1/30/2022

சாவு

நாகரிகம், பண்பாடு, வாழ்வுமுறை என்பனவற்றை, உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்பு, உலகப் பொருளாதாரமயமாக்கலுக்குப் பின்பு என நாம் பகுக்கலாம். என்ன காரணம்? பல காரணங்கள். முக்கியமாக, நகரமயமாதல், தொழில்மயமாதல், உலகளாவிய தகவற்தொழில்நுட்பத்தின் காரணம் மனிதனுக்கான தன்னார்ந்த வேலைப்பாடுகள் என்பவற்றைச் சொல்லலாம்.

வேளாண்மை, இயற்கைசார் தொழில்களான மீன்பிடி, வேட்டையாடல், குடிசைத்தொழில்கள் போன்றவையெல்லாம் கணிசமாகக் கைவிடப்பட்டு மக்கள் தொழிற்சாலைகளுக்குச் செல்வது தேவையாகிப் போனது. அதன்நிமித்தம் ஊரகங்களிலிருந்து நகரங்களை நோக்கி, அடுக்ககங்களை நோக்கிப் பயணிக்கப்பட்டனர். செல்போன் என்பது, கணினி, டிவி, தந்தி, தபால், சினிமா, நாடகம், விளையாட்டு எனப் பலவற்றையும் தன்னகத்தே இழுத்துக் கொண்டது.  பிழைப்புக்கொரு வேலை, வேலை தவிர்த்த பொழுதில் செல்ஃபோன் என்றாகிவிட்டது. இதனாலே வாழ்வுமுறையில் பெருத்த தாக்கம். மனிதனை மனிதன் சார்ந்திருக்கத் தேவையில்லை என்றாகிவிட்டது. உலகின் மக்கள்தொகை சரியும் என்பது கணிப்பாக இருக்கின்றது. சில பல நாடுகளிலே ஏற்கனவே மக்கள்தொகை குறையத் துவங்கி விட்டது. தாம்பத்திய வாழ்க்கையைக் கூட தகவற்தொழில்நுட்பம் விழுங்கிக் கொண்டது. இனப்பெருக்கத்துக்கு ஊட்டத்தொகை அறிவிக்கப்படுகின்றது. பையன்களை ஆண்மைமிகு பையன்களாகப் பள்ளிகள் ஆக்கித்தர வேண்டுமென சீனநாட்டுக் கல்வித்துறை அறைகூவல் விடுக்கின்றது.

உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்பு(உ.பொ.மு) மக்கள் பழைய வாழ்வுமுறையின் பண்புகளை அறிந்தவர்கள். உ.பொ.பி மக்களுக்கோ அவற்றை அறிந்த கொள்ள நாட்டம் இல்லை. அல்லது உ.பொ.முவினர் சொன்னாலும் புரிவதில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, உ.பொ.மு மக்கட்தொகை வேகமாகக் கரைந்து வருகின்றது. எஞ்சி இருக்கும் உ.பொ.முவும் பழையனவற்றைக் கடாசிவிட்டு(இயலாமைதான்) உ.பொ.பி வாழ்வுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். அதன்விளைவாகப் பல மேம்பாடுகள், கூடவே பல பின்னடைவுகள். உலகமயமாக்கலின் பொருட்டு, மேலைநாட்டுப் பழக்கங்களும் இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன. தவறில்லை. ஆனால் நல்லபலவற்றையெல்லாம் மக்கள் கண்டுகொள்வதில்லை. அந்நிய நாட்டில் வாழும் நம்மவர்கள் சொன்னாலும், ‘இவன் அங்கிருப்பதால் நமக்குப் பாடமெடுத்துப் பகட்டுப் பசப்புக் காட்டுகின்றான்’ எனும் மனம் மேலிடுகின்றது. இதில் முக்கியமானவொன்றுதான், சாவு, சாவினை எதிர்கொள்தல், துயரில் பங்குபெறலுக்கான முறைமைகள் என்பதும்.

கிராமத்திலே சாவு நேர்ப்பட்டால், ஊருக்கே அது துக்ககாலம். ஊர்வாயிலில் இருக்கும் தோரணங்கள் அவிழ்க்கப்படும். கோலங்கள் போடப்படாது. வாசல்கள் தெளிக்கப்படாது. நல்லடக்கம் முடிந்தபின்னர்தாம், எல்லா வீட்டு வாசல்களிலும் வாசற்தெளிப்பு இடம் பெறும். ஊருக்குள்ளே நல்லகாரியங்கள் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்படும். இப்படியெல்லாம் மரபுகள் இருந்தன. தற்போது அப்படியில்லை. அதைத் தவறென நாம் கருதலாகாது. ஆனால் அதே வேளையில், அதற்கான நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்தானே? ஊரே சேர்ந்து, அவரவரது அன்றாடப் பணிகளைக் கைவிட்டுவிட்டு துக்கம் கடைபிடிக்க வேண்டுமென்பதல்ல. ஆகக் குறைந்தபட்சம், உற்றார், உறவினர், நண்பர்கள் துயராற்றப்படுகையில் கலந்து கொண்டாக வேண்டும். மேலைநாடுகளிலே அதற்கான நெறிமுறைகள் உண்டு. பணிபுரிகின்ற அலுவலகம் துயராற்றுப்படுகையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. தொடர்புடைய சமயம்சார் அமைப்புகள் நேரடியாகக் களத்தில் இறங்குகின்றன. சட்டதிட்டங்களிலே அவற்றுக்கான காப்பீடுகள், முறைமைகள், துயர்காலப்பயனீடுகள் எனப்பலவற்றுக்கும் இடமளிக்கப்பட்டு இருக்கின்றது. இவற்றையெல்லாம் மக்கள் பேசித்தான் கடக்க வேண்டும். தனிப்பட்ட உள்ளக்கிளர்ச்சிகளுக்காக அடுத்தவரது மனத்தை நோகடிக்கச் செய்யும் மீம்களையும், ஃபேக்வீடியோக்களையும் பகிர்ந்து சுய இன்பம் கொள்வதிலே இல்லை மேம்பாடு. அவையெல்லாம் அவரவர் மனத்தின் கோணல்களாகப் மனப்பதிவில் நிலைபெற்று, மன அழுத்தம், சோகை, வாட்டம் போன்றவற்றுக்குத்தான் வழிவகுக்கும். 

ஒரு நண்பனாக, துயர்காவியிருப்பவருக்கு நான் என்ன செய்துவிட முடியும்?

நேராகச் சென்று சந்தித்துக் கைகளைக் கோர்த்துக் கொண்டாலே போதும். துயரில் ஆழ்ந்திருப்பவருக்கு பேராதரவுச் சமிக்கைகள் தொடுவுணர்வு வழியாகப் பாய்ச்சலெடுக்கும். செல்லவில்லை. என்ன நடக்கும்? அன்பார்ந்தவரின் மரணம், வெற்றிடம் என்பது ஒரு வலியென்றால், இப்படியானவர் வரவில்லையே என்பது பெருவலியாக உருவெடுக்கும். அனாதை போல அவர் உணருவார். அதனாலே நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை போன்ற சிக்கலகள் உருவெடுக்கும். மரணத்தின் காரணம் ஏற்பட்ட வெற்றிடத்தைக் காட்டிலும், ஏதற்றதன் பெருவலி உளைச்சலைப் பன்மடங்காக்கும்.

துயராற்றுதலின் பரிமாணங்களைத் தெரிந்து வைத்துக் கொள்தல் அவசியம். இழப்புக்குள்ளானவரது உடல்நலம், மனநலம் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத் தேவைகள், அன்றாடத் தேவைகளில் நாட்டம் குறையக் கூடும். அப்படியான நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஏதுவாக இருந்து தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம். அவையாவற்றுக்குமான பணச்சூழ்நிலை தேவைப்படாமல் இருந்தாலும் கூட, அவர்களின் பணிகளில் தொய்வேற்படலாம். அதனைக் கண்டு உதவுவது தேவையானது.

அவர்களைப் பேசவிட வேண்டும். அழவிட வேண்டும். அவர்கள் பேச, நாம் பொறுமையாகச் சொல்வதைச் சகிப்போடு கேட்டுப்பழகுதல் நன்றாம். ஒரே விசயத்தை, இழந்தவரின் நினைவுகளை, இப்படிப் பலதையும் அவர்கள் கொட்டித்தீர்க்க இடமளிக்க வேண்டும். அப்போதுதான் மனத்தின் பாரம் குறைந்து அது சமநிலைக்கு ஆட்படும். சமநிலையை எட்டினால்தான் அவர்களின் சாமான்யவாழ்க்கை நடைமுறைக்கு வரும்.

குற்றேவற்பணிகளைச் செய்து கொடுக்கலாம். வீட்டுப் பராமரிப்பு வேலைகளில் பங்கெடுக்கலாம். உணவுக்கான தேவைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்கலாம். குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, கவனிப்புகளிலே பங்கெடுக்கலாம். மின்மயானம் சென்றோம் வந்தோமென இருந்தகாலும் போய், அலைபேசியில் சடங்காகப்பேசும் காலம் வந்தாகிவிட்டது. இழந்தவர் எரியூட்டப்பட்டநாள் மாலைநேரத்து வீட்டை எண்ணிப் பாருங்கள். வெறுமையாகிக் கிடக்கும் வீட்டிலே சிலர், குறிப்பாக நண்பர்கள் சிலர் இருக்குங்கால் அதைவிடச் சிறந்த தொண்டு வேறெதுவும் இருக்க முடியாது. சாதல் என்பது விடுதலை. வலியில்லை. ஆனால் சாதலின் பொருட்டு இழப்பை நேர்கொள்ளும் அந்த முதற்சிலநாட்களின் வெறுமைதான் மரணவலி என்பதாகும். ஆகவே அப்படியான பொழுதில் உடனிருத்தல்தான் மனிதனின் தலையாயக் கடமை.

துயரை, துக்கத்தை, மடைமாற்றிப் பொழுதினைக் கழித்தல் எதிர்விளைவுகளையே பெருக்கும். ஆமாம். துணை இல்லாப் பொழுதுகளில், வெறுமையும் இழப்பும் காவிக்கொள்ளும் அபாயம் உண்டு. ஆகவே துயரை, துக்கத்தைப் பங்குபோடத் தலைப்பட வேண்டும்.

கொண்டாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லவில்லையாயினும் துயராற்றுப் பொழுதுகளுக்குச் சென்றே தீர வேண்டும். அதன்வழி, அவரவர் மனத்துக்கும் நலம் பயக்கும்.  இழந்தவரின் கோபதாபங்களுக்கு ஆட்பட்டிருக்கலாம். அல்லது, அவரது ஆசைகளை நிறைவேற்றித் தராமல் இருந்திருக்கலாம். அவையெல்லாம் குற்றவுணர்வுகளாக மாறி நம்மைத் துரத்தத் துவங்கலாம். துயராற்றில் கலந்துகொள்வதின்வழி, வடுக்கள்நீங்க வழி பிறக்கும். You can’t truly heal from a loss until you allow yourself to really feel the loss. The pain passes, but the beauty remains. Let's reach out to our near and dear as and when it is warranted.

Grieving doesn’t make you imperfect. It makes you human. -Sarah Dessen


1/28/2022

நிமலன்

குடும்பம் வறுமையில் ஆட்பட்டிருந்த காலம்.  35 வீடுகளே இருக்கும் ஒரு மிகவும் எளிய சிற்றூரில் குடியிருந்தேன். எதற்கும் சிலபல மைல்கள் நடந்துதான் செல்ல வேண்டும். ஊரில் ஒரு கடை கூடக் கிடையாது. அவசரத்துக்கு ஏதாகிலும் வேண்டுமென்றாலும் கூட, அடுத்தவரிடம்தான் யாசகம் பெற வேண்டும்; கையில் பணமிருந்தாலும் கூட. காலை ஏழு மணிக்கு வகுப்பு. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து என் அண்ணா சமைத்து டிஃபன் பாக்சில் போட்டுக் கொடுப்பார். தூக்கமும் கலக்கமுமாக நடந்து மெயின்ரோட்டுக்கு வந்து, பஸ் பிடித்து ஆறே முக்கால் மணிக்குக் கல்லூரியின் முன் வந்திறங்க வேண்டும். ஒவ்வொருநாளும் சவாலான நாள்தான். பெரும்பாலும், ஒரு டம்ளர் வரக்காப்பியுடன்தான் வகுப்புக்கு வருவோம். கிராமத்து மாணவர்களைச் சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். வறிய தோற்றத்துடன், அதே உடுப்புகளை அடுத்தடுத்த நாட்களில் என்பதாக.  வகுப்பில் நான் மற்றவர்களுடன் பேசியது மிக மிகக் குறைவு. 

தாழ்வுமனப்பான்மை ஒருபுறம். வறுமை ஒருபுறம். கல்லூரியின் ஆங்கிலவழிக்கல்வி, நகரப்பண்பாடு இதெல்லாம் தமிழ்மீடிய ஊர்ப்புற மாணவர்களுக்கு முற்றிலும் புதியது. வயது 15. மனமெல்லாம் பயம். யாராவது அதட்டிப் பேசினால்கூட அழுதுவிடும் மனநிலையில்தான் முதலிரண்டு ஆண்டுகளும் கழிந்தன. அப்படியான காலகட்டத்தில்தான் இவனைப் பார்த்து அதிசயத்தோம். சக கிராமப்புற மாணவன். ஆனால் துடுக்கோடு திரிவான். அவனைப் போல நம்மால் இருக்க முடியாதாயென்கின்ற ஏக்கம், அவ்வப்போது வந்து போகும். முதலாம் ஆண்டு, ஒரு சில மாதங்கள் கழிந்தநிலை, மார்கழிமாதம், நல்லகுளிர், காலையில் எழுந்து வருவது சிரமமான காரியம். இவன் பத்து நிமிடங்கள் லேட். ஆசிரியர் ராவ் அடிக்கப் பாய்ந்தார். இவனது டிஃபன் பாக்ஸ் நழுவிக் கீழே விழுந்து விட்டதும், அதில் இருந்த ’பட்டண ரவை உப்புமா’ மட்டும் வட்டவடிவில் பிரிந்து தனியாக உருண்டோடிப் போய் வெளித்திண்ணையிலிருந்து கீழே விழுந்து விட்டது. டிஃபன் பாக்ஸ் அங்கே கிடக்கின்றது. வகுப்பே சிரித்தது. கண்ணாடி போட்டிருக்கும் இவன் மலங்க மலங்க முழிப்பில். ஆசிரியர் பணம் கொடுத்து, சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்.

மனத்துக்கு ஏழு அடுக்குகள் உள்ளன. The seven-levels of mind have been explained by Upanishads by comparing them with the ‘Seven Horses of the Sun‘. Conscious Mind, Subconscious Mind, Unconscious Mind, Super Conscious Mind, Collective Conscious Mind,  Spontaneous Mind, Ultimate Mind என்பதாகப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள், அந்தந்த அடுக்குகளின் வீரியம், திறன் என்பது ஆளுக்காள் மாறுபடும். அதைப் பொறுத்து ஒவ்வொருவருடைய பண்பு, செய்கை, நடத்தை என்பது மாறுபட்டு இருக்கும். இவனுக்கோ உடனடி எண்ணம், ஸ்பாண்ட்டேனியஸ் என்பதன் தாக்கம் அதிகம். இப்படியான தன்மை உடையவர்களை நீங்கள் அவ்வப்போது எங்கும் காணலாம். 

இளம்பிராயத்து பிருந்தாவனத்துக் கண்ணன் கூட அத்தகைய தன்மை உடையவர்தான். வெண்ணெய்ச் சட்டிகளை உடைப்பான். குறும்புகளைச் செய்வான். காரணம், அந்தத் தருணத்து வேடிக்கைகளில் ஆழ்ந்து போகக் கூடிய தன்மை உடையவர்கள் இவர்கள். பின் விளைவுகளை யோசிக்க மாட்டார்கள். ஆனால் அடிப்படையில் நல்லவர்கள். காலஞ்சென்ற எழுத்தாளர் க.சீ.சிவகுமார் எல்லாம் இந்த வகைக்கு உட்பட்டவர்தாம். இப்படியானவர்களிடம், கலை, படைப்பாற்றல், நகைச்சுவை தூக்கலாக இருக்கும். இது அவர்களின் பலம்.  கால்குலேட்டிவ் மைண்ட் என்பது கான்சியஸ் மைண்ட் இருப்பவர்களுக்கானது. இவர்களுக்கு ஸ்பாண்ட்டேனியஸ் அதீதமாகப் போய்விடுவதால் கால்குலேட்டிவ் அளவு குறைவாகி, முனைப்பில்லாமல் மேம்போக்காக, பெரும்படியாக இருப்பதென்பது பலவீனமாகி விடும். காலப்போக்கில் சிலர் சமநிலையை அடைந்துவிடுவர்; சிலர் கடைசி வரையிலும் எதார்த்தமிகு பெரும்படியாகவே இருந்துவிடுவர்.

இப்படியானவர்களை ஊர்களிலே நீங்கள் பார்க்கலாம். அவரவர் பொழுதுபோக்கிற்காக, வேடிக்கைக்காக பயன்படுத்திக் கொள்வர். வேளை வந்ததும், அவரவர் போக்கில் சென்றுவிடுவர். அப்படியான பின்னணியில்தான், நானும் அவரின் வேடிக்கை, துடுக்குத்தனம் போன்றவற்றுக்கு பயனாளியாகிவிட்டேன். மற்றவர்கள் அவரை இன்ன சொல் என்றில்லை, அப்படியான சொற்களாலே பகடி செய்வர். இவரும் பதிலுக்கு அதேவண்ணம் செய்வார். சுற்றி இருப்பவர்கள் சிரிப்போம். எல்லாமும் சரி, எதையும் தனிப்பட்ட முறையில் பெர்சனலாக எடுத்துக் கொள்ளாத வரையிலும். The true secret of happiness lies in taking a genuine interest in all the details of daily life.

யாரும் யாரையும் துன்புறுத்த நினைப்பதில்லை. கூட்டமாகக் கூடும் போது, கூட்டத்தில் இருக்கும் எளியவர்மீது வேடிக்கைகள் பாய்வதும் பகடிகள் நிகழ்வதும் இயல்பு. ஆனால் சில தருணங்களில் நிலைமை கைமீறிச் சென்றுவிடும். At times, such behavior is repeated and habitual. நீங்களும் நாளைக்கே கூட இப்படியான மனிதர்களைச் சந்திக்கக் கூடும். அவர்கள் மீது கூடுதல் அன்பு செலுத்துவோம்; முற்றிலும் வேடிக்கைப் பொருளாக மட்டுமே ஆக்கிவிடல் தகுமா?

Never perfect, always genuine.1/27/2022

தனிமனித விமர்சனம் Personal Attack

வன்மம் என்பது காயப்படுத்தக் கூடிய கூரிய ஆயுதங்கள், பொருட்கள், உடலின் மீதான தாக்குதல் என்பது மட்டுமேயல்ல. சொற்களாலும் நேரடித் தாக்குதலற்ற செயற்பாடுகளாலும் கூட இடம் பெறும். எடுத்துக்காட்டாக, மனமறிந்தே பொய்ச்செய்திகளைப் பரப்புவதும் உருவாக்குவதும் கூட வன்மம்தான். அதுபோன்றதுதான் நற்பெயருக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதும், தனிமனித வாழ்க்கைச் செயற்பாடுகள், அந்தரங்கம் குறித்தானதுமான பேச்சுகளும் வசைகளும். இது டிஜிட்டல் யுகம். எல்லாமும் உடனுக்குடனே பதிவுகளாக நிலைபெற்று விடுகின்றன. ஆகவே, ’என்ன மாதிரியான சொற்களைப் பாவிக்கின்றோம், விமர்சனம் தொடுக்கின்றபோது பேசுபொருளின்பாற்பட்டுத்தான் பேசுகின்றோமா?’ என்பதெல்லாம் அறிந்து செயற்படல் காலத்தின் தேவை. 

அவதூறும், உண்மைக்குப் புறம்பானதுமான செயல்களைச் செய்தோமேயானால், அது நம்மைத் துரத்திக் கொண்டேயிருக்கும்; என்றோவொருநாள் அவை நம்மைப் பதம் பார்க்கக் கூடும். Your digital footprints speak volumes than your CV.- Bernard Kelvin Clive.

எப்படி ஒருவர்மீது தனிமனித விமர்சனம் வைப்பதை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைக்கின்றோமோ, அதே அளவுக்கு, வைக்கப்படும் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்வதும் இன்றியமையாததாகும்.

ஒருவரை நோக்கி வசையோ, காழ்ப்போ, அவதூறோ நிகழ்கின்றது. தொடர்புடைய நபருக்கு எளிமையான முறையில் சுட்டிக் காண்பிக்கலாம். புரிந்து கொள்ளக் கூடிய மனநிலையில் அவர் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் சுட்டிப் பார்க்கலாம். பயனளிக்காத நிலையில், அத்தோடு விட்டுவிட வேண்டும். பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி. மனத்திலேற்றிக் கொண்டால், அது விடுக்கப்பட்டவருக்கான வெற்றியாக அமைந்துவிடும். கூடவே நம் மனநலத்தையும் பாதிக்கும்.

’அப்படியான விமர்சனம், தமது பண்பின் தன்மையல்ல; மாறாக விடுப்பவரின் உணர்வுக்கொந்தளிப்பு, உணர்வுத்தேவை, பேச்சுத்திறன் குறைபாடு’, என்பதாகப் பொருள்கொள்ளப் பழகுதல் நல்லது.

பாராட்டுகளும் நன்மதிப்பும் எல்லாரிடமும் பெறுதல் சாத்தியமற்றவொன்று. அப்படி எண்ணுவது, தன்னுமை (liberty)யுடன் வாழ்வதற்கு நேர் எதிரானது. தனக்குத் தானே இட்டுக்கொள்ளும் அடிமைத்தளை.

மனச்சாட்சிக்கும், குடும்பத்துக்கும், தாம் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும், சமூகத்துக்கும்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமேவொழிய, எதிர்கொள்ளக் கூடிய தனிமனித விமர்சகர்களுக்கல்ல எனும் மனப்பான்மை பெறுதல் பயனளிக்கும்.

இப்படியான தனிமனிதத் தாக்குதல்கள், தமக்குள் வினாக்களை விதைக்கும். கூனிக்குறுகக் கூடிய சூழ்நிலைகூட ஏற்படலாம். அவமானத்தால் புழுங்கக் கூடிய தருணம் வரும். அப்படியான தருணங்களைத் தனதாக்கிக் கொளல் அவசியம். பழிக்குப் பழி என்பதான இம்ப்பல்சிவ் ரியேக்சன் எனும் மனத்தூண்டலைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாக மேற்கொள்ளலாம். அப்படிச் செய்வதன்வழி மனநலம் மேம்படும்.

நியூயார்க் நகர மையம், சார்லட் நகர மையம் என்பதெல்லாம் மக்கள்திரள் வெகுவாக இருக்கக் கூடிய இடங்கள். ஸ்டாக் எக்சேஞ்ச், வங்கித் தலைமையகங்கள் இருக்கக் கூடிய இடங்கள். சென்று கொண்டிருக்கின்றோம். திடீரென கால்தடுக்கிக் கீழே விழுகின்றோம். ஏற்பட்ட தடங்கலின் வலி அல்லது காயத்தின் வலியைக் காட்டிலும், மனத்தில் ஏற்படும் எமோசனல் அட்டேக் என்பதன் வலி,  இத்தனை பேர் பார்க்கக் கீழே விழுந்து விட்டோமேயென்கின்ற உணர்வுவலியும் மனஅதிர்ச்சியால் ஏற்படும் உடம்பின் வேதிமாற்றங்களும் பலமடங்கு அதிகம். ஆனால், பார்ப்போரில் நிறையப் பேரின் கண்கள் மட்டுமே அதைக் கண்டிருக்கும். மனத்தில் பட்டிருக்காது. அப்படியே பட்டிருந்தாலும், அடுத்த சில நொடிகளில் அது அவர்களை விட்டுச் சென்றுவிடும். ஆனால் கீழே விழுந்தவருக்கான மனவலியடங்க சிலநாட்கள் கூட ஆகும். அப்படியான மனவலியைப் பெற வேண்டிய அவசியம் என்ன? அது போன்றதுதான், இப்படியான தனிமனித விமர்சனத்துக்கான வலியும்.

பேசுபொருளின் மீதான, இலக்கின்மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காகக் கூட நிகழ்த்தப்பட்டிருக்கலாம். இலக்கின் மீதான கவனத்தைச் சிதையா வண்ணம் தரித்தல் நன்றாம்.

இளைப்பாரலுக்கான வாய்ப்பாகவும் அதை கருதலாம். சிந்தனைக்கான வாய்ப்பாகவும் அமையும். டிபேட், உரையாடல், உரிமைகோரல் போன்ற தருணங்களில், இத்தகைய போக்கையே, கோரிக்கைக்கான சான்றாக, முகாந்திரமாக அமைத்துக் கொள்ளலாம்.

When they go low, we go high. - Michelle Obama

1/26/2022

ஊட்டமிகுதல்

நம் திருமேனி 70% வரையிலும் நீராலானது. எஞ்சியது மட்டுமே திண்மத்தால் ஆனது. அதுபோன்றே நம் வாழ்வின் ஊட்டமும் தொன்னூறு விழுக்காடு வரையிலும் உணர்வுகளால் ஆனது. எஞ்சிய பத்து விழுக்காடுதான் புறவயப்பட்ட பொருட்களால் ஆனது. எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?

வாழ்ந்த வாழ்க்கையும் வாசித்த நூல்கள் கொண்டும் எண்ணமுடிகின்றது. எப்படி? ஊரகத்தில் பிறந்து வளர்ந்த வேளாண்மைச்சூழல். அடுத்து, வாழ்ந்திருந்த பன்னாட்டுச் சமயங்களும் நாடுகளும்(இந்தியா-இந்து, மலேசியா-இசுலாம், சிங்கப்பூர்-பெளத்தம், கனடா/அமெரிக்கா-கிறித்துவம், சைப்ரசு/இசுரேல்-எகுதா,யூதம்) . பணிபுரிந்திருந்த பன்னாட்டுப் பெருநிறுவனங்கள். கூடவே வாசித்த நூல்கள்.

வேளாண்மை செய்ய வேண்டும், பொருட்கள் உற்பத்தி பெருக வேண்டும், மேம்பாட்டுக்கு என்ன அடிப்படை? செய்நுட்பமும் கருவிகளும் அடிப்படை. எண்ணிப் பாருங்கள். ஆணி அடிக்க வேண்டும். ஒரு பெரிய கல்லையோ அல்லது தடிமனான இரும்புக்கனத்தையோ கொண்டு அடித்தால் ஆணி இறங்கி விடும். ஆனால் அந்த கனத்தைச் செல்லுமிடமில்லாம் தூக்கித் திரிய வேண்டும். நேரவிரயமும், ஆற்றல்விரயமும் ஏற்படும். பத்து ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் ஒரு ஆணிதான் அடித்திருக்க முடியும். உற்பத்தித்திறன் குறைவு. சிறு எடையுடன் கூடிய கனத்திற்கு வால்போன்ற கைப்பிடி, அதைக் கொண்டு அடிக்குங்கால் சுலபமாக அடித்திறக்க முடிகின்றது. அதன் எடையும் குறைவு. இப்படித்தான் சுத்தியல் பிறந்திருக்க முடியும். ஆக, ஒரு எளிய கருவி, உற்பத்தியை, செய்நுட்பத்தை மேம்படுத்துகின்றது. We shape our tools, and afterwards our tools shape us. உணர்வால் கட்டுண்ட மாந்தனுக்கும், செய்நுட்பத்தை மேம்படுத்த சிலபல கருவிகள், உளவியற்கருவிகள் தேவையாய் இருக்கின்றன. அவற்றைக் கண்டு பாவிக்கப்பழகிவிட்டால் ஊட்டமிகு வாழ்வுதான் நம் எல்லாருக்கும்.

நாட்டுப்புற வேளாண் வாழ்வுக்கும் சரி, இந்து, இசுலாம், புத்தம், பெளத்தம், யூத எகுதா, கிறித்துவம், சமயப்பற்றில்லா வாழ்வுமுறைக்கும் சரி, பெருநிறுவன இயக்கத்துக்கும் சரி, பொதுவானது இந்த ஒன்றே ஒன்றுதான். எது? சரடொன்றில் எட்டுவிதமான பூக்கள் கொண்டு கோக்கப்பட்ட மலர்க்கொடிதான் இவற்றுக்குப் பொதுவான ஒன்று. அஃதென்ன அந்த எட்டுவிதமான மலர்கள்?

களைந்துவிடல்/மன்னித்தல்: ஒரு வங்கியில் சிலபல வாராக்கடன்கள் உள்ளன. நிறுவனத்தில் சிலபல காலாவதியான பொருட்கள் உள்ளன. ஸ்டாக்மார்க்கட் ஃபோர்ட்ஃபோலியோவில் சோபிக்காத சிலபல ஸ்டாக்குகள் உள்ளன. காலம்முழுமைக்கும் அதைக் கட்டிக்கொண்டு திரிவார்களா? மாட்டார்கள். அவ்வப்போது கணக்கில் இருந்து கழட்டிவிடுதல் நன்றாம். ஈகோவுக்காக வைத்திருத்தல், வீண்சுமையாகி செலவீனத்துக்கு வழிவகுக்கும். அதுபோன்றதுதான், ஒருவரின்பால், ஒன்றான்பால் வெறுப்போ, மனத்தாங்கலோ இருப்பின் அவ்வப்போது களைந்துவிடல் நன்றாம். அல்லாவிடில் அது மனப்பாரமாகும். கனம் கூடும். கவலைக்கும் மன அழுத்தத்துக்கும், சோகைக்கும் இட்டுச் சென்று வாழ்வின் தரத்தைச் சீர்குலைக்கும். ஆக மன்னித்தல், விட்டொழித்தல் என்பதுவோர் உளவியற்கருவி.

ஊக்கமுறுதல்: மோட்டிவேசன் என்கின்ற பெயராலே, கூட்டியக்கம் என்கின்ற பெயராலே, கதைகள் கொண்டும் கலை, இசை,பாடல்கள்கொண்டும், சொற்பொழிவுகள் கொண்டும் நல்லதொரு ஊக்கமிகு சூழலைப் பெருவணிகநிறுவன எக்ஸ்பர்ட்டுகள்/சமயப்பெரியோரின் பேச்சுகளும் ஆக்கங்களும் இலக்கியங்களும், மாந்தனுக்கு ஊக்கத்தையூட்டிக் கொண்டே இருப்பன. ஆக, ஊக்கமுறுதல் என்பதோர் உளவியற்கருவி.

நோக்கமுறுதல்: இன்னின்ன விளைச்சலால் பணமீட்டி இன்னின்ன காரியங்களைச் செய்தாக வேண்டும், இன்னின்ன செயற்பாடுகளால் இன்னின்னவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும், நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு விற்பனை இன்னதாக இருக்க வேண்டுமென்பதெல்லாம் இலக்குத்தரித்தல் என்பதாகும். ஆக, நோக்கமுறுதல் ஓர் உளவியற்கருவி.

கொண்டாடுதல்: அந்தந்த நேரத்தில் மனமூக்கம் பெறுவதற்காகவும், பாராட்டுதலைத் தெரிவித்து மேம்பட்டுக் கொள்வதற்காகவும், சமயத்திலே, பெருநிறுவனத்திலே, ஊருக்குள்ளே, சமூகத்திலே பலவிழாக்கள் இடம் பெறும். அல்லது, நாமாகவே ஏற்பாடுகள் செய்து கொள்வதன்வழி மனம் புத்துணர்வு கொண்டு புதுப்பாய்ச்சல் பெறுகின்றது. ஆக, கொண்டாடுதல் ஓர் உளவியற்கருவி.

பொறுப்பேற்றல்: இன்ன வேலை என்றில்லை, உயிர்த்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோவொன்றின்பால் உழைக்கப் படைக்கப்பட்டவன். அதன்நிமித்தம் இன்னது செய்துவிடலெனும் பொறுப்பேற்றுக் கொள்தல், மனநிறைவை அவனுக்கு ஈட்டித்தரும். உழைப்பைத் தவிர வேறெதுவுமே மனநிறைவுக்கு இட்டுச் செல்லாது. மனநிறைவு இல்லாதோன் மனப்போதாமைக்கு ஆட்பட்டு அல்லலுறுவான். ஆகவே பொறுப்பேற்றல் என்பதோர் உளவியற்கருவி.

ஈதல்: எல்லா நேரத்திலும் எல்லாரும் அவரவருக்கானவற்றைச் செய்துவிட முடியாது. இளம்பிராயம், மூப்பு, நோய்ப்பு, சுற்றுச்சூழல் போன்றவற்றின் நிமித்தம் அடுத்தவர் உதவியைப் பெற்றே தீர வேண்டும். ஆக, நம்மால் இயன்ற உதவியை நல்குங்கால், நமக்கான உதவியும் எதன்புலத்திலிருந்தோ கிட்டும். அப்படியான ஈதலின் பொருட்டும் மனச்செழிப்பு உண்டாகும். ஆக, ஈதல் என்பதோர் உளவியற்கருவி.

உயிர்நலம்: சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய இயலும். படகு இருந்தால்தான் பயணிக்க முடியும். ஆகவே, உடலும் மனமும் சேர்ந்த உயிர்நலப் பேணல் இன்றியமையாதது. ஆக, உயிர்நலம் என்பதோர் உளவியற்கருவி.

போற்றல்: மாந்தன் கூட்டமாக, இயைந்து இணக்கத்துடன் வாழப்பழக்கப்பட்டவன், படைக்கப்பட்டவன். கூட்டம் கூட்டமாக ஊர்ந்து சென்று சேர்ந்ததாலேதான் அது ஊர். அப்படியான கூட்டத்தில், அடுத்தவரின் திறமைகள், தனித்துவங்கள், ஆக்கங்கள் காணத்தலைப்பட்டால் தயங்காது போற்றலும், கண்டுணர்ந்து உடைத்தாவதும் இணக்கத்தை பாதுகாப்புவுணர்வைக் கட்டமைக்கும். ஆக, போற்றல் என்பதோர் உளவியற்கருவி.

சமயம், நிறுவனம், ஊர், காடு, அது எதுவானாலும் சரி, சரடில் கோக்கப்பட்ட மன்னித்தல், ஊக்கமுறுதல், நோக்கமுறுதல், கொண்டாடுதல், பொறுப்பேற்றல், ஈதல், உயிர்நலம், போற்றல் ஆகிய எட்டுவகை மலர்களாலே ஒருவன் தன் வாழ்வை ஊட்டமிக்கதாக ஆக்கிக்கொள்ளலாம். இவற்றுள் ஒன்று மிகுந்து இன்னொன்று மட்டுப்படும் போது அல்லல் பிறக்கின்றது. மனிதன் உணர்வால் கட்டுண்டவன். மனவுணர்வுப்பொறிகளால் மட்டுமே மேன்மை பிறக்கும்.

Fulfillment result when you feel that you are becoming everything that you are capable of becoming.

1/25/2022

தன்னுமை

இந்தியக் குடியரசுநாள் வாழ்த்துகள். தன்னாட்சிநாளுக்கும் குடியரசுநாளுக்குமான வேறுபாடு என்ன? அந்நிய ஆட்சியினின்று விடுவிக்கப்பட்ட நாள் விடுதலைநாள். நாட்டுக்கான அரசியல் சட்டதிட்டங்கள் நிறுவப் பெற்று, அவை நடைமுறைக்கு வந்தநாள் குடியரசு நாள். அப்படியானால், தன்னாட்சிக்குப் பிறகான குடியரசுக்கு முந்தைய ஆட்சிமுறை? மேலாட்சி(dominion) முறை என்பதாகும். 1947 - 1950 வரையிலும் ஆறாம் ஜியார்ஜ் மன்னரால் நியமனம் செய்யப்பட்ட மெளண்ட்பேட்டன், இராஜகோபாலாச்சாரி ஆகியோர் கவர்னர் ஜெனரலாக ஆட்சி புரிந்தனர். 1950 ஜனவரி 26 ஆம் நாள், இராஜேந்திர பிரசாத் அவர்கள் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று குடியரசு ஆட்சியினை நடைமுறைக்குக் கொணர்ந்தார்.

அப்படியானால் தன்னாட்சி(independence), தன்னுமை (liberty), விடுதலை(freedom) என்பவற்றுக்கான வேறுபாடு என்ன?

அந்நிய அடிமைத்தனத்தினின்று விடுபட்டுக் கொள்வது விடுதலை. தனக்கான ஆட்சிமையைத் தானே நிறுவிக் கொள்வது தன்னாட்சி. தன்னுடைய இயல்பைத் தன்னுள்ளே செயற்படுத்திக் கொள்வது தன்னுமை. உரிமைப் போர்களினூடாக விடுதலை பெற்றுக் கொள்கின்றோம். சட்டதிட்டங்களைக் கட்டமைத்து நெறிப்படுத்திக் கொள்வதன் வாயிலாக தன்னாட்சியை அமைத்துக் கொள்கின்றோம். தன்னுமையை எப்படிச் செயற்படுத்திக் கொள்வது?

தனக்கான உரிமைகளை, ஆசைகளைச் சமூகத்துக்குப் பங்கம் நேராத வகையில், தன்னியல்போடு செயற்படுத்தி முழுமுற்றாகத் தன் போக்கில் வாழத்தலைப்படுவதே தன்னுமையின் இலக்கணமாய் இருக்கும். பொதுச்சமூகத்துக்குக் கேடு நேராதவரையில், அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோயெனக் கவலை கொள்ளத் தேவையில்லை. சுருங்கக் கூறின் அடுத்தவரின் அபிலாசைகளுக்காக நாம் வாழ்தல், நம்மை நாமே சிறைப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பானதேயாகும். எப்படி? அவர் தவறாக எண்ணுவார், இவர் தவறாக எண்ணுவாரென்றோ, அல்லது அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும், இவரிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென்றோ வாழத்தலைப்படும் போது நாம் நம் வாழ்க்கையை வாழவில்லை, தன்னுமையை இழந்து விட்டோமென்றே பொருள்.

மார்கஸ் எரேலியஸ் சொல்லியதினின்று. ஒரு விடுதியில் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர்.

“அடுத்தவரின் எண்ணங்களுக்குட்பட்டு இருந்தால், உனக்கான எதையும் உன்னால் செய்து கொள்ள முடியாது”

“என்ன சொல்கின்றாய்?”

“நீ, நீயாக இருக்கும் போதுதான் நீ தன்னுமையுள்ள மனிதன். அந்த மரத்தைப் பார். அது, அதுவாக இருக்கின்றது. அதன் வெளிப்பாடாக, பழங்களும் ஆக்சிஜனும் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன. அதுபோலவே, நீ, நீயாக இருக்கும் போதும் ஏதோவொன்று சமூகத்துக்கு உதவிகரமாய் அமையும்.”

“அப்படியானால், நான் நானாக இல்லையா இப்போது?”

“அப்படியல்ல. மரத்துக்கும் சவால்கள் உள்ளன. நீர் இல்லாமற்போகலாம். சூரிய ஒளி கிட்டாமற்போகலாம். சூழல் மாசுபட்டுப் போகலாம். நோய்நொடிகள் வரக்கூடும். அத்தனையையும் சமாளித்து வரும் போது, பழங்களும் ஆக்சிஜனும் அவுட்புட். அதுபோலத்தான், அடுத்தவரது எண்ணங்கள் எனும் இடர்ப்பாட்டிலிருந்து சமாளித்து வரும் போது உன்னிலிருந்தும் இன்னும் மேம்பட்டவை சமூகத்துக்குக் கிடைக்கும்”

”ஆமாம். நிறைய நேரங்களில் நான் என்னை மற்றவருக்காக ஒப்புக் கொடுத்துவிடுகின்றேன்தான். என்ன செய்வது?”

“எல்லாரும், எல்லா நேரமும் நம்மை விரும்ப வேண்டுமென்கின்ற எண்ணத்தைக் கைவிடல் நன்று. தயக்கமின்றி நம் கருத்தைச் சொல்லத் தலைப்பட வேண்டும். உயர்வு தாழ்வில்லை. அடுத்தவரினின்று அறிந்து கொள்வது வேறு; அறிவுறுத்தலின்படி நடந்து கொள்வது வேறு. நம்மில் பலரும் அடுத்தவரின் பார்வைக்குக் கட்டுப்பட்டோ, அறிவுறுத்தலுக்கிணங்கவோ வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுமையற்றவர்களாகவே இருக்கின்றோம். Let's be cognizant about propaganda and hidden agenda nonsense.”

Life without liberty is like a body without spirit. -Khalil Gibran

1/24/2022

பகுத்தறிவுப் பன்னாடை

பகுத்தறிவு (rational thinking) என்பது பகடிக்காட்படுவதைக் காண்கின்றோம். என்ன காரணம்? இறைமறுப்பை பகுத்தறிவு எனப் புரிந்து கொள்வதும், துய்நிலைச் சிந்தனை உடைத்தாவதும்தான் காரணம். இதற்கும் மேற்பட்டதொரு காரணம், அது அவர்களின் கல்வித்தரம். இஃகிஃகி.

மாந்தராகப் பிறந்த எல்லாருக்குள்ளும் பகுத்தறிவு இயற்கையிலேயே அமைந்துள்ளது. அதன் பயன்பாட்டில்தான் ஆளுக்காள் வித்தியாசம். எந்தவொரு மனிதனும் தோராயமாகக் குறைந்தபட்சம் அறுபது விழுக்காட்டு அளவுக்குப் பகுத்தறிவைப் பாவிக்கின்றான். எஞ்சியதில்தான் ஆளுக்காள் வேறுபாடுகள்.

பகுத்தறிவுச் சிந்தனைக்கு முந்தைய நிலைதாம் உய்நிலைச் சிந்தனை (critical thinking) என்பதும், துய்நிலைச் சிந்தனை (passive thinking) என்பதுமாகும். துய்நிலைச் சிந்தனையானது பகுத்தறிதலுக்கு இட்டுச் செல்லாது. ஏன்?

ஒரு பற்றியம்(subject) கிடைக்கின்றது. சிந்தனை வயப்படுகின்றோம். இருவிதமாக அது எதிர்கொள்ளப்படுகின்றது. பார்த்தவுடனே, கடந்தகால அனுபவம், நம்பிக்கை, விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஒரு முடிவினை மேற்கொள்வது துய்நிலைச் சிந்தனை. காரணம்(reason), ஏரணம் (logic), சான்றுகள்(evidence), தரவு(fact) முதலானவற்றைத் தேடவும் நாடவும் தலைப்படுவது உய்நிலைச் சிந்தனை. உய்வது, தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. துய்வது, இருப்பில் இருப்பதை அனுபவிப்பது. உய்வுற்றபின்னர், காரண ஏரணம், தரவுகள், சான்றுகளைக் கொண்டும் கலந்துரையாடியும் ஒரு முடிவுக்காட்படுவது பகுத்தறிதல். கலந்துரையாடலுக்கான தேவையென்ன?

காலை 10 மணி: அலெக்சாண்டர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “உழைத்துப் பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஏமாறுவோர், ஏமாற்றுவோர் இருக்கும் உலகில் நாம் ஏமாறுவோனாக இருத்தலாகாது. இவருக்கு நாம் ஏன் பணம் கொடுக்க வேண்டும்? கூடாது.”

காலை 10 மணி: பீட்டர் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “ஏன் இந்தப் பெரியவருக்கு இப்படியானதொரு நிலை? இந்த உலகம் இன்னும் சிறப்பாக இருக்கலாம். மனிதனை மனிதன் அரவணைத்து எல்லாரும் நல்லபடியாக இருந்தால்தான் என்ன? இப்படியான இழிநிலைக்கு ஒருவிதத்தில் நானும் காரணம். ஒரு பத்து டாலர் கொடுப்போம்!.”

தெருவோரம் கையேந்தி நிற்கும் மனிதர் ஒருவர்தான். ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் இருவிதமான யோசனைகள். ஏன்? அது, அவர்களின் கடந்தகாலம், கல்வி, பின்புலம் இப்படிப் பலவற்றையும் கருத்திற்கொண்டு அமைந்தவை. ஆனால் இருவரது சிந்தனையுமே துய்நிலைச் சிந்தனைதான்.

காலை 10 மணி 10 நிமிடங்கள்: கெவின் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஒருவர் கையேந்திப் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இவன் மனத்தில் நினைத்துக் கொண்டது, “ஏன் இந்தப் பெரியவருக்கு இப்படியானதொரு நிலை? பேசிப் பார்க்கலாம்”. “என்ன ஐயா பிரச்சினை?” “தன்னிடம் நூறு டாலர் பெறுமானமுள்ள பிட்காயின் இருக்கின்றது. யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கின்றார்கள். ஊர் திரும்ப நாற்பது டாலர் வேண்டும். முப்பது டாலர் திரட்டி விட்டேன், இன்னும் பத்து டாலருக்காக நிற்கின்றேன்”. 25 டாலர் பெறுமானமுள்ள பிட்காயினுக்கு உரிய பணம் கொடுத்துவிட்டு, அந்த பிட்காயினை வாங்கிச் சட்டைப் பையில் இட்டுக் கொண்டு கிளம்புகின்றான் கெவின். கெவின் பேசநினைத்தது உய்நிலை. அதன் பின் தீர்வு கண்டமை பகுத்தறிதலின் பொருட்டு. ஒருவேளை அவர் யாசகம் கேட்டிருப்பாராயின், இவன் கொடுக்காமற்சென்றிருக்கக் கூடும்.

இப்படியான மாறுபட்ட பின்புலத்தை, காரண ஏரணங்களை, சான்றுகளை அறிந்து கொள்ளக் கலந்துரையாடல் அவசியம்.

பொதுவாக எல்லாருக்குள்ளும் இலக்குகள் இருக்கும். அந்த இலக்குகளை அடைய சில நேரங்களில் துய்நிலை, சிலநேரங்களில் உய்நிலை என்பதாக ஒரு சீர்நிலை(பேலன்ஸ்) இருத்தல் நன்றாம். ஒவ்வொன்றுக்கும் மெனக்கெட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆகவே நிபுணர்களின் உதவியோடு இலக்குகளை அடையலாம். சிலநேரங்களில் உய்நிலை கொண்டாக வேண்டும். அல்லாவிடில் காலம்முழுமைக்கும் அடுத்தவரின் உதவியை நாட வேண்டி, அல்லது அடுத்தவரின் தயவில் பிழைக்க வேண்டியதாகி விடும். In Life, everything is balance of acting. அலெக்சாண்டர், பீட்டர், கெவின் எல்லாருமே சரிதான்; சில இடங்களில் மட்டும். இஃகிஃகி!! பகுத்தறிவைக் கேலி செய்பவன் இவர்கள் மூவரிலும் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

1/22/2022

கிறுக்கலும் நன்றே

நிகழ்காலத்தில் வாழ்வதே வாழ்வின் பயனைக் கூட்டும். கடந்து காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் திமிறிச் செல்லும் மனத்தை நிகழ்காலத்துக்கு இழுத்துவர எத்தனையோ வழிகள் உண்டு. உடற்பயிற்சி, நீச்சல், பாடுதல், இசைப்பயிற்சி, கூட்டுக்கேளிக்கை, விளையாட்டு, இப்படியானவற்றுள் ஒன்றுதாம் எழுதுவதும். மாலையின் மணிகளை உருட்டிக் கொண்டேவும் சிவாயநம சொல்வதும், தாளில் ஆயிரத்தெட்டு முறை சிவாயநம எழுதுவதும் ஒன்றுதான். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, அப்படி எழுதுவதும் கூட அனிச்சைச்செயலாக அல்லது மெக்கானிக்கலாக மாறிவிடக் கூடும். அதாவது உடல் இயங்கிக் கொண்டும், மனம் எங்கோ மேய்ந்து கொண்டிருக்கும். ஆக, அதனின்று தற்சிந்தனையுடன் ஏதாகிலும் ஒன்றினை எழுதினால் மனத்துக்கு இன்னும் அது சிறப்புச் சேர்க்கும்.

தற்சிந்தனையென்றால்? சாக்ரடீஸ் உரையாடலின் வழி அறிதலைக் கட்டமைக்கலாமென்றார். தொடர்ந்து வந்த பிளேட்டோ, உரையாடலின் வழி எல்லாராலும் அறிந்திருத்தல் எதார்த்தமாக இராது. ஆகவே அறிந்தோரில் சிறந்தோரைக் கொண்டு மட்டுமே ஆட்சியை, நெறியாள்கையைக் கட்டமைக்க வேண்டுமென்றார். ஆனால் அது எல்லாநிலை மக்களின் குரலையும் கொண்டு வந்து சேர்க்காதென வாதிட்டனர் மற்றோர். இப்படித்தான் படிப்படியாக மக்களாட்சி, மக்கள்குரல், ஜனநாயகம் என்பது நடைமுறைக்கு வந்தது. சரி, நல்லதுதானே? நல்லதுதான். ஆனால், பிளேட்டோ சொல்லிச் சென்றதும் சரியோயெனும் எண்ணமும் வந்து போகின்றது.

எடுத்துக்காட்டாக, யுடியூபை எடுத்துக் கொள்வோம். எதை வேண்டுமானாலும் தரவேற்றலாம். பார்ப்போர் எண்ணிக்கை, பயனர்களுக்கு எந்த வீடியோவை முதலில் காண்பிக்க வேண்டுமென்பதை (டிரெண்டிங்) முடிவு செய்யும். அதுவே இன்னும் கூடுதலாக நிறையப் பேரைச் சென்று சேரும். தரம், உண்மை என்பதெல்லாம் இந்த அல்கோரிதத்தில் இல்லை. மதிப்புக் கொண்ட பதிவுகள் புதைந்து விடுகின்றன. மக்களுக்கு விருப்பமானவை வெல்லும். மக்களின் மனமோ, சார்புத்தன்மைக்கு சொம்படிக்கக் கூடியதை விரும்பக் கூடியது. பிளாட்பார்ம் புரவைடருக்கு, வணிகம் செழிக்க வேண்டும். பொருளின் தரம், நயம், நேர்மை என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த இடத்தில்தான், பிளேட்டோ சொன்னது நினைவுக்கு வருகின்றது.

அறிந்தோரில் சிறந்தோர்? அதையெப்படி வகுத்தெடுப்பது? சிக்கல் நீள்கின்றது. தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்ற நிறுவனங்களெல்லாம், நுட்பத்திற்கும் திறமைக்கும் முன்னுரிமை கொடுக்கின்றன. மக்களைச் சார்ந்தியங்கும் மருத்துவம், உணவு, போக்குவரத்து போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பண்புக்கும் அனுபவத்திற்கும் முன்னுரிமை கொடுக்கின்றன.

தகவற்தொழில்நுட்பம் வழங்கப்படுவது நுட்பத்திறமையானவர்களாலே. தானியக்கமாகச் சேவை வழங்குவதன் பொருட்டு, அவை அப்படித்தான் இருக்கும். தரமானவற்றை நுகர வேண்டுமாயின், நாம்தாம், நேர்மை, வெளிப்படைத்தன்மை, சார்பின்மை முதலான பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டும். பின் அத்தகைய பண்புகளைக் கொண்டேவும், தேவையான எல்லாவற்றையும் மதிப்புணர்ந்து நுகரத்தலைப்பட்டாக வேண்டும். அல்லாவிடில், ஏமாற்றப்படுவோம், ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோமென்பதே மெய்.

சரி, இப்படியான தற்சிந்தனையின்பாற்பட்டு எழுதுதலின் நன்மை? 1. நம் அகம்/புறம் செம்மைப்படுத்திக் கொள்தல் 2. சிந்தனையை வார்த்தெடுத்தல் 3. சொல்லாற்றலை மேம்படுத்திக் கொள்தல் 4. பிறரின் பார்வையை பார்க்கப் பழகுதல் 5. நாடலையும் தேடலையும் விதைத்தல் 6. மக்களொடு பிணைப்புக் கொள்தல் 7. சமூகப்பங்களிப்புச் செய்தல், முதலானவற்றை ஈட்டிக் கொடுக்கும்.

கிறுக்கலும், மனக்கிறுக்கலும் நன்றே! We write to taste life twice, in the moment and in retrospect!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

1/21/2022

பணிவும் குனிவும்

பணிவு வேறு, குனிவு வேறு. பணிவென்பது மனத்தால் ஆனது. குனிவு என்பது உடலால் ஆனது. ஒருவர் மீதோ, ஒன்றின் மீதோ அன்பு மேலிடும் போது, அக்கறை மேலிடும் போது, ஆவல் மேலிடும் போது மனத்தில் பணிவு பிறக்கும். அதாகப்பட்டது, மனத்தின் கொந்தளிப்புகளும் அலைகளும் அடங்கி அமைதியாக அவரின்பால் அல்லது அந்தச் செயலின்பால் மனம் ஒன்றத் துவங்கிவிடும். குனிவு என்பது, ஆதிக்கத்திற்கு அடிமைப்படுவதை, கீழ்படிந்து கிடப்பதை உணர்த்தும் பொருட்டு உடற்குறிப்பால் அதனை வெளிப்படுத்திக் காண்பிப்பது. அந்த உடற்குறிப்பானது பணிவின் காரணமாகவும் நேரிடலாம். ஆனால் எல்லா நேரமும் அப்படியானதெனச் சொல்லி விட முடியாது. குனிபவர் மனம் திட்டிக் கொண்டிருக்கும் மனமாகவும் இருக்கலாம் அல்லவா? எனவேதான் பணிவு வேறு, குனிவு வேறு.

விரைவுச் சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். பின்னால் வரும் வண்டி நம்மையொட்டி வருவது போன்ற உணர்வு ஏற்படுமாயின், அந்த வண்டி முன்னேறிச் செல்வதற்கான தடத்தை விட்டுவிடுதல் நன்றாம். அந்த இடத்தில் ஈகோ தலையெடுக்குமாயின், நாம் இன்னும் விரைவாகச் செல்ல வேண்டும் அல்லது விபத்து நேரிடுவதற்கான வாய்ப்புகளுக்கு நாமே இடம் கொடுத்தாக வேண்டும். எனவேதான், எல்லார்க்கும் நன்றாம் பணிதல்.

ஒவ்வொன்றுக்கும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. விட்டுக் கொடுத்தலைப் பழகிக் கொள்வது ஆழ்மன அமைதியின் ஆணிவேர். வலுவற்ற மனத்தின் அறிகுறி பழிவாங்கல். திடமான மனத்தின் அறிகுறி பொறுத்துக்கொளல். அறிவுப்புலத்தின் அறிகுறி விட்டுப்பழகுதல். நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அல்லது விட்டுக்கொடுக்க முடியவில்லை, ஏன்? அப்படியாயின்,

1. நாம் மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வுமனம் கொள்கின்றோம்.

2. காழ்ப்புடையவராய் இருக்கின்றோம்.

3. அடுத்தவரின் இலக்கை நம்முடையதாக ஆக்க முனைகின்றோம்.

4. பேசாப்பொருளை பேசுவதன்பால் ஒவ்வாமை கொள்கின்றோம்.

5. சமூகத்தின் தாக்கம், peer pressure

6. கடந்தகால நினைவுகளில் திளைத்து நிகழ்காலத்தன்மைக்கு ஆட்படாமலிருப்பது

7. இன்பகரம் மட்டுப்படுவதை உணராமலிருப்பது

இவற்றுள் ஏதோவொன்று, தேவையில்லாததை விட்டுக்கொடுக்க, பொறுத்திருக்க, மனமடங்கத் தடையாய் இருக்கின்றதென்பதாகக் கருதலாம். இதனைத்தான் அகந்தை(ஈகோ) என்கின்றோம். இது நம் வாழ்க்கை. இன்பம், மகிழ்ச்சி என்பது நம்முள்ளேயே உறைந்திருக்கின்றது. அதனைநாடி, தேடி, நாம் எங்கும் செல்லத் தேவையில்லை. எல்லாமும் மனப்பழக்கம்தான். மனப்பழக்கத்தை வடிகட்டிக் கொள்ள, நம் நோக்கத்தை உணர்ந்து செயற்படல் வேண்டும்; செய்யும் செயலின் மதிப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். பண்பில் எளிமை கொள்ளல் வேண்டும். மனச்சோகை, மன அலைகளைக் கவனித்துச் செயற்பட வேண்டும். எளிய பயற்சிதான். எல்லாருக்கும் கைகூடக் கூடியதுதான்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து!

1/19/2022

மாற்றான் தோட்டத்து மல்லிகை

நான் முருகனுக்காக கதவருகேயே வெகுநேரமாகக் காத்திருந்தேன். என்னைக் கண்டதும் அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. -விநாயகன்

என்னைக் கண்டதும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த விநாயகனுக்கு ஒரே மகிழ்ச்சி. -முருகன்

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ”விநாயகனும் முருகனும் சந்தித்துக் கொண்டனர். இருவருக்கும் மகிழ்ச்சி” என்பதுதான்.

விநாயகனுடைய கதையை மட்டும் கேட்டால் நமக்கு ஏற்படும் புரிதல்: வெகுநேரமாகக் காத்திருந்தான். பாவம். ஆனால் தாமதமாக வந்தவனுக்கு மகிழ்ச்சி, ஒரு சாரி கூடச் சொல்லவில்லை. என்ன மனுசனோ?

முருகனுடைய கதையை மட்டும் கேட்டால் நமக்கு ஏற்படும் புரிதல்: முருகனின் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கின்றது. திடுமென இவனைக் கண்டதில் விநாயகனுக்கு மகிழ்ச்சி. பார்க்க வந்தமைக்கு நன்றி சொல்லிப் பாராட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இத்தகைய புரிதலும் கூட, ஆளுக்காள் மாறுபடும். விநாயகன் கதையை 100 பேருக்கும், முருகன் கதையை 100 பேருக்கும் கொடுத்து அவரவர் புரிதலைக் கேட்கிறோமென வையுங்கள். நமக்கு 200 விதமான கதைகள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. ஆனால் சந்திப்பு ஒரே சந்திப்புதான். இருவரும் அவரவர் அனுபவத்தை உண்மையோடுதான் சொல்லி இருக்கின்றனர். இருந்தும், ஏனப்படி?

ஒவ்வொருவருடைய புரிதலும், அவரவருடைய கடந்தகால அனுபவங்கள், வாசிப்பு, இருக்கும் இடம், இப்படி எண்ணற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. இவையெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே இருப்பவை. ஒன்றைப் பற்றி ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கின்றார். அதேநபரிடம், அதே விசயத்தைச் சென்ற வாரம் கேட்டிருந்தால் வேறுமாதிரி சொல்லி இருக்கக் கூடும். காரணம், இந்த ஒருவாரத்தில் அவர் கற்றுக் கொண்டவை, தற்போதைய மனநிலை என்பதெல்லாம் வேறாக இருந்திருக்கக் கூடும்.

அனுபவம் கூடக் கூட, மனிதன் இப்படியான பன்முகத்தன்மை(ஒரே விசயத்துக்கான பல்வேறு புரிதல்கள்) கொண்டவனாக ஆக வேண்டும். The only thing you sometimes have control over is perspective. You don't have control over your situation. But you have a choice about how you view it. புரிதல்களைக் கட்டமைக்க இப்படியானதொரு பொதுப்புரிதல் அவசியமாகின்றது. நம்முடைய புரிதலைக் காட்டிலும் மாறுபட்ட புரிதலை எதிர்கொள்ளும் போது, வெகுண்டெழுவது நம் மனத்துக்குத்தான் தீங்கானது.

I settle with what I understood; You may settle with what I failed to understand. That's okey, share the perspective and let others to learn if they are interested. பார்வைகள் பலவிதம். வைக்கப்படும் போதுதான் அவற்றினின்று கற்கவும் அறிந்து கொள்ளவும் முடியும். வைக்கப்படவே கூடாதென்பது கற்காலத்துக்கே இட்டுச் செல்லும்.

1/17/2022

வாதம்புரிதல் (டிபேட்)

கோவிட் பணிகளை பைடன் நிர்வாகம் எப்படிக் கையாள்கின்றது என்பதனை ஆய்வு செய்ய, அமெரிக்க நாடாளுமன்ற மருத்துவக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. நேரடி ஒளிபரப்பும் இடம் பெற்றது. மக்கள் முன்னிலையில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையான வினாக்களைத் தொடுக்க, கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ஆண்ட்டனி பவுச்சி தலைமையிலான குழு பதிலளித்துக் கொண்டிருந்தது. இடையே கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்துப் பேசாமல், நோய்த்தடுப்பு மையத்தின் தலைவர் ஆண்ட்டனி பவுச்சியின் வருமானம், அவரின் கேரக்டர் என்கின்ற வகையில் செனட்டர் ராண்ட் பால் விமர்சனங்களை முன் வைத்தார். அந்தச் செய்கையைக் கண்ட திரு பவுச்சி அவர்கள், ’அட் ஹாமினம்; எனும் சொல்லாடலைப் பயன்படுத்திக் கடுமையான அளவில் எதிர்வினை ஆற்றினார். நெறியாளரும் அப்படியான தனிமனித விமர்சனத்துக்குக் கடிவாளமிட்டார். https://youtu.be/HH_-g0JxBTs?t=56

சரி, அட் ஹாமினெம் என்றால் என்ன?

வாதம் புரிவதில் படிநிலைகள் உள்ளன. முதல் மூன்று நிலைகளும் ஆய்வுக்குப் பயனளிக்கக் கூடியவை. இன்னபிற யாவும் நேரத்தை வீணடிக்கக் கூடியவை, பொய் புரட்டுக்கு வழிகோலுபவை, ஆய்வினைத் திசை திருப்பக் கூடியவை. அவையாவன கீழேவருமாறு:

1. வெளிப்படையாக மையக் கருத்தினை லாஜிக்/ரீசன் கொண்டு மறுப்பது

2. வாதத்தில் இருக்கும் பிழைகளைச் சுட்டிப் பேசுவது

3. உரிய ஆதாரங்களுடன் மாற்றுவழியை நிரூபித்துப் பேசுவது

4. குறைந்த, அல்லது உரிய தரவுகளின்றி மறுத்துப் பேசுவது

5. பேசுபொருளை விடுத்து, எதிராளியின் குரல், ஸ்டைல் போன்றவற்றைக் குறைசொல்லிப் பேசுவது

6. பேசுபொருளை விடுத்து, வாதம் செய்பவரைக் குறைத்துப் பேசுவது அல்லது குறைகூறிப் பேசுவது (அட் ஹாமினம்) https://youtu.be/FD50OTR3arY

7. திட்டுவது, புறங்கூறுவது (name calling)

எடுத்துக்காட்டு:

விநாயகன்: கதிரவன் தோன்றுவது கிழக்கு திசையில். (மையக்கருத்து)

முருகன்:  சில நேரங்களில் தென்கிழக்காகவும் வடகிழக்காகவும் தோன்றும். துருவங்களில் உதிக்காமலேவும் இருக்கும். துருவத்தில் இருக்கும் ஒரே திசை தெற்குமட்டுமே #1

விநாயகன்: உனக்கு இடக்கு முடக்காகப் பேசுவதே வேலை ( #5)

முருகன்: நீ சொல்வது உண்மையானால், உத்திராயணம், தட்சிணாயணம் ஆகிய சொற்களுக்கே வேலை இருக்காது. #1

விநாயகன்: சூரியன் உதிப்பது கிழக்கு என்பது பொய்யா? மரபை இழிவுபடுத்துகின்றாய், உனக்கு எல்லாம் தெரிந்தவனென்ற திமிர் (#6 & 7)

முருகன்: இடத்துக்கிடம் தோன்றும் திசையில் மாற்றம் உண்டு என்கின்றேன். சரி, இல்லை, ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டால் முடிந்தது பிரச்சினை. ஏன் திட்டுகின்றாய்? #4

விநாயகன்: மயிலேறிப் பல இடங்களுக்கும் போய் வருபவன் என்பதைப் பீற்றிக் கொள்கின்றாய். #6


1/16/2022

உண்டு எனக்கொரு கனவு

மனித உரிமைகளுக்காக, சமத்துவத்திற்காக, இணக்கத்திற்காக, அறிவுப்புலத்திற்காக, தத்துவார்த்த அரசியலுக்காக, புத்தாக்கத்திற்காக, அன்புக்காக நாட்டம் கொண்டு தன் இறுதி மூச்சு வரையிலும் உழைத்துத் தன் உயிரை உரமாக்கியவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள். அவருடைய பேச்சின் சாரங்களை நினைவுகூர்ந்துவிட்டுத் தொடர்வது உசிதமாய் இருக்குமென எண்ணுகின்றேன்.

1. கருத்தாளனை அடக்கிவிட்டாலும், அவனுள் இருக்கும் கருத்து சாவதில்லை.

2. இருள்கொண்டு இருளை அகற்றிவிட முடியாது; ஒளிக்கீற்றினால் மட்டுமே அது சாத்தியம். வெறுப்பினை வெறுப்பால் தோற்கடித்துவிட இயலாது; நேசத்தினால் மட்டுமே அது முடியும்.

3. மன்னிப்பது என்பது எப்போதாகிலுமென்பதன்று; அது நிரந்தரமானது.

4. அன்பென்பது இலகுவாக்கிக் கொண்டேயிருப்பது; வெறுப்பெனும் பாரத்தைத் தூக்கித் திரிவது கனத்தையே கூட்டும்.

5. எதார்த்தம் என்பது முதற்படி; மேற்படிகள் கண்களுக்குத் தெரியாதபட்சத்திலும்!

6. அண்டியிருப்பவர்க்கு நாமென்ன செய்கின்றோமென்பதுதான் வாழ்க்கை.

7. கசப்புகளுக்கு ஆசைப்படுதல் கசப்புகளுக்கே வழிகோலும்.

8. தேவைக்கிடமான பேச்சை மட்டுப்படுத்துவது மரணத்துக்கீடானது.

9. வேறு வேறான கப்பல்களாக இருந்திடினும் வாழ்க்கைப் பயணத்தில் நாமனைவரும் சகபயணிகளே!

10. அடுத்தவரை வெறுக்கும்படி யாரும் உன்னைக் கீழிறக்கி விடாமற்பார்த்துக் கொள்க.

11. அறிவும் பண்பும் கூடியதே கல்வி.

12. எல்லா நேரமும் சரியான நேரம்தான், நல்லதைச் செய்ய.

13. அமைதி என்பது பேச்சுமூச்சற்றுப் பதற்றம் இல்லாமலிருப்பதன்று; அறம் தழைத்தோங்குவதே அமைதி.

14. பழிவாங்கலும் வெறுப்பும் துணிவின் அடையாளமன்று.

15. ஆயுளின் நீளம் அன்று, தரமே வாழ்தலின் அளவீடு.

காந்தியின் கொள்கைகளாகச் சொல்லப்பட்ட பலவற்றினாலும் ஈர்க்கப்பட்டவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர். அவருடைய, புகழ்பெற்ற, “உண்டு எனக்கொரு கனவு” எனும் உரையிலிருந்து:

உண்டு எனக்கொரு கனவு. இன்றல்ல, நாளைக்கும் கூட நாம் இன்னல்களையே எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை இருந்தபோதும். அது அமெரிக்காவின் கனவு.

உண்டு எனக்கொரு கனவு. நாடு ஆர்ப்பரித்தெழும், நாமனைவரும் சமமானவர்களெனும் உண்மை வெளிப்பட்டே தீரும்.

உண்டு எனக்கொரு கனவு. அடிமையாயிருந்தோரின் வழித்தோன்றல் பிள்ளைகளும், அடிமைப்படுத்தியோரின் பிள்ளைகளும் சகோதரசகோதரிகளாய் ஒன்றே அமர்ந்திருப்பர்.

உண்டு எனக்கொரு கனவு. அடிமைப்பாங்கின் வெறுப்பும் அநீதியும் நீங்கி, விடுதலையும் அறமும் எங்கும் வியாபித்திருக்கும்.

உண்டு எனக்கொரு கனவு. என் பிள்ளைகளை நிறத்தால் அடையாளப்படுத்தப்படாமல், பண்பால் அடையாளப்படுத்தப்படும் நாள் வந்தே தீரும்.

உண்டு எனக்கொரு கனவு. இன்று, உண்டு எனக்கொரு கனவு.

உண்டு எனக்கொரு கனவு. வெறுத்தொதுக்கலும் வீண்பழிசுமத்தலும் இட்டுக்கட்டுவதினின்றும் விடுபட்டு எல்லாப் பிள்ளைகளும் கரம்கோர்ப்பது உறுதி.

உண்டு எனக்கொரு கனவு. இன்று, உண்டு எனக்கொரு கனவு.

1963, ஆகஸ்டு 28ஆம் நாள், வாஷிங்டன் டிசியில் கிங் அவர்கள் உரையாற்றியதன் சாரம்தான் இது. இன்றளவும் நமக்குப் பாடமாக, துணையாக இருந்து கொண்டிருக்கின்றது. சோசியல் மீடியா என்பது மட்டுமல்ல. சமூகமும் வெறுப்பால் சூழப்பட்டுக் கிடக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஃபேக்நியூசுகள். இட்டுக்கட்டிய வெறுப்புணர்வுப் பரப்புரைகள். அதற்கு இரையாகிக் கிடப்பது நம் அண்ணனாக இருக்கலாம். தம்பியாக இருக்கலாம். அம்மாவாக இருக்கலாம். யாராகவும் இருக்கலாம். வெறுப்பைக் கொண்டு வெறுப்பை அகற்றிவிட முடியுமா? முடியாது.

“ஏண்ட்டை இந்து, ஏண்ட்டை அமெரிக்கன், ஏண்ட்டை இந்தியன், இந்துவெறியன், தமிழின விரோதி, வந்தேறி, சாதிவெறியன், சமத்துவ எதிரி, ஆதிக்கசாதியன், மீடியாக்கர், பகூத்தறிவுப் பிண்டம், அறிவுஜீவி, வெஸ்டர்ன்ஸ்லேவ், மேலைநாட்டுத்துதிபாடி, பழைமைபேசிப் பஞ்சாங்கம்”, இவையெல்லாம் எதிர்கொண்ட, அதுவும் நண்பர்களாலேயே சூட்டப்பட்ட நாமகரணங்கள். இவற்றின் அடிப்படை என்ன? வெறுப்பு, சகிப்பின்மை, ஒவ்வாமை. இந்த வெறுப்பு அவர்களிடமிருந்தே பிறந்தவையா? இல்லை. அவர்களுக்கு ஊட்டப்பட்ட வெறுப்பு. இவர்கள் அதைச் சுமந்து திரியும் அபலைகள். எதற்காக ஊட்டப்படுகின்றது? அரசியல், வணிக, சமய சக்திகளின், polarize & consolidate, emotionally persuade & convince முதலிய பிரித்தாளும் சூட்சுமங்களுக்கு இரையாகிப் போனவர்கள் இவர்கள். இவர்களுடைய ஓட்டும் வணிகமும் ஆன்மீகக் காணிக்கைகளும், அரசியல், வணிக சக்திகளுக்கான அறுவடை. எப்படி உறுதிபடச் சொல்லமுடியும்? சூட்டப்பட்ட, ஏவிய சொற்களுக்குள்ளே இருக்கும் முரண்பாடுகளே அதற்கு சாட்சி.

அமெரிக்காவின் சில கிறித்துவக் கூடங்களிலே தடுப்பூசிக்கெதிரான மூளைச்சலவை நடக்கின்றதெனச் சொன்ன மாத்திரத்தில், இந்துவெறியன் நாமகரணம் சூட்டப்பட்டது. பகிரப்பட்ட ஒரு ஃபேக்நியூசைச் சுட்டிக் காண்பித்ததும், இந்துவிரோதி சூட்டப்பட்டது. சூலூர் தொகுதியில் வாக்குகள் இப்படி இப்படிப் பதிவாவது வழமையென்றதுமே, சாதிவெறியன் சூட்டப்பட்டது. இப்படித்தான் எத்தனை எத்தனை?? இவர்களிடத்திலே, பேசுபொருளுக்கான சான்று, ஆதாரம், சோர்ஸ் கேட்டுப்பாருங்கள், கிடைக்காது. மாறாக, தனிமனித விமர்சனத்தைப் பொத்தாம் பொதுவாக ஏவுவார்கள். இங்கேதான், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்.

“I have decided to stick with love. Hate is too great a burden to bear.” அன்பாய், அடக்கமாய், பொறுமையாய் இருக்க வேண்டியது அவசியம். சொற்களை விட்டுவிடக் கூடாது. நமக்கு நம் சகோதரர்கள் முக்கியம். உற்றார், உறவினர் முக்கியம். நண்பர்கள் இன்றியமையாதவர்கள். சகமனிதர்களே நம் வாழ்வு. Let's practice motivation and love, not discrimination and hate.

மார்ட்டின் லூதர் கிங் நாளைச் செழுமையுடன் எதிர்கொள்வோம். Love you all.

1/07/2022

அவ-அறிவியல்

நவீன தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மாந்தனின் வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கின்றதோ, அந்த அளவுக்குச் சிக்கலாக்கியும் இருக்கின்றது. சுயமுரண் கொண்டதாக இருக்கின்றதேயென நீங்கள் யோசிக்கலாம். ஆனால் முரணுடையது அல்ல. பயன்பாட்டில் மேன்மையைக் கொடுத்திருக்கின்றது. ஆனால் பயன்பாட்டுக்கான நோக்கத்தில் நச்சுப்பிறழ்வுக்கும் வீரியத்தைக் கொடுத்திருக்கின்றது.

பணம் பண்ணுவதற்காக நைச்சியமாக அறிவியற்கூறுகளோடு நம்பிக்கையெனும் உணர்வு யுக்தியைக் கலந்து புதுப்புது வடிவங்களில் ஏமாற்று வழிகளைக் கையாள்வது; அதையே ஆங்கிலத்தில், போலி அறிவியல்/Pseudoscience என்பர்.

பெர்முடா டிரையேங்கிள்

குறிப்பிட்ட முக்கோண வடிவிலான வானவெளி, கடல்வெளியான பரப்பளவு. அதில் 1900ஆம் ஆண்டிலிருந்து இன்னின்ன விமானங்கள், இன்னின்ன கடற்போக்குவரத்துக்கலங்கள் காணாமற்போயின. விபத்துக்குள்ளாகின. புள்ளி விபரம் தரப்படும். அனைத்தும் உண்மைதான்.  இதை வைத்து, ஒரு கதை. வடிக்கப்படும் கதையின் போக்கு, சாமான்யனை நம்பிக்கைக்குள் ஆழ்த்தும். அந்த நம்பிக்கையானது காலங்காலமாகக் கடத்தப்பட்டு வரும் போது, உண்மையென்பதாகவே நிலை பெற்றுவிடுகின்றது.

ஓர் ஊரில் ஆயிரம் பேர் இருக்கின்றனரென வைத்துக் கொள்ளுங்கள். 200 பேர் இதை நம்புகின்றனர். 750 பேர் இதுகுறித்துப் பேசவோ கேள்விப்படுவதற்கோ கால அவகாசமில்லை. வாய்ப்பில்லை. எதிர்கொள்ளவில்லை. ஒரு ஐம்பது பேர் மாற்றுக்கருத்து வைக்கின்றனர் அல்லது எதிர்வினையாற்றுகின்றனர். என்ன நடக்கும்? அந்த 200 பேரும் சேர்ந்து 50 தனிப்பட்ட நபர்களை நோக்கி கேள்விக்கணைகள், கேலி, நையாண்டி, திசை திருப்பல், புரட்டு, இன்னபிற வாதவிவாதக் கூறுகள் கொண்டு எதிர்கொள்ளும் போது, 50 பேர் குழு ஆள் மாற்றி ஆளுடன் சமர் செய்யத் தலைப்பட்டு ஓய்ந்து விடுவர்; நிலைகுலைந்து போவர். பார்ப்போருக்கு 200 பேர்க்குழு சொல்வதே உண்மையெனத் தோன்றும். அந்த 200 பேர், 500 பேராக மாறக் கூட வாய்ப்புண்டு. அதுதான் எதார்த்தத்தில் நடக்கின்றது.

பெர்முடா பரப்பளவில் இன்றளவும் போக்குவரத்து முனைப்பாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.  அதிகமான கப்பற்போக்குவரத்து நிகழக்கூடிய இடங்களில் இதுவுமொன்று. அதிகமான கப்பற்போக்குவரத்துவிபத்து நிகழக்கூடிய முதற்பத்து இடங்களில் இது இல்லை. ஒரு நம்பிக்கையின் பேரில், இந்தக் கதை இன்றளவும் இடம் பெற்று வருகின்றது. இதற்கான சான்றுகளாக, போக்குவரத்து விபரங்களைக் காண்பிக்கக்கூடிய flightradar, பல்கலைக்கழக ஆய்வேடுகள் முதலானவற்றைக் காண்பித்தால், மலேசிய விமானம் காணாமற்போனதை அறிவியலால் கண்டுபிடிக்க முடிந்ததா? இப்படியாக எதிர்கேள்விகளைக் கேட்டு, அறிவியல் நிறுவனங்களின் இருப்பையே கேலிக்கூத்தாக்கிவிடுவர் இத்தகைய அவ-அறிவியலாளர்களும் நம்பிக்கையாளர்களும்.

ஊடகங்களைப் பாருங்கள். ஒருபக்கம் அச்சுறுத்தும் விதமாக நெகடிவ் செய்திகள் அடுக்கடுக்காக வந்து கொண்டேயிருக்கும். இன்னொரு பக்கம், அச்சுறுத்தல்களை வெல்லக்கூடிய சக்தி இதுவென்பதான வியந்தோதல்கள் (ரொமாண்டிசைசிங்/குளோரிபையிங்)  நடந்து கொண்டிருக்கும். பணம் பண்ணலாம். அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் கத்தரிக்காய் விளைவித்து பலகோடிகளுக்கு அதிபதியான கதைகள். அதே இதழில், விவசாயிகள் தற்கொலை என்பதான செய்திகளும் இருக்கும். இத்தனையையும் கடந்து, உலகம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. சராசரி ஆயுள் கூடி இருக்கின்றது, வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கின்றது, மக்களாட்சி மலர்ந்திருக்கின்றது, ஏழை பணக்காரன் வித்தியாசம் குறைந்திருக்கின்றதென சொல்லிக் கொண்டே போகலாம். எப்படி? அதுதான் அறிவியல். சகிப்பையும் பொறுமையையும் கடமையுணர்வையும் உள்வாங்கிக் கொண்டேவும், அந்த அவ அறிவியலாளர்களுக்குமான சேவைகளையும் ஆற்றி வருவதுதான் காரணம். 

https://plato.stanford.edu/entries/pseudo-science/

Pseudoscience is like a virus. At low levels, it's no big deal, but when it reaches a certain threshold it becomes sickening. - Phil Plait

If 50 million believe in a fallacy, it is still a fallacy. - Prof. Samuel Warren Carey


1/06/2022

காழ்ப்பினை, அவலத்தை(troll)ச் சமாளிக்க ஐந்து வழிகள்

வெறுப்பு, காழ்ப்பு, அருவருப்பு முதலானவை சமூக ஊடகங்களில் ஏன் நிகழ்கின்றது?

1. தன்னுடைய இருப்பின் மீதான நம்பிக்கையின்மை. தன்னுடைய இருப்பைக் காண்பித்துக் கொள்ள, தக்கவைத்துக்கொள்ள, பகடி, கேலி, எள்ளல், ஃபேக்நியூஸ் போன்றவற்றின் மூலம், சார்புநிலை கொள்ளும் போது, சார்புடையவர்களின் ஆதரவு கிட்டும். அப்படிக் கிட்டும் போது ஜனத்திரளில் நாமும் இருப்பதாக உணர்ந்து மனம் ஆசுவாசம் கொள்கின்றது. திருப்தி ஏற்படுகின்றது.

2. நட்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்கோர் எளிய வழி. ஏதோவொன்றின்பால் விருப்பம் கொண்டு, அதன் நிமித்தம் கூட்டுச்சேர்வதைக் காட்டிலும், ஏதோவொன்றின்பால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன்நிமித்தம் கூட்டுச்சேர்வதன் பிணைப்பு மிகவும் இறுக்கமானதாக அமைகின்றது. ஒன்றும் இரண்டும் சேர்ந்து கொள்ள, பலிகடாவாக மூன்றாவதாக ஏதோவொன்று தேவைப்படுகின்றது. அதன்நிமித்தம் அவ்வப்போது அந்த மூன்றாவதைக் குறிவைத்துக் கொள்வது நேர்கின்றது.

3. மேற்கூறிய இரண்டையும் தனதாக்கிக் கொள்ளும் அரசியல், வணிக சக்திகள், இடையறாது அதற்கான உள்ளீடுகளை உருவாக்கி இவர்களுக்கான தீனியாகக் கொடுத்துக் கொண்டேயிருப்பதன்வழி, அவை தனக்கான பயனை ஈட்டிக் கொள்கின்றன.

வெறுப்புப்பதிவுகளில் இருந்து எப்படித் தற்காத்துக் கொள்வது?

1. அப்படியான பதிவுகளை இனம் கண்டுகொள்வது முதற்தேவை. அவற்றை உருவாக்கியவர் யார்? எழுதியவர் யார்? எந்த ஊர்? சோர்ஸ் என்ன? இப்படியான எதுவுமே அப்படியான பதிவுகளில் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது இனம் தெரியாத நிறுவனப் பெயராக இருக்கும். அப்படியானவை புறக்கணிக்கப்பட வேண்டியவை, புறம்தள்ளப்பட வேண்டியவை.

2. வெறுப்பென உணர்ந்ததும் ஒதுக்கப்பட வேண்டும். நிராகரிக்கப்பட வேண்டும். நுகர்தல் மட்டுப்பட வேண்டும். இயலுமாயின், ரிப்போர்ட் அடிக்கப்பட வேண்டும்.

3. சிலநேரங்களில் இப்படியானவற்றைப் பகிர்வது, எழுதுவது, நம் நண்பர்களாகவோ உற்றார் உறவினராகவோகூட இருக்கக் கூடும். அப்படியான நேரங்களில், அவற்றுக்கு உகந்தமுறையில் மறுமொழிதல் வேண்டும். அவையாவன கீழேவருமாறு,

  1. பேசுபொருள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். மாறாக, தனிமனிதர்மேல் பாயக்கூடாது. ஒருபோதும் பெர்சனல் ஸ்கோர் செட்லிங் என்பதாக இருந்துவிடக் கூடாது.
  2. உரிய காரணம், ஏரணம், தரவுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
  3. வெறுப்பின், போலித்தன்மையின் இடங்கள் கோடிட்டுக் காண்பிக்கப்படுதல் வேண்டும். மாற்றுப்பார்வையைப் பொதுவில் வைக்க வேண்டும்.
  4. சொற்களில் நாகரிகம் கடைபிடிக்க வேண்டும். தகிப்பு, சூடு, வேகம் முதலானவை மட்டுப்படுதல் நன்று.
  5. இம்ப்பல்சிவாக, உடனுக்குடனேயெனும் போக்கினைக் கைவிட்டு, இடைவெளியிட்டுக் கருத்துரைத்தல் நன்று.
  6. வசைக்கு இனிய சொல்லைப் பதிலாக்கிவிட வேண்டும்.
  7. சிரிப்பால் வெறுப்பின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்தல் நன்று.

4. வெறுப்பும் சினமும், கூட்டங்களில், குழுமங்களில் மட்டுமே கொப்பளிக்கக் கூடியன பெரும்பாலும். மந்தையாட்டு மனோபாவம் என்பது மாந்தனுக்கும் பொதுவானதுதான். துவண்டு போகத் தேவையில்லை. பதற்றம் கொள்ளத் தேவையில்லை. தன் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு முதன்மை. அதற்கடுத்து, எளிய முறையில் பின்வாங்கிக் கொள்தல் நலம். இணையத்தினூடாக எனும் போது, அமைதியுடன் இருந்து, தனக்கான வாய்ப்பு வரும் போது தரவுகளைச் சுட்டிக் காட்டித் தன்னைப் பணிவுடன் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். தனிமனிதர்களுக்கிடையேயானது என்பதனின்று, பேசுபொருள் குறித்த கருத்துகளுக்கிடையேயானது என்பதாகக் கட்டமைத்தல் நலம்.

5. தற்காப்பு மிக அவசியம். நாம் பேசியதினின்று ஒருபகுதியை மட்டும் சுட்டிக் காட்டி வில்லனாக்க முயலவும் செய்வார்கள். நண்பர்கள்தாம். ஆனால் அவர்கள் வெறுப்புணர்வுக்கு இரையாகிப் போன அபலைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படியான நேரத்தில், எதிர்வினை இல்லாமல் இருப்பது நலம். எல்லாம் தணிந்தபின், பேசலாம். சுட்டிக் காண்பிக்கலாம்.

வெறுப்புணர்வைச் சமாளிப்பது எவ்வளவு முக்கியமோ, அதற்குச் சற்றும் குறையாதது வெறுப்புணர்வுக்கு, ஃபேக்நிவூசுகளுக்கு ஆட்படாமல் இருப்பதும். நமக்கு இருப்பது ஓர் உடல், ஓர் உயிர். மற்றவர்க்கு ஒப்புக் கொடுப்பதற்கல்ல அவை. நம் வாழ்க்கை நம்வசமாகட்டும்! சியர்ஸ்!!