1/31/2009

அமெரிக்காவில் இது சாத்தியம்




குடிசையில்!




உலகாளும் மாளிகையில்!



கல்வி, நல்லொழுக்கம் மற்றும் உழைப்பினால் ஆன ஒன்று!

அரசியல் சட்டப்படி இலங்கையில் இது சாத்தியமற்றது, புத்தமத அரசியல்வாதி மட்டுமே ஆக முடியும் என்கிறார்கள்?!

1/30/2009

நியாயம் என்னா விலை?

தமிழருங்க ரெண்டு பேர், ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிற மாதிரியான பழம் பாடல் நினைவுக்கு வந்துச்சுங்க....

மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க
வாழ்கின்ற நாடு இது!

மூச்சுத் திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
சனங்கள் படும்பாடு இது!

நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமை மேலே கொடுமை
வளர்ந்து நெருக்குது! அது
அருமையான பொறுமையைத்
தான கெடுக்குது!!

பாதை மாறி நடக்குது,
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது-நல்ல பழக்கமெல்லாம்
பஞ்சு பஞ்சாப் பறக்குது!


என்ன இருந்தாலும் மனுசன்
இப்படி ஆடக் கூடாது!

எதுக்கும் ஒரு முடிவிருக்குது
அதிகநாளு ஆடாது!


ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
எண்ணம் உடம்புக் காகாது!

காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது!

அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது!

வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது!


விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது!

நாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனையே கடிக்குது!
--பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

1/27/2009

அமெரிக்காவில் வேலை இழப்பு!


வேலை இழப்பு பற்றின செய்திகள்தாங்க எங்க பார்த்தாலும்! நானும் படிக்க வந்த காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும், இதோ அங்க வேலைக் குறைப்பு, இதோ இங்க பணியாள்க் குறைப்புங்ற புலம்பலை அப்பப்ப கேக்குறது வழமையான ஒன்னுதான். அதே நேரத்துல, அங்கங்க வேலையும் கிடைச்சுட்டு இருந்தது.

இப்ப நம்ம பொழப்பு, பொட்டி தட்ட, பொட்டிய எடுத்துட்டு, பொட்டி கட்டி பிரயாணஞ் செய்யுற பொழப்பு பாருங்க, நிறைய பேரை பார்த்துப் பேசுற வாய்ப்பு. நிறைய தகவல்களைத் தெரிஞ்சுக்க முடியுது. இப்பத்த நிலைமை ஒன்னும் சரியில்லைங்க! பொதுவா, நாட்டுக்கு வெளில இருந்து பார்க்குற நிறைய பேருக்கு அமெரிக்கர்கள்ன்னா ஆகாமலோ, அல்லது அவிங்க எல்லாம் பெரிய ஆளுகங்ற நினைப்பு இருக்கும். ஆனாப் பாருங்க, அவிங்க அப்பிடிக் கிடையாதுங்க. ரொம்ப நல்லவிங்க! இன்னுஞ் சொல்ல‌ப் போனா, வெகுளிங்க‌.

எதையும் நேர்ம‌றையாவே சிந்திக்கிற‌ ஆட்க‌ள். துய‌ர‌ம் வ‌ரும், துன்ப‌ம் வ‌ரும்ன்னெல்லாம் நினைச்சிப் பாக்கிற‌து கிடையாது. கிராம‌ச் சூழ்நிலையில‌, மிச்சிக‌ன் மாகாண‌ம், மார்ச‌ல்ங்ற‌ ஒரு கிராம‌த்துல ஒரு ரெண்டு வ‌ருச‌ம் இருந்த‌னுங்க‌. ரொம்ப‌ ந‌ல்ல‌ ஊர். பெரும்பாலான‌ வீடுக‌ள் பூட்ட‌வே மாட்டாங்க‌. க‌டைக‌ள் திற‌ந்தே இருக்கும், வேண்டிய‌ பொருட்க‌ளை எடுத்திட்டு காசைப் போட்டுட்டு, அல்ல‌து க‌ட‌ன‌ட்டைய‌ இழுத்திட்டு வ‌ர‌ வேண்டிய‌துதான். அப்பிடி இருந்த‌ ஊர்ல‌, இப்ப‌ ஒரு வீடு சொற்ப விலையில!!

அதை விடுங்க, நான் இப்ப தங்கி இருக்குற விடுதியில மொத்தம் 265அறைகள், பிலடெல்பியா நகரத்தின் மையப் பகுதியில இருக்குற நட்சத்திர‌ விடுதி. வெறும் 35 அறைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர் வந்திருக்காங்களாம். வேலை செய்யுற ஊழியர் பரிதாபமா சொல்லிட்டுப் போறாரு. பத்திரிகைகள்ல பார்த்து இருப்பீங்க, ஆட்குறைப்பு பற்றின செய்திகளை. உண்மையில சொல்லப் போனா, அது பெரிய நிறுவனங்களால முறையா அறிவிப்புச் செய்தது மட்டுந்தான். அது தவிர நிறைய வேலை இழப்பு இருக்கும் போல இருக்கு.

பொருளாதாரம் சரி இல்லைன்னா, குற்ற நடவடிக்கைகள் எங்கயும் பெருகத்தான் செய்யும். அதேபோல இங்கயும் அதிகரிச்சுட்டுதான் வருது. கூடவே, சமூகச் சிக்கல்கள், தற்கொலைகள் அப்பிடி இப்பிடின்னு செய்திகள். சரி, நாம அதுக்கு என்ன செய்யுறது? நம்மால ஒன்னும் செய்திட முடியாதுதான், ஆனா, நாம நம்ம பொழப்பைக் காப்பாத்தி ஆகணுமே?!

ஆமுங்க, அதிக ஊதியத்துக்கு வேற வேலைங்றது இந்தத் தருணத்துல கடுமையா யோசிக்க வேண்டிய விசயம். இருக்குற இடத்துலயே, மகிழ்வா இருந்து காலத்தை ஓட்டலாம். வீட்டுக் கடன்களை, குறைந்த வட்டிக்கு மாற்றலாம். பாதுகாப்புப் பெட்டகத்துல விலை மதிப்புள்ள பொருட்களை வெச்சிட்டு, வீட்ல நிம்மதியா இருக்கலாம். கையில எப்பவும், இருபது வெள்ளி வெச்சிருக்குறது உசிதம்.

விளம்பரங்களைப் பார்க்காமலே தவிர்க்கலாம். இஃகிஃகி! வெளிநாட்டுல இருந்து, இங்க படிக்க வர்றவிங்க அதை மறுபரிசீலனை செய்யலாம். நெடிய விடுமுறைல போக நினைக்குறவிங்க அதைத் தவிர்க்கலாம். இப்படி எத்தனையோ முன்யோசனை நடவடிக்கைகள் எடுத்து சிக்கனமா இருக்குறது உசிதம்.

வேலைப் பளு நிச்சயம் கூடும். ஆகவே, வீட்ல இருக்குறவிங்ககிட்ட கலந்து பேசி அதுக்கு தகுந்தமாதிரி வாழ்க்கைமுறைய சமச்சீராக்கலாம். இப்பவே, செய்ய வேண்டிய வருடாந்திர, வழமையான மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகளை செய்து முடிச்சிடலாம். ஆமா, இதென்ன? அறிவுரை அழகர்சாமிங்ற‌ நினைப்பான்னு கேட்டுடாதீங்க. எனக்கு நானே சொல்லிப் பார்த்ததோட நகல்தான் இது. என்னோட புலம்பலை உங்க காதுலயும் போட்டு வெக்கிறேன், அம்புடுதேன்!!

மந்திரம் கால்; மதி முக்கால்!

எது எப்படியானா என்ன? எதிர்காலம் இருக்கு,
ஒவ்வொரு நாளும் இனிமை கொள்ளவே!
எழு, விழி, செல்!!

1/26/2009

பழமைபேசி பேசுறாரு


உங்க பேரு: 'பழமைபேசி'ங்ற வெட்டு வேத்து

ஊரு: குசும்பனூர் பக்கத்துல மொக்கைப்பாளையம்

வயசு: நான் என்னைக்கும் எங்க அம்மாவுக்கு குழந்தைதான்

தொழில்: இதெல்லாம் ஒரு கேள்வியா? குழுமத்தாரை மொக்கை போடுறது தான். கடந்த காலத்துல பட்சியும் சேந்து பாப்போம். இப்ப குடும்பம் குட்டினு ஆயிடிச்சு இல்ல?!

துணைத் தொழில்: வெட்டிப் பேச்சு, கிறுக்கறது, அதிகப் பிரசங்கம்

சோத்துக்கு: மென்பொருள் வடிவமைப்பு, மென்பொருள் கட்டுமான மேற்ப்பார்வை(கட்டுமானம்? அது, தெரிஞ்சாத்தானே செய்யறதுக்கு?!)

நண்பர்கள்: நாமல்லாந்தான். என்னோட மொக்கையை சகிச்சுகிட்டா நீங்கதான் ஆருயிர்த்தோழர்.

எதிரிகள்: மொக்கையைக் கேட்டு சகிக்காம, எகுறரவங்கதான்

பிடிச்சது: கொங்கு நாட்டுப்பழமை, கோயம்பத்தூர் எள்ளல், நகைப்பு, சிலேடை, பொரளி.சுருக்கமா சொன்னா விவகாரமான எல்லாமும்.

பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.

பிடித்த நபர்: நீங்களும், உங்க கூட்டாளியும்!

பொழுதுபோக்கு: ஃகையோ! ஃகையோ!! இன்னும் நீங்க என்னை புரிஞ்சுக்கலயா? சரியாப்போச்சு போங்க!

1/24/2009

சிங்கம் - புலி - அமாவாசை

சீதாதேவி மாய மானோட‌ அழகுல மயங்கின வனமுங்க அது. பெரிய வனம், எங்க பாத்தாலும் காடும், பசுமையும், சோலையும், பசுங்கிளிகளும்ன்னு, சொல்லவொண்ணா எழில் பொதிஞ்ச வனாந்தரம். அதுல நாலே நாலு புலிக, இங்க ஒன்னும் அங்க ஒன்னுமா இருந்துச்சாம். மூலைக்கொன்னா உலாத்திகிட்டு, அதுபாட்டுல அதனோட எல்லைக்குள்ள ஓடியாடித் திரிஞ்சுட்டு இருந்ததாம்.

அதே மாதிரி, ப‌க்க‌த்து வ‌ன‌த்துல‌ நிறைய‌ சிங்க‌ங்க‌ளும் இருந்துச்சாம். ந‌ல்ல‌ நாள் பாத்து, சிங்க‌ங்க‌ எல்லாம் ஒன்னு கூடுச்சாம். கூடி ஒரு முடிவெடுத்தாங்க‌ளாம். கூட்ட‌த்துல‌ எடுத்த‌ முடிவின்ப‌டி, புலிக‌ளோட‌ வ‌ன‌த்துக்கு ரெண்டு மூனு சிங்க‌ங்க‌ போச்சாம். போயி எப்ப‌டியும் புலிக‌ள‌ விர‌ட்டிட்டு, அந்த‌ வ‌ன‌த்தைப் பிடிச்சிட‌ணும்ங்ற‌து சிங்க‌ங்க‌ளோட‌ எண்ண‌ம்.

வ‌ன‌த்தோட‌ எல்லையில‌ இருந்த‌ அந்த‌ ஒத்தைப் புலி, சிங்க‌ங்க‌ வ‌ர்ற‌தை தூர‌த்துல‌ வ‌ரும் போதே க‌வ‌னிச்சிடுச்சாம். கூப்பிட்டா காது கேக்குற‌ தூர‌ம் வ‌ந்த‌துமே, புலி கீழ‌ கிட‌ந்த‌ எலும்புத் துண்டுக‌ளை ந‌க்கிகிட்டே உர‌த்த‌ குர‌ல்ல‌ பேச‌ ஆர‌ம்பிச்ச‌தாம், "இன்னும் எனக்கு ப‌சி ஆற‌லை, இனியும் ஒரு ரெண்டு சிங்க‌ம் இருந்தா, வ‌யித்துப் ப‌சி ஆறிடும்!"ன்னு சொல்லுச்சாம். அதைக் கேட்டு, வ‌ந்த‌ சிங்க‌ங்க‌ எல்லாம் ஒரே ஓட்ட‌மா திரும்பி ஓட‌ ஆர‌ம்பிச்ச‌து.

அந்த சிங்கங்கள் எல்லாம் ஓடுறதப் பாத்த குரங்கு, மரத்து மேல இருந்து பலமா சிரிச்சுட்டே பேச ஆரம்பிச்சது, சிங்கங்களே, புலியோட நடிப்பையும் சாமர்த்தியமான பேச்சையும் நம்பி இப்பிடி ஓடி வர்றீங்களே? வெக்கமா இல்லையா, உங்களுக்கு??ன்னு கேட்டுச்சாம்.

அதைக் கேட்ட சிங்கம், நீயும் எங்ககூட வா, எல்லாருமாப் போயி, அந்த குறும்புக்காரப் புலிய வேட்டையாடுவம்ன்னு சொல்லி, அந்தக் குரங்கையும் முதுகில ஏத்திட்டு வந்ததுகளாம் சிங்கங்க. புலி அந்த இடத்தை விட்டு உள்வாங்கி, உள்ள கொஞ்ச தூரமாப் போயி நின்னுகிட்டு இருந்துச்சாம். சிங்கங்களும் குரங்கோட குதூகலமா முன்னேறிப் போச்சுதுகளாம்.

போனதடவை செய்த மாதிரியே, இந்தத்தடவையும் புலி உரத்த குரல்ல பேச ஆரம்பிச்சுதாம், 'இன்னும் எனக்குப் பசி ஆறவே இல்லை. இந்தக் குரங்குகிட்ட சொல்லி, ரெண்டு மூனு சிங்கங்களை அனுப்பச் சொல்லியும், இனியும் எதுவும் மாட்ட மாட்டனுங்குதுகளே?!'ன்னு சொல்லி உறுமுச்சாம். அதுக்கப்புறமும் அதுக அந்தக் காட்டுல இருக்குமா என்ன?

வந்த சிங்ககெங்கல்லாம் ஒரே ஓட்டமா, திரும்பிப் போயிருச்சாம். மறுபடியும், ஏமாந்த கதைய அலசி ஆராஞ்சி, கூடி பேசுச்சுகளாம் சிங்கங்க. போதாக்குறைக்கு ஏழு விற்பன்னர்களும் ஆலோசனைக்கு. இந்தத் தடவை எப்பிடியும் ஏமாந்திடக் கூடாதுன்னு, ஒரு ந்ல்ல நாள் பாத்து மறுபடியும், சிங்ககெல்லாம் சேந்து புலிகளோட வனத்துக்குப் போச்சுதுகளாம். புலி அந்த இடத்துல இல்லையாமுங்க!

மறுபடியும் கொஞ்ச தூரம் உள்வாங்கிப் போயிடுச்சாம். சிங்கங்களுக்கா வனத்தைக் கொண்டுட்டமே, இனி புலிகளை வேட்டை ஆடுறதுதான் மிச்சம்ங்ற நெனப்பு. உள்ள, இன்னும் கொஞ்சம் உள்ளன்னு போய்ட்டே இருந்ததுகளாம். ஆனாப் பாருங்க இந்த்த் தடவை, புலி உள் வாங்கி, உள் வாங்கி உள்ள போனதால, நாலும் ஒன்னு கூடிடுச்சாம். அது மட்டுமா, இந்த சிங்கக் கூட்டம் அமாவசை அன்னைக்கு, வனத்துல கண் தெரியாதுங்ற நேக்க‌த் தெரிஞ்சு வெச்சிருக்கலையாம்.


அது மட்டுமா? அமாவாசை அன்னைக்குத்தான் புலிகளுக்கு சிறப்புக் கண் பார்வையும், கூடுதல் பலமும் இருக்குங்ற விசயத்தையும் சிங்கங்க மட்டுமில்ல, மத்த மத்த வனத்தாரும் அறிஞ்சு வெச்சிருக்கலையாம்!! வேறென்ன? நாலு புலிகளும் சேந்து கண் அவிஞ்சு போன சிங்கங்களை சுலுவுல போட்டுத் தள்ளிருச்சாம்!!!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

1/23/2009

நான் கடவுள்: ஒரு மாறுபட்ட பார்வையில்!

வணக்கம்! இந்த வாரம் அமெரிக்காவுக்கு புது அதிபர் கிடைச்சிருக்காரு. நிறைய சவால்களோட, துணிவா இருக்காரு! அவருக்கு வாழ்த்துகள்!! இன்னைக்கு நம்ம வலைஞர் தளபதி அவிங்க, நான் கடவுள் விமர்சனம்ங்ற தலைப்புல ஒரு பதிவு, வெகு அழகா எழுதிப் பதிவிட்டிருக்காரு. அவருக்கும் வாழ்த்துகள்!

எனக்கு இந்த தலைப்பைப் பாத்தவுடனே தூக்கிவாரிப் போட்டுச்சு. எப்படி ஒருத்தர், நான் கடவுள்னு சொல்ல முடியும்? இந்த தலைப்புல இருக்குற இரண்டு சொல்லுமே, முரணான சொற்கள். 'நான்', அப்பிடின்னு சொன்னா, ஒருவர் தன்னையும், தன் மனதையும் குறிப்பிட்டுச் சொல்லுறது. அதப் பத்தி, நாம பெருசா பேசத் தேவை இல்லை.

அடுத்த சொல்லான கடவுள், இதுக்கு என்ன பொருள்? தன்னையும், இல்லஇல்ல, எதையும் கடந்த ஒரு உள்தான் (கட + உள்) சுருங்கிக் கடவுள்ன்னு ஆச்சு.


கடவுள் (p. 177) [ kaṭavuḷ ] , s. (கட, surpassing + உள்) God, the Supreme Being;

அப்ப, யாராலும், நான் கடவுள்ன்னு சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஒருத்தர் சொன்னா, உண்மையிலேயே, அவரு இன்னும் தன்னைவிட்டு கடக்கலைன்னுதானே அர்த்தம்?! அவுரு சொல்லுறது ஒரு உடான்சு!!

சரியுற அரசாட்சி மாதிரி, வீழ்ச்சி அடையுற, எதிர்மறையா நடக்குற‌ எதையும் ஐரோப்பிய ஆங்கிலேயர்கள் சொல்லுறது, going westன்னு. அதாவது, கதிரவன் மேற்கால போயி மறையுற மாதிரி, இதுவும் மறையுதுன்னு சொல்லுறது.

இதையே, அமெரிக்க ஆங்கிலேயர்கள் சொல்லுறது heading southன்னு. அதாவது, பங்குச் சந்தையில நிலவரம் காண்பிக்குற வரைபடத்துல இருக்குற வீழ்ச்சி, கீழ்நோக்கிப் போறது, தென்புறத்தைத்தான காண்பிக்குது, அதனால இந்த வழக்கு வந்துச்சாம்.

அந்த மாதிரி நம்ம ஊர்ல சொல்லுறது, கீழ்வரம் போகுதுன்னு. அதாவது, கீழ்ப்புறம்ங்றது, கீழ்ப்பொறமாயி, அப்புறமா அது கீழ்வரமாவும் ஆயிடுச்சி. கூடவே, வடக்குமின்னா போகுதுன்னும் சொல்வாங்க. வடக்கு நோக்கி உண்ணாநிலை இருந்து சாகுறதுல இருந்து வந்த சொல்லாம் இது. ஆக, இருக்குற திசையில நல்ல திசை, கிழக்கு! ஆமுங்க, நாமும் விடியலை நோக்கி கிழக்குப் பாத்து இருப்போம். நல்லதே நடக்கட்டும்!

ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?

1/22/2009

இராச வண்டே, சென்று ஊதாய்!

நல்லா சத்தத்தைக் கூட்டி வெச்சிட்டு, இந்த இடுகாணொளியக் கேளுங்க... உங்களை மறுபடி மறுப்டி கேக்கச் சொல்லும்.... மணிவாசகமான திருவாசகத்தோட ஒரு பகுதி இது. வருங்காலங்கள்ல விளக்கமும் பதிய‌லாமுன்னு இருக்கேன்!

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ...

நானார் என்உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ...

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்
அணைத்தெழும் பும்புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாத செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான்கருணை
வெள்ளப்பிரான் என்பிரான் என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ...

1/21/2009

பழைய கள், வேறு மொந்தையில்!

பொதுவா "புறநானூற்றுத் தாய்" ன்னு குறிப்பிட்டு பேசுறதை கேள்விப்பட்டு இருப்பீங்க. அது ஏன் அப்படிக் குறிப்பிட்டு பேசுறாங்க? அதுல என்ன சிறப்பு? இந்தக் கேள்வியை என்னோட சிநேகிதன்கிட்ட கேட்டேன்? அவரு பொதுவா, எதோ சொல்லி சமாளிச்சாரு. ஆகவே, இதைப்பத்தி எனக்குத் தெரிஞ்சதை பதியலாம்னு நினைக்கவே இந்தப் பதிவு.

புறநானூறு சங்ககாலத்துல ஒன்றுக்கு மேற்ப்பட்ட புலவர்களால எழுதப்பட்டதுன்னு சொல்லுறாங்க. அதுல பதினாறு பேர் பெண்கள்ன்னும் சொல்லுறாங்க. குறிப்பா ஔவையார், காக்கைபாடினியார், வெள்ளி வீதியார், நல்முல்லையார் இவங்க எல்லாம் முக்கியமானவங்க. அடுத்தது அகநானூறு. இதுவும் அப்படித்தான் பல புலவர்களால எழுதப்பட்டது. அகநானூறு அகத்திணையில எழுதப்பட்டது. அப்படின்னா? அது வந்துங்க ஓர் ஆணும் பெண்ணும் சேந்து இன்ப துனபங்களை அனுபவிக்கிறாங்க பாருங்க. அது அக வாழ்வு. அல்லது வீட்ல, குடும்பத்துல, காதலன், காதலி இவங்களுக்குள்ள நடக்குறதுன்னும் வெச்சுக்கலாம். இது சம்பந்தமா எழுதினது அகநானூறு. இந்த போர், அரசியல், சாணக்கியத்தனம் இதெல்லாம் பொது வாழ்வு அல்லது புறவாழ்வுன்னு சொல்லாம் இல்லீங்களா? இதைத்தான் புறத்திணைன்னு சொல்லுறாங்க. இந்த புறத்திணை சார்ந்து எழுதினது புறநானூறு. சரி இந்த அகநானூறு, புறநானூறு யாரெல்லாம் எழுதினாங்க? அதுக்கு நீங்க, எம்மோட முந்தைய பதிவப்பாத்து தெரிஞ்சுக்குங்க.

சரி, இப்ப இந்த பின்னணியோட நம்ம தலைப்பு சம்பந்தப்பட்ட விசயத்துக்கு வருவோம். போர்க்காலங்கள்ல, அரசியல்ல, சங்ககாலத்துப் பெண்கள் எப்படியெல்லாம் இருந்தாங்கன்னு நிறைய விசயங்களை ஔவையார், காக்கைப் பாடினியார் இப்படி நெறையப் பேர் எழுதி இருக்காங்க. அதுல தாயானவளின் பங்கு, அவங்க கிட்ட இருந்த வீரம், இதைப்பத்தியெல்லாம் நொம்ப முக்கியமா சொல்லப்பட்டு இருக்குங்க. அதுல நாம இப்ப பாக்கப் போறது போர்க்களத்துல மகனைப் பறி குடுத்த தாய்.

தன்னுடைய நாட்டுக்கும் எதிரி நாட்டுக்கும் போர் மூளுது. போர்ல தன்னைப் பெற்ற தந்தை, உற்ற சகோதரன், கொண்ட கணவன் இப்படி தன்னைச் சார்ந்த ஆண்கள் எல்லாம் மார்பில் விழுப்புண் வாங்கி வீர மரணம் அடைஞ்சுபோன சேதியோட, போருக்குப் போய்ட்டு திரும்பின ஊரு சனங்க எல்லாம் அந்த அந்தி சாயுங்காலம் ஊருக்குள்ள வர்றாங்க. ஆனாலும் சேதி கேட்டு, ஆண் பிள்ளையப் பெத்த இந்தத் தாய் இடிஞ்சு போயிடலை. "எனக்கு இன்னும் நான் பெத்த புள்ளை இருக்கான். நாளைக்கு, என்னோட வீட்டு முறைக்கு ஆள் அனுப்ப நான் சிங்கம் மாதிரி புள்ளய பெத்து வளர்த்து வெச்சு இருக்கேன்"னு சொல்லி பெருமைப்பட்டுகிட்டா அந்த தமிழின வீரத்தாய்.

"தன்னோட நாடு எதிரி நாட்டுப் படைங்க கிட்ட மண்டி போடுவதா? ஒருக்காலும் அது நடக்காது"ன்னு வீராவேசம் கொண்டு, மகன்கிட்ட தன்னோட நாடு, சிறப்பு, அருமை பெருமைகள்னு நாலையும் எடுத்துச் சொல்லி, பாலும் பழமும் அறுசுவை உணவும் ஊட்டி நித்திரை கொள்ளச் செய்யுறா அந்தத் தாய். அப்புறம், கோழி கூப்பிட, கிழக்கு வெளுக்கவே, எழுந்து, தானும் குளிச்சு, தன்னோட மகனையும் எழுப்பி, குளிக்க வெச்சு, அவனுக்கு வெற்றித் திலகம் வெச்சு, நல்ல வெள்ளை உடுப்பு போட்டுவிட்டு, "போய் வா மகனே! வென்று வா!!"ன்னு சொல்லி, ஊரு சனத்தோட சனமா, தன்னோட பிள்ளயயும் வேலோட அனுப்பி வெச்சுட்டு, "தன்னோட வீட்ல இருந்தும் நாட்டோட பெருமையை நிலை நாட்ட இன்னைக்கு ஆள் போயிருக்கு" ன்னு நெனைச்சு பெருமையோட நிம்மதிப் பெருமூச்சு விட்டா அந்தத் தாய். அப்புறம் அந்த நிம்மதியில அசந்து தூங்குறா.

தூங்கி எழுந்து போருக்குப் போன சனங்களை எதிர் நோக்கி, ஊர்த் தலைவாசல்ல ஊர் சனங்களோட, இந்த வீரத்தாயும் காத்துக்கிட்டு இருக்குறா. மாலைக் கருக்கலோட, போருக்குப் போன சனங்களும் திரும்பி வர்றாங்க. வந்த சனங்க, "உன்னோட மகன் புறமுதுகு காமிச்சு போர்ல செத்துப் போய்ட்டான்"னு சொல்லுறாங்க. செத்துப் போன மகனை நினைச்சு ஒரு வருத்தமும் படலை இந்த வீர மகராசி. மாறா, "என்ன, என் மகன் புறமுதுகு காண்பித்து மறப்போரில் மாய்ந்து போனானா? ஒருக்காலும் இருக்காது! அப்படி ஒரு வேளை, அவன் புறமுதுகு காண்பித்து இறந்து இருப்பான் ஆயின், அவன் உண்டு வளர்ந்த என் மார்பகங்களை அறுத்து எறிவேன்!" ன்னு சொல்லி எரிமலையா கொதிச்சு ஆவேசப்படுறா. கண்ணு ரெண்டும் சிவந்து கனலா கக்குது.

அதே வேகத்துல வீட்டுக்குப் போய் கூரையில செருகி வெச்சு இருந்த வாளை உருவி கையில எடுத்துட்டு போர்க்களத்துக்குப் போறா. போன இடத்துல ரெண்டு நாட்டு வீரர்களோட உடல்களும் அங்கங்க, அங்கங்க, நாலா புறமும் சிதறிக் கெடக்குது. கோபமும் ஆத்திரமும் கொப்பளிக்க ஒவ்வொரு உடலையும் தன்கிட்ட இருந்த அந்த வாளால புரட்டி புரட்டி "இது தன்னோட மகனா?" ன்னு பாத்துக்கிட்டே போறா. நேரம் ஆக, ஆக, ஆத்திரமும் கோபமும் அதிகமாகுதே ஒழிய, கொறஞ்ச பாடில்லை. இப்படியே புரட்டிப் பாத்துக்கிட்டு போகும்போது, சலிப்புல வேண்டா வெறுப்பா ஒரு உடலை அந்த வாளால புரட்டுறா. அந்த ஒரு நொடி.... அவளோட முகம் அப்படியே உருமாறுது. கவுந்து இருந்த கருமுகில் விலக, சடார்னு அடிக்கிற அந்த சூரியன் மாதிரி அவ மொகம் அப்படியே பிரகாசிக்குது. கீழ குனிஞ்சு அப்படியே அந்த நெஞ்சுல குத்துப்பட்ட குழந்தைய அள்ளி மடியில போட்டுக்கிட்டு சொல்லுறா, "இந்த வீரஞ்ச் செறிந்த மண்ணில், புலிக்குப் பூனையா? என் பிள்ளையின் உடல் எதிரிகளின் பல உடல்களைத் தாண்டி ஊடுருவி வந்து இங்கே மார்பில் விழுப்புண்னுடன் மாய்ந்து கிடக்கிறதே?! அப்படியானால் என் மகன் பல எதிரிகளை காவு வாங்கிய வீரன் இல்லையா? வீரன் இல்லையா??"ன்னு சொல்லி மகன் மறைஞ்சு போனாலும் கூட, தன் மகன் புறமுதுகு காட்டலைங்குற மகிழ்ச்சியில ஆரவாரம் போடுறா! ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!! இதைத்தான் புறநானூற்றுக் கவிதைல காக்கைப் பாடினியார் பாடுறாங்க:

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,
“மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான்" எனச் சினைஇக்,
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்,
செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!



1/20/2009

த‌மிழா, கை கூடி வ‌ரும்டா நமக்கும்!

வணக்கம்! நம்ப கடைக்கு வந்து போற வாடிக்கையாளர்கள், யாரையுங் காணோம் இன்னைக்கு!! அல்லாரும், ஒடனடியா உசுலு எழுதப் போயிட்டாங்க போலிருக்கு?! இஃகிஃகி! அல்லாம் கை கூடி வரும், இன்னைக்கி இல்லாட்டியும் இன்னொரு நாள் நடக்கத்தான் போகுது, அதுக்குப் போயி ஏன், அப்பிடி இப்பிடி பேசுறீங்க‌? நம்பிக்கைதான வாழ்க்கையே?!

ஆமா, இந்தக் கை கூடி வரும்ன்னு சொல்லுறாங்களே, அப்பிடீன்னா என்ன? காதல் கை கூடும்ங்றான் ஒருத்தன். இன்னொருத்தன், நிலுவையில இருக்குற தாவா, இந்த வருசத்துல கை கூடும்ங்றான்? அது என்ன, இந்த கை கூடுறது?? இஃகிஃகி! நிறைவேறும்ங்ற‌துதான் கை கூடி வ‌ரும்ங்ற‌துன்னு, ஒங்க‌ளுக்குத் தெரியும்ன்னு என‌க்கும் தெரியும். ஆனா, அத‌னோட‌ பின்ன‌ணி என்ன‌? இஃகிஃகி!!


அதென்ன?! தொட‌ர் நாட‌க‌ம் போடுற‌வ‌னும், திரைப்ப‌ட‌ம் எடுக்குற‌வ‌னும், நாவ‌ல் எழுதுற‌வ‌னுந்தான், அவிங்க‌ளே முடிச்சைப் போட்டு, அவிங்க‌ளே அதை அவுத்துக் காசு பாப்பாங்க‌ளா? நாங்க‌ளும், கேள்விங்ற‌ முடிச்சைப் போட்டு, விள‌க்க‌ங்ற‌ பேர்ல‌ அதை அவிழ்த்து, பதிவு போட்டுக் கடை நடத்துவமே?! அஃக‌ஃகா! (என்னா எக்காள‌ம்?!)

கோயில்ல‌ பாத்து இருப்பீங்க‌... க‌ருவ‌றைக்குப் பின்னாடி போயி, இறைவ‌னோட‌ நேர் பின்னாடி, ரெண்டு கைக‌ளையும் ஒரு அடி, ஒன்ன‌ரை அடி தூர‌ இடைவெளில‌ வெச்சிட்டு, க‌ண்ணை மூடி, நினைச்ச‌ காரிய‌ம் நிறைவேற‌னும்ன்னு பிரார்த்த‌னை செய்வாங்க‌. அப்ப‌டிச் செய்யும் போது, வில‌கி இருக்குற‌ கைகள், ப‌க்க‌த்துல‌ வ‌ந்து கூடி நின்னா, நினைச்ச‌ காரிய‌ம் நிறைவேறும்ங்ற‌து ஒரு ந‌ம்பிக்கை.

அதை ஒப்பிட்டுச் சொல்லுற‌துதாங்க‌, இந்த‌க் கை கூடி வ‌ரும்ங்ற‌து. அடிமைப்ப‌ட்டுக் கெட‌ந்த‌ ஒரு இன‌த்தோட‌ பிள்ளை, பேர‌ர‌சுக்கு அதிப‌ர் ஆக‌லையா? அப்பிடி, ந‌ம‌க்கும் அது எல்லாம் ஒரு நாள் கை கூடி வ‌ரும்.


அறிவின் அடையாளம், இடைவிடா முயற்சி!

1/19/2009

கனவில் கவி காளமேகம் - 12

அடிமைச் சங்கிலிய உடைச்சு எறியப் பாடுபட்ட தலைவர் மார்ட்டின் லூதர் கிங் அவிங்க நினைவு நாளை ஒட்டிய விடுமுறைய முன்னிட்டு மூனு நாளும் பதிவாப் போட்டாச்சு. எப்பவும் ஒரே சொல்லு, ஒரே பேச்சுதானுங்க நாம சொல்லுறது... ஆமுங்க, காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து, பொட்டியப் பொட்டி கட்டி பொட்டிதட்ட பிலடெல்பியா போகணும். ஆகவே, பதிவுகளும் பின்னூட்டங்களும் குறையும். என்னா ஒரு முகமலர்ச்சி உங்க முகத்துல?! இஃகிஃகி!!

இன்னைக்கு ஒரு மின்னஞ்சல்ல, நிலபுலன்கள்ன்னு எழுத வேண்டி இருந்துச்சு. உடனே, மனசுக்குள்ள கேள்விநாதன் வந்து ஒக்காந்துட்டான். ஆமுங்க, அவன் நிலம்ன்னாத் தெரியும். அதென்ன புலன்னு கேட்டுப் பாடாப் படுத்திட்டான். அவனோட இம்சை தாங்க முடியாம, சித்த தூங்கலாம்ன்னு போயிப் படுத்தவன் நல்லாத் தூங்கிட்டேன். பகல்ன்னும் பாக்காம, நம்ம அப்பிச்சி கவி காளமேகம் கனவுல வந்துட்டாரு. நல்ல நேரத்துல வந்தீங்க அப்பிச்சின்னு நினைச்சிட்டு, அவ்ரோட பேச ஆரம்பிச்சேன். அவர்கிட்டப் பேசினதில இருந்து,


"என்னடா பேராண்டி நல்லா இருக்கியா?"

"எதோ இருக்கேன், எனக்கு கேள்விநாதன் நொம்ப இம்சை தர்றான். அந்த சிக்கலைக் கொஞ்சம் தீர்த்து வையுங்க அப்பிச்சி!"

"அதான குறிப்பறிஞ்சு நான் வந்திருக்கேன், கேளு!"

"நிலம் தெரியும்... அதென்ன புலன்? ஏன் நிலபுலன்னு சொல்லுறோம்??"

"மொதல்ல நீ சொல்லுறதே தப்புடா பேராண்டி. அது நிலபுலம்!"

"என்னுங்க அப்பிச்சி? அப்ப, புலன்னா என்ன? புலம்ன்னா என்ன??"

"புலன்னா, உணர்வு, சுவை, இரசம், ஒளி, சத்தம், நாற்றம்ங்ற அர்த்தங்கள் பாவிக்கிற இடத்தைப் பொறுத்து வரும். புலம்ன்னா, திசை, சார்ந்த‌, நாடு,அறிவு, இருப்பிடம், புலமை, நூல், காட்சி, தேயம்ன்னு இதுவும் பொழங்குற இடத்தைப் பொறுத்து பல அர்த்தங்களைத் தரும். நாளா வட்டத்துல, புலனும் புலமும் ஒன்னுக்கொன்னு மாத்திப் போட்டு பொழங்கறது வழக்கத்துல வந்திடுச்சி."

"ஓ, அப்பிடியா? அப்ப, நிலபுலம்ன்னா என்ன அர்த்தம் வருதுங்க அப்பிச்சி?"

"நிலமும், அந்த நபரைச் சார்ந்தவை, தொடர்புடையன‌, உரியனவும்ங்றது அர்த்தம். அதான் உங்களுக்கு நிலபுலங்கள் எல்லாம் எங்க இருக்குன்னு கேட்கறது வழக்கம். இதையே, நிலபுலன்கள்ன்னும் பொழங்கறது வழக்கமாயிடுச்சி! காந்தப் புலம்ங்றோம்? அதாவது, காந்தத்திற்கு தொடர்புடைய சக்திதான் காந்தப் புலம். புலம் பெயர்ந்தவர்கள்ங்றோம். புன்செய் நிலத்தை விட்டுப் போனவிங்கன்னா அர்த்தம்? இல்லடா! தன்னைச் சார்ந்தவற்றை விட்டுப் பெயர்ந்தவங்கதான் அது!!"

"இப்ப விளங்குச்சுங்க. அப்ப, புலன் விசாரணைன்னா?"

"நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இதுவும் புலம் குறித்த விசாரணைதான். அதைத்தான், புலன் விசாரணைன்னு சொல்லுறது. அதாவது, சந்தேகத்தின் பேரில் இருப்பவரின், குற்றத்தின் புலம் குறிச்ச, அவருக்கு தொடர்பான, சார்ந்த அனைத்தையும் குறித்த விசாரணையத்தான் சொல்லுறது புலன் விசாரணை!"

இதையெல்லாஞ் சொன்ன அப்பிச்சிக்கு நன்றி சொல்லவும், தூக்கம் கலையவும் நேரம் சரியா இருந்தது. நம்மளுக்கு இருந்த ஐயம் தீர்ந்ததுன்னு தெரிஞ்ச கேள்விநாதனும், ந்ம்மை விட்டு சொல்லாமக் கொள்ளாம கம்பிய நீட்டிட்டாரு. இஃகிஃகி! அப்பிச்சி சொன்னதை சரி பார்ப்பமின்னு முயற்சி செய்தப்ப கிடைச்ச தகவல்:

"ஒரு குற்றம் குறித்த புலன் விசாரணை என்பது,
  • குற்ற நிகழ்விடம் சென்றடைவது,
  • வழக்கின் பொருண்மைகளை, சூழ்நிலைகளையும் உறுதி செய்து கொள்வது,
  • குற்றமிழைத்ததாகக் கருதப்படும் நபரைக் கண்டுபிடித்தல்,
  • கைது செய்தல் குற்றச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அறிந்த நபர்களை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறுவது,
  • குற்றம் நிகழ்ந்த இடத்தையும், அது தொடர்பான மற்ற இடங்களையும் பார்வையிட்டு தொடர்புடைய பொருட்களைக் கைப்பற்றுதல்,
  • சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு நிகழ்ந்தது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய குற்றமா என்று முடிவெடுப்பது!"

இனி நான் நிலபுலம்ன்னே எழுதறேன். நீங்க எதுக்கும், அடிக்கிற பொருளாதார ஆழிப் பேரலைல உங்க நிலபுலமெல்லாம் பாதுகாப்பா இருக்கான்னு ஒருக்காப் பாத்துகிடுங்க... நாம்போயி பொட்டிய வெச்சி, பொட்டியக் கட்டி, பொட்டி தட்டப் போறதுக்குண்டான வேலையப் பாக்குறேன். இஃகிஃகி!!

மாடு காணாமப் போனவனுக்கு,
அந்த‌மணியோசை கேட்டுட்டே இருக்கும்!

1/18/2009

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை!

வணக்கம்! வலியும் காய்ச்சலும் வந்தாத்தான் தெரியும்ன்னு நாட்டுப்புறத்துல சொல்லுறது உண்டு. ஆனா, நாம சொல்லப்போற வலி நமக்கு வராது. நம்மால அடுத்தவிங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு. அப்பிடி வரக்கூடாதுன்னு வேண்டிக்குவோம். அப்பிடியே வந்தாலும், அதைப் பாக்க நாம இருக்க மாட்டோம் பாருங்க. ஆமுங்க, அகால மரணங்றது வரக்கூடாது.

சரி, அப்பிடி ஒன்னு நடந்து போச்சு, அதனால மத்தவிங்களுக்கு சிரமம் வெக்கக் கூடாது பாருங்க. ஆமுங்க, அகால மரணம் நடந்தவரோட சொத்துகளும் குழந்தைகளும், அவரோட மனைவி/கணவனுக்குத் தானாகவே போய்ச் சேரும்ங்ற வகையிலதான் பெரும்பாலான மாகாணங்கள்ல சட்டம் இருக்கு. ஆனாலும், உசுலு(உயில்) இல்லாதபட்சத்துல சில நடைமுறைச் சிக்கல்களும், அதிக செலவீனமும், வில்லங்கச் சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இருக்கு. கூட‌வே, அதிகப்படியான பராமரிப்பு நிர்மாண‌ வ‌ரியும் செலுத்த‌ வேண்டி இருக்கும்.

அது பரவாயில்லை, கணவன், மனைவி ரெண்டு பேருமே அகால மரணத்துக்கு ஆட்பட்டா, நிலைமை ரொம்பச் சிக்கல். சட்டப்படி அனைத்து சொத்துகளும், குழந்தைகள் குறிப்பிட்ட வயதை எட்டுற‌ வ‌ரையிலும் அனுப‌விக்க‌ முடியாது. உயில் இல்லாத‌ ப‌ட்ச‌த்துல‌, மாகாண‌ அர‌சு ஒருத்த‌ரை நிய‌மிச்சு, யாரையாவ‌து பாதுகாவ‌ல‌ரா நிய‌மிக்க‌ முய‌ற்சி செய்யும். நெருங்கின‌ உற‌வின‌ர்க‌ள் இருந்தா அவ‌ங்க‌ளுக்கு முன்னுரிமை.

பெரும்பாலும் நம்மவர்களுக்கு உற‌வின‌ர்க‌ள் ப‌க்க‌த்துல‌ இருக்க‌ வாய்ப்பு இருக்காது. அந்த‌ ச‌ம‌ய‌த்துல‌ குழந்தைக‌ளும் சொத்தும் அர‌சு க‌ட்டுப்பாட்டுக்கு வந்து, அவிங்களையும் சொத்துகளையும் பராமரிக்கும். அர‌சு, அத‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தை இருக்குற‌ சொத்துல‌ இருந்து எடுத்துக்கும். குழந்தைக‌ள் வளந்து, அந்த‌ வ‌ய‌சை எட்டும் போது வ‌ரியும் ப‌ராம‌ரிப்புக் க‌ட்ட‌ண‌முமாவே சொத்து க‌ரைஞ்சு போயிடாது?!

இதெல்லாத்தை விடச் சிக்கல் கல்யாணமாகாத இளைஞர்களுக்குத்தான். இவிங்களுக்கு என்ன சொத்து இங்க இருக்கு? யார் உறவினர்கள்?? இதுகளை எல்லாம் நம்ப வெச்சி, மீட்டெடுக்குறது ரொம்பச் சிரமம். அப்படியே நண்பர்கள் மூலமா முயற்சிகள் மேற்கொண்டாலும், பூர்த்தியா செய்யவே முடியாது. அதிக செலவாகும். அந்த நேரத்துல, மாகாண அரசு மிச்சமிருக்குற சொத்துகளை எடுத்துக்கும். எடுத்து பள்ளிகள், பாதுகாப்பகங்கள்ன்னு நல்ல காரியங்களுக்காக கொடுத்துடுவாங்க.

சரி, இதெல்லாத்துக்கும் என்னதான் தீர்வு? உயில் எழுதி வெக்குறதுதாங்க தீர்வு. அதனுடைய முக்கியத்துவம், அந்த சூழ்நிலையிலதான் தெரிய வரும். பெத்த குழந்தைகள் நிலைமய நினைச்சுப் பாருங்க. தாத்தா, பாட்டி, உறவினர்கள்ட்ட போக வேண்டாமா? ஆக, உயில் ரொம்ப முக்கியம். இதுக்காக சட்டத்தரணிகிட்டப் போனா, $300ல இருந்து $2000 வரைக்கும் மொய் அழுக வேண்டி இருக்கும். நாமா செஞ்சா, $25ல முடிச்சுடலாம். சரி, இனி அதுக்கான வழி முறைகளைப் பாக்கலாமா?

முதல்ல செய்ய வேண்டியது என்னன்னா,வரவு, செலவு, முதலீடு, காப்புரிமை, ஓய்வூதியக் கணக்கு மற்றும் இன்னபிற சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லார்த்தையும் தொகுத்து, ஒரு இடத்துல கோப்பாக்கி வைக்கணும். என்னுடைய யூகம், 90% பேர் அவிங்களுடைய மதிப்பு என்ன, அவிங்களுடைய கணக்குகள் பற்றின விபரம் தெரிஞ்சு வெச்சிருக்க மாட்டாங்க. அவிங்களுக்கான பட்டியல் இதோ! உடனே, தகவலைச் சேகரிச்சு குறிப்புல போட்டு வையுங்க. இருப்புத் தொகை குறிப்பிடத் தேவை இல்லை. குறைந்த பட்சம், எந்த நிறுவனத்துல கணக்கு இருக்குங்றதையாவது எழுதி வைக்கணும்.

Assets

Group Life Insurance,
Employer Settlement Information if applicable
Umbrella Insurance details
Funeral Insurance details
Personal Life Insurance details
Insurance with Credit Cards
Travel Life Insurance
Non Insurance Claims
Real Estate Equity
401k
Pension Plan/Social Security
Stocks/Bonds/Rental/IRA/Vehicle/Cars/Boats/
College Savings 403k
Lockers/Jewelry
Savings/Checking/FSA/CDs
Annuity
Tax Returns
Personal Assets
Personal Loans/Mortgage etc, etc..,
Hot Cash
Miles & Rewards

Liabilities

Mortgage Payment
Vehicle Loans
Credit Cards
Loans against 401k

மேல சொன்ன விசயங்கள் பற்றின தகவல்களைத் தொகுத்து, உங்களுக்கு நம்பகமான இடங்கள், வீட்லயோ அல்லது பாதுகாப்புப் பெட்டகத்துலயோ வெக்கலாம். அந்த இடத்தைப் பற்றின விபரத்தை உயில்ல குறிப்பிடுதல் நலம். ஓரளவுக்கு இந்த வலையகத்துல உங்க எல்லாக் கணக்குகளையும் ஒருங்கிணைக்க முடியும், சேவை இலவசம். இதுக்கு அப்புறமா, நீங்க உயில் தயாரிக்கத் தெரிவு செய்ய வேண்டியது ரெண்டு விசயம். முதலாவது நிறைவேற்றுநர், அடுத்தது பாதுகாவலர்.

நிறைவேற்றுநர் (executor) யாராக வேணுமானாலும் இருக்கலாம். அவிங்க உயில்ல குறிப்பிட்டு இருக்குறபடி, காரியங்களை நடத்தி வைக்கக் கூடியவரா இருக்கணும். நீங்க இருக்குறபக்கம் இருக்கக் கூடியவரா இருக்கணும். உயில் எழுதின பிறகு, ஒரு நகலை அவ்ர்கிட்ட கொடுத்து வைக்கிறது உசிதம். பாதுகாவலர்(guardian)ங்றது, நீங்க உங்க குழந்தைகளுக்கு யார் பாதுகாவலரா நியமனம் செய்யுறதுங்றதுதான். குழந்தைகள் அந்த குறிப்பிட்ட வயசை அடையற வரையிலும், இவர்கிட்டத்தான் வளரும். இவர் சொத்துகளையும் பராமரிப்பு செய்ய உரிமை இருக்கும். இவர்கிட்ட பொறுப்புகளை ஒப்படைக்குறதுதான் நிறைவேற்றுநர் வேலை. பாதுகாவலர் பொறுப்பு எடுத்ததுக்கு அப்புறம், நிறைவேற்றுநர்க்கு கடமை முடிஞ்சது.

மேல குறிப்பிட்டதைச் செய்த பிறகு, நீங்க உயில் எழுதத் தயார். நிறைய வலையகத்துல, உயில் எழுது சேவை குறைந்த கட்டணத்துல நீங்களாகவே செய்யக் கூடிய வகையில இருக்கு. அதுல போயி, உங்க விபரங்களைக் கொடுத்து, உயில்(Last Will & Testament) முன்வரைவு ஆவணத்தை தரவிறக்கம் செய்திடுங்க. இதற்கான கட்டணம், அதிகபட்சம் $20. அதன் பின்னாடி, மூனு சாட்சியங்களோட, சான்றுறுதி (notary public) அலுவலர் முன்னாடி குறிப்பிட்ட இடத்துல கையொப்பம் இடணும். கையொப்பம் இட்டதும், அது முறையான உயில் ஆயிடும். இஃகிஃகி!


எங்க நவசக்தி தமிழ்ப் பண்பாட்டுக் குழுவில இதைப் பற்றிப் பேசப் போறேன்னு சொன்னதும், அதை அப்பிடியே பதிவாப் போட்டுடுங்கன்னு சொன்ன அண்ணன் மகேசுக்கு இந்தப் படைப்பு! வேற எதனா, இது குறிச்சு ஐயப்பாடு இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. நான் தெரிஞ்சிருந்தா, எனக்குத் தெரிஞ்ச தகவலைப் பகிர்ந்துகிடுறேன். முடிஞ்சா இந்த பதிவையோ, தகவலையோ உங்க நண்பர்கள்கிட்டவும் பகிர்ந்துகுங்க.... பதிவுத் திருட்டுன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். இஃகிஃகி!

இப்ப எதுக்கு இப்படி ஒரு பதிவு?

என்ன செய்ய? விமானம் எல்லாம் தண்ணி தட்டுது... போற வாற ஊர்திகள், அங்க இங்க இடிக்குது... போதாக்குறைக்கு துப்பாக்கி குண்டுகளும் பதம் பாக்குது.... இந்திய இளைஞர்கள் பெரிய நிறுவன(branded cloths, iphone) உடுப்புகள்ல வலம் வர்றது எல்லாம், பொருளாதார மந்தத்துல பாதிக்கப் பட்டவிங்களை உறுத்தலாம்....பாத்து சூதானமா இருந்துக்குங்க அப்பு....

பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்!

எந்திரன்: பெயரிட்டதின் பின்னணி

வணக்கம்! படிக்காதவன், வில்லு இதுகளுக்கான மாற்றுப்பார்வையில் விமர்சனம் பார்த்தவங்க, மத்த மத்த படங்களுக்கான விமர்சனத்தையும் எழுதச் சொல்லிக் கேட்டு இருந்தாங்க. அந்த வரிசையில, இன்னைக்கு நாம பார்க்கப் போவது எந்திரன் பற்றியது. இதைப் பற்றி எழுதச் சொன்ன வலைஞர் தளபதி நசரேயன் அவிங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.


எந்திரம்ன்னா என்ன? இதற்கான பொருள், பாவிக்கப்பட்ட விதத்தைப் பார்க்க வேண்டியது அவசியமாகுது. இலக்கியம், இன்ன பிற தமிழ்ச் சொல்லாடல்ல எந்திரன் எப்படியெல்லாம் சொல்லாடப்பட்டு இருக்குங்றதையும், இன்ன பிற அர்த்தங்களையும் கீழ கொடுத்து இருக்கேன்.

சூத்திரப்பொறி
இயந்திரம்
யந்திரம்
ஏந்திரம்
சூத்திரம் machine in general
திரிகை A hand-mill
மந்திரசக்கிரம் mystical diagram in astrology and worn on the arm
தேர்
தீக்கடைகோல் Sticks for producing fire by attrition
குலாலச்சக்கரம் A potter's wheel
ஊர்தி conveyance artificially managed

பொதுவா வழக்கத்துல, இயந்திரங்களையும், சோதிடர்கள் மந்திரிச்சு எழுதித் தர்ற அந்த சக்கரத்தையும் நாம எந்திரம்ன்னு சொல்லுறோம். சக்கராயுதம் வெச்சு இருக்குற பகவானை, சக்கராயுதன்னு சொல்லுறோம். சக்கரன்னும் சொல்லுறோம். கண்கள் பெருசா இருந்து, முழிச்சுப் பாக்குறது தூக்கலா இருக்குறவனை, முழியன்னு சொல்லுறோம்.

அதே மாதிரி இயந்திரத்தனமா, சொன்னதைச் செய்யுற மனித‌னையும், ஓய்வு ஒழிவு இல்லாம, அளவுக்கு மிகுதியா இயந்திரமாட்டம் வேலை செய்யுற மனித‌னையும் இயந்திரன்னும் எந்திரன்னும் சொல்லலாம். வண்டியக் கையாளுறவனை வண்டிக்காரன்னு சொல்லுறோம். பெட்டி அடிக்குறவனை பெட்டிக்காரன்னு சொல்லுறோம். அதே மாதிரி, இயந்திரம் அல்லது எந்திரத்தைக் கையாளுறவனை இயந்திரக்காரன் அல்லது எந்திரக்காரன்னு சொல்லலாம்.

ஆகக்கூடி, மனிதன மாதிரி செயல்படுற எந்திரத்தை என்ன சொல்லுறது? பொதுவா இயந்திர மனிதன் அல்லது எந்திர மனிதன்னு ரெண்டு வார்த்தைச் சொல்லாப் பாவிக்கிறோம். இதை இனியும் சுருக்கி எளிமைப் படுத்த முடியாதா? எந்திரன் அல்லது எந்திரக்காரன்ங்ற சொல்லையே இதுக்கும் பாவிக்கலாமா?? தேவை இல்லைங்றது நம்ம கருத்து. செம்மொழி அப்பிடின்னா, எந்த ஒரு உணர்வு, பொருள், செய்கைன்னு, மொத்தத்துல எதுவும், குழப்ப(ambiguity)மில்லாம தகவல்ல‌ ஊடுருவிக் கொண்டு செல்லணும். நம்ம தமிழ் மொழி, சந்தேகத்துக்கிடமில்லாம செம்மொழிதான்!

அப்ப, அந்த தனிச்சொல் என்னவா இருக்க முடியும்? வாங்க, அலசுவோம்! போலின்னா நம்ம எல்லார்த்துக்கும் தெரியும், ஒன்னை மாதிரியே இது இருக்கும், ஆனா அதல்ல இது. ஆக, இயந்திர மனிதன்ங்றவன் மனிதனைப் போன்றதொரு போலி மனிதன், இல்லீங்ளா? அதனால, நாம ஏன் போலியன்னு சொல்லக் கூடாது? இஃகி!ஃகி!! கூட்டிக் கழிச்சிப் பாருங்க, கணக்கு சரியா வரும்!

கடைசியா, நம்ம போலியனோட வரலாறு பற்றின ஒன்னு ரெண்டு செய்திகளைப் பாக்கலாம். கி.மு 250ம் ஆண்டுகளுக்கு முன்னாடியே, புனைவுகள் வாயிலாகவும், சின்ன இயந்திரத்தன்மையுள்ள பொருள் மூலமாவும் போலியனின் பிறப்பு துவங்குச்சாமுங்க. அது படிப்படியா, வளர்ச்சி அடைஞ்சு இப்ப, கிட்டத்தட்ட மனிதனுக்கு இணையான போலியா வளர்ச்சி அடைஞ்சு இருக்கானாமுங்க.

ஃபுளோரிடா மாகாணத்துல இருக்குற டாம்பாவுல, சர்க்கரை மாதிரியான உணவுப் பொருளைச் சாப்ட்டுட்டு, உண்ட உணவை ஈ‍ கோலி நுன்ணியிரிகள் மூலமா, குளுகோசா மாத்தி, அதுல இருந்து மின்சக்திய வரவெச்சு, அதன் மூலமா வேலை செஞ்சுட்டு இருக்கானாம், கேசுட்ரோனோம்ன்னு பெயர் கொண்ட இந்தப் போலியன். இஃகிஃகி! மேலதிகத் தகவலுக்கும் படங்களுக்கும்
இந்தச் சுட்டியச் சொடுக்குங்க.

பக்கச் சொல் பதினாயிரம்!

1/17/2009

முதல்வருக்கு ஒரு அறைகூவல்!

வணக்கம்! இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்பட்ட விரக்தியின் விளைவே இந்த அறைகூவல். இன்னல்கள் கண்டு, மனம் நொந்து இருக்கும் வேளையில், உம்மைக் கடிந்து தொழுவதைத் தவிர வேறொன்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

விநாயகனே வினை தீர்ப்பவனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே, ஞால முதல்வனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!

இந்தப் பாடல்தானே, எங்களுக்கு உயிர் மூச்சு. அதை நீர் மறந்து விட்டீரா? வினை தீர்ப்பவன் நீயன்றோ? ஏன், இனியும் மெளனம் கலையாமல் இருக்கிறீர்?? அரசமரமும், வேப்பமரமும் இணைந்திருக்க, அதனடியில் நீர் வீற்றிருக்க, நாங்கள் துன்பமென்றதும் ஓடோடி வந்தும்மைத் தொழுதழுவோம். ஒரு ம‌ண்ட‌ல‌மும், அனுதின‌ம் உம்மைச் சுற்றி வ‌ந்து, ம‌ன‌முருகினால், தீராத‌ துன்ப‌ம் தீருமென்பார். இன்றைக்கு அந்த‌ ம‌ர‌ங்க‌ளும், ஏன், நீர் வீற்றிருக்கும் ம‌ர‌த்த‌டிக‌ளுமே இரையாகித்தானே போகின்ற‌து? ஏன் இன்னும் மெள‌ன‌மாய் இருக்கிறீர்?? எம்ம‌வ‌ர் துன்ப‌ம் தீர்த்து வைக்க‌ மாட்டீரோ? உம‌க்கு, இந்த‌ அடியேன் சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. என்றாலும், எம் ஆத்ம‌வ‌லியின் கார‌ணியாய்ச் சொல்கின்றேன், ம‌க்க‌ள் இல்லையேல் நீர் இல்லைய‌ன்றோ??

நீர் கிழக்கு முகமாய், ஆற்றங்கரையோரம் அரசமர நிழலில் வீற்றிருப்பீர். அங்கு ஊர் மக்களும் வந்திருந்து,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா!

என்று மனதார உருகிப்பாடி, எருக்கைப் பூச்சாத்தி, "தமிழின் சோதரனே! எம்தமிழை எமக்குத் தந்திடுவாய்!!" என்றும், "காத்திடுவாய்!" என்றும் வேண்டி தோப்புக்கரணம் இடுவார் நம்மக்கள். அந்த மக்களும், தமிழும் கூக்குரலிடும் ஓசை உமக்கு எட்டவில்லையா, ஞால முதல்வரே? இல்லை, எட்டியும் எட்டாதது போல் பாவிக்கிறீரா? சக்தி இல்லையேல், சிவம் இல்லை என்றார், உம் பெற்றோர் குறித்து! யாம் சொல்கின்றோம், பக்தன் இல்லையேல் முதல்வர் இல்லை. இந்தத் தொண்டர் இல்லையேல், தலைவரும் இல்லை. வேழ்முகத்து வேந்தே, போதும் உமது பொறுமை!

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்
எம்மைக் காக்கும் பிள்ளையார்!

ஆற்றங்கரை மீதிலே
அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!

நேரும் துன்பம் யாவையும்
நீக்கிவைக்கும் பிள்ளையார்
கூடிப்பாடும் தொண்டரின்
குறைகள் தீர்க்கும் பிள்ளையார்!

முதல்வா, முத்தமிழே, இந்த கடைக்கோடி பக்தனின் அறைகூவல் இதுதான் வேந்தே! வினைகள் தீர்த்து விடு, இனமான உணர்வு தளைக்க விட்டு, அமைதி எங்கும் பொங்க வழிவகை செய்து விடு!! இல்லாவிடில், வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த கதை என்பது, உமக்கு சொல்லித் தெரிவதில்லையன்றோ!?!

1/16/2009

மீசைய முறுக்கி விட்டா இரத்தம் வரும்!

அட்டைக்கு ஆயிரங்கண்ணு
முட்டைக்கு மூனு கண்ணு
நான் வளத்த தம்பலம்பூச்சிக்கு
ஒத்தக்கண்ணு!
இது மூனும் என்ன?

கல்கத்தாவை ரெண்டா மடிச்சி
திண்டுக்கல்லை ரெண்டாவெட்டி
வெள்ளக்காரனை உள்ளவெச்சி
மீசையமுறுக்கி விட்டா இரத்தம் வரும்!
அதுக என்ன?

இன்னைக்கி இந்த விடுகதைகளோட பதிவை முடிச்சிக்கிறேனுங்க. அந்தக் கடையில விசேடப் பதிவு ஓடிகிட்டு இருக்கு, அதைப் போயிப் பாருங்க. இஃகிஃகி!


குடிக்கிறது கூழுத்தண்ணி,
கொப்புளிக்கிறது பன்னீராம்?!

1/15/2009

படிக்காதவன்: ஒரு மாறுபட்ட பார்வையில்!

வணக்கம்! இன்னைக்கு ஒரே களேபரம் ஆயிப் போச்சுங்க. நாம திங்கக்கிழமை போயிட்டு, வியாழக்கிழமை வீட்டுக்கு வர்ற ஒரு அன்னக்காவடிங்க. சார்லட்ல இருந்து நியூயார்க், போசுடன், சிக்காக்கோ, பிலடெல்பியான்னு பல ஊர்களுக்கும் போவம், வருவம். அப்பிடித்தானுங்க, பிலடெல்பியால சரியா பின்னேரம் 3.30க்கு விமானம் புறப்பட்டு, சாயுங்காலம் 5.10க்கு சார்லட்ல தரை இறங்குச்சு. இறங்கினதுதான் மாயம், தடதடன்னு நம்ம அலைபேசி அடிக்க ஆரம்பிச்சது.

எப்பவுமே, தரை தொட்டவுடனே அடிக்கிறதுதான். ஆனா, இன்னைக்கு விநோதமா இருந்துச்சு. மொத்த விமானத்துல இருக்குறவிங்களோட அலைபேசி எல்லாமே, கீகீ, கூகூன்னு ஒரே அலறல். அப்புறந்தான் தெரிஞ்சது, அதே நேரத்துல நியூயார்க்‍ - சார்லட் விமானம் தரை தட்டிருச்சுன்னு. தங்கமணியோட புலம்பல், கூட வேலை செய்யுறவிங்ககிட்ட இருந்து விசாரிப்புன்னு, ஒரே பரபரப்பு. இன்னும் சார்லட்ல பரபரப்பு அடங்கினபாடு இல்லங்க. அந்த விமான ஓட்டிக்கு ஒரு சபாசு!

சரி, விசயத்துக்கு வருவோம். படிக்காதவனை தற்குறின்னும், கல்லாதவன்னும், இன்னும் என்னவெல்லாமோ சொல்லி தாழ்வாப் பேசுறது உண்டு. படிக்காதவன்னா, அவனுக்கு அறிவு இல்லைன்னு ஆயிடுமா? இல்ல, அவங்கிட்ட மனிதத்தன்மை இல்லாம ஆயிடுமா?? இன்னும் சொல்லப் போனா, படிச்சவந்தானுங்ளே நூதனமா ஊழல் செய்யுறதும், பொய், பித்தலாட்டம், மோசடின்னு எல்லாமே?!

பொதுவாப் பாருங்க, அந்த காலத்துல படிக்காதவங்க சட்ட திட்டங்களுக்கும், சமுதாயத்துக்கும் பயந்தவிங்களா இருந்தாங்கன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருக்கேன். ஏன், இப்பவும் அப்படித்தான்! கொஞ்ச பேர், படிச்சவிங்களோட சூழ்ச்சியாலயும், அவிங்களோட போதனையாலுந்தான் சட்ட திட்டத்தை மீறுறது. அவிங்களை, படிச்சவிங்க பகடைக்காயா பயன்படுத்திகிறாங்க.

அதான், அந்தக் காலத்துல, கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன்னு பெரியவிங்க சொல்லி வெச்சாங்க. இதாங்க கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு ஆயிடுச்சு.


கல்லும், புல்லும், கொண்டவன் ஆக முடியுமா? ஆகக்கூடி, அது அப்படி இல்லையாமுங்க. கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும் கணவனாயிருக்கும் தகுதி இருக்கு, அவன் கள்வனா இல்லாம இருந்தா சரி. புல்லன், அதாவது அறிவு குறைந்தவனாயிருந்தாலும் அவனுக்கு புருசன் ஆகுற தகுதி இருக்கு, அவன் பலவீனமானவனா இல்லாம இருந்தா சரி. அதனால பெரியவிங்க பெண்களுக்குச் சொன்னது, கல்லானானாலும் கணவன்; புல்லனானாலும் புருசன்!

அங்க இங்க எதுக்குங்க? நம்மளுக்குள்ளயே பாப்போமே?! படிப்பு குறைஞ்சவிங்க, நம்ம ஊர்லயே, விவசாயம், தொழில்ன்னு பெரிய அளவுல‌ இருக்காங்க. சமுதாயத்துல நாலு பேர், தன்னை அண்டிப் பொழப்பு நடத்துற அளவுக்கு இருக்காங்க. படிச்சவிங்க‌, அமெரிக்காவுல, குளிருல கூலிக்கு பொட்டி (கணனிப் பொட்டி) தூக்கி, பொட்டி அடிச்சு, பங்குச் சந்தை தரை தட்டுச்சா, விமானந் தரை தட்டுச்சான்னு, புலம்பல்ல, ரெண்டுங் கெட்டுத் திரியறம்?! இதுல, படிச்சவனாவது? படிக்காதவனாவது?? கெட்டவனா இல்லாம, நல்லவனா இருக்கோனும்ன்னு அப்பிச்சி சொன்னதுதான் ஞாவகத்துக்கு வருது!


நல்லது செஞ்சு நடுவழிய‌ப் போனா,
பொல்லாதது போற‌ வ‌ழியில‌!

1/14/2009

வில்லு: ஒரு மாறுபட்ட பார்வையில்!

பொங்க‌ல் வாழ்த்துக‌ள்! வில்லுன்னு சொன்னாலே ஒரு எதிர்பார்ப்பு, குதூக‌ல‌ம். ச‌ரி, நாம‌ளும் அதைப் ப‌த்தி எழுத‌லாம்ன்னு ந‌ம்ம‌கிட்ட‌ இருக்கிற‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மூளைய‌க் க‌ச‌க்கின‌துல‌, நாலு வ‌கையான‌ வில்லுக‌ ஞாவ‌க‌த்துக்கு வ‌ந்த‌துங்க‌.

உண்டி வில்/க‌வ‌ட்டி வில்: க‌விட்டியில‌ இர‌ப்ப‌ர் ப‌ட்டைய‌க் க‌ட்டி, ப‌ட்டையில‌ சிறு க‌ல்லை வெச்சி, எடுத்து விட்டா, 'ச‌ர்'ருன்னு குறி த‌வ‌றாம‌ குருவிய‌ப் போட்டுத்தாக்கும் இது.

வீசு வில்/வ‌ள்ளி வில்: ரெண்டு துண்டுக் க‌யிறுக்கு ந‌டுவுல‌ தோல் ப‌ட்டைய‌ வெச்சி இணைச்சி இருப்பாங்க‌. இந்த‌ப் ப‌ட்டையில‌ க‌ல்லை வெச்சி, த‌லைக்கி மேல‌ 'க‌ர‌க‌ர‌'ன்னு சுத்திட்டு, ஒரு முனைய‌ விட்டுட‌ணும். அப்ப‌, க‌ல்லு காக்கா குருவிங்க‌ இருக்குற‌ ப‌க்க‌ம் போயி விழும். உட‌னே அதுகெல்லாம் ஓடிடும். சோள‌க்காடு, திராட்சைத் தோட்ட‌த்துப் ப‌ர‌ண்ல‌ எல்லாம், இத வெச்சித்தான் காக்கா குருவிய‌ முடுக்குவோம்.

இராம‌ர் வில்/ அம்பு வில்: இது உங்க‌ எல்லார்த்துக்கும் தெரிஞ்ச‌ விப‌ர‌ம். ம‌ன்ம‌த‌ன் வெச்சிருந்த‌து, க‌ரும்பாலான‌ வில், அதைக் க‌ருப்பு வில்லுன்னு சொல்வாங்க‌.

வீச்சு வில்: மிதி வ‌ண்டியோட‌ ச‌க்க‌ர‌த்துல‌ இருக்குற‌ இர‌ப்ப‌ர் ப‌ட்டைய‌ ரெண்டு தூணுக்கு ந‌டுவுல‌ க‌ட்டிட்டு, ப‌ட்டைக்கு ந‌டுவுல, உடைக்காத‌ கோலி குண்டு சோடா பாட்டிலை வெச்சி, இழுத்து விடுவாங்க‌. அது போயி, எதிராளிக‌ளைப் ப‌தம் பாக்கும். இதான் வீச்சு வில்லு.

த‌மிழ் இல‌க்கிய‌த்துல‌, வில் எப்பிடியெல்லாம் குறிப்பிட‌ப்ப‌ட்டு இருக்குன்னு பாருங்க‌:

காண்டீபம்
தனுசு
கோதண்டம்
கார்முகம்
குணி
குனி
கொக்கரை
கொடுமரம்
சராசனம்
சாகம்
சாரங்கம்
சானகம்
சிங்காணி
சிங்கினி
சிலை
சிந்துவாரம்
தடி
தவர்
தனு
துரோணம்
பகர்
முனி
வான்மிகம்
வின்னான்
வேணு

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!
வில்லும் வேலும் மல்லுக்குறுதி!!


1/12/2009

அரசனம் பட்டியார், அரசனம்!!

வாய் கழுவு பட்டியார், வாய் கழுவு!
அரசனம் பட்டியார், அரசனம்!!
கை கழுவு பட்டியார், கை கழுவு!!!


வணக்கம்! பொங்கல் நல்வாழ்த்துகள்!! பாருங்க இன்னைக்கு சார்லட்ல இருந்து ஃபிலடெல்பியா வந்துட்டு இருக்கும் போது, பொங்கல் பத்தின யோசனையாவே இருந்துச்சு. மாட்டுப் பொங்கல் அன்னைக்கு, பட்டி தொட்டியெல்லாம் மறுமலர்ச்சியோட இருக்கும். கால்நடைகள் கட்டி இருக்குற பட்டிக்கு நடுப்புல, தொட்டி கட்டி, அலங்கரிச்சி, பொங்கல் படைப்பாங்க. கடைசியா, பசுவோட கன்றை விட்டு குலுவையும் வாத்தியமுமா அந்தத் தொட்டிய மிதிக்க விட்டு, கன்றை மிரள விட்டு குதூகலம் அடையுறது வழக்கம்.

இது நடக்கறதுக்கு முன்னாடி, ஒருத்தர் பாத்திரத்தில இருக்குற தண்ணிய மாவிலையால தெளிச்சிட்டே சொல்லிட்டுப் போவாரு, "வாய் கழுவு பட்டியார் வாய் கழுவு!"ன்னு. பின்னாடி வர்றவரு, கால்நடையோட வாயைக் கழுவி விடுவாரு.

அடுத்தவர், அதே மாதர, மாவிலையால தண்ணியத் தெளிச்சிட்டே சொல்வாரு, "அரசனம் பட்டியார் அரசனம்!". அவருக்குப் பின்னாடி வர்றவரு, கையில இருக்குற பொங்கல்ல ஒரு கவளத்த எடுத்து, அந்த கால்நடைக்கு ஊட்டி விடுவாரு.

இவருக்குப் பின்னாடி வர்றவர் சொல்லுறது, "கை கழுவு பட்டியார், கை கழுவு!". உடனே, கால்நடைக்கு பொங்கல் ஊட்டின கைய, ஊட்டினவர் கழுவிக்கிடுவாருங்க. இப்படி பட்டி தொட்டி முழுக்க சொல்லிட்டே வந்து, இருக்குற எல்லா கால்நடைகளுக்கும் பொங்கல் ஊட்டுறது ஒரு வழக்கம்.

ஆகக்கூடி, இங்க சொல்லுற அரசனம் பட்டியார் அரசனம்ன்னா என்ன? ஒன்னும் புரியல. விமானம் உட்டு இறங்கின உடனே, ஊர்ல இருக்குற எங்கம்மாவிங்களுக்கு ஒரு தாக்கல் போட்டுக் கேட்டும் பாத்தேன். அவிங்களும் அதுக்கு அர்த்தம் தெரியாதுன்னுட்டாங்க. உங்களுக்குத் தெரியுமாங்க? தெரிஞ்சா சித்த சொல்லுங்க...புண்ணியமாப் போகட்டும்!!! மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு?!

மேலதிகத் தகவல்: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்), நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது. அன்னம் அனம் என்று குறுகிற்று

போங்க, அல்லாரும் நல்லபடியாப் போயி, அரசனம் பட்டியார் அரசனம் போடுங்கோ!

தை பிறந்தால், வழி பிறக்கும்!

துக்ளக் மகேசு, மோகன் கந்தசாமி, மதிபாலா ஆகியோருக்கு விருது!

வணக்கம்! எனக்கு ஒரு பெட்டியும் கிடைச்சு, அதுல கண்டதையும் தட்டி, வலைப்பூங்ற பேர்ல எழுதினதுக்கு விருதாமுங்க. சரி, வேண்டாம்ன்னு சொல்லுற அளவுக்கு நாம பெரிய ஆளா என்ன? மகிழ்வா வாங்கிக்கிடுவோம். கொடுத்த அன்பர் ஸ்ரீராம் அவிங்களுக்கு நன்றி!

அமெரிக்காவுல, இன்னைக்கு இருக்கிற வேலைய காப்பாத்திக்கிறதுங்றது நெம்ப முக்கியமுங்க. அதான், வலைப்பூ பக்கம் மொதல்மாதர வர முடியறது இல்லை. இன்னைக்குதான் அவகாசம் கிடைச்சது. கிடைச்ச நேரத்துல பாருங்க, நடிகவேள் M.R இராதா, கர்மவீரர் காமராசர், கலைஞர் அவிங்க பேரறிஞர் அண்ணாவுக்கு படைச்ச கவிதாஞ்சலி மற்றும் கவியரசருக்கான நினைவு கூறல்ன்னு பழம் பேச்சுகளைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்துச்சு, நிறைய தகவல்களும். இதோ, இந்தச் சுட்டியில, இன்னும் பிரபலமான நிறைய பேச்சுகளுக்கான காணொளி இருக்கு.



அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க! (நன்றி: கணேஷ் சந்திரா)

அன்னக்கி என்ன பேசுனாங்கன்னு கேளுங்க-2


இந்தச் சுட்டியும், எனக்கு கிடைச்ச வண்ணத்துப்பூச்சி விருதையும் மகேசு, மோகன் கந்தசாமி, மதிபாலா அவிங்களுக்கு பிரிச்சிக் குடுக்கிறேன். இவிங்க எல்லாரும் நெம்ப நல்லா எழுதிட்டு வர்றாங்க... நமக்கெதுக்கு, அதான் அவிங்களுக்கு குடுத்திடலாம்! இஃகிஃகி!!

காக்கை பகுத்து உண்ணும்!

1/09/2009

அமெரிக்காவின் மறுபக்கம்!

பங்குச் சந்தையில‌
காசை எறிஞ்சுவிட்டு
மலையில முத்து
எடுக்குறோம் நாங்க!

(சொடுக்கி, பெரிய படமாப் பாருங்க... இஃகிஃகி!)



பணக்காரன் பின்னும் பத்துப்பேர்! பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்!!

1/06/2009

சித்தம் போக்கு சிவன் போக்கு!

வணக்கம் அன்பர்களே, வணக்கம்! சாம்பலை உடல் எல்லாம் பூசிட்டு இருக்குற சிவபெருமானை, அவர் விசித்திரமாகவும் வினோதமாவும் இருக்குறதப் பாத்துட்டு, பித்தன்னும் வர்ணிக்கறது உண்டு. அந்தப் பின்னணியில, சித்தபிரமை பிடிச்சவங்க சிவன் மாதிரி பித்துப் பிடிச்சவங்களைப் போல இருப்பாங்கன்னு சொல்லுறதுதாங்க, சித்தம் போக்கு சிவன் போக்கு. இஃகிஃகி!

சித்தபிரமை = மனம் பிறழ்தல்

இராகவன் நைஜிரியா: நண்பரே...சித்தர்கள் சிவனை நினைத்து தவம் செய்வார்கள். அவர்கள் நினைப்பு முழுவதும் சிவனைப் பற்றி இருக்கும். அவர்களை புரிந்து கொள்வது கடினம் என்று சொல்வார்கள்.சித்தர் போக்கு - சித்தர் நினைவுகள்சிவன் போக்கு - சிவனுடைய நினைவுகள் இது தான் நான் கேள்விபட்ட விஷயம்.

Mahesh : மணியாரே... இப்பிடியும் இருக்கலாம்... ஆனா நான் கேட்ட வரை (சுகி சிவம்) மனத்தைக் கட்டுப்படுத்துவது ஆண்டவன் செயல் என்ற அர்த்தத்தில் "சித்தம் (மனம்) போக்கு சிவன் (ஆண்டவன்) போக்கு". ஆண்டவன் சொல்றான் ; அருணாச்சலம் செய்யறான் மாதிரி...

புதுகை.அப்துல்லா: சிவம் என்பதை இறைநிலை அல்லது இறைவன். பொதுவாக இறைநிலையை அடைய அல்லது உணர முற்படும் ஞானிகள்(சித்தர்கள்) அந்தச் சிந்தனையைத் தவிர வேறு எந்த கவன நிலையிலும் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி தீட்சை பெற்ற அல்லது முரீது(இஸ்லாமிய வழக்கில் உள்ளது) பெற்ற ஞானிகள் தங்கள் ஒவ்வொரு அசைவையையும் இறைவனே நடத்துவதாக அல்லது தீர்மானிப்பதாக கூறுவார்கள். இறைவனின் போக்கிலேயே சித்தர்கள் போவதால் சித்தன் போக்கு சிவன் போக்கு என்றானது என அறிஞர் கருதுகின்றார்.




உறவு போகாமல் கெட்டது! கடன் கேட்காமல் கெட்டது!!

1/05/2009

என்னிதயக் கமலாள்

விழியின் மணியாள்,
கொஞ்சு நகையாள்,
தத்தை மொழியாள்,
இனிமைச் சிரிப்பாள்
பொன்நகை மலராள்,
என்னிதயக் கமலாள்,
காணாமற்த் தவிப்பாளென‌
நெஞ்சு வாடுகையில்,

சிணுங்கியது அலைபேசி!
வாஞ்சை மொழியாள்
விளித்தாள் "அப்பா"யென‌!
குளிர்ந்தது நெஞ்சம்!!
துளிர்த்தது மனம்!!!

Philadelphia, PA
Jan 05, 2009.

மெல்லப் பாயும் தண்ணீர், கல்லையும் குழியாக்கும்!

1/04/2009

கனவில் கவி காளமேகம் - 11

வணக்கம் அன்பர்களே! மூனு மாசமா வீட்ல இருந்தே வேலை, கடைசி மூனு வாரம் விடுப்புன்னு நாள் போனதே தெரியலீங்க. பதிவுகளாப் போட்டு உங்களை எல்லாம் இம்சை பண்ணினது எல்லாம் இனி குறையும். இஃகிஃகி! ஆமுங்க, நாளையில இருந்து பொட்டி அடிக்கப் பொட்டி தூக்கணும். வெளியூர்ப் பிரயாணந்தேன். பதிவுகள், பின்னூட்டம் எல்லாம் குறையத்தான் செய்யும். இதைப் படிக்கும் போது உங்க முகத்துல என்னா ஒரு மலர்ச்சி?!

இதெல்லாத்தையும் நினைச்சிட்டே தூங்கிட்டு இருந்தேன், வழக்கம் போல நம்ம கனவுல‌ வந்தாருங்க கவி காளமேகம் அப்பிச்சி. மேல படீங்க, என்னாதான் அலப்பறை செய்தாருங்கறதத் தெரிஞ்சுக்குவீங்க.

"என்னடா பேராண்டி, வேலைக்குப் போகணுங்ற விசனமாட்ட இருக்கு?"

"ஆமுங்க அப்பிச்சி, நெம்ப வெசனமாத்தான் இருக்கு. இப்ப நீங்களும் வந்திட்டீங்க. சரி, ஆரம்பிங்க உங்க அலம்பலை! எப்பத்தான் உங்க தொந்திரவு தீரும்ன்னு தெரியலை?!"

"ஏண்டா இப்பிடி சலிச்சிக்குறே? மொதல் ரெண்டு நாள் கொஞ்சம் கடினமாத்தான் இருக்கு...அப்புறம் எல்லாம் செரி ஆயிடும்!"

"ஆமாங்க, நீங்க ஆரம்பிங்க!"

"நீங்கெல்லாம் இப்ப தமிங்கிலத்துல பேசுறீங்க. பேசும் போது, அவன் வந்து ஷோ(show) வுடுறான்னு சொல்லுறீங்க. அதுக்கான தமிழ் வார்த்தை என்ன, சொல்லு!"

"நடிப்பு?"

"இல்லடா பேராண்டி! ஒருத்தரைப் பார்த்த ஒடனே அவிங்க செய்யுற அலம்பல். அதைச் சொல்லுறது, கண்டுபாவனை!"

"அப்பிடீங்களா? இனி சொல்ல வந்ததை நீங்களே சொல்லிடுங்க அப்பிச்சி!"

"க‌ம்பிய‌ நீட்டுற‌துன்னா என்ன‌?"

"ஒருத்த‌ர் த‌ப்பிச்சுப் போற‌தும், இட‌த்துல‌ இருந்து ந‌ழுவ‌ற‌தையும் சொல்லுற‌து க‌ம்பிய‌ நீட்டுற‌து. ச‌ரிங்க‌ளா?"

"ச‌ரிதான்! அதுக்கான‌ விள‌க்க‌ம் என்ன‌ன்னா, சிறைச்சாலை, கூண்டு இங்கல்லாம் அடைச்சிருக்குற க‌ம்பிக‌ளை உள்புற‌மாவோ வெளிப்புற‌மாவோ வ‌ளைச்சி, நீட்டி விட்டுட்டு ஓடிப் போற‌தைக் கம்பிய நீட்டிட்டுப் போய்ட்டான்னு சொல்ல‌ப் போய், அதுவே ஒரு வ‌ழ‌க்குச் சொல்லாவும் ஆயிருச்சு!"

"ஓ அதுதானா, இது?"

"ஆமா. கடுக்காய் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்லுறோம். அது ஏன் தெரியுமா?"

"அதான், நீங்களே சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க சொல்லிட்டனே? மறுபடியும் கேள்வி கேட்டு இம்சை செய்றீங்க‌ளே???"

"சரிடா... கோவப்படாம‌ சித்த கேளு! வைத்தியன் வந்து நோவுக்கு என்ன மருந்து குடுப்பானோன்னு காத்திருக்க, அவன் வந்து காசை வாங்கிட்டு மருத்துவ கொணம் இருக்குற கடுக்காயக் குடுத்துட்டுப் போனதை, ஒரு இளக்காரமா, காசை வாங்கிட்டு கடுக்காயக் குடுத்துட்டுப் போய்ட்டான்னு சொல்ல, அதுவே ஏமாத்திட்டு போறதையுஞ் சொல்லுற வழக்கா ஆயிப் போச்சு."

"ஓ, இதுதான் அதனோட அர்த்தமா?"

"ச‌ரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)


கிளிநொச்சி

ச்சும்மா, இடங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்ன்னு வலைல மேஞ்சப்ப கிடைச்ச தகவல். இது இலங்கை இராணுவத்தின் சார்பான தகவல்! ஆகவே, தற்போதைய நிலை பற்றிய தகவல் எவ்வளவு நம்பகத்தன்மையோட இருக்குன்னு தெரியாது. ஊர்களைப் பற்றின தகவல்கள் உண்மையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.



தற்போதைய நிலைகளை அறிய:

http://defence.lk/orbat/Default.asp
http://www.cyberlk.com/defencemap/


1/03/2009

என்ன கொடுமை சரவணன் இது?

அவனவன் அங்கங்க வெடிகள் வெடிக்குதுன்னு, அல்லு கழண்டு போயிருக்குற நேரத்துல, என்னா வெடி இது? என்னா வில்லத்தனம்??





1/01/2009

எதுக்கு இந்த முதலைக் கண்ணீர்?

வணக்கம்! புத்தாண்டுக் கொண்டாட்டம் எல்லாம் முடிஞ்சது, இனியும் ரெண்டு நாள் விடுப்பு இருக்கு. இஃகிஃகி!! பாருங்க, அடங் கொன்னியான்னு ஒரு பதிவு போட்டப்ப, ஊர்ல பேருகெல்லாம் எப்பிடி மருவுதுன்னு பார்த்தோம். அப்ப, சுப்பிரமணியா கொப்புரவாயாங்ற பாட்டு நினைவுக்கு வந்துச்சு. சின்ன அம்மிணி அவிங்களும் அடுத்த வரிய எடுத்துக் குடுத்தாங்க, ஆனாலும் முழுப் பாட்டு ஞாவகத்துக்கு வரவே இல்லை.

வீதம்பட்டி வேலூர்ல ஆறாம் வகுப்புப் படிக்கும் போது, பொம்மநாயக்கன் பட்டி சுப்பிரமணியனும் எங்கூடப் படிச்சான். அவனைப் பாத்து இந்தப் பாட்டைப் பாடி வெறுப்பேத்தறது உண்டு. சரி, புத்தாண்டை சாக்கா வெச்சி, அவனுக்கு வாழ்த்து சொல்லுற மாதர கூப்ட்டு பாட்டைக் கேட்டு தெரிஞ்சிக்கிலாம்ன்னு நினைச்சேன், ஆனா அவிங்களைத் தொடர்பு கொள்ளுறதுக்கு எந்தத் தகவலும் இல்ல. ஒரு வழியா, இன்னோரு நண்பன் கார்த்திகிட்ட இருந்து தகவலை வாங்கி, பொம்மநாயக்கன் பட்டிக்கு ஒரு தாக்கலைப் போட்டேன்.

சுப்ரமணியர் வந்தாரு தொடர்புல. வந்து வாங்க, போங்கன்னு பேச ஆரம்பிச்சுட்டான். பேசிப் பல வருசம் ஆனதுனாலயும், நாம வெளிநாட்டுல இருக்குறதாலயும் அந்த அன்னியோன்யம் விலகிப் போயிருந்துச்சு. அப்புறம் நாமதான், நாம‌ இன்னும் அதே கெராமத்தான்னு சொல்லி நெலமையக் கட்டுக்குள்ள கொண்டு வந்தோம். தற்போதைய நெலவரங்களை எல்லாம் விசாரிச்சுட்டு, மெதுவா பள்ளிக்கூடத்துப் பக்கம் பேச்சைத் திருப்புனோம்.

"டேய் சுப்பா, சுப்ரமணியா கொப்புரவாயான்னு பாடுவமே, ஞாவகம் இருக்குதா?"

"ஆமாமா, அதெப்பிடி மறக்க முடியும்?"

"எனக்கு மறந்து போச்சுறா...சொல்லு பாக்கலாம்!"

"மணியம்மணியன் மாங்கா மடையன்...."

"டேய், நிறுத்து நிறுத்து! என்னையேண்டா இப்ப வம்புக்கு இழுக்குற?"

"ஆமா, பாட்டு இப்பிடித்தான ஆரம்பிக்கும்!"

"போடா, சுப்ரமணியா கொப்புரவாயான்னுதான....."

"போடா, உன்னையும் என்னையும் கிண்டல் பண்ணுறதுக்கு பரமசிவனும், மந்தராசலனும் பாடுவாங்க, நீ மறந்துட்ட போலிருக்கு?!"

தேவையில்லாம, புத்தாண்டு அன்னைக்குமதுவுமா, எங்கயோ போற ஓணானை எடுத்து மடியில உட்டுகிட்டம் போலிருக்குன்னு நினைச்சிட்டே...

"சரி! சரி!! சொல்லு..."

சுப்பிரமணியன் சொன்னதுல இருந்து,

மணியன்மணியன் மாங்காமடையன்
சுப்பிரமணியன் கொப்பரவாயன்
வெங்கட்ராமன் வெல்லந்திருடி
சென்னிய‌ப்பஞ் சோத்துராமன்
செந்தில்நாதஞ் செவுரேறி
மயில்சாமி ம‌ண்ணாங்க‌ட்டி
தாமோத‌ர‌ன் த‌ண்ட‌ச்சோறு
விசுவுநாத‌ங் குசுவுநாத‌ன்!

இப்பிடி அவங்கட்டப் பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலீங்க. கூடவே இன்னொரு தகவலும் உங்ககிட்டப் பேசணும் இன்னைக்கு... முதலைக் கண்ணீர், நீலிக்கண்ணீர்ன்னு எல்லாம் சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க. அதுகளுக்குண்டான பின்னணி என்ன?

நீலிக் கண்ணீர்: நீலிங்றது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள்ல வர்ற கதாபாத்திரமாமுங்க. இந்த நீலியுடைய அழுகைய‌ மனசுல வெச்சி, உவமைப்படுத்திப் பேசுறதுல இருந்து வந்ததுதானாம் இந்த நீலிக்கண்ணீர்.

முதலைக் கண்ணீர்: ஒரு சாரார் சொல்லுறது, முதலைனால அழ முடியாது. அதனால, பொய்யான அழுவாச்சிய, சாத்தியமில்லாத முதலையோட கண்ணீரோட ஒப்பிடறதுதான் இந்த முதலைக் கண்ணீர் (crying crocodile tears)ன்னு. ஆனா, முதலையால அழ முடியுமாமுங்க. ஆக, இது தப்புன்னு ஒரு சாரார் சொல்லுறாங்க. மேலும் அவிங்க சொல்லுறது என்னன்னா, தண்ணியில இருக்கும் முதலை வெளிய தலைய நீட்டும் போது எப்பிடி, நீர்த்திவலைகள் வடிஞ்சு போறது, அழற மாதிரித் தெரியுதோ, அது மாதிரியான ஒரு தோற்ற அழுகைன்னு சொல்லுறதுதான் முதலைக் கண்ணீர்.


புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்!
முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்!!

2009: புத்தாண்டு நிகழ்வு...

வணக்கம் அன்பர்களே! க்ரெக்கோரியன் நாளட்டவணைப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழ்க் குழுமத்தின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் வடக்கு கரோலைனா மாகாணம் சார்லட்டில் மாலை சரியாக ஐந்து மணிக்கு திட்டமிட்டபடி துவங்கியது. அவ்விழாவில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடாத்தும் பொறுப்பை இந்த சாமன்யனுக்கு அளிக்கப்பட்டமையால், நாமும் நம் திறமையைக் காண்பிக்கும் வாய்ப்பாகக் கருதி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினோம். கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியாக இருந்ததைக் காண முடிந்தது. விழாவில் இடம் பெற்ற கேளிக்கை நிகழ்வுகள் குறித்து பிரத்யேகப் பதிவு விரைவில் வெளியாகும்.

நிகழ்வின் இடையூடாக, கலந்துரையாடல் இடம் பெற்றது. அதில் பல தரப்பட்ட தகவல்களும், விழிப்புணர்வுக் கருத்துகளும் பரிமாறப்பட்டது. அதில் ஒன்றுதான், நாம் பார்க்க இருக்கும் ஒரு செய்தியும், அதன் விபரமும். ஆம், அன்பர்களே! தற்போதைய வடக்கு கரோலைனா மாகாணத்தின் மக்கள் தொகை 92 இலட்சம் பேர். தோராயமாக நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 5 இலட்சம். விவாகரத்து எண்ணிக்கை சுமார் 43 ஆயிரம். சதவிகிதம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 9 சதவிகிதம்.

வடக்குக் கரோலைனாவைப் பொறுத்த வரையில், இது பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாகாணம், பழமையான(conservative) மாகாணம். சார்லட்தான் பெரிய நகரம், அதன் மக்கள் தொகை 5.5 இலட்சம். ஆகவே, நியூயார்க் போன்ற மற்ற பெரிய மாகாணங்களில், நகர்ப்புறக் கலாச்சாரத்தைக் கொண்ட(liberal) மாகாணாங்களில் இந்த சதவீதம் மேலும் அதிகமாக இருக்கும்.

அலசப்பட்ட விசயம் யாதெனில், பொருளாதார மந்தத்தின் காரணமாக, விவாகரத்து எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து உள்ளது என்பதுதான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், மனிதன் இட்டுக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது, சகிப்புத்தன்மையோடு பிணக்குகளை எதிர்கொண்டு வாழ்வதையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் கடைப் பிடிக்கிறான். இதுவே, பொருளாதாரம் மிகுந்தோ அல்லது எளிதில் கிடைக்கிற பட்சத்திலோ அவை குறைகிறது என்பதே.

மேலும் நியூயார்க் செய்தி ஒன்றும் இதை உறுதிப் படுத்துவதாக உள்ளது. வசதி வாய்ந்த இருவர் பிரிய எண்ணி, விவாகரத்துப் பெற குறைந்தபட்சம் ஒரு வருடம் பிரிந்து வாழ்வது அவசியமென்பதால் பிரிந்து வாழ்கிறார்கள். வருடமும் உருண்டோடி விடுகிறது, ஆனால் அவர்கள் வாழ்ந்த வீடு விற்பனை ஆகவில்லை. அதனால் அவர்களின் வரவு செலவுக் கணக்கு, ஒரு முடிவை எட்டவில்லை. அதற்கு ஒரு முடிவில்லாமல், விவாகரத்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர் அந்தத் தம்பதியினர். ஆம், இணைந்து வாழ்வதே அந்த முடிவு. இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததில் அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

எப்படிப் போர்க்காலத்திலும், நாட்டிற்கு ஒரு இடர் என்று வரும்போதும் மக்களின் நாடி நரம்புகளில் அனிச்சைச் செயலாய் நாட்டுப் பற்று பீறிடுகிறதோ, அது போன்றதுதான் பிணக்குகளும் அகந்தையும். வசதி வாய்ப்புகள் பெருகும் போது, மனிதனின் மனம் அறியாமலே அவையும் குடி புகுந்து விடக்கூடும். நாம் உயர்ந்து வருகிறோம், மிக்க மகிழ்ச்சி! ஆனாலும், இன்னும் வளர்ந்த நாடு என்னும் நிலையை அடையவில்லை. ஆகவே, வளர்ந்த நாடுகளின் செயல்முறை, கட்டுமானங்களைக் கற்றுத் தேர்ச்சியுறும் நாம், அவர்களின் படிப்பினையையும் தெரிந்து கொண்டாக வேண்டும்.

இப்படியாக, கலந்துரையாடிய பெரியவர்கள், இங்கு வாழும் நமது தலைமுறையினரும் எளிமை பேணி, பொருளாதாரத்தை அடக்கி ஆள்வதிலும், குடும்பத்தைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற ரீதியில், உரையாடலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். நம் நாட்டு மக்களுக்கும் ஒரு செய்தியாக, இதனைப் பதிவிடுகிறேன் அன்பர்களே. எனது ஆலோசனை, கருத்து என்றெல்லாம் நினைத்து, நிலையில் நிற்கும் தேரைத் தெருவில் இழுத்துவிட்டு விடமாட்டீர்கள் என்றும் பெரிதும் நம்புகிறேன். இஃகிஃகி! (அந்த‌ பயம் இருந்தா சரின்னு, நீங்க சொல்லுறது கேக்குதுங்கோ!)


மேற்கோள் சுட்டிகள்:

http://www.charlotteobserver.com/597/story/438991.html
http://charlotte.areaconnect.com/statistics.htm

இதயம் ஏற்கிறது! தலை மறுக்கிறது!!