10/22/2024

மிச்சர்கடை

ஊருக்குப் போயிருந்த வேளையது. பல்லடம் லட்சுமி மில் அருகே உறவினரைப் பார்க்கச் செல்ல வேண்டும். திருச்சிசாலை நெருக்கடி. சூலூர் கலங்கல் ரோடு சந்தியில் இருக்கும் கடைக்கு வந்து சேர்வதற்குள் தாவு தீர்ந்து விட்டது. வருவதாகச் சொன்ன நேரம் மாலை 6 மணி. ஆனால் தற்போது மணி 6.45. பலகாரக்கடைக்குள் சென்று அது வேண்டும், இது வேண்டுமெனக் கேட்டு பணம் செலுத்தும் இடம் சென்றோம். ஓரிருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர். ஒதுங்கி நின்றோம். மீண்டும் ஓரிருவர். சன்னமாகக் குரல் எழுப்பினோம். “சார், கொஞ்ச இருங்க. நாங்களே கூப்பிடுறம் சார்”.

சிலமணித்துளிகள். நமக்கு பல்லடம் லட்சுமிமில், உறவினர்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போகின்றனர். “என்னுங்க இதூ? நான் நின்னுகிட்டே இருக்கன். நீங்க எனுக்கு பில் போட மாட்றீங்க. வர்றவங்களுக்கே போட்டுகினு இருக்கீங்க?”

கடையை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த பார்ட்டி ஒன்று திரும்பி வந்து, “ஏன், நாங்கல்லா மனுசருக இல்லையா? அதறா புதறா, வசவுகள்”

கடைக்காரர், மேலாளர் அல்லது உரிமையாளராக இருக்க வேண்டும். “சார், அதுக்குத்தான் நான் சொன்னது. நீங்க வாங்க சார்” என தனியே அழைத்துப் போய், சகல மரியாதைகளுடன் அனுப்பி வைத்தார்.

வெளியில் வந்ததுதான் தாமதம். பார்ட்டி, மேலும் பல வசவுகளுடன் நம்முடன் மல்லுக்கு நிற்கின்றது. அண்ணன் மகன், இளம் வயது, துள்ளுகின்றார். எனக்கோ செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றாக வேண்டுமேயென்கின்ற கவலை. அவர்தான் வண்டி ஓட்ட வேண்டும். வசவுகளைக் கேட்டு நமக்கும் இரத்தம் கொதிக்கின்றதுதான்.

அண்ணன் மகன் மிகவும் வலுவானவர். நாம் மட்டும் உடல்மொழியைச் சற்றுத் தளர்த்தி இருந்தால் போதும். பெரும் கலவரமே மூண்டிருக்கும்.

வீடியோவில் பிடிக்கப்படுவது நாம் மட்டுமாக இருப்பின், இலட்சுமிமில்லுக்கு மாற்றாக கோவை மத்திய சிறைச்சாலை என்பதாகவும் இருக்கலாம். தவறு நம்முடையதுதான். அது 100கி மிச்சருக்காக பலர் வந்து போகும் தாகசாந்தி வேளை. கடைக்காரர் சொல்லியதைப் புரிந்து கொள்ளாமaல் அவருடன் மற்போர் செய்தமை நம் தவறுதான்.

உள் இருந்தாருக்கே தெரியும் உள் வருத்தம். இழுத்துக் கட்ட வேண்டியதை இழுத்துக் கட்ட வேண்டும். விட்டுப் பிடிக்க வேண்டியதை விட்டுப் பிடிக்க வேண்டும். Beware of social media.

"You're only one video away from going viral and changing your life". -Jake Paul

10/08/2024

கடைசிக்காலாண்டுச் செயற்பட்டியல்

ஐந்தறைப் பெட்டி என்பதைத்தான் அஞ்சறைப்பெட்டி, அஞ்சலப்பெட்டி என்கின்றோம். அது போலத்தான் நான்கறைப் பெட்டியில் நான்காவது அறைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அதாவது, ஆண்டின் நான்காவது காலாண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். ஆண்டின் கடைசி மாதங்கள் எனவும் கொள்ளலாம். ஆகவே அதற்கேவுரிய செயற்பட்டியலை நோட்டமிட்டுக் கொள்வதும் தேவையானதாக உள்ளது.

Use Up Your Flexible Spending Account Funds

வருமானவரிக்கழிவு இல்லாப் பற்று(flexible spending account) என்பது use it or lose it. அந்தக் கணக்கு இருந்தால், $640 மட்டுமே(check with your provider) அடுத்த ஆண்டுக்குக் கடத்த முடியும். ஆகவே எஞ்சிய தொகையைப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

Dental Insurance

பல்மராமத்து. ஆண்டுக்கு இவ்வளவென வரம்பு இருக்கும். எடுத்துக்காட்டாக $2500 என வைத்துக் கொள்ளுங்கள். சில பல வேலைகள் $3500 கூட ஆகும். ஆகவே இந்த காலகட்டம் உசிதமானது. நவம்பர், டிசம்பரில் $2500, மீண்டும் புத்தாண்டில் அடுத்த $2500 வரம்புக்கு வந்துவிடுவோம். ஆக, $5000 வரையிலான மராமத்து கைக்காசு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

Health Insurance

மருத்துவக்காப்பீட்டில் எஞ்சி இருக்கும் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வது. ஆண்டுக்கொரு பிசிக்கல்செக்கப் கட்டணமில்லாப் பயன்பாடு. மேலும் சில பல சோதனைகள் இப்ப செய்தா, அவுட் ஆஃப் பாக்கெட் வரம்பு கடந்த நிலையில் கட்டணமில்லை. ஆகவே அது குறித்து நாட்டம் கொள்ளலாம்.

Vision Insurance

எஞ்சிய பயனீடுகளைப் பயன்படுத்திக் கொள்வது. ஒரு சில காப்பீடுகளில் ஈராண்டுக்கொருமுறை கட்டணமில்லாக் கண்ணாடி கொடுப்பர். அதனைப் பெற்றுக் கொள்ளலாம். வரம்புக்குள் ஆகும் கண்பரிசோதனைக்கான செலவீனங்களைச் செய்து கொள்ளலாம். பேசிக்கலி, காற்றில் வெண்ணெய் எடுப்பது. உங்க விஷன் காப்பீட்டினை எப்படிப் பாவிப்பது? பில்லிங்ல கவனம் செலுத்தணும். இஃகிஃகி

Benefit used on contacts:
Glasses $318 - 30% discount = $222.60
Contacts $135 - $150 benefit = free
Total $222.60

Benefit used on glasses:
Glasses $318 - $150 benefit = $168
Contacts $135 out of pocket
Total $303

Look for Ways to Maximize Your Tax Refund

வருமானவரிச் சலுகை பெற சிலபல வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, வீட்டில் பயன்பாடற்ற பொருட்களைக் கொடையளித்துச் சான்று பெற்றுக் கொள்தல் போன்றவை. வருமானவரியில் கழிவு கொடுக்கும் முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்துதல் முதலானவை. May want to review Roth IRA, ‘Employee' Retirement Plan Contributions, Max Out 529s, ESAs, ABLEs, and UTMAs, Get Free Annual, Credit Reports, Accelerate Expenses, Delay Income, Change Withholdings, Tax-Loss Harvest etc

Get Insurance in Place

உற்றார் உறவினர்கள் தங்கள் வருமானத்தை நம்பி இருப்பின், If a child, a spouse, a life partner, or a parent depends on you and your income, you need life insurance. அதற்கான கூட்டலும் பெருக்கலும் மீளாய்வு செய்து கொள்ளலாம்.

Review Your Will

உசுலு, உயிலு. “By failing to prepare, you are preparing to fail.” — Benjamin Franklin. யாருக்கும் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நமக்குப் பிறகு, நம் சுவடுகள் எப்படி இருக்கப் போகின்றன? நம் லெகசி என்ன?? எல்லாம் நாம் எழுதி வைக்கும் உயிலைப் பொறுத்தே அமைகின்றது. தடங்கல், தடுமாற்றங்களின்றிக் குடும்பம் பயணிப்பதே நம் சுவடாக இருக்க வேண்டும். அதுதான் நம் வாழ்வின் பயன். கல்லூரி செல்லும் குழந்தைகளிடம் மருத்துவ பவர் ஆஃப் அட்டர்னி முதற்கொண்டு எல்லாமும் வாங்கி வைக்க வேண்டும். அல்லாவிடில், நம்மால் அவரது மருத்துவரிடம் எதுவும் கேட்டுப் பெற இயலாது.

Passports, Visa, Driving License

குறிப்பாக, குழந்தைகளுடையவை காலாவதி ஆகக் கூடும். பத்தாம் வகுப்பில் இருக்கும் போதேவும் ஓட்டுநர் உரிமத்துக்கான செயற்பாடுகள் துவக்கப்பட்டால், பின்னாளில் அவர்களுக்கான காப்பீட்டில் பெரிய அளவு பயன் அமையும். அவர்கள் 21 வயதினை அடையும் போது, பெற்றோர்களின் காப்பீட்டுவழி 3 ஆண்டுகளைக் கடந்திருப்பர். அவர்களுக்காகத் தனி வண்டி வாங்கும் போது, அது பெரியதொரு சேமிப்புக்கு வழிவகுக்கும்.

Switch ceiling fan direction, clockwise direction

வெப்பக் காற்றினை கீழே தள்ளும். குளிர்காலத்திற்கு ஏதுவாய் இருக்கும்.

Protect Backflow valves

உறைந்து விரிசல் விட்டுவிடாதபடிக்கு உறை போட்டு விட வேண்டும்.

ஊசி ஏறாமல் சரடு ஏறாது. இந்தவாக்கில் சிந்தியுங்கள், கலந்துரையாடுங்கள், மேன்மை பிறக்கும். இஃகிஃகி. திருப்பிப் போடாத வறட்டி லேசில் காயுமா?

-பழமைபேசி.

9/15/2024

ஃபெட்னா - பொருளாளர் பொறுப்பு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேர்தல் இடம் பெற்றது. தேர்தலில் ஓர் அணிக்கு ஆதரவாக பரப்புரைக்கான உள்ளீடுகள் எழுதுவதில் நானும் பங்கு கொண்டேன் என்பது யாவரும் அறிந்ததும் வெளிப்படையானதுமான ஒன்று. எழுதுவதற்கும், வெளிக்கொணர்வதற்குமான பற்றியங்கள் நிறைய இருந்தன. அப்போதே சொல்லியிருந்தேன், கனடியர் பொருளாளர் பொறுப்பு வகிப்பதில் எவ்விதச் சிக்கலுமில்லையென. குறுகிய நேரத்தில் எத்தனை பற்றியங்களைத்தான் வெளிக்கொணர்வது? அதுகுறித்து விரிவாக எழுதக் கால அவகாசம் வாய்த்திருக்கவில்லை.

பரப்புரையின் போது, பொருளாளர் பொறுப்புக்குப் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் குறித்து உண்மைக்குப் புறம்பான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கனடியவாசி ஒருவரால் அமெரிக்காவில் இருக்கும் அமைப்பின் பொருளாளராகத் தொடர்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதென. இப்படிச் சொல்வதில் இருவேறு அநியாயங்கள் உள்ளன.

முதலாவது, அமைப்பின் சட்டக்கோப்பில் போட்டியிடுவதற்கான உரிமைகள் கொடுக்கப்பட்டும், போட்டியிடும் வேட்பாளரின் இருப்பிடம் கொண்டு ஒதுக்கிப் பார்த்து பாரபட்சம் காண்பிப்பது. அடுத்தது, உண்மைக்குப் புறம்பாக இட்டுக்கட்டி ஊழலுக்குத் துணை போவது. எப்படியெனப் பார்க்கலாம்.

இலாபநோக்கற்ற, வரிவிலக்குப் பெற்ற நிறுவனத்துக்கென சில ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும் வங்கிக் கணக்குத் துவக்கப்பட. நிறுவனத்தின் ஒன்றிய அரசுக்குறியீட்டு எண், முகவரி, சட்டக்கோப்பு, இயக்குநர்களால் அலுவலருக்கு அங்கீகாரமளிக்கப்பட்ட சான்று, அலுவலரின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் பொருட்டு இருவேறு அடையாளச்சான்றுகள், அவ்வளவுதான். https://donorbox.org/nonprofit-blog/nonprofit-banking. இதன் அடிப்படையில் உசபெக்கிஸ்தான், உகாண்டா என எங்கிருந்தும் அந்நாட்டுக்குடிமகரால் ஒரு நிறுவனத்தின் வங்கிக்கணக்குப் பராமரிப்பாளராகச் செயற்பட முடியும்.

தற்போதெல்லாம் இணையவழியில் பணப்பரிவர்த்தனை நிகழ்வதால், இணையவழிக் கணக்கு, அதற்கான காப்புஎண் பெறல் என்பதும் தேவையாக இருக்கின்றது. அதன்படிக்கு அவரவர் அலைபேசிக்கு கடவுச்சொல் அனுப்பப் பெற்று, உள்புகல் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டு எண்ணாக இருந்தால், அமெரிக்க வங்கிகளுக்கு அலைபேசிக் கட்டணம் செலுத்த நேரிடும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும்போது. ஆகவே வங்கிகள் உள்ளூர் அலைபேசி எண்ணைக் கேட்கின்றன. இது இணையகாலம், உலகமயமான உலகம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான கால்சென்ட்டர்கள் அமெரிக்க எண்களினூடாக என்பதெல்லாம் அறதப்பழைய விசியம். ஆமாம், உகாண்டா முகவரி கொடுத்து, உகாண்டாவிலிருந்து கொண்டேவும் அமெரிக்க அலைபேசி எண் பெறமுடியும். https://justcall.io/blog/how-to-get-us-phone-number.html

தேர்தல் முடிந்து விட்டது. வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று(~60%) ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்று, பொறுப்புமாற்றுப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன.

அதிகாரவர்க்கத்தின், ஆதிக்கசக்திகளின் தீண்டல்கள் ஓய்ந்தபாடில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு மேல் தகவல்களாக ஏதாவது ஒன்றினை அரைகுறையாக முன்வைத்து, பொறுப்புமாற்றுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றன சில சக்திகள்.

முன்னெப்போதும் இல்லாதபடிக்கு 40 நாட்களுக்குள், பொருளாளருக்கான வங்கிக்கணக்குகள் முறையாக, புதிதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற கனடியக்குடிமகரும் பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றவருமான அலுவலர்வசம் வந்து சேர்ந்திருக்கின்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருந்தும், மக்களால் மக்களாட்சிக் கொள்கைப்படிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களை இயங்கவிடாமற்செய்யும் இச்சக்திகளின் அடிப்படை என்ன? அதிகாரவெறி, புகழ்வெளிச்ச அடிமைத்தனம், கடந்தகாலத்தில் செய்யப்பட்ட ஊழல்கள் ஏதேனுமிருப்பின் அவை வெளிப்பட்டுவிடுமோயென்கின்ற அச்சவுணர்வு போன்றவையாகத்தான் இருக்க முடியும். எளியமக்கள் பொதுப்பணியாற்றக் கூடாதாயென்ன? அறத்துக்கு உறுதுணையாய் இருங்கள். அல்லாவிடில், நாளையோ, நாளைமறுநாளோ, பாதிக்கப்படப்போவது நீங்களாகவும் இருக்கலாம்.

-பழமைபேசி, செப் 15, 2024.

8/29/2024

கலை இலக்கியக் கூட்டம்

பிள்ளைகளுக்கு மாலை 7 - 9, வயலின் வகுப்பு. சார்லட்டில் கடுமையான, இலையுதிர்கால மாசுப்பொழிவு, அதன் காரணம் தும்மல் என நெருக்கடியில் இருந்தேன். இருப்பினும், இந்நிகழ்வைக் கண்டே ஆகவேண்டுமென்பதில் உறுதியாக இருந்து, பங்கெடுக்கும் வாய்ப்பும் அமைந்தது.

மரபிசையில் இளங்கலை, நிகழ்த்துகலையில் முதுகலை, மக்களிசையில் ஆய்வு செய்து முனைவர், இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியவர் எனப் பன்முகம் கொண்ட கலைமாமணி ஜெயமூர்த்தி அவர்களின் உரை கேட்பதில் ஆவல். நண்பர், தோழர், எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் ‘நவீன இலக்கியம்’ குறித்து என்னதான் சொல்லப் போகின்றாரெனும் எதிர்பார்ப்பு ஆகியன வீண் போகவில்லைதான்.

இருப்பினும் சற்று ஏமாற்றம். மக்களிசைப் பாடகரின் பேச்சு சட்டென முடிந்து விட்டது. ஆழ்ந்த உரைக்குள் அவர் சென்றிருக்கவேயில்லை. ஆனாலும் அவரின் குறுகிய நேரப் பேச்சு, பாடல், தென்றல் வருடிச் சென்றது போல இருந்தது.

எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் சொன்ன சந்தோஷ் ஏச்சிக்கானம் அவர்களின் பிரியாணி எனும் கதை, தொடர்ந்து இடம் பெற்ற உரையாடல் நன்றாக இருந்தது. எல்லாரும் எல்லாருடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் உரையாடல் இடம் பெற வேண்டும். அப்போதுதான் யோசிக்கத் தலைப்படுவோம். 

‘நவீன இலக்கியம்’ என்பதே ஆற்று நீரைப் போன்றதொரு சொல்லாடல்தாம். அதற்கென, நிலையான, ஓர் உரு, வண்ணம் போன்றவை கிடையாது. வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஒப்பீடாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான். தற்கால இலக்கியம் எனப் புரிந்து கொள்ளலாம். 2010இல் இருந்த தற்காலம் வேறு, 2024இல் இருக்கும் தற்காலம் வேறு. காலத்துக்கொப்ப, அந்தந்தக்காலத்தின் மதிப்பீடுகளை, கூறுகளை, பயனீடுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள, அவ்வப்போதைய, சமகாலத்தியப் படைப்புகள் தேவையாக இருக்கின்றன என்பதான புரிதலை, மீண்டுமொருமுறை ஏற்படுத்திக் கொண்டாயிற்று.

தொகுத்தளித்த முனைவர் அருள்ஜோதி அவர்களுக்கும் பேரவைச் செயற்குழுவுக்கும் நன்றி. செயற்குழுவினர் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும். நன்றி.

https://www.youtube.com/live/TbGzMsw0smk?si=tDN5d-hqjrVSKa47

பழமைபேசி.

7/14/2024

கசடுகள் கழியும் கதைகளாலே!


சேன் ஆண்ட்டேனியோ பயணச்சீட்டுப் பெற்றதுமே நண்பர்களுக்குத் தெரியப்படுத்தியதும், நாமெல்லாம் சேர்ந்து ஒரு கூட்டம் போட வேண்டுமெனக் கூறினர். உடனே ஒருவர் சொன்னார், பொழுது சாய்ந்தவுடன் விடிய விடியக் கூட்டம்தானே என்றார். இஃகிஃகி. “அதில்லப்பா, ஒரு பேரலல் செஷன் போட்ணுமப்பா” என்றார் மற்றவர்.

சற்றுநேரத்துக்கெல்லாம் செய்தியோடு வந்தார் நண்பர், “எல்லாம் புக் ஆகிருச்சுப்பா, இருந்தாலும் பார்க்கிறம்னு சொல்லி இருக்காங்க”. மறந்து விட்டிருந்தோம். மீண்டும் பேச்சு. மீண்டும் கைவிடப்பட்ட நிலை.
ஊர் போய்ச் சேர்ந்ததும், நண்பர் விட்டாரில்லை. மேரியாட் வளாகத்திலயாவது போடலாமென்றார். மற்றொரு நண்பர், அங்கிருந்து இங்குவர வெகுதொலைவு நடந்து வர வேண்டும், அங்கேயே கேட்டுப் பார்க்கின்றேனென்றார். 

மாலை வேளையில் சொன்னார், இதுதான் அறை எண், பிற்பகல் 1 மணியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாமென்றார்.

நண்பர் செளந்தர் மிகவும் ஆவலாய் இருந்தார். நானோ நடந்து நடந்து களைப்புற்றிருந்தேன். தலைப்பு கேட்டார். பலதும் நினைவுக்கு வந்தன. ஆனால், அதற்காக ஆயப்படுத்துவதற்கான கால அவகாசம் இருந்திருக்கவில்லை. ஆகவே, மூன்று ஆண்டுகட்கு முன்னம், கனெக்டிக்கெட் தமிழ்ச்சங்கத்தில் பேசிய அதே தலைப்பைக் கொடுத்து விட்டேன். அதுதான், “கசடுகள் கழியும் கதைகளாலே!”. நல்ல வரவேற்புக் கிடைத்தது.




7/11/2024

பெருங்கூடம்

 

2024 பேரவை விழாவின் முதன்மை அரங்கம் கிட்டத்தட்ட 2660 பேர் அமரக்கூடியதென மாநாட்டு அரங்கு ஆவணம் சொல்கின்றது. நான் தனிப்பட்ட முறையில் கவனித்த வரையிலும், முதல்நாள் மரபுக்கலை நிகழ்ச்சிகளின் போது, இரவு 9 மணியளவில் தோராயமாக 1200 பேரும், இரண்டாம் நாள் மெல்லிசையின் போது தோராயமாக 2200 பேரும் இருந்திருக்கலாமென்பது கணிப்பு. இவையிரண்டு தவிர, பகற்பொழுதில் இடையில் எதற்கோ அந்தப்பக்கம் சென்றிருந்த போது, மேடையில் ஏதோ இடம் பெற்றுக் கொண்டிருந்தது. அது என்னவென்றே கருதாமல் ஒரு 25, 25 பேர் உள்ளே இருந்தனர்.

தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான வாட்சாப் குரூப்பில் இடம்பெற்ற உரையாடலின்படிக்கு, தமிழிசை நிகழ்ச்சியின் போது 60-80, கவியரங்கத்தின் போது 80-100, பட்டிமன்றத்தின் போது 300 பேரும் பார்வையாளர்களாக இருந்திருக்கலாம்.

நம்மிடம் பேசிய தமிழ்நாட்டு விருந்திநர் சொன்னது, எனக்கு தொழில்முனைவோர் மாநாட்டின் போது வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து, வெறும் பத்தே பேர் இருக்க முதன்மை அரங்கில் பேசவைத்துவிட்டனரென அகங்கலாய்த்துக் கொண்டார். சரி, ஏன் இந்த நிலை. நம் கருத்துகள் கீழே வருமாறு:

1. விமானநிலைய முனையம் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அதையொத்த வளாகம்தான் இது. அதை நினைக்கும் போதேவும் பிரமாண்டமாக இருக்கின்றது. ஒருகோடியிலிருந்து மறுகோடிக்குச் செல்லவேண்டுமென நினைத்தாலே அலுப்புத் தோன்றும்.  உளநிலை முதற்காரணம்.

2. சாப்பாட்டுக்கு பேருந்தில் பிறிதொரு இடத்துக்குச் செல்ல வேண்டும். மூன்றாம் தளத்திலிருந்து வெளிவாயிலுக்கு சும்மா வந்தாலே சற்று தொலைவு நடந்துதான் வந்தாக வேண்டும். வந்ததும் வரிசையில் நிற்க வேண்டும். வாய்ப்புக் கிட்டியதும் பேருந்தில் ஏற வேண்டும். இடம் சென்று சேர்ந்ததும் இறங்கி வரிசையில் நிற்க வேண்டும். வெயில். உணவுக்கூடம், சிற்சிறு கூடங்கள். கதவுக்கு வெளியில் வரிசையாக நிற்பதற்கு மாறாக உள்ளேயே நிற்க வேண்டும். இப்படி ஒருவேளைச் சாப்பாட்டுக்கே சராசரி 2 மணி நேரம் செலவிட வேண்டும்.

3. நிறைய இணையமர்வுகள். அவற்றுக்கும், ஆள்பிடிப்பு வேலைகளெல்லாம் கூட நடந்தன. ஆனால் சிலவற்றுக்கு இயல்பாகவே நல்ல கூட்டம். அதாவது ஓரிரு கூட்டங்களுக்கு 200 பேர் வரையிலும். இஃகிஃகி, அதிகாரமையத்தின் ஆசிபெற்ற விருந்திநர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கூட்டம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளப்பட்டதும் நடந்தது.

4. எந்த அரங்கிலும் நெடுநேரம் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாது. உடல் சோர்ந்துவிடும். காரணம், இருக்கைகள் அப்படி. கைதாங்குச்சட்டங்கள் இல்லாத குறுகிய இருக்கைகள். சமதள இருக்கைகள். இப்படிப் பலகாரணங்கள்.

5. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறாதது. முதன்மை அரங்கின் நிகழ்ச்சிகளை வணிகவாளாகத்தில், இரண்டாவது, முதற்தளத்தில் நேரலை ஒளிபரப்புச் செய்திருக்கலாம். நான் அவ்வப்போது பேசுபுக்கில் பார்த்துக் கொண்டேன். அதுவும் சில நேரம் இருக்கும். பலநேரங்களில் இருக்காது.

2018 துவக்கம், பிரமாண்டம், மில்லியன் டாலர் விழாக்கள், அது, இதுவென ஊதி ஊதிப் பெருக்கி ஓய்த்துவிட்டதாகத்தான் நான் கருதுகின்றேன். 12 ஆண்டுகட்குப் பிறகு கலந்துகொண்டவன் நான். சாமான்யவர்க்கத்துக்கும் அதிகார மேல்தட்டு வர்க்கத்துக்குமான வேறுபாடாகத்தான் இதைக் கருதுகின்றேன். சாமான்யன் என்ன நினைப்பான்? வந்தவர்கள் சாப்பிட்டார்களா? நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள் மகிழ்வா? கவியரங்கத்துக்குக் கூட்டமா?? இப்படியான சாமான்யத்தனம்தான் மேலோங்கும். தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலே கூட ஆயிரம், ரெண்டாயிரம் பேர் நிகழ்ச்சிகளைக் காணும் காலமிது.  தமிழ்மணத்தில் நேரலை செய்து உலகுக்கே காட்டினோம்! அது ஒருகாலம்!!

#FeTNA2024


7/10/2024

ஆவணப்படுத்தல்





ஆவணம் என்பதை அதன் பரந்த பொருளில் கொண்டால், அது ஒரு சமூகத்தில் வாழ்கின்ற தனி மனிதர்கள், குழுக்கள், அரசு போன்றவர்கள் உருவாக்கும் கடிதங்கள், குறிப்பேடுகள், கையேட்டுக் குறிப்புகள், சான்றிதழ்கள், உரிமைப்பத்திரங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். இன்றைய தேவையை முன்னிட்டுப் பாதுகாக்கப்படும் ஏடுகள், நாளைய தலைமுறைக்கு ஆவணமாக மாறும். எனவே, ஒவ்வொரு தனிமனிதரும் சமூகங்களும் இணைந்து ஆவணப்படுத்தலில் ஈடுபடுவது அவசியமென வலியுறுத்தப்படுகின்றது.

இயன்றவரை, எம்மால், ஆவணப்படுத்தலுக்குத் தொடர்ந்து பங்காற்றி வருகின்றேன். தமிழ்மொழியின் சொற்கள், வட்டாரவழக்கு, சொல்லாடல்கள், சொலவடைகள், தகவல் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். எடுத்துக்காட்டாக, சேவலின் வகைகளைப் படங்களோடு ஆவணப்படுத்தி இருக்கின்றேன். அதற்காக நான் கொண்ட உழைப்பு மிகப் பெரியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்வுகள் குறித்து என்னைக் காட்டிலும் அதிகமாக நானறிந்து எவரும் எழுதியிருக்கவில்லை. பண்பாட்டின் ஒரு கூறு. அதைப்பற்றி எவராவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

பேரவையின் துவக்ககாலத்திலிருந்து விழாக்களுக்கு வந்திருந்த விருந்திநர்கள், சிவாஜி, எம்.எஸ்.விஷ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா உள்ளிட்டோர் பட்டியல் இணையதளத்தில் ஓடுபடமாக ஓடிக் கொண்டே இருந்தன. அதேபோல முந்தைய விழாக்களின் போதான படங்களும். இவையெல்லாம் வரலாற்று ஆவணங்கள்.

அண்மையில் சேன் ஆண்டோனியோவில் நண்பர் ஒருவர் வினவினார், “எப்படி, 2010இலேயே, பின்னாளில் விஜய் மணிவேல் தலைவராக வருவாரெனத் தெரிந்து பேட்டி எடுத்தீர்களா?”. இல்லையென மறுமொழிந்தேன். சொன்னேன், ”நான் விஜய் அவர்களை மட்டும் பேட்டி எடுக்கவில்லை. பேரவைக்காக உழைத்துக் கொண்டிருந்த பலரையும் நேர்காணல் கொண்டு பதிந்தேன். அதில் விஜயும் ஒருவர்”. ஆவணப்படுத்தல் என்பது ஒரு தொடரியக்கம். அவ்வப்போது, அவ்வப்போதையவற்றைப் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாவிடில், வரலாறு, அடையாளங்கள் முதலானவற்றுக்கு ஊறு நேரும். எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு கல்வெட்டு, பத்துவரிகள் கிடைக்கின்றதென வைத்துக் கொள்வோம். ஒட்டுமொத்த வரலாற்றையே அது மாற்றியமைக்க வல்லது.

திருக்குறள், உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றோம். எப்படி? தன்னலம் பாராத ஆயிரமாயிரம் பேர் கொடுத்துச் சென்றிருக்கும் கொடையது. எப்படி? ஓலைச்சுவடிகளில் இருக்கின்றன. அவை நாட்பட நாட்பட நைந்து போகும். ஆகவே ஆங்காங்கே தன்னார்வலர்கள், புரவலர்கள் படியெடுப்பு விழா நடத்துவார்கள். அதாவது ஓர் ஓலையைப் பார்த்து மற்றோர் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு பதிப்பிக்க வேண்டும். அப்படியானவர்களுக்கு மொழியறிவும் எழுத்தறிவும் இருந்தாக வேண்டும். இப்படித் தலைமுறை தலைமுறையாக்த் தரவுகளைக் கடத்தி வந்ததினால்தான் நமக்கு வாய்த்திருக்கின்றது அது.

பழமை, இதை ஏன் இப்போது எழுதுகின்றாய் என்கின்றார்கள். ஏன் எழுதக்கூடாதெனத் திரும்பக் கேட்டேன். ’இல்லை, தேவையற்ற சஞ்சலங்கள்’, அப்படியிப்படியென இழுத்தனர். உண்மைக்குப் புறம்பாக இருந்தால் சுட்டலாம். மாற்றியமைக்கக் கடமைப்பட்டவன். ஆனால் எழுதக்கூடாதென எதிர்பார்ப்பது சரியன்று. எடுத்துக்காட்டாக, ‘அருவி’ எனும் பெயர் சூட்டியவர், பனிமலர், கோடைமலர், இளவேனில்மலர், இலையுதிமலர் என்றெல்லாம் பெயர் கொடுத்து, அச்சுக்குக் கொண்டு போவதெப்படியென்றெல்லாம் செதுக்கியசிற்பி நண்பர் சிவானந்தம். மைக்ரோசாஃப்ட் ப்ராஜக்டில் அதற்கென ஒரு டெம்ப்ளேட் வடிவமைத்து இப்படியிப்படியெல்லாமெனச் செயலாக்கம் செய்தவர் நண்பர் ப்ரிதிவ்ராஜ் சிவராஜ். நண்பர் எழில்வேந்தனும் நானும் வடிவமைத்து அச்சுக்கு அனுப்புவோம். இலக்கியம், சமூகம் சார்ந்த படைப்புகளே அதில் இடம் பிடித்தன. இந்தத் தகவலை நான் பதியாவிட்டால், எவரும் பதியப்போவதில்லை.

”பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!”
-பாரதி

”We're living in an era of unprecedented change, and I want to be a part of documenting it”. -Ron Fournier பதிவதென்பது ஒரு தொடரியக்கம்., பொதுத்தொண்டு. பிழைகள் இருந்தால் சுட்டுங்கள். முடக்க நினைப்பது பத்தாம்பசலித்தனம்.

படம்: பேரவை விழாவில், திரு செந்தில் துரைசாமி அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டது. தம் பெற்றோர் மறைந்து விட்டனர். ஆனால் இந்தப் படம் இருக்கின்றதெனச் சொன்னார். நானும் சொல்லி இருந்திருக்க வேண்டும்; நான் பதிந்ததும் இருக்கின்றதென. https://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_28.html அதிலும், ஆவணப்படுத்துதலே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

-பழமைபேசி, 07/10/2024.



7/02/2024

நூற்றாண்டு விழாக்காணும் கலைஞர் மு.கருணாநிதி

இந்தியாவில் 1956ஆம் ஆண்டு இந்துவாரிசுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, தந்தையும் தாயும் ஈட்டிய சொத்துகளில் அவர்களுக்குப் பிறகு பாலின வேறுபாடின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் உரிமையுண்டு எனப்பட்டது. எனினும், பூர்வீகச் சொத்தில் ஆண் வம்சாவளிக்கு மட்டுமே உரிமை உண்டு. பெண்களுக்கு உரிமை கிடையாது. தமிழ்நாடு மாநிலச் சட்டத்தின் வழியாக அம்மாநில அளவில் பூர்வீகச் சொத்திலும் பெண்களுக்கு உரிமை கிடைக்கும் வகையில், 1989ஆம் ஆண்டில் அம்மாநில முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சட்டத்திருத்தம் கொணர்ந்தார். அதையொட்டி, 2005ஆம் ஆண்டு, இந்தியநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அதேபோல பெண்களுக்கான சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிப்புக்கலைஞர், இதழியலாளர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை எனும் ஊரில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் ஆகியோருக்கு 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர். மாணவப் பருவத்திலேயே செயலாற்றல் மிகுந்து திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் விளங்கினார். அதுவே பின்னாளில் மாநில அளவிலான அமைப்பாகவும் உருப்பெற்றது. இவ்வமைப்புக்கான இதழாக மாணவநேசன் எனும் இதழையும் தோற்றுவித்து நடத்தினார் அதன் தலைவர் கருணாநிதி அவர்கள். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், 1942ஆம் ஆண்டில் முரசொலி இதழையும் தோற்றுவித்து ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

இளம் வயதிலேயே தமிழ்த் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் கதை வசனம் எழுதுவதையும் மேற்கொண்டார். இராஜகுமாரி எனும் திரைப்படம்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுதிய முதற்திரைப்படம், வெளியான ஆண்டு 1947. அவர் கதை வசனம் எழுதி வெளியான முதல்நாடகம் ’பழநியப்பன்’ என்பதாகும்; வெளியான ஆண்டு 1944. இதற்குமுன்னர் உள்ளூரளவில் பல நாடகங்களில் நடித்தும், கதை வசனம் எழுதியும் இருக்கின்றார். ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’ என 21 நாடகங்களை எழுதியுள்ளார். அவர் கதை எழுதிய திரைப்படங்களுள், ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ முதலானவை வெற்றிப் படங்களாக அமைந்ததோடு, தமிழ்ச்சமூகத்தின் சீர்திருத்தப் பாதையில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தபடங்களாகவும் அமைந்தன.

’தூக்குமேடை’ நாடக விளம்பரத்தில் இடம்பெற்ற கருணாநிதி அவர்களை ‘அறிஞர் கருணாநிதி’ எனக் குறிப்பிட்டிருந்தார் சகநடிகரும் நாடகத் தயாரிப்பாளருமான எம்.ஆர்.இராதா அவர்கள். அறிஞர் என்றால், அது தலைவர் அண்ணாத்துரை ஒருவரேயென கருணாநிதி அவர்கள் மறுப்புரைத்துவிடவே, ‘கலைஞர்’ எனக் குறிப்பிட்டு அழைக்கப்படலானார். அன்றுமுதல் ‘கலைஞர்’ என்பதும் ‘கருணாநிதி’ என்பதும் ஒருசொல்போலவே நிலைத்துவிட்டன.

திரைப்படப்பாடல்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அவரால் எழுதப்படாத இலக்கிய வடிவங்களே இல்லையெனும் அளவிற்குப் படைப்புகளை, 178 நூல்களைக் கொடுத்திருக்கின்றார். அவற்றுள், ‘குறளோவியம்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகியன முதன்மையானதும் படைப்புலகில் எவரும் உடனே சொல்லக்கூடிய வகையிலும் புகழ்பெற்றனவாகும்.

தமிழர்கள், தமிழ்நாடு ஆகியவற்றுக்கான அடையாளங்களைக் கட்டமைத்ததில் தனியிடத்தைப் பெற்றவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். நாட்டுப்பண்ணுக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டின் உணவுவழங்கல் நிறுவனத்துக்கு இணையாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சமயச்சார்பற்ற அறநெறி நூலான திருக்குறளுக்கு முக்கியமளித்து வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை என நிறையப் பணிகள் இடம் பிடிக்கின்றன.

தம் பதினேழாவது வயதில் முறையாகத் தம் அரசியல் பணியைத் துவக்கியவர் இந்தியாவின் முக்கிய அரசியல்தலைவராக பரிணமித்தார். தனிப்பட்ட முறையில் தாம் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியைக் கண்டவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, கட்சித் தலைவராகயென நெடியதொரு அரசியல் பயணத்துக்குச் சொந்தக்காரர்; சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்தவரென கருதப்படுபவர்.

பொருளாதாரச் சமுத்துவம், பாலினச்சமுத்துவம் முதலானவற்றுக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயற்படுத்தியவர். தமிழ்நாட்டில், மூன்றாம்பாலின நல வாரியத்தை நிறுவியவர். சமத்துவபுரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். 'உடல் ஊனமுற்றோர்' எனும் சொல்லுக்கு மாற்றாக, 'மாற்றுத்திறனாளிகள்' எனும் சொல்லை அறிமுகப்படுத்தி, அவர்களையும் மற்றவருக்கு இணையாகவும் ஈடாகவும் உள்ளடக்கிய பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் தலைப்பட்டவர்.

உலகளாவிய அளவில் ஏற்படும் சமூகச் சீர்திருத்தங்களைக்கற்று உடனுக்குடனே அவற்றைத் தமிழர்களுக்கிடையேயும் அறிமுகப்படுத்துவதில் துடிப்புமிக்கவராகத் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தம் 94ஆவது வயதில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் ஏழாம் நாள் விடை பெற்றுக் கொண்டவரானார்.

'உடன்பிறப்பே' என விளிக்கும்பாங்கினைத் தனித்துவமாய் அறிமுகப்படுத்திக் கடைபிடித்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், சொற்களினூடாகவும் நல்லபல திட்டங்களின் வழியாகவும் தமிழின் அடையாளங்களைக் கட்டமைத்துத் தமிழின் அடையாளமாகவே ஆகிவிட்டிருக்கின்றார்! உலகெங்கும் அவரது நூற்றாண்டு விழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன; அமெரிக்காவிலும்!!

[நூற்றாண்டு விழா, சமத்துவம் முதலானவற்றை முன்னிறுத்திக் கடைபிடிக்கப்படும் விழாவின் மலரில், காய்தல் உவத்தல் புகழ்ந்தோதலற்ற ஆவணத்தன்மை கொண்டதொரு கட்டுரையாக, முதற்கட்டுரையாக இடம் பெற வேண்டிய அறிமுகக்கட்டுரை இஃது. இஃகிஃகி]

-பழமைபேசி.

7/01/2024

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

-பிரமிள்

நவீனக்கவிதையிலக்கியப் புலத்தில் இதனை வாசித்திராதவர் அரிதுயெனும் அளவுக்கு, எல்லாராலும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கவிதை இது.

உணர்வுக்கவிதைகளைக் காட்டிலும் தத்துவார்த்தக் கவிதைகளே காலத்தால் மங்காதனவாக இருக்கின்றன. இதுவும் அந்த இரகத்தைச் சார்ந்ததுதான்.

பறவைக்கு இரு சிறகுகள். அடித்து அடித்துப் பறக்கின்றது. வால்ப்பகுதியைத் தேவைக்கு ஏற்றவாறு திருப்பியும் வளைத்தும் தாம் செல்ல வேண்டிய திசையை, வேகத்தைத் தீர்மானித்துக் கொள்கின்றது. இம்மூன்றுக்கும் அடிப்படையாக இருப்பன அவற்றுக்குள் இருக்கும் இறகுகள். இப்படியான இறகு ஒன்று, பிரிந்த இறகு ஒன்று, பறவையினின்று பிரிந்த இறகு ஒன்று, காற்றில் அல்லாடி அல்லாடி அங்கிங்கெனதாபடிக்கு அடிக்கப்பட்டுத் தாள இறங்கிக் கொண்டிருக்கையில், காற்றின் தீராத பக்கங்களில், இவ்வெளியில், தீராத இவ்வெளியில் காற்றினால் அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அந்தப் பறவை எங்கெல்லாம் பறந்து உயர்ந்து உயர்ந்து சென்றதோ, அந்த வாழ்வையெல்லாம், தரையைத் தொட்டு மக்கி மண்ணாகிப் போகும் வரையிலும், காற்றுவெளியின் பக்கங்களில், அந்தப் பறவையின் சுகதுக்கங்கள், சூதுவாதுகள், நல்லன தீயன, உயர்வு தாழ்வுகள் என எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறது என்பது நேரடியாக நாம் பொருள் கொள்ளக்கூடியது.

நல்ல கவிதை என்பது நல்லதொரு ஊடகம். ஊடகத்தினூடாக நாம்தான் நமக்கான அகப்பொருளைக் கண்டடைந்தாக வேண்டும்.

’சிறகிலிருந்து உதிர்ந்த இறகு ஒன்று’ என இருக்குமேயாயின் அது இயல்பாக நடக்குமொன்றாகக் கருதியிருப்பேன். ஓர் ஆசிரியர், மருத்துவர், இப்படி எவராகினும் ஒருவர், ஒரு நிறுவனம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றதொரு பறவை உயரே உயரே செல்ல, பயணிக்கத் துணை புரிந்த இறகாக இருந்து, அந்த அனுபவத்தை, கண்டதை, அறிந்து கொண்டதை, ஓய்வுக்குப் பின்னரான காலத்தில், மக்கி மண்ணாகிப் போகும் வரையிலும் சொல்லிச் செல்லும் காவியமெனப் புரிந்து கொண்டிருப்பேன். “பிரிந்த” எனும் சொல்தான் நம்மை இன்னும் ஆழ்ந்து யோசிக்க வைக்கின்றது.

சமூகத்தில் பார்க்கின்றோம். நைச்சியமான பேச்சுகள். உணர்வூட்டுகள். சாதி, சமயம், சினிமா, குழுவாதம், கும்பலிசம், இனவாதம், நிலப்பரப்பு இப்படி ஏதாகிலும் ஓர் ஆயுதம். நிறுவனங்களில் பார்க்கின்றோம். நாமெல்லாம் ஒரு குடும்பம் என்பார்கள். ஒற்றுமையே வலு என்பார்கள். நிறுவனத்தின் சொத்தே நீங்கள்தாம் என்பார்கள். உழைப்புச் சுரண்டலை எங்கும் பார்க்கலாம்.

மூத்தபிள்ளை பிறந்திருந்த நேரம். என்றுமில்லாதபடிக்குப் பனிப்பொழிவு. அலுவலகங்களுக்கு விடுமுறை. முக்கியமான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அலுவலகத்தில். விடிய விடிய வேலை பார்த்த காலமெல்லாம் உண்டு. காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் செல்கின்றேன். எனக்கு முன்பாகவே இயக்குநர் பொறுப்பில் இருக்கும் அம்மையார் வந்திருந்தார். அவர் கேட்ட முதல் வினா, “ஏன் வந்தாய்?”. அதற்குப் பிறகு உட்காரவைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார், சொன்னார், “family first no matter what".

பொன்னான காலத்தைக் காவு கொடுத்து விட்டு, பிரிவுக்கு ஆட்பட்ட பின்னர் புலம்பிக் கொண்டிருப்பர். ’அவசரத்தில கல்யாணம், அவகாசத்துல அழுகை’ என்பார்களே அதைப் போல. கறிவேப்பிலையைப் போலத் தூக்கி வீசி விட்டார்களேயென்பதைப் போல; காற்றின் தீராத பக்கங்களில், வாழ்வின் எஞ்சிய காலம் முழுமைக்கும்! அப்படியான ஒரு துயரத்தைத்தான் நான் இக்கவிதையினூடாகப் புரிந்து கொள்கின்றேன். புரிந்து? மனம் பண்படுகின்றது. நிதானத்தைக் கொடுக்கின்றது. அதுதான் இலக்கியம்.

-பழமைபேசி.

6/29/2024

மற்றும்

விழாமலருக்குப் படைப்புகள் வேண்டிய விளம்பரநறுக்கு, தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான வாட்சாப்குழுமத்தில் காணக்கிடைத்தது. ஏராளமான பிழைகள் இருந்தன. உடனே அவற்றைச் சுட்டிக் காண்பித்து, மா.நன்னன் அவர்களுடைய கட்டுரைகளில் இருந்து சிலவற்றையும் சான்றாகக் கொடுத்திருந்தோம். காரணம், ’மா.நன்னன் நூற்றாண்டு விழா’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது இடம் பெற்ற நாள் மார்ச் மாதம் இரண்டாம் நாள்.

தற்போது 'அருவி' எனும் பெயரில் இதழ் வெளியாகி இருக்கின்றது. படங்களை நீக்கிப் பார்த்தால் ~20 பக்கங்கள் வரலாம். அந்த 20 பக்கங்களில், “மற்றும்” எனும் சொல், 61 முறை இடம் பெற்றிருக்கின்றது. படங்களுக்குள் இருக்கும் “மற்றும்”களைக் கணக்கிலெடுத்தால் இன்னும் கூடுதலாய் வரும். விழாமலரில் எத்தனை முறை அச்சொல் இடம் பெற்றிருக்கப் போகின்றதென்பதைக் காண ஆவலாய் இருக்கின்றேன். இஃகிஃகி.

o0o0o0o0o

‘மற்றும்’ என்னும் சொல் அங்கு தேவையற்றது. ’தேவையற்ற அச்சொல் அங்கு இருப்பதால் அங்கு இருக்க வேண்டிய ஒரு சொல்லுக்கு வாழ்வு போய்விடுகின்றது’ எனக் குறிப்பிட்டிருக்கின்றார் மா.நன்னன். அப்படிப் பறிபோகும் சொற்கள்தாம் எவை?

ஆங்கிலத்திலே, பெயர்களை வரிசையாகச் சொல்லி ’அண்டு’ இட்டுக் குறிப்பதால் அந்த வரிசை அத்தோடு முடிந்ததெனக் கொள்வது மரபு. அதே மரபையொட்டித்தான் இந்த ’மற்றும்’ என்கின்ற பிறமொழிக் கலப்பு தமிழ்மரபையும் சொற்களையும் சிதைக்கின்றது. எப்படி?

மா, பலா, வாழை முதலான பழங்கள் வாங்கி வந்தான் பழமைபேசி. மா, பலா, வாழை உள்ளிட்ட இன்னும் சில(முதலிய) பல பழங்களை வாங்கி வந்தான் எனும் பொருளைக் குறிக்கின்றது இச்சொற்றொடர்.

மா, பலா, வாழை ஆகிய பழங்கள் வாங்கி வந்தான் பழமைபேசி. ’ஆகிய’ எனும் சொல், வரிசைப்பட்டியலை நிறைவு செய்து விடுகின்றது. குறிப்பிடப்பட்டவை மட்டுமே, அதற்கு மேல் எதுவுமில்லை.

மா.நன்னன் அவர்களின் பெயர், அறிவிப்பு நறுக்கில் இடம் பெற்றிருப்பதாலே இதையெல்லாம் நாம் பேச வேண்டியதாயிருக்கின்றது! -பழமைபேசி Dated: March 2, 2024

o0o0o0o0o

"கணக்கு மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடங்களில்‌ அவன்‌ தேறவில்லை".

"திருச்சி மற்றும்‌ தஞசாவூர்‌ மாவட்டங்களில்‌ மழை பெய்திருக்கிறது".

மேற்காணப்பெறும்‌ இரு தொடர்களிலும்‌ பயன்படுத்தப்‌பட்டிருக்கும்‌ 'மற்றும்‌' என்னும்‌ சொல்‌ அங்குத்‌ தேவையற்றது. தேவையற்ற அச்‌சொல்‌ அங்கு இருப்பதால்‌ அங்கு இருக்கவேண்டிய ஒரு சொல்லுக்கு வாழ்வு போய்‌ விடுகிறது. மேலும்‌ தமிழ்‌ மொழியினுடைய ஒரு சிறப்‌பியல்பும்‌ அழிந்து விடுகிறது.

இப்படி எழுதும்‌ வழக்கம்‌ அண்மைக்‌ காலத்தில்‌ தமிழில்‌ மேற்‌கொள்ளப்பட்டு வருவதாகும்‌: இப்‌புதிய வழக்கம்‌ ஏற்பட்டதற்குக்‌ காரணம்‌ நமக்குள்ள ஆங்கிலத்‌ தொடர்புதான்‌. ஆங்கிலத்தில்‌ ’அண்டு’ என்னும்‌ சொல்லைப்‌ பயன்‌படுத்துகிற நாம்‌ அதே முறையில்‌ அச்‌சொல்லை மொழிபெயர்த்து 'மற்றும்‌' என்னும்‌ சொல்லாகத்‌ தமிழில்‌ பயன்படுத்தத்‌ தொடங்கி விட்டோம்‌. இந்த வழக்கம்‌ பண்டைய தமிழ்‌. இலக்கண இலக்கியங்களிலோ, இடைக்‌ கால இலக்கண இலக்கியங்களிலோ, பிற்கால இலக்கண இலக்கியங்களிலோ இல்லை. இக்‌கால இலக்கியங்கள்‌, செய்தித்தாள்கள்‌, இதழ்கள்‌, அலுவலகக்‌ கடிதப்‌ போக்குவரத்துகள்‌ போன்றவற்றில்‌ மட்டுமே இவ்‌வழக்கம்‌ காணப்படுகிறது.

அச்‌சொல்‌ தேவையற்றதாயின்‌ அப்‌பொருளை வேறு எப்படித்‌ தெரிவிக்க முடியுமென்றால்‌, அதற்கு இலக்கிய இலக்கணங்களைத்‌ தேடிப்‌ போக வேண்டியதில்லை. கல்லாத தமிழ்ப்‌ பொது மக்கள்‌ அப்படிப்பட்டவற்றை எப்படிக்‌கூறுகிறார்கள்‌ என்று பார்த்தாலே போதும்‌. சான்றாக அவனும்‌ நானும்‌, நேற்றும்‌ இன்றும்‌, சோறும்‌ குழம்பும்‌ என்பனவற்றைக்‌ காணலாம்‌. மேலும்‌ அவர்கள்‌ 'உம்‌' என்னும்‌ அவ்‌விடைச்‌ சொல்லைப்‌ பயன்‌ படுத்தாமலேயே அத்தகைய தொடர்களின்‌ பொருள்‌ சிறிதும்‌ மாறாமல்‌ வெளிப்படுத்துவதையும்‌ காணலாம்‌.

சான்றாகப்‌ பூரிக்‌ கிழங்கு, இராப்பகல்‌, வம்பு தும்பு போன்றவற்றைக்‌ கூறலாம்‌. இத்‌ தொடர்களில்‌ 'உம்‌' என்னும்‌ இடைச்‌ சொல்‌ இல்லாமலேயே அச்சொல்‌ இருந்தால்‌ அங்கு என்ன பொருள்‌ கிடைக்குமோ அதே பொருளை ஏனைய இரண்டு சொற்களும்‌ சேர்ந்த சேர்க்கைச்‌ சிறப்பால்‌ எளிதாகவும்‌ தெளிவாகவும்‌ ஐயந்‌திரிபறவும்‌ பெற்றுவிட முடிகிறது. ஆகவே "உம்‌: போன்ற இடைச்‌சொற்களைப்‌ பயன்படுத்தியும்‌ அவ்விடைச்‌ சொல்‌ இல்லாமல்‌ வரும்‌ தொடர்களில்‌ தொகை ஆற்றலாலும்‌ பெறப்படும்‌ பொருளை ’மற்றும்‌' என்னும்‌ வேறொரு சொல்லைக்‌ கொண்டு பெற வைக்க முயல்வது தேவைதானா? நல்லதுதானா? என்பதை எல்லோரும்‌ எண்ணிப்‌ பார்க்க வேண்டும்‌. நாம்‌ 'மற்றும்‌” என்னும்‌ சொல்லைத்‌ தொடர்ந்து பயன்படுத்திக்‌ கொண்டிருந்தால்‌ விரைவில்‌, பூரி மற்றும்‌ கிழங்கு, இட்டிலி மற்றும்‌ சட்டினி என்றெல்லாம்‌ கூட பேசவும்‌ எழுதவும்‌ வேண்டி வந்துவிடும்‌. -மா.நன்னன், தவறின்றித் தமிழ் எழுதுவோம், பக்கம் 20.

o0o0o0o0o

We all need people who will give us feedback. That's how we improve. -Bill Gates

-பழமைபேசி.

6/28/2024

பேரின்பம்

அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம்.

அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெளியில் செல்வது போவதென இருப்பர்.

எப்போதாவது ஒருநாள், டாலர் ஸ்டோர்களில் ரெண்டு டாலர், மூன்று டாலருக்கு பையனுக்கு ஏதாவது விளையாட்டுப் பொருள் வாங்கிப் போவேன். அப்படித்தான் ஒருநாள் “கார்” ஒன்று வாங்கிப் போனேன். அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி.

அடுத்தடுத்த வார ஈறுகள் சென்ற போதெல்லாம் கவனித்தேன். அந்த காரின் பெட்டியை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்பாட்டுக்கு. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”. அடுத்தடுத்த வாரங்கள். அந்தப் பெட்டி அடிவாங்கி, அழுக்காகி, நைந்தே போயிருந்தது. “தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள இருக்கு”.

அடுத்தவாரம். சென்றமுறை சிவப்புவண்ணக்கார். இம்முறை நீலவண்ணம் வாங்கிக்கொள்ளலாமென வாங்கிக் கொண்டோம். பிரித்தெடுத்து, காரை பையில் வைத்துக் கொண்டு, பெட்டியை மட்டும் பிரிக்காதபடிக்கு மீண்டும் ஒட்டி, கொண்டு போய்க் கொடுத்தோம். ஒரே சிரிப்பு. ஓடோடி வந்தான். வாங்கி உள்ளே பார்த்தான். தூக்கிவீசி விட்டு, மீண்டும் பழைய பெட்டியையே ஓட்டலானான்.

நமக்குப் படு ஏமாற்றம். அண்ணன் பார்த்துச் சிரித்தார். நான் பையைத் திறந்து, புதுக்காரை வெளியில் எடுத்துக் கொடுத்தேன். அவன் கண்டுகொள்ளவே இல்லை. பெட்டிக்குள் வைத்து, புதிதாய்க் கொடுப்பது போலக் கொடுத்தும் பார்த்தேன். கண்டுகொள்ளவே இல்லை. அந்த வாரத்தங்கல் பெருந்துக்கமாகப் போய்விட்டது நமக்கு. அண்ணன் சொன்னார், “மணி, எடுத்துட்டுப் போயி ரிட்டர்ன்பண்ணிட்டு, ரெண்டொரு வாரம் கழிச்சி வேற எதனா வாங்கியாங்க, செரி ஆயிருவான்”.

ஒருமாதமே ஆகியிருக்கும். மஞ்சள்வண்ணக்கார், பதினைந்து டாலர்களுக்கு, ரிமோட்டுடன், கனடியன் டைர் எனும் கடைக்குச் சென்று தனிக்கவனத்துடன் வாங்கி வந்தேன். மனசெல்லாம் உலுக்கம். என்ன ஆகுமோ ஏது ஆகுமோவென.

“தம்பி, இங்கபாரு, இந்தவாட்டி என்னானு”. அமைதியாகக் கிட்ட வந்தான். கையில் வாங்கி, எடையைக் கணித்தான். உலுக்கினான். உட்கிடை இருப்பதை உணர்ந்து கொண்டான். இந்தப் பெட்டி, பளபளவென உயர்தரத்தில் இருப்பதைக் கவனித்துக் கொண்டான். சமையலறையில் இருக்கும் அவனது அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். சமையலறைக்குள் போனான். வெளியில் வந்தான். பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே, படுக்கையறைக்குள் போனான். “அம்மா, இங்க வாங்க நீங்க”. கொஞ்ச நேரத்தில் முன்னறைக்கு வந்தான், வெறும் பெட்டியோடு. தரையில் ஓட்டுபவன், பக்கவாட்டில் சுவர்களினூடாக ஓட்டினான், ஓட்டினான், ஓட்டிக்கொண்டேவும் இருந்தான். சாப்பிடக் கூப்பிட்டாலும் அவனுக்கு வர விருப்பமில்லாது, ஓயாமல் ஓட்டிக் கொண்டே இருந்தான்.

“தம்பி, கார் எங்கடா?”. “அது வந்து, ரூம்புக்குள்ள பத்திரமா இருக்கு”.

புரியவே இல்லை. “இதென்னுங்ணா இது? புதுக்காரு, இதுக்கும் ரிமோட் காரு, இப்படிப் பண்றானே?”

“அது மணீ, சந்தோசம்ங்றது கார்ல இல்ல. நம்மகிட்டக் கார் இருக்குங்றதுல இருக்கு சந்தோசம். நீங்க வாங்க சாப்ட்லாம்”.

-பழமைபேசி.

6/25/2024

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே


"I have taken more out of alcohol than alcohol has taken out of me" -Winston Churchill

நான் எட்டாம் வகுப்பு அரையாண்டு விடுமுறைக்கு என் பாட்டி ஊருக்குச்(லெட்சுமாபுரம்) சென்றிருந்தேன். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுத் தோட்டத்துக்கு அனுப்பிவிடுவார் பாட்டி. போகும் போது தாத்தாவுக்கு திருகணிச் செம்பில் காப்பி கொண்டு செல்ல வேண்டும். பால்கரந்த பின்னர், இரவுக் காவலுக்காய் தோட்டத்திலேயே தங்கியிருந்த தாத்தா தூக்குப்போசியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார். வீட்டுக்குச் சென்று, குளித்து, சாமிக்குப் பூசனை செய்து, கும்பிட்டுவிட்டு, காலைச்சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு மீண்டும் தோட்டம் வர எப்படியும் காலை 10 மணி ஆகிவிடும். சில நாட்கள் வெளியூர், அல்லது உடுமலைப் பேட்டைச் சந்தையெனக் கிளம்பிவிடுவார். அப்படியான நாளொன்றை முன்கூட்டியே கணித்து வைத்திருந்தோம்.

தோட்டம் என்றால் நமக்கு எல்லாமும் வேலன் அவர்கள்தான். காலை 7 மணிக்கு வந்தால் மாலை 7 மணி வரையிலும் தோட்டத்தில் அருகு தோண்டுதல், தண்ணீர் பாய்ச்சுதல், உரம் வைத்தல், உழவு ஓட்டுதல், எரங்காட்டிலிருந்து மண்ணடித்தல் என ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார். என்னைக் கண்டதும் பரவசமாகிவிடுவார். இன்னதென்றில்லை, எங்களுக்கு வானமே எல்லை; பலதும் பேசிக்கொண்டிருப்போம். அவருக்கு எம்ஜிஆர் தத்துவப் பாடல்கள் மிகவும் பிடித்தமானவை. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடு ராஜா என வாய்விட்டுப் பாடுவார்.

அந்தநாள் இப்படியாகக் கனிந்தது. இரண்டு ரூபாய் நோட்டொன்று கைமாறியது. தக்காளிக்கூடை, கூடைக்குள் நாய்க்குக் கூழ் கொண்டு வந்த தூக்குப்போசி. எடுத்துக் கொண்டு கிளம்பினார். “நான் வீட்டுக்குப் போய்ப் பசியாறிவிட்டு, வரும் போது உங்களுக்கு இட்லிகளும் வாங்கி வந்து விடுகின்றேன்”.

வேலன் அவர்கள் வரும் வரையிலும் தோட்டத்துக்குள் இருக்கும் தாத்தய்யன் கோயில் சாயமரத்து ஊஞ்சலில் தூரி ஆடிக் கொண்டிருந்தேன். வெகுதூரத்தில், கிணற்றடி மதிற்சுவருக்குள் தலைச்சும்மாடு ஒன்று படிப்படியாக உயரும் காட்சி தெரிந்தது. நான் சாளைக்கு ஓடோடிச் சென்றேன். சென்று சேர்ந்த கொஞ்சநேரத்தில் வேலன் வந்து விட்டார்.

தூக்குப் போசி நிறைய கள்ளு. பரந்திருந்த கொட்டமுத்து இலையில் 3 இட்லிகள், இரு தேங்காய்ச் சிரட்டைகளில் சட்னியும் சாம்பாரும். வெறும் வயிற்றில் வேண்டும். குழந்தைப்பிள்ளை. முதலில் இரண்டு இட்லிகளைச் சாப்பிடுங்க என்று சொன்னார் வேலன். பேச்சுத்தட்டாமல் இரண்டு இட்லிகளையும் சாப்பிட்டேன். அமோக ருசியாய் இருந்தது. மற்ற இரண்டுக்கும் ஆசைப்பட்டேன். தடுத்து விட்டார். போசியில் இருக்கும் கள்ளில் கொஞ்சத்தை திருகணிச்சொம்புக்குள் ஊற்றிக் குடிக்கலானேன். பக்கத்தில் குத்த வைத்து உட்கார்ந்திருந்தவர், நாய்க்குட்டி குடிப்பதை மற்றவர் வேடிக்கை பார்க்கும் பாங்கில் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வயிறு நிரம்பி விட்டிருந்தது. இனி முடியாதென்றவுடன், மிச்சத்தை அவர் மாந்திக்கொண்டார். நாளெல்லாம் ஒரே சிரிப்பு. வானத்தையே வில்லாய் வளைத்து விட்ட சாகசம்!

ஆண்டுகள் ஓடோடி விட்டன. கல்யாணம் ஆகி, புதுமனைவி. வீட்டில் இருந்தோம். மாலை வேளை. அம்மா, அண்ணி, மனைவி மூவரும் பைகளைத் தூக்கிக் கொண்டு சூலூர்ச் சந்தைக்குச் சென்றிருந்தனர். ஆளாளுக்குப் பைகளைக் காவிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மருமகள்களைப் பார்த்து அம்மா சொன்னது, “போற வழியில பைய்யனுக்கு குடிக்கிறதுக்கு எதனா வாங்கிட்டுப் போகலாம்”. இஃகிஃகி, மனைவியார் பேஜாராகி விட்டார். “அம்மா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என மறுப்புத் தெரிவித்தவர், வீடு திரும்பிய பின்னர் என்னிடம் கடிந்து கொண்டார், “ஏன் வீட்டில இருக்குறவங்களையெல்லா இப்படி பயமுறுத்தி வெச்சிருக்கீங்க?”. “இல்லம்மா, அது பயம் கெடியாது. அன்பால் விளைந்தது. நம்பிக்கையால் விளைந்தது” எனச் சொன்னேன்.

மாந்தன் இருக்கும் வரையிலும் குடி இருக்கத்தான் செய்யும். அது பொறுப்புடன் கூடியதாய் இருக்க வேண்டும். எந்த அளவுக்கு வில்லத்தனமாய்ச் சமூகம் பார்க்கின்றதோ அதே அளவுக்கு ஈனத்தனமானதாகவும் அது அமையும். அதாவது, அமெரிக்காவில் இருந்தும், வீட்டின் மையத்தில் பெண்கள், பிள்ளைகள் எல்லாம் இருக்க, ஆடவர் மட்டும் வாகனத்தரிப்பிடத்துக்குள் சென்று துண்டு போட்டுக் குடிக்காத குறையாக இருந்து குடித்துவிட்டு வருவது போன்று.

கள்ளக்குறிச்சி சம்பவம். காரசாரமான விவாதங்கள். நான் கள்ளுக்குடிக்கும் படங்களைப் போட்டு விட்டேன். இயல்பான படங்கள் அவை. பொதுவெளியில் கிடைக்கக்கூடிய படங்கள்தான். பகிர்ந்ததே நார்மலைஸ் செய்யத்தான். இருந்தும், அதனை மீண்டும் பகிர்ந்து, பெண்கள் எல்லாம் இருக்கக் கூடிய இந்த குரூப்பில் இது போன்றவற்றை எப்படிப் பகிரலாமென வாதவிவாதம்.

கேள்வி முயல்; பீடுபெற நில்! Drink Responsibly.

-பழமைபேசி.

6/23/2024

இலக்கியக்கூட்டம் - 2


நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.
-தேவதேவன்

கவிதையை வாசித்தமட்டிலும்  சிலருக்குப் புதிராகத் தெரிந்திருக்கும். சிலருக்கு, உணவுச்சங்கிலி நினைவுக்கு வந்திருக்கக்கூடும். ஒரு உயிரினத்தை பிறிதோர் உயிரினம் உண்கின்றது. படிநிலைகளைக் கடந்து கடந்து மேல்நோக்கி வருங்கால் மனிதன் உச்சத்தில் இருக்கிறான். ஆட்டம் போடுகின்றான். அவனுக்கானதுதான் இந்தக் கவிதை. அப்படியானால் இக்கவிதையானது இந்த மனிதனுக்கு என்ன சொல்கின்றது?

நிலையாமையை உணர்த்துகின்றது. நீரின் மேற்பரப்பில் ஒரு மீன். துள்ளி விழுகையில் ஒரு சூடான பாறையின் மீது போய் விழுகின்றது. சூடுதாங்காமல் மீண்டும் துள்ளுகின்றது. துள்ளலைக் கண்ட பறவை ஒன்று விரைவாய்ப் பறந்து வந்து தம் காலால் போட்டு அமுக்குகின்றது. காலில் அகப்பட்டதால் மீண்டும் துள்ளுகின்றது அம்மீன். இது துள்ளுவதைக் கண்டதும் தம் அலகுகளால் கவ்வி விழுங்குகின்றது பறவை. மூச்சுத்தப்பி மரிக்கின்றது மீன். மரித்த அக்கணத்தில் பறவையாகவே ஆகிப் போகின்றது அம்மீன். எதுவும் நிரந்தரமில்லை இவ்வுலகில். இதைத்தானா இக்கவிதை சொல்கின்றது? இல்லையென்பதே நம் புரிதலாக இருக்கின்றது. ஏன்?

கவிதைக்குத் தலைப்பு என ஒன்று இருக்க வேண்டும்தானே? தலைப்புக்கான தெரிவுகள் என்னவாக இருக்கலாம்? மீன் என்பதாக இருக்கலாம். பறவை என்பதாக இருக்கலாம். துள்ளல் என்பதும் ஒன்றுக்கும் மேற்பட்டுப் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளதாலே, துள்ளல் என்பதும் தலைப்பாக இருக்கலாம்.

மீன் என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது இழப்பின் குறியீடாக உருப்பெறும். பறவை என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது கொள்தல்/வெற்றி என்பதன் குறியீடாக உருப்பெறும். துள்ளல் என்பது தலைப்பாக இருக்குமேயானால், அது செயற்பாட்டின் குறியீடாக அமையும். இங்கே கவிஞர் தேவதேவன் அவர்கள் நமக்குக் கொடுத்திருப்பது, “துள்ளல்” என்பதேயாகும். அதுதான் கவிதையின் வெற்றியாக, சிறப்பாகப் பார்க்கின்றேன். கவிதையின் பரிமாணத்தையே ஒட்டுமொத்தமாய் மாற்றிப்போட்டு விடுகின்றது அத்தலைப்பு.

துள்ளல் என்பதில் இருவகையுண்டு. தம் பாதுகாப்புக்காய், உரிமைக்காய், விழுமியத்துக்காய் செயற்படுவது ஒருவகை. முன்னணியில் இருந்து கொண்டு, செயற்பாடு, விழுமியம், நோக்கம், குறிக்கோள் முதலானவற்றின்பாலல்லாது,  விளம்பரத்துக்காய், தன்முனைப்புக்காய், அப்போதைய இன்பத்துக்காய்ச் செயற்படுவது இரண்டாவது வகை. இவ்விருவகையானவையும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன இக்கவிதையுனுள்.

நீரின்மேற்பரப்பில் இருக்கின்ற மீன் துள்ளுகின்றது. தேவையின்றித் துள்ளுகின்றது. விழுமிய நோக்கில்லை. நோக்கற்றதினாலே போய்விழுகின்றது சுடும்பாறையினுள். தற்காப்புக்காய்த் துள்ளுகின்றது இம்முறை. ஒரு தவறினின்று காத்துக் கொள்ள மற்றொன்று, மற்றொன்றெனப் போய்க் கடைசியில் வல்லாதிக்கத்துக்குள் அடக்கமாகிவிடுகின்றது அம்மீன். இதுதான் கவிதை நமக்கு உணர்த்துவதாய்ப் பார்க்கின்றோம்.

ஒரு சிறுகவிதைக்கு இவ்வளவு மெனக்கெட்டுச் சிந்தித்து உணர்தல் தேவைதானா எனும் வினா உங்களுக்குள் எழலாம். அதுதான் நவீன இலக்கியம்!

ஃபிலடெல்பியா படிப்பு வட்டத்தில் ஏராளமான நவீனக் கதைகளுக்கு கோனார் உரை எழுதியிருந்தேன். அக்கதைகள் எல்லாமுமே  3- 6 வயதினருக்குட்பட்ட கதைகள் என்பதுதாம் சிறப்பு. என்னிடம் அதற்கான தரவுகள் தற்போது இல்லை. எனினும் The Dot எனும் 5 வயதுக்குழந்தைகளுக்கான கதை குறித்தும் எழுதியதாக நினைவு. https://www.prindleinstitute.org/books/the-dot/ அதற்கான மண்டைக்கசக்கல் எத்தகையது என்பதை இங்கு பார்க்கலாம்.

எதற்காக இதையெல்லாம் நாம் செய்ய வேண்டியதாய் இருக்கின்றது? மனிதன் என்பவனுக்கு மானம் எனும் நுண்ணுணர்வு உயிர்மூச்சாக இருக்க வேண்டியவொன்று. அத்தகு நுண்ணுணர்வுகள் சாகும்வரையிலும் நமக்குள் குடிகொண்டிருக்க வேண்டும். அதைப் பேணுவதற்கே கதை, கவிதை போன்ற இலக்கியங்கள் தேவையாக இருக்கின்றன. பார்த்த மாத்திரத்தில் ஒரு இன்முகச்சிரிப்பு, ’சாரி’ சொல்தல், முகமன் செலுத்துதல் இவையெல்லாம் நுண்ணுணர்வுள்ள சமூகத்தின் அறிகுறிகள்.

"அமெரிக்கப் பண்பாடு, கலையிலக்கியம் ஆகியவற்றுடன் ஓர் ஆக்கபூர்வமான உரையாடலுக்கு அவர்கள் முயல்வதே இல்லை. அங்குள்ள தீவிரமான அறிவியக்கம் பற்றி முழுமையான அறியாமையே இவர்களிடம் உள்ளது. அங்குள்ள அறிவியக்கத்துடன் உரையாடவேண்டும் என்றல் இங்குள்ள தரமான அறிவியக்கத்தையே கொண்டுசெல்லவேண்டும். ஆனால் அதை இவர்கள் அறிந்திருப்பதில்லை. இதன் விளைவாக இவர்கள் அமெரிக்காவில் பிறந்து வளரும் தங்கள் குழந்தைகள் முன் மிகக்கீழ்மையாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்" - எழுத்தாளர் ஜெயமோகன்.

அமெரிக்கவாசியான நான் இதனை எண்ணற்றமுறை அனுபவித்திருக்கின்றேன். கேலி, கிண்டலுக்காட்பட்டிருக்கின்றேன். என்னுடைய பதில் இப்படியாகத்தான் இருந்தது, “அம்மணாண்டிக லோகத்துல கோவணம் கட்டினவன் கோமாளி”.

-பழமைபேசி, pazamaipesi@gmail.com


6/22/2024

இலக்கியக் கூட்டம்

இலக்கியக் கூட்டம், வாசகர் கூட்டம், எழுத்தாளர் கூட்டம் முதலானவை எல்லாமே, மனப்பூட்டுகளை, கதை கவிதைச் சாவிகள் கொண்டு திறந்து விடுவதற்குத்தான். பங்கேற்பாளர்கள் தயக்கமின்றிப் பேச வேண்டும். சிந்தனைவயப்பட வேண்டும். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றவர் ஏதாகிலுமொன்றை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்குத்தான். ஆனால் பெரும்பாலான கூட்டங்கள் நிகழ்த்துகலை நிகழ்ச்சிகளாக இடம் பெறுகின்றன. எப்படி?

சிறப்பாளர்(performer) கலந்து கொண்டு பேசுவார். கதை சொல்வார். கூட்டம் கேட்டுக் கொண்டு இருக்கும்; இலயிப்பில், எந்த அளவுக்கு மனம் குளிர்கின்றதோ, பரவசமடைகின்றதோ, களிப்புக் கொள்கின்றதோ அந்த அளவுக்கு நிகழ்ச்சி மதிப்பீடு பெறும். தன்வயச் சிந்தனைக்கு இடமில்லை. இதுவே ஓரிரு படைப்புகளைக் கொடுத்து வாசித்து வரச்சொல்லிவிட்டு அவரவர் கருத்துகளைப் பகிரச் சொல்லிப் பார்க்கலாம். கடைசியாகச் சிறப்பாளர் அவற்றையெல்லாம் தொகுத்து விரித்துரைத்துச் சிறப்புரை ஆற்றலாம்.

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

-தேவதச்சன்

இக்கவிதையைக் கொடுத்த மாத்திரத்தில் வாசிக்கின்றீர்கள். புரியாதது போல இருக்கும். ஒன்றுக்குப் பலமுறை வாசித்தபின் புரியத்துவங்கும். அது துவக்கநிலைப் புரிதல். உணர்வுகள் களிப்பூட்டும். இந்த அளவில் நின்றுவிட்டால் அது மேநிலை வாசிப்பு /புரிதல் என்றாகிவிடும்.

மேலும் சிலமுறை வாசிக்கின்றீர்கள். குறியீடு, படிமம், இடக்கரடக்கல், நவிற்சி, ஏற்றணி முதலானவற்றை இனம்காண முடிகின்றதென வைத்துக் கொள்வோம். அது இடைநிலை வாசிப்பு அல்லது புரிதல் என்றாகிவிடும்.

மேலும் சிலமுறை மீண்டும் மீண்டும் வாசிக்கின்றீர்கள். சிந்திக்கத் தலைப்படுகின்றீர்கள். தத்துவார்த்த நிலையில் சிந்தைவயப்படுகின்றீர்கள். ஆழ்நிலை வாசிப்பு அல்லது புரிதல் என்றாகிவிடும்.

ஆழ்நிலை வாசிப்பேயாகினும், ஆளுக்காள் புரிதல் மாறுபடலாம். காரணம், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அவரவருக்கான பின்புலம், கல்வி என்பனவெல்லாம் வேறுவேறானவை. உங்களின் புரிதல், தத்துவார்த்த வெளிப்பாடு என்பது எழுதிய படைப்பாளனுக்கே கூட புதுத்திறப்பைக் கொடுக்கக் கூடும். அதுதான் படைப்பின் வெற்றி. படைப்பு என்பது ஓர் ஊடகம்தான். அந்த ஊடகம் எப்படியான வீச்சைக் கொடுக்கின்றது, அதனூடாக எப்படியான சிந்தனைப் பயணங்கள் அமைகின்றன என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமைகின்றது.

துணி துவைப்பதென்பது ஒரு குறியீடு. துணி துவைப்பதென்றால் என்ன? தூய்மைப்படுத்துவது, அழுக்கு நீக்குவது, புதுப்பொலிவூட்டுவதெனப் பலவகையாகக் கொள்ளலாம். அடிப்படை மேன்மை என்பது.

சமூகச்செயற்பாட்டில் ஈடுபடும் ஒருவருக்கு தேவையற்ற ஏச்சும் பேச்சும் இடம் பெறக்கூடும். காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.

சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன். காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம். தொடர்ந்து செயலாற்றி வருங்கால் கூக்குரல்கள் படிப்படியாக ஓய்ந்தே போகும்.

அடுத்த துணி எடுத்தேன். காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம். கூக்குரல்கள் நின்று போய்விட்ட நிலையில், ஏவப்பட்ட ஏச்சுகளும் பேச்சுகளும் மனத்தைத் தைக்கவல்லது. அவற்றைப் புரிந்து கொண்டு, சகித்துக் கொண்டு செயற்பட்டாக வேண்டும்.

இதே கவிதைக்குப் பொருந்தும்படியாக வேறொருவர் வேறொரு புரிதலை, அதாவது முழுமையானதொரு ஈட்டினைக் கொடுக்க இடமிருக்கின்றது; அதற்குப் பின்னால் வேறொருமாதிரியான தத்துவார்த்தம் வெளிப்படக் கூடும். அப்படிக் கிடைப்பதுதான் இலக்கியப்பழரசம்.

நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.

-தேவதேவன்

இஃகிஃகி, உங்கள் மண்டையைக் கசக்கி மேற்கொடுக்கப்பட்ட கவிதையின் இரசத்தைப் பிழிந்து கொடுங்களேன் பார்ப்போம்!



6/21/2024

எழுதுதல்

நண்பர் கார்த்திகைப் பாண்டியனின் நேர்காணல் கண்டேன். பொதுப்புத்தியின் மறுபக்கத்தைத் துல்லியமாகச் சொல்லியிருக்கின்றார். உடனடிக் கவனயீர்ப்புக்கும் விழுமியநிலைத்தன்மைக்குமான இழுபறியாகத்தான் இவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது. https://youtu.be/yeSxM10NanA?si=ml_nabY-krfKlmVN

ஒரு கூட்டத்திற்கான விளம்பரநறுக்கினைக் கண்டேன். கூட்டத்தின் கருப்பொருள், எழுத்துப்பிழை சவால்கள் என்பதைக் கண்டதும் ஆர்வம் பற்றிக் கொண்டது. அந்த நறுக்கிலேவும் பிழைகள் பல இருக்கக் கண்டேன். சுட்டியதும் நண்பர் சொன்னார், நீங்கள் ஏன் அவருடன் சேர்ந்து பணியாற்றக் கூடாதென? அவசியம் தொடர்பு கொள்கின்றேனெனப் பதிலுரைத்தோம்.

மீண்டும் எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியன் அவர்கள் சொல்லியதிலிருந்து, “குறைவாக எழுதினாலும் நன்றாக எழுத வேண்டும்”. ஏன்?

தமிழ்க்கணிமையில் சவால்கள் நிறைய உள்ளன. கணிமைத்துவத்தின் அடிப்படையே சீர்மைதாம்(standard and consistency). எழுதுகிறேன், வாசிப்பவர்கள் சரியாகவே புரிந்து கொள்கின்றனர். உனக்கு என்ன பிரச்சினை எனக் கொதிக்கின்றனர். பொறுமையாகத்தான் எதிர்கொண்டாக வேண்டும்.

ஒரு பத்தி எழுதுகின்றீர்கள். அதனைத் தானியக்கமாக, ஒலிப்புத்தகம், செயற்கைநுண்ணறிவுப்புலத்துக்கான உட்கிடை, காணொலி, பதாகை முதலான பல உருக்களாக, ஒலிப்புச்சிதைவு, பொருட்சிதைவு, பொருள்மயக்கம் ஏற்படாதவாறு இடம் பெறுகின்றதா நம் எழுத்து? பெரும்பாலான எழுத்துகள் அப்படி அமைவதில்லை. வியந்தோதலின் பொருட்டு மிகைப்படுத்தி எழுதுகின்றோம். உண்மை பல்லிளித்து விடுகின்றது. கணிமைத்துவம் தோற்றுவிடுகின்றது.


Write elaborate content
Use consistent terms
Use of pronouns
Inclusive language
Use of “It” pronoun
Article labels – New, updated, deprecated
Structured format
Crafting the perfect SEO-driven prompt
Keyword optimization beyond the basics

இவையெல்லாம் எளிய எழுத்தின் முகாந்திரங்கள். தானியக்கப் புலங்களுக்குத் தோதான வரையறைகள். இவற்றைக் கடைபிடித்தால்தான் அந்த எழுத்து முழுமை பெறும். அண்மையில் தேர்தல் ஒன்றுக்காகப் பணியாற்றி இருந்தோம்(www.united4fetna.com). நவீன நுட்பப் புலங்கள் செம்மையாகவே பயனீட்டைக் கொடுக்கின்றன, எழுத்து எழுத்தாக இருக்கும் நிலையில்.

மீண்டும் கார்த்திகைப் பாண்டியன் அவர்களது கருத்தைத்தான் இரவல் பெற வேண்டியதாக உள்ளது. வெறும் பிடிஎஃப் கலாச்சாரமாகி விட்டது நம் எழுத்துக்களம். தேடுபொறிக்குக் கூட அவை அகப்படுவதில்லை. தேடலுக்கும் நாடலுக்கும் இடமில்லாவுலகில் இலக்கியமோ ஆவணமயமாக்கமோ அவை தோற்றே போகும்.

-பழமைபேசி.

6/12/2024

தேர்தல் 2024

“வேலைக்கு மதிப்பில்லை. வேலையே செய்யாதவர்கள், இருக்கும் நேரத்தையெல்லாம் பரப்புரைக்கான வேலையில் செலவிட்டு வென்று விட்டார்கள்”.

இப்படியான கருத்தினைக் காண நேரும்போது கருத்தாளர்களின்பால் இரக்கமே மேலிடுகின்றது. தேர்தலையும் தேர்தலில் பங்களித்த வாக்காளர்களையும், அவர்கள் இன்னமும் மனத்தில் கொள்ளவில்லையென்பதே பொருள்.

நடந்து முடிந்த தேர்தல் என்பது, 24 வேட்பாளர்களுக்கிடையேயான தேர்தலாக நான் கருதவில்லை. சாமான்யமக்களின் பிரதிநிதியான துணைத்தலைவருக்கும் தலைவருக்குமான தேர்தலாகவே இடம் பெற்றது என்பதுதான் சரியாக இருக்கும்.

தன்னுடைய செயற்குழுவில் இருக்கும் துணைத்தலைவரைக் கலந்தாலோசிக்காமலே தன்னிச்சையாகத் தம் கருத்தினை, செயற்குழுவில் வெளிப்படுத்துகின்றார் தலைவர். “இன்னாரை அடுத்த தலைவருக்காய் முன்மொழிகின்றேன். அதுதான் என் பரிந்துரை”. அக்கூட்டத்தில் இருந்த துணைத்தலைவர் வாளாது இருந்து விடுகின்றார்.

சிக்காகோ மாநாட்டில் வைத்து, முன்னாள் தலைவரும், இந்நாள் தலைவரும், துணைத்தலைவரிடம் அதே முன்மொழிவைத் தெரிவிக்கின்றனர். போட்டியின்றித் தெரிவு செய்வதானால் சரியென்றுதான் நீங்கள் முன்மொழிபவர் சொல்லி இருக்கின்றார். ஆனால் தேர்தலில் நான் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுவதாகவே இருக்கின்றேனெனச் சொல்லிவிடுகின்றார்.

சிலநாட்கள் கழித்து, பேரவைப் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான குழுமத்தில் தலைவர், இன்னாரைத் தலைவராகப் பரிந்துரைக்கின்றேனெனப் பதிவு செய்கின்றார். அது கண்ட பொதுக்குழு உறுப்பினர் கேட்கின்றார், “ஏன் தற்போதைய துணைத்தலைவர் தலைவர் பொறுப்புக்கு முன்மொழியப்படவில்லை? இப்படியான பரிந்துரையை துணைத்தலைவர் ஒப்புக்கொள்கின்றாரா?”

துணைத்தலைவர் நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொல்லிவிடுகின்றார். தலைவருக்கான சறுக்கல் வெளிப்படையாகவே துவங்கிவிடுகின்றது. தேர்தல்களமும் சூடுபிடிக்கத் துவங்குகின்றது. “போட்டியின்றி” எனும் சொல் மறைத்துப் பதிவிடப்பட்டதும், "துணைத்தலைவர் தலைவர் பொறுப்புக்கு" என்பதான மரபும் பேசுபொருளாகிவிடுகின்றது.

துணைத்தலைவர்வசம் வாக்காளர் பட்டியல் அப்போதைக்கு இருந்திருக்கவில்லை. மேலும், தேர்தலில் போட்டியிடத் தகுதி வரையறைகள் உண்டு. அந்தத் தகுதியைக் கண்டறிவதற்கான தரவுகளும் கைவசம் இல்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகின்றது. அப்போதும் அந்தத் தரவுகள் கையளிக்கப்படவில்லை. ஆகவே யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதிகொண்டவர்கள் என்பது அறிந்திராதநிலை. கிட்டத்தட்ட, "கைகால்களைக் கட்டிப்போட்டுவிட்டு நீச்சலடி" என்பது போன்ற நிலைதான் துணைத்தலைவருக்கு.

தலைவர் அவர்களின் பங்களிப்பு கைகொடுக்கத் துவங்குகின்றது துணைத்தலைவருக்கு. எப்படி? பொதுக்குழுவில் வைத்து இடம் பெற்ற தலைவரின் பதிவைக் கண்டு வெகுண்ட பலரும் துணைத்தலைவரை நோக்கி ஒவ்வொருவராக வரத் துவங்குகின்றனர். பழைய விழா மலர்கள், கமிட்டி உறுப்பினர் பட்டியல் முதலானவற்றைக் கொண்டு தகுதிநிலையைக் கண்டறிய முற்படுகின்றோம் (ஆமாம், நானும்தான்). குறிப்பிட்ட ஆண்டின் விழா மலரேகூட இணையதளத்தில் கிடைக்கப் பெறவில்லை. மிகவும் இடர்ப்பாடாக இருந்தது.

நிறைய நண்பர்கள் தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர். ஓரளவுக்குப் பரவலாக்கம், பேலன்ஸ் முதலானவையும் கடைபிடிக்கப்பட்டாக வேண்டும். தகுதிநிலையும் இருக்க வேண்டும். காலம் குறுகியதாகவே இருக்கின்றது. மன அழுத்தம் கூடிக் கொண்டே இருக்கின்றது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுமோயென்கின்ற பதற்றம். அச்சுறுத்தல்களும் நிலவி வந்தன. 12 இடங்களுக்கு மாற்று வேட்பாளருடன் 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. ”அப்பாடா” என ஓர் இரவுதான் உறங்க முடிந்தது.

ஆங்காங்கே துணைத்தலைவர்தரப்பு வேட்பாளர்கள் அணுகப்பட்டு, போட்டியிலிருந்து விலகச் செய்வதற்கான பணிகள் துவக்கப்பட்டிருந்தன. அச்செய்திகளைக் கேள்வியுற்ற, மேலும் பலர் எதிர்க்கோலம் பூண்டனர். ஆனாலும் எங்களுக்குள் கடும் மனச்சுமை ஏற்பட்டிருந்தது என்பதுதான் உண்மை. வாட்சாப்களில் உண்மைக்குப் புறம்பானதும், தனிமனித வன்மம் கொண்டதுமான தகவல்கள் திட்டமிட்டே பரப்பப்பட்டன. அவற்றுக்கெல்லாம் உடனுக்குடனே உரிய தரவுகளுடன் விடையளித்துக் கொண்டிருந்தோம் மிகவும் அமைதியாக.

தேர்தல் அலுவலர், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவிக்குமுன்பேவும் தலைவர் தம்தரப்புப் பட்டியலை வெளியிட்டுப் பரப்புரையைத் துவக்கினார். மேலும் பல வாக்காளர்கள் இதுகண்டு எதிர்க்கோலம் பூண்டனர். வெளிப்படையாக எவரும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் எங்களுக்குச் சன்னமாக அவர்களுடைய உணர்வுகள் வந்து சேர்ந்தபடியே இருந்தன.

சில மணி நேரங்கள் கழித்து, அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியானதும்தான் எங்களுக்குச் சற்று ஆசுவாசம் பிறந்தது. அதற்குப் பின்னர், நாங்கள் பரப்புரையைப் பறக்க விட்டோம் தரவுகளை முன்வைத்து. அத்தனை பொய்களையும் அனாயசமாகத் தவிடு பொடியாக்கினோமென்றால் அது மிகையாகாது!

தலைவர் தரப்புக்கான ஆதரவுப்பட்டியல் மிக நீளமானது. அவர்களுக்கான உறுதி ஓட்டுகள் 45%. துணைத்தலைவர் தரப்புக்கு 25%. நடுநிலை வாக்காளர்கள் 30%. இப்படியான நிலையில்தான் பரப்புரைக்காலம் துவங்கிற்று. தலைவரும், தலைவர் தரப்புக்கு ஆதரவு எனச் சொல்லிக் கொண்டோரும் செய்த சிலபல காரியங்களும்(சொசெசூ) நாங்கள் மேற்கொண்ட பணிகளும் களத்தை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இருந்த 45% ஓட்டுகளில் கொஞ்சம் இழப்புக்குள்ளாகி 40% ஓட்டுகளைத் தலைவர் தரப்பு பெற்றது. எஞ்சிய 60% ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் துணைத்தலைவர் தரப்புக்கு வந்து சேர்ந்தன. எல்லா வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

காலம் தாழ்ந்திடினும், வாய்மையே வெல்லும்!

-பழமைபேசி, 06/12/2024.

6/09/2024

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தேர்தல் 2024-2026

பேரவை என்பது 62 அமைப்புகளை உறுப்புகளாகக் கொண்டுள்ளது. அதற்கும் மேற்பட்டு, கனடா, அமெரிக்கா, இந்தியா, ஏன் உலகெங்குமிருந்து கவனிப்பவர்கள் உண்டு. எனவே ஆளுக்காள் ஒவ்வொருவிதமான பார்வை கொண்டிருப்பர். இயன்றமட்டிலும் நேர்மையாக எழுத விழைகின்றேன். இருந்தாலும், நான் தேர்தலில் இடம் பெற்ற அணிகளுள் ஓர் அணியை ஆதரித்தவன். இந்தப் புரிதலோடு மேற்கொண்டு வாசிக்க வேண்டுகின்றேன். #UnconsciousBiasAlert

செயற்குழுவில் இருக்கின்ற எல்லாப் பொறுப்புகளுக்கும், ’எலக்சன்படி’ கட்டமைப்பைப் பயன்படுத்தி இணையத்தினூடாக நடந்த தேர்தல் இதுவே முதன்முறையாகும். தேர்தல் விதிமுறைகளை மிக நேர்த்தியாகக் கொண்டிருக்கும் சட்டக்கோப்பு விதிமுறை வகுப்பாளர்களான பேரவை முன்னோடிகளும், நெறிவழுவாமல் நடத்திக் கொடுத்த தேர்தல் அலுவலர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்களாவர்.

ஏன் இந்தப் பதிவினை எழுத வேண்டியுள்ளது? பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு ஆவணப்படுத்தப்பட வேண்டும். எனக்கே கூட என்னெவெல்லாம் நிகழ்ந்தது என்பது எதிர்காலத்தில் மறந்து போகக் கூடும். ஆகவே எழுதிப் பதிய வேண்டிய தேவை நமக்கு உள்ளது.

பேரவையிலிருந்து முற்றாக ஒதுங்கி இருந்தேன். 2017ஆம் ஆண்டு விழாவுக்குப் பிறகு அமைப்பில் தலையெடுத்த வணிகமயம், தனிமனித ஆதிக்கம் முதலானவை பெருகிக் கொண்டே வந்தன. விருப்பு வெறுப்பின்றி அவற்றைப் பற்றி அவ்வப்போது தொடர்ந்து எழுதியும் வந்தோம். முழுக்க முழுக்க அமைப்பின் செயற்பாடுகளையும் பொறுப்பில் இருப்பவர்களின் செயற்பாடுகளைப் பற்றியும்தானேவொழிய, எவ்விதத்திலும், இயன்றவரை, தனிமனிதர்கள் குறித்தோ பெயர்குறிப்பிட்டோ விமர்சிக்காமல், கவனமாகவே இருந்து வருகின்றோம். எம் 18ஆவது வயதில் கோவையில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் Asst Foreman வேலைக்குச் சேர்ந்திருந்தோம். “கண்பதியப்பனே டிஸ்மிஸ் ஆர்டரை திரும்பப்பெறு” எனும் வாசகம் ஊரெங்கும் எழுதப்பட்டிருந்தது. தொழிற்சங்கத்தலைவர் கடிந்து கொண்டு, கணபதியப்பனே என்பதை எல்.எம்.டபுள்யூ நிர்வாகமேயென அழித்து எழுதுமாறு நடுரோட்டில் வைத்துத் தொண்டரை அறைந்த நிகழ்வு நமக்கான பாலபாடம்.

2022ஆம் ஆண்டுவாக்கில் திடீரென ஓர் அழைப்பு நண்பரிடமிருந்து. ”இன்னும் இருநாட்களே உள்ளன; வேட்புமனுத்தாக்கல் நிறைவுக்கு. நான் துணைத்தலைவர் பொறுப்புக்கு நிற்கலாமென இருக்கின்றேன். எனக்கு விருப்பமில்லை. ஆனால்...” என இழுத்தார். நாங்கள் சொன்னது இதுதான். “முடிவு உங்களுடையது. அது என்ன முடிவாக இருந்தாலும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது எங்களுடையது”.

மிகக்குறுகிய காலத்தில் இணையதளம் கட்டமைக்கப்பட்டு, பரப்புரை வேலைகளைத் துவக்கியிருந்தோம். நிறைய புதுமைகளைப் புகுத்திச் செய்த வேலையில் சிறப்புக் காட்டினோம். தேர்தலில் நண்பர், நண்பர்தம் அணியினர் சிறப்பாகவே வாக்குகளைப் பெற்றிருந்தனர். ஒரு இரு வாரங்களுக்கு முன்பாக வேலையைத் துவக்கி இருந்தால்கூடப் போதும், தேர்தல் முடிவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்குமென்பதில் எமக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஓரிருவர் மட்டுமே வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

இரு ஆண்டுகள். பேரவையின் பாதையில், மேலாண்மை என்பது மேலும் வீழ்ச்சியையே எதிர்கொண்டது. தனித்தனி நிகழ்ச்சிகளைச் சொல்லி அவையெல்லாம் பேரவையின் வளர்ச்சிக்கான அறிகுறிகள் என்றனர். அமைப்புச் செயற்பாடுகளை முன்வைத்து வீழ்ச்சி என்றது மறுதரப்பு. நம்மைப் பொறுத்தமட்டிலும், இத்தகைய போக்கானது, ஏழை, எளிய, நடுத்தரவர்க்கத்துக்கும் பணக்காரவர்க்கத்துக்குமான வேள்வியாகவே பார்க்கின்றோம். பணக்காரவர்க்கம் வழிநெடுகிலும் எண்களைச் சுட்டிக்காட்டி பொருளியல் மதிப்பீடுகளை(economical values) முன்வைத்தது. நாமோ, அன்பு, அக்கறை, அரவணைப்பு, மரியாதை, எல்லாருக்குமான பங்களிப்பு முதலான சமூக விழுமியங்களை(social values) முன்வைத்து மாபெரும் சறுக்கல் என்றோம்.

சீப்பை ஒளித்து வைத்துக் கொண்டால் கல்யாணம் நின்றுவிடும்தானே என்கின்ற நினைப்பில் அடுத்தடுத்துத் தடைகள் வந்து கொண்டேயிருந்தன. ஒவ்வொரு தடையையும் உணர்வு வயப்படாமல் எதிர்கொண்டு, அவற்றை நமக்கு ஏதுவானதாக மாற்றியமைப்பதில் தொடர்ந்து முன்னேறி வந்தோம். அச்சம் கலந்த ஒரு பதற்றம் இருந்தது. அவநம்பிக்கை குடிகொண்டிருந்தது.  ஏவப்பட்டிருந்த பொய்கள் அவற்றுக்குக்காரணம்.. உடனுக்குடனே அவற்றுக்கான எதிர்வினை ஆற்றக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்தோம்.

ஒருகட்டத்தில் எம்மீதே எமக்கு நம்பிக்கையற்றுப் போனது. பொறுப்பில் இருக்கும் தரப்புக்கு ஆதரவாக 12 முன்னாள் தலைவர்கள், நம் தரப்புக்கோ மூன்றே மூன்று பேர். இருக்கின்ற 22 வாழ்நாள் உறுப்பினர்களில் 14 பேர் எதிர்ப்பு அல்லது ஆதரவில்லை. ஒருவேளை நாம்தான் தவறான புரிதலில் வெட்டிவேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோமோயெனும் சலனம், சஞ்சலம். எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு நடைப்பயிற்சிக்குப் போனோம். சில பல மைல்கள் இதே சிந்தனைதான். வீட்டுக்குத் திரும்பவும் வந்து சேர்ந்தபோது, மிகத் தெளிவாக இருந்தோம். நம் தரப்பு வென்றாக வேண்டிய தேர்தல் இது, ஆதரிப்பதற்கு எல்லாக் காரணங்களுமுண்டு என்பதில்.

தேர்தல் முடிவுகள் கிடைக்கப் பெற்றோம். போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நம்தரப்பு அணியினர் வெற்றி பெற்று இருந்தனர். பதிவான வாக்குகளில் (2928), நம் அணியினர் 1750 வாக்குகளைப்(~60%) பெற்றிருந்தனர்.

வேட்பாளர்கள் மிகக்கடுமையாக உழைத்திருந்தனர். இந்த வேட்பாளர்களுக்காய் கண்களுக்குப் புலப்படாத மனிதர்கள் ஏராளமானோர் ஆங்காங்கே பணிபுரிந்தனர் என்பதும் கண்கூடு. இந்த மனிதர்களின் உழைப்புக்கான மணிநேரங்களைத் தொகுத்துக் கணக்கிட்டால் சில ஆயிரம் மணி நேரங்களுக்கும் மேலாக வரும். அதன் பயனீடு? அவுட்புட்?? இந்த உழைப்பை அமைப்பின் கட்டமைப்பு, மனிதமேம்பாடு போன்றவற்றுக்குச் செலவிட்டிருந்தால்? இப்படியெல்லாம் வினாக்கள் பிறக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதேவும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. சொன்னேன், “உங்களுக்கான பொறுப்புகள் இந்த நொடியிலிருந்து துவங்குகின்றன. அவற்றை நிறைவு செய்யும் போதுதான் காத்திருக்கின்றது உங்களுக்கான வெற்றி”. அதுவரையிலும் அவர்களுக்கான ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டியது நம் எல்லாரது கடமை!

-பழமைபேசி, 06/09/2024.

5/11/2024

அன்னையர் நாள்


வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன்.

“Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்குப் பின்னர் பேச்சு முடிவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அன்னையர் நாளின் அன்னை குறித்த தேடலையும் நாடலையும் மேற்கொண்டேன்.

அமெரிக்க சிவில்வார், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தில் கொந்தளிப்புகள் மேலோங்கி இருந்தன. பிள்ளைவளர்ப்பில் விழிப்புணர்வு வேண்டி, உள்ளூர் அளவில் தாயார்களுக்கான சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வு ஊட்டி வந்தார் யேனா ஜார்விஸ் என்பார். அடுத்தடுத்து அன்னையர்கள் நலம், கடமைகள் கருதிப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார் யேனா.

1905ஆம் ஆண்டு மறைந்த தம் தாயாரின் செய்த பல தியாகங்களை மேற்கோள் காட்டி, 1908ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட வழிவகுத்தார் யேனா அவர்கள்.

தொடர்ந்து யேனா அவர்கள் மேற்கொண்ட அலுவல்களின் வழி, குடியரசுத் தலைவர் வுட்ரோ வில்சன் அவர்கள், மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை நாட்டின் அதிகாரப்பூர்வமான அன்னையர் நாளாகவும் விடுமுறைநாளாகவும் அறிவித்தார்.

நாடெங்கும் அன்னையர்நாள் பரபரப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. யேனா அவர்கள் சொல்லொணாத்துயர் கொண்டார். நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியிலிருந்து அன்னையர் நாளை நீக்க வேண்டுமெனப் போராடவும் விழைந்தார். காரணம்? அத்தகு நாள் அதன் நோக்கத்தில் இருந்து, அடிப்படையில் இருந்து விலகி, நழுவி, வணிகமயமாக்கப்பட்டதுதான் காரணம். அரசாங்கத்துடன் பேசிப் பேசி, தம் மறைவுக்குச் சற்று முன்பாக, 1948ஆம் ஆண்டு, நீக்கப்பட்டதைக் கண்டு சற்று மனம் ஆற்றிக் கொண்டார்.

இருந்தாலும், இன்றளவும், அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது. அன்னையர் நாளின் அன்னைக்கு நாம் செய்யும் தொண்டு என்னவாக இருக்க முடியும்? உள்ளபடியே அவரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டு செயற்படுவதால் மட்டுமே அது ஈடேறும்.

மகவினை ஈன்றுகின்ற போது ஒருவர் தாய் ஆகின்றார். அதன் நிமித்தம் அவர் பல்வேறு அர்ப்பணிப்புகளை, தன்னலம் கருதாமல் தியாகங்களைச் செய்கின்றார். ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு என வர்ணிப்பர். அதற்கும் மேற்பட்டு, மகவு ஈன்றபின்னரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே மீள்கின்றார். உயிர்நீர்களின்(hormonals imbalance) சமன்பாடின்மை நிமித்தம் மனச்சோகை(postpartum depression), தாய்ப்பால் ஊட்டுதற்சிக்கல்கள், தன்னுடற்கட்டுமான மீள்பணிகளெனப் பலவும்.

பிரசவத்திற்குப் பிறகான மனச்சோகை என்பது 80% பெண்களுக்கு ஏற்படுவதாகவும், எழுவரில் ஒருவருக்கு அது பெரும்சிக்கலாகவே உருவெடுப்பதாகவும் அற்வியற்கட்டுரைகள் சொல்கின்றன. பெரும்பாலானோர் இதனை இனம் கண்டு கொள்வதே இல்லை. மாறாக, பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் என்பதாகக் கருதி விடுகின்றனர். நீண்டநாள்ச் சிக்கல்களாக இன்னபிறவும். According to the WHO, more than a third of women experience lasting health problems after giving birth, including:

Pain during sexual intercourse (30%)

Low back pain (32%)

Anal incontinence (19%)

Urinary incontinence (8-31%)

Anxiety (9-24%)

Depression (11-17%)

Perineal pain (11%)

Fear of childbirth (tokophobia) (6-15%)

சும்மா, அன்னையர் நாளில் லாலா பாடி, குளிர்விப்பதால் மட்டுமே மேன்மை கிட்டிவிடுமா? இது போன்றவற்றை வெளிப்படுத்தி, நல்லதொரு புரிதலையும் ஒத்துழைப்பையும் கவனிப்பையும் நல்குவதால் மட்டுமே, அன்னையர் நாளின் அன்னையாரான யேனா ஜார்விஸ் அவர்களின் புகழுக்கு வலுசேர்க்க முடியும். மாந்தகுலத்துக்கும் மேன்மை கிட்டும். அன்னையர் நாள் வாழ்த்தும் வணக்கமும்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

4/03/2024

திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?

 திருமணங்கள் நடப்பதில் தேக்க நிலையாமே?


the number of girls born per 1,000 boys in Tamil Nadu are 932 in 2017 to 933 in 2018.


source: https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-slow-in-bridging-gender-gap-at-birth/articleshow/77215998.cms


1. ஆக, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவு.


2. இந்த பற்றாக்குறையைச் சரிக்கட்ட, வயதிற்குறைந்த பெண்களைத் திருமணம் செய்வது ஈடுகட்டி வந்தது. எடுத்துக்காட்டாக, 29 வயது ஆடவன் 20+ வ்யதுள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கல் என்பது, கல்வியையும் வேலைவாய்ப்பையும் பெண்களுக்கும் கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அப்போதுதான் நாட்டின் உற்பத்தித்திறன் கூடும். எனவே 29 வயதுள்ள ஆடவனுக்கு 25 வ்யதுக்குக் கீழுள்ள பெண் கிடைப்பது அரிதினும் அரிது.


3. 25+ வயதில் கல்வி + வேலையுடன் திருமணத்திற்கான இடத்தை அடைகின்ற பெண்ணுக்கு இன்னும் லீடர்ஷிப் வேலை என்பதான ஆசை வரக்கூடும். இப்படியாகப் பெண் காலம் தாழ்த்தத் தாழ்த்த ஆணுக்கான வாய்ப்பு அரிதாகிப் போகின்றது.


4. இதுதான் திருமண வாய்ப்புகள் காலத்தாழ்ச்சியாவதற்கான காரணங்கள். அதை விடுத்து, பெண்கள் நிபந்தனை, அப்படி இப்படி என்பதெல்லாம் விரக்தியின்பால், அச்சத்தின்பால் ஏற்படுவதே. 


5. சீரின்மை


ஒரு ஆண் குழந்தை பிறக்கின்றது. நிப்பாட்டிக் கொள்வார்கள்.

ஒரு பெண் குழந்தை பிறக்கின்றது. மீண்டும் ஓர் ஆண்மகவுக்காக இரண்டாவது குழந்தை.


இத்தகைய போக்கு சீரின்மையை ஏற்படுத்தி விடுகின்றது.


6. பொருள்முதல்வாதம்: நல்லவீடு, கடைச்சாப்பாடு, நாளொரு உடுப்பு, வீட்டிலேயே சினிமா தியேட்டர், நவீனங்கள், நீச்சற்குளம் இப்படியான கன்சூமரிசம் பெருகப் பெருக பெண்ணின் வருமானம் இன்றியமையாததாகின்றது. கூடவே அவளின் இன்செக்யூரிட்டி ஃபீலிங்கும் கூடி விடுகின்றது. இதற்காக நாம் அந்தப் பெண்ணைக் குறை கூறலாகாது. இது அவளின் குற்றம் அன்று. சமூகத்தின் குற்றம். தன்னைச் சுற்றிலும் நான்கு பேர் அப்படியாக இருக்கும் போது, இயல்பாகவே அவளுக்குள்ளும் ஆசை பிறக்கத்தானே செய்யும்?


7. அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்குமான சமச்சீரின்மை. பொருளாதாரமயமாக்கலின் பொருட்டு நிலங்களின் விலை பன்மடங்கு கூடிவிட்டது. வணிகவாய்ப்புகள் பெருகி விட்டன. இதன் நிமித்தம் சொத்துமதிப்பு கூடிவிட்டது. பர்ச்சேஸ் பவர், வாங்குதிறன் கூடிவிட்டது. இதன் விளைவாக மதிப்பீடுகள் புறவயப்பட்டுப் போய் விட்டன.  அக விழுமியம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதன் காரணமாக ஏற்படும் முரண்கள் திருமண ஆசையைச் சிதைத்து விடுகின்றன. 


8. பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏற்படும் இன்செக்யூரிட்டி ஃபீலிங். நம்மை யார் கவனிப்பார்கள் என்பதான கவலை. மகனோ, மகளோ, அவர்களை நம்பி இருத்தல் சரி வராது. உலகமயமாக்கலின் விளைவு இது. அவரவர் இருத்தலுக்கு அவரவரே பொறுப்பு. பெற்ற பிள்ளைகளுக்குச் சொத்து சேர்க்க உழைப்பதைக் காட்டிலும் முட்டாள்த்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிட வேண்டும். நம்மை நம் வழியில் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். மேலைநாட்டுப் பழக்கவழக்கம் அப்படித்தான்.


9. Individualism. தன்னுமை. சட்டத்துக்குட்பட்டு வாழ எந்த ஒருவருக்கும் முழு உரிமை உண்டு. அவரவருக்கு அவரவர் ஆசை, விருப்பங்கள். அதனில் தலையிடுவதற்கு எந்த அப்பா, அம்மாவுக்கும் உரிமை இல்லை. வேண்டுமானால் ஆலோசனை கூறலாம். அவர்களின் ஆசைக்கும் விருப்பத்திற்கும் உறுதுணையாக இருக்கலாம். உலகமயமாக்கலின் விளைவுகளுள் இதுவுமொன்று. முன்பெல்லாம் பெற்றோரின் பொருளாதார உதவி கடைசிக்காலம் வரையிலும் தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. 25 வயதில் மாதம் இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நிலை வந்து விட்டது, பெண்களுக்கும். புரிந்து நடந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. தத்தம் ஆசையை பிள்ளைகளிடத்திலே, பிள்ளைகளின் குடும்பத்திலே திணிக்க முயல்வது குற்றம். செண்ட்டிமெண்ட்டுக்கெல்லாம் இடமில்லை.


10. ஆணாதிக்கம் என்பது எளிய சொற்களிலே இருக்கின்றது. உண்ணுகின்ற உணவிலே இருக்கின்றது. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது.  அத்தகைய ஸ்டீரியோ டைப்கள் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். (எடுத்துக் காட்டு:)நடிகர் மங்கிகாந்த், நடிகை மங்கம்மா என்கின்றோம். ஏன் நடிகன் மங்கிகாந்த் எனச் சொல்லக் கூடாது? நடிகை, நடிகன். பொதுப்பால் நடிகர். இப்படியான முரண்பாடுகள், Generation-Z (born after 1995) தலைமுறையினரிடம் சினத்தைக் கிளறிவிட வல்லது. ஆகவே, சமூகம் மேலைநாட்டுப் பழக்கவழக்கங்களைக் கற்றுத் தெளிதல் வேண்டும். உலகமயமாக்கல் மேம்பாடு வேண்டும், ஆனால் மேலைநாட்டுப் பழக்கவழக்கம் கூடாதெனக் கொடி பிடித்தல் கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிந்து கொள்வதற்கு ஈடானது.


-பழமைபேசி.

1/17/2024

யாரிந்த ஓலையக்காள்?

 

பொங்கற்திருவிழா என்பது ஏராளமான விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்தவொன்றுதான் ‘பூ நோன்பு’ என்பதாகும். மார்கழி மாதம் முழுதும் பாவையைத் தொழுவதும், அதன் நிமித்தம் ஆண்டாளின் திருப்பாவை படிப்பதும் இடம் பெறுகின்றது.

விடியற்காலையில் கதிரவன் எழுச்சிக்கும் முன்பாகவே துயில் கலைந்து குளித்து வாசல் தெளித்து வளித்துக் கோலமிட்டு அக்கோலத்தின் நடுவே சாணப்புள்ளையார் அல்லது மஞ்சள்ப்பிள்ளையாரை நிறுவி, அதன் உச்சியில் பூசணிப்பூ சூடி திருப்பாவையின் அன்றைய பாடலைப் பாடி இறைவணக்கம் செலுத்துவது இளம்பெண்டிரின் மரபு.

நாள்தோறும் வீட்டு வாசலில் நிறுவப்படுகின்ற சாணம்/மண்/மஞ்சள்ப் பாவைகளை (பிள்ளையார்களை) பூமியின் குறியீடாகக் கருதுகின்றார் நாட்டார்வழக்காற்று ஆய்வாளர் வானமாமலை அவர்கள்.  அன்றாடமும் புதுப் பாவையை வாசலில் நிறுவுகின்ற போது முந்தைய பாவைகளை எல்லாம் சேகரம் செய்து வைத்துக் கொள்வர்.

பொங்கல் விழா முடிந்த மறுநாள், சேகரம் செய்யப்பட்ட பாவைகளுக்கு வழியனுப்புச் செய்யும் பொருட்டு, பூக்கள் கொய்து அவற்றைப் பாவைக்குப் படைத்த பின்னர், சேகரம் செய்து வைத்துக் கொண்ட முப்பது பாவைகளையும் சாடுகளில் ஏகிக்கொண்டு ஊரில் இருக்கும் பெண்களெல்லாம் ஊர்க்கிணறு, குளக்கரை, கண்மாய்க்கரை நோக்கிச் சென்று அங்கே அவற்றை நீரிலிட்டு வழியனுப்பி வைப்பர். இப்படியான நாளை, பூப்பொங்கல், பூநோன்பு, பூப்பறிக்கிற நோம்பி எனப் பலவாகக் குறிப்பிடுவது வழக்கம்.

பிற்பகலில் வீட்டில் இருந்து கிளம்பி கூட்டம் சேர்ந்து சேர்ந்து ஊர்ப்பெரியவர் வீட்டு வாசலுக்குச் செல்வர். செல்லும் போதேவும் பாடலும் கும்மிகளுமாகவே செல்வர். அங்கே ஊர்ப்பெரியவர் வீட்டுச் சீர்வரிசை(பொங்கல், தின்னப்பலகாரங்கள், மோர், நீர் இப்படியாகப் பலவும்) பெற்றுக் கொண்டு,  தெருத்தெருவாகச் சென்று ஊர்வழிகளிலே தோட்டங்காடுகளிலே இட்டேரிகளிலே இருக்கின்ற ஆவாரம்பூ, பொன்னரளி, ஊணான்கொடி மலர்களென பூக்கள் பறித்துச் சேர்ப்பர். இடைக்கிடையே பாட்டும் கும்மியடியும் நடக்கும். இப்படியான வைபோகத்தில் இடம் பெறும் பிரபலமான பாடல்தான் “ஓலையக்கா கொண்டையிலே ஒருசாடு தாழம்பூ..”.

2010ஆம் ஆண்டு வாக்கில் இணையதளத்தின், கொங்குநாட்டின் ஓலையக்கா பாடலை எவராவது தந்தால் நான் பணம் கூடத் தயாராக இருக்கின்றேனெனச் சொன்னார் எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்கள். எனக்கு அந்தப் பாடல் பரிச்சியமானவொன்று. அதே நேரத்தில் இடதுசாரித் தோழர்களும் அதே பாடலை இசைக்கோப்பாக வைத்திருந்தனர். அதன் வடிவத்தை எழுத்தாக்கிப் பகிர்ந்தேன். அதே காலகட்டத்தில், நண்பர் வேளராசி அவர்கள் கோவைக்கிழாரின் ‘எங்கள் நாட்டுப்புறம்’ எனும் நூலின் படியை பேரூர் கலைக்கல்லூரியில் இருந்து பெற்றுத் தந்தார். அந்நூலில் பாடலின் வேறொரு வடிவம் கிடைக்கப்பெற்றேன். ஊருக்குச் சென்றிருந்த போது சேவல்களின் இரகங்களைப் பற்றி ஆய்வதற்காக வெள்ளக்கிணறுப் பகுதிகளுக்குச் சென்றிருந்த போது அதன் பிறிதொரு வடிவம் கிடைக்கப் பெற்றேன். ஆய்வாளர் வானமாமலை, கவிஞர் சிற்பி, எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலரும் இப்பாடல் குறித்து எழுதி இருக்கின்றனர் சிற்சிறு மாற்றங்களுடன். அவற்றையும் வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. 

2011ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பொங்கலன்றும் நாம் இந்தப் பாடலைத் தொடர்ந்து பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது. https://maniyinpakkam.blogspot.com/2011/12/blog-post_22.htmlஇந்த ஆண்டும் அவ்வண்ணமே பாடலைப் பாடிப் பகிர்ந்திருந்தோம். மருத்துவர் ஜெரால்டு அவர்கள், யார் இந்த ஓலையக்கா என வினவினார். அதன் பொருட்டே இக்கட்டுரை அமைகின்றது.

மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய ஊர்களின் வரிசைக்கும், சத்தியமங்கலம், கொடிவேரி, நம்பியூர், அவிநாசி ஆகிய ஊர்களின் வரிசைக்கும் இடையில் அமைந்திருக்கின்ற நிலப்பகுதியில் ஓலையக்கா, மாலையக்கா ஆகிய இரு உடன்பிறப்புகளையும் தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு இன்றளவும் உண்டு. ஆற்றைக்கடந்து வர முற்படுகையில், திடீர் மேல்வெள்ளம் ஏற்பட்டுச் சகோதரிகள் மறுகரையிலேயே இருந்து விடுகின்றனர். உற்றார் உறவினரெல்லாம் இக்கரையில். தத்தளிக்கின்றனர். கடைசியில், எதிரிகளிடம் அகப்பட்டு விடக் கூடாதென்பதற்காக தீமூட்டித் தம்மை மாய்த்துக் கொள்கின்றனர் இருவரும். அவர்கள் அக்கூட்டத்தினரைக் காத்துவருவதான வழக்காறு நிலவுகின்றது. ஆண்டுக்கொருமுறை பனையோலைகளால் ஓலையக்கா, மாலையக்கா கட்டமைக்கப்பட்டு அவர்களுக்கான நினைவேந்தல் நோன்பு கடைபிடிக்கப்படுகின்றதென, ‘ஓலையக்காள் வெறும் பாடலல்ல, வரலாறு” எனும் நூலில் பதிவு செய்கின்றார் கி.பத்மநாபன். அதன்நிமித்தம் செய்திக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. https://m.dinamalar.com/detail.php?id=3387894 பாடலின் தழுவல்கள் / மருவல்கள், அவரவர் இடம் பொருள் ஏவலுக்கொப்பப் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது நம் புரிதல்.

பூப்பறிப்பு நோன்பில் கலந்து கொள்ளவிருக்கும் ஓலையக்கா எனும் பாங்கில் இடம் பெற்றிருக்கும் பாடல்.  “ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்றவர்களெல்லாம் "ஓலே......'"என்று கூறுவார்கள்.


ஓலேயக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலைகு றைச்சலென்று
மயங்குறானாம் ஓலையக்கா(ஓலேய்)

சேலை.அ ரைப்பணமாம்
சித்தாடை கால்பணமாம்
சேலைகுறைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா(ஒ.லே)

தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போறா ஓலையக்கா (ஓலேய்)

மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனுட்டு ஒலையக்கா
மேற்கே குடிபோருள்(ஒ.லே)

நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போறாளாம் ஒலையக்கா(ஓலேய்)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போருள் ஒலையக்கா(ஓலேய்)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
போறாளாம் ஓலையக்கா(ஓலேய்)

ஒலையக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு(ஓலேய்)


விளிம்புநிலைப் பெண் தன் வறுமையை வெளிப்படுத்துமுகமாக அமைந்த பாடலின் வடிவம்:

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை....யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்

மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்

சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா

கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்

கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு

ஓலை...யக்கா ஓலை
ஓலை...யக்கா ஓலை


-பழமைபேசி, pazamaipesi@gmail.com