10/31/2010

FeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க விழா

இச்சார்ல்சுடன்(Charleston, SC). ஏசுலி ஆறும் கூப்பர் ஆறும் அட்லாண்டிக் பெருங்கடல் நோக்கிப் பாய, அவற்றுக்கு இடையில் தீபகற்பமாக, எழிலுற அமைந்ததுதான் பசுமைநிறை இச்சார்ல்சுடன் பெருநகரம். கூப்பர் ஆற்றைக் கடக்கையில், பிரம்மாண்டமான கட்டமைப்புக் கொண்ட ஆர்த்தூர் ரேவனெல் பாலம் நம்மை மறுகரைக்குக் கொண்டு சேர்க்கிறது.

2005ல் கட்டமைக்கப்பட்ட இப்பாலத்தினை வியந்து கண்டோம் நாம். கிட்டத்தட்ட 13,200 அடி நீளம் கொண்ட சாலையை, வானுயர இருதூண்கள் எழுப்பி, அதனின்று கிளம்பும் நூற்றுக்கணக்கான இரும்பு விழுதுகளால் தொங்கவிடப்பட்டுள்ள தோற்றம் நம்மை வியக்க வைக்கிறது.

இச்சார்ல்சுடன் நகருக்குள் நுழைந்தாலோ, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புராதனக் கட்டிடங்களும் நவீனமும் நம்மை “வா, வா” என ஈர்த்துக் கட்டிப் போட்டுவிடுகிறது. ”இங்கேயா, நம் தமிழ் மக்கள் ஒன்று கூடி விழா காணப் போகிறார்கள்?”, என்று எண்ணிப் பார்த்ததுமே நம்முள் உற்சாகமும் ஒருவிதமான வியப்பும் நம்மைக் குதூகலத்தில் ஆழ்த்திவிடுகிறது.

மைய நகரில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஃபாலி கடற்கரை செல்கிறோம். ஆகா! கடல் தேவதைக்கு நிகர் வேறு எவருண்டு? நீண்ட, நெடிய தூய்மையான கடற்கரை. கதிரவன் உதயத்தைக் காண அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி மேடை கடலுள் நீண்டிருக்கிறது. நாமும், கதிரவனுக்குப் போட்டியாய் எழுந்து சென்று அவனது உதயத்தைத் தரிசிக்கக் காத்திருக்கிறோம்.

காத்திருக்கச் செய்து, மெல்ல, மெல்ல, செவ்வொளி கப்பியவிதமாய் தலையைக் கொஞ்சம் கொஞ்சமாய் காண்பித்துக் கொண்டே அவனெழுந்த விதம்... அப்பப்பா... ஒவ்வொரு மணித்துளியும் அட்லாண்டிக் பெருங்கடல் வாசத்துடன் நாம் கண்ட காட்சி, கண்களது ஆயுளை நீட்டித்தது.

அட்லாண்டிக் பெருங்கடலில் காலை நனைக்கிறோம். குளுகுளுவென, நம்மை நனைத்துப் பரவசமூட்டியது. மனம் குதூகலத்தில் துள்ளி எழும்புகிறது. எம் அன்னை மொழியவள் இங்கே கொண்டு வந்து சேர்த்தாளேயென எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து, அதன் நீட்சியாக, தெளிந்து படிந்திருத கடற்கரை மணலில், அங்கே இருந்த நத்தை ஓடு ஒன்றைக் கொண்டு, பெரிய எழுத்தாகத் தமிழ் என எழுதி வைக்கிறோம்.

கடலுக்குள் சென்று, தமிழ், தமிழவளைக் கண் கொண்டு பார்க்கிறோம். காலில் தண்மைக் கடலின் ஆட்சி; கண்களில் தமிழ்க் கடலின் ஆட்சி!! நமது பூரிப்பைக் கண்ட கடலலைகள், தமிழைத் தழுவி அழிப்பது போல்ச் சென்று தழுவாமல் விட்டு வருவதும், மீண்டும் தமிழை அழிப்பது போல்ச் சென்று நாணுவதுமாக நம்மைச் சீண்டி விளையாட்டுக் காட்டியதை என்ன சொல்லி மகிழ்வது?

கடற்கரையினில் இருந்து விடுபட மனமில்லைதான். எனினும், நாம் காணப் போகிற தமிழர் கூட்டத்தின் நினைவு நம்மை ஆட்கொள்ள, அவர்களை நோக்கி விரைய விழைந்தோம்.

காலை பதினொரு மணிக்கெலாம், தென்கரோலைனாவின் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்துள் தமிழர் கூட்டம் தத்தம் குடும்ப சமேதரர்களாய் நுழைந்து கொண்டிருந்தார்கள். ஆம், அடுத்த ஆண்டு தென்கரோலைனா மாகாணம் இச்சார்ல்சுடனில் நிகழவிருக்கும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA)யின் இருபத்தி நான்காம் ஆண்டு விழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கும் விழாவாக, கோவில் நோன்புக்கான கம்பம்நடு விழா போன்றதொரு விழாவாக அமைந்ததுதான் இந்நாள்.

முனைவர் தண்டபாணி, முனைவர் சுந்தரவடிவேலு மற்றும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர் அனைவரையும் வரவேற்று, அரங்கத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துவிட்டு, இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

எந்த ஒரு தமிழ்ச் சங்கத்திற்கும் இல்லாத ஒரு தனித்தன்மை இவர்களுக்கு இருப்பதாக உணர்ந்தேன். விருந்தினர் தவிர, உள்ளூர்ச் சங்கத்தினர் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொளவதை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. அதாகப்பட்டது, ஒவ்வொருவரும் இயல்பாகவே ஏதோ ஒரு பணியை சிரமேற்கொண்டு எளிய புன்னகையுடன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஒழுங்கு, நம்மை சிந்தனையில் ஆழ்த்தியது.

பெரிய சங்கம் என மார் தட்டிக் கொள்வதில் இல்லை பெருமை; உயிர்ப்பும், தளிர்ப்பும், வீரியமும் எங்கே அதிகம் என்பதில் இருக்கிறது பெருமை! எண்ணிக் கொண்டு இருக்கையில், அனைவரும் மேடைக்கு வந்து சுய அறிமுகம் செய்யப் பணித்தார் முனைவர் சுந்தர வடிவேலு.

என்னவொரு சுவராசியமான அறிமுக நிகழ்ச்சி. தாயகத்தில் இருப்பிடம் மற்றும் இங்கு இருக்கும் இருப்பிடம் முதலானவற்றைக் குறிப்பிட்டு அனைவரும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே நண்பகல் உணவைக் கொடுத்து அசத்தினார்கள். அதே உத்வேகத்தில், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி முனைவர் ஆனந்தி சந்தோஷ் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவர் முனைவர் தண்டபாணி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தும், தொகுத்தும் வழங்கினார். 2011-ல் நிகழ இருக்கும் ஆண்டு விழாவின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தரவடிவேலு, இதுகாறும் ஈடேறிய பணிகள் குறித்தும், இனிச் செய்ய வேண்டிய அலுவல்கள் குறித்தும் நறுக்குத் தெறித்தாற் போல எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர்களில் மற்றொருவரான திரு,பாட்சா அவர்கள், வர்த்தகக் காட்சியின் நோக்கம் மற்றும் நடப்புப் பணிகள் முதலானவற்றை எடுத்துச் சொல்லி, அமர்ந்து இருந்தோருக்கு செறிவான தகவல்களை ஊட்டினார்.

விழாவில் இடம் பெறவிருக்கும், மருத்துவக் கருத்தரங்கம் தொடர்பான விபரங்களை,மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளர், மருத்துவர் அன்புக்கரசி மாறன் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், அது குறித்துச் செய்த பணிகள் மற்றும் செய்யவிருக்கும் பணிகள் குறித்துப் பேசி, நம்பிக்கையை ஊட்டி உற்சாகத்தைப் பெருக்கினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மேடை ஏறினார், பேரவையின் தலைவர் முனவர் பழனிசுந்தரம் அவர்கள். தலைவருக்கே உரிய பொறுப்பு மற்றும் கடமையுணர்வுடன் அவர் பேசிய பாங்கு, அவருடன் இணைந்து நெடுங்காலமாய்ப் பணியாற்றுவோருக்கே ஒரு வியப்பாகத்தான் இருக்கும்.

சிறந்த நிர்வாகிக்குரிய அத்தனை சிறப்புகளுடன், அவர் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த தகவற்செறிவான விபரங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டது. பேரவையின் வரலாறு, நோக்கம், கடமை, விழாவின் அவசியம், எப்படி நடத்தப் போகிறோம் என்பன முதலான விபரங்களை நகர்ச் சில்லுகள் மூலம் தெளிவாக எடுத்துரைத்தார்.

முனைவர் முத்துவேல செல்லையா அவர்கள்! ஆம், அடுத்துப் பேச வந்தார் பேரவையின் முன்னாள் தலைவர் அவர்கள்!! ஐந்தே மணித்துளிகள் பேசினாலும், பேச வேண்டியதை, ஏழு அண்டப் பேரொளியையும் ஒரு கல்லுள் வைத்துச் சுடரொளியை எழுப்பும் இரத்தினத்தைப் போல, இரத்தினச் சுருக்க உரை நிகழ்த்தினார் இவர். அரங்கம் வீறு கொண்டு உற்சாகமுற்றது.

அடுத்து நிகழ்ந்த கேள்வி பதில் நேரத்தின் போது, நாமும் நம்முடன் ஒட்டிப் பிறந்த கோயம்பத்தூர்க் குசும்பை வெளிப்படுத்தினோம். அக்குசும்பிலும், வந்திருந்தோருக்கு சென்று சேரவேண்டிய தகவலை சொல்லத் தவறவில்லை நாம். ஆம், பேரவை ஆண்டு விழாவிற்கு கொடையாளர்கள் ஆவதன் பலன்களைக் குறிப்பிட்டோம் நாம்.

இறுதியாக, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த திருமதி வளர்மதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பேரவையின், இருபத்தி நான்காம் ஆண்டுவிழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கிடச் சிறப்பு விருந்தினர்களாக, அண்டை மாகாணத்துத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்தவர்களும் வந்திருந்து, தத்தம் ஒத்துழைப்பை நல்குவதாக உறுதியளித்தனர்.

வட கரோலைனாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.பாலன் அவர்கள், சார்லட் அரசி நக்ரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி செந்தாமரை பிரபாகரன் மற்றும் செயலாளர் இலட்சுமண் அவர்கள், அகசுடா தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த முனைவர் சிவகுமார், கொலம்பியாவிலிருந்து திரு.சரவணன், கிரீன்வில்லைச் சார்ந்த திரு.பார்த்தசாரதி, மினசோட்டாவில் இருந்து திரு. ஜெயச்சந்திரன் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மொத்தத்தில், எழில்மிகு இச்சார்லசுடனின் கவின்மிகு இடங்களைக் கண்டு களிக்கவும், அழகான மீன்காட்சியத்தில் நடக்க இருக்கும் விருந்தினர் மாலை நிகழ்ச்சியை உள்ளடக்கிய, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்தி நான்காம் ஆண்டு விழா, அகில உலகத் தமிழர்களையெலாம் வரவேற்று, அற்புதத் திருவிழாவாக அமைந்து, வட அமெரிக்கத் தமிழரின் வரலாற்றில் சிறப்பை எய்தப் போகிறது என்பதுமட்டும் திண்ணம்!



தென்கரோலைனா, இச்சார்ல்சுடனில் இருந்து பழமைபேசி!

10/26/2010

முகமூடி


இவங்கள்ல ஒருத்தர், இந்த வாரம் ஊருக்கு வர இருக்காரு. அதுபத்தின விபரம் சீக்கிரம் வெளியாகும். வர்றவரை பார்த்துக் கவனிக்க வேண்டியது, அங்க இருக்குற உங்க கடமை மக்களே!!!


10/25/2010

நகரம் ஆள்கிறது!

கைவிடப்பட்ட வீடுகள்
சிதைந்த வாழ்க்கை
இடம்பெயர்ந்த மக்கள்
மெளனித்த கோயில்மணி
பயனற்றுப்போன அம்மிகள்
உருத்தெரியா சந்தைப்பேட்டை
களையிழந்த தலைவாசல்
இருள்கொண்ட சத்திரம்
அற்றுப்போன சுமைதாங்கி
எறிந்துகிடந்த இலாடப்பை
குரலுடைந்த ஊர்த்தலைவர்
ஆளில்லா அரசமரத்தடி
ஊர் உறங்குகிறது
நகரம் ஆள்கிறது!
நகரம் ஆள்கிறது!!

10/20/2010

வங்கணத்தி

மாறாத தென்றல்
மங்காத மதியொளி
நிசப்தமான பொழுது
மெல்லிய விசும்பல்
ஈரேழு ஆண்டுகளாய்
மெய் கிடையாகி
கிடை மடியாறிச்
செல்லுமாடமது!
ஏன்டி?
நீயும் மூக்குறிஞ்சிச் சாவடிக்குறே??

இருக்குறது மாடமே ஆனாலும்
உடுத்துறது பட்டே ஆனாலும்
சாத்துறது தங்கமே ஆனாலும்
இன்னைக்கு சமைஞ்ச அவ,
நாளைக்கு
நான் யாருன்னு கேப்பாளோ?
நான் யாருன்னு கேப்பாளோ??

10/19/2010

நாங்களும் வாழ்கிறோம்!


(if you can, fast forward the video for about 6 minutes to listen to the speech)

அயலக வாழ்வில்
கிடைப்பது பேச்சுரிமை மட்டுமல்ல!
கிடைத்தது சிந்தனைக்களமும்தான்!!

அயலக வாழ்வில்
கிடைப்பது மனிதாபிமானம் மட்டுமல்ல!
கிடைத்தது சமத்துவவுணர்வும்தான்!!

ஆப்ரகாம் லிங்கன்
மார்ட்டின் லூதர் கிங்
வாழ்ந்த இம்மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்!

ஆப்ரகாம் லிங்கன்
மார்ட்டின் லூதர் கிங்
வாழ்ந்த இம்மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்!
நாங்களும் வாழ்கிறோம்!!

10/18/2010

பதிவர்புரம்

சபரி, சீமாச்சு, சசி, ரூப், திரு, பழமைபேசி
பழமைபேசி, திரு, ரூப், சசி, சபரி, சீமாச்சு, ஜாங்கோ ஜக்கு மாப்பிள்ளை

Stone Mountain Park, Atlanta, GA.

10/14/2010

கடும் பகை

பொன்னானையும் அம்மணியையும்
ஊருக்கு அனுப்பிவை!
காரி மாட்டை துங்காவிக்காரனுக்கு
புடிச்சுக்குடு!
இந்தா, கழுத்துல என்ன?
மாரப்பங்கிட்டக் கழ்ட்டிக்குடு!
மாடே இல்ல,
தவுட்டு மூட்டைக எதுக்கு?
ஆறானை வெச்சிக்கச்சொல்லிக் காச வாங்கு!
எல்லாமும் ஆச்சு,
விதைநெல்லுக்கு இன்னும் வேணும்
ஆயிரத்து முந்நூறு!

கெடை கொள்ளமுடியலடீ!
கெடை கொள்ளமுடியலடீ!!

மாமா, சொன்னாக் கோவிச்சிக்க
மாட்டீகளே?
நானுங்கூடா வர்றேன்
எதுத்தவாசக் கதவைத் தட்டுனா என்னோ?
காசுக்கு முடைன்னு சொன்னாத்
தராமலா போய்டுவாய்ங்க??

பன்னெண்டு ஆண்டுப் பகை
கட்டினவ மனசு மாறியிருக்கா
உடுவானா தங்கவேலூ??

தட்டினான்
பனிரெண்டு ஆண்டுகள்
தட்டாத தன் பங்காளி வீட்டுக் கதவை!

அருக்காணீ...
வாசல்லயே நிக்காட்டி என்னோ??
இந்தா....
தங்கான் வந்துருக்குறான்...
அந்தவெடக்கோழி ரெண்டையும்
அடிச்சுப் போட்டுச் சாறக் காச்சு!

காசுங்கிடைச்சது
மனமும் நெறஞ்சது
நடையா நடந்து வந்த
பன்னெண்டு வருசத்து
நீதிமன்றத்து வழக்கும் ஒழிஞ்சது!!

10/13/2010

வஞ்சகக் காதலும், வஞ்சனைக் கொலைகளும்!

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!

இன்றைய ஊடகங்களில், வஞ்சகக் காதலும் அதன் நீட்சியான வஞ்சனைக் கொலைகள் பற்றிய செய்திகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடம் பிடித்து வருகின்றன.

பெரும்பாலானோர் வருத்தத்தோடு சொல்வது, போதிய கல்வி அறிவின்மை, காதலுக்குத் தரும் முன்னுரிமையை அதை ஒட்டி வரும் காமத்திற்குத் தர முன்வராதது, காமம் பற்றிய அறிவின்மை, நமது பண்பாட்டில் போதிய மாற்றமின்மை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இங்கேதான் நாம் அவற்றில் இருந்து சற்று மாறுபடுகிறோம். ஏன்? அன்பையும், அறத்தையும் ஏட்டிலிருந்தோ, சட்டத்தின் மூலமாகவோ, அல்லது பண்பாட்டை மாற்றி அமைப்பதன் மூலமாகவோ ஒருகாலும் நிலைநாட்ட முடியாது.

Love stands far away from Lust! காதல் என்பதற்கும் காமம் என்பதற்குமான இடைவெளி வெகு அதிகம். அப்படியானால், காதலின் நீட்சியானது என்னவாக இருக்க முடியும்? இங்கேதான் தமிழின் சிதைவானது நம் கண்களுக்குப் புலப்படாமலேயே போகிறது.

காமம் வேறு; மோகம் வேறு! காமத்தைச் சிந்துபவன் காமுகன்; மோகத்தைச் சிந்துபவன் மோகன்! காதலின் நீட்சி மோகிப்பது; காமத்தின் நீட்சி மாச்சரியம்!! அன்பால் உருக்கிப் புணர்வது மோகம். உணர்ச்சியால் மட்டும் உருக்கிப் புணர்வது காமம். மோகத்தின் ஒருபாதி உள்ளடக்கம் காமம்.

சரி, அப்படியானால் எந்தவொரு சாமான்யனும் காமவயப்படுவது இல்லையா? காமவயப்படுவது யதார்த்தம். அவ்வயப்பட்டு இடறிப்போவது அனர்த்தம்! இது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மனக்கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

காமுகனை மிருகம் என்றார்கள். மோகத்தை வெளிப்படுத்துகையில் கொஞ்சு புறாவே என்றார்கள். ஏன்? பறவை இனத்துள், கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுக்கு மேலானவை ஒருமிகள். விலங்குகள் அப்படியானவை அல்ல! ஒருமிகள் என்றால்? ஒருத்திக்கு ஒருவனாய் / ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பவை பறவைகள். பகுத்தறிவற்ற பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தியாய் இருக்கின்றன. இதுதான் அறிவியல்ப்பூர்வமான உண்மை.

அதே வேளையில், பகுத்தறிவுள்ளவனுக்குப் பாலியல் கற்றுத் தருவதும் அவசியமே! பழங்காலத்துக் கோவில்களிலும், கல்வெட்டுகளிலும் முன்னோர் அதைத்தான் செய்தார்கள். அதே வேளையில், கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டார்கள்.

சரி, பாலியல் குறித்தான் அறிவின்மைதான் இக்கொலைகளுக்குக் காரணமா? அப்படியானால், காமத்தை அறியாதவர்கள்தான் இக்கொலைகளைச் செய்கிறார்களா?? அப்படி அல்ல என்பதுதானே உண்மை. இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே மணமானவர்கள்.

கள்ளக்காதல்? ஏதோ ஒன்றை மறைவாகச் செய்வது கள்ளத்தனம்! ஒரு மாணவனும், மாணவியும் பிறர் அறியா வண்ணம் புரிவது கள்ளக் காதல். மணமானவர்கள் புரிவது கள்ளக் காதலா?? அது வஞ்சகக் காதல். தன்னை நம்பி வாழ்க்கைக்குள் வந்தவரை வஞ்சித்துச் செய்யும் காதலது!!

இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிகழும் அனர்த்தம் அல்ல; உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னுஞ் சொல்லப் போனால், அமெரிக்காவில்தான் கிட்டத்தட்ட 40% பேர், வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இத்தவறைச் செய்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சென்ற தலைமுறையினரோடு ஒப்பிடும் போது, பெருமளவில் குறைந்து கொண்டு வருவதாகச் சொல்கிறது ஆய்வுகள்.

குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?? சமூகத்திலே, அப்படியானவர்களை இனங்கண்டு அடையாளப்படுத்தத் துணிந்தார்கள். பதவி இழந்த அரசியல்வாதிகள், வாய்ப்பிழந்தவர் வரிசையில் விளையாட்டு வீரர்கள், திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள்.... என எண்ணற்றோர்.

கலை, இலக்கியம், ஆன்மிகம், விளையாட்டு முதலானவற்றில் மணவாழ்க்கையின் போதான விசுவாசத்தைச் சிலாகித்துப் படைப்புகள் படைத்தார்கள். அறம் என்பது சொல்லித் தெரிவதில்லை; நடைமுறையில் மட்டுமே வரும்! Practicing is better than preaching!!

சென்ற வாரம் கூட, Blue Cross Blue Shield எனும் நிறுவனத்தில் யாருக்கோ பிறந்த நாள். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டு வருகிறார்கள். ஒருவர் எழுந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். எப்படி??

”I am Tom Verego, married to Darlene Verego for 36 years!”, எனச் சொல்லி அமர்கிறார். கரவொலி விண்ணை முட்டுகிறது. அதற்காக, மணமுறிவு கொண்டோரைத் தரம் தாழ்த்துகிறார்கள் என்பது அல்ல. ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பதைப் பெருமையாய் நினைப்பதைத்தானே இது சொல்கிறது?!

இத்தனைக்கும் மேலாக, பெரும்பாலான நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சட்டம்தான். மணமான ஒரு பெண்ணை, அப்பெண்ணின் இசைவோடு காமத்திற்கு உட்படுத்தியிருந்தாலும் அது சட்டப்படிக் குற்றம்.

Adultery (முறையற்ற உறவு)க்கு மிச்சிகனில் ஆயுள் தண்டனை என்றால், இந்தியாவில் பிரிவு 497ன் கீழ் ஐந்து ஆண்டுகள் தண்டனை. தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு எவ்விதத் தண்டனையும் இராது. ஆணுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். (கண்ணுகளா, நாம பார்த்து இருந்துக்கலாமப்பூ...)

மேலும், இது வஞ்சகக்காதல் ஆகாதென வாதிடுவோர் பலர் இருக்கக்கூடும். கட்டிய மனைவி அல்லது கணவனின் கவனத்திற்கு உட்பட்டுச் செய்தால் அது வஞ்சகக் காதல் அல்லதான்! கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுச் செய்யும் பட்சத்தில், அது வஞ்சகக் காதலே; எவரும் அங்கீகரிக்கப் போவதில்லை! அங்கீகரிக்கவும் கூடாது!!

வஞ்சகக் காதலின் நீட்சியாய் நிகழும் வஞ்சனைக் கொலைகள் தவிர்க்கப்பட வேண்டுமாயின், மணமுறிவுகள் எளிதாக்கப்பட வேண்டும். ஊடகங்கள், கட்டற்ற சுதந்திரத்தை வரைமுறையோடு பாவித்து, வக்கிரம் மற்றும் வன்முறைப் படைப்புகளைத் தவிர்த்து, அற்ம்(ethics) என்பதைக் கையில் எடுத்தாலொழிய இதற்கு விமோசனமில்லை!!!

10/12/2010

அறை எண் 311

சட்டனூகா! வளைந்து, நெளிந்து ஒய்யாரமாய் ஓடிக் கொண்டிருக்கும் டென்னசி ஆற்றின் ஒரு வளைவை ஒட்டி, அழகுற அமைந்த நகரம் இது. இந்நகரானது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் விளங்குகிறது. 1860ம் ஆண்டில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வருகிறது. அமெரிக்காவின் தென்பகுதியில் இருந்து வந்த நிறத்தின் அடிப்படையிலான அடிமைக் கலாசாரத்தை, கட்டுக்குள் கொண்டு வருவோம் எனச் சொல்லி அரியணை ஏறுகிறார் அண்ணல் ஆப்ரகாம் லிங்கன் அவர்கள்.

அதையொட்டி, அவரது கொள்கைகளுடன் ஏற்பில்லாத ஏழு மாகாணங்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து, பின்னர் மேலும் சில மாகாணங்கள் அதனுடன் இணைந்து கொண்டன. தென்கரோலைனா, வடகரோலைனா, மிசிசிபி, ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, அலபாமா, லூசியானா, டெக்சாசு, ஆர்கன்சாசு, விர்ஜீனியா மற்றும் டென்னசி ஆகிய மாகாணங்கள், அமெரிக்க்க் கூட்டு மாகாணங்கள் எனத் தம்மை அறிவித்துக் கொண்டன. அதிபர், அப்ரகாம் லிங்கனின் தலைமையில் இருந்த எஞ்சிய மாகாணங்கள், அமெரிக்க ஒன்றியம் எனத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.

அதைத் தொடர்ந்து, கூட்டுப் படைகள் 1861ம் ஆண்டு, ஏப்ரல் 12ந் தேதி அன்று, தென் கரோலைனாவில் உள்ள சம்டர் கோட்டை எனும் இடத்தில் இருந்த அதிபர் லிங்கனின் படைகளைத் தாக்கவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டுப் போர் உருவெடுத்தது.

அதே ஆண்டு, தெற்குமுகமாக படையெடுத்து வந்து ஒன்றியப் படையானது, நுழைவாயிலாகவும் ஆற்றுப் போக்குவரத்துக்கு முக்கியமாகவும் இருந்த சட்டனூகா நகரைத்தான் முதலில் கைப்பற்ற நினைத்து வெற்றியும் கண்டது. வெற்றி கொண்ட அதே கையோடு, அட்லாண்டாவுக்கு அருகில் உள்ள சிக்கமுகாவைப் பிடிக்கக் கனவு கண்டது ஒன்றியப் படை.

அங்கிருந்த கூட்டணிப்படையினரோ, வரவிட்டு வாண வேடிக்கை காண்பித்தார்கள். பெருமளவிலான ஒன்றியப் படையினர் உயிரிழப்பையும் பெருங்காயங்களையும் எதிர்கொண்டனர். தோல்வி கண்ட ஒன்றியப் படை பின்வாங்கி, மீண்டும் சட்டனூகாவில் நிலை கொண்ட்து. போரில் காயம்பட்ட பெரும்படையினரைக் காப்பாற்றும் முகமாக, சட்டனூகாவில் தற்போது இருக்கும்  ரீடு இல்லம் எனும் சொகுசு விடுதியானது மருத்துவமனையாக மாற்றப்பட்டு, அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடியும் வரையிலும் மருத்துவ மனையாகவே தொடர்ந்தது.

இவ்விடுதியானது 1847ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பழைய க்ரெட்சு ஃபீல்டு இல்லம் என அழைக்கப்பட்டு வந்தது. 1863ஆம் ஆண்டு, உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வந்து, அடிமைக் கலாசாரம் களையப்பட்ட்து உலக வரலாறு! எதிர்பாராத விதமாக, அவ்வாண்டே இம் மருத்துவமனையின் பெரும்பகுதியானது விபத்துக்குள்ளாகித் தீக்கிரையாகிப் போனது பெரும் சோகம்.

அதன்பிறகு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடுதியை, டாக்டர் ஜான் ரீடு என்பாரும் அவர்தம் மகனும் இணைந்து வாங்கி, மீண்டும் ரீடு இல்லம் என்கிற பெயரில், விடுதியை இருந்ததை இருந்தபடி அழகுற நிர்மாணித்தார்கள். அதிபர் சர்ச்சில், எலினோர் ரூசுவெல்ட் முதலானோர் இதில் தங்கி இருந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவர்.

தற்போதும் இவ்விடுதியானது, நகரின் முதன்மை விடுதியாகத் திக்ழ்கிறது. செரட்டன் ரீடு இல்ல விடுதி எனத் தற்போது அழைக்கப்படுகிறது. ப்ராடு வீதியும் மார்ட்டின் லூதர் கிங் சாலையும் சந்திக்கும் இட்த்தில், அழகுற அமைந்த்துதான் இவ்விடுதி.

கிட்டத்தட்ட இருகூப்பிடு தூரத்தில் நான் வேலை செய்யும் அலுவலகம் அமைந்திருந்தாலும் கூட, தினமும் காலையிலும், பிற்பகலிலும் ரீடு இல்ல வளாகத்திற்கு வருவதை வழமையாக்க் கொண்டவன் நான். ஏனென்றால், அவ்வளாகத்தில்தான் இசுடார் பக்சு(star bucks) என்ப்படும் தேனீர்க் கடை அமைந்திருக்கிறது. காலை பத்து மணி மற்றும் பிறபகல் மூன்று மணி அளவில், இசுடார் பக்சுக்கு வந்தே ஆகவேண்டும் எனும் வேட்கை உடையோன் நான்.

கிட்டத்தட்ட கடந்த ஆறு மாத காலமாக இந்த ரீடு இல்லத்திற்கு வந்து போகும் நான், என்றாவது ஒரு நாள் இவ்விடுதியின் அறை எண் 311ல் தங்கிருந்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்பது என் தணியாத ஆசையாக இருந்தது. இருப்பினும், அதற்கு வாய்ப்பு அமையவே இல்லை. ஏனென்றால், நான் வேலை பார்க்கும் நிறுவனமானது மற்றொரு விடுதியான மேரியாட் எனும் விடுதியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டமையானது, என் ஆசைக்குத் தடையாக இருந்தது.

இச்சூழ்நிலையில்தான், அவ்வளாகத்தில் வேலை பார்க்கும் இசுகாட்(scott) வின்டர்வைல்டு உடனான நட்பு நமக்கு உதவியாக இருந்தது. இசுகாட்டின் உதவியோடு, ரீடு இல்லத்தைச் சுற்றிப் பார்த்து, அறை எண் 311க்குச் செல்லவும் ஏற்பாடானது.

ஏன் அந்த அறை எண் 311க்கு இவ்வளவு முக்கியத்துவம்? அந்த அறை எண் 311ல்தான், ஒரு பெண் பேய் குடிகொண்டிருக்கிறது. உள்நாட்டுப் போரின் போது தங்கி இருந்த ஒன்றியப் படைவீரன் ஒருவனுடைய காதலிதான் அவள். காதலனால், அவ்வறையில் வைத்து அவள் கொல்லப்பட, அவளது ஆவியானது அங்கேயே இன்னும் குடி கொண்டிருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பலர்.

வேறு சிலரோ, படையினரால் இங்கே கடத்திக் கொண்டு வரப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பலரது ஆனமாக்கள், இன்னும் ஆவியாக அலைவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இப்பின்னணியின் காரணமாகத்தான், யாராவது அந்த அறைக்குச் சென்று தங்கினால், அந்த ஆவி அவர்களைத் தங்க விடுவது இல்லையாம். தங்குபவர்கள் ஆண்கள் என்றால், அதன் சீற்றம் வெகு அதிகமாக இருக்குமெனவும் சொல்லப்படுகிறது.

எனக்கு முன்னெப்போதும் பேயைப் பார்த்த அனுபவம் இல்லாததால், எப்படியும் அந்த அறையைச் சென்று பார்த்திட வேண்டும் என்கிற தீராத வேட்கை. முடிந்தால், பேயுடனும் தங்கி இருந்து வர வேண்டும் என்கிற ஆசையும் எம்முள்.

அதன்படி, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, வழமைக்கு மாறாகச் சற்று முன்னமே சட்டனூகா நகரை வந்தடைந்து, நேராக ரீடு இல்லத்திற்குச் சென்றடைந்தேன். நான் வருவதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த நண்பரும், விடுதி ஊழியருமான இசுகாட்(Scott)டும் எனக்காகவே காத்திருந்தார்.

ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த பின்னர், நான் கொண்டு வந்திருந்த பைகளை அங்கிருந்த ஒரு முன்னறையில் வைத்துவிட்டு, விடுதிக்குள் நுழைந்தேன். முன்னரங்கம் பெரிய அளவில், வண்ணமிகு விளக்குகளோடு வரவேற்றது.

அதிபர் வின்சுடன் சர்ச்சில் தங்கி இருந்த அறை மற்றும் விருந்தினர் வளாகம் முதலானவற்றைப் பார்த்துவிட்டு, மூன்றாவது தளத்திற்குச் சென்றோம். உள்ளே நுழைந்ததுமே, எம்முள் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. கடந்து செல்லும் அறைகளின் எண்களைக் கவனித்தேன். குறைந்து கொண்டே வந்து கொண்டிருந்த்து. நான் அப்போது பார்த்த எண் 323. இனியும் பனிரெண்டு அறைகள் கடந்த்தும், அறை எண் 311 வரப் போகிறது என எண்ணிய மாத்திரத்தில், ‘டமால்’ என்று ஏதோ ஒரு பேரொலி ஒலித்தது. உடல் வியர்க்கத் துவங்கியது.

’Are you alright?’ என்று கேட்டு விட்டுத் தொடர்ந்தான் இசுகாட், “அச்சத்தமானது, எதிரில் இருக்கும் கட்டிடத்தில் இருந்து வருகிறது. அவர்கள், அத்தளத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்”, என்றான்.

அதற்குள் அறை எண் 311ம் வந்துவிட்டது. தன்வசம் இருந்த மின்காந்த அட்டையை எடுத்துச் சொருக முற்படுகையில் அவன் கை நடுங்கியது. நடுங்கியபடியே கூறினான், “நானே இங்க வந்து ரொம்ப நாளாச்சி. சீக்கிரத்துல போய்டலாம் சரியா?”, என்றான்.

சரியென்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தேன். அவன் கதவினருகிலேயே நின்று கொண்டான். நான் உள்ளே சென்றேன். கும்மிருட்டாக இருந்தது. சமீபத்தில் யாரும் தங்கி இருந்துவிட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. எதிரில் இருந்த சுவரின் அருகே சென்று, திரைத்துணியை விலக்கிவிட முயன்றேன்.

திரைத்துணியின் ஒரு ஓரத்தைத் தொட்டதுதான் தாமதம், “அச், அச்” எனத் தொடர்ந்து தும்ம ஆரம்பித்தேன். சில மாதங்களாகவே, நான் ஒவ்வாமையின் பாதிப்புக்கு உள்ளானவன். அத்துணியின் தூசியானது, தும்மலைக் கிளப்பி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தும்மலானது நிற்கவே இல்லை. அச்... அச்... என்பது மாறி, ஆச்... ஆச்.. எனப் பெருங்குரலெடுத்துத் தும்ம ஆரம்பித்தேன்.

சுற்றிலும் என்ன நடக்கிறது எனச் சுதாரிப்பதற்குள்ளாகவே, மேலும் சிலர் வந்து அறை வாசலில் குழுமி இருந்தார்கள். யாரோ ஒருவர், மின்விளக்கொன்றை ஒளிர விட்டார். நான் பரப்பு நாற்காலியின் மேலிருக்கும் குட்டைத் துண்டை எடுத்து மூக்கைத் துடைக்கும் பொருட்டு, கைலிருந்த அலைபேசியினை படுக்கையின் மீது விழும்படியாக வீசினேன்.

தும்மலின் தாக்கத்தில் நிலைகுலைந்த எனக்கு, சரியாக வீச முடியவில்லை. அது படுக்கையில் விழுவதற்கு மாறாகச் சுவரில் பட்டுத் தெறித்த்து. அதைக் கணடதும், அங்கிருந்தவர்கள் அலறி வெளியே ஓடினார்கள். “oh my God.. we are in trouble… he becomes haunted man “ எனக் கத்தினார் ஒருவர்.

அதற்குள், அங்கிருந்த மேற்பார்வையாளர் வந்து கத்திக் கொண்டு இருந்தார். என்னைக் கேட்காமல், யார் வெளியாட்களை உள்ளே விட்டது எனச் சீறிக் கொண்டிருந்தார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட நான், கீழே விழுந்த அலைபேசியை எடுத்துச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு, மூக்கைத் துடைத்தபடி அறையை விட்டு வெளியே வந்தேன்.

அங்கிருந்தவர்கள் தயங்கித் தயங்கி என்னிடம் வந்தார்கள். “I have an allergy, seasonal allergy”, என்றேன் நான். அவர்கள் என்னை நம்பத் தயாரில்லை. நானும் இசுகாட்டும், இடதுபுறப் படிக்கட்டில் இறங்க, அவர்கள் மறுபக்கம் போனார்கள்.

“அஃ... ஃக... அஃ...ஃக”, திடீரெனச் சிரிப்புச் சத்தம் கேட்டது. யாரோ ஒரு இசுபானிய வேலைக்காரி, எங்களைப் பார்த்துக் கேலியாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள். இசுகாட்டின் முகம் சிவந்திருந்தது. வெளியில், வாசல் வரைக்கும் கொண்டு வந்துவிட்டவன், திரும்பிப் பார்த்தால், ஆளைக் காணவில்லை.

இன்று, செவ்வாய்க் கிழமை, அதே இசுடார் பக்சு(Star Bucks) கடைக்குச் சென்றிருந்தேன். கடையில் வேலை பார்க்கும் அந்த இளம் பெண்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். ”எங்கே, இசுகாட்?”,என்றேன். அவனை வேலையில் இருந்து தூக்கிவிட்டார்களாம். மனசுக்குச் சங்கடமாய் இருந்தது.

என்னால் அவனுக்கு வேலை பறி போயிற்றே என்ற கவலையோடு, வெளியில் வந்து, நண்பரும், சக பதிவருமான ஒருவருக்கு அலைபேசியில் அழைத்தேன்.

“அண்ணே! அண்ணே!!”

“எதுக்குப் பேயாட்டம் கத்துறீரு? நான் ஆபிசுல இருக்கன்!”

நான் பேய்தானா?? கையிலிருந்த இசுடார் பக்சு காபியைக் குடிக்க மனம் வரவில்லை. தூர இருந்த குப்பைத் தொட்டியில் விழும்படித் தூக்கி வீசியெறிந்தேன். மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. சரி,  இந்தியாவில் இருக்கும் மனையாளுடனாவது பேசலாமென எண்ணி, அலைபேசியை இயக்கினேன்.

“அகோ... நாந்தாண்டா... எப்படி இருக்க? நல்லா இருக்கீங்ளா??”

“ம்ம்... இதென்ன அர்த்த இராத்திரியில பேய் கணக்கா? குழந்தைக எல்லாந் தூங்கிட்டு இருக்காங்க... வையுங்க போனை!”

ங்கொய்யால.... நான் பேயேதானா? உங்களைத்தான் கேக்குறேன், என்ன, நான் பேயேதானா?? ஒருவேளை அது என்னைய அண்டிடுச்சோ??! அவ்வ்...


10/11/2010

நான் குப்பை பேசுறேன்!

வணக்கமெல்லாம் சொல்வதாக நான் இல்லை. ஏனென்றால் நான் மிகவும் சினமாக இருக்கிறேன். என்னது? நான் யாரென்றே தெரியாதா??

சரி சொல்கிறேன். என் பெயர் குப்பை. உண்மையில் சொல்லப் போனால், எனக்கு என் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. எனது மெய்நிகர்ப் பெயர் செத்தை என்பதாகும்.

ஆம். என் பெயரைச் சிதைத்துவிட்டு, குப்பை என்றே அழைக்கிறார்கள் மனிதர்கள். என்னது? திமிறாகப் பேசுகிறேனா? நான்தான் துவக்கத்திலேயே கூறினேனே, சினமாய் இருக்கிறேன் என்று?!

எது ஒன்றும், தனக்கு வாய்த்த ஆயுள் முடிந்ததும், அதற்கான வீரியம் அற்று, பயனற்றுப் போகும். அப்படியானதைத்தான், தமிழ்த்தாய் செத்தை என அழைப்பாள். அச்சொல்லைச் சிதைத்துவிட்டுத்தான், நீங்கள் என்னைக் குப்பை என்று அழைக்கத் தலைப்பட்டு உள்ளீர்கள்.

புரிகிறது. செத்த எனக்கு எப்படி உயிர் வந்தது எனத்தானே யோசிக்கிறீர்கள்? என்கதையை உங்களுக்குச் சொல்வதற்காக, பிரத்தியேகப் பிறவி எடுத்து வந்திருக்கிறேன் நான். சரி, மேற்கொண்டு நான் சொல்ல வந்ததைக் கேளுங்கள் மனிதக் குப்பைகளே!

நீங்களும் கோபப்படாதீர்கள்... பொறுமையாகக் கேளுங்கள். குப்பை என்றால், தொகுதியாக அல்லது கூட்டமாக இருப்பவற்றைத்தான் சொல்வது. அது ஒரு இழிவான சொல் அன்று!

ஆனால், நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள்? அவன் ஒரு குப்பை. அவன் எழுதுறது ஒரு குப்பை. அவன் கடையில இருக்கிறது எல்லாமே குப்பை. அந்த நாதாரி எடுத்தது படம் அல்ல; அது ஒரு பெரும்குப்பை. இப்படியாகச் சகட்டு மேனிக்கு, இழிவுபடுத்தும் விதமாகவே பாவித்து வருகிறீர்கள்.

குப்பைமேடு என்றால், பலவற்றையும் ஒன்று கூட்டி, மொத்தமாக வைத்திருப்பது; குப்பை சேர்த்து என்றால், ஆங்காங்கே இருப்பனவற்றை ஒரு இடத்தில் மொத்தமாகச் சேர்ப்பது; குப்பன் என்றால், செல்வம் மற்றும் சினேகத்தை குப்பையாகத் தன் வசம் வைத்திருப்பவன். இவை எல்லாம்தான் குப்பைகள்.

ஆனால் நீங்களோ, செத்தையாகிய என்னையும், கழிசல், மக்கு, மட்டி, முடை, கஞ்சல், அழுகல், கூமுட்டை, கூளம் போன்ற, பயன்பாட்டுக்கு உதவாத எதையும் குப்பை என்றே சொல்கிறீர்கள். நியாயமா??

சரி, என் தோழர்களான கழிசல், மக்கு முதலானோரைப் பற்றியும் சிறிது பார்க்கலாம். கழிசல் என்பவன், மனிதர்களாகிய உங்களால் கழிக்கப்பட்டவன், ஒதுக்கப்பட்டவன். ஒதுக்கினால், அவன் என்ன ஆவான்?


பயனற்றுத்தான் போவான். அதுமட்டுமல்ல, பூமிக்கு வீண் சுமையாகவும் இருக்க நேரிடும். காற்றில் இருக்கும் இன்ன பிற மாசுக்களுடன் இணைந்து உங்களுக்கு உபத்திரவம் தரத் தலைப்படுவான் அவன். எனவே அவனைக் கழிக்கும் முன்பு, யோசித்துச் செயல்படுங்கள். மீளாக்கம் செய்யத் தலைப்படுங்கள். அல்லால், அவன் குப்பையாக மாட்டான்; உங்களைச் செத்தை ஆக்கிவிடுவான்.

மக்கு என்றால், பயன்பாட்டுக்குப் பிறகான மருகிப் போகும் நிலையில் உள்ளவன். மட்டி என்றால், பயன்பாட்டுக்குப் பிறகான எஞ்சிய நிலையில் இருப்பவன். அழுகல் என்றால், பயன்பாட்டுக்கு உதாவாமற் போகும் நிலையில் உள்ளவன்.

இவர்கள் எல்லாம், மனித குலத்துக்கு நன்மைபயக்கக் கூடியவர்கள். ஏனென்றால், இப்புவியில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் இணைந்து நாங்கள் மீண்டும் உங்களுக்குப் பயனுறும் வகையில் மீள்பிறவி பெறப் படைக்கப்பட்டவர்கள். ஆகவே, எங்களை இனியும் குப்பை என இகழ்ந்து பேசாதீர்கள்.

சரி, யார்தான் குப்பை என்பவன்? இன்றைய சூழலில் குப்பை என்பவன் உங்களுடனேயே இருக்கிறான். நீங்களும் குப்பைகளைக் குப்பைகள் என்று உணராமல், தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஆமாம். நெகிழி(plastics)யால் ஆன எதுவும் குப்பைகள் ஆகித்தான் போகிறது. அக்குப்பைகளை நீங்கள், நாளும், நாளும் நாடிச் செல்கிறீர்கள். உலகெங்கும் இருக்கிற நெகிழிக் குப்பைகள் சென்னை வருகிறதாமே? யாரோ சொல்லக் கேட்டேன். பார்த்து சூதானமாக இருங்கள் மனிதகுல மாணிக்கஙளே! அடியேனை மன்னியுங்கள்!!

-குப்பை எனப்படுகிற செத்தை!

10/10/2010

புலப்பம்

புலப்பம்னா என்ன? தாறுமாறா எதையாவது உளறி வைக்கிறதுதான் புலப்பம். அதான், வலையில தினமும் புலப்பம் திங்றதுல ஏப்பம் வுடவெச்சிகினு இருக்கியே? அப்புறம் என்ன, இதுல வியாக்கியானம் வேற, அப்படின்னுதான நினைக்கிறீக? இஃகிஃகி!!

==========================

நாம பொட்டி தட்டுற ஊரான, சட்டனூகாவுல அதிவேக இணைய வசதி வருதாமுங்க. அமெரிக்காவுலயே அதிக வேகத்துல இருக்குற இணைய வசதி வரப் போறது அங்கதானாம்; up to 1 gigabit per second. மாசம் 330 அமெரிக்க வெள்ளி கட்டணமாம். இவ்வளவு செலவு செய்து, அதை வாங்கி என்னடா செய்யப் போறிங்கன்னு கேட்டா, சொல்லுறான் ஆகப்பட்டவன், “தலையில கூந்தல் உள்ள மகராசி, அள்ளியும் முடிவா... அவுத்துட்டுப் பராக்கும் பாக்குவா”, அப்படின்னு! ஆடுங்கடி, ஆடுங்க...

==========================

புலப்பம்னு சொல்லிட்டி, புலப்பலை அள்ளிக் கொட்டாம இருந்தா எப்புடி? சொல்றேன் கேட்டுகுங்க.... அடுத்தடுத்து, நாம பல ஊர்களுக்கு சுற்றுப்பிரயாணம் செய்யப் போறம் அப்பூ, சுற்றுப் பிரயாணம் செய்யப் போறம்... அதுக்கென்ன இப்பவா?? போற இடத்துல எல்லாம் பதிவர் சந்திப்பு இராசா, பதிவர் சந்திப்பு... அங்க அங்க இருக்குற நம்ம சக பதிவர் பங்காளிக எல்லாம் சித்த ஒத்தாசை பண்ணுங்க கண்ணுகளா!

அக் 15-17: மூத்த பிரபலம் சீமாச்சு தலைமையில அட்லாண்டா, stone mountain parkல கூட்டம்

அக் 30: தென் கரோலைனா, சார்ல்சுடன்ல மாபெரும் மாலை விழா

நவ 6: நியூயார்க் மாகாணம், அல்பேனியில வாரஈறுக் களியாட்டம்

நவ 13: அமெரிக்கத் தலைநகர்ல, தமிழ்ச் சங்க விழா! பட்டிமன்றத்துல ஆத்தப் போறோம் சொற்பொழிவு!!

அங்கங்க இருக்குற பங்காளிக எல்லாம் வந்து கலந்துக்குங்க!!!

==========================

அமெரிக்காவோட தலையாய பிரச்சினைகள்ல, முதல் பத்துல இருக்குற பிரச்சினை தூக்கப் பிரச்சினையாமுங்க! சரிவரத் தூங்க முடியுறது இல்லையாம்; அதனால, மக்களுக்கு நிம்மதியே இல்லையாம். நம்ம ஊர்ல கேட்டா, தூங்கறதுக்கு நேரமே போதலைங்றாய்ங்க... இஃகிஃகி... எனக்குந்தான்...

எதெதோ மருத்துவம், ஆலோசனை எல்லாஞ் சொல்றாய்ங்க இந்தப் பிரச்சினைக்கு.... எனக்கு செமையா தூக்கம் வர்றதுக்கு ஒரு காரணந்தான்... நான் நானாக மட்டுமே இருக்க முடியும்ங்றதுல உள்ள நம்பிக்கை.. அப்புறம், கேனத்தனமா எதையாவது செய்து, மனசைக் குளுமையா வெச்சிக்கிறதும்; இப்ப செய்துட்டு இருக்குற மாதர, எதனாச்சியும்.....

====================================

கழுதை கெட்டா, குட்டிச் சுவரு!  இந்தா, அலுமினிய டப்பா வந்து நிக்குது.... பொட்டிதட்டச் சட்டனூகா போகணும்.... வரட்டுமுங்ளா?

10/08/2010

பொருள் பேசுகிறது!

எல்லாருக்கும் வணக்கம்! என் பெயர் “பொருள்”. நான் எங்கும் இருப்பேன். தூணாகவும் இருப்பேன். துரும்பாகவும் இருப்பேன். நான் இல்லாத நாடு இல்லை. இல்லாத ஊர் இல்லை. இனியும் சொல்லப் போனால், நான் இல்லாவிட்டால் எந்த மனிதரும் இல்லை.

அஃறிணை எனத் தரம் தாழ்த்திப் பேசினாலும், நிலை அதுதான் உயர்திணையே! பேசுவது மட்டும், வக்கணையாய்ப் பேசுகின்றார் மாந்தர்! உயர்திணைக்கு எதிராக, கீழ்திணைதான் வரும். ஆனால், நாங்கள் அப்படி எதையும் கீழ்மைப்படுத்த விரும்பவில்லை. எனவேதான், அஃறிணை என்கிறோம் என வக்கணையாய்ப் பேசுகின்றார் மாந்தர் குலத்தோர்!

ஆனால், யாராவது என்னைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கிறார்களா? என்னை, மிகக் குறைந்த விலையில் வாங்குவதையும், அதிக விலையில் விற்பதைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள். நான் ஒன்றும், சும்மா பிறந்து விடவில்லை. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றின் அழிவில்தான் பிறக்கிறேன்.

என்னை, உயிர்ப்பிப்பதும் மனிதர்களே! உயிர்ப்பித்துப் பாவித்து, பாவித்துப் பலன் பெறுவது மாத்திரமே அவர்களுக்குத் தெரியும். இன்றைக்கு ஈரோடு கதிர் அவர்கள், அவர்தம் இனத்திற்கு நேரும் இன்னலைப் பற்றி எழுதி இருக்கிறார். மகிழ்ச்சி! ஆனால், இதோ நான் உயிர்க்கும் கதை! நீங்களாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்!!!


மாந்தர் குலமே, என்கதை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகாவது, என்னைப் பாவிப்பதைக் குறைத்து, பாவிக்கும் முறைகளைச் செம்மைப்படுத்தி, மற்றன அழிவதைக் காத்து, நீரும் மகிழ்வாயிருக்கத் தெரிந்து கொள்வீரே!

நான், எப்போதும் போல, அஃறிணையாய் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்களுக்காய் மெழுவர்த்தியெனக் கரைந்து, செத்துப் போகிறேன்... செத்துப் போகிறேன்... உயிர்த்து, உழைத்து, உங்களுக்காய் மெழுவர்த்தியெனக் கரைந்து, செத்துப் போகிறேன்.

-பொருள்.

10/07/2010

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! பாகம்-2!!

சட்டனூகா, அக் 07: வீட்டில் இருக்கும் மகனோ அல்லது மகளோ, தனிமையாக இருக்க மட்டுமே விரும்புகிறாரா? மாலையில், காரணமெதுவும் இன்றி நேரங்கழிந்து வீட்டுக்கு வருகிறாரா? பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் காணப்படுகிறாரா? சரியாகச் சாப்பிடுவது இல்லையா??

இதில் எது ஒன்று உண்மையாக இருந்தாலும், உங்கள் பிள்ளை உங்களை விட்டு நழுவிக் கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை. அமெரிக்காவில், இப்போது வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் விபரீதம் என்னவாக இருக்க முடியும்?

பள்ளிகளில் மற்றவரைக் கேலி பேசியும், நையாண்டி செய்தும், இணையத்தினூடாக அவதூறுகளைப் பரப்புவதுமே! இணையத்தில் பெருத்த வரவேற்பைப் பெற்று வரும் சமூகக் குமுகங்களின் ஊடாக, இத்தொற்று நோயானது வெகு எளிதில் பரவி வருகிறது என்பதே இன்றைய நிலை.

இணைய வசதி அவ்வளவாக இல்லாவிட்டாலும் கூட, மேற்கத்தியக் கலாசாரத்தின் தாக்கம் மற்றும் சமகால நிகழ்வுகள் பற்றியதான தகவல்கள் இந்தியக் கல்விச் சாலைகளிலும் துரிதகதியில் நிலைகொண்டு வருவது கவலையளிக்க்க் கூடியதாகவே உள்ளது.

நிராகரித்தலும், கேலிக்கு உள்ளாக்குவதும், வெறுத்து ஒதுக்குவதும் பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்ட கொடிய செயல்கள். அப்படி இருக்கையில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் மனதை, அவ்வாறான செயல்கள் எவ்வளவு தூரம் பதம் பார்க்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை.

அவ்வாறான மனம் நோகடிக்கப்பட்ட குழந்தைகள்,  ஆற்றுப்படுத்தலின்றித்   தெரிவு செய்வது ”தற்கொலை” எனும் முடிவைத்தான்! இளம் பிஞ்சுகளின் மனதில் நஞ்சைப் புகுத்துவதால் ஏற்படும் அதிமோசகரமான விளைவுகளைத் தகர்த்தெறிவது பெற்றோரால் மட்டுமே முடியும்.  இதோ, தற்கொலை செய்து கொண்ட ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தையின் தாய் சொல்வது இதுதான்:

Donna Witsell has a message for parents: "It happened to my daughter, it can happen to yours too. No one is untouchable. No one is untouchable."

Bullying is in our schools, and it's online. Why do kids do it? What can be done to put an end to it? 

சுட்டி-1

சுட்டி-2
சுட்டி-3

அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! பாகம்-1!!

10/06/2010

நசையுநர் வாழ்த்து!

மரங்கள் உயிர்த்திட
உழவுநிலம் காத்திட
கண்கொடை விருத்திட
குருதிக்கொடை உயர்த்திட
நெகிழிப் பாவனை குறுகிட
உணவுவிரயம் சிறுகிட
மனித நேயம் பரவிட
நற்செயலாதரவு கூடிட
தமிழ்முகம் மலர்ந்திட
நும் சேவை தொடர்ந்திடுக!
பொன்னகவை பல அடைந்திடுக!!
நம்பப்பட்டோனாய் நிலைத்திடுக!!
மொத்தத்தில், நீ, நீயாகவே இருந்திடுக!!

பிந் நாள் வாழ்த்துள்!

--அகில உலக நசையுநர்கள்

10/04/2010

நெனப்பு, பொழப்பைக் கெடுக்குமா??

நெனைப்புதான் பொழப்பைக் கெடுத்துச்சாம்! கிராமங்கள்ல, இப்படியான சொலவடையச் சொல்லக் கேட்டு இருப்பீங்க? மனக்கோட்டை மட்டுமே கட்டிகிட்டு இருந்தா பொழப்பு ஓடாதுங்றதை குத்திக் காமிச்சுச் சொல்றதுதான் இந்த சொலவடை.

அதுக்காக, நினைச்சுப் பார்த்து, சிந்தனையைக் கிளறாம வாழ்க்கையில ஒன்னைச் சாதிக்க முடியுமா? நெனப்பு பொழப்பைக் கெடுக்கும்னு சொன்ன அதே பெரியவங்க, ”ஆராய்ந்து பாரான் காரியம் சாந்துயரம்!” அப்படின்னும் சொல்லி இருக்காங்கதானே?

அப்ப, எது ஒன்னையும் வடிவாச் சிந்திச்சுப் பார்த்துச் செய்யணும். அப்பதான், வாழ்க்கை நம் கைவசப்படும். அல்லாங்காட்டி, எவனோ எடுத்த படத்துக்கு நாம காவடி தூக்கவும், தேர் இழுக்கவும் செய்துட்டு இருக்க வேண்டியதுதான்! என்ன, நாஞ் சொல்றது?!

சரி, சிந்திச்சுப் பார்க்கறது அவசியம்ங்ற முடிவுக்கு வந்துட்டோம். இன்னும் வரலையா? வரணும்ங்றதுதானே நம்மோட ஆசை. வரலைன்னா, நீங்க காவடி தூக்கவே போலாம். எதுக்கு, இந்த இடுகைய வாசிச்சி உங்க நேரத்தை விரயம் செய்யுறீங்க? இஃகி! ச்சும்மா, ஒரு லொல்லுதான்!!

ஆராய்ச்சியாளர் எட்வர்டு போனோ என்ன சொல்றாருன்னா, சிந்தனைங்கறது ஆறு வகையா இருக்கு. அந்த ஆறு வகையான சிந்தனைகளையும், மாற்றுச் சிந்தனைகளாப் பாவிச்சி சிந்தனை வயப்பட்டோமானா, வாழ்க்கை நம் வசப்படும் அப்படிங்றாரு.

அதாவது, இலக்கை நிர்ணயமா வெச்சி, தன்னுள் இருக்குற அகந்தையப் புறந்தள்ளி, இந்த ஆறுவகையான சிந்தனைகளை நல்லாப் புரிஞ்சி செயல்படுறவன் வெற்றிசாலியா வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகமுன்னும் சொல்றாரு திரு. எட்வர்டு போனோ!

சரி, அந்த ஆறு வகைச் சிந்தனைகள் என்னென்ன??
  • புதுமைச் சிந்தனை
  • நேர்மறைச் சிந்தனை
  • எதிர்மறைச் சிந்தனை
  • உணர்வுச் சிந்தனை
  • சூட்சுமச் சிந்தனை
  • மாற்றுச் சிந்தனை
புதுமைச் சிந்தனை: ஒரு பற்றியத்தைச் செயல்படுத்தப் போறதுக்கு முன்னாடி, அதைப் பற்றின கூடுதல் தகவல்களைத் தேடி, அலசி, இன்னது இருக்கு, இன்னது இல்ல அப்படின்னு தெரிஞ்சுக்க முற்படுற சிந்தனை. creative thinking! இந்தா, இது எப்பவும் நடந்ததே இல்ல. இதைச் செய்து காமிச்சா, நல்ல வரவேற்பு கிடைக்கும்னு எல்லாம் சிந்திக்கிறது.

நேர்மறைச் சிந்தனை: இதனோட பலன்கள் இப்படி இருக்கும்; இதனால இன்னது கிடைக்கும்; இதைச் செய்தா இது நடக்கும்... அப்படின்னு நேர்மறையாக, பலன்களை நோக்கிச் சிந்திக்கிறது. நம்பிக்கையூட்டி, செய்முறைப்படுத்த வைக்கிற சிந்தனை. Positive thinking! நம்ம நல்ல தரத்தோட இந்த பொருளைச் சந்தைப்படுத்துறோம்... தரத்துக்கு முன்னாடி, வேற எதுவும் கிடையாது. தரம் வெல்லும்... அதை நல்லபடியா மக்களுக்கு, எடுத்துச் சொல்றோம், வெல்லுறோங்ற கோணத்துல உதிக்கிற சிந்தனை.

எதிர்மறைச் சிந்தனை: இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கு. இதனால, இவ்வளவு செலவு ஆகும். இதனால, குறிப்பிட்ட நேரத்துல முடிக்க முடியாதுங்ற ரீதியில, எதிர்மறையாச் சிந்திக்கிறது. Negative Thinking! நாம இப்படி செய்யலாம். ஆனா, இது நடக்கவும் வாய்ப்பு இருக்கு. அப்படி நடந்திடுச்சா, முதலுக்கே மோசம். அப்ப, நாம அப்படிச் செய்யக் கூடாது. ஒரு வேளை, அது அப்படியும் நடக்கலாம். அப்படி நடந்திட்டா என்ன செய்யுறது? இப்படியாக, எதிர்மறையாச் சிந்திக்கிறது.

உணர்வுச் சிந்தனை: உணர்வுப் பூர்வமா சிந்திக்கிறது. Emotional Thinking! இந்த நேரத்துல கொண்டு போயி, இதைச் சொன்னம்னா அவங்க கோபப்பட வாய்ப்பு இருக்கு. அந்த இடத்துல வெச்சி, அதை விக்க முடியாது. அந்த நாள்ல செய்தம்னா, மகிழ்ச்சிகரமா அமையலாம். உணர்வுகளைப் பிரதானமா வெச்சி சிந்திக்கிறது.

சூட்சுமச் சிந்தனை: தருக்க ரீதியா இல்லாம, தந்திரங்களை, உபாயங்களை அடிப்படையா வெச்சி சிந்தனை. இலக்கு இதுன்னு ஒன்னை வெச்சிட்டு, அதை மறைமுகமா அடையக் கூடிய சிந்தனை. conventional or lateral thinking! நாம ஒரு கல்லூரிக்கு முன்னாடி, ஒரு கணினி மையத்தை உண்டு செய்வோம். எப்படியும் பொண்ணுக வருவாங்க; அவங்கள்ல பிடிச்சவங்களாப் பார்த்து ஒருத்தரைத் தெரிவு செய்துக்கலாம்ங்றது சூட்சுமச் சிந்தனை!

மாற்றுச் சிந்தனை: ஒரு கோணத்துல மட்டுமே சிந்திச்சி, ஒன்னைச் செய்யாம, பல வழிகள்லயும் மாற்றுச் சிந்தனைகளைப் பாயவிடுறது. parallel thinking! கிராமத்துல அமைஞ்சா, அம்மா அப்பாவுக்கு மகிழ்ச்சியா இருக்கும். ஆகவே, கிராமத்துல வளர்ந்து, நகரத்துல வாழுற அம்மணியப் பார்ப்போம். இந்த மாதர, இருக்குற எல்லா வகைச் சிந்தனைகளையும் ஒரே நேரத்துல சிந்திக்கிறது.

இப்படியாக, ஒரு நல்ல தலைமைப் பண்பு கொண்டவனுக்கு, மாற்றுச் சிந்தனைகள் அவசியம்ங்றாரு ஆராய்ச்சியாளர் திரு. போனோ. குதிரைக்கு கண்ணட்டி கட்டிவுட்ட மாதர, ஒரு கோணத்துலயே நெனப்பை வெச்சிக்காம, பல கோணங்கள்லயும் சிந்திச்சு, வாழ்க்கையில நல்லபடியா இருக்க வாழ்த்துகளைச் சொல்லிகிறனுங்க இராசா! வாழ்க வளமுடன்!!!

10/03/2010

பதிவுலகம்: அன்புத் தம்பியே, என்ன ஆச்சு?

பிரச்சினையின் ஆழம் தெரியாமை; பக்குவமின்மை; அறியாமை; புறச் சூழலின் தாக்கம்; அகச்சூழலின் சிறைபிடிப்பு; முதிர்ச்சியின்மை! இப்படியாக, நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றுக்கு யாராவது விதி விலக்கு உண்டா இவ்வுலகில்? எத்தகையவராயினும், எதோ ஒரு சூழலில், ஏதோ ஒன்றுக்கு இரையாகித்தானே போகிறோம் நாம்?


உடன் இருப்பவர்கள், உடனிருந்து அத்தகைய ஒவ்வாத செயலின் சீற்றத்தில் இருந்து காப்பாற்றிவிட்டால், இரையானவர் பாக்கியசாலி ஆகிவிடுகிறார். நேர்மாறாக, வியந்தோதலில் அகப்பட்டு அகக்கண் மறைபட்டுப் போனாலோ, நிலைமை மேலும் அகோர முகமெடுத்துத் தாண்டவமாடும்.

கடந்த காலங்களில் எல்லாம், அறிவியல் வளர்ச்சியானது அவ்வளவு விரைவாக ஊடோடிச் செல்வனவாக இல்லாமல் இருந்தது. அதுவே மனித குலத்தின் தவறுகளின் வீரியத்தைக் குறைத்து, கட்டுக்குள் வைத்திருந்தது என்று சொன்னால், அது மிகையானதாக இருக்க முடியாது.

ஆனால், இன்றைக்கு? எந்தவொரு ஊடகமானாலும், அதன் வலிமை அளப்பரியது. கண்ணிமையானது சட்டென தப்படிப்பதற்குள்ளாகவே, உதிர்த்த சொற்கள் பாரெங்கும் வியாபிக்கிறது. உதிர்த்தது, உதிர்த்ததுதான். திரும்பப் பெறல் என்பதே கிடையாது அவற்றுக்கு!

அதே வேளையில், விரைவாகச் சென்று சேர்ப்பவன் வெற்றிசாலி என்றும் போதிக்கும் இவ்வுலகம். விளைவு? விரைவு... விரைவு.... எதிலும் விரைவு... வாழ்க்கையையே விரைவாக்கி, விரயமும் ஆக்கத் தயங்குவதில்லை கணங்கள்!

Stick to the basics; Think simple! அண்டை வீட்டு அண்ணனுக்கு வணக்கம் சொல்லத் தயங்குகிறோம். அலாசுகாவிலும், அடிலெய்டிலும் இருக்கும் முகமறியா மனிதனுக்கு வாழ்த்துச் சொல்லிப் புளகாங்கிதம் அடைகிறோம். கூடவே, எங்கோ, எவனோ, என்னவோ கத்திக் கொண்டிருக்கும் ஒருவனைச் சொற்களாலே கொலையும் செய்கிறோம். அவனது அந்தரங்கம் அலசுகிறோம்... அனாயசமாய்ச் சூறையாடி, இணையப் பெருவெளியில் பரம்படிக்கிறோம்.

பண்டைக் காலத்திலெல்லாம், பாராளும் மன்னனே ஆனாலும் உயரப் படியேறிச் சென்றுதான் அமுது பருக வேண்டும். ஏனப்படி? எதுவும், எளிதாகக் கிடைக்கும் தருணத்தில் உதாசினப்படுத்தப்படும் என்பது அவர்களது நம்பிக்கை. நவீனயுக புருசர்கள், கட்டுடைக்கப் பிறந்த மகான்கள்! இதை எல்லாம் கட்டுடைப்பதுதானே அவர்கள்தம் முதல் பணி?

கணினியைக் கையாள்பவன் எல்லாம் அறிவாளி; அக்கணினியில் அவன் செய்வதெல்லாமே சிற்ப வேலை!! வாங்கிக் கொடு கணினியை... ஆவதென்ன? எவரையும், எளிதில் வீழ்த்திவிட முடியும் எம்மால்! அகம், உயரப் பறக்கிறது!

இது இப்படி இருக்க... எவை எல்லாம் அந்தரங்கம்? யாருக்குத் தெரியும்? இந்தா பிடி... எனது பிறந்த தேதி! என் குழந்தையின் அழகைப் பார்.... என்னைப் பார்... என்னழகைப் பார்.. என்னவரைப் பார்.. பட்டியல் நைல் நதியின் நீளத்தையும் மிஞ்சும்.

அலைபேசியில் பிடி, நகர் காட்சி... முடிந்தால் என்னையும் பார்... அவனையும் பார்... இதோ அவளையும் பார்... எல்லையே இல்லை! விபரீதம் உணரும் மட்டும், விளையாட்டுக்கு எல்லையே இல்லை!

தருண்! நேற்று வரையிலும், அன்பான மாணவன்... பண்பான மாணவன்... கல்வியில் முதலிடத்து மாணவன்... ஊருக்கே வழிகாட்டியாய் இருந்த நம்மாணவன். இன்றைக்கு??

உலகமே அவனை ஒருவிதமாய்த்தானே பார்க்கிறது? பதினெட்டு வயதிற்குள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே, சோரம் போய்விட்டதுதான் காலக் கொடுமை!

விளையாட்டு... இணையப் பெருவெளியின் கட்டற்ற சுதந்திரம்... விளைவு? எந்த இணையத்தில் விளையாடினான் எனச் சொல்லப்படுகிறதோ, அதே இணையத்தில் எண்ணற்ற செய்திகள் அவன் பெயர் தாங்கி.... அவனது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி!

சக மாணவனின் அந்தரங்கத்தை, இணையத்தில் ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு... சக மாணவன், அருகிலிருந்த வாசிங்டன் பாலத்தில் இருந்து, ஃகட்சன் ஆற்றில் குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள, பிரச்சினையின் தாக்கம் பெருமளவில்! அவனைச் சார்ந்த பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரும் பெரும் சோகத்தில்!

குமுகாயம், மின்னாடல், மடலாடல், சிட்டாடல், உசிலாடல், வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள் என நாளும் நாளும் வசதிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே, நாம் வெளிக்காட்டும் அகச்சுவடுகளும் தடம் பதித்துக் கொண்டே வருகின்றன.

இத்தனைக்கும் இடையே, கல்விச் சாலைகளுக்குச் சென்று, இணையப் பாவனை பழகி, தமிழ் வளர்க்க வாரீர் எனப் பறை சாட்டுகிறார் ஒரு கூட்டம்...

கோவை என்றாலே, அன்பு வளர்ப்பதும்... பண்பு வளர்ப்பதும்... விருந்தோம்பல் வளர்ப்பதும்.. கோவன், அந்த இளங்கோவன் காட்டிய வழியில் அறம் வளர்ப்பதும்தான்...

அவ்வழியில், மின்வெளிக் குற்றச் செயல்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்திடல் வேண்டும் எனச் சொன்னாயே, என்தம்பி, சஞ்சய் காந்தி? நடத்திடும் காலமெப்போ??

இம்மணித்துளியில் கூட, எங்கோ ஒரு தமிழன், தனது அறியாமையினால் அகப்பட்டுக் கொண்டிருப்பானாய் இருக்கும்...

இம்மணித்துளியில் கூட, எங்கோ, எவனோ ஒரு தமிழன், வியந்தோதலின் பொருட்டுச் சோரம் போய்க் கொண்டிருப்பானாய் இருக்கும்...

10/02/2010

மகாத்மா பிறந்த நாள் விழா, படங்கள்!

வட கரோலைனா மாகாணம், சார்லட் நகரில் இருக்கும் பாலண்டைன் பகுதியில், உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள், கல்விக் கண் திறந்த தலைவர் காமராசர் நினைவு நாள் முதலானவை கடைபிடிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் முதல் நாளன்று, மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மகேசுவரி வாசன் அவர்கள் சிறப்புறச் செய்திருந்து, வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார்.

அதையடுத்து, தலைமை விருந்தினராக வந்திருந்த, சார்லட் இந்தியப் பாரம்பரிய நேசக்குழுத் தலைவர் அப்பன் அவர்கள், மகாத்மா அவர்கள் போற்றிய அகிம்சை மற்றும் சகிப்புத் தன்மையின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினார்.

அடுத்ததாக, நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளரும், கல்விமானும், தமிழ்ப் பதிவருமான சீமாச்சு அவர்கள், அமெரிக்காவில் வாழும் இந்தியக் குழந்தைகள் ஏன் காந்தி பிறந்த நாளைக் கடைபிடிக்க வேண்டும்? கல்விக்காக, கர்மவீரர் காமராசர் செய்தவை என்னென்ன?? போன்ற வினாக்களை வினவி, குழுமி இருந்த குழந்தைகளுக்கு எளிமையான முறையில் தகவல்களைப் புகுத்தினார்.

சில மாதங்களுக்கு முன்னர் கூட, திரு. சீமாச்சு அவர்கள், காமராசர் திரைப்படத்தைப் பார்த்தபடி கண் கலங்கிக் கொண்டிருந்தமையை நாம் நன்கறிவோம். அவரது மகள், நாடு பார்த்தது உண்டா... நாடு பார்த்தது உண்டா... என அப்படத்தின் பாடல் ஒன்றின் பின்னணி இசையை உச்சரித்துச் சிலிர்ப்பது வழமையான ஒன்றாகும். 
இறுதியாகப் பேச வந்த, இந்தியக் குடும்பத் தலைவி காயத்ரி அவர்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இணக்கம், கல்வி மற்றும் தாய் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய பங்களிப்பு முதலானவற்றை நினைவு கூர்ந்தார்.

வந்திருந்த அனைவரும், உரைகளைக் கவனமுறக் கேட்டு உள்வாங்கி, இறுதியில் பரிமாறப்பட்ட உணவினை நன்கு புசித்து, மகிழ்வுடன் விடை பெற்றனர்.

--சார்லட்டில் இருந்து பழமைபேசி!

10/01/2010

காந்தி பிறந்த நாள்!


கல்விக் கண் திறந்தாய்;
கல்விச் சாலைகள் ஏறிட
நாளைய தலைவர்கள்
இன்றைய முகிழ்கள்
இளமொட்டுகள் பசி அகன்றிட
அன்னம் இட்டாய்!

காலைப் பிடித்தோர்
காக்கா பிடித்தோர்
காததூரம் விரட்டினாய்;
கடமை ஆற்றினோர்
கருமமே கண்ணாயினோர்
கண் இமையாகினாய்!

காந்தி பிறந்த நாளில்
உனை இழந்தோம்; அந்நாளை
விடுமுறையாகவும் ஆக்கினோம்!
ஆம்!!
உம்போன்ற தலைவர்களை
அவர்தம் அர்ப்பணிப்பை
விடு முறையாக்கினோம்;!