஒய்.ஜி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூரில் இருக்கும் நாடக எழுத்தாளரும் இயக்குநருமான தஞ்சை நடராஜன் அவர்களும் வர, அவருடனும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பங்குச்சந்தையில் ஆப்பிளின் விலை, அமேசானின் விலை, கூகுளின் விலை எனச் சகல விலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த போதுதான், ஆட்டோசோன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் தமிழ்ச்சங்க செயலருமான திவாகர் வந்தார்.
“என்னங் விஜய், போஸ்ட் பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணுறீங்க போலிருக்கு?”
“ஆமாங்க திவாகர். நீங்க எப்படி இருக்கீங்க?”
“ப்ச். நாளுக்கு நாள் ஒன்னும் செரியில்லைங்க. ஊருக்கே போயிடலாம்னா, வீட்டுல சங்கீதா ஒத்துக்க மாட்டீங்றா”
”இதென்னடா இழவுக்கு மேல இழவா இருக்கு? சொள்ளைக்குத் தப்பிச்சு வந்த கன்னுகுட்டி தினாசுகிட்ட மாட்டிகிட்ட மாதர ஆயிப் போச்சே நம்ம நிலைமை?!” என்று நினைத்துக் கொண்டே எசப்பாட்டு பாடினேன், “ஓ அப்படீங்களா?”
“என்ன அப்படீங்களா, ஒன்னுந்தெரியாத மாதரி? ஊர்ல இருந்து போன் வந்தாலே போதுங்க, அம்மாவுக்கு என்னாச்சோ, தம்பிக்கு என்ன ஆச்சோன்னு செத்து செத்துப் பொழைக்க வேண்டியதா இருக்குங்க விஜய்!”
“ஆமாங்க, இது சொன்னீங்களே, நெம்பச் சரி!”
”பொசுக்கு பொசுக்குன்னு ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாங்கூட போன் வருதுங்க. மொதல்ல எல்லாம் நாம கூப்ட்டாத்தான் உண்டு!”
“ஆமாங்க திவா! போன் ரேட் நெம்பக் கம்மி போல இருக்கு?”
“பெர் மினிட்டுக்கு ஐம்பது பைசாதானுங்களாம்!”
“தயவு தாட்சண்யம் இல்லாம நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் ஆக்கிவிடணும். அப்பதான் இந்தக் கொடுமை கொறையுமுங்க!”
“ஆமாங்க விஜய். ஊர்ல அம்மா தனியா இருக்காங்க. தம்பிக்கு நொய்டால ப்ராஜக்டு. சிஸ்டர் சென்னையில இருக்கா. அதான் நானும் ஊருக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன். அப்பாவத்தான் கடைசில கூட இருந்து கூடப் பாக்க முடியல!”
“புரியுதுங்க திவா!”
“அம்மாவையாவது மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு யோசிக்கிறேன். நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க விஜய்! ஆமா, உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுதா? நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க??”
“இப்போதைக்கு அதப்பத்தி பெருசா எதும் யோசிக்கலைங்க திவா!”
பேச்சுக் கச்சேரிக்குள் அடுத்த ஆடொன்று அதன் போக்கில் வந்து புகுந்தது.
“வாடா மச்சான். இவர் பேரு விஜய்; பார்ட்லட் பேங்க்ல வேலை பாக்குறாரு!””
“விஜய் சார், எனக்கு நல்லாத் தெரீமே! நம்ம கல்யாண் குமார் கூட வருவாரே? பார்த்திருக்கேன்!! அலோ சார், நல்லா இருக்கீங்களா? உங்க பாட்டியோ யாரோ தவறிப் போனப்ப, நீங்க ஊருக்கே போய் செட்டில் ஆயிட்டதாச் சொன்னாங்களே? இன்னும் நீங்க இங்கதான் இருக்கீங்களா சார்??”
எனக்கு இந்த நகைச்சுவைத் திருவிழா மிகவும் அவசியமா? உடுத்திருக்கும் உடைகளை அந்த இடத்திலேயே களைந்தெறிந்து போட்டுவிட்டு, அப்படியே ஓடிப் போய் எர்னாண்டோ டெ சோட்டோ மெம்ஃபிசு பாலத்தின் மீதேறி மிசிசிப்பி ஆற்றில் குதித்து விடலாம் போல இருந்தது.
நன்றி: வல்லமை