விமர்சனம் என்பது வடமொழிச் சொல். அதற்கு நிகராகத் தமிழில் திறனாய்வு. Criticism is the construction of a judgement about the negative qualities of someone or something. திறனாய்வு அற்ற சமூகத்தின் மேம்பாட்டு வேகம் மட்டுப்படும். திறனாய்வே வெட்டிவேலை / அவதூறு என்பதாகக் கருதும் சமூகம் பிற்போக்குச் சமூகமாக உருவெடுக்கும். அப்படியெனில் திறனாய்வுக்கும் அவதூறுக்கும் என்ன வேறுபாடு?
நேரிடையாக பிழை, வழு, விடுபட்டுப் போனது, மரபுச்சிதைவு, பண்பாட்டுச் சிதைவு முதலானவற்றைக் குறிப்பிட்டுச் சாடுவது திறனாய்வு. அவற்றைக் காரணம் காட்டி இடம் பெறும் பகடிகள், கேலி/எள்ளல் என்பதாகக் கொள்ளலாம். உண்மைக்குப் புறம்பாகக் காரணமே இல்லாமல் இடம் பெறும் பகடிகள், சாடல்கள் அவதூறு.
அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெறவேண்டுமானால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பொருளைப் பொதுமக்களின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு, பொதுவில் முன்வைக்கின்ற குற்றம் குறைகளை எதிர்கொண்டு ஆய்வினை நிலைநாட்டியாக வேண்டும் (Public Defense).
”பக்கம் பக்மாக வெளியில் நின்று விமர்சித்து எழுதுவது சுலபம் . அதனால் பேரவைக்கு என்ன பயன்?”
இப்படியான வினா எங்கிருந்து பிறக்கின்றது? அறியாமை, காழ்ப்பு, சகிப்பின்மை, ஒவ்வாமை, பொறாமை முதலானவற்றில் இருந்து தோன்றுகின்றது. அதிலும் விமர்சித்து எழுதுவது சுலபம் என்கின்ற கருத்தோடு. கல்வி கற்றும், வாசிப்பின்மை காரணமாக இப்படியான கருத்துகள் இடம் பெறுகின்றன. இப்படியானவர்கள் தலைவர்களாகவும் இருக்கின்ற போது அந்த அமைப்பின் விழுமியம் பாழ்பட்டுத்தான் போகும். நல்ல தலைவர்கள், திறனாய்விலிருந்து கற்றுக் கொள்ளவே முனைவர். எடுத்துக்காட்டாக சிலவற்றைப் பார்ப்போம்.
1. “ரோல்கால் எடுக்கப்பட வேண்டும். ஒரேதளத்தில் உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்”
இது விமர்சனமாக முன்வைக்கப்படுகின்றது. ஏன்? வருகையாளர்கள் யார் யார் என்பது அமைப்பில் இருக்கின்ற ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பங்கு கொண்ட அனைவருக்கும் தெரியத்தானே வேண்டும்? வெளிப்படைத்தன்மை என்பது அதுதானே? ஒரேதளத்தில் இருக்கும் போது, மற்றவர்களின் சமிக்கை, உடல்மொழி என்பன எல்லாமும் ஏதோவொரு தகவலைச் சொல்லும்தானே? மேலும், ’சமத்துவம்’, ’பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள்’ என்பதெல்லாமும் அதிலிருந்துதானே நிலைநாட்டப்பட வேண்டும். இதுதானே அமெரிக்க நடைமுறை? ஆக, அமெரிக்க நடைமுறை குறித்தான அறிவுப்புலம், உகந்த சிந்தனை இருந்தால்தான் இதைச் சுட்டவே முடியும். அறியாதோர் டெம்ப்ளேட் கருத்துகளைத்தான் கொடுப்பர்.
2. “நாங்கெல்லாம் அவரை அமைப்பிலிருந்து ஒதுக்கி வெச்சிருக்கோம். பாத்து நடந்துக்குங்க”
இப்படியான கருத்து வெளிப்படுமேயானால், அது சட்டப்படிக் குற்றம். வெளிப்படுத்துபவர் மேலாதிக்கத்துடன் இருக்கின்றார் என்பது பொருள். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய இடத்திலே இடம் பெறும் பெரும் கேடு என்பது பொருள். ஏனென்றால், மனிதர் எல்லோரும் வாழப்பிறந்தவர்கள். தவறே செய்திருந்தாலும், திருத்தப்பட்டு அரவணைக்கப்பட வேண்டியது சக மனிதனின் கடமை.
இவற்றையெல்லாம் பொது வெளியில் எழுதும் போது என்ன நடக்கும்? வாசிப்புத்தன்மை கொண்டோர் சிந்தைவயப்படுவர். எழுதப்பட்டிருப்பதில் குற்றம் குறை இருப்பின் சுட்டிக்காட்டுவர். தேவைப்படுகின்ற இடத்திலே பயன்படுத்திக் கொள்வர். திருத்திக் கொள்வர். வாசிப்பற்றோர் காழ்ப்புக் கொண்டு போலிகளாக வலம் வருவர்.
No comments:
Post a Comment