ஒரு நாள், பெண்ணைப் பெத்த அந்தம்மா அழுது புலம்பிட்டு இருந்தாங்க. உடனே அந்தப் பெரியவர்,
”இதுக்கு ஏன் இப்ப அழுதுட்டு இருக்கே நீ? சேய் அப்படீன்னா, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் பிரிஞ்சி எட்டத்தான போகும்? அதனாலத்தான அவுகளை சேய்ன்னு சொல்றது?”
பக்கத்துல இருந்த நாம உடனே அந்த பெருசுகிட்ட, ”அய்யா, என்ன சொல்றீங்க நீங்க?”
“ஆமா சேய்ன்னா தூரம், அண்மைன்னா கிட்டக்கங்றதுதான் தமிழ்?”
“அய்யா, சித்த வெவரமாச் சொல்லுங்க! நீங்க எடக்குமொடக்கா சொல்றீங்க போலிருக்கு?”
“டேய், டேய்... அது எடக்குமொடக்கு அல்லடா! இடக்குமுடக்குன்னு சொல்லணும்!!”
“செரி வுடுங்க. இடக்குன்னா என்ன? முடக்குன்னா என்ன??”
“இடக்குன்னா குதர்க்கம். முடக்குன்னா ஒழுங்கில்லாதது. குதர்க்கமாப் பேசி ஒழுங்கில்லாமச் செய்யுறதுதான் இடக்குமுடக்கு”
“ஓ அப்படியா? அப்ப ஏடாகூடான்னா என்னங்க பெரியவரே?”
”டேய், நீயென்னடா வெவகாரமாவே கேள்வி கேக்குற? இருந்தாலும் வயசுல சின்னவங் கேக்குறதால சொல்றேன், கேட்டுக்க; ஏடன், ஏடான் அப்படின்னா, தோழன் அல்லது நட்பானவன்னு அர்த்தம். கூடான் அப்படின்னா, சேரக் கூடாதவன். ஆக, எதிர்ப்பதமா இருக்குறதைச் சொல்லுறது ஏடாகூடான்னு!”
”பெருசூ.... அப்ப எதிரும் புதிருமாப் பேசுறான்னு சொல்றாங்களே? அது?? இஃகிஃகி!”
“டேய், கேனக்காத்தானாட்டம் இளிக்காத! ஒன்னுக்கொன்னு எதிர்ப்பதமா இருக்குற அர்த்தத்துல பாவிக்கிறது அல்லடா அது! ஆனாக் காலவட்டத்துல நீங்கெல்லாம் இப்படி மாத்திபுட்டீகடா... எதிர் அப்படீன்னா முன்னாடி நிக்கிறது. புதிர் அப்படீன்னா, சுலுவுல புரிஞ்சிக்கும் படியா இல்லாம இருக்கிறது. ஆக யாராவது முன்னாடி வந்து, சொல்லவந்ததை நேரிடையாச் சொல்லாமச் சொல்லுற பழமதாண்டா அந்த எதிரும்புதிருமாங்றது!”
”ஓ இதுல இத்தனை கதை இருக்கா? அப்ப எதிர்ப்பதம்னா என்ன பெருசு?”
“எதிர்ப்பதம்னா, முரணான பதம்ங்றதுதான். இப்ப கொஞ்சம் எதிர்ப்பதங்களை சொல்லுறேன் கேட்டுக்க,
சிறுமை X பெருமை
சேய்மை X அண்மை
தீமை X நன்மை
வெம்மை X தண்மை
புதுமை X பழமை
மென்மை X வன்மை
மேன்மை X கீழ்மை
திண்மை X நொய்மை
உண்மை X இன்மை
நுண்மை X பருமை"
"நல்லா இருங்க பெரியவரே, நான் கழண்டுக்குறேன் இப்போதைக்கு! இஃகி!!”
வாங்க மக்கா, நாம போயி நம்ம பொழப்பு தழைப்பப் பாக்கலாம். விட்டாப் பெருசு விடிய விடியத் தமிழ்ப் பாடம் எடுக்கும் போல இருக்கு?
கறக்குற பசுவையும், கைக்குழந்தையையும் கண்ணுல வெக்கணும்ன்னா,
தமிழை இரசிச்சு அனுபவிக்குறதுல வெக்கணும்யா!!