தமிழ்க்கணிமைத் துறையில் ஓர் ஆசிரியர் வேண்டுமானால், நான் உயர்திரு மணி மணிவண்ணன் அவர்களையே கோருவேன். அவருடனான நட்பு, மதிப்பு என்பது 2008ஆம் ஆண்டு துவக்கம் உருவானது. இணைய வெளியில் என் எழுத்துகளைப் படித்து விட்டு, தவறுகள் இருப்பின் மிக உரிமையோடு வந்து திருத்துபவர். மிக அணுக்கமானவர். ஒருமுறை கூட நேரில் பார்த்ததுமில்லை; பேசிக் கொண்டதுமில்லை. நேற்று ஒரு மின்னஞ்சல். வழமையான தொனியில் இருந்து, சற்று மாறுபட்டதாக இருந்தது. எனக்குப் புரிந்து விட்டது. அவருடைய மாறுபட்ட பாங்கிற்கு என்ன காரணமெனப் புரிந்து விட்டது. ’மன்னிக்க வேண்டும்; பொறுத்தாற்றவும்’ எனப் பதில் எழுதினேன். பின்னர் அலைபேசியில் அழைத்துப் பேசவும் செய்தேன்(முதன்முதலாக).
அண்ணனும் தம்பியும் பேசிக் கொள்வது போன்ற உணர்வு. ’புரிகின்றது. ஆனால் அடுத்தவர் வேறுவிதமாக எடுத்துக் கொள்வர்’ எனச் சொல்லி, நுணுக்கமான பல தகவல்களையும் அக்கறையோடு பகிர்ந்து கொண்டார். பேரவைப் பொதுக்குழு துவங்கி விட்டதென்கின்ற காரணத்தினாலே, ‘அண்ணன், எனக்குக் கூட்டம் இருக்கின்றது’ எனச் சொல்லி அழைப்பை முடித்துக் கொண்டேன். அவர் பகிர்ந்ததிலிருந்து:
”இந்தியாவில் சட்டக் கோப்புகள் ஏராளமான முறை திருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சட்ட சாசனத்தின் தோற்றுவாய் என்பதான பிரிட்டிசு சட்டக் கோப்புகளாகட்டும், அமெரிக்கச் சட்டங்களாகட்டும் குறைவான முறையே திருத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. என்ன காரணம் தெரியுமா?”
”சொல்லுங்க அண்ணன்”.
”அவர்களெல்லாம் மரபு/அறம் எனும் பண்பாட்டுக் கட்டமைப்பின் மீது, சட்டங்களை வைத்துச் செயற்படுபவர்கள். மரபு அறம் பிறழும்போது, அதையும் தவறாகவே கருதும் பழக்கம் அவர்களுக்கு இருக்கின்றது. நம்மிடையே அது இல்லை. ஆகவே ஒவ்வொரு சிக்கலைக் களையும் பொருட்டும், கோப்பினைத் திருத்தி, திருத்தி, திருத்தி, திருத்திக் கொண்டே இருக்கின்றோம்”
எனக்கு முகத்தில் அறைந்தாற்போல இருந்தது. நுண்ணுணர்வுகள் இருந்தால்தான் இதன் வீச்சு, ஆழம், ஒருவருக்குப் புரியும். பொதுக்குழுவில் முன்னாள் தலைவர் மார்தட்டி, மார்தட்டி, மார்தட்டிப் பேசினார். மேட்டிமையும், சுயவிளம்பரமும் பொய்பித்தலாட்டமும், தனிமனிதத்தாக்குதலும் கலந்துதான். இவர் போன்ற பேர்வழிகள் அமைப்புகளிலே தலைவர்களாகும் போது, மேலே அண்ணன் சொன்ன மரபுகள், நுண்ணுணர்வுகள் பாழ்பட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை சமூகத்திற்கு.
No comments:
Post a Comment