3/08/2016

மhaன்

உறவுகள் தான்தோன்றித்தனமானவை. ஒருவருக்கு இன்னதுமீதுதான் உறவு பூக்க வேண்டுமன்பதில்லை. அது எதன்பாற்பட்டும் அமையலாம். ஒருவருக்கு அவர் கால்வழி நடந்து செல்லும் வழியே தென்பட்ட ஒரு பொழிக்கல்லின் மீது உறவு பூக்கலாம். அவருக்காகவே அது அங்கு நின்று, அவரை ஆற்றுப்படுத்தலே அதன் வினைப்பயன் என்பது போலவும் அமையலாம். சாளரக்கதவினைத் திறந்ததும் கண்ணிற்படும் அந்த மலைமுகட்டுக்கும் இவருக்குமான உறவு மிகவும் ஆழமானதாகக் கூட இருக்கலாம். ஆமாம். உறவுகள் தான்தோன்றித்தனமானவை. அப்படியான உறவுகளினாலேயே இந்த பிரபஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது. மிகவும் வலுவாகக் கட்டப்பட்டிருக்கிறது.

அந்தியூர் பிரபாகரனுக்கு அது ஓர் உயிரோட்டம். எவ்வகையிலாவது மக்களைச் சந்திக்க வேண்டும். மக்களோடு உறவாட வேண்டும். அதற்கான எத்தனையோ வாயில்களில் இதுவுமொன்று. 1990களுக்குப் பிறகு சூலூர் திருச்சி சாலையின் விதி அடியோடி மாறிப்போனது. போக்குவரத்து வண்டிகளின் இரைச்சலில் அதன் காதுகளில் செவிடாகிப் போனதில் எல்லாமும் ஒலியற்றுப் போனது. ஆனாலும் இந்த அதிகாலை நான்குமணிக்கு அதன் காதுகளுக்கு புத்துயிர் வந்தது போல இருந்தது. ஆமாம். முத்துக்கவுண்டன் புதூர் இருப்புப்பாதையில் செல்லும் ஏதோவொரு தொடர்வண்டியின் ‘கட்..கட்.. கட்…’ சப்தம் நிதானமாகக் கேட்டது. அந்தப் பொழுதில்தான் அந்தியூர் பிரபாகரனின் கார் அதன்மீது பூப்போல வருடியபடி தன் இணையான அவிநாசி சாலையில் இருக்கும் கொள்ளுப்பாளையம் நோக்கிச் சென்றது.

பேருருவமான இருட்டின் கருமைநிறத் தோலை யார் நெய்தது? அதற்கு மட்டுமெப்படி இப்படியொரு மென்மை?? அதன்மீது பாய்ச்சப்படும் ஒலிக்கொப்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அந்த வழிபாட்டுக்கூட முன்றலில் இருந்தது சிறு விளக்கின் சொடுக்கியைச் சொடுக்கியதும் இருட்டுப்பேருவத்தின் மேனி வெளுத்துப் போனது. எல்லாரும் இருட்டு அகன்றது என்கிறார்கள். இருட்டு அங்கேயேதான் இருக்கிறது. அதன் மேனிதான் வெளுத்துப் போனது. பிரபாகரனுக்குள் ஒரு சிலிர்ப்பு. யாரோ தன் முதுகில் மேலிருந்து கீழாக வருடுவது போன்ற பிரமை. திரும்பிப்பார்த்தால் செந்நிறமுகத்தில் கருஞ்செவல்ப் புலியொன்று தன்னை நோக்கி முகர்ந்து வருகிறது.

“சீ, நாயே அந்தப் பக்கம் போ”

ஒரு முறை பார்த்து விட்டு இருட்டுப் பேருருவத்தின் அந்தப் பக்கத்தில் கரைந்து போனது அது.

வாழும்கலைப் பயிற்சி வகுப்புத் துவங்கியது. அந்த காலை நேரத்தில் வாழும் கலைபயில வருகின்றனர் கொள்ளுப்பாளையம் மாந்தர். வாழப்பிறந்தவர்களுக்கு வாழ்வதற்கு பயிற்சியா? பூக்கும் உறவுகளோடு உறவாடிக் கொண்டால் பயிற்சிகள் எதற்கு??

பயிற்சிகள் முடிந்து சிற்றுண்டிக்காக அருகிலிருந்த கூடத்துக்குக் கிளம்பினர் வாழும்கலைப் பயிலுநர்கள். பிரபாகரனும் அறையை விட்டு வெளியே வந்தார். ஓங்கிப் பாய்ந்தது அது.

“இதென்னுங் இதூ? என்னிய உட்டுப் போகமாட்டீங்கீதூ?? ஆரூட்டு நாயிங்க??”

உள்ளூர்க்காரர்கள் எவருக்கும் அதற்கென்று உடைமையாளர், உரிமை கோருபவர் இருப்பதாகத் தெரிந்திருக்கவில்லை.

சிற்றுண்டு முடித்துக் கொண்டு காலை எட்டுமணிக்கு கணியூர் இலட்சுமி மெசின் வொர்க்சு நிறுவனத்துக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய துரிதகதியிலிருந்தார் பிரபாகரன். என்.எச் பெருந்தெருவில் வண்டிகளெல்லாம் புலிப்பாய்ச்சலில் சென்று கொண்டிருந்தன. அவற்றோடு பிரபாகரனது வண்டியும் சேர்ந்து கொண்டது. வண்டி உள்ளே நுழைய வாயிற்காவலர் பெருங்கதவுகளைத் திறக்க முற்படுகையில்தான் அவருக்குத் தெரிந்தது, அவரது காருக்கும் முன்பாக அது நுழைந்து கொண்டது. காவலர் துரத்திக் கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு, எட்டுமணிக்கு முன்பாக பணியிடத்துக்குள் சென்றுவிட வேண்டுமென்கிற முனைப்பு பிரபாகரனுக்கு.

மாலை நான்கரை மணிக்கு அலுவல் முடிந்து வண்டியைக் கிளப்ப வந்தவர் அதிர்ந்து நின்றார். தன் வண்டியின் அடியில் படுத்திருந்த அது, தாவிக் கொண்டு தன் மீது ஏறவந்தது அது. உடன் வந்தவர்களைத் துணைக்கழைத்தார்.

“என்னங் இதூ? எனக்கு நெம்பப் பயமா இருக்குது. காலீல நாலு மணீலிருந்து இது என்னிய வுடாம தொரத்திகினே இருக்குதுங்க… கொஞ்சம், அக்கட்டால தொரத்தியுடுங்க. நான் காரெடுத்துட்டுக் கிளம்பிக்கிறன்!”

வண்டியை உசுப்பிவிட்டுப் பெருந்தெருவுக்கு வந்தவர் இன்னுமந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை. கம்பெனியிலிருந்து புறப்பட்டு ஐந்து மைல் தொலைவு கடந்து அரசூர்ப் பிரிவில் ஒரு வண்டி அவரது வண்டியை வேகமாகக் கடந்து ஏதோ சமிக்கையைக் காண்பித்தார் அந்த வண்டியின் ஓட்டுநர். அதைப் பார்க்க நேரிட்டதும்தான் கவனித்தார், தன் காருக்கிணையாக அதுவும் ஓடி வந்து கொண்டிருந்தது.

சூலூர்ப்பிரிவில் வண்டியை தெற்குப்புறமாக சூலூரை நோக்கி முடக்கினார் வண்டியை. திடுமென வண்டி பக்கச்சாலையில் பிரிந்தோடுமென அதற்குத் தெரிந்திருக்கவில்லை. மாலையில் வேறு அலுவல்நிமித்தம் கோயமுத்தூர் செல்லவேண்டியவர், இது செய்தபாட்டில் நேராக வீட்டுக்கு வந்துவிட்டார் பிரபாகரன்.

”டவுனுக்குப் போறன்னு சொன்னீங்க, போகலையா?”

காலை நான்குமணி முதல் நடந்தவற்றையெல்லாம் மூச்சுத்தீருவதற்குள் சொல்லி முடித்தார். யாரும் அவ்வளவாக ஈடுபாட்டுடன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை மகளைத் தவிர. “அப்பா, அப்படின்னா அதையும் நம்மூட்டுக்கே கூட்டீட்டு வந்திருக்கலாமப்பா?!” எனச் சொன்னாள்.

மறுநாள் காலை, அதே நான்குமணி. தயாராகக் காத்திருந்தது அது. நேற்றைப் போலவே இன்றும். அலுவலகப் பணியிடத்துக்குப் போனார் பிரபாகரன். உறவுகள் தான்தோன்றித்தனமானவை. சிரித்தார். அதுவும் வாலை ஆட்டிக் குழைந்து நின்று கொண்டிருந்தது. உடன் பணிபுரியும் நண்பர்களெல்லோரும் வியப்புக்கொண்டு நின்றிருந்தனர். அதிலொருவர் சொன்னார், ”பிரபாகரரு. வேலைக்கு லீவு நாஞ்சொல்லீர்றன். நீங்க, அதைய உங்கூட்டுக்கே கூட்டீட்டுப் போயிருங்களே?”

என்.எச். பெருந்தெருவில் வண்டியை தொன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் விரட்டினார். விட்டேனேபாரென்று அதுவும் உடனோடி வந்தது. பெருந்தெருவிலிருந்து இறங்கி உள்ளூர்ச்சாலைக்குத் திருப்பினார் வண்டியை. இன்று அதுவும் சுதாரித்துக் கொண்டு, உள்ளூர்ச்சாலையிலும் பின்தொடர்ந்து வந்தது.

மனம் பதறி இறங்கினார் பிரபாகரன். சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு அல்லாடுவதைப் பார்த்த நண்பன் திருமூர்த்தியும் தன் வண்டியை நிறுத்திவிட்டு அருகே வந்தார். “ஏனுங்ணா, வண்டீலெதுவும் பிரச்சினைங்ளா?”, என்றார் திருமூர்த்தி.

”இல்லெ திருமூர்த்தி. நாயொன்னு ரெண்டு நாளா எங்கோடவே சுத்தீட்டு இருக்குது. எம்பொறகால கார்கூடவே ஓடி வன்ட்டிருந்துச்சு… அங்க பாரு, உள்ளூர்நாய்க எல்லாஞ்சேந்து வளைச்சிருச்சுக, பாரு!!”

இருவருமாகச் சேர்ந்து உள்ளூர்நாய்களை விரட்டி விட்டனர். அது பிரபாகரனை நாவால் துழாவிக் கொண்டிருந்தது. கார்கதவுகளைத் திறந்து விட்டு, காருக்குள் வரவைக்க முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அது காருக்குள் வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

“அண்ணா, இருங். நாம்போயி பிசுகோத்து ஒரு பாய்க்கட் வாங்கியாறன்”, கிளம்பிப் போய் பொட்டலத்தோடு திரும்பி வந்தார் திருமூர்த்தி.

பிஸ்கட்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டுப் போட்டு கார்க்கதவுக்கருகில் வரவைத்து விட்டனர். காருக்குள் ஒரு துண்டினை வீசினார் திருமூர்த்தி. அது வெகு திறமையுடன் தன் முன்னங்காலை விட்டு பிஸ்கட் துண்டினை வெளிநகர்த்தித் தன் நாவால் பற்றி உள்ளிழுத்துக் கொண்டது. அப்படியே செய்து கொண்டிருக்கவும், ஒரு கட்டத்தில் தன்னை வலுப்படுத்திக் கொண்டு அதன் உடம்பைப் பற்றி காருக்குள் தள்ளி விட்டார் திருமூர்த்தி. அவ்வளவுதான் கதவைமூடி விட்டார் பிரபாகரன். அதுவும், காரின் பின்னிருக்கையில் தன் வண்டியில் தான் பயணம் மேற்கொள்ளும் தோரணையைத் தனதாக்கிக் கொண்டிருந்தது.

”ஏங்கண்ணூ வேலைக்குப் போகுலியா இன்னிக்கி? ஏன் எதுனா ஒடம்புக்கு செரியில்லியா?? ஏன், என்னாச்சி??”, பதற்றத்தோடு கதவுகளைத் திறந்து விட்டார் அம்மா.

“அம்மா, ஒரு வட்டல்ல சோறு போட்டாக் கொண்டா!”

அப்போதுதான் அது காரிலிருந்து தன் வீட்டுக்குள் புகுந்து கொண்டிருந்தது. தெருவே பார்த்து அஞ்சியது. கூரிய கண்கள். புலியின் முகத்தை ஒத்த முகம். தன் வீட்டை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது அது. எதிர் வீட்டில் இராஜஸ்தான் குடும்பமொன்று வசிக்கிறது. அந்த வீட்டுச் சிறுமி, இந்த வீட்டுச் சிறுமியிடம் கேட்கிறாள்.

”உங்கவீட்டு டாமி பேரென்ன?”

“அது பேரு, மகன்!”

“மகனா?”

“ஆமா, எங்கப்பா அதைய அப்படித்தான் கூப்புடுவாரு!!”

கவுன்சிலர் அம்சம்மாவிடம் சேட்டம்மா பாயல் சொல்லிக் கொண்டிருக்கிறார், “பிரபாகரண்ணன் வூட்டுக்கு மகன் வந்ததிலிருந்து எங்களுக்கு ஒரு பயமுமில்ல. அவன் தெரு ஆட்களைத் தவிர, மத்தவிங்களை உள்ள வுட மாட்டான்! எங்க பய்யாவும் அத்தே சொல்லிச்சி!”.

உறவுகள் தான்தோன்றித்தனமானவை. அதற்கு இன்ன சாயமென்று ஒன்று கிடையாது. தேசதேச எல்லைகள் கிடையாது. பூக்கும் உறவுகளோடு உறவாடிக் கொண்டால் வாழப் பயிற்சி எதற்கு?

“மகன், வாடா இங்க! மக…ன்!!’, கோடி எலக்ட்ரிக் வேணு எதற்கோ மகனை அழைத்துக் கொண்டிருக்கிறார். உறவாடிப் பொழுதைப் புசிப்பதற்காகவும் இருக்கலாம்!!