7/21/2012

அட்லாண்டாவில் தோழர் நல்லகண்ணு

சார்ல்சுடன் நகரில் இருந்து அட்லாண்டா செல்லும் பயணத்தினிடையே எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் அழைத்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அய்யா நல்லகண்ணு உங்களுடன் பேச விரும்புகிறார் எனக் கூற, அடுத்த வினாடி தொடர்பில் அய்யா தோழர் நல்லகண்ணு அவர்கள்.

நாங்கள், தன்விருப்பத் தொண்டர்கள் ஒரு தாய்ப்பிள்ளைகளாக இருந்து எப்படி இவ்வளவு பெரிய விழாவை நடத்தினோம், தமிழ்க் கட்டமைப்புக்காக உழைக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டு, தன்னலமில்லாத தொண்டினை அமெரிக்க மண்ணில் கண்டு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்தோடு ஈரோடு அருட்சுடர் பதிப்பகத்தாரின் வெளியீட்டில் வெளியான ”ஊர்ப்பழமை” நூலைத் தாம் வாசித்ததாகவும், அதில் இடம் பெற்ற பல விழுமியங்கள் தாம் சிறுவயதில் இருக்கும் போது கண்டவை; உங்களுக்கு எப்படித் தெரிய வந்ததெனக் கேட்டு மிகவும் வியந்து பாராட்டினார். அவருக்கு அந்நூலைக் கொடுத்த தமிழ் அன்பர் எவரோ? எங்கிருந்தாலும் நீவிர் வாழ்க!! ஈரோடு நண்பர் ஆரூரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

Take advantage of your week end!

Meet one of the cleanest politician from Tamil Nadu, warrior for the downtrodden , Tamil orator Thozar Nallakannu!!

அட்லாண்டாவில் தோழர் நல்லகண்ணு
எழுபது கவனகர் கலை.செழியன்7/11/2012

FeTNA: இ.ஆ.ப சகாயம் பேசியது என்ன?


தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!

--பாரதிதாசன்


FeTNA: தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்தி வரும், ஒவ்வொரு ஆண்டுக்கான தமிழ்த் திருவிழாவிலும் தமிழ் மாணவர்களுக்கான ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் இடம் பெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, பேரவை வெள்ளி விழாவிலும் ‘தமிழ்த்தேனீ’ போட்டிகள் வெகுசிறப்பாக நடந்தேறின. அப்போட்டிகளில், ‘பேச்சுப் போட்டி’, ‘கட்டுரைப் போட்டி’, ‘திருக்குறள் ஓதுகை’, ‘பன்முகத்திறன்’ முதலானவை இடம் பெற்றன. அவற்றுள், கவனகர் கலை.செழியன் நடத்திய ‘தமிழ்ப் பன்முகத்திறன் (Thamizh Jeopardy)' அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

‘தமிழ்ப் பன்முகத்திறன்’ போட்டி என்பது ஒரு பல்லூடக நிகழ்ச்சியாகும். இப்போட்டியின் கூறுகளாக, ‘வாசிப்பு’, ‘பாடுதல்’, ‘மொழி பெயர்த்தல்’, ‘செவிமடுத்து விடை கூறுதல்’, ‘காட்சிக்குரிய தகவு அளித்தல்’, ‘பேச்சு’ முதலானவை இடம் பெற்றிருந்தன.

வெள்ளி விழாவின் இயன்மொழியான, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” என்பதுவும் பேச்சுக்கான தலைப்புகளில் ஒன்றாக இடம் பெற்றிருந்தது. அத்தலைப்பின்கீழ், இடம் பெற்ற அனைத்துப் பிரிவுகளிலும் முதல் பரிசினை வென்ற  தென்மத்திய தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த சிறுமி ஸ்ரீநிதி மணிவாசகம் உரையாற்றியது கீழே வருமாறு:

********************************

தமிழே உயிரே வணக்கம். நீயும் நானும் தாயும் சேயுமல்லவா?! நாம் ஒரு தாய்ப் பிள்ளைகளாய்த் தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!

பால் கொடுத்த தாயின் மொழி தமிழே! அவள் ஊட்டிய அமுதும் தமிழே! நீயும் நானும் பேச அவள் கொடுத்ததும் தமிழே! மாண்பு ஈட்டுவதும் தமிழே!

தனித்து இயங்குவதும் தமிழே!! நல்லன தருவதும் தமிழே! நம் வாழ்வுச் செம்மையைப் போற்றுவதும் தமிழே!! அத்தமிழை நாம் மறக்கலாகுமா? நீங்களும் நானும் மறந்து விட்டால் நாம் ஒரு தாய்ப் பிள்ளைகளாக இருக்க முடியாதல்லவா??

அதனால், நாம் தமிழ் கொண்டே பேசுவோம். தமிழ் கொண்டே சிந்திப்போம். தமிழாலே எழுதுவோம் அன்புச் சொந்தங்களே!!

வெறும் பேச்சுக்குத்தான் நாம் பிறந்தோமா? இல்லை இல்லை. செயற்கரிய செயல்கள் பல செய்ய நாம் பிறந்தோம். அமெரிக்காவில் நான் பிறந்தாலும் என் தாய் மொழி தமிழே!!

தமிழ் செழிக்க நாம் இணைவோம்! செயலால் வெல்வோம்! மறந்துவிடல் ஆகாது! நாம் அனைவரும் தமிழர்! நாம் தமிழர்!!

நம்மை நம்மில் இருந்து பிரிக்க இருக்கின்றன பல. சாதி என்றும், மதம் என்றும் நாம் பிரிந்து விடல் ஆகுமா? அதில் இருந்து விடுபட்டு, நம்மை ஒன்று சேர்த்து வைக்கக் கூடியது நாம் பேசும் நம் தாய் மொழி தமிழாகும். அம்மொழியைப் போற்றுவோம்! எட்டுத் திக்கும் போற்றிப் பரப்பிடுவோம்!!

கலப்புச் சொற்களும், முறையற்ற கல்வியும் மொழியைச் சிதைத்து விடும். ஆகவே, நாம் நம்மால் இயன்ற வரை மொழியைச் சிதைக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழை, தமிழ் நூல்கள் கொண்டு முறையாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இச்செயல் ஒன்றே நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். எனவே, நாம் அனைவரும் தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று தமிழ் கற்போம்! செயலால் வெல்வோம்!!

நாம் அனைவரும் நம்மொழியின் மீது பற்றுக் கொள்ள வேண்டும். அன்பு கொள்ள வேண்டும். பெரியோர் வழியில் நின்று, நாமும் தமிழை ஓதிட வேண்டும். தமிழுக்குப் பெருமை சேர்த்திட வேண்டும். ஆம், வருங்காலம் நம் கைகளில்தானே?

நாவினிக்க, நெஞ்சினிக்கத் தமிழ் எட்டுத் திக்கும் பரவட்டும். நம் தமிழ்க்கல்வி வானுயர ஓங்கட்டும். செந்தமிழாலே நாம் என்றும் இணைந்திருப்போம்! செயல்களாலே வென்று காட்டுவோம்!!

வாழ்க பேரவை! வளர்க தமிழ்!!

நன்றி, வணக்கம்!!

FeTNA: பொன்மாலைப் பொழுது

தங்கத்தை உருக்கி வழியவிட்டாற்போல வானோடை, செங்கதிர் மாணிக்கத்துச் சுடர் விழுங்கும் பால்டிமோர் மேரியாட் விடுதி,நீலமுக்காட்டுக்காரி நிலாப் பெண்ணாள் பார்த்து புன்முறுவல் பூக்கும் தமிழர் கூட்டம், அரங்கம் நிரம்பி பெரும்பொதியில் இருந்தும் வழியும் பொரித்திரள் போல தமிழர்கள் வாயிற்கதவுகளுக்கு வெளியே வழிந்து கொண்டிருந்தார்கள்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஒவ்வொரு ஆண்டு விழாவுக்கு முந்தைய நாள் விருந்தினர் மாலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கொடையாளர்கள் பங்கேற்றிருக்க, விருந்தினர்கள் அறிமுகவுரை ஆற்றுவார்கள்.

வெள்ளி விழா என்பதால், என்றுமில்லாதபடிக்கு அதிக அளவிலான கொடையாளர்களும் விருந்தினர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அதனாலே எதிர்பார்ப்புக்கும் மிகுந்த கூட்டம். கூட்டத்தினைக் கையாளுவதில் நெருக்கடியும் இருக்கத்தான் செய்தது.

ஆனாலும் அக்கணம் ஒரு பொன்மாலைப் பொழுதாகிப் போனது எங்கனம்? வளர்பிறை போல் வளர்ந்த தமிழரிடையே, அறிஞர்கள் தங்கள் உளத்தையும் ஆர்ந்த வளத்தையும் எழுத்துச் சொல்லால் விளக்கிடும் இயல்பு முதிர்ந்து அளவிலா உவகை கொள்ளச் செய்ததாலேயே அக்கணம் ஒரு பொன் மாலையாகிப் போனது.

தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், பண்பான எழுத்தாளர் எஸ்.ரா, இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன், பினாங்கு துணைமுதல்வர் இராமசாமி பழனிசாமி, நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலா பால், வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகக் குழுவினர் எனப் பலர் சுவைபடப் பேசி, குழுமியிருந்தோரை இன்புறச் செயதனர்.
தேன்கண்டாற் போலே கண்டேன்! 
திகழ் காடு நோக்கிச் சென்றேன்!!
அடடா, எங்கும் தமிழ்! தமிழ்!! தமிழ்!!!

7/10/2012

FeTNA: தமிழிசை விழா

2012ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் ஐந்தாம் நாளன்று பால்டிமோர் துறைமுகத்தில் கயல் கண்டேன்; கப்பல் கண்டேன்;  திசை கண்டேன்; வான் கண்டேன்; ஞாலமது செறிந்திட பலப்பலவும் கண்டேன்; படகுத்துறையில் யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன்; அழகுதனைக் கண்டேன்; நல்லின்பக் கூறுகள் பலப்பலவும் கண்டேன்; அத்தனை இருந்தும் இவனது மனம் எதுவொன்றுக்கும் வசப்பட்டு நல்லின்பம் கொள்ளவில்லை! காரணம் என்னவோ?!

மாலையது எப்போது வரும்? மேரியாட் விடுதியில் அக்கணம் எப்போது நிகழுமென, மனம் மத்துக்குள் சிக்குண்ட தயிர்த்துளியாய்க் கிடையின்றி அல்லாடிக் கொண்டிருந்தமையே காரணம்!

ஒவ்வொரு மாந்தனுக்கும் அவனுக்கே உரித்தான குறைகளும் உண்டு. இவ்வடியேனின் குறையாதெனின், குறித்த நேரத்திற்கு முன்பே இடமடைந்து காத்திருப்பதுவேயாம்.

எழிலார்ந்த மேரியாட் விடுதியின் முற்றத்திற்கு கடலளவு ஆவலுடன் செல்கின்றேன். நான் ஒரு அடியன். அந்தோ, அங்கே ஒரு பெருமாந்தர் அமைதியே பேருருவாய் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆம், காலங்கடைபிடித்தலின் பேரரசே அங்கு வீற்றிருந்தமை கண்டேன்.

வெள்ளி விழாவுக்கான பதிவு ஏடுகள், கோப்புகள், இதரப் பொருட்கள் எனப் பலவும் அடங்கிய பெட்டிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, முதற்பணியாளன் நானே எனும் செருக்குக் கொண்டாற்போல் பணியாற்றக் காத்திருந்தார் முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்.

“அய்யா, வணக்கங்க அய்யா!”

“வாங்க வாங்க பழமைபேசி! மலர் நல்லா வந்திருக்கு, வாழ்த்துகள்!!”

தந்தை பெரியாரும் அய்யன் திருவள்ளுவரும் நேரில் வந்து வாழ்த்தியதாய்த் திடம் கொண்டது மனம்.

“நன்றிங்க அய்யா! உங்களுக்கு உதவி எதுவும் செய்யட்டுமுங்களா?”

”இந்தப் பெட்டிகள்ல இரண்டைத் திறந்து, அதிலிருக்கும் பைகளை எல்லாம் இங்க அடுக்கி வையுங்க!”

கைகள் முறைமாறி இயங்கியது. மூளைக்கும் செயலுக்கும் போட்டா போட்டி. இதயம் பெருவேகங் கொண்டு இயங்கியது. கடுமையான ஒரு கட்டுப்படுத்தலுக்குப் பின், மூளை சொல்வதைக் கேட்டுப் பணி புரிய கைகள் ஒத்துழைத்தது. முதலாவது பெட்டி உடைக்கப்பட்டு, சில பைகளை அண்மையில் இருந்து பரப்பு நாற்காலியின் மீது அடுக்கினேன்.

ஓரக்கண்ணால் பிரபாகர் அய்யாவைப் பார்த்தேன். அவர் கணினியில் ஏதோ துளாவிக் கொண்டு முசுவாக இருந்தார். இதுதான் நல்ல தருணமென மனம் கள்ளம் செய்ய விழைந்தது.

ஒரு பையை எடுத்து, அதனுள் வலக்கை நுழைந்தது. நீலவண்ண அட்டையுடன் வெள்ளி விழா மலர் கண்களுக்குக் காட்சி அளித்தது. ஆறு மாத கால உழைப்பு, பார்த்துப் பார்த்துச் செய்தது. ‘அய்யோ’வென ஆனந்தக் கூக்குரலிட்டு அழ வேண்டும் போல இருந்தது. கண்களில் திவலைகள் சொட்ட ஆரம்பித்து இருந்தன.

“அந்த பெட்டியையும் உடைச்சிருங்க. இந்த வெறும் பெட்டிய அங்க ஓரமா வையுங்க”, பிரபாகர் அய்யாவின் குரல் கேட்டு மீண்டெழுந்தது மனம்.

முதற்கணம். தாய் தான் பெற்றெடுத்த பிள்ளையை ஏறெடுத்து நோக்கும் முதற்கணம் எப்படியானதாய் இருக்கும் என இவ்வாடவனுக்கு உணர்த்தப் பணித்தாளோ தமிழன்னை?!

இரண்டாவது பெட்டியையும் உடைத்து, பைகளை எடுத்து அடுக்கி வைக்கலானேன். “அய்யா, தமிழிசை விழாவுல என்னோட மூத்த மகளும் பாடுறா! போய் அழைச்சிட்டு வரணும்!!”

“நன்றிங்க பழமைபேசி! நீங்க போலாம்!”. விடைபெற்று நிமிர்ந்தேன். முன்வாசலெங்கும் தமிழ்ப் பொதிகை வளைத்தடித்துக் கொண்டிருந்தது. எண்ணற்ற முகங்கள், பிரிந்தவர் கூடுதலோ என வியக்கும் வண்ணம்!

அனைவருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு வெளியேறினேன். குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு மீண்டும் விடுதியில் நுழைகிறேன், மிதமிஞ்சிய கூட்டம்.  சடுதியில் தமிழிசை விழா இடம் பெறும் கூடத்திற்குச் செல்ல வேண்டுமென்கிற கட்டாயம் வேறு.

மேல்மாடத்தில் இருக்கும் இரண்டாம் எண் இலக்கமிட்ட கூடத்திற்குச் செல்கிறோம். சேர்ந்திசைக்கான பாடல் பாடப்பட்டுக் கொண்டு இருந்தது. தவறவிட்டு விட்டோமே என மகள் அழாத குறை. பதைபதைப்பைக் கண்ட அருகில் இருந்தவர் சொன்னார், “இது ஒத்திகைதான்!”

பேரவையில் தமிழிசை விழா என்பது ஒரு கன்னி முயற்சியாகும். இதற்கு போதிய வரவேற்பு இருக்குமா என்கிற ஐயம் எங்களையெல்லாம் ஆட்கொண்டிருந்தது. ஆனால் இங்கு நிலைமையோ தலைகீழ்! நிகழ்ச்சி இன்னும் துவங்கவே இல்லை. அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருமே மிக நேர்த்தியாய்ப் பாடினார்கள். பாடப்படும் பாடல் வரிகள் புரிகிறது. இசை தேனாய்ச் செவியில் நுழைகிறது. மனமோ இலயிப்பில் கரைகிறது. அதுதான் தமிழிசை! ஓரிரு இடங்களில் கண்கள் சொரியத் துவங்கின.

“தம்பி பழமை, அடுத்த ஆண்டு இதை முக்கிய அரங்குல மேடை ஏத்திடணும் தம்பி!!”, நாஞ்சில் பீற்றர் குழைகிறார்.

சேர்ந்திசைக்கான பீடிகை துவங்குகிறது. எம்மகளுக்கான அறிமுகமும் இடம் பெறுகிறது. நாணமும் கூச்சமும் மேலிட கூனிக்குறுகிப் போகிறது மெய்!!

“சின்னஞ்சிறிய அரும்புகள், சிறுவர் சிறுமியர் அரும்புகள்” பாடல் இசைக்கப்பட்டு, அதற்குப் பின் நிறைவாக, “அற்புதம் அற்புதமே”, சேர்ந்திசைக்கப்பட்டு நிறைவுக்கு வருகிறது தமிழிசை!

“அற்புதம்”, ஒரு சேரக் கூவியது அரங்கம்.  எளிமையின் சின்னம் தோழர் நல்லகண்ணு, பணிவின் சின்னம் முனைவர் மறைமலை இலக்குவனார், தமிழின் சின்னம் கவனகர் கலை.செழியன் ஆகியோரது அரவணைப்பில் சிக்குண்டு நெகிழ்ந்து போனது தமிழிசைச் சிறார் கூட்டம்.

தமிழிசையைச் செவ்வனே முன்னெடுத்துச் செல்வதற்கும், களம் கிடைக்காத தமிழருக்கேற்ற களமொன்றையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது பேரவை. பேரவையின் இம்முயற்சியைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் ஏனைய இடங்களிலும் தமிழிசை விழாக்கள் இடம் பெற வேண்டுமென்பதே நம் இலக்காகும்!!

அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி
அன்னை வாழ்க வாழ்கவே!!


FeTNA: ஓங்கிச் சிறந்த வெள்ளி விழா

நீலவெள்ளி வானம், பாலொளியாய் வெயிலோன் கதிர்கள், சந்தனத்துத் தென்றலாய் எங்கும் தமிழ்ப்பேச்சு, மணிக்குளத்தில் செந்தாமரைப் பூக்களெனத் தமிழர் கூட்டம். பால்டிமோர் நகரத்துத் தெருக்களெல்லாம் எம்மக்கள் கூட்டம். அடடா, அவர்களைப் பார்க்கையில் மனம் சிறகடித்துத் துள்ளிப் பறந்தது.

படகுச் சவாரி செய்யலாமென அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த படகுத் துறைக்குச் சென்றிருந்தேன். நாமறியாத் தமிழர் இருந்து கதைக்கிறார் என வாளாதிருந்தேன்.

“நீங்க, எங்கட பழமைபேசி அண்ணைதான?”

பொய்த்துப் போன நான் நாணமுற்றுத் தலைகவிழ்ந்தேன். “அப்பா, உங்களுக்கு அவங்களைத் தெரியாதாப்பா?”, மூத்த மகள் தன்பங்குக்குச் சொற்சாட்டையால் விளாசினாள்.

“அண்ணை, ரிக்கெட் அல்லாம் வித்திட்டாங்களெண்டு சொல்வினம். அது செரியே?”

“ஆமாங்க, இந்தவாட்டி அரங்கம் நிறைஞ்சிடுச்சி போல. நல்ல கூட்டம் வரும். அமெரிக்காவுல 2400 தமிழர்கள் ஒன்று கூடுறது மகிழ்ச்சியா இருக்கு!’

‘உங்ககிட்ட நிண்டு படமொண்டு எடுத்துக்கலாமே?”

“தவறாம. வாங்க”

“ஏ பெட்டை, இவர் நம்மட பழமைபேசி அண்ணை தெரியுந்தான?”

“ஓம், நல்ல வடிவாத் தமிழ்ல எழுதுவாரென்ன?”

அங்கு துவங்கியது எம் தமிழுறவுகளின் சங்கமம். அதற்குப் பின்னர் முத்தான நான்கு நாட்கள். விலேவாரியாக இனி எதிர்வரும் பதிவுகளில் காண்போம். இப்போதைக்கு கீழ்க்கண்ட காணொலிகளைக் கண்டு மகிழ்க!!

http://www.youtube.com/watch?v=BNi24tDElqI

http://www.youtube.com/watch?v=Ixc4wpNM8SI


http://www.youtube.com/watch?v=xnQDXECjfLc

http://www.youtube.com/watch?v=1mMn6U1YVtY

http://www.youtube.com/watch?v=6ryxPpR_XWk

http://www.youtube.com/watch?v=vssynAcaLT0

http://www.youtube.com/watch?v=Z7Em2HoD1tY

இதயம் நல்லெண்ணெய் திரு.முத்து அவர்கள்

நண்பர்கள் பிரபு, கார்த்திகேயன்

முனைவர் மறைமலை இலக்குவனார் அய்யா, நண்பர்  ‘பெரு’ நாட்டு மச்சுபிச்சு கிருஷ்ணா

தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் நண்பர்

எழுத்தாளர் எஸ்.ரா


7/04/2012

தமிழ் மேகம் சூழ்ந்த பால்டிமோர்


காலை ஏழுக்குத் தேவை
இன்னும் பத்து மணித்துளிகள்
ரெசிடன்சு இன்
பதினானகாம் மாடம்
திரைச்சீலை ஒதுக்கிக் காண்கிறேன்
படகுத்துறை புன்னகைக்கிறது
ஆகாயக் கப்பல் அசைந்தாடுகிறது
கடைக்கோடியில் புள்ளீயாய்ப் படகொன்று
விண்முட்டும் கோபுரமதில் பளபளக்கும் 
மினுமினு நீல விண்மீன் கொடியொன்று
விடுதலைநாளில் மிடுக்காய்ப் பறக்கிறது
பொடிக்குருவிகளிரண்டின் உச்சக்களியாட்டம்
மயில் இருந்தால் அகவும்
குயில் இருந்தால் கூவும்
சுட்டெரிக்கும் வெயில் இல்லை
பரிதி மறைந்திருந்து சிரிக்கிறது
பால்டிமோர் மாநகரில் 
பரிதி மறைந்திருந்து சிரிக்கிறது
இதமாய்த் தண்காற்று சில்லிடுகிறது
அதோ அங்கொரு மேப்பில் மரம்
இலையால் வெண்சாமாரம் வீசுகிறது
வெயில் சுட்டெரிக்கவில்லை
உயரப் பார்க்கிறேன்
அடடா... சூழுகின்றன சூழுகின்றன
முகில்கள் முகில்கள் முகில்கள்
அவையெல்லாம் தமிழ் முகில்களடா!!
சூழத்துவங்கிருப்பது தமிழ் முகில்களடா!!

7/01/2012

FeTNA: இட்லி வடை பொங்கல் கிடைக்குமா?பேரவை வெள்ளி விழா தேன்துளிகள்
வாழும் வரலாறு தோழர் நல்லகண்ணு
மலேசியத் துணை முதல்வர் பினாங்கு இராமசாமி
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
கவனகர் முனைவர் கலை.செழியன்
தமிழச்சி தங்கபாண்டியன்
கல்வியாளர் பொன்னவைக்கோ
ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி
தமிழிசை கலைமாமணி டிகேஎஸ் கலைவாணன்
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
உடுக்கையடி ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக்
பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி
நடிகர் பரத்
நடிகர் அமலா பால்
கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயன்
பகடிக்கலைஞர் மதுரைமுத்து
கட்டியக்கலைஞர் பிரியதர்ஷினி
பாடகர் தாமரைத்திரு சின்னக்குயில் சித்ரா
பாடகர் முகேஷ்
பாடகர் அனிதா கிருஷ்ணன்
இணைப்பாடகர் வித்யா வந்தனா சகோதரிகள்
தமிழன் - தமிழச்சி ($1000 பரிசுக்கான போட்டி)
இலக்கிய விநாடி வினா பல்லூடக நிகழ்ச்சி (multi-media program)
கவியரங்கம்
விவாதமேடை
பட்டிமன்றம்
தமிழ்ப் பன்முகத் திறன் போட்டி (Jeopardy, multi-media program)
தமிழிசை நிகழ்ச்சி
ஐங்கரன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி
யோகா பட்டறை
திருமண தகவல் மையம்
இளையோர் நிகழ்ச்சி
இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி
வலைஞர் கூடல்
மருத்துவத் தொடர்கல்வி
தொழில்முனைவர் கருத்தரங்கம்
கணினிப் பொறியாளர் கருத்தரங்கம்
தமிழ்மணம் வலைப்பதிவு பயிற்சிப் பாசரங்கம்
பல்கலைக்கழக மேனாள் மாணவர் கலந்துரையாடல்
அறுபதுக்கும் மேற்பட்ட கடைகளுடன், தமிழ்த்திருவிழாச் சந்தை
முத்தான படைப்புகளுடன் வெள்ளி விழா மலர்
இவற்றுடன் தமிழ்ச்சங்கங்களின் அருமையான இயல், இசை, நாடக, நாட்டியங்கள்


களிப்பூட்டித்   தமிழ்  போற்றி வாழ்வைச் செம்மையாக்கும்  உங்கள்  விழா!
அமெரிக்க  தமிழ்த்  திருவிழா  2012!!
Try to register early before it gets full. It happened in FeTNA 2009!
Just few seats left, hurry up!! www.fetna.org