நீங்களும் கூட இதைப் பார்த்திருக்கலாமாயிருக்கும். வாட்சாப்களில் ஒரு மீம் இப்படியாக வைரல் ஆகிக் கொண்டிருந்தது. “எல்லாருக்கும் பிடித்தமானதாக இருக்க வேண்டுமானால், பணமாகத்தான் பிறக்க வேண்டும்” எனும் துணுக்குடன் நகைச்சுவைக் கலைஞர் வடிவேலு அவர்களின் ஒரு முகபாவனை. கண்டவர்கள் சிரித்துச் சிலாகித்தனர். நான் இடைமறித்தேன்.
நமக்குப் பணம் வந்து சேர்கின்றபோது, இன்பம் கொள்கின்றோம். அதுவே எதிர்பாராத விதமாகவோ, வஞ்சகத்தின் பொருட்டோ பறிபோகின்றபோது வருத்தம், துக்கம் கொள்கின்றோம். உயிரையே கூட மாய்த்துக் கொள்கின்ற செய்திகளைக் காண்கின்றோம். மேலும், நாம் ஏன் எல்லாருக்கும் பிடித்தமானவர்களாக இருக்க வேண்டும்? அப்படியானால் பொய்யாக வாழத்தலைப்படுகின்றோம் என்பதுதானே பொருள்? கல்யாண்ஜி அவர்களின் ஒரு கவிதையைச் சுட்டிக் காண்பித்தேன்.
அடுத்தவரை இடிக்காமல்
கைவீசிக் கைவீசி
காலார ஒரு நடை
நடந்து வரவேண்டும்
அது போதும் எனக்கு!
நேரடியாகப் படித்துப் புரிந்து கொண்டு கடப்பதல்ல எழுத்து. ஒரு கணமாவது அதன்பாற்பட்ட வேள்வியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவர் மீதான தனிப்பட்ட பண்புகளைச் சுட்டிக்காட்டி வம்பு வளர்க்காமல், மனம் தங்கு தடையின்றித் தன் பயணத்தை மேற்கொள்கின்ற தன்னுமை(liberty) இருந்தால் போதும் எனக்கு என்பதாகப் படிமம் கொள்கின்றது கவிதை. அதுதான் வாழ்வின் முழுப்பயனையும் நமக்கு ஈட்டித்தரும்.
நீர்ப்பரப்பில் ஒரு மீன்
துள்ளிவிழுகையில் கண்டதோ சுடும்பாறை
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை!
தேவதேவன் அவர்களின் இந்தக் கவிதையைப் பலவாறாகப் புரிந்து கொள்ளலாம். அவரவரின் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. அறிவியல் ரீதியாகப் பார்க்குங்கால், சார்பு, சுழற்சி, பரிணாமம் என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம். நீராக இருக்கின்றது. பாறையின்பாற்பாட்டுக் கிடக்கின்றது. பறவையின் அலகில் மீனாக இருக்கின்றது. பின் அது பறவையாகவே ஆகிவிடுகின்றது.
சமூகவியல் ரீதியாகப் பார்க்குங்கால், மற்றுமொரு கோணத்தை நமக்குள் புலப்படுத்துகின்றது. நீர்ப்பரப்பில் இருக்கும் மீன், மனலயிப்பில் துள்ளி விழுகின்றது. விழுந்தபின்னர்தாம் தெரிகின்றது அது சுடும்பாறை என்று. சூடு தாங்காமல் மீண்டும் துள்ளுகின்றது. துள்ளலைக் கண்டு வந்த பறவை அலகால் கவ்விச் செல்கின்றது. கொடுங்கோலில் அகப்பட்டுக் கொண்டோமேயெனத் துள்ளுகின்றது. அடுத்த கணம் அது பறவையாகவே ஆகிவிடுகின்றது. பேச்சுகளும் அறிவிப்புகளும் போற்றுதல்களும் விளம்பரங்களும் குளிர்விப்புகளுமாய் நம் மனத்தைக் கொள்ளை கொள்ள எத்தனை எத்தனை? இடைவெட்டுப் புரிதலின்றி நேரடிப் புரிதலின்பாற்பட்டு மனத்தைக் கொடுக்கின்றோம். பிறகுதான் சுடுவது புலப்படுகின்றது. அதிலிருந்து விடுபட வழியைத் தேடுகின்றோம். கடைசியில் அவர்களின் இலக்கில் கரைந்து விடுகின்றோம் என்பதையும் புலப்படுத்துவதாக அமைகின்றது கவிதை.
அடுத்தவர் என்ன நினைக்கின்றார்? எல்லாரும் செய்கின்றனர், நாமும் செய்தாக வேண்டுமென்கின்ற இலயிப்பு(bandwagon effect) போன்றவையெல்லாம் ஒருபோதும் தன்னுமையை ஈட்டித் தராது. அடுத்தவரை இடிக்காமல் கைவீசிக் கைவீசி தன்பாட்டுக்குக் காலார நடைநடந்தால் போதுமானது.