9/30/2009

ஒரு கல்லுல ரெண்டு மாங்கா!

கோயில்ல சாமி கும்பிட்ட மாதரயும் ஆச்சு!
கும்பிடவந்த பட்சியப் பார்த்த மாதரயும் ஆச்சு!!

மாட்டுக்குப் புல் புடுங்கினா மாதரயும் ஆச்சு!
காடுகரை சுத்தமான மாதரயும் ஆச்சு!!

ஆடு மேய்க்கப் போன மாதரயும் ஆச்சு!
அண்ணனுக்குப் பொண் பார்த்த மாதரயும் ஆச்சு!!

காய்தக் கூடை போட்ட மாதரயும் ஆச்சு!
பழசு பரட்ட ஒழிஞ்ச மாதரயும் ஆச்சு!!

இட்லி உப்புமாக் கிண்டுன மாதரயும் ஆச்சு!
மிச்சம் மீதி கழிஞ்ச மாதரயும் ஆச்சு!!

வட்டிக்கு மொதல் குடுத்த மாதரயும் ஆச்சு!
நொம்பலத்துக்கு ஒதவுனா மாதரயும் ஆச்சு!!

தவுட்டுக் காசு வெளையாடுனா மாதரயும் ஆச்சு!
பிஞ்சு வெரலுகளை தடவுனா மாதரயும் ஆச்சு!!

குமுதம்கல்கண்டு படிச்ச மாதரயும் ஆச்சு!
படிக்க வந்த அம்மணிய மடிச்ச மாதரயும் ஆச்சு!!

தோப்புக் காவலுக்கு காவலும் ஆச்சு!
தோதான கூடலுக்குக் கூடலும் ஆச்சுது!!

இடுகையில பிழை திருத்தினா மாதரயும் ஆச்சு!
படிச்சுட்டு மறுமொழி போடுறான் இவன்னும் ஆச்சு!!

எழில் தமிழ்ச்சங்கக் கூட்டத்துக்கு போனதாவும் ஆச்சு!

நாலுநாளைக்கு சோத்துப் பொட்டலம் கட்டுனதாவும் ஆச்சு!

ஒன்னுல ரெண்டு விழுத்தின,
பழமைபேசி
.

9/29/2009

நித்தியப்பிரளயம்!

நித்தை

மாழாம்பலம்

சோர்தல்

சொக்குதல்

கோடித்தூங்கல்

கிடத்தல்

அயர்தல்

அனந்தல்

ஏல்தல்

உறங்குதல்

களித்துயிலுதல்


மடிதல்

துஞ்சுதல்

தூங்குதல்

நித்திரித்தல்

9/28/2009

அமெரிக்கத் தலைநகர் இலக்கியக் கூட்டமும், இவனும்!

செப்டம்பர் 27, 2009. நண்பகல் உணவு உட்கொண்டு ஆகிவிட்டது. விருந்தோம்பலில் திளைத்த தேகம், இலக்கிய வேட்கையில் தினவெடுக்கத் துவங்கியது. என்ன பேசுவார்கள்? யார் யாரெல்லாம் வருவார்கள்? உள்ளபடியே இவர்கள் இலக்கியக் கூட்டம்தான் நடத்துகிறார்களா? அல்லது, காதில் பூச்சுற்றி ஊரை ஏமாற்றும் கூட்டமா?? வினாக்கள் ஆழ்மனதில் கிளம்பி, தொண்டைக் குழி வழியாய் நாவை எழுப்பி வாய் விட்டு வினவிவிட யத்தனித்தது பல முறை! ஆனாலும், நாகரிகத்தின் முன்னே அவையாவையும் அடங்கிப் போனது!

விருந்தோம்பலைச் செவ்வனே செய்தாரோடு நிழல் படங்களுக்கான சம்பிரதாயம் நடாத்திவிட்டு, நானே அந்த (ஜாக்குவார்)சிறுத்தையைச் செலுத்தினேன் எலிக்காட் நகரத்தில் இருக்கும் மில்லர் நூலகம் நோக்கி! மனம் பரிதவித்தது, இன்னும் இடம் வரவில்லையே என. இம்முறை நா வென்றது, ‘என்ன ஐயா, இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?’ என்று வினவிக் காட்டியது அது. ‘இந்தா இன்னும் கொஞ்ச தூரந்தான்!’ எனும் மறுமொழி கேட்டு சலிப்படைந்தது நாவை எழுப்பிய உள்மனம்.

ஒரு வழியாக Jaquar ஆனது, நூலக ஊர்தி நிறுத்துமிடத்தைச் சென்று அடைந்தது. உள்ளே நுழைகிறோம், நுழைந்ததுதான் தாமதம், 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது லெளகீகம். சிலேட்டுப் பலகையில் எழுதுவதும், எச்சில் தொட்டு அழிப்பதுமாய் என்னேவொரு இரம்யமான வாழ்க்கைடா சாமி! ”சார் இவன் என்னைக் கிள்ளுறான் சார்!”, ”டீச்சர், நான் கெலாசு சொன்னதுக்கு, இவன் உங்க எதுத்த ஊட்டு ஆயாவைப் போட்டு வெளாசு சொல்றான் டீச்சர்!” இது மாதிரியான நினைவுகள் மின்னல்க் கீற்றுகளாய் வந்து போனது. ஆம், அங்கே எண்ணற்ற இளம் சிறார்கள் அமர்ந்து வடிவாய்த் தமிழ் கற்றுக் கொண்டிருந்த காட்சியானது, எம்மை இளம்பிராயத்திற்கே இட்டுச் சென்றது. அதிலிருந்து மீள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது.

அதிலிருந்து மீண்டு வெளியே முற்றத்திற்கு வர, பழமைக் காவலன், ஆசானுக்கெல்லாம் ஆசானான புலவர் வெ.இரா. துரைசாமி ஐயா அவர்கள் நிற்கக் காண்கிறோம். மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்துகிறேன். அதன்பின்னர் என்ன கதைப்பது என இவனுக்குத் தெரியவில்லை ஏதும்! அவரோ, மாபெரும் புலவர், வரலாற்று ஆசிரியர்... அவரிடத்தே என்ன கேட்பது? கேட்பதற்குரிய அளவிற்கு நம்மிடம் அறிவு சார்ந்த கேள்விகள் இருக்க வேண்டுமல்லவா? ஏதோ தாந்தோன்றித் தனமாகக் கேட்பதும், அளவளாவுவதும் சான்றோருக்களிக்கும் மாண்பு ஆகுமா? இப்படி மனம் அஞ்சித் தவித்தது என்றே சொல்ல வேண்டும்.

உள்ளே நடந்து கொண்டிருந்த தமிழ் வகுப்பானது நிறைவு பெறுகிறது. இலக்கிய ஆர்வலர்கள், ஒருவர் பின் ஒருவராக வந்தடைகிறார்கள். இலக்கியக் கூட்டத்தின் தலைவர், மேன்மைமிகு. பிரபாகர் அய்யா அவர்கள் பதினாறு வயது இளங்காளையென, உற்சாகத்தோடும் கூட்டத்திற்கு தேவையான பரிவாரங்களோடும் நுழையும் அத்தருணத்தைக் கண்ணாரக் கண்டு இரசித்து மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று திரும்பியது மனம். ஆகா, ஆகா, என்னேவொரு சீரிய ஒழுங்கு? காலம் தவறாமை?? உற்சாகம்??? ஐயா, உங்களை இலக்கியம் பல நூற்றாண்டுகள் வாழ வைக்கும்! வாழ்க நீவிர்!!

தலைவர் எவ்வழியோ, அவ்வழிதானே அவர்தம் வழி வருவோரும்?! அடேயெப்பா... கண்கொள்ளாக் காட்சிதான் அது! ஆளும் கையுமாய்; கையும் புறநானூற்று உரையுமாய்!! அமெரிக்காவில் மட்டும்தான் இது சாத்தியம் என நினைக்கிறேன். தமிழே, உனக்கு ஆராதனை குறிஞ்சிப் பூவாய் கோவையில் அல்ல! இதோ இந்த எலிக்காட் மில்லர் நூலகத்தில் ஒரு சீராய் மாதமிருமுறை!!

கம்பீரமிகு மிடுக்கான பரியாய் எழுந்து முதன்மை விருந்தினரான புலவர் பெருமான் துரைசாமி ஐயாவை அறிமுகப்படுத்தி, பின் பேசவருமாறு அழைக்கிறார் நடுநாயகம் பிரபாகர் ஐயா அவர்கள். அவைக்கு மரியாதை செலுத்திவிட்டுத் தொடர்கிறார் புலவர் பெருமான். ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், சிலாசாசனம் (கல்வெட்டு) பற்றிச் சரளமாக, மடை திறந்த வெள்ளம் போல் அரிய தகவல்களை அடுக்க, அதில் சொக்கிப் போன இவனுக்கு குறிப்பெடுக்க விரல்கள் உதவ மறுத்தது.

பழமை, தொன்மை, வரலாற்றுக்கு ஆதாரம் இந்த கல்வெட்டுகள். அதற்கு தமிழ்நாட்டிலே அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அண்டை மாகாணங்களில் அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி புள்ளி விவரங்களோடு அவர் அடுக்க, அடுக்க, கூட்டத்தார் வாய்விட்டு அழாததுதான் குறை. ஆம், நிசப்தத்தின் விளிம்புக்கே சென்றது அவை.

இன்றைய கணினி உலகில் Documentation is very important என்று வலியுறுத்துகிறோமே, அதைப் போல அன்றைய உலகிற்கு இந்த கல்வெட்டுகளே ஆதாரம். கல்வெட்டுகளிலே எண்ணற்ற செய்திகள் அடங்கி இருக்கிறது. அவை அனாதை ஆக்கப்பட்டு, தூக்கியெறிவது தமிழனுடைய அவலத்தின் மற்றொரு முகம்!

அன்றைய தெருக்களும் இன்றைய தெருக்களைப் போல, வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் எண்களிட்டு அமைக்கப்பட்டு இருப்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளில் காண்ப்பெறலாம் என சிலாகித்துப் பேசினார். ஒவ்வொரு தெருவின் பக்கத்தையும் ’சிறகு’ என அழைப்பார்களாம். தெற்கு வீதி, வட சிறகில் உள்ள மூன்றாவது எண் இலக்கமிட்ட வீட்டில் இருக்கிற மாதேசுவரத்தைச் சார்ந்த இன்னாருக்கு இவ்வளவு பங்கு என்று பொறிக்கப்பட்டு இருப்பதைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சேலம் நாமக்கல் பகுதிகளைப் பற்றியும், காவிரிக் கரையோர தொன்மையான ஊர்களைப் பற்றியும் பல தகவல்களை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தாரவர். அவரது உரைக்குப் பிறகு, இலக்கிய ஆய்வு துவங்கியது. புறநானூற்றுப் பாடல்கள் 102 முதல் 107 வரை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆய்வு என்பதை மிகத் துல்லியமாக நடாத்திக் காட்டினார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொருவரது கருத்துக்கும் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அரிய செய்திகளைப் பரிமாறி... மன்னிக்கவும், அந்தப் பாங்கை எழுத்தால் காட்சியாக்க இந்த எளியவனால் ஆகாத காரியம். நேரிலே காண்பதே சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

மிக நிதானத்தோடு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. முதலெழு, இடையெழு, கடையெழு வள்ளல்கள் பற்றித் தெரிந்திருக்கிறோம். அதற்குப் பின்னர் எவருமிலையா என வினவுகிறார் உயர்திரு பீட்டர் ஐயா அவர்கள். அதற்கு மறுமொழியாக நடுநாயகம் பிரபாகர் அவர்கள், அவர்களுக்குப் பின்னர் நீர்தான் வள்ளல் என்று ஒரே போடாய்ப் போட்டாரே பார்க்கலாம், சிரிப்பலை அடங்க சிறிது நேரம் பிடித்தது.

இதற்கிடையே எம்மையும் அவையில் பேசுமாறு நடுநாயகம் கேட்டுக் கொண்டார். நாமும், நம் நிலையில் இருக்கும் மனவோட்டங்களைப் பகிர்ந்து கொண்டோம். உயர்திரு முனைவர். அரசு செல்லையா அவர்கள் வெகுவாகப் பாராட்டி, இருக்கும் நிலையில் இருந்து மேற்கொண்டு தொடரக்கூடிய வகையிலே வழிகாட்டுதல்களை அறிவுறித்தியதற்கு நாமும் பணிவுடன் நன்றி கூறிக் கொண்டோம்.

யானையே ஆயினும், முதலையின் இடமான தண்ணீருக்குள், அது முழங்காலளவாக இருப்பினும், அங்கே முதலையை இழியன் என இகழ்ந்தால் யானையின் வெற்றி ஆட்டம் கண்டு விடும் என்கிற பாடல் எம்மனதைக் கொள்ளை கொண்டது. மற்ற பாடல்களும் சுவாரசியமாகவும், இலக்கியச் சுவை ததும்பும்படியாகவும் இருந்தது.

ஆய்வுக் கூட்டமானது இறுதிக் கட்டத்தை நெருங்கியதும், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு நாம் விமான நிலையம் செல்லத்தான் வேண்டுமா என மனம் பசலை நோய் கண்டது. நோயில் பீடித்த மனம், அதிலிருந்து மீளும் முகமாகவும் நினைவுகளின் எச்சமாகவும் கொழுகொம்பைத் தேடி இக்கணத்தில்!


இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே!

9/27/2009

Stepney!

மக்களே, இரண்டு நாள் பயணம் சிறப்பாக முடிந்தது. இலக்கியக் கூட்டத்தைப் பற்றி விபரமாக நாளை இடுகை இடுகிறேன், கடுமையான களைப்பாக இருப்பதே இதற்குக் காரணம்! எனினும் பயணத்தின் போது கிடைத்த ஓரிரு சுவாரசியத் தகவல்கள்:

பசு - ஆப்பி
யானை - இலண்டம்
குதிரை, கழுதை, ஒட்டகம் - இலத்தி
பறவைகள், பல்லிகள் - எச்சம்
நாய், ஓநாய், நரி - கட்டம்
காடை, கவுதாரி - புடம்
எருமை, மாடு - சாணம்
ஆடு, மான், முயல் - பி(பு)ழுக்கை
விலங்குகள் - விட்டை
மனிதன் - மலம்

”ச்சே, என்ன ஆச்சு இவனுக்கு? வந்ததும் வராததுமா இப்படி ஒரு இடுகை தேவையா?”, இப்படி எல்லாம் நீங்க மூக்கால அழுவீங்களா இருக்கும்; அழுங்க, தாராளமா அழுங்க, அது உங்க பிரச்சினை; ஆனா நான் மூக்கால அழறதைப் பத்தியும் அனத்திட்டுத்தான் போவேன்.


அழும்போது வடியுற கண்ணீர்ல கொஞ்சம், பக்கத்துல இருக்குற நாளச்சுரப்பிகள்னால மூக்குலயும் வெளிப்படும் அப்படின்னு அறிவியல் காரணங்களைச் சொல்லிச் சமாளிக்கலாம். ஆனா, நமக்கு மரபு வழின்னு ஒன்னு இருக்கல்ல? மூக்குல வாயில அழறான்னு சொல்றோம். ஆனாக் கண்ணுல மூக்குல அழறான்னு சொல்றதில்லை பாருங்க!

கண்களில் மட்டுமல்லாது மூக்கில் வடியும்படியும் அழறான் அப்படின்னு, அழுகையோட வீரியத்தைச் சுட்டிக் காட்டுறதுதான் மூக்குல அழறது. யேய் அவன் ஒரு நாள் விடுப்புக் கொடுக்கறதுக்கே மூக்குல அழறான், நீ வேற?! இங்க, அவனது ச்லிப்பை மிகைப்படுத்திச் சொல்றதுக்காக அந்த வழக்கு. இதுலயும் ஒரு படி மேலா மிகைப்படுத்துறது, அவனுக்குத் தெரிஞ்சா வாயில மூக்குல அழுவான், நீ வேற!

இனிமேக் கொண்டு அதெப்படி வாயில அழ முடியும், அதெப்படி மூக்குல அழ முடியும்னு கேட்டுத் தொல்லை செய்யக் கூடாது நீங்க!

பெரிய, மகா, மா... மாமடையன், மா என்பது மாங்காய், ஆக, மாமடையன் என்பது மாங்கா மடையன்! அடுமடையன்? அடுப்பங்கரையில் இருக்கும் மடையன்! ஆமா, சமைச்சது சரியில்லாதப்ப உங்களை அப்படிச் சொல்லுறதுதான அது?! என்ன ரொம்ப சலிச்சுகிறீங்க?? அப்ப உடனே சேமம் ஒன்னைக் கைவசம் வெச்சுகுங்க? இஃகிஃகி, அதென்ன சேமம்?

சேமிப்பு, உடனடித் தேவைக்கானதைத் தவிர்த்து இருக்கும் மாற்று; சேமச் செருப்பு, தேவைக்காக இருப்பதைத் தவிர இருக்கும் செருப்பு! ஆக, சேமம்னா
Stepney! இப்ப சொல்லுங்க, நீங்க தயார்தானா சேமத்துக்கு? உடனே வேலைய ஆரம்பிங்க அப்ப!

ஆனா மவனே இப்பவே சொல்லிட்டேன், நானும் ஒரு சேமச்செருப்பு வாங்க கடைத் தெருவுக்கு போறேன்னு அவங்க சொன்னா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது! கிடையாது!!

Washington, DC: பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி பற்றிய‌ கண்ணோட்டம்!

நமது அமெரிக்கத் தலைநகர் பயணமானது, சரியான நேரத்திற்குத் துவங்கி நண்பகல் வாக்கில் விமானம் பால்டிமோர் விமானத்தை அடைந்தது. எனது வாழ்க்கையிலேயே இதுவரையிலும் கிடைத்திராத ஒரு அங்கீகாரமும், வரவேற்பும், விருந்தோம்பலும் கிடைக்கவிருப்பதை நான் கிஞ்சித்தும் நினைத்து இருக்கவில்லை, அப்படியொரு விருந்தோம்பல்!

அதைப் பற்றி அத‌ன் இருப்பிடத்திலே இருந்து கொண்டு எழுதுவது அறமாகாது; பின்னொரு இடுகையில் விரிவாகக் காண்போம். ஆனால் இந்த ஒரு நல்ல தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு, நான் எழுதும் இந்த தமிழுக்கு என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். இனி முதல் நாள் நிகழ்ச்சியான,
AIMS India Foundation பொன்மாலைப் பொழுது எனும் நிகழ்ச்சிக்குள் செல்வோம்!

எனக்கு இந்த அமைப்பை மிகவும் பிடித்திருக்கிறது. இறைவன் இரு கைகளைப் படைத்ததே ஒன்று தனக்கு வேலை செய்வதற்காகவும், மற்றொன்று தன்னையொத்த சமுதாயத்திற்காகவும் என்று சொல்வார்கள் பெரியவர்கள். தான் மேலை நாட்டிற்கு வந்து ஒரு வளமான வாழ்க்கையை அடைந்து விட்டாலும், தன்னையொத்த தன்னாட்டு மக்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காகவும் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனக் கருதுவது மேலான செயல், they make difference among us!

இந்த ஆண்டுக்காக நிதி திரட்டும் பணி நிமித்தம் இந்த இனிய பொன்மாலைப் பொழுது எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். திரையிசைக் கச்சேரியும், ஒத்ததாக சிறுவர்களின் நடனமும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது. லதா‍ - கண்ணன் குடுமபம், அய்யப்பன் மற்றும் பலரின் அயராத உழைப்பைக் காண முடிந்தது.

'அச்சமில்லை' எனத் துவங்கும் இந்திரா படத்தின் பாடல் பாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போது உள்நுழைந்து முன்வரிசையில் பிரதான இருக்கையில் அமர வைக்கப்பட்டேன். அடுத்தடுத்து பழைய பாடல்கள் பாடப்பட்டது; குங்குமப்பூவே, குங்குமப்பூவே பாடலை அந்த முக்கியப் பாடகர் நேர்த்தியாக பாடத் துவங்கியதுதான் தாமதம், சீட்டியின் ஒலி வெள்ளை மாளிகையையே அதிர வைக்கக் கூடிய வகையில் இருந்தது.

தொடர்ந்து பாடலுக்கிடையே சுவாரசியமான தகவல்களும் கண்ணன் அவர்களால் பரிமாறப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு பாடலைப் பாடப்பட்ட பிறகு, இந்த பாடலுக்கு தொடர்புடைய, ஒரே நாளில் பிறந்த இருவர் யார் என வினவப்பட்டது. பின்னர், விசுவநாதன் அவர்களும், கவியரசு கண்ணதாசன் அவர்களுமே என்ற தகவலையும் அளித்தார். ஆம், அவர்கள் இருவருமே ஜூன் 24 அன்று பிறந்தவர்கள், ஆனால் இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம்!

மீண்டும் அதே முக்கியப் பாடகர்! 'வலையபட்டி தவிலே தவிலே, ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே, ஜிமிக்கி போட்ட மயிலே’ என இசை வேகமெடுக்க, அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்த பாடகரின் அங்க அசைவுகளும், கைச் சொடுக்கும், இசைக்கேற்ற குறிப்பு மொழியும் அவருக்கு மேலும் மெருகூட்டியது. அரங்கமென்ன வாளாதிருக்குமா? சீட்டிகளும், கரவொலியும் கூரையைப் பிளந்தது!

முக்கியப் பாடகருக்கு, நிகர் வேறு எவருமில்லையோ என எண்ணிய தருணத்தில் மின்னலாய் மின்னி, மக்களை இருக்கையினின்று வெளியே கிடத்தி ஆட்டம் போட வைத்தார், அருமைப் பாடகர் ஐய்யப்பன் அவர்கள். அவரைத் தொடர்ந்து கண்ணன், லதா மற்றும் சிலர் அடுத்தடுத்த பாடல்களைப் பாடி முடிக்க, 'சம்திங் சம்திங்' என்று சூட்டைக் கிளப்ப வந்தார் அய்யப்பன்!

மீண்டும் கண்ணனின் இடையூட்டுத் தகவலொன்று, "ஒரு நாள் மெல்லிசை மன்னர், இரவு முழுதும் இசை அமைத்து விட்டு காலையில் இசைப்பதிவு இருப்பதையும் மறந்து உறங்கிவிட்டார். காலையில் இசைப் பதிவுக்கூடம் வந்த கண்ணதாசன் மெல்லிசை மன்னருக்காக சற்று நேரம் காத்திருந்து பார்த்தார். அவர் வருவதாய் இல்லை. வெறுத்துப் போய், ஒரு சீட்டில் ஏதோ எழுதி, விசு வந்தால் இந்த வரியை பல்லவியாய் வைத்துக் கொண்டு மெட்டு போட சொல்லுங்கள் என்று மெல்லிசை மன்னரின் உதவியாளரிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்!

அவர் அதில் எழுதிக் கொடுத்த பல்லவி என்ன தெரியுமா? அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அகப்பட்டவன் நானல்லவா! வந்து பார்த்த மெல்லிசை மன்னர் அந்தப் பல்லவி அந்த சூழ்நிலைக்கு சரியாகப் பொருந்தவே, மிகவும் வியப்போடு அதற்கு இசையமைத்தார்" என்பதே!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, மாற்றப்பட்ட உடையில் மேடையேறினார் அந்த முக்கியப் பாடகர். ஒவ்வொரு பாடலுக்கிடையேயும் நையாண்டி செய்வதற்காக இருவர் வந்து போனார்கள். அந்த நையாண்டி இளைஞர்களைத் தொடர்ந்து, அபூர்வராகம், அதிசய இராகம் எனத் துவங்கும் யேசுதாசின் பாடலை மிகச் சிறப்பாகப் பாடினார் அந்த முக்கியப் பாடகர். தொடர்ந்து, 'கத்தாழைக் கண்ணாலே' மற்றும் பல குத்துப் பாட்டுகள் பாடப்பட்டது.

நல்ல காரியத்துக்காக உழைத்துவரும் அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மேலும் அமெரிக்காவில் உள்ளவர்கள், விருப்பமிருப்போர் அவர்களைத் தொடர்பு கொண்டு தத்தம் பங்களிப்பையும் செய்யலாம்.

இடை இடையே வந்த அந்த இரு நையாண்டிகள், ஒரு கட்டத்தில் தமிழை வம்புக்கு இழுத்தார்கள். ஒருவர் ஆங்கிலத் தமிழில் பேச, மற்றவர் என்னடா தமிளு இது? நல்லா என்ன மாதிரி நல்ல தமிளுல பேசணும்டா என்று கூறிவிட்டுத் திரும்பிப் பின்புறத்தைக் காண்பித்தவாறு தான் போட்டிருந்த அரைக்கால் சட்டைக்கும் மேலாக வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு, மீண்டும் முன்பக்கம் திரும்பி நாட்டுப்புறத்து பாமரர் பேசுவதைப் போல் பேசிக் காட்டி, 'இப்படி நல்ல தமிளுல பேசணும்டா' எனச் சொன்னார். எங்கே அரங்கம் அதற்கும் கரவொலி எழுப்பி என்னுள் உறங்கும் மிருகத்தைத் தட்டி எழுப்பி விடுமோ என அஞ்சினேன். நல்ல வேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை! மேடையைச் சிறப்பித்த‌ அந்த முக்கியப் பாடகர், திருச்செல்வன்!


9/25/2009

அழைப்பு: Washington DC'யில் பதிவர் கூடல்!


மக்கா, அமெரிக்கத் தலைநகரிலே பொன்மாலைப் பொழுது! இந்தியக் குழந்தைகள் நல நிதிக்கான ஒரு தமிழ் விழா!! நமக்கும் ஒரு அழைப்பு!!!

AIMS India Foundation வழங்கும் பொன்மாலைப் பொழுது! 5.30 to 9.30pm. South Lakes High School, 11400 South Lakes Drive, Reston, VA – 20191. மேலதிகத் தகவலுக்கு: http://www.mydonations.com/aimsindia


Dear Members of AIMS,

AIMS India Foundation is plannig for a fund raiser music concert on Saturday Sep 26th, 2009 in Virginia. This is a live orchestra with the talented people in the Washington DC Metro area. The funds raised from this concert will be used for our ongoing educational programs in India. Around 5000 village kids are benefiting from our educational program each year. We are in the 8th year now and your support has helped our people in India and motivated us to successfully run this organization all these years. Please come for the concert and donate generously and help us help our kids in India.


Thank You


Vasu
President


=====================================


தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்

வரும் ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 27, 2009 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாம் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ள புறநானூற்றுப் பாடல்களில் (102, 103, 104, 105, 106, 107) உள்ள அருஞ்சொற்களுக்குப் பொருள் அடங்கிய கோப்பு இந்தத் தொடுப்பில் உள்ளது.


அன்புடன்,
பிரபாகரன்


=====================================

மக்கா நான், வட கரோலைனால இருந்து உங்களை எல்லாம் பார்க்க வாறேன். சித்த நீங்களும் ஊட்லயே இருக்காமக் கொள்ளாம நிகழ்ச்சிகளுக்கு வாங்க! அங்க சந்திப்போம். என்ன நாஞ்சொல்றது?

போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ
நுண்பல் கருமம் நினையாது,
‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே!

யானையை முதலை வெல்லுமா? அதெப்படி?? இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே(வெற்றி)! என்னதான் நம்ம பெரியவங்க சொல்லி வெச்சு இருக்காங்க... வாங்க தெரிஞ்சுகுவோம்! என்னோட அலைபேசி எண்: 980 322 7370.

Washington D.Cல இருக்குற, அந்த பகுதியில இருக்கிற நண்பர்களே, இந்த அரைவேக்காடு அந்த பக்கமா வரப் போறேன். சித்த முடிஞ்சா வாங்க, சந்திப்போம்!!

9/24/2009

உன்னைப் போல் ஒருவன்!!!

புனைவொடு நிசத்தை
உமிழ்ந்தான் ஒருவன்!

நிசத்தொடு புனைவை
விளவினான் ஒருவன்!!

அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
எனத்தமிழை ஓயாது
தட்ட வைத்தான்
ஒவ்வொருவனையும்
உன்னைப் போல் ஒருவன்!!!

9/22/2009

விடியல், புலம்பெயர்ந்த மண்ணிலே!

முற்பகலிலே கட்டியம் கூறின
கூடிக்குலாவிய தும்பிக்கூட்டம்!
பெய்தமழையில் பெருத்துப்போயின
வெடிக்காத பருத்திக்காய்கள் !!

சுற்றி வளைத்தடித்த சாரலில்
சுத்தமாகிப் போயின கோபுரக்கலசங்கள்!
பொங்கிய கண்மாயைச்சுற்றி வேடிக்கை
பார்த்தவண்ணம் ஊர்க்கூட்டம்!!

திடீர் எனப்பிறந்த சிறுகுளங்கள் ஊர்த்தெருவில்,
நீர்கிழிய அதில் ஏர்க்குச்சி ஓட்டிய சிறுவர்கள்!
ஊர்க்கண்மாயில் சில்லடித்துப் போட்டி
நடத்திய உற்சாக விடலைகள்!!

ஏர்க்கலப்பை தேடி அங்குமிங்குமாய்
அலையும் நேற்று வரை சோம்பிய உழவன்!
கைக்களை எடுக்க நெட்டி முறித்து,
ஆயத்தமாகிக் காடு நோக்கும் காரிகைகள்!!

மட்டம் உயரக்கண்டு கேணியில் சாலோட்ட
காளைகளை நோக்கும் உழைப்பாளி!
அடித்த மழையில் புடைத்த காளான்களைப்
பறிக்கப்போன முதியவர் கூட்டம்!!

அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ச்சுவடுகள் விட்டுப்பிரிகிறதென!
அன்று தெரியவில்லை;பெய்த மழையில்
தமிழ்ப்பண்பாடும் பட்டுப் போகிறதென!!

ஆனாலும் விட்டுவைத்தாய் என்னை; ஆதலினால்,
அலைகின்றேன் நினைவுகளின் எச்சமாய்!
ஆனாலும் விட்டுவைத்தாய் என்னை; ஆதலினால்,
கண்கள் பனிக்கப் படைக்கின்றேன் இதனை!

கொங்குவள நாட்டிலே அன்புத் தேனும், விருந்தோம்பல் எனும் பழச்சாறும், ஊர்கூடித் தேரிழுக்கும் ஒருமனம் கொண்ட சமூகப் பற்றும் எங்கும் வியாபித்திருக்கும். பல்வேறு தொழில்களை முனைந்து செய்யும் மக்கள், செய்யும் தொழிலாலே மாறுபட்டு அடையாளம் காணப்பட்டாலும் கூட, அவர்களிடத்தே சமூகப் பிணைப்பு இருந்தது. மந்தராசல ஐயா தோளில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு கொசவம்பாளையத்துக் குட்டையில் மண்ணடிக்க காலை ஆறு மணிக்கெல்லாம் வண்டியைப் பூட்டிக் கொண்டு செல்கிறார். செல்லும் வழியில், ஊரோரத்தில் இருக்கும் பட்டாளம்மன் கோயிலில் சிறு கூட்டம் குழுமி இருப்பதைக் கண்டு,

”கிட்டா, அதென்றா காலையிலயே அங்க கூட்டம்? வேற வேலை வெட்டி இல்லியாக்கூ??”

“அதில்லீங் சாமி, நம்ம சின்னாம் பொண்டாட்டிக்கு வவுத்து நோவுன்னு கோயில் வாசல்ல படுக்க வெச்சு இருக்குறாங்!”

“அட என்றா பழம பேசுற நீயி! தூக்குங்டா அவளை!! வண்டியில போட்டு மொகானூர் ஆசுபத்திரிக்கு கொண்ட்டு போலாம்!”

கிட்டான் கூவிக் கொண்டே கோவிலை நோக்கி விரைகிறான். மந்தராசல அய்யாவும் எந்தவிதமான யோசனையும் இன்றி வண்டியைத் திருப்பி அந்தச் சந்தில் விடுகிறார்.

“பண்ணாடி, வண்டி சந்துல வராதுங்! இதென்னங், நெமையில இங்கயே அவளைத் தூக்கியாறமுங்!”

கூட்டம் சின்னான் மனைவி மாரியைச் சுமந்து வந்து, மண் அடிக்கச் செல்லவிருந்த வண்டியில் கிடத்த, கூட்டத்தினர் மறுத்தும் மந்தராசல அய்யாவே வண்டியை மொகானூர் செல்லும் இட்டேரியை நோக்கிச் செலுத்துகிறார். கிராமத்திலே இருக்கும் சென்ற தலைமுறையினரிடம் இன்றும் இருக்கும் சமூகப் பற்று இது.

பிற்பகல் சுமார் இரண்டு மணி; கடுமையான கோடை வெயில்! ஊருக்குள்ளே ஆடவர் நடமாட்டம் பெரிதாக இல்லை. பெரும்பாலான பெண்டிரும் அவர்களோடு சேர்ந்து காடு கழனிக்குச் சென்றிருந்த நேரம். கைக்குழந்தைகளுடன் கூடிய தாய்மார், கடை கண்ணி வைத்து நடத்துவோர், நெசவு, கூடை முடைதல், சட்டி பானை முடைதல், தச்சு வேலை என கைத்தொழில் செய்வோர் மட்டும் இதற்கு விதிவிலக்காய், வெயிலின் உக்கிரம் தாளமுடியாமல் ஊருக்குள் இருக்கும் கோவிலடி வேப்ப மரம், ஊர் முற்றத்து ஆலமரம் எனக் காற்றோட்டம் கூடிய நிழலுக்குத் தஞ்சம் புகுந்திருந்த தருணம்.

அந்த வெயிலிலும், உடன் ஒரு கையாளுடன் அரசு அலுவலர் ஒருவர் மக்கள்த் தொகைக் கணக்கெடுப்புக்காக, இட்ட வேலையைச் சரியான நேரத்தில் முடித்தாக வேண்டிய கட்டாயத்தின் பேரில் வீடு வீடாக ஏறி இறங்கிக் கொண்டு இருக்கிறார். கதவுகள் இரண்டும் திறந்திருந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு,

“வீட்ல யாருமில்லீங்களா?”

பக்கத்து வீட்டுத் திண்ணையில் இருந்து, “அமுச்சீ, யாரோ ஊட்டுக்கு வந்து இருக்காங்க அமுச்சீ!”

புறக்கொல்லையில் கொட்டுப் பருத்தியை ஒழித்துக் கொண்டிருந்த மூதாட்டி வெளிப்படுகிறார். “கண்ணூ, இந்த வெயில்ல வாசல்லயே நிக்காட்டி என்னோ? உள்ள வந்து இந்தக் கட்டல்ல சித்த குக்குங்க, வாறேன்”. அந்த மூதாட்டிக்கு வந்திருப்பது யாரென்று தெரியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், யாரோ ஒரு வெளியாள் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். கடுமையான வெயிலின் காரணமாய் அவர்கள் வேர்த்துக் காண்ப்படுகிறார்கள் என்பது மட்டுமே!

உள்ளே சென்று, அடுப்பங்கரையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் உறியில் இருந்த மோர்க் குவளையைக் கீழிறக்கி, சிறிது நீர் விட்டு விளாவி, அதில் உப்பும் கறிவேப்பிலையும் கிள்ளிய மிளகாயும் இட்டு இரு கோப்பைகளில் நிரப்பிக் கொண்டு முன்வாசலுக்கு வருகிறார்.

“இந்தாங்க கண்ணுகளா, இந்த மோரைக் கொஞ்சம் குடீங்க...”

”இல்லீங் ஆத்தா, இப்பத்தான் சோறு உண்ட்டு.....”

“இல்லீங்காட்டி என்னோ? வாங்கிக் குடீங்....”

இருவரும் அந்தக் கோப்பைகளை வாங்கி, மாந்து மாந்தென்று மாந்துகிறார்கள். அக்காட்சியைக் கண்டதும், பெற்ற பிள்ளைக்குப் பாலூட்டும் போது என்னவொரு ஏகாந்த உணர்வு அந்தத் தாயிக்கு மேலிடுகிறதோ, அத்தகைய உணர்வுக்கு ஆட்பட்டுப் பரவசமடைகிறாள் அந்த கொங்குவள நாட்டு மூதாட்டி. இது நமது தமிழ்ப் பண்பாட்டிலே ஊறித் திளைத்த விருந்தோம்பல்!

முன்பின் தெரியாத வழிப்போக்கர்களுக்கு, நீர்மோர்ப் பந்தல்கள், பாணக்க விநியோகம், அன்னக் காவடிகளுக்கு உணவு படைத்தல், குறியாப்புத் தருதல், தானதர்மம் செய்தல், இப்படியான சமுதாயக் கூறுகள் தமிழனின் வாழ்வில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். மாரி பொய்த்து, காடு கழனிகளில் வேலை வெட்டி குறைந்திருந்த ஆவணி மாதம் மாலை வேளை அது. ஊர்வாசலில் இருக்கும் திண்ணையில் கூடிய பெரியவர்கள் நாட்டு நடப்பு, வேளாண்மை, பண்ணையாட்களின் சுக துக்கங்கள் என பழமை பேசியபடி இருக்கிறார்கள். கூடவே, பண்ணையிலும் வீட்டிலும் இருப்பவர்களுக்கு போதிய வேலை வெட்டி இல்லாதது கண்டு பெருத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அந்த ஊர்ப் பெரியவர்கள்.

“மச்சே, இன்னிக்கி காலீலதான் வேலங்கிட்டச் சொல்லீட்டு இருந்தேன். நாம நம்மூர்க் குட்டையத் தூர் வாருனா என்னோ? வறண்டு கெடக்குறப்பவே சுத்தம் பண்ணி வெச்சமானா, வேலை முடியறதுக்கும் அப்பிசி மாச அடைமழைக்கு கொளம் நெம்புறதுக்கும் கணக்கா இருக்கும் பாருங்க!”

“நல்ல ரோசனை சொன்னீங்க.... இருங்க தெக்கால ஊட்டு அண்ணங்குட்டச் சொல்றேன்!”

சிறிது நேர அளவளாவலுக்குப் பிறகு, ஊர்த் தலையாறி பிரம்மன் அழைக்கப்படுகிறான். பின்னர், ஊருக்குள் சென்று நாளை முதல் கொசவங்குட்டை, ஆச்சாங்குளம் இரண்டிலும் தூர்வாரும் பணி துவங்க இருக்கிறதென்று தண்டோரோ போடும்படி பணிக்கப்படுகிறான். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவரான சின்னையன், முதல்நாள் முறையாகத் தன் வீட்டில் இருந்து மதியவேளைக்கான பந்தி பரிமாறப்படும் என்பதையும் தெரிவித்து விடுகிறார். இது சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் இருந்த பிணைப்பைக் காட்டுகிறது.

மேற்கூறிய காரியங்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை அல்ல; சுமார் பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குவள நாட்டில் ஈடேறியவைதான். இன்றைக்கு இந்தக் கட்டமைப்பு இருக்கிறதா? தொழில்வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்றுவிட்டாலும் கூட, அந்த உளவியல்க் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ? இல்லை என்பதுதானே நிதர்சனம்??!

இல்லாமற் போனதுக்கான காரணம் என்ன? தமிழனின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு திட்டமிட்டே சிதைக்கப்படுகிறது. மலிவான சலுகைகளைகயும், வேடிக்கைகளையும் காண்பித்து, தமிழனின் ஆணி வேரான மொழியும் பண்பாடும், தொன்மையான அடையாளமும் வெகுவேகத்தில் சூறையாடப்பட்டு வருகிறது என்பதே வருத்தமான உண்மை. காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது எனச் சொல்லித் தந்த தமிழ்ச் சமுதாயம், உண்மை உயிர் போன்றது என்பதை உணராமல் இருப்பதுதான் சோகத்தின் அடிநாதம். சூறையாடப்படும் உண்மையை, ஊடகங்களுக்கு எதிராகச் சொல்ல எவரும் துணிவதே இல்லை.

இந்தச் சூழலில்தான் நாமனைவரும் இருக்கிறோம்; மாறுபாட்டுக்கும் வேறுபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்ந்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. மாறுபாடு என்றால் என்ன? நம் செந்தமிழ் நாட்டிலே, தமிழர்கள் கண்டு கொண்டிருப்பது மாறுபாடு! மாற்றங்களைக் கண்டு மாந்தன் மகிழ்வது இயல்பு. ஒன்றையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு புதிதாக ஒன்றைக் காணுகிற வாய்ப்பு வரும்போது, அவனுக்கு அதிலே நாட்டம் வரும். அதை வணிகர்கள் விற்றுக் காசாக்குவார்கள். ஏனென்றால் அது அவர்களது தொழில்!

ஆனால், அந்த மாற்றங்கள் நுகரும் போது மட்டுமே இன்பம் தரக்கூடிய சிற்றின்பமா? அல்லது காலாகாலத்துக்கும் இன்பம் தர வல்ல பேரின்பமா என்பதைப் பகுத்துப் பார்க்கிற பக்குவம், நம்மிடையே குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஆகவே, ஒவ்வாத மாற்றங்கள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, அதில் தமிழனும் தன் அடையாளத்தை இழந்து வருகிறான்.

புலம்பெயர்ந்த மண்ணிலே வாழும் தமிழர்களின் நிலை, இதனின்று முற்றிலும் வேறானது. இங்கே இருக்கும் மேலைநாட்டுச் சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு முதலானவை அனைத்தும் வளர்ந்து, முதிர்ச்சியுற்று ஒரு நிலையில் நிற்கிறது. தாயகத்துடன் ஒப்பிடுகையில், பெரிதாக மாற்றங்கள் நிகழ்வதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும், அதைப் பகுத்தறிந்து நுகரக்கூடிய பக்குவம் மேலைநாட்டவனுக்கு உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? மேலைநாட்டு கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் இவற்றை நுகர்ந்து, அனுபவித்து, பின்னர் நமது பின்புலத்தோடு ஒப்பிடுகிறோம். ஒப்பிடுவதின் வழியாக இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காண்கிறோம்.

வேறுபாடுகள் காண்பதின் வாயிலாக, தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறோம். நிறை குறைகளை அறிந்த கொண்ட பின்னர், தாய்மொழியின் மீது, நமது பண்பாட்டின் மீது, நம் மக்கள் மீது காதல் கொள்கிறோம். ஒரு அக்கறை பிறக்கிறது. உணர்வு கொள்கிறோம்.

செந்தமிழ் நாட்டிலே இருப்பவனுக்கு இந்த வாய்ப்பு இல்லை. அவன் மாற்றத்தின் சுழலில் சிக்குண்டவனாய் இருக்கிறான். ஆகவே, தமிழுக்கு ஒரு மறுமலர்ச்சி உண்டு என்றால் அது புலம்பெயர்ந்த மண்ணிலேதான் என்பது திண்ணம். இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நம் அடுத்த தலைமுறையினரை தமிழ் காக்கும் சிங்கங்களாய் வளர்த்தெடுப்போமாக!

--பழமைபேசி.

குறிப்பு: இப்படைப்பானது, இந்த ஆண்டுக்கான கொங்கு மலருக்காக எழுதப்பட்டு வெளியான ஒன்று. வாய்ப்பை அளித்த, ஆண்டு விழா மலர்க் குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

9/19/2009

இன்னும் மொளச்சி மூனு எலை விடலை?!

மக்களே, ஒரு வாரமாச்சு பாருங்க... அலைபேசி, மின்னஞ்சல்...இலத்வி(Latvia)யால இருந்து ஒரு தமிழன்பரின் தொலைபேசி... ஆகா, நமக்கும் நாலு பேர் இருக்காங்கங்றது தெரிஞ்சது போங்க... நன்றி மக்களே! ..க்கும்! வேறென்ன சொல்ல முடியும்?

எல்லாம் ஒரு காரியமாத்தான் இந்த இடுகை! ஆமாங்க, அடுத்த வாரம் Washington D.C வரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்காங்க! ஆமா இவரு பெரிய்ய இவரு, இவருக்கு ஒபாமாகிட்ட இருந்து அழைப்பு வருதாக்கும்னு நீங்க நினைக்கலாங் கண்ணுகளா!

உலகத்துக்கு ஒரு தலைவர் ஒபாமாவா இருக்கலாம்; ஆனா இந்தத் தமிழனுக்கு ஒரு அன்பு ஆசான், அந்த Washington D.C’ல இருக்காரே? அவர் இந்த எளியவனையும் மதிச்சு, அங்க நடக்க இருக்கிற ஒரு விழாவுக்கு வரச் சொல்லி இருக்காரல்ல?! அதுக்கு நாமளும் போகப் போறம்ல?!


அதான் இடுகையில சொல்லி வெச்சா, நம்ம வாசிங்டன் அன்பர்களையும் அப்படியே ஒரு எட்டு சந்திச்சிட்டு வரலாமுன்னு?! இஃகிஃகி!! ஆம் நண்பர்களே, வருகிற செப் 26, 27ல Washington D.C வரப் போறேன், அப்ப முடிஞ்சா சந்திப்போம்!

இன்னும் மொளச்சி மூனு எலை விடலை, இவனுக்கு இருக்குற லொள்லைப் பாரு! இப்படியும் நாலு பேர் நாலு விதமாப் பேசலாமா இருக்கும். ஆனா, அதென்ன அந்த மொளச்சி மூனு எலை விடுறது? நாங்க திருப்பிக் கேப்பமில்ல?

பொதுவா நம்ம மண்ணுல விழுற வித்தானது, இடப்பக்கமும் வலப்பக்கமும் ஒரு சிறு இலையத் துளிர்த்திட்டு முளைக்கும். அது முளைப்புக்கான அறிகுறி! அதுவே, மூன்றாவதா ஒரு இலையத் துளிர்க்கும் போது அந்த வித்தானது, வளரத் துவங்கி விட்டது அப்படிங்றதுக்கான ஒரு அறிகுறி.

ஆக அதை ஒப்புமைப்படுத்தி, இன்னும் இவன் வளரவே ஆரம்பிக்கலை; அதுக்குள்ள இவனுக்கு இவ்வளவு அலம்பலான்னு கேட்கிற மரபுத் தொடர்ந்தாங்க இது! அதை விட்டுப்பிட்டு, அதென்ன அந்த மூனு இலைகன்னு மொடக்கடி பேசப்படாது.

அது சரி, அப்ப அந்த நாலு பேர் நாலு விதமாப் பேசுறதுங்றது? மனிதனின் இயல்பை வெச்சி நாலு விதமாப் பிரிச்சாங்க பெரியவங்க. அறிவார்ந்த உழைப்பாளி, அறிவு குறைந்த உழைப்பாளி, அறிவார்ந்த சோம்பேறி, அறிவு குறைந்த சோம்பேறின்னு நாலு வகை. ஆக இந்த நாலு பேர் பேசுறதும் நினைப்பதும் அவங்களைப் போலவே மாறித்தான் இருக்கும். அதாங்க, நாலு பேர் நாலு விதமாப் பேசுறது!

சரி அப்ப, நீங்களும் அந்த நாலுல எதோ ஒரு விதமாப் பேசிட்டுப் போங்க சித்த! அஞ்சாவதா, பேசாமத்தான் போவேன்னு பிடிவாதமா நீங்க இருந்தா, அதுக்கு நான் என்னத்தைச் செய்துட முடியும்? அப்படியெல்லாம் சொல்லிட மாட்டேங் கண்ணுகளா! நீங்க எதைச் செய்தாலும் சம்மதமே, நன்றி!

9/14/2009

மீண்டு(ம்) வருவேன்!

அன்பான வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கமும் நன்றியும்! ஒன்னரை ஆண்டுகட்கும் மேலாக, கிட்டத்தட்ட 450+ இடுகைகள் இட்டுவிட்டேன். இனியும் இடுவதற்கு ஆவலும், உட்பொருளும் இருக்கிறதுதான். ஆனால் செய்கிற வேலையின் தன்மையானது மாறி பொறுப்பும் கூடி விட்டது. மேலும் ஓரிரு மாதங்களில் இந்தியப் பயணமும் மேற்கொள்ள இருக்கிறேன்.

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடையை மூடிவிடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறேன். வழமையாக நமது கடைக்கு வந்து செல்லும் வாசகர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்பதை யாமறிவோம். அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள்!

இரமலான், தீபாவளி மற்றும் நத்தார் தினவிழா நல்வாழ்த்துகள்! பொலிவுடன் கூடிய ப்ழமைபேசி, மீண்டு(ம்) வருவான், வருவான், வருவான்!!!

9/12/2009

நீ உன்னுள் போட்டியிடு!

அண்மித்து இருப்பவனோடும்
முகம் தெரிந்தவனோடும்
உன் ஊரில் உள்ளாரோடும்
ஈடாட்டம் ஆடுவாயானால்
நீ தோற்றுப் போவாய்! ஆம்,
இவர்களையும் விட
வலியவன் ஒருவன்
எங்கோ ஒரு மூலையில்
இருப்பானாய் இருக்கும்;
அவனையும் வெல்ல
நீ உன்னுள் போட்டியிடு!
நீ உன்னுள் போட்டியிடு!!


தட்டிப் பறித்து
அணாப்புச் செய்து
இணாப்புத் தைத்து
கெத்துதல் தெளித்ததினால்
உயரக் கொடி பிடித்து
உனையும்விட உயர்ந்தவன்
ஆனான் நானே எனும் எக்காளமா?
வரலாறு ஏசும்; ஆம்
உனை வரலாறு ஏசும்;
சமகால எழுத்தாளர்களில்
சமகாலப் பதிவர்களில்
ஒரு சிலரை
அதே சமகால வாசகர்கள்
ஏசுவதற்கும் மேலாய்!


உயரக் கொடி பிடித்து
உனையும்விட உயர்ந்தவன்
ஆனான் நானே எனும் இறுமாப்பா?
உனை வரலாறு ஏசும்;
சமகால எழுத்தாளர்களில்
சமகாலப் பதிவர்களில்
ஒரு சிலரை
அதே சமகால வாசகர்கள்
ஏசுவதற்கும் மேலாய்!!

வலியவன் ஒருவன்
எங்கோ ஒரு மூலையில்
இருப்பானாய் இருக்கும்;
அவனையும் வெல்ல
நீ உன்னுள் போட்டியிடு!
நீ உன்னுள் போட்டியிடு!!

Do not accept anything but the best. Compete with yourself, not others, to achieve. The person you are tomorrow should definitely be better than what you are today. Use every opportunity that comes your way - M.S. Swaminathan.

Cut And Dried!

வணக்கம் மக்களே! வார நாட்கள்ல கொஞ்சம் அப்படி இப்படித்தான்.... இன்னும் ஓரிரு வாரங்களுக்கு கூடுதலா வேலை பார்க்க வேண்டி வரும்போல இருக்கு, அதான் நம்ம கடைய வார இறுதி நாட்கள்லயாவது திறந்த வைக்கலாமுன்னு...இஃகிஃகி!

போட்டி... போட்டி... போட்டி.... இதுதான் இப்ப ஊரோட நிலைமைன்னு மக்கள் சொல்றாங்க... எனக்குத் தெரியாது... கடைசியா நான் ஊருக்கு வந்தது
Dec 2006, அதுவும் ஓரிரு வாரங்கள் மட்டுமே... அதுக்கு முன்னாடி 2003னு நினைக்கிறேன்... சரியா நினைவுல இல்லை. எனவே தாயகத்தைப் பற்றிய என்னோட கருத்துகள் தவறாகக் கூட இருக்கலாம்.

வெற்றிக்கு நூறு வழிகள்.... தொழிலில் வெற்றி பெறுவது எப்படி? வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? இப்படி நிறைய நூல்களை நீங்க சந்தையில பார்க்கலாம். சாத்தான் ஓதுற வேதம் போல அவங்க அவங்க கருத்துகளை எழுதி இருப்பாங்க... அது மட்டுமல்லாம, பள்ளிக் கல்வியிலும் அதே நிலைதான். நூற்றுக்கு நூறு வாங்குற மாணவன், ந்ல்லவன்ங்ற மனப்பான்மை வேற?

என்னோட அனுபவத்துல முன்வரிசை மாணவனைவிட, கடைசி வரிசை மாணவந்தான் வாழ்க்கையில ஒளிர்ந்துட்டு இருக்காங்க. ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி இங்க (U.S) வந்துட்டுப் போனானே என்னோட மாமன் மகன்?! எப்பவுமே அவனைக் குறை சொல்லிட்டே இருப்பாங்க வீட்ல... பத்தும் பத்தாத மதிப்பெண் வாங்கித்தான் படிப்பை முடிச்சான்.

ஆனாப் பய, கெட்டிக்காரன்! சூலூர்க் குளத்துல அவனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்த நாள்ல இருந்து, அவனும் நானும் மாமன் மச்சான்ங்றதை விட, நண்பர்களாத்தான் இருக்கோம். அவன் பனிரெண்டாம் வகுப்புல வெறும் 730 மதிப்பெண் வாங்கினான்னு ஊரே கைகொட்டி சிரிச்சுச்சு. நான் மட்டுந்தான் அவனுக்கு ஆதரவா இருந்தேன். இவன் பெரிய ஆளா வருவான்னு வேற பிரகடனம் செய்தேன்.

அவன் செய்யாத வாலுத்தனம், விடலைத்தனம் கெடையாது. இப்ப அவனுக்கு 25 வயசுதான் ஆகுது. போன வாரத்துக்கு முந்தின வாரம் Congnizantங்ற நிறுவனத்தோட பிரதிநிதியா வந்து, பெரிய வியாபாரத்தை வெற்றி கண்டுட்டுப் போயிருக்கான். அவனோட பேச்சுத் திறமை என்ன? சுதாவாரியா (spontaneous decision making) முடிவை எடுக்குற பாங்கு என்ன??

அவன் பல்வழி அழைப்பினூடாப் பேசிட்டு இருக்கும் போது, மெய் மறந்து அவனையே பார்த்துட்டு இருந்தேன். எப்படி அவனுக்கு இந்த தலைமைப் பண்பு வந்துச்சு? வெற்றி, வளர்ச்சி, சுயமுன்னேற்றம்ன்னு அடுத்தவங்க போடுற தூபத்துக்கு அவன் ஆளாகாததே காரணம்?! போதனை இருக்கலாம்; ஆனா வழிகாட்டுதல்ங்ற பேர்ல, ஒருத்தரை அந்த வழிதான்னு ஏன் கண்ணைக் கட்டி வுடுறீங்க?

இப்பவும் சொல்றேன், 25 வயசுல இந்தப் போடு போடுற அவன், ஒரு நாள் பெரிய நிர்வாகியாக ஆவான். எனக்கு நம்பிக்கை இருக்கு! ஏன்னா, அவன் கட் அண்டு ரைட்டாப் பேசுற ஆள் அப்படீன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, அதனோட உட்பொருள் வேற ஆச்சே?

ஆமாங்க, அவன் தெளிவான ஆள்! அவனுக்குப் பிடிச்சது எதுன்னு தெரிஞ்சி, வாழ்க்கைய அனுபவிக்கப் பிறந்தவன். தனக்குப் பிடிச்சதை, முறையான வழியில வாழ்க்கையின அம்சமாக்குறதுதான சிறந்த வாழ்க்கைனு சொல்ல முடியும்?!

சரி, அது என்ன அந்த கட் அண்டு ரைட்டு? இஃகிஃகி, அது cut and right அல்லங்க; cut and dried! அதாவது, மருத்துவத்துக்கு தேவையான வேர்கள், காய்களை வெட்டி உலர்த்தி, உடனடி (ready made) நிவாரணமா வெச்சி இருக்குறதைக் குறிக்கும்படியாப் பரங்கியர்கள் பாவிச்சதுதாங்க இந்த cut and dried! Prepared in advance or prepared and final!!

இதே மாதரத் தமிழ்லயும் நம்ம பெரியவங்க ஒரு வழக்குத் தொடரை உருவாக்கி இருக்காங்கல்ல?!
யாரு, நம்ம சாரதா டீச்சர் மகன் இராமுதானே? அவன் நம்ம பய சார்! அவன் வெட்டிட்டு வாடான்னா, கட்டிட்டு வாற பயலாச்சே?! நாஞ்சொன்னாக் கொலை கூடச் செய்வான்!!

ஆமாங்க, போயி வெறகு வெட்டிட்டு வா போன்னு சொல்லும் போது, வெறகை வெட்டுறது மட்டுமில்லாம, அதுகளை வாகாச் சிறுசு சிறுசா வெட்டிச் சுமக்குற கட்டைகளாக் கட்டுற சமயோசிதந்தாங்க அது. அப்படி நம்மபய, அதாங்க மாமம்மகன் சதீசு இருக்கானே, அவன் வெட்டிட்டு வாடான்னா, கட்டிட்டு வாற பய அவன்!9/11/2009

சுயம்

மக்களே,

$13 மில்லியன் திட்டப்பணிய என்னை நம்பிக் கொடுத்து இருக்காங்க. அதுக்கு ஒரு நெருக்கடின்னு வரும் போது, முழு ஒத்துழைப்பையும் நல்கனுந்தானே? அதான், வலைப்பக்கம் ஒதுங்க முடியலை சரிவர. அது இன்னும் சில நாட்களுக்குத் தொடரும்.


அன்பர் PKP தனது இடுகையில சொல்லி இருக்கார்: மிகக் கடினமானவை மூன்றுண்டு

1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது


என்னைப் பொறுத்த வரைக்கும், எனது ஓய்வு நேரத்தை தமிழ் கற்பதிலும், கற்றதை வலைப்பூ வழியாகப் பகிர்ந்து கொள்வதிலும் செலவிடுறேன். ஆனால் பதிவுலகம் என்பதே அவசரமற்றது, முக்கியமற்றது, சுயமுன்னேற்றத்துக்கு உதவாததுன்னு சொல்லிட்டாங்களே? எல்லாருமே சுயம்ன்னு இருந்துட்டா, அப்ப பொது?


9/08/2009

09/09/09

09/09/09

அறம் அறம் என்று வாயால் பேசலாம்; கையால் எழுதலாம். பேச்சும் எழுத்தும் அறமாகப் பரிணமித்தல் அரிது. அறம் என்பது ஒவ்வோர் ஆடவர், மகளிர் உள்ளத்திற் படிந்து, குருதியிற் றோய்ந்து, வாழ்வில் மலர்தல் வேண்டும்.

மக்கள் வாழ்வு, அறத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்து நிலவுமேல், உலகிடை அறக்கடவுளுக்கும் இடனுண்டாகும். அவ்வறமில்லா வாழ்வில் அமைதியாதல் அன்பாதல் இன்பமாதல் எங்கனம் செழிக்கும்?

பத்திரிகைகளால் உலகம் அரிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் பிற கொடுமைகளைப் பற்றியும் இன்று இவண் விரிக்கிற் பெருகும். இதுபோழ்து பொதுவாழ்வில் தலைப்படுவோர் உள்ளும், பொறாமை அவா முதலியன எழுந்து ஆடல் புரிகின்றன.

இவ்வேளையில் இலைமறை காயென ஆண்டாண்டுள்ள அறவோர் அறநிலை ஓம்ப முற்படல் வேண்டும். அற நிலைக்கு மாறுபட்டோர் சுமத்தும் பழிகளுக்கு அஞ்சாது கடனாற்றும் மன உறுதி அன்னார்க்கிருத்தல் வேண்டும். ஒரு சிறு அறக் கூட்டத்தார், பிறர் புகழ் இகழ் ஒன்றையுங் கருதாது அறத்தொண்டாற்ற எழுவாராக! அன்னார் முயற்சிக்கு ஆண்டவன் துணை செய்வானாக!!

திரு. வி. கலியாணசுந்தரன்
02-02-22.

9/07/2009

வாய்ப்பந்தல்!

வலைப்பூவுக்கு இடுகை எழுதி, அதைச் செம்மைப்படுத்திச் சீர் செய்து இட்டு, இட்ட பின் திரட்டிகளின் இற்றைப் படுத்துதலுக்கு ஆட்படுத்தி ஆயிற்று. பின்னர் அதையே ஒற்றி எடுத்து, மின்னஞ்சல்க் குழுக்களிலும் பலர் படிக்கப் பணித்தானவுடன், இட்ட இடுகைக்கு மறுமொழிகள் ஒன்றன் பின் ஒன்றாய் வரலாயிற்று.

என்றாலும் இவன் மனக் கட்டுப்பாடுடன், தான் வாசிக்கும் அனுமன் - வார்ப்பும் வனப்பும் எனும் நூலோடு ஒன்றிப் போய்விட்டான். நினைத்திருந்தை விடவும் நிறையவே வாசித்து முடிந்திருக்கையில் மணி இரவு 11.00.

அடுத்த நாள் labour day holiday என்பதை நினைவு கொண்டவனாய், கணினியை முடுக்கிவிட்டு மின்னஞ்சல்களை வாசிக்க யத்தனித்து, தானிட்ட இடுகைகளின் மறுமொழிகளுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தான். அந்தச் செய்கையானது மடலாடல்(email exchange)களாய் மாறிப் போகவே, கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் அதற்கு இரையானது.

மடலாடல்கள் ஓய்வு நிலையை எட்டிய உணர்வுக்கு ஆட்பட்டவனாய் உணரத் துவங்கியதுதான் தாமதம், மின்னா(chat)டலில் ஒருவர் ஏதோ கேட்க, இவன் ஏதோ சொல்ல அடுத்த ஒரு மணி நேரமும் காற்றில் விடப்பட்ட கற்பூரமாய்க் கரைந்தது. மின்னாடலில் வந்தவன், மின்னாடலோடு விட்டானா? சிட்டாடலில்(twitter) சிரிப்பாய்ச் சிருங்காரம் பரிமாறப்பட்டுக் கொண்டு இருக்கிறது, அதை நீ வந்து பாரென்றான்.

பார்த்த இவன் வாளாதிருந்தானா? தன் பங்குக்கும் சிருங்காரமாய்ச் சிலாகிக்கத் துணை போனான். சிட்டுகளைச் சிட்டியதில் முந்திய நாள் மரித்துப் போய், புதிய நாளொன்று பிறந்து, அன்றைய நாளின் ஆயுளில் மூன்று மணி நேரம் முடிந்து போயிருந்தது. அதிகாலை மணி மூன்று.

குளிரூட்டுப் பெட்டியில் இருந்த நான்கு வீட்டுச் சோறையும் பிரித்துப் பார்த்தவன், அதிலிருந்த காய்கறிச் சோறை மட்டும் வெளியிலெடுத்து, நுண்ணலை (microwave) அடுப்பில் இட்டு வெப்பமூட்டி, அந்தக் காய்கறிச் சோறை ரசித்து, ருசித்துப் புசித்தான்.

உண்டதும் நித்திரைக்குச் சென்றால், மத்தியில் புடைத்திடுமே என அஞ்சியவன் சிறிது நேரம் காலத்தைக் கழிப்போம் என எண்ணி, மீண்டும் கணினிக்குள் விழுந்து வலைப் பூக்களை நுகர விழைந்தான். ஏ அப்பா, எப்படி எல்லாம் எழுதுகிறார்கள், எண்ணி வியந்தான், வாசித்தான், வாசித்தான், வாசித்துக் கொண்டே இருந்தான். வெடுக்கென வலது ஓர மூலையைப் பார்த்தவன் கண்களில்பட்டது மணி 4.45 AM.

துயில் கொள்ளச் சென்றான். சென்று விழுந்த வேகத்திலேயே நித்திரையின் ஆழத்துக்குச் சென்று விட்டான். எங்கோ ஊரின் ஒரு கோடியில் இருக்கும் மாதா கோவிலில் இசைப்பது போன்ற ஒரு நினைவு. அந்த நினைவானது கூடிக் கூடி கடைசியாக மூளையில் ஒரு விளக்கை எரியவிட்டுச் சொன்னது, அது உன் அலைபேசி என. அரைகுறை மனதோடு அதை எடுத்து விரித்துப் பேசலானான்.

“அகோ!”

“டேய் மாப்புளை, காலையிலயே வாறன்னு சொன்னியேடா, மணி பதினொன்னு ஆகுது. எத்தினிதடவை கூப்புடுறது? போனும் எடுக்க மாட்டேங்குற?”

நினைவுகளை மீட்டெடுத்தவனாய்ச் சுதாரித்துக் கொண்டு, “ஓ அதுவா?”

“என்ன ஓ அதுவா? Blogல எழுதறம் பேர்வழின்னு கண்ட கண்டதையும் எழுதிட்டு, நேரத்தை வீணாக்குறது. உந்தங்கச்சி நீ சாப்புட வருவேன்னு அங்க காத்திட்டு இருக்காடா!”

“இல்ல மாப்புளை, உந்தங்கச்சி ஊர்ல இருந்து புள்ளைகளோட vaccination(தடுப்பூசி) records எல்லாம் டாக்டர் ஆபிசுல இருந்து வாங்கி அனுப்பச் சொல்லுச்சு அல்ல; அதான் டாக்டர் ஆபிசுக்கு வந்தேன்!”

“இந்த எழுத்தாளருகதான் பெரிய டுபாக்கூர்னு பார்த்தா, நீங்க ஏன்டா இந்த frauduத்தனம் பண்ணுறீங்க?”

“இதா ஒடனே டாக்டர் ஆபிசுல இருந்து நேரா அங்கதான் வந்துட்டு இருக்கேன்!”

“போதும்டா உன்னோட வாய்ப்பந்தல்! Why don't you stop wasting your energy? கதைவத் தெற, வெளிலதான் நான் நிக்கிறேன்!”

9/06/2009

பப்பு உன்னாதா அடுகிதே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு!

வீட்டுக்கு முன்னாடி ஓடி ஆடி விளையாடிட்டு இருப்போம். திடீர்னு வீட்ல இருக்குற பெரியவங்க, ”இங்க வா, கடைக்குப் போயி இன்னது வாங்கிட்டு சீக்கிரமா வா, போ”ன்னு சொல்லிச் சொல்வாங்க. நாமளும் அடக்க ஒடுக்கமாப் போயி கடையில நிப்போம்.

நமக்குன்னு முறை வந்த உடனே, இன்னது வேணும்னு சொல்ல, பதில் வரும் பாருங்க, அன்னது இருக்கு வாங்கிட்டுப் போப்பா தம்பின்னு. மறுபடியும் நாம, இல்ல, எங்கம்மா அந்த இன்னதுதான் வாங்கியாறச் சொன்னாங்கன்னு சொல்வோம். கடைக்காரரு, தம்பி இந்த அன்னது வாங்கிட்டுப் போப்பான்னு எந்த சலனமும் இல்லாமச் சொல்வாரு.

இதைத்தான் கிராமப் பக்கம் இருக்குற வணிகரைக் கிண்டலாச் சொல்வாங்க, ”பப்பு உன்னாதா அடுகித்தே, உப்பு உன்னாதி செப்பேடு வாடு”ன்னு. அதே மாதிரி தாங்க, நண்பர் ஒருத்தரு மின்னாடல்(chat)ல வந்தப்ப சொன்னாரு, ஊர்ல இருந்து எங்க அம்மா வந்திருக்காங்கன்னு. நான் உடனே, அப்ப ஊர்ல இருந்து முறுக்கு வந்திருக்கான்னு கேட்க, அவர் தேன்குழல் வந்திருக்குடான்னு சொல்றாரு! என்னாவொரு வில்லத்தனம்?!

வணிகனுக்கு, தன் கடையில ஒரு பொருள் இல்லைன்னு சொல்லக் கூடாதுங்றது ஒரு மரபு. விற்பனை யுக்தி! அட இந்த சாமான்யர்களுக்கு என்ன வந்தது? ஆமா, முறுக்கு வரலை; பதிலா தேன்குழல் வந்திருக்கு சொன்னா என்ன? என்ன?? என்ன???

இப்படித்தான் நான் அவசரப்பட்டு ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டுக்கு வந்தேன். அப்புறமாத்தான் புரிஞ்சது, அது தன் தாயின் மேல அவர் வெச்சி இருந்த அபரிதமான அன்பையும் பற்றுதலையும் வெளிப்படுத்துதுன்னு. தனது தாய் தனக்கு இன்னது கொண்டு வரலைன்னு சொல்றதுக்கு மாறா, இன்னது கொண்டு வந்திருக்காங்கன்னு சொல்லி நிறைவுக்கு இட்டுச் செல்லுற நல்ல மனசுதாங்க அது.

அதே நாள்ல இனியொரு விசயமும் நடந்துச்சு. பண்பட்ட எழுத்தாளர்கிட்ட சிறுகதை பற்றின, எனக்கிருந்த ஒரு ஐயப்பாட்டை வினவ, அவரு மடை திறந்த வெள்ளம் போலத் தகவல்களை, அதுவும் மிகவும் பயனுள்ள தகவல்களை அள்ளிக் கொட்டுனாரு. போதாக் குறைக்கு இடையில இடையில, ”தம்பி நான் உங்க நேரத்தை வீணடிக்கிறனா?”ன்னு வேற கேக்குறாரு. இந்த நல்ல மனிதர்களை எல்லாம் அடையாளம் காண்பிக்கும் எழுத்துலகுக்கு நாம மிகவும் நன்றிக் கடன்பட்டு இருக்கோம், சரிதானுங்களே?!

அதே நல்ல மனசோட, வாங்க மனையடி சாத்திரம் (1871) என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம். அதுல நூலாசிரியர் எவ்வளவு தன்னடக்கத்தோட ஆரம்பிக்கிறார் பாருங்க:

பழத்தொடு நெய்ப்பாற் கற்கண்டு பகர்ந்தோரடி சிற்றன்னை
கழிப்பரோ நல்லோர்தாமும் கனமுளவறி விலோர்கள்
பழிப்படு சாத்திரத்தின் வண்மை புல்லறிவன்கூறப்
புழுதியிலுறினுங்கற்றோர் பாவிப்பார் நலமாய்த்தானே!


வாழைப் பழமும் நெய்யும் பாலும் கற்கண்டும் சர்க்கரையும் கலந்த அன்னத்தில், கற்களை மாத்திரம் நீக்கி இன்பமாய் உட்கொள்தல் போல, இந்த புல்லறிவாளன் யான் சொல்லும் இந்த நூலில் பிழையேதும் இருப்பின், மேலான வாசகர்கள் அக்குற்றங்களைக் களைந்து மற்றனவற்றை நலமாய்ப் பாவிப்பீராக!

அன்றைக்கெல்லாம் இயற்கையொடு இயற்கையா மனிதன் வாழ்வு அமைஞ்சு இருந்துச்சு. ஆகவே, பெரியவர்கள் இயற்கைய ஆராய்ஞ்சி, அப்போதைய வளங்களை ஆதாரமா வெச்சி சொன்ன Guidelines, வழிகாட்டுதல்கள்தான் இந்த சாத்திரம்.

அப்புறம் மனித வளமும் விஞ்ஞானமும் வளர வளர, அவங்க சொல்லி வெச்ச வழிகாட்டுதல்களும் பயனற்றுப் போச்சுது. அதற்காக அவங்க சொன்னது தப்புன்னு ஆயிடாது. அந்த கால கட்டத்துக்கு அது சரி!


மாற்றங்கள் நிகழ, நிகழ, அவர்களோட அந்த நல்ல நோக்கமும் கூடச் சேர்ந்து பிறழ்ந்து போச்சு, அதான் வருந்தத்தக்க விசயம்! அதானாலேயே ஊர்கள்ல இப்ப அவலங்கள் நிறைய. தன் தேவைக்கு வீடு கட்ட வாங்குற மனையிடங்களைக் காட்டிலும், வணிகத்துக்கு வாங்குற இடங்களின் எண்ணிக்கைதானே அதிகம்?!

எது எப்படி இருந்தாலும் நாம என்ன செய்ய முடியும்? பெரியவங்க சொன்னதுல ஒன்னைப் பார்க்கலாம் வாங்க!

அளந்ததோர் குழியின் மண்ணை யகழ்ந்தகமேலே விட்டால்
வளர்ந்திடிற் செல்வமுண்டா மொத்திடின் மிகுதியில்லை
களந்தனிற் குறையுமாகில் குறைந்திடுஞ் சம்பத்தொன்றே
யுளந்தனிற்கருதி நல்லோ ருரைத்தனர் புவியின்மீதே!


கெல்லின குழியில் எடுத்த மண்ணை, மீண்டும் தோண்டிய அதே குழியில் இடும் போது மண் மீதமானால் அந்த நிலமானது வலுவான நிலம், ஆகவே இலாபகரமானது அது. அதுவே கெல்லின குழிக்கும் எடுக்கப்பட்ட மண்ணுக்கும் சரியாய் இருந்தால் மத்திபமான நிலம். குழியில் இடும்போது, கெல்லின குழியை நிரப்ப மண் போதவில்லையாயின் மண் செறிவற்ற நிலம் என்பது புலனாகிறது. எனவே அந்த நிலம் நட்டத்தை விளைவிக்கக் கூடிய நிலம். இதாங்க அந்த சாத்திரத்துல ஒன்னு.

விஞ்ஞான ரீதியாவும் சரியா இருக்கல்ல? இன்னும் இது போல நிறையச் செய்யுள் இருக்கு. படிச்சு பார்த்து பொருள் கொள்ள நேரம் பிடிக்குது. அதான், இந்த ஒன்னோட நாம இன்னைக்கு அப்பீட்டு... வர்றேன்.... இஃகிஃகி!

9/05/2009

Cousin In Law

மக்களே அனைவருக்கும் வணக்கம்! நேற்றைக்கு வெளியூர்ல இருந்து வந்ததுமே, இரவைச் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிக்க யோசிக்க, அண்ணன் சீமாச்சு அலைபேசில அழைச்சு, வந்திருங்க வீட்டுக்குன்னு சொன்னாரு.

கஞ்சி கண்ட இடமே கைலாசம்; சோறு கண்ட இடமே சொர்க்கம்னு இருக்குற நமக்கு, இதைவிட வேற என்ன வேணும்?! அழைச்ச அஞ்சாவது மணித் துளிகள்ல, அவங்க வீட்டுப் படையலை ஒரு பிடி பிடிக்கப் பாய்ஞ்சி போனம்ல?!

எப்ப அவங்க வீட்டுக்கு போனாலும், சுவாரசியத்துக்குப் பஞ்சமே இருக்காதுங்க. நேற்றைக்கு அண்ணன் பகிர்ந்துகிட்ட சுவாரசியத்துல ஒன்னோட சாராம்சந்தான் இது. அவரோட மகள், ஆறு வயது சூர்யாதான் நம்ம இடுகையோட கதாநாயகி.

“நாம எல்லாரும் நியூயார்க் போகும் போது என்னோட cousin வீட்டுக்குப் போயிட்டு அப்புறம் வெளில போகலாம்!”


o.k Daddy, எப்ப போகப் போறோம்?”

உரையாடல் அப்படியே தொடர்ந்து முடிஞ்சதுக்கு அப்புறம், காட்சி மாறுது. சமயலறையில தாயுடன், நம்ம கதாநாயகி சூர்யா இப்ப!

Mummy, நாம நீயுயார்க் போறப்ப உங்க cousin in law வீட்டுக்குப் போறமா?”

பலத்த சிரிப்போட, “what? who is my cousin in lawdah?? என்ன சொல்லுற?”

“ஆமா, அப்பாவோட அப்பா உங்களுக்கு Father In Law! அப்ப அப்பாவோட cousin, உங்களுக்குக் cousin in lawதானே?”

“இஃகிஃகி”

இதைக் கேட்ட எனக்கும் சிரிப்புதான். குழந்தை தன்னோட தருக்க(logic)த்தை வெகு அழகாத்தான் வெளிப்படுத்தி இருக்கு. ஆனாப் புழக்கத்துல இந்த சொல் இல்லை. இருந்தாலும், அதை உறுதிப்படுத்திக்கலாம்ன்னு வலையில மேய்ஞ்சப்பதாந் தெரிஞ்சது, உள்ளபடியே அப்படி ஒரு சொல் ஆங்கிலத்துல இருக்குன்னு.

cousin-in-law

Husband of one's cousin
Wife of one's cousin
Cousin of one's husband
Cousin of one's wife
Husband of the cousin of one's husband
Husband of the cousin of one's wife
Wife of the cousin of one's husband
Wife of the cousin of one's wife


இப்ப இதுகளை உங்க மனசுல நிறுத்தி, உங்க cousin in law யாரெல்லாம்னு அடையாளப் படுத்த முயற்சி செய்யுங்க பார்க்கலாம்! என்னா வில்லத்தனம் இவனுக்குன்னு, நீங்க காந்தலி(tension)க்கிறது தெரியுது. கோபப்படாம முயற்சி செய்யுங்க....

சரி, இனி இதுகளைத் தமிழ்ல என்ன சொல்றதுங்றதுக்கு முன்னாடி, உறவு முறைகளோட தமிழ்ப் பெயர்களைப் பார்க்கலாம் வாங்க.

தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன், தா, நாயன்

தாய், அம்மை, அவ்வை, அன்னை, அஞ்ஞை, அத்தி, ஆத்தி, ஆத்தை, அச்சி, ஆச்சி, ஐயை, ஆய், தள்ளை

மகன், புதல்வன்

மகள், புதல்வி

பொதுவானதாக, மகவு, பிள்ளை, சேய், மதலை, கான்முளை, மக்கள்

அண்ணன், தமையன், ஆயான், அண்ணாட்சி, அண்ணாத்தை, தம்முன், மூத்தோன், முன்னோன்

தம்பி, தம்பின், இளவல், இளையான், பின்னோன்

அக்கை, அக்கைச்சி, தமக்கை, மூத்தாள், அச்சி

தங்கை, தங்கை அச்சி, செள்ளை, இளையாள், பின்னை, பின்னி

அண்ணன் மனைவி, அண்ணி, ஆயந்தி, நங்கை, அத்தாச்சி

அக்கை கணவன், அத்தான், மச்சான், மாமன்

மருமகன், மருமான், மருகன், மணவாளன்

மருமகள், மருமாள், மருகி, மணாட்டுப் பெண்

பெண் கொடுத்தோன், மாமன், மாமி

கணவன், அகமுடையான், கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன், மணாளன், வீட்டுக்காரன்

மனைவி, அகமுடையாள், இல்லாள், மனையாள், பெண்டு, பெண்டாட்டி, கண்ணாட்டி, மணவாட்டி, வீட்டுக்காரி (damager?!)

கணவனின் தம்பி - கொழுந்தன், கணவனுடைய அண்ணன் - அத்தான், மூத்தார், கணவனுடைய தங்கை - கொழுந்தி, கணவனுடைய அக்கை - நாத்தூண், நாத்துணாள்

மனைவியின் அண்ணன் - மூத்த அளியன், அத்தான், மனைவியின் தம்பி- இளைய அளியன், மனைவியின் அக்கை - மூத்தளியாள், கொழுந்தி, மனைவியின் தங்கை (most wanted?!) - இளையளியாள், கொழுந்தி

ஓரகத்தான் - ஓர் குடி மணாளன், ஓர் குடியோன் (சகலன்)

ஓரகத்தி - ஓர்ப்படி, ஓர்ப்படைச்சி (ஒரே வீட்டில் புகுந்தவர்கள்)

தந்தையண்ணன், பெரியப்பா, மூத்தப்பா, பெரியையா

தந்தை தம்பி - சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா

தந்தை சகோதரி, அத்தை, சின்னத்தை, பெரியத்தை

தாயின் சகோதரன், பெரியம்மான், சின்னம்மான், அம்மாண்டார், அம்மான் (மாமன் அல்ல)

தாயின் அக்கை, பெரியம்மை, பெரிய தாய், பெரியம்மா

தாயின் தங்கை, சின்னம்மா, தொத்தா, சித்தி, பின்னி

தந்தையின் தந்தை, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார்

தந்தையின் அதாய் - அப்பாச்சி, அப்பாத்தை, அப்பத்தி, அப்பாய்

தாயின் தந்தை, அம்மாச்சன்

தாயின் தாய், அம்மாச்சி, அம்மாய், அமிஞை, அம்மத்தா

பெற்றோர் தந்தை, பாட்டன், போற்றி, போத்தி

பெற்றோர் தாய் - பாட்டி

பாட்டன் தந்தை - பூட்டன், அப்பாட்டன், கொள்ளுப்பாட்டன்

பாட்டன் தாய் - பூட்டி, கொள்ளுப் பாட்டி

பூட்டன் தந்தை - ஓட்டன், சீயான், சேயான்

பூட்டன் தாய் - ஓட்டி, சீயாள் (சேயாள்)

மச்சினன்/மச்சம்பி: தங்கை கணவன், அம்மான் மகன், அத்தை மகன், இல்லாளின் சகோதரன், வயதில் இளையவன், மூத்தவன் மச்சான்

மச்சினி: இல்லாளின் தங்கை, அம்மான் மகள், அத்தை மகள் (வயதில் இளையவள், மூத்தவள் மச்சாள்)

மச்சாண்டார்: கணவனின் மூத்த சகோதரன்


மகன் மகன், மகள் மகன் - பெயரன், பேரன்

மகன் மகள், மகள் மகள் - பெயர்த்தி, பேத்தி

பேரன் மகன் - கொள்ளுப் பேரன், பொட்பேரன்

பேரன் மகள் - கொள்ளுப் பேர்த்தி, கொட்பேர்த்தி

சக நிலையில் களம் புகுந்தவள், சககளத்தி, சக்களத்தி, ஒக்களத்தி

Cousin என்பது போல பொதுச் சொல், அண்ணாழ்வி, மூத்தாழ்வி, இளச்சனாழ்வி

Cousin-In-Law? மருஆழ்வி

மேல கொடுத்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு அளித்துச் சென்ற மொழிஞாயிறு பாவாணர் ஐயா அவர்களுக்கும், போப் அடிகளாருக்கும் நம்ம நன்றிகளைச் சொல்லிட்டு, cousin in law குறித்த தகவலுக்கு போலாம் வாங்க.

Husband of one's cousin: ஒருத்தருடைய ஆழ்வியோட கணவன். உதாரணத்துக்கு சொல்லப் போனா, பெரியப்பா மகள், வயசுல மூத்தவர்ங்றதால அவர் மூத்தாழ்வி. அவரோட கணவர் மூத்த மருஆழ்வி, மூத்த மராழ்வி.

Wife of one's cousin: மேல சொன்னதோட பெண்பால், மருக்கையாழ்வி

Cousin of one's husband: மூத்த மராழ்வி, இளைய மராழ்வி

Cousin of one's wife: மரு தங்கையாழ்வி, மருதங்காழ்வி

Husband of the cousin of one's husband: உதாரணத்துக்கு, என் மனைவியின் பெரியப்பா மகளோட கணவன், என்னோட மனைவிக்கு மருஅண்ணாழ்வி, வயசுல மூத்தவரா இருக்கும்பட்சத்தில்

Husband of the cousin of one's wife: உதாரணத்துக்கு சொல்லப் போனா, என்னோட damagerக்கு, ச்சீ, என்னோட இல்லாளுடைய இளையாழ்வியின் கணவர் எனக்கு மரு இளையாழ்வி.

Wife of the cousin of one's husband; கணவரோட அக்கையாழ்வி அல்லது தங்காழ்வியின் கணவர், மரு அக்காழ்வி அல்லது மரு தங்காழ்வி.

Wife of the cousin of one's wife: மனைவியின் அண்ணாழ்வி, அல்லது இளையாழ்வியின் மனைவி, மரு அண்ணாழ்வி அல்லது மரு பின்னாழ்வி.

இந்த ஏழு தலைமுறை, ஏழு தலைமுறைன்னு சொல்லுறாங்களே? அது?? சேயோன்(ஓட்டன்), பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன் ஆகிய இதுகள்ல, முதலும் கடையும் போக மிஞ்சியதைச் சொல்றதுதாங்க அது.

பொறுப்பி: போங்க, தாராளமாப் போயி இங்க நீங்க படிச்ச உறவு முறைகளோட பெயர்களை வெச்சே உங்க உறவுக்காரங்களை விளிச்சி அழைச்சி, கொஞ்சிக் குலாவுங்க... யார் வேண்டாமுன்னு சொல்றா இங்க?!

ஆனா மகனே, நீங்க ஆழ்வி, மருஆழ்வி, ஓட்டன், பூட்டன்னு எல்லாம் விளிச்சு அழைச்சுதை அவங்க ஏத்துகிட்டா மகிழ்ச்சி. விளைவு வேறவிதமா ஆகி, ஏதாவது இரசாபாசம் ஆச்சுதுன்னா அதுக்கெல்லாம் நாம பொறுப்புக் கெடையாது; சொல்லிப் போட்டஞ் செரியா?!

(பொறுப்பி -> பொறுப்பு அறிவித்தல் --> டிஸ்கி - > Disclaimer)

9/03/2009

மச்சூட்டு மஞ்சுளாவை, மறக்காமக் கேட்டு வையி!

புவியின் விரிப்பில், காற்றின் தழுவலில், லெளகீக வலையில், ஒவ்வொரு நாளும் இனிமையாகக் கழிதல் நன்றே! எனினும், தெரிந்த, தெரியாத, அறிந்த, அறியாத பலவற்றால் இனிமை நுகர்வது அவ்வப்போது தடைபடுகிறது. ஆனாலும் நம்பிக்கை எனும் துடுப்போடு, கால வெளியில் மிதந்து தவழ்வதுதானே வாழ்க்கை?

இனிய மாலைப் பொழுது, அந்த ஆண்டின் இறுதித் தேர்வு நாள் அது. மூன்று மணி நேரத் தேர்வு; பிற்பகல் 1.30 மணிக்குத் துவங்கி மாலை 4.30 மணி வரையிலும் நடைபறக் கூடியது. ஆனாலும் இவன் மூன்றரை மணிக்கெல்லாம் எழுதிய தாள்களைச் சமர்ப்பித்து விட்டு, வீட்டை நோக்கி கண்மண் தெரியாமல் ஓடோடி வந்தான்.

ஆம், முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விட்டது. மாலை ஐந்து மணிக்கு, இலக்கம் மூன்று இட்ட பேருந்தைப் பிடித்து, உடுமலை அந்தியூரில் இருந்து தனது தாய்வழிப் பாட்டனாரின் ஊரான லெட்சுமாபுரம் போக வேண்டும் என்கிற வேட்கை அவனுக்கு. வீட்டிற்குள் நுழைந்ததும், நுழையாததுமாய்ப் பள்ளிச் சீருடைகளைக் களைந்து விட்டெறிந்தான். ஆம், அவற்றின் ஆயுள் அன்றோடு முடிகிறது. அடுத்த ஆண்டு, புதுச் சீருடைகள் தானெனுக்கு என்கிற செருக்கு நீக்கமற நிறைந்திருந்தது அவனிடத்தில்!

லெட்சுமாபுரம் சென்றால், பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் நீச்சல் அடிக்கலாம். பாட்டனாரின் தோப்பில் இளநீராய்க் குடிக்கலாம். தோட்டத்தில் எவருமில்லாத நேரத்தில், குண்டலப்பட்டித் தோப்பில் கள்ளு மாந்தலாம். இரவானால் நண்பர்களோடு, மிதிவண்டியில் கரட்டூர் சுகந்தி திரை அரங்கிற்கு இரண்டாவது ஆட்டம் பார்க்கப் போகலாம். அனைத்தையும் நினைத்து நினைத்து, அவன் மனவானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தான்.

பெற்றவர்கள் காலையிலேயே இவனிடம் ஐந்து மணி வண்டிக்கு ஊருக்குப் போக அனுமதித்து விட்டு, அவர்கள் தோட்டம் சென்று விட்டிருந்தனர். வீட்டில் இருந்ததெல்லாம், தந்தைவழிப் பாட்டனார் மட்டுமே. அவருக்கா, தன் வாழ்நாளிலேயே இவன் மூலமாக தன் மகள் வயிற்றுப் பேத்தியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டுமென்ற ஆசை. அந்தச் சூழலில், மாமன் மகள்கள் இருக்கும் ஊரான லெட்சுமாபுரம் செல்ல, இவன் யத்தனித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கச சகிக்குமா அவருக்கு?

”டேய், என்றா கண்ணூ? எங்கியோ பயணப்பட்டுட்டு இருக்கயாட்ட இருக்கூ?”

“ஆமுங்க அப்பாரு, எனக்கு உனி ஒரு மாசத்துக்கு பள்ளிக்கூடம் லீவுங்; அதான் நான் அஞ்சு மணி வண்டிக்கு லட்ச்சுமாவரம் போறதுக்கு பொறப்பட்டு இருக்கணுங்!”

“டே கண்ணூ, அப்பார் சொல்றங் கெவனமாக் கேட்டுக்க,

குடி குடியக் கெடுக்கும்!
குட்டைக் கலப்பை உழவைக் கெடுக்கும்!
கீ காத்து மழையக் கெடுக்கும்!
மேயுற மாட்டை நக்கறது கெடுக்கும்!
அடிச்சோட்டாத காளைக சவாரியக் கெடுக்கும்!
வெளையுற பூமிய தோண்டாத அறுகு கெடுக்கும்!
வாங்குன கடன் ஒறவைக் கெடுக்கும்!
மொன்னை வால் வரவைக் கெடுக்கும்!
வளையாத உடம்பு பொழப்பைக் கெடுக்கும்!
கும்பிடாத கோயில் குலத்தைக் கெடுக்கும்!
புடுங்காத களை வெளைச்சலைக் கெடுக்கும்!
அடங்காத புள்ளை குடும்பத்தைக் கெடுக்கும்! ஆனா,
மடங்காத புள்ளை மானத்தைக் காப்பாத்தும்டா!


பாத்து, போன எடத்துல கவனமா இருக்கோணும். நெம்ப நாளைக்கெல்லா அங்க தங்கலைப் போட்றாத! போயிட்டு, ஒரு வாரம் பத்து நாளையில வந்துரு. வந்தவிட்டு, நாமெல்லாரும் உங்க அத்தையவிக ஊருக்குப் போயி ஒரு கெழமை இருந்து வரலாமாக்கூ! செரியா?”

அவர் சொன்னதைச் சிறிதும் விளங்கிக் கொள்ளாத இவன், ”செரீங், நான் அப்ப வாறன்” எனக் கூறி விட்டு, உற்சாக மிகுதியில் பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டே ஊர்த் தலைவாசலில் இருக்கும் பேருந்து நிறுத்துமிடம் நோக்கி விரைந்தான்.

மந்தையூட்டு மந்தராசலா
மச்சூட்டு மஞ்சுளாவை
மறக்காமக் கேட்டு வையி

பொள்ளாச்சி நல்லப்பாவுல
மஞ்சில் விரிஞ்ச பூக்கள்
பாக்கனமுன்னு சொல்லிவையி

டே, தையல்க் கடைத் தேவா
தெம்பறத்து பாக்கியத்தை
மறக்காம மடிச்சி வையி

தேவனல்லூர் காளியாத்தா
நோம்பிக்கு தூரி ஆட
அவகிட்டச் சொல்லிவையி

டே பூந்தோட்டத்துப் பொன்னுசாமி
டைனமோச் சைக்கிள் வாங்கிவையி
வாங்குனதும் வெரசலா வாநீயி

மந்தையூட்டு மந்தராசலா
மச்சூட்டு மஞ்சுளாவை
மறக்காமக் கேட்டு வையி!

பொள்ளாச்சி நல்லப்பாவுல
மஞ்சில் விரிஞ்ச பூக்கள்
பாக்கனமுன்னு சொல்லிவையி!!

9/02/2009

என்ன, எகத்தாளமா?

வணக்கம் மக்கள்சு! இப்பத்தான் Virginia Beach Towne Centreல இருந்து வர்றேன். நல்ல இந்தியச் சாப்பாடு. பம்பலாக் கூட வேலை செய்யுற பசங்களோட போயிட்டு வந்தாச்சு. ஆனாலும் இந்த பசங்களுக்கு என்னா எகத்தாளம்? கொஞ்சம் உள்ள போனதும், என்னா போடு போடுறாங்க??

அவனுகளோட இருந்துட்டு வந்ததுல, நாம ஊர்ல இருக்கும் போது செய்த எகத்தாளமெல்லாம் ஞாவகத்துக்கு வருது. அப்படித்தான் ஒரு நாள், முருகேசு வாத்தியார், முருகேசு வாத்தியார்னு ஒருத்தரு. அவர் சொன்னாரு, தீட்டத் தீட்டத்தான்டா வைரம். நான் உங்களை எல்லாம் கடுமையா வேலை வாங்குறனேன்னு நினைக்கப்படாதுடா அப்படின்னாரு.

சொல்லி முடிச்சதுதான் தாமுசம், பக்கத்துல இருந்த தீனதயாளன் எழுந்து, தீட்டத் தீட்ட வைரம் சரி, அதுக்கு மேலவும் சொல்லுங்க ஐயா அப்படீன்னான். அவ்ருக்கு மூஞ்சியில ஈயாடலை! அதைப் பாத்த, வாகத்தொழுவு மகாலிங்கன், நாஞ் சொல்றன் கேட்டுக்குங்கன்னு சொல்லி எடுத்து உட்டான்,

தீட்ட தீட்ட வைரம்
சுடச் சுடத் தங்கம்
தோண்டத் தோண்ட கெணறு
பாய்ச்சப் பாய்ச்ச தண்ணி
வெட்ட வெட்ட வாய்க்காலு
புடிக்கப் புடிக்கப் பாத்தி
உழ உழ நிலம்
உடைக்க உடைக்கக் கல்லு
தேய்க்கத் தேய்க்க சொம்பு
காய்ச்சக் காய்ச்ச சாராயம்
கட்டக் கட்டக் கள்ளு
கடையக் கடையக் கீரை
கிண்டக் கிண்டக் களி
ஆட்ட ஆட்ட மாவு
அரைக்க அரைக்க மஞ்சள்
வெளுக்க வெளுக்க வெள்ளை
தரத் தரத் தானம்
வாங்க வாங்கக் கடன்
தூங்கத் தூங்க சொகம்!


உங்க வகுப்புன்னாலே எங்களுக்கு நெம்ப சொகம், நாங்க இப்பப் போலாமா சார் அப்படீன்னான். அவருக்கு வந்தது பாருங்க மம்மேனியாக் கோவம்? மூஞ்சிய திருமூத்திமலைக் கொரங்காட்டம் வச்சிட்டு சொன்னாரு,


“எல்லாரும் இப்ப வீட்டுக்குப் போலாம், மகாலிங்கனும் அவனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குற பழமைபேசி ரெண்டு பேரையும் தவுத்து; அந்த ரெண்டு கழுதைகளும் பள்ளிக்கூடம் பூட்ற வரைக்கும் முன்னாடித் திண்ணையில மண்டி போட்டு நிக்கட்டும். நான் மைதானத்துலதான் இருப்பேன், நீங்க போயி போடுங்கடா மண்டிய!”

அப்படின்னு சொல்லிட்டு, அவரு போயிட்டாரு. இந்த மடை மகாலிங்கம் என்னையுஞ் சேத்து மண்டி போட வெச்சிட்டான், பாவி!

ஊருக்குள்ள பார்த்து இருப்பீங்க... அப்படியேப் பொத்தாம் பொதுவா எதனா ஒன்னைச் சொல்லி, உருட்டறதையும் மிரட்டுறதையும். அப்படித்தான் ஒரு நாள், வாகத்தொழுவு வேலூர் பள்ளிக் கூடத்துல, ஓவிய வாத்தியார் சஞ்சீவி சார் வந்து, நீட்டி முழக்கிகிட்டு இருந்தாரு.

அப்ப அவர் சொன்னாரு, சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்! நீங்கெல்லாம் நிறைய வீட்ல பயிற்சி செய்யணும்டா, அப்பத்தான் கைகூடி வரும் அப்படின்னாரு.


அல்லைல இருந்த டீக்கடைத் தங்கவேலன் எந்திருச்சி சொன்னான், சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்... அதுக்கு மேல உங்களுக்குத் தெரியாதுன்னும் எங்களுக்குத் தெரியும், மேல சொல்லுறன் கேட்டுகுங்க,

சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்
நடையும் நடைப்பழக்கம்; நட்பும்
தயையும் கொடையும் பிறவிக்குணம்!


”உங்க பிறவிக் குணத்தை மாத்துறதுக்கு எதுனா முயற்சி செய்தீங்களா சார்?” அப்படீன்னான். அவ்ளோதான், அவர் வரைஞ்சிட்டு இருந்த ஓவிய நோட்டுப் புத்தகத்தை வேகமாத் தங்கானைப் பாத்து வீசவும், குட்டைத் தங்கான் வாகாக் குனியவும், அந்தப் பொறத்துல இருந்த, ஊர் கணக்குபிள்ளை மக மரகதத்தோட கண்ணைப் பதம் பாத்தது அந்த ஓவிய நோட்டு!

வேற என்ன? சஞ்சீவி சார் நெம்ப நாளா, ஊரைச் சுததி வந்தல்ல பள்ளிக் கூடம் வந்து போனாரு?! உடுமலைப் பேட்டையில இருந்து மனுசன், ஒடுங்கி ஒடுங்கி வந்து போனதைப் பாக்க அவ்ளோ பாவமா இருந்துச்சு.

சரி, சரி, வியாக்கியானம்ன்னா எதோ ஒன்னை சொல்லியாகணுமே? அதென்ன எகத்தாளம்? ஒன்னு சொன்னா, மேல சொன்னா மாதிரி, அதாவது தாளத்துக்கு ஒரு எதிர்த்தாளம்... எகத்தாளம்... கூடக்கூட சொல்லுறதைச் சொல்லுறது, இகதாளம்... இகம்ன்னா உள்... உள்த்தாளம்... அதாங்க, ஜால்ரா ஜால்ரா.... இஃகிஃகி!

சரி, சரி, நீங்க எகத்தாளமும் போட வேண்டாம், இகத்தாளமும் போட வேண்டாம்... நல்லதா நாலு பழமை சொல்லிட்டு போங்க, சரியா?!

9/01/2009

எழவு என்னடா உங்கோட ஒரே அக்கப்போரா இருக்கு?

பார்த்தீங்கன்னா, கோயமுத்தூர்ல இருந்து அவினாசி சாலையில போகும் போது நீலம்பூர், முதலிபாளையம் பிரிவு, சூலூர்ப் பிரிவு, இராணிலட்சுமி மில்லு, அடுத்து அரசூர்ப் பிரிவு வரும். இந்த அரசூர்ப் பிரிவுக்கும் இராணிலட்சுமி மில்லுக்கு நடுப்புல தெக்கமின்னா ஒரு இட்டேரி போகும், அது செங்கோட கவுண்டன் புதூர் போயி அப்பறம் முத்துக்கவுண்டன் புதூருக்கு போகும்.

போற வழியில, வட்டப்பாறை வட்டப்பாறைனு இரு எடம் வரும். அங்க நிலத்துல இருந்து வட்டமா ஒரு பாறை மேல்த்தட்டி இருக்கும். அங்கதான் நாங்க, வழுக்குவாலுக எல்லாம் ஒக்காந்து பழமை பேசிட்டு இருப்போம். பின்னாடி, வேலி மறைவுல போயி வெண்குழல் வேந்தருக வெண்குழல் பிடிச்சிட்டும் வருவாங்க, போவாங்க.

அப்படித்தாங்க நான் வெய்யத் தாழ பசங்க அங்க இருப்பாங்களேன்ட்டுப் போனன். அவனுக அங்க, கொறக் காட்டுக்குள்ள இருந்தாங்க, வேற என்ன? துடுப்பாட்டம் வெளையாடிட்டு இருந்தாங்க; அதாங்க அந்த கிரிக்கெட்டு! கிரிக்கெட்டு!!

இராசமாணிக்கந்தான் மொதல்ல பேச்சுக் குடுத்தான். அவன் சோக்கா துடுப்புமு, தலையில தொப்பியுமா நின்னுட்டு இருந்தான். நாங்கேட்டேன், துடுப்பு ஏதுறான்னேன். அவஞ்சொன்னான், இதா நிக்கிறாம்பாரு அவனோடதுன்னு தூரத்துல நிக்கிற தங்கராசைப் பாத்துச் சொன்னான்.

அப்ப பந்தும் அவுனுதாடான்னேன். அதுக்கு சொன்னான், இல்லை, பந்து இவனுதுன்னு சொல்லி, கிட்டத்தால நிக்கிற தங்கவேலனைக் காமிச்சான். அப்ப இந்த தொப்பி உன்றதாடான்னேன். அதுக்கு நடுப்புல நின்ன பாலவிநாயகனைக் காமிச்சி இது இவனோடதுன்னான்.

எனக்கு வந்தது பாருங்க கோவம். என்றா இது, எதுமே உன்றது இல்லியா? போச்சாது போ, ஆனா எட்டத்துல நிக்கிறவனைக் காமிச்சி அவன்னு சொன்னே. கிட்டத்துல நிக்கிறவனைக் காமிச்சி, இவன்னு சொல்லிச் சொன்னே. நடுப்புல நிக்கிறவனையுங் காமிச்சி இவன்னே சொல்லுறியே, இது எந்தூர் ஞாயம்டா? அதெப்பிடி அவனுக்கும் இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் இவனே ஆவான்? பிடி பிடிச்சிட்டேன்.....

இராசன் பாத்தான், சுத்தீலும் நிக்கிறவங்க யாருனா தொணைக்கி வருவாங்களான்னு. யாரும் ஒன்னும் பேசாம நிக்கவுமு, இவனுக்கு வந்தது பாருங்க கோவம், டேய் மயிராண்டி, இதைக் கேக்கத்தான் நீ இப்ப வந்தியாக்கூ? பரதேசி, பரதேசி, எழவு உங்கோட என்னடா எனக்கு எப்பவுமே ஒரே அக்கப்போரா இருக்குன்னு துடுப்பாலயே அடிக்க வந்தானுங்கன்னே!

இப்ப நீங்க சொல்லுங், நாங்கேட்டதுல எதுனா தப்பு இருக்குதுங்களா? நானுமு, நெறைய பேர்த்துகிட்டக் கேட்டுப் பாத்தனுங்... ஆனாக் கடைசில, எங்க அய்யன் அதுக்கு விடை சொன்னாருங்களே!

ஆமாங்க, நம்ம தமிழ்ல எதையும் குழப்பம் இல்லாம, without ambiguity எதையுஞ் சொல்ற மாதர சொல்லி வெச்சி இருக்காங்களே? இஃகிஃகி! ஆமாங்க, அவனுக்கும் இவனுக்கும் நடுப்புல இருக்குறவன் உவன். அதே மாதர, அவள், இவள், உவள்; அங்கனம், இங்கனம், உங்கனம்; அவர், இவர், உவர்; அது, இது, உது....

அது சரி, அடங்கல்ன்னா தெரியுமா உங்களுக்கு? ஊரு சனம் மழைக்கு, அத்த அவசரத்துக்கு ஒதுங்குற, அடையுற இடந்தான் அடங்கல். பெரிய பெரிய கற்களால கட்டின ஒதுக்குப்புறம். ஆமா, இப்ப அத்த அவசரம்ன்னு சொல்லிச் சொன்னனே? அதுல அவசரம்ன்னா என்னன்னு தெரியும்... அத்தம்ன்னா?

அத்தம்ன்னா கை. ஒருத்தன் நழுவிப் போயிட்டு இருக்குறான். தண்ணியில மூழ்கிகிட்டு இருக்கலாம்; புதைகுழியில புதைஞ்சுட்டு இருக்கலாம்; பொண்டாட்டியானவ தலை மயிரைப் புடிச்சி இழுத்துட்டுங்கூடப் போகலாம். அப்ப என்ன நடக்கும்? ஒரு கை மட்டும் அவசர அவசரமா உதவிய நாடும். அதை உவமைப்படுத்திச் சொல்லுறதுதான் அத்த அவசரம்.


ஆமா, வெட்டிப் பழமை பேசுறதை கேக்குறதுக்குன்னா, வந்திடுவீங்களே? போங்க, போயி வேலை வெட்டியப் பாருங்க போங்க, மத்ததெல்லாம் நாளைக்குப் பேசுலாம்!