10/30/2012

கனிக்குழைவு

சாவு நோக்கிச் செல்லும் பாதையில்
எதிர்கொள்கிற நீயும் நானும்
ஒருவருக்கொருவர் 
செலுத்திக் கொள்வதில்
தயக்கமென்ன வேண்டிக் கிடக்கு?
மனமாரச் சொல்கிறேன்
“வணக்கம்”!

=================

தமிழரை இணைக்கும் ஒரே சொல் “வணக்கம்”!
சொல்லப் பழகு! தன்னால் பின்னால் வரும் ”இணக்கம்”!!
வினா


ஏங்க? 
ஊர்லிருந்து எங்கம்மா வரும் போது 
உங்களுக்குன்னு 
எதும் எடுத்துட்டு வரச்சொல்லிச் சொல்ல வேண்டியது 
எதும் இல்லல்ல? 
இப்படியொரு வினா 
பிறந்திருக்கத்தான் வேண்டுமா??
வினவிப் பிறக்கிறது இவ்வினா
உங்கள் கழிவிரக்கம் 
தன்னை வாரி அணைக்குமெனும்
 எதிர்பார்ப்பு எதுவுமின்றி!!
10/29/2012

சுட்டு குட்டு

மகள், சில பல தமிழ்ப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாள். பரிசுகளும் பெற்றாள். அவள் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்த தருணத்தில், அய்யா பெரியவர் நல்லகண்ணு அவர்கள் அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்து இருந்ததைக் கண்ட நான், அவரிடம் வாழ்த்துகளைப் பெற்ற பின்னர் உள்ளே செல்லலாம் என மகளை வற்புறுத்தி இருந்தேன். அவளும் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவரது காலில் விழப் போக அவரோ நாணத்துடன் எழுந்து கொண்டார். எண்பத்து எட்டின் கைகள் எட்டின் கைகளைப் பற்றி வாழ்த்திக் குலுக்கியது. அத்தோடு நான் அதை மறந்து விட்டிருந்தேன்.

பிறிதொரு தருணத்தில் மேடையில் அல்லாடிக் கொண்டிருந்த போது தமிழ் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ”உங்கள் விருப்பத்திற்கு குழந்தையைக் கட்டாயப்படுத்தாதீர். அவர் என்ன கடவுளா? அவரும் நம்மைப் போல மனிதர்தானே?” என்றார். அதுவும் பலர் சூழ்ந்திருந்த நேரத்தில்! எனக்கும் குற்ற உணர்வு மேலிட்டது.

சில கணங்கள் கழித்து நான் விழா முன்றலுக்குச் செல்கிறேன், அங்கிருந்த திரைப்படக் கலைஞரைச் சுற்றிலும் மாபெரும் முட்டலும், நெரிசலும். மேற்கூறிய நண்பரும் அக்கூட்டத்தில் நின்று பிறவிப் பயனடையப் பெரிதும் முயன்று கொண்டிருந்தார். அந்த அவர் கூட இணையப் பெருவெளியின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு, தன் தத்துவ சிந்தாந்தங்களை உதிர்த்துக் கொண்டிருக்க, நம் நண்பரும் அவற்றைப் பின்தொடர்ந்து, உள்வாங்கி, முழுமை அடைந்து கொண்டு இருப்பாராயிருக்கும்!!

10/27/2012

நாயகன்


அக்கட்ட போயிருங்கடீ
கண்ணு வெச்சித் தொலச்சிருவீங்க
மத்தியானச் சோறுங்கறதுக்கு
வருவாரு அவரு!!

10/25/2012

மாற்றம், அது ஏமாற்றம்


இன்றைக்கு
உங்களுக்கான நண்பகல் உணவை
வெளியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள்!
கிட்டிய மகிழ்ச்சி மரித்துப் போனது
ஆமா, 
என்னோட தோழிகள்
வர்றாங்க இங்க 
மத்தியானச் சாப்பாட்டுக்கு!!

10/24/2012

ஊழ்வினை


கொலையும் செய்வாள் பத்தினி 
சொல்கிறான் கடுக்கன்காரன்! 
அவனப்படிச் சொன்னதிலிருந்தே 
பேதி வந்து பீதி பொங்கி 
குலை நடுங்குகிறது; 
வீட்டிற்குத் திரும்புவதா? 
வேண்டாமா??

10/23/2012

ஆயுதபூசை


இன்றெதோ பூசையாம்
தான் பாவித்த ஆயுதமான
சொல்லம்புகளைத்
தேடிக் கொண்டிருக்கிறாள்
நானில்லாத நேரம் பார்த்து!!

10/21/2012

ஆவியழகி


மெலிதாக எழுந்து
ஒய்யாரமாய்த்
தன் இடையை 
ஆட்டி ஆட்டி
வளைந்து
நெளிந்து 
நெகிழ்ந்து
ஆடுகையில்
திடீரென
இரண்டு சுற்று
மெதுவாய்த்
தன்னைத் தானே
சுற்றி வந்து
கண் சிமிட்டி
மென்மையாய்க் கிசுகிசுத்துச்
சிரித்துக் கொண்டிருந்தாளவள்!

என்ன தேமேன்னு
எதையோ பார்த்து
உக்காந்துட்டு?
வெரசாக் குடிச்சிட்டு
டம்ளரைக் குடுங்க
அரட்டி விரட்டிய
மனைவியின் குரலில்
காணமற் போனது
என் சரசம் மட்டுமல்ல
அந்த ஆவியழகியும்தான்!!

10/14/2012

காதலி

பட்டறிவின் வெளிப்பாடாக அமையும் படைப்புகள்; உணர்ந்த உணர்வின் வெளிப்பாடாக வரும் படைப்புகள்; சிந்தனையின் விளைவாய் வரும் படைப்புகள்; வாசிப்பின் விளைவாய் வரும் படைப்புகள் போன்றவற்றிற்கு இணையாக அமையப் பெறுவதுதான் உற்பத்தியாக்கப்பட்டு வரும் படைப்புகளும். இதோ, அவ்வரிசையில் ஒன்றைக் காண்போம்.

விட்டு விட்டு இடியிடித்ததில்
விடாமல் கொட்டியது
மழை!
தொட்டு தொட்டுப் பேசியதில்
தொடாமல் கிட்டியது
செருப்படி!
ஓங்கி ஓங்கி அடித்ததில்
ஓங்காமல் செத்தது
பாம்பு!
ஓடி ஓடி அடைத்ததில்
ஓடாமல் அடைபட்டது
முயல்!
சொல்லிச் சொல்லிப் பாடமடித்ததில்
சொல்லாமல் ஓடி வந்தாள்
காதலி!
தூங்கித் தூங்கி விழுந்ததில்
தூங்காமல் தவித்தான்
அண்மைக்காரன்!
பேசிப் பேசிக் குலவியதில்
பேசாமல் தந்து விட்டான்
முதலாளி!
என்ன யோசிக்கிறீர்கள்? இதன் நீட்சியாக நீங்களும் சில பல அடிகளைப் புனைந்து மகிழுங்கள்! :-))

கிழிசல்


நூலகத்திற்குச்
செல்லும் வழியில்
கோடைத் தாக்கத்தின்
பொருட்டு எழுகிறது
வினாவொன்று
ஏம்ப்பா
இந்த ரோடு
இப்பிடி
கிழிஞ்சி கிழிஞ்சி இருக்கூ?!10/13/2012

காற்றுப் பிரிகை

வெங்கலக்கடையில் யானை
அடுக்களையில் மனைவி
பாத்திரங்கள் கழுவியபடி!

உரிமைக்காய்ப் போராடும் போராளிகள்
உடுத்திருக்கும் உடுப்பு மாற்ற 
அடம் பிடிக்கும் குழந்தைகள்!

கூட்டாஞ்சோறு நிகழ்வில்
அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
யாருக்கோ காற்றுப் பிரிகை!

என்ன அத்தை, ஆச்சா?
அமெரிக்க விசாரணைக்கு அலறும்
ஆண்டிபட்டி மாமியார்!!

அமெரிக்க ஆணைக்குப் பணிந்தார்
அமிஞ்சிக்கரை நாட்டாமை
நேத்தே அனுப்பிட்டேன் மருமகளே!!
10/12/2012

அம்மாவுக்குக் கடிதம்!இலையுதிர் காலம்! வீட்டின் முன்புறம் இருக்கும் பழுப்பேறிக் கொண்டிருந்த மேப்பில் மரங்கள் தன் இலைகளைச் சாவகாசத்துடன் ஒவ்வொன்றாய் உதிர்த்துக் கொண்டிருந்தன. ஆறு மாதங்களாய்ப் பச்சையத்தை முழுவீச்சில் பூசிக்கொண்டிருந்த தரைப் புல்வெளி வெளிறத் துவங்கிருந்தது. பரணிலும் பெட்டியிலுமிருந்த குளிர்கால ஆடைகளுக்கு மறுபிரசவம் நெருங்கிக் கொண்டிருந்தது.
இப்படியான இந்நாளின் இத்தருணத்தில், அதே ஊரில் அமைந்திருக்கும் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமையகத்தில் பல நூறு மில்லியன்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கக் கூடும்.  கொல்லப்படப் போகும் பயங்கரவாதிக்கு  அங்கிருக்கும்  உளவு நிறுவனத்தில் வைத்து நாள் குறிக்கும் தருணமாகவும் இது இருக்கக் கூடும்.  இவையாவிலும் ஒன்றாகத்தான், சார்லட் பெருநகரத்தின் பேலன்ட்டைன் பகுதிலிருந்து  மடலொன்றும் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது இத்தருணத்தில். 
அன்புடன் அம்மாவுக்கு,
சுகாதாரத்தில் நான் மிகவும் நலமாய் இருப்பதாகவே உணருகிறேன். இன்று நான் உன்னைச் சந்திக்கிற வரையிலும் மனரீதியாகவும் நலமாய்த்தான் இருந்தேன். ஆனால் தற்போது அப்படி இல்லை. மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
நீயும் உன் கணவனுமாகச் சேர்ந்து கொண்டு என் பள்ளிக்கூட முன்றலுக்கு ஏன் வந்தீர்கள்? வந்ததோடு மட்டுமல்லாமல், ஏதேதோ பேசி நண்பர்கள் மத்தியில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள்.
எனக்கு நன்கு நினைவிருக்கிறது. இனிமையான கோடைகால விடுமுறை அது. ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதி விட்டு, பெருமைமிகு ராபின்சன் இடைநிலைப் பள்ளியில் அடுத்த ஆண்டு படிப்பினைத் தொடரப் போகிறேன் எனும் மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்ந்தோடிக் கொண்டிருந்தேன்.
என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத பருவம்; வீடெங்கும் தேடிப் பார்க்கிறேன்; அப்பாவைக் காணவில்லை. கூட்டத்தினின்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டி போல உணர்ந்தேன். வழிதவறி அல்லாடும் என்னைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு மேய்ப்பன் எவனும் வர மாட்டானா என ஏங்கிப் புழுங்கித் தவித்தேன். அடிமேல்தான் அடி விழும் என்பார்களே, அதைப் போலத்தான் எனக்கும்.
என்மீதான உன் கவனிப்பும் அருகிப் போனது. உனக்கு எல்லாமே ஸ்டீவ் என்றாகி விட்டது. நீயும் என்னைக் கவனிக்கவில்லை. அப்பாவையும் சந்திக்க விடவில்லை. நொறுங்கிப் போனேன் நான்.
அந்த ஏழு மாதங்களும் எனக்கு வெம்மையான மாதங்கள்தாம். அங்கே நீதிமன்றக் கதவுகளைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார் அப்பா. அதுவும் எனக்காக! போராட்டத்தின் முடிவில் வாரம் ஒருமுறை என்னையவர் பொது இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்றாகிப் போனது.
வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு மணி நேரமும் எனக்கு வசந்த காலம். இறைவனின் திருவுலகிற்கே அழைத்துச் செல்வார் அவர். அவர் சந்திக்குமந்த மெக்டொனால்ட்சு கடையோ, இசுடார் பாக்சு கடையோ, அது எனக்கு புனிதத் தலமானது. எனக்குப் பொன் தரவில்லை. பொருள் தரவில்லை. சந்திக்கும் போதெல்லாம் என் அப்பா எனக்கு ஊட்டியது நம்பிக்கையான சொற்களை மட்டுமே. அவைதான் இன்றளவும் என்னை இருத்திக் கொண்டுள்ளது.
பழைய கதை எதற்கு? நடப்புக்கு வருவோம்.பள்ளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி உன் வீட்டிற்கு வரவே மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது. உன் அழகிய மணாளன், அதான் அந்த ஸ்டீவ் என்னை அங்குல அங்குலமாய் கீழிருந்து மேலாய் வெறித்தும் உற்றும் பார்க்கிறான். தொட்டுப் பேசுகிறான். போதாக்குறைக்கு, வார ஈறின் போது அவனது நண்பர்களையும் அழைத்து வந்து கூத்தடிக்கிறான். நீயும் என்னை அவர்களுக்கு விருந்தோம்பச் சொல்கிறாய். அதுதான் முடிவாக நான் இங்கேயே வந்து விட்டேன்.
அதில் உனக்கு என்ன இடைஞ்சல்? எனக்கு இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லையென்பதற்காக என்னவெல்லாமோ செய்கிறாய். நான் இங்கு மிகவும் பாதுகாப்பாய் இருக்கிறேன். பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக, எஞ்சிய நேரத்தை என் படிப்புக்காக மட்டுமே செலவிடுகிறேன்.
கடந்த இலையுதிர்காலப் பருவத்தின் கடைசிக் கட்டத்தில்தான் இங்கு வந்தேன். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என் அறைக்குள் அவர் வந்தது கிடையாது. அதே வேளையில் என்னைக் கவனித்துக் கொள்வதனின்றும் அவர் தவறியது இல்லை.
காலையில் ஆறரை மணிக்கெல்லாம் கிளம்பி, சார்லட் நகர மையத்தில் இருக்கும் தன் அலுவலகத்திற்குச் சென்று விடுகிறார். மாலை ஏழு மணிக்கு வந்ததும் வீட்டு வேலைகளைச் செய்து விட்டு, உடற்பயிற்சிக்காக ஒரு மணி நேரம்; அவ்வளவுதான்! பிறகு ஒன்பது மணிக்கெல்லாம் தன் அறைக்குள் போய் விடுகிறார். காலையில் எனக்கான சிற்றுண்டியை அவரே செய்து வைத்து விட்டுப் போகிறார். இந்த எட்டு மாதங்களில் ஒரு தடவை கூட என்னையவர் கடிந்து கொண்டது கிடையாது.
ஒவ்வொரு நாள் காலையில் கிளம்பும் போதும் என் அறைக்கதவுக்கு வெளியே நின்று கொண்டு, காலையில் சாப்பிடுவதற்கு இன்னது செய்து வைத்திருக்கிறேன்; வெளியே தட்பவெட்பம் இப்படி இருக்கிறது; இன்று மழை வரும், குடை எடுத்துக் கொண்டு போ என்றெல்லாம் அக்கறையுடன் சொல்வார். குளிர்நாள் என்றால், அதற்கான ஆடை இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
மாலை நேர உணவு வேளையின் போது, அன்றைய நாள் எப்படி இருந்தது எனக் கேட்பார். நிறைய நூல்களையும், நூல்களில் குறிப்பிட்டுள்ள வாசகங்களையும் மேற்கோள் காண்பித்துப் பேசுவார். இப்படித்தானம்மா நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு.
நீ, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டாய் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதாய் நீ வழக்கெதுவும் பதிந்து விடாதே! இன்னும் இரண்டு மாதங்கள்தானே? எனது பதினெட்டாவது பிறந்த நாள் வந்து விடும். அதையும் பிரையனுடன் சேர்ந்து மகிழ்வோடு கொண்டாட விரும்புகிறேன். தயவு கூர்ந்து என் விருப்பத்தை நிறைவேற்று. ஸ்டீவுடன் சேர்ந்து கொண்டு இனிமேலும் என் பள்ளிக்கு வராதே! இறைஞ்சுகிறேன்!!
இதோ கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது அம்மா. அவர் வந்து விட்டார் போல தெரிகிறது மீண்டும் சந்திப்போம்.. இறைவனது அருள் உனக்கு உரித்தாகட்டும்!!
அன்பு மகள்,                                                                                 
டீனா

மாடத்தில் இருக்கும் தன் அறையிலிருந்து இறங்கிப் போனாள் டீனா. இரண்டு ரொட்டிகள், பழச்சீப்பு ஒன்று, மூன்று காலன் பாலுக்கான நெகிழிக்கலம் ஆகியனவற்றைச் சுமந்தபடி உள்ளே வந்து கொண்டிருந்தார் பிரையன். ஓடிப் போய், அவர் கையிலிருக்கும் பாலை வாங்கி, சமையலறையில் இருக்கும் குளிர்மிக்குள் வைத்தாள்.
“என்ன டீனா? ஒரு மாதிரி சோர்ந்து போயி இருக்கியே?! இன்னைக்கு பாடங்கள் எதும் அதிகமோ?”, கேட்டுவிட்டுத் தனக்கே உரிய சிரிப்பினை உதிர விட்டார் பிரையன்.
”ஸ்டீவும் அம்மாவும் பள்ளிக்கே வந்து மத்தவிங்க முன்னாடி அலப்பறை பண்ணிட்டாங்க அப்பா. அவமானமா இருக்கு!”, ஓவெனப் பெருங்குரலெடுத்து பிரையனின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
”ஏய், இதுக்கெல்லாம் இப்படி நீ உணர்ச்சிவசப்படலாமா? அடுத்த கோடைகாலத்துல நீ மருத்துவத்துறை மாணவி. அமெரிக்காவுக்கும், இந்த உலக மக்களுக்கும் நீ செய்ய வேண்டிய பணிகள் ஏராளமா இருக்கு. மருத்துவத் துறையில் நீ காலூன்றதுலதான் இருக்கு எல்லாமே! அதை நினைச்சுப் பாரு டீனா!”
இரு கைகளாலும் தன் இரு தோள்ப்பட்டைகளைப் பற்றித் தூக்கி நிறுத்தி அவர் குலுக்கியதிலும், பொலிவு மிகுந்த அவரது முகத்தின் ஒளிவீச்சிலும் புத்துணர்வு பெற்றாள் டீனா.
”இன்னைக்கு நான் உடற்பயிற்சிக்குப் போகலை. குளிச்சிட்டு வா சாப்பிடலாம். நல்லா, எதனா செய்து வைக்கிறேன்!”, கிளம்பி தன் அறைக்குப் போனார் பிரையன்.
சிறு ஓய்வுக்குப் பின்னர், கலைந்து கிடந்த தன் பாடப்புத்தகங்களை நேர்த்தியாகத் தன் மேசையின் மீது அடுக்கிக் கொண்டிருக்கிறாள் டீனா.  அஞ்சல் செய்வதற்கும், செய்யாமல் கசக்கித் தூக்கி எறியப்படுவதற்குமான இடைவெளியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது மேசையின் மறுகோடியிலிருக்கும் அம்மாவுக்கு எழுதிய அந்தக் கடிதம்!

நன்றி: வல்லமை வெளியீடு

10/11/2012

வெட்டிப் பேச்சு

”போகிற போக்கில் எதையாவது எழுதிவிட்டுப் போகிறாய். நீயும் ஒரு கவிஞன்தான்!” என்று கூட்டத்திலிருந்த ஒருவன் சொல்லியதிலிருந்து நகரத் துவங்கியது இந்த வெட்டிப் பேச்சு.

“நான் எழுதுவது கவிதை என நான் நினைக்கவில்லை. ஆனாலும் கவிதை எனச் சொல்லிக் கொள்கிறேன் என்பதே உண்மை. வேண்டுமானால் துளியெழுத்து என வைத்துக் கொள்ளலாம்!” என்றேன் மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு.

கவிஞன் எனக்கூறி, போட்டு வாங்கும் வேலையாகக் கூட அது இருக்கலாம் அல்லவா? வாளாது இருந்து விட்டால், இதுவெல்லாம் கவிதையா எனக் கேட்டு முகத்தில் உமிழக் கூடும். ஆப்பசைத்த குரங்குக் கதை ஆகிவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கைதான் நமக்கு! இந்த குரங்குக் கதையை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு எங்களுக்குள் நடந்த வெட்டிப்பேச்சினைத் தொடருமய்யா நீர்!

”ஓ, அப்படியா? அதென்ன துளியெழுத்து?”

”அளவில் சிறியதாய், தொடர்ந்து எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதுதான்!”, எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது இவர்களை.

“அப்படிச் சொல்வதற்கும் ஏதோவொரு நுட்பம் தேவைப்படுகிறது. அதெப்படி?”

ஒருசிறு மணித்துளி பேச்சில் இடைவெளி விட்டேன். எல்லாம் ஒரு காரண காரியமாய்த்தான். நினைத்தபடியே நடந்தது அதுவும். கூட்டத்தில் இருந்த மற்றொருவனும் வெட்டிப் பேச்சின் வடத்தைப் பிடித்து இழுக்கலானான்.

“ஆமாம். அதற்கெல்லாம் ஒரு நுண்மெல்லுணர்வு இருந்தாக வேண்டும். அல்லாவிடில் கைகூடி வராது!”, வாகாய்த்தான் இழுக்கத் தலைப்பட்டான் இவனும்.

“அதென்ன நுண்மெல்லுணர்வு?”, பதிலுக்குக் கேள்வி கேட்டே தேரை ஊர்கோலம் போக விடுகிறான் இவன்.

“கண்ட காட்சியை, உணர்ந்த உணர்வை, நினைத்த நினைப்பை, செவியில் மடுத்ததை என எதையும் நுண்ணியமாகவும் மென்மையாகவும் உள்வாங்கிக் கொண்டு செம்மையாக வெளிப்படுத்த வேண்டும். அப்படியான ஒன்றுதான் வாசிப்பின் போது இன்பத்தை உண்டாக்க வல்லது!”, என்னமாய் வடம் பிடிக்கிறான் இவன். மெய்சிலிர்த்தது நமக்கு.

“எடுத்துக்காட்டாய் ஒன்று சொல்லுங்களேன் பார்ப்போம்!”, கூட்டத்தில் இருந்த மற்றொருவனும் வடத்தைப் பட்டும்படாமலும் பிடிக்கத் துவங்கியிருந்தான்.

“இந்த சாளரத்தின் வழியாய்ப் பார்த்துச் சொல்லுங்கள். என்ன காண்கிறீர்கள்?”, வெட்டிப்பேச்சுத் தேர் அதற்கே உரிய குலுங்கலுடன் முன்னேறுகிறது.

“அப்படி ஒன்னும் வித்தியாசமாக ஒன்றுமே தெரியவில்லையே?”, என அவன் சொல்ல தேர் ஓரிடத்திலேயே சற்று நிலை கொண்டது.

“எங்கே நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள்?”, தேர்க்காலுக்கு அடியில் பலகையொன்று இடப்பட்டு வடம் இழுக்கப்படுகிறது.

“ம்ம்… ஒரு மேப்பிள் மரம் தெரிகிறது!”, பள்ளத்தில் சிக்குண்ட தேர் அதிலிருந்து மீளத்துவங்கியது.

“எங்கே நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள்?”, வடம் பிடிக்க மற்றொருவனும் இழுத்து வரப்பட்டான்.

“ம்.. காற்று வலுவாய் வீசுவது தெரிகிறது!”, தேரின் நகர்வில் வேகம் சற்றுக் கூடியது என்றே சொல்லலாம்.

“நீங்களும் வாருங்கள். பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!”, ஊர் கூடி இழுத்தால்தான் அது தேர், எஞ்சியவனுக்கும் பிறந்தது ஆணை.

“காற்றுப் பாணன்
இசை வீச
கிளை விரித்து
இலை சிலிர்த்து
நர்த்தனம்
ஆடுகிறான்
மேப்பிள் மரக்கூத்தன்!” என்று இவன் மறுமொழியதேரோடும் வீதியின் பரிவேடத்தில் முக்கிய இடத்தினைக் கடந்தது வெட்டிப் பேச்சு அட்டகாசமாய்.

“ஆகா. இதுதான் நான் குறிப்பிட்ட அந்த நுட்பம். வீசும் காற்றின் வலிமை, ஆடும் மரத்தின் தோற்றம் முதலானவற்றை நுண் புலத்தோடு சொன்னார் பார்த்தீர்களா?”, என்றான் தேரின் வழிகோலன்.

தேர் போய் நிலை கொண்டதோ இல்லையோ தெரியாது. தேரின் முன் யாரோ உடைத்த தேங்காயின் ஒரு சில்லைத் தானுண்ட உணர்வு மேலிட்டது கவிஞன் எனக் குறிப்பிட்டவனுக்கு.

அது பொறுக்காத ஒருவன் நேரம் பார்த்துக் கேட்டான், “ஆமாம். அதென்ன ஆப்பசைத்த குரங்கின் கதை. இப்போது சொல்லுங்கள்!”, எஞ்சிய தொலைவையும் உருண்டு கடக்கிறது தேர்.

“கோவில் முன்பு சில தச்சர்கள் கோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்களாம். மதிய உணவுக்கான நேரம் வந்து விடவே அவர்கள் உணவு உண்டு வர ஊருக்குள் சென்று விட்டார்கள். அந்நேரம் பார்த்து அருகிலிருக்கும் மரத்திலிருந்த குரங்கொன்று போய், அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மரவேலைப்பாட்டிற்கிடையே இருந்த ஆப்பு ஒன்றை உருவிக் கையிலெடுக்கத் தலைப்பட்டதாம். அப்போது வேலைப்பாட்டின் இடையே இருந்த இடைவெளியில் தன் வால் இருப்பதை உணராத குரங்கு ஆப்பினை அசைத்துக் கையிலெடுக்க, வால் சிக்குண்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டதாம் அந்தக் குரங்கு. இதுதான் கதை!”.

இனிமேலும் கேள்வி கேட்டு நீங்கள் ஆப்பசைத்த குரங்கு ஆகப் போகிறீர்களா என்ன? எனக்கு அந்த யோசனை இல்லை. இப்படியாகத் தன் நிலைக்கு வந்து சேர்ந்தது வெட்டிப் பேச்சு.

10/10/2012

மெளன வேள்வி


யாரோடும்
பேசுவதில்லையென்ற
மெளன வேள்வியுடன்

மல்லாந்திருந்த வேளையில்
மெல்லொலியொன்று
என்னங்க....
கோவமா?!
வீடெங்கும்
மேனகைகள்!
ஊரெங்கும்
விசுவாமித்திரர்கள்!!இருள்


இராத்திரி ஆயிடிச்சாப்பா??
சரி
நாங்க தூங்குறோம்
நீங்க ஏன்
திரைச்சீலைய மூடியே
வெச்சிருக்கீங்க
திறந்து வையுங்க
அப்பத்தான்
இருட்டு உள்ள வரும்!!10/06/2012

இருக்கை

தாத்தா சொன்னார்
தன் காலத்திற்கும்
தனக்கு
வேண்டுமிது!

அப்பா சொல்லி விட்டார்
தன் காலத்திற்கும்
இது
இருக்க வேண்டும்!!

நானும் சொல்லி இருக்கிறேன்
என் காலத்திற்கு
எனக்கு வேண்டும்
இது!!


ஆத்தா

தூக்குப்போசி
சும்மாடு
சோத்துக்கூடை
கழுத்தட்டிகை
என்றா 
சின்னவனே
இதெல்லாத்தையும்
என்ற
காலத்துலயே
காமிச்சிப்போடு
உன்ற 
புள்ளைகளுக்கு!!

10/05/2012

பணிதல்

சும்மா... 
அப்பா அப்பான்ட்டு
மனுசன் 
வேலையா இருக்கன்ல?!
போயிரு அந்தப்பக்கம்!
எதையும்
குத்திக்கிழிக்கும்
கூரிய பார்வையுடன்
திரும்பினேன்
திறபட்ட கதவு நோக்கி
நின்றிருந்தாள்
முறிக்கும் கண்களும்
காப்பிக் கோப்பையுமாக
அவளது அம்மா!!

10/04/2012

அம்மணி

தலைக்கோழி கூப்பிட்ட சித்த நேரத்துக்கெல்லாம் பழநி போகும் அஞ்சு மணி ரயில் கூகூவென சங்கூதியபடி, அக்கம்பக்கத்து கிராமங்களை எழுப்பிக் கொண்டே போனது. இயற்கை வளம் வாசு அய்யா வீட்டிலிருந்து கேட்கிறது உலக்கை போடும் சத்தம். இந்த நவீன காலத்திலும் கைக்குத்தல் அரிசிதான் வாசு அய்யா வீட்டில். ஒவ்வொரு வீட்டுப் புறக்கொல்லையிலும் ஏதாகிலும் வீட்டுவளர்ப்புச் செடிகள் பயிரிட வேண்டுமென்பதைச் செயல்படுத்துவதில் ஊரே அவருக்கு ஒத்தாசை செய்கிறது.

கிழபுறத் தாழ்வாரத்தின் கீழ் எல்லுசாமி இன்னும் படுத்திருக்க, அம்மணி எழுந்து போய் விட்டிருந்தாள். அவள் இந்நேரம் கொல்லையிலிருக்கும் மாடுகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கலாம்; கட்டுத்தறியைத் துப்புரவாக்கிய கையோடு, சாணம் கரைத்து சாணவாயுத் தொட்டியில் ஊற்றிக் கொண்டுமிருக்கலாம். விலகியிருந்த சத்திரப்பட்டி துப்பட்டியை நன்கு போர்த்தியபடி புரண்டு ஒருக்களித்துப் படுத்தார் எல்லுசாமி. வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது.

மாடு கன்னுகளுக்குத் தீவனம் போட வேண்டுமென்றால், கொல்லைக்குப் போய் வெளியில் நறுக்கி வைத்திருக்கும் தட்டுக் கத்தைகளைக் கொஞ்சம் அள்ளிப் போட வேண்டும். இதெல்லாம் எதுவும் எல்லுசாமி செய்ய மாட்டார். தட்டுப்போரிலிருந்து நான்கு கத்தைகளை உருவி, ஒவ்வொன்றையும் மூன்றாகக் கத்தரித்து மூலையில் அடுக்கி வைப்பதோடு முடிந்தது அவரது வேலை. இராத்திரிக்கு ரெண்டு தரம் எழுந்து தீவனம் போடுவது என்னவோ அம்மணிதான்!

ரெண்டாங்கோழி கூப்பிட்டு வெகுநேரமாயிற்று. தமயந்தியம்மா வீட்டுக்குப் பால் கறக்க வரும் பால்காரன் சைக்கிள் மணியடித்துக் கொண்டு போகிறான். இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் அம்மணி வந்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவாள். ‘விருக்’கென்று எழுந்து பால்கும்பாவோடு பால் கறக்கப் போனார் எல்லுசாமி.

தவுட்டுத் தொட்டியிலிருக்கும் எஞ்சிய புழுதண்ணியை இறைத்துக் கீழே கொட்டிய பிறகு, ரெண்டு குடம் தண்ணீரைத் தவுட்டுத் தொட்டியில் ஊற்றினாள் அம்மணி. அதனுள் சாமைத் தவிட்டோடு எள்ளுப் புண்ணாக்கு கொஞ்சமும் போட்டுக் கரைத்து விட்டு, கறந்த பாலை எடுத்துக் கொண்டு சமையற்க் கொட்டத்திற்குப் போனாள். எல்லுசாமியும் பின்னாடியே போய் அடுப்படியின் அருகே உட்கார்ந்து கொண்டார். அடுப்புச்சூட்டின் கதகதப்பு இதமாக இருந்தது. பால்கும்பாவை அப்படியே பெரிய அடுப்பில் வைத்து விறகு தள்ளியபின், பால் இருந்த சுண்டாச்சட்டியை கண்ணடுப்பில் இருக்கும் காப்பிச்சட்டியின் மேல் வைத்தாள். ஓரிரு மணித்துளிகளில் கண்ணடுப்புப்பால் சட்டிக்குள்ளேயே பொங்கிக் கொதித்தது.

கண்ணடுப்புக் காப்பியுடன் சற்றுப் பாலையும் சீனியையும் கலந்து ஆத்தி நல்ல பெரிய லோட்டா ஒன்றில் ஊற்றிக் கொடுத்தாள். குத்திட்டு உட்கார்ந்திருந்த எல்லுசாமி காப்பியை அனுபவித்துக் குடித்தார். ஒவ்வொரு வாய் குடித்துக் கொண்டே அதை எடுப்பதும் இதை எடுப்பதுமாக இருந்தாள் அம்மணி. ஏரித்தோட்டத்து மராமத்து வேலைகளைப் பற்றிச் சொல்லி, என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அம்மணியிடம் யோசனை கேட்டார் எல்லுசாமி.

கொட்டாவி விட்டபடியே உள்கொட்டத்திலிருந்து எழுந்து வந்தான் பெரியவன் துரைசாமி. “அம்மா காப்பி ஆச்சா?!” “பெரிய தங்கம்! ஊர் சோலியெதுக்கும் போகாம நாலு வண்டி மண்ணாச்சும் இன்னிக்கு அடிச்சிப் போடோணும். வேசை இருக்குறப்பவே இந்த குப்பை மேட்டு மண்ணு முச்சூடும் தோட்டத்துக்குக் கடத்திப் போடோணுஞ் சரியா கண்ணூ?”

 “சரிம்மா! எத்தினிவாட்டிதான் இதையே சொல்லுவ? கொண்டா காப்பிய!”

 தோளில் இருந்த துண்டையெடுத்து உதறிய பின், தலைக்கு உருமாலையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினார் எல்லுசாமி. தூக்குப் போசியில் முதல் நாள் சோத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து, அதையே தோட்டத்து நாய் பேச்சிக்குக் கொடுத்தனுப்பினாள் அம்மணி. 

 அடுப்படியில் விறகு தள்ளிவிட்டுக் கொண்டிருந்தவள், வேகமாகத் தண்ணிக் கொட்டத்துக்குப் போனாள். அங்கிருந்த தண்ணியடுப்பில் தென்னை மட்டை ரெண்டினை வைத்துப் பற்ற வைத்தாள். பெரியவன் குளிக்காமல் சாப்பிடமாட்டான். பெரியடுப்பில் உலை காய்ந்து விட்டிருந்தது. கழுவி அரித்த அரிசியை உலையில் போட்டு, அதன் மேல் தட்டத்தை வைத்து மூடினாள். கண்ணடுப்பில் இன்னும் காப்பிச்சட்டி சுண்டிக் கொண்டிருந்தது. பருப்புச்சட்டியைக் கண்ணடுப்பில் வைத்து, அதற்கு மேல் காப்பிச்சட்டியை இடம் மாற்றிக் கொண்டாள்.

 “நேராப் போயி ஒரு வண்டி மண்ணடிச்சுட்டு வந்துரு. அதுக்குள்ள சோறாக்கி, தெவரைப் பருப்பு கடைஞ்சி கத்தரிக்காக் குழம்பும் செய்து போடுறன் நானு!”

 “செரீம்மா”, கிளம்பிப் போனான் பெரிய மகன் துரைசாமி. 

போடிபட்டியில் இருக்கும் தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போன சின்னவன் மணியன் இன்னைக்காவது வருவானா மாட்டானா? யோசித்துக் கொண்டே தயிர் மொடாவைச் சிலுப்பு கொக்கிகளுக்குக் கீழே வைத்தாள் அம்மணி. 

 கழுவிக் கொண்டு வந்த ஆளுயர தயிர்மத்தினை மொடாவில் நிறுத்தி, மேல்க்கொக்கிக்கும் கீழ்க்கொக்கிக்கும் உண்டான பனம்பட்டைகளைப் பூட்டினாள். பட்டைகளுக்கு இடையில் நின்று சுழலத் தயாரானது மத்துக்கோல். மத்துக்கோலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த கயிறினை அவிழ்த்து முன்னும் பின்னுமாக மத்தினை இழுத்தாடியபடி தயிர் சிலுப்பினாள். இடையிடையே அடுப்படியில் நடந்து கொண்டிருந்த சமையல் வேலைகளும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. 

 வெண்ணெய் திரண்டு மிதக்கத் துவங்கியது. மத்துக்கீற்றிலும் நிறைய வெண்ணெய் திரண்டு அப்பிக்கொண்டிருந்தது. வெண்ணெய் திரண்டிருந்த மொடாவிலும், மத்துக் கீற்றிலும் இருந்த வெண்ணெய் முழுவதையும் ஒன்று திரட்டிப் பெரிய உருண்டையாக்கினாள். திருப்பதி இலட்டு அளவுக்குத் திரண்டு இருந்தது. மோர் வித்த காசும், வெண்ணெய் வித்த காசும் போதும் அவளுக்கு, வீட்டு செலவுகளைச் சரிக்கட்ட. 

 பாத்திரங்கழுவுதல், மோர் சிலுப்புதல், பண்டங்கன்னுக்கு தீவனம் போடுதல், கொல்லையில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், பால் மோர் கேட்டு வருபவர்களுக்கு ஊற்றிக் காசு வாங்குதல், துணி துவைத்தல், சில்வானங்கேட்டு வந்தவர்களுக்கு நோட்டு முறித்துக் கொடுத்தல், குறியாப்புக் கேட்டு வந்தவர்களிடம் குறியீடாக ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு மற்றொன்றைக் கொடுத்தல் என பதினாறு கவனக வேலையாகப் பலதையும் ஒரே நேரத்தில் செய்து, காலைநேரப் பணிகளை முடித்தாள் அம்மணி. 

 பெரியவன் துரைசாமி முதல் வண்டி மண்ணடித்து விட்டு வந்திருந்தான். 

“கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து உக்காரு கண்ணு!”, அவனுக்கு வட்டல் வைத்து சோத்தைப் போட்டுவிட்டு, கூடையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள். 

 ”செரி கண்ணூ. நான் பொடக்காளிக்குப் போயி பண்டங்கன்னுக்குத் தண்ணி காமிச்சிர்றேன். அப்படியே தோட்டத்துக்குப் போயி அப்பங்கூடவே உக்காந்து சோறுண்டுக்குறேன். நீ ஊட்டைப் பூட்டி தொறப்புக்குச்சியை எறவாரத்து மேப்படி மேல வெச்சிட்டு, மாடு கன்னுகளையும் ஓட்டிட்டு வந்துரு! செரியா?”

 லட்சுமாபுரத்திலிருந்து குண்டலப்பட்டி எல்லையில் இருக்கும் ஏரித்தோட்டத்துக்கு ஒன்னரை மைல் தூரம். அந்த ஒன்பது ஏக்கர் ஏரித்தோட்டம்தான் எல்லுசாமி அம்மணி தம்பதியினருக்குக் கிடைத்த பூர்வீகச் சொத்து. 

 சும்மாட்டுத் தலையில் இருந்த கூடையில் காலைச்சோறு, மத்தியானச் சோறு எல்லாமும் இருந்தது. வலது கை கூடையைப் பிடித்திருக்க, இடது கையில் காப்பி இருந்த திருகணிச் சொம்பினைத் தொங்கவிட்டபடி புறப்பட்டுப் போனாள். ஊர் எல்லை தாண்டும் வரையிலும், மாறி மாறி யாராவது ஒருவர் எதிரில் வந்து கொண்டே இருந்தனர். அவர்களிடம் ஞாயம் பேசுவதும் நலம் விசாரிப்பதுமாகப் பேசிக்கொண்டே தன் வழியில் போய்க் கொண்டிருந்தாள்.

 தோட்டத்து இட்டேரிக்கு இவள் போனதுமே தோட்டத்து நாய் பேச்சி ஓடோடி வந்து இவளை முகர்ந்து பார்த்து நக்கியபடியே வளைய வந்தது.

 “அடியே பேச்சி, சும்மா போ! எதோ காணாதவளைக் கண்டவளாட்ட? என்ன நீயி?! உங்க அப்பன் உனக்கு சோறு ஊத்துனாரா, ஊத்தாமயே உட்டுட்டாரா? செரி வா, சாளைக்கு வந்ததும் நான் ஊத்தறேன்!”, வாஞ்சையாகத் தன் மகளைச் செல்லம் கொண்டாடினாள். 

அம்மணி வருவதைக் கவனித்த எல்லுசாமி கிணற்றடியில் இருந்து வேப்பங்குச்சிப் பல்துலக்கோடு சாளையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

 சாளைத் திண்ணையில் கூடையையும், திருகணிச்சொம்பினை சாளைக்குள் இருந்த மரப்பொட்டி ஒன்றின் மேலுமாகத் தன் சுமையை இறக்கி வைத்தாள்.

 “டே பேச்சி, வாடா கண்ணு!! கூழ் குடிப்பியாமா!!” எறவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தூக்குப் போசியில் இருந்த கூழை பேச்சியின் தட்டில் ஊற்றிவிட்டு, தண்ணித்தொட்டிக்குப் போய் தூக்குப் போசியைக் கழுவினாள். அது நிரம்ப தண்ணீர் கொண்டு வந்து எல்லுசாமியின் அருகே வைத்தாள். ஏற்கனவே கூடையை எல்லுசாமி இறக்கி வைத்திருந்தார். அதில் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, காலை வேளைச் சாப்பாடு ஆனது. 

 உண்ட மசமசப்பு தீரக் கையில் பீடியோடு உலாத்தப் போனார் எல்லுசாமி. தான் கொண்டு வந்திருந்த கொத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு, பருத்திக்காடு களையெடுக்கப் போனவள் மத்தியானம் ரெண்டுமணி நெகமத்து வண்டியின் சத்தம் கேட்டுத்தான் சாளைக்குத் திரும்பினாள். களையெடுப்பதில் மற்றவரை விட எப்போதும் ரெண்டு மூணு பாத்தி முன்னாடிதான் இருப்பாள். ஒரு களை தப்பாது; பயிருக்கும் சேதாரம் ஆகாது. பண்ணையத்து வேலைகளில் அம்மணியோடு போட்டியிடுவதற்கு சிஞ்சுவாடி கிராமத்தில் இருப்பவர் எவரும் யோசிக்கவே செய்வர். 

 சொல்லி வைத்தாற்போல பெரியவன் துரைசாமியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து கொண்டான். எல்லுசாமி மேவரத்துக்குழியில் இருந்த பட்டுப் போன மரமொன்றை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்.

 “ஏனுங்! உங்களைத்தானுங்.. வாங்க. உச்சி மேக்க சாஞ்சு வெகுநேரமாயிருச்சு பாருங்க. வாங்க, வந்து சோறுண்ட்டு பார்ப்பீங்களாமா!!”, தண்ணித்தொட்டி மேல் ஏறி நின்று குரல் கொடுத்தாள். 

 அருகே இருந்த வாழை மரத்தில் மூன்று கீற்று இலையைக் கொய்துவந்து, கடை பரப்பிச் சோறு பரிமாறினாள். தன் வாலைக் குழைத்தபடி பேச்சியும் அருகில் வந்து நின்று கொண்டது. அம்மணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது அது. அதற்கும் வட்டல் கொண்டுவரப்பட்டு சோறு போடப்பட்டது. ஊர் நாயத்தோடு பண்ணையத்து நடப்பு வேலைகள் குறித்தும் பேசியபடி மத்தியான வேளை உண்டியை முடித்துக் கொண்டனர். 

 உண்ட மயக்கம் தொண்டனுக்கும்! இட்டேரியிலிருக்கும் பூவரச மரத்தின்கீழ் இருக்கும் வண்டியின் மீது ஏறிப்படுத்துக் கொண்டார் எல்லுசாமி. ஆனைமலைக் காற்று சில்லென்று அடிக்க, தென்னை மரத்தோப்பிலிருந்து செம்போத்தும் குயிலும் அதனதன் சுதியில் பாடிக் கொண்டிருந்தன. பெரியவன் பக்கத்துச் சாளையில் இருக்கும் சோடிக்காரப் பையன் தங்கவேலுவிடம் போனான். சோத்துப் போசியை கழுவிக் கமுத்திவிட்டு, சாளை முழுவதையும் கூட்டிப் பெருக்கினாள் அம்மணி. 

 தெற்கே எரிசனம்பட்டி வரை போய்த் திரும்பிய நெகமத்து வண்டி, வடதிசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அதைக்கவனித்த அம்மணி, “ஏனுங், நாம்போயி மிச்சமிருக்குற கொஞ்சநஞ்ச பாத்திகளையும் செதுக்கிட்டு வந்துர்றேன்”. மறுபேச்சுக்குக் காத்திராமல் பருத்திக்காட்டுப் போய்த் தன் வேலையைத் தொடர்ந்தாள். 

 குண்டலப்பட்டியில் யாருக்கோ தெரட்டிச்சீர் போலிருக்கிறது. பாட்டுப்பொட்டி கொண்டு வந்து பாட்டெல்லாம் போட்டிருந்தார்கள். அதையும் மீறி எதோ சிலுசிலுவென்ற சத்தம் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தால் கஞ்சம்பட்டி மூலையிலிருந்து படைக்குருவிகள் ரெண்டு படைகளாக ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தன. படை ஒன்றுக்கு ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் குருவிகள் வரை கூட இருக்குமாம். பெரிய நாவற்பழம் போன்ற வடிவில் ஒரு படையும், ஆலிலை வடிவில் ஒரு படையும் தோற்றமளித்தது. இலாகவமாய் ஒரு சேர வளைந்து நெளிந்து பறக்கும் படைக்குருவிகளின் சாகசக் காட்சியைச் சொக்குண்டு பார்த்துச் சிரித்தாள் அம்மணி. 

 பெரியவன் மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறான். எப்போதும் நாலு வண்டி மண்ணடிப்பவன் இன்றைக்கு ஆறாவது நடை போய்க் கொண்டிருந்தான்.

 “செரி நீ கிளம்பு! பொழுது வுழுகுறதுக்கு முன்னாலயே ஊடு போய்ச்சேரு. சின்னவன் மேக்க இருந்து வந்தாலும் வருவான்!!” 

 ஊரெல்லாம் நிழல் படர்ந்திருந்தது. நேராக புறக்கொல்லைக்குப் போய், எல்லாம் இருந்தது இருந்தபடி இருக்கிறதா எனச்சரி பார்த்ததும் அவளுக்கு மனம் நிறைந்தது. தண்ணித்தொட்டியில் இருந்து தண்ணீர் மொண்டு, கை கால் முகம் கழுவித் தன் முந்தானையாலேயே துடைத்துக் கொண்டாள்.

 அவ்வளவுதான், வீட்டுக்கு வந்தாயிற்று! பத்துப் பதினாறு கவனத்துடன் பல வேலைகளை ஒருசேர ஒருங்கே பார்க்கத் துவங்கினாள். துணிகளை அலசிப் போட்டாள். நல்லதண்ணிக் கிணத்துக்கு ஒரு நடை போய் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமாக இரண்டு குடந்தண்ணி கொண்டு வரப்பட்டது. கரியூட்டுச் சேந்து கிணத்திலிருந்து நாற்பது குடம் சப்பைத் தண்ணி கொண்டு வரப்பட்டு பண்டங்கன்னுகளுக்கெல்லாம் தண்ணி காண்பிக்கப்பட்டது. வீடெல்லாம் பெருக்கித் துப்புரவு செய்யப்பட்டது. 

 முதலில் அம்மணி குளித்து முடித்தாள். அதே கையோடு வாசல் தெளிக்கப்பட்டு வீட்டில் விளக்கேற்றப்பட்டது. தோட்டத்தில் இருந்து வந்த எல்லுசாமியும் பெரியவனும் குளிக்கப் போகுமுன்னர், ஒருவர் பால் கறந்து கொடுக்க மற்றவர் வைக்கோற் போரிலிருந்து வக்கிப்புல் அரிந்து வந்தார்கள். கறந்த பாலில் மணக்க மணக்க காப்பி தரப்பட்டது. அம்மணியும் ஒரு லோட்டா குடித்துக் கொண்டாள். 

 விநாயகங்கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்ப்பெரியவர்களும் எல்லுசாமியும் ஊர்ப்பழமை பேசிக் கொண்டிருந்தனர். பெரியவன் அவஞ்சோட்டுப் பையன்களோடு தலைவாசலில் நின்றுகொண்டு, கரட்டுமடம் சுகந்தி கொட்டாயில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். 

 அரிசிபருப்புக் கூட்டாஞ்சோறு ஆக்கி ’பயித்தம்பயிறு அடை’யும் சுட்டு வைத்திருக்க, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். திண்ணையில் மற்றவர்களோடு என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை எல்லுசாமி சொல்லச் சொல்ல, அம்மணியும் கிணத்தடியில் தான் அறிய நேர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டாள். பேச்சு நெடுகிலும், பெரியவன் தன் அம்மாவைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான். 

 சாப்பாட்டு வேளை முடிந்ததும், எல்லுசாமி புறக்கொல்லைக்குப் போனார் பீடி இழுக்க. பழுதான மருந்துத் தெளிப்பானை நோண்டிக் கொண்டிருந்தான் பெரியவன் துரைசாமி. 

 காற்று பதமாய் வீசியது. மதுரைவீரன் கோயில் பாட்டுச் சத்தம் விட்டுக் விட்டுக் கேட்டது. நான்கு வீடு தள்ளி இருக்கும் சுசீலா டீச்சர் வீட்டில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. யாரோ அவர்களுடைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. காரவாசலில் உட்கார்ந்து, அம்மணியும் பக்கத்து வீட்டு ருக்மணியும் புளியம்பழம் தட்டிக் கொட்டைகளைத் தனியாகவும் புளியைத்தனியாகவும் பிரித்தெடுத்துக் கொண்டே ஊர் ஞாயம் பேசிக் கொண்டிருந்தனர். 

 முதலில் எல்லுசாமி வந்து படுக்கையைப் போட்டார். சித்த நேரத்திலெல்லாம் பெரியவன் போய்ப் படுத்துக் கொண்டான். ருக்மணி அக்காவை அனுப்பி வைத்த கையோடு, பண்டங்கன்னுக்கெல்லாம் தீவனம் போட்டு வந்தாள் அம்மணி. முன்வாசக்கதவு, பின்வாசக்கதவு எல்லாம் நாதாங்கி பூட்டப்பட்டு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டாள். 

 கீழ்த்தாழ்வாரத்தில் எல்லுசாமி கட்டிலில் படுத்திருக்க, அதனருகே தரையில் பாயை விரித்து தலையணை இடப்பட்டது. கம்மாளபட்டி போர்வை ஒன்றும் தலையணை மேல் கிடத்தப்பட்டது. 

 பித்தளைச் சொம்பு நிறையத் தண்ணீரும் அதை மூடிய வாக்கில் டம்ளர் ஒன்றுமாகக் குடிதண்ணீரைக் கட்டிலின் கீழ் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டாளவள். 

 தூங்குவதாய் இருந்தாலும் அது ஒரு வேலையாக இருக்க வேண்டும். அல்லாவிடில் அம்மணிக்குத் தூக்கம் வராது. மின்விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு, ஒளிரும் குறுஞ்சிமினி விளக்கொன்றைத் தலைமாட்டில் வைத்துப் படுத்துக் கொண்டாள். 

 முதலாவது வேலையாகப் பெரியவன் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை பதினெட்டு ஏக்கராக்கப் போகிறான் எனும் யோசனை; அடுத்து, சின்னவனை எப்படிப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமென்கிற யோசனை; குடிக்கத் தண்ணீர் கேட்பது போன்ற உதவிகளைத் தன் மணவாளன் கேட்டால் உடனே அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆவல்; புறக்கொல்லையில் மாடு கன்றுகள் இருக்குமிடத்திலிருந்து ஏதாவது சலசலப்புக் கேட்டால், உடனே போய் எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கையுணர்வு. இப்படியான பலவற்றுடன்தான் இரவு கழியப் போகிறது அவளுக்கு. 

தூக்கத்தில் திடீரென எதையோ நினைத்துத் தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்டாள். சிரிப்பொலி கேட்ட எல்லுசாமி தன் தலையைச் சற்றுத் தூக்கித் தன்னருகே தரையில் படுத்திருக்கும் அம்மணியை ஏறிட, இன்று பூத்த பூப்போலக் கொள்ளை அழகாய் இருந்தாள் அவள்!

நன்றி: வல்லமை

இரங்கல்

பிம்பம் காண்பித்துச்
சிரிக்க வைத்த
சற்று நேரத்திற்கெல்லாம்
உடைந்து சிதறி
மரணம் எய்திய
அந்த கடைசி
நீர்க்குமிழிக்குத்
தெரிந்திருக்க
நியாயமில்லை
தன் சாவுக்கும்
அழ ஆள்
இருக்கிறதென்று!!


10/01/2012

விடுதலை

சிற்றூர் பந்தம்
அறுபட்டு
நகரக் கொட்டடியில்
துள்ளுபவனுக்கு
நினைப்பு
தான்
விடுதலை அடைந்ததாக!!