6/29/2008

திருமண வாழ்த்து

நம்ம சிநேகிதர் விஜய் திருமணம் நல்ல விதமா முடிஞ்சு, மனையாளுடன் நாமிருக்கும் இடம் வந்து சேர்ந்ததில் நிரம்பவும் மகிழ்ச்சி. அவர்களை வாழ்த்துவதில் உங்களுடன் நாமும் பூரிப்பு அடைகிறோம்.

விஜயகுமார் பிரியதர்ஷினி

ன்பில் நனைந்து
சிகள் ஈர்த்து
னிமை வளர்த்து
கை பெருக்கி
வகை உற்று
ழ்வினை அகற்றி
ங்கும் சிறந்து
ற்றம் தரித்து
யம் தகர்த்து
ருமனம் பட்டு
ங்குதல் உய்த்து
டதம் கொண்டு
இல்லறம் செழிக்க
இறைவன் அருளட்டும்; நாமும்
வாழ்த்துகிறோம்; வாழ்க மணமக்கள்,
பேறுகள் அனைத்தும் தனதாக்கி!

6/27/2008

எதோ, நம்மால முடிஞ்சது...

காலங்கள் மாறுது. தொடர்ச்சியா நாகரிகம், தொழில்நுட்பம், நடை, உடை, பாவனை, மொழி, பண்பாடும் மாறுது. மாற்றம்னு சொல்லும் போது நாம ஒத்துக்கதான் வேணும். ஆனா, அந்த மாற்றம் வளர்ச்சியா, இல்ல வீழ்ச்சியானு யாராலும் உறுதியா சொல்ல முடியல. சிலதுல வளர்ச்சி மாதிரி தெரியுது. சிலதுல படு வீழ்ச்சினு நாம நெனைக்க வேண்டி வருது இல்லீங்களா? அதுல பாருங்க, மொழி பண்பாட்டு விசயத்துல தமிழன் வளர்ச்சிப் பாதையிலா? இல்ல, வீழ்ச்சிப் பாதையிலா?? நமக்கு நாமே, நாடி புடிச்சு பாத்துக்க வேண்டியதுதான்.

நம்ம கருத்து என்னன்னா, தமிழன் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு இருக்கு. அந்த மேம்பாட்டுல மொழி மற்றும் பண்பாடு சிதஞ்சி போச்சு. பண்பாடு சிதஞ்சதுக்கு காரணம் தாழ்வு மனப்பான்மை. 'அடுத்த இனத்துக்காரன் பெரிய ஆள். அவன் பண்பாடு, பழக்க வழக்கங்கள் நம்முளத விட ஒசத்தி. நாமளும் அதயே செய்வோம்'னு நினைச்சு நம்மளோடது சிதஞ்சி போச்சு. இதச்சொன்னா, குதர்க்கமா, 'நீ, வேட்டி கட்டிட்டு வேலைக்குப் போ'னு சொல்லுறாங்க. சாமி, தமிழ்நாட்டுல வேட்டி கட்டுறதை தாழ்வா நெனைக்கிறாங்களே, அதான் நம்ம சங்கடம். இப்படி குதர்க்கமா பேசுறதுல ஒரு பிரயோசனமும் இல்லயே.

இந்த சூழ்நிலைல மொழி சிதயாம இருக்கணும்னா, எண்ணற்ற புது வார்த்தைகள் தேவப்படுது. எதோ, நம்மால முடிஞ்சது என்னன்னா, தெரிஞ்சத நினைவுல வெச்சி புழக்கத்துல விடுறது. முடிஞ்சா, புது வார்த்தைகள உண்டு பண்ணுறது. நம்ம பதிவுப்பேழைல, நிறய அது மாதிரி பாத்து இருப்பீங்க. அந்த வரிசைல இதோ மேலும் கொஞ்சம்:

கையூக்கி

மென்பொருள் பாவிப்பானி(application)ல் ஒரு செயலை உண்டு பண்ணுகிற ஊக்கி (Mouse).

பயன்கொடை அட்டை

affinity card. A credit card where a certain amount of money is given by the credit card company to a charity everytime the card is used

ரொக்க அட்டை

cash card

பற்று அட்டை

charge card

ரொக்க உறுதி அட்டை

cheque guarantee card

கிட்டிப்பு அட்டை

credit card

செலவட்டை

செலவு செய்ய உபயோகிக்கும் அட்டை. debit card. கடவிப்பு அட்டைனும் வெச்சுக்கலாம். கடவித்தல் என்பது கடத்தல். ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான பணத்தை உங்கள் வங்கிக் கணக்கோடு கடவித்துக் கொடுக்கும் அட்டை கடவிப்பு அட்டை.

பொன்னட்டை

gold card

கடையட்டை

store card


நிறய வார்த்தைகள, எளிதான தமிழ்ச்சொற்கள்ல கொண்டு வரணும். அத புழங்கப் பழகிக்கணும். அந்த வகைல, உங்களுக்கு தெரிஞ்சத, நீங்களும் இந்த பதிவுப்பேழைல பதிஞ்சு, உங்களால ஆனத செய்யுங்க. என்ன நாஞ்சொல்லுறது, செரிதான?!

6/22/2008

எதிர்மறைச்சக்தி உணவு

நான் டொரோன்டோல இருந்தப்ப 'அர்னாப் முகர்ஜி'ங்கற வங்காள நண்பனோட, பலதையும் பேசிட்டு இருப்பேன். இன்னும் அவன் அங்கதான் இருக்கான். அப்ப தெரிஞ்சிகிட்ட விசயந்தான் எதிர்மறைச்சக்தி உணவுகள்(catabolic foods).

இந்த உணவு வகைகள் செரிமாணத்துக்கு தேவையான சக்திய விட கொறஞ்ச அளவுதான் சக்தியக் குடுக்குமாம். இது நல்லா இருக்கு இல்லீங்க?! ஆமாங்க, இந்த உணவு வகைகள் எடயக் குறைக்காட்டி கூட பரவாயில்ல, கூட்டாம இருந்தாலே நல்லது தானே! நேர்மறைச்சக்தி உணவுகள, anabolic foodsனு ஆங்கிலத்துல சொல்லுறாங்க.

மேலதிக விபரங்களுக்கு, இங்க உங்க கையூக்கி(mouse)யால ஒரு கிள்ளு கிள்ளுங்க.

ஆறு சுவைகள்

(இது சுட்ட படைப்பு! அதுவா முக்கியம் நமக்கு, படீங்க மேல....)

ஆறு சுவைகள் பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.

இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் இப்ப பாக்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர்.

இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

சமையல் அறையில்.......

சின்ன வெங்காயம்

முதல்ல, சின்ன வெங்காயத்தை அதிகமா சாப்பிடணும். இது இதயநோய், ஆஸ்துமா இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும். பனிக்காலத்துல வர்ற சுவாசத்தடையை சீராக்கும்.

தேன்

இது மாதிரி ஒரு இயற்கையான மருந்து உலகத்திலே வேறு எதுவும் இல்லை! நாம தேனை சாப்பிடும்போதே ரத்தத்தில் கலந்துவிடும் அரிய மருந்து இது, அதனால்தான் மாத்திரைகளை தேனில் கலந்து சாப்பிடச் சொல்றாங்க வைத்தியருங்க..! இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மட்டுமல்ல, நினைவாற்றலும் அதிகமாகும். மேலும் உற்சாகம் அதிகரிக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்பு, ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும். அதத்தான் மனுசி சொல்றாங்க, தேன கடவுளுக்கு படச்சா ஆயுள் கூடும்னு. (அவங்களுக்கு கடவுள் நாம தான?!)


தக்காளி

பழங்களில், நாம தினமும் சாப்பாட்டில் சேர்க்கிற தக்காளியைத் தான் முதல்ல சொல்லணும். தக்காளியில் சிவப்பு நிறம்தான் நல்லது. அதுல 'லைஸோபீன்' என்ற மூலப்பொருள் இருக்கு. இது உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதோட, போலிக் ஆசிட், இரும்பு சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இருப்பதால் தக்காளியை தினமும் சேர்ப்பது நல்லது.

முட்டைகோஸ்

காய்கறியில முட்டைக்கோஸில் நிறைய சத்துக்கள் இருக்கு. கண்ணுக்கு மிகவும் நல்லது, நினைவாற்றலையும் அதிகரிக்குது.


மஞ்சள்

மஞ்சளை அடிக்கடி சேர்த்துக்கிட்டா, மறதியை கட்டுப்படுத்தும், நினைவாற்றலை வளர்க்கும். தோலுக்கும், குடலுக்கும் ரொம்ப நல்லது. அப்புறம், இது ஒரு கிருமி நாசினி.

பூண்டு

அடிக்கடி நம்ம சாப்பாட்டுல பூண்டு சேர்த்துக்கிட்டா. வாயு தொந்தரவு இருக்காது. உடம்பில இருக்குற கொழுப்பை தடுக்கும். இடிச்சு சாறும் குடிக்கலாம், உப்போடு சேர்த்து கடிச்சு தின்னலாம். தீயில் சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடுவதும் நல்லதுதான். விடுமுறை நாட்கள்ள மட்டும் தான் இது உகந்தது. வாய் மணம் அடுத்தவங்கள படுத்தும். அதான்!

அடிக்கடி மீன் சாப்பிடுவதும் நல்லது. இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ரத்தம் கெட்டியாவதை தடுக்கும். குறிப்பா, கடலில் கிடைக்கும் மீனில், அதிக ஒமேகா 3 சத்துக்கள் இருக்குது. நாம சொன்னதை எல்லாம் அடிக்கடி சாப்பிட்டாலே போதும். நோய் எதிர்ப்பு சக்தியும் கூடிடும். ஆரோக்கியமும் கூடும். எந்த நோயும் நம்மை அண்டாது!

பழங்களில் வாழைப்பழமும், மாம்பழமும் அதிகமாக சாப்பிடலாம். திராட்சைப் பழம் ஜீரணத்தை அதிகரிக்கும். உடம்பில் இருக்கும் விஷத்தன்மையை, வெளியேற்றும். உடம்பை புஷ்டியாக்கும். பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களையும் அடிக்கடி சாப்பிடலாம். பப்பாளி, ஜீரணத்தை வேகப்படுத்தும். அதில் சத்துக்கள் அதிகமாக இருக்கு. மேலும் வாயு தொந்தரவை குறைக்கும்.


எள்ளுத்தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்-2

நெஞ்சுச்சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

6/21/2008

கிரகணம்

நாம பிறந்தநாள் பிறந்த கதைல 'காத்து கருப்பு'னு பேசிட்டு இருந்தோம்,அதன் தொடர்ச்சியா அது பத்தின நெறய விசயங்களை நண்பர்கள் கேட்டாங்க. அதன் விளைவா இப்போ நாம கிரகணம், அதன் போது விரதம்னு ஏன் நம்ம ஊர்ல பெரியவங்க இருந்தாங்கங்கறதப்பத்தி, எனக்கு தெரிஞ்சதை உங்களோட பகிர்ந்துகிறேன். இப்போ கிரகணத்தின் போது வெளிப்படுகிற புறவீச்சுக்கதிர்கள் எப்படி 'காத்து, கருப்பு'னு மாறுச்சுங்றதையும் பாப்போம்.

(விபரங்கள தட்டச்சு செய்து முடிக்கல இன்னும். அதுக்குள்ள 'பூமிக்கு எப்படி இரும்பு சக்தி வந்தது'ன்ற விபரத்தை இந்த ஒளித் தொகுப்பு பாத்து தெரிஞ்சுக்கோங்க. ஏன்னா, இதுக்கும் கிரகணம் சம்பந்தப்பட்ட விபரங்களுக்கும் தொடர்பு இருக்கு)

6/20/2008

நம்மூர் மயிலுங்கநாம மறக்காம இருக்குறதுக்குதான், இந்த பதிவு:

காக்கை கரையும்
குயில் கூவும்
மயில் அகவும்
கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்
வானம்பாடி பாடும்
புறா அனத்தும்
கிளி பேசும்
ஆந்தை அலறும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
யானை பிளிரும்
குதிரை கனைக்கும்
கழுதை கத்தும்
நரி ஊளையிடும்
நாய் குலைக்கும்
பன்றி கூச்சலிடும்

(விடுபட்டது எதனாச்சும் இருந்தா சொல்லுங்க, சேத்துக்கலாம்!)

6/19/2008

ஊர்ல மழையா கண்ணு?

நாம பத்தாம் வகுப்பு சுல்தான்பேட்டை பக்கத்துல இருக்குற லட்சுமி நாயக்கன் பாளையத்துல படிச்சோம். விடுதியில தான் தங்கி படிச்சோம்.அது ஒரு நல்ல அனுபவம். ம்ம்... இனி அந்த நாளுக திரும்ப வரவா போகுது?! அதுக்கப்புறம் அரசூர் பக்கத்துல இருக்கிற ஊர்ல இருந்துட்டு மேற்படிப்பு. சின்ன, சுத்தமான ஒரு கிராமீயச் சூழல் அது.அந்த நாட்கள்ல கிடைச்ச உபசரிப்பு, கவனிப்பு எல்லாம் அபாரம். கொங்குநாட்டு பண்பாடு என்னை அப்படியே உள்வாங்கின காலமது. எந்தவொரு வித்தியாசமும் இல்லாம, மாமா, அத்தை, பெரியம்மா, அமுச்சி, அய்யன்னு உறவு முறை சொல்லித்தான் எல்லாரையும் கூப்பிடுவோம். நாங்க சகோதரங்க மூணு பேரும், சொந்தமா நாங்களே சமைச்சி சாப்பிட்டுட்டு படிச்சோம், வேலைக்கு போனோம். அம்மா, அப்பா எல்லாம் பூர்வீகத்துல விவசாயம். அதனால ஊருக்குள்ள எங்களுக்கு எப்பவும் நல்ல கவனிப்பு தான். மாசம் ஒருவாட்டி உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல இருக்குற அந்தியூர்க்கு போய்ட்டு வருவேன். அப்படி போய்ட்டு, வந்த உடனே நடக்குற வழமையான நிகழ்வு தான் இது:

கண்ணு, எங்க தெக்க ஊர்க்கு போய்ட்டு வர்றியா கண்ணு?

ஆமாங்க அமுச்சி.

ஊர்ல மழையா கண்ணு?

முந்தாநேத்து கொஞ்சம் மழைதானுங்க அமுச்சி.

என்ன, ஒரு ஒழவு மழை இருக்குமா கண்ணு?

இல்லீங்க அமுச்சி அந்த அளவுக்கு காணாதுங்க.

இங்கதான், அதும் இல்ல போ. அப்பனாத்தா எல்லாரும் சௌக்கியந்தான?

ஆமாங்க அமுச்சி. கந்தசாமியண்ணன காணம்?

அவன் மேக்க ஒரு கண்ணாலம்னு போயிருக்கறான். பொழுதோட வந்துட்டு நாளைக்கி தட்டு அறுக்க போகோனும். ஆமா, பேசிட்டே இருக்காட்டி என்னோ? கையக் கழுவீட்டு வா, சாப்டலாம்.

இல்லீங்க அமுச்சி, அண்ணன் எதனாச்சும் செஞ்சு வெச்சிருக்கும்.

அடப்போ! ஆம்பள பசங்க நீங்க என்னத்த ஆக்கி திங்கப்போறீங்க? யாரங்க? மணியான் வந்து இருக்கறான். வட்டலு எடுத்து வெச்சு சோத்தப் போடு. வயித்துப் பசியோட வந்து இருப்பான். கண்ணு, சோறு உண்டுட்டு
இரு, நான் போயி மாடு கன்னுகளுக்கு தண்ணி காமிச்சி, தீவனம் போட்டுட்டு வாரேன்.


ம்ம்..... இப்படி எந்த சாதி சம்பிரதாயமும் பாக்காம கொள்ளாம, தாய் புள்ளயா, பந்த பாசத்தோட, ஊர்க்குள்ள எப்படியெல்லாம் ஓடி ஆடி இருந்திருப்போம். மாரியாத்தா கோயில் நோம்பி, மாகாளியாத்தா கோயில் நோம்பி, தங்க நாயகி அம்மன் கோயில் ஆண்டு விழா, அரசூர் பரசிவன் கோயில்ல படப்புனு நாளொரு கூத்து, தினமொரு கொண்டாட்டம்னு போய்க்கிட்டு இருந்த பொன்னான பூமி அது. சனங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் வெள்ளை மனசு, பந்தம், பற்று இதான். ஆனா இன்னைக்கு?? ஒரு ஏக்கரா ஒரு கோடி, ரெண்டு கோடியாம். ஊர் முச்சூடும் சீமைக்காரன் ஆலைகளும் வெளிமாநில சனங்களுமாம். ஊர் சனங்க எல்லாம் வித்துட்டு, அங்கங்க போய்ட்டாங்களாம். காலத்தின் கட்டாயமா?? இல்லை, கொங்குத்தமிழுக்கு வந்த சோதனையா? காலந்தான், இதுக்கு பதிலு சொல்லோனும்.......

6/16/2008

வள்ளியாத்தாவும் மயிலாத்தாவும்

கொள்ளுக்கா புடுங்கயிலே
வள்ளுவ குலத்துப்பய
வளச்சுகிட்டான்!நான்

திமிறிகிட்டேன்!!

ம்ம்.. என்னவோ போ!
அடங்காத புள்ளைக்கு எவளோ,
ஒறங்காம கொள்ளாம ரா ராட்டுனாளாம்!!


உனக்கென்னடி ஆத்தி? வண்ணானுக்கு வண்ணாத்தி

மேல ஆசை; வண்ணாத்திக்கு கழுதை மேல ஆசை!

பக்தி முத்தி, பூனை கருவாட்டு பானைய,
கக்கத்துல இடுக்கிக்கிட்டு மோட்சத்து போச்சாம்!


நான் ஒண்ணும் பச்ச கண்டா ஒட்டுறவளும் இல்ல;
பருவங்கண்டு தப்புறவளும் இல்லடி.

களத்து மேட்டு கதயச் சொல்லவா? இல்ல, வடக்குமின்னா
ஓடி, பொறவால ஒளிஞ்ச கத சொல்லவா??


(.......இது ஏதோ அந்த விவகாரம்னு கொஞ்ச தாமதமாத் தான்
புரிஞ்சது நமக்கு. வளயப் போனாலும் வழில போவனும்; நமகெதுக்கு
இந்த ஞாயம்னு புடிச்சோம் ஓட்டம் திரும்பி பாக்காம....)

6/15/2008

குசும்புக்கார பாட்டி
Tamilish வாசகர்களே, Tamilishல் manivasu எனும் பெயரில் உள்ள மற்ற பதிவுகளையும் பாருங்கள். பிடித்திருந்தால், அவற்றுக்கு வாக்கு(Vote) அளித்து பிரபலப் படுத்துங்கள். நன்றி!

6/12/2008

குழுமத்தில் பிறந்தநாள்

பிறந்தநாள் வாழ்த்து

கலை அய்யாவின் கண்ணாய்
கன்னக் குழியழகாய்
மலரின் மகவாய்
மதி முகமாய்
அய்ஷ்வரின் இளவலாய்
அகவை ஐந்தைக் கண்டாய்!

இப்புவி வாழ் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அம்மரங்கள் சூழ் கொடிகளும்
ஔடதம் மூலிகை பூண்டு புல் யாவும்,
தான் தரும் அருமருந்தின் வலிமையாய்த்திகழ
உன்னை வாழ்த்துகிற இப்பொழுதில்
குழுமத்தாரும் வாழ்த்துகிறார்கள்!!
வாழ்க வளமுடன்!!!
ஜூன் 13, 2008
சார்லட்.

தெரிந்ததில் சில - 1

கிளி வாங்கப்போய்...

அம்மா தன் குழந்தைகளுக்கு ஒரு கிளி வாங்கித் தர நினைச்சா. கிளி விக்கறவனைப் பார்த்துக் கேட்டா,"ஏம்ப்பா இந்தக் கிளி சத்தம் போடுமா?"

"போடாதும்மா. சாதுவான கிளி"

"மரியாதை இல்லாம பேசுமா?"

"பேசாதும்மா. நல்ல கிளி. அதோட இடது கால்ல கட்டியிருக்கற நூலைப் புடிச்சு லேசா இழுத்தீங்கன்னா, ஒரு குறள் சொல்லும். வலது கால்ல கட்டியிருக்கற நூலை இழுத்தீங்கன்னா, ஒரு ஆத்திச்சூடி சொல்லும்"

"ரெண்டையும் புடிச்சு இழுத்தா?"

"கீழ வுழுந்துருவேண்டி, நாசமாப்போன பன்னாடை!"ன்னு கத்துச்சு கிளி.

குழிப்பந்து(கோல்ஃப்) விளயாடப்போய்...

ஒருத்தர் குழிப்பந்து விளயாட்ட கத்துக்க வந்து இருந்தாரு. அவுரு பந்த அடிச்சாரு. அடிகோல் எறும்புப் புத்து மேல போய் விழுந்து, கொஞ்ச எறும்புக செத்து போயிருச்சு. மறுபடியும் முயற்சி செஞ்சாரு.இந்த தடவயும் கொஞ்ச நெறயவே எறும்புக செத்துப் போச்சு. எறும்புகளோட தலைவன் சொன்னான், "எல்லாரும் ஓடிப் போய் அடிபடாத எடமாப்போய் நின்னுக்குங்க"னு.

உடனே, எல்லா எறும்புகளும் ஓடிப்போயி குழிப்பந்து மேல நின்னுகிச்சு.

6/11/2008

முகப்பு மொழி

இப்ப நாம, நம்ப பக்கத்தில பொறிச்சிருக்கிற முகப்பு மொழி பத்தி அலசுவோம். அடிப்படையில அது ஒரு பழமொழி. அடியேனுக்கு அந்த பழமொழி மேல ரொம்பவே ஈர்ப்பு. நான் சிங்கப்பூர்ல 'டேம்பநிசு'ங்ற இடத்துல ஒரு ஒன்றரை வருசம் ஒரு தமிழ் குடும்பத்தவங்க வீட்ல குடி இருந்தேன். அவர் பேர் கனகவேல். அந்த வீட்டு அம்மா பேரு தனம்.அந்த அம்மா பிறப்புல சீனருடய மகள். ஒரு தமிழ் குடும்பம், அவங்கள பிறந்த உடனே சுவீகாரம் (தத்து) எடுத்துகிட்டாங்களாம். அதனால ஒரு தமிழச்சியாத்தான் அவங்க இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு மகன், பேரு பாக்கியராசு. ஒரு மகள், பேரு காமினி. ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன் அவங்க வீட்டுல.

அவங்க மகன் 'பாக்கியராசுக்கு'க்கு, தான் ஒரு சிங்கப்பூர்காரன் அப்படீனு நெனப்பு அதிகம். ஒண்ணு 'மலாய்'ல பேசுவான். இல்ல 'ஆங்கிலத்'துல பேசுவான். தமிழ் சுத்தமா பிடிக்காது. அப்ப ஒரு நாள், அவங்க அம்மா கூப்ட்டு சொன்னாங்க, "இப்படியே இருந்தீன்னா, சீனனும் உன்னோட தோல் நிறத்த பாத்து சேத்திக்க மாட்டான். மலாய்காரனும் சேத்திக்க மாட்டான். ஒண்ணு நீ தெருவுல நிப்பே, இல்ல அழிஞ்சி போயிருவே. தமிழனா இருக்கப் பழகிக்கோ. எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்" அப்படீன்னு சொல்லி புத்திமதி சொன்னாங்க. அப்ப இருந்து இந்த பழமொழி மேல எனக்கு ஒரு ஈர்ப்பு.

உலகத்துலயே ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட இனம் அப்படீனு சொன்னா அது யூத இனமாத்தான் இருக்கும். அரசியல் காரணங்களுக்காகவும் வேற காரணங்களுக்காகவும் அவங்க மேல நிறய கருத்து வேறுபாடுகள் இருக்கு. அது வேற விசயம். ஆனா, பஞ்சப்பராரிகளா நாடோடிகளா நாடு இல்லாம திரிஞ்ச அவங்க தனக்குன்னு ஒரு நாட்ட(இசுரேல்) உருவாக்கி, உலகத்துல ஒரு பெரிய சக்தியா இருக்காங்க. வரலாறு படைச்சு இருக்காங்க.இதுக்கு மூல காரணம், அவங்க இந்த பழமொழிய சரியா புரிஞ்சிகிட்டதத் தவிர வேற என்னவா இருக்க முடியுங்க?!

அவங்க மொழிதான், உலகம் பூரா இருந்த யூதர்கள ஒண்ணு சேத்தி இருக்கு.அந்த மொழி இனத்த கொண்டு வந்து நிறுத்துச்சு. இனம் அவங்க பெருமைய நிலை நாட்டுச்சு அப்படீங்றதுல எந்த மாற்றுக் கருத்தும் இருக்காதுன்னு நம்பறேனுங்க நானு.

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா

இனத்துல போயித்தான் அடையனும்!

வாழ்க தமிழினம்!!

வாசற்த்தல சாத்திரம் (வாஸ்து சாஸ்திரம்) - பிறழ்ந்தது எப்படி?

நம்ம ஊர்ல சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க, 'வீட்டக்
கட்டிப்பார், கல்யாணம் செஞ்சி பார்'னு. வீடு கட்டுறது
அவ்வளவு கடினமான வேலை. அப்படி பெரும் தொகை
செலவு பண்ணிக் கட்டும் போது, நாலும் பாத்து யோசனை
பண்ணித்தான் கட்டனும். சரிதான்!

அப்படிக் கட்டும் போது,மலைப் பிரதேசங்கள்ள ஒரு மாதிரி
கட்டனும். பள்ளம்,படுகை நெறஞ்ச பள்ளத்தாக்குல கட்டும்
போது ஒரு மாதிரி கட்டனும். கடலோரம்னா வேற மாதிரி.
பூகம்பம் மற்றும் இயற்கை இடர்பாடுகள் வர்ற இடத்துல
வேற மாதிரி. இப்படி இடம், சூழ்நிலைக்கேத்த மாதிரி
வெளிச்சமும் காத்தும் வர்ற மாதிரி கட்டுறதுக்கு ஒரு பொது
வழி முறைகள பெரியவங்க கொண்டு வந்தாங்க.அதுதான்
வீட்டு மனை சாத்திரம்.

அத வியாபார நோக்கத்துல ஒரு அர்த்தமில்லாத சாத்திரமா
ஆக்கிட்டாங்க பின்னாடி வந்தவங்க. சாத்திரங்கள்லாம் நமக்கு
வழி காமிக்கனும். அதவிட்டுட்டு, நாம நம்ம வாழ்க்கைய,
அதுக, அதுவும் சிதஞ்சி போனதுக கையில, ஒப்படைக்கக்
கூடாது இல்லீங்களா? நீங்களே சொல்லுங்க!

6/09/2008

எப்பவோ ஒரு நாள், அவரு சொன்னது...

பழமைபேசி லட்சுமிநாயக்கன் பாளையத்துல பத்தாம் வகுப்பு படிக்கும் போது,தமிழாசிரியர் கோவிந்தராஜ் வாத்தியார் நிறய விசயங்கள் சொல்லுவார். அவர் சொன்ன பழமொழி நெஞ்சுல இருக்கு. ஆனா வரல.சரின்னு என்னோட சோட்டாலி சுல்தான்பேட்டை பழனிசாமிக்கு போன் பண்ணிக் கேட்டேன்.நண்பன் மறக்கலை. அவரு சொன்னதை, பழனிச்சாமி 'கடகட'ன்னு சொன்னான்:

"பொம்பள சிரிச்சா போச்சு
ஆம்பள அழுதா போச்சு
அப்பளம் நனஞ்சா போச்சு
புகையில விரிச்சா போச்சு
வெத்தலை காஞ்சா போச்சு
சோறு குழைஞ்சா போச்சு
மோரு புளிச்சா போச்சு
வலை கிழிஞ்சா போச்சு
அடுப்பு அவிஞ்சா போச்சு"


அப்படீன்னான். மனுசி வர்றத பாத்த நானு, 'பொண்டாட்டி கிட்ட
மொறச்சா போச்சு'னு சொல்லிட்டு, அப்புறமா பேசறேன்னு சொல்லி போன வெச்சிட்டேன்.

தழுவிய கூத்துப்பாட்டு

(மனசு வெறுமையா இருந்தப்ப, பொழுது போக எழுதியது.......)

தண்ணி போட்டுட்டா,
நானும் கண்ணதாசந்தான்! அட,
'அ' னா வந்துட்டா
அப்புறம் 'ஆ' வன்னா தான்!!

வட்டாளு முகம் பாத்தா,
தமிழ் மனசு கல்லாகுந்தான்!
விசாகன் முகம் பாத்தா,
கல் மனசும் பிஞ்சாகுந்தான்!!

முல்லைக்கொடிக்கு தேரு
குடுத்தவன், வள்ளல் பாரிதான்!
கொடிகள அத்து தேர்
ஓட்டுனவன், அல்லக்கை மாரிதான்!

தண்ணி போட்டுட்டா,
நானும் கண்ணதாசந்தான்! அட,
'அ' னா வந்துட்டா
அப்புறம் 'ஆ' வன்னா தான்!!

அய்யா சரவணனும் சுப்புராவும்,
கூல் கஸ்டமருங்கதான்!
தண்ணி தராத பசங்க
ளெல்லாம், பக்கருங்கதான்!!

சரித்திர வாத்தி சொன்னது,
விடாமுயற்சிக்கு கஜினியத்தான்!
நம்மாளு வணங்குறது,
சூப்பர் ஸ்டாரு ரஜினியத்தான்!!

எம்மவ கேக்குறது,
கைக்
கெட்டாத வான்நிலாவத்தான்!
கட்டுன மனுசி கேக்குறது, ஈசியா
கெடைக்கிற கிரிடிட் கார்டத்தான்!!

தண்ணி போட்டுட்டா,
நானும் கண்ணதாசந்தான்! அட,
'அ' னா வந்துட்டா
அப்புறம் 'ஆ' வன்னா தான்!!

அன்னையர் தின உவகை

எங்க குழுமத்தில இருக்கிற எல்லா அன்னையர்க்கும், அன்னையர் தினத்தில, குழுமத்தில இருக்கிற ஆடவர் எல்லாம் சேந்து நளபாகத்துல விருந்து படைச்சோம். ஆனா என்ன, எங்க சகதோழர் ஒருவருக்கு சின்னதா காயம் ஆகி அவர் வரலை. அதுல சின்ன வருத்தம். மத்தபடி நாங்க அசத்திட்டோம். அவங்க தரப்புல இருந்து அழகான கவிதை வெளிப்பட்டது. அந்த மனநிறைவுல எழுதினதுதான் இந்தப் பதிவு.

நிறை
பிதாமாரின் படைப்பாற்றல்
கமலத்தின் கவிதை
சிறுவர் பட்டாளத்தின் ஒத்துழைப்பு

குறை
அவரை உள்வாங்கி
அவரையே மையம் கொண்டு
கற்பனைக்கடலில் மூழ்கி
நகைச்சுவையாய்
நீளக்கதை எழுதி
படைக்கும் ஆவலில்
உள் நுழைந்தால் அங்கே
பெரிய வெற்றிடம்.
அது ஏமாற்றம் அல்ல;
அதையும் மிஞ்சியது அது!
அதையும் மிஞ்சியது அது!!

குணமாகி அக்குழம்படிச்
சத்தம் திரும்பும்
நாள் நோக்கி நாங்கள்!
அந்நாள் நோக்கி நாங்கள்!!

உவகை
வல்லிய நோக்கமே,
புலம் பெயர்ந்த மண்ணில்

தெரிந்த தமிழ் வார்த்தைகள்
நெஞ்சகலா வண்ணம்
இருக்கவே, கிறுக்கல்கள்.
அதில் மற்றவரும் இணையக் கண்டு
மகிழ்கிறோம் மட்டற்று!

ஆனாலும் அது கிறுக்கல் இல்லை,
வார்த்தெடுத்த கவிதையே அது.
படைப்புக்கு நன்றி நவிழ்ந்து,
உவகை உற்றோம் நாம்!
உவகை உற்றோம் நாம்!!

அன்னையர்க்கு நன்றி தெரிவித்து

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, பெரிய கலை நிகழ்ச்சி நல்லபடியா நடந்தது. அதுல எங்க குழுமத்தை சேந்த குழந்தைகளும் கலந்துகிட்டு ரொம்ப பிரமாதமா, அவங்க திறமைகள வெளிப்படித்தினாங்க. எல்லா குழந்தைகளுக்கும் நேர்த்தியா சொல்லி குடுத்து, பல தடவை ஒத்திகை பாத்து கடினமா உழைச்செதெல்லாம், குழுமத்தை சேந்த அன்னையர் அணியினர் தான். நிகழ்ச்சி முடிஞ்ச பின்னாடி, உவகைல அவங்களுக்கு நன்றி நவிழ்ந்து எழுதியது தான் இந்தப் பதிவு.


நவசக்தி தமிழ்ப் பண்பாட்டுக்குழு

ன்புச் சிறாரை நன்கே,
யத்தப் படுத்தி, வசனங்கள் பல
தயத்தில் புகுத்தி,
டற்ற முயற்சிதனை மூலதனமாக்கி,
ற்சாகத்தை உரிய தருணத்தில்,
ட்டி ஊட்டி எண்ணிய,
தையும் சாதிப்போம்,
ற்றம் பல காண்போமென,
யம் ஏதுமின்றி, இலக்கு
ன்றையே முன் நிறுத்தி,
ய்வைப் பணயம் வைத்து,
டதம் எனும் நிறைவை எட்டிய

அன்னையர் அணியினர்க்கு நன்றிகள் போய்ச்சேரட்டும்!
இளசுகள் மேலும் பல சாதிக்கட்டும்!!
அப்பாசாமிகள் பெருமைகள் பல கொள்ளட்டும்!!!

6/08/2008

வாழ்த்து எழுதுவது ஏன்?

எங்க பண்பாட்டுக் குழுவில, அடிக்கடி பிறந்த நாள் விழா வரும்.நாங்களும் மகிழ்வா கொண்டாடுவோம். அதுக்கு வாழ்த்து எழுதறத வழக்கமா ஆக்கி கிட்டேன். (பிறந்த நாள், பிறந்தது எப்படினு வர்ற வாரங்களில் பதியனும். சரி, விசயத்துக்கு வருவோம்) பிறந்த நாள் வாழ்த்து எழுதறதுல தமிழ் வார்த்தைகளை நினைவுல வெச்சுக்க முடியுது. வாழ்த்துன மாதிரியும் ஆகுது. ஆனாலும், அதுல குழுமத்துக்கு ஏதாவது கூற்று(fact), இல்லைனா, பண்பாடு சம்பந்தமா ஏதாவது விசயத்த சொல்லுறதயும் வழக்கமா ஆக்கிகிட்டேன். எருமைக்கு புல் புடிங்கின மாதிரியும் ஆச்சு, காடு சுத்தமான மாதிரியும் ஆச்சு பாருங்க. அந்த வரிசைல, இது கடந்த காலங்கல்ள எழுதினதில் ஒண்ணு.


(கையூக்கிய(mouse) வச்சி வாழ்த்து அட்டை மேல ஒரு கிள் கிள்ளி, பெரிய அளவு அட்டையை பாருங்க).

சர்வதாரி - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு அன்னைக்கு எழுதி குழுமத்தாரோட பகிர்ந்துகிட்ட வாழ்த்து இது. ஒருங்கீட்டுக் குறியீட்டு(unicode)ல தட்டச்சு மூலமா, பதிய இப்பத்தான் வாய்ப்பு கிடச்சிருக்கு.

பெய்த மழையில்

முற்பகலிலே கட்டியம் கூறிய,
தும்பிக்கூட்டம்!
பெய்த மழையில் பெருத்துப்போனது
வெடிக்காத பருத்திக்காய்கள் !!

சுற்றி வளைத்தடித்த சாரலில்
சுத்தமாகிப் போன கோபுரக்கலசங்கள்!
பொங்கிய கண்மாயைச்சுற்றி வேடிக்கை
பார்த்த ஊர்க்கூட்டம்!!

திடீர் எனப்பிறந்த சிறுகுளங்கள் ஊர்த்தெருவில்;
நீர் கிழிய, அதில் ஏர்க்குச்சி ஒட்டிய சிறுவர்கள்!
ஊர்க்கண்மாயில் சில்லடித்துப் போட்டி
நடத்திய உற்சாக விடலைகள்!!

ஏர்க்கலப்பை தேடி அங்குமிங்குமாய்
அலையும் நேற்று வரை சோம்பிய உழவன்!
கைக் களை எடுக்க நெட்டி முறித்து,
ஆயத்தமாகிக் காடு நோக்கும் காரிகைகள்!!

மட்டம் உயரக்கண்டு கேணியில் சாலோட்ட
காளைகளை நோக்கும் உழைப்பாளி!
அடித்த மழையில் புடைத்த காளான்களைப்
பறிக்கப்போன முதியவர் கூட்டம்!!

அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழடையாளங்களும் அழிகிறதென்று!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப் பண்பாடும் பட்டுப் போகிறதென்று!!

ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
அலைகின்றேன் நினைவுகளின் எச்சமாய்!
ஆனாலும் விட்டு வைத்தாய் என்னை; ஆதலினால்,
கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இத்தனை!!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முடிந்தவரை தமிழ் பேசுவோம் வீட்டில்!!

நம்ம ராசா, பொன்னியின் செல்வன்!

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம், செம்மையாய்க் கோலோச்சி தமிழன் தலை நிமிரச்செய்த பொன்னியின் செல்வன் பற்றிய தொகுப்பு.

இராஜராஜ சோழன்

( இதில் வரும் சில கருத்துகள் ஆமோதிக்கத்தக்கவை அல்ல)

முத்தமிழ்க்கடவுள் முருகன்

அழகன் ஞானப்பண்டிதன் வடிவேலன் முருகனின்
அறுபடை வீடுகள் பற்றி நேர்த்தியாய்
படம் பிடித்துக் காட்டும் தொகுப்பு இது.

சிலேடைப்புதிர்

  • முத்துஇருக்கும் கொம்புஇருக்கும் மூரித்தண்டு ஏந்திவரும் கொத்துஇருக்கும் நேரே குலைசாய்க்கும் - அது என்ன?
  • யாவருக்கும் ரஞ்சனை செய்து யாவருக்கும் அவ்வவராய்ப் பாவனையாய்த் தீதுஅகலப் பார்த்தலால் - மேவும் எதிரியைத்தன் னுள்ஆக்கி ஏற்ற ரசத்தால் ஆகும் - அது என்ன?
  • வாரிக் களத்துஅடிக்கும் வந்த பின்பு கோட்டை புகும்,போரில் சிறந்து பொலிவு ஆகும் - அது என்ன?

(இதற்கான விடைகள், 'புதிர் விடைகள்' எனும் பதிப்பில்)

கொண்டவனை படுத்துபவளைப் பார்த்து, சக தோழி பாடுவது

கல்லானாலும் கணவனடி!புல்லானாலும் புருசனடி!!
காலைல எழுந்திரிச்சு நல்ல காபி போடு! அப்புறம்
சட்டி பானை லொட்டு லொசுக்கு,
சகலத்தயும் கழுவிப்போடு!
வெள்ளி செவ்வாய் கிழமையில
வீடு பூரா குப்பவுறிஞ்சிய(வேக்யூம்) போடு!
ஞாயித்து கிழமையில
மீனு கறி
நாக்குக்கு ருசியா சமைச்சுப்போடு!
ஆடி அமாவாசையில
ஆண்டவனை
அனுசரணையா கும்பிடு!!

வெட்டி வேலைங்றது இதான்!!!

ஒன்பதாம் வகுப்பு பாடத்துல வந்த நாடோடிப்பாட்டு

முள்ளு முனையிலே மூன்று
குளம் வெட்டினேன்
ரெண்டு கும் பாழு
ஒண்ணு தன்ணியே இல்லை

தண்ணியில்லாக் குளத்துக்கு
மண்ணு வெட்ட மூணுபேரு
ரெண்டு பேரு நொண்டி
ஒருத்தனுக்குக் கையே இல்லை

கையில்லாத கொவன்
செய்தது மூணு பானை
ரெண்டு பானை பச்சை
ஒண்ணு வேகவே இல்லை

வேகாத பானைக்கும்
போட்டரிசி மூணரிசி
ரெண்டரிசி நறுக்கு
ஒண்ணு வேகவே இல்லை

வேகாத சோற்றுக்கு
விருந்துண்ண மூணுபேரு
ரெண்டு பேரு பட்டினி
ஒருத்தன் உண்ணவே இல்லை

உண்ணா கொத்ன்
கட்டினது மூணு கோயில்
ரெண்டு கோயில் பாழு
ஒண்ணு சாமியே இல்லை

சாமியில்லாக் கோயிலுக்கு
ஆடவந்தார் மூணுபேரு
ரெண்டுபேரு மொட்டை
ஒருத்திக்கு மயிரே இல்ல

அவங்க:என்ன? கோழி முட்டைக்கு சவரம் பண்ணிட்டு இருக்கீங்களா??
நாம:இதோ, வந்துட்டேன்....போயித்தான ஆவனும்?!

எள்ளுத்தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம்

நாவறட்சி,வாய் நாற்றம் நீங்க:காட்டு மல்லிகை சமூலத்தை கொண்டு வந்து சீந்தல் மதுரம் சமயிடை சேர்த்து, கசாயம் செய்து குடித்து வர நாவறட்சி நீங்கும்.

வாந்தி விக்கலுக்கு:கிராம்பு ஏலம் சீரகம் வெதுப்பி, மயிலிரகு சுட்ட சாம்பல் சமன் சேர்த்து பொடித்து தேனில் கலந்து சாப்பிட வாந்தி விக்கல் நீங்கும்.

சொரி சிரங்கு தினவு நீங்க:தாழம்பூ வேர் எடுத்து சக்கரை சேர்த்து, சர்பத்து போல் பதமாய் கலந்து சாப்பிட்டு வர, சொரி சிரங்கு தினவு நீங்கும்.

பல்,ஈறு வலுவடைய:நன்னாரி வேரில் கசாயம் செய்து தினமும் கொப்பளித்து வர, பல்ஈறு ஆரோக்கியமாக இருக்கும்.

மயிர் வளர:சாடமஞ்சியை எண்ணெய் விட்டு காய்ச்சி வைத்து கொண்டு தலை முழுகி வந்தால், மயிர் வளரும். மயிரும் வாசனை உள்ளதாக இருக்கும்.

சி உண்டாக: கொழிஞ்சி வேர் கசாயம் வைத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பசி உடனே உண்டாகும்.

பித்த வாயுவுக்கு:சிவதை வேர், திரிகடுகு சரியிடை கொண்டு சூரணீத்து சக்கரை சமன் கலந்து திருகடி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் வாயுவு நீங்கும்.

கண் நோய் நீங்க:நந்தியாவட்டை பூவை நன்கு பிழிந்து கண்ணில் விட்டு வந்தால், கண்காசம் படலம் நீங்கும்.

இருமலுக்கு:இஞ்சி சாறும் மாதுளைப்பூ சாறும் சமனாய் கலந்து ஒரு வேளைக்கு அரிக்கால் படி வீதம் குடித்து வர இருமல் நீங்கும்.


இதுவுமது (மேற்படி நோய்க்கு):இஞ்சிச்சாறும் ஈரவெங்காயச்சாறும் எலுமிச்சைச்சாறும் சமனாகக் கலந்து குடிக்க இருமல் நீங்கும்.

கட்டி கரைய:ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மேல் வைத்துக்கட்ட கட்டி கரையும். பெருத்த கட்டிகள் உடைந்து வற்றி விடும்.


(இனியும் நிறைய இருக்கு.நேரம் கிடைக்கிற பொழுது பதியனும்)

அந்த நாள் ஞாபகம்....

தண்ணிக் கொடமெடுத்து தல நனஞ்சு,
ஒடல் நனஞ்சு அன்ன நடநடந்து - கண்ணம்மா
அடயாளம் தெரிய வேணும் பொன்னம்மா!

அடயாளமும் தெரியுதுங்க அத்தான்னும் புரியுதுங்க
மச்சான்; சடங்கா இருக்கயிலே சந்திச்சு இப்படிப் பேசலாமா

கண்ணே பொன்னே என்று சொல்லி கண்ணம்மா - நீ
வழியொதிங்கிப் போகலாமா பொன்னம்மா

வழியொதிங்கிப் போகவில்லை வாய்முத்துச்
சிந்தவில்லை; வீதியில கண்டாக்க - கண்னய்யா,
வித்தியாசமாய் எண்ணுவாக; பொன்னிற மச்சான,
சுலுவுல மறந்துற மாட்டேன் மணி மாமா


பேச்சு மறக்க வேண்டாம் பெத்தவளக் கேக்க வேண்டாம்
பொறந்தது உனக்காக கண்ணம்மா - அப்படி பேதலிக்க
வேண்டாமடி அஞ்சலை; சாருலட் ஓடிருவோம்
சாலியாத் தான் இருந்துருவோம் புள்ள

போவது ஞாயமில்ல;போகுமுன்ன நல்ல கொண்டாட்டம்!
போனாத்தெரியும் சாமி,திண்டாட்டம்!பரதேசம் என்னக்கூட்டி,
தனியா வழிகாட்டி போவது ஞாயமில்ல!!


ஆல மரமுறங்க, அடி மரத்துக் கொப்பு உறங்க,
உம்மடிமேல நானுறங்க, நீலக் கருங்குயிலே
நிக்கட்டுமா போகட்டுமா

திரிஞ்ச நாளும் போதுமய்யா
ஊடு போய்ச் சேருமய்யா

6/07/2008

கதை சொல்லப்போய்.....

நாம:

ஒருவன் வெள்ளத்தில் மாட்டி கொள்கிறான். இரவு முழுக்க கடவுளிடம் விடாமல் வேண்டுகிறான். கடவுளும் மனமிரங்கி, அவனிடம் "காலையில் உன்னை காப்பாற்றுகின்றேன்" அப்படினு சொல்றாரு. சரினு
காத்திருக்கிறான். காலையில்,அந்த பக்கம் ஒரு கட்டை மிதந்து வருது. அவன் நாம் என் கட்டையை பிடித்து போக வேண்டும், நம்மை தான் கடவுள் காப்பாற்றுவதாக சொன்னாரே என்று எதுவும் செய்யலை. கட்டை வெள்ளத்தில் விலகி போய் விடுகின்றது. சற்று நேரம் கழித்து அந்த பக்கம் ஒரு படகு வருது - அது ஒரு மீட்புப்படகு. அதில் உள்ளவர்கள் இவனை வர சொல்கிறார்கள். இவனோ, கடவுள் என்னை காப்பாற்றுவார் என்று எதுவும் செய்யலை. இன்னும் சற்று நேரம் கழித்து மீட்பு வாணுலங்கு(rescue helicoptor)வருது. நம்மாளு அதிலும் போகலை(அதான் கடவுள் காப்பாற்றுவாரே). அப்பறம் அவன் வெள்ளத்தில் இறந்து போறான்.அப்புறம் போயி சொர்க்கத்தில கடவுளிடம் கேட்கறான் "என்னை காப்பாற்றுவேன் என்று சொல்லி விட்டு இப்படி ஏமாற்றிவிட்டாயே"என்று. கடவுள் அவனிடம், மூன்று முறை நான் வந்தேன்... நீ தான் உன்னையே ஏமாற்றிக்கொண்டாய் அப்படினு சொன்னாரு.

நாம: அப்புறம் இதுல இருந்து என்ன தெரியுது ஸ்ரீநிதி(அஞ்சு வயசு மவ)?


ஸ்ரீநிதி: ஜியா பக்கம் போகக்கூடாது, போகவே கூடாது.

நாம: ஸ்சூ.... நம்ம வாழ்க்கை நம்ம கைல.... தெரியுதா?

ஸ்ரீநிதி: வாழ்க்கைனா என்னப்பா? You don't have any thing in your hand?!

நாம: ஹையோ! ஹயோ!! வந்தவளும் படுத்துரா?! வந்து
பொறந்தவளும் படுத்துராளே?!?!

முன்னாடி கதைக்கு இலவச இணைப்பு இது:

மன்னன்: என்ன இராமா,எதுக்கெடுத்தாலும் "நாம நாம"னு இங்க அவைல இருக்கிற எல்லாரயும் சேத்தே சொல்லுரீரு?


இராமன்: மண்டு மன்னா, "நான் நான்"னு சொல்லிப்பேசினா, பேசுற அவனுக்கே தெரியாம அகந்தை அவன் மேல பாஞ்சிடுமாம். அதனாலதான் "நானு"க்கு பதிலா "நாம"னு பேசுறேன். புரியலயா? மண்டைல மண்ணாவது இருக்கும்னு நினைச்சேன். அதயும் எவனோ களவாடிட்டு போய்ட்டா ன் போலிருக்கு.

மன்னன்: என்னது?! இந்த மன்னன் கிட்ட களவா?

இராமன்: இந்த மன்னன் கிட்ட மண்டை உடைக்கிற நேரம், நாம எங்காவது போயி சாவலாம்.

அவையோர்: இராமா, இந்த தடவை "நாம"ன்னு சொன்னதுல நாங்களும் சேத்தி தானே?

இராமன்: ???!

என்னவளே! எங்கக்கா பெத்த முத்தே!!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;
மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

மாமன் கண்ணு இன்னும் துஞ்சலே;

நீ வந்து ராத்திரிபூரா குந்திகிட்டே கனவுலே!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

மாமன் விசாழக்கெழமை வருவேன்கோவத்துல;
ஆனாநீ அடக்கிப்புடுவியே அன்புல!

அந்த மஞ்ச தாவணி இன்னும் மறக்கல;
அந்தநாள்போல மாமன கவனிச்சா என்ன அஞ்சலே?

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன்அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

ஒய்யாரக் கண்ணழகு சின்னவளே அஞ்சலே;

உனக்குஅடிமை நானு மனசுலே!

அன்னாபூர்ணா கௌரிசங்கர் இன்னும் திறக்ககல;
நீவொரு போண்டா டீயும் குடுத்தா தேவலே!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

லட்டு முறுக்கு நல்லா இருக்கு ச்சின்னபுள்ளே;

கறியும் மீனும் செஞ்சு போட்டா என்ன அஞ்சலே?

அடி வாடி அக்கா பெத்த மவளே;

மாமன் நானு அடஞ்சு கிடக்குறேன் உம்மனுசுல!

உனுக்கும் எனுக்கும் ஈர்ப்பிருக்கு அஞ்சலே;

மாமன் அத மறச்சு வெச்சேன் நெஞ்சுல!

பதினாறும் பெற்று பெருவாழ்வு-2

கலையாத கல்வி;கபடட்ற நட்பு
குறையாத வயது;குன்றாத வளமை
போகாத இளமை;பரவசமான பக்தி
பிணியற்ற உடல்;சலியாத மனம்
அன்பான துணை;தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி;மாறாத வார்த்தை
தடையற்ற கொடை;தொலையாத நிதி
கோணாத கோல்;துன்பமில்லா வாழ்வு
எனப்பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாயே!


ஆங்கில ஆக்கம்


Your wedding day is full of joy;

Tomorrow you can't see.

But one thing's sure for the two of you:

The best is yet to be!

May you obtain the SIXTEEN wealths

Education, Age

Friendship, Prosperity

Youth, Physique

Mind, Companion

Perseverance, Popularity

Truthiness, Charitableness

Funds, Management

Life and Love

and wish you a happy married life!!


(நம்ம ஊர்ச்சாப்பாடு சாப்பிட்ட பின்னாடி, வெள்ளைக்காரன் சாப்ப்பாடு சாப்ட்ட மாதிரி சப்புனு இல்ல இருக்கு?! எதுக்கும் தப்பு இருந்தா மதிப்பெண்ண வேணா குறைச்சிடுங்க! வய்யாதீங்க தயவு செஞ்சி!!)

(திருநள்ளாறு கோவிலில் இருந்து! வலையகத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது!!)

பதினாறும் பெற்று பெருவாழ்வு-1

துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே!

---கவி காளமேகப் புலவர் பாடியது.