11/25/2022

பெரும்போர் கொள்ளுமா 2023?

சற்றேறக்குறைய ஓர் ஆண்டுக்கு முன்பு, ’போர் கொள்ளுமா 2022?’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினோம். https://maniyinpakkam.blogspot.com/2021/12/2022.html எத்தனை பேர் படித்திருப்பார்களெனத் தெரியவில்லை. அது இப்படியாக முடிந்திருக்கும், “தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2022!!”. சரி, இந்த இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் என்னதான் நடந்திருக்கின்றது?

பிப்ரவரி முதல் வாரம். உக்ரைன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சொல்லின, “இரஷ்யா படையெடுப்பை நடத்தாது. அதிகபட்சமாக ஏவுகணைகளைத் தொடுக்கலாம்!”. இரஷ்யாவும் தமக்கு அப்படியான எண்ணமெதுவும் இல்லையெனச் சொல்லியது. ஆனால், அமெரிக்க அதிபர் பைடனே வெளிப்படையாக அறிவித்தார். “எந்த நேரத்திலும் இரஷ்யா தன் படையெடுப்பை நடத்தக்கூடும். ஆகவே அமெரிக்கக் குடிகள் உடனடியாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறுவது உசிதம்”.

பிப்ரவரி 24, 2022, இரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைனெங்கும் சீறிப்பாய்ந்தன. உக்ரைனின் இராணுவக் கேந்திரங்களை அழித்தொழித்தன. ஒரேவாரம், நாடு முழுவதும் தன் கைப்பிடிக்குள் வந்து சேருமெனக் கொக்கரித்தது இரஷ்யா. உக்ரைன் நாட்டு அரசு கேந்திரம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி, போலந்து நாட்டில் இருந்து செயற்பட யோசனை சொல்லியது அமெரிக்கா. மறுத்து, அடைந்தால் நாடு, மடிந்தால் உயிரெனச் சொன்னார் உக்ரைன் நாட்டு அதிபர்.

இரஷ்யப் படைகள், வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு என நான்கு திசைகளிலிருந்தும் கிளம்பி வேகமாக முன்னேறிய வண்ணம் இருந்தன. தலைநகர் கீய்வ் நகருக்கு வெகு அருகே 40 மைல் தொலைவுக்கு அணிவகுத்த படைகள் மேற்கொண்டு முன்னேற முடியாமல், உண்ண உணவின்றித் திகைத்து நின்றன. இரஷ்ய எல்லையிலேயே இருக்கும் உக்ரைநாட்டு இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் நகருக்குள் நுழைய முடியாதபடிக்கு உக்ரைன் படைகள் ஆக்ரோசமாக எதிர்த்தாக்குதல் நடத்தின. இரஷ்யா வடக்கு, வடகிழக்கிலிருந்து பின்வாங்கி, கிழக்கு, தெற்குப் பகுதியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துக் கொண்டது. அறிவித்த சில நாட்களிலேயே, இரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பல் Moskva  அழித்தொழிக்கப்பட்டது.  In the late hours of 13 April 2022 Ukrainian presidential adviser Oleksiy Arestovych reported Moskva was on fire and Odesa governor Maksym Marchenko said their forces hit Moskva with two R-360 Neptune anti-ship missiles. A radar image showed the ship was about 80 nautical miles (150 km) south of Odesa around 7 p.m. local time. Two reports indicated the ship sank before 3 a.m., 14 April.

உக்ரைன் நாட்டுப் படைகளின் வலுவும் நெஞ்சுரமும் அமெரிக்காவுக்கு பெருவியப்பைக் கொடுத்தது. உடனடியாக ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் முடிவு செய்தன. உலக நாட்டின் பல தலைவர்களும் உக்ரைன் நாட்டுத் தலைநகருக்கே சென்றனர். வான்வெளி எதிர்த்தாக்குதல் நடத்தவல்ல ஸ்டிங்கர்கள்தான் முதன்முதலாக உக்ரைனுக்குள் அனுப்பப்பட்டன. அதுவரையிலும் ஊடுருவிக் கொண்டிருந்த இரஷ்ய விமானங்கள் தாழ்வாகப் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொலைதூர ஏவுகணைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை இரஷ்யாவுக்கு. 

ஜூன் 2022 அல்லது அதற்குச் சற்று முன்பாக, ஏவுகணைகளைத் தாக்கியொழிக்கும் படைக்கலங்கள் சேர்க்கப்பட்டு, அக்டோபர் மாதத்தில் அதியுச்ச நுட்பமான NASAMS கூட உக்ரைன் வசம் சென்று சேர்ந்திருக்கின்றது. அதன்நிமித்தம், 80%க்கும் மேலான இரஷ்ய ஏவுகணைகள் இலக்கைச் சென்று சேருமுன்பாகவே அழித்தொழிக்கப்பட்டன. ஒவ்வொரு ஏவுகணையும் ஒரு மில்லியன் டாலரிலிருந்து 15 மில்லியன் டாலர் வரையிலுமான மதிப்பைக் கொண்டது. இரஷ்யாவின் இருப்பு மளமளவெனக் குறையத் துவங்கியது. புது ஏவுகணைகளை உருவாக்க வேண்டுமானால் செமிகண்டக்ட்டர் சிப்புகள் வேண்டும். அதற்கும் கிடுக்கிப்பிடி போட்டார் பைடன்.

பிடிபட்ட பகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை இரஷ்யாவால்? ஏன்? 300 கிமீ தொலைவிலிருந்தேவும் குறிதவறாமல் தாக்கி அழிக்கக் கூடிய HIMARS இரக பீரங்கிப் படைக்கலங்கள் உக்ரைன் வசம் ஜூலை மாதம் வந்து சேர்ந்தன. அவற்றின் துல்லியமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் எல்லாத் திசைகளிலிருந்தும் பின்வாங்கத் துவங்கின இரஷ்யப்படைகள். கடைசியாக, பிடிபட்ட ஒரே ஒரு மாகாணத் தலைநகரான கீர்சன் நகரமும் உக்ரைன் வசம் வந்து சேர்ந்திருக்கின்றது. அடுத்து?

குளிர்காலம் துவங்கி இருக்கின்றது. மின்சார, எரிபொருள் உற்பத்தி இடங்களைத் தாக்கி அழிப்பதன் மூலம் உக்ரைன் நாட்டைப் பணிய வைத்துவிட முடியுமென நம்புகின்றது இரஷ்யா. அதில் சற்று வெற்றியும் கிடைத்திருக்கின்றது. ஆனாலும் எதிர்கொண்டு மீள்வோமென்கின்றது உக்ரைன். இரஷ்யாவுக்கு இதுதான் கடைசி உத்தி. இதுவும் பயனளிக்காவிட்டால், அணு ஆயுதங்கள் அல்லது அணுமின் உலைகளைத் தாக்குவதன்வழி உக்ரைனுக்குச் சேதத்தை விளைவிப்பது என்பதாக இருக்கலாமென்கின்றனர் நோக்கர்கள்.

செமிகண்டக்ட்டர் சிப்புகளுக்கு வருவோம். எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இத்தகு சிப்புகள் அடிப்படை. அவற்றின் உயரிய தொழில்நுட்பம் அமெரிக்க வசம் மட்டுமே உள்ளது. அப்படியான தொழில்நுட்ப ஏற்றுமதிக்குத் தடை விதித்து விட்டார் பைடன். அந்நிய மண்ணில் அத்துறையில் வேலை செய்யும் அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பவும் ஆணை இடப்பட்டு விட்டது. அவர்கள் நாடு திரும்ப வேண்டும் அல்லது குடியுரிமையைக் கைவிட்டாக வேண்டும். சீனாவின் பொருளாதாரமே நிலைகுலையும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது. சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள், வியட்நாமுக்கும் தைவானுக்கும் சென்று கொண்டிருக்கின்றன. இத்தகு நகர்வுகள், தொடர்புடைய நாடுகளை மண்டியிட வைக்கும் அல்லது கொந்தளித்துப் போரில் ஈடுபட வைக்கும் என நினைக்கின்றனர் நோக்கர்கள். 

நேட்டோ நாடுகள் பெரும்போருக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் இடம் பெற்ற அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும் பைடனுக்கு ஏதுவாகவே அமைந்திருக்கின்றன. ஆகவே, சென்று ஆண்டு சொல்லப்பட்டதேதாம் இந்த ஆண்டும்: “தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2023!!

No comments: