12/31/2021

புத்தாண்டு நாளன்று செய்ய வேண்டியவை

1. பெற்றோர்/மூத்தோருடன் பேசுதல். இயலுமானால் அவர்களுடன் படம் எடுத்துக் கொள்தல்.

2. தன்னுடைய எடை, இரத்த அழுத்தம் முதலானவற்றைக் குறித்துக் கொள்தல்.

3. பல்மராமத்து, உடற்சோதனைக்கான தேதி, கடந்த முறை செய்ததின் விபரம் பார்த்தறிதல்.

4. டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், விசா, கிரீன்கார்டு எக்ஸ்பைரி டேட், இன்சூரன்ஸ், கார் ரெஜிஸ்ட்ரேசன் முதலானவற்றை ஆய்வு செய்தல். அதற்கான புதுப்பிப்பு வேலைக்கான நாட்களை குறித்து வைத்துக் கொள்தல்.

5. திடீரென நம் இருப்புக்கு பழுது நேருமேயானால், குடும்பத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களைத் தொகுத்து டாக்குமண்ட் செய்து அவர்களின் கவனத்திற்குரிய இடத்தில் வைத்துக் கொள்தல்.

6. கணக்கு, வரவு செலவு, வரித்தாக்கலுக்கானவை, personal financing info தொகுக்கப்பட்டு, சென்ற ஆண்டு முதல்நாள், இன்றைய நாள் கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தல், அடுத்த ஆண்டின் இலக்கினை வகுத்துக் கொள்ளல்.

7. பழைய உடுப்புகள், உடைமைகளைத் துப்புரவாக்கிக் கொண்டு, அடுத்த ஆண்டுக்கானவற்றை ஆயத்தப்படுத்திக் கொள்வது அல்லது திட்டமிட்டுக் கொள்வது.

8. கடந்த ஆண்டில் படித்த புத்தகங்கள்/பயிற்சிப் பணிகள்/பயணங்கள் (investment on self development), மீளாய்வு செய்து கொண்டு அடுத்த ஆண்டுக்கானவற்றைத் திட்டமிட்டுக் கொள்வது.

9. கடந்த ஆண்டின் நினைவுகளைப் போற்றக்கூடிய, படங்கள், காணொலிகள், எழுத்து விவரணைகள் முதலானவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்திக் கொள்தல். கணினி/அலைபேசியை ஆர்கனைஸ் செய்து கொள்ளல்.

10. கடந்த ஆண்டுப் பயணத்தில் மனத்தாங்கல் ஏற்பட்டோரிடம் அளவளாவுதல், மன்னிப்புக்கோர வேண்டிய நபர்களிடத்தில் மன்னிப்புக் கோருதல், நன்றிக்குரியவர்களிடம் நன்றி கூறிக் கொள்தல்.

Coming together is a beginning; keeping together is progress; working together is success. வாழ்க்கைப் பயணத்தில் நாமனைவரும் ஒரேகாலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சகபயணிகள். இறங்கும் நேரம், இடம் வந்து விட்டால் அன்போடு பிரியக் கூடியவர்கள். உயர்வு தாழ்வில்லை. தனித்துவமானவர்கள். Winning and losing isn't everything; the journey is just as important as the outcome. ஆண்டுப் பயணம் சிறக்க வாழ்த்துகள். புன்முறுவலுடன் கைகுலுக்கிக் கொண்டு மனவூக்கத்துடன் முன்நகர்வோம். Happy new year ahead!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com, 12/31/2021, 7pm, Charlotte, NC, USA.

12/21/2021

When someone corrects you and you feel offended, you have a high ego

வணக்கம். கடைகளுக்குச் செல்கின்றோம், நூல்கள் வாசிக்கின்றோம், இணையத்தில் வாசிக்கின்றோம், அமெசானில் புராடக்ட் ரிவ்யூ எழுதுகின்றோம். என்ன நடக்கும்? சில இடங்களில் நமக்கு கிஃப்ட் கூப்பன் அனுப்புவார்கள். கடைகள் என்றால், வாங்கிய பொருட்களுக்குத் தள்ளுபடி அல்லது ரிவார்ட் பாயிண்ட்கள் கொடுப்பர். சர்வே படிவம் நிரப்பிக் கொடுத்தால் அதற்கான நேரம் செலவிட்டமைக்காகக் குறைந்தபட்சம் நன்றியாவது சொல்வர். சோசியல் மீடியாக்களில் தவறான, சமூகத்துக்கு ஒவ்வாதவனவற்றைச் சுட்டும் போது, நற்சான்று கொடுக்கின்றனர். ஆனால், இதையே நாம் ஒரு வாட்சாப் குரூப், கூகுள் குரூப் போன்ற இணையக் குழுமங்களில் செய்தால், மனத்தாங்கலை எதிர்கொள்ள நேரிடுகின்றது; குறிப்பாக, இந்தியக் குழுமங்களில். என்ன காரணம்?

1. பலபேர் முன்னிலையில் தவறு சுட்டிக்காட்டப்படும் போது, தமக்கு ஏதோ இழுக்கு நேர்ந்து விட்டது போன்ற எண்ணம்.

2. சுட்டிக்காட்டுபவர் தனக்கான மேட்டிமையைக் கட்டமைத்துக் கொள்கின்றாரெனும் எண்ணம்.

இவற்றுக்கு அஞ்சி அஞ்சியே, வாளாதிருந்துவிடும் சமூகமாக நாம் ஆகிவிட்டோம். உரையாடலுக்கு இடமில்லை. எங்கு உரையாடலுக்கு இடமில்லையோ அங்கு மனிதனுக்கான தன்னாட்சி இல்லை என்பதே பொருள். நினைத்ததைச் சொல்ல முடியவில்லையெனும் போது, அங்கு தமக்கான விடுதலை இல்லை என்பதுதானே? நினைத்தேன் என்பதற்காக, அவச்சொல், இழிசொல், அநாகரிகம், மலினம் போன்றவற்றைப் பாவிப்பதல்ல விடுதலையென்பது. ஒரு மாற்றுக்கருத்து, பிழையைச் சுட்டுதல் என்பதற்குக் கூட இடமில்லையானால் அது என்ன சுதந்திரம்?

பெரிய பெரிய பிரபலங்கள் டிவியில் தோன்றுகின்றார்கள். பேசுகின்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். அவற்றிலே தென்படும் பிழைகளைச் சுட்டுவதிலே என்ன அநாகரிகம் இருந்து விடப் போகின்றது?பெரியார் ஈ.வெ.ரா பேசியதை ஜெயகாந்தனும், ஜெயகாந்தன் பேசியதை பெரியாரும் ஒரே மேடையில் விமர்சித்துக் கொண்டதைக் கொண்டாடுகின்றோம். விமர்சகப் பிதாமகர் வெங்கட் சாமிநாதன் என்பதாக வாசித்துத் தெரிந்து கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது, நான் எழுதியதில் இருக்கும் தவறினை ஒருவர் சுட்டும் போது நான் ஏன் சினம் கொள்ள வேண்டும்?

இது டிஜிட்டல் யுகம். எல்லாரும் உள்ளீட்டுக்காக ஏங்குகின்றனர். அதற்காக வித்தியாசமாகப் பேசிக் கவர வேண்டுமென்பதற்காக, ஆல்ட்டர்நேட் என்கின்ற பெயரிலே உறுதிப்படுத்தப்படாத, சான்றில்லாத, தன்கருத்துக்கு வளைக்கப்பட்டதெனப் பலதையும் மெய்யும் பொய்யும் கலந்து விட்டடித்துக் கொண்டிருக்கின்றனர். யுடியூப் காணொலிகளிலே பெருமளவு மிஸ்லீடிங், புரட்டும் திரிபும்தான் காணக்கிடைக்கின்றது. அவற்றைக் குழுவிலேயோ, அல்லது அலுவலகத்திலேயே காண்பிக்கப்படும் போது, அவற்றுக்குப் பின்னாலான கேள்வி பதில் நேரம் அமைய வேண்டும்.

சும்மா யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிரலாம். பார்ப்போர் பாராட்டலாம் அல்லது பார்த்துவிட்டுச் சும்மா இருக்கலாம் என்பது மாந்தனுக்கு மேன்மையை ஒருபோதும் ஈட்டாது. அது ஒரு பொய்யான சூழலையே நமக்கு ஈட்டுத்தரும்.

முறையான வழியில் பேசுபொருளின்பாற்பட்ட கருத்தாக அது இருக்க வேண்டும்; பகிரும் தனிமனிதர் குறித்தானதாக இருந்திடக் கூடாது. இடப்படும் கருத்தினையும் அந்தத் தனிமனிதர் தனக்கெதிரானதாக நினைத்திடக் கூடாது. இவையிரண்டில் எது மேலிட்டாலும், அது அவருடைய அகந்தையென்பதே பொருள்.

Be open to criticism and keep learning.If someone feels afraid to tell you honest criticism, then you're never going to improve. -Cole Sprouse

https://www.linkedin.com/pulse/when-someone-corrects-you-feel-offended-have-high-ego-kishore-shintre

12/15/2021

போர் கொள்ளுமா 2022?

புவிசார் அரசியல் என்பதுதான் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. வேறெதுவுமில்லை? ஏனென்றால் நிலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியாதது. பொருளாதாரம் மேலோங்க வேண்டுமென்றால் பொருட்கள் உற்பத்தி (manufacturing) செய்யப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட வேண்டுமென்றால், அவற்றை வாங்குவதற்கு ஆட்கள் (market) திரட்டப்பட்டாக வேண்டும். திரட்டப்பட்டவர்கள் பொருட்கள் வாங்க வேண்டுமேயானால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அவர்களைச் சென்றடைய போக்குவரத்துத்தடங்கள் (transportation) இருந்தாக வேண்டும். அந்தத் தடங்கள் அமைய வேண்டுமானால் அந்தந்த நாட்டுக்கான நிலப்பரப்பு ஏதுவாக இருந்திடல் வேண்டும். இதுதான் அடிப்படை. இதில் ஒன்று குறைந்தாலும், அந்நாடு வேறேதோ நாட்டுக்கு, உரிய கப்பம் கட்டித்தான் ஆக வேண்டும்.

வணிகப்போக்குவரத்து என்றால், அதிலும் கடற்போக்குவரத்து என்றால் அது அமெரிக்காதான். ஏனென்றால் இன்றளவும் 90% முக்கிய கேந்திரங்களின் ஆட்சி அமெரிக்காவிடம் உள்ளது. இவற்றுள் இன்னமும் ஒரு விழுக்காட்டினைக் கூட்டுவதில் முனைப்புக் காட்டுமேவொழிய குறைத்துக் கொள்வதில் எந்தவொரு நாடும் முனைப்புக் காட்டாதுதான்.

சோவியத் ரஷ்யா என்பது 1991ஆம் ஆண்டு பதினைந்து நாடுகளாகச் சிதறுண்டு போனது; இரஷ்யா, உக்ரைன், ஜியார்ஜியா, பெலாருசியா, உசபெக்கிசுதான், ஆர்மீனியா, அசர்பைசான், கசகஸ்தான், கிர்கிஷ்தான், மால்டோவா, துர்க்மினிஸ்தான், தஜகிஷ்தான், லாட்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா என்பனவாக. 1991 ஆகஸ்டு 24ஆம் நாள் சோவியத் அதிபர் கோர்பச்சேவ் பதவி விலகினார். அதேநாளில் உக்ரைன் தன்னைத் தனிநாடாகவும் அறிவித்துக் கொண்டது.

தன்னாட்சி பெற்றுக் கொண்ட நாடுகளில் பலவற்றிலும் சர்வாதிகாரிகளே ஆண்டு வருகின்றனர். சிலநாடுகள் கிழக்கு ஐரோப்பா என அழைக்கப்பட்டு, அவற்றுள் சில அமெரிக்காவின் தலைமையிலான நேசநாடுகள் அமைப்பிலும் உறுப்புநாடுகளாக இருக்கின்றன. அவற்றுள் உக்ரைனும் ஒன்று.

2014ஆம் ஆண்டு அப்போதைய உக்ரைன் பிரசிடெண்ட் விக்டர் யானுகோவிச் என்பார், ஐயோப்பிய யூனியனிலிருந்து விலகி இரஷ்யாவின் நேசநாடாக இருக்க முடிவெடுத்ததை முன்னிட்டு எழுந்த மக்களின் கிளர்ச்சியினாலே பதவியிழந்தார். உடனடியாக, உக்ரைன் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை இரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்து ஆக்கிரமித்துக் கொண்டது இரஷ்யா. இரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் நாட்டின் தொழில்வளப்பகுதியான டான்பாஸ் பகுதியை கைப்பற்றிக் கொண்டனர். ஏன்?

குளிர்காலம் வந்துவிட்டால் தனக்கெனத் துறைமுகம் எதுவும் அற்றுப் போய்விடும் இரஷ்யா. மற்றநாடுகளை நம்பித்தான் இருந்தாக வேண்டும். அதுவரையிலும் தனக்கேதுவான உக்ரைன் நாட்டுத் தலைவர் இருந்தபடியினாலே, கிரீமியாவில் இருக்கும் கருங்கடற்துறைமுகமான செவஸ்டோபோல் எனும் துறைமுகத்தைத் தன்வசம் கொண்டிருந்தது இரஷ்யா. இந்தத் துறைமுகம் உறைதன்மையினால் பாதிக்கக் கூடியது அல்ல. கூடவே கருங்கடலுக்கும் பாரசீகவளைகுடாவுக்குமான வாய்க்காலையும் தன் வசப்படுத்தியிருந்தது. இந்தத் துறைமுகத்துக்காகவேண்டியே கிரீமியாவைத் தன்வசப்படுத்திக் கொண்டது இரஷ்யா. முன்சொன்ன வாய்க்காலுக்கும் ஆப்பு வைக்க, துருக்கிநாடானது அமெரிக்காவின் ஒத்தாசையுடன் தனி வாய்க்காலை வெட்டிக் கொள்ளத் துவங்கி இருக்கின்றது என்பது தனிக்கதை.

கிரீமியாவிலிருந்து தரைவழியாகப் போய்வர வேண்டுமானால், அமெரிக்காவின் நேசநாடான உக்ரைன்நாட்டுக் கிழக்கெல்லையிலும் இரஷ்யாவின் மேற்கெல்லையிலுமாக இருக்கும் அந்த சிறு தரைவழிச்சாலையின் தயவு தேவையாய் இருக்கின்றது இரஷ்யாவுக்கு. ஆகையினாலே, அந்தச் சாலைக்கு ஒட்டியபடி இருக்கும் டான்பாஸ் பகுதி ஆதரவுக் கிளர்ச்சியாளர்களின் மூலமாக அதனைக் கைப்பற்றத் துடிக்கின்றது இரஷ்யா. இதுவரையிலும் இந்த மோதலின் காரணமாக 14 ஆயிரம் பேர் உக்ரைனில் கொல்லப்பட்டு இருக்கின்றனர். நேசநாட்டின் பகுதி தம் பகுதி, அதற்கான பாதுகாப்புக்கும் நாங்களே பொறுப்புயென எதிராக இருக்கின்றன நேசநாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலான நாடுகள். இரஷ்யா தன் எல்லையை மேற்குநோக்கி விரிவாக்க ஏராளமான படைகளை நாளுக்கு நாள் அந்தப் பகுதியில் குவித்துக் கொண்டே இருக்கின்றது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற முறையிலே அந்தந்த நாடுகள் அணி சேரத் துவங்கியிருக்கின்றன.

இந்தியாவானது, அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்குமிடையே பொதுத்தன்மையுடன் இருக்கின்றது. சீனாவும் இரஷ்யாவும் எத்தகைய அளவுக்கு நெருங்குமென்பதைப் பொறுத்து, அமெரிக்கா இந்தியாயிடையேயான அணிசேரல் அமையும் என எதிர்பார்க்கலாம். இரஷ்யாவும் சீனாவும் நெருங்கிக் கொண்டால், சீனாவுக்கான பல கதவுகள் மூடப்பட்டுவிடுமெனச் சீனாவும் சிக்கலில் ஆழ்ந்திருக்கின்றது. இரஷ்யாவின் மீது ஏற்கனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அது இன்னமும் வலுப்பட்டால், இரஷ்யாவுக்குள்ளேயே உள்நாட்டுக் கிளர்ச்சிகள் தோன்றக் காரணமாகவும் அமையலாம். இரஷ்யாவை விட்டுக் கொடுத்து விட்டால், தமக்கான வலுவும் குறைக்கப்பட்டு விடுமோயென அஞ்சுகின்றது சீனா. தேசதேச உறவுகள் என்பது அப்படித்தான். ஒன்றை எட்டிப் பிடித்தால் இன்னொன்று கைவிட்டுப் போகும்.

தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2022!!

https://www.npr.org/2021/12/14/1064018450/tensions-over-ukraine-come-as-relations-between-russia-and-nato-are-at-an-all-ti

12/13/2021

வாளாதிருத்தல், அல்லாங்காட்டி முடங்கிக்கிடத்தல்

If you avoid 
the conflict 
to keep the peace, 
you start a war inside yourself.

நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்கின்றோம்? அய்யோ அதைப் பேசுனம்னா அவங்க சங்கடப்படுவாக, எதுக்கு பொல்லாப்பு?? இப்படியான மனநிலையில் சும்மா இருந்து கிடக்கின்றோம். ஏன்? சஞ்சலம் கொள்கின்றோம், நம்மால அந்தப் பிரச்சினைய சுமூகமாகப் பேசி ஒத்த புரிதலுக்கு வந்திட முடியாதென. சங்கடங்கள், பிணக்குகள் வரக்கூடுமென்கின்ற அச்சம். அப்படியானதொரு உரசல் தருணத்தை எதிர்கொள்ள மனத்திட்பம் நமக்கு இல்லை. அல்லது, சமூகத்தில் அப்படியானதொரு பண்பாட்டுக்கு இடமில்லை. But? If you avoid the conflict to keep the peace, you start a war inside yourself. மனத்துக்குள்ளேயே குமைந்து கிடத்தல், வாய்ப்பு கிடைக்கும் போது பொறணி பேசுதல், அல்லது பாசாங்காய் வாழ்ந்திருத்தல் என்பவை நம்முள் குடிகொள்ளும்.

உரசல் குறித்த நம் மனப்பாங்கு எப்படியெல்லாம் இருக்க நேரிடுகின்றது?

1. அதுவொரு சின்ன விசயம், நான்தான் பெருசா நினைக்கிறம் போலிருக்கு. 

2. என்ன செய்றதுன்னு தெரீல, ஆனா அது எனக்கு ஒப்புதலா இல்லை. 

3. நாம அதை சொன்னா, மத்தவங்க கோபப்படுவாங்க அல்லது நம்மளை கீழாக நினைப்பாங்க. 

4. நாம பேச வெளிக்கிட்டா, உறவு முறியக்கூடும்.

இவையெல்லாமுமே நாம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். இவற்றுக்காக நாம் அந்த உரசல் குறித்தான பற்றியத்தைக் கைவிட்டு நகரந்தாலும், நம் மனம் அதனைக் கைவிடுவதில்லை; மாறாக உள்மனக்குரங்காக இருந்து கொண்டேவும் ஆட்டம் போடுகின்றது. இது போன்ற உள்மனக்குரங்குகள் ஒவ்வொன்றாகக் கூடிக் கொண்டே போகும் நிலையில், எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக்கூடுமோயெனும் நிலையை எட்டிவிடுகின்றது மனம் . உணர்வுகள் அடக்கப்படுகின்றன வெளித்தோற்றத்துக்கு; ஆனால் உள்மன அழுத்தம் கூடிக்கொண்டேவும் இருக்கின்றது.

உரசல், மாற்றுக்கருத்து என்பது உள்ளபடியேவும் ஒரு நல்வாய்ப்பாகும். உறவுகளை மேம்படுத்திக் கொள்ள, அடுத்ததொரு நிலைக்கு எடுத்துச் செல்ல வழிகோலக் கூடியதாகும். அதையொரு தடைக்கல்லாகப் பார்க்காமல், அதில் இருக்கும் நன்மையென்ன, மாற்றுவழியென்ன என்பதைப் பேசி ஒருவொருக்கொருவர் இடையேயான நேர்மையை, வெளிப்படைத்தன்மையை மென்மேலும் கட்டமைத்துக் கொண்டே போகலாம் நாம்.

பேசிக் கொட்டிவிட்டால் இனி மறைப்பதற்கேதுமில்லை. ஓடித் திரியலாம் அந்த சின்னஞ்சிறு அணில்கள் போலே, தெருவோரத்து நாய்க்குட்டிகள் போலே!

1. என்ன பிரச்சினை? அதையொட்டிய உன் நிலைப்பாடு, உணர்வுகள்தாம் என்ன? எப்படி இருக்க வேண்டுமென நீ நினைக்கின்றாய்? திறந்த மனத்தோடு வா, பேசலாம். 

2. பொதுவெளியில் பேச விருப்பமில்லையா, தனித்துப் பேசலாமே? வா. 

3. நான் உன்னிடம் பணிகின்றேன். அதே போல நீயும் பணிந்துவிடு. பிரச்சினையைப் பேசுவோம், நீயும் நானும் நமக்குள் ஒருபொருட்டல்ல. 

4. நீ பேசு, நான் கேட்கின்றேன். நீ பேசி முடி, சத்தம் போடாதே. ஆனால் உன் உணர்வுகள் எல்லாவற்றையும் சொல், சொல்லி முடி, பிறகு நான் பேசுகின்றேன். 

5. பேசுபொருளுக்குள் மட்டுமே நேரத்தை செலவிடுவோம். எனக்குள் இருப்பது நீ. ஆகவே நான் பெறுவதெல்லாமும் நீ பெறுவதாகவே ஆகும். 

6. இடம், பொருள், சூழலுக்கும் நாம் பொருந்திப் போக வேண்டும். இருவருமே இணங்கி அதை நோக்கிச் செல்லத்தான் வேண்டும்.

இப்படி, அவரவர் வசதிக்கேற்ப வழிகள் ஆயிரம் உண்டு. அத்தனைக்கும் அச்சாரம் உரையாடல். உரையாடாமல் ஒரு நூலிடை கூட முன்னேறுவதில்லை நாம். அமைதி முக்கியம்தான். அமைதியாகவே இருந்து விட்டால் வாழ்வில் சூன்யமே மிஞ்சும்.

If you avoid the conflict with no conversations to keep the peace, you start a war inside yourself! பாரம்சுமந்துதிரியப் பிறந்தவரல்ல நாம், பேசித்தீர்த்துவிடு!!

-பழமைபேசி.

12/11/2021

மனித உரிமைகள் நாள்

மனித உரிமை என்றால் என்ன? இந்தப் புவியில் நான் பிறந்திருக்கின்றேன். எனக்கான ஆசைகளோடும் விருப்பங்களோடும் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கப்பட வேண்டும். அதுதான் ஒருவருக்கான மனித உரிமை. என் ஆசை என்பது, என் விருப்பம் என்பது பிறிதொருவரின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் உயிருக்கும் இடையூறாக அல்லாமல் இருந்திடல் வேண்டும். இதுதான் மாந்தநாகரிகம், மாந்தநேயம். இதற்கு மேல் எந்தப் புண்ணாக்கும் இல்லை; இல்லவே இல்லை.

ஆனால்? பணத்தாசை, மண்ணாசை, காம இச்சை, புகழாசை போன்றவற்றின் நிமித்தம் ஆதிக்கவாதமென்பது மாந்தன் தோன்றிய காலந்தொட்டேவும் இருந்து வருகின்றது. மனிதனின் அறிவுப்புலம் முதிர்ச்சி கொள்ளக் கொள்ள, மனித உரிமைகள் என்பதற்கான ஆவலும் நாட்டமும் வரையறையும் மிளிர்கின்றது. அது அறிவுப்புலத்தில் கனிந்த கனி. அந்தக் கனிக்கு ஊறு நேர்ந்து மாந்தநேயத்தில் என்றுமில்லாத அளவுக்குப் புழுக்கள் பூத்து நெளிந்து கொண்டிருக்கின்றன. ஆமாம், புழுத்துப் போய்க் கொண்டுதான் இருக்கின்றது மாந்தநேயம்; போலிச்செய்திகள், ஃபேக்நியூஸ் எனும் வடிவில் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன அவை.

ஃபேக்நியூஸ் என்று சாடுவதைக் கண்டதுமே எதிர்வினைகள் பிறக்கின்றன. இது காலகாலமாகவே இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்று என்ன புதிதாக? இப்படியெல்லாம் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. என்ன காரணம்? ஏதோவொரு விதத்தில் அப்படியான ஃபேக்நியூஸ்களை நாமும் விரும்புகின்றோம் என்பதுதான் அதன் பொருள்.

காலாகாலமாகவே பொய், புரட்டு, திரிபுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அல்லாவிடில் மொழியில் இச்சொற்கள் இடம் பெற்றிருந்திருக்காதுதான். ஆனாலும் மாந்தவுரிமைகளுக்கான பேரவலமாக ஃபேக்நியூசைச் சொல்ல வேண்டிய தேவை எங்கேயிருந்து, ஏன் வருகின்றது?

என்றுமில்லாத அளவுக்குத் தகவற்தொழில் நுட்பம் தற்போது உச்சத்தில் இருக்கின்றது. அதன்காரணமாக மூன்ற் கோணங்களில் பன்மடிப் பெருக்கமாகப் பெருவேகத்துடன் பாய்ந்து சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன ஃபேக்நியூஸ்கள். அடுத்த நொடியில் உலகமெங்கும் சென்று சேரக்கூடிய வேகம், அனுப்பும் செய்தியின் அளவு, செய்தியின் வீரியம், சென்று சேரக்கூடிய மக்கட்தொகையென எல்லாப் பண்புகளிலுமே அளவீடுகள் பெருகியிருக்கின்றன. New technologies and means of communication have meant that false information can now be spread at a faster, more alarming rate than ever before. எனவேதான் ஃபேக்நியூஸ்கள் நமக்குப் புதியதொரு பெருங்கேடாகத் தெரிகின்றது. எதிர்வினையாற்றுவாருக்குத் தெரியாத விசயமல்ல இது. அவற்றுக்கு இரையாகிப் போனதன் விளைவு அவர்களை அப்படிப் பேச வைக்கின்றதென்பதாகவே நாம் அதனைக் கருத வேண்டியிருக்கின்றது.

இப்படியான ஃபேக்நிவீஸ்கள், மக்களை முட்டாள் ஆக்குகின்றன. பொய் பேச வைக்கின்றன. மூடிமறைப்புக்கு ஆளாக்குகின்றன. முறையற்ற புள்ளிவிபரங்களை அள்ளித் தெளிக்கின்றன. மக்களைப் பிளவு படுத்துகின்றன. பகைவர்களாக ஆக்குகின்றன. ஆதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் நைச்சியமாகக் கட்டமைக்கின்றன. உயிர்களைக் காவு வாங்குகின்றன. But why aren’t people angrier about the segregation, lies, cover-ups, misleading figures, division, hypocrisy and coerced medical procedures which ignore basic human rights? அணு ஆயுதம் பேரழிவு என்கின்றோம். ஆனால் அதனினும் கூரியப் பயங்கரவாதம்தான் இந்த ஃபேக்நியூஸ்கள். அடுத்த வேளை நீங்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை அது தீர்மானிக்கும். கணவன் மனைவியைப் பகைகொள்ள வைக்கும். மனைவிக்கு கணவனை எமனாக்க வைக்கும். நீங்கள் காண்கின்ற காட்சியில் வினை விதைக்கப்பட்டிருக்கும். செவிமடுக்கின்ற ஒலியில் வினை விதைக்கப்பட்டிருக்கும். எதையும் எதிர்க்கேள்வி கேட்டுப் புலப்படுத்திக் கொள்ள வேண்டியதன் தேவை பலவாகப் பெருகியிருக்கின்றது.

அறிந்தோ, அறியாமலோ அவற்றை நமக்கு அனுப்பி வைப்பர். நாமும் அவ்விதமே அறிந்தோ அறியாமலோ பிறருக்கு அனுப்பி வைப்போம். காசு, பணம் கட்டிப் பரப்புரைகள் வாயிலாக இடையறாது புகட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன இவை. மனிதனுக்கு பொருளாதார, சமூக உரிமைகளை நிலைநாட்டவல்ல தேர்தல்களிலே ஃபேக்நியூஸ்கள். மருத்துவ உரிமைகளைப் பெறுவதிலே வளைக்கப்பட்ட செய்திகள், தகவல்கள். சமூக இணக்கத்தைச் சீர்குலைப்பதற்கென்றே சாதி, சமயம், மொழியின்பாற்பட்ட அவதூறுகள், ஃபேக்நியூஸ்கள். இப்படியானவை மக்களைத் தொடர்ந்து கொதிநிலையிலே, கொந்தளிப்பிலே, ஆர்ப்பரிப்பிலே உணர்வுக்கடலில் மூழ்கிக் கிடக்க வைக்கின்றன.

சமத்துவம், தன்னுமை, அமைதி, மனவுறுதி, சட்டத்தின் ஆட்சி, அறம்போற்றுதல், உழைப்பு ஆகியனமட்டுமே மனிதனை மனிதனாக்கும்; அழகாக்கும். இவற்றுக்குக் கேடு விளைவிக்கின்ற வேறெதுவும், மாந்த உரிமைகளுக்கு வழிவகுக்காது. மாந்தனாயிருக்க, ஃபேக்நியூஸ்களை வெறுத்தொதுக்கச் சூளுரைப்போம்! The idea of cultural policing is nothing but an excuse to violate human rights! Dare to counter fake news!!

-பழமைபேசி, டிச 10, 2021.