நவ 18, 2022, மிக முக்கியமானதொரு நாள். இருவேறு பற்றியங்கள் என் மனத்தைப் பிசைந்தன. தமிழ் எழுத்தாளர் ஒருவர், ஒரு சொல்லைத் தாம்தான் உருவாக்கியதாகச் சொல்லவே அது சர்ச்சையாகின்றது. ஏனென்றால் அந்த சொல், 1960+களிலேயே தமிழ்நாட்டரசின் கையேட்டில் இடம் பெற்றிருக்கின்றது. அந்த ஆவணத்தைச் சான்றாகக் கொண்டு இவர்தம் வாக்கு சரியன்று என வாதிடப்படுகின்றது. சர்ச்சையை அடுத்து, எழுத்தாளர் தரப்பு கொடுக்கும் விளக்கங்கள், அவர் அச்சொல்லைப் பயன்படுத்தியதாகச் சொல்லும் படைப்பில் அச்சொல் இடம் பெறவேயில்லை என்பதாகச் சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் கடும் வருத்தம், ஏமாற்றத்தையே கொடுக்கின்றது. மனம் வலிக்கின்றது.
’உலகின் இளைய பில்லியனர் இவர்தாம்; இன்னின்ன விருதுகள்’ என்றெல்லாம் சொல்லி ஊடகங்கள் கொண்டாடின. அதே ஊடகங்கள்தாம், அவருக்கு 11+ ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதாக பிரேக்கிங் நிவீசுகள் போட்டுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு பார்வைகள், கண்ணோட்டங்கள். பொதுப்புத்திக்கு வைக்கப்படும் தகவலைக் கடந்து பார்ப்பதுதான் நம் பார்வை. கொண்டாடப்பட்ட ஒருவரின் வீழ்ச்சியின் துவக்கப்புள்ளி எது? ஆவணப்படுத்துதலின் அருமை கருதிய ஒரு சாமான்யர்.
அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வேலைக்குச் சேருகின்றார். பணியிடத்திலே, பதிவுகள் அழிக்கப்படுகின்றதைக் கவனிக்க நேர்கின்றது. இது, ஆவணப்படுத்தல் என்பதன் வேருக்கே அமிலம் ஊற்றும் செயலாயிற்றேயெனச் சிந்திக்கின்றார். ஏதோ தவறு நடப்பதாக உணர்கின்றார். தம் பணியிழப்பு, இதரத் தொல்லைகள் என்பது பற்றியெல்லாம் அச்சம் கொள்ளாமல் உகந்த அலுவலர்களுக்கு மடல் எழுதுகின்றார். இதுதான் துவக்கப்புள்ளி.
வீடானாலும் சரி, காடானாலும் சரி, சங்கமானாலும் சரி, பேரவையானாலும் சரி, ஆவணங்களே அடிப்படை. விழாக்களும் விருதுகளும் அந்தந்த நேரத்தை இனிமையாக்கக் கூடியவை. ஆவணங்கள் காலத்தின் சான்றாய் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியன. ஆவணங்களை ஆக்குவதும் பேணுவதுமே மாந்தனுக்கு அழகு!
https://youtu.be/vMQlj9TZQfE
No comments:
Post a Comment