11/01/2023

அமெரிக்காவின் அச்சாணி

அமெரிக்காவின் வலு என்பது அதன் இராணுவபலமோ பொருளாதாரமோ அல்ல. அதன் அரசியலமைப்புதான் அதன் அச்சாணி, வலு. பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்டிருப்பது அது.

அதில் ஏதாவது திருத்தம் கொண்டு வர வேண்டுமானால், ஒன்றியத்தில் இரு அவைகளிலோ அல்லது மாகாணத்தின் இரு அவைகளிலுமோ மூன்றில் இரண்டு பங்கு ஓட்டுகள் பெற்று முன்மொழியப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட திருத்தமானது, ஒவ்வொரு மாகாணத்தின் அவைகளிலும் நான்கில் மூன்று பங்கு(75%) ஓட்டுகள் பெற்று வழிமொழியப்பட வேண்டும். ஏன் அப்படி? போகின்ற போக்கில் எளிதான செயன்முறை கொண்டு, அமைப்பின் அடிப்படை சிதைந்து விடக் கூடாது என்பதற்காக. தனிமனிதர்களின்பால் அல்லாது, நாட்டின் இறையாண்மையின்பாற்பட்டதாக இருக்க வேண்டுமென்பதற்காக!

கூட்டாட்சி, பரவலாட்சி ஆகிய இரண்டையும் ஒவ்வொரு நிலையிலும் கடைபிடிக்கும்படியாக விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன. எப்படி? எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம்.

ஒன்றிய மாகாண அவையில், மாகாணத்துக்கு இருவரென மொத்தம் 100 பேர். ஏதோவொரு மீச்சிறு மாகாணம். அதன் உறுப்பினர்களுள் ஒருவர், ஒரு தரப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார். தனியாள் அவர். மொத்தமே 30 ஆயிரம் பேர் கொண்ட மக்கள்தாம் அவர்கள். பரந்துபட்ட நாட்டில் அவர்களுக்கான கவனிப்பு கிடைக்கவில்லை. மீச்சிறு தொகை என்பதால் கவனிப்புக் கிட்டாமல் போக வாய்ப்புகளுண்டு. என்ன செய்யலாம்?

அந்த உறுப்பினர் அவையில் முட்டுக்கட்டளை(filibuster)யைக் கையிலெடுக்கலாம். முக்கியமான சட்டவரைவு நிறைவேற்றும் வேளையில், பேச வாய்ப்புக் கோருகின்றார். அல்லது அந்த முன்னெடுப்புக்கு ஆதரவுப் பேச்சு அல்லது எதிர்ப்புப் பேச்சு என்கின்ற வகையில் பேசத் துவங்குகின்றார். பேசிக் கொண்டே இருக்கின்றார். தலைவர் பேச்சை முடிக்கக் கோருகின்றார். தாம் முட்டுக்கட்டளையைக் கையிலெடுத்திருப்பதாய்ச் சொல்கின்றார். அதாவது, நெட்டுரைஞராக 30 மணி நேரம் வரையிலும் பேசிக் கொண்டிருப்பார். தலைவர் அனுமதித்தாக வேண்டும். வேறு வழியில்லை, அவருடன் பேசி, தீர்வு கண்டுதான் முட்டுக்கட்டளையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அல்லது 60% உறுப்பினர்களுக்கும் மேல் கூடி முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இது அரசியல் சாசனத்தின் ஒரு கூறு. ஏன் அப்படி? நாட்டில் இருக்கிற ஒவ்வொரு தரப்பும் கவனிக்கப்பட்டாக வேண்டுமென்பதுதான் அடிப்படை.

இப்படியாகப்பட்ட விழுமியம் பொருந்திய நாட்டில் இருந்து கொண்டு, 25 பொதுக்குழு உறுப்பினர்கள், 80+ உறுப்பினர்கள் எனச் சேர்ந்து முன்னெடுக்கும் முன்னெடுப்புகள் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன. எதேச்சதிகாரமன்றி வேறென்ன? அயர்ச்சியாக இருக்கின்றது. நல்ல கல்வியுடன் புலம் பெயர்ந்திருக்கின்றோம். நம்மைச் சாவு எப்போது தழுவுமெனத் தெரியாது. வந்திருக்கும் இடத்திலும் அம்மண்ணின் விழுமியத்தைப் பாழாக்கத்தான் வேண்டுமா? நாம் மரிப்பினும் நம் சுவடுகள் இருந்து கொண்டே இருக்கும்; எப்படி வாழ்ந்தோம் என்பதைச் சொல்லிக் கொண்டு!


10/13/2023

செயன்முறை(process)

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறைய நிறுவன நிர்வாகிகள் மன அழுத்தத்திலும் கவலையிலும் இருப்பது தெரிய வந்தது. தொழில், நிறுவனம், அமைப்பு, பள்ளி என எதுவாகினும் அதனை நிர்வகிக்கும் போது அது தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் நினைவில் வந்து வந்து போகும்தானே? உளவியல் அறிஞர்களை நாடினர்.

ஓர் ஒழுங்கினைக் கட்டமைத்தார்கள். அன்றாடமும் மாலையில் வீட்டுக்குச் செல்லும் முன்பாக சக அலுவலர்களுடனான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தக் கூட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் எழுதச் சொன்னார்கள். அவற்றை வரிசைப்படுத்தச் சொன்னார்கள். வரிசையின் அடிப்படையில் அதற்கான தீர்வுகள் இன்னின்னதென அடையாளம் காணப்பட்டு அதற்கான பணிகள் இடம் பெறச் செய்தனர்.

மனிதனின் மனம் என்பது விநோதமானது. எதை நினைவில் கொள்ள வேண்டுமென நினைக்கின்றோமோ அது மறந்து போகும். மறக்க வேண்டுமென நினைப்பது நினைவில் வந்து வந்து எண்ண அலைகளைக் கிளப்பி விட்டுச் செல்லும். இப்படி எழுதி வைப்பதால் மனம் அமைதி கொண்டு விடுகின்றது.

கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்ததினால், அதுவே ஒரு தொடர் இயக்கமாக, ஒழுங்காகச் செயன்முறை வடிவம் பெற்று விட்டது. மனம் அந்த செயன்முறையின் மீது நம்பிக்கை கொள்ள விழைந்தது. நிறுவனத்தின்பாற்பட்ட நல்லது, கெட்டது எல்லாமுமே அந்தச் செயன்முறை பார்த்துக் கொள்கின்றது என்பதான நிலைப்பாடு மனத்தில் குடிகொண்டு விட்டதினாலே, வீட்டுக்குச் செல்லும் நிர்வாகிகளின் மனப்பதற்றம், கவலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி, புத்துணர்வுடன் மேலும் செயலூக்கம் கொண்டவர்களாக மாறினர்.

நம் தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் நம் மனத்தை நிர்வகிக்க(மேனேஜ்)த் தலைப்பட்டவர்களே. இருக்கும் கவலைகள், பிரச்சினைகள், சவால்கள், திட்டங்கள், பணிகள் முதலானவற்றை வாரத்துக்கு ஒருமுறையாவது எழுதப் பழக வேண்டும். எழுதினாலே பாதிப்பிரச்சினை தீர்ந்து விடும். பிற்பாடு அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டடையலாம். ஒழுங்கின் மீது நம்பிக்கை பிறக்கும். கவனமின்மை, கவலைகள், பலவாக்கில் யோசித்துக் கிடப்பதெல்லாம் படிப்படியாக மங்கும். மனதில் உறுதி பிறக்கும். காலத்தை முழுமையாக அனுபவிக்கத் தலைப்படுவோம்!

A problem well stated is a problem half-solved.-Charles Kettering

-பழமைபேசி.

9/16/2023

வானமே எல்லை, இல்லை, வானத்துக்கு அப்பாலும்


சிதிலமுற்ற கூட்டில் ஒரே ஒரு முட்டை இருப்பதைக் கண்டார் உழவர். சுற்றுமுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய மட்டிலும் பறவைகளைக் காணோம். குஞ்சுகுளுவான்களைக் காணோம். முட்டையைத் தொட்டுப் பார்த்தார். வெதுவெதுப்பாய் இருந்தது. ஆக நாட்பட்ட முட்டையும் அன்று. கையிலெடுத்துக் கொண்டு போய், பண்ணையில் இருக்கும் அடைக்கோழியின் முட்டைகளுள் முட்டையாய் வைத்து விட்டார்.

அடைக்கோழியும் அடை காத்துவர, குஞ்சுகள் பொரிந்தன. இந்தக் குஞ்சுவும் அவற்றுள் ஒன்றாய் தாய்க்கோழியின் பின்னால் திரிந்து, கொத்தித் தின்னப்பழகியது. நடைபோடப் பழகியது. ஓடிச்செல்லப் பழகியது. ஒருபோதும் வானத்தைப் பார்க்கவில்லை. நினைத்தால் வானத்தை அதனால் தொட்டவிடக் கூடிய கழுகுக்குஞ்சுதான் அது. ஆனால் சக கோழிகளைப் போன்றே வாழ்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள், வானத்தைப் பார்த்தது. கழுகொன்று சாய்ந்து சாய்ந்து சாகசம் செய்து கொண்டிருந்தது. இது நினைத்துக் கொண்டது, “நானும் கழுகாகப் பிறந்திருந்தால்”.

நாம் எல்லாருமே அப்படித்தான். நாமும் ஒரு கழுகாய், புலியாய், சிங்கமாய்த்தான் பிறந்திருக்கின்றோம். ஆனால் நாம் யார் என்பதே அறிந்திராமல் மனத்தடையுடன் வாழ்கின்றோம். அடுத்தவரைப் பார்த்துப் பார்த்து வாழ்கின்றோம். நாம் யார்? நாம் நாமாக வாழ்வதில்லை. 

வானத்துக் கழுகைப் பார்த்துக் கொண்டேவும் இது மெல்ல தன் இறக்கைகளை அடித்துப் பார்த்தது. என்ன அதிசயம்? தம்மாலும் மேல்நோக்கிச் செல்ல முடிந்தது. ஆனால் களைப்பு மேலிடவே தாழவந்து தரையிறங்கிக் கொண்டது. வயோதிகம் காரணம். காலங்கடந்த அறிதல். இளமையிலேயே இது தெரிய வந்திருந்தால்? ஆகவே, இளமையிலேயே உங்கள் ஆற்றலை உணர்ந்து செயற்படுங்கள் என்பதாக மாணவர்களுக்கான எழுச்சி உரைகள் மேற்கொள்ளப்படுவதை எங்கும் காணலாம்.

சரிதான். ஆனால் வானமென்ன, வானத்துக்கு அப்பால் செல்லவும் வயது ஒரு தடை அல்லவே அல்ல. 90 வயது முதியவர் ஒருவர், தன்னந்தனியாக ஓர் அறையில் வாழ்ந்து வருபவர். தட்டுத்தடுமாறி, ஓரிரு சொற்றொடர்களாகத் தம் வாழ்க்கையில் கொண்ட பட்டறிவுகளைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வர பெருங்கூட்டமே அவரைப் பின்தொடரத் துவங்குகின்றது. பின்னாளில், பல்கலைக்கழகங்களுக்குப் பகுதிநேர ஆசிரியராக அழைக்கப்படலானார். தம் 90ஆவது வயதில், Joyce DeFauw என்பார், வடபகுதி இல்லினாய் பல்கலைக்கழகத்தில் படித்து தம் பட்டத்தைப் பெறுகின்றார். தம் 96ஆவது வயதில், Nola Ochs (née Hill) என்பார் கன்சாசு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, கின்னசு சாதனையையும் தமக்கானதாக ஆக்கி,  105 வயது வரை வாழ்ந்து  2016ஆம் ஆண்டில் தம் பயணத்திலிருந்து விடைபெற்றுக் கொள்கின்றார். இவர்களெல்லாம் பட்டம் பெற்றதனால் என்ன பயனென வினவலாம். ’வானமேகிட வயது தடையேயல்ல’ என்பதனை நிறுவி இருக்கின்றார்கள்தானே?

“I don't dwell on my age. It might limit what I can do. As long as I have my mind and health, it's just a number.” -Nola Ochs

9/05/2023

மாணவர்களுக்கான ஓட்டுநர் உரிமம்

ஒரு நாட்டிய அரங்கேற்றத்தில் பங்கு கொள்ளச் சென்றிருந்தோம். வழமைபோலவே நம்மவர்களுக்குள் ஒரு கலந்துரையாடல். தம் பிள்ளையின் ஓட்டுநர் காப்பீட்டுக்கு நான்காயிரம் வெள்ளிகள் வரையிலும் செலவு ஆவதாக ஒருவர். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். மற்றொருவர் அதிலும் பாதிதான் என்றார். இஃகிஃகி, பரபரப்புத் தொற்றிக் கொண்டது. நாம் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டியது என்றேன். நம்மை நன்கறிந்த நண்பர் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்.

அமெரிக்க வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கும் தளமாகத் தமிழ் அமைப்புகள் விளங்க வேண்டுமென்பதைத்தான் நாம் இடையறாது சொல்லி வருகின்றோம். மாறாக, ஊர்ப்பழக்கங்களைப் பேசிப் பெருமை கொள்வதிலேயே ஊறித்திளைப்பது பின்னடைவேயென்பது நம் தனிப்பட்ட கருத்து. இதற்காக வாங்காத அடிகள் இல்லை, வசவுகள் இல்லை. நிற்க, பேசுபொருளுக்குள் சென்று விடுவோம்.

வட கரொலைனா மாகாணத்தைப் பொறுத்தமட்டிலும், ஓட்டுநர் உரிமத்துக்கான பயணமென்பது பிள்ளையின் பதினான்கு+ வயதிலிருந்தே துவங்குகின்றது. ஆமாம், பிள்ளையின் ஒன்பதாவது வகுப்பின் போது, பள்ளியிலேயே அரசு உதவியுடன் மலிவுக்கட்டணத்தில் ”ஓட்டுநர் பயிற்றுத்தேர்ச்சி வகுப்பு” நடத்தப்படுகின்றது. இதற்கான கட்டணம் $65. இதையே ஒருவர் பள்ளிக்கு வெளியே எடுக்கத் தலைப்பட்டால் கட்டணம் $450 - $700.

இப்படியான தேர்ச்சிச் சான்றிதழுடன் தம் 16ஆவது வயதில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ”தற்காலிக உரிமம்” பெற்றுக் கொள்ளலாம். சில இடங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு ஓட்டிச் செல்லும் போது, உரிமம் இருக்கக் கூடிய பெரியோர் உடனிருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன். இப்படியான ஒன்பது மாத அனுபவத்திற்குப் பிறகு, கட்டுப்பாடுகளற்ற உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இவர்கள் 18ஆவது வயதுத் துவக்கத்தின் போது முழு உரிமம் பெற்றுக் கொள்வர்.

15 - 18ஆவது வயது வரையிலும் இவர்கள் பெற்றோரின் ஓட்டுநர் காப்பீட்டில் பங்கு வகிப்பர். காப்பீட்டுடன் கூடிய தற்காலிக உரிமம்(provisional license) துவங்கிய நாளிலிருந்தேவும் இவர்களது அனுபவக் கணக்கும் துவங்கி விடுகின்றது. இவர்கள் பலகலைக்கழகம் செல்லும் போது, தனி வண்டித் தேவைக்காக காப்பீடு வாங்கும் போது, இவர்களின் காப்பீட்டுத் தொகை மற்றவரை விடக் குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், 3 ஆண்டு அனுபவத்தின் பொருட்டு சலுகை, அனுபவமற்றோருக்கான மேல்வரியின்மை(No Inexperienced Driver Surcharge) என்பனவெல்லாம் காரணம்.

இந்த வழிமுறையில் பங்கு பெறாமல், 17/18ஆவது வயதில் ஓட்டுநர் உரிமம் பெறத் தலைப்படும் போது, பெற்றோரின் காப்பீட்டில் பங்கு பெறாமல், தனிக்காப்பீடு(Inexperienced Driver Surcharge, increased premium, no discount) பெற்றுத்தான் வண்டி ஓட்டியாக வேண்டும். அதன்பொருட்டுக் கூடுதல் பணமும் செலவளிக்கத்தான் வேண்டும். https://www.ncdot.gov/dmv/license-id/driver-licenses/new-drivers/Pages/graduated-licensing.aspx

-பழமைபேசி. 09/05/2023.

9/02/2023

நீ என்னை நினைவுகொள்வது

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
உன்னில் நான் என்னவாக
உனக்கு நான் யார்
என்பதையெல்லாம்
ஏந்திச் செல்கின்றாயென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
உன்னில் என்னால் ஏற்பட்ட சுவடு
யாராக நீ இருக்கின்றாயோ அந்த உன்னில் 
நான் வந்துபோன தருணம்
என்பதையெல்லாம்
சுமந்து கொண்டிருக்கின்றாயென்பதுதான்

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
மாமாங்கம் பல
ஆண்டுகள் பல
மைல்கள் பலப்பல
நமக்குள்ளே இடைவெளி ஏற்பட்டிருப்பினும்
உன்னால் என்னைத் திரும்பவும்
அழைத்துக் கொள்ள முடிகின்றதென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நீயும் நானும் மீண்டும்
எதிர்கொள்வோமேயானால்
அடையாளம் கண்டுகொள்ளப்பட
உன்னில் நானாகவே
புகுவேனென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் மரணமே அடைந்திருந்தாலும்
என் முகம்
என் பேச்சு
என் குரல்
என் எழுத்து
உன்னில் மேலிட
என்னுடன் நீ
பேசிக்கொண்டிருக்கின்றாயென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் என்னை
எப்படியாகவோ
எதற்காகவேனும்
முற்றுமுழுதுமாய்
இழந்திருக்கவில்லையென்பதுதான்!

நீ என்னை 
நினைவுகொள்வதென்பது என்னவெனில்
நான் சோர்ந்துசோர்ந்து
என்னில் நானே
தொலைந்து கொண்டிருக்கையில்
உன்னில் நானென்பது
என்னை மீட்டெடுத்துவிடுகின்றதென்பதுதான்!

ஒருவேளை நீ
என்னை மறந்துவிடுவாயெனில்,
நான் என்பதில் கொஞ்சம்
நான் என்பதில் கொஞ்சம்
என் இருப்பில் கொஞ்சம்
என் இருப்பில் கொஞ்சம்
மரித்தே போகின்றது!
எல்லாரும் மறந்துவிடுகின்ற நாளில்
செத்தே போகின்றேன் நான்!!

-பழமைபேசி

(தாக்கம்: Whistling in the Dark, Frederick Buechner)


8/28/2023

சங்கம்

இந்த வார ஈறு ஓர் அக்கப்போரில் கழிந்தது. என்னவெனில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் நிகழ்ந்தது. பிள்ளைகளுக்கு வயலின் வகுப்பு இருந்ததால், நண்பரின் அழைப்புக்குப் பணிய முடியவில்லை. அதன் பதிவு பிறகு கிட்டியது. கேட்டதுமே எனக்குக் கடும் சினம்தான் மேலெழுந்தது. அப்படி என்ன இடம் பெற்றது?

முன்னாள்தலைவர், உறுப்பினர் சேர்க்கையைப் பற்றி வினா விடுக்கின்றார். அதற்குரிய குழுத்தலைவர் அவர் தரப்புக் கருத்துகளைச் சொல்கின்றார். இடையில், அக்குழுவின் துணைத்தலைவர் (அமைப்பின் துணைத்தலைவரும் கூட) குறுக்கிட்டு, அவர் கருத்தைச் சொல்கின்றார்.
“எனக்கு குழுவுல என்ன நடக்குதுன்னே தெரியலை. எந்த இன்பர்மேசனும் ஷேர் செய்யுறதில்லை. டிரான்ஸ்பேரன்சியே இல்லை”
கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற செயலாளர் குறுக்கிட்டு, ”எனக்குச் சில கேள்விகள் இருக்கின்றது. கேட்கலாமா?”
“ம்.. கேளுங்க”
“உங்களுக்கு நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி பிரிச்சிக் குடுத்தாங்ளா?”
“ஆமா. நாலஞ்சி சங்கங்களோட வேலை செய்யச் சொல்லி, எனக்குப் பிரிச்சுக் கொடுத்தது உண்மைதான்”
சொல்லிக் கொண்டிருக்கும் போதேவும், “கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க, கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க”
பதற்றம் பற்றிக் கொள்கின்றது. அதற்குப் பின் ஒரே சீர்கேடான சூழல்தான்.
0o0o0o0o0o
செயலரின் செயல் அநாகரிகமானது. குழுத்தலைவரின் செயல் அதைக்காட்டிலும் தரம் தாழ்ந்தது. ஏனென்றால் இது காணொலிக் கூட்டம். வீட்டில் பெரிய பெரிய திரைகளில் குடும்பத்தினர் பார்க்க நிகழ்ச்சியைப் பார்ப்போர் உண்டு. பொறுப்பில் இருப்பவர்களே பண்பாடற்ற முறையில் நடந்து கொள்வது ஒப்புக் கொள்ள முடியாதவொன்று. கழிசடைத்தனத்தைக் கழிசடைத்தனம் என்றாவது ஒப்புக் கொள்ள வேண்டுமென ஒரு குழுவில் பதிவிட்டேன். அவ்வளவுதான். நிர்வாகக் குழுவைச் சார்ந்த 5 அல்லது 6 பேர், EST - PST, அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருப்பவர்கள், ஒரே நேரத்தில், ஆளுக்காள் ஒரு திசையில் இழுத்துக் கொண்டிருந்தனர். நான் நிதானமாகவே இருந்தேன். குழுவிலும் அவர்கள் செயற்பட்டவிதம் காடைத்தனமாகவே இருந்தது. அதற்கிடையே எழுதியதுதான் இது. இருந்தும் பயனளிக்காமல் போகவே கடைசியில் நாமும் இறங்கி அடிக்க வேண்டி ஆயிற்று என்பது தனிக்கதை.
0o0o0o0o0o
எதுவொன்றையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். குழுவில் அண்மையில் நடந்த ஒரு அலை(flare-up) பார்த்தோம். இந்நிகழ்வையும் நாம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும். எப்படி?
கதையில் நல்லகதை கெட்டகதை என்பதே இல்லை. ஒருகதையில் இப்படியெல்லாம் இருக்கக் கூடாதென்பதைக் கற்றுக் கொள்கின்றோம். இன்னொரு கதையில் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமெனக் கற்றுக் கொள்கின்றோம். இதுவும் அப்படித்தான். ஒரு பாடம் பயில்வதற்கான ஒன்று, case study.
ஏதோவொரு நிறுவனம். ஒரு பொருளை விற்கின்றது. சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை அல்லது கருத்து. அது நிறுவனத்தின் வணிகத்திற்கு உகந்ததாக இல்லை. என்ன செய்வர்? social media situation management’க்கு தன்னியக்கமாக இருக்கின்ற ஒரு செயலியில் இருந்து அறிவுறுத்தல் செல்லும். உடனே மக்கள் தொடர்புத் துறை களத்தில் இறங்கும்.
அங்கீகரிக்கப்பட்டவர் உடனே அந்தக் கருத்தாளர், பயனரைத் தொடர்பு கொண்டு நயமாகப் பேசி, கருத்துக்கு நன்றி சொல்வார். நேரம் ஒதுக்கிக் கருத்துச் சொன்னமைக்காக கூப்பன், அல்லது பரிசுப் பொருள், இலவசசேவை என ஏதாகிலும் ஒன்றைக் கொடுப்பர். மேலும் அந்தக் கருத்து ஏன் எழுந்தது, அதில் மேம்பாட்டுக்கான பற்றியம் ஏதாகிலும் உள்ளதா முதலானவற்றை உள்வாங்கிக் கொள்வர். சந்தடி சாக்கில், நல்ல கருத்து, ஆனால் அந்தச் சொல், அந்தவரியை நீங்கள் சீரமைத்தால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் அந்த வாய்ப்பை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வர். இது நிறுவனத்தின் பார்வையில்.
பயனரின் பார்வையில், அவர் அந்தக் கருத்தை நீக்கி விட வாய்ப்புகள் அதிகம். கூடவே அவர் அந்தப் பொருளைப் பற்றி நல்லவிதமாகப் பேசவும் விழைவார்.
2008/2009 வாக்கில் பேரவைப் பக்கமே எவரும் வர மாட்டார்கள். பயங்கரவாத அமைப்பு என்றெல்லாம் பேச்சாகி, வர அச்சம். இணையத்தில் நாங்களெல்லாம் அப்படிச் சொல்பவர்களைச் சாடுவதில்லை. மாறாகத் தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவோம்.
அப்போதெல்லாம் இப்போது போலத் தொலைக்காட்சிகள் இல்லை. யுடியூப்கள் இல்லை. சன், ஜெயா, ராஜ், மக்கள் தொலைக்காட்சி மட்டுமே. மக்கள் தொலைக்காட்சியில் மட்டும், விழாவுக்கு வந்து சென்றோர் பலர் பேரவை குறித்துப் பேசியதை நான் கண்டிருக்கின்றேன். ஆனால் அதற்குப் பயனர்கள் குறைவு. எனக்குத் தெரிந்து, ஜெயா தொலைக்காட்சியில் பேரவை குறித்துத் தனிநிகழ்ச்சியாக அமைந்தது நான் கொடுத்த நிகழ்ச்சிதான். அதற்குப் பிறகு தமிழ்மணம் வாயிலாகப் பலர் பேரவையின்பால் நாட்டம் கொண்டனர்.
என்னைக் காட்டிலும் பலர் பேரவைக்காக இந்த சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நான் கற்றுக் கொண்டவை நிறைய. ஒருநாளும் இப்படிக் குழுவாகப் போய் கருத்தாளர்களைக் கையாண்டதில்லை.
-பழமைபேசி.

8/26/2023

What is mob mentality?

Once entering a group, deindividualization and the loss of self awareness can occur. This ultimately results in people thinking as a group rather than as individual and is known as mob mentality. Though mob mentality can be helpful, it is often detrimental.

பரவலாகத் தமிழ் அமைப்புகளில் இப்படியான கலாச்சாரம் ஏற்பட்டு விடுவதைக் காணலாம்.  பேச்சில் கவர்ச்சி, சாதி, பணம் என ஏதாகிலும் ஒன்றில் மிடுக்காக இருப்பார். அவருக்குச் சிலபல நண்பர்கள். அதே சங்கத்தில் வேறொரு குழு. சன்னமாக எதிர் புதிர். ஒரு இன்னொரு குழுவைக் கலாய்க்கும். அதிலொரு இன்பம். கொஞ்சம் கொஞ்சமாக அது உள்ளிழுத்துக் கொள்ளும். சுயசிந்தனை அற்றுப் போகும்.  

இப்படியான சூழல் இளைஞர்கள், குடும்பங்களின் நலனைப் பதம் பார்த்து விடுகின்றது. அண்மையில்தாம் நண்பர் தம் மனைவியை இழந்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளாகவும் தமிழ்ப்பள்ளி, சங்கம் என இருந்திருக்கின்றனர் இணையர் இருவருமே. குழந்தைகள் அவர்கள்பாட்டில். இன்று அம்மையார் தவறிவிட்டார். அவர் சொன்னதிலிருந்து, “தப்புப்பண்ணிட்டேன் பழமை, வேலை, சங்கம், ஸ்கூல், அக்கப்போர்”னே இருந்துட்டேன்.

Your digital footprints speak volumes than your cv. இஃகிஃகி, நான் தமிழ்ச்சங்கச் சூழல்களில் கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளாக இருந்து வருகின்றேன். சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும். சுவடுகள் எங்கோ படியெடுக்கப்பட்டுக் கொண்டேவும் இருக்கும். அவை நமக்கே எதிராகவும் திரும்பக் கூடும். காட்டமாக எழுதுகின்றோம்தான்.  அதைச் சிந்தைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். உள்வாங்கிக் கொள்ளாமலே புறம் பேசுவது என்பது அவரவர் விருப்பம்.

இயன்றமட்டிலும் மனதறிந்து நேர்மையாக இருந்து விடுவது.  கூட்டுக்குழுச் சுழலுக்குள் அகப்பட்டுக் கொள்வதில்லை. வாழ்க்கை என்பதே பயணம்தானே? எப்படியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது முக்கியம். எவ்வளவு வேகம், உயரம் என்பதல்லவே!!

-பழமைபேசி. 08/26/2023.